மாதொருபாகன் சில சிந்தனைகள்

அழகியசிங்கர்
இந்து நாளிதழ் 14 01 2015ல் ‘எழுத்தாளன் செத்துவிட்டான்’ என்ற தலைப்பில் பெருமாள் முருகன் எழுதி கையெழுத்திட்ட அறிவிப்பைப் படிக்கும்போது சற்று வருத்தமாக இருந்தது.  பெருமாள் முருகன் ஏன் இப்படி எழுத வேண்டுமென்று தோன்றியது.  பெருமாள் முருகன் ஒரு திறமையான எழுத்தாளர்.  மிகச் சிறிய வயதிலேயே அவர் நாவல்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்.  முதன் முதலாக அவர் ஏறு வெயில் என்ற நாவலை எடுத்துக்கொண்டு இலக்கியச் சிந்தனை கூட்டத்தில் விற்பதற்கு வந்தார்.   அவரே அதைப் புத்தகமாக கொண்டு வந்ததைக் பார்த்தவுடன் ஆச்சரியமாக இருந்தது.  அவர் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தால்தான் அப்படி ஒரு செயலை அவர் செய்ய முடியும்.
இப்படி ஒரு திறமையான எழுத்தாளர், பத்திரிகைகளை நம்பாமல் தானே எழுதத் துவங்கியவர், இன்று மாதொருபாகன் என்ற நாவலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பால் எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான் என்று எழுதிவிட்டார்.  படிக்கும் பலருக்கு ஏன் இப்படி ஒரு அறிக்கையைக் கொடுத்தார் என்றுதான் தோன்றுகிறது.  
அந்த நாவலில் அவர் தேவையில்லாதவற்றை எழுதியதால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக தோன்றுகிறது.  எப்போதும் ஒரு எழுத்தை எழுதியவன், எழுதி முடித்தவுடன் எழுத்தில் இறந்து விடுகிறான்.  அதன் பின் அதை எழுதியவன் வேறு, எழுத்து வேறு.  எழுத்து தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால், அது வாசகர் கையில்தான் இருக்கிறது.  எந்த எழுத்தையும் வாசகன் ஒருவன்தான் உயிர் கொடுக்கிறான்.  எழுத்தாளனுக்கு திறமை இருக்கலாம், ஆனால் வாசகன் மனசு வைக்காவிட்டால், எந்த எழுத்தும் நிற்க முடியாது.  இது எல்லா எழுத்துக்கும் பொருந்தும்.
பெருமாள் முருகன் அவர் நாவலை எழுதி முடித்தவுடன் நாவல் மூலம் காணாமல் போகிறார்.  பின் வாசகன்தான் அந்த நாவலைக் குறித்து தீர்மானம் செய்ய வேண்டும்.  
சர்ச்சைக்குரிய மாதொருபாகன் என்ற நாவலை நான் படித்ததில்லை.  ஆனால் அவருடைய முதல் நாவலான ஏறுவெயில் படித்திருக்கிறேன்.  முதலில் எழுத்தில் ஒரு குழப்பம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.  யார் முன்னிலையில் இருக்கிறார்கள்.  எழுத்தாளனா வாசிப்பவனா?  என்னைப் பொறுத்தவரையில் வாசிப்பவனின் பங்கு முக்கியமானது.  ஒரு எழுத்தாளன் அதை உணர மாட்டான்.  நவீன விருட்சம் என்ற பத்திரிகையை நான் 26 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வருகிறேன்.  பிரமிள் ஒருமுறை பிரசுரத்திற்கு ஒரு கவிதையைக் கொடுத்தார்.  நான் அதைப் பிரசுரம் செய்யவிலலை.  பிரமிளுக்கு என் மீது கோபம். “ஏன் அதை நீங்கள் பிரசுரம் செய்யவில்லை?” என்று கேட்டார்.  “அது படிப்பவரை டிஸ்டர்ப் செய்யும், அதனால் போடவில்லை,  மேலும் அதைப் படித்து விட்டு ராத்திரி முழுவதும் தூக்கம் வரவில்லை,” என்றேன்.  பிரமிள் பிடித்துக்கொண்டார்.  ஒரு பத்திரிகையில் அவர் கவிதையைப் படித்துவிட்டு நான் தூக்கமில்லாமல் தவித்ததாக எழுதி விட்டார்.  எம் வி வெங்கட்ராமின் ‘காதுகள்’ என்ற நாவலையும், கோபிகிருஷ்ணனின் ஒரு நாவலையும் படிக்க வைத்துக்கொண்டிருந்தேன்.  பழுத்த அனுபவமுள்ள ஒரு இலக்கிய நண்பரிடம் படிக்கப் போவதாக கூறினேன்.  üüபடிக்காதீர்கள், அப்புத்தகங்கள் மனதைத் தொந்தரவு செய்யும்,ýý என்றார்.  ஏன் இப்படி சொல்கிறார் என்று நான் படிக்கத்தான் செய்தேன்.  ஆனால் அந்த இலக்கிய நண்பர் கூறிய கருத்து உண்மைதான்.    மனதைத் தொந்தரவு செய்யும் எழுத்து ஏன் என்று தோன்றியது.  
பெருமாள் முருகனின் நாவல் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த மக்களை பெரிதும் துன்பப்படுத்துகிறது.  அதனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்கள்.  அந்த நாவலின் சில பகுதிகளை அவர் மாற்றி வேறு விதமாக எழுதிக் கொடுக்கலாம்.  யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு எழுத்து இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.  பெருமாள் முருகன் ஒரு திறமையான எழுத்தாளர்.  இதை சுலபமாக அவரால் செய்ய முடியும்.  ஆனால் அவர் ஒரேடியாக பயந்துபோய் எழுதுவதையே விட்டுவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  ஒவ்வொரு முறையும் எழுதியபிறகு எழுத்தாளன் செத்து விடுகிறான்.  வாசகன்தான் அவனுக்கு உயிர் கொடுக்கிறான்.
எழுத்தாளனைவிட வாசகன்தான் முக்கியமானவன்.  வாசகன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.  இன்றும் கூட புத்தகக் காட்சியில் கல்கியின் பொன்னியன் செல்வன் நாவலை எல்லாப் பதிப்பாளர்களும் போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.   ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும்.  கல்கி உயிருடன் நம் முன் இருக்கிறார். 

