சுஜாதாவின் சில வித்தியாசங்கள்

சுஜாதாவின் சில வித்தியாசங்கள்

அழகியசிங்கர்

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி வைத்திருக்கிறேன். சுஜாதாவின் கதைகள் எல்லாம். 1968 ஆம் ஆண்டு எழுதிய சில வித்தியாசங்கள் என்ற கதை. முதன் முதலாக சுஜாதாவின் கதைகளை ஒவ்வொன்றாகப் படிக்கலாமென்று ஆரம்பித்தேன்.

நான் ஒரு கதையைப் படித்தால் அந்தக் கதையைப் பற்றி உடனே எழுதி விடவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கதை கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிடும்.

நான் ஏகப்பட்ட புத்தகங்களை ஒரே சமயத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன். நியாயமாக என் ஆசை நான் படித்ததெல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமென்பதுதான்.

நான் மெதுவாகத்தான் படிக்கிறேன். ஆனால் படித்ததை அப்படியே விட்டுவிடத் தயாராய் இல்லை. மனதுக்குள்ளாகவாவது எதை எதைப் படித்தோம் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாட்கள் போகப் போக இன்னும் சில புத்தகங்கள் படிப்பதற்குச் சேர சேர ஒவ்வொன்றாய் மூளையிலிருந்து கழன்று கொண்டு விடுகின்றன.

சரி, சுஜாதா கதைக்கு வருகிறேன். இந்தக் கதையை 1968ஆம் ஆண்டிலேயே எழுதி விட்டார். குழப்பமில்லாத நடை. வாசகனைக் கட்டிப் போடுகிற மாதிரி விறுவிறுவென்று எழுதி இருக்கிறார்.

நான் ராஜாராம். டில்லி வாசி என்று கதையை ஆரம்பிக்கிறார்.ராஜாராம் பேசுவதுபோல் கதையைக் கொண்டு போகிறார். நேபாளத்தின் தலைநகர் தெரியாததாலும் ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை தெரியாததாலும் ஐ.ஏ.எஸ்ஸில் தேறாமல் மத்திய சர்க்கார் செகரடேரியேட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டெண்டாக சம்பள ஏணியில் இருப்பவன் ராஜாங்கம்..

இந்தக் கதை முழுவதும் ஒரு நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக்கொண்டு போகிறார். ராஜாராம் சொல்கிறான். இந்த உலகத்தில் இன்றைய தேதிக்கு என் சொத்து ஒரு டெரிலின் சட்டை, பெட்டி நிறையப் பிரமாதமான புத்தகங்கள், ராஜேஸ்வரி. கடைசியில் குறிப்பிடப்பட்டவள் என் மனைவி என்கிறான். வீட்டின் பட்ஜெட்டையும் சித்தார்த்தனின் அழுகையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் படைத்த இவள் என்வாழ்வின் ஒரே அதிர்ஷ்டம் என்கிறான் ராஜராம்.

29ஆம் தேதியன்று அவன் கையில் இருப்பது மூன்று ரூபாய் அவனுக்குத் தேவை முந்நூற்று இருபத்தைந்து ரூபாய். எதற்கு? சென்னைக்கு விமான டிக்கெட் வாங்க. அவன் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தந்தி வந்திருக்கிறது. உடனே புறப்பட்டுப் போக வேண்டும்.

அம்மாவை உடனே போய்ப் பார்க்க வேண்டும். விமானப் பயணம் மூலம். யாரிடமாவது பணம் கடன் வாங்கிக்கொண்டு போக வேண்டும். யாரைக் கேட்பது என்று குழப்பம். நண்பர்களைப் போய் இருபத்தொன்பதாம் தேதி கேட்டால் ஹாஸ்யம் கேட்டதுபோல் சிரிப்பார்கள். மனைவியிடம் நகைகள் கிடையாது.

பணம் கேட்க ராமநாதன் என்பவரைப் பார்க்க தீர்மானிக்கிறான் ராஜாராமன். அவர் ஒரு விதத்தில் தூரத்து உறவினர். முக்கியமான மந்திரிக்கு முக்கியமான மனிதர்.

அவர் வசித்து வந்த இருப்பிடத்தை விவரிக்கிறார் சுஜாதா. ஹோஸ்டிங்ஸ் ரோடின் அமைதியில் பச்சைப்புல் தரை ஏக்கர்களுக்கு மத்தியில், நாவல் மரங்களின் நிழலில், ஏக் கண்டிஷனர், நாய், அம்பாஸ்டர் கார் சகிதம் இருந்தது அவர் வீடு. வீட்டு வாசஙூல் கதர் அணிந்த சேவகர்.

