தண்ணீர் சண்டை ஆரம்பமாகிவிட்டது

அழகியசிங்கர்

 

எங்கள் தெருவில் முதல் தண்ணீர் சண்டை இன்று ஆரம்பமாகிவிட்டது.  இனி தினமும் இந்தக் காட்சிகளைக் கொண்டாட்டமாகப் பார்த்து ரசிக்கலாம்.  தினமும் காலையிலிருந்து தெருவில் உள்ள பெண்கள் தண்ணீருக்காக குடம் குடமாக எங்கிருந்தோ தண்ணீரை சேகரித்த வண்ணம் இருக்கிறார்கள்.  ஆண்கள் இதில் கலந்து கொள்வதாக தெரியவில்லை.  எப்படித்தான் இந்தப் பெண்களுக்கு இந்தக் குடங்களைக் கொண்டு வரும் சக்தி இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.  அதேபோல் தண்ணீர் பிடிக்க அவர்கள் சண்டைப் போடுவதும் ஆபாசமாக இருக்கும்.  ஒரே வீட்டில் பத்து குடுத்தனங்கள் இருப்பார்கள்.  எத்தனை தண்ணீரை சுமந்தாலும் தேவை இருந்துகொண்டே இருக்கும்.

நாங்கள் போஸ்டல் காலனி வீட்டில் இருந்தபோது தண்ணீருக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன்.  மொத்தம் 7 அடுக்ககங்கள்.  எல்லோரும் சேர்ந்து லாரியில் தண்ணீர் வாங்கிக் கொண்டு, சம்பில் கொட்டுவோம்.  சம்பை சரியாக மூடாவிட்டால் நாங்கள் கொட்டிய தண்ணீரெல்லாம் எதிர்சாரியில் உள்ள வீடுகளுக்கு தானாகவே ஓடிவிடும்.

எங்களுக்குள்ளே சண்டையும் ஏற்படும்.  தண்ணீர் பிரச்சினை போதுதான் நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வோம்.  அதற்கு முன் நாங்கள் யாவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ள மாட்டோம்.  கீழ் வளாகத்தில் குடியிருப்பவர் ஒரே ஒரு பெண்மணி.  முதல் மாடியில் நாங்கள் இருந்த வளாகத்திலிருந்து எதிர் வளாகத்தில் உள்ள இடத்தில் பத்து பன்னிரண்டு பேர்கள் இருப்பார்கள்.  தண்ணீர் விலைக்கு வாங்கி அளந்து விடும்போது எல்லோரும் பணத்தை சமமாகப் பிரித்துக்கொள்ள úவ்ணடும்.  கீழே உள்ள பெண்மணி ஒப்புக் கொள்ள மாட்டார்.  இத்தனைக்கும் அவர் ஒரு டீச்சர்.  üüநான் எப்படி என் ஒருவளுக்காக அத்தனைப் பைசா கொடுப்பது,ýý என்று சண்டைக்கு வருவார்.  பத்து நபர்கள் உள்ள குடும்பத்திற்கு சங்கடமாக இருக்கும்.

ஆனால் தண்ணீரைத் திறந்து விடும் சமயத்தில் ஒரு ஆளுக்காக தண்ணீர் நிரப்ப மாட்டார்.  பலருக்கு நிரப்புவதுபோல் பக்கெட்டுகளில் நிரப்பி வைத்திடுவார். பணம் குறைவாகத்தான் கொடுப்பார்.

நான் இதை எப்படி சரி செய்வது என்று மண்டையைப் போட்டு உடைத்துக்கொள்வேன்.  எனக்கு சிலசமயம் நல்ல பெயர் கிடைப்பதாக இருக்கும்.  பின் கெட்ட பெயரில் வந்து முடியும்.  அந்தச் சமயத்தில் அற்புதமாக ஒத்துழைப்பு நல்கியது எங்கள் வளாகத்தில் உள்ள கிணறுதான்.  அதை வைத்து நான் அற்புதக் கிணறே என்று ஒரு கவிதை எழுதினேன்.  அது ஒரு நீண்ட கவிதை.  அதில் ஒரு பகுதியை இங்கே தர விரும்புகிறேன்.

 

அற்புதக் கிணறோ

எந்நேரமும் தவறாமல்

அளித்த

தண்ணீரின் கொடையை

ஒரு நாளைக்கு

சில மணி நேரங்களில்

எங்களின்

சில பக்கெட்டுகளை

நிரப்ப

அள்ளித் தருகின்றது

தண்ணீரை ஒருநாள் முழுவதும்

பாதுகாக்க

நாங்கள் பதட்டப்படுகிறோம்

அற்புதக் கிணற்றின்

காய்ந்த மார்பு காம்புகளிலிருந்து

நீருக்குப் பதில்

செந்நீரா கசிகிறது

அற்புதக்கிணற்றின்

திரவ ஊற்றே

உம் முன்னே

தலை வணங்கி நிற்கிறோம்

 

சென்னையில் இப்படி ஒரு தண்ணீர் பிரச்சினை வருமென்று நினைத்துப் பார்க்காத தருணம் அது.

இதோ உங்களுக்குக் கேட்கிறதா எங்கள் தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பலமாக ஹான்ட் பைப்பில் தண்ணீர் அடிக்கும் சத்தம்.

ஒரு குழப்பம்……

 

அழகியசிங்கர்

 

இன்று யாரும் இல்லை வீட்டில்.  அதனால் மாலை சங்கீதா ஓட்டலுக்கு டிபன் சாப்பிடச் சென்றேன்.  பங்களூரிலிருந்து நண்பர் மகாலிங்கமும் வந்திருந்தார்.  ஒரே கூட்டம்.  இந்த ஓட்டல் அசோக்நகரில் லட்சணமான ஓட்டல்.  அங்கே மரியாதையுடன் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் செய்கிறார்கள்.  நான் எப்போதும் இங்கே போகத் தொடங்கி விட்டேன்.  இந்த ஓட்டல் வந்த பிறகு இங்குள்ள மற்ற ஓட்டல்களின் மவுசு குறைந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது.

