திரு மு.முருகேஷ் உரை ஆற்றுகிறார்.
அழகியசிங்கர்
ஹைக்கூ குறித்து சிறப்புரை ஆற்றிய திரு. மு.முருகேஷ். ஒளிப்பதிவில் கண்டு ரசியுங்கள். ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் நிபுணர். ஹைக்கூ கவிதைகளுக்காக பல
திரு மு.முருகேஷ் உரை ஆற்றுகிறார்.
அழகியசிங்கர்
ஹைக்கூ குறித்து சிறப்புரை ஆற்றிய திரு. மு.முருகேஷ். ஒளிப்பதிவில் கண்டு ரசியுங்கள். ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில் நிபுணர். ஹைக்கூ கவிதைகளுக்காக பல
அழகியசிங்கர்
பழைய பேப்பர் கடையில்
புத்தகம் வாங்கும் பழக்கம் எனக்கு
ரமணிசந்திரன் புத்தகங்கள்
ஒருநாள் இருக்கக் கண்டேன்
அப்படியே வாங்கிக் கொண்டு(கிலோ ரூ.70க்கு)
புத்தகக் கண்காட்சிக்கு எடுத்துக்
கொண்டு விற்க வைத்தேன்.
எல்லாவற்றையும் உடனே வாங்கிக்
கொண்டு போனார்கள் பெண் ரசிகர்கள்
பெண் ரசிகர்களின் ஜாடை ரமணிசந்திரன்
சாயலாக இருக்கக் கண்டேன்
ஒரு முறையாவது ஒரு புத்தகமாவது வாங்கிப்
படிக்க வேண்டுமென்று தோன்றியது
என்னதான் எழுதியிருக்கிறார் ரமணிசந்திரன்?
நான் தயாரித்த புத்தகங்கள் எல்லாம்
பொதுவாகக் கவிதைப் புத்தகங்கள்
கண்ணைக் கண்ணை விழித்துப் பார்த்தன
என்னை. 28.12.2020
அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..
அழகியசிங்கர்
என் நண்பர் ஒருவரிடம் இரவு பத்து மணிக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன். நான் பொதுவாக இரவு 11.30 மணிக்கு மேல் தான் தூங்கப் போவேன்.திடீரென்று அசோகமித்திரன் சிறுகதைகள் பற்றி பேச்சு வந்தது. இரண்டு கதைகளை அவர் குறிப்பிட்டார். ஒன்று புலிக்கலைஞன். இரண்டாவது கதை எலி .
“இரண்டு கதைகளையும் சாதாரணமாகத்தான் எழுதியிருக்கிறார். அக் கதைகளை ஏன் விசேஷமாகக் குறிப்பிடுகிறார்கள்?” என்று கேட்டார்.அவர் சொன்னதை நான் நம்பவில்லை. நான் அக் கதைகளை உடனடியாகப் படிக்க வேண்டுமென்று தோன்றியது.
அந்த இரவு நேரத்தில் இரண்டு கதைகளையும் படித்து விட்டுத்தான் தூங்கச் சென்றேன். அக் கதைகளைக் குறித்து விசேஷமாக யார் சொல்லியிருக்கிறார்கள் என்று யோசித்தேன்.
அக் கதைகளைப் படித்த மன நிறைவை அக் கதைகள் கொடுக்கத் தவறவில்லை.
அசோகமித்திரன் கதைகள் புத்தகத்தை ஒரு கெயிட் புத்தகம் மாதிரி கதை எழுத முன் வருபவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.அவர் கதைகளைக் குறித்து ஒரு பொதுவான சில கருத்துக்கள் சொல்ல விரும்புகிறேன்.
1. தொடர்ந்து ஒரு ஆசிரியரின் கதைகளைப் படிக்கும்போது சற்று அயர்ச்சி ஏற்பட்டு விடும். ஆனால் அசோகமித்திரன் கதைகளில் அப்படியொரு அனுபவம் ஏற்பட்டதில்லை.
2. கதைகளில் எளிமை என்றால் அப்படியொரு எளிமையாக எழுதியிருப்பார்.
3. பெரும்பாலான கதைகள் இரண்டு மூன்று பக்கங்களில் முடிந்து விடும்.
4. அவர் கதைகளை உணர்ச்சிப் பூர்வமாக எழுதியிருக்க மாட்டார். அறிவுப் பூர்வமாக எழுதியிருப்பார்.
5. அவர் கதைகளில் பெரும்பாலும் நகைச்சுவை உணர்ச்சி இயல்பாக வெளிப்படும். வலிந்து திணிக்க மாட்டார்.
நண்பர் கேட்கும்போது எதையும் கோர்வையாகச் சொல்ல வரவில்லை. யோசிக்க யோசிக்க இதெல்லாம் தோன்றுகிறது.
‘அசோகமித்திரன் கதைகள்’ என்ற முழுத் தொகுதியில், 274 கதைகள் இருக்கின்றன.
இதில் எந்தக் கதையையும் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம்.அவர் எழுதிய எல்லாக் கதைகளும் சிறந்த கதைகள் என்று சொன்னால் நண்பர் சண்டைக்கு வந்து விடுவார்.
நான் கண்ணை மூடிக்கொண்டு 274 கதைகளில் எதாவது ஒரு கதையைப் படிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதி அற்புதமான அனுபவத்தை கதை ஏற்படுத்தாமலிருக்காது.நண்பர் சொன்ன இரண்டு கதைகளையும் எடுத்துக்கொண்டு எழுத வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.
புலிக்கலைஞன். என்ற கதையை பலமுறை படித்திருக்கிறேன். இப்போது எத்தனையாவது முறை என்று தெரியாது . உண்மையில் இப்போது படிக்கும்போது புதியதாகப் படிப்பதுபோல் தோன்றுகிறது.
ஒரு கதை பலமுறை படிக்கும்போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அரத்த்தத்தைக் கொடுக்கும்.அசோகமித்திரன் பொதுவாக அவர் சார்ந்த உலகத்தை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுவார். அதேபோல் இந்தக் கதையிலும் வெளிப்படுத்துகிறார். அதைச் சாதாரணமாக விளக்குவது போல் ஒருவித கிண்டல் தொனியில் தெரியப்படுத்துகிறார்.
