மேடைப் பேச்சும் நானும் / 1
எனக்கு மேடையில் பேச வேண்டுமென்ற ஆசை என் பள்ளிக்கூட நாட்களிலேயே தொடங்கி விட்டது. ஆனால் ஆசை மட்டும்தான் உண்டு. தைரியமாக சொல்ல வேண்டியதை மேடையில் ஏறி பிறர் முன் சொல்ல முடியுமா என்பதில்தான் சிக்கல். அந்தக் காலத்தில் பள்ளிகளில் மேடையில் பேசும் திறனுக்கு பரிசு கொடுப்பார்கள். நான் படித்த ஒரு ஆரம்பப் பள்ளியில் பேசும் போட்டி வைத்திருந்தார்கள். நானும் துணிச்சலாகப் பேச பெயர் கொடுத்துவிட்டேன். பேர் கொடுத்துவிட்டேனே தவிர அவர்கள் கொடுத்தத் தலைப்பில் பேசுவதற்கு பெரிய போராட்டமே நடத்த ஆரம்பித்தேன். என்ன பேசப் போகிறேன் என்பதை ஒரு தாளில் எழுதி வைத்துக்கொண்டேன். பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் கலந்துகொண்டு பேசுபவரின் பெயர்களை வாசித்து வந்தார்கள். கூடவே ஒரு கட்டளையும் இட்டார்கள். 2 நிமிடத்திற்குமேல் பேசக் கூடாது என்பதுதான் அந்தக் கட்டளை. நான் பேசுவதற்கான தருணம் வந்தது. அதற்குள் என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. நான் பேசி எல்லோரும் கேட்டு எல்லோரும் என் பேச்சில் மயங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியது. என் பெயரைக் கூப்பிட்டார்கள். எனக்கோ உதறல். கையில் எழுதியிருந்ததைப் பார்த்துப் படித்தேன். படிக்கும்போது ஒரு தப்பு செய்துவிட்டேன். மாணவ மாணவிகளே என்று குறிப்பிடுவதற்குப் பதில் மாணவ மனைவிகளே என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான் ஒரே சிரிப்பு. ஏன் சிரிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே பல நிமிடங்கள் ஆயிற்று. வேகமாக மீதி எழுதியிருப்பதையும் படித்துவிட்டு ஓடி வந்துவிட்டேன். இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. தேர்தல்போது பல அரசியல்வாதிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்களெல்லாம் ஒரே மாதிரியான விஷயத்தை ஒரு மேடையில் பேசியதை எல்லா மேடைகளிலும் பேசுவார்கள். ஒப்பிப்பதுபோல் எல்லோரும் திறமையாகப் பேசுவார்கள். மேடையில் திறமையாகப் பேசும் படைப்பாளிகள் பலர் என் நண்பர்கள். க.நா.சுப்பிரமணியம் மேடையில் பேசும்போது எந்தத் தலைப்பிலும் பேசுவார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசக்கூடிய திறமையானவர். எந்தத் தலைப்பு குறித்தும் எந்தத் தயாரிப்பும் இல்லாமல் பல மணிநேரம் பேசக்கூடிய திறமையானவர். சென்னையில் அவர் இருந்தபோது என்னை இலக்கியக் கூட்டம் ஒன்றை மாதம் மாதம் நடத்துங்கள் என்று தூண்டியவர். முதன்முதலில் மாதம் ஒருமுறை அவரை வைத்தக்கொண்டு கூட்டம் நடத்த வேண்டுமென்று எனக்குத் தோன்றிகொண்டே இருக்கும். அப்போது எப்படி ஒரு கூட்டம் நடத்துவது அதற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்றெல்லாம் குழம்பிக்கொண்டிருந்தேன். க.நா.சு பேசுவதைப் போல் எழுதுவும் செய்வார். அதேபோல் படிக்கவும் செய்வார். படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் ஒருநாள் பொழுதைக் கழிப்பார். படிக்க ஆரம்பித்தால் கையில் எது கிடைத்தாலும் படிக்காமல் இருக்க மாட்டார். நான் முதன் முதலாக நவீன விருட்சம் இதழிற்கு எதாவது எழுதுங்கள் என்று க.நா.சுவிடம் போய் கேட்டேன். உடனே எழுதிய ஒரு கட்டுரையை என்னிடம் கொடுத்தார். எனக்கு ரொம்ப ஆச்சரியம். கேட்டவுடன் கொடுத்துவிட்டார் என்பது. அவரை வைத்துக்கொண்டு மேடையில் பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்த எனக்கு பெரிய ஏமாற்றம். அவர் தில்லிக்குச் சென்றவுடன் இறந்தும் விட்டார். நான் கூட்ட நடத்தவேண்டுமென்ற விதி என்னை விடவில்லை என்று தோன்றியது. லையன் சீனிவாசன் என்ற நண்பர் ஒருவர். அவர் சபீனா போன்ற ஒரு பொருளை செய்து காயின் என்ற பெயரில் விற்க ஆரம்பித்திருந்த தருணம். அப்போது ஹிந்துவில் Engagement என்ற பகுதியில் வரும் விளம்பரத்திற்கு என்னை இலக்கியக்கூட்டம் நடத்தும்படி தூண்டினார். எல்லா செலவையும் அவரே பார்த்துக்கொள்வதாக வேறு குறிப்பிட்டார். முயற்சி செய்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் விருட்சம் இலக்கியக் கூட்டம். முதன்முதலில் காசியபன் என்ற படைப்பாளியை வைத்துக்கொண்டு நடத்தினேன். கூட்டம் நடத்தத் தொடங்கியபோதுதான் தெரிந்தது. எனக்கு மேடையில் சரியாகப் பேச வரவில்லை என்பது. நான் கூட்டத்தில் பேச ஆரம்பித்தபோது, இப்படி ஆரம்பித்தேன், ‘எல்லோருக்கும் வணக்கம்….இப்போது காசியபன் பேசுவார்,’ என்று கூறிவிட்டு போய் உட்கார்ந்து கொண்டேன். காசியபன் யார்? அவர் என்னன்ன எழுதியிருக்கிறார் போன்ற பல விபரங்களைப் பற்றி பேசவில்லை. கூட்டத்தில் செய்ய வேண்டிய ஜாலவித்தையும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் காசியபனோ அவருக்கே உரித்தான பாணியில் பல விஷயங்களைப் பற்றி பேசினார். முதல் கூட்டம் நிறைவாகவே நடந்தது. சொற்பமானவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களுடைய பெயர்களையும் முகவரிகளையும் ஒரு நோட்டில் குறித்துக் கொண்டேன். (இன்னும் வளரும்)
