எதையாவது சொல்லட்டுமா……../ 33

இந்த முறை நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி அவருடைய சிறுகதைத் தொகுப்பிற்காகக் கிடைத்துள்ளது. தரமான படைப்பாளியான நாஞ்சில் நாடனை அடையாளம் காண சாகித்ய அகாடமிக்கு இவ்வளவு காலம் பிடித்துள்ளது. எனக்கு நாஞ்சில் நாடனை ஒரு படைப்பாளி என்கிற மாதிரியும், நண்பர் என்கிற முறையிலும் தெரியும். அவருடைய நண்பரான வைத்தியநாதனை (கவிஞர் நாஞ்சில் நாடன் சென்னை வரும்போதெல்லாம் சந்திக்காமல் இருக்க மாட்டார். எனக்கும் நாஞ்சில்நாடன் சென்னையில் இருக்கிறார் என்ற தகவல் வைத்தியநாதன் மூலம் தெரியவரும். அதேபோல் நான் கோயம்பத்தூர் செல்லும்போதெல்லாம் நாஞ்சில்நாடனை சந்திக்காமல் இருக்க மாட்டேன்.

70-களில் நாஞ்சில்நாடன் எழுத ஆரம்பித்துவிட்டார். பெரும்பாலும் அவருடைய கதைகள் யதார்த்த உலகைச் சார்ந்தவை. இன்றைய உலகத்தை எதிர்கொள்ளும்போது நாஞ்சில்நாடனால் ‘தலைகீழ் விகிதங்கள்’ போன்ற நாவலை எழுத முடியுமா என்பதைச் சொல்ல முடியாது.

நான் கடைசியாக படித்த அவருடைய நாவல் சதுரங்கக் குதிரை. அந்த நாவலைப் படித்தபோது சினிமாவை மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறாரோ என்றெல்லாம் எனக்குத் தோன்றும். நாஞ்சில்நாடன் நாவல் மட்டுமல்ல சிறுகதைகளும் எழுதி உள்ளார். கணையாழியில் முள் என்ற அவருடைய சிறுகதை எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

நாஞ்சில் நாடன் ஒருவழியாக எழுதி முடித்துவிட்டார். ஆனால் அவருடைய முந்தைய நாவல்களைக் கூட இப்போது அவர் எழுதினால் அவர் தாண்டி வர வேண்டும். இன்று எழுதுபவர்களும் அவருடைய நாவல்களைத் தாண்டி வரவேண்டும். இன்று நாவல் எழுதுவது ஒரு சவால். அதாவது எல்லோரும் படிக்கும்படி புதிய விதமான நாவல்கள் வரவேண்டும். எல்லா விதமான முயற்சிகளையும் எல்லோரும் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

தாமதமாக ஒரு கலைஞனைப் புரிந்துகொண்டதற்காக சாகித்ய அகாடமிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்…..2

க.நாசுவின் இலக்கிய முதிர்ச்சியும் விமர்சனப் பாங்கும்

நகுலன்

க.நா.சுவினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவருடன் எனக்குச் சுமார் ஒரு பதினைந்து வருஷப் பழக்கமுண்டு. அவருடன் நான் உள்ளங்கலந்து உறவு கொண்ட நாட்களை இப்பொழுது நினைக்கும் பொழுது இதை எழுதும் இந்தப் பொழுதில் கூட எனக்கு ஒரு மன நிறைவு உண்டாகிறது. எழுத்தாளர் என்ற நிலையில் அன்றி ஒரு தனி மனிதன் என்ற நிலையிலும் நான் அவரை மதிக்கிறேன். நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அவர் செய்திருக்கும் சாதனை – நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், நாடகம் என்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்கது. இனி இக்கட்டுரையில் அவர் இலக்கிய முதிர்ச்சியைப் பற்றியும் விமர்சனப் பாங்கு பற்றியும் ஒரு பரவலான பரிசீலனை செய்வதே என் நோக்கம்.

”எதற்காக எழுதுகிறேன்?” என்ற கட்டுரையில் க.நா.சு கீழ் வருமாறு எழுதியிருக்கிறார். ”உலகத்தையும், உலகத்தில் நடப்பதையும் காட்சியாகக் கண்டு, சொந்த விஷயங்களையும் கூட ஈடுபாடில்லாமல், பற்றின்மையுடன் சாட்சி பூதமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது வேதாந்தத்தின் லட்சியம். காண்பதையும், நடப்பதையும் உண்மையென்று நம்பி விடக்கூடாது என்பது அதன் நோக்கு. இந்த லட்சியம் கலை பற்றி, முக்கியமாக எழுத்துக் கலை பற்றி, எத்தனை தூரம் உண்மை என்பது சிந்தித்துப் பார்த்தால் தெரியவரும். மேலும் அவர் சொல்கிறார்:”என் ஆன்மீகமான ஆனந்தத்தின் விளைவாக எழுதப்பட்ட என் கதைகளையோ, கவிதைகளையோ, நாடகங்களையோ, நாவல்களையோ யார் அங்கீகரிக்க மறுத்தாலும், அதனால் சமுதாயத்திற்கோ மற்றவர்களுக்கோ ஒரு லாபமும் இல்லை என்று யார் ஒதுக்கி விட்டாலும் எனக்கு இதைவிடச் சிறந்த அனுபவம் வேறில்லை – வேறு அவசியம் என்றும் நான் நினைக்கவில்லை.”

நான் தெரிந்து பழகின தமிழ் எழுத்தாளர்களில் அவரைப்போல பரவலாகவும் ஆழமாக, ஆம், ஆழமாகவும் ரஸனை அடிப்படையில் உலக இலக்கியத்தில் ஒரு பரிச்சயம் உடையவரை நான் காணவில்லை. இங்கு ஒன்று சொல்ல வேண்டும். அவர் எதைப் படித்தாலும் அதைப் பற்றித் தீர்க்கமாகச் சிந்தித்துத் தனக்கு என்று ஒரு தனிப் பார்வையை வகுத்துக் கொள்கிறார்.

