அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.
நவீன விருட்சம் 84வது இதழ் வெளிவந்து விட்டது. 21 ஆண்டுகள் முயற்சி. 160 பக்கம் கொண்ட இந்த இதழ், புதுக்கவிதை இயக்கம் தோன்றி 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது. க.நா.சு., ந பிச்சமூர்த்தி, சி சு செல்லப்பாவிற்கு நன்றி கூறும் விதமாக இதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. எளிதில் முடியும் என்று நினைத்த இந்த இதழ் அவ்வளவு எளிதில் முடியவில்லை. ஜனவரி 2009க்குப் பிறகு ஜூலை மாதம்தான் இதழ் வருகிறது. இவ்வளவு தாமதமாக வருவதற்குக் காரணம் சற்றுகூட அவகாசம் தராத என்னுடைய கடுமையான பணி, மூட் எல்லாம் சேர்ந்ததுதான். எல்லாவற்றையும் மீறி இதழைக் கொண்டுவர வேண்டுமென்ற பிடிவாதத்தால்தான் இந்த இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழுக்காக நான் அதிகமாகவே செலவு செய்துள்ளேன். தனிப்பட்ட ஒரு இதழுக்காக நான் இந்த அளவு அதிகமாக செலவு செய்ததில்லை. நவீன விருட்சம் முதல் இதழ் 16 பக்கங்களுடன் தொடங்கியது. இப்போது 160 பக்கம் வரை வந்துவிட்டது. 21 ஆண்டுகளுக்கு முன் இதழ் வரும்போது இருந்த மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் ஏகப்பட்டவர்கள் படிக்கிறார்கள், ஏகப்பட்டவர்கள் எழுதுகிறார்கள்.
இந்த இதழ் தயாரிக்க உதவிய படைப்பாளிகளைப் பற்றி சொல்ல வேண்டும். வழக்கம்போல் நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் அசோகமித்திரன் இந்த இதழுக்கும் தன்னுடைய பங்களிப்பை நல்கி உள்ளார். நாகார்ஜூனன் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஆங்கிலத்திலிருந்தும், பிரெஞ்சு மொழியிலிருந்தும் நேரிடையாக மொழிப்பெயர்த்துள்ள கவிதைகளில் சில்வியா பிளாத் கவிதைகள் சிலவற்றை அளித்துள்ளார். என்னுடைய பல ஆண்டு கால நண்பரான ஞானக்கூத்தன் இன்னொரு என்னுடைய நண்பரான ஆனந்த் கவிதையைப் பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை அளித்துள்ளார். அதேபோல் அம்சன்குமார், விட்டல்ராவ், வைதீஸ்வரன், ஐராவதம், ரா ஸ்ரீனிவாஸன், எஸ் வைத்தியநாதன், கொம்பன், க்ருஷாங்கினி முதலிய பல இலக்கிய நண்பர்கள் இதழுக்கு மகுடம் சேர்த்துள்ளார்கள்.
நவீனவிருட்சம் நெட்டில் தெரியவந்தபோது, பலர் நவீன விருட்சத்திற்குப் படைப்புகளை அனுப்பி இதழை சிறப்பிக்க உதவி செய்துள்ளார்கள். அவர்களுடைய படைப்புகள் உடனுக்குடன் நவீனவிருட்ம் blogspot ல் வருவதோடல்லாமல், நவீன விருட்சம் இதழிலும் வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவித்தக் கொள்வதோடு அடுத்த இதழ் இன்னும் சீக்கிரமாக கொண்டுவர எல்லாவித முயற்சியையும் எடுத்துக்கொள்வேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். யார் யார் படைப்புகள் வெளிவந்துள்ளன என்பதற்கு ஒரு லிஸ்ட் கீழ்கண்டவாறு தருகிறேன். எல்லோருக்கும் பத்திரிகை அனுப்ப விரும்புகிறேன். தயவுசெய்து முகவரிகளை அனுப்பி உதவுங்கள்.
1. அனுஜன்யா – பிக்பாக்கெட் – சிறுகதை 2 கார்க்கோ – கவிதை – அன்னம், கிளி, மயில், மேகம், ஆன்ந்த் – பக்கம் ௭3. செ செந்தில்வேல் – நான்கு கவிதைகள் – பக்கம் 84. ரா ஸ்ரீனிவாஸன் கவிதை – சொல்லும் சொல்லமைப்பும் – பக்கம் ௧௧5. இரா வசந்தகுமார் – மாமா எங்கே? – சிறுகதை – பக்கம் ௧௨6. யோசிப்பவர் – உயிர் – சிறுகதை – பக்கம் ௧௬7. அம்ஷன்குமார் – வேர்கள் – கட்டுரை – பக்கம் ௨௧8. ஜான்சிராணி – விஸ்வரூபம் – கவிதை – பக்கம் ௨௫9. இரங்கல்கள் – அஞ்சலி – அசோகமித்திரன் – பக்கம் ௨௬10. க்ருஷாங்கினி – அஞ்சலி – கிருத்திகாவும், சுகந்தியும் – பக்கம் ௩௧11. அழகியசிங்கர் – அஞ்சலி – எதிர்பாராத மரணம் – பக்கம் ௩௪12. ஸில்வியா ப்ளாத் கவிதைகள் – தமிழில் நாகார்ஜூனன் – பக்கம் ௩௮13. அழகியசிங்கர் – புரியாத பிரச்சினை – சிறுகதை – பக்கம் ௫014. செல்வராஜ் ஜெகதீசன் – 6 கவிதைகள் – பக்கம் ௫௬15. வடகரை வேலன் கவிதை – 9 மணி அலுவலகத்திற்கு – பக்கம் ௬016. மதன் – என் சட்டைப்பையினுள் – கவிதை – பக்கம் ௬௨17. ஞானக்கூத்தன் – மதிமை சாலா மருட்கை – கட்டுரை – பக்கம் ௬௩18. இரா பூபாலன் – கவிதை – அக்காவின் அன்பளிப்பு – பக்கம் ௭௬19. என் விநாயக முருகன் – கவிதை – இலக்கணப்பிழை – பக்கம் 7௬௨20. பாவண்ணன் – இரண்டு கவிதைகள் – பக்கம் ௭௭21. எம் ரிஷான் ஷெரீப் – நிழற்படங்கள் – சிறுகதை – பக்கம் ௭௯22. அனுஜன்யா கவிதைகள் – பக்கம் ௮௫23. வைதீஸ்வரன் – இரு கவிதைகள் – பக்கம் ௮௮24. நிலா ரசீகன் – மூன்று கவிதை – பக்கம் ௯025. ஒரு தேசமே சேவல் பண்ணையாய் – சிறு – சோ சுப்புராஜ் – பக்கம் ௯௨26. த அரவிந்தன் – கவிதை – பூனையின் உலக இலக்கியம் – பக்கம் ௧0௫27. எம் ரிஷான் ஷெரீப் – கவிதை – சாகசக்காரியின் வெளி – பக்கம் ௧08. பிரேம்குமார் – கவிதை – கோவில் யானை – பக்கம் ௧0௭29. கே ரவிசங்கர் – கவிதை – அபார்ட்மெண்ட் பித்ருக்கள் – பக்கம் ௧0௮30. மாலினி புவனேஷ் – நான்கு கவிதைகள் – பக்கம் ௧0௯31. விட்டல்ராவ் – சிறுகதை – ஓர் ஓவியனும் ஒரு ரசிகனும் – பக்கம் ௧௧௧32, அழகியசிங்கர் – கட்டுரை – சில குறிப்புகள் – பக்கம் ௧௨௧33. விக்கிரமாதித்யன் – கவிதை – என் இனிய இளம்கவி நண்பரே – பக்கம் ௧௩௪34. ப்ரியன் – கவிதை – பூட்டிய வீட்டினுள் அலையும் தனிமை – பக்கம் ௧௩35. கோகுல கண்ணன் – சிறுகதை – ஒரே நாளில் – பக்கம் ௧௩௯36. கொம்பன் – சந்தி – கட்டுரை – பக்கம் ௧௪௯37. புத்தக விமர்சனங்கள் – ஐராவதம் – பக்கம் ௧௫௨௩அழியா கைக்கிளி – புத்தக விமர்சனம் – மா அரங்கநாதன் – பக்கம் ௧௫௬39. உரையாடல் – அழகியசிங்கர், ஜெகன், மோகினி – பக்கம் 159

