இன்னும் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் பற்றி..

அழகியசிங்கர்

சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன்.  அதைப் பற்றிக் கூடிய சீக்கிரத்தில் என் அறிவுக்கு எட்டியவரை எழுதலாமென்று நினைக்கிறேன். அந்தப் புத்தகம் பெயர் தாவோ தே ஜிங் (தாவோயிசத்தின் அடித்தளம்) லாவோ ட்சு என்பவர் ஆசிரியர்.  அதைச் சாரமும் விசாரமும் செய்திருப்பவர் சந்தியா நடராஜன். அந்தப் புத்தகத்திற்கு இந்த ஆண்டு ஆத்மாநாம் விருது கொடுத்து கௌரவம் செய்திருக்கிறார்கள்.  விருது பெறப்போகிறவருக்கும் வாழ்த்துக்கள்.  விருது கொடுக்கப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்.   அடிக்கடி நானும் நடராஜனும் பூங்காவில் நடைப்பயிற்சி செய்வோம்.  யார் கண்ணோ பட்டுவிட்டது.  4 மாதங்களாகப் பார்க்கவில்லை.  கொரோனா பிரித்து விட்டது.  இது குறித்தும் தாவோ எதாவது எழுதியிருப்பார்.  கண்டு பிடிக்க வேண்டும்.

இன்று தந்தையார் தினமா..

அழகியசிங்கர்

காலையில் ஒரு வாழ்த்துச் செய்தி வந்தது.  தந்தையார் தின வாழ்த்துக்கள் என்று.  தந்தையார் தினமா என்று தெரியவில்லை.  இன்று அவரைப் பற்றி நினைத்துக்கொள்வோமே என்று தோன்றியது.
என் அப்பாவைப் பற்றி உயர்வாகச் சொல்வதற்குப் பல விஷயங்கள் உண்டு.  அவருடைய பிள்ளைகளை அவர் அடித்ததில்லை.  கோபித்துக் கொண்டது இல்லை.
எனக்கு ஆச்சரியமாக இருக்கும் அவர் ஏன் கோபப்படுவதில்லை என்று.  மேலும் அவர் யாருடன் பழகும்போது கோபப்பட்டதே இல்லை.  
அவருக்குப் போதை வஸ்துக்கள் பழக்கமில்லை. சிகரெட் பழக்கம்மட்டுமல்ல வெற்றிலை பாக்கு கூட பயன்படுத்த மாட்டார்.  அவருக்குச் சர்க்கரை நோய் ரத்த அழுத்த நோய் எல்லாம் கிடையாது.   அவருடைய பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ளவில்லை.  90 வயதுக்கு மேல் ஆனாலும் தரையில் அமர்ந்து கொண்டு காய்கறிகள் நறுக்கிக் கொடுப்பார்.   அவர் நான் பயமுறுத்துகிற மாதிரி பெரிய பெரிய புத்தகங்களைப் படிக்க மாட்டார்.  பின்னால்தான் என் புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.   ஜானகிராமன் முழு சிறுகதைத் தொகுதியைப் படித்து விட்டார். அசோகமித்திரன் சிறுகதைகளையும் படித்து விட்டார்.  ஆனால் அவருக்கு புதுமைப்பித்தன் ஓடவில்லை.
என் குறுநாவல்களைப் பாராட்டிக் கொண்டிருந்தவர் அவரை வைத்தே உறவினர்கள் என்ற குறுநாவல் எழுதியிருந்தேன்.  அதைப் படித்த பிறகு என்னுடைய எழுத்தையும் படிக்கப் பிடிக்காமல் போய்விட்டது.
என்ன எழுதறே? என்பார்.  நான் சிரித்துக்கொண்டே போய் விடுவேன்.
அவருக்கு ஹோமியோபதி மருந்தில் விருப்பம் அதிகம்.  இந்த கொரோனா காலத்தில் அவர் இருந்திருந்தால் ஹோமியோபதி மருந்தைச் சாப்பிடும்படி வற்புறுத்துவார்.
அவருக்கு 95 வயது வரை எந்த நோயும் கிடையாது. இதய நோய் எதுவும் வந்ததில்லை.  தள்ளாமைதான் காரணம்.  2017ஆம் ஆண்ட புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முன் இறந்து விட்டார்.  அந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டு.  “

சூமில் நான் நடத்தும் கவிதைக் கூட்டம்

அழகியசிங்கர்

கடந்த 3 வாரங்களாக நான் சூமில் கவிதைக் கூட்டம் நடத்தி வருகிறேன்.  முதல் வாரம் 4 கவிதை வாசிப்பவர்களை அழைத்து கவிதை வாசிக்கக் கூப்பிட்டேன்.  அந்தக் கூட்டம் சரியாக நடக்கவில்லை. நானும் சூம் கூட்டம் நடத்துவதற்குப் புதுசு.  கொஞ்சம் சரியாக நடக்காமல் போய்விட்டது. 


இரண்டாவது கூட்டத்தில் கவிதை வாசிப்பவர்கள் எண்ணிக்கையைக் கூட்டினேன். 

இந்தமுறை பத்து  கவிதை வாசிப்பவர்கள்.  ஆனால் கூட்டம் நடத்தும்போது சிலர் கூட்டத்தில் முன்னதாக வந்திருந்து காத்திருந்ததால் நேரம் குறுகலாகப் போய்விட்டது. 