ராமநாதனின் பையன் வரவேற்றான். ராஜாராமன் தமிழில் பேச, அவருடைய பையன் ஆங்கிலத்தில் பதில் அளிக்கிறான். தமிழ் தெரிந்தும் தமிழில் பேசாத ராமநாதனின் பையன் மீது எந்த மரியாதையும் ஏற்படவில்லை ராஜாராமிற்கு.

ராமநாதன் அறையை விட்டு வெளியில் வந்தார். கிளம்பிப் போவதற்குத் தயாராக இருந்தார்.

ராமநாதன் ராஜ சேகரனைப் பார்த்தவுடன் ராமச்சந்திரன் என்று கூப்பிடுகிறார்.

‘நான் ராமச்சந்திரன் இல்லை சார். ராஜாராமன்,’ என்கிறான் ராஜாராமன்.

உண்மையில் உரையாடல் மூலம் கிண்டல், நகைச்சுவை உணர்வு என்றெல்லாம் கொண்டு வருகிறார் சுஜாதா.

இங்கே உரையாடல் மூலம் நகைச்சுவை உணர்வு உண்டாக்குகிற மாதிரி ஒரு காட்சி.

‘சரி, ஜானகி எப்படி இருக்கிறாள்?’

“ஜானகி செத்துப்போய் இரண்டு வருஷங்கசள் ஆச்சு”

“ஓ.எஸ் ஓ.எஸ் ஐ ரிமெம்பர் நௌ. இட்ஸ் எ பிடி. அவளுக்கு எத்தனை குழந்தைகள்?”

“ஒரு பையன். இரண்டு வயசுப் பையன்.”

“ஆமாம். ஜானகி தம்பி ஒருத்தன் டில்லியிலே செக்ரடடேரியட்டிலே வேலையாயிருக்கிறான் இல்லையா?”

“நான்தான் சார் ஜானகி தம்பி.”

இந்த உரையாடல் மூலம் அலட்சியமாக ஹாஸ்ய உணர்வை உருவாக்கி விடுகிறார் சுஜாதா.

பணம் கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ராஜாங்கம் முந்நூத்தி அம்பது ரூபாய் பணம் வேணும் என்கிறான். இந்த இடத்தில் எதற்காக பணம் வேண்டுமென்று சொல்ல எத்தனிக்கிறான். காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை ராமநாதன்.

“எப்ப வேணும்?” என்று கேட்கிறார்.

“இப்ப,” என்கிறான் ராஜாங்கம்.

அவர் செக் புத்தகம் கொண்டு வந்தார். அவனுடைய பெயரை கேட்டார். செக்கில் எழுதினார். அவனிடம் கொடுக்கும்போது ஒன்று சொல்கிறார்.

“நான் இதை அடிக்கடி செய்யறதா எனக்குப் படுகிறது” என்றார்.

“எதை சார்?”

“இதுமாதிரி உறவுகாரங்களுக்கு செக் எழுதறதை.”

ராஜாங்கத்திற்குக் கோபம் வருகிறது.

அவர் இன்னும் பேசுகிறார். தான் ஒரு செக் எழுதற மெஷின். உனக்குப் பணம் தேவையாக இருக்கும்போது வருகிறாய் என்கிறார்.

அவர் பேசப்பேச கோபம் அதிகமாக வருகிறது ராஜாங்காத்திற்கு. அவர் கொடுத்த செக்கை நாலாகக் கிழித்துப் பறக்கவிட்டான். அவருக்குப் பெரிய அதிர்ச்சி.

சுஜாதா கதையை முடித்துவிடுகிறார்.

முடிக்கும்போது ஒன்று சொல்கிறார். ‘எதிர்பாராத செயலில் அந்த ஒரு தருணத்தில் பூரணமாக வாழ்ந்தேன்

நான் என்று ராஜாங்கம் சொல்வதைப் போல் முடிக்கிறார். கதையில் கடைசியில் ஒரு ட்விஸ்ட். வாசகரைப் பார்த்து ராஜாங்கம் கேட்கிறான். நீங்கள் இவ்வளவு பொறுமையாக என் கதையைப் படித்தீர்கள். அவசரமாக சென்னைப் போய் அம்மாவைப் பார்க்க வேண்டும். எனக்கு முந்நூற்று இருபத்தைந்து ரூபாய் கொடுங்களேன் என்று கேட்கிறான்.

