சிக்கிம் –டாகுமெண்டரி

சத்யஜித்ராய் வாழ்ந்த காலத்தில் அவரால் முடிக்கப்பட்ட ஒரு படம் திரையிடப்படாமல் இருந்ததென்றால் அது சிக்கிம் டாகுமெண்டரி படம் மட்டுமே. அது மட்டுமல்ல அந்தப் படம் தீவிரமாக தணிக்கைக்கு உள்ளாகி தடையும் செய்யப்பட்டது. சிக்கிம் 1971ம் வருடம் எடுக்கப்பட்டது.
 அது திரையிடப்படாமலேயே பலகாலம் இருந்ததால் அது தொலைந்துவிட்டதாயும் கருதப்பட்டது. திடிரென 2003ல் அதன் நல்ல பிரதி பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் பத்திரமாக இருப்பதாக நம்பகமான தகவல் கிடைத்தது. அந்தப் படம் சென்ற வருடம் தான் பார்வைக்கு வந்தது.தற்சமயம் அது இணைய தளத்திலும் கிடைக்கிறது. இதன் மூலம் அவரது அனைத்துப் படைப்புகளும் மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

ஏன் இந்தப் படத்திற்கு இத்தனை எதிர்ப்புகள் என்பதை படத்தைப் பார்த்து எவராலும் புரிந்து கொள்ள இயலாது. ஒரு வேளை இந்தப் படம் சிக்கிம் முடியாட்சியின் கீழ் இருந்தபொழுது எடுத்த ஒன்று என்பதால் இது அந்த மக்களை இந்திய இணைப்புக்கெதிராக தூண்டிவிடும் என்று அச்சமுற வைத்ததா என்றால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதில் இல்லை . அதை எடுத்த இயக்குனர் ராய் தனது படங்களில் எத்தகைய பிரச்சாரத்திற்கும் தீவிர எண்ணங்களுக்கும் இடம் கொடாதவர் என்பதும் உலகறிந்த ஒன்று. மேலும் சிக்கிம் மக்களின் பகிரங்க ஒப்புதல் பெற்ற பின்னரே அது இந்தியாவுடன் இணைந்தது.

சிக்கிம்டாகுமெண்டரி மலை வாழ் மக்களின் அமைதியான வாழ்க்கையை எடுத்துரைக்கிறது. படம் அழகான காட்சிகளுடன் துவங்குகிறது. இமயமலையின் மூன்றாம் பெரிய சிகரமான கஞ்சன் ஜங்காவின் அரவணைப்பிலுள்ள  மலை பூமி சிக்கிம். ஆனால் அதை சுலபமாக வரைபடத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியாது என்று ராய் வர்ணிக்கிறார் . அதன் அப்போதைய அரசியல் பூகோள எல்லைகளாக தெற்கே-மேற்கு வங்காளம்,மேற்கே நேபாளம் , வடக்காயும் வடகிழக்காயும் திபெத், கிழக்காக பூடான் ஆகியன அமைந்துள்ளன. வடக்கிலிருந்து தெற்காக எழுபது மைல்களும் கிழக்கிலிருந்து மேற்காக நாற்பது மைல்களும் விஸ்தீரணம் கொண்ட நாடு சிக்கிம்.

சிக்கிம் நாட்டிற்கே உரித்தான தாவரங்கள்  அறிமுகப்படுத்தப்படுகின்றன. கோதுமை, பார்லி ஆகியவைதான் முக்கிய விவசாயப் பொருட்கள்.திபெத்தியர்கள் புராதனக் குடிமக்கள். நேபாளத்திலிருந்து இங்கு குடியேறியவர்கள்  இந்து சமயத்தினர். அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள். ஆனால் அரச சமயம் மஹாயான பெளத்தம். கிறித்துவர்களும் சிறுபான்மையினராக உள்ளனர்.எல்லோரும் தங்களுடைய அடையாங்களுடன் கூடி வாழ்வது ஒரு தனிச்சிறப்பு.

ஒவ்வொரு  ஞாயிறு காலையிலும் சந்தை கூடுகிறது. மக்கள் தங்களது பொருட்களை அங்கு கொண்டுவந்து விற்கிறார்கள். அவர்கள் கடைபோடுவதை அனுமதிக்க  ஒரு சிறிய காகித சீட்டு வழங்கப்படுகிறது.பெரிய சந்தை சிக்கிமின் தலைநகரமான காங்டாக்கில் நடைபெறுகிறது.  அங்கே இந்தியர்களையும் காணமுடிகிறது.சலசலப்பில்லாத வாழ்க்கை முறையை மக்கள் கொண்டிருப்பதால் அதன் இயற்கை அழகை ரசிக்க சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் கணிசமானது. அரசாங்கம் தனது வருவாயில் இருபத்தைந்து சதவிகிதத்தை மக்களின் கல்விக்காக செலவிடுகிறது. படத்தை தயாரித்த சோக்யால் (அரசர்)மக்களுடன் எளிமையாகப் பழகுவதாக படம் காட்டுகிறது. ஆனால் மக்களின் அதிருப்திக்கு அவர் ஆளானவர் என்பது சரித்திர தகவல். அவர் தனது முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாம் மனைவியாக ஹோப் குக் என்கிற அமெரிக்க பெண்ணை மணக்கிறார். அச்சமயம் சிக்கிம் செய்திகளில் கூடுதலாக அடிபடுகிறது.
ஆண்டு இறுதியில் ஒரு பெரும் விழா நடைபெறுகிறது . முகமூடி அணிந்த கலைஞர்கள்  அவர்கள் நாட்டு இசைக்கேற்ப நடனமாடுகிறார்கள். புதிய வருடம் பிறந்தவுடன் முந்தைய வருடத்தின் தீமைகள் அழிய ஒரு கூடாரம் கொளுத்தப்படுகிறது.
ஐம்பத்து ஐந்து நிமிட நேரப் படம் வண்ணத்தில் உருவாகியுள்ளது.அந்த காலத்தில் கதைப்படங்களும் கருப்பு வெள்ளையில்தான் பெரும்பாலும் தயாரிக்கப்பட்டன. இசை, வர்ணனை,இயக்கம் எல்லாம் ராய். படத்தொகுப்பு அவர் கட்டுப்பாட்டில் இல்லை என்று சொல்லப்பட்டது. படம் பார்ப்பவர்களுக்கு அது எளிதாகப் புலனாகிறது. ஷாட்டுகள்  ஒன்றுடன் ஒன்று லயமின்றி அவசர கதியில் இணைவதாய்  உள்ளன. படம் முழுவதிலும் மக்கள் கேமராவைப் பார்த்தபடி உள்ளனர். அது இயற்கையாகக் இருந்தாலும் அவர்களது வாழ்க்கை முறையை அதன் கதியில் நம்மால் காணமுடிவதில்லை என்கிற உணர்வும் ஏற்படுகிறது. சடங்குகளில் ஈடுபடும்போதுதான் அவர்கள் தங்கள் வேலைகளை பார்க்கிறார்கள். ராயின் முதல்படமான ரவீந்திரநாத் தாகூரைப் போலவே இதிலும் நேர்காணல்கள் எதுவுமில்லை. குறைகள் பல இருந்தாலும் பின்னால் வரும் சந்ததியினருக்கு அன்றைய சிக்கிம் மக்களின் வாழ்க்கை பற்றிய ஒரே ஆவணப்படம் என்கிற வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

சிக்கிம் –டாகுமெண்டரி

                        

சாய்பாபா

வெற்றிகரமாக விளங்கும் எந்தவொரு கோட்பாடும் அதன் வளர்ச்சிப்போக்கில் மூன்று நிலைகளைக் கொண்டிருப்பதாக வில்லியம் ஜேம்ஸ் கூறுவார். முதல் நிலையில் அக்கோட்பாடு அபத்தமானது என்று தாக்கப்படும். இரண்டாம் நிலையில் அது பழக்கப்பட்ட ஒன்றாகவும் உண்மை என்று ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் கருதப்படும். இறுதி நிலையில் அதன் அத்தியாவசியம் உணரப்பட்டு அதைத் தாங்களே கண்டுபிடித்தது போன்று அதன் விமர்சகர்களும் சீராட்டுவார்கள்.

சத்ய சாய்பாபாவை ஒரு கோட்பாடு என்கிற அளவில் சுருக்கிக்கொண்டு பார்க்க முடியாதெனினும் அவரும் இந்த மூன்று நிலைகளையும் கடக்க வேண்டியிருந்தது. ஷிர்டி சாய்பாபா இறந்து எட்டு வருடங்களுக்குப் பிறகு 1926இல் பிறந்த சத்யநாராயண ராஜூ தனது பதினான்காம் வயதில் தான் ஷிர்டி பாபாவின் மறு அவதாரமான சாய்பாபா என அறிவித்தபொழுது அவர் சிற்சில அதிசயங்களையும் புரிய ஆரம்பித்திருந்தார். தன் நண்பர்களுக்கு திடீரென லட்டுகள், மாம்பழங்கள் ஆகியனவற்றை வரவழைத்துக் கொடுப்பது போன்றவை மட்டுமல்லாது ஷிர்டி பாபா தன் பக்தர்களிடம் என்னவெல்லாம் சொன்னாரோ அவற்றைஎல்லாம் அவர்களிடமே நினைவூட்டி அசரவைத்தார் சாய்பாபா.

சாய்பாபாவிற்கு நாளும் கிடைத்து வந்த புகழ் அவருக்குப் பலத்த எதிரியாகியது. அவரைப் பற்றி ஒன்றும் அறிந்து கொள்ளாமலேயே அவர்மீது தாக்குதல்களைத் தொடுத்தனர் அவர் நடத்திக் காட்டிய அதியசயங்கள் பழிக்கப்பட்டன. தன்னை நாடுபவர்களின் குறைகள் அனைத்தையும், அவை எதுவாயினும் நிவர்த்திக்கும் சக்தி படைத்திருந்தார். தீராத வியாதியாகட்டும், மனக்கவலையாகட்டும், பொருள் பதவி ஆகியன அடைவதற்கு எதிர்படும் இடர்பாடுகளாகட்டும் எல்லாம் அவரை சந்தித்த விநாடியில் தொலைந்து போனதாக பக்தர்கள் நம்பினார்கள். எதிர்ப்புகள் மங்கத்தொடங்கின. பாபாவின் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகின் பலநாடுகளிலும் பரவத் தொடங்கிற்று. அவரது சமூகப் பணிகள் பலரையும் பயனடைய வைத்தன. ஆத்திகர்கள் நாத்திகர்கள் என்றில்லாமல் எல்லோரும் அவரை மரியாதையுடன் நேசிக்கத் தொடங்கினர். எண்பத்து ஐந்தாவது வயதில் அவர் இறந்தபொழுது அந்த நேசத்தின் பல பரிமாணங்களையும் பார்க்க முடிந்தது.

