நகுலனைப் பற்றி சில நினைவுக் குறிப்புகள்

முதன்முதலாக நகுலனைப் பற்றி எப்போது நான் தெரிந்துகொண்டேன். ஒருமுறை வைத்தியநாதனுடன் (தீவிர வாசகர், ழ, விருட்சம் இதழ்களில் கவிதைகள் அதிகம் எழுதியவர்)நான், ஆத்மாநாம், மூவரும் ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம். எனக்கு வைத்தியநாதனைத் தெரியும். அவருடைய கவிதைகள் சில ழ வில் அப்போது வெளிவந்து கொண்டிருந்தன. நான் அப்போது வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். கதை, கவிதைகள் எழுதத் தெரிந்தவன். ஆனால் தமிழில் தீவரத்தன்மை கொண்ட படைப்புகளை ஆர்வமாய் தேடிப் போய் வாசிப்பவன். என்னை தீவிர எழுத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமாகத்தான் வைத்தியநாதன் என்னை ஆனந்த் வீட்டிற்கு அழைத்து வந்தார். கூடவே எங்களுடன் வந்துகொண்டிருந்த ஆத்மாநாமிடம் என்னை அறிமுகப் படுத்தினார்.
ஆனந்த் வீட்டிற்கு வந்தவுடன், வைத்தியநாதன் சொல்லியபடி, ஆனந்த் நாலைந்து ‘ழ’ வெளியீடு புத்தகங்களைக் கொடுத்தார். நான் மகிழ்ச்சியுடன் அவற்றை விலைக் கொடுத்து வாங்கினேன். ழ புத்தகங்கள் எல்லாம் விலை குறைவாக இருந்ததோடல்லாமல் நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தன. உயர்ந்த தாளில் அச்சிடப்பட்டிருந்தன. அதில் ஒரு புத்தகம், ‘கோட் ஸ்டான்ட் கவிதைகள்’. அதை எழுதியவர் நகுலன். அப் புத்தகம் தயாரிப்பு முறையும், அதை அச்சிடப் பயன்படுத்திய தாளையும் கண்டு நான் வியந்து போனேன். ‘காகிதத்தில் கோடு’ என்ற ஆத்மாநாம் புத்தகத்தில் அவருடைய கையெழுத்தையும் வாங்கி வைத்துக்கொண்டேன்.
நகுலன் இந்தப் புத்தகம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமாகிறார். அவருடைய கவிதைகள் படிப்பதற்கு எளிமையாக இருப்பதோடல்லாமல் ஆழமான உணர்வு அலைகளை எழுப்பாமல் இருக்காது.
இருப்பதற்கென்றுதான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்
என்ற வரிகளெல்லாம், மனதில் வேறு வேறு எண்ண அலைகளை எழுப்பாமல் இருப்பதில்லை.
நான் நகுலன் பெயர்கொண்ட புத்தகங்களையெல்லாம் வாங்கத் தொடங்கினேன். ‘க்ரியா’ என்ற புத்தக வெளியீடு அறிமுகமானபோது, நகுலனின் ‘நினைவுப் பாதை’ என்ற நாவலை வாங்கினேன்.
பொதுவாக நகுலனின் எழுத்துகள் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு எழுதிகிற எழுத்துகள். என்னால் முழுதாகவும் அவற்றைப் படிக்க முடிந்ததுமில்லை. ஏனெனில் மனதை அதிகமாக ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டவை அவருடைய படைப்புகள்.
அவருடைய படைப்புகள் மூலமாக அவரை நான் அறிந்துகொண்டாலும், விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோதுதான் நேரிடையாக எனக்கு அவருடைய தொடர்பு ஏற்பட்டது. அவர் படைப்புகளை அனுப்பும்போது, மறக்காமல் ஸ்டாம்பு, கவரெல்லாம் வைத்து அனுப்புவார். ஒரு குறிப்பும் எழுதி அனுப்புவார். ‘படைப்புகள் உங்களுக்குத் திருப்தியாக இல்லையென்றால் திருப்பி அனுப்பி விடுங்கள்,’ என்று. நான் அவர் எழுதிய படைப்புகளை திருப்பியே அனுப்ப மாட்டேன்.
ஒவ்வொரு விருட்சம் இதழையும் அவருக்கு அனுப்புவதில் அதிக ஆர்வம் காட்டுவேன். உடனுக்குடன் அவர் இதழ் குறித்து கருத்துக்களை ஒரு கார்டில் எழுதி அனுப்பி விடுவார். கார்டில் அவர் எழுத்தைப் படிப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கும். சிலசமயம் அவருடைய கையெழுத்து புரியும்படி நிதானமாக இருக்கும். சிலசமயம் புரியாமல் கிறுக்கப்பட்டிருக்கும். ஒரு சமயம் கார்டில் எனக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பினார் :
நில் போ வா
வா போ நில்
போ வா நில்
நில் போ வா?