கதை நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் பெயர்களில் ஒரு ஒற்றுமை நிலவுகிறது. பெயர்கள் எல்லாம் ராவில் வருகிறது. ராஜாங்கம், ராஜகோபாலன்,கதையின் ஆரம்பத்தில் ராஜாங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்ற அவன் மனைவி தன் மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்து ‘யூலிஸிஸ்’ வாங்க பணம் தருகிறாள்.

ராஜாங்கம்ஆர்வத்தால் ஓர் இலக்கியப் பத்திரிகை இரண்டு மாதம் நடத்த மற்ற நகைகளையும் விற்றுவிட்டாள் அவன் மனைவி.

இலக்கியப் பத்திரிகை மீது சுஜாதாவிற்கு இருக்கும் ஈடுபாடை இங்கே கொண்டு வருகிறார். முழுக்க முழுக்க கற்பனை கதை இது. சுய அனுபவம் எங்கும் தலைக்காட்டவில்லை.நகைச்சுவை உணர்வுடன் மிக மிகச் சுலபமாகக் கதையை எழுதும் திறன் இவரிடம் உள்ளது.

இத் தொகுப்பிலுள்ள கதைகளை எல்லாம் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து வாசிக்கலாமென்று நினைக்கிறேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2- 144

அழகியசிங்கர்  


144)   இன்ஸ்டண்ட் கவிஞர் எம்

கீதாஞ்சலி பிரியதர்சினி 

இன்ஸ்டன்ட் கவிஞர் எம் என்பவர் மாவட்டத்தின்
ஒரு சிறந்த நிர்வாகி, நாட்டுக்கும், அவர் வீட்டுக்கும்
ஸ்டேட்ஸ் போய் படித்து விட்டு, பிடிக்காமல் ஊர்
வந்து முகநூலில் ஸ்டேடஸ் போடுவார் அடிக்கடி
முகநூலில் அவருக்கு மூவாயிரம் பேர் பரஸ்பர
நண்பர்கள் குருதிக்கொடை மற்றும் அடைமழைக்கு
மழைக்குடை உதவும் நண்பர் வரை பேமஸ் அவர்.
முன்தினம் அவர் மொரிஷியஸ் போனதை
அடுத்த நாள் முகநூலில் எழுதுவார், ஒரு நவீன
கைப்பேசி உதவியுடன் கையடக்க புகைப்படம் உண்டு
கண்டிப்பாக யாரோ ஒருத்தியுடன் சிரித்தபடி இருப்பார்
சிந்திப்பது குறித்து சிந்தனையுடன் தினம் பதிவில்
ஏராளம் எழுதுவார் நம் இன்ஸ்ட ன்ட் கவிஞர் எம்.
அணுஉலை எதிர்ப்பாளர், ஈழவிடுதலைக்கு தமிழ்
ஆதரவாளர் கவிஞர் எம் ஏழெட்டு புரட்சிகர தமிழ்க்
குறும்படங்களுக்கும் உரிமையாளர். புதுமற்றும் பழைய
கவிதைகள் குறித்தும், எழுத்தாளர்களின் போக்கு, திமிர்
குறித்தும் ஏராளம் பதிவுகள் போட்டார் நேற்று முன்தினம்
அப்கோர்ஸ் அடுத்த மாதம் இயக்குநர் எக்ஸ்ஒய் என்கிற
ஒருத்தர் தான் அவரின் உலகப்புகழ்ப்பெற்ற தமிழ்ப்புதுக்
கவிதைத் தொகுப்பை வெளியிடப் போவதாகவும் ஒரு
தகவல். உற்றுப் பாருங்கள் உங்கள் கைப்பேசியை பளீஸ்
இதற்குள் முப்பது லைக்குகள் எம் முக்கு
வெற்றி வாகை நமக்கே, வாழ்க கவிதை, வளர்க எம்.
முப்பது நாளில் மூவாயிரம் பிரதிகள் இன்ஸ்ட ன்டாக
விற்கும் கவிதை செய்வோம். வாருங்கள் நண்பர்களே
மிச்சமிருக்கும் பொழுதுக்குள்.


நன்றி : நிலைக்கண்ணாடி நிமிடங்கள் – கீதாஞ்சலி பிரியதர்சினி – இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்) 41 கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 600 011 அலை பேசி : 9444640986 – பக் : 72 – விலை : ரூ.50

கௌதம புத்தர் – 7



அழகியசிங்கர்

புத்தர் முதுமை அடைந்தார்.  அவரைப் பார்த்துக்கொள்ள யாராவது வேண்டும் என்கிற நிலையும் உண்டாயிற்று.  குருநாதருக்குப் பணிவிடை செய்யத் துறவியருக்குள் போட்டா போட்டி.

