13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்…3

டாக்ஸி என்ற ஈரானியப் படம்….

அழகியசிங்கர்

விக்டோரியா என்ற படமும் டாக்ஸி என்ற படமும்தான் பார்க்க வேண்டிய படங்கள் என்று சொன்னார்கள். டாக்ஸி படம் காட்டிய அன்று அந்தப் படம் மட்டும்தான் என்னால் பார்க்க முடிந்தது.  
டாக்ஸி என்ற இந்தப் படத்தைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் உண்டு.  இரானியன் இயக்குநர் ஜாவர் பன்னஹி அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக 2010லிருந்து படம் எடுக்கத் தடை செய்யப்பட்டவர்  மேலும் வீட்டுக் காவலில் உள்ளவர்.   அவர் தடைகளை மீறி எடுத்தப் படம்தான் டாக்ஸி. இந்தப் படம் டாக்ஸிக்குள்ளிருந்து எடுக்கப்பட்ட படம்.  டெஹ்ரான் தெருக்களை இந்தப் படம் டாக்ஸியின் வழியாகப் பார்த்தபடி காணப்படும் காட்சிகளை சொல்வதாக எடுக்கப்பட்டுள்ளது.  
டாக்ஸியில் வெவ்வேறு தருணங்களில் ஏறி அமரும் வாடிக்கையாளர்களை வைத்தும் படம் எடுக்கப்பட்டுள்ளது.  படத்தைத் தயாரித்து இயக்கியவரே டாக்ஸி ஓட்டுபவராக நடித்துள்ளார்.  வெவ்வேறு தரப்பட்ட மனிதர்கள் டாக்ஸியில் ஏறி இறங்குகிறார்கள்.  அவர்கள் நடத்தும் உரையாடல்கள் இயற்கையாக போரடிக்காமல் அமைகிறது. அரசாங்கத்திற்குத் தெரியாமல் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   65வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக் கரடி விருது பெற்றுள்ளது.
டாக்ஸியில் ஒரு காமெரா பொருத்தப்பட்டுள்ளது.  அந்தக் காமெராதான் எல்லா இடங்களிலும் சுழன்று சுழன்று படம் பிடிக்கிறது.  வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இருந்தாலொழிய இதுமாதிரியான படத்தை எடுக்க முடியாது.  
முதலில் இந்த டாக்ஸியில் ஒரு ஆணும் பெண்ணும் ஏறுகிறார்கள். தெருவில் கார் ஓடுவதைக் காட்டிக்கொண்டிருந்த காமெரா, மெதுவாக திரும்பி அவர்கள் பக்கம் நகருகிறது.  அந்த ஆண் இந்தக் காமெராவைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  காமெரா நன்றாகப் பொருத்தப்பட்டுள்ளது என்று வாழ்த்துகிறான்.  அவனுக்கு இந்தக் காமெரா திருடனைக் கண்டுபிடிக்க உதவுவதாக நினைக்கிறான்.  அவனுக்குப் பின்னால் உள்ள சீட்டில் ஏறி அமர்ந்த பெண்ணிற்கும் அவனுக்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அவன் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறான்.  அவனுடைய நண்பனுடைய காரிலுள்ள டயர்களை ஒரு திருடன் திருடிவிட்டு, அந்த டயர்களுக்குப் பதில் செங்கல்களை வைத்துவிட்டதாக சொல்லுகிறான்.  அதுமாதிரியான திருடர்களை கொன்று விட சட்டம் போட வேண்டுமென்கிறான்.  பின்னால் அமர்ந்திருந்த பெண் அவன் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.  ஒருத்தர் இரண்டுபேர்களுக்கு அதுமாதிரியான தண்டனை கொடுத்தால்தான் திருடாமல் இருப்பார்கள் என்கிறான்அந்த இளைஞன்.  அந்தப் பெண் தன்னை டீச்சர் என்று சொல்கிறாள். டாக்ஸியிலிருந்து இறங்கும்போது அவன் ஒரு பிக்பாக்கெட்காரன் என்று தன்னைப் பற்றி சிரித்தபடியே அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.   அந்தப் பெண்ணும் இறங்கிப் போய்விடுகிறாள். 
ஒமிட் என்ற இன்னொரு பயணி ஜாவர் பன்னஹியைப் பார்த்து, ‘உங்களை எனக்குத் தெரியும்.  உங்கள் மகன் என்னிடம் முக்கியமான சீடிகள் வாங்கியிருக்கிறார்..நீங்கள் படம் எடுப்பவர்.  ஏன் டாக்ஸி ஓட்டுகிறீர்.  அதுவும் படத்தில் வரும் காட்சியா,’ என்கிறார்.  டாக்ஸி ஓட்டடுவதும் ஒரு தொழில் என்கிறார் ஜாவர்.  ஓமிட்டை எங்கேயும் பார்த்தமதிரி ஞாபகத்திற்கு வரவில்லை ஜாவருக்கு.  அதன்பின்தான் தெரிகிறது அவர் சினிமா சிடிகளை விற்பவர் என்று.   ஒமிட் உடனே புதியதாக வரப்போகும் படத்திற்கான சீடியைக் கொடுக்கிறார்.  ‘இந்தப் படம் இன்னும் வரவில்லையே?’ என்கிறார் பன்னஹி.  ‘படம் வெளியே வருவதற்கு முன் எனக்கு வந்துவிடும்,’ என்கிறார் ஒமிட்.  இந்தச் சமயத்தில் காரை ஒரு கும்பல் தடுத்து நிறுத்துகிறது.  டூ வீலரில் அடிப்பட்ட ஒருவரை அவசரம்ம் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு காரில் அடிப்பட்டவருடன் அவருடைய மனைவியும் சேர்ந்து ஏறுகிறார்கள்.  அடிப்பட்டவர் முகத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது.  அவசரம் அவசரமாக உயில் எழுத விரும்புகிறார் அடிப்பட்டவர் தன் உயிர் போய்விடும் என்று பயந்து.  ஆனால் டாக்ஸியில் பேனாவும் பேப்பரும் இல்லை.  செல்போனில் அவன் சொல்வதைப் படம் பிடிக்கச் சொல்கிறான். அவனுக்குப் பிறகு அவன் மனைவிக்குத்தான் அவனுடைய வீடு தரவேண்டும்  இல்லாவிட்டால் தன் சகோதரர்கள் ஏமாற்றி விடுவார்கள் என்று சொல்கிறான். மருத்துவமனையில் அடிப்பட்டவனை சேர்த்தபிறகு அவன் மனைவி ஜாவர் பன்னஹிக்குப்போன் செய்கிறாள்.  தனக்கு படம் எடுத்த விடியோ படம் வேண்டுமென்கிறாள்.  ஜாவர் அதைத் தனியாக எடுத்துத் தருகிறேன் என்கிறார்.  பின் உன் கணவர் எப்படி இருக்கிறார் என்று கேட்கிறார்.  அவர் நலமாக இருக்கிறார் என்கிறாள். அப்படியென்றால் இந்த விடியோ எதற்கு என்று கேட்க, நான் அவர் சொன்னதை வைத்துக்கொள்ள வேண்டும்.  பின்னால் உதவும் என்கிறாள். இதுமாதிரி நகைச்சுவையுடன் காட்சி அமைப்பு இயல்பாக இப்படத்தில் மிளிர்கிறது.  
ஒமிட் திருட்டு சீடி விற்பவர்.  அதை அவர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விற்கிறார்.  ஒரு வீட்டிற்குச் சென்று அந்த சீடிகளை விற்க வரும்போது காரிலேயே இந்த வியாபாரம் நடக்கிறது.  ஒமிட் ஜாவர் பன்னஹியைத் தன் பார்டனர் என்கிறார் சீடி விற்பவனிடம்.  அவன் கேட்கிறான்.  “உங்களை அவர் பார்டனர் என்று சொல்கிறாரே, உண்மையா?” என்று கேட்கிறான்.  “அப்படியா சொன்னார்,” என்கிறார் ஜாவர் பன்னஹி.  
பன்னஹி சினிமாப் படம் எடுப்பவர் என்று அவனுக்கும் அவரைப் பற்றி தெரிகிறது. சினிமா படம் எடுப்பதைப் பற்றிய சந்தேகத்தை அவரிடம் கேட்கிறான் அநத இளைஞன்.  ‘நல்ல நாவல்கள் படித்தாகி விட்டது..நல்ல படங்கள் எடுத்தாகி விட்டது,’ என்கிறார் ஜாவர் பன்னஹி.
அந்த இளைஞன் சீடிக்களை வாங்கிக் கொண்டு போனபிறகு, ஜாவர் பன்னஹி பெயரைக் குறிப்பிட்டால், அதிகமாக சீடி விற்க முடியும் என்கிறார் ஒமிட்.  ஈரானில் நல்ல சினிமாக்களை தியேட்டர்களில் பார்க்க முடியாது.  அதனால்தான் சீடிக்கள் மூலம் விற்க முடிகிறது என்கிறார் ஒமிட். இது ஒரு கலாச்சார சேவை என்கிறார் ஓமிட்.  கண்ணாடி ஜாடியில் மீன்களுடன் இரண்டு பெண்கள் அவசரமாக புனித ஸ்தலத்திற்குப்  போக வேண்டுமென்று மன்றாடி டாக்ஸியில் ஏறிக்கொள்கிறார்கள்.
ஒமிட்டை ஒரு இடத்தில் இறக்கி விடுகிறார்.  கீழே இறங்கும்போது சீடி விற்பதற்காக அவர் பெயரைப் பயன்படுத்தியதற்காக மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறார் ஒமிட்.  ஜாவர் பன்னஹியும் காரில் வந்ததற்காக அவரிடமிருந்து பணம் வாங்கவில்லை.  கலாச்சார சேவையாக இருக்கட்டும் என்கிறார் சிரித்துக்கொண்டு.   
காட்சி மாறுகிறது.  பின்னால் கண்ணாடி ஜாடியுடன் அமர்ந்த இரண்டு வயதான பெண்கள் அவசரமாக புனித ஸதலத்திற்குச்  செல்ல வேண்டுமென்று  நெருக்கடியைக் கொடுக்கிறார்கள்.  12 மணிக்குள் போக வேண்டுமென்றும் ஜாடியில் உள்ள மீன்களை சேர்பிக்க வேண்டுமென்றும் குறிப்பிடுகிறார்கள்.  ஜன நெருக்கடி இருந்தால் அங்கே 12 மணிக்குள் போக முடியாது என்கிறார் பன்னஹி.  அவர்கள் படுத்திற பாட்டில் பன்னஹி வேகமாக டாக்ஸி ஓட்ட ஒரு இடத்தில் பிரேக் போட அவர்கள் வைத்திருந்த கண்ணாடி ஜாடி கீழே விழுந்து ஒடைந்து விடுகிறது.  மீன்களும் கீழே விழுந்து விடுகின்றன.  பதட்டத்துடன் அந்தப் பெண்கள் கத்துகிறார்கள்.  மீன்கள் செத்து விடும் என்று கத்துகிறார்கள்.  அவசரம் அவசரமாக காரின் பின்பக்கத்தில்  உள்ள  ஒரு பிளாஸ்டிக் பையில் தண்ணீரை நிரப்பி மீன்களை அதில் இட்டு காப்பாற்றுகிறார் பன்னஹி.  அவர்கள் அவசரப்படுத்த, பன்னாஹி அவர்களை வேறு டாக்ஸியில் போகும்படி சொல்கிறார்.  பள்ளி வாசலில் இவருக்காக காத்துக்கொண்டிருக்கும் 11 வயது  சகோதரி மகள் அன்னாவை அழைத்துக் கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு.  அவர்கள் இருவரும் இவரை திட்டியபடியே வேறு டாக்ஸிக்குப் போகிறார்கள். டாக்ஸியில் வந்ததற்கு இவருக்கு அவர்கள் பணமே கொடுக்கவில்லை.  இதே நம்ம ஊராக இருந்தால் அங்கு நடக்கிற விதமே வேறாக இருக்கும்.  
அன்னா அவர் காரில் ஏறிக்கொண்டே இவரைக் கிண்டல் செய்கிறாள்.  “இவ்வளவு அழகான பெண்ணை யாராவது கடத்திக் கொண்டு போனால் என்ன ஆகிறது?” என்று கேட்கிறாள்.  “அப்படியெல்லாம் நடக்காது என்கிறார்,” இவர்.  ஆனால் 11 வயதான பெண் இப்படியெல்லாம் பேசுவாளா என்று தோன்றுகிறது எனக்கு.  அன்னா ஒரு சின்ன காமெரா வைத்துக்கொண்டு இவரைப் படம் எடுக்கிறாள்.  காரிலேயே இதெல்லாம் நடக்கிறது.  அந்தப் பெண் படிக்கும் பள்ளிக்கூடத்தில் படம் எடுக்கும்படி சொல்கிறார்கள்.   அப்படி படம் எடுக்கும்போது  சில கட்டளைகளை நிறைவேற்ற  வேண்டும் என்று வகுப்பில் உள்ள ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.  ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தொடக் கூடாது.  ஆண் பாத்திரத்தில் நடிப்பவர்கள் டை கட்டக் கூடாது.  பர்சியன் பெயர் வைத்திருக்கக் கூடாது.  கொடூரமான உண்மையைக் காட்டக் கூடாது.  அன்னாவால் எப்படிப் படம் எடுத்க முடியும் என்று தெரியவில்லை.
டாகஸியை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு அராஷ் என்ற நண்பரைப் பார்க்கப் போகிறார் பன்னஹி. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் அந்த நண்பரைப் பார்த்தது.  சிறிது நேரம் பார்த்து விட்டு பன்னஹி திரும்பி வருகிறார்.  அந்த நண்பரும் அவர் கார் அருகில் வந்து அவளுடைய சகோதரி பெண் அன்னாவை ஐஸ் காப்பி வாங்கித் தர அழைத்துப் போகிறார்.  
இந்தப் படத்தில் பல இடங்களில் திருட்டுத்தனமாக சினிமா சீடிக்கள் விற்கிறார்கள்.  அதற்கு அடிப்படையான காரணம் ஈரானில் சினிமாப் படங்களை தியேட்டரில் திரையிட பயங்கரமான கட்டுப்பாடுகள் இருக்குமென்று தோன்றுகிறது.  தனியாக காரில் அமர்ந்திருககும்போது ஒருவநன் இவரிடம் சீடி விற்கிறான்.   மலர்களுடன் ஒரு பெண் வக்கீல் இந்தக் காரில் ஏறுகிறார்.  அவருக்கு ஜாவர் பன்னஹியைத் தெரிந்திருக்கிறது.  அரசாங்கம் கொடுக்கும் கெடுபிடிகளைப் பற்றி சொல்லிவிட்டுச் செல்கிறாள்.  அவள் போனபின் டாக்ஸியின் பின்னால் அமர்ந்த அன்னா ஒரு பர்ûஸக் கண்டுபிடிக்கிறாள்.  பன்னஹியிடம் அதைக் காட்டுகிறாள்.  அந்தப் பர்ஸ் வயதான இரண்டு பெண்மணிகள் காரில் தவற விட்டது என்று பன்னஹிக்குத் தெரிகிறது.  அதைக் கொண்டுபோய் கொடுக்க அந்தப் புனித இடத்திற்கு இருவரும் செல்கிறார்கள்.  காரை ஓரிடத்தில் வைத்துவிட்டு அவர்கள் இருவரும் அந்த வயதான பெண்களைப் பார்க்கச் செல்கிறார்கள். 
அவர்கள் போனவுடன், டூ வீலரில் வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன் காரை நோக்கிச் சென்று டாக்ஸியின் கதவை உடைத்து உள்ளே எதாவது கிடைக்கிறதா என்று பார்க்கிறான்.   எல்லோரும் இருக்கும் பகல் நேரத்திலேயே இந்தக் கொள்ளை நடக்கிறது.  அதில் காமெராவும் சேதம் அடைந்து விடுகிறது.  காமெராவிலிருந்து படம் எதுவும் பிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் பேசுவது காதில் விழுகிறது.  படம் இத்துடன் முடிந்து விடுகிறது.  டாக்ஸியையும் காமெராவையும் வைத்து அருமையாக எடுக்கப்பட்ட படம் இது.  