என்பதுதான் அக் கவிதை. விருட்சம் இதழில் இந்த குறள் வழி கவிதையைப் பிரசுரம் செய்தேன். இது தரமான கவிதையா, பிரசுரம் செய்யப்பட வேண்டிய கவிதையா என்று கேட்டால், நான் பதில் சொல்ல மாட்டேன். நகுலன் எழுதியிருக்கிறார். அவர் எழுத்துக்களைப் பிரசுரம் செய்ய வேண்டியது, நான் மதிக்கும் எழுத்தாளருக்கு நான் கொடுக்கும் மரியாதை. இன்னும் சில படைப்பளாகளிடமும் நான் இதுமாதிரி நடந்து கொள்வேன்.
இக் கவிதை பிரசுரம் ஆனவுடன், இரு இடங்களிலிருந்து எதிர்ப்பு வந்தன. ஒன்று காஞ்சிபுரம் இலக்கிய நண்பர் வே நாராயணன் (காஞ்சிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியக் கூட்டங்களை நடத்தியவர். அபாரமான ஞாபகச் சக்தி கொண்டவர். கூட்டம் முழுவதும் யார் பேசினாலும் அதை மனதில் வாங்கிக் கொண்டு திருப்பிச் சொல்லும் தன்மை கொண்டவர்). எப்படி இக் கவிதையை விருட்சத்தில் புரசுரம் செய்தீர்கள்? அக் கவிதைக்கு என்ன அர்த்தம் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? என்று கேட்டு எழுதியிருந்தார்.
நான் அக் கடிதத்தை நகுலனுக்கு அனுப்பியிருந்தேன். அவர் இரண்டு பக்கங்களுக்கு விளக்கம் கொடுத்து பதில் அனுப்பினார். அதையும் விருட்சத்தில் பிரசுரம் செய்தேன்.
எதிர்த்தவர்களில் இன்னொருவர் பிரமிள். நகுலனின் இந்தக் கவிதையை ஏன் பிரசுரம் செய்தீர்கள்? இது கவிதையா என்ற கேட்டார். ‘விருட்சம்’ இதழில் அரைப்பக்கம்தான் இக் கவிதை வந்திருக்கிறது. வந்தால் என்ன?’ என்றேன். ‘ஒரு சிறு பத்திரிகையின் அரைப் பக்கத்தில் பிரசுரம் விஷயம்கூட முக்கியம் உமக்கு இதெல்லாம் தெரியாதா?’ என்றார் பிரமிள்.
பிரமிள் இதைச் சாதாரணமாகப் பேசிவிட்டு விட்டுவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அபத்தக் கவிதைகள் என்ற பெயரில் அவர் ஏராளமான கவிதைகள் எழுதியிருந்தார்.
அதில், ‘எந்துண்டி வஸ்தி?’ என்ற கவிதையில்,
‘நில் போ வா’
என்பதை எழுதிக் கீழே
கையெழுத்து வைத்து
அனுப்பினார் சகா
தேவனின் சகோ
தர நாமி
இதைக் கவிதை என்று
போட்டுவிட்டது தன் இலையிலே ‘மரம்’
‘இதையே எழுதியது யாரோ
ஏழுமலை ஆறுமுகம் என்றால்
‘மர’ இலையில் வருமா இது?” என்றேன்.
பதில் இல்லை இன்னும்.
இப்படி ஒரு கவிதை பிரமிள் எழுதியிருக்கிறார் என்பது அது புத்தகமாக வரும்போதுதான் தெரியும்.
நகுலன் ஒவ்வொரு முறையும் சென்னை அசோக்நகரில் உள்ள அவருடைய இளைய சகோதரர் வீட்டிற்கு வருவார். அப்படி வரும்போது மேற்கு மாம்பலத்தில் உள்ள என் வீட்டிற்குத் தகவல் தராமல் இருக்க மாட்டார். அவர் சென்னையில் இருக்கும்போதெல்லாம் அவரை அடிக்கடி சந்திப்பது என் வழக்கம். ஏன் தினமும்?
சிலசமயம் அவர் ஊரிலிருந்து வந்தபிறகு, அவர் சகோதரருடன் என் வீட்டிற்கு வருவார். அவரால் தனியாக வர முடியாது. கூடவே அவருடைய சகோதரரை அழைத்துக்கொண்டு வருவார்.
யாராவது அவருக்குத் துணை வேண்டும். அவர் வரும் சமயத்தில் நான் தட்டுப்படவில்லையென்றால், என் தந்தையாருடன் பேசிக்கொண்டு இருப்பார். ஹோமியோபதி மருந்துகளைப் பற்றி என் தந்தை சொல்வதை புதிதாகக் கேட்பதுபோல ஒருவித மரியாதையுடன் நகுலன் கேட்பார். அவர் சகோதரர் என் வீட்டில் விட்டுவிட்டுப் போய்விடுவார்.
நான் நகுலனைப் பார்த்துவிட்டால் நேரம் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பேன். என்னைப் பார்த்து, “நீங்கள் இவ்வளவு தூரம் எல்லாருக்கும் உதவியாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களைப் பற்றி யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பது சரியில்லை,” என்பார்.
‘யாருடனும் இல்லை’ என்ற என் கவிதைத் தொகுதியைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையை என்னால் மறக்க முடியாது. பொதுவாக நகுலன் வரும்போது, நான் புதிதாக எழுதிய கவிதைகளைக் காட்டுவேன். அவர் சிரத்தையுடன் படித்துவிட்டு, அதில் உள்ள பிரச்சினைகளைக் குறிப்பிடுவார். சில கவிதைகளைப் படித்துவிட்டு, வரிகளை மாற்றினால் நன்றாக இருக்குமென்று குறிப்பிடுவார். சில கவிதைகள் நன்றாக வந்திருப்பதாகவும் குறிப்பிடுவார். வேறு விஷயங்களையும் நாங்கள் பேசுவோம்.
ஒருமுறை நான் அலுவலகத்திற்குச் செல்வதற்காக மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஐராவதத்தைப் பார்த்தேன். நகுலன் வந்திருப்பதைக் குறிப்பிட்டேன். பின் இருவரும் அலுவலகம் போகாமல் நகுலனைப் பார்க்கச் சென்று விட்டோம்.
நகுலனுடன் பேசும்போது ஒருவருடன் ஒருவர் பேசுவதுபோல்தான் இருக்கும். ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவர். அவருக்கு ஆல்பர்ட் மூலம் பரிசு கிடைத்தது. அக் கூட்டத்திற்கு வந்த நகுலன், ரொம்ப கூச்சத்தோடு மேடையில் அமர்ந்திருந்தார். கூட்டத்துடன் நின்று பரிசு வாங்க எழுந்துகூட வர வெட்கப்பட்டார். ஆனால் மேடையில் தோன்றுவதையே பிரதானமாக விளம்பரப் பிரியராக ஒரு வங்கியின் தலைவர் இருந்தார். அவர்தான் அக்கூட்டத்தை நடத்த நன்கொடை கொடுத்திருக்கிறார். அவர் நகுலன் பக்கத்தில் அமர்ந்தும் அவருக்கு நகுலன் யார் என்பது தெரியாது. ஒருவரை ஒருவர் பார்த்தும் பேசாமல் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள்.
நகுலனை அவர் சகோதரர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போவேன். நடந்துதான் போவோம். அவர் சகோதரர் வீட்டிற்குப் போவதற்குள், பல முறை ‘இந்த வழியாகத்தானே உங்கள் வீட்டிலிருந்து வந்தோம்,’ என்று கேட்காமல் இருக்க மாட்டார். ‘ஆமாம்,’ என்று பலமுறை நான் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அவர் தனியாக எங்கும் போகமாட்டார்.
ஒரு சமயம் நகுலனின் திருவனந்தபுர நண்பர் காசியபன் மையிலாப்பூரில் இருந்தார். ‘அவரைப் போய்ப் பார்க்கலாமா?’ என்று கேட்டேன். காசியபனும் அவர் வந்ததை அறிந்து பார்க்க ஆசைப் பட்டார்.
“என் வண்டி பின்னால் அமர்ந்து கொள்ளுங்கள்,” என்றேன்.
நகுலன் மறுத்து விட்டார். “பஸ்ஸில் போகலாம் வாருங்கள்,” என்றேன். அதற்கும் மறுத்துவிட்டார்.
“ஆட்டோவில் போகலாம்,” என்றேன்.
“அவ்வளவு பைசா செலவு செய்ய முடியாது. வேண்டுமானால் காசியபன் என்னை வந்து சந்திக்கட்டும்,” என்று கூறி விட்டார்.
கடைசிவரை அவர் காசியபனை பார்க்கவே இல்லை.
மிகக் குறைந்த பக்கங்களுடன் அவருடைய புத்தகமொன்றை கொண்டுவர நினைத்தேன். ‘இரு நீண்ட கவிதைகள்’ என்ற புத்தகம் அப்படித்தான் உருவானது. நான் வங்கியில் இருந்தபடி பத்திரிகை நடத்துவதால், புத்தகம் போட எனக்குப் பணத் தட்டுப்பாடு இருக்கும். அதனால் நானும், நகுலனும் சேர்ந்து அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தோம். பாதி நானும், பாதி நகுலனும் செலவு செய்தோம். பொருத்தமே இல்லாமல் புத்தகத்தில் நகுலன் வரைந்த ஓவியமும் இருக்கும். புத்தகம் வந்தபிறகு வழக்கம்போல் கவிதைப் புத்தகம் விற்கவில்லை. பொதுவாக நம் தமிழ் தீவிர சூழ்நிலையில் கவிதைப் புத்தகத்திற்குக் கொடுக்கும் அலட்சியம்போல் வேறு எந்தப் பிரிவு நூலிற்கும் இருக்காது. ஆனால் நகுலன் தான் போட்ட பணத்தை உடனடியாகக் கேட்க ஆரம்பித்து விட்டார். ஏனெனில் அவர் இதற்கு முன்னால் பலரிடம் புத்தகம் போட பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார். நான் அவர் பணத்தை ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து கொடுத்து சரி செய்தேன்..
இன்னும் கூட விற்காத புத்தகப் பிரதிகள் என்னிடம் இருக்கிறது. விலை ரூ.12/-தான். நகுலனை திருவனந்தபுரத்தில் ஒருமுறையாவது போய்ப் பார்க்க வேண்டுமென்று நினைப்பேன். ‘நான் உங்கள் ஊருக்கு வந்து உங்களைப் பார்க்க வேண்டும்,’ என்று ஒருமுறை குறிப்பிட்டேன். உடனே, நகுலன்,”நீங்கள் என் வீட்டிற்கு வந்து தங்க முடியாது,” என்று குறிப்பிட்டார்.
அவருக்கு ஏனோ புரியவில்லை. நான் அவரைப் பார்க்க வந்தாலும், அவர் வீட்டில் வந்து தங்க மாட்டேன் என்பது. ஏனோ திருவனந்தபுரம் போய் அவரைப் பார்க்கவே இல்லை. வழக்கமாக அவருக்குப் பத்திரிகை/புத்தகம் அனுப்பிக் கொண்டிருப்பேன். ஒருமுறை அவர் எனக்குக் கடிதமொன்று எழுதியிருந்தார்.
16.12.1996-ல் அவர் எழுதிய கடிதத்தை இங்கு குறிப்பிட்டு முடிக்கிறேன்.
நண்பருக்கு,
வணக்கம். எனக்கு இம்மாதம் 12.12.96தான் பென்ஷன் கிடைத்தது. எனவே மையம் சந்தாவை இன்றுதான் அனுப்ப முடிந்தது. நான் உடல் மனம் சோர்வுற்று மிகத் தளர்ந்த நிலையில் இருக்கிறேன். இனி எனக்கு மையமோ வேறு பத்திரிகைகளோ புஸ்தகங்களோ அனுப்ப வேண்டாம். உங்கள் யாருடனும் இல்லை என்ற புத்தகத்தை அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு காலமான என் சகோதரியிடம் கொடுத்துவிட்டேன். அதுவும் என் கையில் இல்லை. இனியும் எழுதவேண்டாம் என்ற நிலையில் யாராவது வந்து எழுதுங்கள் என்று துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கு 75-ஆவது தொடங்கிவிட்டது. வெகு விரைவில் காலமாகிவிட்டால் என்ற நிலை. உடல்-மன உளைச்சல்கள் அவ்வாறு.
உங்களுக்கு நாய்களற்ற வீதிகள் என்ற கவிதைத் தொகுதி கிடைத்ததா?
உங்கள் தகப்பனாருக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லவும். என்னவோ இருந்து கொண்டிருக்கிறேன்.
அன்புடன்
“நகுலன்”