கசடதபற ஜனவரி 1971 – 4வது இதழ்


காலத்துக்கு வணக்கம்



கி அ சச்சிதானந்தம்

மண்டபம் பாழாகி
தூண்கள் தலைமொட்டையாகி
பரதேசிகளுக்குப் புகலிடமாய்
பரிணமித்தது.

மழையாலும் காற்றாலும்
சிற்பங்கள் சிதையவில்லை
எப்போதோவரும்
ஆராய்ச்சியாளனுக்கு
பிழைப்புத் தர
நிலத்தினுள் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

நிழல்தரும் தூண் ஒன்று
அதன் இடையில்
ஆண்பெண் இருவர் புணரும்
உருவங்கள்.
சிற்பி
இலக்கியத்தின் இலட்சணங்களையும்
வாத்சாயனாவின் காமத்தையும்
இரண்டறக் கலந்திருக்கிறான்.

முலைகளில்
முதிர்ச்சி அடைய
இடப்பையன்கள்
கசங்கிய கறையும்
அல்குலில்
தாரைத் தடவிய
முக்கோடும்.

அன்றொருநாள்
அந்தத் தூணின் கீழ்
துணி நீங்கிய இருவர் புணர்ந்திருந்தனர்
திரும்பிப் பார்த்தேன்
தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள்

சிற்பம் உயிரானதைக் கண்டு
காலத்திற்கு வணக்கம் செலுத்தினேன்.

கே பாலசந்ததர் சில நினைவுகள்

அழகியசிங்கர்

சமீபத்தில் கே பாலசந்தரின் மரணம் திரைப்பட உலகத்தை ஒரு கலகலப்பை ஏற்படுத்தி விட்டது.  நான் மதிப்புக் கொடுத்துப் பார்க்கும் டைரக்டரில் கே பாலசந்தர் ஒருவர்.  அவருடன் ஸ்ரீதரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  கருப்பு வெள்ளைப் படங்களில் பல சாதனைகளை செய்து காட்டியவர் கே பாலசந்தர்.  அவருடைய முதல் படமான ‘நீர்க்குமிழி’ ரொம்ப அற்புதமான படம்.  அதில் நாகேஷ் நடிப்பு அபாரமாக இருக்கும்.  எந்த நடிகரையும் பாலசந்தர் அவருடைய படத்தில் நடிக்க வைத்துவிடுவார்.  
அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் பொருந்தாத உறவு முறைகளைக் கொண்டுவந்து கதையை சிக்கலாக்கி பின் சாத்தியமில்லை என்பதுபோல் கொண்டு போய்விடுவார்.  அவருடைய படங்களில் சில கதாபாத்திரங்கள் சில சமிஞ்ஞைகள் செய்வார்கள்.  படம் முழுவதும் அது மாதிரியான சமிஞ்ஞைகளைத் தொடர்ந்து செய்துகொண்டு போவார்கள்.  
என்னுடைய பால்ய காலத்தில் பாலசந்திரனின் எந்தப் படத்தையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.  
பாலசந்திரன் இதுமாதிரி அதிகமாகப் படங்கள் எடுத்தாலும், அவருடைய மதிப்பு வேறு சில புதுமுக டைரக்டர்கள் வரவர குறைந்துகொண்டே போயிற்று.  ஒரு குறிப்பிட்ட காலம் வரை பாரதிராஜாவும், பாக்கியராஜ÷வும் எடுத்துக்கொண்டு விட்டார்கள்.  பாரதிராஜாவின் 16வது வயதினில் படம் வெளிவந்தபோது, சினிமா உலகம் வேறு பாதைக்குத் திரும்பத் தொடங்கி விட்டது.  பாரதிராஜாவின் புதுத்தன்மை பாலசந்திரன் படங்களை வேறு பாதைக்குத் திருப்பி விட்டன.
பாலசந்திரன் படங்களின் ஒரு குறை அவருடைய படங்களில் காணப்படும் நாடகத் தன்மையை அவரால் விலக்க முடியவில்லை.  அதேபோல் அவர் சில படங்களில் வெளிப்படுத்திய தைரியத் தன்மையை யாரும் அப்போது கையாளவில்லை.  உதாரணமாக அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் கமல்ஹாசன் தேவடியாப் பசங்களா என்று சேரை அடித்துவிட்டு குடித்து கும்மாளமிடும் கூட்டத்தைப் பார்த்து கூக்குரலிடுவார்.   அந்தச் சமயத்தில் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, என்ன இவ்வளவு தைரியத்துடன் இப்படி ஒரு படத்தில் ஒரு வசனத்தைப் புகுத்தி இப்படி ஒரு படத்தில் ஒரு வசனத்தைப் புகுத்தி இருக்கிறாரே என்றும் தோன்றியது.   
  