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.

நவீன விருட்சம் blog ஆரம்பித்து ஓராண்டு முடிந்துவிட்டது. இன்று தற்செயலாகத்தான் இதை அறிந்தேன். இத்தனை பேர்கள் நவீன விருட்சத்திற்காக படைப்புகள் அனுப்புவார்கள் என்பதையும் எதிர் பார்க்கவில்லை. 160 பக்கங்கள் கொண்ட நவீன விருட்சம் 84வது இதழ் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலான படைப்புகள் இந்த blog மூலம் எனக்குக் கிடைத்த படைப்புகள்தான். எனக்கே ஆச்சரியம்..இத்தனை பேர்கள் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்களா என்பது. எனக்கு தினமும் கவிதைகள் blogல் பிரசுரம் செய்ய அதிகம் பேர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். கவிதைகள் பிரசுரம் ஆக ஆக கவிதைகள் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கின்றன. எழுதுபவர்கள் பெரும்பாலும் யார் என்று கூட எனக்குத் தெரியவில்லை. கவிதை எப்படி இருக்க வேண்டுமென்ற எளிமையான வழி மட்டும் எனக்குத் தெரியும். அந்த எளிமையான வழியை எழுதுபவர்கள் எல்லோரும் புரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விருட்சம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாக கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து எனக்குத் தோன்றுவதை எழுதுகிறேன். நான் எழுதுவதுதான் சரி என்பதெல்லாம் இல்லை. மாறுபட்ட கருத்துகள் உள்ளவர்களும் இருக்கலாம்.

1) கவிதை எளிமையாக இருக்க வேண்டும்
2) எடுத்த உடன் வாசிக்க வைக்கும்படி இருக்க வேண்டும்
3) கருத்துகளில் குழப்பம் எதுவும் இருக்கக் கூடாது
4) கருத்து என்ற ஒன்று இல்லாமல் கூட இருக்கலாம்.
5) தோன்றுவதையெல்லாம் கவிதையாக எழுதலாம்.
6) மிகைப்படுத்தப்பட்ட உணர்வைத் தவிர்க்க வேண்டும்
7) கவிதை மூலம் யாரும் அழக் கூடாது
8) Self pity இருக்கவே கூடாது
9) கவிதை வாசிப்பவர்களையும் வசீகரித்து சிரிக்க வைக்க வேண்டும்.
10) ஜாலியான மன நிலையை கவிதை உருவாக்க வேண்டும். வாசிப்பவர்களும் அப்படியே வாசிக்க வேண்டும்

மேற் குறிப்பிட்டபடி எனக்குத் தோன்றுவதை எழுதியிருக்கிறேன். நீங்களும் நிறையா கருத்துக்களை அளிக்கலாம்.

அன்புடன்
அழகியசிங்கர்

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….4

விசிறி சாமியாரை அந்த முறைதான் அவ்வளவு நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. பிறகு பார்ப்பதே அரிதாகி விட்டது. பாலகுமாரன் மூலம் என்று நினைக்கிறேன். அவர் மிக முக்கியமான சாமியாராகி விட்டார். அவரைச் சுற்றிலும் எப்போதும் கூட்டம். அவர் பெயரில் தனியாக ஆசிரமம் கட்டி விட்டார்கள். அவர் ஆசிரமத்திற்கு ஒருமுறை போனபோது தனியாக அவருடைய சிலையை வைத்திருந்தார்கள். எனக்கு இதெல்லாம் ஆச்சரியம். நான் பார்த்தபோது எளிதில் பழகக்கூடியவராகவும், சற்று வித்தியாசமானவராக இருந்த விசிறி சாமியார் நெருங்க முடியாதவராக மாறிவிட்டார்.

நான் இங்கு சொல்வது என் நினைவில் தோன்றுவதைத்தான் சொல்கிறேன். சிலசமயம் அது கோர்வையாக இல்லாமல்கூட போய்விடும். அல்லது எதாவது சொல்வது விடுப்பட்டுப் போய்விடும். விசிறி சாமியாரைப் பார்ப்பதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிரமிளுக்கு என் நன்றி எப்போதும் உண்டு.

சாமியார்கள் சாதாரண மனிதர்கள்போல் தோற்றத்தில் இருந்தாலும், அவர்கள் மகான்கள். யோகி ராம்சுரத் குமார் ஒரு மகான். அதனால்தான் பிரமிள் போன்ற எழுத்தாளர்கள் அவருக்கு அளவு கடந்த மரியாதையும், பக்தியும் வைத்திருக்கிறார்கள். விசிறி சாமியார் ஒரு சாதாரண அழுக்கு வேஷ்டியை அணிந்துகொண்டு இருந்தாலும் அவர் முகத்தில் தெரிந்த தேஜஸ் எனக்கு திகைப்பை ஏற்படுத்தியது. கொட்டங்குச்சி வைத்திருந்தார். கையில் ஜபமாலையை வைத்துக்கொண்டு உருட்டுவதுபோல் வெறும் விரல்களில் ஜபம் செய்துகொண்டிருந்தார். எங்களுடன் பேசிக்கொண்டும் இருந்தார். அவர் அடிக்கடி Passingshow சிகரெட்டைப் பிடித்துக்கொண்டிருந்தார். அந்த சிகரெட் இப்போது வருவதில்லை என்று நினைக்கிறேன். சாமியார் சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கிறாரே என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். பிரமிள் இலங்கையில் அவர் பார்த்த சில சாமியார்கள் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவார்கள் என்று குறிப்பிட்டார்.

