சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 49வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு ( 01.05.2021) நடைபெற உள்ளது.
இந்த வாரம் கவிதையைக் குறித்து உரையாடல் நிகழ்த்த உள்ளேன். கவிதையைக் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படும். அக் கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டும். 2 நிமிடங்களுக்குள் பதில்கள் கூற வேண்டும்.
எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 49வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
நாங்களிருந்த எதிர் தெருவில்தான் பெ.சு.மணியின் வீடு. பெரும்பாலும் தெருவில்தான் அவரைச் சந்திப்பேன்.
இன்று மாலை 4 மணிக்கு அவர் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. முகநூலில் அவர் மனைவி உயிரோடு இருந்தபோது அவருடைய சென்னை வாழ்க்கை சிறப்பாகப் போய்க் கொண்டிருந்தது. அவர் மனைவி இறந்தவுடன் அவர் பாடு திண்டாட்டமாகப் போய் விட்டது. அவருடைய மூத்தப் பெண் தில்லியிலும், இரண்டாவது பெண் பெங்களூரில் வசிக்கிறார்கள் .
இவர் தனியாக இருக்கிறேன் என்று சென்னையில் இருந்தார். அவர்களுக்கு இவரைத் தனியாக இங்கு விட விருப்பமில்லை.
பல மாதங்கள் இவர் சென்னையிலும், மற்ற இடங்களிலும் வசித்து வந்தார். சென்னையில் இருக்கும்போது அவருக்கு மனைவியின் நினைவுதான். அவருடைய ஆசை எப்படியாவது 100 புத்தகங்கள் எழுத வேண்டும் என்பது.
நான் அவருக்காக அவருடைய மூதாதையர் கொண்டு வந்த சம்ஸ்கிரதப் புத்தகம் கொண்டு வந்தேன். அது சாத்தியமே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தார். அந்தப் புத்தகம் அச்சானதும் அவருக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவில்லை. நானும் பெ.சு மணியும் லா.சு.ரங்கராஜனைப் பார்க்கப் போயிருந்தோம். இது மறக்க முடியாத நிகழ்ச்சி.
பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பின் கீழ் பலரை நான் பேட்டி எடுத்தேன். பெ.சு மணியையும் பேட்டி எடுத்தேன்.
அவர் மறைந்த இந்த நாளில் திரும்பவும் இங்கு வெளியிடுகிறேன்.
ஒரு காலத்தில் எனக்கு நண்பர்களாக இருந்தவர்கள்தான் இப்போது விரோதிகளாக மாறி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது. இது இயல்பு.
நேற்று (25.04.2021) குவிகம் இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். திருப்பூர் கிருஷ்ணன் உரை. தி. ஜானகிராமன் பற்றி அவர் பேசினார்.
ஜானகிராமனை நேரிடையாகவும், படைப்புகள் மூலமாகவும் அறிந்தவர். அக் கூட்டத்திற்கு ஜானகிராமன் பெண் உமா சங்கரி வந்திருந்தார்.
வழக்கம்போல் திருப்பூர் கிருஷ்ணன் சிறப்பாகவே பேசினார். ஆனால் ஒரு நல்ல கூட்டம் நடைபெறும்போது திருஷ்டியாக எதாவது நடந்து விடும்.
கல்யாணராமன் என்கிற கல்லூரி முதல்வருக்குக் கருத்துச் சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மூன்று கருத்துக்களைக் கூறினார். ஒரு பொதுவான இடத்தில் பேராசிரியருக்கு எப்படிப் பேச வேண்டுமென்று தெரியவில்லை.
மாணவராக இருந்தபோது தன் கவிதை, கதைகயை விருட்சம் இதழில் பிரசுரம் செய்வதற்கு இவரும் இவர் நண்பர்களும் என் இருப்பிடத்திற்கு வருவார்கள். விருட்சத்தில் அவர் கவிதைகள், கதைகள் வந்திருக்கின்றன.
இப்போது காட்சி மாறி விட்டது. அவரும் மாறி விட்டார்.