”இலக்கிய வட்டம்” 17.01.1964 இதழில் ”உலக இலக்கியம் – 2” என்ற தலையங்கக் கட்டுரையில் அவர் வருமாறு எழுதுகிறார் : ”நான் எழுதுவதற்கு எதுவும் படிப்பது அவசியமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது என்று சில ஆசிரியர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். இது பற்றி இரண்டு அபிப்பிராயங்கள் சொல்லலாம். ஆனால் கலைக்கும் சிருஷ்டிக்கும் படிப்பு உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை…படிக்கப் பயிற்சி செய்து கொள்ளாத இலக்கிய ஆசிரியன் சில சமயம் மட்டமானதையும் உயர்ந்தது என்று எண்ணி ஏமாந்து விடுவான். தன் எழுத்தில் மட்டுமில்லை மற்ற எழுத்திலும் தரம் பார்க்க அவன் அறியாது இருந்து விடுவான். அதற்காக வேணும் படிக்கப் பயிற்சி செய்து கொள்வது இலக்கிய ஆசிரியனுக்கும் நல்லது – மற்றவருக்கும் நல்லது.”

நான் பழகிய பல தமிழ் எழுத்தாளர்கள் – உலக இலக்கியத்தை விட்டுத் தள்ளுங்கள் – தங்கள் படைப்புகளைப் பற்றி ஒரு பரவச நிலையில் பேசுபவர்கள். தமிழிலேயே பிற எழுத்தாளர்களை அநேகமாகப் படிப்பதில்லை. தங்களைத் தாண்டி என்ன இருக்கிறது, இருக்கலாம் என்ற ஒரு போதை. இந்த வகையில் இயங்கும் எழுத்தாளர்களில் ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு நல்ல நாவலை எழுதிவிட்டுத் தான் தமிழ் இலக்கியத்தின் சிகரத்தை தொட்டு விட்டதாகத் தான் நினைக்கிறான். க.நா.சு இதற்கு விதிவிலக்கு.

அவருடன் நான் பேசிய தருணங்களில் நான் ஏதாவது மாறான அபிப்பிராயத்தைச் சொன்னால் அதை கவனமாகக் கேட்பார், அதில் சாரம் இருந்தால் ஏற்றுக்கொள்வார். நான் ஏதாவது அசம்பாவிதமாகச் சொன்னால், ”இருக்கலாம். துரைஸ்வாமி. எனக்குச் சரியாகப்படவில்லை,” என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். அவருடைய அபிப்பிராயத்தில் இலக்கியப் படைப்பதும் ஒரு தொழில். மற்ற தொழில்களில்போல், இதற்கும் சுயமாக உள்ள ஒரு ஆற்றலைத் தவிரப் படிப்பு, கடினமான உழைப்பு இவை அவசியமென்று நினைக்கிறார். மேலும், அவர் ”இலக்கிய வட்டம்” 24/4/1964 இதழில் ”இலக்கிய ரஸனை” என்ற தலையங்கத்தில் வருமாறு எழுதிகிறார். ”இலக்கியத்தில் இன்று உள்ளதை மட்டும் வைத்து ரஸனையோ விமர்சனமோ கிடையாது. பாரம்பரியம், மரபு பூராவையும் வைத்துத்தான் விமர்சனமும், ரஸனையும் தோன்ற முடியும்.”

(இன்னும் வரும்….)

எதையாவது சொல்லட்டுமா / 32

நான் கடைசியாக நாராணோ ஜெயராமனைப் பார்த்தது தி நகரில் உள்ள ஒரு துணிக்கடையில். அப்போது அவர் எழுதுவதை almost நிறுத்திவிட்டார். பிரமிள்தான் அவர் அங்கு இருப்பதை சொல்லி என்னை நா ஜெயராமனுக்கு அறிமுகப்படுத்தினார். ஜெயராமன் ஜெயின் கல்லூரியில் கெமிஸ்டிரி டிபார்ட்மெண்டில் டெமான்ஸ்டிரேட்டராகப் பணி ஆற்றிக்கொண்டிருந்தார். பின் ஒரு நண்பருடன் சேர்ந்து பார்ட்டனராக ஒரு துணிக்கடை வைத்திருந்தார். அது அவருக்குப் பொருத்தமில்லாத பணி. மேலும் அந்த இடத்தில் எதுவும் போணி ஆகாது. சில பதிப்பாளர்கள் அங்கு புத்தகக் கடை வைத்துக்கூட போணி ஆகாமல் கடையை இழுத்து மூடி விட்டார்கள்.

வேலி மீறிய கிளை என்ற 48 கவிதைகள் கொண்ட தொகுப்பை க்ரியா 1976 நவம்பரில் நாரோணோ ஜெயராமன் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதன் பின் அவர் பெரிதாக எதுவும் எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் எழுத முடியவில்லை என்பதற்கு சொன்ன காரணம்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

‘எதற்கு எழுத வேண்டும்? ஜே கிருஷ்ணமூர்த்திதான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாரே?’ என்றார். ‘ஏன் ஞானக்கூத்தன், அசோகமித்திரன் கூட எதுவும் எழுத வேண்டாம். அதுதான் ஜே கிருஷ்ணமூர்த்தி ஒரு மாற்று மாற்றி விட்டாரே உலகத்தை.’ நா ஜெயராமனின் இந்தப் பேச்சு சங்கடமாக இருந்தது. ஜெயராமன் 48 கவிதைகளுடன் நின்றுவிட்டார். குறிப்பிடும்படியாக சில கதைகளும் எழுதி உள்ளார். சா கந்தசாமி நாவல் போல் தொலைந்து போனவர்களில் ஜெயராமனும் ஒருவர்.

அவர் புத்தகம் இனி வருவதற்கு வாய்ப்பில்லை. க்ரியா இன்னொருமுறை அவர் கவிதைத் தொகுதியை வெளியிடுமா என்பது தெரியவில்லை. அப்படி வெளியிட்டாலும் யார் இந்த ஜெயராமன். ஜெ கிருஷ்ணமூர்த்தியை தப்பாப் புரிந்துகொண்டு பல எழுத்தாளர்கள் எழுதாமல் போய்விட்டார்கள். பிரமிளால் ஒரு நாவல் எழுத முடியவில்லை. ஜே கிருஷ்ணமூர்த்தி தத்துவம் உள்ளே புகுந்து எழுத்தை எழுதவிடாமல் பண்ணிவிட்டது. அல்லது எழுதுவதில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விட்டது.

