துளி : 36 – குளிர் போய்விட்டது..

அழகியசிங்கர்

இன்று குளிர் போய்விட்டது.  வெயில் தொடங்கிவிட்டது.  பீனிக்ஸ்ஸில் வெயில் தாங்க முடியாது என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  வெளியே தலை காட்ட முடிôதாம். இதன் உக்கிரம் மே மாதத்தில்தான் இருக்குமென்று நம்புகிறேன்.  பேர்ன்ஸ் அன்ட் நோபல் என்ற புத்தகக் கடையைப் பார்த்து அசந்து விட்டேன்.  நாம் விருப்பப்படி தேடும் புத்தகம் கிடைக்கவில்லை.  ஆனால் ஒரு புத்தகம் கிடைத்து விட்டது.  நான் ரொம்ப நாட்கள் தேடிக்கொண்டிருக்கும் புத்தகம்.  எர்னஸ்ட் ஹெமிங் வேவின் முழு சிறுகதைத் தொகுதி. இப் புத்தகத்தைப் பற்றி அடிக்கடி என்னிடம் படிக்கும்படி கூறுபவர் என் நண்பர் ஆர் ராஜகோபாலன் (ஆங்கிலப் பேராசிரியர்).  அவர் சொன்ன நாளிலிருந்து எங்காவது கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருப்பேன்.  இப் புத்தகம் இன்றுதான் இங்குக் கிடைத்திருக்கிறது.  650 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை 22 டாலர்கள்.  நான் இங்கே வந்தபோது ஒவ்வொரு டாலரையும் இந்தியன் பணமாகக் கணக்குப் போடுகிறேன்.  இது ஆபத்தானது.  அப்படியெல்லாம் நாம் யோசிக்கக் கூடாது.  அதனால்தான் முதன் முறையாக நான் இப் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்க வேண்டாமென்று வைத்துவிட்டேன்.  திரும்பவும் இன்னொரு முறை வந்தபோது வாங்கிவிட்டேன்.  இதைப் படிப்பதோடல்லாமல் இதில் உள்ள எதாவது ஒரு கதையைத் தமிழில் மொழி  பெயர்த்துப் பார்க்க வேண்டும்.  இந்தக் கடையின் தோற்றத்தைப் படம் பிடித்திருக்கிறேன்.   

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 107



அழகியசிங்கர்  


ப்ரியாராஜ் கவிதை 

சிறுவயதில் கனவில் நான்

வந்தியத்தேவன்!

குதிரையையும், குந்தவியையும்

தேடிக் களைத்திருந்தேன்!

பின்னாளில் நான் பாரதியாய்

மீசையுடன் மாறி கவி எழுதி

தோற்றிருக்கிறேன்!

பாம்பு சட்டையை உரிப்பதுபோல

நான் அவ்வப்போது, சிவாஜியாய்,

ரஜினியாய், கமலாய் மாறி கனவில்

நாயகிகளைப் புணர்ந்திருக்கிறேன்!

ஆனாலும்,

இப்போதெல்லாம் நான் நானாக

இருக்க ஆசைப்படுகிறேன்!

முடியவில்லை! பழக்க தோஷம்!

நன்றி : இன்னொரு முகம் – ப்ரியாராஜ் – வெளியீடு : சந்தியா பதிப்பகம், ப எண் : 57, 53ஆவது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600 083 – பக் : 160 – விலை : ரூ.80 – வெளியான ஆண்டு : 2009 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – –>

– 106

அழகியசிங்கர்  

அவன்

ரமேஷ் பிரேதன்

வாழ்ந்த நினைவுகளை

அசைபோட்டபடி வாழ்ந்துகொண்டிருக்கிறான்

குறுக்காக ஒரு வெள்ளைப் பசு

சாலையைக் கடக்கிறது

மடி கனக்கிறது

உணவகத்தின் வாசலில் வைத்துக் கறக்க

சைக்கிள் கேரியரில்

வைக்கோல் திணித்த கன்றோடு

அவன்

வாழ்ந்த நினைவுகளை

அசைபோட்டபடி வாழ்ந்துகொண்டிருக்கிறான்

சாலையைக் குறுக்காகக் கடக்கிறான்

பசுவைப் பின்தொடர்ந்து

நன்றி : சாராயக் கடை – ரமேஷ் பிரேதன் – வெளியீடு ; உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018 – பக்கங்கள் :72 – விலை : ரூ.40 – வெளியான ஆண்டு : டிசம்பர் 2008.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …37