‘நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன், குருவே’ என்றார் சாரிபுத்ரா. 

‘அல்ல! அது என் பணி,’ என்றார் மொகல்லானா.  

புத்தர் சிந்தித்தார். இருவருமே முக்கியமானவர்கள்.  சங்க நிர்வாகத்துக்குத் தேவையானவர்கள்.  அவர்களைத் தன் உதவிக்கு ஏற்றால் சங்கம் நிலை தடுமாறும்.  அதோடு அவர்களும் வயோதிகர்கள்.  இவ்வாறு எண்ணி தன் உறவினரும் வயதில் இளைஞருமான ஆனந்தனைத் தேர்ந்தெடுத்தார்.

ஆனந்தன் புத்தரின் அன்புச் சீடராய் ஆன ஆரம்ப காலத்திலிருந்து இருபது ஆண்டுகள் அவரைக் கவனித்துக் கொண்டார்.  எண்பது வயதிலும் புத்தர் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தார்.  லிச்சாவிக்குடியரிசின் தலைநகரான வைசாலி நகர் அருகே புத்தர் கடைசியாகத் தங்கி இருந்தார்.  ஆம்பபாலி என்ற நடனமாதின் மாந்தோப்பில் அவர் தங்கி இருந்தார்.  சாக்கிய மகாமுனி தன் தோட்டத்தில் தங்கியிருப்பதறிந்து அவள் அவரை வணங்க வந்தாள்.  அன்றைக்கே அவரைக் காண வைசாலியை அரசுபுரிந்து வந்த லிச்சாவி தலைவர்களும் வந்தனர்.  அவர்களும் அழைத்தனர்.  நான் ஏற்கனவே ஆம்பபாலி வீட்டுக்கு வருவதாக வாக்களித்து விட்டேன் என்று அவர் மறுத்தார்.

கேவலம் ஒரு நாட்டியக்காரிக்காக எங்களை ஒதுக்குவதா என்று அவர்கள் முறையிட்டனர்.  புத்தர் அதனைக் கண்டு கொள்ளவேயில்லை.  அவரது பார்வையில் எல்லோரும் சமம்.  அவர்களைக் காட்டிலும் ஆம்பபாலிக்கே தன் பரிவும் கருணையும் அதிகமாகத் தேவை என்பது அவர் முடிவு.

வைசாலியில் இருந்த துறவியரைக் காட்டி தனது இறுதிச் செய்தியை அறிவித்தார். 

‘ஒவ்வொருவரும் தன்னில் தானே சரணடைக.  சுயக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகப் பின்பற்றுங்கள் அது ஒன்றினால் மட்டுமே உண்மையை உணர முடியும்.  நல்ல வாழ்வு வாழ முடியும்’ என்பதே அந்தச் செய்தி.

அங்கிருந்து மல்லர்கள் நாடான ருசி நகரத்துக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பயணப்பட்ட புத்தர் வழியல் கண்டா என்ற இரும்புத் தொழிலாளியின் விருந்தோம்பலை ஏற்றார்.  அப்போதைய அவர் உடலநிலைக்கு ஏற்றபடி அது எளிய உணவாக இல்லை.  ஆனால் அந்தக் கொல்லரின் மனம் நோகக்கூடாதென்று புத்தர் அதை ஏற்றுக்கொள்ள, அவர் உடல்நிலை மோசமாயிற்று.  இருந்தும் அவர் பயணத்தைத் தொடர்ந்தார்.  ருசி நகரம் சென்றதும் இரு சால மரங்களின் இடையே ஒரு சுத்தமான விரிப்பை விரிக்குமாறு ஆனந்தனிடம் கூறி அங்கு ஓய்வெடுத்தார்.  காணவந்த மல்லர் இனப்பிரப்புக்களைக் கண்டு உரையாடினார்.  அவர்கள் சென்றதும் மீண்டும் களைப்பாறினார்.

அந்த நேரம், சுபத்தர் என்ற சாது அங்கே வந்து புத்தரைக் காண விரும்பினார்.  ஆனந்தன் களைத்த நிலையில் குருநாதர் ஓய்வெடுப்பதைக் கூறினார்.  அதைச் செவியுற்ற புத்தர் அந்தச் சாதுவை அப்போதே சந்திக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

மரணப் படுக்கையில் கூடத் தன்னிடம் ஆலோசனைக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப அவர் விரும்பவில்லை.  புத்தரின் புனித மொழி கேட்டு சுபத்தர் மடத்தில் சேர்ந்தார்.  புத்தரால் சங்கத்தில் சேர்க்கப்பட்ட கடைசித் துறவி இவரே.  புத்தரின் உடல்நிலை மேலும் மோசமானது.