எனக்கு ஜெயராமனின் 48 கவிதைகளாவது இதைப் படிப்பவர்கள் படிக்க வேண்டுமென்ற எண்ணம். அதனால் நான் கொஞ்சம் ஜெயராமனை இதில் இயங்க வைக்கிறேன்.

1. அமிழல்

ஆடாத கிளைமேல்

கரையாமல், சிறகு பரத்தி,

தலை தாழ்த்தி, நீட்டிய அலகால்

இடம், வலமெனச் சொறிந்து நின்றது – காகம்

இருகூறு என இருபக்கம் பிரிந்த

இறகுகள் தொய்ந்து விழும்நிலை பெற்றன-

அகம் பார்க்கும் நிலை இதுவெனத் தெளிவு.

2. நிலை

அமர்ந்திருக்கும் வரப்பு.

வரப்பின் மேல் சிலுக்கும் செடி.

அரக்குச் சிவப்பாய்

ஒளிரும்

மேற்குச் சிதறல்கள்.

அண்ணாந்த கண்

தொலைவில் அதிசயிக்க

வேகம் கொள்ளும் பறவைகள்.

வடப்புறத்தில் நீர்த்தடங்களாய்

முயங்கிக் கிடக்கும் உருவங்கள்.

தொலைவில் மேயும் மாடு.

கன்று

எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றன.

எங்கோ மூலையில்

கட்டிப் போட்ட

வீட்டு நாய் மட்டும்

குரைத்துக்கொண்டே யிருக்கிறது.

3. வானளாவி நின்று

இந்த வானிற்கும்

என் முகம்தான் போலும்!

குளுமையாய் கொஞ்சம் பச்சை.

அல்லது

இள நீலம்.

நரம்பு முறுக்க செஞ்சிவப்பு.

துக்கம் முட்டச் சாம்பல்

நுரை ததும்ப வெள்ளை என

நிறம் காட்டி

வெளியாய் விரிந்து…….

(இன்னும் வரும்)

இரண்டு கவிதைகள்

பிறந்தநாள் 58

ஓடிவிட்டன

நாட்களும், மாதங்களும், ஆண்டுகளும்

கழுத்தில் சுருக்கம்

இளமை இன்னும் மாறவில்லை

என்று அப்போதிருந்து சிந்தனை

ஓட்டம் ஒரே மாதிரிதான்

வானத்தில் நட்சத்திரம் மின்ன

தூரத்தில் தெருநாய் குரைத்தது

வேடிக்கையாக யாரோ

கொட்டாவி விட்டனர்

இன்று 58

@@@@@@@@

ஒரு ரோஜாப்பூவை

சூடிக்கொண்டிருந்த பெண்

என்ன நினைக்கிறாள்

சீர்காழி பஸ்ஸில் ஏறி

சிதம்பரம் போகிறாளா?

வழியில் எங்காவது

இறங்கி விடுவாளா?

அலுவலகம் போகிறாளா?

வகுப்பிற்குச் செல்கிறாளா?

வீட்டிற்குத்தான் போகிறாளா?

ஒற்றை ரோஜா

புத்தம்புது மலராய் மினுமினுக்க

அவள் கன்னத்திலும்

சிவப்பை அள்ளித் தெளித்திருந்ததா?

நான், பிரமிள், விசிறி சாமியார்….16

பிரமிள் அடிக்கடி என்னை சந்திக்காமலே பல மாதங்கள் இருப்பார். சில சமயம் அடிக்கடி சந்தித்துக் கொண்டும் இருப்பார். பக்கத்தில் சந்திக்கும் தூரத்தில் இருந்தாலும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பார். ஒரு சமயம் சந்திக்காத சமயத்தில் நான், குவளைக்கண்ணன், யுவன், தண்டபாணி நால்வரும் டிரைவ் இன்னில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தூரத்தில் பிரமிள் வேறு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அவரை கவனிக்கவில்லை.

அப்போதுதான் பிரமிள் என்னைப் பார்க்க விரும்புவதாக அவருடன் இருந்த ஒரு நண்பர் மூலம் சொல்லி அனுப்பினார். நான் அவர் வந்திருப்பதை அப்போதுதான் கவனித்தேன். என் நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு பிரமிள் இருக்குமிடத்திற்கு வந்தேன்.

அவரைத் திரும்பவும் பார்க்கும்போது, என்னை அறியாமலேயே ஒருவித பரிதாப உணர்வு எனக்கு ஏற்பட்டது. இதுமாதிரி அனுபவம் எனக்கு ஆத்மாநாமை ஒரு முறை ஞாநி இருக்குமிடத்தில் ஒரு கூட்டத்தில் சந்திக்கும்போது ஏற்பட்டது. அதேபோல் கோபிகிருஷ்ணனைப் பார்க்கும்போது ஏற்படும். காரணம் புரியாது.

பிரமிள் அப்போது தேவதேவன் உடல்நிலை பாதிப்பு அடைந்ததைப் பற்றி சொன்னார். கேட்கும்போது வருத்தமாக இருந்தது. தேவதேவன் மென்மையான மனிதர். அழகான கையெழுத்தில் அவர் அதிகமாக கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பார். ஆரம்பத்தில் விருட்சம் ஒவ்வொரு இதழிலும் அவர் கவிதைகள் அனுப்பாமல் இருக்க மாட்டார். பிரமிள் மதிக்கக்கூடிய கவிஞர்களில் தேவதேவனும் ஒருவர்.

”சரி, உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள்…நான் உங்களைக் கூப்பிட்டு தொந்தரவு செய்துவிட்டேன். நீங்கள் போங்கள்…” என்று என்னை அனுப்பி விட்டார்.

