கிராமீயப் பாடல்கள் – 4

தொகுப்பாசிரியர் : வானமாமலை   

மாரியம்மன் பாட்டு 2

சின்ன முத்தாம் சிச்சிலுப்பை சீரான கொப்பளிப்பான் வண்ண முத்தாம் வரகுருவி வாரிவிட்டா தோணியிலே
மாரியம்மா தாயே, நீ மனமிரங்கித்தந்த பிச்சை,
தற்காத்து நீ கொடும்மா உன் சன்னதிக்கே நான் வருவேன்.
வடக்கே யிருந்தல்லோ மாரியம்மா, இரண்டு வடுகரோட வாதாடி
தனக்கிசைந்த எல்லை என்று மாரி தனித்து அடித்தாள் கூடாரம்.
உச்சியிலே போட்ட முத்தை மாரி உடனே இறக்கிடுவாள்.
முகத்திலே போட்ட முத்தை மாரி முடிச்சா இறக்கிடுவாள்
கழுத்திலே போட்ட முத்தை மாரி காணாமல் இறக்கிடுவாள்
பதக்கத்து முத்துக்களை மாரி மாறாமல் இறக்கிடுவாள்.
நெஞ்சில் போட்ட முத்தை மாரி உடனே இறக்கிடுவாள்
தோளிலே போட்ட முத்தை மாரி துணிவாக இறக்கிடுவாள்.
 வயிற்றிலே போட்ட முத்தை மாரி வரிசையாய் இறக்கிடுவாள்.
முட்டுக்கால் முத்தை மாரி முடித்திருந்து இறக்கிடுவாள்
கரண்டக்கால் முத்தை மாரி காணாமல் இறக்கிடுவாள்.
பாதத்து முத்தை மாரி பாராமல் இறக்கிடுவாள்.
ஐந்து சடை கொஞ்சிவர, மாரி அழகு சடைமார் பிறழ,
கொஞ்சும் சடையிலேயே மாரிக்கு இரண்டு குயில் இருந்து தாலாட்ட
 உன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமாம் மண்டபத்தில்
உன் உடுக்கைப் பிறந்ததம்மா உத்திராட்ச மேடையிலே
கரகம் பிறந்ததம்மா, கண்ண நல்லூர் மேடையிலே
சூலம் பிறந்ததம்மா துலுக்க மணி மண்டபத்தில்.
நாகம் குடைப் பிடிக்க, மாரியாத்தாளுக்கு நல்ல பாம்பு தாலாட்ட
முத்து மணி விளக்காம் மாரியாத்தாளுக்கு முதல் மண்டபமாம்
சக்தி உடையவளே சாம்பிராணி வாசகியே       
நாழியிலே முத்தெடுத்து மாரியம்மா நாடெங்கும் போட்டுவந்தாள்
உழக்கிலே முத்தெடுத்து மாரி ஊரெங்கும் போட்டு வந்தாள்
எல்லை கடந்தாளோ இருப்பங்குடி மாரியம்மா
முக்கட்டுப் பாதைகளாம், மூணாத்துத் தண்ணிகளாம்
மூணாத்துப் பாதையிலே இருந்து மாரியம்மா வரங் கொடுப்பாள்.
தங்கச் சரவிளக்காம் மாரிக்குத் தனித்திருக்கும் மண்டபமாம்
எண்ணெய்க் கிணறுகளாம் மாரிக்கு எதிர்க்கக் கொடிமரமாம்.
தண்ணீர்க் கிணறுகளாம் மாரிக்குத் தவசிருக்கும் மண்டபமாம்
சப்பரத்து மேலிருந்து சக்தி உள்ள மாரி அவ
சரசரமாமாலை, மாலை கனக்குதுணு மயங்கிவிட்டாள் மாரி
ஆத்துக்குள்ள அடை கிடக்கு அஞ்சு தலை நாகம்
அது ஆளைக் கண்டால் படமெடுக்கும் அம்மா சக்தி
வேப்ப மரத்தவே தூருங்கடி, மாரிக்கு
வெத்திலைக் கடடவே பறத்துங்கடி
வேரத்து  வார சந்தன மாரிக்கு
வெள்ளிக் குஞ்சம் போட்டு வீசுங்கடி
பாசிப் பயறு எடுத்து பத்தினியாள் கையெடுத்து
உழுந்தம் பயறெடுத்து உத்தமியாள் கையெடுத்து

சேகரித்தவர் : குமாரி பி சொர்ணம்     

 இடம் : சிவகிரி, நெல்லைமாரியம்மன்மாரியம்மன்
   
   

சிவாஜியும் எம்ஜியாரும்……..

    சிவாஜியும் எம்ஜியாரும்……..

    அழகியசிங்கர்

 

    நாங்கள் திருச்சியில் இருந்தபோதுதான் நான் தனியாக சினிமா பார்க்கத் தொடங்கினேன்.  அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.  முதலில் வீட்டில் சொல்லிக்கொண்டு சினிமா பார்ப்பேன்.  பின் நானாகவே யாரிடமும் சொல்லாமல் சினிமா பார்க்கப் போய்விடுவேன்.  


    இரண்டு நடிகர்களின் படங்களைத்தான் நான் பெரும்பாலும் பார்த்துக்கொண்டிருப்பேன்.  ஒருவர் சிவாஜி.  இன்னொருவர் எம்ஜிஆர். எனக்கு இன்னும் ஒரு நிகழ்ச்சி ஞாபகத்தில் இருக்கிறது.  உறையூரில் உள்ள பத்மாவதி தியேட்டரில் (இப்போது அங்கு அந்தப் பெயரே மாறி விட்டது). நாடோடி மன்னன் என்ற படத்திற்கு மதியம் ஒன்றரை மணிக்கே சென்று விட்டேன்.  பெரிய படம் என்பதால் ஒரு மணி நேரம் முன்னதாகவே அந்தப் படம் ஆரம்பித்து விட்டது.  

    யோசித்துப் பார்க்கும்போது, நான் கல்லூரியில் படிக்க ஆரம்பித்து வேலைக்குப் போனபிறகுகூட எம்ஜிஆரும் சிவாஜியும் என்னை விடவில்லை.  

    சரோஜா தேவி என்ற நடிகை சிவாஜி படத்திலும் நடிப்பார்.  எம்ஜிஆர் படத்திலும் நடிப்பார்.  ஆனால் இந்த கே ஆர் விஜயா அவ்வளவாக எம்ஜிஆர் படத்தில் நடிக்க மாட்டார்.  

    நாங்கள் சென்னைக்கு வந்தபிறகு என் சினிமா ரசனை கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டது.  ஆனாலும் சிவாஜியும் எம்ஜியாரும் என்னை விடவில்லை.  எந்தப் படத்தையும் ஒரு தடவைக்கு மேல் பார்க்க மாட்டேன்.  சிவாஜியும் சரி எம்ஜியாரும் சரி. ஸ்ரீதர் டைரக்ட் செய்த சிவாஜியின் சிவந்த மண் என்ற படம் ஒன்று வந்தது.  வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று அதிக செலவு செய்து எடுத்தப் படம்.  அதே சமயத்தில் எம்ஜியாரின் நம் நாடு என்ற படமும் வந்தது.  நான் நம்நாடுதான் பார்த்தேன்.  என் வகுப்பில் படித்த
சுந்தரமூர்த்தி என்ற பள்ளி நண்பர் சிவந்த மண் படத்தை எட்டு அல்லது ஒன்பது முறை பார்த்திருப்பான்.  அவன் எஸ்எஸ்எல்சியில் கோட் அடிக்க வேண்டியவன்.  மிகக் குறைவாக மார்க் வாங்கி தப்பித்துவிட்டான்.  அப்படி அவன் மோசமாகப் போவதற்கு சிவந்த மண் படம்தான் காரணம்.  