அழகியசிங்கர்  

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் வாங்கிக் குவித்தப் புத்தகங்கள் போன ஆண்டை விட அதிகம் என்றுதான் தோன்றுகிறது.  எத்தனைப் புத்தகங்கள் என்று எண்ணவில்லை.  ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.  நினைப்பதோடு சரி.  எண்ணியதில்லை.

இந்த முறை தேசாந்திரி பதிப்பகத்திலிருந்து எஸ் ராமகிருஷ்ணனின் ஐந்து புத்தகங்கள் வாங்கினேன்.  1. சிவப்பு மச்சம் 2. பெயரற்ற நட்சத்திரங்கள் 3. கதைகள் சொல்லும் பாதை 4. ரயில் நிலையங்களின் தோழமை 5. பறந்து திரியும் ஆடு.

பறந்து திரியும் ஆடு என்ற தலைப்பில் சிறார்களுக்கு ஒரு நாவல் எழுதி உள்ளார்.  உள்ளே ஓவியங்களுடன் சிறப்பாக எழுதப் பட்டிருக்கும் நூலாக எனக்குத் தோன்றுகிறது.  இந்தப் புத்தகத்தை எடுத்தால் படிக்காமல் இருக்க முடியாது.  மேலும் இது சிறார்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகமாக நான் கருதுகிறேன்.

சிறார்களுக்கு ஒரு புத்தகம் எழுதுவது அவ்வளவு சுலபமாக இருக்குமா என்பது தெரியவில்லை.  ரொம்ப ரொம்ப புரியும்படி கதைகள் எழுத வேண்டும்.

பள்ளிக்கூடம் படித்தக் காலத்தில் நான் ரசித்தப் புத்தகம். தென்னாட்டுப் பழங்கதைகள்.  சைவ சித்தாந்தப் பதிப்பகம் கொண்டு வந்தப் புத்தகம்.  7 புத்தகங்கள்.  ஒவ்வொரு புத்தகமும் 300 பக்கங்கள் இருக்கும்.  ராமசாமி புலவரால் தொகுக்கப்பட்ட புத்தகம்.  ஒவ்வொரு முறையும் சைவசிந்ததாந்தப் பதிப்பகத்திற்குச் சென்று இந்தப் புத்தகம் திரும்பவும் அச்சிடப்பட்டுள்ளதா என்று கேட்பேன்.  ஏமாற்றத்துடன் திரும்பி வருவான்.  அதற்குக் காரணம் இருக்கிறது. இன்றைய சிறார்கள் ஆங்கிலத்தில் வாசிப்பதில் அக்கறை காட்டுகிறார்கள் தவிர தமிழில் இல்லை.  அந்தக் காலத்தில் அம்புலிமாமா என்ற பத்திரிகை வந்தது.  இப்போது இல்லை.  தமிழில் சிறார்கள் புத்தகங்கள் வரவேண்டும்.  தமிழில் எல்லோரும் வாசிக்க வேண்டும்.  80 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.100தான்.  ராமகிருஷ்ணன் அதிகமாகச் சிறார்களுக்கான புத்தகங்கள் எழுதி உள்ளார்.  

கதைகள் சொல்லும் பாதை என்ற இன்னொரு புத்தகம்.  நான் வளசரவாக்கம் வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அலுவலகத் தோழி ஒருவர், இராமகிருஷ்ணனை புகழ்ந்து பாராட்டாமல் இருக்க மாட்டார். அவரும், அவர் பையனும் காலையில் எழுந்தவுடன் ராமகிருஷ்ணன் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துவிடுவார்கள்.  முதலில் அந்தப் பெண்மணி சொன்னது என்னால் நம்ப முடியாமல் இருந்தது.   இப்படி ஒரு எழுத்தாளருக்கு தீவிர வாசகராக ஒருவர் இருப்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். 