பாபா சகமனிதர்களுக்கு ஆற்றிய சேவைகளை மனதாரப் பாராட்டும் பண்பு படைத்தவர்களுள் அவரது சித்து வேலைகளை விரும்பாதவர்கள் அநேகர் உண்டு. இவர்கள்தான் பாபாவின் ஆரம்பகால பகுத்தறிவு விமர்சகர்கள். இப்பொழுது விமர்சனம் தவிர்த்த தொனியில் ஆதங்கத்துடன் பாபா அந்த சித்து வேலைகளை மட்டும் செய்யாமலிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்பவர்கள். பாபா சித்து வேலைகள் என்று சொல்லப்படும் அதிசயங்களை நிகழத்தாமல் இருந்திருந்தால் ஒருவேளை இந்த அளவிற்கு புகழ் பெற்றிருப்பாரா?

இது காலம் காலமாகத் தொடுக்கப்பட்டு வரும் வினா. யேசு கிறிஸ்து அதிசயங்கள் புரியாமல் இருந்திருந்தால் இந்த உலகமே அவரது காலடியில் வீழ்ந்து கிடக்கும் என்று ரூஸோ கருதினார். யேசுவை மாபெரும் பொருளாதார அரசியல் மேதையாகக் கண்டெடுத்த பெர்னாட்ஷாவும் இதே கருத்தை வழி மொழிந்தார். யேசுவிற்குப் புகழ் சேர்த்ததைப் போலவே பாபாவிற்கும் அதிசயங்கள் புகழைச் சேர்த்தன. பாமரர்களிலிருந்து மேதைகள்வரை அதிசயங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.

ஒரு கிறித்துப் பெரியவரின் மறைவிற்குப் பிறகு அவரது சக்தியால் இரண்டு அதிசயங்கள் நடைபெற்றதென்றால் அவருக்குப் புனிதர் (saint) பட்டம் வழங்குகிற நடைமுறையைக் கத்தோலிக்க தலைமை பீடம் இன்றுவரை அனுசரித்து வருகிறது. மகான்களுக்குத் தங்கள் பணிகளை ஆற்ற நேர்கையில் எதிர்ப்படும் தடைகளை வேரறுக்க அதிசயம் போன்ற கூரான எஃகு வேறில்லை.
அதிசயங்கள் புரிவதில் ஒரு உலக ரிகார்டை படைத்தவர் பாபா. அனு தினமும் அதிசயங்கள் புரிந்தவர். ஒருமுறை கூட அதில் அவர் தவறிழைத்தது கிடையாது. அநேகமாக ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்றுமுறைகள் விபூதியை வரவழைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிப்பார். சட்டை மடிப்பிலிருந்து விபூதியைக் கொணர்கிறார் என்றெல்லாம் பழி சுமத்தப்பட்டார். சிலர் அதை நிரூபித்ததாகவும் மார்தட்டினர். மக்களிடம் அவையெல்லாம் சற்றும் எடுபடவில்லை. விபூதி மட்டுமின்றி தங்க டாலர், மோதிரம், வாட்ச், புடவை, என்று கைக்கு அடக்கமான பலவற்றையும் அவர் காற்றிலிருந்து வரவழைத்துக் கொடுத்தார். அவர் வரவழைக்கும் மோதிரத்தின் அளவு பெரிதாகவோ சிறிதாகவோ இல்லாமல் அணிபவரின் விரலுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்படி இருக்கும். தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் வழக்கமாக அணியும் குங்குமப்பூ நிற உடை தவிர்த்து வெண்பட்டு உடை அணிந்துகொண்டு வாயிலிருந்து சிரமப்பட்டு ஒரு லிங்கத்தை கக்கியெடுப்பார்.

அவர் மாயமாய் வரவழைக்கும் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன? அவை எங்கு தயாரிக்கப்பட்டு எவ்வாறு அவர் கையில் எல்லோர் முன்னிலையிலும் தோன்றுகின்றன என்பனவெல்லாம் எவராலும் அறியமுடியாதவை. தங்கக் கட்டுபாடு சட்டத்தின் கீழ் பாபா மீது ஆந்திர பிரதேசத்தில் பகுத்தறிவாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். தங்கத்தை பாபா பதுக்கிவைத்திருந்ததாக அவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். திடீரெனத் தென்படும் தங்க ஆபரணம் பதுக்கிவைத்ததற்கான எவ்விதத் தடயத்தையும் தரவில்லை என்பது தீர்ப்பு. பாபா விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதில்லை. அவரது சக்தியைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்று பெங்களூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எச். நரசிம்மய்யா முயன்ற பொழுது பாபா அதை தடை செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். உலகின் எத்திசையிலிருந்தும வரும் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும் பாபா தனக்கு ஏற்படும் தொந்தரவைத் தன்னால் தீர்த்துக்கொள்ள முடியாது இந்திரா காந்திக்கு கடிதம் எழுதுகிறாரே என்று அந்த சம்பவம் நினைக்கத் தூண்டியது.

பாபாவைப் போன்று அதிசய ஆற்றல் (Para Normal) படைத்தவர்களை மேலைநாடுகளில் சோதிக்கிறார்கள். ஈஎஸ்பி, டெலிபதி ஆற்றல் உடையவர்கள் இவ்விதம் சோதனைக்குள்ளாகிறார்கள். ஆர்தர் கோஸ்லர் இது குறித்த ஆராய்ச்சிகளுக்கு எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கையை நிறுவ தனது சொத்தின் பெரும் பகுதியை உயில் எழுதிவைத்தார். இதுவரை இவ்வாராய்ச்சிகளால் எவ்வித முடிவிற்கும் வர இயலவில்லை. ஆனால் இவை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இத்தகைய ஆற்றல் படைத்தவர்கள் இந்தியாவில் அதிகம் தென்படுவதால் இந்தியப் பல்கலைக்கழகங்கள் இந்த முயற்சிகளில் தவறாது ஈடுபட வேண்டும். அதிசய ஆற்றல் படைத்தவர்களை புரட்டாளர்கள் என்று பழித்தொதுக்குவது ஒரு விஞ்ஞான மூட நம்பிக்கை.

ஆனால் பாபா வெறும் அதிசய சாமியார் அல்லர். அவர் சாத்வீகமான யோகி. அன்பை போதிப்பவர். வன்முறையை விலக்கிய வாழ்வை மேற்கொள்ளத் தூண்டுபவர். இந்து மதத்தினராக இருந்தபோதிலும் பிற மதங்களை அரவணைத்தவர். மத மாற்றத்தில் அவர் நம்பிக்கை இல்லாதவர். புட்டபர்த்தியிலுள்ள பிரசாந்தி நிலையம் பெங்களூரிலுள்ள ஒயிட் பீல்ட் ஆகிய அவரது ஆசிரமங்களில் எல்லா மதத்தினரின் பண்டிகைகளும் கொண்டாடப்படும். மத நல்லிணக்கத்திற்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டு. எந்த மதத்தலைவரையும் அவர் விமர்சித்ததுமில்லை. அவரது ஆசிரமங்கள் சர்வதேசக் குடில்கள் போன்று தோற்றமளிக்கும். வெளிநாட்டவர்களில், அதிகமாக இத்தாலியர்களை நான் அங்கு பார்த்தேன். இத்தாலிய மொழியில் அவர்களுக்காக பாபா பற்றிய சொற்பொழிவுகளும் அங்கு நடைபெறும்.

நான் முதன்முறையாக புட்டபர்த்திக்கு முப்பது வருடங்களுக்கு முன்னர் சென்றேன். என் மனைவியின் மிக நெருங்கிய உறவினர் பிரசாந்தி நிலையத்தில் வசித்து வந்தார். அப்பழுக்கற்ற தியாக வாழ்க்கை அவருடையது. அவரது அன்பிற்கு பாத்திரமான பாபாவின் மீது நாளடைவில் எனக்கும் மிகுந்த ஈர்ப்பு உண்டாயிற்று.

அப்பொழுதெல்லாம் அவரைப் பார்ப்பது அவ்வளவு கடினமல்ல. காலை மாலை ஆகிய இருவேளைகளிலும் அவர் தரிசனம் தருவார். பிரசாந்தி நிலையம் ஒருசில குடியிருப்பு கட்டடங்கள் மட்டுமே கொண்டிருந்தது. பூர்ண சந்திரஹால் என்று ஒரெயொரு கூடம்.

மலிவுவிலைக் கேண்டீன். வியாழக்கிழமைகளில் பேக்கரியில் பிட்ஸா கூடக் கிடைக்கும். அதற்கு மட்டும் முன்னதாகவே டோக்கன் வாங்கியிருக்க வேண்டும். புட்டபர்த்தியில் அப்பொழுதே மருத்துவ, கல்வி நிறுவனங்கள் எழும்பியிருந்தன. அவை யாவும் இலவசம். ஊரை ஒட்டி சித்ராவதி ஆறு ஒரு சிறு கால்வாயாக ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் அங்கு வேறொரு கட்டடம் இருந்தது. அப்பொழுது இந்தியாவின் பெரும் நகரங்களில்- சென்னை அவற்றில் ஒன்றாக இல்லை– மட்டுமே இருந்த பிர்லாவின் பிளானடேரியம் அக்குக்கிராமத்தில் இருந்தது, பாபாவின் செல்வாக்கினால்.