வழித்துணை?

ஞானக்கூத்தன் 



வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் கண் பார்வை போய்விட்டது. எதற்கெடுத்தாலும் மற்றவர்களுடைய உதவியை அவர் கேட்கத் தொடங்கினார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்குக் கஷ்டம். அவரவர்களுக்கு வேலை இருக்கும்போது இவர் அடிக்கடி தனக்கு உதவி செய்யக் கூப்பிட்டால் எப்படி? நாயனாருக்கும் வருத்தம். திருவொற்றியூர் உறை சிவபெருமானிடம் தனக்கு நேர்ந்த குறையைச் சொல்லி முறையிட்டார். பத்துச் செய்யுளில் ஐந்தாவது செய்யுளில் சொல்கிறார்:
கழித்தலைப்பட்ட நாயது போல
ஒருவன் கோல் பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்து நீ அருளாயின செய்யாய்
ஒற்றியூர் எனும் ஊர் உறைவனே.

தெருவில் அவருக்கு உதவி செய்ய வந்தவன் அவர் பிடித்துக்கொண்டிருந்த ஊன்றுகோலின் மறுமுனையைப் பிடித்துக் கறகற என்று இழுத்துச் சென்றானாம். நாயனார் அப்படி ஒன்றும் ஊர் அறியாத அநாமி அல்லர். இருந்தும் அவருக்குக் கிடைத்த மரியாதை இவ்வளவுதான் – கறகற இழுக்கை – வீட்டுக்கு வெளியில் இந்த நிலைமை என்றால் வீட்டிலும் அப்படித்தான்.
அகத்திற் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால்
அழையேல்! போகுருடா! எனத் தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்
முக்கணா, முறையோ?

என்கிறார் நாயன்மார். எதற்காகவாவது கூப்பிட்டால் அழைக்காதே போ குருடா என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லிவிடுகிறார்களாம். ‘குருடா’ என்று திட்டவே செய்துவிடுகிறார்கள். உலகுக்கு நாயன்மாராக இருந்தாலும் வீட்டில் அதற்கென்று ஒன்றும் தனி மதிப்பில்லை; இந்த ஒரு விஷயத்தை நாயன்மாரின் வாழ்க்கைப் பின்னணியில் வைத்துப் பார்த்தால் பல கேள்விகளைக் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இக்கட்டுரையில் வேறொன்றைப் பார்க்க வேண்டியிருப்பதால் அந்தக் கேள்விகளை எடுத்துக்கொள்ளவில்லை. மேலே கொடுக்கப்பட்ட அடிகளுக்கு முந்திய அடிகள் –
மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய்
மைந்தனே மணியே மணவாளா

இந்த அடியில் மகத்தில் சனி இடம்பெயர்வது போல் இருக்கிறது நீ என்னிடம் இருப்பது என்று சிவபெருமானைக் குறிப்பிடுகிறார்.
ஒரு சமய சொற்பொழிவாளர் இந்த அடியை எடுத்துத் தனக்குள்ள – அல்லது ஒரு மட்டில் உள்ள – ஜோதிட அறிவைக் காட்டிக்கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார். அவரது சொற்பொழிவைக் கேட்கப் பொறுக்காத ஒருவர் கூட்டத்தை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு மகத்தில் சனியாம். அந்த ஆன்மீகச் (?) சொற்பொழிவாளர் நாகரிகம் பற்றாத வெற்றுப் பேர்வழி என்று வருந்திவிட்டுப் போனார்.
சுந்தரர் தனது நிலைமையைக் கூறும்போது வான சாத்திரம், சோதிடம் பற்றிக் கூறினார். தமிழுலகத்தில் அந்த வான சாத்திர அறிவு பற்றி அறிஞர்களிடத்தில் சர்ச்சை உண்டு. ‘ஹோரா’ என்ற கிரேக்கச் சொல் தமிழின் ‘ஓரை’ என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு. சங்க இலக்கியத்தைச் சார்ந்த கலித்தொகையை ஒப்பச் சிறந்த நூலான பரிபாடலிலும் வான இயல் அல்லது கோள்களின் இருப்பு பற்றிப் பேசப்படுகிறது. வையை நதியைப் பற்றி ஆசிரியர் நல்லந்துவனார் இயற்றிய பரிபாடலில் வான சாத்திரக் குறிப்புகள் இடம்பெறுகின்றன. இந்தப் பாட்டுக்கு நாகனார் பாலைப் பண்ணில் இசையமைத்திருந்தாராம். பரிபாடல் தொடக்கத்திலேயே வான சாத்திரக் குறிப்புகள் தரப்படுகின்றன.
விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து
தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உருகெழு வெள்ளிவந்து ஏற்றியல் சேர
வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருள்தெரி
புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல்
அங்கி உயர்நிற்ப அந்தணன் பங்குவின்
இல்லத் துணைக்குப் பால்எய்த இறையமன்
வில்லிற் கடைமகரம் ஏவப் பாம்பொல்லை
மதிய மறைய வருநாளில் வாய்ந்த
பொதியின் முனிவன் புரைவரைக் கீறி
மிதுனம் அடைய விரிகதிர் வேனில்
எதிர்வரவு மாரி இயைக என இவ்வாற்றால்
புரைகெழு சையம் பொழிமழை தாழ
நெரிதரூஉம் வையைப் புனல்…

பரிபாடலின் இந்தப் பகுதிக்குப் பரிமேலழகர் உரைத் தமிழைப் படிப்பது நன்றாக இருக்குமல்லவா.
‘1. – 3. விசும்பு மதியத்தோடு புணர்ப்பனவாகிய எரியும் சடையும் வேழமும் முதலாக அவற்றின் கீழிருந்து வீதியால் வேறு படுக்கப்பட்ட ஓரொன்று ஒன்பது நாளாகிய மூவகை இராசிகளுள். மேலவாய    நாண்மீன்களைக் கீழதாகிய மதி புணர்தலாவது அவ்வ நேர் நிற்றன் மாத்திரமாகலின் அவற்றை விசும்பு புணர்ப்ப என்றார்.
2. – எரி. அங்கியைத் தெய்வமாக உடைய கார்த்திகை; அதனால் அதன் முக்காலை உடைய இடபம் உணர்த்தப்பட்டது. சடை – சடையையுடைய ஈசனைத் தெய்வமாகவுடைய திருவாதிரை: அதனால் அதனையுடைய மிதுனம் உணர்த்தப்பட்டது. வேழம் – வேழத்திற்கு யோனியாகிய பரணி: அதனால் அதனை உடைய மேடம் உணர்த்தப்பட்டது.
இவை முதலாக இவற்றின் கீழிருந்தலாவது இவற்றது பெயரான் இடபவீதி, மிதுனவீதி, மேடவீதியென வகுக்கப்பட்டு அம்மூவகை வீதியுள்ளும் அடங்குதல். அவற்றுள் இடபவீதி: கன்னி துலாம் மீனம் மேடமென்பன; மிதுன வீதி: தேள் வில்லு மகரம், கும்பமென்பன. மேட வீதி, இடபம், மிதுனம், கற் கடகம், சிங்கம் என்பன. ஓரிராசியாவது இரண்டே கால் நாளாகலின், நந்நான்கிராசியாகிய இவை ஓரொன்று ஒன்பது நாளாயின. கோட்களுக்கு இடனாகலான் இவை பன்னிரண்டும் இருக்கை எனப்பட்டன.
4 – 10 நிறத்தையுடைய வெள்ளி இடபத்தைச் சேரச் செவ்வாய் மேடத்தைச்சேரப் புதன் மிதுனத்தைச்சேரக் கார்த்திகை உச்சமாக விடிதலுண்டாக வியாழம் சனியின் இல்லமிரண்டாகிய மகர, கும்பங்கட்கு உப்பாலை மீனத்தைச்சேர யமனைத் தமையனாக உடைய சனி வில்லுக்குப் பின்னாகிய மகரத்தைச் சேர, இராகு மதியமறையும்படி வருநாளின் கண்…
இதனாற்சொல்லியது ஆவணித் திங்கள் அவிட்ட நாளின் இக்கோட்கள் தமக்குரிய நிலமாகிய இவ்விராசிகளில் நிற்பச் சோமனை அரவு திண்ட என்பதாயிற்று.’
வைகையில் புதுவெள்ள வருகைக்கு ஜாதகம் கணித்திருக்கிறார் ஆசிரியர் நல்லந்துவனார். ஆற்று வெள்ளம் பயனுடையதாக இருக்குமா வேறு விதமாக இருக்குமா என்று தெரிந்துகொள்வது அவசியமல்லவா? பரிபாடலில் அறம், பொருள் நீங்க இன்பமே பொருளாக அமைந்து கடவுள் வாழ்த்தையும் சேர்த்துக்கொள்கிறது. கடவுள், காமம் இரண்டுமான இந்தக் கலவைக்குக் கொஞ்சம் சோதிடம் பார்ப்பது நல்லது என்று அந்துவனார் கருதினார் போலும்.
சுந்தரமூர்த்தி நாயனாரும் அந்துவனாரும் சோதிடத்தை, வானிலை சாத்திரத்தை ஆதங்கமான விஷயங்களோடு தொடர்புபடுத்தியுள்ளனர். ஆனால் சுப்பிரமணிய பாரதியார் வான சாஸ்திரம் சொன்ன விஷயங்களைக் கண்டு வியந்தவர். அவர் ‘சோதிடம்தனை இகழ்’ என்றவர். பிரபஞ்சத்தைப் பற்றிய அவர் விருத்தத்தில் அவரைத் திகைக்கவைத்தது திசைய ஆனால் அச்செய்யுளில் சூரியனிடத்திலிருந்தும் நட்சத்திரத்திடமிருந்தும் நம்மை அடைய ஒளி எடுத்துக்கொள்ளும் காலத்தையும் ஒளியின் வேகத்தையும் குறித்தே பேசுகிறார். இக்கவிதை அவரது இந்தியா இதழில் (3.4.1909) வெளியானது.
ஒரு நொடிப் பொழுதில் ஓர்பத்
தொன்பதா யிரமாம் காதம்
வருதிறல் உடைத்தாம் சோதிக்
கதிரென வகுப்பர் ஆன்றோர்
கருதவும் அரிய தம்ம.
கதிருடை விரைவும் அஃது
பருதியின் நின்றோர் எட்டு
விநாடியிற் பரவும் ஈங்கே.