பிரமிளுக்கு எண் கணிதம் மீது அபார நம்பிக்கை. ஒருவர் பெயரைக் கேட்டால்போதும் உடனே பெயரை எழுதி கூட்டி. கூட்டல் எண்ணை வைத்து பலன் சொல்ல ஆரம்பித்துவிடுவார். பெயரை வேறு எண் வரும்படி மாற்றிவிடுவார். அழகியசிங்கர் என்ற என் பெயரை அழகு சிங்கன் என்று வைத்துக்கொள்ள சொல்லியிருக்கிறார். என் இயற்பெயர் மெளலியில் ஓ வருவதால் எல்லோரும் என்னைக் கிண்டல் செய்வார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். விசிறி சாமியாரிடம் எண் கணிதம் பற்றி பிரமிள் பேச ஆரம்பித்தார். அது ஒரு விஞ்ஞானம் என்றும், பெயர் மாற்றுவதால் எண்கள் மாறுவதால் அதனால் ஏற்படும் பலாபலன்களைப் பற்றி சாமியாரிடம் பேசிக்கொண்டிருந்தார். ஒருமுறை அவர் பெயரை மாற்றி பரிசோதனை செய்திருப்பதாகவும் அதனால் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

விசிறி சாமியார் ஒவ்வொரு முறை பேசும்போதும் தன்னை ஒரு begger என்று குறிப்பிட்டுத்தான் பேசுவார். எனக்கு அதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கும். ”இந்த beggerஐத் தேடி ஒரு பெண்மணி வந்தாள். அவளுக்கும், அவள் கணவருக்கும் ஏதோ பிரச்சினை. அழுதபடி பிரச்சினையைச் சரிசெய்ய வேண்டும் என்று கேட்டாள்…நான் பெயரை மாற்றி அவளை அனுப்பினேன்… இறுதியில் ஒரு வருடம் கழித்து அவள் திரும்பவும் வந்தாள்…அவளுக்கும் அவள் கணவருக்கும் இப்போது சுமுகமான உறவு இருப்பதாக கூறினாள்..” என்று சாமியார் பிரமிளிடம் குறிப்பிட்டார். (இன்னும் வரும்)

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….3

பிரமிள்தான் அடிக்கடி சாமியார்களைப் பற்றி குறிப்பிடுவார். விசிறி சாமியார் பற்றி பலமுறை தெரிவித்திருக்கிறார். அதனால் எனக்கும் விசிறி சாமியாரைப் பார்க்க ஆர்வம் ஏற்பட்டது. முதலில் நான், பிரமிள், லயம் சுப்பிரமணியன் (அவர் கோவையிலிருந்து வந்தார்) மூவரும் விசிறி சாமியார் அப்போது வசித்து வந்த ஒரு ஓட்டு வீட்டிற்கு முன் வந்து நின்றோம். ஏன்என்றால் அந்த வீட்டிற்குள் நுழையும்போது ஆணிகளில் மாலைகள் தொங்கிக்கொண்டிருந்தன. அவை எல்லாம் ஒட்டடைப் படிந்து அழுக்காக இருந்தன. எந்தக் காலத்திலோ யாரோ போட்ட மாலைகள் யாவும் தூக்கி எறியாமல் மாட்டியிருந்தன.

உள்ளேயிருந்து விசிறி சாமியார் வந்தார். அவரைப் பார்த்தவுடன், ”உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்…வரலாமா” என்று பிரமிள் கேட்டார். உள்ளே வரச் சொன்னார் விசிறி சாமியார். முதன் முதலில் அவரைப் பார்க்கும்போது எனக்கு திகைப்பாக இருந்தது. அவர் ஒரு அழுக்கு வேஷ்டியைக் கட்டிக்கொண்டிருந்தார். அவர் உடலே அழுக்காக இருக்கும்போல் தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் பயங்கர தேஜஸ். தாடி வைத்திருந்தார். அந்த தேஜஸைப் பார்த்து எனக்கு ஆச்சிரியமான ஆச்சரியம்.

உள்ளே நுழையும்போது நான் உட்கார அவசரமாக ஓடினேன். அப்போது அவர் என்னைத் தடுத்து நிறுத்தினார்.

முதலில் பிரமிளையும், பின் சுப்பிரமணியனையும், அதன் பின் என்னையும் உட்காரும்படி சொன்னார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. ஏன் உட்கார கூட அவர் விருப்பப்படி சொல்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை.

சாமியாரும், பிரமிளும் ஆங்கிலத்தில் உரையாடினார்கள். பிரமிளுடன்தான் அவர் பேசிக்கொண்டிருந்தார். நானும் சுப்பிரமணியனும் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தோம். வாயைப் பிளந்துகொண்டு என்று கூட சொல்லலாம். நான் என் ஆர்வத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தேன். சுப்பிரமணியன் எதையும் வெளிப்படையாகக் காட்டிக்கக் கூட இல்லை.

அடிக்கடி சாமியார் தன்னை பிச்சைக்காரன் என்று குறிப்பிட்டுக் கொண்டார். ‘எதற்கு இந்தப் பிச்சைக்காரனைப் பார்க்க வந்தீர்கள்?” என்று கூட கேட்டார். இதற்குமுன் ஒரு சாமியார் செய்கையை நான் பார்த்ததில்லை. அவர் திடீரென்று பிரமிள் கையைப் பிடித்துக்கொண்டார். பின் பிரமிள் முதுகில் ஓங்கி தட்டினார். எனக்கு திகைப்பாக இருந்தது. ஓங்கி தட்டுதலை இரண்டு மூன்று முறை செய்தார்.

பொதுவாக சாதாரணமாகப் பேசினாலே சண்டைக்கு வருபவர் பிரமிள். அவருக்குப் பிடிக்காத எழுத்தாளர்களைப் பார்த்தால் போதும், அவர்கள் மிரண்டு ஓடும்படி செய்வார். நான் பலரை பிரமிளுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன். அவர்களுடன் அவர் பேசும்போதே கிண்டல் தொனியுடன் பேசுவார். எனக்கும் ஏண்டா அறிமுகப் படுத்தினோம் என்ற சங்கடம் வரும். ”சார், இவர் பெயர் ரமணன்,” என்று ஒருவரை அறிமுகப் படுத்தினேன்.