Tag: அழகியசிங்கர்
சில குறிப்புகள் / 12
typical Tamil Little Magazineன் பரிபூர்ண லட்சணங்களின் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது…’வீடு திரும்புதல்’ கவிதையின் அற்புத கவித்வம் மொழி பெயர்ப்பில் காணாமல் போயிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. விரைவில் சென்னை திரும்ப இருக்கிறோம்
ச இராகவன் யாழ்ப்பாணம்
பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்குரிய அழகியசிங்கர் அவர்கட்கு,
நீங்கள் வெளியிட்டு வரும் நவீன விருட்சம் இதழ்கள் சில தொடர்ச்சியாக வாங்கிக் கிடைத்ததில் மெய்சிலிர்த்து இக்குறிப்பை எழுதுகிறேன். ஆர்ப்பாட்டமில்லாமல் கைக்கடக்கமாக ஒரு கனதியான சிற்றிதழாக நவீன விருட்சம் வெளிவருவதை கண்டு, உங்கள் மீது பெருமதிப்புக் கொண்டுள்ளேன். தவிரவும் உங்களது சிறுகதைகள் ஒருசிலவற்றை வாசித்ததில் பெருமகிழ்வுற்றேன். எளிமையான முறையில் அலாதியான நடையில் நவீனத்துவத்தைப் பிரதிபலிக்கும் சமூகப் பார்வையுள்ள உங்களது சிறுகதைகள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. மேலும் ஜெகன், மோகினி, அழகியசிங்கர் ஆகியோருக்கிடையிலான உரையாடல் சலிப்பினைத்தராத வரவேற்புக்குரிய உத்தி. அசோகமித்திரன் எழுதிவரும் பத்தி பல்வேறு விடயங்களை அறிமுகப்படுத்துவதில் முதன்மை வகிக்கிறது. அண்மைக்காலமாக கொம்பன் எழுதிவரும் பத்தியும் சுவாரசியமாகத்தானிருக்கிறது. ராஜேஸ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்று ஒரு பாக்கெட் நாவல் எழுத்தாளராக இதுவரை நான் எண்ணியிருந்த ஸ்டெல்லா புரூஸ் ஒரு தீவிரமான சிற்றிதழ் எழுத்தாளன் என்பதை நவீன விருட்சம் மூலமாகத் தெரிந்து கொண்டேன். இங்கு யாழ்ப்பாணத்தில் நவீன விருட்சம் அளவுக்கு எளிமையானதும் நேர்த்தியானதும் கனதியானதுமான சிற்றிதழ் இதுவரை வெளியானதில்லை என்பதையும் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.
My Dear Mouli, (Azhagiyasingar), Card I MondayJaundice relapsed. Recovering. I need ¸கிழானல்லி Please get this from High Court grounds. In front of ‘Laxmy Narain’, on the Telephone Bill Office side, near the footwear repairs, there is Palmist by name subramanian.
Mention my name. He will help you find the herp.
Subbu was here twice regarding his job within 7 days. He must come again.
No news from Amirtharaj. Perhaps he does not want to call without bringing some money or other. This is absurd. Tell him to come. I need people to talk to. It helps.
I have a poem for you. But this must be published only
under the pen name I have given for it.
Am sending a friend who called at this point in writing this letter. He is sure to do the work.
With love,
T Ajithram Premil
ஐந்தாவது மாடிக் கட்டிடமும் தீ விபத்தும்
70-80க்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரக்கணக்கானவர்கள் வங்கியில் பணியில் சேர்க்கப்படுவார்கள். வங்கியில் பணியில் சேரும் ஒருவருக்கு எளிதாக திருமணம் ஆக வாய்ப்பு அதிகம்.
ஆனாலும் இளைஞர்களான எங்கள் குதூகூலம் தொடராமலில்லை. நாங்கள் பத்து பதினைந்து பேர்கள் ஒரு கூட்டமாக உணவகத்தில் அமர்ந்துகொண்டு ஜோக்குகளை உதிர்த்தவண்ணம் இருப்போம். பெரும்பாலும் சர்தார்ஜி ஜோக்குகள். என்னால் ஒரு ஜோக்குகூட சொல்லமுடியாது. சாப்பிட்டுவிட்டு ஒவ்வொரு மாடிப்படியாக ஐந்தாவது மாடிவரை ஏறிவருவோம். அப்படி ஏறிவரும்போது லிப்டை ஒவ்வொரு மாடியிலும் அழுத்தி விடுவோம். லிப்ட் 1, 2, 3, 4, 5….என்று நின்று நின்று வரும். அப்படி வரும்போது லிப்டில் வருவர்களைப் பார்த்து சிரித்தபடி வருவோம். பெண்களாக இருந்தால் இன்னும் இன்னும் அதிக கிண்டல்.