அதே சமயத்தில், ‘அவள் அப்படித்தான்’ படத்தில் சுஜாதா என்ற நடிகை ஒரு வசனம் பேசுவார்.  கர்வமாக இருக்கலாம், ஆனால் கர்ப்பமாக இருக்கக் கூடாது.  அந்த வசனம் அந்த இடத்தில் தேவையில்லாத வசனம்.  நானும் என் நண்பரும் அந்தப் படத்தில் அந்த வசனத்தைக் கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோம்.  பாலசந்திரனுக்கு என்ன ஆயிற்று?  என்று சொல்லிக் கொள்வோம்.
பாலசந்திரனின் நான் ரசித்த இன்னொரு படம் புன்னகை.   நான் அவனில்லை, சிந்து பைரவி, மன்மத லீலை, அரங்கேற்றம் போன்ற படங்களும் வித்தியாசமானவை.  தொடர்ந்து தமிழ் திரை உலகில் அதிக காலம் தாக்குப்பிடித்தவர் கே பாலசந்தர்தான். 
என்னதான் அவர் நம்மை விட்டு மறைந்தாலும், அவர் படங்கû நம்மால் மறக்க முடியாது.  

பிரேமிட்

கசடதபற ஜனவரி 1971  – 4வது இதழ்


தருமு அரூப் சிவராம்

மண்புயல் தணிந்து விட்டது.
ஆனால் போர் தொடர்கிறது – இடம் பெயர்கிறது
சாந்தி வீரர்கள்கூட
ஆபீûஸ கலைத்து விட்டு
யுதத சந்நத்தர்களாகின்றனர்.
இப்படியே, பிரெமிடபடிகளில்
காலம் உயிர்களை உருளவிடுகிறது –
மலைச்சரிவில் உதிரி இலைகளைப் போல.
ஆனால் வீரனின் உயிரோ
கற்பாறைப் பாலைகளின் சிறுகற்கள் போல
கணம்தான் என்றாலும்,
ஏதோ ஒரு யோசனையில்
உச்சியை நோக்கி எழக்கூடும்
உடல் தான், பிரெமிட்டினுள்ளேயே பதுமையாய்க் கிடந்து
கடவுளரை எதிர்பார்க்கிறது

பகவான் மீது தேள்கள்

21.12.2014 – ஞாயிறு எழுதியது.

அழகியசிங்கர்

கந்தாச்ரமத்தில் இருக்கும்போது ஒரு நாள், ரமண மகரிஷி மீது முன்பக்கம் ஒரு தேள் மேலே ஏறிக்கொண்டிருந்தது. அவருடைய பின்பக்கம் இன்னொரு தேள் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த வாசதேவ சாஸ்திரி என்ற அன்பர் பயந்துபோய் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தார். ஆனால் பகவான் ஒன்றுமே நடவாததுபோல் அமைதியாக உட்கார்ந்திருந்தார். அந்த இரண்டு தேள்களும் சுவற்றில் ஏறுவதுபோல் ஊர்ந்து சென்று அவரை விட்டு கீழே இறங்கிவிட்டது. அவைகள் சென்ற பிறகு பகவான் அவர்களிடம், üüதரையிலோ சுவற்றிலோ மரத்திலோ ஊர்ந்து போவதுபோல் அவை நம்மீதும் ஊர்ந்து செல்கின்றன. சுவற்றின் மீது, தரையின் மீது போகும்போது அவை கொட்டிக்கொண்டோ போகின்றது. நீங்கள் அதைக் கண்டு பயந்து ஏதாவது செய்வதினால்தான் பதிலுக்கு அவைகளும் பயந்து போய் ஏதாவது செய்கின்றன,ýý என்று விளக்கினார்.

இந்த விபரம் ரமணரின் சரிதமும் உபதேசமும் பாகம் 1ல் இருந்து கிடைத்தது. பொதுவாக தேள் கொட்டி விட்டது என்றுதான் பிறர் சொல்லி நாம் அறிவோம். ஒரு தேளை நாம் பார்த்தால் அதன் பக்கத்தில் நெருங்க மாட்டோம். அதைக் கவனியாமல் இருக்கும் பட்சத்தில் பெரும்பாலும் தேள்களும் நம்மைக் கொட்டாமல இருப்பதில்லை.

மகான் விஷயத்தில் இது வேறு மாதிரியாக இருக்கிறது. ஜே கிருஷ்ணமூர்த்தி விஷயத்திலும் இதேபோல் ஒரு சம்பவம் விவரிக்கப் படுகிறது. புலி, சிங்கம் மாதிரி ஒரு கொடிய விலங்கு வெறுமனே பார்த்துவிட்டுப் போய்விடுகிறது. 