”எந்த ரமணன்?”

”சதங்கையில் கவிதை எழுதியிருக்கிறேன்?” என்று அவர் சொன்னால் போதும்,

”சதங்கையா… அதெல்லாம் பத்திரிகையா?” என்று சொன்னவரை கிண்டல் செய்து அனுப்பி விடுவார்.

அதனால் ஆர்வத்தோடு பழக வேண்டும் என்று நினைப்பவர், அவ்வளவு சீக்கிரம் நெருங்கி பழகிவிட முடியாது. அப்படிப்பட்டவர் விசிறி சாமியார் முன் பயப்பக்தியுடன் மரியாதையுடன் அமர்ந்திருந்தார்.
(இன்னும் வரும்)

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….2

நான் நேற்று இதை டைப் அடிக்கும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. இப்போதும் 10 மணி. அதனால் கொஞ்சம் அடித்துவிட்டு நிறுத்தி விட்டேன். நானே பல விஷயங்களை இப்படி blogல் அடிப்பது சந்தோஷமாக உள்ளது. இதை சிலபேர்கள் படிக்கிறார்கள். இப்படி அடிப்பது முன்பெல்லாம் கிடையாது. பெரும்பாலும் பத்திரிகையில் பிரசுரம் ஆவது நடக்காது. நான் கவிதைகள் எழுதி அதைப் பிரசுரம் செய்ய சரியான பத்திரிகை இல்லை என்பதால்தான் நவீன விருட்சம் ஆரம்பித்தேன். என்னைப்போல் பல நண்பர்கள் கவிதைகளையும் பிரசுரம் செய்ய வழி தெரியவில்லை. அப்படி ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைதான் நவீன விருட்சம்.
அந்தப் பத்திரிகை ஆரம்பித்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. பெரிய படைப்பாளிகளின் படைப்புகளையும் பிரசுரம் செய்ய வழி இல்லை என்பதுதான். என் பத்திரிகையின் 2 வது இதழின்போது க.நா.சுவை மயிலாப்பூரில் சந்தித்தேன். எனக்கு அவரிடம் அளவுகடந்த மரியாதை உண்டு. அவரிடம் விருட்சத்திற்கு எதாவது விஷயதானம் செய்ய முடியுமா என்று கேட்டேன். உடனே ஒரு கட்டுரையை பையிலிருந்து எடுத்துக்கொடுத்தார். எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம். நான் அந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்யவில்லை.
புதுக்கவிதைக்கு முக்கியமானவர்கள் என்று மூன்று பெயர்களை மட்டும் அவர் குறிப்பிட்டிருந்தார். என் நண்பர்கள் பலர், அவர் கட்டுரையில் குறிப்பிட்டது சரியில்லை என்று வாதிட்டார்கள். எனக்கோ க.நா.சு எது எழுதிக்கொடுத்தாலும் பிரசுரம் செய்ய வேண்டுமென்று தோன்றியது. இரண்டாவது இதழில் அந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்யவில்லை. ஆனால் அக்கட்டுரை ழ என்ற சிற்றேட்டில் வெளிவந்துவிட்டது. 3வது இதழ் போது க.நா.சு இறந்து விட்டார். அட்டைப் படத்தில் ஆதிமூலம் வரைந்த புகைப்படத்தை பிரசுரம் செய்தேன். (ஆதிமூலம் வரைந்த இன்னொரு படத்தை சு.ராவின் காலச்சுவடிற்குக் கொடுத்துவிட்டேன்).
நான் திரும்பவும் பிரமிள், விசிறி சாமியாருக்கு வருகிறேன். பிரமிளுக்குக் கூட பத்திரிகையில் பிரசுரம் செய்ய பத்திரிகைகள் எதுவுமில்லை. விருட்சம் இதழில் கூட 9வது இதழில்தான் அவர் படைப்புகளைப் பிரசுரம் செய்ய முடிகிறது. சிறுபத்திரிகை சூழலில் படைப்பாளர்களிடையே உள்ள fight பத்திரிகை நடத்துவதே பிரச்சினையாகிவிடும். எந்தப் படைப்பாளியையும் பிரமிள் எளிதாக பாராட்டவே மாட்டார் என்று எனக்குத் தோன்றும். அதனால் நான் எழுதுவதை எதுவும் அவரிடம் காட்ட மாட்டேன். அவரிடம் மட்டுமல்ல பல மூத்த எழுத்தாளர்களிடம் என் படைப்புகளை நான் காட்டியதே இல்லை. மேலும் ஒருவரை பிரமிள் திட்டி எழுத ஆரம்பித்துவிட்டால் யாரும் அவர் முன்னால் நிற்க முடியாது. அப்படி திட்டிவிடுவார். பிரமிளைப் போல நான் பழகிய மற்ற மூத்த படைப்பாளிகளை அவர் திட்டுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரமிளுக்கு புதுமைப்பித்தன் மீதும், மெளனி மீதும் அளவுகடந்த மரியாதை உண்டு.
ஆரம்ப மெளனி கதைத் தொகுதியில் பிரமிள் அவரைப் பாராட்டி எழுதிய கட்டுரை இடம் பெற்றிருந்தது. மறு தொகுப்பாக மெளனி கதைகள் வந்தபோது பிரமிள் கட்டுரை பிரசுரம் ஆகவில்லை. அந்தச் சமயத்தில் பிரமிள் வெளிப்படுத்திய feeling எனக்குத் தெரியும். இது எதில் கொண்டு போய் விட்டது என்றால் மெளனி கெளனி என்று மெளனி கதைகளையே திட்டி எழுதிவிட்டார். இதுதான் அவருடைய பலம். பாராட்டியும் எழுத முடியும், திட்டியும் எழுத முடியும் அவரால். படிப்பவர்களுக்கு அவர் சொல்வதுதான் நியாயம் என்று தோன்றும். யாருக்கும் தலை வணங்காத பிரமிள் ரொம்ப மரியாதையுடன் இருப்பது, ஜே கிருஷ்ணமூர்த்தியிடமும், விசிறி சாமியாரிடமும்தான். விசிறி சாமியாரைப் பார்க்க வேண்டும் என்று பிரமிள் சொன்னபோது, முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது. சாமியார்களிடம் பழகுவது சாதாரண விஷயமல்ல. நானும் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கப் போவேன். ஆனால் தூரத்திலேயே அவர் பேச்சைக் கேட்டுவிட்டு வந்துவிடுவேன். கூட்டம் முடிந்தவுடன் ஜே கிருஷ்ணமூர்த்தியும் கூட்டத்தோடு கூட்டமாக வேகமாக நடந்து போய்க் கொண்டிருப்பார். (இன்னும் தொடரும்..)