அவர் உதிர்த்த தப்பான மூன்று முத்தான கருத்துக்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். திருப்பூர் கிருஷ்ணன் தி.ஜானகிராமனைப் பற்றிப் பேசும்போது ஜானகிராமனுக்கு ஆன்மிகத்தில் நாட்டமுண்டு என்று குறிப்பிட்டார்.
“ பேராசிரியர் கல்யாணராமன் பேசும்போது ஜானகிராமன் எழுத்தில் ஆன்மிகம் இல்லை என்று பேசினார். திருப்பூர் கிருஷ்ணன் நாட்டமுண்டு என்றுதான் குறிப்பிட்டார். ஏன் என்றால் அவர் நேரிடையாகவே ஜானகிராமனை அறிவார். தப்பாகப் பேசும் பேராசிரியர் குறித்து என்ன சொல்வது? ஜானகிராமன் புகழைப்பாடும்போது தன்னிலை மயக்கம் இருக்கக் கூடாது. ஜானகிராமனின் புகழ் கடைசிவரை ஓங்கும் என்றும், ஜெயகாந்தன், சுந்தர ராமசுவாமி, கந்தசாமி புகழ் காலத்தால் மங்கும் என்று குறிப்பிட்டார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கந்தசாமி பெயர்களை இழுப்பது தேவையில்லாத விஷயம். பேராசிரியருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. அவர் இனி நாகர்கோவிலுக்கு டிக்கட் எடுத்துக்கொண்டு போக முடியாது. மூன்றாவதாகச் சொன்னதுதான் மோசமான விஷயம். தேவையில்லாமல் என்னைப் பற்றிப் பேசியதுதான். நானும் அவரைப் போலக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருப்பவன். கூட்டத்தில் ஒரு பொருட்டே இல்லை.
பேராசிரியர், தி.ஜானகிராமன் குறித்து கட்டுரைகளை எல்லோரிடமிருந்து 1000 பக்கங்களுக்கு மேல் பெற்றுத் தொகுத்துள்ளார். ஆயிரம் ரூபாய் மேல் மதிப்புள்ள அந்தப் புத்தகத்தை விலைக்கு நானும் திருப்பூர் கிருஷ்ணனும் வாங்க வேண்டுமாம். காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்ததால் அதற்கு நஷ்டம் ஏற்படக்கூடாதாம். அதோடு இன்னொன்று சொல்கிறார் விருட்சம் இதழிற்கு மதிப்புரைக்காகப் புத்தகங்களைச் சேர்க்கிறேனாம். ஆனால் மதிப்புரை வருவதில்லையாம். அதனால் இந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்க வேண்டுமாம். ‘தமிழ் இந்து’ மாதிரி பத்திரிகையில் மதிப்புரை வரவேண்டுமென்றால் எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் அனுப்பத் தயாராக இருப்பார். அது போகட்டும். என்னைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் இவர் இப்படி உளறுவது சரியில்லை. மேலும் இதை இப்படி ஒரு பொது மேடையில் சொல்வதும் இன்னும் மோசம். விருட்சம் பத்திரிகை 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பத்திரிகை. அதற்கு இலவசமாக யாரும் இப்போதெல்லாம் மதிப்புரைக்குப் புத்தகங்கள் அனுப்புவதில்லை. அப்படியே அனுப்பப்படுகிற புத்தகங்களை நான் விளம்பரப் படுத்தாமல் இருப்பதில்லை.
நான் ஒவ்வொரு மாதமும் என் ஓய்வூதியம் பணத்தில் ரூ.1000க்கு புத்தகம் வாங்கும் பழக்கம் உள்ளவன். போஸ்டல் காலனி வீட்டில் நான் ஒரு நூல் நிலையம் வைத்திருக்கிறேன். அங்குதான் எல்லாப் புத்தகங்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறேன்.