நான் முதன்முதலாக கதைகளை எழுதத் தொடங்கினேன். என் முதல் கதை செருப்பு. வேலைக்கு முயற்சி செய்கிற ஒரு இளைஞனைப் பற்றிய கதை. அதை எந்தப் பத்திரிகையிலும் போட மாட்டார்கள். என் கனவு குமுதம், ஆனந்தவிகடன் மாதிரி பத்திரிகைகளில் என் கதை பிரசுரம் ஆக வேண்டும் என்பது. நான் அப்போதே தீவிரமான எழுத்துக்களைப் படிக்கத் தொடங்கியதால், சாதாரண பத்திரிகையில் எழுதும் கதை இயல்பு என்னிடமிருந்து கழன்று விட்டது. அப்போது அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒரு முறை’ என்ற சிறுகதைத் தொகுதியைப் படித்துவிட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ந முத்துசாமி, சா கந்தசாமி, காசியபன், நகுலன் என்றெல்லாம் தமிழ் படைப்பாளிகளின் படைப்புகள் எனக்கு அறிமுகம். ஆங்கிலத்தில Ayn Rand எழுதிய புத்தகங்களையெல்லாம் படித்துவிட்டு சற்று மண்டைக்கனத்தோடு இருந்ததாக என் நினைப்பு.
சில குறிப்புகள் : 10
நவீன விருட்சம் 81-82 வது இதழ் அச்சாகிவிட்டது. அக்டோபர் மாதத்திற்குள் கொண்டு வர வேண்டுமென்ற என் பரபரப்பு இதழ் உருவாக்கத்தில் சில குறைபாடுகளை ஏற்படுத்தாமலில்லை. navinavirutcham.blogspot மூலம் பல புதியவர்கள் நவீன விருட்சத்திற்குக் கிடைத்துள்ளார்கள். வேண்டியமட்டும் படைப்புகளும் கிடைத்துள்ளன. எல்லாவற்றையும் நவீன விருட்சம் இதழில் கொண்டு வந்துள்ளேன்.
கவிஞர் எஸ் வைதீஸ்வரன் முகப்போவியம் பிரமாதமாக வந்துள்ளது.
இனி நவீன விருட்சத்தை எல்லோருக்கும் அனுப்ப வேண்டும். முழுவதும் அனுப்ப எனக்கு குறைந்தபட்சம் 15 நாட்களாவது பிடிக்கும். கனத்த ஜோல்னா பையை தோளில் சுமந்துகொண்டு அலுவலக சாப்பிடும் நேரத்தில் வண்டியில் க்ரோம்பேட்டை தபால் அலுவலகத்தில் எல்லாவற்றையும் சேர்த்துவிடுவேன்.
முன்பெல்லாம் சந்தா அனுப்பச் சொல்லி எல்லோருக்கும் கார்டு எழுதுவது வழக்கம். இப்போது அதெல்லாம் முடிவதில்லை. சந்தா அனுப்பிவிடுவார்கள் என்று எண்ணி பத்திரிகை அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.
இந்த இதழில் புதியவர்களாக நிலாரசிகன், அனுஜன்யா, மைக்கேல், இராகவன், ச முத்துவேல், சைதை செல்வராஜ், செல்வராஜன் ஜெகதீசன் முதலியவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள். (இவர்கள் முகவரிகள் தேவை. பத்திரிகை பிரதிகள் அனுப்ப.)
அடுத்த இதழ் ஜனவரி மாதம் வருகிறது. தொடர்ந்து படைப்புகளை அனுப்பும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.முதலில் navinavirutcham.blogspot லும் பின், நவீன விருட்சம் இதழிலும் பிரசுரம் செய்கிறேன்.
இப்போது அனுப்பி உள்ள கவிதை ஒன்றை இங்கு பிரசுரம் செய்கிறேன்.
ச.முத்துவேல்
நம்ப மறுத்த கணங்களை
மீண்டும் மீண்டும்
நிகழ்த்திப் பார்க்கிறது மனம்.
கடந்துபோன ஆற்று நீர்போல்
ஏற்கனவே பெய்த வெயில்போல்
இழந்த கணங்கள் என்றபோதிலும்
பரவசமான கணங்களை
முன்பைவிடத் தேய்ந்துபோன
பரவசத்தோடும்
வலிமிகுந்தத் தருணங்களை
முன்பைவிடத் தேய்ந்துபோன
வருத்தத்தோடும்.
அக்கணங்களின்
அதிர்வலைகள் இன்னமும்
ஓய்ந்தபாடில்லை
சில குறிப்புகள் / 9
வணக்கம்.
ஒரு வழியாக நவீன விருட்சம் 81-82 வது இதழ் முடிந்தது. இரண்டு மூன்று தினங்களில் அச்சு அடிக்கும் இடத்திலிருந்து வெளியே கிளம்பிவிடும் விருட்சம்.
ழ பத்திரிகையின் இணை ஆசிரியர் இராஜகோபாலனின் திருமணம் இப்போதுதான் நடந்த மாதிரி தோன்றியது. இன்று அவர் புதல்வரின் திருமணம். வழக்கம்போல் அவருக்கு நெருங்கிய .இலக்கிய நண்பர்களின் கூட்டம்.
ஒவ்வொரு முகத்திலும் வயது தனது பதிவை ஏற்படுத்தாமலில்லை. வயதான அசோகமித்திரன், வயதான ஞானக்கூத்தன், வயதான விட்டல்ராவ், வயதான கந்தசாமி, வயதான முத்துசாமி, வயதான ஆன்ந்த் என்று பலரை வயதான நானும் பார்த்தேன்.
ராஜகோபாலன் எளிமையான மனிதர். அவர் கவிதைகளும் அவரைப் போல எளிமையானவை.