இதோ இந்தக் கதையை எடுத்துக்கொள்வோம்.ஒரு திரைப்படம் எடுக்கும் அலுவலகத்தில் கதைசொல்லி பணிபுரிகிறான். முதலில் தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறான். அலுவலகத்தில் பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை டிபன் இடைவெளி இருந்தது. இப்போது அப்படி இல்லை என்கிறான். கடந்த ஒரு மாதமாக பத்து மணிக்கே அலுவலகம் வந்து விட வேண்டும். டிபனுக்காக பிற்பகல் ஒன்றிலிருந்து இரண்டு மணி வரை. மாலை ஐந்து மணிக்கே முடியும் அலுவலகம் ஆறு மணிவரை நீட்டி வைக்கப்பட்டு விட்டது.
புலிக்கலைஞனை அறிமுகப்படுத்தும்போது அலுவலக நிலையை வெளிப்படுத்துகிறார். ஒன்றரை வருடம் திரைப்படமே எடுக்காமல் இருந்திருக்கிறது. வேலையொன்றும் செய்யாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு, காரியாலய நேரத்தில் மேஜை மீது காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு தூங்கி, தலைமயிரை நரைக்க வைத்து, அடிவயிற்றில் ஊளச்சதை சேர்த்து, டயாபிடிஸ் நோய்க்கு இடம் கொடுத்து, சிந்தனைக்கு இலக்கு இயலாத காரணத்தால் விழிகளுக்கு அலைபாயக் கற்றுக்கொடுத்து, பேச்சில் நிறைய உளறலை வரவழைத்துக் கொள்ளலாம். ஒன்றரை வருடத்திற்கு நிலைமை மாறலாம். அப்போது ஏற்படும் கிளர்ச்சியும் தடுமாற்றத்தையும் எதிர்பார்த்திருந்த நாளில்தான் புலிக்கலைஞன் அங்கு வருகிறான்.
சர்மா என்ற கதாபாத்திரத்தை இப்போது அறிமுகப்படுத்துகிறார் அசோகமித்திரன்., சர்மா சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர். நாடகம், கதைகள் எழுதிப் பிரசுரம் செய்து பெயர் வாங்கி, அந்த ஸ்டூடியோவில் கதை இலாகாவில் ஒரு புள்ளியாகி விட்டிருந்தார்.
அடுத்தது அவர்களுடைய அலுவலகத்தில் உள்ள சிறு அறையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் சிறிதும் பெரிதுமாகப் பழங்காலத்து மேஜைகள் மூன்று இருப்பதாகச் சொல்கிறார்.
அசோகமித்திரன் இங்கே நகைச்சுவை உணர்வுடன் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளைத் தவிர இன்னும் ஒன்று அதிகப்படியாக இருந்தது. அதிகப்படியான நாற்காலியில் ஒரு கால் குட்டை. யார் வந்து அதில் உட்கார்ந்தாலும் ஒரு புறம் சாய்ந்து, அதில் உட்கார்ந்தவரை ஒரு கணம் வயிற்றைக் கலக்கச் செய்யும்.’
வந்த புலிக்கலைஞன் அதைப்பிடித்துக்கொண்டு நின்றான்.
சர்மாவிற்கும் அவனுக்கும் உரையாடல் நடக்கிறது. அந்த உரையாடலைப் படிக்கும்போது சிரிப்பை வரவழைக்கும்படி இருக்கும்.
அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.
“காலையிலே வந்தேனுங்க. நீங்கக் கூட ஒரு குடையை ரிப்பேர் பண்ணிட்டிருந்தீங்க.”
“ஓ..நீயா? வேலாயுதமில்லை?”
“இல்லீங்க. காதர் டகர் பாயிட்காதர்” என்கிறான்
“நீ வந்திருந்தியா?” என்று சந்தேகத்துடன் கேட்கிறார் சர்மா.
“ஆமாம். வெள்ளை சொன்னான் ஐயாவை வீட்டிலே போய் பாருன்னு” என்கிறான்..
இப்போது வெள்ளை என்ற பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார் அசோகமித்திரன்.வெள்ளை என்பவன்தான் அவர்கள் ஸ்டூடியோவில் பெரிய கூட்டங்களைப் படம் எடுக்க வேண்டியிருந்தால் நூற்றுக் கணக்கில் ஆண்களையும் பெண்களையும் சேர்த்துக் கொண்டு வருபவன்.
கூட்டமாக இருப்பதைத் தவிர அவர்களிடமிருந்து நடிப்பு ஒன்றும் தேவைப்படாது. நபருக்கு ஒரு நாளைக்குச் சாப்பாடு போட்டு இரண்டு ரூபாய் என்று கணக்கு. வெள்ளை ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு விடுவான் என்று கிண்டலாகக் குறிப்பிடுகிறார்.
புலிக்கலைஞன் எதாவது நடிப்பதற்கு எதாவது ரோல் கிடைக்குமா என்று வந்திருக்கிறான். சர்மா, “இப்ப ஒன்றும் கிரவுட் சீன் எடுக்கலையேப்பா” என்கிறார்.இங்கு புலிக்கலைஞனைப் பற்றிய வர்ணனைத் தொடருகிறது.
ஒரு காலத்தில் கட்டுமஸ்தான உடம்பு இருந்திருக்க வேண்டும். இப்போது தோள்பட்டை எலும்பு தெரிய இருந்தான். நன்றாகத் தூக்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாகக் காண்பித்தன. வர்ணிக்கும்போது இங்கே ஒரு கிண்டல். வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லோரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள் என்று.பிடிவாதமாக இருக்கிறான். எதாவது ரோல் கொடுக்கும்படி.
சர்மா, “உனக்கு என்ன ரோல்பா தர முடியும்? அதோ காஸ்டிங் அசிஸ்டெண்ட் இருக்காரு. அவர் கிட்டே எல்லா விவரமும் தந்துவிட்டுப் போ” என்கிறார்.காஸ்டிங் அசிஸ்டெண்ட் கதைசொல்லிதான். வந்தவன் மாதிரி ஆயிரக்கணக்கான நபர்களைப் பார்த்திருக்கிறார். பெயர், வயது, உயரம், விலாசம் என்று எல்லாம் குறித்து வைத்திருப்பார்.அந்தக் குறிப்பிகளிலிருந்து தேவைப்படும்போது நான்கு பேருக்குக் கடிதம் போட்டால் மூன்று கடிதங்கள் திரும்பி வந்துவிடும். அப்புறம் எல்லாம் வெள்ளைதான்.ஆனால் அவன் கதைசொல்லி பக்கம் திரும்பவில்லை. எல்லாம் சர்மாதான் என்று அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
அவனைப் பார்த்து, சர்மா, “உனக்கு நீந்தத் தெரியுமா?” என்று கேட்டார்.