உண்டொரு வான்மீன் அஃதை
யூணர்கள் ஸிரியஸ் என்ப.
கண்ட அம் மீனின் முன்னை
விரைவொடு கதிர்தான் இந்த
மண்டலத்து எய்த மூவாண்டு
ஆமென மதிப்பராயின்
எண் தரற்கு எளிதோ அம்மீன்
எத்தனை தொலையதென்றோ!

கேட்டிரோ நரர்காள் வானிற்
கிடக்கம் எண்ணரிய மீனிற்
காட்டிய அதுதான் பூமிக்
கடுகினுக்கு அணித்தாம் என்பர்.
மீட்டுமோர் ஆண்டு மூவா
யிரத்தினில் விரைந்தோர் மினின்
ஓட்டிய கதிர்தான் இங்ஙன்
உற்றிடும் தகைத்து முண்டே.

பாரதியார் தரும் செய்திகளைக் கேட்டு நாமும் ‘கருதவும் அரிய தம்ம’ என்று சொல்ல விரும்பினாலும் நம்மை அவர் ‘நரர்காள்’ என்று அழைக்கும்போது ‘ஓய், ஓய்’ என்று சொல்லத் தோன்றுகிறது.
பிச்சமூர்த்தியின் ‘வழித்துணை’ என்ற நெடுங்கவிதை வான நூல் அறிவை வெளிப்படுத்துகிறது. என்றோ நமது புராணங்களில் படித்த ஒரு கதை இதற்கு ஆதாரம். கருவை மட்டும் எடுத்துக்கொண்டேன் என்ற பீடிகையோடு தொடங்குகிறது இந்நெடுங்கவிதை.
பண்டைப் பழங் குயவன்
….. ….. …..
….. ….. …..
ஏமாற்றும் காற்றை
உட் கொண்ட பாண்டங்கள்
ஒலிக்காத பேச்சில்
வினவுவதை உணர்ந்தான்
….. ….. …..
….. ….. …..
சட்டிப் பானைக்
கடைக் காரனாநீ
மரமும் அறியாத
மலட்டுக் கலைஞனா?
வனப்புக் கடலறியா
வாவித் தவளையா?

பழங்குயவன் வேலை செய்துகொண்டிருந்தபோது அவனிடத்திலிருந்த இடே நேரத்திரையில் பல வினோதமான காட்சிகளைப் பார்க்கிறான். அவரிடத்தில் பானைகள் பேச் தொடங்கிவிட்டன. இதற்கு ஏமாற்றும் காற்று, தூண்டுதலாய் உள்ளது. குயவன் மூர்ச்சித்துவிட்டான். குமர புரத்திலிருந்து வீசிய மூலிகைக் காற்று முகத்தில் பட்டதும் விழியைத் திறக்கிறான். இந்தக் குமர புரத்தில் வாழ்ந்த தச்சனை வருணிக்கிறார் ந.பி.மூ. சுவடில்லாத பாதையில் வழிகாட்ட ஒரு (மந்திர) கைக்கோலைச் செய்யக் காட்டிற்குப் போகிறான். காட்டில் அதற்கேற்ற மரத்தைத் தேடுகிறான். அவன் இருப்பிடத்துக்கு அருகில் இந்த மரம் முளைத்திருக்கவில்லை. காட்டில் பல மரங்கள் அவனைத் தன்னைப் பயன்படுத்திக்கொள்ளும்படி அழைக்கின்றன. தச்சன் எதையும் எடுக்காமல் ஒவ்வொன்றின் இயல்பை ஆராய்கிறான். தச்சன் நல்லதைப் பொறுக்கப் பிடித்த நாளைக் கணக்கிட்டால் பழங்குயவனுக்கு வியப்பாக இருக்கிறது. இங்கே ந.பி.மூ. கோள்களின் சலனப் படத்தை அறிமுகப்படுத்துகிறார்.
நண்டு நடமாடும் கடகத்தில் இருந்த ரவி
இன்றோ
முதலைக் கரவிருக்கும்
மகரத்தில் தென்பட்டான்

கடகத்தில் இருந்த சூரியன் (ரவி – ந.பி.மூ. சூரியனை ‘ரவி’ என்றே பிற இடங்களிலும் குறிப்பிடுகிறார்) மகரத்துக்கு வந்துவிட்டான் என்கிறார். இது காலக் கழிவை மட்டும் காட்டாமல் அந்தத் தச்சனின் அகவாழ்வின் சலனங்களையும் காட்டப் பயன்படுவது போல் தெரிகிறது. வானத்தில் ஒரு ஜன்னலை வசதியாக அமைத்துக்கொண்டு தச்சனைக் கவனித்துவந்த குயவன்
கண்டறியும் கிண்டலுடன்
காட்டுக்கு வந்தான்

இங்கே ந.பி.மூ. கோள்களின் நிலை பற்றிக் குறிப்பிடுகிறார்.
காட்டுக்கு வந்த அன்று
சிம்மத்தில் இருந்த குரு
இன்றும் இருக்கின்றான்
ஈராறு வருடம்
இன்றோடு ஓடியும்…

கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்துக்கொண்டும் வேறு சில செய்திகளைக் (உ.ம்) (மெய்ப்பொருளின் கதவிடுக்கா…) கொண்டு வந்தும் ந.பி.மூ. வாசகனுக்குப் பேருணர்வு ஒன்றைத் தர முயன்றுள்ளார்.
காண்டஹார் மன்னர் பரம்பரை
இலை உதிர் காலத்து
வாதா மரம் போல
இலை இலையாய் உதிர்ந்து
மொட்டைப்பேய் மரமாகி
காலக் கொடூரத்தின்
கண்ணாடி ஆயிற்று.

பழங்குயவனுக்கு வியப்பாக இருக்கிறது.
அவன்
தச்சனா தச்சனா
தச்சன் தானா?

இக்கவிதை 1963ல் வெளியாயிற்று. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைகளில் தலைசிறந்தனவற்றில் இதுவும் ஒன்று. இதில் ந.பி.மூ. தந்திருக்கும் கிரக சஞ்சார பலனை அத்துறை அறிந்தவர்கள் யாரேனும் விளக்கினால் நன்றாக இருக்கும். யாராவது செய்வார்களா?

பிப்ரவரி 4ஆம் தேதியை மறக்க முடியுமா?,,

அழகியசிங்கர்
இரண்டு ஆண்டுகளுக்கு  முன் பிப்ரவரி நாலாம் தேதி, ஒரு மதிய வேளையில் டிபன் பாக்ஸிலிருந்து மதிய உணவை எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.  கண்புரை காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன்.  அந்த மாதத்துடன் நான் பதிவு மூப்பு அடைகிறேன்.  ஆனால் அந்த மாதம் என்னவோ அலுவலகம் வருவதே பெரிய அவஸ்தையாக இருந்தது.  கம்ப்யூட்டரில் உள்ள எழுத்துக்கள் தெரியவில்லை.  பஸ் எண் தெரியவில்லை.  ஒன்றும் புரிபடாமல் இருந்தேன்.  சும்மா ஆபிஸ் வந்திருந்து, மதியம் வரை சும்மாவே ஆபிஸில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  மதியம் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் போன் வந்தது.
அந்தப் போன் நாயக்கன்மார் தெருவிலிருந்து மிஸஸ் ஐராவதம் போன் செய்தார்.  “என்ன?” என்று கேட்டேன்.  “என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.. திடீரென்று கீழே சாய்ந்து விட்டார்…ஆஸ்பத்ரிக்குப் போக வேண்டும்….வர முடியுமா?”
அதைக் கேட்டவுடன் பதட்டமாகி விட்டேன்.  என் வீட்டிலிருந்து ஐராவதம் வசித்த நாயக்கன்மார் வீடு பக்கம். வண்டியை இப்படித் திருப்பினால் நாயக்கன்மார் தெரு வந்து விடும்.  பொழுது போகவில்லை என்றால் பலமுறை அவர் வீட்டுக்குப் போய் வம்பளப்பேன்.  அவருக்குப் பல உதவிகளையும் செய்திருக்கிறேன்.  ஏடிஎம்மில் போய் பணம் எடுக்கக் கூட அவரால் முடியாது.  நான் துணைக்குப் போவேன். அவரை அழைத்துக் கொண்டு போய் பணம் எடுத்துக் கொடுப்பேன்.  கட்டாயம் வாரம் ஒரு முறையாவது பார்த்து விடுவேன். 
ஐராவதம் சாதாரண குடும்பத்திலிருந்து முன்னுக்கு வந்தவர்.  அவருடைய தந்தையார் ராணுவத்தில் தன் கால்களை இழந்தவர்.  ஜாப் டைப்பிங் மூலம் குடும்பத்தை நடத்தியவர்.  ஐராவதம் தன் திறமையால் ரிசர்வ் வங்கியில் பணியில் இருந்தவர்.  அவருடைய சகோதரர் வைத்தியநாதன் அவரை விட திறமையானவர்.  ஐராவதத்திற்கு கொஞ்சம் காது கேட்காது..அவர் சிரிக்கும்போது சத்தம் போடாமல் சிரிப்பார். சில சமயம் அவருக்குக் கோபம் வந்தால் கண்டபடி திட்டிவிடுவார். அவருக்கென்று வாரிசு கிடையாது.  
ஒரு முறை அவரைப் பார்த்துக் கேட்டேன் : “யாரையாவது சுவிகாரம் எடுத்துக்கொண்டு வளர்க்கக் கூடாதா?” என்று.  ஏனென்றால் அவருக்குக் குழந்தைகள் என்றால் பிடிக்கும்.  ஆனால் அவர் சொன்ன பதிலைக் கேட்டு எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.
“என்ன நாயா பூனையா வளர்க்க?” என்றார்.
இந்தக் குத்தல் நகைச்சுவை அவருக்கு இயல்பாக இருப்பது. நகைச்சுவையுடன் எழுதக் கூடியவர்.  பேசக்கூடியவர்.  அவர் உலக அளவில் பல புத்தகங்களைப் படித்திருக்கிறார்.  சரளமாக மொழிபெயர்ப்பார். பல உலக சினிமாக்களைப் பற்றிய அறிவு அவருக்கு உண்டு.  காது சரியாகக் கேட்காவிட்டாலும் இசைக் கச்சேரிகளுக்குப் போவார்.  பல பத்திரிகைகளில் அவர் கதைகள் வெளிவந்திருக்கின்றன.  ஒரு காலத்தில் வெளி வந்த பல சிறுபத்திரிகைகளுக்கு அவர்தான் விஷயதானம் செய்தவர். “கணையாழி நடத்திய கஸ்தூரி ரங்கனை விட தீபம் நா பார்த்தசாரதி நல்லவர். எழுத்தாளர்களை மதித்து படைப்புகளைப் பிரசுரம் செய்வார்.  எதாவது எழுதிக் கொண்டு போனால் ஏன் என்று கேட்காமல் பிரசுரம் செய்து விடுவார்,ýý என்பார்.
நான் விருட்சம் கொண்டு வரும்போது அவரிடம் அடிக்கடி போய் நிற்பேன்.  எதாவது எழுதித் தரச் சொல்வேன்.  தர்ம கீர்த்தி, ஆர் சுவாமிநாதன், வாமனன் என்று பல பெயர்களில் விருட்சத்திற்கு எதாவது எழுதித்தருவார்.  விருட்சத்திற்கு புத்தக மதிப்புரைக்காக அதிகமாக புத்தகங்கள் வரும்.  உடனே ஐராவதத்திடம் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் பார்த்துக் கொடுப்பேன்.  ஒரு வாரத்தில் எல்லாவற்றையும் படித்துவிட்டு கடகடவென்று எழுதித் தந்துவிடுவார்.  
இப்படித்தான் ஒரு முறை அவர் எழுதித் தந்த காலச்சுவடு ஆண்டுமலர் விமர்சனத்தையும் பிரசுரம் செய்து விட்டேன்.  அது பெரிய வம்பாகப் போய்விட்டது.  üதன்னை நவீன தமிழ் இலக்கிய உலகின் ஞானத்  தந்தையாக அறிவிக்க மேற்கொண்டிருக்கும் முயற்சிý என்று சுந்தர ராமசாமியைப் பற்றி எழுதி விட்டார்.  அந்த விமர்சனத்தைத் தாக்கி அந்த மலரில் எழுதிய எல்லா எழுத்தாகளர்களும் சுந்தர ராமசாமி உள்பட எனக்குப் பதில் எழுதினார்கள்.  சிலர் கடுமையாக எழுதினார்கள்.  
எம் வேதசகாயகுமார், üவாலிகளும் எழுத்துலகக் கூலிகளும்ý என்ற தலைப்பில், ஆனந்தவிகடனில் மூன்றாம்தர தமிழ்த் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதிக் கொண்டிருந்த நபர்களை, அதே பேனாவுடன் விருட்சம் இதழில் மதிப்புரை எழுத அழைத்து வந்தது யார்? என்று ஐராவதத்தைக் கேள்வி கேட்டு எழுதி இருக்கிறார்.  பின் முகமற்ற அசடு என்கிறார் ஐராவதத்தை.  ராஜ மார்த்தாண்டன் விமர்சன வக்கிரங்கள் என்ற தலைப்பில் ஐராவதத்தைச் சாடி உள்ளார்.  இப்படி ஒரு ஒன்றரை பக்க விமர்சனத்தால் ஐராவதம் என்னை வம்பில் மாட்டி விட்டார் என்று நினைத்தேன்.
அந்த விமர்சனம் வந்த சமயத்தில் நான் பத்திரிகையை நிறுத்தி விடலாம் என்று கூட நினைத்தேன்.  இந்த நிகழ்ச்சிக்குப் பின் நான் ஐராவதத்திடம் புத்தகவிமர்சனத்திற்காக புத்தகம் கொடுப்பதை கொஞ்சம்  குறைத்து விட்டேன்.     
ஒரு முறை ஐராவதம் அவர்களை இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாவிற்கு அழைத்துப் போனேன்.  அங்கு அவரைப் பார்த்த ந. முத்தசாமி அவர்கள் ஐராவதத்தைப் பார்த்து,”என்னைய்யா இந்தப் பக்கமெல்லாம் வந்திருக்கே?” என்று கேட்க, ஐராவதம் உடனே, “இதோ இவர்தான் என்னை (என்னைக் காட்டி) தூசித் தட்டி கொண்டு வந்திருக்கிறார்,” என்றார்.  அவரின் நகைச்சுவை உணர்வு என்னைச் சிரிக்க வைத்தது.  எதுவாக இருந்தாலும் மனதில் படுவதை டக்கென்று சொல்லிவிடுவார்.