பாபாவைப் பற்றி ஒரு அவதூறு கிளம்பி ஓய்ந்திருந்தது. அவருடன் நெருங்கிப் பழகியதாகத் தன்னை அறிவித்துக் கொணட டால் ப்ரூக் என்னும் மேற்கத்தியர் பாபாவை ஓரினச் சேர்க்கையாளர் என்று தனது புத்தகத்தில் எழுதியிருந்தார். இதுபோன்ற அம்பலங்கள் சந்நியாசிகளைத் தொலைத்துவிடும். சந்நியாசிகள் தங்களைப் பற்றித்தரும் உறுதி மொழிகளே இவற்றுக்கு மூலகாரணங்கள். சந்நியாசிகள் பிரம்மச்சரிய விரதம் பூணாவிடில் ஒன்றும்குடி முழுகிப் போகாது. நமது பாரம்பரியத்தில் ரிஷிகள் பத்தினிகளுடன் வாழ்ந்தவர்கள்தாம். சந்நியாசிகளே தங்கள் பாலுணர்வு விருப்புகளைத் தெரிவித்துவிட்டால் பரபரப்புகளுக்கு அங்கே இடமிராது. ஓஷோ ரஜனீஷ் இதைத்தான் செய்தார். தவிரவும் பாலுணர்வைத் தவிர்ப்பது மட்டும்தான் துறவா? பொதுவாழ்விற்கு வருபவர்கள் தங்களுக்குரிய தர்மத்தை எவ்விதம் ஒழுகுகிறார்கள் என்பதைத்தான் கண்காணிக்க வேண்டும். பாவ மன்னிப்பை காசுக்கு விற்றபொழுது மார்டின் லூதர் அதைக் கண்டித்து வெளியேறி புதிய மதத்தை தோற்றுவித்தார். அதுதான் அறிவார்ந்த எதிர்ப்பு. தனிமனிதனின் அந்தரங்கங்களைப் பகிரங்கப்படுத்துவது பண்பாடற்ற செயல். நல்லவேளையாகப் பாபாவின் ஓரினச் சேர்க்கைப் பற்றிய வம்பளப்பு விரைவாக முடிவினை எட்டியது.

பாபா தன்னை வழிபட்டவர்கள்மீது எந்தச் சுமையையும் திணிக்கவில்லை. அவரது அலுவலர்களுக்கு வெள்ளைச் சீருடை தரப்பட்டதைத் தவிர வேறு பிரத்யேகமான கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. புகைபிடித்தல், மதுஅருந்துதல், அசைவம் உண்ணுதல் ஆகியவை அவரது ஆசிரமங்களில் விலக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் பொதுவாகவே எல்லா ஆசிரமங்களிலும் அமல்படுத்தப்பட்டிருக்கும் நடைமுறைகள்தான்.

பாபா பளிச்சென்று தோன்றுவார். கௌபீனத்திலிருந்து அரைகுறை ஆடைகள் வரையிலான உடுப்புகளைத் தங்களுக்கு தேர்ந்தெடுக்கும் சாமியார்களிடமிருந்து அவர் மிகவும் வேறுபட்டவர். கழுத்திலிருந்து பாதம்வரை உடல்முழுவதையும் மறைக்கும் மடிப்பு கலையாத அங்கி. நன்கு சவரம் செய்யப்பட்ட முகம். ஒளிவட்டம் போன்ற அழகான எண்ணெய் பிசுக்கற்ற கறுத்தசிகை. நடை, அசைவுகள் எல்லாவற்றிலும் மென்மை. சிவசக்தி அவதாரம் என்று தன்னை அறிவித்துக் கொண்டதற்கு ஏற்றார்போல் வசீகரமான திருநங்கையாக அவர் இளமைக்கால புகைப்படங்களில் தோன்றுவார். பாபா நம் கண்முன் தோன்றிவிட்டால் அவரையே இமைகொட்டாது பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்படும். சாய் பக்தர்கள் பலர் அவர் தூர சென்றுவிட்டால்கூட பைனாகுலர் வழியாக அவரைத் தொடர்வார்கள். மடோனாவே நிர்வாணமாக பாபாவுக்குப் பக்கத்தில் வந்து நின்றால்கூட மடோனாவை பொருட்படுத்தாமல் பாபாவையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்படியொரு காந்தசக்தி அவருக்கு.

கோபம் வராது. ஒரு முறைதான் அவர் கோபமாக இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். புட்டபர்த்தியில் ஒரு சமயம் நூற்றுக்கு மேற்பட்ட ஜோடிகளுக்கு இலவசத் திருமணங்கள் நடந்தபொழுது ஏற்பட்ட இரைச்சல் தாளாமல் மந்திர் என்றழைக்கப்படும். தனது குடியிருப்பிலிருந்து வெளிவந்து தனது அலுவலர்களைக் கடிந்துகொண்டார். எல்லாற்றிலும் ஒழுங்கை வேண்டுபவர். அதுதான் அவரது பலம். பாபாவின் சமூகப் பணிகளை– அவற்றில் பெரும் சிகரங்களாக விளங்குவன அனந்தபூர், மேடக், சென்னை ஆகிய இடங்களுக்கு குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தது.– சுலபமாக பட்டியலிட்டுவிட முடியாது. இவற்றையெல்லாம் அவரால் செய்ய முடிந்ததற்கு அவருக்கு செல்வந்தர்களான அடியார்கள் அளித்த தாராளமான நன்கொடைகள் மட்டுமல்ல. பாபாவின் நிர்வாகத் திறமைதான் எல்லாவற்றையும்விட முக்கியமானது. தனது அனைத்து நிறுவனங்களையும் அவரே நேரிடையாக நிர்வாகம் செய்தார். பொதுவாக சாமியார்கள் நிர்வாகத்தில் கோட்டைவிடுவார்கள். மற்றவர்களை அளவிற்கதிகமாக சார்ந்திருப்பார்கள். தங்களைக் கவனித்துக்கொள்ளக்கூட அவர்களால் முடியாது போய்விடும். இதனால் பலவிதமான துன்பங்களுக்கும் ஆளாவார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சரை அவரது உதவியாளர் பாடாய்படுத்தி வைத்தார். பாபாவிடம் அதெல்லாம் நடக்காது. உடல்நலம் குன்றிப்போன கடைசி நாட்களில் எப்படியோ, அவர் நன்றாக இருந்தவரை, சிறுவயது முதலே தனது சேவைகளாக வளர்ந்த சகோதரரின் மகன் ரத்னாகர் தவிர வேறு உறவினர்கள் எவரையும் அண்டவிட்டதில்லை.

முதியவர்கள் மீது மிகுந்த அன்பு காட்டியவர் பாபா. மிகச்சிறந்த முதியோர் இல்லங்கள் அவரது ஆசிரமங்கள். அங்கு நிரந்தமாகக் குடியிருப்பவர்கள் அனைவரும் முதியவர்கள். பாபாவின் மீது அவர்களைப்போல் நம்பிக்கையும் பக்தியும் வைத்திருப்பவர்கள் வேறு எவருமில்லை. அவரின்றி அவர்களுக்கு அணுகூட அசையாது. அவர்களை பைத்தியங்கள் என்று வாஞ்சையுடன் பாபா சில வேளைகளில் அழைப்பார் என்று ஒரு ஆசிரம வாசி சொல்லக் கேட்டிருக்கிறேன். தங்களது உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டுமெனறால் கூட முதலில் அவரது அனுமதியைத்தான் கோருவார்கள். பாபாவிடம் ஒரு குணாதிசயம் உண்டு. அவர் பல சமயங்களில் புதிர் தன்மையோடு நடந்து கொள்வார். ஏன் என்று அவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் அவர்களுக்கு அனுமதி மறுப்பார். ‘உங்களுக்கு அனுகூலமாக இருந்தால் செய்யுங்கள்’ என்று மட்டும் கூறினால் அவருக்கு அதில் விருப்பமில்லை என்று பொருள். பின்னர் என்ன அவர்கள் ஓர் அடி கூட ஆசிரமத்தைவிட்டு வெளியே வைக்க மாட்டார்கள். அதேபோல் எவ்வித முன்னறிவிப்புமின்றி பாபா பிரசாந்தி நிலையத்திலிருந்து ஒயிட் பீல்டுக்கு கிளம்பி விடுவார். அவரருகிலேயே சதாகாலமும் இருக்க வேண்டும் என அவாவும் அவரது அடியார்களும் உடனேயே அவருக்குப் பின்னால் அடுத்த சில நிமிடங்களில் புறப்பட்டுவிடுவார்கள். புட்டபர்த்தி. பெங்களூர், கொடைக்கானல் ஆகியவை அவர் செல்லுமிடங்கள். சென்னை சேமியர்ஸ் சாலையிலுள்ள சுந்தரம் இல்லத்திற்கு ஆண்டிற்கொருமுறை வந்து கொண்டிருந்தவர் திடீரென அதையும் நிறுத்திவிட்டார். உகாண்டா தவிர வேறு வெளிநாடு எதுவும் சென்றதில்லை.
சாய்பாபா யார்? மனிதரா? அவதாரமா?

தன்னைக் கடவுள் என்று அவர் அடிக்கடி கூறியதில்லை. அதிசயங்கள் நிகழ்த்துவதையும் அவர் பின்னாட்களில் வெகுவாகக் குறைத்துக் கொண்டார். பிறப்பிலும் இறப்பிலும் இன்ன பிறவற்றிலும் அவர் மனிதராகத்தான் வாழ்ந்து மறைந்தார். இதற்கிடையே அவர் அவதாரம் என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. கடவுளின் அவதாரம், தூதர் என்றெல்லாம் ஒருவர் தன்னைப் பற்றிக்கூறும் பொழுது அவர் மனிதர்கள் காலம் காலமாக எழுப்பும் கேள்விகளுக்கு என்ன பதில்களைத் தருகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். கடவுளின் அவதாரங்கள் ஏன் எப்பொழுதும் மனிதர்களின் ஒழுக்கங்களைப் பற்றியே பேசுகிறார்கள்? என்றும் விடை காணவியலாத பிறப்பு இறப்பு குறித்த ஆச்சர்யங்கள் மட்டுமின்றி பிரபஞ்சத்தைப்பற்றிய மனிதர்களின் சந்தேகங்களை ஏன் அவர்கள் தீர்த்து வைப்பதில்லை? அவர்கள் புவிக்கு மட்டுந்தான் காப்பாளர்களா? உலகம் உருண்டை, அது சூரியனை சுற்றுகிறது என்பதிலிருந்து தொடங்கி மனிதனின் அறிவார்ந்த ஏக்கங்களுக்கு செவிசாய்ப்பவை மனிதனின் விஞ்ஞான செயல்பாடுகள்தான்.

விஞ்ஞானப் புதிர்களைத் தீர்த்து வைக்காவிடினும் அப்துல் கலாம் கூறியதைப்போல் மக்களிடையே கல்விக்கான விழிப்புணர்வை ஊட்டியதில் பாபாவிற்கு சிறப்பான பங்குண்டு. பாபா செய்த பல நற்பணிகளை நியாயமாக அரசாங்கம் செய்திருக்க வேண்டும். ஊழல் மலிந்த நமது அரசாங்கம் அவற்றை செய்யத் தவறியது. தனிமனிதனாக அவற்றை செய்து காட்டினார் பாபா. பாபாவின் அன்பும் கருணையும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் அமைதியையும் மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளன.