கொஞ்ச நேரத்தில் சினிமாப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின.  நான் மியூசிக் சிஸ்டம் மூலம் பாடுவதாக நினைத்தேன்.  ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் ஓட்டலின் மூலையில் நின்றுகொண்டு  பாடிக்கொண்டிருந்தார்கள்.  டி எம் சௌந்தர்ராஜன் மாதிரி, பி பி ஸ்ரீனிவாஸ், ராஜா மாதிரி எல்லாம் உடனே உடனே பாடிக்கொண்டிருந்தார்கள்.  ஒரு நிமிடத்தில் பழைய எம்ஜி ஆர் பாடல்களைக் கேட்டபோது, என் நிகழ் காலத்திலிருந்து நழுவி பழைய காலத்திற்குப் போனதுபோல் தோன்றியது.  எம்ஜிஆர் படங்கள் பாடல்கள் மூலம்தான் எனக்கு எம்ஜிஆரைத் தெரியும்.  அவர்கள் பாடல்களைக் கேட்கும்போது எம்ஜிஆரைப் பார்ப்பதுபோல் உணர்வு எழுந்தது. அந்தப் பாடல்களைக் கேட்கும்போது, நான் நிஜார் போட்டு சுற்றும் பையனாக மாறியதுபோல் இருந்தது.  இந்தக் கால மயக்கம் ஆச்சரியமாக இருந்தது.

டிபனும் நன்றாக இருந்தது.  நாங்கள் சாப்பிட்டு விட்டு வரும்போது, அங்கு பாடுபவரைப் பார்த்து சந்திரபாபு பாடிய ஒரு பாடலை பாடும்படி சொன்னேன்.  அவர், ‘பம்பரக் கண்ணாலே..’ என்ற பாட்டைப் பாடினார்.

வீட்டிற்கு வந்தவுடன், பழைய நிலையிலிருந்து மாறி புது நிலைக்கு வந்து விட்டேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 57

அழகியசிங்கர்
 
காடு
 
வஸந்த் செந்தில்
 
ஒருவர் சென்று
மழையோடு திரும்பி வந்தார்
 
ஒருவர் சென்று
மலர்களோடு திரும்பி வந்தார்
 
ஒருவர் சென்று
சுள்ளிகளோடு திரும்பி வந்தார்
 
ஒருவர் சென்று
பழங்களோடு திரும்பி வந்தார்
ஒருவர் சென்று
பறவைகளோடு திரும்பி வந்தார்
 
பச்சயங்களோடு ஒருவர்
மிருகங்களோடு ஒருவர்
மீளவேயில்லை ஒருவர்
 
ஒருவர் பயந்து
உள் செல்லவேயில்லை
 
அவரவர் தேவைகளை
அவரவரக்கு அளித்து
வழிதொலைத்த பாதைகளை
வழியெல்லாம் வைத்து
 
அடர்ந்து கிடக்கிறது காடு
 
நன்றி : மழையும் நீயும் – கவிதைகள் – வஸந்த் செந்தில் – பதிப்பகம் : இலக்குமி நிலையம், ப எண் : 53, பு எண் : 115, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 – முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2001 – விலை : ரூ.30 – பக்கம் : 144
 
 

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்

1. இந்த ஆண்டு கோடை கடுமையாக உள்ளதா?
 
ஆமாம். எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள். எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.
 
2. இப்போது என்ன புத்தகம் ஆங்கிலத்தில் படிக்க எடுத்து வைத்திருக்கிறீர்கள்?
 
THE CRAFT OF FICTION BY PERCY LUBBOCK என்ற புத்தகத்தைப் படிக்கப் போகிறேன்.
 
3. விருட்சம் சார்பாக கவிதைக்காக பரிசு கொடுக்க விரும்பினால், யாருக்கு பரிசு வழங்குவீர்கள்?
 
என்னை வம்பில் மாட்டாதீர்கள். நான் யாருக்கும் பரிசு வழங்க விரும்பவில்லை.
 
4. இலக்கியக் கூட்டங்களுக்கு இப்போதெல்லாம் செல்வதில்லையா?
 
ஒரு இலக்கியக் கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது. அங்கு போவதற்கு கிளம்பினேன். 5 மணிக்கு மாம்பலத்திலிருந்து கிளம்பினேன். மயிலாப்பூர் போய்ச் சேரும்போது மணி 6 மணி மேல் ஆகிவிட்டது. பின் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு வரும்போது மணி 9 ஆகிவிடுகிறது. இலக்கிய கூட்டம் போகலாமா வேண்டாமா என்ற யோசனை வருகிறது.
 
5. அப்படியென்றால் கூட்டம் எங்கே நடைபெற வேண்டும்?
 
அவரவர் பகுதிகளில்தான் கூட்டம் நடைபெற வேண்டும். மாம்பலத்தில் கூட்டம் நடந்தால், மாம்பலத்தில் உள்ளவர்கள் கூட வேண்டும். மயிலாப்பூர் என்றால் மயிலாப்பூர். திருவல்லிக்கேணி என்றால் திருவல்லிக்கேணி.
 
6. அப்படியாவது கூட்டம் நடத்த வேண்டுமா?
 
ஆமாம். இன்று தமிழில் யாரும் புத்தகமே படிக்க மாட்டார்கள். கூட்டம் மூலம் புத்தகங்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்.
 
7. வாழ்க்கை என்றால் என்ன?
 
வாழ்க்கை என்றால் திங்கள், செவ்வாய், புதன், வியாழன்….
 