மேலே குறிப்பிட்ட கடிதத்தை நகுலன் அனுப்பிய பிறகு, நான் புத்தகங்களையோ பத்திரிகைகளையோ அனுப்புவதை நிறுத்தி விட்டேன். பிறர் மூலமாகத்தான் எனக்கு நகுலனைப் பற்றி தெரியும். நீல பத்மநாபனுடன் பேசும்போது, நகுலனைப் பற்றி விஜாரிக்காமல் இருக்க மாட்டேன். கடிதத்தில் குறிப்பிட்டபடி அவர் மரணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாரென்று நினைக்கிறேன்.

வைரமோதிரம்

தாம்பரத்திலிருந்து வரும் போக்குவரத்து வண்டியில்தான் அந்தப் பெண் குரோம்பேட்டையில் ஏறிக்கொண்டாள். முகமெல்லாம் மிணுமிணுக்க புத்தாடை அணிந்திருந்தாள். கண்களில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவள் உடை உடுத்தியிருக்கும் விதத்தை பஸ்ஸில் இருந்த சிலரும் ரசித்துக்கொண்டி ருந்தார்கள். இடது கை மோதிர விரலில் வைர மோதிரமொன்றை அணிந்திருந்தாள். தாங்க முடியாத ஜ்வலிப்புடன் அது காட்சி அளித்துக்கொண்டிருந்தது.
வைரமோதிரத்தின் ஜ்வலிப்பு அவள் நிறத்தை இன்னும் மெருகூட்டிக் கொண்டிருந்தது. அவளுக்குப் போனவாரம்தான், திருமணம் நிச்சயம் ஆனது. அந்தச் சந்தோஷத்தை அவளுடைய வகுப்புத் தோழி ஒருவளுடன் பகிர்ந்துகொள்ளத்தான் குரோம்பேட்டையிலிருந்து தி.நகர் வரைச் செல்லும் வண்டியில் புறப்பட்டுச் சென்றுகொண்டிருக்கிறாள். தி நகரில் இருக்கும் அவளுடைய நெருங்கிய தோழி என்ன காரணத்தாலோ அவள் திருமணம் நிச்சயம் செய்த நாளன்று வர முடியவில்லை.
பையில் கல்யாண நிச்சயம் ஆன புகைப்பட ஆல்பமும், ஒரு சீடியும் வைத்திருக்கிறாள். புறப்படும்போது அம்மாவிடம் அடுத்தநாள் வருவதாகச் சொல்லியிருந்தாள்.
பல மாதங்கள் முயற்சி செய்து இந்த வரன் கிடைத்ததால், அவள் அம்மாவிற்கும் மகிழ்ச்சி. அவளைப் போகும்படி சொன்னாள்.
பஸ்ஸில் பெரிய கூட்டம் இல்லாவிட்டாலும், கூட்டமே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.
அவள் இருந்த இருக்கையில் அவள் மட்டும்தான் அமர்ந்திருந்தாள். பஸ் நேராகப் பல்லாவரத்திற்குப் போய் நின்றது.
வயதான மூதாட்டி ஒருவள் ஏறி இவள் பக்கத்தில் அமர்ந்தாள்.
மூதாட்டியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. 75 வயதுக்கு மேலிருக்கும். இந்த வண்டியில் கிளம்பி எங்கே சென்று கொண்டிருக்கிறாளோ?
“உன் பேரென்னம்மா?” என்றாள் மூதாட்டி, அவளைப் பார்த்து.
“சுமதி.”
“புதுப்பெண் மாதிரி இருக்கியே?”
“ஆமாம்.”
“அப்படியா..நல்ல விஷயம். வாழ்த்துகள். எப்பக் கல்யாணம்?”
“செப்டம்பர் மாதம்.”
“மாப்பிள்ளை என்ன செய்யறார்?”
“சாஃப்ட்வேர் கம்பெனியில இருக்காரு?”
“நல்ல சம்பளமா?”
“உம்….உம்…”
“நீ என்னப் படிச்சிருக்கே?”
“பிசினஸ் மேனேஜ்மென்ட்.”
“வேலைக்கு எதுவும் போகலையா?”
“வேண்டாம்னு சொல்லிட்டார்.”
“ஏன்? இரண்டு பேர் சம்பாதிச்சா நல்லதுதானே?”
“நான் ஒருத்தன் சம்பாதிக்கிறது போதும்னு
“நான் ஒருத்தன் சம்பாதிக்கிறது போதும்னு சொல்லிட்டார். காலையில போனா ராத்திரிதான் அவர் வருவார். அப்ப வீட்டில மனைவின்னு யாராவது இருக்கணும்.”
“டெய்லி நீ அவரோடு பேசறியா?”
“தினம் இரண்டு மணி நேரம் பேசறோம்.”
“யார் செலவு?”
“அவர் செலவுதான்.”
“பரவாயில்லை. அந்தக் காலத்துல நாங்களெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் கூடப் பாத்துக்க முடியாது.”
“கையில என்ன? வைர மோதிரமா?”
“ஆமாம். அவர் வீட்டில போட்டது. போன புதன்கிழமைதான் எங்க பெட்ரோத்தல் நடந்தது. அன்னிக்குப் போட்டது?”
“பணக்காரர்களா?”
“மிடில் க்ளாஸ்.”
வண்டி மெதுவாக இன்னும் சில இடங்களில் நின்று நின்று போய்க்கொண்டிருந்தது. சுமதி தன் கற்பனையில் மூழ்கத் துவங்கிவிட்டாள். மூதாட்டியுடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டு, ஷ்யாமுடன் இன்று என்ன பேசலாமென்ற யோசனைக்குச் சென்று விட்டாள். வயது அதிகம் காரணமாக மூதாட்டியும் சற்றுக் கண் அயர ஆரம்பித்தாள்.
கற்பனை வேகத்தில் சுமதி தன் நினைவே இல்லாமல்தான் இருந்துகொண்டிருந்தாள். ஷ்யாம் தன்னைப் பெண் பார்க்க வந்ததும், பிறகு இருவரும் தனி அறையில் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்ததும் ஒரு கனவுபோல் அவளுக்குத் தோன்றியது. ஷ்யாம் வீட்டில் விருப்பம் தெரிவித்துப் போன் செய்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அவளுக்கு மட்டுமல்ல. அம்மாவிற்கும். ஷ்யாமைப் போனில் கூப்பிட்டு “தாங்ஸ்+ சொன்னாள்.
யாரோ அவசரம் அவசரமாக பஸ்ஸிலிருந்து இறங்குவது போலத் தோன்றியது. அப்போது லேசாகத் தன்னை இடித்துக்கொண்டு யாரோ சென்றதுபோல் தோன்றியது.
“ஷ்யாம் உண்மையிலேயே ஒரு லட்சணமான பையன்.”
மூதாட்டி திடீரென்று விழித்துக்கொண்டாள். சுமதியைப் பார்த்து, “ஒரு கெட்ட சொப்பனம்,” என்று கூறியவள், “ஹோ,” என்று அலற ஆரம்பித்தாள்.
சுமதி பதட்டத்துடன்,”என்ன?” என்று கேட்டாள்.
“உன் வைர மோதிரம்,” என்றாள் மூதாட்டி சத்தத்துடன்.
சுமதி தன் விரலைப் பார்த்து, மூர்ச்சை ஆகி விழுந்து விட்டாள். அவள் விரல் அறுந்து சீட்டுக்குக் கீழே கிடந்தது. அதிலிருந்த வைர மோதிரத்தைக் காணவில்லை. துண்டுப்பட்ட விரலிலிருந்து ரத்தப் பெருக்கு ஓடிக்கொண்டிருந்தது.
(‘ராம் காலனி’ என்ற சிறுகதைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்ட கதை. விருட்சம் வெளியீடாக வந்துள்ள அப்புத்தகத்தின் விலை ரூ.60)