சாகித்திய அக்காதெமி பரிசு ராமகிருஷ்ணனுக்குக் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்திருப்பார்.   அந்த வாசகப் பெண்மணி மகிழ்ச்சியின் எல்லைக்கே போயிருப்பார்.  23 எழுத்தாளர்களைப் பற்றி பல தகவல்களுடன் இக் கட்டுரைத் தொகுப்பு உள்ளது.  கேள்விப்பட்ட கேள்விப்படாத பல எழுத்தாளர்கள் இதில் இருக்கிறார்கள். 

தமிழ் எழுத்தாளர்களான வைதீஸ்வரன் பற்றியும், அனார் பற்றியும் இத் தொகுப்பில் கட்டுரைகள் எழுதி உள்ளார்.  அவசியம் வாசிக்க வேண்டிய இன்னொரு புத்தகம்.  136 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.150 தான்.  

பெயரற்ற நட்சத்திரங்கள் என்ற பெயரில் ஒரு புத்தகம்.  பல சினிமாப் படங்களைக் குறித்து சுவாரசியமான தகவல்கள் பல கொண்ட புத்தகம் இது.  200 ரூபாய் விலையுள்ள புத்தகம் இது.

சிவப்பு மச்சம் என்ற பெயரில் ஒரு சிறுகதை வெளிவந்துள்ளது. 20 கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு.  எனக்குத் தெரிந்து இப்போது எழுத ஆரம்பித்திருக்கும் எழுத்தாளர்கள்.  ராமகிருஷ்ணன் புத்தகங்களைப் படித்துவிட்டுத்தான் கதைகள் எழுத ஆரம்பிக்க வேண்டும்.  அவருடைய கதைகள் எல்லாம் வினோதமான கலவைக் கொண்ட எழுத்து நடையைக் கொண்டது.  ஒவ்வொரு சமயத்திலும் சோதனை முயற்சிகளை அவருடைய கதைகளில் உருவாக்காமல் இருக்க மாட்டார்.  புறாப் பித்து என்ற கதையை நான் ஆனந்தவிகடனில் வாசித்திருக்கிறேன்.  இது குறித்து ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறேன்.

நம்ப முடிகிற தகவல்களைக் கொண்டு நம்ப முடியாத சம்பவங்களை உருவாக்குவது ராமகிருஷ்ணனின் பாணி என்று எனக்குத் தோன்றுகிறது.  இப் புத்தகம் விலை ரூ.250.  

ராமகிருஷ்ணன் பயணங்களைப் பற்றி அதிகமாக புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.  பயணங்களுடன் தகவல்களையும் சேகரித்துக் கூறுவதில் வல்லமைப் பெற்றவர்.  நயாகராவின் சாரல் என்ற கட்டுரை ஒன்று இப் புத்தகத்தில் உள்ளது.  ஒரு இடத்திற்குப் போய் அந்த இடத்தின் தன்மைகளை நம் கண் முன்னால் கொண்டு வந்து விடுகிறார்.   இப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களும் தாங்களும் அவருடன் பயணம் செய்யும் அனுபவத்தை உணருவதாக தோன்றும். ரயில் நிலையங்களின் தோழமை என்ற புத்தகம் விலை 125.  

இன்னும் சில புத்தகங்களைப் பற்றியும் எழுத உள்ளேன்.

