அஞ்சலட்டைக் கதைகள் 21

21.07.2020

அழகியசிங்கர்

இது என் 21வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது இரண்டரை நிமிடங்களுக்குள் முடிந்து விடுகிறது.

ஏன் இப்படி? 

அந்த இடம் அமைதியாக இருந்தது.  கேட்டிலிருந்து  ஆசிரமத்தைப் பார்க்கும்போது அமைதி என்றால் அப்படியொரு அமைதி.  அங்கு எல்லோரும் சந்திக்கும் பெரிய கூடத்தில் ஒருவர் நுழைந்து பார்த்தால் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருப்பது தெரியும்.  எல்லோரும் மெதுவாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அங்கு அமைதி கெடுவதுபோல் தோன்றுகிறது.
ஜீவன் முக்தர் மெதுவாக நடந்து வருகிறார்.  வயது அதிகமாக இருப்பதால் அவருடைய தள்ளாட்டம் தெரிகிறது. அவர் உள்ளே நுழைந்தவுடன், எல்லோரும் பேசுவதை நிறுத்தி விடுகிறார்கள்.  அவர் மெதுவாக அவருக்குப் போடப்பட்டுள்ள மேடையில் அமர்ந்து கொள்கிறார்.  எல்லோரும் எழுந்து நின்று நமஸ்காரம் செய்கிறார்கள்.
கூட்டம் முழுவதையும் ஒரு நிமிடம் நோட்டம் விடுகிறார். பின் கண்ணை மூடி தியானம் செய்கிறார்.  கூட்டம் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறது.
சில நிமிடங்களில் கூடத்தின் வாசலில் சலசலப்பு கேட்கிறது. ஒரு பெண் தலைவிரி கோலமாய் உள்ளே நுழைகிறாள்.  அவள் கையில் ஒரு குழந்தை இருக்கிறது.  அவள் அழுதபடியே வருகிறாள்.   நேராக ஜீவன் முக்தர் முன் போய் நிற்கிறாள்.  எல்லோரும் அவளைத் தடுக்க முயல்கிறார்கள்.  கண்ணை மூடிக்கொண்டிருந்த ஜீவன் முக்தர், சலசலப்பைக் கேட்டு கண்ணைத் திறந்து பார்த்து, அவள் என்ன சொல்ல விரும்புகிறாள் என்று நினைக்கிறார்.
அவள் நேரிடையாக ஜீவன் முக்தர் முன் குழந்தையை அவர் பார்வையில் பட வைக்கிறாள்.  
“சாமீ, என் உயிருக்குயிரான குழந்தை.  இப்போ செத்துப் போச்சு.. நீங்கதான் எப்படியாவது உயிர் கொடுக்க வேண்டும்,” என்கிறாள்.
ஜீவன் முக்தர் திகைக்கிறார்.  என்ன சொல்வதென்று அவருக்குத் தெரியவில்லை.  அங்கிருக்கும் கூட்டம்  குழந்தையைத் தூக்கிக்கொண்டு போகச் சொல்கிறார்கள்.
ஜீவன் முக்தர் எல்லோரையும் அமைதிப் படுத்துகிறார்.  அந்தப் பெண்மணியைப் பார்த்து, “குழந்தையைப் பக்கத்து அறையில் வைத்துவிட்டு மாலை வரும்வரை காத்துக் கொண்டிரு.” என்கிறார்
அந்தப் பெண்மணியும் பக்கத்து அறைக்கு எடுத்துக்கொண்டு போய்  குழந்தையை ஒரு கட்டிலில் வைக்கிறாள். குழந்தைக்கு எப்படியாவது உயிர் வந்து விடவேண்டுமென்று கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
நேரம் ஆக ஆக அவளுடைய புலம்பல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகிறது.  
மாலை நேரம் வருகிறது.  குழந்தையை எடுத்துக் கொண்டு செல்லலாம் என்ற எண்ணத்தில் ஜீவன் முக்தர் முன் வந்து நிற்கிறாள். 
“உனக்குப் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.  என்னிடம் எந்தச் சக்தியும் இல்லை.  இறந்த குழந்தை இறந்ததுதான். கடவுள் வந்தாலும் பிழைக்க வைக்க முடியாது.  நீ பேசாமல் குழந்தையை எடுத்துக்கொண்டு போ,” என்கிறார்.
அவள் ஒன்றும் சொல்லாமல் குழந்தையை எடுத்துக்கொண்டு போகிறாள். இப்போது அவள் அழவில்லை.