    யார் நடிப்பு பிரமாதம் என்று நான் நண்பர்களுடன் பேசிக்கொள்வோம்.  சிவாஜிதான் என்றும், எம்ஜிஆர்தான் என்றும் பேசி விவாதம் நடத்துவார்கள்.  

    எனக்கு இரண்டு சம்பவங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.  ஒன்று பிராட்வேயில் உள்ள பிரபாத் தியேட்டருக்கு சிவாஜியின் படமான இருமலர்கள் என்ற படத்தைப் பார்க்க தீபாவளி அன்று மதியமே க்யூவில் நின்றுகொண்டு மாலைக் காட்சி பார்த்தேன்.  அப்போது ஊட்டிவரை உறவு என்கிற சிவாஜியின் இன்னொரு படமும் ரீலிஸ் ஆனது.  இப்போது நினைத்தால் இதெல்லாம் எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்று தோன்றுகிறது.  எத்தனை நேரம் என்னை அறியாமல் இந்த சினிமாவிற்காக செலவு செய்திருக்கிறேன்.

    இரண்டாவது நிகழ்ச்சி நான் பம்பாய்க்கு என் உறவினர்க
ளுடன் சென்றேன்.  அங்கே மாதுங்கா பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் உரிமைக்குரல் என்ற எம்ஜிஆர் படம் பார்த்தேன்.  அப்போது அங்கு தியேட்டரில் படம் பார்க்க அதிகம் பணம் வசூல் செய்வார்கள்.  அந்தப் படத்தில் நம்பியார் கதாநாயகியை (லதா என்ற நடிகை என்று நினைக்கிறேன்) எம்ஜிஆர் துரத்திக்கொண்டு காப்பாற்றுவார்.  தியேட்டரில் கூட்டம் கரகோஷம் போட்டு விசில் அடிப்பார்கள்.  பம்பாயில் இருந்தாலும் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்ப்பதாக நான் நினைத்துக் கொண்டேன்.  

    நான் பள்ளி, கல்லூரி என்றெல்லாம் சென்று கொண்டிருந்தாலும் சினிமா பார்ப்பதுதான் என் பொழுது போக்கு என்று தோன்றியது.  பெரும்பாலும் நான் பார்த்த சிவாஜி எம்ஜியார் படங்களை நான் மறக்க முடியாது.  

    யார் நல்ல நடிகர் சிவாஜியா எம்ஜியாரா என்று பட்டிமன்றம் நடந்தால் என் வாக்கு எம்ஜிஆருக்குத்தான்.   ஏனோ சிவாஜி சினிமா பார்க்க வருகிற ஜனங்களை கண்கலங்க அடித்துவிடுவார்.  ஆனால் சிவாஜி படத்தை என்னால் மறக்க முடியாது.  தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், கலாட்டா கல்யாணம், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டப்பொம்மன், கர்ணன் போன்ற படங்கள்.  பொதுவாக சிவாஜி தத்ரூபமாக அந்தப் பாத்திரமாக மாறி விடுவார்.  நமக்கு உண்மையில் கப்பலோட்டிய தமிழன் என்றால் இப்படித்தான் இருப்பாரா என்று தோன்றும். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் சிவாஜியின் அந்தத் தோற்றம் பிரமிக்க வைக்கும்.  எம்ஜிஆருக்கு அதெல்லாம் வராது.  

    ஆனால் எம்ஜிஆர் படம் பார்க்கிற ஜாலி சிவாஜி படத்தில் வராது. ஆயிரத்தில் ஒருவனாகட்டும், எங்கள் வீட்டுப் பிள்ளை ஆகட்டும் எம்ஜிஆர் எம்ஜிஆர்தான். கலகலப்பாக இருக்கும்.  எல்லாப் படங்களிலும் எம்ஜி ஆர் வெறுமனே கையை தலைக்கு மேல் ஆட்டுவார்.  அதுவும் காதல் பாடல்களில் இந்த சேஷ்டைகள் அதிகமாகவே தெரியும்.  ஆனாலும் எம்ஜிஆர் படங்களைப் பார்க்கிற மகிழ்ச்சி அலாதியானதுதான். 

    நான் குடியிருந்த வீட்டிற்குப் பக்கத்தில் ராமனாதன் என்ற நண்பர் இருந்தார்.  அவர் எம்ஜிஆர் ரசிகர்.  எம்ஜிஆர் படங்களைத் தவிர வேற எந்தப் படத்தையும் பார்க்க மாட்டார்.  தினமும் அவர் என்னிடம் எம்ஜிஆரைப் பற்றி சொல்லாமல் இருக்க மாட்டார். எதுவும் சொல்லவில்லை என்றால் அவருக்குத் தூக்கமே வராது.  

    எம்ஜிஆர் படத்தில் நடிக்கும் வில்லன் ஒருவர் எப்போதும் சண்டையின்போது எம்ஜிஆரிடம் ஒதை வாங்குவார், எங்கள் வீட்டுப் பக்கத்தில்தான் குடி இருந்தார்.  அவர் பெயர் ஜஸ்டின். ராமனாதனும் நானும் அவரைப் போய்ப் பார்ப்போம்.     

    அந்த உதை வாங்கும் வில்லன் நடிகரைப் பார்க்கும்போது ராமனாதனுக்கு ஒரே உற்சாகமாக இருக்கும்.  எம்ஜிஆரையே பார்ப்பதுபோல் தோன்றும். 

    “சிவாஜியும் ஒரு திறமையான நடிகர்,” என்று ராமனாதனிடம் நான் சொல்வேன். 

    ராமனாதன் சிரித்துக்கொண்டே,”சிவாஜிக்கு சண்டைக் காட்சியில் எப்படி நடிப்பது என்று தெரியாது,”என்பார்.

    உண்மையில் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.  நான் பார்த்த சிவாஜி எம்ஜிஆர் படங்களை வைத்துப் பார்த்தால் நான் ஒரு பெரிய சினிமா இயக்குநராகவோ நடிகராகவோ ஆகியிருக்க வேண்டும்.  அல்லது குறைந்த பட்சம் சினிமாவில் வசனம் எழுதறவனாகவாவது ஆகியிருக்க வேண்டும்.  

    இவ்வளவு காலத்துக்குப் பிறகு பத்திரிகைகள் என் சினிமாவில் என் பங்கைக் குறித்து பேட்டி எடுத்துப் போட்டிருக்க வேண்டும்.  டிவியில் என் பங்கைக் குறித்து பேசியிருக்க வேண்டும்.  ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.  நான் இத்தனை வருடங்கள் வெறும் படங்களைப் பார்த்து விஸில் அடிக்காத ரசிகனாகவே இருந்திருக்கிறேன்.  நடிப்பில் சிவாஜியா எம்ஜியாரா என்று வாதம் செய்து காலத்தைக் கழித்திருக்கிறேன்.  இதனால் எனக்கு வருத்தமில்லை.  ஆனால் சிவாஜி எம்ஜிஆர் வாழ்க்கையைப் பார்த்தால் எம்ஜிஆர் பெரிய ஹீரோவாக நடித்து அதன்பின் ஒரு பெரிய அரசியல்வாதியாக மாறி இன்றும் கொண்டாடுகிற அரசியல் தலைவராக மாறி ஆட்சியும் செய்துவிட்டார்.  அவர் மரணம் அடைந்துவிட்டார் என்பதை தமிழகமே நம்பவில்லை.  எனக்குக் கூட அது பல நாட்கள் நம்ப முடியாமல் இருந்தது.