புட்டா சுந்தரசாமியின் சென்னை விஜயம்

பெங்களூரிலிருந்து வந்திறங்கினார்
புட்டா சுந்தரசாமி
எங்களூருக்கு.
ஹஸ்தினாபுரம் கிளையை
ஒரு கலக்கு கலக்க ஏபிஎம் ஆக.
பாதி கன்னடம், பாதி தமிழ்
எல்லோரும் அரைகுறை ஆங்கிலத்தில்
அவருடன் உரையாடுவோம்

ஏறக்குறைய என் வயது
அவரைப் போல தோற்றத்தில்
முன் வழுக்கையோடு
உயரம் சற்று கூடுதலாக
இன்னொருவர் இருக்கிறார் எங்கள்
அலுவலகத்தில்

வியாதிகளிலே எங்கள் இருவருக்கும்
பொதுத் தன்மை உண்டு

குடும்பத்தினரை விட்டு விட்டு
தனிமை வாசம்
அதுவே தனி விசாரம்
தற்போது இருக்குமிடம்
பெரும் குழப்பம்
மாதம் ஒன்று ஆகப் போகிறது
தங்கும் இடம் தேடி தேடி
தளர்ந்து போகிறார் புட்டா சுந்தரசாமி

தினம் தினம்
எங்களில் ஒருவரோடு
வீடு தேடும் படலம்
பார்க்கும் வீடெல்லாம்
ஏனோ கோணலாய்த் தெரிகிறது
வசதியாய் பங்களுரில் இருந்தவருக்கு
வாழுமிடமெல்லாம் நரகமாய்த் தெரிகிறது

நீண்ட கூடம்போன்ற
அறை இருந்தால் வாடகை
மலைக்க வைக்கிறது
கொஞ்சம் மிச்சம் பிடித்து
வீட்டிற்கும் பணம் அனுப்ப வேண்டுமென்று
நினைக்கிறார் பாவம் புட்டா சுந்தரசாமி

அலுவலகத்திற்கு எதிரே ஒரு இடம்
இருந்தது. போய்ப் பார்த்தார்
இடமும் பிடித்திருந்ததுஆனால்
இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமாம்
பாத்ரூமையும், லெட்ரீனையும்
கேட்டவுடன் மூக்கைப் பொத்தியபடியே வந்துவிட்டார்
புட்டா சுந்தரசாமி
நாற்றம் அவரைச் சூழ்ந்து கொண்டதோ

இன்னும் சில இடங்கள்
வாகாய் இல்லை
சுகாதார கெடுதலை தரும்
இடமெல்லாம் கண்ணில் பட்டு
வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க வைக்கிறது

ஒரு இடத்தில்
கொசுக்கள் தொல்லை அதிகம்
எதாவது சமயத்தில்
மழைப் பெய்தால்
பாம்புகள் நெளியுமாம்
போதுமடா புட்டா சுந்தரசாமி

தன் துயரங்களை
வெளிவாசலில் நின்றபடி
புகை ஊதியபடி
எல்லோரிடம் ஆங்கிலமும் தமிழும்
கலந்துரையாடியபடியே
அழுக்கு ரூம் ஒன்றில்
தற்காலிகமாகக் காலத்தைக் கழிக்கிறார்
புட்டா சுந்தரசாமி

கட்டாயம் சனிக்கிழமைகளில்
பங்களூருக்கு ஓடி விடுகிறார்
குடும்பத்தைப் பார்க்க..

எங்களூருக்கு வந்த பங்களூர்
ஏபிஎம் புட்டா சுந்தரசாமி படும்பாட்டைப் பார்த்தீரா?