வேர்கள்

மெரிக்க கவிஞர் ஜெர்ட்ருட் ஸ்டைன் ஒரு கவிதையில் A Rose is a rose is a rose is a rose என்று ஒரு வரி எழுதியிருந்தார்.அது மிகவும் புகழ் பெற்ற வரி கிவிட்டது. பல சமயங்களில் அந்த தொடர் ஆறு அல்லது ஏழு முறைகள் Rose என்கிற சொல்லுடன் உபயோகிக்கப்படுவதுமுண்டு. ஆனால் ஸ்டைன் நான்கு முறைகள்தான் Rose என்கிற சொல்லை எழுதியிருந்தார். எத்தனை முறை வந்தாலும் அர்த்தம் ஒன்றுதான். ரோஜா ரோஜாதான். ரோஜாவை ரோஜாவால்தான் முழுதாக அர்த்தப் படுத்திக் கொள்ளமுடியும். ரோஜா என்கிற சொல்லை மட்டுமல்ல எந்த சொல்லை எடுத்துக் கொண்டாலும் அதைப் பிறிதொரு சொல்லால் பெயர்த்துவிட முடியாது. அகராதியில் நாம் ஒரு சொல்லுக்கு காண்கிற அர்த்தங்கள் யாவும் அதை நெருக்கமாக அணுகத்தான் பயன்படுகின்றன. அகராதி இல்லாவிடில் அதன் அர்த்தத்தை பிரபஞ்சம் முழுவதும் தேட வேண்டி வரும். எந்த ஒரு சொல்லின் பொருளும் அதிலேயே உள்ளது.

இதே போன்று நுண்மான் நுழைபுலத்துடன் இன்னொரு வரியையும் ஸ்டைன் எழுதியுள்ளார்.அது `There is no there there`. வசீகரமும் திறமையும் வாய்ந்த ஸ்டைன் தன் வாழ்நாளை பாரிஸிலேயே கழித்தார். அவர் பிகாஸோ, மாடீஸ், ஹெமிங்வே போன்ற பல பிரபலங்களின் சிநேகிதி. முப்பது வருடங்கள் கழித்து பாரிஸிலிருந்து அவர் தான் சிறு வயதில் வாழ்ந்த கலிபோர்னியாவிலுள்ள ஓக்லாண்டிற்கு சென்றார்.அந்த இடைப்பட்ட காலத்தில் அங்கு எல்லாமே மாறிவிட்டிருந்தது. தான் படித்த பள்ளி, பார்த்த பார்க், சென்ற கோயில் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற அனைத்தும் மாறிவிட்டிருந்ததைப் பற்றித்தான் அவர் `அங்கிருந்த அங்கு அங்கில்லை` என்று எழுதினார். அவ்வாறு அவர் நடந்து கொண்டது உள்ளூர்வாசிகளுக்கு மன வருத்தம்தான். என்ன செய்வது? பாரிஸ்வாசியான ஸ்டைன் வாழ்வில் ஓக்லாண்ட் அத்தியாயம் அத்தோடு முடிவுற்றது.

ஆனால் சென்னைக்கு குடியேறுகிற பலர் தங்கள் சொந்த ஊரையே நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். தங்களுடைய பொற்காலம் அங்குதான் இருந்ததாக நினைக்கிறார்கள். அதிகப்படியாக அவர்களில் பலர் பதினெட்டு வருடங்கள் வரைதான் சொந்த ஊரில் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் வயது எழுபது ஆனாலும் அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். பல அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், எழுத்தாளர்கள்,அலுவலர்கள் இதில் அடக்கம். இவ்வளவிற்கும் இவர்களுக்கு சென்னை வந்த பிறகுதான் புகழ், பணம், சொத்து, பதவி ஆகியனவெல்லாம் கிடைத்திருக்கும். இருந்தும் இவர்கள் சென்னையை விரும்பாததுபோல் காட்டிக்கொள்வார்கள். தங்களுடைய வேர்கள் அங்குதான் இருப்பதாக சொல்லிக்கொண்டிருப்பார்கள். சென்னையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இல்லாத ஒரு கவர்ச்சி அம்சத்தையும் இதன் மூலம் இவர்கள் தங்கள் மேல் தோற்றுவித்து விடுவார்கள்.

ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளர் அலெக்ஸ் ஹேலி இத்தகைய கவர்ச்சியை மிகுந்த சாமர்த்தியத்துடன் பயன்படுத்தி Roots என்கிற சுயசரிதையை எழுதினார். தன்னுடைய முன்னோர்களை காம்பியாவிலுள்ள ஒரு இனத்துடன் முடிச்சு போட்டார். பதினெட்டாம் நூற்றாண்டில் அங்கிருந்து அடிமையாக வந்த குந்தா கிந்தே என்பவரின் வாரிசு என்று தன்னை அறிவித்தார். புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்று புலிட்சர் பரிசையும் வென்றது. அந்த அமளி எல்லாம் முடிந்த பிறகு வேர்கள் புத்தகத்தில் காணப்பட்டவை வேறு பல புத்தகங்களில் ஏற்கனவே வேர் கொண்டிருப்பதை விமர்சகர்கள் அடையாளம் காட்டினர். திருட்டு குற்றத்தை ஹேலியே ஒப்புக் கொண்டார். ஒரு எழுத்தாளருக்கு பெரும் நஷ்ட ஈடும் கொடுத்தார். இது ஒரு அதீத உதாரணம். வேர்களைத் தேடிச் செல்பவர்கள் எல்லாம் பொய்யர்கள் இல்லை.

கடந்தகால வாழ்வின் ஒரு கால கட்டம் ஜீவனுடையதாக இருக்கும் பட்சத்தில் அதன் பாதிப்புகளை பாராட்டுவதுதான் நியாயமானது. ஆனால் வேர்கள் என்ற ஒன்றை வலுக்கட்டாயமாகத் தேடிச் செல்ல வேண்டுமா என்பது தான் கேள்வி. எனது நண்பரான ஒரு வங்காளப் பெண்மனி பலகாலம் சென்னையிலேயே வாழ்ந்துவிட்டு பின் வரும் காலத்தை கொல்கத்தாவில் கழிக்க முடிவு செய்து சென்னையிலிருந்த சொந்த வீட்டையும் விற்றுவிட்டு தன் கணவருடன் கிளம்பினார்.என்ன இருந்தாலும் தன்னுடைய இடம் அதுதான் என்று அவர் நினைத்தார். ஒரு வருடம் கழித்து ஒரு நாள் அவரிடமிருந்து போன் வந்தது. கொல்கத்தாவிலிருந்து பேசுகிறார் என்று நினைத்தேன். தானும் தன் கணவரும் சென்னைக்கே திரும்பிவிட்டதாக அவர் கூறினார். கொல்கத்தாவுடன் அவரால் தன்னை இணத்துக் கொள்ள இயலவில்லை. சென்னையில் கிடைத்த நண்பர் குழாத்தை அவரால் அங்கே ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை.பூர்விகம்தான் நமது வேர் என்றில்லாது ஆக்கபூர்வமாக எது நம்மை செயலுக்குட்படுத்துகிறதோ அதை நாடிச் செல்வதுதான் பொருள் பொதிந்த செயலாகும். ஐரீஷ் கவிஞர் டபிள்யு.பி.யேட்ஸ் தன் முன் வந்து நின்ற ஜே.எம்.சிங் என்னும் நாடக சிரியரிடம் `ஏரன் தீவுகளுக்குச் செல்.அங்குள்ள மனிதர்களின் வாழ்வைப் பகிர்ந்துகொள். எவரும் வெளிப்படுத்தாத அந்த வாழ்க்கையை நீ வெளிப்படுத்து.` என்றார். சிங் அதை வேத வாக்கியமாக பாவித்து ஏரன் தீவுகளுக்கு உடனே சென்று அந்த வாழ்க்கையை தனது நாடகங்களில் உலகே வியக்கும் வண்ணம்வெளிப்படுத்தினார்.
மகாகவி பாரதி எட்டையபுரத்தில் பிறந்து வளர்ந்து பின்னர் காசி, சென்னை, புதுவை என்று புலம் பெயர்ந்து கொண்டே இருந்தார். தனது படைப்புகளில் எட்டயபுரத்து வாழ்க்கையை஢ல் தேவைக்கு மேல் லயித்ததில்லை. அகில இந்தியாவையும் தனது பரப்பாக பாவித்தவர் அவர். தேசியக் கவி மட்டுமல்ல, தேசிய எழுத்தாளரும் பாரதிதான். பதின்மூன்று வயதிலேயே கடலூரை விட்டு சென்னைக்கு குடிபெயர்ந்த ஜெயகாந்தன் மிகுதியாக எழுதியதெல்லாம் சென்னை வாழ்க்கையைப் பற்றித்தான். யாரும் அதுவரை பார்த்திராத சென்னையையும் அவர் தன் எழுத்துகளில் வெளிக்கொணர்ந்தார்.
செகந்திராபாத்தில் பிறந்து வளர்ந்து எப்போதோ சென்னைவாசியாகிவிட்ட அசோகமித்திரன் இப்பொழுதும் கூட தன் இளமைக் கால அனுபவங்கள் பற்றி எழுதுகிறார். ஆனால் அதற்கு இணையாக அவர் சென்னை வாழ்க்கைபற்றியும் எழுதுபவர். தனது அமெரிக்க அனுபவங்களை வைத்தும் அவர் குறிப்பிடத்தக்க கதைகளை எழுதியுள்ளார்.பதினெட்டாம் அட்சக்கோடு நாவல் எழுதி முடிக்கும்வரை ஒரு இருபத்தைந்து வருட காலம் அவர் செகந்திராபாத்-ஹைதராபாத் எல்லைக்குள் கால் வைக்கவில்லை என்பது இப்போது எல்லோருக்கும் தெரிந்த ருசிகரமான தகவல். ஞாபகத்திலுள்ள இரட்டை நகரத்தை நிகழ்காலத்தில் சென்று பார்ப்பது தனது படைப்புக்கு எவ்விதத்திலும் உதவாது என்று அவர் முடிவு செய்தார். அவர் அறிவார் `அங்கிருந்த அங்கு அங்கில்லை` என்பதை.
நான் 2002ல் எடுத்த `அசோகமித்திரன்` டாகுமெண்டரியின் போது அதற்கு தொடர்பான இன்னொரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது.அவரை நான் செகந்திராபாத்தில் அவர் வாழ்ந்த லான்சர் பாரக்ஸ் என்கிற ரயில்வே குடியிருப்புக்கு அழைத்துச் சென்றேன். பல வருடங்களுக்குப் பின் அவர் அங்கு செல்கிறார். அப்பொழுது அந்த வீட்டில் யாரோ ஒரு உயர் அதிகாரி தங்கியிருந்தார். அந்த வீட்டிற்குள் அசோகமித்திரனுடன் சென்று அவரது நினைவுகளைப் பற்றிய வெளிப்பாடுகளை படமெடுப்பதாக ஏற்பாடு. நாங்கள் சென்ற சமயம் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டுக்காரர் அதன் சாவியைக் கொண்டு வந்து திறந்து விடுவதாகக் கூறினார். ஆனால் அசோகமித்திரன் ஏனோ அதை விரும்பவில்லை. அவர் மன நிலை மாறிவிட்டிருந்தது. அவர் இல்லாமல் அந்த வீட்டினுள் சென்று அதைப் படம் பிடிக்க எனக்கும் விருப்பமில்லை. அந்த வீட்டின் கேட் முன்னால் நின்று கொண்டே தனது கடந்த கால நினைவுகளை அவர் அசோகத்துடன் பகிர்ந்து கொண்டார். தன் சிறுபிராயத்து தடயங்கள் அழிந்ததற்காக அவர் வருந்தவில்லை.அன்று தான் விளையாடியதற்கு கிடைத்த மைதானம் போல் இன்று உள்ள சிறுவர்களுக்கு விளையாட மைதான வசதி இல்லையே என்பது பற்றித்தான் அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார். எவ்வித முன்கூட்டிய திட்டமிடலும் இன்றி உருவான அக்கணங்கள் டாகுமெண்டரியில் பதிவாயின. டாகுமெண்டரியைப் பார்த்தவர்களுக்கும் அப்பகுதி மிகவும் பிடித்திருந்தது.
நான் சென்னைக்கு வந்து இருபத்தாறு வருடங்களாகிவிட்டன. பிறந்தது, ஆறாவதிலிருந்து கல்லூரி வரை படித்தது எல்லாம் திருச்சியில்தான். அன்றிலிருந்து இதுநாள் வரை இலக்கியம், நாடகம், சினிமா ஆகியவற்றில் தொடர்ந்து ஆர்வம் உள்ள சில நண்பர்களைக்காணத்தான் நான் திருச்சி செல்கிறேன். மற்றபடி பழைய ஞாபகங்களைக் கிளறவோ, பழைய இடங்களை மீண்டும் மீண்டும் பார்த்து பெருமூச்செறியவோ அங்கு செல்வதில்லை. எல்லா ஊர்களையும் போல அங்கும் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சில பகுதிகளுக்கு செல்லும்பொழுது நான் அங்கே அதுவரை சென்றதே இல்லை என்று கூட அவை எண்ண வைக்கின்றன. பாரபட்சமற்ற ஒரு பார்வையில் சென்னைதான் தமிழ் நாட்டின் சிறந்த இடமாக எனக்குப் படுகிறது. வந்தாரை மட்டுமல்ல நிந்தனை செய்வோரையும்கூட வாழ்விக்கும்நகரமும் சென்னைதான்.