    ஆனால் சிவாஜி விஷயம் வேறு விதமாகப் போய்விட்டது.  அவருடைய கட்சியில் அவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. உண்மையில் சிவாஜி நிஜ வாழ்க்கையிலும் சினிமாவில் நடித்த சிவாஜி மாதிரியே இருந்துவிட்டார்.  அதனால் அவரால் சினிமாவில் சாதிக்க முடிந்ததை அரசியல் வாழ்க்கையில் சாதிக்க முடியவில்லை. பாவம் சிவாஜி.  ஆனாலும் என்னால் இந்த இரு நடிகர்களையும் மறக்க முடிந்தது இல்லை.

(சமீபத்தில் சிவாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி சுவரில் போஸ்டர் பார்த்தேன்.  அதன் விளைவாக இந்தக் கட்டுரை)

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை
                                                                                                      மாரியம்மன்

    வைசூரி மிகக் கொடியதொரு வியாதி.  அதைத் தடுக்கவோ குணப்படுத்தவோ பண்டை வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.  ஊரில் ஒருவருக்கு வியாதி கண்டால் அது பலருக்கும் பரவுவதை ஊரார் கண்டனர்.  வியாதியின் காரணம் தெரியாமல் வலிமை வாய்ந்த தொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இந் நோய் பரவிற்று என்று அவர்கள் நினைத்தனர்.  இந்த தெய்வத்திற்கு மாரி, மாரிமுத்து, மாரியம்மன், முத்துமாரி என்று பல பெயர்களிட்டு அழைத்தனர்.  தங்கள் குழந்தைகள் மீது இத் தெய்வத்தின் கோபம் தாவாமலிருக்க அவர்களுக்கு மாரியப்பன், மாரியம்மை என்று பெயரும் இட்டனர்.  இவ்வாறு வணங்கப்பட்ட மாரியம்மன் தமிழ் நாட்டிலுள்ள சில ஊர்களிலே மிகப் பிரபலமடைந்து, சுற்று மதிலோடும், கோபுரங்களோடும் அமைக்கப்பட்ட கோயில்களிலே குடிக்கொண்டிருக்கிறாள்.  இக் கோயில்களில் தினசரிப் பூஜையும், பத்து நாள் திருவிழாவும், தேரோட்டமும் இத் தெய்வத்திற்குக் கிடைத்துள்ளன.  இத்தெய்வம் முதன் முதலில் மைசூர் பிரதேசத்தில் கோயில் கொண்டிருந்ததென்றும், கன்னடியப படையெடுப்பின் போது இத் தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலும், பரவியதென்றும் சில சமூகவியல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.  இப்பொழுது இத்தெய்வம் பார்வதியின் ஒரு அம்சமாகவும், பத்ரகாளியின் அம்சமாகவும் கருதப்படுகிறாள்.
    மாரியம்மனைக் குறித்த பாடல்கள் நம்முள்ளத்தில இனம் தெரியாத பயங்கர உணர்ச்சியை எழுப்புகின்றன.  வைசூரி நோயைத் தடுகக முடியும் என்று தெரிந்துள்ள இக்காலத்தில், மாரியம்மன் பற்றிய வர்ணனை அச்சத்தை எழுப்பக் கூடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, விஞ்ஞான வளர்ச்சியே யறியாத பாமரர் உள்ளங்களில் எத்தகைய பயத்தை உண்டாக்கியிருக்கும் என்று நம்மால் அறிவது கடினம்.
    ஊரில் வைசூரி பரவியதும், மாரியம்மனுக்குப் பலவிதமான நேர்த்திக் கடன்கள் செய்ய மக்கள் நேர்ந்து கொள்வர்.  மாவிளக்கு ஏற்றுவதாகவும, கரகம் எடுப்பதாகவும், கயிறு சுற்றுவதாகவும், சபதம் ஏற்றுக் கொள்வர்.  மனிதனது கோபத்தைத் தணிபபதறகாகக் கையாளும முறைகளையே தெய்வங்களின் கோபத்தைத் தணிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்று மக்கள் நம்பினர்.
    அவ்வாறு விழாக் கொண்டாடும்போது உடுக்கடித்து மாரியம்மன புகழைப் பாடிக்கொண்டு தலையில் தீச்சட்டி தாங்கிக்கொண்டு சிலர் வருவார்.  அவர்கள் பாடும் பாடல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும்.  உடுக்குத் தாளத்தோடு சேர்ந்துவரும் பாட்டு மாரியம்மனினட் பக்தர்களைப் பரவசப்படுத்தும்.
                                                                           மாரியம்மா
        தோட்டம் துறந்தல்லோ – மாரிக்கு
        தொண்ணூறு லட்சம் பூவெடுத்து,
        வாடித் துறந்தல்லோ – ஆயிரம் கண்ணாளுக்கு
        வாடா மலரெடுத்து
        கையாலே பூ வெடுத்தா – மாரிக்கு
        காம்பழுகிப் போகுமிண்ணு
        விரலாலே பூ வெடுத்தா
        வெம்பிடு மென்று சொல்லி
        தங்கத் துரட்டி கொண்டு – மாரிக்கு
        தாங்கி மலரெடுத்தார்
        வெள்ளித் துரட்டி கொண்டு
        வித மலர்கள் தானெடுத்தார்
        எட்டாத பூ மலரை – மாரிக்கு
        ஏணி வைத்துப் பூ வெடுத்தார்
        பத்தாத பூ மலரைப்
        பரண் வைத்துப் பூ வெடுத்தார்
        அழகு சுள கெடுங்க – மாரிக்கு
        அமுது படி தானெடுங்க
        வீசும் சுள கெடுங்க- மாரிக்கு
        வீத்து வகை தானெடுங்க
        உப்பாம் புளி முளகா – ஆயிரம் கண்ணாளுக்கு
        ஒரு கரண்டி எண்ணெய் அமுது
        கடலைச் சிறு பயறு
        காராமணி மொச்சையம்மா

        அவரை, துவரை முதல் – ஆயிரங் கண்ணாளுக்கு
        ஆமணக்கங் கொட்டை முதல்
        காடைக் கண்ணி பருத்தி விதை – மாரிக்கு
        பாங்கான வித்து வகை
        இட்டுச் செய்தவர்க்கு
        எம காளி துணை செய்வாள்
        மக்களைப் பெற்றவர்கள்
        மாரி கதை தானறிவார்
        அறிந்தோர் அறிவார்கள்
        அம்மன் திருக் கதையை
        தெரிந்தோர்க்குத் தெரியுமம்மா – ஆயிரங்கண்ணா
        தேவி திருக் கதையை
        ஒரு கண்ணு ரெண்டு கண்ணு
        உலகத்து மானிடர்க்கு
        ஆயிரம் கண்ணுடையா
        அழகில சிறந்த கண்ணு
        பதினாயிரம் கண்ணுடையா
        பாதகத்தி நீலியவ
        இருசி வயததிலேயும்,
        எமகாளி பிறந்திடுவாள்
        மலடி வயித்திலேயும்
        மாகாளி பிறந்திடுவாள்- மாரிக்கு
        ஆறு வண்டி நூறு சட்டம்
        அசையா மணித் தேருகளாம்.
        தேரை நடத்தியல்லோ – மாரி
        சித்திரங்கள் பாடி வாரா – மாரிக்கு
        பூட்டுன தேரிருக்கப்
        புறப்பட்டாள் வீதியிலே
        நாட்டுன தேரிருகக – ஆயிரம் கண்ணா
        நடந்தாளே வீதியிலே
        வீதி மறித்தாளம்மா – மாரி
        வினை தீர்க்கும் சக்தியல்லோ
           