“கொஞ்சம் கொஞ்சம் தெரியும்” என்கிறான்.
“மேலேந்து ஆத்துலே பாய்ஞ்சு நீஞ்சிப் போற மாதிரி ஒரு சீன் எடுக்க வேண்டியிருக்கும். அதுக்கு நீ போறாது” என்கிறார் சர்மா.”எனக்கு டகர் பாயிட் வரும். என் பேரே டகர் பாயிட் காதர்தானுங்க” என்கிறான் அவன்.
ஒருவருக்கும் அவன் சொல்வது புரியவில்லைஅவன் திரும்பவும் சொன்னான் “புலிங்க, புலி. புலி பாயிட்”
“ஓ..நீ புலியோட சண்டைப் போடுவியா?” என்று கேட்கிறார் சர்மா.
“இல்லீங்க புலி வேஷம் போடுவேங்க. அதைத்தான் டகர் பாயிட்னுவாங்க. இல்லீங்களா?”
இந்த இடத்தில் அவர்கள் இருவரும் பேசுவது நகைச்சுவை உச்சத்துக்குப் போய்விடுகிறது.அந்தப் புலி கலைஞன் பரிதாபமான முறையில் தன்னை நிரூபிக்க வேண்டி வந்துள்ளது.
“நம்பளது வேறு மாதிரிங்க. நிஜப் புலி மாதிரியே இருக்கும் ” என்கிறான்.
எங்கிருந்தோ ஒரு புலித் தலையை எடுத்தான். அப்போதுதான் அவன் ஒரு துணிப்பையை எடுத்து வந்திருந்தது தெரிந்தது. புலித்தலை என்பது தலையின் வெளித்தோல் மட்டும். ஒரு சிறுத்தையின் முகம் உடையவனாக மாறினான். அறையை ஒருமுறை அங்குமிங்கும் பார்த்துக் கொண்டான்.அங்கு அவர்கள் முன் நிஜப் புலி மாதிரி காட்டிக்கொண்டு தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.
இப்படி வர்ணிக்கிறார் அசோகமித்திரன்.
‘அவன் பூனைபோல் முதுகை மட்டும் உயர்த்தி உடலை வளைத்துச் சிலிர்த்துக் கொண்டான். பிறகு வாயைத் திறந்தான். நாங்கள் திடுக்கிட்டோம். அவ்வளவு நெருக்கத்தில் அவ்வளவு பயங்கரமாகப் புலி கர்ஜனையை நாங்கள் கேட்டது கிடையாது.அவன் குதித்த சுவடு தெரியாமல் அங்கும் இங்கும் குதிக்கிறான். கூடவே புலி மாதிரி கர்ஜிக்கிறான். அங்கிருப்பவர்கள் திகைத்துப் போகிறார்கள். சர்மாவால் கூட பேஷ் என்று கூற முடியவில்லை. அவன் சிறுத்தை முகமூடியைக் கழற்றி விட்டான்.’
அவன் பழைய மனிதன் ஆனான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு “நான் கட்டாயம் ஏதாவது பார்க்கறேம்பா என்றார் சர்மா. கதைசொல்லிஅவன் முகவரியைக் குறித்துக் கொண்டார். சர்மா அவர் ஜேபியில் கையை விட்டார். மற்றவர்களும் கையை விட்டார்கள். எல்லாம் சேர்ந்து இரண்டு ரூபாயிருக்கும்.
சர்மா, “இந்தா இதைக் கொண்டு போய் முதல்லே காண்டீனுக்குப் போய் நன்னாச் சாப்பிடு,” என்றார்.
“வேண்டாங்க” என்றான் அவன்.
“என்ன வேண்டாம்? போய்ச் சாப்பிடுப்பா முதல்லே” என்று சர்மா சொல்ல,
“ஏதாவது ரோல் வாங்கித் தாங்க ஐயா” என்று அழுது கொண்டே அவன் சொன்னான்.
அவன் அழுகை ஓய்ந்து பணத்தை வாங்கிக்கொண்டான்.
“போ. முதல்ல வயித்துக்கு ஏதாவது போடு” என்றார் சர்மா.
அவன் போனபிறகு கொஞ்ச நேரம் யோசித்து,
“அவனுக்கு என்ன பண்றது? நாம இப்போ எடுக்கிறதோ ராஜா ராணிக் கதை”.\ஆனால் சர்மா வெறுமனே இருந்துவிடவில்லை. இருவாரங்கள் கழித்து மீண்டும் கதை இலாகா கூடியபோது கதாநாயகன் புலி வேஷம் போட்டுக்கொண்டு எதிரிக் கோட்டைக்குள் நுழைவதாகப் படமெடுக்கலாம் என்று சம்மதம் பெற்று விட்டார். கதாநாயகனுக்குப் பதில் அவனுக்கு டூப் செய்யலாம். அதனால் ஒரு நூறு ரூபாயாதவது வாங்கித் தரலாம் என்று நினைத்தார் சர்மா.
கதைசொல்லி அவனுக்குக் கடிதம் போட வழக்கம்போல் 4 நாட்களில் கடிதம் திரும்பி வந்தது.
சர்மா வெள்ளையை அழைத்துக்கொண்டு போய் காதரைத் தேடினார். எல்லோரும் விசாரித்துக் கொண்டு எங்கங்கோ தேடினார்கள். காதர் கிடைக்கவில்லை. கதாநாயகன் எதிரி கோட்டைக்குள் நுழைய வேண்டிய காட்சி வந்தது.
அவன் கிடைத்தாலும் அதிகம் பயன் இருந்திருக்காது. அந்த ஒரு மாதத்திற்குள் வெளியான ஒரு படத்தில் கிராமிய சங்கீதத்துடன் அந்தக் கதாநாயகன் காவடி எடுப்பதாகக் காட்சி வந்திருந்தது. அந்தப் படம் தமிழ்நாடெல்லாம் தாங்க முடியாத கூட்டத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது.