நான், பிரமிள், விசிறி சாமியார்……..1

ஒரு சனிக்கிழமை திருவண்ணாமலையில் இருக்கும் விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்கலாம் என்றார் பிரமிள். அலுவலகத்தில் விடுமுறை எடுக்க வேண்டாமென்பதால் சம்மதித்தேன். லயம் சுப்ரமணியனும் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டார். சாமியார்களைப் பார்ப்பதில் பிரமிளுக்கு அலாதியான பிரியம் உண்டு. சாமியார்களுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொண்டிருந்ததால் அவருக்கும் சாமியார்களின் குணம் இருக்குமென்று சிலசமயம் எனக்குத் தோன்றும். பிரமிளை என்னால் புரிந்துகொள்ளவே முடியாது. சிலசமயம் என்னுடன் நன்றாகப் பேசுபவராகத் தோன்றும். அப்படி நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவர் என்னை விட்டு விலகியும் போயிருக்கிறார். அவருடன் பழகிக்கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக என்னை அடிக்கடி சந்திக்க வந்து கொண்டிருப்பார். சந்திக்காத நாட்களில் கார்டில் கடிதம் போடுவார். ஒருமுறை என் சட்டையைப் பார்த்து, ‘சட்டை நன்றாக இருக்கிறது,’ என்று குறிப்பிட்டார். அன்றே என் சட்டை ஒரு ஆணியில் மாட்டி கிழிந்து விட்டது. ஒரு முறை, ‘என்ன நன்றாக சாப்பிட்டீர்களா?’ என்று வயிற்றைத் தட்டினார். அன்று எனக்கு வயிற்று வலி. பிரமளுடன் நட்புடன் பழகுவது என்பது கடினம். இத்தனைக்கும் பொருளாதார ரீதியில் ஆதரவே இல்லாதவர். பலநாட்கள் அவர் எப்படி வாழ்க்கை நடத்துகிறார் என்பதை யோசித்துக்கொண்டிருப்பேன்.
மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டர் ராமர் கோயிலில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அவருடன் பேசிய பல விஷயங்களை நான் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டேன். அவருக்குக் கோபம் வந்தால் கண்டபடி திட்டி விடுவார். ஆனால் பேசும்போது மரியாதையாகத்தான் பேசுவார். அவர் ராயப்பேட்டையில் இருந்தபோது பலமுறை அவர் அறைக்குச் சென்றிருக்கிறேன். க்ரியா இருந்த தெருவிற்கு எதிரில்தான் அவர் வசித்து வந்தார். இலங்கையில் வசிப்பது ஆபத்து என்பதை அவர் முன்பே உணர்ந்திருந்தார். அதனால் அவர் இலங்கையைவிட்டு 60 வாக்கில் சென்னைக்கே வந்துவிட்டார். ஏனோ அவர் திரும்பவும் இலங்கைக்குச் செல்லவில்லை.
ஜே கிருஷ்ணமூர்த்தி மீதும், விசிறி சாமியார் மீதும் அவருக்கு அலாதியான மரியாதை உண்டு. நான் சின்ன வயதில் மருந்துக்கடைகளில் ஒரு சாமியார் படம் பார்ப்பேன். அந்தச் சாமியார் படம் மீது எனக்கு என்னை அறியாமல் பக்தி ஏற்படும். நான் பிரமிளுடன் பழகியபிறகுதான் அந்த சாமியார்தான் ஷீரடி சாய்பாபா என்பதை அறிந்துகொண்டேன்.
ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி யாராவது குறையாகச் சொன்னால் கடுமையாக சண்டைக்கு வந்து விடுவார். ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவம்தான் லேட்டஸ்ட் என்பார். புத்தரை விட முக்கியமானவர் ஜே கிருஷ்ணமூர்த்தி என்பார். கிருஷ்ணமூர்த்தியை அவர் நம்ப தொடங்கியபோது, அவர் ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார். அவருக்குத் தெரிந்த நண்பர்கள இருவரில் ஒருவரை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது காப்பாற்றியிருக்கிறார். ஒருவர் இறந்துவிட, இன்னொருவர் தப்பித்துவிட்டார். அதற்குக் காரணம் கிருஷ்ணமூர்த்தி என்பார் பிரமிள்.
அந்த நண்பர்கள் இருவரும் சகோதரர்கள். தீவிர கஞ்சா அடிப்பவர்கள். அவர்கள் உயிரையே குடிக்கும் அளவிற்கு கஞ்சா அவர்களை இழுத்துச் சென்றுவிட்டது. ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவம்தான் தீவிர கஞ்சா அடித்துக்கொண்டிருந்த ஒருவரை காப்பாற்ற முடிந்தது. அந்த நண்பர் அதன்பின் பிரமிளுடன் ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திற்கு அடிக்கடி வருவார். பிரமிளுக்கு பல உதவிகளை அவர் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட நண்பர்கள்தான் பிரமிளுக்கு பலதடவை உதவி செய்திருக்கிறார்கள். (இன்னும் தொடரும்..)

நவீன விருட்சம்….நவீன விருட்சம்…..நவீன விருட்சம்…….நவீன விருட்சம்……..நவீன விருட்சம்…….நவீன விருட்சம்……நவீன விருட்சம்…..நவீன