        பிறந்தா மலையாளம் – அவ
        போய் வளர்ந்தா – ஆள்பாடி
        இருந்தாள் இருக்கங்குடி – மாரி
        இனி இருந்தா லாடபுரம்
        சமைந்தாள் சமையபுரம் – மாரி
        சாதித்தாள் கண்ணாபுரம்
        கண்ணா புரத்தில் – மாரி
        காக்கும் பிரதானி – மாரிக்கு
        உடுக்குப் பிறந்ததம்மா
        உத்திராட்சப பூமியிலே
        பம்பை பிறந்ததம்மா – மாரிக்கு
        பளிங்கு மா மண்டபத்தில்
        வேம்பு பிறந்ததம்மா – மாரிக்கு
        விசய நகர்ப் பட்டணத்தில்
        ஆடை பிறந்ததம்மா – மாரிக்கு
        அயோத்திமா நகர்தனிலே
        சிலம்பு பிறந்ததம்மா – மாரிக்கு
        பிச்சாண்டி மேடையிலே
        சாட்டை பிறந்ததம்மா – மாரிக்கு
        சதுர கிரி பூமியிலே
        சாட்டை சலசலங்க
        சதுர மணி ஓசையிட
        கச்சை கலகலங்க
        கருங்கச்சை குஞ்சம் விட
        பதினெட்டுத் தாளம் வர
        பத்தினியா சித்துடுக்கு
        இருபத்தொரு தாளம் வர
        எமகாளி சித்துடுக்கு
        சித்துடுக்கைக் கைப்பிடித்து
        சிவ பூசணிந்தவளாம்.
(மாரி ஸ்தலங்களாக ஆறு ஊர்கள் சொல்லப்படுகின்றன)

சேகரித்தவர் : போத்தையா                          இடம் : நெல்லை
           
       
       
       
   
       
   

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை
ஆண்டிற்கொரு விழா


நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான்.  பிள்ளையாரும அத் தெய்வங்களுள் ஒருவர்.  இவர் மற்றைக் கிராம தேவதைகளைப் போல இறைச்சி தின்பவரல்ல.  இவர் வகை வகையாக பணியார பண்டங்களை ருசியாக உண்பவர்.  நல்லமேனி கண்ட மனநிறைவோடு, உழவர்கள் அரச மரததடிப் பிள்ளையார்க்கு, மாவுருண்டையும், எள்ளுருண்டையும், கொழுக்கட்டையும் பண்ணிப் படைக்கிறார்கள்.
மாட்டுக் கொளப்படையில்
மாவுருண்டை ஆயிரமாம்,
எருதுக் கொளப்படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப்படையில்
அதிரசம் ஆயிரமாம்.
கண்ணுக் கொளப்படையில்
கடலுருண்டை ஆயிரமாம்.
குட்டிக் கொளப்படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்.
பண்ணிக் கொளப்படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு.
வட்டார வழக்கு :
கொளபபடை – கொட்டகை
பண்ணி – பன்றி
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்                இடம் : சேலம் மாவட்டம்

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை   

திருவல்லிக்கேணி செல்லும்போதெல்லாம் கோஷ் ஆஸ்பத்ரிக்கு எதிரில் உள்ள பிளாட்பார நடைபாதைக் கடைகளில் வாரிக் குவித்திருக்கும் புத்தகக் குவியல்களைப் பார்வையிடாமல் இருக்க மாட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் கடைகளில் ஒன்றில் ஒரு அபூர்வமான புத்தகம் கிடைத்தது.  கிட்டத்தட்ட மோசமான நிலையில்தான் இந்தப் புத்தகம் கிடைத்தது. புத்தகம் உள்ளே கரையான் அடையாளம் பொட்டு பொட்டாக இருந்தது. 1964 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் இது.  கிராமீயப் பாடல்கள் என்ற தலைப்பில் இப்புத்தகம் உள்ளது.  இப் புத்தகத்தைத் தொகுத்தவர் நா. வானமாமலை.  எஸ் எஸ் போத்தையா, எஸ் எம் கார்க்கி, பி எம் ராஜவேலு, குமாரி பி சொர்ணம், கவிஞர் எஸ் எஸ் சடையப்பன், கு சின்னப்ப பாரதி, வாழப்பாடி சந்திரன் என்று பலர் தொகுத்த கிராமீய்பாடல்களை மொத்தமாக தொகுத்திருக்கிறார் நா வானமாமலை.  


    இதுமாதிரி புத்தகம் திரும்பவும் வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை.  எந்தப் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை.  இதில் உள்ள எல்லா கிராமீயப் பாடல்களையும் தினமும் ஒன்றாக அடித்து முகநூலில் பதிவு செய்யலாமென்று நினைக்கிறேன்.  முதல் பாடலை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இதோ இரண்டாவது பாடலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.    பிள்ளையார் பூசை

    உழவர்கள், ஏர்கட்டி உழுமுன் சாணத்தைப் பிடித்து வைத்து அதன் உச்சியில் அருகம் புல்லைச் செருகி வைத்து அதனைப் பிள்ளையாராக வழிபடுவார்கள்.  அவருக்குப் பூவும், சந்தனமும் சாத்துவார்கள்.  ஒரு வாழையிலையில் தேங்காயும், விதை நெல்லும் பழமும் படைப்பார்கள்.  விநாயகர் பூமியின் சாரமாதலால், இப்பொழுது படைத்ததைப் போன்று பதின்மடங்கு நிலததில் விளைய அருள் சுரக்குமாறு  அவரிடம் வேண்டுவார்கள். இது கூட்டு வணக்கம்.  விநாயகர் விவசாயி கையில் பொருளிருந்தால் பூசை பெறுவார்.  இல்லையேல் அவர்களைப் போல் பட்டினி கிடப்பார்.  இவர் சிவனையும், விஷ்ணுவையும், போலப் பணக்காரத் தெய்வமல்ல.  இப்பாட்டில் பிள்ளையார் முக்கண்ணனார் மகன் என அழைக்கப்படுகிறார்.