ஆதிமூலம், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ்……



டந்த சில மாதங்களாகத் தொடர்ந்து நிகழ்ந்த மூவரின் மறைவு என்னைப் பெரிதும் நினைக்கும்படி தூண்டிக் கொண்டிருந்தது. ஒருவரின் மறைவு, ஒருவரைப் பற்றிய என் மனதில் தோன்றிய வரைபடமாக என்னை அடிக்கடி நினைக்கத் தூண்டி, ஒருவிதத்தில் என்னைச் சங்கடப்படுத்தியது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குமுன், நவீன விருட்சம் தொடக்கக் காலத்தில், ஆதிமூலம், மருது போன்ற ஓவியர்களைச் சந்தித்திருக்கிறேன்.பழகுவதற்கு அற்புதமானவர்கள்.
ஆதிமூலமும், மருதுவும் தேனாம்பேட்டையில் அரசாங்க அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் பார்த்திருக்கிறேன். ஆதிமூலம் பழகுவதற்கு எளிமையான மனிதராகவும், கம்பீரமான மனிதராகவும் எனக்குத் தோற்றம் தருவார். எனக்கு அவரிடம் அளவுகடந்த மரியாதை உண்டு. சத்தமாகவே பேச மாட்டார்.
விருட்சம் முதல் இரண்டு இதழ்கள் வெளிவந்தபோது, எனக்கு அவரிடமிருந்து விருட்சம் எழுத்தை கையால் எழுதி வாங்க வேண்டுமென்ற எண்ணம் உருவானது. அந்தச் சமயத்தில் நடந்த ஒரு ஓவியக் கூட்டத்தில் ஞானக்கூத்தனுடன் நான் சென்றிருந்தேன்.
அக் கூட்டத்தில்தான் ஆதிமூலத்தைப் பார்த்து விருட்சம் என்ற பெயரை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டேன். நான் கேட்ட விதமோ, கேட்ட சூழ்நிலையோ அவருக்குச் சங்கடத்தைத் தந்திருக்குமென்று நினைக்கிறேன். இதனால் அவர் மறுத்துவிடுவார் என்றும், கேட்ட விதத்தால் கோபத்துடன் எதாவது சொல்வாரென்றும் நினைத்தேன். ஆனால் அதற்கு நேர் மாறாக, கேட்ட சில நிமிஷங்களில் எனக்கு விருட்சம் எழுத்தை வரைந்து கொடுத்துவிட்டார். அவர் கையால் வரைந்த விருட்சம் எழுத்துக்கள்தான் இன்னும் தொடர்ந்து அட்டையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் எத்தனையோ உதவிகளை அவர் மூலம் நிறைவேற்றியிருக்கிறேன். முதன் முதலில் ஸ்ரீனிவாஸனின் கவிதைத் தொகுதியை விருட்சம் வெளியீடாகக் கொண்டுவந்தேன். ஆதிமூலம்தான் அதற்கு ஓவியம். ஸ்ரீனிவாஸன் மீது அளவுகடந்த அன்பு அவருக்கு. உடனே ஸ்ரீனிவாஸன் கையெழுத்தை வைத்து ஒரு அட்டைப் படம் தயாரித்துக் கொடுத்தார். அந்தப் படத்தை வைத்துத்தான் புத்தகமே வந்தது. அதைத் தரும்போது, ஸ்ரீனிவாஸனைப் பற்றி ரொம்பவும் உயர்வாகவும், சீனு என்று உரிமையாகவும் அவர் உச்சரித்தது என் ஞாபகத்தில் இருக்கிறது.
பழகுவதற்கு அற்புதமான மனிதர் ஆதிமூலம், உலகளவில் போற்றுகின்ற ஒரு ஓவியர், எந்தவிதப் பந்தாவும் இல்லாமல, பழகுவது என்னைப் பொறுத்தவரை ஆச்சரியமான விஷயம். அதற்குக் காரணமாக நினைப்பது, சிறுபத்திரிகை சூழல். அன்றைய சிறுபத்திரிகைச் சூழலில் தங்களையும் வெளிப்படுத்திக்கொண்ட ஓவியர்கள் பலர். அதில் ஆதிமூலம் முக்கியமானவர். அவருடைய காந்தி ஓவியம் இன்னும்கூட மறக்கமுடியாத ஒன்று.
விருட்சம் மூன்றாவது இதழ் வரும்போது, க. நா. சு. இறந்துவிட்டார். அந்த இதழ் அட்டைப் படத்தை அலங்கரித்த ஆதிமூலம் வரைந்த க.நா.சுவின் ஓவியம்தான் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது. என்னால் மறக்க முடியாத ஓவியத்தில் அதுவும் ஒன்று. ஆதிமூலமும் சரி, மருதுவும் சரி, விருட்சம் இதழிற்காகப் பல ஓவியங்களை மனமுவந்து நன்கொடையாக அளித்திருக்கிறார்கள்.
ஞானக்கூத்தனின் ‘கவிதைக்காக’ என்ற புத்தகத்திற்காக ஆதிமூலம் அவர்களைச் சந்தித்தேன் ஞானக்கூத்தனுடன். அன்று பொங்கல் தினம் என்று நினைக்கிறேன். ஆதிமூலம் அவருடைய பல ஓவியங்களைப் பார்க்கும் சந்தர்ப்பமும், பாக்கியமும் எனக்குக் கிட்டியது. அன்போடு வரவேற்று உபசரித்ததோடல்லாமல், சாப்பிட்டுப் போகும்படியும் சொன்னார்.
ஞானக்கூத்தன் கவிதைகள் எல்லாம் சேர்த்து ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தைத் தொகுத்து அதன் வெளியீட்டு விழா நடத்தும்போது, ஆதிமூலம் அவர்களின் 60வது வயது விழாவும், சா. கந்தசாமியின் சாகித்திய அக்காதெமி விருதுப் பெற்றதையும் சேர்த்து மூவர் விழாவாக விருட்சம் சார்பில் கொண்டாடினோம். அவ்விழாவிற்கு பேரறிஞர் சிவத்தம்பி, அனிதா ரத்னம், நடிகர் கமல்ஹாசன் போன்றவர்கள் வந்திருந்து சிறப்பு செய்தார்கள். விருட்சம் நடத்திய அக் கூட்டத்திற்குப் பிறகு, நடிகர்கள் போன்ற பிரபலமானவர்களை அழைத்து இலக்கியக் கூட்டம் நடத்துவது வழக்கமாகிவிட்டது.
கம்பீரமான தோற்றம் கொண்ட எளிய சுபாவம் கொண்ட ஆதிமூலத்தின் மரணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர் மரணம் அடைந்தபிறகுதான், அவர் சில ஆண்டுகளாக ரத்தப் புற்று நோயால் அவதிப்படுகிறார் என்பதை அறிந்தேன். அந் நோயைக் கூட அவர் யாரிடமும் கூறவில்லை என்பதையும் அறிந்தேன். மரணத்தை முன்கூட்டியே அறிந்ததால், அவரிடமிருந்து மரணத்தைப் பற்றிய எந்த அசைவும் நிகழவில்லை என்பதோடல்லாமல், அதை பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டார் என்று நினைக்கிறேன். இன்னும்கூட ஆதிமூலம் இறந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு சாயலில் எனக்கு ஆதிமூலத்தைப் பார்க்கும்போது, சா கந்தசாமியையும், சா கந்தசாமியைப் பார்க்கும்போது, ஆதிமூலமும் ஞாபகத்திற்கு வந்து கொண்டிருப்பார்கள்.
ஆதிமூலம் மரணத்துடன் போராடவில்லை. வெற்றிகரமாக மரணத்தைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் சென்றுவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. ****************
சுஜாதாவை சென்னையில்தான் முதன்முதலாகச் சந்தித்திருக்கிறேன். கணையாழி கவிதைக் கூட்டத்தில், நான் படித்த கவிதைகளைப் பற்றி கருத்துக்களை உடனடியாக வழங்கினார். இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் நான் நடத்திய ஞானக்கூத்தன் கவிதைகள் கூட்டத்தில் கட்டுரை வாசித்தார். நான் அவர் வருவாரா என்று சந்தேகத்துடன் இருந்தேன். சுஜாதா எல்லார் பற்றியும், எல்லாவற்றைப் பற்றியும் எழுதிக் கொண்டிருப்பார். அவருடைய வேகம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் பங்களூரில் இருந்தபோதுகூட, பெரிய பதவியில் இருந்தும்கூட எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார். எல்லாப் பத்திரிகைகளும் அவர் எழுத்தை விரும்பி பிரசுரம் செய்யும். ஏன் அவரைக் கேட்டுக்கூட பிரசுரம் செய்யும். அவர் பெரிய பத்திரிகைகளில், சிறு பத்திரிகைகளைப் பற்றி தன் கருத்துக்களை எழுதாமல் இருக்க மாட்டார். ஒருமுறை அவர் குமுதம் பொறுப்பாசிரியராக இருந்தபோது, சிறுபத்திரிகையில் வெளிவந்த கவிதைகளை அதிகம் வெளியிட்டிருக்கிறார். அவருடைய தொடர்கதைகளில் என்னைப் பற்றியும், நவீன விருட்சம் பற்றியும் எழுதியிருக்கிறார். எனக்குத் தெரிந்து இவர் வேகத்திற்கு க.நா.சுவைத்தான் குறிப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் க.நாசு வேறு, சுஜாதா முழுக்க முழுக்க வேறு. இன்று சுஜாதாவைப் போல எழுத முயற்சி செய்பவர்கள் என்று ஒரு லிஸ்டே போடலாம்.
சுஜாதாவும் கநாசு மாதிரி ஒரு ஆண்டில் அவருக்குப்பிடித்த பல விஷயங்களைக் குறித்து லிஸ்ட் போடுவார். இந்த ஆண்டின் சிறந்த சிறு பத்திரிகை நவீன விருட்சம் என்று ஒருமுறை சுஜாதா குறிப்பிட்டுள்ளார். அவருடைய எந்த எழுத்தையும் பிரசுரம் செய்ய பத்திரிகைகளும் தயாராக இருந்தன. சுஜாதாவைப் பிடிக்காத இலக்கிய நண்பர்களும் எனக்குண்டு. அதே சமயத்தில் சுஜாதா எழுதும் எந்த எழுத்தையும் படித்து திரும்பவும் அப்படியே மனப்பாடமாகச் சொல்கிற நண்பர்களும் எனக்குண்டு. அவர் மரணம் இட்டு நிரப்ப முடியாத மரணம்தான்.
ஆழ்வார்பேட்டையில் அவர் வீட்டிற்கு எதிரில் இந்திரா பார்த்தசாரதி இருந்தார். இந்திரா பார்த்தசாரதியைப் பார்த்துவிட்டு, சுஜாதாவையும் பார்க்கச் செல்வேன். 406 சதுர அடிகள் என்ற என் சிறுகதைத் தொகுதியை சுஜாதாவைப் பார்த்துக் கொடுக்கச் சென்றேன். அப் புத்தகத்தைப் பற்றி எதிலாவது எழுதும்படி அன்புடன் கேட்டுக்கொண்டேன். என் புத்தகத்திற்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு வேண்டிக்கொண்டேன். காரணம் பத்திரிகைகளுக்கு மதிப்புரைக்காக புத்தகம் அனுப்பினால், புத்தகத்தைப் பற்றி யாரும் மதிப்புரை செய்வதில்லை. அதனால் ஒரு புத்தகம் வந்தால் அதைப்பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. இன்றும் கூட தமிழில் இந்த நிலை தொடர்ந்து நிலவுகிறது. இப்போதெல்லாம் யாரிடமும் புத்தகம் கொடுப்பதில்லை. சுஜாதா என் புத்தகத்தைப் பற்றி எழுதாமலில்லை. ஆனால், ‘அழகியசிங்கரே விரும்பிக் கேட்டக்கொண்டதால்.’ என்று எழுதிவிட்டார். எனக்கு அவர் அப்படி குறிப்பிட்டது சற்று வருத்தமாக இருந்தது.
பின் சுஜாதாவை அவர் நோய்வாய்ப்பட்டு மீண்ட ஒரு சமயத்தில் ரவி சுப்பிரமணியனுடன் மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் பார்த்திருக்கிறேன். ரொம்பவும் ஒடுங்கி போயிருந்தார். அவரால் நடக்கக் கூட முடியவில்லை. அதிகமாகப் புத்தகங்கள் அவர் வீடைத் தேடி வருவதாகவும், அதனால் புத்தகங்களை யாரும் அனுப்ப வேண்டாமென்று சொல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனந்த விகடனில் அவர் உடல்நிலையைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் மரணத்துடன் போராடி போராடியே வெற்றி பெற்றிருக்கிறார். இறுதிவரை மரணத்துடன் சண்டைப் போட்டவர் சுஜாதா. மரணம் கடைசியில் அவரை வென்றது. ***************
ஸ்டெல்லா புரூஸ் எனக்கு காளி-தாஸ், ராம் மோஹன் என்ற பெயரில்தான் முதன்முதலாக அறிமுகம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், கடற்கரையில், ராம் மோஹன், வைத்தியநாதன், ராஜகோபால், ஆனந்த், ஸ்ரீனிவாஸன், ஞானக்கூத்தன் என்று பட்டாளமே சேரும். முதன் முதலில், அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு ஆர்வமுள்ளவனாகவே இருந்திருக்கிறேன். அவர்கள் பேசுவதைக் கேட்பேனே தவிர, வாய்த் திறந்து நான் பொதுவாக அதிகமாகப் பேச மாட்டேன். கவிதைகள் குறித்தும், உலக நடப்புக்களைக் குறித்தும் அதிகமாகவே பேசியிருக்கிறோம்.
ஸ்டெல்லா புரூஸ் தி.நகரில் ஒரு அறை வாசியாக பூங்கா மேன்சன் ஒன்றில் குடியிருந்தார். அப்போது எனக்கு அவரைப் பற்றிய ஒரு பிரமிப்பு எப்போதும் இருக்கும். எந்த வேலைக்கும் போகாமல், தனக்கென்று பெரிய எதிர்ப்பார்ப்பின்றி சேமிப்பிலிருந்து மிகக் குறைவான செலவில் சிக்கனமாகச் செலவு செய்துகொண்டு வருபவர் அவர். புத்தகங்களைப் பற்றியும், தனக்குப் பிடித்த மனிதர்களைப் பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார். பெரும் பத்திரிகையில் குறிப்பாக ஆனந்தவிகடனில் அவருடையதொடர்கதைகள் வெளிவந்தவுடன், அவருக்குப் பல தொடர்புகள் ஏற்பட்டன. முதலில் வாசகியாக இருந்த ஹேமா அவருடைய மனைவியாக மாறினார்.
அறை வாசியாக இருந்த அவர், தனியாக வீடு பார்த்து குடும்பம் நடத்த ஆரம்பித்தார்.எளிமையான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அவருடையது.
விருட்சம் ஆரம்பித்த சமயத்தில் உள்ள நிலை வேறு; இப்போதைய நிலை வேறு. இந்தக் காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திப்பது என்பது குறுகிப் போய்விட்டது. ஏன் பேசுவதுகூட நிகழாமல் போய்விடுகிறது.
ஸ்டெல்லா புரூஸின் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நண்பர்கள் வட்டமும் மாறிப் போய்விட்டது. ஹேமா உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில், ஹேமா இல்லாத வாழ்க்கையை ஸ்டெல்லாபுரூஸ் நினைத்துப் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார். ஆனால் அவரால் வாழ முடியவில்லை. ஆன்மீகத்தில் தனக்கு ஏதோவொரு சக்தி வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு, நெற்றிமேடு என்ற பெயரில் அவர் பெரும்பாலும் யாராவது இறந்து போவதை மட்டும் குறிப்பிடுவார். ஒரு முறை அவருடன் பேசும்போது நான் கூட குறிப்பிட்டேன்: ‘ஏன் உங்கள் நெற்றிமேடு மரணத்தை மட்டுமே குறிப்பிடுகிறது,’ என்று.
ஸ்டெல்லாபுரூஸ் தவறுதலாகக் கருதிய ஆன்மீகம்தான் அவரை தற்கொலை செய்துகொள்ள தூண்டியதோ என்றும் தோன்றுகிறது. அவர் ஏற்கனவே பல தற்கொலைகளைச் சந்தித்திருக்கிறார். ஒரு முறை கடற்கரையில் ஒரு இளைஞன் மரத்தில் தொங்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சிததைப் பற்றி சொல்லியிருக்கிறார். ஏன் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டதுகூட கவனித்திருக்கிறார். அவர் உறவினர் கூட தற்கொலை செய்து கொண்டதைப் பற்றி எழுதியும் இருக்கிறார். அப்படிப்பட்டவர் தானே தற்கொலை செய்துகொள்வார் என்பதைத் துளியும் எதிர்பார்க்க முடியவில்லை.
ஆதிமூலம் மரணத்தைக் குறித்து எந்த முணுமுணுப்பும் இன்றி முழுக்க ஏற்றுக் கொண்டவர். சுஜாதாவோ மரணத்துடன் சண்டைப் போட்டு எதிர்த்து இறுதியில் வெற்றி கொள்ளமுடியாமல் தோல்வி அடைந்தவர். தானே மரணத்தைத் தேடி தழுவிக் கொண்டவர் ஸ்டெல்லாபுரூஸ்.
அழகியசிங்கர்
20.07.2008 at 10.25 pm