நான் திரும்பவும் என் நண்பர்களிடம் வந்து, அவர்தான் பிரமிள் என்றேன். அவர்களுக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது. எல்லோரும் கிளம்பும்போது, பிரமிளும் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பி விட்டார். அப்போது என் பக்கத்தில் வந்தவரை, ‘இவர்தான் குவளைக்கண்ணன்,’ என்று குவளைக் கண்ணனை அறிமுகப் படுத்தியதாக நினைப்பு. பிரமிள் அவரைப் பார்த்து,’இப்போது அமெரிக்காவில் உறவு என்பது சாத்தியம் இல்லாமல் இருக்கிறது…எல்லாம் பணம்…பணம் கொடுத்தால் பேசுவதற்கு நண்பர்கள் கிடைப்பார்கள். சிறிது நேரம் பேசுவதற்கு பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறிது நேரம் நம்முடன் இருந்துவிட்டுப் பேசிவிட்டுப் போய்விடுவார்கள்…வயதானவர்களுக்கு யாரும் பேசுவதற்குக் கிடைக்க மாட்டார்கள். குறிப்பாக இளைஞர்கள் கிடைக்க மாட்டார்கள்….” என்றார்.

பின் நாங்கள் வாசல் பக்கமாக நகர்ந்து வந்தோம். எதிரில் பிரமிளுக்குத் தெரிந்த ஒரு இலக்கிய நண்பர் வந்தார். அவர் பிரமிளைப் பார்த்து, ‘ஹலோ..’ என்றார். உடனே பிரமிள் அவரைப் பார்த்து பயந்து ஓடுவதைப் போல் ஒதுங்கிப் போனார். அந்தக் காட்சி விசித்திரமாக இருந்தது. இதுதான் பிரமிள். அவருக்குச் சிலரை சிலசமயம் பிடிக்கும். சிலசமயம் பிடிக்காது.
(இன்னும் வரும்)

எதையாவது சொல்லட்டுமா – 31

இங்கு இதுதான் எழுத வேண்டுமென்பதில்லை. மனதில் படும் எதையாவது எழுதுவதுதான் இந்தப் பகுதி. அதை எல்லோரும் படிக்கும்படியாக எழுத வேண்டும். இதுதான் என் நோக்கம். உண்மையில் தினமும் எதையாவது எழுதலாமா என்று யோசிப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். சி சு செல்லப்பா சென்னை திருவல்லிக்கேணியில் தனியாக வீடு வாடகை எடுத்துக்கொண்டு அவருடைய மனைவியுடன் வந்துவிட்டார். இருவரும் வயதானவர்கள். முடியாதவர்கள். சி சு செல்லப்பாவின் புதல்வர் பங்களூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்து கொண்டிருந்தார். சி சு செவால் புதல்வருடன் இருக்க முடியவில்லை. துணிச்சலாக வந்து விட்டார். கூட அவருடைய உறவினர் சங்கரசுப்பிரமணியன் வசித்து வந்தார். சங்கரசுப்பிரமணியனின் தாயார் சி சு செல்லப்பாவின் மனைவியின் மூத்த சகோதரி. அவர் சென்னையில் இருந்த இந்தத் தருணத்தில்தான் நான் அவரைச் சந்தித்தேன்.

சி சு செல்லப்பாவை முதன் முதலாக க.நா.சுவின் இரங்கல் கூட்டம் போது சந்தித்தேன். அப்போது அவர் அழுக்கு வேஷ்டியும், சட்டையும் அணிந்திருந்தார். எளிமையான மனிதர். அந்தக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பது ஞாபகத்தில் இல்லை. ஆனால் படபடவென்று பேசிக் கொண்டிருந்ததாக தோன்றியது. சி சு செல்லப்பாவிற்கு க.நா.சுவை உண்மையாகப் பிடிக்காது. சி சு செ ஒருசிலரைப் பற்றியே அதாவது மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பார். மணிக்கொடி எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் எழுத்தாளர்கள் இல்லை என்று கூட சொல்வார். ஆனால் க.நா.சு அப்படி அல்ல. அவர் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களைப் பற்றியும் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்வார். சி சு செ கொஞ்சம் பிடிவாதக்காரர். அவருக்கு இலக்கு பரிசு கிடைத்தபோது அதை அவர் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் அந்தப் பரிசுத் தொகையில் புத்தகம் கொண்டுவர வேண்டுமென்று விரும்பினார்.
அதுதான் சி சு செல்லப்பாவின் ‘என் சிறுகதைப் பாணி’ என்ற புத்தகம். அந்தப் பரிசு வழங்கும் தினத்தில் சிறப்பாகவே கூட்டம் நடந்தது. சிறுபத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களைக் கூப்பிட்டு கெளரவம் செய்தார்கள். சி சு செல்லப்பா உற்சாகமாகப் பேசினார். ஆனால் சி சு செல்லப்பா அப்போது வந்து கொண்டிருந்த பத்திரிகைகளைப் படிப்பாரா என்பது சந்தேகம்.

ஒரு இலக்கியச் சிந்தனை நிகழ்ச்சியின்போது, சி சு செல்லப்பா அங்கு கூடியிருந்த பதிப்பாளர்களைச் சந்தித்து தன்னுடைய சுதந்திர தாகம் என்ற மெகா நாவலை பிரசுரம் செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். யாரும் அந்தப் புத்தகத்தைப் போட தயாராய் இல்லை. அந்தத் தருணத்தில்தான் எனக்கு சி சு செல்லப்பா மீது இரக்க உணர்ச்சியே ஏற்பட்டது.

அவர் 80 வயதிற்குமேல் அந்தப் புத்தகத்தை தானாகவே வெளியிடும்படி நேர்ந்தது. அந்தப் புத்தகம் கொண்டுவர, மணி ஆப்செட்டை அவருக்கு அறிமுகம் செய்தேன். அவர்கள் புத்தகம் சிறப்பாக வர எல்லா உதவியையும் செய்தார்கள். சி சு செல்லப்பா அந்த வயதில் துணிச்சலாக அவர் புத்தகத்தை வெளியிட்டார். அவர் ஒரு சாதனை வீரர். அப்புத்தகம் பற்றி விமர்சனம் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்து அவருக்கு பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்தத் தருணத்தில்தான் நான் அடிக்கடி சி சு செல்லப்பாவை அவர் வீட்டில் சந்திப்பேன். வீட்டிற்கு வந்தவுடன் சாப்பிட எதாவது கொடுப்பார். சி சு செல்லப்பா அந்தக் காலத்தில் உள்ள நண்பர்களைப் பற்றி பேசுவார். பி எஸ் ராமையா மீது அளவு கடந்த அன்பு அதிகம். க.நா.சு, மெளனி பற்றி சிலாகித்துச் சொல்ல மாட்டார். க.நா.சு பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. க.நா.சுவை சென்னையில் ஒரு இடத்தில் குடி வைக்க சி சு செல்லப்பா ஏற்பாடு செய்திருக்கிறார். க.நா.சுவால் வாடகைக் கொடுக்க முடியவில்லை. ஒரு சமயம் வீட்டுக்காரர் அவர் தங்கியிருக்கும் இடத்தைப் பார்க்க வந்தபோது அதிர்ச்சியாகி விட்டது அவருக்கு. க.நா.சு குடியிருந்த வீடு காலியாக இருந்ததோடு அல்லாமல், நாலைந்து மாத வாடகை வேறு தரவில்லையாம். வீட்டுக்காரர் சி சு செல்லப்பாவைப் பிடித்துக் கொண்டு விட்டார். சி சு செல்லப்பாவிற்கு க.நா.சுமீது கோபமான கோபம்.