துளி : 26 – அஜித்தின் விசுவாசம்

அழகியசிங்கர்

ரஜினியின் பேட்டையைப் பார்த்தபிறகு, அஜித்தின்     விசுவாசம் படத்தையும் பார்க்க வேண்டுமென்று நினைத்தோம்.  என் வீட்டிலிருந்து பக்கத்திலிருந்தது உதயம் தியேட்டர் காம்பளெக்ஸ்.  6 மணிக்குக் கிளம்பிப் போனோம்.  பேட்டைக்கும் விசுவாசத்திற்குத்தான் கூட்டம்.  இன்னும் இரண்டு படங்களுக்குக் கூட்டம் வரவில்லை.  ஒரு படம் பிரபுதேவா நடித்த சார்லி சாப்பிளின் 2.  இன்னொரு படம் டப்பிங் படம்.  இந்த இரண்டு படங்களுக்கும் யாரும் பார்க்க வரவல்லை என்பதால் படக் காட்சி ரத்து.   டூ வீலரை ஸ்டாண்டில் வைக்கும்போது, üஎன்னப்பா இப்படி காலி அடிக்குது,ý என்று வினவினேன்.  அவன் சொன்னான் : ýýஞாயிற்றுக்கிழமை வரை கூட்டம் சார், 20 நாள் ஓடி விட்டது,ýý என்றான்.  படம் பார்த்து திரும்பி வரும்போது இன்னும் காலியாக இருந்தது தியேட்டர்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …36

அழகியசிங்கர் 

புத்தகக் காட்சியில் நான் இருந்த பகுதியிலேயே எதிர் வெளியீடும் இருந்தது.  எதிர் வெளியீடு கொண்டு வரப் போகும் ஒரு புத்தகத்தைப் பற்றி அறிவிப்பு முன்னதாகவே வந்திருந்தது.   அந்தப் புத்தகத்தின் பெயர் கசார்களின் அகராதி. மிலோராத் பாவிச் எழுதிய புத்தகம்.  ஆண் பிரதி, பெண் பிரதி என்று இரண்டு பாகங்கள் கொண்ட புத்தகம்.  

இந்தப் புத்தகம் வந்துவிட்டதா வந்துவிட்டதா என்று பலமுறை போய் கேட்பேன்.   எதிர் வெளியீட்டில் பெரும்பாலான புத்தகங்கள் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்.  பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது.  இன்னும் சில புத்தகங்களை வாங்கலாம் என்று நினைத்தாலும் மொழிபெயர்ப்பாளரின் பெயரைப் பார்த்து வாங்க வேண்டாமென்று தோன்றியது.

மொழி பெயர்ப்பைப் பொறுத்தவரை க நா சு கொள்கையை நான் முழுவதும் விரும்புகிறேன்.  க நா சு ஒரு புத்தகத்தை மொழி பெயர்க்கும் முன் ஒரு முறை படிப்பார் பின் அப்படியே மொழி பெயர்த்து விடுவார்.  மொழிபெயர்க்கப்படும் புத்தகத்தின் ஆன்மாவைக் கொண்டு வருவதுதான் அவருடைய நோக்கமாக இருக்கும்,

கசார்களின் அகராதி என்ற இரு பகுதிகள் கொண்ட புத்தகத்தை மொழி பெயர்த்தவர் ஸ்ரீதர் ரங்கராஜ்.   

செர்பிய க்ரவோஷிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளிவந்துள்ளது.  இந்தப் புத்தகங்களை வாங்கிக்கொண்ட பிறகு ஆண் பிரதியை முதலில் படிப்பதா பெண் பிரதியைப் படிப்பதா என்ற குழப்பம் இப்போது இருக்கிறது.  அதே எதிர் வெளியீடில் இன்னும் சில புத்தகங்களையும் வாங்கினேன்.

உலகச் சிறுகதைகள் 3 பாகங்களை வாங்கினேன். மொழி பெயர்த்தவர் கார்த்திகைப் பாண்டியன்.  எருது, சுல்தானின் பீரங்கி, துண்டிக்கப்பட்ட தலையின் கதை என்ற தலைப்புகளில்.   நான் எதாவது ஒரு புத்தகக் கடையில் ஒரு புத்தகம் வாங்கிவிட்டால் திரும்பத் திரும்ப அதே கடைக்குச் சென்று இன்னும் எதாவது புத்தகம் வாங்கச் சுற்றிக்கொண்டிருப்பேன்.  இந்த முறை எதிர் வெளியீட்டைச் சுற்றி சுற்றி வந்தேன்.  இன்னும் ஒரு புத்தகம் சூன்யப் புள்ளியில் பெண்  நவல் எல் சாதவி எழுதியது.  தமிழில் சசிகலா பாபு.  இது ஒரு நாவல். கொய்ரா அருகில் உள்ள சிறு கிராமத்தில் 1931ல் பிறந்தவர் நவல் எல் சாதவி.  அரேபியா பெண்களின் நலத்திற்காகப் போராடியவர்.