இந்த திருமண வைபவத்திற்கு வந்திருந்த ஆனந்த் அவருடைய கவிதைத் தொகுதியான அளவில்லாத மலர் என்ற புத்தகத்தை கையெழுத்திட்டு அளித்தார். எனக்கு உடனே பல ஆண்டுகளுக்குமுன் ஆத்மாநாமுடன் அவரைப் பார்க்கச் சென்றபோது, எனக்கு கையெழுத்திட்டு அவர் அளித்த ‘அவரவர் கைமணல்’ என்ற புத்தகம் ஞாபகம் வந்தது.
ஆனந்த் கவிதைகள் சற்று வித்தியாசமானவை. சாதாரண மனிதத் தோற்றங்கள் சற்று குறைந்து மனத் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடியவர். ‘அளவில்லாத மலர்’ என்ற கவிதைத் தொகுதியைப் புரட்டியவுடன் தோன்றிய கவிதையை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.
மாடிப்படி
மாடிப்படியில் ஏறிக் கொண்டும்இறங்கிக் கொண்டும் இருக்கிறார்கள் அனைவரும்
ஏறிக்கொண்டும்இறங்கிக்கொண்டும்இருக்கிறது மாடிப்படி
பிறகு
படுக்கையான பிறகுதூக்கம் நன்றாக வருகிறது
ஜன்னலான பிறகுநல்ல காற்றும் வெளிச்சமும்இருக்கிறது
மரமான பிறகுவேர்களும் பார்க்கக் கிடைக்கிறது
மேகங்களான பிறகுகண்கள் திறந்துமழைபொழிகிறேன்
இப்படி அளவில்லாத பல கவிதைகள் அளவில்லாத மலர் என்ற புத்தகத்தில் உள்ளன. காலச்சுவடு பதிப்பகமாக வந்துள்ள இப் புத்தகத்தின் விலை ரூ.65 தான்.
மழை 1, 2, 3…..
மழை பெய்தால் சென்னை நகரம் போல் ஒரு வேதனை தரும் இடத்தைப் பார்க்க முடியாது. நான் வசிக்கும் மேற்கு மாம்பலம் இன்னும் மோசம். கடந்த 2 நாட்களாக முட்டி கால்வரை தண்ணீர். அலுவலகம் போவதற்கே அருவெறுப்பாக இருந்தது. கூடவே அங்கங்கே பாதாள சாக்கடைகளின் மூடிகள் திறந்துகொண்டு சாக்கடை மல ஜலம், மழை நீர் என்று நாசம் செய்து விட்டது. தாங்க முடியாத துர்நாற்றம். இந்த மழையால் 15 பேர்களுக்குமேல் இறந்துவிட்டார்களாம். இத் தருணத்தில் மழையைப் பற்றி எழுதிய மூன்று கவிதைகளை இங்கு வாசிக்க அளிக்கிறேன்.
மழை 1
மழை பெய்தது
தெரு நனைந்து மிதக்க
இரண்டு பூனைக்குட்டிகள்
இடுக்கில்
குளிருக்குப் பயந்து
தாய் மடியில் பதுங்க
தாய்ப்பூனை
குட்டிகளைப் பற்றி யோசனையில்
கீழே
அப்பா
பாட்டி
தம்பி மூவரும் டிவியில்
துருப்பிடித்த சைக்கிளை
எடுத்தேன்
மழை விட்டிருந்தது
என் குழந்தைகளைப் பார்க்க…………
மழை 2
மழை பெய்யவில்லை என்று என் அப்பா சொன்னார்
மழை பெய்யவில்லை என்று என் மனைவி சொன்னாள்
மழை பெய்யவில்லை என்று என் பையன் சொன்னான்
மழை பெய்யவில்லை என்று என் பெண் சொன்னாள்
மழை பெய்யவில்லை என்று பக்கத்துவீட்டார் சொன்னார்
வெயில் கொளுத்துகிறது என்று நான் சொன்னேன்.
மழை 3
மழை தூறி முடிந்தது
சம்பவங்கள் நடக்காமலில்லை
ஸ்தம்பித்துப் போன தோற்றம்
விடைபெறும் நண்பர்
எல்லோருடனும் புன்னகை செய்தார்
எப்போதும் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவார்
தெருவைக் கடக்கும்போது
ஈரம் சதக்கென்று காலில் ஒட்டி
வெறுப்பாய் மாறுகிறது பாவனை
விடைபெறும் நண்பர்
புதிய இடம் செல்ல ஆயத்தமாகிறார்
தனியாகப் பயணம்
பெற்றோரை விட்டுச்செல்லும் தயக்கம்
புதிய இடம்
புதிய முகங்கள்
வேறு மொழி
இங்கு ஈரம் இருந்துகொண்டுதான் இருக்கிறது
நண்பர் மனதிலும்
சதக்கென்று காலில் ஒட்டாத ஈரம்
நினைவுப் பறவைகள் மிதந்த வண்ணம்
புதிய இடம்
வரவேற்க காத்திருக்கலாம்.
தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்
அழகியசிங்கர் 17।10।2008
6/5 போஸ்டல் காலனி முதல் தெரு மேற்கு மாம்பலம் சென்னை 600 033
அன்புள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்।
நவீன விருட்சம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக காலாண்டு இலக்கியச் சிற்றேடு நடத்தி வருகிறேன்। கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த இதழ் தொடர்ந்து வெளிவருகிறது.
நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் பிரதிகள் தமிழ் புத்தகங்கள் வாங்க உத்தரவு இட்டதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்। பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தவிர, இன்று தமிழ் புத்தகங்களை வாங்கிப் படிப்பவர்கள் மிக மிகக் குறைவு। மேலும் தமிழில் எழுதும் எழுத்தாளர்களின் நிலை இன்னும் மோசமானது। அவர்கள் எழுதும் எழுத்தால் சாதாரண நிலையைக் கூட அவர்களால் எட்ட முடியாது.