சின்னத்திரையில் மும்பை பயங்கரம்.

டெக்கான் முஜாகிதின் என்று அது வரை கேட்டிராத பெயரில் நவம்பர் 26ம் தேதியன்று மும்பையில் பயங்கரவாதச் செயல்களைத் துவக்கிய கும்பலின் உண்மையான பின்னணிகள் என்ன, லஸ்கர் இ தொய்பாவான அதன் சதித்திட்டங்கள் யாவை என்பனவற்றை உயிருடன் பிடிப்பட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப் போலீஸிடம் கக்கத் தொடங்கியவுடன் மும்பைத் தாக்குதல் எத்தகைய முன்னேற்பாடுகள் கொண்டவை என்பது தெரியவந்தது.
முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்ட பயங்கரவாதிகளுக்கு இணையாக தேசிய பாதுகாப்பு காவலர்கள், கடற்படை தரைப்படை வீரர்கள் போலீஸ்காரர்கள் ஆகியோர் அப்போதைக்கப்போது திட்டமிட்டு செயல்பட்டு அந்த கோர சம்பவத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தனர். என்னசெய்வதென்று அறியாமல் இவற்றையெல்லாம் கையைப் பிசைந்த நிலையில் அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டிருந்தனர். அதே சமயத்தில் எவ்வித முன்னேற்பாடோ முன் அனுபவமோ இல்லாத தொலைக்காட்சி சேனல்கள் அந்த ஐம்பத்து ஒன்பது மணி நேரங்களை வினாடி வினாடியாகப் பகுத்து மக்களுக்கு அங்கே நடப்பவற்றை வழங்கிக் கொண்டிருந்தனர்.
தொலைக்காட்சி தகவல் ஒளிப்பரப்பு என்பது இந்தியாவில் ஒரு பக்குவ நிலையை எய்திருப்பதை அவை காட்டின. Head Lines Today, NDTV, Times Now, CNN-IBN, News X போன்றவை உடனுக்குடன் தாஜ், ஓபராய் ஓட்டல்கள் மற்றும் நரிமன் இல்லம் ஆகியவற்றின் நடப்புகளை ஒளிப்பரப்பிக்கொண்டிருந்தன. CNN, BBC World ஆகிய சேனல்கள் ஓட்டல்களில் சிக்கிக்கொண்டிருந்த அமெரிக்க ஆங்கிலேயர்களின் நலன் பற்றியே அதிக அக்கறை செலுத்திக் கொண்டிருந்தன. அவை தவிர மேல பெயர்தரப்பட்டுள்ள பிற சேனல்கள் அனைத்து மனிதர்களின் பாதுகாப்பு பற்றியும் அக்கறை கொண்டிருந்தன. சேனல்களின் கேமரா மனிதர்கள் மற்றும் செய்தியாளர்கள் நெரிசலான கூட்டங்களிடையே அநாயாசமாக ஊடுருவிக் கொண்டிருந்தனர். பல சமயங்களில் தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலை வந்த போதிலும் அவர்கள் சற்றும் பின்வாங்கவில்லை. நிலையத்திலிருந்த அறிவிப்பாளர்கள் களத்திலிருந்த செய்தியாளர்களைக் கேள்விகள் கேட்பதும் நிகழ்வுகளைத் தொகுப்பதுமாக இருந்தனர்.
சமயோசிதம், பொதுஅறிவு, ஆங்கில மொழிவன்மை ஆகியவற்றுடன் அவர்கள் கண்ணியமான நடத்தை உடையவர்களாக விளங்கினர். விளைவுகளைப் பற்றி கவலைப்படாது பரபரப்பைத்தூண்டும் விதமாக அவர்கள் ஒரு போதும் நடந்து கொள்ளவில்லை. எதையும் உறுதிப்படுத்த இயலாத சூழ்நிலையில் யூகங்களை விரைந்து கொண்டாலும் அவற்றை முடிவுகளாக ஆணித்தரத்துடன் வெளிப்படுத்த சற்றும் முயலவில்லை. சொல்லப்படுகிறது, எண்ணப்படுகிறது, நம்பப்படுகிறது போன்ற சொற்பிரயோகங்கள் மலிந்து காணப்பட்டன. அரசியல் வாதிகள் மீதும் அரசாங்கத்தின் மீதும் தார்மீக சினத்தை வலிந்து வரவழைத்துக் கொண்டு குற்றம் சாட்டவில்லை. இவையெல்லாம் தமிழ் சேனல்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை. சென்னையை சுனாமித்தாக்கிய அரை மணி நேரத்திற்குள்ளாகவே அதைப்படம் பிடித்து காட்டிய ஒரு தமிழ் சேனலின் செய்தியாளர்கள் அவதிக்குள்ளாகியிருந்த மக்களிடம், ‘அதிகாரிகள் உங்களை வந்து பார்த்தார்களா?’ ‘நிவாரணம் கிடைத்ததா?’ என்கிற பாணியில் அரசியல் லாபத்தை குறிவைத்து கேள்விகள் எழுப்பிக்கொண்டிருந்தனர். மாறாக, காங்கிரஸை குறை கூறிவிட்டு பயங்கரவாதிகளின் குண்டடிப்பட்டு உயிர்நீத்த போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் சந்தர்ப்பவாத அரசியலை அவை உடனேயே கடுமையாகக் கண்டித்தன.
இரவு பகல் பாராமல் பயங்கரவாதிகளின் முற்றுகைகள் பற்றித் தொடர்ந்து ஒளிபரப்பி அச்சூழலின் பரபரப்பை லாபகரமாக்கிக் கொண்டதாக அவை மீது விமர்சனம் எழுந்தது. அது முறையானதல்ல. மும்பை பயங்கரம் உலகையே உலுக்கிய நிகழ்வு. முற்றுகையின் போது பலியானவர்கள் யார் உயிர் பிழைத்தவர்கள் யார் நரிமன் வீட்டில் இருந்த யூதப்பாதிரியின் குடும்பத்தினர் நிலைமை என்ன என்பது பற்றி எல்லோரும் பதைபதைத்துக் கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நேரிடையாக தொடர்புகளை அளித்துக் கொண்டிருந்தன. வருடத்திற்கு நூறு நாட்கள் கிரிக்கெட் மாட்சை ஒளிபரப்புவதில் உள்ள வியாபாரமும் அங்கு இல்லை. விளம்பரப்படங்களுக்கான இடைவெளிகள் எதுவுமில்லை.
பல்வேறுவிதமான தொடர்புகளை இந்நிகழ்ச்சிகள் சாத்தியமாக்கின. ஓட்டல் அறைகளில் அடைபட்டிருந்த மக்கள் செல்போன்கள் மூலமாக சேனல் நிகழ்ச்சியாளர்களுடன் தொடர்புகொண்டார்கள் இதன் வாயிலாக அவர்களது நிலைமையை அறிந்துக் கொள்ள முடிந்தது. ஒரு சேனல் ஓட்டலில் ஆயுதங்களுடன் திரிந்துக் கொண்டிருந்த பயங்கரவாதியுடனும் தொடர்பு கொண்டது. ஹோட்டல் அறைவாசிகள் தொலைக்காட்சி பெட்டிகள் வாயிலாக தங்களை காப்பாற்ற என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றான என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.இது அவர்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கும். பயங்கரவாதிகளும் தங்கள் ப்ளாக்பெரி செல்போன்கள் மூலம் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது தெரியவந்தது. இதன் மூலம் அவர்கள் தங்கள் மீது எடுக்கப்படுகிற நடவடிக்கைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் வியூகங்களை மாற்றி அமைத்துக் கொள்ள உதவியிருந்தால் அது பிணையாக வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்கும் முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்திருக்கும் என்று ஒரு வாதம் கிளம்பியது. அதில் உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால் இது தகவல் யுகம் என்பதை மறந்துவிடக் கூடாது. தொலைக்காட்சிகள் அவற்றை ஒளிபரப்பு செய்திராத பட்சத்திலும் செல்போன்கள் வாயிலாக வெளிநடப்புகளை அவர்கள் வெளியிலுள்ள தங்கள் கூட்டாளிகள் மூலம் தெரிந்து கொண்டிருப்பார்கள். தொலைக் காட்சிகள் வாயிலாக தங்களுக்கு வெளியே எத்தகைய தாக்குதல் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பதும் மக்களிடையே தங்களுடைய செயல்களுக்கு எத்தகைய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டிருந்தார்கள். அது அவர்களை கொஞ்சமாவது வலுவிழக்கச் செய்திருக்கும். இதற்கெல்லாம் மேலாக லஸ்கர் இ தொய்பா இயக்கம் தனக்கும் இ஢தற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்ததையும் பாகிஸ்தான் அரசியல் வாதிகள் இச்செயலைக் காட்டுமிராண்டித்தனம் என்று வர்ணித்ததையும் அவர்கள் கேட்டிருப்பார்கள். இக்கொடூரச்செயல்களைத் தூண்டிவிட்டவர்களே தங்களை அநாதரவாகத் தவிக்கவிட்டதை அறிந்து மனச்சிதைவும் அடைந்திருக்க வாய்ப்புண்டு. லஸ்கர் இ தொய்பாவினால் ஏவப்பட்ட அந்த பயங்கரவாதிகள் எத்தகைய நிபந்தனையையும் கடைசிவரை முன் வைக்கவில்லை. திஹார் சிறை முதலாக பல இடங்களிலும் இந்தியாவில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் அடைபட்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற நிபந்தனை கூட விதிக்கப்படவில்லை. அதாவது அந்த இயக்கத்திற்கு தன்னை நம்பி வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் கூட இல்லை.
பார்ப்பவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளுவதற்காகவே அனுப்பப்பட்ட தற்கொலைப்படை அது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. அந்த உத்தரவிற்கு கீழ்ப்படியத் தயாராக மனிதர்கள் எளிதாக மதத்தின் பெயரால் முன்வருகிறார்கள் என்னும் போது அந்த இயக்கத்திற்கு மனிதர்கள்- தங்கள் இயக்கத்தைச் சார்ந்த மனிதர்கள் உட்பட எவரும் ஒரு பொருட்டே அல்ல என்பதும் தெளிவாகிறது. எல்லாபக்கங்களிலும் ராணுவம் சூழ்ந்துவிட்டதால் இனி ஒரு போதும் தப்பிக்க இயலாது என்ற நிலையில், தொடர்ந்து மூன்று இரவுகள் சற்றும் கண் அயராது ஓட்டல் அறைகளில் மாறி மாறி ஓடி ஒளிந்து தாக்குதல் புரிந்து கொண்டிருந்த அந்த பயங்கரவாதிகள் இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்திருக்கக் கூடும். இது போன்று செயல்களுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு இவை ஒரு எச்சரிக்கை உணர்வையும் அளிக்கும். தொலைக்காட்சி ஊடகம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி கவனம் கொள்ளவில்லை என்று குறை சொல்லப்பட்டது. அங்கே வன்முறை பயங்கரம் முடிந்துவிட்ட ஒன்று என்பதனால் தொலைக்காட்சிகள் அங்கு செல்லவில்லை என்று கொண்டாலும் அங்கு உயிர்நீத்தவர்கள் பற்றியும் காயம் பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் பற்றியும் செய்திகளே தராமல் போனது கண்டிக்கத்தக்கதுதான். அதைப்போலவே அந்த மூன்று நாட்களிலும் உலகத்தில் நடக்கும் எந்தசெய்தியையும் அவைகள் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. டயானா இறந்தபொழுது பிபிசி ஒன்பது நாட்களுக்கு டயானா பற்றிய செய்திகளை மட்டுமே ஒளிபரப்பி உலகத்தையே இருட்டடிப்பு செய்தது.
மும்பை அரசாங்கமும் சரி தேசிய பாதுகாப்பு படையினரும் சரி ஊடகங்களைப் பெரிதும் மதித்தனர். ஊடக மனிதர்கள் தங்களுடைய வேலையை செய்கிறார்கள் என்கிற எண்ணத்துடன் அவர்கள் களத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில அபாயகரமான இடங்களில் மட்டும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தாஜ் ஓட்டலின் பின்புறத்தைப் படம் பிடிக்க ஊடகங்களுக்கு ஆரம்ப முதலே அனுமதி தரப்படவில்லை. ஆனால் பயங்கரவாதிகள் அனைவரும் தீர்த்துக்கட்டப்பட்டார்கள் என்பது உறுதியான அடுத்த அரைமணி நேரத்திலேயே அவர்கள் கேமராக்களுடன் எவ்வித எதிர்ப்புமின்றி அங்கு படையெடுத்தனர். இது போன்ற ஒரு பயங்கரம் சென்னையில் நடை பெற்றிருந்தால் அதை நமது ஊடகங்கள் படம் பிடிக்கச் சென்றிருந்தால் நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும். ஆட்சியில் எந்தக் கட்சி இருக்கிறதோ அதற்கு சொந்தமான அல்லது சாதகமான சேனல்கள் மட்டும் அங்கு இருக்கும். மற்றவர்களுடைய கேமராக்கள் சேதப்படுத்தப்படும். முதலில் போலீஸிடம் அடிவாங்குவது கலவரங்களைப் படம் பிடிக்கும் புகைப்படக்காரர்களும் மற்றும் செய்தியாளர்களும் தான் என்பது தெரிந்த ஒன்று.
மகாராஷ்டிர முதல் மந்திரியிலிருந்து பாகிஸ்தான் சர்தாரிவரை எல்லோரையும் சேனல்கள் பேட்டி எடுத்து ஒளி பரப்பின. மக்கள் மனதில் என்ன கேள்விகள் தோன்றுமோ அவற்றைத் துணிவுடன் கேட்டன. சட்டத்திற்கு முன் மட்டுமல்ல ஊடகங்கள் முன்பாகவும் எல்லோரும் சமம்.