            காளையே ஏறு….
            முந்தி முந்தி வினாயகனே
            முக்கண்ணனார் தன் மகனே
            கந்தருக்கு முன் பிறந்த       
            காளைக் கணபதியே – (காளையே)
           
            வேலருக்கு முன் பிறந்த   
            விக்கினரே முன் நடவாய்,
            ஊருக்கு மேற்காண்டே
            ஒசந்த தொரு வெப்பாலை.
            வெப்பாலை மரத்தடியில்
            சப்பாணி பிள்ளையாராம்.
            சப்பாணி பிளளையார்க்கு,
            என்ன என்ன ஒப்பதமாம்
            நீரு முத்தும் தேங்காயாம்,
            நிமித்தியமாம் பிள்ளையார்க்கு,
            கொத்தோடு தேங்காயாம்
            குலைநிறைய வாழைப்பழம்
            இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
            சப்பாணி பிள்ளையார்க்கு – (காளையே)

            வண்டு மொகராத – ஒரு
            வண்ண லட்சம் பூ வெடுத்து
            தும்மி மொகராத
            தொட்டு லட்சம் பூ வெடுத்து
            எறும்பு மொகராத
            எண்ணி லட்சம் பூவெடுத்து
            பாம்பு மொகராத       
            பத்து லட்சம் பூவெடுத்து
            வாரி வந்த பூவையெல்லாம்
            வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
            கொண்டு வந்த பூவையெல்லாம்
            கோபுரமா கொட்டி வச்சேன்
            குளத்திலே ஸ்நானம் பண்ணி
            கோலு போல நாமமிட்டு
            ஆத்துல ஸ்நானம் பண்ணி
            அருகு போல நாமமிட்டு
            பொழுதேறிப் போகுதிண்ணு
            வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
            இத்தனையும் ஒப்பதமாம் – எங்க
            சப்பாணிப பிள்ளையார்க்கு

 
வட்டார வழக்கு:

    மேற்காண்டே – மேற்கில்
    வெப்பாலை –  வேம்பு
    நிமித்தியம் – நைவேத்தியம்
    மொகராத – முகராத
    ஒரைச்சி – உரைத்து

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்                  இடம் : சேலம் மாவட்டம்


    பூவும் பழமும் பொங்கலும் படைப்பது தமிழர் பூசனை முறை.  தீ வளர்த்து ஓமம் வளர்த்து அவற்றில் நிவேதனம் படைப்பது வேதமுறை.  ஆகமங்களும் வேத முறைகளும் கலந்து விட்டன.  ஆனால் தமிழ் உழவர் பெருமக்கள் பண்டைப் பூசனை முறையை மறக்கவில்லை. 
       
           
           
           
   

ரூ. 5000 பரிசு வேண்டாமா?

அழகியசிங்கர்


சில தினங்களாக நவீன விருட்சம் 98வது இதழை சிறிது சிறிதாக அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  இன்னும் சில தினங்களுக்குள் எல்லோருக்கும் போய்விடும்.  அப்படியும் சில பேர்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.  இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கும் அழகியசிங்கருக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது.  ஒரு நீளமான நோட்டில் எழுதி வைத்திருக்கும் முகவரிகளை கவரில் தானாகவே எழுதி அனுப்பிக்கொண்டிருக்கிறார்.  டைப் அடித்து ஒட்டி அனுப்பலாம்.  அப்படி அனுப்பினால் நாம் நம் கையால் எழுதி அனுப்புகிற தன்மையை இழந்துவிடுவோம் என்கிறார்.  ஏன் என்றால் இப்போதெல்லாம் யாரும் பேனாவைப் பிடித்து எழுதுவதில்லை. இப்படி அவர் செய்து கொண்டிருக்கும் போதுதான் ஒன்று தோன்றியது.
1988ல் விருட்சம் இதழ் தோன்றியது.  இன்றுவரை 98வது இதழ் வரை வந்து விட்டது.  இது ஒரு காலாண்டு இதழ். உண்ûமாகப் பார்க்கப் போனால் 100வது இதழ் 25வது ஆண்டிலேயே வந்திருக்க வேண்டும். இயற்கை ஏற்படுத்திய சதியால் அப்படி எதுபும் நடக்காமல் போய்விட்டது.  
98 இதழ்களையும் யாராவது ஒரு வாசகர் வைத்திருப்பாரா என்ற சந்தேகம் வந்து விட்டது.  அப்படி யாராவது வைத்திருந்து என்னைச் சந்தித்தால் ரூ5000 பரிசு வழங்கப்படும்.  வருபவர்கள் அத்தனை இதழ்களையும் கொண்டு வந்து காட்ட வேண்டும்.  
இந்தப் பரிசு யாருக்கும் கிடைக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  
  

கசடதபற ஜøலை 1971 – 12வது இதழ்


நான் குளம்

ஆ சந்திரபோஸ்

நாளை பெய்யும மழையில்
நான் நிரம்பி விடுவேன்
நேற்றுவரை….
குடிக்க நீர் கொடுத்தேன்,
குளித்துத் துவைத்தனர்.
குதித்து விளையாடிக்கூட
என் மீது படகு விட்டனர்.
வயிறு புடைக்கத் தின்று
ஏப்பம் விட
கொக்குகளுக்கு மீன் கொடுத்தேனே…..
மீனுக்கு என் ‘பாசம்’
இரையாக வில்லையா?
ஏன்?
இன்று கூட என்மேல்
படிந்து கிடக்கும் அழுக்கை
உரமாக்குகிறீர்களே…
நான் என்ன கெட்டுவிட்டேன்…?
நாளை பெய்யும் மழையில்
நான் நிரம்பி விடுவேன்.

புத்தக விமர்சனம் 12


அழகியசிங்கர்

தேவேந்திரபூபதியின் ‘நடுக்கடல் மௌனம்’ என்ற கவிதைத் தொகுதியை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். இத் தொகுதியில் உள்ள கவிதைகள் எல்லாம் என்னுடன் அமர்ந்து பேசும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கெல்லாம் கட்டுக்கடங்காமல் இக் கவிதைகள் எங்கோ சஞ்சாரித்துக் கொண்டிருக்கின்றனவோ என்றும் தோன்றியது. 
திரும்ப திரும்ப இக் கவிதைளைக் கூப்பிட்டு அதனூடன் உரையாட முயற்சி செய்தேன். தனக்குத் தெரிந்ததை சில கவிதைகள் சொல்லிச் சென்றன. பல கவிதைகள் ஒன்றும் சொல்லாமல் முறைத்தபடி சென்றுவிட்டன.
நான் என்ற தன்னை சாட்சியாக வைத்து பல கவிதைகள் எழுதிக் கொண்டே போகின்றன. சிலசமயம் சுயபுராணமாக இருக்குமோ என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை.
கவிதையில் பூடகத் தன்மையைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அது ஓரளவுதான் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. படிக்க வருகிற வாசகன் என்ன எழுதி உள்ளார் என்று ஆராய்ச்சி செய்வதற்கு நேரமில்லாமல் இருப்பான்.
இத் தொகுப்பை மூன்று விதமாகப் பிரிக்கிறார் தேவேந்திரபூபதி. முதல் பகுதியை அலைமுகம் என்று பிரிக்கிறார். இரண்டாவது பகுதியை காயல் என்று பிரிக்கிறார். மூன்றாவது பகுதியை நங்கூரம் என்று பிரிக்கிறார். 
படிக்கும் வாசகனாகிய எனக்கு ஏன் இப்படிப் பிரிக்கிறார் என்பது புரியவே இல்லை எல்லாக் கவிதைகளையும் ஒரே மாதிரி இயற்றிக் கொண்டு போவதாகத்தான் தோன்றுகிறது.
கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது அலைமுகம் என்றால் கடலைச் சுற்றிய அவர் வாழ்க்கையைப் பற்றி கவிதை மூலம் சொல்ல வருகிறாரா என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் காயல் என்ற தலைப்பில் கவிதைகள் எழுதி இருப்பது எந்த அர்த்தத்தில் என்பது தெரியவில்லை. அதேபோல் நங்கூரம் என்ற தலைப்பில் எழுதப் பட்டதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
பக்கம் 44ல் உள்ள ‘தப்பிக்கும் கேள்விகள்’ என்ற கவிதையை எடுத்துக் கொள்ளுங்கள்.
கவிதை ஆரம்பமாகும் இடத்தில்,
மிகச் சிறந்த கேள்விகளிலொன்று
என் மூன்றாம் தலைமுறை தாண்டியும் தொடர்கிறது
நான் யார் எனச் சொல்ல….
இதற்கான சரியான பதிலை யாராலும் சொல்ல முடியவில்லை. அதனால் இறுதியில் காம்யுவின் துப்பாக்கியைத் தேடுகிறார். இந்தக் கேள்வி சன்னல் வழியாக பதற்றத்துடன் தப்பி ஓடிவிடுகிறது. இங்கே அவர் சொல்ல வருவது பதற்றத்துடன் என்கிறார். இந்தக் கவிதையில் இன்னொரு இடத்தில், கடநத முறை வந்த பூனை, என்னை உற்றுப் பார்க்கிறது, அதே பூனைதானா என நானும், அவனேதானா எனப்பூனையும் மீச்சிறு கணத்திலிருந்தோம். இதைச் சொல்ல வரும்போது நான் யார் என்பதைக் கண்டுபிடிக்கவே மறந்து போய் விடுகிறது. தேவேந்திர பூபதி இப்படி பல கவிதைகள் எழுதி உள்ளார்.