நான் கல்லூரியில் படித்தபோது, தமிழ் ஆசிரியர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதோடல்லாமல், தமிழ் வகுப்புகளே கிண்டலுக்குரிய இடமாகக் காட்சி அளிக்கும்।அதுமாதிரியான தருணத்தில் தமிழில் ஆர்வம் கொண்டு எழுதுவது என்பது சிரமமானது। எழுதும் எழுத்து புத்தகமாக வருவதும், பத்திரிகைகளில் பிரசுரமாவதும் அவ்வளவு சுலபமானதில்லை.
நவீன விருட்சம் என்ற என் பத்திரிகையில் படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் தரும் விதமாக கவிதைகளையே பெரும்பாலும் வெளியிட்டு வருகிறேன்। கவிதைகள் வெளியிட்டு வந்தாலும், கவிதையைப் போல கிண்டலுக்குரிய ஒன்று தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்காவது உண்டா என்பது தெரியவில்லை. அதேபோல் கவிதை எழுதுபவர்களிடையே பல பிரிவுகள். இப் பிரிவுகள் ஒன்றை ஒன்று சாடுவதோடல்லாம், ஒருவரை ஒருவர் வீழ்த்துவதில் பெரும்பாலான காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றன.
என் பத்திரிகையை ஆயிரம் பேர்களுக்கு மேல் படிப்பதில்லை என்றே நினைக்கிறேன்। இது தமிழ் ஜனத்தொகையை எடுத்துக்கொள்ளும்போது, ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது.
இந்தச் சூழ்நிலையில்தான் புத்தகம் கொண்டு வர வேண்டியுள்ளது.
புத்தகம் கொண்டு வந்தாலும், விற்பது என்பது அசாதாரண விஷயமாகத் தோன்றுகிறது. அசாதாரண விஷயம் மட்டுமல்ல, விற்கவே முடியாத நிலைதான் உருவாகி உள்ளது. கவிதைப் புத்தகம் விற்க வாய்ப்பே இல்லை. என்னைப் போன்றவர்கள் நூலகத்தையே சார்ந்து இயங்க வேண்டியுள்ளது. பொதுவாக ஓராண்டில் நான் ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களுக்கு மேல் கொண்டு வர மாட்டேன். 2006 ஆம் ஆண்டில் மட்டும் 6 புத்தகங்களைக் கொண்டு வந்தேன். 6 புத்தகங்களில் 4 புத்தகங்கள் மட்டும் கவிதைப் புத்தகங்கள். இந்த முறை எனக்கு நூல்கள் வாங்க வந்த உத்தரவில் கவிதைப் புத்தகங்களுக்கு மட்டும் ஆதரவு கிட்டவில்லை. இது எனக்குப் பெரிய ஏமாற்றம். கவிதை எழுதுவதில் திறமைப் படைத்த முதல்வர் ஆட்சியில், கவிதைப் புத்தகங்களுக்கு நூலக ஆதரவு இல்லை. என் வருத்தம் கவிதைகள் எப்படியானாலும் விற்கவும் போவதில்லை. நூலக ஆதரவை ஒட்டியே கவிதைப் புத்தகம் வெளியிட வேண்டும். அதற்கு நூலக ஆதரவு இல்லை என்றால், புத்தகங்களைக் கட்டுக் கட்டாக வைத்துக்கொண்டிருக்க வேண்டும். விற்காமல் புத்தகங்களை வைத்துக் கொண்டிருப்பதைப் போல் வேறு எதுவும் இல்லை. நான் இப்படிப் பல புத்தகங்களை வைத்துக்கொண்டு வீட்டில் திட்டும் வாங்கிக்கொண்டு அவஸ்தைப் படுகிறவன். முழுநேரமும் எழுத்தையே நம்பி இல்லாமலிருப்பதால் தப்பித்தேன்.
முதல்வர் அவர்களே, நான் பள்ளியில் படிக்கும்போது, நீங்கள் அண்ணாவைக் குறித்து எழுதிய கவிதையை உங்கள் குரலிலேயே வானொலியில் ஒலி பரப்பினார்கள். அதை நான் கேட்டிருக்கிறேன். உண்மையில் கவிதையைப் பொருத்தவரை நீங்கள் எழுதுவது வேறு விதம், நாங்கள் எழுதுவது வேறு விதம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான கவிதை மனம் என்ற ஒன்று இருக்கும். ஏன் தங்கள் புதல்வி கனிமொழி அவர்கள் எழுதும் கவிதைகள் நீங்கள் எழுதும் கவிதைகளைவிட முற்றிலும் வேறுவிதமானவை. கவிதையை ஆதரிக்கிற, எழுதுகிற ஒரு முதல்வர் தமிழ்நாட்டை ஆட்சி செய்வது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேற்கு வங்கத்தில் ஜோதி பாசு ஆட்சி செய்யும்போது, கவிதைக்கும் அவருக்கும் வெகுதூரம் என்ற கருத்தில் ஒரு கவிதை வெளியாகியிருந்தது. சுபோத் சர்கார் எழுதிய அக் கவிதையை விருட்சத்தில் பிரசுரம் செய்திருக்கிறேன்.சிறிய கவிதையான அதை தங்களுக்கு வாசிக்க அளிக்கிறேன்.