வெயிட்டிங் வந்திருந்தவர்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு 7 மணிக்குத்தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.  மேலும் 10 கவிதை வாசிப்பவர்களைக் கூப்பிட்டதால், முதலில் கவிதை வாசித்தவர் கவிதை வாசிக்கும்போது சீக்கிரம் அவர் கவிதை வாசித்து முடிக்க வேண்டுமென்று தோன்றியது.  பத்து கவிதை வாசிப்பவர்களுக்கு நேரம் சரியாக இருக்குமா  என்று பரபரப்பாக இருந்தது.
அதனால் வரும் வெள்ளிக்கிழமை (12.06.2020) கவிதை வாசிப்பவர்கள் எண்ணிக்கை 5 பேர்களாக வைத்திருக்க விரும்புகிறேன்.  ஏற்கனவே வாசித்தவர்களைத் தவிர்த்து புதியதாக வாசிப்பவர்களைக் கொண்டு வர விரும்புகிறேன். 


ஒருவர் பின் ஒருவராக ஒவ்வொரு கவிதையாக  வாசிக்க வைக்கலாமென்றும் தோன்றுகிறது.  
கவிதை வாசிக்கும் நிகழ்ச்சியில் நான் கண்டு பிடித்த விஷயம்.  கவிதை வாசிப்பதைக் கேட்கச் சிறப்பாகவே இருக்கிறது.  கவிதையை மௌனமாக வாசிக்கும்போதுதான் பெரும்பாலான கவிதைகள் நமக்கு உடன்பட மறுக்கிறது.


இன்னொன்றும் கண்டுபிடித்தேன் எல்லோரும் கவிதைகளைச் சிறப்பாகவே வாசிக்கிறார்கள்.    