எதிர் வெளியீட்டில் எனக்குப் பிடித்த அம்சம்.  புத்தகங்களில் அமைப்பு.  பார்த்தவுடன் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான அட்டை அமைப்பு.  ஆலிஸ் வாக்கர் எழுதிய அன்புள்ள ஏவாளுக்கு என்ற புத்தகத்தையும் வாங்கி உள்ளேன். தமிழில் மொழி பெயர்த்தவர் ஷஹிதா அவர்கள்.  எதிர் வெளியீட்டிலிருந்து 7 புத்தகங்களை வாங்கிவிட்டேன்.  

நான் இப்படி அந்நியாயமாக புத்தகங்கள் வாங்கிக் குவிப்பதைப் பார்த்து நீங்கள் மரத்திடம் போய் புகார் கொடுப்பது எனக்குத் தெரியும்.  ஆனால் நீங்கள் கேட்க விரும்பும் ஒரு கேள்விக்கு மாத்திரம் நான் பதில் சொல்ல மாட்டேன்.  இன்னும் சில புத்தகங்களைப் பற்றி தொடர்வோம்.   

சரி மேலே குறிப்பிட்ட நூல்களில் முதலில் நான்  எதை எடுத்துப் படிக்க வேண்டும்? 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …33

இன்னும் புத்தகக் காட்சி முடிந்துவிட வில்லை.  புத்தகக் காட்சி 4ஆம் தேதியிலிருந்து ஆரம்பித்து 20ஆம் தேதி முடிந்து விட்டது.  ஆனால் நான் இன்னும் முடிக்கவில்லை.  புத்தகக் காட்சி ஆரம்பிக்கும்போது இரும்பு அலமாரிகளில் உள்ள எல்லாப் புத்தகங்களையும் சாக்கில் கட்டி வைத்து விடுவேன்.  பின் இரும்பு அலமாரிகளை புத்தகக் காட்சி எடுத்துக்கொண்டு போவது வழக்கம்.  புத்தகக் காட்சி முடிந்தவுடன் திரும்பவும் இரும்பு அலமாரிகளை எடுத்துக்கொண்டு வந்து விடுவேன். இரும்பு அலமாரியில் உள்ள ஒரு தட்டில் உள்ள புத்தகங்கள் ஒரு சாக்குப் பை நிரம்பும் அளவிற்கு இருக்கும்.  இது மாதிரி 30அல்லது 40 சாக்கு மூட்டைகளில் புத்தகங்களை வைத்திருப்பேன்.  ஒவ்வொரு தட்டிலும் புத்தகங்களை வைப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. 
இரண்டு நாட்களாக இதுதான் என் வேலை.  ஒவ்வொரு இரும்பு அலமாரியையும் நகர்த்தி வைத்து புத்தகங்களை அடுக்குவது. கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் புத்தகங்கள் என்னைக் கைவிடவில்லை.  
இந்தப் புத்தகக் காட்சியில் இரண்டு படைப்பாளிகள் என்னைக் கௌரவம் செய்தார்கள்.  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் புத்தகக் காட்சியில் பங்குக் கொண்டிருக்கிறேன்.  இதுவரை யாரும் என்னை மேடைக்கு அழைத்துப் போய் அவர்கள் எழுதிய புத்தகங்களை வழங்கியதில்லை. எந்தப் புத்தகக் காட்சியிலும் யாரும் கௌரவம் செய்ததில்லை.   இந்த முறை மட்டும் அப்படி நடந்தது.  ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போதும் பல எழுத்தாளர்கள் எனக்குப் புத்தகங்களை நன்கொடையாகக் கொடுப்பார்கள்.   நானும் சிலருக்கு என் புத்தகங்களை நன்கொடையாகக் கொடுப்பேன்.  