பூதமும் கவிதைப் புத்தகம் வாங்குபவரும்
மீன் பிடிப்பவர் கவிதை வாசிப்பதில்லை
தேன் விற்பவர் கவிதை வாசிப்பதில்லை
நோயாளியான இளைஞனும்,
சகோதரனும் கவிதை வாசிப்பதில்லை
மிஸ்டர் ஜோதிபாசு கவிதை வாசிப்பதில்லை
கவிதைப் புத்தகம் வெளயிடுபவர்
கவிதை வாசிப்பதில்லை
கல்லூரி ஆசிரியர் கவிதை வாசிப்பதில்லை
பின் எந்தப் பூதம் கவிதைகளை வாசிக்கும்?
யார்தான் கவிதைப் புத்தகங்களை வாங்குவார்கள்?
கவிதையின் இன்றைய அவலநிலையைக் குறித்துதான் இக் கவிதை।
2006 ஆம் ஆண்டு நூலக ஆதரவு கிட்டாத 4 கவிதைத் தொகுதிகள் குறித்து சிறு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்।
விருட்சம் கவிதைகள் தொகுதி 1 – இப் புத்தகம் 94 கவிஞர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைக் கொண்ட நூல். இப் புத்தகத்தில் வெளியான கவிதைகள் 1988ஆம் ஆண்டிலிருந்து முதல் ஐந்தாண்டுகளில் நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கவிதைகளின் தொகுதி நூல். தமிழில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் பல முக்கிய கவிஞர்களின் கவிதைகள் உள்ள நூல் இது. ஒரு பல்கலைக் கழகம் கூட இப்படி ஒரு தொகுதியைத் தயாரிக்க முடியாது.
2. அழகியசிங்கர் கவிதைகள் : 183 கவிதைகள் கொண்ட என் தொகுதி நூல். 1975 ஆம் ஆண்டிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறேன். என் கவிதைகள் சில ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன் இரு கவிதைத் தொகுதிகள் வெளி வந்துள்ளன. இந் நூலுக்கும் ஆதரவு கிட்டவில்லை. வல்லிக்கண்ணன், சுஜாதா, தமிழவன், வெங்கட் சாமிநாதன் முதலியவர்கள் என் கவிதை நூலிற்கு விமர்சனம் எழுதி உள்ளார்கள்.
3. ரா ஸ்ரீனிவாஸன் கவிதைகள் : என் நண்பரும் கவிஞருமான ரா ஸ்ரீனிவாஸனின் தொகுப்பு இது। ஏற்கனவே 1989 ஆம் ஆண்டு இந் நூல் வெளி வந்துள்ளது. ரா ஸ்ரீனிவாஸனின் கவிதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
4. நீல பத்மநாபன் எழுதிய ஐயப்பப் பணிக்கரின் ஆளுமையும் சில படைப்பு மாதிரிகளும் என்ற புத்தகம் மலையாளப் படைப்பாளியான ஐயப்பப் பணிக்கரின் சில கவிதைகளையும் உரையாடல்களையும் வெளிப்படுத்தி உள்ளன. நீல பத்மநாபன் அவருடைய தோழரான ஐயப்பப் பணிக்கரின் சில கவிதைகள்.கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார்।।
கவிதை சம்பந்தப்பட்ட இந்த நான்கு புத்தகங்களுக்கும் நூலக ஆதரவு கிட்டவில்லை. தங்கள் பார்வைக்கு இந்த நான்கு புத்தகங்களையும் அனுப்பி உள்ளேன். உங்களுக்கு இக் கடிதத்தைப் படிக்க நேரம் இருக்குமா என்பது தெரியாது. மேலும் நான் அனுப்புகிற இப் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கக்கூட உங்களுக்கு நேரம் இருக்குமா என்பதும் தெரியாது. உங்கள் பார்வைக்கு இக் கடிதம் வருமா என்பதும் தெரியாது. உங்களுக்கு அனுப்பும் இக் கடிதத்தை navinavirutcham.blogspot.comசேர்த்துள்ளேன்.
அன்புடன்
அழகியசிங்கர்
நவீனவிருட்சம் நவீனவிருட்சம் நவீனவிருட்சம் நவீனவிருட்சம் நவீனவிருட்சம்
அண்ணாவின் உருக்கம்
அண்ணாவின் உருக்கம் என்ற பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தேன். 2005 ஆம் ஆண்டு. இக் கவிதை என் தொகுதியில் வெளிவந்துள்ளது. கவிதையை அண்ணாவின் நூற்றாண்டின் போது இங்கு அளிக்க விரும்புகிறேன்.
மாப்படுகை வழியாகச் செல்லும் பாதையில் பெரும்பாலும் அபூர்வமாகவே வாகனங்கள் வரும் போகும் நடமாட்டம் இரவென்றால் குறைவு பள்ளிக்கூடங்கள் இருக்கும் நாட்களில் சிறு சிறு மாணவ மாணவிகள் அவர்களுக்குள்ளே தென்படுகிற கற்பனை உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள்….வண்டியில் செல்லும் நான்ஜாக்கிரதையாகப் பயணிப்பேன் ஒவ்வொருமுறையும் பார்த்துக் கொண்டே செல்கிறேன் ஒரு அண்ணாசிலையை கழக கண்மணிகளே உங்களுக்கு ஒரு வேண்டுகோள் நிச்சயமாய் அண்ணாசிலையிலிருந்து அண்ணா உயிரோடு தோன்றினால் சொல்லியிருக்கலாம் கம்பீரமான அச்சிலையில் ஆளுயுர அண்ணா கையில் புத்தகம் வைத்தபடி நடந்து செல்வதுபோல் தோற்றம்….சிலை வடித்தவன் அண்ணாவைப் பார்த்திருக்கலாம் சிலையின் பக்கத்திலேயே கழக கண்மணிகளின் கூடாரம் ஆனால் சிலையோ கம்பீரத்தை இழந்து விட்டது கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று அண்ணா சொன்ன மந்திரம் என்று இவர்கள் சொல்லித்தான் தெரியும் ஒவ்வொருமுறையும் நான் போகும்போது சிலையை ஒருமுறையாவது பார்த்துவிட்டுச் செல்வேன் அண்ணா முணுமுணுப்பது காதில் விழுகிறது நான் என்ன பாவம் செய்தேன் எனனை இங்கே நிறுத்தி விட்டார்களே என்று புராதான அழுக்கென்றால் அப்படியொரு அழுக்கை நீங்கள் பார்த்திருக்க முடியாது பறவைகளின் களிப்பூட்டும் சம்பவம் எல்லாம் அண்ணாசிலையின் மீது எப்பவோ கழுத்தில் இட்ட நீண்ட மாலையொன்று உதிர்ந்து போகாமல் தெரு தூசிகளுடன் கருத்துக் கிடக்கும் அண்ணா என்னசெய்வார் பாவம் முகத்தில் திட்டுத்திட்டாய்த் தெரியும் வெண்மை அழுக்குப் போக எத்தனை ஆண்டுகள் இன்னும் ஆகுமோ? தினமும் பார்ப்பதால் எனக்குத் தெரிகிறது அண்ணா கடுகடுவென்று நிற்கிறாரென்று.
