அழகியசிங்கர்
ந. முத்துசாமியின் ‘மேற்கத்திக் கொம்பு மாடுகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள நெய்ச் சொம்பு என்ற கதை. நாலரை பக்கங்கள் கொண்ட கதை. 2004ல் எழுதப்பட்ட கதை.
பத்து வயது சிறுவனின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட கதை. ந.முத்துசாமி அவருடைய பத்தாவது வயதில் அவருடைய அனுபவத்தைத்தான் கதையாக எழுதி உள்ளார்
எங்கள் வீட்டு அடுப்பங்கரையில் இரண்டு தூண்களுக்கு இடையில் இறவாணத்திலிருந்து ஒரு நெய்ச் சொம்பு உறியில் தொங்கிக்கொண்டிருந்தது என்று ஆரம்பம் ஆகிறது கதை.
ஆரம்பத்தில் ஒரு கிராமப்புற வீட்டில் நெய்ச் செம்பு எங்கே வீற்றிருக்கும் என்பதை நுணுக்கமாக விவரிக்கிறார்.
எங்கள் வீடு எருமைகளுக்குப் பெயர் போனது. இரண்டு நாளைக்கு ஒரு முறை தயிர் கடைவார்கள். நானும் கடைவேன். என்று கதாசிரியர் தன்னைப் பற்றி சொல்லிக்கொள்ள ஆரம்பிக்கிறார்.மோர் கடைவதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. அந்த சுவாரஸ்யத்தைக் கம்பனும் அனுபவித்திருப்பான் என்று கம்பனின் வரிகள் இரண்டை குறிப்பிடுகிறர்.
தோயும் வெண்தயிரி மத்தொலிதுள்ளவும்.
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்
பிறகுத் தன் வீட்டில் உள்ள அடுப்பங்கரையைப் பற்றி விவரிக்கிறார். எங்கள் அடுப்பங்கரையில் உள்ள தொட்டி முற்றம்தான் மிகவும் பெரியது. அதைப்போல் நான் எங்கும் பார்த்ததில்லை என்கிறார். இந்தக் கதை அவர் மூலமாக அவரை ஆதாரமாக வைத்துக்கொண்டு சொல்லப்படுகிறது. அடுப்பங்கரையில் தென்படும் இருட்டை விவரிக்கும்போது அதை நாம் தொலைத்து விட்டோம் என்கிறார்.
ஒரு வரி விவரிக்கும்போது வருகிறது. நியாயங்கள் குன்றியிருந்த மொத்தச் சமூகத்திற்காகவும் நாம் இப்போதுதான் உழைக்கத் தலைப்பட்டிருக்கிறோம் என்கிறார்
முதலில் நெய்ச் செம்பு தொங்கிக்கொண்டிருக்கும் உறியைப் பற்றியும், எப்படி வாசலில் திண்ணையில் இருப்பவருக்கு இந்த உறியும் நெய்ச் சொம்பும் கண்ணில் படாமல் இருக்கிறது என்பதை விவரித்துக் கொண்டு போகிறார்.
அதன் பின் நெய்ச் சொம்பு பற்றி. அது ஈயச் சொம்பு என்பது பழைய மனிதர்களுக்குத் தெரியும். அது மாயவரத்திலும் கும்பகோணத்திலும் செய்யப் படுகிறது என்பதையும், இந்த ஊர்கள் ஈயப் பாத்திரங்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை என்பதையும் குறிப்பிடுகிறார்.
மாயவரத்தில் உள்ள துலா கட்டத்தை ஒட்டிய பட்டமங்கலத் தெருவின் கோடியில் மேற்குப் பார்த்த கீழ்க்கைச் சாரியில் சில கடைகளில் ஈயப் பாத்திரங்களை லொட்டு லொட்டு என்று தட்டி செய்து கொண்டிருக்கலாம்.
ஈயப்பாத்திரங்கள் பற்றிய பிரஞ்ஞையே இப்போது குறைந்து விட்டது என்கிறார். வெள்ளீயம், காரியம் பார்த்து வாங்கத் தெரியாவிட்டால் காரியத்தைக் கொடுத்து ஏமாற்றி விடுவார்கள் என்றும் சொல்கிறார்.
இந்தக் கதையைப் படித்துக் கொண்டு வருபவர்களுக்குப் பல விபரங்களைச் சொல்லிக்கொண்டு போகிறார். படிப்பவர்க்குக் கதையா கட்டுரையா என்ற சந்தேகம் வந்து விடும். இந்த விவரணைகள் இருந்தாலும் இது கதைதான்.
ரசம் வைப்பது வெள்ளீயம் மிகவும் ஏற்றது. ஈயச் சொம்பில்தான் ரசம் வைத்துச் சாப்பிட வேண்டுமென்று சொல்வார்கள். ஒருக்கால் ஈயம் உடம்பிற்குத் தேவையோ என்னவோ இப்போது ஈய விஷத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அளவைப் பொறுத்து மருந்தும் விஷமாக மாறிவிடும் போலும், வைத்தியரைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.