இந்தச் சம்பவத்தை சி.சு செல்லப்பா என்னிடம் சொன்னபோது எனக்கு க.நா.சு மீதுதான் வருத்தம் ஏற்பட்டது. எந்த ஒரு நிலையில் அவர் வீட்டை காலி செய்திருக்க வேண்டும்?

எதையாவது சொல்லட்டுமா / 30

தீபாவளிக்கு அடுத்தநாள் என் இடது கண்ணைப் பார்க்க சகிக்கவில்லை. கண் வீங்கியிருந்தது. கண்ணில் வலியும் இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. அன்று என் அம்மாவின் திதி. நானும் சகோதரனும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் திதியை நடத்துவோம். என்னைப் பார்த்தவுடன் என் சகோதரன்.

”என்ன மெட்ராஸ் ஐ யா?” என்றான். பின் ”கிட்ட வராதே…எல்லாருக்கும் பரவிவிடும்” என்று கூப்பாடு போட்டான்.

எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். புரியவில்லை. அன்று திதி முடிந்து அவன் வீட்டிற்கு என் சகோதரன் போனபோது அவனுக்கும் மெட்ராஸ் ஐ வந்துவிட்டது. இந்த மெட்ராஸ் ஐ எப்படிப் பொறுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. நான் பெரும்பாலும் வசிக்கும் சீர்காழி வங்கிக் கிளையில் யாரோ ஒரு வாடிக்கையாளர் கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்திருந்தான். அவன் மூலம் எனக்குப் பரவியிருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. கண்ணில் அழுக்குகள் சேர்ந்தால் அது மெட்ராஸ் ஐ ஆக மாறிவிடுமோ என்று தோன்றியது. என் கண் எப்போதும் சிவப்பாக இருக்காது. கண் சிவப்பாக மாறினால் அதற்குப் பல அறிகுறிகள் உண்டு என்று எனக்குத் தெரியும். உடலில் எதாவது குறை இருந்தால் கண் காட்டிக் கொடுத்துவிடும்.

எதாவது தப்பு செய்தால்கூட கண் காட்டிக்கொடுத்து விடும். எனக்கு ரமணரின் கண்கள் பிடிக்கும். தீர்க்க ஒளியுடன் தீட்சண்யமாக கண்கள் பளபளக்கும். அரவிந்தரின் கண்கள் சாந்தமாக இருக்கும். நடிகைகளில் ஸ்நேகாவின் கண்களைப் போல பிரகாசமான கண்களை நான் பார்த்ததில்லை.

என் மெட்ராஸ் ஐயால் எனக்கு சில அனுகூலங்கள். அலுவலகத்தில் முதலில் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டேன். பின் கண் வலி அவ்வளவாக தீரவில்லை என்பதால் இன்னொரு நாளும் எடுத்துக்கொண்டேன். இரண்டுநாள் விடுமுறையில் லைப்ரரி செல்வது என்று பல விஷயங்களை முடித்துக்கொள்ள பயன்படுத்திக்கொண்டேன். ஹூக்கின்பாதம்ஸ் சென்று ஒரு ஆண்டுக்கு முன் விற்பனைக்குக் கொடுத்தப் புத்தகப் பணத்தைக் கேட்டேன். எதுவும் ஒழுங்கில்லை. நான் கேட்காமலயே பணம் வரும் இடத்திலிருந்தும் பணம் வருவதில்லை. இப்போது கேட்டாலும் நடப்பதில்லை. அரசாங்க லைப்பரரியில் பத்திரிகை அனுப்பியதற்கு பில் அனுப்பினேன். போய் கேட்டேன். வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். போனில் எத்தனை முறை கேட்டாலும் அவர்கள் உதிர்க்கும் பதில் இதுவாகத்தான் இருக்கும். நான் திரும்பவும் விடுமுறை எடுத்துக்கொண்டு எனக்கு மெட்ராஸ் ஐ வந்தபிறகுதான் வரமுடியும். ஒருநாள் விடுமுறை எடுத்ததற்கே அலுவலகத்திலிருந்து போன் வந்துவிட்டது. ‘மெட்ராஸ் ஐ ஆக இருந்தாலும் பரவாயில்லை. வாருங்கள்.’ என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். புதன் கிழமை சென்றேன்.

என் சகோதரனனும் 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு விட்டான். கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபோது என் முகமா இது என்று திரும்பவும் கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நண்பரை அடிக்கடி பார்க்கப் போவேன். அவர்கள் வீட்டில் அந்த நண்பரின் தாய் என்னைப் பார்த்து பாக்கியராஜ் என்று கூப்பிடுவார். அவர்கள் சினிமா பார்க்க மாட்டார்கள். ஆனால் டிவியில் வரும் சினிமாவைப் பார்த்திருப்பார். சமீபத்தில் அவர் இறந்து விட்டார். நண்பரின் வீட்டிற்கு துக்கம் விஜாரிக்கச் சென்றேன். என்னை பாக்கியராஜ் என்று நண்பரின் அம்மா கூப்பிட்டதை அவர்கள் ஞாபகப் படுத்தினார்கள்.