பக்கம் 69ல் உள்ள ஒரு கவிதையைப் பாருங்கள்.
கவிதையின் தலைப்பு ‘எதிரெதிர் நிஜம்’

எதிரெதிரே கண்ணாடிகளில்
என்னுருவம் பல்கிப்பெருகுவதால்
கடைசிப் பிம்பத்தில் முடித்திருத்தும்
சலூனில் இருந்து வெளியேறுகிறேன்
திருத்துனர் எதிர் கண்ணாடியின்
முதல் பிம்பத்தில் பணம் பெற்றுக்கொண்டிருந்தார்..
முடித்திருத்துவோர் அதற்குரிய கூலியைப் பெற்றுக் கொண்டு விட்டார். ஆனால் இக் கவிதை அது மட்டுமல்ல. முடித்திருத்துவதால் முகபாவம் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. அவற்றை முடித்திருத்தம் இடத்தில் உள்ள கண்ணாடிகள் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறது. மனித சுபாவத்தை கண்ணாடிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
துயரத்தையும் நளீனமாகக் குறிப்பிடுகிறார். பக்கம் 64ல் உள்ள குளவிக் கூடு என்ற கவிதையில் அனிமேஷன் குருவிகளை வளர்க்கும் மகனுக்கு தானியங்கள் பற்றி சொல்லிக் கொடுக்கிறார். 
இயற்கை சார்ந்த உணர்வுகளை இவர் கவிதைகள் மூலம் பல இடங்களில் குறிப்பிடுகிறார். ‘கண் பட்டு கொள்வது (பக். 51)’ என்ற கவிதையில் ‘மழை இருந்தது மாதிரி நிலம் கிடந்தது’ என்கிறார். மேற்கே நற்செய்தி (பக். 28) என்ற கவிதையில் என் வளைவில் பறவைகளும் மலர்களும் தனிமையில் இருக்கின்றன என்கிறார். 
இன்னும் மூன்று கவிதைகளைப் பற்றி சொல்ல வேண்டும். ஒன்று20ம் பக்கத்தில் உள்ள ‘நீல நாளை வேண்டுதல்’, இன்னொரு கவிதை பக்கம் 38ல் உள்ள ‘சந்திராஷ்டமம்’ என்ற கவிதை. மூன்றாவது கவிதை பக்கம் 59ல் ‘சாவில் என்ன சந்தேகம்.’ மூன்று கவிதைகளிலும் ஒரே வார்த்தையை பலவிதமாக மாற்றி மாற்றி கவிதை விளையாட்டை விளையாடிக்கிறார். 
இத் தொகுப்பு படிக்க வேண்டிய தொகுப்பு.

நடுக்கடல் மௌனம் – கவிதைகள் – பா தேவேந்திர பூபதி – பக்கம் : 71 – விலை ரூ.70 – காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 – முதல் பதிப்பு : டிசம்பர் 2014 -தொடர்புக்கு :
தொலை பேசி எண் : 04652 – 278525

லய ஞான குபேர பூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியைப் பற்றிய ஓர் ஆவணப்படம்…..

அழகியசிங்கர்

அம்ஷன்குமாரின் ஒரு ஆவணப்படம் யாழ்ப்பாணம் தெட்சணமூர்த்தியைப் பற்றியது.
கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்குமேல் இந்த ஆவணப்படத்தைத தயாரித்துள்ளார்.
1933ஆம் ஆண்டு பிறந்த தவில் வித்வான் தெட்சணாமூர்த்தி 42வது வயதில் அதாவது
1975ஆம் ஆண்டு இறந்துவிட்டார். தவிலில் அவருடைய சாதனையை விளக்குவதே இந்த
ஆவணப்படம். தவிலில் சாதனைப் படைத்த தெட்சணாமூர்த்தியை எட்டாவது உலக
அதிசயம் என்று குறிப்பிடுகிறார்கள் இசை மேதைகள்.

எனக்கு இசையைப் பற்றி
ரொம்பவும் தெரியாது. நான் ஒரு பாமர ரசிகன். இசையை வெறுப்பவன் கிடையாது.
ஆனால் இசைத் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படத்தை இரண்டு மணி
நேரம் விடாமல் பார்த்தேன். கொஞ்சங்கூட அசையாமல் வைத்தக் கண் ணை எடுக்காமல்
இந்த ஆவணப்படத்தை ரசித்தேன். 

பொதுவாக பெரும்பாலான ஆவணப்படங்களை முழுவதும் பார்த்து ரசிக்க முடியாது. பாதியிலேயே பார்க்க வேண்டாமென்று தோன்றும்.
இந்த ஆவணப்படத்திற்கான வெளியீட்டுக் கூட்டம் சமீபத்தில் டாக் சென்டரில்
நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குச் சென்று யாழ்ப்பாணம்
தெட்சணாமூர்ததியின் ஆவணப்படமும், அவர் இசை எலலாவற்றையும் தொகுத்த இசைத்
தொகுப்பையும். தெட்டசாணாமுர்த்தி : எட்டாவது உலக அதிசயம் என்ற அவரைப்
பற்றிய புத்தகத்தையும் வாங்கிக கொண்டேன்.
இதற்குமுன் அம்ஷண்குமாரின் 3
ஆவணப்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு படம் பாரதியாரைப் பற்றியது.
இரண்டாவது படம் அசோகமித்திரனைக் குறித்து. மூன்றாவது படம். மணக்கால்
ரங்கராஜன் என்ற இசை மேதையைப் பற்றி. சர் சி வி ராமனைப் பற்றிய
ஆவணப்படத்தையும் எடுத்துள்ளார்.
அம்ஷன் குமாரின் ஆவணப்படங்கள்
ஒவ்வொன்றும் வித்தியாசமானது. அவரது ஆவணப்படத்தின் பொதுவான அம்சம் என்ன?
எல்லாவற்றையும் ஒரு கதை போல் சொல்கிறார். ஒரு முறை பார்த்தாலும் இன்னொரு
முறை பார்க்க வேண்டுமென்று தூண்டும்படி எடுத்திருக்கிறார். ஒரு சினிமாப்
படத்தைப் பார்க்கிற ஜோடனை அவர் ஆவணப்படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.
அம்ஷன்குமாரின் ஆவணப்படங்களை நான் சேகரிக்கத் தொடங்கியபோது, இன்னும் பல
ஆவணப்படங்களைத் தேடத் தொடஙகினேன். புதுமைப்பித்தன் பற்றிய ஆவணப்படம்,
சமீபத்தில் ஞானக்கூத்தன் ஆவணப்படத்தையெல்லாம் சேகரித்து வைத்திருக்கிறேன்.
நான் ஒரு ஆவணப்படம் சேகரிப்பாளனாக மாறி விட்டேன். அதற்கு அடிப்படையான
காரணம் அம்ஷன் குமாரின் ஆவணப்படங்கள்தான்.