வருடத்தில் எல்லா மாதங்களிலும் புத்தகங்கள் வாங்கி சேகரிக்கும் வழக்கம் உள்ளவன். ஏன் காலச்சுவடு பதிப்பகத்தில்கூட புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். எனக்கு விருப்பமான புத்தகங்களைத்தான் நான் வாங்க முடியும். ப்ளாட்பாரங்களிலும் புத்தகம் பார்த்தவுடன் வாங்கி சேகரிப்பேன். மேலும் நண்பர்கள் சிலர் நன்கொடையாகப் புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் பேராசிரியர் கல்யாணராமன் தொகுத்த புத்தகத்தை அவர் இதுமாதிரி தத்துப்பித்தென்று பேசியதால் வாங்கப் போவதில்லை. நானும் விருட்சம் வெளியீடாகப் புத்தகங்களைக் கொண்டு வருகிறேன். விருட்சம் பத்திரிகை தொடர்ந்து நடத்தி வருகிறேன். நான் எல்லோரிடமும் புத்தகங்கள் வாங்கும்படி வேண்டுகோள் விடுக்க முடியுமே தவிர வற்புறுத்த முடியாது.
மேலும் திருப்பூர் கிருஷ்ணனை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் இலக்கியத்திற்காகப் பல ஆண்டுகள் உழன்று கொண்டிருப்பவர், அவருக்கு என்ன கிடைத்தது இதன் மூலம். இலக்கியம் மீதுள்ள அக்கரையால் மிகக் குறைவான ஊதியத்தில் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருக்கிறார். தி.ஜானகிராமன் மீது அன்பு கொண்டவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவருக்கு ஜானகிராமன் கட்டுரை புத்தகம் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும். இதற்கெல்லாம் பரந்த மனம் கொண்டவருக்குத்தான் தோன்றும். மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் பேராசிரியர் கல்யாணராமன் ஆணவத்தால் பேசியதாக இதை எடுத்துக்கொள்ளலாமா?
பேராசிரியர் போன்ற பல பல்கலைப் பேராசிரியர் மனது வைத்தால் எத்தனையோ புத்தகங்களை வாங்கி நூல் நிலையங்களில் குவித்திருக்க முடியும்.எத்தனையோ பதிப்பகங்களின் நிலையை சரி செய்திருக்க முடியும், ஆனால் கல்யாணராமன் போன்ற பேராசிரியர்களுக்கு அது மாதிரி மனம் வருவதில்லை. காக்கைகள்தான் சென்ற இடமெல்லாம் வாய் வைக்கும். சில விளம்பர காக்கைகள் சென்ற இடமெல்லாம் அலப்பறை செய்து கொண்டே இருக்கின்றன. விளம்பர காக்கைகளுக்கு வாய்ப்பூட்டு போட முடியுமா? “
48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 24.04.2021 அன்று சனிக்கிழûமை 6.30 மணிக்கு இனிதாக நடந்து முடிந்தது. அழகியசிங்கர் கலந்துகொண்டவர்கள் மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசித்தார்கள். அந் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்குப் பெருமை படுகிறேன்.
இன்று உலகப் புத்தகத் தினம். நான் தினமும் 2 சிறுகதைகள் சில கவிதைகள் வாசிப்பது வழக்கம்.
உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு லாசராவின் கதைகளை எல்லாம் வாசிக்கலாமென்று நினைக்கிறேன்.
உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன். அது ஒரு சிறுகதைத் தொகுப்பு.
ரஸவாதி கதைகள் என்ற தொகுப்பு. 447 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 37 கதைகள் உள்ளன. விலை ரூ.400.
உலகப் புத்தகத் தினத்தை ஒட்டி சலுகை விலையாக ரூ.350க்கு இந்தப் புத்தகம் கிடைக்கும்.
தபால் செலவு இலவசம். இந்த மாதம் முழுவதும் இந்தச் சலுகை. பிரதி வேண்டுபவர்
கீழ்காணும் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்துவிட்டு முகவரியை அனுப்பவும். NAVINA VIRUTCHAM OD Account NUMBER 462584636, IDIB000A031 INDIAN BANK, Ashoknagar Branch
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 48வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 24.04.2021 நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.இந்த முறை மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன். தமிழில் ஏகப்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன.