கிருஷ்ணமூர்த்தி அதுமாதிரியான கொடிய விலங்கை வெறுமனே உற்றுப் பார்க்கிறார். அது ஒன்றும் செய்யாமல் போய்விடுகிறது. அதற்குக் காரணம் சிருஷ்ணமூர்த்தியிடம் பயம் இல்லை. பயத்தை வெளிப்படுத்தினால் அது நம்மை தாக்க வரும் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி

விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்

 அழகியசிங்கர்

 

இந்த அக்டோபர் மாதத்தின் சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு ரொம்ப தாமதமாகி விட்டது.  அந்த மாதம் தீபாவளி மாதம்.  தீபாவளி வருவதால் பத்திரிகைகளில் ஏராளமான கதைகள்.  மேலும் தீபாவளி மலர்கள் வெளியிட்ட கதைகள் வேறு.
நான் தீபாவளி மலர்களில் வெளியிட்ட கதைகளைத் தேர்ந்தெடுக்கவில்லை.  பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்தேன்.  ஒவ்வொரு மாதமும் சிறுகதைகளைப் படிக்கும்போது உற்சாகம் அடைகிறேன்.  நல்ல தரமான கதைகளை சில பத்திரிகைகளில் தொடர்ந்து வாசிக்க முடிகிறது.
இப்படி வாசிக்கிற கதைகளில் பத்திரிகை கதைகளிலிருந்து இலக்கியத் தரமான கதைகளைப் பிரித்து எடுக்க வேண்டி உள்ளது.  சில பத்திரிகைகளில் இலக்கியக் கதைகளே வர வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது.  இதை நான் தவறாகக் கருதவில்லை.  அப்படிப்பட்ட கதைகளையும் வாசிகக வேண்டும்.  அப்படிப்பட்ட கதைகளிலும் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்த வெகு ஜன வாசகர்கள் விரும்பிப் படிக்கும் கதைகள் என்று தனிப் புத்தகமாகக் கொண்டு வரலாம்.  
பொதுவாக கதைகள் என்ற அம்சம் குறைந்து போவதற்கு வெகுஜன இதழ்கள்தான் காரணம்.  சில பத்திரிகைகள் ஒரு பக்கத்திற்கு கதைகளை வெளியிடுகின்றன.  இதை அறவே நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  இது மாதிரி ஒரு பக்கக் கதைகளை நாம் வளரவிட்டால், கதைகள் என்றால் ஒரு பக்கத்துக்குமேல் படிக்க முடியாத நிலைக்கு நாம் தள்ள வேண்டி வரும்.
இந்த அக்டோபர் மாதம் பல அருமையான கதைகளை நான் படிக்க நேர்ந்தது.  நான் ஒரு கதையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று நினைத்தாலும், நான் ரசித்த பல கதைகளை  தேர்ந்தெடுக்க முடியாமல் போவதற்கு சற்று வருத்தம்தான் எனக்கு. 
பாவண்ணன் என்ற எழுத்தாளர் இரண்டு அருமையான கதைகளை எழுதி உள்ளார்.  15.10.2014 ஆனந்தவிகடன் இதழில் எழுதிய üஅப்பாவின் சைக்கிள்ý என்ற கதை, இன்னொரு கதை உயிர்மை அக்டோபர் இதழில் வெளிவந்த  üபள்ளிக்கூடம்ý என்ற கதை. இரண்டு கதைகளும் உருக்கமான கதைகள்.  சைக்கிளே ஓட்டத் தெரியாத முத்துசாமி.  அவனுடைய அப்பா அவனுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்க முடியாமல் தோல்வி அடைகிறார்.  அவர் சைக்கிள் கற்றுத் தருகிறேன் என்று அவனை அடித்தது அவன் ஞாபகத்தில் எப்போதும் இருக்கிறது என்று தோன்றுகிறது.  அவன் அப்பா அவன் அம்மாவுடன் சண்டைப்போட்டு அடிக்கடி ஓடிப் போகிறார்.  ஒரு முறை திரும்பி வராமலே ஓடிப் போகிறார்.  அந்தக் குடும்பம் அவன் அப்பா இல்லாமலே முன்னேறுகிறது.  அவன் மேலே படிக்க சைக்கிளை விற்றுத்தான் பணம் ஏற்பாடு செய்கிறாள் அவள் அம்மா.