ஒரு வேண்டுகோள்


சமீபத்தில் 79-80-வது இதழ் கொண்டு வந்துள்ளேன். நவீன விருட்சம் என்ற இதழ் ஜூலை மாதம் 1988 ஆம் ஆண்டு கொண்டு வரும்போது, கவிதைக்கான இதழாக மாறிவிடுமா என்ற கேள்விக்குறி தொக்கி நின்றது. இன்றும் அதிகமாக கவிதைகளைப் பிரசுரம் செய்யும் இதழாக நவீன விருட்சம் திகழ்கிறது. வாசகர்கள் வட்டமும் சரி, இதழுக்காக ஆகும் செலவும் அதிகமில்லைதான். முதல் இதழ் தயாரிக்கும்போது எனக்கு ரூ.500 வரை செலவு ஆனாது. 16 பக்கம். (தபால் செலவு சேர்க்கவில்லை) இப்போது ஒரு இதழ் (100 பக்கம்) தயாரிக்க ரூ10000 மேல் ஆகிறது (தபால் செலவும் சேர்த்து).

இந்த இதழ் 79/80 இதழ்களின் தொகுப்பு. காலாண்டு இதழாகவே இதைக் கொண்டுவர வேண்டும் என்ற என் எண்ணம் இன்னும் பசுமையாக இருக்கிறது. இதழ் தயாரிக்க எனக்கு 6 மாத கால அவகாசம் ஆகிவிடுகிறது. ஆனால் இரண்டு நாட்களில் அச்சாகி விடுகிறது. பின் அதை அனுப்ப 3 வாரம் ஓடிவிடுகிறது. இப்போதுதான் எல்லோருடைய முகவரிகளையும் தயார் செய்து கொண்டு வருகிறேன்.

சந்தா கட்டுங்கள் என்று முன்பு கேட்டு கடிதம் எழுதுவேன். இப்போது ஏனோ முடிவதில்லை? இந்த ஏனோ ஏன் என்பதும் புரியவில்லை. தற்போது கம்புயூட்டரில் அடித்து அதை பிரிண்ட் எடுத்து எல்லோருக்கும் அனுப்பலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன். முதலில் விருட்சத்தை எல்லோருக்கும் அனுப்பிய பிறகுதான் உடனடியாக அந்தப் பணியைத் துவங்க வேண்டும்.