அவர்கள் எடுக்கும் படத்தில் கதாநாயகன் கரகம் எடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது என்று அசோகமித்திரன் கதையை முடிக்கிறார்.
இந்தக் கதையில் எப்படி சினிமா படங்களில் அர்த்தமில்லாமல் அபத்தமாகக் காட்சி எடுக்கப்படுகிறது என்று சொல்வதுபோல் உள்ளது.
இந்தக் கதை மூலம் சினிமாவை அசோகமித்திரன் கிண்டல் செய்கிறார். சினிமாவிற்கு ரோல் கேட்ட காதர், அவர்கள் முன் புலி வேஷம் போட்டு நடித்துக் காட்டினான். சினிமாவில் நடிப்பதற்குப் பதில்.
மிகக் குறைந்த பக்கங்களில் சாதாரணமாக எழுதப்பட்ட கதை என்றாலும், வாழ்க்கையின் அபத்தத்தையும் இக் கதை சுட்டிக்காட்டத் தவறவில்லை.
அசோகமித்திரனின் இன்னொரு கதையான எலி கதையைப் பிறகு பார்ப்போம்.
(இந்த வார (10.01.2021) திண்ணையில் அசோகமித்திரனின் “புலிக் கலைஞன்’என்ற பெயரில் வெளிவந்த கட்டுரை.)
10.01.2021
அழகியசிங்கர்
ம.வே.சிவகுமாரின் நினைவு தினம் இன்று. சில வருடங்களுக்கு முன் அவருடைய பாப்கார்ன் கனவுகள் என்ற நாவலை புத்தகக் காட்சியில் விற்பதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் உயர் அதிகாரியாக இருந்த கணேசன் விற்பனைக்குக் கொடுத்தார்.
விற்க முடியாமல் அவருடைய நாவலின் எல்லாப் பிரதிகளையும் பரண் மேல் போட்டிருந்தார். நான் சில பிரதிகளை விற்றுக் கொடுத்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் ம.வே.சிவகுமாரைச் சந்தித்தேன்.
இந்த நாவல் 1995ஆம் ஆண்டு புத்தகமாக வெளிவந்துள்ளது. அப்போது இந்த நாவலைப் படிக்கவில்லை.
இந்த நாவல் அவருடைய சுய சரிதம் போல் எழுதப்பட்டாலும் முழுக்க முழுக்க அவர் சுயசரிதமில்லை. இந்த நாவலின் கதாநாயகனான லக்ஷ்மிநாராயணனுக்கும் ம.வே.சிவக்குமாருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. அதேபோல் வேற்றுமைகளும் உண்டு.
கல்கி பத்திரிகையில் தொடராக வெளிவந்துள்ள நாவல் இது. முழுக்க முழுக்க ம.வே.சிவகுமாரின் கனவைப் பிரதிபலிக்கிற நாவலாக இது எழுதப்பட்டிருக்கிறது.
ஒரு வங்கியில் பணிபுரியும் சாதாரண ஊழியர் லக்ஷ்மிநாராயணன் என்ற ஊழியர். அவர் விஜயலஷ்மி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அவருடைய ஆசை சினிமாவில் நடிக்க வேண்டும். அது சாத்தியமா என்பதை இந்த நாவல் அலசுகிறது.
லக்ஷ்மிநாராயணன் எப்படிப்பட்டவன் என்பதை இந்த நாவல் ஆரம்பத்திலேயே அலசி விடுகிறது.எடுத்த உடன் லக்ஷ்மிநாராயணனுக்கு நடக்கும் திருமணத்திலிருந்து ஆரம்பமாகிறது கதை. அதை விவரிப்பதன் மூலம் கதாசிரியர் எந்த அளவிற்குத் திறமையானவர் என்பதை நிரூபிக்கிறார்.
…..’வெல்வெட்டு வேலைப்பாடுகளுடைய பேண்டு வாத்தியம். வேட்டியும், அங்கவஸ்திரமும் அணிந்து காதில் நாதஸ்வரம் வாங்கி மெல்லத் தொடர்கிற பெரியவர்கள் பழைய ஹெரால்டு காரில் பலகையடித்து நடமாடும் இன்னிசைக் குழு. நகர்கிற ட்யூப்லைட் வெளிச்சத்தில் நடமாடுகிற இளைஞர்கள். சூழ்நிலையின் மகிழ்ச்சி கருதி உடன் ஆட இறங்கிவிட்ட யுவதிகள்’….
இப்படி மாப்பிள்ளை அழைப்பு வைபவத்தை வர்ணிக்கிறது கதை. ஆரம்பத்திலேயே லக்ஷ்மிநாராயணன் ஒரு மாதிரி. தன் திருமணம் நடைபெறும்போதே அவன் நண்பர்களுடன் இரவு சினிமா காட்சிக்குச் சென்று விடுகிறான்.அந்த அளவிற்கு சினிமா பார்க்கும் வெறி அவனுக்கு. வங்கியில் காஷியராகப் பணிபுரிகிறான். விடாமல் சிகரெட் பிடிக்கிற பழக்கம் அவனுக்கு இருக்கிறது. இரண்டு இச்சைகளிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. ஒன்று சினிமா. இன்னொன்று சிகரெட்.
இதெல்லாம் தெரிந்துகொண்டு விஜயலக்ஷ்மி அவனைத் திருமணம் செய்துகொள்கிறாள். அவளுடைய அப்பாவிற்கு வங்கியில் அதிகாரியாகும் தேர்வு எழுதி அவன் அதிகாரி ஆகிவிட வேண்டுமென்ற கனவு.ஆனால் அவன் வங்கியில் பணிபுரிந்தாலும் ஒரு சினிமா நடிகனாக வேண்டுமென்று கனவு. சினிமா பற்றி வருகிற எல்லாப் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் வாங்கி தனியாக ஒரு அலமாரியில் பூட்டிப் பத்திரப்படுத்தி வைக்கிறான் வீட்டில். அதை யாரையும் திறக்க விடுவதில்லை.
