அப்பா இல்லாத புத்தகக் காட்சி

 

அழகியசிங்கர்

சரியாக அப்பா 40வது புத்தகக் காட்சி ஆரம்பிக்கும் தருணத்தில் இறந்து விட்டார்.  எப்படியோ 2016ஆம் ஆண்டைத் தாண்டிவிட்டாரே என்று நான் ஆச்சரியப்பட்டேன்.  ஒரே ஒரு முறைதான் அப்பாவை புத்தகக் காட்சிக்கு அழைத்து வந்து என் ஸ்டாலில் அமர வைத்திருக்கிறேன். எப்படி அவரை அழைத்து வந்தேன் என்பது ஞாபகத்தில் இல்லை.

ஆனால் ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போது அப்பா அன்று எவ்வளவு விற்றது என்று கேட்டுக்கொள்வார்.  பின் நான் விற்றத் தொகையைச் சொன்னால் ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொள்வார். பின் ஒவ்வொரு நாளும் கூட்டுத் தொகையைச் சொல்லிக்கொண்டு வருவார்.  நான் இரவு பத்து மணிக்கு வந்தபோதும் எழுதி வைத்துக்கொண்டு இதுவரை எவ்வளவு என்று சொல்வார்.  இந்தப் புத்தகக் காட்சியின்போதுதான் அவர் இல்லை.  அவர் புத்தகக் காட்சி பொங்கல் எல்லாம் முடிந்து போயிருக்கலாம்.  ஏன் அவசரம் என்று தெரியவில்லை?  சீக்கிரம் தன்னை அழைத்துக்கொண்டு போனால் தேவலை என்பதுபோல் அவர் நம்புகிற கடவுளை வேண்டிக்கொள்வார் அடிக்கடி. என் பேர்த்தியின் முதல் பிறந்தநாள் முடிவதுவரை இருந்து விட்டு ஆசிர்வாதம் செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார். ஒரு மனிதர் படுத்தப்படுக்கையாக அசையாமல், கண் விழித்துக்கொண்டு எப்படி அப்படி இருந்தார் என்பது தெரியவில்லை.   அவருக்கு இரவும் தெரியவில்லை பகலும் தெரியவில்லை.  ஆயிரம் முறை எனக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்பார்.

                                                                                                                                             **********

நேற்று விருட்சம் 101வது இதழ் வெளியீட்டு விழா என்று அறிவித்திருந்தேன். ஒவ்வொரு நாளும் எதாவது ஒன்றை ஆரம்பித்து புத்தகக் காட்சி சாலையில் நடத்த வேண்டுமென்று என் திட்டத்திற்கு குவிகம் நண்பர்கள் வரவேற்றார்கள்.  அவர்கள்தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.  முதல்நாள் கூட்டத்தில் 101வது இதழ் வெளியீட்டு விழா.  எனக்கு பல எழுத்தாளர்கள் நண்பர்கள்.  அவர்களில் சங்கரநாராயணன் அவர்களைக் கூப்பிட்டு இதழை வெளியிட அழைத்தேன்.  முன்னதாகவே யாரையெல்லாம் கூப்பிட்டு பேச அழைப்பது பற்றி என்ற பிரச்சினை ஆரம்பித்தபோது, நாம் யாரையும் இதற்காகக் கூப்பிட முடியாது.  புத்தகக் காட்சிக்கு யார் வருகைத் தருகிறார்களோ அவர்களை வைத்துத்தான் கூட்டம் நடத்த முடியும் என்பதைத் தீர்மானித்தேன்.  101வது இதழ் வெளியிட்டு விழாவிற்கு எழுத்தாளர் சங்கரநாராயணனை கூப்பிட்டுப் பேச அழைத்தேன்.  இது ஒரு சந்திக்கிற நிகழ்ச்சி.  சக எழுத்தாளர்களை மதிப்பது.  வாசகர்களை மதிப்பது என்பதுதான் இதன் நோக்கம்.

சங்கரநாராயணன் இருவாட்சி ஸ்டாலிலிருந்து வருவதற்கு தாமதமாகி விட்டது.  மணி 7க்கு மேல் போய்விட்டது.  என் இன்னொரு எழுத்தாள நண்பர் பா ராகவன்.  அவரைக் கூப்பிட்டு 101வது இதழை வெளியிட கேட்டுக்கொண்டேன்.  அவரும் ச சீ சிவக்குமாரும் வந்திருந்தார்கள்.  பா ராகவனை அவரிடம் விருட்சம் 101வது இதழைக் கொடுக்கச் சொல்லி பேசச் சொன்னேன்.  சில வார்த்தைகள் பா ராகவனும், ச சி சிவக்குமாரும் பேசினார்கள்.  இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், சங்கர நாராயணனும் வந்து விட்டார்.  அவரையும் 101வது இதழை வெளியிடச் சொன்úன்.  இதுபோல் இரண்டு முறை ஒரு பத்திரிகையை வெளியிட்டப் பெருமை விருட்சத்திற்குத்தான் உண்டு.

இந்தப் புத்தகக் காட்சியில் யார் எது பேசினாலும் அதன் தன்மை என்ன என்பதை ஆராய்வது என் வழக்கம்.  பா ராகவன் சொன்ன ஒரு கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  எந்தப் புத்தகமும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற கருத்தை.  இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  தமிழில் நாம் நினைப்பதை விட அதிகமாகவும் புதியதாகவும் பலர் எழுதிக்கொண்டு போகிறார்கள்.  எழுத்து என்பது ஒரு வெளிப்பாடு.  அந்த வெளிப்பாட்டை பலவித முறைகளில் பலரும் வெளிப்படுத்துகிறார்கள்.  அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்.

                                                                                         *********

இந்த முறை புத்தகக் காட்சியை ஒட்டி இன்னும் இரண்டு புத்தகங்களைக் கொண்டு வர முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.  ஆனால் அந்தப் புத்தகங்களும் வந்து விட்டன.   ஸ்ரீகுமாருக்கு என் நன்றி.  ஒரு புத்தகம் கநாசுவின் அவதூதர்.  இன்னொரு புத்தகம் நகுலன் அவர்களின் குருஷேத்ரம். நகுலனின் குருஷேத்ரம் ஒரு இலக்கியத் தொகுப்பு.  அவரால் மே 1968ல் கொண்டு வரப்பட்ட புத்தகம்.  அதை அப்படியே கொண்டு வர முயற்சி செய்து கொண்டு வந்துள்ளேன்.  423 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.300தான்.

கநாசுவின் நாவல்களை ஒவ்வொன்றாகக் கொண்டு வர வேண்டும் என்பது என் ஆசை.  அவருடைய ஆட்கொல்லி நாவலை கொண்டு வபந்தேன்.  அடுத்த நாவலாக அவதூதர் நாவலைக் கொண்டு வந்துள்ளேன்.   274 பக்கங்கள் கொண்ட அவதூதர் விலை ரூ.250தான்.

இன்று மாலை 5.30 மணிக்கு பெருமாள் முருகன் பெருந்தேவியின் வாயாடிக் கவிதைகள் என்ற புத்தகத்தை வெளியிட அதை ஸ்ரீகுமார் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.

கிருபானந்தனும் நண்பர்களும் விருட்சம் ஸ்டாலைப் பார்த்துக்கொள்கிறார்கள்.