அக்கம் பக்கத்துத் துறவியர் வந்து கூடினர்.  ‘சாவது இயற்கை. எனவே நல்லோராய் வாழுங்கள்’ என்று புத்தர் இறுதி போதனை செய்தார்.  மகாகுரு காலமானார்.  அவர் ஆன்மா நிர்வாணமுற்று விடுதலை பெற்றது.

இன்று, அவர் பரிநிரவாணமடைந்து இரண்டாயிரத்து ஐந்நூறு  ஆண்டுகளுக்குப்பிறகும், மக்களுக்கு அவர் போதித்த சன்மார்க்கத்தின் சின்னமான தர்மசக்கரம் நமது தேசியக் கொடியை அழகு செய்கிறது.

அவர் மரணத்துக்குப்பின் அவர் போதனைகள் பிற நாடுகளுக்கும் பரவின.  அசோக சக்கரவர்த்தியின் ஆர்வம் இதற்குப் பெரும் காரணமாகும்.  புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி என்ற மந்திரம் முழங்கலாயிற்று.  இதன் பொருள் இதுவே.   

புத்தரைச் சரணடைகிறேன்

தர்மத்தைச் சரணடைகிறேன்

சங்கத்தைச் சரணடைகிறேன்.                            

நவீன விருட்சம் 113வது இதழுக்குப் படைப்புகளை அனுப்புங்கள்

அழகியசிங்கர்

வணக்கம்.

நவீன விருட்சம் தொடர்ந்து 32 ஆண்டுகளாக வரும் சிற்றேடு. 112வது இதழைத் தாமதமாகக் கொண்டு வந்தேன்.  உண்மையில் பிப்ரவரி 2020ல் முடிக்க வேண்டிய பத்திரிகையை மார்ச்சு மாதம் இறுதி வரை கொண்டு போய்விட்டேன். கொரோனா பாதிப்பால் இதழை அச்சிட முடியவில்லை.  ஆனால் இதழை அமேசான் கிண்டஙூல் சேர்த்து விட்டேன். நிலைமை சரியானவுடன் அச்சிட உள்ளேன்.  

இப்போது 113வது இதழைக் கொண்டு வர உள்ளேன். இதற்குப் படைப்பாளிகள் படைப்புகளை அனுப்பி பங்கெடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

கவிதை அனுப்புவோர் உங்களுடைய சிறந்த ஒரு கவிதையை மட்டும் அனுப்புங்கள்.  கதைகள் அதிகப் பக்கம் போகாமல் அனுப்புங்கள்.  கட்டுரைகளும், புத்தக மதிப்புரைகளையும் நீங்கள் அனுப்பலாம்.  

மொத்தம் 80 பக்கங்கள் வரை கொண்டு வர உள்ளேன்.  நவீன விருட்சம் இ மெயிஙூல் படைப்புகளை அனுப்புங்கள்.

அன்புடன்  

அழகியசிங்கர் 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 136

அழகியசிங்கர்  

சிமெண்ட் பெஞ்சுகள்

நஞ்சுண்டன்                                                     

வசந்த காலத்தில்

பூத்துக்குலுங்கும் மரங்களின் 

கீழிருக்கும் 

சிமெண்ட் பெஞ்சுகள் 

கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் 

அழைக்கின்றன 

‘வா. உட்கார். ஓய்வெடுத்துக்கொள். 

கோடை வெயிலிலோ 

விநயமாய் வேண்டுகின்றன

‘மன்னித்துக்கொள். வேறிடம் தேடு.’

சிமெண்ட் பெஞ்சில்

அமரும் யாரும் அறியார் 

தனக்கு முன்னும் பின்னும் 

அமர்கிறவர் யாரென்று.

சிமெண்ட் பெஞ்சுகள் மட்டும் அறியும் 

உட்காரும் மனிதர் யாவரையும்.

நன்றி : சிமெண்ட் பெஞ்சுகள் – நஞ்சுண்டன் – பக்கங்கள் : 52 – விலை : ரூ.25 – ஆண்டு : நவம்பர் 1996

மயிலாடுதுறை நண்பருக்கு நன்றி



அழகியசிங்கர்

மயிலாடுதுறையில் இருக்கும்போது ஒரு இலக்கிய நண்பர் வீட்டிற்குச் சென்றேன்.  அவர்  ஆயிரம் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பதாகச் சொன்னார்.  ஆயிரம் புத்தகங்கள் என்றால் அளவு என்ன என்று பார்ப்பதற்காகப் போனேன்.  