நான் நன்கொடையாக வாங்க நினைக்கும் புத்தகங்களûப் படித்து எழுத நினைப்பேன்.  சில புத்தகங்களைப் படித்தும் எழுதியிருக்கிறேன்.  இந்த முறை என்னை கௌரவம் செய்த இரண்டு படைப்பாளிகளின் பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.  ஒருவர் பெயர் üமுகங்கள்ý என்ற பெயரில் எழுதிய சத்யா ஜி பியின் புத்தகம்.  இன்னொரு புத்தகம் உஷாதீபனின் சிறுகதைத் தொகுப்பு.  நிலைத்தல் என்ற சிறுகதைத் தொகுப்பு.  காவ்யா ஏற்பாடு செய்த கூட்டத்தில் அதைப் பெற்றுக்கொண்டேன்.  
எப்போதுமே அரங்கை விட்டு வெளியே வந்தால், அதுவும் அதிக நேரம் ஆகிவிட்டால், எனக்கு அரங்கு ஞாபகம் வந்து திரும்பி விடுவேன்.   எனக்கு உதவி செய்யும் நண்பரின் மனம் நோகக் கூடாது என்று நினைப்பவன்.  அதனால் உஷாதீபன் கூட்டத்தில் பேச முடியாமல் போய்விட்டது.   இது சற்று வருத்தம்தான்.
கிட்டத்தட்ட 10 புத்தகங்கள் நன்கொடையாகக் கிடைத்தன.  அப் புத்தகங்களைப் பட்டியலிட விரும்புகிறேன்.
1. சத்யா ஜி பி எழுதிய முகங்கள்
2. உஷாதீபனின் நிலைத்தல் சிறுகதைத் தொகுப்பு
3. படித்தேன்......எழுதுகிறேன்  - உஷாதீபன் கட்டுரைத் தொகுப்பு
4. முபீன் சாதிகா கட்டுரைகள்
5. இருளும் ஒளியும் - கவிதைகள் - பிருந்தா சாரதி
6. மேசை மேல் செத்த பூனை - கவிதைகள் - இந்திரன்
7. 84 கவிதைகள் - இரா. மதிபாலா
8. வருகைக்கான ஆயத்தங்கள் - சிறுகதைகள் - இதயா ஏசுராஜ்
9. சாமானிய மனிதனின் எதிர்க்குரல் - கட்டுரைகள் - விஜய் மகேந்திரன்
10. ஆவணப்பட இயக்கம் - கட்டுரைகள் - அம்ஷன் குமார்

இந்த முறை என் புத்தகங்களை வாங்கியவர்கள் புத்தகத்தில் கையெழுத்துப் போடும்படி கேட்டுக்கொண்டார்கள்.  இதுவும் முன்பு நடந்ததில்லை.  இனி வாங்கிய புத்தகங்களைப் பற்றி நாளை எழுதுகிறேன். 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …26

அழகியசிங்கர் 


வளவ துரையனின் கவிதைத் தொகுதியின் பெயர் அப்பாவின் நாற்காலி.  இந்தக் கவிதைத் தொகுதியைப் பற்றி ஆர் கே ராமனாதன் இன்று உரை நிகழ்த்தினார்.  அதை இங்கு ஒளி பரப்புகிறேன்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …19



அழகியசிங்கர்

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  ஒவ்வொரு பதிப்பாளரும் கொண்டுவரும் புத்தகங்களைப் பார்க்கும்போது.   இந்தப் புத்தகங்களை விற்கிறேனோ இல்லையோ நானே புத்தகங்களை வாங்கி விடுவேன் என்று தோன்றுகிறது.  

முதலில் என் கடையில் என்னன்ன புத்தகங்களை விற்க முயற்சி செய்கிறேன் என்பதை ஓரளவாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்.  ஏனென்றால் புத்தகங்களைப் பற்றி சொல்லிவிட்டு உடனே நான் ஸ்டால் எண் 403க்கு ஓட வேண்டும். 