தவில் வித்வான்
தெட்சணாமூர்த்தியின் இந்த ஆவணப் படத்தைத் தயாரிக்க எந்தவிதமான தரவுகளும்
இல்லை. வெறும் தெட்சணாமூர்த்தியின் மூன்று புகைப் படங்களும், அவரைப்
பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள்தான் இருந்தன.
தெட்சணாமூர்த்தி வாசித்த
தவில் கச்சேரிகளை பல இடங்களிலிருந்து சேர்த்து தொகுக்க முடிந்தது. தனி
ஆவர்த்தனமாக அவர் வாசித்ததும், மற்றவர்களுடன் சேர்ந்ததையும் ஓரளவு தொகுக்க
முடிந்தது. இதுமாதிரி குறைவான தரவுகளை வைத்துக்கொண்டு நிறைவான ஒரு
ஆவணப்படத்தை அம்ஷன்குமார் இயற்றி உள்ளார்.

தெட்சணாமூர்த்தியுடன் பழகிய
நண்பர்களும், அவருடன் கச்சேரி நடத்திய நண்பர்களையும், பின் அவர்
குடும்பத்தைச் சேர்ந்த அவருடைய பெண்கள், பையன்கள், தெட்சணாமூர்த்தியின்
சகோதரிகளை வைத்து ஒரு அருமையான படத்தை கதை மாதிரி விவரித்துச்
சொல்லியிருக்கிறார். மற்றவர்களின் கூற்றுகளை வைத்து தெட்சாணமூர்த்தியின்
உருவத்தை உருவாக்குகிறார்.
பொதுவாக ஒரு ஆவணப்படத்தின் நோக்கம் என்ன?
திறமையான மனிதர்களைக் கண்டு பிடித்து அவர்களின் திறமைகளை
வெளிப்படுத்துவதுதான். இப்படி ஆவணப் படுத்துவது எதிர்காலத்தில்
உள்ளவர்களுக்கு அவர்களைப் பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள உதவியாக
இருக்கும். அம்ஷன்குமார் போல் பலர் இப்போது இதை செய்துகொண்டு
வருகிறார்கள். யாழ்பாணம் தெட்சணாமூர்த்தியை சரியான நேரத்தில்
கண்டுபிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார். இன்னும் போகப் போக இதுமாதிரி
தகவல்கள்கூட கிடைக்காமல் போகக் கூடிய வாய்ப்பு உள்ளது.
நம்மிடையே
உயிரோடு இருக்கும் எழுத்தாளர்களும், மறைந்து போன எழுத்தாளர்களும் உள்ளனர்.
அவர்களைப் பற்றியெல்லாம் ஆவணப்படங்கள் எடுக்க வேண்டும்.


தெட்சணாமூர்த்தி எப்படி நடப்பார் எப்படி தவில் வாசிப்பார் எப்படி உடை
உடுத்திக்கொள்வார் என்பதெல்லாம் அவருடைய புதல்வர் மூலம் படம்
பிடித்துள்ளார் அம்ஷன்குமார். மிகச் சிறிய வயதிலேயே மரணம் அடைந்து
விட்டார் தெட்சணாமூர்த்தி. உலக அளவில் சிறந்த தவில் வித்வானின்
தெட்சணாமூரத்தியின் மரணம் கூட மர்மம் நிறைந்தது. அவர் கச்சேரிகளுக்குச்
செல்வதெல்லாம் விட்டுவிட்டு கடைசி இரண்டு ஆண்டுகள் யாரையும் பார்க்காமல்
இருட்டில் தனியாக ஒரு இடத்தில் இருந்து வந்திருக்கிறார். கடைசிக்காலத்தில்
பார்க்க வந்த ஒரு சில நண்பர்களையும் அவர் அதிகமாகப் பேசாமல்
அனுப்பியிருக்கிறார். 

இபபடி திறமை உள்ள தவில் வித்வானுக்கு தெய்வக்
கடாட்சம் நிச்சயமாக இருக்க வேண்டும். இதைக் கூட அவருடன் நெருங்கிய
பழகியவர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக இனுவேல் கே ஆர்
புண்ணியமூர்த்தி மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆக இந்த ஆவணப்படத்தைப்
பார்க்கும்போது இவ்வளவு சுவாரசியமான ஒரு நிஜக் கதையைப் பார்க்கிற திருப்தி
ஏற்படுகிறது.

ஆயிரம் கூட்டம் நடத்திய அபூர்வ சிந்தாமணி

அழகியசிங்கர்

    ஒரு சினிமாத் தலைப்பை இப்படி மாற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது.  கூட்டம் நடத்துவது எப்படி என்பது தெரியாமல்தான் நான் இதுவரை கூட்டம் நடத்தி இருக்கிறேன்.  எத்தனைக் கூட்டங்கள் என்று நினைக்கிறீர்கள்?  கிட்டத்தட்ட 100 கூட்டங்களுக்கு மேல் இருக்கும். பல நோட்டுப் புத்தகங்களில் யார் யார் வருகைப் புரிந்துள்ளார்கள் என்றெல்லாம் குறித்து வைத்திருக்கிறேன்.  நவீன விருட்சம் என்ற பத்திரிகையை 28 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வரும்போது கூட்டத்தையும் நடத்திக்கொண்டு வந்தேன்.  பத்திரிகைக்கு ஆகும் செலவை விட கூட்டத்திற்கு ஆகும் செலவு மிக மிக குறைவாகவே ஆகும்.

    கூட்டம் நடத்த என்னைப் புகுத்தியவர் என் நண்பர் ஒருவர்.  அவர் தயாரித்த ஒரு பொருளுக்கு விளம்பரம் தரும் நோக்கத்தில் என்னை இலக்கியக் கூட்டம் நடத்தத் தூண்டியவர்.  இரண்டு மூன்று கூட்டங்களுக்குப் பிறகு அவர் ஆதரவு எனக்குப் போய்விட்டது.  பின் நான் மட்டும் கூட்டம் நடத்தினேன்.  என் கூட்டம் தபால் கார்டு கூட்டம்.  தபால் கார்டில் எல்லோருக்கும் தகவல் அனுப்புவேன்.  அதைப்  பார்த்து பலர் கூட்டத்திற்கு வருவார்கள்.  ஆனால் கூட்டத்தில் பேசுவதற்கு அவ்வளவு சாமர்த்தியம் எனக்குப் போதாது.மேலும் கூட்டத்தில் பேசுகிற பேச்சை என்னால் மனப்பாடமாக சொல்லவும் வராது.  இதை எதிலாவது எழுதி வைத்துக் கொள்ளவும் தெரியாது.  இதனால் கூட்டத்தில் பேசுவதை எல்லாம் காசெட்டில் பதிவு செய்து வைப்பேன். 