ராஜேஸ் குமார் சிறந்த கதைகள்


அழகியசிங்கர்

ராஜேஸ் குமார், தேவி பாலா, சுபா, ரமணிச்சந்திரன், இந்திரா சௌந்திரராஜன், பட்டுக்கோட்டை பிரபாகரன் போன்ற எழுத்தாளர்களின் பாக்கெட் நாவல்களை வாங்கி வைத்துக்கொள்வேன்.  எப்படித்தான் எழுதுகிறார்கள் பார்ப்போம் என்ற எண்ணத்தில்தான்.  ஆனால் ஒன்றையும் படித்ததில்லை.
நான் படிக்கவில்லை என்றால் என்ன பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் அவர்கள் பக்கம்.  அவர்கள் எழுதுவதைப் படித்துக்கொண்டே இருப்பார்கள். 
தேவி பாலா என்ற எழுத்தாளரைப் பற்றி கலைமகள் ஆசிரியர் அகமகிழ்ந்து முகநூலில் எழுதியிருந்ததைப் படித்தேன்.  ஆனால் நான் ஒன்றுகூடப் படித்ததில்லை.  அவர் ஆயிரக்கணக்கில் சிறுகதைகளும், ஆயிரக்கணக்கில் நாவல்களும் எழுதி உள்ளார்.
        எல்லாத் தீபாவளி மலர்களிலும் நான் மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் இல்லாமல் இருப்பதில்லை.  சிறுகதைகள் மட்டுமல்ல ஒரு தொடர்கதை எழுத வேண்டுமென்றாலும் அவர்களைத்தான் கூப்பிட்டு எழுதச் சொல்வார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும், இலக்கியத்திற்கு என்று ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா என்றும் எழுதச் சொல்வார்கள்.  ஒவ்வொரு முறையும் தீபாவளி மலர்களில் அசோகமித்திரன் எழுதாமலிருக்க மாட்டார்.
இவர்களுடைய பாக்கெட் நாவல்களை வாங்கி வைத்துவிட்டு படிக்காமலிருக்கிறோமே அவர்கள் அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்றெண்ணி ராஜேஸ் குமார்  ‘சிறந்த சிறுகதைகளை’ப் படிக்க எடுத்து வைத்துக்கொண்டேன்.  மற்றவர்களிடம் இன்னும் போகவில்லை. 
உயிர்மை பதிப்பகம் ராஜேஸ் குமார் சிறந்த சிறுகதைகளை (எண்ணிக்கையில் 25) கொண்டு வந்துள்ளது.  இப்படி புத்தகம் கொண்டு வந்தவுடன், அமைப்பே மாறிவிட்டது.  
ராஜேஸ் குமார் புத்தகங்களை வலது கையால் படித்துவிட்டு இடது கையால் தூக்கிப்போடும் வாசக தளத்திலிருந்து மாறி வேறு விதமாகத் தோற்றம் கொள்ள ஆரம்பித்து விட்டது.  வாசகர்களுக்கு  மரியாதை கொடுக்க வேண்டுமென்று தோன்றிவிட்டது. புத்தகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது.
ராஜேஸ் குமார் எழுத்துக்கள் மீது அசோகமித்திரனுக்கு உயர்வான அபிப்பிராயம் இருந்தது.  என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார். 
அவர் பேசும்போது நான் பாக்கெட் நாவல்கள் பக்கம் போனதே இல்லை  அவர் குறிப்பிட்டபிறகு வாங்கிப் படித்துப் பார்க்கலாமென்று தோன்றியது. வாங்கிவைத்துக்கொண்டேனே தவிர படிக்கவில்லை.  
உயிர்மை கொண்டு வந்துள்ள ராஜேஸ் குமார் கதையிலிருந்து எதாவது ஒரு கதையைப் படித்து அதைப் பற்றி எழுதலாமென்று நினைத்தேன்.
இந்தப் புத்தகத்திலிருந்து 3 கதைகள் படித்து விட்டேன்.  நான் முதலில் ஒரு கதையைப் படித்துவிட்டு எழுதலாமென்று நினைத்தேன்.  ஆனால் வரிசையாக 3 கதைகள் படித்து விட்டேன்.
‘நேற்றைப் போல் இன்று இல்லை’  என்ற முதல் கதையை எடுத்து வாசித்தேன்.  ஒன்று புரிந்தது.  ராஜேஸ் குமார் அழகாக தன் கதையை வடிவமைத்துக் கொடுக்கிறார். எங்கும் குழப்பமில்லாத வார்த்தைப் பிரயோகம். 
கச்சிதமான வடிவத்தில் கதையை முடித்து விடுகிறார்.  பொன்ராஜ் என்பவர் கிராமத்தில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷன் முன் தற்கொலை செய்துகொள்வதுபோல் நாடகமாடுகிறார்.  இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் பொன் ராஜைக் கூப்பிட்டு விசாரிக்கிறார்.  
அந்தக் கிராமத்துல சீட்டு கம்பெனி நடத்தும் கிருஷ்ண பிள்ளையைப் பற்றி புகார் கொடுக்கிறான் பொன்ராஜ்  சீட்டுப் பணம் ரூ.20000 கொடுக்க வேண்டும்.  கொடுக்காமல் கொடுத்து விட்டதாகச் சொல்கிறார் மேலும் ஆளை வைத்து மிரட்டவும் செய்கிறார்  கிருஷ்ணப்பிள்ளை என்கிறான் பொன்ராஜ். 
இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் கிருஷ்ணபிள்ளையிடம் போன் செய்கிறார்.  
‘பொன் ராஜிற்குச் சீட்டுப் பணம் ரூ.20000 கொடுக்கவில்லையா?’ என்று கேட்கிறார்.
கிருஷ்ணபிள்ளை பதறி விடுகிறார்.  ‘சார் அவன் சொல்றது பொய்,’ என்கிறார்.
உண்மையில் பொன் ராஜிடம் ஒரு இக்கட்டான தருணத்தில் சீட்டுப் பணம் கொடுத்து விடுகிறார்.  ஆனால் பணம் கொடுத்ததற்கு எழுதிக் கையெழுத்து வாங்கவில்லை. சீட்டுப் பணம் கேட்டு வரும்போது கிருஷ்ணப்பிள்ளையின் சம்பந்தி கார் விபத்தில் மாட்டிக்கொண்டு வருகிறார்.  அந்த பதட்டமான சூழ்நிலையில்தான் கையெழுத்து வாங்க மறந்து விடுகிறார்.
இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் கிருஷ்ணபிள்ளையை மிரட்டி விடுகிறார்.  வேற வழியில்லாமல் பொன் ராஜிடம் இன்னொரு முறை ரூ.20000 கொடுத்து விடுகிறார். பொன் ராஜ் உற்சாகமாகப் போய் விடுகிறான்.  தான் ஏமாற்றியதைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்கிறான்.  
பொன் ராஜ் இதைக் கொண்டாட நினைக்கிறான். வெளியே மழை லேசாகப் பெய்து கொண்டிருந்தது. மழைக்கு பெப்பர் சிக்கனும் ஒரு குவார்ட்டரும் கையிலிருந்தால் சூப்பராக இருக்குமென்று நினைக்கிறான்.
வீட்டைப்பூட்டிக்கொண்டு லேசாக மழைத் தூற்றலைப் பொருட்படுத்தாமல் ஒயின் ஷாப்பை நோக்கி நடந்தான் பொன்ராஜ்.
அடுத்தநாள் காலையில் பேப்பரில் ஒரு பக்கத்தில் ஒரு சின்ன பகுதியில் அந்தச் செய்தி இடம் பிடித்து இருந்தது.
மின்னல் தாக்கி உடல் கருகி இளைஞர் மரணம், சமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பொன்ராஜ்.  வயது 25. கிராமத்து வீதியில் மழையில் நனைந்தபடி சென்றபோது மின்னல் தாக்கி இறந்து விட்டார்.  தமிழகத்தில் மழைக்கு நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பாராத விதமாய் இதுமாதிரி ஒரு டுவிஸ்டை ராஜேஷ் குமார் கொடுத்துள்ளார்.  இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்.  ஒருவருக்கு வஞ்சனை செய்தால் அதற்குத் தண்டனை வேறுவிதமாகக் கிடைக்கும் என்கிறாரா?  துரோகம் செய்தால் அதற்குத் தண்டனை கிடைத்துவிடும் என்ற ரீதியில் முடிவை வைக்கிறாரா? இவருடைய எல்லாக் கதைகளுக்கும் இது மாதிரியான பார்முலா முடிவை கொண்டு வருகிறாரா என்று தெரியவில்ûல்.  நான் இன்னும் முழுவதும் படிக்க வில்லை. 
‘நியூஜெர்ஸி தேவதை,” அன்றே அங்கே அப்பொழுது’  என்ற கதைகளையும் இப் புத்தகத்தில் படித்து விட்டேன்.    