ஒரு கதை இரு முடிவுகள்
பூர்வாங்கம் :
சுந்தரி ஒரு முடிவிற்கு வந்து விட்டாள். அவள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டால், பின் மாற்றுவது என்பது இயலாத காரியமாகிவிடும். அவளைப் பொறுத்தவரை இந்த முடிவு மோசமான முடிவு. ஏன் எல்லாவற்றுக்குமான முடிவு இது? அவளுக்கு ஆசையாகக் கொடுத்த சிங்கப்பூர் புடவையைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். அதை உத்தரத்தில் உள்ள கொக்கியில் மாட்டிக்கொண்டாள். அவள் ஏறி நின்று மாட்டிய ஸ்டூல் மீதே அவள் உட்கார்ந்து கொண்டாள். இனி அவ்வளவுதான். வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டியதுதான். கழுத்தில் இறுக்கி இந்த ஸ்டூலை எடுத்துவிட்டால், எல்லாம் முடிந்து விடும். ஆனால் இது மாதிரி செய்வதற்கு துணிச்சல் வேண்டும். சுந்தரிக்கு துணிச்சல் இருக்கிறது. செய்தும் விடுவாள். அவளுக்குக் கோபம் வந்துவிட்டால், நன்றாகப் பழகியவர்களிடம் கூட பேசமாட்டாள். சுந்தரிக்கு 39வயதாகிவிட்டது. இன்னும் சில மாதங்களில் 40 வயதாகிவிடும். அவள் வீட்டில் 10 பேர்கள். எட்டுப் பெண்கள். இரண்டு ஆண்கள். சுந்தரிக்கு மேல் உள்ள இரண்டு அக்காள்களுக்குத் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்துகொள்ளும் வயதுகளையும் கடந்து விட்டார்கள். சுந்தரிக்கு அந்த ஆசை விடவில்லை. ஒரு நிமிடம் தன் வாழ்க்கையை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். அவள் சந்தோஷமாக என்றாவது இருந்திருக்கிறாளா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தினமும் பலருடைய வீட்டு வேலைகளைச் செய்து அவள் கை ஒடிந்து போய்விட்டது. இன்னும் அவளுக்கான ஒரு வாழ்க்கை வரவில்லை என்றுதான் அவள் நினைத்துக்கொண்டிருப்பாள். எல்லோரும்போல் அவளும் திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டுமென்று நினைக்கிறாள். வறுமையான அவள் குடும்பத்தை நினைத்துப் பார்க்கும்போது, தன்னுடைய மூத்த அக்காள்கள்போல் தன் வாழ்க்கையும் போய்விடுமென்று அவளுக்குத் தோன்றியது. இச் சமயத்தில் பத்மநாபன்தான் அவள் மீது இரக்கப்பட்டு தினசரி ஒன்றில் விளம்பரம் கொடுத்திருந்தார். அந்தத் தினசரியைப் பார்த்துவிட்டு, ஒரு வரன் அவளுக்குக் கிட்டும்போல் தோன்றியது. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தில் முட்டி நின்றது. அவளைப் பார்த்த பையனுக்கு பைக் வேண்டுமாம். முதலில் அவளுடைய அண்ணன் யோசனை செய்தான். பிறகு சரியென்று சொல்லிவிட்டான். எல்லாம் முடிந்துவிட்டது. எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் பையன் இன்னும் கல்யாணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஒரு வாரம் கழித்து என் முடிவைச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டான். பையன் இருப்பது திருவலங்காடு. அங்கு ரைஸ் மில் வைத்து ஓட்டிக்கொண்டிருக்கிறான். சுந்தரிக்கு ஒவ்வொரு நாளும் கடத்துவது நரகவேதனையாக இருந்தது. பத்மநாபன் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பார். எப்படியாவது இந்தக் கல்யாணத்தை முடித்துவிடலாமென்று தைரியமும் சொல்லிக்கொண்டிருப்பார். எதற்கும் காலம் கணிந்து வரவேண்டுமென்பதில் அவருக்கு அலாதியான நம்பிக்கை உண்டு. ஆச்சு. பத்துநாள் ஓடிவிட்டது. பையனிடமிருந்து பதில் வரவில்லை. அதனால்தான் மேலே கூறிய தற்கொலை முடிவுக்கு சுந்தரி வந்துவிட்டாள். இந்தத் தற்கொலையை அரங்கேற்ற வசதியாக அவள் பணிபுரிகின்ற வீடொன்றை தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அந்த வீட்டில் உள்ளவர்கள் இவளிடம் சாவியைக் கொடுத்துவிட்டு சென்னைக்கு அவசரமாகச் சென்றுவிட்டார்கள். வர சில வாரங்கள் ஆகும். ஒரு நிமிடம் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். பிறகு வீட்டுக் கதவைச் சாத்திவிட்டு, தன் உடம்பில் உள்ள துணியெல்லாம் உருவினாள். கழுத்தில் புடவையை மாட்டிக்கொள்ள வேண்டியதுதான. தன் தற்கொலையால் யாருக்கும் எந்தத் துன்பமும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்துடன், ஒரு