இந்த வலை மூலம் எல்லோரிடம் ஆண்டுச் சந்தா கேட்கலாம் என்று பலவாறு யோசித்தே இதை எழுதுகிறேன். 21ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ள நவீன விருட்சத்திற்காக ஆண்டுச் சந்தா ரூ 40 ஐ அனுப்புங்கள். இந்த இதழ் ரூ 20 தான். இதைப் பெற விரும்பும் வெளி நாட்டில் உள்ள அன்பர்கள் ரூ50 அனுப்புங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

NAVINA VIRUTCHAM
6/5 POSTAL COLONY FIRST STREET
WEST MAMBALAM
CHENNAI 600 033
INDIA

எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
அழகியசிங்கர்
12.07.2008

பெண்

கனவில் தெரிந்த பெண்ணொருவள்
நேரில் வரவில்லை
பலவாறு கற்பனையை
விரித்து விரித்துப் பார்த்தேன்
அவள் உருவம் மாறி மாறி தெரிந்ததே
தவிர எந்த மாதிரி அவள் என்று யூகிக்க முடியவில்லை
கனவில் தெரிந்தவள் மாதிரி
யாருமில்லை ஒருபோதும்
இன்னும் உற்றுப் பார்த்தேன்
மாறி மாறி அந்தப் பெண்போல
யாரும் தெரியவில்லை என்றாலும்
பெண்கள்
வேறு வேறு மாதிரியாகத்தான்
தெரிந்துகொண்டிருந்தார்கள்

தசாவதாரம்

தமிழ் சினிமாக்களை எப்போது பார்த்தாலும் நான் அது குறித்து எந்தவிதக் கருத்தையும் கூற மாட்டேன். அது நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்று என்னைச் சுற்றியிருப்பவர்கள் வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். நான் அதற்குள் போவதில்லை. மேலும் ரசிகர்களுக்கேற்ப படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் சமீபத்தில் வெளிவரும் தமிழ்ப் படங்கள் விதிவிலக்காக இருக்கின்றன. ஒவ்வொரு படமும் எதாவது ஒருவித பிரமிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்கள் தயாரிக்க ஆகும் செலவைக் குறித்து. நாமெல்லாம் சாதாரணமானவர்கள். மாதச் சம்பளத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள். தமிழ்ப் படங்கள் தயாரிக்கும் செலவைப் பற்றியும், அதற்காக தேவைப்படும் உழைப்பைப் பற்றியும் யாரால் என்ன சொல்ல முடியும்? விளையாட்டுத்துறை என்று எடுத்துக்கொண்டால் சச்சினைவிட, தோனி விளம்பரம் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கிறார். எல்லாம் கோடிதான். என் வாழ்க்கையில் கோடியை நான் பார்க்கவே முடியாது என்று நினைக்கிறேன். வேண்டுமானால் தெருக்கோடியில் போய் நிற்கலாம். ஒருபக்கம் இந்தியா வறுமைக்கோட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விலைவாசி ஏற்றத்தால் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தசாவதாரம் என்ற படத்தைக் குடும்பத்துடன் பார்த்தேன். 60 கோடி ரூபாய்க்குமேல் செலவாம். 33 ரூபாய் விலையுள்ள டிக்கெட்டில் ரூபாய் 60 என்று அச்சிட்டிருந்தார்கள். இரவு பத்துமணி படத்துக்குப் போயிருந்தோம். ஒரே கூட்டம். தியேட்டர் முழுவதும் நிரம்பி வழிந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்றெல்லாம் கூட்டம். இளைஞர்கள், இளைஞிகள் என்று தியேட்டர் முழுவதும் நிரம்பி வழிந்தது. எல்லோர் முகங்களிலும் சினிமா பார்க்கப் போகிற உற்சாகம்.

டெக்னாலஜி என்ற விஷயம் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதை இப்படத்தைப் பார்த்தால் நமக்குப் புரியும். பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த நவராத்திரி என்ற படத்தில் எல்லா வேஷங்களிலும் சிவாஜிதான் தென்படுவார். ஆனால் தசாவதாரத்தில் கமல்ஹாசன் எந்தந்த வேடங்களில் வருகிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. படத்தின் ஆரம்ப காட்சிகளிலிருந்து பல காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. மற்றபடி கதை என்று பெரிதாக இல்லை. இடைவேளை வரை உள்ள விறுவிறுப்பு பின்னால் கொஞ்சம் குறைந்து விடுகிறது. கமல்ஹாசனே கதை, வசனம் என்றெல்லாம் எழுதி உள்ளார். சாதாரண ஜனங்களுக்குக் கதை புரிவது சந்தேகமாக உள்ளது. சென்னை உதயம் தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தேன். முதல் சில காட்சிகளில் ஒலியே இல்லை. வழக்கம்போல ரசிகர்கள் ஊ…ஊ..ன்னு கத்தியபிறகு நிலமை சரியாயிற்று. தெலுங்கு போலீசாக வரும் கமல் பழைய நடிகர் பாலையா மாதிரி பேசுவதாகத் தோன்றியது. வித்தியாசமான நடிப்பு. சுனாமியைக் கொண்டுவருவதும், அமெரிக்க அதிபரை கதாபாத்திரமாக மாற்றுவதும் தமிழில் புதிய முயற்சி. ஆரம்ப காட்சியில் கமல்ஹாசன் பேசுவது சரியாகப் புரிபடவில்லை.

ஆனால் இப்படத்திற்கு ஆரம்ப முதல் இவ்வளவு எதிர்ப்பு ஏன்? வைணவத்திற்கும், சைவத்திற்கும் உள்ள எதிர்ப்பெல்லாம் இப்போது பெரிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஏன் இதை எதிர்க்க வேண்டும். என்ன இருந்தாலும் இது ஒருபடம் தானே என்று பார்க்க ஏன் முடியவில்லை.
தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய நடிகர்கள் தோன்றிகொண்டே இருப்பார்கள். ஒரு காலத்தில், சிவாஜி, எம்ஜியார். இப்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த். எனக்குத் தெரிந்து ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜியின் சிவந்தமண் என்ற படம். அப் படம் வெளிநாடுகளில் போய் எடுத்து அதிகமாக
ஸ்ரீதர் செலவு செய்தார். அந்தப் படத்தைவிட எம்ஜியார் நடித்த நம்நாடு என்ற படம் அதிகமாகப் பணம் சம்பாதித்துக் கொடுத்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுந்தரமூர்த்தி என்ற என் பள்ளிக்கூட நண்பன் ஒருவன், சிவாஜி ரசிகன். பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வின் போது வந்த சிவந்தமண் படத்தை 8 அல்லது 9 தடவைகள் பார்த்து, குறைந்த மதிப்பெண்கள் பெற்று பார்டரில் வெற்றி பெற்றான். அவன் கையெழுத்து பார்க்க அழகாய் இருக்கும். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரியாது.

22.06.2008
9.30மணியளவில்

இன்று உலகப் புத்தக தினம்

எல்லாக் குப்பைகளையும் தூக்கி
தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள்
என் புத்தகங்களைப் பார்த்து
மலைத்து நின்றாள்
என்ன செய்வதென்று அறியாமல்
பின் ஆத்திரத்துடன்
தெருவில் வீசியெறிந்தாள்
போவார் வருவார் காலிடற
புத்தகங்கள் சிதறிக் கிடந்தன தெருவெல்லாம்
ஒரு புத்தகம் திறந்தபடியே இருந்தது
அதிலுள்ள வரிகள் எல்லார் கண்களிலும்
படித்தவர்கள் சிரித்தபடியே சென்றனர்
எல்லார் முகங்களிலும் புன்னகை
நானும் ஆவலுடன்
மாடிப்படிக்கட்டிலிருந்து
தடதடவென்று இறங்கி
புத்தகத்தின் வரியை
ஒழுங்காய் நிலைகொள்ளாத
வேஷ்டியுடன் படித்தேன்
‘இன்று உலகப் புத்தக தினம்
இன்றாவது புத்தகம் படிக்க
அவகாசம் தேடுங்கள்’
நானும் சிரித்தபடியே
புத்தகத்தில் விட்டுச் சென்ற
வரிகளை நினைத்துக்கொண்டேன்
இடுப்பை விட்டு நழுவத் தயாராய் இருக்கும்
வேஷ்டியைப் பிடித்தபடி…..