சியாட்டல் விற்ற நிலம்

மெரிக்கா பல்வேறு பூகோளப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் நாடாதலால் அதன் மாநிலங்கள் நகரங்கள் ஆகியவற்றிற்கு தங்கள் சொந்த நாட்டின் இடப் பெயர்களைக் குடியேறியவர்கள் சூட்டினர். மேரிலாண்ட், நியு ஹாம்ஷையர், நியுயார்க் போன்ற ஆங்கிலப் பெயர்கள்; லூசியானா, வெர்மான்ட் போன்ற பிரெஞ்சுப் பெயர்கள்;மான்டானா, ப்ளோரிடா போன்ற ஸ்பானிஷ் பெயர்கள்; இவை தவிர இண்டியானா, கனெக்டிகட், ஐயோவா, சியாட்டல் போன்ற ஏற்கனவே இருந்த பூர்விக அமெரிக்க இந்தியப் பெயர்களும் அவற்றிற்கு இடப்பட்டன. மேலே குறிப்பிடப்பட்ட பெயர்களில் சியாட்டல் ஒரு தனி மனிதனின் பெயர்.சியாட்டல் வாஷிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ள நகரம். ஒரு பூர்விகக் குடித் தலைவரின் பெயர்தான் சியாட்டல். அவரது இனத்தவர்கள் வசமிருந்த சுமார் இரண்டு மில்லியன் ஏக்கர் நிலப் பரப்பை அமிரிக்க அரசாங்கம் தந்துவிடுமாறு கேட்டது. தானமாக இல்லை. ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்கள் அதற்கு விலையாகத் தர முன்வந்தது. சியாட்டலால் முடியாது என்று கூற இயலவில்லை. ஒரு பூர்விகக் குடியால் ஒரு நாட்டை எதிர்க்க முடியாது என்று அவருக்கு அனுபவ பூர்வமாகத் தெரியும். ஆனால் மக்கள் நேசித்து வாழும் ஒரு பூமியை விற்பதென்பது மெய்யாகவே அவர்களால் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று.அது சாத்தியம் என்றே தோன்றவில்லை. தனது மக்களின் நிலைப் பாட்டினை அவர் ஒரு உரையின் வாயிலாக வெளிப்படுத்தினார். அது புகழ் பெற்ற, மிகவும் இலக்கியத் தரம் வாய்ந்த, குடிகளுக்கு சொந்த மண்ணின் மீதுள்ள ஈர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் ஈடு இணையற்ற உரை.“வானத்தையோ பூமியையோ விற்கவோ வாங்கவோ எவ்வாறு இயலும்? அந்த எண்ணமே எங்களுக்குப் புதிரானது.“ “நமக்கு சொந்தமில்லாத பொழுது அதை உங்களால் எவ்வாறு வாங்க இயலும்? “ இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்கள் மக்களுக்கு புனிதமானது. ஒவ்வொரு பளபளக்கும் பைன் மர இலையும், ஒவ்வொரு கரையும், கானகத்தினுள்ள ஒவ்வொரு பனித்துளியும், ஹம்மென்று இரையும் ஒவ்வொரு ஜந்துவும் எங்கள் நினைவிற்கும் அனுபவத்திற்கும் புனிதமானது. மரங்களில் பாய்கின்ற தாவரப்பால் எங்கள் செவ்விந்தியர்களின் நினைவுகளை ஏந்திச் செல்கின்றன.“ வெள்ளையர்களை நோக்கிய உரை அது என்பதை மனதில் கொண்டால் அதன் விமர்சனங்கள் எவ்வளவு துணிவானவை என்பதையும் உணரமுடியும். “ வெள்ளையர்களால் எங்கள் வாழ்வு முறைகளப் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு நிலத்தின் ஒரு பகுதி அதன் மற்றொரு பகுதியைப் போன்றே வித்தியாசமற்றதாக உள்ளபடியால் ஒரு அந்நியனாக இரவில் வந்து நிலத்தில் அவன் தனக்கு வேண்டியதை எடுத்துச் சென்றுவிடுகிறான். பூமி அவனது சகோதரன் அல்லன். அது அவனது பகைவன். அதை வசப்படுத்திய பிறகு அங்கிருந்து நகர்ந்து விடுகிறான். அவன் தனது தந்தையின் கல்லறையைவிட்டு ஓடுகிறான். அது பற்றி அவனுக்கு அக்கறையில்லை. தனது குழந்தைகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கிறான். அது பற்றி அவனுக்கு அக்கறையில்லை. அவனது தந்தைமார்களின் கல்லறைகள், குழந்தைகளின் பிறப்புரிமைகள் யாவையும் அவன் மறந்து விடுகிறான். “அவனது தாய், நிலம், சகோதரன், வானம் ஆகிய அனைத்தையும் வாங்கவும், கடத்திச் செல்லவும், அவற்றை ஏதோ ஆடுகளைப் போலும் பிரகாசமான பாசிமணிகளைப் போலும் விற்கும் பண்டங்களாக அவன் பாவிக்கிறான். அகோரப் பசி கொண்டு பூமியை விழுங்கிவிட்டு பின்னர் அதை ஒரு பாலையாக விட்டுச் செல்வான்.“ இந்த உரையை சியாட்டல் தனது சுகுவாமிஷ் மொழியில் 1854ல் நிகழ்த்தினார். அச்சமயத்தில் அதை டாக்டர் ஹென்றி ஸ்மித் ஆங்கிலத்தில் படியெடுத்துக் கொண்டார். எனவே அப்பொழுதே உரையின் சாராம்சம் ஆங்கில நடைக்கு ஏற்றாற்போல் மாற்றம் கொண்டு விட்டது. அது சியாட்டல் சன்டே ஸ்டார் பத்திரிகையில் வெளியானது. அதன் புகழ் மெல்ல பரவத் தொடங்கியது.தங்களுக்கு மிகவும் அந்நியமான சுற்றுப்புற சூழல் அக்கறை அந்த உரையில் இருப்பதை மேற்கத்தியர்கள் சுவாரஸ்யத்துடன் பார்க்கத் துவங்கினர். எழுத்தாளர்கள் அதில் கை வைக்கத் தொடங்கினார்கள். சொற்கள் மாற்றப்பட்டன.