கடுகுவின் ‘கமலாவும் நானும்’.

.

அழகியசிங்கர்

இன்று கடுகு இறந்துவிட்டதாக திருப்பூர் கிருஷ்ணன் முகநூலில் எழுதியிருந்ததைப் படித்தேன். நான் கடுகு என்கிற பிஎஸ் ரங்கநாதன் என்கிற அகஸ்தியன் என்பவரைப் பார்த்ததில்லை.  அவர் எழுத்துக்களைப் படித்ததுண்டு.
சமீபத்தில் கமலாவும் நானும் என்ற கடுகுவின் புத்தகத்தை நூல் நிலையத்திலிருந்து எடுத்து வந்தேன்.  நான் நூலகத்திலிருந்து போய் புத்தகம் எடுப்பேனே தவிர, உடனே புத்தகம் படித்து விடுவேன் என்று எண்ணி விடாதீர்கள்.


பொதுவாக நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்து வருவதற்குக் காரணம் தொடர்பு விட்டுப் போகமலிருப்பதற்குத்தான். ‘கடுகு’ புத்தகத்தோடு இன்னும் இரண்டு புத்தகங்கள் எடுத்து வந்தேன்.  ஒன்று ‘தேவன்’ எழுதிய ‘கோமதியின் காதலன்’ இன்னொன்று ‘சுஜாதா’ எழுதிய ‘உள்ளம் துறந்தவன்.’ 


மூன்று புத்தகங்களையும் நூல் நிலையத்திற்கு எடுத்துக் கொண்டு போவேன்.  திரும்பவும் புதுப்பித்துக்கொண்டு எடுத்துக் கொண்டு வந்து விடுவேன். 

 
வாரத்தில் ஒருநாள் நூலகத்திலிருந்து எடுத்து வருகிற புத்தகங்களைக் கொஞ்சமாவது படித்து விடுவது என்று நினைத்துக் கொள்வேன்.  அத்துடன் சரி. 


கடுகு மரணமடைந்த செய்தியை அறிந்தவுடன் அவருடைய புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன்.  கொஞ்சமாவது படிக்கலாமென்ற எண்ணத்தில்.


பொதுவாகத் தமிழில் நகைச் சுவையாக எழுதுபவர்கள் மிகமிகக் குறைவு.  இன்னும் கேட்டால் விரல் விட்டு எண்ணி விடலாம்.   
ஜே.எஸ். ராகவன் என்ற எழுத்தாளர் மாம்பலம் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வாரம் வாரம் தொடர்ந்து நகைச்சுவை கட்டுரை எழுதுவார். 

நான்  மாம்பலம் டைம்ஸ் பத்திரிகையைப் பார்க்கும்போது
அவருடைய  கட்டுரையைக் கட்டாயம் வாசிப்பேன்.
என் பத்திரிகையில் அவருடைய கட்டுரை ஒன்றையும் பிரசுரம் செய்தேன்.  ஏன் என்றால் சிறுபத்திரிக்கை என்றால் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு படிக்கக் கூடாது என்ற எண்ணத்தால்தான் ராகவன் கட்டுரையைப் பிரசுரம் செய்தேன்.


அந்தத் தருணத்தில்தான் நூல்நிலையத்தில் கடுகுவைக் கண்டு பிடித்தேன்.  அசந்து விட்டேன். அவர் எழுத்துக்களை விருட்சத்தில் கொண்டு வரலாமா என்று கூடத் தோன்றியது. அவர் எழுத்துக்களைப் படிக்கும்போது எல்லாவற்றையும் அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டு போகிற தன்மை தெரிந்தது.


புத்தக என்னுரையில் அவர் இப்படி எழுதுகிறார். இசை விமர்சகர்களைப் பற்றி ஒரு குறும்பு வாசம் உண்டு.  பாடத் தெரிந்தவன் பாடுகிறான்.  பாடத் தெரியாதவன் விமர்சகனாகிறான்.  இன்றைய இன்டர்நெட் உலகில் அதைச் சற்று மாற்றிச் சொல்கிறார்கள் எழுதத் தெரிந்தவன் எழுதுகிறான்.  எழுதத் தெரியாதவன் பிளாக்கைத் துவங்கித் தானே எழுதி, தானே பிரசுரித்துக் கொள்கிறான்.(தானே பாராட்டிக்கொள்ளவும் செய்கிறான்).


அவரும் கடுகு தாளிப்பு என்ற பெயரில் ஒரு பிளாக்கைத் துவங்கி இந்த மூன்றையும் இல்லை இல்லை முதல் இரண்டைச் செய்து வந்து கொண்டிருக்கிறார். 


கடுகு மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இந்தப் புத்தகத்திலிருந்து இரண்டு கட்டுரைகளை உடனே படித்துவிட்டேன்.  ஒன்று பாரதி ராஜாவைப் பற்றியது. இன்னொன்று ஆர்.கே நாராயணன் பற்றியது. 


இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு இன்னும் எழுதலாமென்று நினைக்கிறேன்.

இன்னும் ஒரு கவிதை




அழகியசிங்கர்

“ சூரியனுக்குப் பின் பக்கம் என்ற ஞானக்கூத்தன் கவிதையைப்பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். உடனே நண்பர் ஸ்ரீதரிடமிருந்து (சிரித்த முகமுடைய நண்பர்) ஒரு தொலைப்பேசி வந்தது. மிளகாய்ப் பழங்கள் மாடியில் என்ற கவிதையைப் பற்றிக் குறிப்பிட்டார்.  கடைசி இரண்டு வரிகளில் என்ன சொல்ல வருகிறார் என்று கேட்டார்.
நானும் படித்துப் பார்த்தேன். கவிதை புரிவதுபோல் இருக்கிறது.  ஆனால் கடைசி இரண்டு வரிகளில் என்ன சொல்கிறார் கவிஞர் என்று தெரியவில்லை.  
முதலில் ஒரு கேள்வி எழுகிறது.  அணில் மிளகாய்ப் பழத்தைத் தீண்டுமா? என்ற கேள்வி.  மிளகாய்ப் பழம் வைத்து வேற எதுவோ ஞானக்கூத்தன் சொல்கிறாரா? இதையெல்லாம் மீறி ஞானக்கூத்தன் கவிதையில் ஒரு வசீகரம் தென்படுகிறது.

கவிதையை இங்கே கொடுக்கிறேன்.  நீங்களும் படித்துவிட்டு உங்களுக்குப் புரிகிறதா என்று கூறுங்கள்.
1982ல் இந்தக் கவிதை எழுதப்பட்டது.


மிளகாய்ப் பழங்கள் மாடியில்

மிளகாய்ப் பழங்கள் மாடியில் உலர்ந்தன ஆசை மிகுந்து அணிலொன்று வந்தது பழங்களில் ஒன்றைப் பற்றி இழுத்து கடித்துக் கடித்துப் பார்த்துத் திகைத்தது முதுகுக் கோடுகள் விரல்களாய் மாறித் தடுத்திழுத்து நிறுத்திய போதும் ஒவ்வொன்றாகக் கடித்துத் திகைக்க உலவைப் பழங்கள் எங்கும் சிதறின ஜன்னலை விட்டுத் திரும்பினேன் எது நடந்தாலும் கதிருக்குக் கீழென்று

ஞானக்கூத்தன் உண்மையில் என்ன சொல்ல வருகிறார்

அழகியசிங்கர்

ஞானக்கூத்தன் ‘சூரியனுக்குப் பின்பக்கம்’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.  இதை யாராவது படித்திருக்கிறார்களா என்று தெரியாது. அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  தெரியாது.

இந்தக் கவிதை ‘தீபம்’ இதழில் 1974 ஆம் ஆண்டு பிரசுரமானது. இதைப் பற்றி ஒரு கதை உண்டு.  ‘சூரியனுக்குப் பின் பக்கம்’ என்ற தலைப்பில் ஞானக்கூத்தன் ‘ழ’ வெளியீடாக ஒரு கவிதைப் புத்தகம் கொண்டு வந்தார்.

அந்தப் புத்தகத்தில் இந்தக் கவிதை இல்லை.  டிசம்பர் 1998ல் ஞானக்கூத்தன் கவிதைகள் புத்தகம் விருட்சம் வெளியீடாகக் கொண்டு வரும்போது, ‘சூரியனுக்குப் பின் பக்கம்’ கவிதையைச் சேர்க்க வேண்டுமென்று ஞானக்கூத்தன் குறிப்பிட்டார்.

‘ழ’ வெளியீடாக நீங்கள் கொண்டு வந்த ‘சூரியனுக்குப் பின்பக்கம் ‘கவிதைப் புத்தகத்தில் இந்தக் கவிதை இல்லையா?’ என்று கேட்டேன்.

‘இல்லை,’ என்றார்.

‘எந்த ஆண்டு எந்தப் பத்திரிகையில் இந்தக் கவிதை வந்தது?’ என்று கேட்டேன்.

‘1974ஆம் ஆண்டு தீபம் பத்திரிகையில் வந்தது/’ என்றார்.

நா.பார்த்தசாரதியின் வீடு என் வீட்டிற்குப் பக்கத்திலிருந்தது.  அங்கே போனேன்.  நா.பாவின் வீடு ஒரு அடுக்ககமாக மாறி இருந்தது.

அவர் புதல்வரை 1974 ஆம்  ஆண்டு தீபம் இதழ்களைக் கேட்டேன்.  அவர் கொண்டு வந்து கொடுத்தார்.  அங்கே இருந்தவாறு தாள்களில் ஞானக்கூத்தனின் விட்டுப் போன கவிதைகளை எழுதினேன்.  சூரியனுக்குப் பின் பக்கம் அதில் ஒரு கவிதை.

நான் எழுதிக்கொண்டு வராவிட்டால் எல்லாம் விட்டுப் போயிருக்கும்.  ஞானக்கூத்தனும் தானாகவே அங்கே சென்று போய் எழுதிக்கொண்டு வந்திருக்க மாட்டார்.