இன்னொரு முறை லைப்ரரி போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம்.  கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடம்பு சரியில்லாமல் பிரமிள் படுத்துக் கிடந்தார்.  ஐராவதத்தைப் பார்த்து,  “நீங்கள் பிரமிளைப் பார்க்க வருகிறீர்களா?” என்று கேட்டேன்.

உடனே ஐராவதம், “நான் இங்கயே இருக்கிறேன்.. நீங்கள் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்…நான் அவருக்கு காட்சிப் பொருளாக இருக்க விரும்பவில்லை,” என்றார்.

இதுதான் ஐராவதம்.  எப்போதும் அவர் தனக்கென்று சிறப்பான உடை கூட வாங்கிப் போட்டுக்கொள்ள மாட்டார்.  ஒரு சுமாரான சட்டை அல்லது வேஷ்டியைத்தான் கட்டிக்கொண்டு இருப்பார்.   அவர் இருந்தத் தெருவில் ஆர்வி என்ற எழுத்தாளர் இருந்தார்.   ஐராவதத்தை ரொம்பவும் மதிப்பார்.   ஐராவாதமும்  ஆர்வி நாவல் ஒன்றின் பெயரைக்  குறிப்பிட்டு  அவர் எழுதியதில் அது சிறந்த நாவல் என்று கூறியிருக்கிறார்.   üஎப்போதும் மடிப்புக் கலையாத அயன் பண்ணியத் துணியைத்தான் ஆர்வி அணிந்து கொள்வார். தெருமுனை தூரம் நடப்பதற்குக் கூட இதுமாதிரி அணிவார்,ýஎன்று ஐராவதம் கிண்டல் செய்து கேட்டிருக்கிறேன்.

ஐராவதத்திற்கு செலவு செய்ய மனதே வராது.  ஒரு நல்ல ஓட்டலில் நிறையா செலவு செய்து டிபன் கூட வாங்கிச் சாப்பிட மாட்டார்.  சிக்கனமாக இருப்பார். அப்படிப் பார்த்த எனக்கு ஒரு ஆச்சரியம்.  ஐராவதத்திற்கு ஸ்கூட்டர், மிதிவண்டி, கார் எல்லாம் ஓட்ட வராது.  ஆனால் அவர் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டார்.  கார் உள்ளே போய் கார் சாவியை எப்படி திருப்புவது என்பது கூட அவருக்குத் தெரியாது.  டிரைவர்களை வைத்துக்கொண்டு பல கோயில்களுக்கு அவரும் அவர் மனைவியும் சென்றிருக்கிறார்கள்.  பல நண்பர்களை காரில் அழைத்துப் போயிருக்கிறார்கள்.   அந்தக் காரையும் வைத்துக்கொண்டு, டிரைவர்களுடன் அவர் நடத்தும் பேரம் கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.  நானே சில டிரைவர்களை அவருக்குப் பிடித்துக் கொடுத்திருக்கிறேன்.  “நீர் வண்டி ஓட்டக் கத்துக்கொள்ளய்யா..வண்டியை நீயே வைத்துக்கொள்..எப்பவாவது என்னை அழைத்துக்கொண்டு போகும்போது மட்டும் நீ வந்தால் போதும்,”என்று கூட கூறியிருக்கிறார்.

ஐராவதம் ரொம்ப நாட்களுக்கு முன்பே கதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டார். புத்தகங்களைப் படித்து அதைப் பற்றி எழுதுவதுதான் அவர் வாடிக்கையாக இருந்தது.   திறமை இருந்தாலும், அவரால் கதை எழுத முடியவில்லை.   அவருடைய மாறுதல், கெட்டவன் கேட்டது என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்தேன்.

பல புத்தகங்களைப் படித்து தொடர்ந்து விமர்சனம் செய்தவரின் புத்தகங்களின் மதிப்புரையை எந்தப் பத்திரிகையும் பிரசுரம் செய்யவில்லை. அவர் எழுத்தை கண்டுகொள்ளவும் இல்லை.  இதுதான் ஐரனி.   இன்னும் கூட அவர் கதைகள் பல பத்திரிகைகளில் புதைந்து உள்ளன.   அவற்றையெல்லாம் கண்டுபிடித்துத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வர உள்ளேன்.  மேலும் கவிதைகள். மொழிபெயர்ப்பு கட்டுரைகள், கதைகள் என்று ஏராளமாக அவர் எழுதியிருக்கிறார்.  மெல்லிய நகைச்சுவை உணர்வோடு ஐராவதம் மாதிரி யாராலும் எழுத முடியாது.     கடைசிக் காலத்தில் தெரு முனை கூட தனியாக அவர் நடக்கப் பயப்பட்டார்.  ஒரு முறை அப்படி நடந்து போகும்போது மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அதிலிருந்து அவர் மனைவி அவரை தனியாகவே அனுப்பப் பயப்படுவார்.

“ஏன் வீட்டில் இருக்கிறீர்கள்?  வெளியே வாருங்கள்,” என்பேன்.

“எங்கும் வெளியே வரத் தயாராய் இல்லை,” என்பார்.  வீட்டிலேயே நான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று சொன்னவர் அதன்படி மனைவியின் மடியிலேயே இறந்து விட்டார்.  அப்படித்தான் அவர் முடிவும் நடந்தது.  அவரைப் பார்க்க நான் ஆட்டோவில்  வந்தபோது, பிணமாகத்தான் அவரைப் பார்க்க நேர்ந்தது.  அன்று நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு பளிச்சென்று இருந்தார் ஐராவதம்.  
 
 

சிறியதே அழகானது

பிரபு  மயிலாடுதுறை
30.01.2016 அன்று சென்னையில் நடைபெற்ற – எனது நண்பரும் 
எழுத்தாளருமான அழகியசிங்கரின் மனைவி திருமதி. மைதிலி அவர்களின் 
பணி நிறைவு விழா நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன்.  நெகிழ்வான உணர்வு 
பூர்வமான நிகழ்வாக அது அமைந்திருந்த்து.  தமிழ் இலக்கியம், வாழ்வை 
அகம் புறமென பகுத்து வகுத்துக் கொள்கிறது.  குடும்ப உறவுகளை 
அகமென்றும் சமூக உறவுகளை புறமென்றும் கூறமுடியும்.  வீட்டினை 
அகம் என்கிறோம்.  வீட்டிற்கு வெளியே புறம் என குறிக்கிறோம்.  இந்த 
நூற்றாண்டிலும் சென்ற நூற்றாண்டிலும் தமிழர்களின் சமூக 
வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தால், விவசாய வாழ்க்கை 
முறையிலிருந்து பகுதியளவு வியாபார-வணிக வாழ்வுக்கும் பகுதியளவு 
தொழில் சார்ந்த வாழ்வுக்கும் நகர்ந்திருப்பதைக் காண முடியும்.    
இன்றும் பெருமளவு மக்கள் விவசாயம் சார்ந்த வாழ்க்கை முறையிலும், 
மனோபாவத்திலும் நீடித்திருப்பதைக் காண முடியும். சுதந்திர இந்தியாவில், 
இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாட்டை ஆண்ட போது கல்விக்கு 
முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கல்வி பரவலாக்கப்படுவதற்கான 
முயற்சிகள் துவங்கப்பட்டன.  தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் 
திரு. இராஜாஜியும் திரு. காமராஜும் அம்முயற்சிக்காக நன்றியுடன் 
நினைவுகூரத் தக்கவர்கள். பெண் கல்விக்கும் தமிழகத்தில் கல்வி 
பரவலாக்கப்பட்டதற்கும் அவர்களே காரணம். 
அகத்திற்கும் புறத்திற்குமிடையே ஒரு சமநிலையைக் கொண்டு 
வருவது என்பது இன்றைய வாழ்வில் ஒரு முக்கியமான விஷயமாக 
இருக்கிறது.  பல்வேறு விதமான சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் 
கலாச்சார காரணிகள் நமது அக மற்றும் புற வாழ்வை பாதிக்கின்றன.  
அவற்றை எதிர்கொண்டு கடந்து செல்வதையே நாம் வாழ்க்கைப்பாடு 
என்கிறோம்.  சமூகக் கூறுகள் குடும்ப வாழ்விலும், குடும்ப வாழ்வின் 
அம்சங்கள் சமூக உறவுகளிலும் பாதிப்பினைச் செலுத்துவதற்காக உள்ளன.  
தனிமனிதர்களின் ஆற்றலும் ஆளுமைத் திறனுமே அக மற்றும் புற 
வாழ்வில் ஒத்திசைவு ஏற்படுவதைத் தீர்மானிக்கின்றன.  மகாத்மா காந்தி 
பெண் கல்விக்கான தேவையையும் அவசியத்தையும் உணர்ந்தவர்.  அவர் 
காலத்தில் ஊக்கமின்றி தேங்கியிருந்த சமூகத்திடம் பெண்கள் பொது 
வாழ்வில் பங்கெடுக்க வேண்டும் என்ற அறைகூவலை விடுத்தவர்.  
பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட்டாக வேண்டும் என்ற வாதிட்டவர் சமூக 
மாற்றமும் முன்னேற்றமும் பெண்கள் வாழ்வில் மாற்றமின்றி நிகழவே 
இயலாது என நம்பியவர்.  குடும்பங்களின் அவல நிலைக்கும் பெண்களின் 
கண்ணீருக்கும் காரணமாக இருந்ததாலேயே மதுவினை சமரசமின்றி 
எதிர்த்தவர்.  மகாத்மா காந்தியின் தலைமைக்குப் பின்னான இந்திய 
தேசிய காங்கிரஸே இந்தியப் பெண்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனையை 
உருவாக்கியது என்பது மிகையல்ல.  அகத்தில் சிறையுண்டிருந்த பெண்கள் 
நாடு சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்காக – 
ஆயிரக்கணக்காக – இலட்சக்கணக்காக பள்ளி கல்லூரிகளுக்கு சென்றனர்.  
மொழியும், கணிதமும், அறிவியலும், வரலாறும் பயின்றனர்.  அரசுத் 
துறைகளிலும், தனியார் துறையிலும் பணி புரியத் தொடங்கினர்.  சுதந்திர 
இந்தியாவின் பெரும் சாதனைகளில் ஒன்று பெண்கள் படிக்கவும் 
வேலைவாய்ப்பை பெறவும் ஏற்படுத்தித்தரப்பட்ட வாய்ப்பு.  படித்த-
வேலைக்குச் செல்லும் – பெண்களின் வாழ்வு என்பது ஒரு தனிப்பட்ட 
பெண்ணின் உலகியல் மட்டுமல்ல  ; அது ஒரு குறியீடு ; சமூக 
மாற்றத்தின் அடையாளம்.  நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி 
நடக்கக் கூடும் என அனுமானித்திருக்கக் கூட மாட்டார்கள்.  ஐம்பது 
ஆண்டுகளுக்கு முன்னால் இது சாத்தியமா என மலைத்திருப்பார்கள்.  
இன்று பெண்களின் படிப்பும், வேலைவாய்ப்பும் நடைமுறை யதார்த்தமாகி 
உள்ளது. 
எனது தொழில் நிமித்தமாக பல்வேறு அரசு அலுவலகங்களின் 
படிக்கட்டுகளை ஏறி இறங்கியவன் என்ற வகையில் எனது அபிப்ராயம் : 
பெண்கள் அதிகாரிகளாகவும், அலுவலர்களாகவும் உள்ள போது ஒரு 
குறைந்தபட்ச நியாயம் பேணப்படுகிறது.  இழுத்தடிப்புகள் இருப்பதில்லை.  
அரசுத் துறையிலும் தனியார் நிறுவனங்களிலும் ஊக்கத்துடன் பணி 
புரியும் பெண்களே இந்திய சமூக மாற்றத்தின் உண்மையான முகங்கள்.  
வீட்டின் பணிகளை செய்து முடித்து குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து 
அலுவலகத்தின் பணி நெருக்கடிகளை சமாளித்து மீளும் காரியத்தை 
வாழ்நாளின் பெரும்பகுதி மேற்கொள்வது என்பது ஒரு பெரும் சவால், 
இந்தியப் பெண்கள் அதனை எதிர்கொள்கின்றனர் என்பதே அவர்களின் 
பெரும் வெற்றி. 
திருமதி. மைதிலி அவர்கள் 1976ம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் 
வங்கியில் பணியில் இணைந்திருக்கிறார்.  சக ஊழியர்கள் அவரைப் பற்றி 
சொல்லும் போது வங்கி வாடிக்கையாளர்களின் பெயரையும் கணக்கு 
எண்ணையும் துல்லியமாக ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடியவர் என்று 
பாராட்டிச் சொன்னார்கள்.  வாடிக்கையாளர்கள் அவரைப் பற்றி பேசும் 
போது வங்கிச் சேவையை விரைவாக மலர்ந்த முகத்துடன் வழங்கக் 
கூடியவர் என்ற சொன்னார்கள்.  எடுத்துக் கொண்ட பணியை மனதளவில் 
முழுமையாக ஏற்றுக் கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒருவரே 
இத்தகைய பாராட்டைப் பெற முடியும்.  தனது நாற்பதாண்டு கால 
பணியில் அலுவலகத்திலும் வீட்டிலும் நல்ல பெயரெடுத்து பணி நிறைவு 
பெற்றிருக்கிறார்.  நமது சமூகம் அரசியலில் உள்ள பெண்களையே 
முக்கியமாக எண்ணி பழகியிருக்கிறது.  அவர்கள் விரல் விட்டு எண்ணக் 
கூடியவர்கள் ; மிகக் குறைவானவர்கள்.  குடும்பத்தின் கடமைகளையும் 
சமூகப் பொறுப்புகளையும் திறம்படக் கையாண்ட – கையாளும் திருமதி. 
மைதிலி போன்ற நுண்புரட்சியாளர்களான நூற்றுக்கணக்கான – 
ஆயிரக்கணக்கான – இலட்சக்கணக்கான பெண்களே இந்தியப் பெண்களின் – 
இந்திய சமூக மாற்றத்தின் உண்மையான முகங்கள்.  அன்னை பூமிக்காக 
மகாத்மா உயிர் நீத்த ஜனவரி 30 அன்று திருமதி. மைதிலி அவர்கள் 
புகழுடனும் பாராட்டுடனும் பணி நிறைவு பெற்றது குறியீட்டுரீதியில் 
மகாத்மாவுக்கு செலுத்தப்பட்ட ஓர் அஞ்சலியும் கூட!