தாவோ தே ஜிங் 3 (சாரமும் விசாரமும் : மொழி பெயர்ப்பு சந்தியா நடராஜன்)


அழகியசிங்கர்

திரும்பவும் சந்திக்கிறார்கள்.  தாவோ தே ஜிங் குறித்து உரை நிகழ்த்துகிறார்கள்.  

ஜெகன் : இதைக் கல்லூரியில் பாடப் புத்தகமாக வைத்து பாடம் நடத்தினால் ஓரளவு புரியும்.


மோகினி : இந்தப் புத்தகத்தின் பெயர் தாவோ தே ஜிங்.  அதில் தே என்பதற்குத் தனி விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கிறது.  தே என்பது ஒழுக்கம் அல்லது நற்பண்புகள் என்று பொருள் கொள்ளப்படும் என்கிறார். இருப்பினும் தே சற்று வித்தியாசமானது.  சுயமாக உருவாகும். தன்னளவில் உறுதி காட்டும்.  இனிய பண்பு அது என்கிறார்.   54வது பாடல் இப்படி மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.  அந்தப் பாடலின்  ஒரு பகுதியைச் சொல்ல விரும்புகிறேன்.
தே (ஒழுக்கம்) உனது வாழ்வில் நிலைபெறட்டும். நீ உண்மையானவன் ஆவாய் தே உனது குடும்பத்தில் நிலை பெறட்டும் உனது குடும்பம் செழிக்கும் தே உனது நாட்டில் நிலைபெறட்டும் உனது நாடு வலம் கொழிக்கும் தே பிரபஞ்சத்தில் நிலை பெறட்டும் பிரபஞ்சம் இசையமைக்கும் எனவே உன்னைப் போல் பிறரைக் காண்.. இப்படிப் போகிறது இந்த பாடலின் மொழிபெயர்ப்புஇங்கு தே என்று குறிப்பிடுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.


அழகியசிங்கர் : நான் ஒரு இடத்தில் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு  திகைத்து விட்டேன்.


ஜெகன் : எந்த இடம்?


அழகிய சிங்கர்:   இன்றைய எழுத்தாளர்கள் நிலையைப் பற்றி அதில் குறிப்பிடுகிறார்.  நூலாசிரியர் 56வது பாடலுக்கு விளக்கம் தருகிறார்.  அதை இங்கு உங்களிடம் வாசிக்க விரும்புகிறேன்.
தாவோவில் நிலை பெற்று விட்டால், எவற்றாலும் கவரப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள் (எழுத்தாளர்கள் என்று நான் சேர்த்திருக்கிறேன்). தன்னை அங்கீகரிக்கவில்லை என்று புலம்பவும் மாட்டார்கள்.  தன் மீது விழும் வெளிச்சத்தில் மகிழ்வதில்லை.  இப்படி சொல்லிக் கொண்டே போகிறார்.  இறுதியில் நமது காலத்தின் மிகப் பெரிய நோய் அங்கீகாரத்திற்கும் அடையாளத்திற்கும் ஏங்கித் தவித்து மன இறுக்கத்தில் அவதியுறுவதுதான்.
நேர் பேச்சில் இந்த நூலாசிரியருடன் நான் பேசிக்கொண்டிருக்கும் போது இதை அடிக்கடி சொல்வார்.  அப்போது தாவோவே  இவரிடம் புகுந்துகொண்டு நேரில் சொல்வது போல் இருக்கும்.  இதை  உணர வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது.


ஜெகன் : அறுபதாவது பாடலைப் பாடும்போது  ஒரு விரிந்த பரந்த நாட்டை ஆள்வது என்பது ஒரு சின்னமீனை வறுத்துச் சமைப்பது போல என்கிறார்.  கொஞ்சம் அதிக சூடேறினால் சின்ன மீன் கருகி விடும். 


லாவோ ட்சு என்ன சொல்கிறார் என்றால் சின்ன மீனை இதமாக வறுத்துச் சமைப்பது போல ஒரு பரந்த நாட்டைப் பராமரிக்க வேண்டும் என்று.
மோகினி : 49வது பாடலுக்கும் விளக்கம் அளித்திருக்கிறார் ஆசிரியர்.  அதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.