விருட்சம் 80வது இதழ்

வணக்கம்.
இன்னும் சில தினங்களில், 80வது நவீன விருட்சம் வெளிவந்துவிடும். கிட்டத்தட்ட 100 பக்கங்கள். நவீனவிருட்சம் வெளிவந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் நவீனவிருட்சம் இதழை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொண்டுவர நினைப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை. எப்படியோ ஆறு மாதங்கள் ஓடிவிடுகின்றன. ஏன் இதழ் வந்து அதை எல்லோருக்கும் அனுப்புவதற்கு ஒரு மாதம் மேல் ஆகிவிடுகிறது. யாருக்கும் சந்தா கேட்டுக்கூட கடிதம் எழுதமுடிவதில்லை. பத்திரிகை போய்ச் சேர்ந்தால் போதும். அவர்களே பார்த்து அனுப்பினால் சரி என்ற நிலைக்கு வந்துவிட்டேன். ஒருசிலரைத் தவிர பெரும்பாலோர் பத்திரிகை சந்தா அனுப்புவதில்லை. சந்தா பெரிய தொகை இல்லை. ஆனால் அதை அனுப்புவதுதான் பெரிய விஷயமாக அவர்களுக்கு இருக்கும். தபால் அலுவலகத்திற்குப் போய் மணிஆர்டர் மூலம் 40 ரூபாய் அனுப்புவது என்பது பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது. ஏன்என்றால் நான் நவீனவிருட்சம் பத்திரிகையை தபால் அலுவலகத்தில் கொண்டு செல்ல பாடாதபாடு படுகிறேன். சரி, யார் மூலமாவது இந்தப் பணியைச் செய்ய சொல்லலாம். ஆனால் யாரும் இதுமாதிரி பணியைச் செய்யத் தயாராய் இல்லை. ஒரு முறை என் நண்பா மூலமாக நவீனவிருட்சம் இதழை அனுப்ப ஏற்பாடு செய்தேன். அவரும் கட்டுக்கட்டாக நவீன இதழை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அனுப்ப வேண்டிய முகவரிப் பட்டியலைக் கொடுத்தேன். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பியவர் ஒரு வாரமாக வரவில்லை. எனக்கோ பதைப்பு. அனுப்பி விட்டாரா என்பதை அறிய ஆவலாக இருந்தேன். ஆனால் நண்பரோ என்னைப் பார்க்கக் கூட வரவில்லை. பின் ஒரு நாள் வந்தார். வேறு எதோ பேசிக்கொண்டிருந்தோம். நானோ எப்படியாவது விருட்சம் பற்றி அவரிடம் கேட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் பேசிக்கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட நண்பர் பேசி முடித்துவிட்டார். வீட்டிற்குப் போக வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆவலை அடக்க முடியாமல் கேட்டுவிட்டேன். நண்பரோ சர்வ சாதாரணமாக, ” இன்னும் இல்லை. விருட்சம் அனுப்ப எனக்குத் தெரிந்த பசங்களை ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்…” என்றார. அந்த இதழை அனுப்புவதற்கும் ஒரு மாதம் மேல் ஆகிவிட்டது.
இப்படி ஒரு பத்திரிகையை அடித்து அனுப்பிக்கொண்டிருந்தால், யார் பத்திரிகைக்கு சந்தா அனுப்புவார்கள், யார் பத்திரிகைக்கு படைப்புகள் அனுப்புவார்கள். இந்த இதழுக்கு அசோகமித்திரனை கேட்டுக்கொண்டதன் பேரில் கட்டுரை எழுதி அனுப்பி உள்ளார். கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் ஆகியிருக்கும். நாகார்ஜுனன் எழுதி அனுப்பிய கட்டுரை 6 மாதம் மேல் ஆகியிருக்கும். யாரும் கடிதம் கூட அனுப்ப மாட்டார்கள். போன போகிறதென்று வல்லிக்கண்ணன், தி.க.சி போன்றவர்கள் அனுப்புவார்கள். இதழை அனுப்பியவுடன் கடிதம் எழுதி அனுப்பி விடுவார்கள். எனக்கோ அவர்கள் எழுதிய கடிதங்களை பத்திரமாக வைத்துக்கொண்டு அடுத்த இதழ் வரும்போது கடிதம் பகுதியில் சேர்க்க வேண்டுமென்று தோன்றும். சில சமயம் தொலைந்து கூட போய்விடும். இப்போது வல்லிக்கண்ணன் இல்லை. எனக்கு சில சமயம் என் பத்திரிகை யாருக்காவது போய்ச் சேர்ந்ததா என்பதை அறிய அவரிடம் வரும் கடிதம் மூலம் தெரியும். இனி வல்லிக்கண்ணன் இடத்தை யார் நிரப்புவார்கள்.
அழகியசிங்கர்இரவு 10.57 மணிஅளவில்

திருவனந்தபுரம்

கடந்த வாரம் முடிவில் (29 மே மாதத்திலிருந்து 2ஆம் தேதி ஜூன் வரை) சென்னையைவிட்டு, குடும்பம் சகிதமாக கொச்சின் சென்றோம். சனிக்கிழமை (30.05.2008)அன்று திருவனந்தபுரம் ஒருநாள் மட்டும் தங்கியிருந்தோம். ரயில்வே நிலையத்திற்கு அருகில் ஒரு ஓட்டலில் அறை எடுத்திருந்தோம். சுற்றிப் பார்ப்பதோடல்லாமல், நீல பத்மனாபனை பார்க்க நினைத்தேன். கூடவே அவரை அழைத்துக்கொண்டு நகுலன் வீட்டிற்கும் போக உத்தேசம் இருந்தது. அவருக்கு நான் வந்திருப்பதைச் சொன்னவுடன், என் உற்சாகம் ரொம்பவும் குறைந்துவிட்டது. அவரும் free ஆக இருக்கவில்லை.
அவரைப் பார்த்துவிட்டு, நகுலன் வீட்டைப் பார்க்கும் எண்ணத்தில், நான் மட்டும் ஒரு ஆட்டோ வில் நகுலன் வீடை மட்டும் போய்ப் பார்த்தேன்.
பொதுவாக ஒரு இடத்திற்கு வரும்போது, அங்கு எழுத்தாளர்கள் என்று யாராவது இருந்தால், பார்க்க வருகிறேன் என்று சொன்னால்,உற்சாகம் குறைந்த உணர்வே ஏற்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, நகுலனிடம், ‘உங்களைப் பார்க்க திருவனந்தபுரம் வருகிறேன்,’ என்று குறிப்பிட்டேன். கேட்டவுடன், ‘ஐய்யயோ..என் வீட்டில் தங்க முடியாது,’ என்று பதறினா஡. எனக்கோ என்னடா இது என்று தோன்றியது. நான் அவரைப் பார்க்க திருவனந்தபுரம் வருகிறேன் என்று சொன்னேனே தவிர, அவர் வீட்டில் தங்க வருவதாகச் சொல்லவில்லை. அப்படியே வந்தாலும், ஊரையும், அவரையும்தான் பார்க்க வருவதாகத்தான் அர்த்தம் ஆகும். ஒரு ஓட்டலில் அறை எடுத்துக்கொண்டுதான் அவரைப் பார்க்க முடியும். அதுவும் ஒருசில மணி நேரங்கள் மட்டும்தான் பேசவும் முடியும்.அவருடனே பேசிக்கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் போரடிக்கத் தொடங்கிவிடும்.அவர் அப்படிச் சொன்னதாலோ என்னவோ நகுலனைப் பார்க்க திருவனந்தபுரமே வரவில்லை.
நானே எதிர்பார்க்காதபடிக்கு இந்த முறை வந்தபோது நகுலன் இல்லை.இறந்து விட்டார். எனக்கோ அவர் வீட்டையாவது போய்ப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் இருந்து கொண்டிருந்தது.
நீல பத்மநாபன் சொன்னபடி அந்தத் தெருவின் முனையில் உள்ள கடையில் டி கே துரைசாமி வீடு எங்கே என்று கேட்டவுடன், அந்த இடத்தைச் சுட்டிக் காட்டினார் கடையில் இருந்த பெண்மணி.
நான் அவர் வீட்டிற்கு ஆட்டோ வில் போய்ப் பார்த்தபோது, இருட்டி விட்டது.இறங்கியவுடன் மழை. நனைந்தபடி அவர் வீட்டு கேட்டைப் பிடித்தபடி அவர் வீட்டைப் பார்த்தேன். ஓட்டு வீடாக இருந்தது. ஆனால் பிரமாதமான இடத்தில் இருந்தது. நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். ஆனால் இருட்டில் அது சரியாக விழவில்லை.
கேரளம் முழுவதும் சுற்றிப் பார்த்த அனுபவம் சந்தோஷமாக இருந்தது. மழை. சுற்றிலும் தண்ணீர். தண்ணீர். பல வீடுகள் தண்ணீர் ஓடும் கரையோரமாக இருந்தன.
சென்னையில் குழாயைத் திறக்கும்போது, போதுமான அளவிற்கு தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் திறக்க வேண்டியிருக்கிறது.
அங்கேயும் பரபரப்பு இருக்கிறது. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் எல்லாக் கடைகளையும் மூடி விடுகிறார்கள். காலையில் மெதுவாகத்தான் கடைகள் எல்லாம் திறக்கப்படுகின்றன.
சென்னையோ இரவு முழுவதும் விழித்துக்கொண்டே இருக்கும். சந்தோஷமான பயணம்.
03.06.2008 at 8.15 PM