அதேபோல் வங்கியில் யூனியனில் முக்கியமான நபராக இருக்கிறான். அவன் வங்கிக்குப் போவதே ஒரே கூத்தாக இருக்கும். ரகளையாக இருக்கும். அவன் கனவு சினிமாவில் நடிப்பது. பொழுது போக்காக வருவதுபோல்தான் வங்கிக்கு வருகிறான் .அவன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு வரும்போதே தாமதமாகத்தான் வருவான். அவனுடைய மேலதிகாரி கேட்டால் ஏடாகூடமாகப் பதில் அளிப்பான்.
அவன் கனவு நடிகர் சிவாஜி கணேசன். அவர் முன்னால் அவனுக்கு நடிப்பதற்கு ஒருவாய்ப்பு கிடைக்கிறது. கல்கத்தாவில் நடைபெறப் போகிற நாடகத்திற்கு அவன் தன்னை நடிகனாகத் தயார் செய்து கொள்ள விரும்புகிறேன். நடிகனாகத் தேர்ந்தெடுப்பதற்கு நடிகர் சிவாஜி கணேசன் முன்னால் நடிக்க வேண்டும்.சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி வசனத்தைப் பேசி அசத்துகிறான். இதற்காக வீட்டில் ஒத்திகைப் பார்த்திருந்தான். சிவாஜி அவனைப் பார்த்து, ‘நல்லாத்தான் இருந்தது. ‘ஆனா மிமிக்ரி வேற, நடிப்பு வேற தெரிஞ்சுதா” என்கிறார்.
லக்ஷ்மிநாராயணன் 13 வது பேராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறான். சிவாஜிகணேசன் அந்த இடத்தை விட்டுப் போவதற்கு முன், அவனைக் கூப்பிட்டு ‘ஒழுங்கா இருக்கணும், தெரிஞ்சுதா’ என்கிறார்.
ஒரு சிறந்த நாடக நடிகர் என்ற பட்டத்தைக் கல்கத்தாவில் நடந்த நாடகத்தில் நிரூபித்து விடுகிறான். ஆனால் அவன் மாமனார் அதை விரும்பவில்லை. அவன் ஒரு வங்கியில் ஒரு அதிகாரியாக மாற வேண்டுமென்று விரும்புகிறார். அவன் மனைவியோ அவன் விருப்பப்படி இருப்பதை ஏற்றுக்கொள்கிறாள். அவளுக்கென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்யும்போதுதான் பெரிய சறுக்கலாகச் சறுக்கி வீழ்கிறான்.
அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு இந்த இடத்தில் ஒரு சினிமா கம்பெனியின் ஷூட்டிங் கலந்து கொள்கிறான். டைரக்டர் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.அவனுக்கு ஒரு துண்டு ரோல் கொடுக்கப்படுகிறது. லக்ஷ்மிநாராயணனுக்கு வெறுப்பாகி விடுகிறது. அவன் டைரக்டரைப் பார்த்துச் சொல்கிறான்.
பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட் பேரைச் சொல்லி “நான் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தேன் சார். இந்த வேஷத்துல நான் நடிச்சா அது எனக்கும் பெருமையில்லை. அவங்களுக்கும் பெருமையில்லை ” என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறான்.
அவன் கனவு கலைந்து விடுகிறது. சினிமாவில் நடிக்கும் ஆசை போய் விடுகிறது. இன்னொரு சினிமா கம்பெனியிலும் அவனை நடிக்கக் கூப்பிட்டு ஏமாற்றப் படுகிறான்.
அவனுக்கு ஆசையே போய்விடுகிறது. ஒரு முறை அவன் அலுவலகத்தின் எதிரில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது. அவன் அலுவலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் பரபரப்பாக இருக்கிறார்கள். அவன் அதைப் பார்க்க வேண்டுமென்ற எந்த ஆர்வமும் இல்லாமலிருக்கிறான்.
‘திரைத்துளிர்’ என்ற வார இதழ் மூலம் வாசகர்கள் சார்பாக திரு.கமல்ஹாசன் அவர்களுடன் ஒருநாள் சந்திக்கும்படி ஏற்பாடு செய்கிறார்கள். அவன் மனம் சந்தோசமடைகிறது.
கமல்ஹாசன் நடிக்கும் அவுட்டோர் படப்பிடிப்பில் அவன் கலந்து கொள்கிறான் வாசகனாக. அந்தப் படத்தில் சிவாஜியும் நடிக்கிறார். சிவாஜிக்கு மகனாக கமல்ஹாசன் நடிக்கிறார்.
லக்ஷ்மி நாராயணனைப் பார்த்து சிவாஜி கூப்பிடுகிறார். ‘நாம் இதுக்கு முன்னாடி பார்த்திருக்கிறோமே?’ என்கிறார்.
பதிலுக்கு லக்ஷ்மிநாராயணனுக்கு வாயில் வார்த்தைகளே வரவில்லை. இந்த இடத்தில் லக்ஷ்மிநாராயணன் நினைத்துக் கொள்கிறான். ‘இத்தனை நாள் கஷ்டப்பட்டதற்கு இன்றைக்கு ஒரு நாள் பெரும் திறமைகள் நடுவே நிற்க வைத்திருக்கிறாய். வாழ்க்கையில் நினைக்காததையெல்லாம் குலுக்கலில் தந்திருக்கிறாய். நினைத்து வருந்திக் கேட்டதை என்றேனும் தராமலா போய்விடுவாய்?’ என்று நினைத்துக் கொள்கிறான் லக்ஷ்மிநராயணன்.
அவன் அதிகாரியாகும் தேர்வு எழுதுகிறான். மும்பைக்கு மாற்றலாகிப் போகிறான். மாமனார் விருப்பத்தை நிறைவேற்றி விடுகிறான். இந்த நாவலில் பல இடங்களில் ஹாஸ்ய உணர்வு வெளிப்படும்படி எழுதப்பட்டிருக்கிறது.
ம.வே.சிவகுமாரின் நடை சிறப்பாக உள்ளது. இந்த நாவலை இன்று படிக்கும்போதும் விறுவிறுப்புக்குக் குறைவில்லை
20 கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதைகள் வாசித்தார்கள். இந்நிகழ்ச்சி புத்தாண்டில் சிறப்பாக நடந்து முடிந்தது. புத்தாண்டைக் குறித்தும் கவிதை வாசித்தார்கள்.
அழகியசிங்கர்
இன்று காலை எழுந்தபோது
புத்தாண்டு என்று மறந்து விட்டது.