தாவோ தே ஜிங் நூலில் தாவோ என்பதற்கு வழி என்று பொருள்.  தே எனில் ஒழுக்கம்.  ஒழுக்கம் என்பது தன்னலமின்மை என்பதைக் குறிக்கும். இந்த இடத்தில் பாரதியாரிடமிருந்து உதாரணத்தைக் கொடுக்கிறார்.  தன் செயல் எண்ணித் தவிப்பது தீர வேண்டும் என்று பராசக்தியிடம் பாரதி வைத்த பிரார்த்தனையை முன் வைக்கிறார்.
தன்னிலமின்மை என்பது செயலின் போக்கில் இயற்கையாக இயல்பாக அமைவது அதுவே தே என்கிறார்.  
தாவோயிசத்தில் ஆழ்ந்த ஞானிகளுக்குக் கெட்டவர்களும் நல்லவர்களே.  ஞானிகள் பேதமற்றவர்கள். 
தனக்காக அன்றிப் பிறர்க்காக வாழும் வாழ்க்கையைத் தனது தவமாக அல்ல, இயல்பாகக் கொள்கின்றன தாவோவில் இசைவு கொண்ட உயிர்கள். பிறருக்காக வாழும் வாழ்க்கையை முன்மொழிகிறது தாவோ. 


இந்த இடத்தில் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் இது சாத்தியம் என்கிறார். 


அழகியசிங்கர்: 80வது பாடலை எடுத்துக் கொள்ளுங்கள்.


உலக நாடுகளுக்கு அறிவுறுத்துகிறார்.  அவரவர் இடத்தில் மகிழ்ச்சியுடன் வாழும்படி குறிப்பிடுகிறார். பக்கத்து நாட்டை எட்டிப் பார்க்கவும் இவர்கள் பிரியப்படுவதில்லை என்கிறார். 


ஜெகன் : இந்தக் கொரோன  காலத்தில் அவரவர் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும்படி கொல்கிறாரா?


அழகியசிங்கர் : அப்படித்தான் நினைக்கிறேன்.   இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதி முடிக்கும்போது ஒரு இடத்தில் 53வது பாடல் ஒன்று பட்டது. அதன் கருத்தைக் கூறும்போது நூலாசிரியர் இப்படிக் கூறுகிறார்.  
லாவோட்சுவின் நூல் ஓர் அரசியல் நூல்.  தாவோ தே ஜிங் தனிமனித அறத்தையும் சமூக நலனையும் ஆய்வு செய்கிறது.  இந்த 53ஆவது பாடல் நாடும் வீடும் நலம் பெற எழுந்த சிந்தனை. 
செல்வம் ஓரிடத்தில் குவிந்தால் அது ஆபத்தின் அறிகுறி.  அது சமநிலைச் சமுதாயத்திற்கு எதிரான போக்கு.
எல்லாவற்றிலும் சமநிலையை விரும்பும் விரும்பும் லாவோட்சு சமூகத்திலும் அதைத்தானே விரும்புவார்.

இன்று காமராஜர் பிறந்தநாள்…

அழகியசிங்கர்

காமராஜ் 1903ஆம் தேதி ஜøலை 15ஆம் தேதி பிறந்தவர்.  1953ல் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். அவருடைய காலத்தில் முக்கியமான இரண்டை செயல்படுத்தினார். ஒன்று இலவச கல்வி மற்றும் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியவர்.  எளிமையான மனிதர்.   ஊழல் செய்யத் தெரியாத முதலமைச்சரில் அவரும் ஒருவர்.  இன்னொருவர் அண்ணா. 


அவர் ஒருமுறை மேற்கு மாம்பலத்தில் மேல் கூரை இல்லாத காரில் வந்து கொண்டிருக்கும்போது  கூட்டம் அவரைப் பார்க்கத் துரத்திக்கொண்டு வந்தது.  நானும் கூட்டத்தோடு கூட்டமாக ஓடினேன்.  ஆனால் அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை.  பின் பக்கம்தான் பார்க்க முடிந்தது.


திநகரில் அவருடைய வீட்டைப் பார்க்கும்போதெல்லாம் அது ஒரு கோயில் என்று தோன்றும்.    ஸ்டெல்லா புரூஸ் குடும்பத்திற்கு அவர் நெருங்கிய நண்பர்.  ஒரு முறை விருதுநகரில்   உள்ள அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.  திருமணமே செய்துகொள்ளாமல் இருந்த ஸ்டெல்லா புரூஸ÷ற்கு அறிவுரை கூறும்படி காமராஜரைக் கேட்டுக்கொண்டாராம் ஸ்டெல்லா புரூஸ் தந்தை.  