செவ்விந்தியர்களின் இயற்கை பற்றிய உணர்வுகள் மேலும் சுவாரஸ்யமாக அதில் புனைந்து சொருகப் பட்டன. கூடவே வெள்ளையர்களைப் பற்றிய வாசகங்களில் செமையாகக் காரம் தூவப்பட்டது. இவையெல்லாம் போதாது என்று டெட் பெரி என்னும் சினிமா வசனகர்த்தா அதற்கு மேலும் முலாம் பூசினார். அமெரிக்க அதிபர் பிராங்ளின் பியர்ஸீக்கு சியாட்டல் கடிதம் எழுதியதாக காட்சி அமைக்கப்பட்டது. அது உரை என்பது மறைக்கப்பட்டது. டெட் பெரியினால் வடிவமைக்ப்பட்ட சியாட்டலின் உரை பெரும் வரவேற்பைப் பெற்றது. சுற்றுப்புற சூழல் பற்றிய ஒரு அரிய பிரகடனமாக அது அதிபர் புஷ் உட்பட பலராலும் எடுத்தாளப்பட்டது. இந்தக் கட்டுரையில் நான் மொழிபெயர்த்திருக்கும் பகுதிகளும் டெட் பெரி அளித்துள்ள வடிவத்திலிருந்துதான் எடுக்கப்பட்டவைதான். எல்லோருக்கும் அந்த உரை என்ன விளைவுகளை உருவாக்குகிறதோ அதே விளைவுகளை இக்கட்டுரை படிப்பவர்களுக்கும் முதலில் ஏற்படுத்த வேண்டி அவ்வாறு செய்தேன். சியாட்டலின் உரை வேறானது. முதலாவதாக சியாட்டல் நிலத்தை வாங்குவது விற்பது பற்றி தன்னால் எண்ணிப் பார்க்க வியலாது என்று தனது உரையில் சொல்லவில்லை. பேரத்தை அவர் ஏற்பதில்லையேயொழிய வியாபாரம் அறிந்திராதவர் அல்லர் அவர். வெள்ளைக்காரன் கடவுள் வேறு தங்களது கடவுள் வேறு என்றும் சியாட்டில் சொல்கிறார். இருவருக்கும் ஒரே கடவுள்தான் என்று அவர் சொன்னதாக ஹாலிவுட் வசனகர்த்தா மாற்றிவிடுகிறார். தங்களால் சண்டை செய்ய இயலாது என்றும் சியாட்டல் தெரிவிக்கிறார். உண்மை நிகழ்வுக்கும் புனைவுக்குமான முரண்பாடுகள் வர்த்தக ரீதியில் தயாரிக்கப்பட்டவை. சியாட்டலின் ஆளுமையை உண்மைக்கு புறம்பாக மாற்றிவிட்டதன் மூலம் அதை ஒரு கவர்ச்சிப் பொருளாக்க முடிந்திருக்கிறது. அதாவது அது விற்பனைக்குரியதாக க்கப்பட்டுவிட்டது. மேற்கத்தியர்கள் விரும்புவது ஒன்றைத்தான். அது வர்த்தகம். அது இயலாதபொழுது போருக்கு ஆயத்தமாகிறார்கள். சியாட்டலிடம் நிலத்தை அவர்கள் போரிட்டு அடைய விரும்பவில்லை. அதில் உயிரிழப்பு ஏற்படும். உயிரிழப்பிற்கு அவர்கள் பயப்படுவதன் காரணம் தங்களுடைய மக்களையும் அதில் இழக்க வேண்டி வருமே என்பதால்.தவிர போரினால் ஏற்பட்ட தோல்வியை எதிரிகள் பரம்பரை பரம்பரையாக நினைவில் கொண்டிருப்பார்கள். மாறாக விலை கொடுத்து வாங்கிவிட்டால் இரண்டையும் தவிர்த்துவிடலாம். வர்த்தகம் செய்ய வேண்டி ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். அவர்களுக்கு இங்கே கிடைத்த வரவேற்பு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. மேற்கத்தியர்கள் தலையீட்டை இங்குள்ள குறு நில மன்னர்கள் தாமாகவே வேண்டினர். அவர்களுக்கு கோட்டை கொத்தளங்களை அமைத்துகொள்ள சுலபமாக அனுமதி அளித்தனர். தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்களுக்கு கோட்டை கட்ட தரப்பட்ட அனுமதி ஒரு உதாரணம். ஆங்கிலேயர்கள் வாங்கமுடிந்தவற்றையெல்லாம் வாங்கினர். மூன்று மைல் நீள மீனவக்குப்பமான மதராசப்பட்டினம் இரண்டு வருடக் குத்தகைக்கு ஆங்கிலேயர்க்கு முதலில் தரப்பட்டது. கல்கத்தா மூவாயிரம் ரூபாய்க்கு ஆங்கிலேயர்களுக்கு விற்கப்பட்டது. உரிமை பாராட்டி போர்க்குணம் பூண்டு வரி செலுத்தவும் இயைந்து போகவும் மறுத்தவர்களுடன் சண்டையிட்டனர். இந்தியர்கள் தங்களைத் தாங்களே ஆளத் தகுதியற்றவர்கள் என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டது புரிந்து கொள்ளக்கூடியதுதான். சில படிகள் மேலே சென்று இந்தியர்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் எனவே தங்களால் கல்வி புகட்டப்பட வேண்டிய நிலையிலுள்ளவர்கள் என்றும் அவர்கள் அதிகார மமதையுடன் எண்ணத் தொடங்கினர். இந்தியாவிலிருந்து செல்வத்தையெல்லாம் பெயர்த்து எடுத்துக்கொண்ட பின்னர் அதை ஆள்வதின் சிரமத்தை அவர்கள் உணரத்தொடங்கினர். தங்களது பொறுப்புகள் குறித்து ரொம்பவே அங்கலாய்த்தனர். மெக்காலே போலன்றி இந்தியாவின் மீது ஓரளவு நேசம் பூண்டிருந்த ருட்யார்ட் கிப்ளிங் இதை வெள்ளையனின் சுமை என்று தலைப்பிட்டு கவிதை எழுதினார். பிலிப்பைன்ஸ்மீது அதிகாரம் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு அறிவுறுத்தும் வகையில் அக்கவிதை எழுதப்பட்டது. மார்க் ட்வைன் பழுப்பு நிறத்தவனின் சுமை பற்றி யார் எழுதுவது என்று தனக்கேயுரிய கிண்டலுடன் அதை விமர்சித்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவைவிட்டு வெளியேறிய பொழுது நிம்மதிப் பெருமூச்சு விட்டதாக பல சரித்திர சிரியர்கள் எண்ணம் கொள்கின்றனர். ஆனால் இந்தியா அதை தனக்கு கிடைத்த பெரும் வெற்றியாகப் பார்த்தது. மனமுவந்தும் காசுக்கும் இங்குள்ள நிலங்களை ஈந்துவிட்டு பின்னர் அவற்றை மீட்டெடுக்க வந்தே மாதரம் என்று குரல் கொடுத்து தியாகிகளை உருவாக்கிய வேதனை / வேடிக்கை வரலாறு நம்முடையது. மேற்கத்தியர்களுக்கு எத்தகைய அனுபவம் வாய்க்கிறது என்பதைப் பார்த்தால் அது வேறு மாதிரியாக உள்ளது. முதலில் ஆக்ரமிப்பு/ படையெடுப்பு என்றெல்லாம் நிகழ்த்தி நாட்டைக் கைப்பற்றி நாசம் விளைவித்துவிட்டு பின்னர் வருந்தி அந்நாட்டின் சுகாதாரம், மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்கு உதவிகள் செய்ய வருகிறார்கள். ரத்தக்கறை படிந்த தங்கள் வரலாற்றைக் கண்டு வெட்கித் தலைகுனிவதுபோல் அவர்கள் புத்தகங்கள் எழுதுகிறார்கள். திரைப்படங்கள் தயாரிக்கிறார்கள். அவற்றிலும் லாபம்தான். சியாட்டலிடமிருந்து முதலில் நிலம். அது முடிந்த பிறகு அந்த உரையை இலக்கியமாக ஜோடனை செய்து போற்றுவது. நாம் முதலில் விற்கிறோம் / பறிகொடுக்கிறோம். பின்னர் வருந்துகிறோம். அவர்கள் முதலில் வாங்குகிறார்கள் / அபகரிக்கிறார்கள். பின்னர் வருந்துகிறார்கள். வருந்துவது போல் பாசாங்கு செய்கிறார்கள் என்றும் கொள்ளலாம்.