8. ரோடில் செல்லும்போது, டூவீலரில் போவீரா, காரில் போவீரா, பஸ்ஸில் போவீரா, நடந்து போவீரா..
 
டூ வீலரில்தான் போவேன். காரில் கூட்டம் இல்லாத இடத்திற்குப் போவேன். பார்க்கில் மட்டும் நடப்பேன். பஸ்ஸில் நஹி.
 
9. உங்களைப் பார்க்க நண்பர்கள் வருவார்களா? நண்பர்களைப் பார்க்க நீங்கள் போவீர்கள்.
 
இரண்டுமே நடப்பதில்லை. அவசியம் இருந்தால்தான் சந்திப்பு நிகழும்.
 
10. உங்கள் வீட்டில் எந்த அறைக்குச் செல்ல விரும்பவில்லை?
 
அப்பா படுத்திருந்த அறைக்கு..
 
11. புத்தகம் பதிப்பது மூலம் நீங்கள் லாபம் சம்பாதிக்க விரும்புகிறீரா பொழுதுபோக்கா?
 
பொழுதுபோக்கு..
 
12. பொழுதுபோக வேண்டுமென்றால் என்ன வழி இருக்கிறது
 
எத்தனையோ வழி உண்டு. டிவி சீரியல் பார்த்துக்கொண்டே பொழுதைப் போக்கிக் கொள்ளலாம்.
 
13. கவிதை எப்படி இருக்க வேண்டும்?
 
படித்தவுடன் மனதில் பிடித்துக்கொள்ள வேண்டும். இன்னும் படிக்க வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.
 
14. சமீபத்தில் நீங்கள் மகிழ்ந்த தருணம் எது?
 
முதன் முதலாக என் கவிதைகளைப் பிரசுரம் செய்த மலர்த்தும்பி என்ற பத்திரிகையைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
 
15. தூக்கத்தைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
 
தூக்கம் வந்தால் தூங்கி விடுங்கள். பகலாக இருந்தாலும் இரவாக இருந்தாலும்.
 
16. நீங்கள் ஒரு நண்பரோடு படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் எது
 
சிலப்பதிகாரம். கோவலன் பற்றி ஒரு வரி வருகிறது :
 
நகரப் பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன் போல
 
17. இத்துடன் போதுமா?
 
போதும். பின்னால் தொடர்வோம்.
 

யார் வந்திருந்து புத்தகத்தைப் போட்டிருப்பார்கள்..

ஐராவதத்திற்கு ஒரு கெட்ட பழக்கம் அவர் பேப்பர் கடைகளில் போய் பத்திரிகை, புத்தகங்கள் விலைக்கு வாங்கிப் படிப்பார்.   புதியதாக குமுதம் வந்தால் வாங்கிப் படிக்க மாட்டார்.  பேப்பர் கடைகளில் எப்போது வருகிறது என்று பார்த்து வாங்கி வந்து விடுவார்.  தீபாவளி மலர்களையும் அப்படி வாங்கிப் படித்திருக்கிறார்.

இந்தப் பேப்பர் கடைகளில் பழையப் புத்தகங்களும் கிடைக்கும்.  ஐராவதம் இதுமாதிரி பேப்பர் கடைகளில் வீசி எறியப்படும் புத்தகங்களையும் விலை கொடுத்து வாங்கிவிடுவார்.  எனக்கும் அவர் மாதிரி ஒரு பித்து.  பேப்பர் கடைகளில் என்ன புத்தகம் கண்ணில் படுகிறது என்று பார்ப்பேன்.

பேப்பர் கடைகளில் புத்தகங்களை விலைக்குப் போடுபவர்களை நான் உயர்வாகவே நினைக்க மாட்டேன்.  ஏன்என்றால் ஒரு பேப்பர் கடையில் புத்தகங்களை விலைக்குப் போட்டால் ஒரு கிலோவிற்கு ரூ8 தான் பணம் கிடைக்கும்.  ஆனால் ஒரு கிலோ புத்தகம் என்பது நாலைந்து புத்தகங்களுக்கு குறைவில்லாமல் இருக்கும்.  என்னைப் போன்றவர்கள் திரும்பவும் அந்தப் புத்தகங்களை வாங்கச் சென்றால், பேப்பர் கடைக்காரர் ஒரு கிலோவிற்கு ரூ.100 என்று கொடுப்பார்கள்.  அல்லது புத்தகத்தின் பாதி விலையைக் கேட்பார்கள். இப்படி அந்நியாயக் கொள்ளை இந்தப் பேப்பர் கடைகளில் நடக்கின்றன.   புத்தகம் வைத்திருப்பவர்கள் இப்படி புத்தகங்களை ஒழித்துக் கட்ட வேண்டுமென்றுதான் பேப்பர் கடைகளில் புத்தகங்களைப் போடுகிறார்கள்.  அவர்கள் ஒன்றே ஒன்று செய்யலாம்.  அவர்களிடம் புத்தகம் இருக்க வேண்டாமென்று நினைத்தால் ஏதாவது நூல் நிலையத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடலாம்.   அல்லது யாராவது உங்கள் நண்பர்கள் புத்தகங்களைப் படிக்கும் புழுக்களாக இருந்தால், அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் உங்களுக்கு புத்தகங்களைப் படித்துவிட்டு திருப்பியே தரமாட்டார்கள்.  நீங்களும் மறந்து விடுவீர்கள்.  பெரும்பாலான நண்பர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.  ஏன் நீங்களும் அப்படிப்பட்ட ஒருவராக இருக்கலாம்.