ஆனால்
கோயில்களுக்குப் போனோம்
கூட்டம் நிரம்பி வழிந்தது
தொற்றுப் பயத்தால்
க்யூவில் நிற்கவில்லை
ஒரு வருடம் ஓடிவிட்டது
பயத்தைக் காட்டி
மிரட்டி விட்டுப் போயிற்று
புத்தாண்டே வருக வருக என்று
கூவிக் கூப்பிடப் போவதில்லை
ஆனால்
இனி வருகின்ற நாட்களில்
எல்லாம் சரியாக நடக்க வேண்டும்
வண்ணமயமான கோலங்கள் மூலம்
தெருவில் புத்தாண்டை வரவேற்றார்கள்
புத்தாண்டிற்கு முதல் நாள்
குடியிருப்பவரின் வீட்டில் வயதான பெண்மணி
இறந்து விட்டாள். 01.01.2021
.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்
அழகியசிங்கர்
அழகிரிசாமியின் நகைச்சுவை கதை. ஒரு நகைச்சுவை கதையை எழுதும்போது படிப்பவருக்கு அது நகைச்சுவை கதை என்ற உணர்வே ஏற்படக்கூடாது. பலர் நகைச்சுவை கதையைச் சொல்லும்போது தேவையில்லாததை நகைச்சுவை என்ற பெயரில் சேர்த்து துணுக்குத் தோரணமாக மாற்றி கதையைப் பலர் வீணாக்கி விடுவார்கள்.
கு.அழகிரிசாமி இயல்பாகக் கதையைச் சொல்லிக்கொண்டு போகிறார்.தானே கதையைச் சொல்கிறார். உண்மையில் தானே சொல்வதால் கு.அழகிரிசாமி இல்லை. ‘நான்’ என்பது ஒரு கதைசொல்லிஅந்தக் கதைசொல்லிக்குப் பெயர் கிடையாது. பெரும்பாலான கதைகளில் கு.அழகிரிசாமி இந்த உத்தியைப் பயன்படுத்துகிறார்.
“ கதைசொல்லி அவன் இருந்த மாம்பலத்திலேயே அவன் கண்ணில் படாமல் ஆர்.எஸ்.ஆர.கல்யாண கிருஷ்ணன் என்பவன் மூன்று வருஷமும் ஏழு மாதமும் உலவியிருக்கிறானாம். கு.அழகிரிசாமி இனிஷியலோடு அடிக்கடி அவன் பெயரைக் குறிப்பிடுகிறார். கதைசொல்லியின் கண்ணில் படாமல் எப்படி அவனால் உலாவ முடிந்தது?
எழுதிக்கொண்டு போகிற அழகிரிசாமி கதைசொல்லி வாயிலாக இப்படி எழுதுகிறார் : ‘என் கண்ணில் கோளாறா? இல்லை, திடீரென்று மறையும் அபூர்வ சக்தி எதாவது கல்யாண கிருஷ்ணனிடம் இருந்ததா?’
ஏன் கல்யாண கிருஷ்ணனைத் தேடுகிறான் கதைசொல்லி. ஒரு காலத்தில் கதைசொல்லியும், கல்யாண கிருஷ்ணனும் எதிர் எதிர் வீட்டில் குடியிருந்தார்கள். கல்யாண கிருஷ்ணன் ஒரு நா காலை 7 மணிக்கு அவசரமாக வந்து கதைசொல்லியிடம் 37 ரூபாய் கேட்கிறான். மறுநாள் பிற்பகல் மூன்று மணிக்கே திருப்பித் தந்து விடுவதாகவும் சொல்கிறான்.இங்கே வேடிக்கையாக ஒரு உரையாடல் நடைபெறுகிறது.
“நான் மூன்று மணிக்கு வீட்டில் இருக்க மாட்டேனே?” என்கிறான் கதைசொல்லி.
“அப்படியானால் அபீசுக்கு வந்து பணத்தைக் கொடுத்து விடுகிறேன்” என்கிறான்.
“ஆபிசுக்கு வருவானேன்? ராத்திரி வீட்டிலேயே கொடுத்தால் போச்சு” என்கிறான் கதைசொல்லி.
கல்யாண கிருஷ்ணன் சொல்கிறான். “கையில் பணம் கிடைத்தால் உடனே கொடுத்து விடவேண்டும். ஆபிசுக்கு வந்து கொடுத்து விடுகிறேன்” என்கிறான்.
இப்படிப் பேசும்போதே தெரிகிறது. கல்யாண கிருஷ்ணன் பணம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை என்று.
கல்யாண கிருஷ்ணன் கடனாகப் பணத்தை வாங்கிக்கொண்டு போனான்.. அவ்வளவுதான்.உடனே வீட்டையே காலி செய்து கொண்டு போய்விட்டான். அவன் தங்கியிருந்த வீட்டுக்காரன் சொல்கிறான். தங்கச்சாலைத் தெருவில் புது வீடு பிடித்திருக்கிறான் என்று.
கதைசொல்லிக்குப் பெரிய அதிர்ச்சி. கல்யாண கிருஷ்ணனைப் பற்றி விசாரிக்க அலுவலத்திலிருக்கும் இரண்டு பேர்களை (அவர்கள் தங்கசாலையில் இருப்பவர்கள்) ஏற்பாடு செய்கிறான்..
அவர்கள் தங்கசாலையில் கல்யாண கிருஷ்ணனை விசாரிக்கப் போனபோது அவர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை நகைச்சுவை உணர்வோடு கு.அழகிரிசாமி விவரிக்கிறார்.
ஒவ்வொரு வீடாக விசாரிக்கும்போது எத்தனையோ கூத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. நாலு வீடுகள் காலியான விபரம் தெரிய வருகிறது. அந்த வீடுகளில் அவர்களுக்கு வேண்டியவர்களைக் குடியேற்றியிருக்கிறார்கள்.