அதுமாதிரியான கவிதைகளை வாசிப்பது நம்முடைய கவிதை பற்றிய அறிவை மேன்மைப் படுத்தும். எல்லோரையும் அழைக்கிறேன்.
புதிதாக இந்தக் குழுவில் வாசிக்க வருபவர்கள் தங்கள் கவிதைகளை வாசிக்கலாம். அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு.
லக்ஷ்மி மணிவண்ணன் முகநூலில் பதிவு செய்ததைப் படித்தேன். இன்று ஜெயமோகன் பிறந்தநாள். அவருக்கு என் வாழ்த்துகள்.
தமிழ் எழுத்தாளர்களிடையே வித்தியாசமானவர் ஜெயமோகன். விஷ்ணுபுரம் என்ற அமைப்பின் மூலம் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கௌரவித்துப் பரிசு கொடுக்கிறார். இதை விளம்பரப்படுத்துவதற்காக அவர் செய்வதில்லை.
ஒரு முறை தேவதச்சனுக்குப் பரிசளிக்கும் விழாவிற்குப் போயிருந்தேன். எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதை நேரில் கண்டு கொண்டேன்.
சதா எழுத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பவர். அவர் மகாபாரதத் தொடரை எழுதிக்கொண்டிருந்தபோது அவர் பெயரிட்டு ஒரு கவிதை எழுதினேன். கவிதையின் தலைப்பு: ஜெயமோகன்.
ஜெயமோகன்
ஆயிரக்கணக்கான பக்கங்களில்
மஹாபாரதம் எழுதிக்கொண்டே போகிறார்
படிக்கப் படிக்க வளர்ந்துகொண்டே போகிறது
எது மாதிரியான எழுத்தாளர் இவர்
எப்படியெல்லாமோ யோசனை செய்கிறார்
என்பது ஆச்சரியம்தான்
எழுத்து அவரை எழுதிக்கொண்டே போகிறதா
ஆனால்
என்ன செய்வது
அவர் எழுதும் வேகத்திற்கு
என்னால் படிக்க முடியவில்லையே…….
ந.பிச்சமூர்த்தி நூற்றாண்டு விழா நிறைவு நாளில் (22.08.2001) கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் ஜெயமோகன். ௨௦௦௦ ஆண்டிலிருந்து ஓராண்டு நாங்கள் ந.பிச்சமூர்த்திக்கு விழா நடத்தினோம். இந்த நிகழ்ச்சி இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். புத்தகம் பெயர் ராமையாவின் சிறுகதை பாணி. இதை எழுதியவர் சி.சு செல்லப்பா. சி.சு செல்லப்பா ராமையாவை தன் குருநாதராக ஏற்றுக் கொண்டிருந்தார்.
சி.சு.செல்லப்பா சொல்கிறார்: பாரதி மகாகவி என்றால் ராமையா மகா கதைஞன். அவரை போன்ற மேதைப் படைப்பாளிகள்தான் எதிர்கால இலக்கியத்துக்குத் தேவை. ராமையாவின் கதையான ‘மலரும் மணமும்’ கதையைப் படித்துப்பார்த்தேன். சி சு செல்லப்பா அப்படிக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. பொதுவாக ஒரு கதையைப் படிக்கும்போது நாம் கதையைப் படிக்கிறோம் என்ற நினைப்பு நமக்கு வரக்கூடாது என்று நினைப்பவன் நான். இந்தக் கதையைப் படிக்கும்போது அதுமாதிரியான எண்ணம் நமக்கு ஏற்படாமலிருக்காது. கதையில் நாலைந்து பாத்திரங்கள்தான். சானுப்பாட்டி, செல்லம், ராமதாஸ், ராமதாஸ் அப்பா. செல்லம் அவளுடைய மாமா பையன் ராமதாஸ் மீது அளவு கடந்த பிரியம். ‘கடைசி கட்டி மாம்பழம் யாருக்கு?’ என்று கேட்கிறாள் சானுப்பாட்டி. எனக்கில்லை பாட்டி, ராமதாசுக்குத்தான். அவன் தானே குட்டி யானைபோலே இருக்கணும். அவனுக்குத்தான் கடைசிப் பிடி என்பாள் செல்லம்.