நீத்தார் பெருமை

கவிதை என்பது சாந்தமான நிலையில் திரட்டப்படுகிற உணர்வு (Emotion recollected in tranquility) என்று வேர்ட்ஸ்வோர்த் தானும் கோல்ரிட்ஜீம் இணைந்து உருவாக்கிய கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரையில் எழுதினார். அது புகழ் பெற்ற வாசகம். கவிதை உருவாகிற மன நிலைக்கும் அவகாசத்திற்கு பின் அதை எழுதுகிற நிலைக்குமிடையே இடைவெளி இருப்பதால் பல கவிதைகளுக்கும் இந்த வரையறை பொருந்திவிடுகிறது. வேர்ட்ஸ்வோர்த் கவிதைகளுக்கு அது முற்றாகப் பொருந்தும். சங்ககாலக் கவிதைகள் பல சாந்தமானவை. ஆரவாரமற்றவை. இதுவேதான் எல்லாக் கவிதைளுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை. ஆரவாரமான, ஆக்ரோஷமான மன உணர்வுகள் அடங்கு முன்னரேயே பல கவிதைகள் எழுதப்பட்டு விடுகின்றன. பாரதி, பாரதிதாசன் ஆகியோர் உலக மாண்புகள் பற்றி எழுதிய பல கவிதைகளில் சாந்தம் வௌதப்படுகிறது. அரசியல், சமூகச் சிறுமைகளைக் கண்டு வெகுளும் போது அவர்கள் ஆக்ரோஷமாக அவற்றை முன் வைக்கின்றனர். ஆனால் ஆக்ரோஷம் கூட ஒரு வடிவமைதியுடன் வௌதப்படுவதால் மீண்டும் வேர்ட்ஸ்வோர்த் சொல்வதுதான் சரியோ என்றும் தோன்றுகிறது.
Tranquil என்பதைத் தமிழில் சாந்தம், ஆரவாரமின்மை மற்றும் கலக்கமின்மை என்றும் கூட அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். நமக்கு தெரிந்தவர்கள் இறந்துவிட்டால் நாம் உடனே கலக்கமுற்று விடுகிறோம். இறந்தவர்களுக்கு நாம் உடனடியாக செலுத்துகிற அஞ்சலி கலக்கத்திலிருந்து பிறக்கிறதா தௌதவான மன நிலையிலிருந்து பிறக்கிறதா என்பதை சுலபமாகக் கூறிவிடமுடியாது.
சமீபத்தில்கே.ஆதிமூலம், சுஜாதா ஆகியோரின் இறப்பு பலரை துக்கத்தில் ஆழ்த்தியது. பொதுவாகவே எல்லோரும் இறந்தவர்களைப் பற்றி நல்லவிதமாகப் பேசுவார்கள். இது உலக மரபு. ‘The good is oft interred with their bones’ என்று ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரமான ஆண்டனி மட்டுமே பேசுவான். அது சாகஸம் நிறைந்த பேச்சு.
ஆதிமூலத்திடம் நிறைகள் மட்டுமே இருந்தனவோ என்று அவரிடம் பழகியவர்களின் அனுபவங்கள் நம்மை எண்ண வைக்கின்றன.கிழக்கு கடற்கரைச் சாலையில் இருவரது வீடுகளும் சில கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் என்னையும் ஆதிமூலத்தையும் தூரத்து வீட்டுக்காரர்கள் என்றும் சொல்லலாம். தேர்ட் தியேட்டர் என்னும் ஆங்கில டாகுமெண்டரி படத்தை முடித்தவுடன் அதன் பெயர் அட்டைகளை அவருடைய கையெழுத்தில் எழுதி அதில் சேர்க்கவேண்டும் என்று நினைத்தேன். தமிழ் எழுத்துகளுக்கு சிறப்பான கையெழுத்து வடிவம் கொடுத்த அவர் அதேபோல் ஆங்கில எழுத்துகளையும் எழுதினால் அதுவும் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன். குறித்த காலத்தில் பதினாலு அட்டைகளில் பெயர்களை எழுதிக் கொடுத்தார். படத்திற்கு அவற்றால் பெருமை விளைந்தது. ஒரு ஆயிரம் ரூபாய் செக்குடன் படம் முடிந்தவுடன் அதைப் போட்டுக் காட்ட அவர் வீடு சென்றேன்.
‘நீங்கள் உங்கள் சொந்த பணத்தில் கல்கத்தாவிற்குப் போய் இந்த டாகுமெண்டரியை எடுத்திருக்கிறீர்கள். இது சாதாரணமானவிஷயமல்ல. நான் உங்களிடம் பணம் வாங்க மாட்டேன்’ என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
இருப்பிடங்கள் தவிர வேறு ஒரு விஷயத்திலும் எங்களுக்குள் ஒற்றுமை இருத்தது. நாங்கள் இருவருமே டாபர்மேன் நாய்களை வளர்த்தோம். எப்போழுது சந்தித்தாலும் ஏனைய சமாசாரங்களை சுருக்கமாகப் பேசிவிட்டு நாய்களைப் பற்றி மட்டும் விரிவாகப்பேசுவோம். தான் வரைந்த ஓவியங்களை அறையில் அவர் இறைத்து போட்டிருப்பார். அவருடைய நாய் சாமர்த்தியமாக அவற்றின் மேல் படாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து செல்லும். ஏனோ அவரது ஓவியங்களில் அந்த நாய் எங்கேயும் இடம் பெறவில்லை.
நான் சுஜாதாவின் ரசிகனாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் சுஜாதாவை 1976ல் திருச்சிக்கு நானும் எனது நண்பர்களும் ஒரு வாசக சந்திப்பிற்காக அழைத்திருந்தோம். சுஜாதா அப்போதே பிரபலமான எழுத்தாளர் என்பதால் தேவர் ஹாலில் பலரும் பங்கேற்கும் வகையில் அது நடைபெற்றது. மறு நாள் திருச்சி வானொலியில் நாங்கள் அவரைப் பேட்டி கண்டோம். விஞ்ஞானக் கதைகள் பற்றிதான் அவர் அதிகம் பேசினார்.பழகுவதற்கு இனிமையானவராக இருந்தார். சென்னைக்கு குடியேறிய பிறகும் சில சந்தர்ப்பங்களில் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மீடியா ட்ரீம்ஸ் அலுவலகத்திற்கு வருமாறு ஒருமுறை அழைத்தார். என்னால் போக இயலவில்லை. மாற்றுப் படங்களை மிகவும் பரிகசித்து அவர் ஒருமுறை எழுதியதால் அதற்கு எதிர்வினையாக காலச்சுவட்டில் ஒரு பகிரங்கக் கடிதத்தை அவருக்கு எழுதினேன். ஏற்கனவே தமிழில் குற்றுயிராகக் கிடக்கும் மாற்றுப் படங்களைப் பற்றி சுஜாதா போன்று பெரும் வாசக வட்டத்தை எட்டும் எழுத்தாளர் எள்ளி நகையாடினால் அதன் விளைவுகள் எத்தகையதாக இருக்குமோ என்பதால் அக்கடிதம் சற்றுக் காரமாகவே இருந்தது. என் பெயரைக் குறிப்பிடாமல் அதற்கு பதிலளிப்பதுபோல் ஒரு கட்டுரையை ஆனந்த விகடனில் எழுதினார். மாற்றுப் படங்களைப் பற்றியெல்லாம் அக்கறையுடன் தான் எழுதியவற்றை அதில் பட்டியலிட்டிருந்தார். அத்தோடு அந்த விஷயம் முடிந்து போயிற்று.
ஒருவர் இறந்தால் அவருடைய இறுதி ஊர்வலத்திற்கு எவ்வளவு பேர்கள் வருகிறார்கள் என்பதை வைத்து அவர் பொருட்படுத்தப்பட்டாரா இல்லையா என்று கணிக்கப்படுகிறது. ஆதிமூலம் சுஜாதா இருவருக்கும் அந்தக் குறையில்லை. ஆனால் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் இறந்த போது டைம் பத்திரிகை அவருடைய கல்லறையில் ஆறு பேர்கள் மட்டுமே இருந்தாக எழுதியது. இவ்வளவிற்கும் அவர் உலகம் நன்கு அறியப்பட்ட அறிஞர். எலிசபெத் அரசி அவரை ‘இங்கிலாந்தின் வால்டேர்’ என்று தன் இரங்கலில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு மாறாக,அநாமதேயமாக வாழ்ந்து மறைந்து போகும் பேற்றினைத் தான் இழந்துவிட்டதாகக் கருதிய சார்த்தின் இறுதி ஊர்வலம் திருவிழாக் கூட்டம் போல் இருந்ததைப் புகைப்படங்களில் காணமுடிந்தது.
பாரதியின் இறுதி ஊர்வலத்தில் இருபது பேர்களுக்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர் என்று பரலி.சு. நெல்லையப்பர் குறித்திருந்தார். எப்பொழுதுமே பிராமணர்கள் பிரேதத்தை உடனடியாக எரித்துவிடுவார்கள். நள்ளிரவில் இறந்த அவரது உடலுக்கு காலை எட்டு மணிக்கே சிதையூட்டப்பட்டது. அவர் இறந்தது உடனே நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி அன்றைய தினத்தில் பாரதி பலரால் அறியப்பட்ட ஒரு சென்னைப் பிரமுகர்தான். அவரது ஈமச் சடங்குகளில் கலந்து கொள்ளவே மற்றவர்கள் பயப்பட்டார்கள் என்றெல்லாம் கருதுவதற்கும் இடமில்லை. அவரது இறுதிக் காலத்தில் அவர்மீது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடி தளர்ந்துதான் இருந்தது. எழுதுவதில் கட்டுப்பாடுகள் இருந்ததேயொழிய மற்றபடி அவர் சுதேசமித்திரனில் பணியாற்றிக்கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்றுகொண்டிருந்தார். ஆனால் பெரிய கூட்டம் இன்றி பாரதியின் உடல் மயானம் சென்றதை மட்டும் தமிழர்களால் இன்று வரை சாதாரணமாக பாவிக்கமுடியவில்லை.

படத்தின் பிற வேலைகள் எல்லாம் முடிந்து கடைசியில் வௌதயீட்டு விழாவின் போது எல்லோருடனும் அதை ஒரு முறை,மொத்தத்தில் எத்தனையாவது முறையாகவோ பார்த்தேன். படம் இறுதியை நெருங்கியது. ‘சுமார் இருபது பேர்கள் மட்டுமே’. அங்கேதிடீரென்று குரல் கம்மியது. படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை அந்த ‘இருபது’ எண்ணிக்கை மிகவும் பாதித்ததை என்னால் உணர முடிந்தது. எத்தனையோ கவனத்துடன் பல டேக்குகளுக்குப் பிறகும் சுரம் குறைந்த குரலில் அது படிக்கப்பட்டிருந்ததை அப்போதே உணர இயலாமல் போனது என்னையும் ரொம்பவே பாதித்தது.