‘சூரியனுக்குப் பின்பக்கம்’ ஒரு வினோதமான கவிதை.  ஞானக்கூத்தனால் மட்டும்தான் அப்படி எழுத முடியும். இதோ நீங்களும் அந்தக் கவிதையை இங்கே வாசியுங்கள்.

சூரியனுக்குப் பின்பக்கம்

யாரைப் பார்க்க உனக்காசை? 

என்றால் உடனே 

நான் சொல்வேன்: 

அனைத்தும் வல்ல இராட்சதரை.

எதனால் என்றால் 

அவரில் சிலரைக்

கனாப் பொழுதில் நான் கண்டேன்.

அவர்கள் தொகையால் 

எண்ணற்று

ஒன்றாய்க் கூடி

சூரியனைப் பாறைகொண்டு தூளாக்கிக் 

கையால் இழுக்கும் வண்டிகளில் 

அடுக்கிக் கொண்டு சென்றார்கள்

எதற்காம் இந்தப் பாளங்கள் என்றேன் 

சொன்னான் ஓரரக்கன்: 

இன்றைக் கெங்கள் உணவுக்கு.

உடம்பும் பொலிவும் ஒரு சேரச் 

சோரும் அந்தச் சூரியனை 

அள்ளிக் கொண்டு பலர் சென்றார் 

நெல்லைத் தூக்கும் எறும்பைப் போல்.

யாரைப் பார்க்க உனக்காசை? 

என்றால் சொல்வேன்: 

இராட்சதரை 

எதனால் என்றால் சூரியனை

யார் இடித்தார் உணவுக்கு? 

தினமும் காலையில் இந்தக் கவிதையை ஒருமுறையாவது படித்துவிடுவேன்.  சூரியனையே உணவாக எடுத்துக்கொண்டு செல்லும் இராட்சதரை நினைத்துப் பார்க்கிறேன்.  அதுவும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துக்கொண்டு போகிறார்களாம். நெல்லைத் தூக்கும் எறும்பைப் போல தூக்கிக் கொண்டு போகிறார்களாம்.

உண்மையில் எதைக் குறிப்பிடுகிறது இந்தக் கவிதை?  சூரியனை உண்மையில் யாராவது நெருங்க முடியுமா?  அதுவும் உணவாக அதைப் பிளந்து எடுத்துக் கொண்டு போக முடியுமா?

ஞானக்கூத்தன் உண்மையில் என்ன சொல்ல வருகிறார்.

என்னவென்று சொல்வது?..

அழகியசிங்கர்



நேற்று விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டம் சூமில் நடத்தினேன்.  எனக்குத் திருப்தியாக இல்லை.  நேற்று கவிதை வாசித்தவர்களை தனித்தனியாகக் கூப்பிட்டு இன்னொரு முறை வாசிக்க வைக்கவேண்டுமென்று நினைக்கிறேன்.
இன்னும் எனக்கு சூம் கூட்டம் நடத்துகிற அனுபவம் போதவில்லை.  ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சூம் கூட்டம் கவிதை வாசிக்கும் கூட்டமாக நடத்த உத்தேசம். எனக்கு அறிமுகமான கவிஞர்களையெல்லாம்  கூப்பிட்டு வாசிக்கச் சொல்லப் போகிறேன்..
ஒவ்வொரு வாரமும் 4 கவிஞர்களைக் கூப்பிட்டுக் கவிதை வாசிக்கச் சொல்லலாமென்று நினைக்கிறேன்.  ஒரு வாரம் மரபுக் கவிதைகள் எழுதுபவர்களைக் கூப்பிடலாமென்று நினைக்கிறேன் (அப்படி என்னதான் எழுத முடிகிறது அவர்களால்?)  அதேபோல் ஐகூ வாசிப்பவர்களை.
நான் 32 வருடமாக விருட்சம் நடத்தி வருகிறேன்.  கவிஞர்கள்தான் பெரும்பாலும் அறிமுகம் எனக்கு.  தேங்கிவிட்ட கவிதைப் புத்தகங்களை என்ன செய்வது என்று எனக்கு எப்போதும் தெரியாது?  கவலைப் படுவதுமில்லை. பேப்பர் கடைகளிலும் போடுவதில்லை.
வரும் வெள்ளிக்கிழமை 4 பெண் கவிஞர்களைக் கவிதை வாசிக்க அழைக்கலாமென்று நினைக்கிறேன்.  கூட்டத்தை 40 நிமிடங்களில் முடித்துவிடலாமென்று நினைக்கிறேன்  ஒவ்வொருவருக்கும் கவிதை வாசிக்க 9 நிமிடங்கள்.  கவிஞர்களை நானே அறிமுகப் படுத்தலாமென்று நினைக்கிறேன். எல்லாக் கவிஞர்களையும் முறை வைத்து கவிதை வாசிக்கக் கூப்பிட உள்ளேன். யாரையும் தவிர்க்கும் எண்ணமில்லை.
ஏற்கனவே கவிதைக்கணம் என்ற அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்த நடத்திய  அனுபவம் எனக்குண்டு.  சிபிச்சல்வன், லதா ராமகிருஷ்ணன், பூமா ஈஸ்வர மூர்த்தி, நான் என்றெல்லாம்  கூடி நடத்தியிருக்கிறோம்  மூத்தக் கவிஞர்களுக்குப் பரிசு கொடுத்திருக்கிறோம். 
திரும்பவும் இப்போது ஆரம்பித்திருக்கிறேன்.  எல்லோரும் இந்த சூம் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த எளியோனுக்கு ஆதரவு தர வேண்டுகிறேன்.
இந்த விஷயத்தில் உங்கள் அறிவுரைகளையும் ஏற்க விரும்புகிறேன்.