நல்லதெல்லாம் ராமதாஸ்÷க்குத்தான் சேரவேண்டுமென்பாள் செல்லம். சானுப்பட்டிக்கு அந்தக் குழந்தையின் தியாகத்தை எண்ணி அதிசயமாக இருக்கிறது என்று ஆச்சரியப்படுவாள்.
ராமதாஸ் சந்தோஷமாகச் சிரித்தால் செல்லமும் சிரிப்பாள். அவன் அழுதால் அவளும் அழுவாள். செல்லத்துக்கு ஏழு வயதாயிருக்கும் பொழுதே அவள் தன்னுடைய தாய் மாமனான லக்ஷ்மணய்யர் வீட்டிற்கு வந்துவிட்டாள். அவளை அநாதையாக அவள் தாயும் தந்தையும் விட்டுவிட்டு சென்று விட்டனர்.
சானுபாட்டி குழந்தைகளின் அன்னியோன்யத்தையும், ஒருவர் விஷயத்தில் மற்றவர் காட்டிய அக்கரையையும் அன்பையும் காணும்பொழுதெல்லாம் அவ்விருவரும் புருஷனும் மனைவியுமாக எவ்வளவு அழகாகக் குடும்பம் நடத்துவார்கள் என்று எண்ணுகிறாள். ராமதாஸ் அப்பா லக்ஷ்மணய்யருக்கு வேறு விதமான திட்டம். அந்தக் குழந்தைகளின் சினேகத்தின் வலிமையை நன்றாக அறிந்திருந்தார். செல்லம் ஒரு அநாதை. ஒரு செல்லாக் காசுகூட வைக்காமல் லக்ஷ்மணய்யர் பாதுகாப்பில் விட்டுவிட்டுச் சென்று விட்டார்கள். ஆகையால் செல்லத்தை வேற எங்காவது கல்யாணம் செய்து விட வேண்டுமென்று நினைக்கிறார். ராமதாஸ்÷ற்கு நல்ல பணக்கார வீட்டுப் பெண்ணாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்.அவனுக்காக வாங்கும் வரதட்சிணையில் செல்லத்தின் கல்யாணத்திற்காகச் செய்யும் செலவையும் வசூலித்து விடலாமென்று நினைக்கிறார். செல்லத்துக்கு ஒன்பது வயது ஆகிக்கொண்டிருந்தது. அவர்களிருந்த கிராமத்திற்கு நாலைந்து மைல் தூரத்திலிருந்த வேறொரு கிராமத்தில் புரோகிதம் செய்து கொண்டிருந்த ஒருவருக்கு அவளை இரண்டாந் தாரமாக கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. சாணுப்பாட்டி அதைக் கேள்விப்பட்டவுடன் நிரம்பவும் வருத்தமடைந்தாள். பாட்டியின் பேச்சை பிள்ளை கேட்கமாட்டான். என்ன கொடுமை இது.
செல்லத்துக்கு அதன் அர்த்தமே தெரியாத ஒரு கல்யாணம் நடந்து முடிந்து விட்டது. இருவருக்கும் புரியவில்லை. அவர்கள் வழக்கம்போல ஒருவர் தலைமயிரை இன்னொருவர் பிடித்திழுப்பதும் ஆடுவதும் பாடுவதுமாக விளையாடிக்கொண்டே கல்யாண வைபவங்களில் கலந்து கொண்டார்கள்.
ராமதாஸ் இண்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தபோது செல்லம் ருதுவான செய்தியும், அதன் பிறகு ஒரு வாரத்திற்கெல்லாம் அவள் விதவையான செய்தியும் வந்தன. செல்லத்துக்கு தான் வைதவ்யமடைந்த விஷயம் துன்பப்பட வேண்டிய விஷயமாகத் தெரியவில்லை. அந்த அளவிற்கு அவளுக்குக் குழந்தை உள்ளம்.