அங்குப் போய் பார்த்தவுடன் ஆயிரம் புத்தகங்கள் இருப்பதாகவே தெரியவில்லை.  அந்த அளவிற்கு அடுக்கி வைத்திருந்தார். மூன்று அடுக்குகளாக வைத்திருந்தார்.  

வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக அப்படி அடுக்க வேண்டுமென்று தோன்றியது.  என் நூலகத்தில் அதுமாதிரி ஆரம்பித்தேன். 

புத்தகங்களை நிரப்புவதற்கு முன்னை விட அதிக இடம் கிடைத்தது.  முன்பு நான் புத்தகங்களைப் படுக்க வைத்திருந்தேன்.  அதன் மேல் மேல் என்று அடுக்கிக்கொண்டு போவேன்.  ரொம்ப இடத்தை அது எடுத்துக்கொண்டு விடும்.

நண்பர் வீட்டிலிருப்பதுபோல் நீளமாகப் புத்தகங்களை நிற்க வைத்திருந்தேன்.  புத்தக முதுகு பார்ப்பவர்களைக் கவர்ந்து விடும். மேலும் அதிக இடம் கிடைக்கும்.  நான் வசிக்கும் வீட்டிலேயும் கட்டிலில் அப்படி அடுக்கத் தொடங்கினேன். மேலும் முதுகைப் பார்க்கும் போது என்ன புத்தகம் என்று தெரிந்து விடும்.

ஊரிலிருந்து வந்தவுடன் எனக்கு இரண்டு நாட்கள் இப்படிப் பொழுது போயிற்று.  மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் ஏகப்பட்ட புத்தகங்கள் நீள வாக்கில் அடுக்க வேண்டும்.

ஒரு இரும்பு ராக் முழுவதும் 33 வருடங்களாகச் சேகரித்து வைத்திருக்கும் விற்காத விருட்சம் இதழ்களை (என்னை விட்டுப் போக விரும்பாத) நீள வாக்கில் அடுக்கி அழகு பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. 

மயிலாடுதுறை நண்பருக்கு நன்றி.

புத்தகக் காட்சி – ஒளிப்பதிவு கூட்டம் – 11 – 20.01.2020 அன்று நடந்த நிகழ்ச்சி

அழகியசிங்கர்

“புத்தகக் காட்சி முடிந்து விட்டது. என் புத்தகமான காலியாக இருக்கின்றன நாற்காலிகள் என்பதைக் குறித்து செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் பேசியதை ஒளி பரப்புகிறேன். ஆனால் அங்கே பேசியதை ஒளிபரப்பு செய்வதில் தாமதம். கணினியின் ஹார்ட் டிஸ்க் போய்விட்டது. முகநூலில் எதையும் பதிவு செய்ய முடியவில்லை. இதோ இப்போது பதிவு செய்கிறேன்.

புத்தகக் காட்சி – ஒளிப்பதிவு கூட்டம் – 9 – 18.01.2020 அன்று

அழகியசிங்கர்

புத்தகக் காட்சியில் எடுத்த ஒளிப்பதிவுகள் முழுவதையும் நான் இன்னும் ஒளிபரப்பவில்லை. அதன் பின் நண்பர்கள் புத்தகக் காட்சி அனுபவங்களைக் குறித்து எடுத்த ஒளிப்பதிவுகளை நான் இன்னும் பயன் படுத்தவில்லை.
கவிஞர் ஜானு இந்து அவர்கள் அழகியசிங்கரின் நாவலான ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன் என்ற புத்தகம் குறித்து உரையாடிய ஒளிப்பதிவு

துளி – 93- புத்தகக் காட்சி நினைவுகள் 3

அழகியசிங்கர்

பொதுவாகப் புத்தகக் காட்சி உரிய நேரத்திற்கு நான் வர முடியாது.  நேற்று கூட்டம் 12 மணிக்குக் கூட்டம் ஆரம்பிக்கிறது என்று போனேன்.  பிறகுதான் தெரிந்தது பதினொரு மணிக்கே.

புத்தகக் காட்சியில்தான் பல நண்பர்களைப் பார்த்து உரையாடமுடியும்.  புத்தகக் காட்சியில் பரிதாபத்துக்குரியவர்கள் கவிஞர்கள்.  