நிதானமாக மாலை 5 மணிக்குமேல் அழகியசிங்கரை ஜெகனும். மோகினியும் சந்திக்கிறார்கள்.
ஜெகன் :
வெயில் கடுமையாக இருக்கிறது.மோகினி : அக்னி நட்சத்திரம் போனபிறகும் வெயில் கொடுமை தணியவில்லை.அழகியசிங்கர் : அலுவகத்திலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டால் தொப்பென்று விழுந்துவிடத் தோன்றுகிறது. எங்கும் போக முடியவில்லை.ஜெகன் : இலங்கைப் பிரச்சினை…மோகினி : எனக்கு ஒன்று புரியவில்லை. இந்தியா போன்ற நாட்டில் பல மொழிகள் பேசுபவர்கள், பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். ஆனால் இலங்கையில் இரண்டே இரண்டு மொழி பேசுபவரிடம் ஏன் சுமுகமான நிலை ஏற்படவில்லை?அழகியசிங்கர் : சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு கனவு வந்தது. எல்லோரும் ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மேலே விமானங்கள் சீறிப் பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து குண்டுகள் பொழிந்தவண்ணம் இருக்கின்றன. குண்டுகளுக்கு இரையாகி மக்கள் சரிந்து சரிந்து விழுகிறார்கள்… போர் நடக்கும்போது தமிழர்கள் பட்டப்பாட்டை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஜெகன் : நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். மோகினி : ஏன் பலவீனமானவர்கள் என்று கூட சொல்லலாம்.அழகியசிங்கர் : எழுத்தாளர்கள் என்றால் இன்னும் பலவீனமானவர்கள்.ஜெகன் : நாமெல்லாம் மெளனமாக வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.மோகினி : எந்த விஷயத்திலும் நாம் சாதாரணமானவர்கள்.ஜெகன் : இப்படி சாதாரணமானவர்கள் ஏன் கவிதை எழுத வேண்டும். கதை எழுதவேண்டும்.மோகினி : ஏன் வாசிக்க வேண்டும்?அழகியசிங்கர் : நாம் எழுதுவதால் ஒன்றும் செய்ய முடியாது. உலகத்தில் நடக்கும் மாற்றங்களை சாதாரண மனிதர்கள் போல் பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்.மோகினி : ஒன்றும் செய்ய முடியாது. ஏன் நமக்கு ஆபத்து ஏற்பட்டால் கூட ஒன்றும் செய்வதற்கில்லை. அழகியசிங்கர் : டூ வீலர் மோதி ராஜ மார்த்தாண்டன் இறந்த செய்தியை அறிந்தபோது என்னால் நம்ப முடியாமல் இருந்தது.மோகினி : ஏன்?அழகியசிங்கர் : டூ வீலர் மோதி இறப்பதா? பலத்த காயம் ஏற்படலாம். மரணம் ஏற்படுகிறது என்றால் ரொம்ப மோசமான விஷயமாக எனக்குத் தோன்றுகிறது.ஜெகன் : விபத்தில் மரணம் அடைவதுபோல் கொடுமை வேறு எதுவுமில்லை.அழகியசிங்கர் : பல ஆண்டுகளுக்குமுன் என் நண்பர் ஒருவருக்கு முதுகு தண்டுவடத்தில் நடந்த விபத்தை இன்னும்கூட என்னால் மறக்க முடியவில்லை. அவரைப்போல் சிலரால்தான் இந்த விபத்தை தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும். எனக்கு எப்போதும் அவர் ஹீரோதான்.ஜெகன் : எழுத்தை யாராவது படிக்கிறார்களா?அழகியசிங்கர் : படிக்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். ஆனால் எழுதுபவர்கள் ஹீரோவாக தங்களை நினைத்துக்கொண்டால் ஆபத்து.மோகினி : எத்தனையோ தொகுப்புநூல்கள் வெளிவருகின்றன. ஆனால் ஏன் உங்கள் கவிதைகளையோ கதைகளையோ யாரும் தொகுப்புநூலில் சேர்ப்பதில்லை.அழகியசிங்கர் : எனக்கும் அது புரிவதில்லை. கிட்டத்தட்ட 200 கவிதைகளுக்கு மேலும், 60 கதைகளுக்கு மேலும் எழுதியிருக்கிறேன். கடந்த 22 ஆண்டுகளாக நவீன விருட்சம் பத்திரிகை நடத்தி வருகிறேன். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறேன். ஆனால் கவிதைத் தொகுதியாக இருந்தாலும், கதைத் தொகுதி இருந்தாலும் சரி என் படைப்புகள் யார் நினைவுக்கும் வருவதில்லை. என்னைப் போல் சில எழுத்தாள நண்பர்கள் பெயர்களும் யாருக்கும் தெரிவதில்லை.ஜெகன் : இது குறித்து நீங்கள் ரொம்ப பேசினால், மற்றவர்களைப் பார்த்து நீங்கள் பொறாமைப் படுவதாக சொல்வார்கள். மோகினி : இதற்காக நீங்கள் வருத்தப் படுகிறீர்களா?அழகியசிங்கர் : இல்லை. ஆனால் என் பெயர் அத் தொகுப்பில் இல்லாவிட்டாலும், விடுப்பட்ட பெயர்களில் ஒவ்வொரு தொகுப்பிலும் நானும் இருந்துகொண்டுதான் இருக்கிறேன். ஜெகன் : நீங்கள் நாவல் மட்டும் எழுதியிருந்தால் இந் நேரம் புகழ் அடைந்திருப்பீர்கள்.அழகியசிங்கர் : நாவல் எழுதுவதற்கு கடுமையான முயற்சியும், பொறுமையும் தேவைப்படுகிறது. மேலும் எல்லா நாவல்களும் எல்லோருடைய கண்களுக்கும் தெரிவதில்லை.மோகினி : சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகம் எது?அழகியசிங்கர் : பாரதிமணி எழுதிய புத்தகம். படித்துக்கொண்டிருக்கும்போது என் கையிலிருந்து எங்கோ நழுவிப் போய்விட்டது. அவர் புத்தகம் மூலம் இன்னொரு சுப்புடுவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். சரளமான நடையில் எல்லாவற்றையும் தொடர்ந்து எழுதிக்கொண்டு போகிறார்.மோகினி : இந்த இதழ் நவீன விருட்சம்?அழகியசிங்கர் : 160 பக்கம் வருகிறது. புதுக்கவிதை மலர்ந்து 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடுகிறோம். ஏகப்பட்ட கவிதைகள், கதைகள் படிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.ஜெகன், மோகினி : உங்களைச் சந்தித்ததிலும் மகிழ்ச்சிஅழகியசிங்கர் : நானும் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மூன்று கவிதைகள்

கவிதை : ஒன்று
சிலருடன் பேச விரும்புகிறோம்
ஆனால்பேச முடிவதில்லை
சிலரைப் பார்க்கவே விரும்புவதில்லை
சிலரைத் தேடிப் போகிறோம்
அகப்படுவதில்லை
சிலர்முன்னால்
தேவைப்படாமல் தட்டுப் படுகிறோம்
வானத்தில் கோலம் போடுவதுபோல்
பறவைகள் பறந்து கொண்டிருக்கின்றன
தினமும் அப்படி எதிர்பார்க்க முடியுமா?
ஒருநாள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்
ஒருநாள் துக்கமாக இருக்கிறோம்
காரணம் புரிவதில்லை
உருண்டோடிப் போகும் காலப் பந்து
புரியாத புதிராக எட்டி
உதைக்கப் படுகிறது

கவிதை : இரண்டு

ஹஸ்தினாபுரத்தின் கிளை அலுவலகத்தில்
காலை வைத்ததும் ஒரே இருட்டு
ஜெனரேட்டர் இன்னும் பிக்அப் பண்ணவில்லை
பல்லைக் கடித்தபடி சீட்டில் அமர்ந்திருந்தேன்
கணினியில் எண்களைத் தடவி தடவி தட்டினேன்
விழுந்தனதப்புத் தப்பாய் எண்கள்
வாடிக்கையாளர் முன்னாள்
தலையில் அடித்துக்கொண்டேன்
வாசலில் போய்தனியாக வெயிலின்
புழுக்கத்தைப் போக்கிக்கொள்ள நின்று கொண்டிருந்தேன்
புழுக்கமில்லாத வெளி இதமாய் இருந்தது
இப்போதெல்லாம்
ஏனோ எனக்கு சிரிப்பே வருவதில்லை