ராமதாஸ் பி.ஏ படிக்க ஆரம்பித்தவுடன் வக்ஷ்மணய்யர் கல்யாணச் சந்தையில் தமது சரக்குக்கு எவ்வளவு கிராக்கியிருக்கிறதென்ற விஷயமாக ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். கடைசியாக ஒருபெண் பிடித்திருந்தது. வரதட்சிணையாக ரொக்கமாக நாலாயிரம் ரூபாய் கொடுக்கப் பெண் வீட்டார் தயாராகவிருந்தனர். ராமதாûஸ உடனே புறப்பட்டு வரும்படி அவர் தந்தை கடிதம் எழுதினார்.
இந்த முறை அவன் செல்லத்தைப் பார்க்கும்போது அவனுக்குத் திகைப்பாகப் போய்விடுகிறது. அவளை நினைத்து ஏங்க ஆரம்பித்தான். அத்தகைய அழகி தன்னுடைய உடைமைப் பொருளாகவிருக்க வேண்டியது போய், அவள் இந்த உலகத்தில் பயனற்ற ஒரு பொருளாகி விட்டாளென்று எண்ணியவுடன் அவனுடைய நெஞ்சம் பட்டபாட்டை வர்ணிப்பது இயலாத காரியம்.
ராமதாஸ் செல்லத்தையைத் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறான். செல்லத்தைத் தனியாகச் சந்தித்து தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறான். அந்தப் பேச்சின் பலாபலன்களைப் பற்றி அவர்கள் அப்பொழுது ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவுமில்லை. ஆனால் அதுல ராமதாஸ÷க்கு விருப்பமிருந்தால் செல்லத்துக்கும் அது விருப்பம்தான். இதை செல்லம் அவனிடம் தெரியப்படுத்துகிறாள்.
இந்தக் கதையை ராமையா அத்தியாயம் அத்தியாயமாக எழுதி உள்ளார். சென்னையில் சட்டப்படிப்பு படிக்கச்செல்லும்போது ராமதாஸ் ஒரு வருடம் கழித்துத் திரும்ப வீட்டிற்கு வருகிறான்.
ஒருநாள் இருவரும் தனியாக வீட்டிலிருந்தனர். அப்பொழுது தற்செயலாக நேர்ந்த ஒரு சம்பவத்தால் ஒருவரையொருவர் தொட்டுக்கொள்ள நேர்ந்தது. உடனே இருவருடைய உள்ளத்திலும் விவரிக்கவியலாத ஒரு உணர்ச்சியெழுந்தது என்று ராமையா எழுதியிருக்கிறார்.
பின், இன்னொரு இடத்தில், செல்லம் நான் பட்டணம் போகப் போகிறேன். இந்த வருஷம் எப்படியாவது அப்பாவிடம் சொல்லி நம் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்கிறான். இதைக் கேட்ட செல்லத்தின் கண்கள் ஏமாற்றத்தால் மழுங்கின. அவற்றினின்றும் இரு கண்ணீர்த் துளிகள் முத்துக்களெனக் கீழே உதிர்ந்தன.
இந்த இடத்தில் ராமையா ஒன்றைக் குறிப்பிடுகிறார். ஹிந்து சமூகத்தில் வைதவ்யமடைந்த ஒரு பெண் சிற்றின்ப நினைவுகளில் மனதைச் செலுத்த விடாதபடி செய்யச் சில கட்டுப்பாடுகள் நியமிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடுகிறார். இந்த நிலையில் ராமதாஸ் நினைத்துக் கொண்டிருக்கும் செல்லத்திற்கு எப்படி இருக்கும்? அவன் திருமணம் செய்துகொள்வானா மாட்டானா என்ற ஏக்கம் இருந்திருக்கும். ராமதாஸால் அப்பா இருக்கும்வரை தான் செல்லத்தைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்ல தைரியம் வரவில்லை.