நவீன விருட்சம் 112வது இதழ் வெளிவந்துவிட்டது

.

அழகியசிங்கர்

112வது இதழ் அச்சிற்கு அனுப்புமுன் கொரோனா பிரச்சினை. அச்சில் இனி கொண்டு வர முடியாது என்று தோன்றியது.  அந்த இதழை அமேசான் கின்டஙூல் அனுப்பி விட்டேன்.  அதன் பின் எல்லாம் சரியானவுடன் திரும்பவும் அச்சிற்கு அனுப்பி விருட்சம் 112வது இதழை இப்போது கொண்டு வந்துவிட்டேன்.  

கடந்த 32 ஆண்டுகளாக விருட்சம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.  

தற்போது 177பேர்களை ஆனந்தவிகடன் வேலையிலிருந்து நீக்கி விட்டது. மேலும் ஆங்கில ஹிந்து பத்திரிகையிலும் பலரை வேலையிலிருந்து நீக்கப் போவதாகக் கேள்விப்படுகிறேன்.  தமிழ் ஹிந்துவில் பலருக்குச் சம்பளம் குறைவாகக் கொடுக்கப் பட்டிருப்பதாக அறிகிறேன். 

ஆனால் விருட்சத்திற்கு எந்த ஆட்குறைப்புமில்லை.  மயிலாடுதுறைக்கு விருட்சம் நிர்வாகி மாற்றல் ஆகி பத்துவருடம் பித்துப்பிடித்த நிலையிலிருந்தபோதும், அமெரிக்காவில் சில மாதங்கள் இருந்தபோதும் விருட்சம் கலங்கியதே இல்லை.  தொடர்ந்து வந்து கொண்டிருக்கிற இலக்கியப் பத்திரிகை  

நாளையிலிருந்து விருட்சம் 112வது இதழைத் தபாலில் அனுப்ப உள்ளேன்.  

கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்




அழகியசிங்கர்

கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகளை மலையாள மொழியி லிருந்து மொழிபெயர்த்தவர்.  சிற்பி அவர்கள்.  மலையாளத்தில் மட்டுமல்லாது இந்தியக் கவிதை இலக்கியத்திலும் ஓர் அபூர்வமான குரல் கே.ஜி.சங்கரப்பிள்ளையின் குரல்.  
அவர் கவிதைகளைக் குறித்து டாக்டர் பி.கே ராஜசேகரன் சங்கரப்பிள்ளை கவிதைகள் குறித்து இப்படிக் கூறுகிறார்.
உருவத்திலும் மொழியிலும் நமக்குப் பழக்கமில்லாத பாதைகளில் நடந்து தன்னைத் தானே புதுமைப்படுத்திக்கொள்ளும் கவிதை இது.  வடிவாக்கத்திலும், படிம நிர்மாணத்திலும் கவனம் செலுத்தியவாறு, தினசரி வாழ்வின் புறச் சூழல்களிலிருந்து வரலாற்றையும், பண்பாட்டின் நுண்வெளிகளையும் சங்கரப்பிள்ளை கவிதை உற்று நோக்குகிறது. 
73 கவிதைகளின் தொகுப்பைச் சிற்பி மொழிபெயர்த்துள்ளார்.  சாகித்திய அகாதெமி வெளியீடாக இத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
இத் தொகுப்பில் நான் பல கவிதைகளை ரசிக்க முடிந்தது.  1959ஆம் ஆண்டிலிருந்து 1996ஆம் ஆண்டு வரை எழுதியுள்ள கவிதைகளை இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
இக் கவிதைத் தொகுதியை 3 பாகங்களாகப் பிரித்துள்ளார்கள்.  பெரும்பாலான கவிதைகள் நீளமாக எழுதப்பட்டிருக்கின்றன.  சிறிய கவிதையாக இருந்தாலும் பெரிய கவிதையாக இருந்தாலும் கவிதையில் பிடிமானம் தெரிகிறது.  கவிதைத் தன்னை மீறிப் போய்விடுவதில்லை.  சில கவிதைகளை உதாரணமாகத் தரலாமென்று நினைக்கிறேன்.
இதோ ‘பல்லி வால்’ என்ற கவிதையைப் பார்ப்போம்.