ஜெயமோகனின் அறம்

டாக்டர் ஜெ.பாஸ்கரன்


அறம் என்பது நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையைக் குறிப்பிடும் சொல் –
ஒரு மனிதக்குழு அல்லது ஒரு தனி மனிதன் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் நெறிகள், இறுதியாக வகுத்துக் கொண்ட நடத்தைகள், செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை, செய்தே ஆக வேண்டியவை அடங்கிய ஒரு வழி காட்டித் தொகை – அதுவே அறம்
2014, ஜனவரி புத்தகக் கண்காட்சியில் எல்லா ஸ்டால்களிலும் அழகாக அடுக்கிவைக்கப் பட்டிருந்தது அந்தப் புத்தகம். இரண்டு முறை கையிலெடுத்து, நானூறு பக்கங்கள் என்றவுடன் கீழே வைத்துவிட்ட புத்தகம் – நண்பர் சந்துரு, எதிர்பாராத ஒரு நொடியில், பரிசாகக் கொடுத்து என்னை வியக்க வைத்த புத்தகம் ஜெயமோகனின் “ அறம் “ ! வம்சி வெளியீட்டில் ‘ சிறுகதைகள் ‘ தொகுப்பு – தனது இணையதளத்தில் தொடர்ச்சியாக எழுதி வாசகர்களைக் கட்டிப்போட்ட உண்மைக் கதைகள். நேரடியாகவும், மறைமுகமாகவும் நம் கண்முன்னே ரத்தமும், சதையுமாக உலவிய பல ஆளுமைகளின் ‘ அறநெறி ‘ சார்ந்த கதைகள். அவற்றில் புனைவு என்பது, ஜெயமோகன் கதை சொல்லும் முறை மட்டுமே! பத்துப் பக்கம் படித்தால், கண்மூடி, இதயத்தினூடே கசியும் ஏதோ ஒன்று – வருத்தம், மகிழ்ச்சி, வெறுப்பு, ஆச்சரியம், பச்சாதாபம் – மனம், உ̀டல் அனைத்திலும் படர்ந்து நம்மை செயலிழக்கச் செய்கிறது ! அட, மானுட வெற்றி தோல்விகளில் இத்தனை அறம் சார்ந்த நிகழ்வுகளா !
கி.ரா., நாஞ்சில் நாடன், பூமணி, சொ.தருமன், பெருமாள் முருகன் – இவர்கள் சொல்லும் வட்டாரக் கதைகள் போன்றே இந்தக் கதைகள், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் சார்ந்த ( கேரள மணத்துடன் கூடிய தமிழ் நாடு ) மனிதர்களைப் பேசுகின்றன. சாதி, மத பேதமின்றி, அனைத்துத் தரப்பிலும்  – எந்தத் துறையிலிருந்தாலும், வாழ்வின் எந்தத் தட்டிலிருந்தாலும் அறம் சார்ந்த மனித இயல்புகளை நடு நிலையுடன் விவரித்துச் செல்கின்றன. நாட்டார் தமிழ், தமிழ் கலந்த மலையாளம், மலையாளம், பிராமண பாஷை என பிரமிக்க வைக்கிறது கதை மாந்தர்களின் உரையாடல்கள் – அதுவே கதைக் களத்திற்கு வாசகனை கை பிடித்து அழைத்துச் செல்லும் மந்திரக்கோலாகிறது !
புத்தகத்தின் இறுதியில் சுவாரஸ்யமான கதை போல இக்கதைகளில் வரும் சில ஆளுமைகள் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு இருக்கிறது. அதில் குறிப்பிடாமல் விடப்பட்ட சில ஆளுமைகளை ஓரளவுக்கு யூகிக்கலாம் – சமூக, கலாச்சார விதிகள் கருதி, அவை சொல்லாமல் விடப்பட்டிருக்கலாம் ! அது ஜெயமோகன் அவர்களின் அறம்!
“ இலட்சியவாதத்தில் ஊன்றி வாழ்ந்த உண்மை மனிதர்களின் வாழ்க்கை வழியாக, அவர்களை மதிப்பிடும் கண்கள் வழியாக என் வினாக்களை நானே எழுப்பிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். இந்தக் கதைகள் அனைத்தும் அந்த பொதுத் தன்மையில் அமைந்தவை “. 
“ இலட்சியவாதம் நிற்கும் சுழலின் இருட்டுடனும் குப்பையுடனும் அது கொள்ளும் உரையாடலையே இக்கதைகள் முன்வைக்கின்றன “ என்கிறார் ஜெயமோகன். இலட்சியவாதம் என்னும் பிரம்மாண்டம், சில ஆளுமைகளின் தனித் தன்மையாக ஒளிர்வதையும், அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் ஏமாற்றங்களையும் சார்பின்றி விவரித்துச் செல்வதிலேயே ஜெயமோகனின் அறம் நம்மை முழுமையாக ஆட்கொண்டுவிடுகின்றது !
வாசித்து அனுபவிக்கவேண்டியவை அறம் கூறும் கதைகளும், அவற்றின் வாழ்க்கைப் போராட்டங்களும் – 
‘அறம்’ – பதிப்பாளரின் மனைவி ‘ஆச்சி’ தொடுக்கும் அறப்போராட்டத்தின் வலியையும் அதன் வெற்றியையும் விவரிக்கிறது. “லச்சுமி வருவா போவா… சரஸ்வதி ஏழு சென்மம் பாத்துத்தான் கண்ணு பாப்பான்னு சொல்லுவாங்க.. நீங்க பெரியவரு. என் வீட்டு முற்றத்துலே நிண்ணு கண்ணீர் விட்டுட்டீங்க…அந்தப் பாவம் எங்க மேலே ஒட்டாம உங்க சொல்லுதான் காக்கணும்னு சொன்னா. என்னா ஒரு சொல்லு, தங்கக் காசுகளை எண்ணி எண்ணி வைக்கிறா மாதிரி… முத்துச்சரம் மாதிரி.. “ அறமே அந்த ஆச்சியிடம்தான் இருந்ததாக முடிக்கிறார். 
‘வணங்கான்’ அப்பா வைத்த காரணப் பெயர் – கண்முன்னே பிரிட்டிஷ் ராஜ்ஜியம், ஜமீந்தார்கள் ஆதிக்கம், அரசு அலுவலில் ஒடுக்கப்பட்ட ஒருவர், எழுச்சிமிக்க வழக்கறிஞர் எனக் காட்சிகள் விரிகின்றபோது, நாமும் அந்தக் காலத்திற்கே ஒரு பார்வையாளராகச் சென்றுவிடுகின்றோம். ‘ நாடார்களிலே பல தரங்கள் உண்டு ‘; ‘சொந்தமாகப் பெயர் வைத்துக்கொள்வது கூட ஆடம்பரம் – நாய்க் குட்டிக்குப் பேர் வைப்பதைப் போல ‘ என்கிறார். அதிலும் ‘சாதியுள்ள பண்ணையார்களின் வீட்டு நாய்களைச் சொல்லவில்லை. அவற்றுக்கு நல்ல பெயர்கள் இருக்கும். தெரு நாய்களைச் சொன்னேன்’. அன்றைய சமூக அவலங்களை இப்படி இடித்துரைக்கிறார் ஆசிரியர் !
‘யானை டாக்டர்’ – உலகப் புகழ்பெற்ற விலங்கியல் மருத்துவர், தமிழக வனத்துறையில் பணியாற்றியவர், விலங்குகளின் குணாதிசயங்கள் பற்றி ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளவர் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி. யானைகளுக்கு மயக்க ஊசி போட்டு, விழவைத்து மருத்துவம் செய்வதில் நிபுணர். அதிகமான யானைகளுக்குப் பிரசவம் பார்த்தவர் ! அவரது வாழ்க்கை வனங்களையும், அங்கு வாழும் மிருகங்களையும் சுவாசித்து உயிர்த்த ஒன்று. “ அங்கே வலி உண்டு. நோய் உண்டு. மரணம் உண்டு. ஆனால் கீழ்மை இல்லை. ஒரு துளிகூடக் கீழ்மை இல்லை. உன்னை நன்கறிந்த எவரும் அருவெறுத்து விலகுவர். உயிர் கொண்ட கீழ்தரப் புழுதியே நீ “ என்னும் யானை டாக்டரின் அறம் மனிதர்களினும் மேலான விலங்குகள் சார்ந்தது. ஒருநாள் இரவு, யானை வாசம் அறிந்து, வாசலில் வந்து நிற்கும் யானைக்குட்டியின் வலியறிந்து சிகிச்சை அளிக்கிறார் – வனத்தில் சுற்றுலா வந்த பயணிகள் வீசிய உடைந்த பீர் பாட்டில் காலில் குத்தி, காயப்படுத்தியிருந்தது. சிகிச்சைக்காக டாக்டரைத் தேடிப் பல மைல்கள் வலியுடன் நடந்து வந்திருக்கும் யானைக்குட்டியும், சிகிச்சை முடிந்து நன்றியுடன் திரும்பும் குட்டியை அழைத்துச் செல்லும் இருபதுக்கும் மேற்பட்ட யானைகளின் மகிழ்ச்சியும் வியப்பூட்டுகின்றன! யானைகளுடன் டாக்டர் ஏற்படுத்தியிருக்கும் பந்தம் பிரமிப்பூட்டுகிறது.
‘சோற்றுக்கணக்கு’ – கெத்தேல் சாகிப், மனித உருவில் தெய்வம். வயிற்றுப் பசிக்கு சாதி,மதம்,ஏழை,பணக்காரன் வேற்றுமை கிடையாது என்பதை உணர்ந்தவர். அவரது அன்பு முரட்டுத்தனமானது. அவரைச் சுற்றிச் சுழலும் கதையில் வரும் பாத்திரங்கள் வறுமையின் ருசியறிந்தவை; வறுமை உரசி உரசி மூளை மழுங்கியவை – இவர் தாராளமாய்த் திணிக்கும் சோற்றுக்கும் கறிக்கும்  நன்றியுடன் இருப்பவை. காசு கூட எதிர்பாராமல், வயிறு முட்ட முட்டச் சோறு போடும் கெத்தேல் சாகிப் அறம், மனித நேயத்தில் தோய்ந்தது. 
‘நூறு நாற்காலிகள்’ – தலைமுறைகள் சமுதாய மாற்றத்தை – வீட்டிலும், வெளியிலும் – எப்படி எதிர்கொள்ளத் தயங்கித் துன்புறுகின்றன என்பதை அழுத்தமாகச் சொல்கின்றது. ஜெயமோகனின் சொல்லாமல் புரியவைக்கும் திறமை, எழுதாத எழுத்தின் வலிமை இக்கதை முழுவதும் விரவியிருக்கிறது. காப்பாவுடன் சேர்ந்து நாமும் பதறுகிறோம், வலியறிகிறோம், அழுகிறோம், புகைக்கிறோம், மனதுள் புகைகிறோம்; இறுதியில் அதிகார நாற்காலிகளைக் கண்டு மிரளுகிறோம் !
‘பெருவலி’ – கோமல் சுவாமிநாதன் தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் இதழாளர். அவருக்கு முதுகில் புற்று நோய். அதன் வலி கொடுமையானது. மரண அவஸ்தை – கண்ணெதிரே உடனேயே வந்த மரணத்துடன் பயணித்த அனுபவம். அந்தப் பெருவலியுடன் அவர் சென்றுவந்த கைலாச மலை யாத்திரை. வலியை மீறி அவர் வாழ்க்கை மீது கொண்டிருந்த தத்துவார்த்த நம்பிக்கை, அதன் ஏற்ற இறக்கங்கள் –  கேட்கிறார் கோமல் : “ வலிங்கிறது வாழ்க்கை. வாழ்க்கை மேலே படியற மரணத்தோட அதிர்வு. வாழ்வும், மரணமும் இல்லாத எடத்துலே ஏது வலி ? “  கைலாச மலையைப் பார்த்து சொல்கிறார், ‘ எங்க இருக்கே ? இருக்கியா ? நீ இல்லாம இருந்தா நல்லா இருக்கும்னு வாழ்நாளெல்லாம் ஆசைப்பட்டேனே. நீ இல்லாத எடத்திலே எதுவும் நடக்கலாம். நீ இல்லேன்னா எல்லாத்தையும் நியாயப்படுத்திடலாம். நீ இல்லேன்னா எல்லாத்துக்கும் வேற அர்த்தம் வந்துர்றது ‘.  ஜெயமோகனோடு நாமும் கலங்குகிறோம்.
ஒவ்வொரு கதையும் ஒரு நாவலாகும் அளவுக்கு விபரங்கள். முழு தொகுப்பையும் வாசித்து முடித்தபோது, அதன் ஆளுமைகளின் அறநெறி ஜெயமோகன் அவர்களை முழுமையாக ஆட்கொண்டிருந்ததை உணர முடிந்தது.   டாக்டர் சாமர்வெல் (ஓலைச்சிலுவை), காரிடேவிஸ் (உலகம் யாவையும்), பூமேடை ராமையா (கோட்டி) இவர்களைச் சுற்றிச் சுழலும் கதைகளில் சமூக அக்கறையே முக்கிய அறம் சார்ந்த இழை. தாயார்பாதம், மயில் கழுத்து இரண்டு கதைகளிலும் மறைந்திருக்கும் ஆளுமைகள் இசை, இலக்கியம் சார்ந்தவர்கள் – மத்தறு தயிர் ஒரு பேராசிரியரின் அறம் குறித்தது. அறம், அறத்தை மீறிய வாழ்க்கை என முகத்தில் ஓங்கி அறையும் எழுத்து இந்தக் கதைகளுக்குச் சொந்தம்.
ஜெயமோகன் அவர்கள் சில முக்கிய மனிதர்களின் வாழ்க்கைச் சரிதங்களின் விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருந்தார் – அந்தப் புத்தகம் நாம் அறிந்த ஆளுமைகளின் அறிந்திராத பக்கங்களை, வியக்கும் வகையில் வெளிப்படுத்தியிருந்தது. ‘ அறம் ‘ நாம் அதிகம் அறிந்திராத ஆளுமைகளின் தர்மம் சார்ந்த வாழ்வினை ஒருவித தார்மீகக் கோபத்துடனும், கழிவிரக்கத்துடனும் சொல்கிறது – வாசித்து வெளியே வரும்போது உலகம் வேறு மாதிரியாகவும், உள்ளம் புழுக்கத்துடனும் மாறிவிடுவது, ஜெயமோகனின் வெற்றி ! ( இதை எழுதிய பிறகு படித்துப் பார்த்தேன் – அறம் வாசித்து முடித்தபோது ஏற்பட்ட கடல் அளவு உணர்வுகளின் ஒரு துளியைக் கூட என்னால் வெளியிட முடியவில்லை என்பதே உண்மை – முடியுமா என்பது விடையில்லாத கேள்வி !)
.