இன்று காலை கோவிந்தன் ரோடில் உள்ள ஒரு பேப்பர் கடைக்குச் சென்றேன்.  அங்கு அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்தேன்.  அதில் ஒரு புத்தகம் இருந்தது.  அந்தப் புத்தகத்தின் பெயர் : கெட்டவன் கேட்டது.  இந்தப் புத்தகத்தை வெளியிட்டது நான்தான்.  என் புத்தகமே எப்படி பேப்பர் கடைக்கு வந்தது என்ற திகைப்பு.  மேலும் அது ஒரு சிறுகதைத் தொகுப்பு.  எழுதியவர் சாட்சாத் ஐராவதம் அவர்கள்.   19 சிறுகதைகளைக் கொண்ட அந்தப் புத்தகத்தின் விலை ரூ.130 தான்.  வெளியான ஆண்டு 2012.  யார் இதை பேப்பர் கடையில் போட்டிருப்பார்கள்.  இலவசமாக நான் யாரிடமாவது படிக்கக் கொடுத்தப் புத்தகமா அல்லது என்னிடம் விலைக்கு வாங்கிய புத்தகமா?  அந்த நபர் யார் யார் யார் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  ஐரனி என்னவென்றால் பேப்பர் கடையில் பழையப் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் ஐராவதத்தின் புத்தகமும் பேப்பர் கடையில் இருப்பதுதான்.

கநாசு அப்படித்தான் அவர் வெளியிட்ட ஒரு நாவல் புத்தகம் விற்பனை ஆகாமல் இருந்ததாம்.  மாமனார் வீட்டு பரண் மீது இருந்ததாம்.  அந்தப் புத்தகக் கட்டுகளை பழைய பேப்பர் கடையில்  போட்டுவிட்டாராம் க நா சு. இது உண்மையான தகவலா?  எழுத்து பழைய இதழ்களை சி சு செல்லப்பாவும், அவர் புதல்வர் மணியும் பேப்பர் கடையில் எடைக்குப் போட்டுவிட்டார்களாம்.

இதைப் படிப்பவருக்கு நான் வேண்டிக் கேட்டுக்கொள்வது என்னவென்றால் பேப்பர் கடையில் கிலோ எட்டு ரூபாய் என்று நூற்றுக்கணக்கில் விலை கொடுத்து வாங்கும் புத்தகங்கûள் போட்டு விடாதீர்கள்.  தயவுசெய்து உங்கள் ஏரியாவில் இருக்கும் லைப்ரரிக்குப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுங்கள்.

பிளாட்பார கடையில் கண்டெடுத்த முத்து

சிலசமயம் பிளாட்பார கடைகளில் அபூர்வமாக சில புத்தகங்கள் கிடைக்கும்.  அட்டைப் போயிருக்கும்.  விபரம் போயிருக்கும்.  எழுபதெட்டு இனிய கதைகள் என்ற கதா மஞ்சரி புத்தகம் கண்ணில் பட்டது.  உடனே வாங்கிக்கொண்டேன்.  முன்பக்கத்தில் உள்ள பல கதைகளின் பக்கங்கள் போய்விட்டன.  இருக்கும் கதைகளை பத்திரப்படுத்தலாமென்று எடுத்துக்கொண்ட முயற்சி இது.  வாழ்க இவ்வையகம்.

1)   கழுதையின் குரல்

ஓர் ஊரில் இசைப்புலவன் ஒருவன் இருந்தான்.  அவன் தன்னிடமுள்ள குறை தெரியாதவன்.  அவன் வேறு நாட்டு அரசனிடம் இசைபாடிப் பரிசு பெறலாமென்று எண்ணினான்; வேறு நாட்டுக்குவந்து ஒரு வீட்டிலே இறங்கி இருந்து வந்தான்ல்.  மறுநாள் விடியற்காலத்தில் எழுந்து பாட்டுப் பாடினான்.  அடுத்த வீட்டு வண்ணாத்தி ஒருத்தி பெருங்குரலிட்டு அழுதாள்.  இவன் பாட்டை நிறுத்தினான்.  அவளும் அழுகையை நிறுத்திவிட்டாள்.  இவ்வாறாக ஒரு வாரம் வரை நடந்து வந்தது.  அதனால் இசைப் புலவன் வண்ணாத்தியை அழைத்தான்: “நான் பாடும்போது நீ ஏன் அழுகிறாய்,” என்று வினவினான்.  அதற்கு அவள்,”ஐயா…தங்கள் பொன்னான குரலைக் கேட்கும்போது போன திங்கள் செத்துப்போன என்னிடம் இருந்த ஒரேஒரு கழுதையினுடைய நினைப்பு வருகின்றது.  அதனால் அழுகின்றேன்,” என்று சொல்லி அழுதாள்.  இசைப்புலவன் வெட்கமுற்றான்.  அரசனைப் பார்க்காமலேயே தன் ஊருக்குப் போய்விட்டான்.

அதனால் தன் குற்றம் தெரியாமல் நடக்கிற அறிவற்றோன் எவனும், உலகில் நன்மதிப்பு இழப்பான்.

சில கவிதைகள் சில குறிப்புகள்

அழகியசிங்கர்
புத்தகக் காட்சியில் 600வது விருட்சம் அரங்கில் சில கவிதைப் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கிறேன். அவற்றிலிருந்து சில கவிதைகளை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

1. பழனிவேள்ளின் கஞ்சா

11
மழை பெய்யட்டும்
வெயில் கொளுத்தட்டும்
காற்று வீசட்டும்
குளிர் வாட்டட்டும்

மனம் இருக்கிறது இலைபோலக் காய்ந்து
ஆற்றுப்படத்தும் சக்தி இருக்கிறது பெருக்க
எல்லாமே நம்வசம்

(கஞ்சா – பழனிவேள் – ஆலன் பதிப்பகம், விலை ரூ.100)

2. பேயோனின் வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை

துயர்

அழுகிறேன்
அழுவதை உணர்கிறேன்
உணர்வதைப் பார்க்கிறேன்
பார்ப்பதை நினைக்கிறேன்
நினைப்பதை உணர்கிறேன்
உணர்வதைப் பார்க்கிறேன்
பார்ப்பதை நினைக்கிறேன்
அழுவதை மறக்கிறேன்.

(வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை – பேயோன் – சஹானா வெளியீடு – விலை : ரூ200)

3. பெருந்தேவியின் வாயாடிக் கவிதைகள்

உடைமை

என் லேப்டாப்பில் அமர்கிறது
குட்டிப் பூச்சி
ஒரு கீ-யின் பாதிகூட இல்லை
எல் லிருந்து ஓ வுக்கு
நடக்கிறதா தத்துகிறதா
அதற்காவது தெரியுமா
குந்துமணிக் கண்
முழித்துப் பார்க்கிறது
அதன் பார்வையில்
நான் பொருட்டேயில்லை
என் விரல்நுனியில்
ஒரு நொடி பட்டுத் தாவுகிறது
இந்த உலகமே
அதனுடையதாக நகர்கிறது
நான்தான்
எங்கிருந்தோ வந்து
குந்தியிருக்கிறேன்
(வாயாடிக் கவிதைகள் – பெருந்தேவி – விலை ரூ.100)

4. ஞானக்கூத்தனின் இம்பர் உலகம்

சிரிப்பு

எத்தனை நேரம்தான்
நீடிக்கும் சொல்லுங்கள் ஒரு
விற்பனைப் பெண்ணின்
சிரிப்பு.

(இம்பர் உலகம் – ஞானக்கூத்தன் – விலை : ரூ.100)

5. அழகியசிங்கரின் வினோதமான பறவை

உறவு

தினமும்
நான் யாரையோ நினைத்துக்கொண்டிருக்கிறேன்
நீங்களே சொல்லுங்கள்
யாரை நினைத்துக் கொண்டிருக்கிறேனென்று
யாரையும் நினைத்துக்கொள்வில்லை
சும்மா சொன்னேன்
அதேபோல்
என்னையும் யாரும் நினைத்தக்கொள்ளவில்லை
உலகில் ஒழுங்கு தப்பி விட்டது
என்னிடமும் தப்பி விட்டது
எல்லோரிடமும் தப்பி விட்டது
உறவுமுறைகள் தாறுமாறாய் போய்விட்டன

(வினோதமான பறவை – அழகியசிங்கர் – விலை ரூ.80)

இன்று புத்தகக் காட்சியில் விருட்சம் 600வது ஸ்டாலில் மாலை 6 மணிக்குக் கவிதையைக் குறித்து உரையாடல் நடக்கிறது. அவசியம் கலந்து கொள்ளவும்.

விருட்சம் வெளியீடு

அப்பா இல்லாத புத்தகக் காட்சி

 

அழகியசிங்கர்

சரியாக அப்பா 40வது புத்தகக் காட்சி ஆரம்பிக்கும் தருணத்தில் இறந்து விட்டார்.  எப்படியோ 2016ஆம் ஆண்டைத் தாண்டிவிட்டாரே என்று நான் ஆச்சரியப்பட்டேன்.  ஒரே ஒரு முறைதான் அப்பாவை புத்தகக் காட்சிக்கு அழைத்து வந்து என் ஸ்டாலில் அமர வைத்திருக்கிறேன். எப்படி அவரை அழைத்து வந்தேன் என்பது ஞாபகத்தில் இல்லை.

ஆனால் ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போது அப்பா அன்று எவ்வளவு விற்றது என்று கேட்டுக்கொள்வார்.  பின் நான் விற்றத் தொகையைச் சொன்னால் ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொள்வார். பின் ஒவ்வொரு நாளும் கூட்டுத் தொகையைச் சொல்லிக்கொண்டு வருவார்.  நான் இரவு பத்து மணிக்கு வந்தபோதும் எழுதி வைத்துக்கொண்டு இதுவரை எவ்வளவு என்று சொல்வார்.  இந்தப் புத்தகக் காட்சியின்போதுதான் அவர் இல்லை.  அவர் புத்தகக் காட்சி பொங்கல் எல்லாம் முடிந்து போயிருக்கலாம்.  ஏன் அவசரம் என்று தெரியவில்லை?  சீக்கிரம் தன்னை அழைத்துக்கொண்டு போனால் தேவலை என்பதுபோல் அவர் நம்புகிற கடவுளை வேண்டிக்கொள்வார் அடிக்கடி. என் பேர்த்தியின் முதல் பிறந்தநாள் முடிவதுவரை இருந்து விட்டு ஆசிர்வாதம் செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார். ஒரு மனிதர் படுத்தப்படுக்கையாக அசையாமல், கண் விழித்துக்கொண்டு எப்படி அப்படி இருந்தார் என்பது தெரியவில்லை.   அவருக்கு இரவும் தெரியவில்லை பகலும் தெரியவில்லை.  ஆயிரம் முறை எனக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்பார்.

                                                                                                                                             **********

நேற்று விருட்சம் 101வது இதழ் வெளியீட்டு விழா என்று அறிவித்திருந்தேன். ஒவ்வொரு நாளும் எதாவது ஒன்றை ஆரம்பித்து புத்தகக் காட்சி சாலையில் நடத்த வேண்டுமென்று என் திட்டத்திற்கு குவிகம் நண்பர்கள் வரவேற்றார்கள்.  அவர்கள்தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.  முதல்நாள் கூட்டத்தில் 101வது இதழ் வெளியீட்டு விழா.  எனக்கு பல எழுத்தாளர்கள் நண்பர்கள்.  அவர்களில் சங்கரநாராயணன் அவர்களைக் கூப்பிட்டு இதழை வெளியிட அழைத்தேன்.  முன்னதாகவே யாரையெல்லாம் கூப்பிட்டு பேச அழைப்பது பற்றி என்ற பிரச்சினை ஆரம்பித்தபோது, நாம் யாரையும் இதற்காகக் கூப்பிட முடியாது.  புத்தகக் காட்சிக்கு யார் வருகைத் தருகிறார்களோ அவர்களை வைத்துத்தான் கூட்டம் நடத்த முடியும் என்பதைத் தீர்மானித்தேன்.  101வது இதழ் வெளியிட்டு விழாவிற்கு எழுத்தாளர் சங்கரநாராயணனை கூப்பிட்டுப் பேச அழைத்தேன்.  இது ஒரு சந்திக்கிற நிகழ்ச்சி.  சக எழுத்தாளர்களை மதிப்பது.  வாசகர்களை மதிப்பது என்பதுதான் இதன் நோக்கம்.