பல்லி வால்
பல்லியின் அறுந்துவிழுந்த வால் அமைதியாகத் திரும்பிப் பார்த்தது 
அதோ இருக்கிறது என் பல்லி எதுவும் நடந்த உணர்வே இல்லை உதிர்ந்த பூவை விட்டுச் சென்ற கொடிபோலே கண்ணீர்த்துளியை விட்டுச் சென்ற கவிதைபோலே அதோ இருக்கிறது என் பல்லி
 *இழந்ததை எண்ணி எந்தத்துக்கமும் இல்லாமல் அறிஞரில் அறிஞனாய்* – அதோ இருக்கிறது என் பல்லி 
எவருடனும் பழிவாங்கும் நோக்கின்றி ஒரு புதிய பிரதிக்ஞை ஏதும் இல்லாமல் புகழ் பெற்ற உயர்ந்த ஒன்றை இழந்த துயரமும் இல்ல அதோ இருக்கிறது என் பல்லி பின்பக்கம் தன்னைவிடப் பெரிய நிழலுடன் அதோ இருக்கிறது என் பல்லி ஒரு புதிய இணைக்கோ இரைக்கோ துணைக்கோ காத்திருக்கிறது அதோ என் பல்லி

‘பல்லி வால்’ என்ற தலைப்பில் வேடிக்கையாய் கவிதையை எழுதியிருக்கிறார்.  வாலை இழந்து விட்ட  பல்லியை  உதிர்ந்த பூவை விட்டுச் சென்ற கொடிபோல என்கிறார் மேலும் கண்ணீர்த்துளியை விட்டுச் சென்ற கவிதைபோலே என்கிறார்.  பின் பக்கம் தன்னைவிடப் பெரிய நிழலுடன் என்கிறார் 
கவிதையைக் கச்சிதமான வடிவத்தில் முடித்திருக்கிறார்.  வளவளவென்று எழுதவில்லை.  பெரும்பாலும் இன்றைய கவிஞர்கள் சொல்வதற்கு மேலேயே சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஒரு கவிதையை எப்படி முடிப்பதென்று தெரியாது.  இத் தொகுப்பில் பெரும்பாலும் நீளமான கவிதைகள்.  கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டுதான் நீளமான கவிதைகளை நிதானமாக வாசிக்க வேண்டும்.  உதாரணமாக: ‘மரம்’ என்ற தொகுப்பில் ஆரம்பத்தில் எழுதப்பட்ட ஒரு நீளமான கவிதையில் இப்படி ஆரம்பிக்கிறது ஆரம்ப வரிகள் : 
தாரகை சூழ்ந்த இருளைப் போல பூக்கள் நிரம்பிய ஒரு பெருமரம் உண்டு என் சோக இருட்டு மனதில்
பெருமரத்தைப் பற்றி ஒரு நீளமான கவிதை.  நீளமான கவிதையைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குப் படிக்கும் டெம்போ குறைந்து போக வாய்ப்பிருக்கிறது.  ஆனால் இவர் கவிதையில் அப்படித் தெரியவில்லை.  பெரும்பாலும் நீளமான கவிதைகள் இருப்பதால் படிப்பதற்குச் சற்றும் சோர்வு அளிக்கவில்லை.  
‘மழை’

மழை பெய்கிறதுமத்தளம் கொட்டுகிறது மழை பெய்கிறதுகால் சட்டை முற்றத்தில் சேலை முற்றத்தில் சட்டை முற்றத்தில் மழை பெய்கிறது மழை பெய்கிறது பெய்கிறது பெய்கிறது 
தாத்தாவின் முற்றத்தில்கண் கண்ணாடி முற்றத்தில் பாரத முற்றத்தில் கோவண முற்றத்தில் மழை பெய்கிறது மழை பெய்கிறது பெய்கிறது பெய்கிறது பெய்கிறது பெய்கிறது 
நானும் முற்றத்தில் வீடும் முற்றத்தில் நாடும் முற்றத்தில் மழை பெய்கிறது மழை மழை மழை மழை மழை ழ ழ ழ ழ ழ ழ ழ
மேலே குறிப்பிடப்பட்ட கவிதை மழையைப் பற்றி புதுமையாக இருக்கிறது.  நம் உடலில் வழியும் மழையை முற்றத்தில் என்று குறிப்பிடுகிறார்.  தாத்தாவின் முற்றத்தில், கண் கண்ணாடி முற்றத்தில்.  அப்படி கூறப்படுவது புதுமையாக இருக்கிறது.  

இன்னும் எத்தனையோ கவிதைகளைக் குறிப்பிடலாம்.  பொதுவாக கவிதைப் புத்தகங்களை வாங்குவதில்லை.  ஒருவர் வாங்கி வைத்துக்கொள்ள விரும்பினால் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.  216 பக்கங்கள் கொண்ட கே.ஜி சங்கரப்பிள்ளை கவிதைகளின் விலை ரூ.125தான்.  

இன்னும் எத்தனையோ கவிதைகளைக் குறிப்பிடலாம்.  பொதுவாகக் கவிதைப் புத்தகங்களை வாங்குவதில்லை.  ஒருவர் வாங்கி வைத்துக் கொள்ள விரும்பினால் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.  216 பக்கங்கள் கொண்ட கே.ஜி சங்கரப் பிள்ளை கவிதைகளின் விலை ரூ.125தான்.  
கடைசியாக ஒரு கவிதையை மட்டும் குறிப்பிட்டு இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.
காக்கை
மலை இருக்கிறது மலையாக” மலைக்கு மேலே மாமரம் நிற்குது மாமரமாக மாவின் நிழலில் மேயும் மாடு மாடாக மாவின் கண்ணில் காக்கைக் கொத்திட மா அலையுது மாடாக மலையின் வாலில் காக்கை கொத்திட“ மலை அசையுது மாடாக.