மறந்து போன பக்கங்கள்….


அழகியசிங்கர்



தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள நான்காவது கவிதை சிறை.  சில கவிதைகள் வாசித்தால் எளிதாக நம்மை நோக்கி வரும். மிகக் குறைவான வரிகள் கொண்ட இக் கவிதை எதை நோக்கி எழுதப் பட்டிருக்கிறது. கனிக்குள்ளே இருந்து பிரிந்த தரு.  திரும்பவும் கருவாய் உருவாகிறது.  அதேபோல் நமது சிந்தை, சொற்கள், செயல் வாழ்க்கை மூலம் நம் வாழ்க்கையின் தத்துவத்தை நாம் சிலசமயம் தாண்டி வந்து விடுகிறோம். சிலசமயம் தத்தவத்துள் அடங்கி விடுகிறோம்.  ஏதோவிதத்தில் நாம் சிறையில் இருக்கிறோம்.  விரும்பினால் சிறையிலிருந்து விடுபடலாம். 

சிறை

தருவின் பிரிந்த கனிக்குள்ளே
தருவே கருவாய் உருவாச்சு.
தத்துவத்தைத் தாண்டிவந்தோம்;
தத்துவத்துள் தடைப்பட்டோம்
ஆம், நமது சிந்தை,
சொற்கள், செயல், வாழ்க்கை
எல்லாம் தான்!

புத்தக விமர்சனம் 16

அழகியசிங்கர்
சுருதி என்கிற நகுலனின் கவிதைத் தொகுதி ஏனோ என் புத்தகக் குவியலில் கண்ணில் பட்டது.  எடுத்து வைத்துக் கொண்டேன்.  தாரணி பதிப்பகமாக இப் புத்தகம் 1987ஆம் ஆண்டு வந்துள்ளது.  அப்போது இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 10/-.  உடனே இப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.  மொத்தம் 42 பக்கங்கள். 
ஆரம்பத்திலிருந்து நகுலனின் என்ற எழுத்துகளின் வாசகன் நான். தொடர்ந்து நகுலன் நாவல்களைப் படித்து வந்தால், ஒருவித குழப்பம் ஏற்படும். எல்லா நாவல்களிலும் ஒருவிதத் தொடர்ச்சி இருப்பதுபோல் படும்.  அவருடைய எழுத்து எளிமையான எழுத்து.  நினைவோடை தன்மை கொண்ட எழுத்து.  அவருடைய படைப்புகளைப் படிக்கத் தொடங்கும்போது நம்மிடம் நகுலன் நேரிடையாகவே பேசுவதுபோல் தோன்றும்.  நகுலன் எழுத்தில் காணப்படும் குழப்பம் அல்லது படிப்பவர்களுக்கு ஏற்படும் மன சஞ்சலம் அசோகமித்திரன் எழுத்தில் காணப்படுவதில்லை.  அசோகமித்திரன் எல்லாவற்றையும் தெளிவாக சொல்ல வல்லவர்.  
சுருதி என்ற இக் கவிதைத் தொகுதியைப் படிக்கும் போது, திரும்பவும் இன்னொரு முறை இன்னொரு முறை என்று படிக்கத் தூண்டுகிறது. பத்திரமாக இப் புத்தகத்தை வைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது.
இக் கவிதைத் தொகுதி பற்றி…பின்னால் நகுலன் எழுதியிருக்கிறார்.  இந்தத் தொகுதியில் மொத்தம் 36 கவிதைகள்.  நகுலன் இப்படி எழுதுகிறார் :
‘சமீபத்தில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் காரணமாக கவிதை, கதை, நாவல் இவைகளை எழுதுவது முக்கியமன்றி, அவைகளைப் பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன்,’ என்று எழுதுகிறார்.
பொதுவாக நகுலன் புத்தகத்தை யாரும் வாங்கிப் படிக்க மாட்டார்கள்.  இதைக் குறித்து அவர் பேசும்போது üஎன் புததகத்தை 50 பிரதிகள் அடியுங்கள்.  50 பேர்கள் தான் இருப்பார்கள் படிக்க.  அவர்களிடம் கொடுத்து விடுங்கள்,ýý  என்பார்.
நகுலனின் கவிதைகளை வாசிப்பவர்கள் தரமான வாசகர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் இத் தொகுதியைப் பற்றி பேசும்போது, வாசகர்கள் படித்துத் தெரிந்து கொள்வார்கள் என்கிறார்.
உண்மைதான் நகுலனைப் படிக்க அலாதியான மனநிலை வேண்டும்.  
மேலும் அவர் கவிதைகளைப் படிக்கும்போது எளிமையான அனுபவம் நமக்குக் கிட்டினாலும், நம்மை அவருடைய வரிகள் திரும்ப திரும்ப யோசிக்க வைக்கும்.
உதாரணமாக,
தேடல் என்ற தலைப்பிட்ட கவிதையைப் படிக்கவும்.
எதைத் திறந்தால்
என்ன கிடைக்கும்
என்று 
எதை எதையோ
திறந்துகொண்டே 
இருக்கிறார்கள்.
மிகச் சில வரிகளைக் கொண்ட இக் கவிதை, படிக்க சுலபமாக இருப்பதோடல்லாமல், நம் மனதை விட்டு இக் கவிதை அவ்வளவு எளிதாக போக விரும்புவதில்லை.  இக் கவிதையை நாம் படித்தது ஒரு முறை என்றாலும் திரும்ப திரும்ப நம்மை யோசிக்க வைக்கிறது ஏன்? 
நகுலன் அவர் கவிதைகளை மனதிலிருந்து எழுதுகிறார்.  புறவயமான தன்மையைக் கூட அகவயமான பார்பையுடன் பார்க்கிறார். அதனால்தான் அவர் கவிதைகளை ஒரு முறை நாம் படித்தாலும் பலமுறை நம்மை யோசிக்க வைக்கிறது.  
குழப்பம் என்ற இன்னொரு கவிதையைப் படியுங்கள்.
பார்த்துக்கொண்டே
நின்றேன்
மண்டை உடையாமலிருக்க
விநாயகர் சிலை முன்
ஒரு தேங்காய்
உடைந்தது
யாருடைய குரூரம
அல்லது நகைச்சுவை 
என்று 
மனம் குழம்பினேன்.