திடீரென்று ஒருநாள் லக்ஷ்மணய்யர் மரணம் அடைந்து விடுகிறார்.அதேபோல் சானுப்பாட்டியும் மரணப்படுக்கையில் இருக்கும்போது ராமதாûஸப் பார்த்து, ‘அடே ராமு, குழந்தை செல்லம், தாயார் தகப்பனாரற்ற அநாதையடா.. அவளுடைய கதிதான் ரொம்ப அநியாயமாய்ப் போய்விட்டது..உன்னைத் தவிர அவளுக்கு வேறே யாருமில்லேடா..அவளைக் கைவிட்டுடாதேயடா என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
படிப்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டு தன் கல்யாணம் விஷயமாகச் செல்லத்தைப் பார்க்கிறான். அவனுக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. செல்லம் முற்றிலும் உருமாறிப்போயிருந்தாள்.
அவளிடம் தன் விவாகத்தைப் பற்றிப் பேசினான். அதைக் கேட்டு செல்லத்திற்கு எந்த உற்சாகமுமில்லை. அவன் விரும்பினால் அந்த விவாகம் நடைபெறுவதில் அவளுக்கு ஆட்சேபணை எதுவுமில்லை என்று சொல்லி விட்டாள்.
அடுத்த மாதமே அவளைத் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்தான். திருமணம் செய்துகொண்ட பின்பு, ஆவலுடன் அவளைக் கட்டித் தழுவுகிறான். அவளுக்கு எந்த ஈர்ப்பும் இல்லாமலிருக்கிறாள். என்ன செல்லம் இந்தக் கல்யாணத்தில் உனக்குச் சந்தோஷமில்லையா என்று வினவுகிறான்.
அதைக்கேட்டு செல்லம் நிரம்பவும் சிரமத்துடன் புன்னகை செய்து, “உன்னுடைய திருப்திக்கும் சந்தோஷத்திற்கும்தான் நான் இதற்குச் சம்மதித்தேன். இந்த ஜன்மம் முழுவதும் உனக்குப் பணிவிடை செய்யலாமென்ற திருப்தியைத் தவிர எனக்கு இதில் வேறு சந்தோஷமே இல்லை” என்கிறாள்.
முதலில் ராமதாஸ் மீது ஆர்வமாக இருந்த செல்லம், ஏன் இப்படி மாறினாள்? திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறிய ராமதாஸ், அப்பாவிடம் பேசப் பயந்ததால், அவளுக்கு அவனைப் பற்றிய ஆசை மறத்து விட்டது. கடைசியில் இப்படி எழுதுகிறார் ராமையா.
அவளது மெல்லிய சரீரம் அவனது அரவணைப்பில் துவண்டு விழுந்தது. அடுத்த வினாடி ராமதாஸ்; தனது கரங்களில் மணமற்ற மலரே தங்கியிருந்ததென்பதை உணர்ந்தாள் என்று முடித்திருக்கிறார்.
எனக்குத் தெரிந்து என்குடும்பத்தில் உறவினர் ஒருவர் இதுமாதிரி சின்ன வயதில் விதவை ஆகிவிட்டார். அவருக்கு மொட்டை அடித்து ஒதுக்கி வைத்துவிட்டார்கள். அவருக்குப் பைத்தியம் பிடித்து சில மாதங்கள் அவதிப்பட்டார்.
இந்த நிலை செல்லத்துக்கு வரவில்லை என்றாலும்,இந்தக் கதையை இப்போது நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது கேள்விக்குறி. நான் ரசித்த கதையில் இதுவும் ஒன்று. ராமையாவைப்பற்றி பெருமையாக சி.சு.செல்லப்பா கூறிய கருத்துடன் இக் கட்டுரையை முடிக்கிறேன்.
தினமணி கதிர் வாரப்பதிப்பில் வாரம் ஒரு கதை வீதம் ஒரு வருஷ காலத்துக்கு மேல் சிறுகதைகள் விடாமல் தொடர்ந்து எழுதிய தனிப்பெருமை ராமையாவுக்குத்தான் உண்டு. ரசமான கதைகள் எழுதுவதில் அவருக்கு இணை யாருமே இல்லை.வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் நிலைகளைக் கொண்டு கதை புனையும் அவரது ஆற்றல் தலை சிறந்தது என்கிறார் சி சு செல்லப்பா.
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணை- 18 ஏப்ரல் 2021)