திரும்பவும் வீடு திரும்பும்போது அதிக நேரம் ஆகிவிடும்.  ஒருவிதத்தில் என் ஸ்டாலில் விற்க வைத்திருக்கிற புத்தகங்களை நானே வாங்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.  அதனால்தான் யாவரும் பதிப்பகம் புதிதாகக் கொண்டு வந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன்.  ஒன்று விற்க முயற்சி செய்வேன்.  அல்லது நானே வாங்குவேன்.  இந்த முறை புத்தகக் காட்சியில் நான் வாங்கிச் சேமித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி பிறகு சொல்கிறேன். 

இப்போது பா ராகவனின் யதி என்ற பிரம்மாண்டமான நாவலைப் பற்றி எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். 926 பக்கங்கள் கொண்ட யதி என்ற நாவலை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.  பா ராகவன் எத்தனை நாட்கள் எழுதினார் என்பது இருக்கட்டும்.  ஒரு வாசகன் எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வான் இதைப் படிக்க.

புத்தகக் காட்சியில் இரா முருகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய அரசூர் வம்சத்திலிருந்து தொடர்ந்து அவர் எழுதிய நாவல்களில் 200க்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களை உருவாக்கி இருப்பதாகக் கூறி உள்ளார்.  கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு வாசகன் எத்தனைக் கதாப்பாத்திரங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வான் என்றும் தோன்றியது.   ஆனால் யதியைப் பற்றி சி ஜே ஆனந்தகுமார் ஒரு இடத்தில் இப்படி கூறுகிறார். எப்படி குறைவான பாத்திரப்படைப்பை வைத்துக்கொண்டு இப்படி ஒரு பிரம்மாண்டமான நாவலைக் கட்டி எழுப்பினார் என்று. 

அப்பாவின் புத்தகச் சேமிப்பில் கண்டு பிடித்த ஜாபால உபநிடதம்தான் எழுதத் தூண்டியதாக பா ராகவன் வெளிப்படுத்தி உள்ளார்.  இந் நாவலை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும்.  இந் நாவலின் அதிகப்பக்கங்கள் என்னை மிரட்டத்தான் செய்கிறது.   ஆனால் அதிகப் பக்கங்கள் உள்ள ஒரு நாவலை மிரளாமல் வாசிப்பது எப்படி என்ற பயிற்சியை ஒரு வாசகன் தெரிந்துகொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.  

நாவலின் அட்டையில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது.

‘üஇந்த நாவல், துறவிகளின் வாழ்க்கையை அதன் யதார்த்தத் தன்மையோடும் அதீத புனைவோடும் ஒருங்கே நம் கண்முன் கொண்டு வருகிறது.  நம்மோடு உடன் பயணித்து, ஆனால் கண்ணில் படாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையைப் படிக்கும்போது நமக்குள் எழும் உணர்வுகள் அலாதியானவை.  இந்தியக் கலாச்சாரத்தின் நுனி முதல் அடிவரை ஆழங்கால் பாய்ச்சிய ஒருவரால் மட்டுமே இத்தனை விரிவான ஒரு பிரதியை யோசிக்காவது முடியும். இது பா ராகவனுக்குக் கூடி இருக்கிறது.ý 

புத்தகக் காட்சியில் இப் புத்தகத்தை விற்பதற்காக வைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதில் பெருமை படுகிறேன். 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …18


அழகியசிங்கர்

இந்தப் புத்தகச் சந்தையில் செம்மையாக மாட்டிக்கொண்டவர் வேணு வேட்டராயன் அவர்கள்.  அவர் அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகத்தைக் குறித்தும், க நா சுவின் விமர்சனக் கலை என்ற புத்தகத்தைப் பற்றியும் பேசினார்.  இதோ அவருடைய ஒளிப்பதிவு, விடுமுறை தினமாக இருந்ததால் ஒரே சத்தம்.  அதனால் ஸ்டால் உள்ளேயே வேணு வேட்டராயணன் பேசியதைப் படம் பிடித்தேன். 

https://youtu.be/JdOWgM5X4Bs