    முன்பு நான் கூட்டம் நடத்தினால் எவ்வளவு செலவு ஆகுமென்று நினைக்கிறீர்கள்?  வெறும் ரூ.100 தான்.  தபால் கார்டு 100 வாங்குவேன்.  அதற்கு செலவு ரூ25. திருவல்லிககேணியில் கூட்டம் நடத்தும்  ஹால் வாடகை ரூ50.  டீ செலவு ரூ25.  பேச வருபவர்களுக்கு நான் பயணப்படியாக சிறிய தொகையைக் கூட கொடுத்ததில்லை.  பேச வருபவர்களும் அதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள்.  உண்மையில் எழுதுபவர்கள் எல்லோரும் கூடும் இடம்தான் அது.

    கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?  20 பேர்களுக்கு மேல் வந்தால் பெரிய விஷயம்.  ஒரு முறை ஒரு கவிஞரைப் பேசக் கூப்பிட்டேன்.  அவர் வந்திருந்தார். நானும் உரிய நேரத்திற்கு வந்தேன்.  ஆனால் கூட்டம் கேட்க யாரும் வரவில்லை.  கவிஞருக்கு வருத்தமாகப் போய்விட்டது.  “யாரும் வர மாட்டார்களோ?” என்று முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்.

    நான் அவரை சமாதானப்படுத்தி அந்தத் தெரு கோடியில் உள்ள ஓட்டலில் காப்பி வாங்கிக் கொடுத்தேன்.  அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக சிலர் வந்தார்கள்.

    இதுவும் இன்னொரு கவிஞரைப் பற்றிய கதை.  அவரால் குடிக்காமல் இருக்க முடியாது.  என் கூட்டத்தில் வந்திருந்து பேசுவதாக இருந்தால் நீங்கள் குடிக்கக் கூடாது என்று எச்சரித்தேன்.  சரி என்று தலை ஆட்டிவிட்டு, குடித்து விட்டுப் பேச ஆரம்பித்து விட்டார்.  பேசுவதோடல்லாமல், பெரிய ரகளையே செய்ய ஆரம்பித்து விட்டார்.  அவரை விட வயதில் பெரியவரான காசியபனை (அசடு என்ற நாவல் எழுதியவர்) கூப்பிட்டு, “யே காசியபா… இங்கே வந்து என் பக்கத்தில் உட்கார்,” என்று பேச ஆரம்பித்து விட்டார்.  காசியபனோ பவ்யமாக அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்.  எனக்கோ திகைப்பு.  கூட்டம் நல்லபடியாக முடியவேண்டும் என்ற கவலை.

    நான் பல இரங்கல் கூட்டங்களையும் நடத்தி இருக்கிறேன்.  எனக்கு இரங்கல் கூட்டம் நடத்துவதில் அவ்வளவாக விருப்பம் இருக்காது. ஆனால் இரங்கல் கூட்டம் அவசியம் என்று தோன்றும்.  ஷண்முக சுப்பையா என்ற கவிஞருக்கு இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிறேன்.  யாருக்காவது தெரியுமா அவரை. கரிச்சான் குஞ்சு என்ற எழுத்தாளருக்குக் கூட்டம் நடத்தியிருக்கிறேன்.  அதன் பின் சி சு செல்லப்பாவிற்கு ஒரு கூட்டம் நடத்தியிருக்கிறேன்.  இதெல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை.  இதுமாதிரியான கூட்டம் நடத்தும்போது மனதுக்கு ஒப்புதலாகவே இருக்காது.  ஆனால் இதையெல்லாம் செய்யமால் விடக்கூடாது என்று தோன்றும்.

    நானும் பல இரங்கல் கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன்.  பிரமிள் மௌனி என்ற எழுத்தாளருக்கு நடத்திய இரங்கல் கூட்டத்திற்குப் போயிருக்கிறேன்.  சிலசமயம் இதுமாதிரியான இரங்கல கூட்டங்கள் மறைந்த எழுத்தாளரகளுககு அபவாதம் தருவதாக அமைந்து விடும்.

 ஞானக்கூத்தன் நடத்திய  ஆத்மாநாமிற்கு நடந்த கூட்டத்திற்குப் போயிருக்கிறேன்.  சி சு செல்லப்பா க நா சுவிற்கு ஒரு இரங்கல் கூட்டம் நடத்தினார்.  என் நண்பர் வெளி ரங்கராஜன் கோபி கிருஷ்ணன், பிரமிளுக்கெல்லாம் இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிறார்.

    இரங்கல் கூட்டம் நடத்துவது மனதிற்கு சங்கடமாக இருந்தாலும் அதை நடத்தாமல் இருக்கக் கூடாது.  இன்றைய சூழ்நிலையில் ஒரு சில நண்பர்கள்தான் இதுமாதிரியான கூட்டத்திற்கெல்லாம் வருவார்கள்.
வருபவர்கள் மனந்திறந்து பேசுவார்கள்.  ஒரு முறை நடத்தும் இந்தக் கூட்டத்தை நாம் பதிவு செய்வது அவசியம்.  ஏன்எனில் அதன்பின் அவர்களை எல்லாம் மறந்துவிடுவோம். திரும்பவும் ஞாபகப்படுத்தி கூட்டம் எதுவும் நடத்த மாட்டோம்.

    முதலில் தயக்கமாக இருந்தாலும் வெங்கட் சாமிநாதனுக்கும் அதுமாதிரியான கூட்டம் 23.10.2015 அன்று  நடத்தி விட்டேன்.  அக்கூட்டத்தை ஆடியோ வீடியோவில் பதிவும் செய்து வைத்திருக்கிறேன்.

கூட்டம் நடத்துபவருக்கு சில அறிவுரைகள்:

1.  அதிகம் செலவில்லாமல் கூட்டம் நடத்துங்கள்
2.  கூட்டங்களுக்கு ஆட்கள் அதிகமாக வருமென்று எதிரபார்க்காதீர்கள்.
3. ஒரு கூட்டத்தை ஒருவர் மட்டும் நடத்தாமல் இரண்டு அல்லது மூனறு பேர்கள் இணைந்து நடத்துங்கள்
4. புத்தக வெளியீட்டுக் கூட்டம் நடத்தும்போது பெரிதாக புத்தகங்கள் விற்குமென்று எதிர்பார்க்காதீர்கள்.
5. கூட்டத்திற்குப் பேசும்படி உங்களுக்குத் தெரிந்த இலக்கியக் கர்த்தாக்களை ரொம்பவும் வற்புறுத்தாதீர்கள்.
6. பெரும்பாலும் உள்ளூரில் இருப்பவர்களையே பேசக் கூப்பிடுங்கள்.
7. நாம் நடத்துவது இலக்கியக் கூட்டம். அதனால் தனியாக மேடை அமைத்து பேசுபவர்களைப் பிரித்து விடாதீர்கள்.
8. கூட்டத்திற்கு வருபவர்கள் குறைந்த பட்சம் 20 பேர்களுக்கு மேல் இருந்தால் நல்லது.  அப்படி இல்லாவிட்டால் பேசுபவர். கூட்டம் நடத்துபவர் என்று இருந்தால் போதும்.
9. கூட்டத்தைப் பதிவு செய்யுங்கள்.  ஆடியோ அல்லது வீடியோவில்.  வீடியோவிற்காக தனியாக ஏற்பாடு செய்யாதீர்கள்.  உங்களிம் டிஜிட்டல் காமெரா இருந்தால் அதுவே போதும்.
10. முகநூல, யூ ட்யூப்பில் பேசுவதை ஒலி-ஒளி பரப்புஙகள்
11.  நீங்கள் என்னை மாதிரி ஓய்வு பெற்றவராக இருந்தால், வேறு யாராவது நடத்தும் கூட்டத்திற்குப் போய் வாருங்கள்.