அவருடைய இரண்டாவது கதை பள்ளிக்கூடம்.  அக்டோபர் மாதம் உயிர்மையில் வெளிவந்த கதை.  இதுவும் உருக்கமான கதை.  எப்படி பள்ளிக்கூடம் ஒரு சின்ன ஊரைவிட்டு உருமாறிப் போய்விடுகிறது என்பதுதன் கதை.  ஆங்கிலக் கல்வி வந்தவுடன், தமிழில் பாடம் நடத்தியப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் மாறிப் போய்விடுகின்றன.  கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்க யாரும் தயாராய் இல்லை.  அதனால் வேறு பல விஷயங்கள் கிராமத்தில் வந்தாலும், பழைய பள்ளிக்கூடங்களை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.  பாவண்ணன் எழுதிய இரண்டு கதைகளும் சிறப்பாக எழுதப்பட்ட கதைகள்தான். 
அதே உயிர்மையில வெளிவந்த இமையம் எழுதிய பரிசு என்ற கதை.  ரொம்பவும் நீளமான கதை.  உருக்கமான கதை.  படிப்பவர்ளின் கண் கலங்க வைத்துவிடும்.   
தீராநதி அக்டோபர் மாத இதழில் அபிமானியின் சரண் என்கிற கதை.  பெருங்கொளத்தைச் சேர்ந்த சேது என்பவன் சரோஜா வீடு தேடி வந்திருந்தான்.  குடித்திருந்தான்.  அவனுக்குத் தேவை ஒரு நூறு ரூபாய்தான்.  சண்டியத்தனம் பண்ணி அலைபவன்.  சரோஜா தெருவில் உள்ளவர்களை மிரட்டி பணம் வாங்குவான்.  அவனுக்குக் கொடுக்க நூறு ரூபாய்க் கூட இல்லை என்று மறுத்துவிடுகிறாள் சரோஜா.  சாப்பிட சோறுதான் இருக்கிறது என்கிறாள்.  அதையாவது போடு என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறான்.  ஜாதி வேறுபாடால் பச்சைத் தண்ணீக் கூட குடிக்காத சேது, வேற வழியில்லாமல் சரோஜா வீட்டில் சோறு சாப்பிடுகிறான்.  இக் கதையை நுணுக்கமாக எழுதி உள்ளார் அபிமானி.  
காக்கைச் சிறகினிலே என்ற அக்டோபர் இதழில் அபிமானியின் இன்னொரு கதை. üஉறவுý என்கிற கதை.  இந்தக் கதையும் ஏற்கனவே எழுதிய சரண் கதை மாதிரி உள்ளது.  ஜாதி பிரச்சினையைப் பிரதானப்படுத்தி இருகதைகளையும் எழுதி உள்ளார்.  
ஆனந்தவிகடன் 22.10.2014 இதழில் வெளிவந்த அகஸ்தியம் என்கிற வண்ணதாசன் கதை.  உறவு முறைகளைப் பற்றி தனுஷ்கோடி என்பவரைப் பற்றி சுற்றி சுற்றி வருகிறது கதை.  ரொம்பவும் நுணுக்கமாக எழுதப்பட்ட கதை.  அகஸ்தியர் அத்கையைப் பற்றி எழுதும்போது, ஏன் தனுஷ்கொடியுடன் அவளுடைய உறவு முறிந்து போயிற்று என்பதை வெளிப்படுத்தாமல் வெளிப்படுத்துகிற கதையாக இருககிறது.  
நான் மேலே குறிப்பிட்ட கதைகள் எல்லாம் எனக்குப் பிடித்த கதைகள்தான்.   ஒரு மாதத்தில் ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கும்போது, மற்ற கதைகளும் தேர்ந்தெடுக்கப்படும் கதைக்கு சளைத்தது இல்லை என்பதுபோல் தோன்றுகிறது.  
29.10.2014 ந்தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த பெருமாள் முருகனின் üஆசை முகம்ý என்ற கதையை அக்டோபர் மாதச் சிறந்த சிறுகதையாகத்தான தேர்ந்தெடுத்துள்ளேன்.  
சகிக்கமுடியாமல் நிஜமான வாழ்க்கை இருந்தாலும் மானசீகமான ஒரு வாழ்க்கையை ஒவ்வொருவரும் விரும்பியோ விரும்பாமலோ  ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்.  சரஸ்வதி தனக்குப் பிடித்த அரவிந்த சாமி என்ற நடிகருடன் இருப்பதுபோல் கற்பனை செய்கிறாள்.  மற்றவர்கள் கிண்டலுக்கு ஆளாகிறாள்.  அரவிந்தசாமியை நினைத்து திருமணம் செய்துகொள்ள மறுக்கிறாள்.  யாரையும் அவள் ஏற்றெடுத்துப் பார்ப்பதில்லை.  அவள் மனதில் அரவிந்தசாமி குறித்து உருவம் சிதையும்போது,  அவள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான நிலைக்கு மாறுகிறாள்.  
சிறப்பான சிறுகதையை எழுதிய பெருமாள் முருகனுக்கு வாழ்த்துகள்.  