ஏன் இப்படி கூறுகிறார்?  தேங்காயை உடைப்பது பக்தி பெருக்கால் என்று சொல்லாமல் யாருடைய குரூரம் அல்லது நகைச் சுவை என்று ஏன் கூறுகிறார்.  இதுதான் நகுலன்.  படிப்பவரை பலவிதமாக யோசிக்க வைக்கிறார்.  இன்னும் இன்னும் படிக்க வேண்டுமென்று தூண்டுகிறார்.
சுருதி என்கிற கவிதையில்,
ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி/ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா 
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
இவ்வளவு சொன்ன நகுலன், ஏன் சாவிலும் ஒரு சுகம் உண்டு என்கிறார். ஏன் அப்படி சொல்கிறார்?  இதுதான் நகுலன்.  வாசகனை யோசிக்க வைக்கிறார்.  மேலும் இவர் கவிதைகள் எல்லாம் மரணத்தைச் சுற்றி சுற்றி வருகிறது.  அதனால்தான் இவர் கவிதைகள் வசீகரமாகத் தோன்றுகின்றனவோ என்று நினைக்க வைக்கிறது.
இன்னொரு விஷயமும் இவரிடம் உண்டு.  இவர் கவிதைகளை வாசிக்கும் சிலர் இதெல்லாம் கவிதையா என்று கூட சொல்லக்கூடும்.
நான் என்ற கவிதை
நான்
சரி
நான் மாத்திரம்
சரியே சரி.
ஆனால் நான் அவர் கவிதைகளைப் படிக்கும்போது,  அதில்தான் பல அர்த்தங்களைக் கொண்ட தளங்களை உருவாக்குவதுபோல் தோன்றும்.  
உண்மையில் அவர் கவிதைகளைப் படிக்கும் நானும் சரி, நீங்களும் சரி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
சுருதி – கவிதைகள் – நகுலன் – முதல் பதிப்பு – 1987 – மொத்தப் பக்கங்கள் : 42 – விலை ரு.10 – தாரணி பதிப்பகம்- ட்டி எம் நந்தலாலா, 476 கேசவலு நகர், கள்ளக்குறிச்சி 606 202
  

பாஜிராவ் மஸ்தானி

பிரபு மயிலாடுதுறை

சில ஆண்டுகளுக்கு முன்னால், மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பகல் நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.  அது செல்ஃபோன் பிரபலமாகிக் கொண்டிருந்த காலம்.  நான் பேருந்தின் கடைசி வரிசைக்கு முன்னால் இருந்த இடதுபக்க இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தேன்.  புதுச்சேரி பேருந்து நிலையத்தில் ஓர் இளைஞன்  ஏறினான்.  கடைசி வரிசையின் நடுவில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.  அவனது தோற்றம், கைப்பை, காலணிகள் மற்றும் அவன் கையிலிருந்த புத்தகங்கள் இவற்றைக்கொண்டு அவன் பொறியியல் மாணவனாக இருக்கக் கூடும் என கணித்தேன்.  பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது இரண்டு கல்லூரி மாணவிகள் புதுச்சேரி பொறியியல் கல்லூரி அருகே ஏறினர்.  கடைசி வரிசையில் மட்டுமே இடம் இருந்தது.  அம்மாணவனுக்கு அருகே அமர்ந்து கொண்டனர்.  ஒரே வகுப்பில் படிப்பவர்களாக இருக்கக் கூடும்!   புதுச்சேரியிலிருந்து சென்னை வரை உரையாடிய வண்ணம் இருந்தனர்.  ஒரு பெண் அவ்வப்போது தூங்கி எழுந்து உரையாடலில் இணைத்து கொண்டாள்.  அவள் உரையாடும் போது இன்னொரு பெண் தூங்கினாள்.  மோட்டலில் வண்டி நின்ற போது அம்மாணவன் தான் இறங்கிச் சென்று குடிநீர், பிஸ்கட் மற்றும் நொறுக்குத் தீனி வாங்கி வந்து தந்தான். அவர்களுக்கான பயணச்சீட்டையும் அவன் தான் எடுத்தான்.
அவர்கள் பல விஷயங்களைப் பேசினர்.  மேத்தமேடிக்ஸ் – 4 என்ற தாளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.  ஃபோரியர் சீரிஸ்,  ஆய்லர் தேற்றம் என்ற வார்த்தைகள் காதில் விழுந்தன.  எழுபது ஐந்து மதிப்பெண்களுக்கு எழுதிய தேர்வில் அறுபத்து ஐந்து மதிப்பெண்கள் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அப்பெண் இருந்தாள்.  கிடைக்காத பத்து மதிப்பெண்ணுக்காக 
வருந்தினாள்.  தோழிகள் தான் குழப்பி விட்டனர் என அங்கலாய்த்தாள்.  “இட் இஸ் ஆள் இன் எ கேம்” என்றாள். அது அவளுக்கு உவப்பான வாக்கியம் போலும்! அடிக்கடி அதனைபிரயோகித்தாள்.  அவர்கள் பேருந்தில் உரையாட ஒரு பாணியை பின்பற்றுவதை நான் பேருந்தில் ஏறியதுமே கவனித்தேன்.
பேருந்தில் ஏறியதுமே அவர்கள் உரையாடத் துவங்கவில்லை.  முன்னிருக்கையில் இருப்பவர்கள் ஓய்வு நிலைக்கு செல்லும் வரை பேசாமல் இருந்தனர்.  அப்பெண்கள் வந்து அமர்ந்ததும் அந்த இளைஞன் அவனே நடத்துனரிடம் சென்று பயணச்சீட்டு வாங்கி வந்தான் என்பதை நடத்துனர் அப்பெண்களிடம் சீட்டு வழங்க அவர்கள் இடத்துக்கு வராததிலிருந்து யூகித்துக் கொண்டேன்.  என்ஜின் சத்தத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்பவே அவர்கள்  உரையாடலின் ஸ்தாயி இருந்தது. என்ஜின் சத்தம் அதிகமாக இருக்கும் போதே உரையாடினர்.  நிறுத்தங்களில் வண்டியை நிறுத்த ஓட்டுனர் வாகனத்தை மெதுவாக இயக்கினால் பேச்சு நின்று விடும்.  பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்குமே அவர்களைப் பற்றிய கவனம் இல்லை அல்லது எவர் கவனத்தையும் கவராத ஒரு தகவமைப்பை அவர்கள் உருவாக்கியிருந்தனர். இரண்டு பெண்களில் ஒரு பெண் மிகவும் புத்திசாலி என்பது அவளது பேச்சில் தெரிந்தது. அவ்விளைஞனும் அவளுக்கு சமமான அறிவு கொண்டிருந்தான்.  இன்னொரு பெண்ணும் அவர்களை ஒத்த திறனுடன் இருந்தாள்.
 பரீட்சைத் தாள்கள், கல்லூரித் தோழிகள், சென்னைத் தோழிகள், விடுமுறைத் திட்டங்கள், எதிர்காலத்தில் எழுத வேண்டிய போட்டித் தேர்வுகள், பெற்றோர்கள் என நானாவித விஷயங்களைப் பற்றியும் அப்பெண் உற்சாகத்துடன் பேசினாள்.  நடந்த – அவள் எதிர்பாராத – விஷயங்களைப் பற்றி பேசும்போது ‘இட் இஸ் ஆல் இன் எ கேம்’ என்றாள். 
 இட் இஸ் ஆல் இன் எ கேம்.  ஆம், நாம் விரும்புவதும் வாழ்வில் நடக்கும்.  நாம் எதிர்பாராததும் வாழ்வில் நடக்கும்.  அனைத்தும் சாத்தியமே.வாழ்வை முழுமையாக அணுகுவதும் புகாரின்றி ஏற்பதுமே அழகான, நேர்மையான வழிமுறை. 
அவர்களது பேச்சு ஓம் சாந்தி ஓம் என்ற திரைப்படம் பற்றி திரும்பியது.  அப்படம் அன்றைய தினத்துக்கு ஓரிரு நாட்கள் முன்பே வெளியாகியிருந்தது என்பதை அவர்கள் பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன்.  ‘சான்ஸே இல்ல சான்ஸே இல்ல’ என்று அப்பெண் சொன்னாள்.  அவ்வியப்பு வாக்கியத்தை நான் அன்றுதான் முதல் முறையாகக் கேட்டேன்.  பின்னரே அது சென்னை கல்லூரி மாணவர்களிடம் பிரபலமாக இருந்த வாக்கியம் என அறிந்தேன்.  ‘இட் இஸ் ஆல் இன் எ கேம்’ என்ற சொற்றொடரும்  ‘ஓம் சாந்தி ஓம்’ என்ற பெயரும் என் மனதில் பதிவானது.  
சென்னை கிண்டியில் அவர்கள் மூவருமே இறங்கிச் சென்றனர். நான் அவர்களைப் பற்றி யோசித்தவாறு அசோகத்தூண் நிறுத்தத்தில் இறங்கினேன். அன்றைய தினம் போன்ற அழகான நாட்கள் அவர்களுக்கு கல்லூரிக் காலங்களுக்குப் பின் நீடிக்குமா என யோசித்தேன்.  துடிப்பு, உவகை மற்றும் உத்வேகம் ஆகியவை இளவயதில் தானாக வாய்க்கிறது.  இளமை கடந்ததும் நாமே அவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.  
சில நாட்களில், எனது நண்பனின் திருமணத்துக்கு கோயம்புத்தூர் சென்றேன். நகரில் நுழைந்ததுமே ஓம் சாந்தி ஓம் திரைபடத்தின் சுவரொட்டிகள் வரவேற்றன.  எந்த திரையரங்கில் படம் ஓடுகிறது என பார்த்து வைத்துக் கொண்டேன்.  கனகதாரா திரையரங்கம்.  திருமண அரங்கில் ஒரு உள்ளூர்வாசியிடம் அவ்வரங்கு எங்குள்ளது எந்த பாதையில் செல்ல வேண்டும் என விசாரித்துக் கொண்டேன் காலையில் திருமணம் முடிந்ததும் மணமகனின் இல்லத்திற்கு வந்துவிட்டோம்.  மதியம் திருமணத்துக்கு வந்துருந்த ஒரு மயிலாடுதுறை வாசியை கூட்டிக்கொண்டு கனகதாரா திரையங்கம் சென்றேன்.  
ஓம் சாந்தி ஓம் சிறந்த இந்தித் திரைப்படங்களில் ஒன்று.  நாம் காணும் திரைபடத்தினுள் ஒரு திரைப்படம் உருவாவதன் கதை இருக்கும்.  கதைக்குள் கதை என்ற உத்தியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட திரைக்கதை. ஃபராகானின் இயக்கத்தின் ஆகச் சிறப்பான  படமும், மிக சிறந்த இந்தி திரைப்படங்களில் ஒன்றாக உள்ளதும் ஓம் சாந்தி ஓம்.  படத்தின் துவக்கத்திலிருந்துஅப்படத்தின் கதாநாயகி திரையை ஆக்கிரமித்திருந்தார். அவரது பெயரை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.  இந்தி சினிமாவையும் அதன் வணிக பாணிகளையும் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட இந்தி சினிமாவான ஓம் சாந்தி ஓம் ஒரு நிறைவான அனுபவத்தை அளித்தது.  படம் முடிந்து டைட்டில் கார்டில் கதாநாயகி நடிகை அறிமுகம் : தீபிகா படுகோனே – என குறிப்பிடப்பட்டடிருந்தார்.  இவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியவருக்கு இதுதான் முதல் படம் என்பது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.  தீபிகா இன்னும் பல ஆண்டுகள் சிறந்த நட்சத்திரமாய் நீடிப்பார் என நினைத்தேன்.  அவ்வாறே நிகழ்ந்தது.  ஓம் சாந்தி ஓம் திரைப்படத்திற்கு பின்னர் தீபிகா நடித்த ஹேப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களை பார்த்தேன்.  
சமீபத்தில் பாஜிராவ் மஸ்தானி திரைப்படம் பார்த்தேன்.  இன்று தீபிகா திரையுலகின் ஒரு முன்னணி நட்சத்திரம்.  யாருடைய திருமணத்திற்கு சென்றேனோ, அந்நண்பனுக்கு இப்போது ஹர்ஷவர்தன் என்ற ஆறு வயது மகன் இருக்கிறான்.  ஹர்ஷாவுக்கு தீபிகா நடித்த கோச்சடையான் படத்தில் வரும் எங்கே போகுதோ  வானம் அங்கே போகிறோம் நாமும் என்ற பாடல் பிடித்த பாடல்.  அப்பாடலில் உன் வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு என்ற வரி வரும்.  
ஹர்ஷா என்னிடம் ஒரு சூரியனை உண்டாக்கி என்ன செய்வது என்று கேட்டான்.  பின்னர் அவனே மாலையில் அஸ்தமிக்க விடாமல் செய்தால் இன்னும் கொஞ்ச நேரம் விளையாட முடியும் என்று பதிலும் சொன்னான்.  
பாஜிராவ் மஸ்தானியில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா மூவருமே பாஜிராவாகவும் மஸ்தானியாகவும் காசியாகவும் மாறியுள்ளனர்.  படம் முழுதும் உணர்ச்சி அலையலையாய் எழுந்து பிரவாகம் எடுக்கிறது.  ஒரு தளபதியின் உடல் மொழியும் தோரணைகளும் ரன்வீருக்கு சிறப்பாக அமைத்துள்ளது.  ஒரு மாவீரனின் நேசத்துக்குரியவள் எப்படி இருப்பாள்,  எப்படி யோசிப்பாள், எப்படி செயல் புரிவாள் என்பதை இயக்குனர் 
உணர்ச்சிவேகம் குறையாமல் எடுத்துள்ளார்.  பேஷ்வாவிடம் உதவி கேட்டு வரும்  காட்சியிலேயே பாஜிராவ் மஸ்தானியையும் மஸ்தானி பாஜிராவையும் மனதால் ஏற்கும் காட்சி திரைப்படத்தின் காட்சியமைப்பில் – இயக்கத்தில் – நடிகர்களின் நடிப்பில் – ஒரு நுண் கணத்தில் வெளிப்பட்டுள்ளது.  பாஜிராவ் குடும்பதினரின் அவமதிப்புகளை பொருட்படுத்தாது சாதுர்யமாக பதில் கூறுவது  ஒரு ராஜகுமாரியின் கதாபாத்திரத்துக்கு அழகு சேர்க்கிறது.  ஒரு பெண்ணின் 
நேசத்துக்காக தனது பதவி, அதிகாரம், குடும்பம் அனைத்தையும் இழப்பதுற்கு பாஜிராவ் தயாராவதற்கு இன்னொரு கோணமும் உண்டு : ஒரு பெண்ணின் நேசத்தை உணர முடியாத அவை எந்த மதிப்பும் அற்றவை.  உலகில் மதங்கள் அன்பை போதிக்கின்றன.  அனால் அன்பே இறைமை என படம் முடிகிறது.  தீபிகாவின் திரைத் தடத்தில் பாஜிராவ் மஸ்தானி ஒரு மாஸ்டர் 
மஸ்தானி சாவுக்கு அஞ்சாதவள் என்பதே பாஜிராவை நேசம் கொள்ள செய்கிறது.  சாவுக்கு அஞ்சாதவளால் விரும்பப்படுபவராக பாஜிராவ் இருக்கிறார்.  புத்தேல் கண்டைக் காப்பாற்ற பாஜிராவிடம் உதவி கேட்டு வரும்போது அவரை காண்கிறாள்.  சாவுக்கு சில கணங்களுக்கு முன்னாள் தன் குழந்தையிடம் யாரைப் போன்ற வீரனாவாய் என்று கேட்கிறாள்.  
குழந்தை, தந்தை பேஷ்வா பாஜிராவைப் போல என்று சொல்கிறான்.  ஒரு வீரனை நேசித்து ஒரு வீரனுக்குத் தாயாகி ஒரு வீராங்கனையாக வாழும் மஸ்தானி பாஜிராவையும் தாண்டி செல்கிறாள். 
திரைப்படத்தின் கலையில் இயக்குனர் ஒரு காட்சியை கற்பனையில் உருவாக்குகிறார்.  கலை இயக்குனர் அக்காட்சி நிகழும் வெளியை புறஉலகில் உருவாக்குகிறார்.  நடிகர்கள் இயக்குனரின் கற்பனையை உள்வாங்கி நடிப்புக்கலையை வெளிப்படுத்துகின்றனர்.  
ஒளிப்பதிவாளர் அதனை சினிமாவின் சட்டகத்துக்குள் கொண்டு வருகிறார்.  திரைக்கு முன்னும் பின்னும் பங்களிக்கும் நூற்றுக்கணக்கான கலைஞர்களும் தொழில்நுட்ப உதவியாளர்களும்தங்கள் பங்களிப்பை வழங்குகின்றனர்.  இவை அனைத்தும் ஒருங்கிணையும் ஒரு புள்ளி 
பார்வையாளனுக்கு கடத்தப்படும்போது கலாபூர்வமாக சினிமா முழுமையடைகிறது.  பாஜிராவ்  மஸ்தானி படம் முழுதும் இது நிகழ்ந்துள்ளதாக நான் எண்ணுவது உண்மையா அல்லது பிரமையா என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. 
பாஜிராவ் மஸ்தானி திரைப்படக் குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் 
தெரிவித்துக் கொள்கிறேன்.