என்ன தலைகீழாக நடந்தாலும் கவிதைப் புத்தகம் விற்பது என்பது நடக்காது.  பலர் கவிதைப் புத்தகங்களை விசிட்டிங் கார்டு போல கொடுத்துவிடலாமென்று கேவலப் படுத்துவார்கள்.  அதுமாதிரியெல்லாம் கொடுக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றும்.

கவிதைப் புத்தகம் கொண்டு வருபவர்களை நான் எச்சரிக்கை செய்வது வழக்கம்.  இப்போது உள்ள சூழலில் கவிதைப் புத்தகத்தைக் குறைவாக அச்சிட்டு வைத்து கொள்ளலாமென்று தோன்றுகிறது.

நான் ஞானக்கூத்தனின் இம்பர் உலகம் (அவர் சொல்லி) கவிதைத் தொகுதி கொண்டு வந்தபோது 50 பிரதிகள்தான் விற்க முடிந்தது.  நானும் அதிகமாக அடிக்க வில்லை.  அசோகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு 100 பிரதிகள்தான் அடித்திருந்தேன். 100 கவிஞார்களின் கவிதைகளைத் தொகுத்து மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்று தொகுதி கொண்டு வந்தேன்.  அளவோடுதான். 

ஒரு புத்தகம் 100 பிரதிகள் விற்றால் குதிக்க வேண்டும்போல் தோன்றும். அதுவும் கவிதைப் புத்தகங்கள் விற்றால் ஒரே உற்சாகமாகிவிடுவேன். எனக்குத்தான் இதுமாதிரி நடக்கிறது.  மற்ற பதிப்பாளர்களுக்கு அது மாதிரி இல்லை என்று நினைக்கிறேன்.

என் நண்பர் மையம் ராஜகோபல் கவிதைப் புத்தகங்கள் கொண்டு வர விரும்பினார்.  அவரிடம் எச்சரித்தேன்.  எத்தனைப் புத்தகங்கள் கொண்டு வரப் போகிறீர்கள்.  அவர் நூறைத் தாண்டிய ஒரு எண்ணிகையைக் கூறினார்.  300 அல்லது 500.  நான் அலறினேன். ஏன் அப்படி செய்கிறீர்கள்.  50 போதும் என்றேன்.  அவருக்கு நிறையா நண்பர்கள் என்றார்.  அப்படியென்றால் 100 அடியுங்கள். அவர் என் பேச்சைக் கேட்கவில்லை.

என்னிடம் விற்பதற்கு அந்தப் புத்தகம் கொடுத்தார்.  அந்தக் கவிதைப் புத்தகம் தலைப்புப் பார்த்தவுடன் இதுமாதிரி தலைப்பில் ஒரு கவிதைப் புத்தகம் எழுதினால் எப்படி விற்குமென்றுதான் தோன்றியது.  இது எடுபடாது என்றேன் ராஜகோபாலனிடம். 

ஆனால் அவருக்கு நிறையா நண்பர்கள் இருக்கிறார்கள் என்றார் ராஜகோபால் திரும்பவும்.  எனக்குச் சந்தேகமாக இருக்கிறது என்றேன்.   கஞ்சா என்ற தலைப்பில் ஒரு நீண்ட கவிதையை 64 பக்கங்களுக்கு எழுதி உள்ளார்.  எப்படி சொல்வது என்று தெரியவில்லை அவருடைய கவிதை வரிகளில் தமிழ் விளையாடுகிறது. வண்ணமலைக்குன்றின் மேல் அல்லிக்குளம் என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.  இனிமேல்தான் மனம் ஊன்றி கவிதையை வாசிக்க வேண்டும். கவிதைப் புத்தகம் எந்த ஆண்டு வந்தது என்பதை ராஜகோபாலன் குறிப்பிடவில்லை. 

பழனிவேள்  இப்போது உயிருடன் இல்லை.  என்னுடைய புத்தக அரங்குக்கு வந்திருந்து சில நிமிடங்கள் உரையாடியிருக்கிறார். அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறேன்.  அதை கணினியில் தேடிக்கொண்டிருக்கிறேன்.    என் புத்தக அரங்கில் வருபவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது என் வழக்கம்.  பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருப்பவரைப் போல் தோற்றம் தருவார்.  ஆனால் பழகுவதற்கு நல்ல மனிதர்.