நான் பார்த்த சினிமாப் படங்கள்

அழகியசிங்கர்
12ஆம் தேதி கணினி முன் அமர்ந்து நவீன விருட்சம் தயாரித்துக் கொண்டிருந்தேன்.  மதிய நேரம்.  அப்போது ஒரு போன் வந்தது.  போன் செய்தவர் பிரபு.  அவர் ரஜனிகாந்த் ரசிகர். 
 லிங்கா பார்க்க வர்றீங்களா?”
“இப்பவா?”
“இப்பத்தான்,” என்றார்.  
“எத்தனை மணிக்கு வரணும்.”
“ஒன்றரை மணிக்கு வந்திடுங்க.”
நான் மடிப்பாக்கம் கிளம்பினேன்.  நானும் பிரபுவும் 2.15 க்குக் கிளம்பினோம்.  படம் 2.45க்கு. புழுதிவாக்கத்தில் உள்ள குமரன் தியேட்டர்.  அங்கு போனவுடன் தெரிந்தது.  படம் பார்க்க 4 மணிக்கு வரவேண்டுமென்று.  “வீட்டுக்குப் போய்விட்டு, அங்கே ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம்,” என்று சொன்னேன்.
பிரபு வீட்டிற்குப் போய் சற்று ஓய்வெடுத்தோம்.  திரும்பவும் 4 மணி சுமாருக்கு தியேட்டருக்கு வந்தோம்.  ஒரே கூட்டம்.  முண்டி அடித்துக்கொண்டு போனோம்.  40 ஆண்டுகளுக்கு முன் ஒரு தீபாவளியின் போது, சிவாஜியின் இரு மலர்கள் என்ற படத்தை முதல் நாளே போய்ப் பார்த்தேன்.  அதன் பின் இப்போதுதான் தியேட்டரில் முதல் நாள் ஒரு படம் பார்க்க வந்திருக்கிறேன்.  அதுவும் ரஜனிகாந்தின் லிங்கா படத்தைப் பார்க்க.  
ரஜனி ரசிகரான பிரபு உற்சாகமாக இருந்தார்.  நான் சினிமாப் படங்களை தியேட்டரில் பார்ப்பது என்பது ரொம்ப அரிதான விஷயமாகப் போய்விட்டது.  பார்ப்பதே இல்லை.  ஆனாலும் நான் ரிட்டையர்ட் ஆகிவிட்டப்பின் தியேட்டர்களில் கொஞ்சம் கொஞ்சம் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.  ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அதைப் பற்றி எதாவது எழுத வேண்டுமென்ற எண்ணமும் எனக்கு எழுவதுண்டு.  ஆனால் நான் எழுதுவதற்குள் மற்றவர்கள் எழுதி முடித்துவிடுவார்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் படத்தைப் பற்றி சொல்வார்கள்.  “படம் நன்றாக இருக்கிறதா இல்லையா?” என்று யாராவது என்னைக் கேட்டால், நான் பதில் சொல்ல மாட்டேன்.  
பொதுவாக சினிமா என்பது பொழுதுபோக்கு விஷயமாகத்தான் நான் பார்ப்பேன்.  அதன் மூலம் நமக்குக் கிடைப்பது ஒன்றுமில்லை.  படம் பார்க்கிறோம்.  படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதில்லை.  சில படம் பார்த்தப் பின்பும் நம் ஞாபகத்தில் இருந்துகொண்டிருக்கும்.  சில ஞாபகத்தை விட்டு ஓடிப் போயிருக்கும்.  சில படங்கள் பாடல்கள் மட்டும் நம் கவனத்தில் இருக்கும்.  ஒரு படத்தை இன்னொரு முறையும் பார்க்க விரும்பினால், அது படத்தின் வெற்றி. 
    
புழுதிவாக்கத்தில் உள்ள குமரன் தியேட்டர் உட்கார்ந்து படம் பார்க்க ஏற்ற இடமாக இருந்தது.  ரஜனிகாந்தின் ரசிகர்கள் புடைசூழ முதல்முறையாக நான் தியேட்டர் முழுவதும் உள்ள கூட்டத்தை அப்போதுதான் பார்த்தேன்.   சமீபத்தில் நான் படம் பார்க்கும்போது கூட்டமே இருக்காது.  இது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  படம் எடுக்க போட்ட பணம் தயாரிப்பாளர்களுக்கு, வினியோகஸ்தர்களுக்குக் கிடைத்திரக்குமா என்ற ஐயம் எனக்கு எப்போதும் ஏற்படும்.
40 ஆண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட நிலை இல்லை.  அப்போது சிடி கலாச்சாரம் இல்லை.  இன்று ஒரு படம் 100 நாள் ஓடுவதில்லை.  ஒருசில நாட்களில் படம் எடுத்தவர்கள் தங்கள் மூலதனத்தை எடுத்துக்கொண்டு விடுகிறார்கள் என்றார்கள் எனக்குத் தெரிந்த நண்பர்கள்.  பல தியேட்டர்களில் படம் அதிக விலை டிக்கட் மூலம் பணத்தை எடுத்து விடுவதாக சொல்கிறார்கள். அதிலும் முக்கியமான நடிகர்கள் நடிக்கும் படத்திற்குத்தான் இந்த நிலை.  சாதாரண நடிகர்கள் அதுவும் புதுமுகங்கள் நடிக்கும் படத்திற்கு அப்படி இல்லை. 
மேலும் தமிழில் 300 க்கும் மேற்பட்ட படங்கள் தியேட்டர்கள் கிடைக்காமல் அவஸ்தைப் படுவதாக அறிந்தேன்.  சமீபத்தில் காவியத் தலைவன் என்ற படத்தைப் பற்றி பலர் நல்ல அபிப்பிராயம் சொன்னதால் அதைப் பார்க்க வேண்டுமென்று நினைப்பதற்குள் அந்தப் படம் எங்கள் வீட்டு பக்கத்தில் உள்ள உதயம் காம்ப்ளெக்ûஸ விட்டுப் போய்விட்டது.  வேறு தியேட்டர்களில் பகல் காட்சி மட்டும் காட்டிக் கொண்டிருந்தார்கள்.  இந்தத் தருணத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் படத்தை முதல் ஷோ பார்க்க வந்தேன். 
சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் போட்டவுடன், எல்லோரும் ஏக காலத்தில் சத்தம் போடடார்கள்.  விஸில் சத்தம் காதைப் பிளந்தது.  பேப்பர் துண்டுகளை பூ மாதிரி தூக்கி விசிறி எறிந்தார்கள். நான் முன்புபோல் இருந்திருந்தால் இது மாதிரி நிகழ்ச்சிக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டிருப்பேன்.  ஆனால் இப்போது நான் வேடிக்கைப் பார்க்கும் மனோ நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். 
லிங்கா படத்தில் ரஜனிகாந்தை இளமையாகக் காட்டியிருந்தார்கள்.  அந்தக் காலத்தில் எம்ஜிஆர் படத்தில் எம்ஜிஆரை இளமையாகக் காட்டுவார்கள்.  ஒரு காலத்தில் அவருடன் கதாநாயகியாக நடித்த சிலர் அவருக்கு அம்மாவாக நடித்திருப்பார்கள்.   எப்படி இந்தப் படத்தில் துள்ளும் இளமையுடன் ரஜனிகாந்த் காட்சி தருகிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  1975 வாக்கில் தாம்பரத்தில் உள்ள சேலையூரில் நடிகர் ரவிச்சந்திரன் லட்சுமி நடித்த ஒரு பாடல் காட்கியைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.  ரவிச்சந்திரனால் முட்டிப் போட்டுக்கொண்டு பாடல் காட்சியில் பாட முடியவில்லை.  அவர் போட்டிருந்த பேன்ட் உள்ளே நிறைய துணிகளை விட்டுக்கொண்டு நடிப்பார்.  ஆனால் லட்சுமியோ துள்ளும் இளமையுடன் வேகமாக குதித்து நடனம் ஆடுவார்.  
ஆனால் சினிமா பார்க்கும் நமக்கு அதெல்லாம் தெரிவதில்லை.  இந்த வயதிலும் ரஜனிகாந்த் ஈடுகொடுத்துதான் நடித்திருக்கிறார்.  இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் குறுகிய காலத்தில் இப்படத்தை எடுத்திருக்கிறார்.  ஒரு பேட்டியில் இந்தப் படம் எடுப்பதற்காக ஒரு நாளைக்கு 20 மணிநேரம் உழைத்ததாக கூறி இருக்கிறார்.  
ரஜனிக்கென்று சில அம்சங்கள் உண்டு.  அது இப்படத்தில் தொலைந்து போகவில்லை.  தாத்தா ரஜினியாகவும், பேரன் ரஜினியாகவும் இரட்டை வேடத்தில் ரஜனிக்கு நல்ல தீனி கொடுத்திருக்கிறார்கள்.  அவர் எப்போதும் பேசும் பஞ்ச் வசனத்திற்குக் குறைவில்லை.  
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.  தாத்தாவின் பெருமையைக் காப்பாற்ற பேரன் ரஜினி முன் நிற்கிறார்.
  