ஒரு வீட்டில் மாறு வேடம் போட்ட திருடர்கள் என்று விசாரிக்க வந்தவர்களைச் சந்தேகிக்கிறார்கள். தங்கச்சாலைத் தெருவில் கல்யாணராமன், கல்யாண சுந்தரம், கல்யாணம், மோஹனகிருஷ்ணன் ராமகிருஷ்ணன், ராதா கிருஷ்ணன், கிருஷ்ணன் என்ற பெயர்களையெல்லாம் தெரிந்து கொண்டார்கள். கல்யாண கிருஷ்ணனைத் தேடும் சந்தர்ப்பத்தில்.இப்படி கல்யாண கிருஷ்ணனைத் தேடும் சந்தர்ப்பத்தில் இரண்டு அழகான பெண்களை அவர்கள் பார்க்கிறார்கள். அவர்களில் ஒரு நண்பர் பிரம்மச்சாரி. இரண்டு பெண்களில் யாரையாவது மணம் புரிந்துகொள்ளலாமென்று நினைக்கிறார். அதற்குள் அவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகிவிடுகிறது. ஆனால் கல்யாண கிருஷ்ணன்தான் கிடைக்கவில்லை.
நிச்சயமாகக் கல்யாண கிருஷ்ணன் தங்கசாலையில் இல்லை என்பது தெரிந்து விடுகிறது.கல்யாண கிருஷ்ணனைத் தேடும்போது அவனிடம் பணம் கொடுத்து ஏமாந்த மளிகைக்கடைகக்காரன், வெற்றிலை பாக்குக்காரன், ஜவுளிக் கடைக்காரன், காய்கறிக் கூடைக்காரிகள், நெய் வியாபாரி, செண்ட் வியாபாரி காவல்காரனைப்லிக்காரன் என்று பலவகையான பேர்வழிகளை ஞாயிற்றுக்கிழமை கதைசொல்லியின் வீட்டில் ஒரு கூட்டமாக ஏற்பாடு செய்கிறார்கள். அவர்களிடம் பொதுவாக ஒரு விண்ணப்பத்தை முன் வைக்கிறான் கதைசொல்லி.. யார் கண்டுபிடித்தாலும் பணம் வசூல் செய்து அவனுடைய முப்பத்தேழு ரூபாயை வசூல் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறான். அப்படி வசூல் செய்த தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இனம் கொடுப்பதாக சொல்கிறான்.
நகைச்சுவை உணர்வுடன் இந்தக் கதையை எடுத்துக்கொண்டு போகிறார் அழகிரிசாமி என்பதற்கு இன்னொரு உதாரணம். கதைசொல்லியும் அவன் மனைவியும் எவ்வளவு சதவீதம் இனாம் தருவது என்பதைப்பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் பேசுவதைக் கேட்டால் இனாம் வாங்க வருபவன் வேண்டாமென்று சொல்லிவிட்டுத் தப்பி ஓடியிருப்பார்கள் என்பது நிச்சயம் என்று கிண்டலாகச் சொல்கிறார் அழகிரிசாமி.
3 வருஷமாகக் கல்யாண கிருஷ்ணன் என்ற ஆசாமி தட்டுப்படவே இல்லை. காஞ்சிபுரம் கருட சேவைக்குப் போனபோது ஓய்வு நேரத்தில் கல்யாண கிருஷ்ணனைத் தேடிக்கொண்டிருக்கிறான். அகப்படவே இல்லை. ஏன் காஞ்சிபுரத்தில் தேடுகிறான்? எப்போதும் காஞ்சிபுரம் கருட சேவைக்குப் போவதாகக் கல்யாண கிருஷ்ணன் சொல்லிக்கொண்டிருப்பான்.
காபூல்காரனைப் பார்த்தவுடன் கல்யாண கிருஷ்ணன் சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று கதைசொல்லி உள்ளம் துடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் விசாரிக்கத் தயக்கம். கதைசொல்லியைப் பார்த்து காபூல் காரனே மேலும் பல தகவல்களைத் தெரிவிக்கிறான்.
கதைசொல்லியின் கோஷ்டியைப்போல் இன்னும் ஏழு கோஷ்டிகள் சென்னை மாநகரத்தில் இருப்பதாகவும். ஒவ்வொருவரும் கல்யாண கிருஷ்ணனைத் தேடுவதில் பத்து பன்னிரண்டு வருஷங்களாக ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறான்.
காபூல்காரன் சொன்னதில் இன்னொரு விஷயம் கதைசொல்லிக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஏனென்றால் இதே மாம்பலம் ஏரியாவில் கல்யாண கிருஷ்ணன் இன்னொரு குடும்பத்தை கதைசொல்லியை ஏமாற்றியதுபோல் ஏமாற்றி இருக்கிறான். காஞ்சிபுரம் கருட சேவைக்குப் போகப்போவதாகவும் அவசரமாகப் பணம் தேவைப் படுவதாகவும் கூறி மறுநாள் 3 மணிக்குப் பணம் தருவதாகவும் சொல்லி ஏமாற்றியதை காபூல்காரன் குறிப்பிடுகிறான். இதைக் கேட்டவுடன் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது கதைசொல்லிக்கு..
கல்யாண கிருஷ்ணனுக்கு எதாவது ஒரு தெய்வத்தின் சகாயமோ அல்லது பூதத்தின் சகாயமோ நிச்சயம் இருக்க வேண்டுமென்று நினைக்கிறான் கதைசொல்லி..இது நடந்து 7 வருடங்கள் ஓடிவிட்டன.
கதைசொல்லிக்குத் கல்கத்தாவிற்கு மாற்றல் ஏற்பட்டு மாம்பலத்தை விட்டுப் போய் விடுகிறான். கல்கத்தாவில் உத்தியோகம் காரணமாக அந்தமான் தீவிற்குப் போகும்படி நேர்கிறது. அங்கே ஒரு சில தமிழ் குடும்பங்கள் இருப்பதாகத் தெரிந்து போர்ட்பிளேர் நகரில் தென்கோடியில் செல்கிறான். ஒரு தமிழர் குடும்பத்தை மாலையில் சந்திக்கிறான்.
அவரிடம் தமிழில், உங்கள் சொந்த ஊர் என்று கேட்கிறார். அந்த மனிதன் திண்டுக்கல் என்கிறார்.அவர் தான் ஒரு குமாஸ்தா என்றும், தான் வேலை பார்க்கும் மர வியாபாரக் கம்பெனி பத்து வீடு தள்ளியிருப்பதாகக் கூறுகிறார்.
“எல்லோரும் தமிழர்கள்தானே?” என்று கேட்கிறான் கதைசொல்லி.