கவிதை : மூன்று

கூட்டங்களில் நான்
தூங்குவது வழக்கம்
இலக்கியக் கூட்டங்களில்
நன்றாய் தூக்கம் வருகிறது
வகுப்புகளில் மாட்டிக்கொண்டால்
தூக்கம் தவிர்க்க
வகுப்பு வாசலில் நிற்பேன்
அலுவலகத்தில் நடக்கும்
கூட்டத்தில்தூங்கும்போது
யார் பேசுகிறார்கள்
என்பதை கவனமாய் கவனிப்பேன்
தூக்கத்தில் தலை ஆடுகிறதா என்றும்
ஆடும் தலையை யாராவது கவனிக்கிறார்களா என்றும்
பார்ப்பேன்
அப்படியும்
சற்று தூக்கம் என்னைக் கவர்ந்துவிடும்
தூக்கம் வரும்போது
பேசுபவர்கள் என்னை அத்திரத்தோடு
முறைத்துப் பார்ப்பதாக தோன்றுகிறது
முஷ்டியை மடக்கிக்கொண்டு முகத்தில்
ஓங்கி குத்த வேண்டுமென்று
பேசுபவருக்குத் தோன்றுகிறதோ…
ஆனால்
இரவில் குறைவாக தூங்குவது
என் வழக்கமாயிற்று

எதிர்பாராத மரணம்…


சனிக்கிழமை தேவிபாரதி ஒரு SMS அனுப்பியிருந்தார். ஒரு விபத்தில் ராஜமார்த்தாண்டன் மரணம் அடைந்துவிட்டதை. அறிந்தபோது வருத்தமாக இருந்தது. இந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் போறாத காலம் போல் தோன்றுகிறது. குறிப்பாக கவிஞர்களுக்கு..வரிசையாக சுகந்தி சுப்பிரமணியன், அப்பாஸ், சி மணி, இப்போது ராஜமார்த்தாண்டன். அவர் தினமணியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அடிக்கடி சந்திப்பேன். கொல்லிப்பாவையில் அவர் ஒவ்வொரு கவிஞராக எடுத்து அவர்களுடைய தொகுதியைப் படித்து அது குறித்து விமர்சனம் எழுதுவார். அதே பாணியில் நவீன விருட்சத்தில் எழுதும்படி கேட்டுக்கொண்டேன். அதன்படி உமாபதி, வைதீஸ்வரனுக்கு கட்டுரைகள் எழுதிக் கொடுத்தார். கவிதையைக் குறித்து கட்டுரைகள் எழுதுபவராகத்தான் எனக்கு அவரை முதலில் தெரியும். நவீன விருட்சத்திற்கு அவர் கவிதைகள் அனுப்பிய பிறகுதான் அவர் கவிதைகளும் எழுதுவார் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் மிகக் குறைவாகவே அவர் கவிதைகள் எழுதி உள்ளார்.

தினமணி அலுவலகத்திற்கு அவரைப் பார்க்கச் செல்லும்போது, சிரித்த முகத்துடன் வரவேற்று பேசத் தொடங்குவார். நான் அங்குப் போனால், ராஜமார்த்தாண்டனைத்தான் தேடிப் போவேன். பின் இருவரும் அலுவலக வாசலில் வீற்றிருக்கும் டீ கடையில் டீ சாப்பிடுவோம். நவீன விருட்சம் இதழ் மீது அவருக்கு அன்பும் மரியாதையும் உண்டு. பிரமிளை சிலாகித்துப் பேசினாலும், அவர் சுந்தர ராமசாமியின் பக்கம். சு.ராவை விட்டுக்கொடுக்க மாட்டார்.

பிரமிள் கரடிக்குடி என்ற இடத்தில் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியை உடனடியாக அவரிடம் சொல்லவில்லை என்ற கோபம் என்னிடத்திலும், வெளி ரங்கராஜனிடமும் உண்டு. ஆனால் பிரமிள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, பலர் அவரைப் பார்க்கவே வரவில்லை. விரும்பவும் இல்லை.

விபத்தில் மரணமடைவதுபோல கொடுமை வேறு எதுவுமில்லை. பெரும்பாலும் இதுமாதிரியான விபத்துகளில் வண்டியில் செல்பவர்கள்தான் இறப்பதுண்டு. சமீபத்தில் என் அலுவலக நண்பரின் மகன் டூ வீலர் விபத்தில் மரணமடைந்த நிகழ்ச்சி அதிர்ச்சியைத் தந்தது. விபத்து ஒரு சுழற்சி மாதிரி. சுழலில் மாட்டிக்கொண்டால், பலருக்கு தொடர்ச்சியான விபத்துக்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன் கார்விபத்தில் காஞ்சிபுரம் அருகில் மாட்டிக்கொண்ட நண்பர் ஒருவரின் குடும்பத்தில் பலர் பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளானார்கள். நண்பருக்கு முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு. இன்னும்கூட அவரால் முழுதாக திரும்ப முடியவில்லை.

சில அண்டுகளுக்கு முன், என் அப்பா, நான், என் மகள் என்று மூவரும் தனித்தனியாக விபத்தில் சிக்கினோம். நினைத்துப்பார்த்தால் ஆபத்தான விபத்துக்கள்தான். ஒரு நாய் குறுக்கே வந்து நான் அடிப்பட்டு விழுந்தபோது, விபத்து எனக்குத்தான் ஏற்பட்டதா என்பதைப் புரிந்துகொள்ள சில மணி நேரம் ஆனது. விபத்து நடந்த சில தினங்கள் நான் படுக்கையிலிருந்து எழும்போது தலை சுற்றோ சுற்றென்று சுற்றும். இன்னும் கூட என் வலதுபக்கம் மூக்கு மரத்துப்போனதுபோல் தோன்றும்.