பொதுவாக ரஜினி படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் அதன் பொழுது போக்கு அம்சத்தைப் பார்த்து ரசிப்பார்கள்.  தாத்தா ரஜனி பெரிய ராஜாவாக இருந்து தன் சொத்துக்களை எல்லாம் ஒரு அணையைக் கட்ட இழப்பது, வெள்ளைக் காரர் ஒருவர் வில்லனாக மாறி அணையைக் கட்ட விடாமல் செய்வது போன்ற காட்சிகள் இயல்பானதுதான்.  சோலையூர் மக்களுக்காக தன் சொத்துக்கள் முழுவதையும் இழக்கிறார்.  வெள்ளைக்காரன் மிரட்டிய சவாலில் அவர் அந்தக் கிராமத்தை விட்டும் போய்விடுகிறார்.  இதையெல்லாம் எத்தனை முறை ரஜனி படங்களில் காட்டினாலும் யாருக்கும் அலுப்பதில்லை.  இந்தப் படத்திலும் அப்படிதான் நடக்கிறது.  சில்லறைத் திருட்டுக்கள்மூலம் அகப்படும் ரஜனி, அதிலிருந்து தப்பி சோலையூருக்குக் கடத்துகிறார் அனுஷ்கா.  அவர் டிவி ரிப்போர்ட்டராக வருகிறார்.  திருட்டுதனத்தில் ஈடுபடும்போது எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது.
ரஜனி மாத்திரம் இல்லை.  பெரிய நடிகர்கள் விஜய், கமல்ஹாசன், அஜித், என்ற நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்களையெல்லாம், பொழுது போக்கும் அம்சமாக நாம் பார்த்து பழகிக்கொள்ள வேண்டும்.  
லிங்கா என்கிற இந்தப் படம் நமக்கு பார்க்க அலுக்காது.  இதோ பிரபு அவர் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு இரண்டாவது முறையாக லிங்காவைப் பார்க்கச் சென்றுவிட்டார்.
  
 

விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 8

9.12.2014
                 விருட்சம் இலக்கியச் சந்திப்பு-8
 நடைபெறும் நாள்                   :      13.12.2014 (சனிக்கிழமை)
நேரம்                 :        மாலை 6 மணிக்கு
இடம்             :    ஸ்ரீ அலர்மேலுமங்கா கல்யாண மண்டபம்
                                           அகஸ்தியர் கோயில் பின்பக்கம்
                                           19 ராதாகிருஷ்ணன் சாலை,
                                          தி. நகர், சென்னை 600 017
   
பொருள்               :         நானும் கதைகளும்
                                      
 உரை நிகழ்த்துபவர்     :                 எழுத்தாளர்   சா கந்தசாமி
(தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய எழுத்தாளர்.  சாகித்திய அக்காதெமி விருது முதல் பல விருதுகளைப் பெற்றவர்.  நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல எழுதி உள்ளார்.  இன்னும் தொடர்ந்து உற்சாகமாக இயங்கிக் கொண்டிருப்பவர்.  அவருடைய சிறுகதைகளைப் பற்றியும், அவரை எழுதத் தூண்டிய அவர் ரசித்த கதைகளைப் பற்றியும், பேச உள்ளார்)
அனைவரும் வருக.
அன்புடன்
அழகியசிங்கர் – ஆடிட்டர் கோவிந்தராஜன்

மழைக்காலம்.