சங்கரநாராயணன் இருவாட்சி ஸ்டாலிலிருந்து வருவதற்கு தாமதமாகி விட்டது.  மணி 7க்கு மேல் போய்விட்டது.  என் இன்னொரு எழுத்தாள நண்பர் பா ராகவன்.  அவரைக் கூப்பிட்டு 101வது இதழை வெளியிட கேட்டுக்கொண்டேன்.  அவரும் ச சீ சிவக்குமாரும் வந்திருந்தார்கள்.  பா ராகவனை அவரிடம் விருட்சம் 101வது இதழைக் கொடுக்கச் சொல்லி பேசச் சொன்னேன்.  சில வார்த்தைகள் பா ராகவனும், ச சி சிவக்குமாரும் பேசினார்கள்.  இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், சங்கர நாராயணனும் வந்து விட்டார்.  அவரையும் 101வது இதழை வெளியிடச் சொன்úன்.  இதுபோல் இரண்டு முறை ஒரு பத்திரிகையை வெளியிட்டப் பெருமை விருட்சத்திற்குத்தான் உண்டு.

இந்தப் புத்தகக் காட்சியில் யார் எது பேசினாலும் அதன் தன்மை என்ன என்பதை ஆராய்வது என் வழக்கம்.  பா ராகவன் சொன்ன ஒரு கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  எந்தப் புத்தகமும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற கருத்தை.  இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  தமிழில் நாம் நினைப்பதை விட அதிகமாகவும் புதியதாகவும் பலர் எழுதிக்கொண்டு போகிறார்கள்.  எழுத்து என்பது ஒரு வெளிப்பாடு.  அந்த வெளிப்பாட்டை பலவித முறைகளில் பலரும் வெளிப்படுத்துகிறார்கள்.  அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்.

                                                                                         *********

இந்த முறை புத்தகக் காட்சியை ஒட்டி இன்னும் இரண்டு புத்தகங்களைக் கொண்டு வர முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.  ஆனால் அந்தப் புத்தகங்களும் வந்து விட்டன.   ஸ்ரீகுமாருக்கு என் நன்றி.  ஒரு புத்தகம் கநாசுவின் அவதூதர்.  இன்னொரு புத்தகம் நகுலன் அவர்களின் குருஷேத்ரம். நகுலனின் குருஷேத்ரம் ஒரு இலக்கியத் தொகுப்பு.  அவரால் மே 1968ல் கொண்டு வரப்பட்ட புத்தகம்.  அதை அப்படியே கொண்டு வர முயற்சி செய்து கொண்டு வந்துள்ளேன்.  423 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.300தான்.

கநாசுவின் நாவல்களை ஒவ்வொன்றாகக் கொண்டு வர வேண்டும் என்பது என் ஆசை.  அவருடைய ஆட்கொல்லி நாவலை கொண்டு வபந்தேன்.  அடுத்த நாவலாக அவதூதர் நாவலைக் கொண்டு வந்துள்ளேன்.   274 பக்கங்கள் கொண்ட அவதூதர் விலை ரூ.250தான்.

இன்று மாலை 5.30 மணிக்கு பெருமாள் முருகன் பெருந்தேவியின் வாயாடிக் கவிதைகள் என்ற புத்தகத்தை வெளியிட அதை ஸ்ரீகுமார் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.

கிருபானந்தனும் நண்பர்களும் விருட்சம் ஸ்டாலைப் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஞானக்கூத்தனின் இம்பர் உலகம்

 

அழகியசிங்கர்

 