“தமிழர்கள் எட்டு பேர்தான். நான்கு பேர் கூலிகள். மூன்று பேர் கிளார்க்குகள்.”
“மொத்தம் ஏழுதானே.“
“இல்லை எட்டுபேர்கள். மானேஜர் கல்யாண கிருஷ்ணனைச் சேர்க்க மறந்துவிட்டேன்,” என்கிறான் குமாஸ்தா.
இந்தக் கதையின் பெரிய டுவிஸ்ட் இந்த இடத்தில் ஏற்படுகிறது. ஒருவழியாக கதைசொல்லி கல்யாண கிருஷ்ணனைக் கண்டுபிடித்து விட்டதாக நினைக்கிறான்.
திகைப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல், “ஆர்.எஸ்.ஆர் கல்யாண கிருஷ்ணனா” என்று கேட்கிறான் கதைசொல்லி.”ஆர் எஸ் ஆர் கல்யாண கிருஷ்ணன்தான்” என்கிறான் குமாஸ்தா.
திகைப்படைகிறான் கதைசொல்லி. அவன் தேடிவந்த கல்யாண கிருஷ்ணன் மாட்டிக்கொண்டு விட்டான்.”அவரைப் பார்க்க வேண்டும்” என்கிறான்
கதைசொல்லி. இந்த இடத்தில் அழகிரிசாமி உள்ளே புகுந்து இப்படிச் சொல்கிறார்.
‘கல்யாண கிருஷ்ணா. ஆர்.எஸ்.ஆர்
கல்யாணசிருஷ்ணா. அந்தமான் தீவில் வந்துதான் என்னிடம் அகப்பட வேண்டுமென்று இருந்தாயோ? எப்பொழுதும் தர்மத்துக்குத்தாண்டா வெற்றி. நீ தப்பிக்க முடியாது. நீ கெஞ்சினாலும் விட மாட்டேன். என்றெல்லாம் எழுதிக்கொண்டு போகிறார்.பின் அந்தக் கல்யாண கிருஷ்ணனைச் சந்திக்க அனுமதி பெற்று சந்திக்கிறான். சந்தித்த பிறகு பெரிய ஏமாற்றம்.
இந்தக் கல்யாண கிருஷ்ணன் வேறு..அந்தக் கல்யாண கிருஷ்ணன் வேறு.
கல்யாண கிருஷ்ணன் அகப்படுவதற்குப் பதில் கதைசொல்லி அகப்பட்டுக்கொண்டான் கல்யாண கிருஷ்ணன் என்ற பெயரில் இருக்கும் மானேஜரிடம்..
“மன்னிக்க வேண்டும். ஹி…ஹி..என் நண்பன் கல்யாண கிருஷ்ணன் என்று நினைத்தேன்” என்கிறான் கதைசொல்லி அவரைப் பார்த்து.
“உங்கள் நண்பர் ஆர்.எஸ்.ஆர். கல்யாண கிருஷ்ணனா” என்று கேட்கிறார் அவர்.
“ஆமாம்.” என்கிறான் கதைசொல்லி.
“எதற்கு நீங்கள் பார்க்க வேண்டும்.?”
“எனக்கு அவர் பணம் தர வேண்டும் என்கிறான் கதைசொல்லி.
துள்ளி எழுந்தார் மானேஜர்.
“அடப்பாவி எனக்கும் அவன் பணம் தரவேண்டும்.”
“எனனே?” என்கிறான் கதைசொல்லி ஆச்சரியத்துடன்.
“ஆமாம். 120- தரவேண்டும். மறுநாள் பிற்பகல் மூன்று மணிக்குக் கொண்டு வந்து கொடுத்து விடுவதாகச் சொன்னான். அந்தமான் தீவில் நம்ம ஆண் ஒருவன் கஷ்டப்படுகிறான் என்று உதவினேன். ஆசாமி பணத்தை வாங்கிக்கொண்டு கப்பலேறி விட்டான். வருஷம் இரண்டாகிறது. என்று மானேஜர்சொல்லி முடிக்கிறார்.
இது ஒரு நகைச்சுவை கதை. அழகிரிசாமி ஜாக்கிரதையாக எழுதிக்கொண்டு போகிறார்.கல்யாண கிருஷ்ணன் எல்லோரையும் ஏமாற்றிவிட்டு கடைசி வரை சிக்காமலிருக்கிறான். அதுமாதிரி சிலர் இருந்துகொண்டுதான் இருப்பார்கள் என்கிறது கதை. கதையை எழுதிக்கொண்டு போன விதம் சிறப்பாக உள்ளது.
(27.12.2020 அன்று திண்ணை முதல் இணைய பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)
25.12.2020 நடந்த கவிதையைக் குறித்து உரையாடல் – ஒளிப்பதிவு
கலந்து கொண்டவர்கள்
1.ப. சகதேவன் 2. வ.வே,சு 3. க.வை பழனிசாமி 4. முபீன் சாதிகா
இவர்களுடன் கேள்வி கேட்பவர் : அழகியசிங்கர்
அழகியசிங்கர்
18.12.2020 அன்று சூம் மூலமாகக் கவிதைகளை எல்லோரும் வாசித்தார்கள். எல்லோருக்கும் இரண்டு முறை கவிதை வாசிக்க நேரம் கிடைத்தது. அதைப் பெருமையுடன் இங்கே ஒளிபரப்புகிறேன்.(63) விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 30வது கவிதை வாசிப்பு கூட்டம் –
அழகியசிங்கர்
நாளை (சனிக்கிழமை) 6.30 மணிக்கு 12 எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமியின் 12 கதைகளை எடுத்து விமர்சிக்க உள்ளார்கள்.
ஒவ்வொருவரும் 6 நிமிடங்கள் உரையாற்ற உள்ளனர்.
ஒவ்வொருமாதமும் 3வது சனிக்கிழமை கதை வாசித்தல் நிகழ்ச்சியை கடந்த 3 மாதங்களாக நடத்தி வருகிறேன். இது நாலாவது நிகழ்ச்சி. இதுவரை அசோகமித்திரன், தி.ஜானகி ராமன், புதுமைப்பித்தன் கதைகளை வாசித்துள்ளோம்.
இந்த முறை கு.அழகிரிசாமி. எல்லோரையும் கலந்துகொள்ள அழைக்கிறேன். Meeting ID: 882 3278 0093 Password: 142292