இந்த முறை புத்தகக் காட்சிக்குப் போகும்போது அவருடைய கவிதைத் தொகுப்பு கிடைத்தது.  விற்கலாமென்று 3 பிரதிகள் மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன். விற்பனைக்கு வந்த எல்லாக் கவிதைத் தொகுதிகளையும் ஒரு தட்டில் குவித்து வைத்திருக்கிறேன். அவருடைய தொகுதியையும் சேர்த்து வைத்திருக்கிறேன்.  20 சதவீதம் குறைத்துக் கொடுக்கலாமென்று நினைக்கிறேன்.  ஆனால் யாரும் அந்தத் தட்டை தொடக்கூட இல்லை. 

புத்தகக் காட்சி நினைவுகள் 2

அழகியசிங்கர்

புத்தகக் காட்சி ஜனவரி மாதம் நடப்பதுதான் சரி.  வங்கியில் பணிபுரியும் போது பொங்கல் திருவிழாவை ஒட்டி பணம் முன்னதாகக் கொடுப்பார்கள்.  பின் ஓராண்டிற்கான மருத்துவ சலுகைக்கான தொகையும் பெற முடியும். இந்தத் தொகையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் எதாவது புத்தகம் கொண்டு வருவதும்,  நடக்கும் புத்தகக்காட்சிக்கு வாடகை தருவதுமாக இருப்பேன்.

ஓராண்டில் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள்தான் கொண்டு வர முடியும்.  பல ஆண்டுகள் நான் இப்படித்தான் புத்தகங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தேன்.  விருட்சம் இதழையும் நான்கு இதழ்கள் கொண்டு வந்து விடுவேன். சிலசமயம் 3 இதழ்களாகப் போய்விடும். 

நான் முதலில் கொண்டு வந்தது கவிதைப் புத்தகம்.  10 ஆண்டுகள் மேல் ஆயிற்று அதை விற்பதற்குள்.  பெரும்பாலும் இலவசமாகக் கொடுத்தேன்.  என்னுடைய கவிதைத் தொகுதி இல்லை. சில எழுத்தாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து புத்தகங்களைக் கொண்டு வருவேன்.  என் கவிதைப் புத்தகங்கள் நன்றாக விற்று உள்ளன.  ‘தொலையாத தூர’ மாகட்டும், ‘யாருடனும் இல்லை’ ஆகட்டும்.

என் புத்தகங்கள் கவிதைப் புத்தகங்களாக இருப்பதால் நூலக உத்தரவு வாங்குவதற்கு கிடைக்கவில்லை.  இப்போது இன்னும் மோசம்.

நகுலன் அவர் புத்தகத்தைக் கொண்டு வரும்போது 30 பிரதிகளுக்கு மேல் கொண்டு வராதீர்கள் என்பார்.  அவர் சொல்வது இன்று வரை உண்மை. அதுவும் கவிதைப் புத்தகத்திற்கு அது பொருந்தும்.  அவருடைய இரு நீண்ட கவிதைகள் கொண்டு வந்தேன்.  ஒரு பல்கலைக்கழகத்தில் எம் ஏ மாணவர்களுக்கு பாடப் புத்தகம்.  என்ன சோகம் என்றால் அந்தப் புத்தகத்தைப் படிக்க இரண்டே இரண்டு மாணவர்கள்தாம்.

ஒவ்வொரு முறையும் புத்தகக் காட்சி வரும்போதும் என் பொழுது உற்சாகமாக இருக்கும்.  மற்ற பதிப்பாளர்கள் புத்தகங்களை நான் விற்பேன். யாராவது என்னிடம் விற்கக் கொடுத்தால் விற்றுக் கொடுப்பேன்.

நான் ஒவ்வொரு ஆண்டும் எனக்குக் கிடைக்கும் தொகையில் புத்தகங்களைக் கொண்டு வருவேன்.  ஆனால் ஒரு போதும் என் மனைவியிடமோ என் தந்தையாரிடமோ (அவர் பெயரில்தான் பதிப்பகத்தை நடத்தினேன்) அல்லது என் நெருங்கிய (அப்படி யாராவது உண்டா) நண்பர்களிடமோ ஒரு பைசா கேட்டதில்லை. 

வருடத்திற்கு 15 நாட்கள் எனக்கு உற்சாகமாகப் பொழுதாக இருக்கும்.  பல எழுத்தாளர்களைச் சந்திப்பேன்.  அவர்களுடன் பேசிப் பொழுது போக்குவேன்.  புத்தகக் காட்சி முடிந்தவுடன் புத்தக மூட்டைகளுடன் திரும்பவும் என் இடத்திற்கு வரும்போது எதையோ பறி கொடுத்தது போலிருக்கும் கொஞ்ச நாட்களுக்கு…