ரவிஉதயன்

தவறி விடுமென்று நம்பிக்கையில்
பயமின்றி
நடுங்கும் கைகளோடு
குறி பார்க்கும் கண்களின்
துப்பாக்கி முனையில் நிற்கிறேன்.
ஊசி மழைத் துளிகள் போல
என்னுள் நுழைகின்றன ரவைகள்.
விரிபடாத குடையை
விரிக்க முயலுகிறவனைப் போல
விலுக்கென்று அப்படியே
நிற்கிறேன்.
காதலாகி கசிகிறது
மழைத்துளிகளின்  ரத்தம்.

ஞானக்கூத்தனும் விஷ்ணுபுரம் பரிசும்….

அழகியசிங்கர்
விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு ஞானக்கூத்தனுக்குக் கிடைத்துள்ளது.  முதலில் அவரை வாழ்த்துகிறேன்.  ஒரு விருது ஒருவருக்கு வழங்கினால், அதனுடைய எல்லாத் தகுதிகளும் அவருக்கு இருக்க வேண்டும்.  ஞானக்கூத்தனுக்கு அந்தத் தகுதி உண்டு.  கவிதை மட்டும் அவர் சிந்திப்பவர்.  விருட்சம் வெளியீடாக அவருடைய முழுத் தொகுப்பையும் நான் கொண்டு வந்துள்ளேன்.  ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற தொகுப்பு வெளிவரும்போது, ஞானக்கூத்தன் எழுதியும் பாதுகாக்காத கவிதைகள் பலவும் தீபம் பார்த்தசாரதியின் வீட்டிற்குச் சென்று (சிஐடி நகரில் உள்ள) பார்த்தசாரதியின் புதல்வரிடமிருந்து தீபம் இதழ்களைத் தேடி அதில் காணப்பட்ட ஞானக்கூத்தன் பல கவிதைகளை கையால் தாளில் எழுதி ஞானக்கூத்தன் கவிதைகள் தொகுதியில் சேர்த்தேன்.  அதன்பின் பென்சில் படங்கள் என்ற இன்னொரு தொகுதியை நானே கணினியில் அடித்துப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன்.  மூன்றாவதாக நான் கொண்டு வந்த அவர் புத்தகம் கவிதைக்காக.  இது ஒரு கட்டுரைத் தொகுதி மொத்தம் 300 பிரதிகள்தான் அடித்து வைத்துள்ளேன்.  கவிதையைப் பற்றி அறிய வேண்டியவர்கள் இப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்.  படித்தால்தான் தெரியும் கவிதை என்றால் என்ன என்று.  இது ஒரு அருமையான கட்டுரைத் தொகுதி. 
எப்போதும் படிப்பதற்கு எளிமையாக இருக்கும் ஞானக்கூத்தன் கவிதைகள்.  பின் அவர் கவிதைகளில் காணப்படும் அங்கத உணர்வு.  அவர் எந்தக் கவிதை எழுதினாலும் அங்கத உணர்வுடன் கூடிய பார்வையைத்தான் கவிதை மூலம் வெளிப்படுத்துவார்.  இன்று நம் உலகத்தை அப்படிப் பார்ப்பது மிக சிறந்த விஷயமாகத் தோன்றுகிறது.கடைசியில் இந்த உலகத்தில் அடையப் போவது ஒன்றுமில்லை.   எழுதுபவர் பலருக்கு இது வருவதில்லை.  கவிதை மூலம் கஷ்டங்களைச் சொல்வது, கவலையைத் தெரிவிப்பது, பிரச்சாரம் செய்வது, அபத்தமாக கருத்தைத் தெரிவிப்பது என்று பல முயற்சிகள் கவிதைகள் மூலம் நடந்து கொண்டிருக்கிறது.  இதில் வித்தியாசமானவர் ஞானக்கூத்தன்.  அதனால்தான் பாரதிக்குப் பின் முக்கியமான கவிஞராக ஞானக்கூத்தன் தென்படுகிறார்.  கவிதையில் இந்தச் சாதனையை நிகழ்த்திய ஞானக்கூத்தன் போல், உரைநடையில் அசோகமித்திரன் அந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளார்.  இவர்கள் இருவரையும் தமிழ் நல்லுலகம் மறக்கக் கூடாது.  நான் அந்தக் காலத்தில் மாம்பலம் ரயில்வே நிலையத்திலிருந்து பீச் ரயில்நிலையம் வரை செல்லும்போது, பொதுவாக கவிதைகளைப் படித்துக்கொண்டு போவேன்.  அப்படித்தான்ü என்ன மாதிரி உலகம்ý என்ற ஞானக்கூத்தன் கவிதையைப் படித்துக்கொண்டு போனேன். இதோ அந்தக் கவிதை:
என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவதுபோல
கடையா? வீடா? கூடமா? கோயிலா?
என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்
அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்
என்ன மாதிரி உலகம் பார் இது.