இந்த முறை 40வது புத்தகக் காட்சியில் என்னுடைய ஸ்டால் எண் 600. முதன் முறையாக எளிதில் மறக்க முடியாத எண் கிடைத்துள்ளது. திடீரென்று யாராவது உங்கள் கடை எண் என்ன என்று கேட்டால் 600 என்று சொல்லிவிடுவேன். இது மாதிரியான எண் கிடைத்ததற்கு கடவுளின் கிருபை என்றுதான் நினைக்கிறேன். என் கடையில் புத்தகமே விற்கவில்லை. யாரும் எட்டிப் பார்க்கவில்லை என்று புலம்புவதை விட்டு, என் கடை எண்ணை எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் விருட்சம் கடை எண் என்ன என்று யாராவது கேட்டால் திருதிருவென்று விழிப்பேன். அல்லது தப்பாக எதாவது சொல்லி விடுவேன். ஆனாலும் அப்படி சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. கடை எண்ணை கேட்பவர்கள் எல்லோரும் என் கடைக்கு வந்தும் விட மாட்டார்கள்.
பல ஆண்டுகளாக இந்தப் புத்தகக் காட்சியுடன் தொடர்பு கொண்டுள்ளேன். அளவு குறைவாக புத்தகங்கள் போட்டு அளவு குறைவாகத்தான் விற்பனை செய்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் புத்தகக் காட்சி பல அனுபவங்களை எனக்குக் கற்றுத் தராமல் இல்லை.
ஆனால் அதற்கு நான் செய்யும் ஆர்ப்பாட்டம் இருக்கிறதே தாங்க முடியாது யாராலும். கடைக்கு யாராவது வந்தால் அவர்களை புகைப்படங்களாக எடுத்துத் தள்ளுவேன். சிலசமயம் புத்தக வெளியீட்டுக் கூட்டம் நடத்துவேன். சில சமயம் ஒன்றும் தோன்றாமல் பிரமைப் பிடித்தாற்போல் உட்கார்ந்திருப்பேன். புத்தகக் காட்சி முடிந்து வீட்டிற்கு வந்தால் போதும் அப்பாடா என்று இருக்கும். இப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் என்பதால், பலமுறை சுற்றி சுற்றி வர வேண்டும்.
எனக்கு கிருபானந்தம் என்ற நண்பர் ஒன்றை சொல்லிக்கொடுத்திருக்கிறார். அதாவது தோசை. ஒரு சாதா தேசையை மட்டும் சாப்பிட்டுவிட்டு மாலை நேரத்தை ஓட்டிவிடுவார்.
இந்த முறை கிருபானந்தனுடன், பிரபு மயிலாடுதுறை என்ற நண்பரும் வந்து உதவி செய்வதாக சொல்லி உள்ளார்கள். அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம்தான் நான் புத்தகக் காட்கியில் இருக்க வேண்டுமாம்.
இந்த முறை யாரிடமும் பணம் இருக்கப் போவதில்லை. கார்டை தீட்டப் போகிறார்கள். நான் கார்டைத் தீட்டுகிற மெஷினை வாங்குவதற்கு கடந்த 2 வாரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என் விடா முயற்சியில் வெற்றி அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை.
பணம் தீட்டற மெஷின் கிடைக்கவில்லை என்றால் புத்தகக் காட்சி ஒருவிதமாக மாறிவிடும். எல்லோரும் பார்த்துவிட்டு பார்த்துவிட்டுப் போவார்கள். யாரும் ஒன்றும் வாங்க மாட்டார்கள்.

இந்தப் புத்தகக் காட்சியில் நான் அதிகமாக கவிதை நூல்களாகக் கொண்டு வந்துள்ளேன். நான் ஒவ்வொரு புத்தகமாக அறிமுகப் படுத்த விரும்புகிறேன். ஞானக்கூத்தனின் இம்பர் உலகம் என்ற புத்தகத்தை முதலில் அறிமுகப்படுத்துகிறேன்.
ஞானக்கூத்தன் போன ஆண்டு ஜனவரி மாதம் என்னிடம் அவருடைய டைரியில் எழுதிய கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டு வர கொடுத்தார். அப்போது என்னால் முடியவில்லை. டிடிபி பண்ணுகிறவரிடம் கொடுத்தேன். அவரால் ஞானக்கூத்தன் கையெழுத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கும் அந்தப் பிரச்சினை இருந்தது.
அப்போது ஜøன் மாதம் நடந்த புத்தகக் காட்சியின் (39வது) போது அவருடைய கவிதைத் தொகுதியைக் கொண்டு வர முடியவில்லை. அவருக்கு வருத்தம். அப்போது நான், üகொஞ்சம் அவசரப் படாதீர்கள். வரும் ஜனவரி 2017ல் கொண்டு வந்து விடுகிறேன்,ý என்றேன். அவருக்கு மனம் சமாதானம் ஆகவில்லை. ஆனால் அவர் இறந்து விடுவார் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இத் தொகுதியில் மொத்தம் 130 கவிதைகள் எழுதி உள்ளார். 182 பக்கங்களில் இத் தொகுப்பு வந்துள்ளது. இதன் விலை ரூ.170.
இத் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை இங்கு தரலாமென்று நினைக்கிறேன்.
யார் கை?

நான்கா? எட்டா? பன்னிரண்டா?
கடவுளுக்குக் கைகள் எத்தனை உண்டு.
எத்தனைக் கைகள்
கடவுளுக்கு இருந்தாலும்
அவற்றில் இரண்டு
மனிதா
உன்னுடையவைதாம்.

ü

சுசீலாவும் பிறரும்

மௌனியும் சுசீலாவும்
தெருவில் நடந்தால்
மக்கள் எல்லோரும்
சுசிலாவைப் பார்ப்பார்கள்.
நகுலனும் சுசீலாவும்
தெருவில் நடந்தால்
மக்கள் எல்லோரும்
சுசீலாவைப் பார்ப்பார்கள்
மௌனியும் நகுலனும்
தெருவில் நடந்தால்
சுசீலா ஏன் வரவில்லை எ;னறு
மக்கள் தெருவில் தேடுவார்கள்
சுசீலாவும் தோழியும்
தெருவில் நடந்தால்
மௌனியும் நகுலனும்
வரவில்லை என்று
மக்கள் மகிழ்வார்கள்
நானும் சுசீலாவும்
தெருவில் நடந்தால் மக்கள்
என்னையே பார்ப்பார்கள்
எப்படி இவளை இவன்
பிடித்தான் என்று.

எனக்குத் தெரியும் இந்தக் கவிதைகளைப் படித்தப்பின் இந்தப் புத்தகம் வாங்கவேண்டுமென்று உங்களுக்குத் தோன்றியிருக்கும். என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டால், புத்தகம் கிடைக்க வழி சொல்வேன். என் தொலைபேசி எண்கள் : 9444113205, 9176613205.

 

புத்தாண்டு கவிதைகளும் புனிதமில்லா கவிதைகளும்…..