இப்படியெல்லாம் அடுக்கிக்கொண்டே போகிறார். முதலில் உறியைப் பற்றி. அந்தக் காலத்து வீடுகளில் உறி வைக்கும் அழகைப் பற்றி..பின் உறியில் தொங்கும் ஈயச்சொம்புகளில் தயிர் கடைவது பற்றி. ஈயச்சொம்பு எங்கே கிடைக்கும் என்ற விபரம் பற்றி. ஈயச் சொம்பில் ரசம் வைப்பது பற்றி என்றெல்லாம் கூறுகிறார்.
ஒருநாள் காலை நேரத்தில் பெரிய கற்சட்டியில் தயிர் கடைந்து கொண்டிருக்கும்போது, பழனிவேல என்கிற நண்பன் வந்துவிடுகிறான். கண்ணா என்று கூப்பிடுகிறான். அப்போதுதான் பத்து வயது சிறுவனான கதை சொல்லியின் பெயர் கண்ணன் என்று அறிமுகமாகிறது. நண்பன் வந்தது கண்ணனுக்கு மகிழ்ச்சி . பழனிவேல குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டுமென்று கேட்கிறான். பானையில் வைத்திருந்த பானைத் தண்ணீரை எடுக்கப்போனான் கண்ணன். அடுப்படியிலிருந்த அம்மா அவனைக் கூப்பிட்டாள். அவன் நண்பனுக்குத் தண்ணீரைக் கொடுக்கும்போது சற்று மோரைத் தெளித்துக் கொடுக்க வேண்டுமென்பதற்காகக் கூப்பிட்டாள். அவன் பிராமணன் இல்லை என்பதால் அம்மா அதுமாதிரி செய்யக் கூப்பிட்டாள். நண்பன் முதலியார் . புஞ்சையில் பிராமணர்களைப் போலவே செல்வாக்கோடு இருந்தவர்கள் முதலியார்கள்.
நண்பனுக்குத் தண்ணீரில் மோரைத் தெளித்துக் கொடுப்பதற்குக் கண்ணனுக்கு உடன் பாடில்லை. பத்து வயதிருக்கும் போதே அந்த தீமைகள் கண்ணனுக்குத் தெரிந்தது.
இங்கு மாட்டுக்காரச் சிறுவர்கள் காவிரிக்கரையில் தொலைவில் நின்று ‘காவிரியில் குளிக்கும் பிராமணர்களைப் பார்த்து, அக்ரகாரப் பாப்பானெல்லாம் சாக மாட்டானா, அவன் ஆத்தங்கரை ஓரத்திலே வேக மாட்டானா’ என்று
தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு பாடத் தொடங்கி விட்டிருந்தார்கள் அப்போது.
பிறப்பிலே அந்தணராக இருந்தாலும் முத்துசாமிக்குத் தன்னைச் சார்ந்த சமூகத்தைத் தாக்கி எழுத, அலாதியான துணிச்சல் வேண்டும்.
இதை இந்தக் கதையில் குறிப்பிடுகிறார் கதாசிரியர். நண்பனுக்குத் தண்ணீரில் மோரை ஊற்றாமல் டம்ளரை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான். அடுப்படியிலிருந்து அவன் அம்மா ஓடிவந்து கற்சட்டியில் கடைந்து கொண்டிருந்த மோரில் விரலைத் தேய்த்து டம்ளரில் தெளித்தாள். இந்த நிகழ்ச்சி கண்ணனை மிகவும் பாதித்துவிட்டது. கோபத்துடன் டம்ளரை முற்றத்துச் சுவரில் அடித்தான். கற்சட்டித் தயிரைக் காலால் முற்றத்தில் உதைத்து உடைத்தான். உறியில் தொங்கிக் கொண்டிருந்த நெய்ச் சொம்பை எடுத்து முற்றத்துச் சுவரில் மோதி உடைத்தான். சுவர் முழுவதும், முற்றம் முழுதும் நெய், மோர் ஆறாய் ஓடியது. கோபத்துடன் வெளியே ஓடிய அவனை வாயிற்படியில் மோதி அவன் தலையைக் காயப்படுத்தியது.
ஐயோ அம்மா என்று கீழே விழுந்து மயக்கம் போட்ட அவனை அவன் நண்பன்தான் ஓடிவந்து தூக்கிக் கிடத்திவிட்டு வைத்தியனைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து மருந்து வைத்துக் கட்டினானாம்.இந்த நெய்க்கறை இன்னமும் தொட்டி முற்றச் சுவரில் அது உண்டான காரணத்தை இழந்து இருந்து கொண்டிருக்கிறது என்கிறார் முத்துசாமி.
இந்தக் கதை முதல் பகுதி கட்டுரை வடிவத்திலிருந்தாலும் கடைசியில் ஒரு சின்ன சம்பவத்தை விளக்கி கதைபோல் மாற்றி எழுதி விடுகிறார். முத்துசாமியின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவமாகப் படுகிறது.. இவர் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காகக் கதைகள் எழுதியதாகத் தோன்றுகிறது.
தமிழில் மிகக் குறைவாகச் சிறுகதைகள் எழுதினாலும் குறிப்பிடப்பட வேண்டிய படைப்பாளிகளில்
இவர் ஒருவர். இவருக்குக் கூத்துப்பட்டறையில்தான் கவனம் அதிகம்.
நன்றி : மேற்கத்திக் கொம்பு மாடுகள் – ந.முத்துசாமி – சிறுகதைகள் – க்ரியா – பக்கங்கள் : 296 – விலை : ரூ.360