எனக்கும் பாக்கியராஜுற்கும் மூக்குக் கண்ணாடியைத் தவிர எந்த ஒற்றுமையும் கிடையாது. நான் உயரம். கிட்டத்தட்ட 6 அடி. மேலும் பாக்கியராஜ் சற்று குண்டாக தோற்றம் தருவார். அவரை விட நான் நிறம் அதிகம். குரல் கூட வித்தியாசம் உண்டு.

என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் என்னைப் பார்த்து, ‘ரவி சாஸ்திரி மாதிரி இருக்கேம்மா,’ என்றார். என்னால் நம்ப முடியவில்லை.ரவி சாஸ்திரிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏதோ சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் தலையில் வெள்ளை முடி அதிகமாக இருந்ததால் டை அடிக்கலாமென்று அடித்துக் கொண்டேன். என்னைப் பார்த்து என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் ஒரு நகைச்சுவை நடிகர் பெயரில் கூப்பிட ஆரம்பித்து விட்டார். திரும்பவும் அவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

திரும்பவும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டேன். உண்மையில் நான் யார். அவர்கள் சொல்லும் ஒருவர் இல்லை.

எதையாவது சொல்லட்டுமா / 29

தீபாவளிக்கு அடுத்தநாள் என் இடது கண்ணைப் பார்க்க சகிக்கவில்லை. கண் வீங்கியிருந்தது. கண்ணில் வலியும் இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. அன்று என் அம்மாவின் திதி. நானும் சகோதரனும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் திதியை நடத்துவோம். என்னைப் பார்த்தவுடன் என் சகோதரன்.

”என்ன மெட்ராஸ் ஐ யா?” என்றான். பின் ”கிட்ட வராதே…எல்லாருக்கும் பரவிவிடும்” என்று கூப்பாடு போட்டான்.

எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். புரியவில்லை. அன்று திதி முடிந்து அவன் வீட்டிற்கு என் சகோதரன் போனபோது அவனுக்கும் மெட்ராஸ் ஐ வந்துவிட்டது. இந்த மெட்ராஸ் ஐ எப்படிப் பொறுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. நான் பெரும்பாலும் வசிக்கும் சீர்காழி வங்கிக் கிளையில் யாரோ ஒரு வாடிக்கையாளர் கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்திருந்தான். அவன் மூலம் எனக்குப் பரவியிருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. கண்ணில் அழுக்குகள் சேர்ந்தால் அது மெட்ராஸ் ஐ ஆக மாறிவிடுமோ என்று தோன்றியது. என் கண் எப்போதும் சிவப்பாக இருக்காது. கண் சிவப்பாக மாறினால் அதற்குப் பல அறிகுறிகள் உண்டு என்று எனக்குத் தெரியும். உடலில் எதாவது குறை இருந்தால் கண் காட்டிக் கொடுத்துவிடும்.

எதாவது தப்பு செய்தால்கூட கண் காட்டிக்கொடுத்து விடும். எனக்கு ரமணரின் கண்கள் பிடிக்கும். தீர்க்க ஒளியுடன் தீட்சண்யமாக கண்கள் பளபளக்கும். அரவிந்தரின் கண்கள் சாந்தமாக இருக்கும். நடிகைகளில் ஸ்நேகாவின் கண்களைப் போல பிரகாசமான கண்களை நான் பார்த்ததில்லை.

என் மெட்ராஸ் ஐயால் எனக்கு சில அனுகூலங்கள். அலுவலகத்தில் முதலில் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டேன். பின் கண் வலி அவ்வளவாக தீரவில்லை என்பதால் இன்னொரு நாளும் எடுத்துக்கொண்டேன். இரண்டுநாள் விடுமுறையில் லைப்ரரி செல்வது என்று பல விஷயங்களை முடித்துக்கொள்ள பயன்படுத்திக்கொண்டேன். ஹூக்கின்பாதம்ஸ் சென்று ஒரு ஆண்டுக்கு முன் விற்பனைக்குக் கொடுத்தப் புத்தகப் பணத்தைக் கேட்டேன். எதுவும் ஒழுங்கில்லை. நான் கேட்காமலயே பணம் வரும் இடத்திலிருந்தும் பணம் வருவதில்லை. இப்போது கேட்டாலும் நடப்பதில்லை. அரசாங்க லைப்பரரியில் பத்திரிகை அனுப்பியதற்கு பில் அனுப்பினேன். போய் கேட்டேன். வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். போனில் எத்தனை முறை கேட்டாலும் அவர்கள் உதிர்க்கும் பதில் இதுவாகத்தான் இருக்கும். நான் திரும்பவும் விடுமுறை எடுத்துக்கொண்டு எனக்கு மெட்ராஸ் ஐ வந்தபிறகுதான் வரமுடியும். ஒருநாள் விடுமுறை எடுத்ததற்கே அலுவலகத்திலிருந்து போன் வந்துவிட்டது. ‘மெட்ராஸ் ஐ ஆக இருந்தாலும் பரவாயில்லை. வாருங்கள்.’ என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். புதன் கிழமை சென்றேன்.

என் சகோதரனனும் 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு விட்டான். கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தபோது என் முகமா இது என்று திரும்பவும் கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு நண்பரை அடிக்கடி பார்க்கப் போவேன். அவர்கள் வீட்டில் அந்த நண்பரின் தாய் என்னைப் பார்த்து பாக்கியராஜ் என்று கூப்பிடுவார். அவர்கள் சினிமா பார்க்க மாட்டார்கள். ஆனால் டிவியில் வரும் சினிமாவைப் பார்த்திருப்பார். சமீபத்தில் அவர் இறந்து விட்டார். நண்பரின் வீட்டிற்கு துக்கம் விஜாரிக்கச் சென்றேன். என்னை பாக்கியராஜ் என்று நண்பரின் அம்மா கூப்பிட்டதை அவர்கள் ஞாபகப் படுத்தினார்கள்.

எனக்கும் பாக்கியராஜுற்கும் மூக்குக் கண்ணாடியைத் தவிர எந்த ஒற்றுமையும் கிடையாது. நான் உயரம். கிட்டத்தட்ட 6 அடி. மேலும் பாக்கியராஜ் சற்று குண்டாக தோற்றம் தருவார். அவரை விட நான் நிறம் அதிகம். குரல் கூட வித்தியாசம் உண்டு.