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்து ஒரு கவிதை அனுப்பினார். போனில் புத்தாண்டு வாழ்த்துக் கவிதை அனுப்பி உள்ளேன் என்றார். நான் படிக்கவே இல்லை. சிறிது நேரம் கழித்து, ‘நீங்கள் படிக்கவில்லையா?’ என்று கேட்டார். ‘இல்லை,’ என்றேன். ‘ஏன்?’ என்று கேட்டார். ‘அதெல்லாம் சரியா வராது,’ என்றேன். நண்பருக்கு என் மேல் வருத்தம் ஏற்பட்டிருக்கும். இருந்தாலும் அவர் மனம் நோகக்கூடாது என்று அந்தக் கவிதையை எடுத்துப் படித்துப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த மாதிரியே அந்தக் கவிதை இருந்தது.
அதேபோல் கல்யாணத்திற்கு, கவிதை எழுதுபவர் போனார் என்றால் ஒரு கவிதை எழுதி கண்ணாடிச் சட்டம் போட்டு கவிதையை அன்பளிப்பாகக் கொடுத்துவிடுவார். அதைப் போல் அபத்தம் எதுவுமில்லை என்று கவிதை எழுதுபவருக்கு ஏனோ தெரிவதில்லை. மேலும் கவிதை யார் மீது எழுதப்பட்டிருக்கிறதோ அவர் சிறிதும் ரசனை இல்லாதவராக இருந்தால் பெரிய ஆபத்து. இன்னும் சிலர் யாராவது மரணம் அடைந்துவிட்டால் உடனே ஒரு துக்கக் கவிதை எழுதி விடுவார். பண்டிகைகளை முன்னிட்டு எத்தனைபேர்கள் எத்தனை விதமாய் கவிதைகள் எழுதி உள்ளார்கள். கவிதையைக் கிண்டல் செய்வதோடல்லாமல் பண்டிகைகளையும் கிண்டலடிக்கிறார் என்பது ஏனோ தெரிவதில்லை.
அப்படியென்றால் கவிதை என்றால் எதை வைத்துக்கொண்டுதான் எழுதுவது என்ற கேள்வி எழத்தான் செய்யும். உங்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். தானாகவே கவிதை வரும். முன்பெல்லாம் பட்டிமன்றத்தில் ஒரு தலைப்பு கொடுத்து கவிதை வாசிக்கச் சொல்வார்கள். பெரும்பாலும் கல்லூரிகளில் இந்த அபத்தம் நடைபெறும். அப்படி பட்டிமன்ற கவிதை வாசிப்பு இப்போது போன இடம் தெரியவில்லை. சரி நான் புத்தாண்டை ஒட்டி சில கவிதைகளை எழுத முயற்சி செய்கிறேன். சரியாக வருகிறதா என்று பார்க்கலாம்.

 

கவிதை 1

புத்தாண்டு தினமே
வருக வருக
நீவிர் வந்த வேளை
எங்கள் வீட்டில் கேஸ் சிலிண்டரில்
கேஸ் இல்லை
ஞாயிற்றுக்கிழமை வேறு
தஞ்சாவூர் மெஸ்ஸிற்குப் போகவேண்டும்
அத்தனைப் பேருக்கும் சாப்பாடு வாங்க..

 

கவிதை 2

எங்கள் தெருவில்
இரவு பன்னிரண்டு வரைக்கும் காத்திருந்தார்கள்
ஹோ என்று சத்தம் போட்டபடியே பேசிக்கொண்டிருந்தார்கள்
சிலர் கோலம் போட்டுக்கொண்டிருந்தாரகள்
முள் பன்னிரண்டைத் தொட்டவுடன்
படபடவென்று பட்டாசு வெடித்துத் தள்ளினார்கள்
புத்தாண்டு வந்து விட்டதாக கூக்குரலிட்டார்கள்
என் தூக்கம் கெட்டது

 

கவிதை 3

புத்தாண்டில் நான் மாற விரும்புகிறேன்
தினமும் டைரி எழுத விரும்புகிறேன்
காலையில் வாக் செய்து என் டயப்படிக்கை
குறைக்க விரும்புகிறேன்
குறைவாக சாப்பிட விரும்புகிறேன்.
யாருடனும் அளவாய் பேச விரும்புகிறேன்
சரி சரி அளக்காதே

என் நண்பர் ஒருவருக்கு திருமணம். அவருக்கு நான் கவிதை எழுதினால் எப்படி இருக்கும்.

கவிதை 1

நீ கையைப் பிடிக்கும் பெண்ணின் பொருட்டு
சொல்கிறேன்
திருமணத்திற்குப் பிறகாவது
நீ திருந்தி வாழ முயற்சி செய்
உன்னைப் பற்றி ஜம்பம்
அடித்துக்கொள்ளாதே
குடிக்காதே
சிகரெட் பிடிக்காதே
அவ்வாறெல்லாம் செய்யாமல் இருந்தால்
உன்னை விட்டு அந்தப் பெண் போய்விடுவாள்
உனக்கு என் கல்யாண வாழ்த்துகள்

மணமகள் எனக்குத் தெரிந்தவர். அவருக்கு என் வாழ்த்துகள்.

கவிதை 2

நான் எழுதும் கவிதை இது
சீர்காழியில் உன்னைப் பார்த்தபோது
எளிமையின் வடிவமாய் இருந்தாய்
ஆலப்புழை மாற்றல் பெற்று
நீ சென்றபின்
என்னை அழைப்பாய் என்று நினைத்தபோது
உன் கல்யாணப் பத்திரிகை வந்து சேர்ந்தது
எங்கிருந்தாலும் நீ வாழ்க
உண்மை கவிதைகள் மேலே குறிபப்பிட்டபடி இருக்கலாம். ஆனால் பொய்யாக கண்ணாடியில் சட்டமிட்ட கவிதைகளை மணமகனுக்கோ மணமகளுக்கோ ஆஹா ஓஹோவென்று எழுதப்பட்டிருக்கலாம்.
ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், காரணத்தை வைத்து கவிதைகள் எழுதுவதை விட்டுவிடுங்கள் என்பதற்காகத்தான்.