அங்கும் இங்கும்……..

அழகியசிங்கர்

பத்மஸ்ரீ விருதை தவிர்ப்பதாக ஜெயமோகன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இதைக் காரணமாக வைத்துக்கொண்டு சிலர் ஜெயமோகனை தாக்கியும் இன்னும் சிலர் அவரை வாழ்த்தியும் வலைதளத்தில் தங்கள் கருத்துகளை எழுதி உள்ளார்கள்.  இந்தப் பரிசை ஏற்பதால் அவருக்கு என்ன அவமதிப்புகளும், புறகணிப்புகளும் உருவாகும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  
இதனால் ஜெயமோகனுக்கு எதிர்காலத்தில் யாரும் பரிசு தர யோஜனை செய்வார்கள்.  ஒரு பரிசு என்பது ஒருசிலரின் முயற்சியால்தான் கிடைக்கிறது.  இதை யாரும் பெறுவதற்கு பெரிய சிபாரிசு செய்யக் கூடாது.  அது தானாகவே கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் விட்டுவிட வேண்டும. ஜெயமோகனுக்கு இந்த விருது தானாகவே கிடைத்துள்ளது.  அதற்கு ஏன் வேண்டாம் என்று அவர் மறுக்கிறார் என்பது புரியவில்லை.  ஜெயமோகனுக்கு இந்த விருதை இந்த அரசு கொடுக்கவில்லை என்றால் வேற யார் பின்னால் அவருக்குக் கொடுப்பார்கள் என்பது கேள்விக்குறியே?
‘இந்து மெய்யியல்மேல் எனக்கிருக்கும் அழுத்தமான நம்பிக்கையை முன்வைத்தே எழுதி வருகிறேன்,’ என்று குறிப்பிடுகிறார்.  அப்படியிருக்கும்போது இந்த விருதை வாங்க ஏன் தயங்க வேண்டும்.  ஜெயமோகன் எது எழுதினாலும் அவரைத் தாக்க சிலரும், அவரை கொண்டாட சிலரும் இருந்துகொண்டே இருப்பார்கள்.  மனதில் படுவதை வெளிப்படுத்துவார்.  எழுத்தாளர் அகிலன் பெயரில் நடந்த நாவல் போட்டியில் தேர்வு செய்யப்பட்டு ஜெயமோகனின் ரப்பர் நாவலுக்குப் பரிசு கிடைத்தது. புத்தகத்தை நாவலுக்குப் பரிசு தரும் அமைப்பே அடித்து, அந்த நாவலுக்கான பரிசையும் கொடுத்தது.  ஜெயமோகன் பேசும்போது அகிலனை நாவலாசிரியராக தான் ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.  அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எனக்கு அவர் பேசியதைக் கேட்டு திகைப்பாக இருந்தது.
அவ்வாறு பேசியதால் என்ன ஆயிற்று என்றால் ஒவ்வொரு ஆண்டும் அகிலன் பெயரில் நடக்க வேண்டிய நாவல் போட்டி அந்த வருடத்துடன்  விடை பெற்று கொண்டது.  புதியதாக நாவல் எழுதுபவருடைய நாவலையும் பிரசுரம் செய்வதோடு, பரிசும் கொடுப்பதும் அத்துடன் நின்று விடடது.  இது புதியதாக எழுதுபவர்களுக்கு நஷ்டம்.   ஜெயமோகன் எதுவும் சொல்லாவிட்டால் ஒன்றும் நடந்திருக்காது.  
பரிசு அல்லது விருது பெறுவதற்கு தமிழ் நாட்டில் இன்னும் பல எழுத்தாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்காதா என்று ஏக்கத்துடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.   இதில் ஒரு விருதை வேண்டாமென்று மறுப்பவர்களுக்கு இனிமேல் க்யூவில் நிற்க வேண்டுமென்றால் கடைசியில்தான் போய் நிற்க வேண்டி வரும்.  இந்தக் க்யூவில் கடைசி ஆளாக நானும் நின்று கொண்டிருக்கிறேன்.
                                                                                     ********
இன்னும் சில தினங்களில் விருட்சம் இதழின் 99வது இதழை அச்சுக்குக் கொண்டு வந்து விடுவேன்.  போன இதழ் தயாரிக்கும்போது இதழ் செலவு கொஞ்சம் அதிகமாகி விட்டது.  இது குறித்து அச்சகத்தாருடன் பேச வேண்டும். மொத்தமாக ஒரு இதழை அச்சடிக்க இவ்வளவு கொடுத்து விடுங்கள் என்கிறார்கள்.  இதில் காகிதத்தின் விலை என்ன? பைன்டிங் விலை என்ன? ஒரு பாரம் அடிக்க எவ்வளவு ஆகும் என்பதெல்லாம் சொல்வதில்லை. திரும்பவும் நான் பழையபடி ஆரம்பிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். பேப்பர் விற்பவரிடம் சென்று பேப்பர் வாங்க வேண்டும்.  பைன்டரிடம் சென்று ஒரு பாரம் மடிக்க எவ்வளவு என்று பேரம் பேச வேண்டும். இப்போதெல்லாம் நெகடிவ் கிடையாது.  அதனால் பாரம் தயார் செய்ய எவ்வளவு என்று கேட்க வேண்டும்.  
ஆனால் ஒரு இதழ் விருட்சம் கொண்டு வர போதும் போதுமென்று ஆகிவிடும்.   எழுதுபவர்களே கிடையாது. இப் பத்திரிகையில் எழுதினால் யாருக்கும் சன்மானம் கிடையாது.  எழுதுபவர்களுக்கு எந்த நிச்சயமும் இல்லை.  பத்திரிகை எப்போது வரும் என்று சொல்ல முடியாது. நான் ஒருவனே நினைத்தால் எல்லாப் பக்கங்களையும் எழுதி விடலாம்.  ஆனால் அது தர்மம் இல்லை.  படிப்பவர்களை இப்படியெல்லாம் கஷ்டப் படுத்த விரும்பவில்லை. இப்படித்தான் 99 இதழ்கள் வந்து விட்டன.  100வது இதழ் ஏப்ரல் மாதம் வர உள்ளது.
                                                                               *****
இந்தப் பத்திக்கு நான் வைத்தத் தலைப்பைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.  முதலில் ஒரு சொல் கேளீரோ என்ற தலைப்பை வைத்தேன். அதை யாரோ பயன்படுத்துவதாக தோன்ற, வேண்டாம் என்று முடிவு எடுத்தேன். அடுத்தது அக்கம் பக்கம் என்ற பெயரை யோசித்தேன். அது கசடதபறா வில் நா கி பயன்படுத்திய தலைப்பு,  அங்கும் இங்கும்தான் பொருத்தமாக இருக்கும் என்று வைத்துள்ளேன்.
                                                                              (இன்னும் வரும்)

மறந்து போன பக்கங்கள்….

அழகியசிங்கர்






தி சோ வேணுகோபாலன் கோடை வயல் என்கிற தன் கவிதைத் தொகுதியை ந பிச்சமூர்த்திக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். அப்போது அவர் எழுதிய வரிகள் :
‘என் கவிதையின்
புதுக்குரலுக்கு
பிரசவம் பார்த்த
மருத்துவர்
திரு ந. பிச்சமூர்த்தி
அவர்களின்
அடிக்கமலங்களுக்கு’

ஒரு கவிதையைப் படிக்கும்போது ஒருமுறைக்கு இரண்டு முறை படிக்க வேண்டும்.  அப்படிப் படிக்கும்போது கவிதை படிப்பவர் நோக்கி கவிதை மெதுவாக நகர்ந்து வரும்.  வெள்ளம் பற்றி எழுதிய தி சோ வேணுகோபாலன் üவெள்ளம் சிவமதமா?ý என்கிறார்.  வெள்ளத்தைப் பற்றி சொல்ல வருகிறார் என்று நினைத்தாலும், சிவமதமா என்று ஏன் சொல்கிறார். இதற்குக் காரணம் எதாவது யாருக்காவது தெரியுமா?
கடைசியில் கவிதையை முடிக்கும்போது வெள்ளம் சிவமதமா? இல்லை சிவன்மதமா? என்று முடிக்கிறார்.  இரண்டு வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? புரியவில்லை.

 வெள்ளம்

வழியாடிக்
கரைசாடி
விம்மிப் புடைத்துறுமி
வருகின்ற
வெள்ளம் சிவமதமா?
இல்லை வெறுந்துயரா?

தாளம் தவறியதா?
கோளின் கதிபிசகா?

தாளம் தவறியதால்
கோளில் கதிபிசகால்
மேலே பனிமுடியில்
காலும் நொடித்ததனால்
கட்டுச் சடைபிரிய
கங்கை விடுதலையாய்
கொட்டி முழக்கிடுமோர்
கோரச் சிரிப்பொலியா?

வெள்ளம் சிவமதமா?
இல்லை வெறும்துயரா?

குடிசை பொடியாக்கிக்
குழைத்து நிறம்சிவந்த
வெள்ளம் சினன்நடமா?
இல்லை பயங்கரமா?

மீன் துள்ளுமேனி:
மாட்டுச் சுமையுண்டு
சுற்றிச் சடலங்கள்
சூழ்ந்து வருகின்ற
வெள்ளம் சிவமதமா?
இல்லை சிவன்மதமா?