என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் என்னைப் பார்த்து, ‘ரவி சாஸ்திரி மாதிரி இருக்கேம்மா,’ என்றார். என்னால் நம்ப முடியவில்லை.ரவி சாஸ்திரிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏதோ சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் தலையில் வெள்ளை முடி அதிகமாக இருந்ததால் டை அடிக்கலாமென்று அடித்துக் கொண்டேன். என்னைப் பார்த்து என் அலுவலகத்தில் உள்ள ஒருவர் ஒரு நகைச்சுவை நடிகர் பெயரில் கூப்பிட ஆரம்பித்து விட்டார். திரும்பவும் அவருக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

திரும்பவும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டேன். உண்மையில் நான் யார். அவர்கள் சொல்லும் ஒருவர் இல்லை.

நான், பிரமிள், விசிறி சாமியார்….15

நான் இந்தத் தொடரை ஆரம்பித்து பல மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் தொடர்ந்து இதை எழுதி முடிக்க முடியவில்லை. பிரமிள் பற்றி பல விஷயங்கள் யோசித்து யோசித்து எழுத வேண்டி உள்ளது. எதுவும் ஒரு ஒழுங்கில்லாமல் இந்தத் தொடர் போய்க் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் பலருக்கு பிரமிளைப் பிடிக்கவில்லை. அது ஏன் என்று நான் ஆராய்ந்து பார்ப்பேன். பல மூத்த எழுத்தாளர்கள் அவருடன் ஒரு காலத்தில் நெருங்கி பழகியிருக்கிறார்கள். பின் அவரை விட்டு விலகி ஓடியும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் பிரமிள் பற்றி அவர்கள் மூலமாகவும், அவர்களைப் பற்றி பிரமிள் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அவர்கள் பிரமிள் பற்றி பேசும்போதே கசப்புணர்வுடன் பேசுவார்கள். பிரமிள் இலங்கைக்காரரா தமிழ்நாட்டைச் சார்ந்தவரா? இந்தக் குழப்பமும் எல்லோருடனும் இருக்கும். ஆனால் இலங்கையில் தன் குடும்பத்தை விட்டு வந்தவர். பின் அங்கு செல்லவே இல்லை. தனி மனிதனாகவே தமிழ் நாட்டில் தங்கி விட்டார். கடைசிவரையில் அவர் தனிமனிதர். முரண்பாடு மிக்க மனிதர். எனக்கு அவர் வாழ்வதை நினைத்து ஆச்சரியமாக இருக்கும். அவர் யாரிடமும் அடிமையாய் போய் பணம் சம்பாதிக்கவே இல்லை. கொஞ்சம் இணங்கினால் போதும், அவரால் ஓரளவு பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் அவரால் முடியாது. அதேபோல் வறுமையை அவர் சந்தித்ததைப் போல் யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் அவர் பேச மாட்டார். வறுமையைப் பற்றி அவர் கவிதை எழுதியும் இருக்கிறார். அது தனி மனிதனின் வறுமையைப் பற்றி அல்ல.

அரும்பு பத்திரிகை ஆசிரியர் அவர் அன்புக்குரியவர். அவர் சொல்லி அரும்பு பத்திரிகையில் அவர் எழுதினார். ஆனால் கொஞ்ச காலம்தான் அது நீடித்தது. எல்லாவற்றிலும் ஒருவித முரண்பாடு மிக்க மனிதராகவே இருந்து வந்தார்.

அவர் கடைசிக் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அவர் வசித்த வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பெண்மணி கூறியதைக் கேட்டு எனக்குத் திகைப்பாக இருந்தது. பிரமிள் நுங்கம்பாக்கத்தில் ஓரிடத்தில் குடியிருந்தார். அந்த இடத்தின் பக்கத்திலேயே பன்றி மாமிசம் விற்கும் இடம். பன்றியை வெட்டிப் போடும்போது ஏற்படும் ஒரு வித துர்நாற்றம் சூழ்ந்தபடியே இருக்கும். பிரமிள் மட்டும் அங்கு இல்லை. இன்னும் நாலைந்து குடித்தனங்களும் அங்கு இருந்தன. மற்ற குடித்தனங்களில் இருந்தவர்கள் பிரமிளை பெரியவர் என்று குறிப்பிடுவார்கள்.

ஒருமுறை பிரமிள் தன் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள பெண்மணியிடம் ஒருநாள் மின்சார பில்லை கட்ட கார்டும், பணமும் கொடுத்துவிட்டு சென்று விட்டார். அந்தப் பெண்மணி அவர் கேட்டுக்கொண்டபடி பணம் கட்டிவிட்டார். பிரமிள் திரும்பவும் அந்தக் கார்டைப் பார்த்து பணம் கட்டுவதில் ஏதோ வித்தியாசம் இருப்பதாக நினைத்து அந்தப் பெண்மணியைத் திட்டிவிட்டார். பிரமிள் திட்டியதைக் கேட்டு அந்தப் பெண்மணி அழுது விட்டார். உண்மையில் தவறு பிரமிள் மீதுதான் என்பதை பிரமிள் உணர்ந்து விட்டார்.

இந்தத் தவறை உணர்ந்தவுடன், சாதாரணமானவர்கள் அதை வேறு விதமாக எடுத்துச் சென்றிருப்பார்கள். ஆனால் பிரமிள் செய்த காரியம் அந்தப் பெண்மணியை மேலும் மிரள வைத்துவிட்டது. பிரமிள் அந்தப் பெண்மணியைப் பார்த்து, அந்தப் பெண்மணியின் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டார். அவருடைய இந்தச் செய்கை அந்தப் பெண்மணியை மிரள வைத்துவிட்டது. இதுதான் பிரமிள். அவருடைய அதீத தன்மையை நான் இப்போது கூட பலரிடம் பார்ப்பதுண்டு. பிரமிள் அறையில் பக்கவாத நோயுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, யாரும் அவருடைய அறைக்கு பல மணிநேரங்கள் செல்லவில்லை.
(இன்னும் வரும்)