பேப்பரில், தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி எல்லோர் பார்வையிலும் படும்படி வைத்துவிட்டாள். தூக்கில் தொங்க வேண்டியதுதான். அதற்கு முன், தன் உருவத்தை ஒருமுறைப் பார்த்துக் கொண்டாள். இனி இந்த உடல் மண்ணுக்குப் போகப் போகிறது. பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது. முடிவு ஒன்று : சுந்தரி தன் கழுத்தில் புடவையை மாட்டிக்கொண்டாள். புடவை இறுகிக்கொண்டது. இனி அவ்வளவுதான். அவள் நின்றுகொண்டிருந்த ஸ்டூலை உதறி விட வேண்டியதுதான். உதறினால், கழுத்தில் புடவை இறுகி சில நிமிடங்களில் இறக்க நேரிடலாம். கடைசி முறையாக கண்களை மூடிக்கொண்டு, அடுத்த ஜென்மத்திலாவது நல்ல பிறவியாக எனக்குக் கொடு என்று கடவுளை வேண்டிக்கொண்டாள். இதோ சுந்தரி தூக்கில் தொங்கிவிட்டாள். உதறி எறிந்த ஸ்டூல் தொப்பென்ற சப்தத்துடன் விழுந்தது. கைக் கால்களை உதறி, கண்கள் சொருக, சொருக… தூரத்திலிருந்து யாரோ அவள் பெயரைச் சொல்லி உரத்துக் கூப்பிடுவது காதில் விழுந்…….சுந்தரி போய்விட்டாள். எல்லோரையும் விட்டு…. மேலே குறிப்பிட்ட முடிவு எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் முடிவை மாற்ற வேண்டுமென்று தோன்றியது. சுந்தரியை எதற்காக சாகடிக்க வேண்டும். அதனால் யாருக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது. சுபமான முடிவு என்றால், படிப்பவர்களுக்கும் நிஇருக்கும். வாழ்க்கையில் சோகமான முடிவுகள்தான் அதிகம். அதனால் இன்னொரு முடிவை இங்கே எழுதி உள்ளேன்: முடிவு இரண்டு :
சுந்தரி தான் கட்டியிருந்த உடைகளை வீசி எறிந்தாள். ஒரு நிமிடம் தன்னைக் கண்ணாடியில் போய்ப் பார்த்துக்கொண்டாள். அவள் முகத்தைப் பார்க்கும்போது, தற்கொலை செய்துகொள்ளப் போகும் உருவமாக அது தெரியவில்லை. சரி, இன்றோடு இந்த உருவத்தை யார் பார்க்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள். ஸ்டூல் மீது ஏறி நின்றுகொண்டாள். ஐயோ, நாம் இறந்துவிட்டால், இக் குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் போலீஸ் எதாவது தொந்தரவு செய்யப் போகிறதென்று எண்ணி, உடனே ஸ்டூலை விட்டு கீழே இறங்கி, அந்த வீட்டில் உள்ள ஒரு இடத்திலிருந்து பேப்பரையும், பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தாள். =என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. இந்த வீட்டில் உள்ள மனிதர்கள் நல்ல மனிதர்கள். என் சுய உணர்வோடுதான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.+ அவ்வளவுதான் சுந்தரி எழுதினாள். பின் கையெழுத்துப் போட்டாள். மறக்காமல் தேதி, நேரம் எல்லாம் குறித்துக்கொண்டாள். இதோ தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான். திரும்பவும் ஸ்டூலில் ஏறிநின்று, புடவையை கழுத்தில் இறுக்கிக் கொண்டாள். கண்களை மூடிக்கொண்டு கடவுளை வேண்டிக்கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. இதோ முடித்துக்கொள்ள வேண்டியதுதான். கழுத்தில் முறுக்கியும் கொண்டாள். ஸ்டூலை தள்ள வேண்டியதுதான் பாக்கி. ஆயிற்று அதுவும் இன்னும் சில நிமிடங்களில்..ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து……சுந்தரீ…..சுந்தரீ….யாரோ கூப்பிடுவது கேட்கிறது… ஆறு, ஏழு, எட்டு, யே…சுந்தரீ…என்ன பண்றே… ஒன்பது, ப….த்… சுந்தரீரீரீ…..ஏது அண்ணன் குரல் மாதிரி கேட்கிறதே..அண்ணாவா…. என்ன? என்றாள் சுந்தரி பதிலுக்கு… “அவர்கள் சம்மதித்துவிட்டார்கள்,” என்றான் அண்ணன். சுந்தரி போக வேண்டிய உயிரைத் திரும்பவும் பாதுகாக்க வேண்டும்போல் தோன்றியது. தூக்குப் புடவையை உதறித் தள்ளிவிட்டு, கீழே குதித்தாள். அவசரம் அவசரமாக உடைகளை மாட்டிக்கொண்டாள். வாசல் கதவைத் திறந்தாள். அவள் அண்ணன் மகிழ்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான். “அவர்கள் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். அடுத்த மாதம் கல்யாணம்..” என்றான் அவன்.சுந்தரி கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.