இந்த ஆரியகவுடர் ரோடில் என் தந்தை (87வயது) தள்ளாடி தள்ளாடி சாயிபாபா கோயிலுக்குப் போவதை அறியும்போது எனக்கு பக் பக்கென்று அடித்துக்கொள்ளும். ராட்சத உருமலுடன் சீறிக்கொண்டு பாயும் வாகனங்களைப் பற்றி அவர் கவலைகொள்ளாமல் ரோடை கடந்துசெல்வார்.
ஒரு டூ வீலர் இடித்துத் தள்ளி ராஜமார்த்தாண்டன் மரணம் அடைந்து விட்டார் என்பதை அறியும்போது வருத்தமாக இருக்கிறது. அவரை இழந்து நிற்கும் அவர் குடும்பத்திற்கு விருட்சம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்காளர் பட்டியலில் என் பெயரும் இல்லை, கமலஹாசன் பெயரும் இல்லை…

நான் இந்த முறை ஓட்டுப் போடலாமென்றிருந்தேன். யாருக்கு என்பதிலும் தீர்மானமாக இருந்தேன். என் பெயர் பட்டியலில் இல்லை என்பது இன்று 4 மணிக்குத்தான் தெரிந்தது. என் குடும்பத்தில் அப்பாவிற்கு (87 வயது), மனைவிக்கு, என் புதல்வனுக்கு, மாமியாருக்கு என்று எல்லோருக்கும் ஓட்டுப்போட பெயர்கள் வாக்காளர் பட்டியில் இருந்தன. ஆனால் என் பெயர் மாத்திரம் இல்லை. ஆனால் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. இதற்கு முன் பல முறைகள் நான் ஓட்டுப் போட்டிருக்கிறேன். காலையில் தினத்தந்தி பேப்பரைப் படித்தப்பின்தான் தெரிந்தது கமலஹாசன் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது. எனக்கு இது ரொம்ப ஆச்சரியத்தைத் தந்தது. நான் சாதாரண நபர். ஆனால் கமலஹாசன் உலகம் புகழும் நடிகர். ஆனால் அவர் தன்னை சாதாரணன், பாமரன் என்று குறிப்பிட்டுள்ளார். ஓட்டு போடுவதற்காக ஐதாரபாத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வந்திருக்கிறார். இதனால் அவருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டம். கமலஹாசனும் என் வயதை ஒத்தவர்தான். ஆனால் சிறந்த நடிகர். நடித்தே புகழ் பெற்றவர். அவருக்கு பிறந்தநாள் கொண்டாட என்றெல்லாம் ரசிகர் மன்றம் உண்டு. அவர் பெயர் எப்படி வாக்காளர் பட்டியலில் இல்லாமல் போய்விட்டது. தேர்தல் ஊழியர்கள் எதற்காக அவரைத் தேடி வீட்டிற்கு வர வேண்டும். கமலஹாசன் பெயர் பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கிறது. அவர் படங்கள் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்டவரை வீட்டில் இருக்கின்றாரா என்று ஏன் தேர்தல் ஊழியர்கள் போய்ப் பார்க்க வேண்டும்.உண்மையில் கமலஹாசன் போன்ற ஒரு நடிகரை வீட்டில் போய்ப் பார்ப்பது என்பது சுலபமான விஷயமுமில்லை. அவர் யாரைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறாரோ அவர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் சுலபமாக அவரைப் போய் பார்த்துவிட முடியாது. என் இலக்கிய நண்பர் ஒருவர் கமலஹாசனைப் பார்க்க போய்விட்டு, பார்க்க முடியாமல் வெறுத்துப் போய்விட்டார். என்னிடம் இதைச் சொல்லி குமைந்தபோது, ‘நீங்கள் ஏன் அவரைப் போய்ப் பார்க்கப் போகிறீர்?’ என்றேன். அவரைப் போய்ப் பார்த்து அவர் மூலம் சினிமாவிற்குள் பாட்டு எழுத நுழைந்து விடலாமென்று அவர் நினைத்திருப்பார். இப்படித்தான் கவிதை எழுதும் என் நண்பர்கள் பலர் அவஸ்தைப் படுவதை எண்ணி வருத்தமாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லா வெற்றியும் கிடைத்துவிடாது. கவிதை எழுதுவதில் வெற்றி, சினிமா பாடல்கள் எழுதுவதில் வெற்றி என்றெல்லாம் கிடைத்து விடாது. தேர்தல் ஊழியர்கள் கமலஹாசனை அவர் வீடு தேடி வந்து, கமலஹாசனைப் பார்க்காமல் போனதால் வாக்காளர் பட்டியலில் பெயரை எடுத்திருப்பார்கள். என் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அதற்குக் காரணம் நான் காலையில் 7.30 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால் திரும்பவும் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வர இரவு 8 மணி ஆகிவிடும். என்னை தேர்தல் ஊழியர்கள் பார்க்க வாய்ப்பே இல்லை. மேலும் நான் முன்பு இருந்த வீட்டிலிருந்து வேறு வீட்டிற்குக் குடிப்போய்விட்டதால், முன்பு இருந்த வீட்டில் உள்ளவர்கள், ‘நான் இல்லை’ என்று சொல்லியிருப்பார்கள். உண்மையில் தேர்தல் ஊழியர்கள் பாடு திண்டாட்டம். எப்படி என் குடும்பத்தில் மற்றவர்கள் பெயர்கள் தப்பித்தது என்பது தெரியவில்லை. என் அப்பா பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் ஏன்எனில் அவர் வீட்டில்தான் சதாசர்வகாலமும் இருக்கக் கூடியவர். வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் தப்பித்து சேர்ந்தது என் மனைவியின் பெயரும், புதல்வனின் பெயரும்தான்.

சரி, ஓட்டுப் போடவில்லை என்பதில் வருத்தமா? அதெல்லாம் ஒன்றுமில்லை. கமலஹாசன் மாதிரி நான் ஒருநாளைக்கு 10 லட்சம் இழக்கவில்லை. உண்மையில் எனக்கு சந்தோஷம் தரக்கூடிய நாள் இந்தத் தேர்தல் தினம்தான். தேர்தல் தினத்தன்று அலுவலகம் விடுமுறை விட்டதால், அப்பாடா என்றிருந்தது. ஞாயிற்றுக்கிழமையைத் தவிர extra லீவ். வீட்டில் எல்லோரிடனும் ஒருநாள் முழுவதும் இருந்தேன். காலை 7.30 மணியிலிருந்து அவசரம் அவசரமாக அலுவலகம் ஓடவில்லை. நிம்மதியாக இருந்தேன். காலையில் நிதானமாக எழுந்து சலூன் போய் தலை முடித் திருத்தி, கம்ப்யூட்டரில் (கணினி என்று சொல்ல தோன்றவில்லை) அமர்ந்து 160 பக்கம் நவீன விருட்சம் தயாரித்துக்கொண்டிருந்தேன். காலையில் ஒரு போன் வந்தது. என் எழுத்தாள நண்பர். ‘என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை’ என்றார். ‘என் பெயரும் இல்லை,’ என்றேன். மாலையில் சேலத்திலிருந்து இன்னொரு இலக்கிய நண்பரிடமிருந்து போன் வந்தது. ‘என் குடும்பப் பெயர்களே வாக்காளப் பட்டியலில் இல்லை,’ என்றார். ‘மகிழ்ச்சி’ என்றேன்.