எதையாவது சொல்லட்டுமா / 28

எதையுமே எப்படி வெற்றி கொள்ள முடியும் என்பதை சிலர் அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்திரன் படத்தின் விளம்பரத்தை நான் டிவியில் பார்த்தவுடன், உடனே அந்தப் படத்தைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் எழவில்லை. இப்போதெல்லாம் சினிமாவை விழுந்து விழுந்து முன்பு மாதிரி பார்ப்பதில்லை. பார்க்காமலே கூட இருந்து விடுவேன். பின் படத்தைப் பார்த்துவிட்டு எந்தக் கருத்தையும் குறிப்பிடுவதில்லை. பொதுவாக சினிமாப் படங்களெல்லாம் அபத்தமாகத்தான் எனக்குத் தோன்றும். அதில் எந்த லாஜிக்கையும் கொண்டு வர முடியாது. நம்முடைய பொழுதுபோக்கிற்காகத்தான் அதைப் பார்க்கிறோம். சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், அதில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளிகள் என்றெல்லாம் பார்க்கும் போது, சினிமா என்பது ஒரு அசுரரின் உலகத்தைச் சார்ந்ததாகத் தோன்றும். இந்த அசுரர் உலகத்தில் நடப்பதை வெறும் பார்வையாளனாகத்தான் பார்க்கிறோம். இந்த சலன உலகத்தை நாமும் பார்த்து சலனமடைகிறோம். குருதத் படம் ஒன்றை என் நண்பர் பார்த்துவிட்டு கண் கலங்கியதை நினைத்து வியந்திருக்கிறேன். வேறு நண்பர் ஒருவர் சிவந்த மண் என்ற ஒரு படத்தை 8 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டு, எஸ் எஸ் எல் சி யில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்துத் தப்பினார்.
நம்முடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே சினிமா உலகம் மாறி விட்டது. பத்திரிகைகள், டிவிக்கள் என்று சினிமாவிற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எதற்கும் கிடையாது. தினமும் ஒரு சினிமா பார்க்கும் நண்பர்களை நான் அறிவேன். டிவி மூலம் தினம் தினம் எத்தனையோ சினிமாக்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நடிகர்கள் நடிகைகள் நமக்கு வேண்டியவர்களாகப் போய்விடுகிறார்கள். அவர்களைப் பற்றிய செய்திகள் நமக்கு முக்கியமாகப் போய்விடுகிறது. அவர்களுடைய பிரச்சினைகள் நம்முடைய பிரச்சினைகளாகத் தோன்றுகிறது. அவர்களைப் பற்றிய செய்திகள் நமக்கு முக்கியமாகப் படுகிறது.
அதைப்போல் ஒரு சினிமா தயாரிப்பது என்பது கோடிக்கணக்கில் பேரம் செய்யும் வியாபாரம். இந்த வியாபாரத்தில் வெற்றிப் பெறுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடாலாம். அவர்கள் என்னதான் கோடிக்கணக்கில் செலவு செய்தாலும், மக்கள் முன்னால்தான் போய் நிற்க வேண்டும். இந்த வியாபாரத்தில் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பவர்கள் சினிமாவையே பார்த்துக் கொண்டிருக்கும் சினிமா வெறியர்கள்.
அதிக அளவு முதலீடு செய்வதால், ஒரு சினிமாவைப் பார்க்க சாமான்யர்கள் அதிக விலை உள்ள டிக்கட்டுக்களை வாங்க வேண்டி உள்ளது. ஒரு விதத்தில் இந்த சினிமா ஒவ்வொரு மனிதரின் அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க வைக்கிறது என்றும் தோன்றுகிறது. அவன் கவலைகளை மறக்க வைக்க உதவுகிறது. என்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் எம்.ஜி.ஆர் ரசிகர். அவர் எப்படி எம்.ஜி ஆரின் படத்தை ரிலீஸான உடனே முதல் காட்சியில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கொண்டிருந்தார்.
ரஜினியின் படத்தைப் பார்க்க கட்அவுட்டில் பால் அபிஷேகம் போன்ற ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பார்க்கும் போது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. அவர்களுடைய மகிழ்ச்சி முக்கியமாகப் படுகிறது. இந்த ரசிகர்களெல்லாம் சலனமானவர்கள். ரஜினிக்காக எதையும் செய்வார்கள். சினிமாவின் பின்னணியில்தான் இன்று அரசியலுக்குள் நுழைய முடிகிறது. அதுவும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரிய உண்மை. சினிமாவில் நடிப்பவர்கள், வங்கியில் பணிபுரிபவர்கள், பள்ளியில் ஆசிரியராக இருப்பவர்களைப் போலத்தான் என்று நினைப்பதில்லை. அதேபோல் நடிகைகள் நாம் அன்றாடம் காணும் பெண்களைப்போல்தான். ஆனால் அபிமான நடிகைகளை நினைத்து நினைத்து பித்துப் பிடித்தவர்களை நான் பார்த்திருக்கிறேன். சினிமாவில் நடிப்பவர்கள் இருக்கட்டும். சினிமாவையே பார்த்து பார்த்து பொழுதைக் கழிப்பவர்களை என்ன செய்வது?
சங்கரின் எந்திரன் படம் தயாரிக்க 200 கோடி செலவாயிருக்குமாம். அதில் ரஜினியில் சம்பளம் 45 கோடியாம். ஐஸ்வர்யாவின் சம்பளம் 6 கோடியாம். அவ்வளவு கோடி ரூபாயை எப்படியெல்லாம் செலவு செய்வார்கள்.
ரூ100 கொடுத்து என் உறவினர்களுடன் இந்தப் படத்தை காசி தியேட்டரில் பார்த்தேன். பிரமிக்க வைக்கும் காட்சிகள். பல ஆங்கிலப் படங்களின் பாதிப்பு இப் படம் என்று சொன்னாலும் தமிழில் இது புது முயற்சி. 60வது வயதில் ரஜினியின் இந்த முயற்சி ஆச்சரியமாகவே இருக்கிறது. எல்லாம் டீம் ஒர்க். கிராபிக்ஸ் அசத்தல். எனக்கு டிக்கட் புக் செய்தவர் இன்னும் 6 தடவைகளாவது பார்ப்பேன் என்று கூறினார். இந்தப் படத்தை சிறுவர்கள், பெண்கள் முதியவர்கள் என்று எல்லோரும் போய்ப் பார்க்கிறார்கள். அதற்கு சன் நெட் வொர்க்கின் விளம்பரமும் ஒரு காரணம்.