அதேபோல் காமராஜ் திருமணம் செய்துகொள்ளும்படி அவருடைய அம்மா ஸ்டெல்லா புரூஸ் அப்பாவிடம் கேட்டுக் கொண்டாராம்.  காமராஜரைப் பார்த்து அவர் அப்பா பேசும்போது காமாரஜிடம் அவர் திருமணம் பற்றி ஒரு முறைகூட கேட்டதில்லையாம்.


திருமணம் பற்றி ஒரு முறை கூட காமராஜிடம்  தெரிவிக்காமலிருந்தது.  காமராஜ÷ற்கு ஒரு முறை அவர் அம்மா மூலம் தெரியவந்ததாம்.தேச ப்பணிக்காக   திருமண வாழ்க்கையில் தன்னைப் பொருத்திக்கொள்ளப் போவதில்லை என்ற காமராஜின் கொள்கையில் மிகப் பெரிய மரியாதையும் ஒப்புதலும் இருந்ததால் காமராஜிடம் அவருடைய திருமணம் பற்றி பேசவில்லையாம் ஸ்டெல்லா புரூஸின் அப்பா. 


தேர்தல் நடந்தபோது இராமலிங்கம் என்ற மாணவரிடம் தோல்வி அடைந்தது எவ்வளவு பெரிய  சோகம். 


தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த காமராஜர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காலமானார். காந்திஜி பிறந்த தினம் போது. 

மஞ்சேரி எஸ்.ஈச்வரனின் மைதிலி என்கிற சிறுகதை…

அழகியசிங்கர்

அபூர்வமாக சில புத்தகங்கள் என் கண்ணில் தட்டுப்படும். அப்படியொரு புத்தகம் என் கண்ணில் தட்டுப்பட்டது. அது  மஞ்சேரி எஸ்.ஈச்வரனின் எழுதிய ‘சிங்காரி’ என்ற சிறுகதைத் தொகுப்பு.  
இந்தப் புத்தகம் ஜøலை 1946ல் வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தைத் தயாரித்தது சக்தி காரியாலயம்.   மஞ்சேரி எஸ்.ஈச்வரனின்எல்லா கதைகளையும் ஆங்கிலத்தில்தான் எழுதி உள்ளார்.  அவர் கதைகளை  தி.ஜ.ர மொழி பெயர்த்துள்ளார்.
அவர் கதைகளை மொழிபெயர்த்த விபரத்தை இங்குக் குறிப்பிடுகிறார்.
ஈச்வரனின் ஆங்கிலம், ஆங்கிலேயர் பாராட்டும் ஆங்கிலம்.  தாம் ஆங்கிலத்தில் எழுதிய கதையை, ஈச்வரன் என்னிடம் ஒப்படைத்து விட்டுத் தம்பாட்டுக்குப் போவதில்லை.  என் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுவார்.  வரி வரியாக, வார்த்தை வார்த்தையாக, ஆங்கிலத்தில் தாம் இட்ட தமது உள்ள உணர்ச்சியும் கருத்தும் வேகமும் வரணமும் தமிழிலில் வந்தாலன்றி, என்னை அடுத்த வாக்கியத்துக்குப் போக விட மாட்டார்.  தமிழ்ச் சொற்களும் வாக்கிய அமைதியுமே என்னுடையவை.  ஆங்கில மூலத்தின் எதிரொலியை அவற்றிலே எழுப்பியவன் நண்பர் ஈஸ்வர்தான். உண்மையிலே மொழியைப் பெயர்த்த பொறுப்பு மட்டிலுமே என்னுடையது.  கதைகளின் தமிழ் உருவப் பொறுப்பு, அவரையே சாரும். 
ஈச்வரனின் சிறுகதைகள் பெரும்பாலானவற்றிலும், பல சம்பவங்களே இருப்பதில்லை – அசாதாரண நிகழ்ச்சிகள் தான் சம்பவங்கள் என்றால், அவருடைய கதைகளில் சம்பவமில்லை என்று குறிப்பிடுகிறார் தி.ஜ.ர.
மைதிலி  என்ற கதை ஒரு இடத்திலிருந்து வீடு காலி செய்து வேற வீடு செல்கிறார்.  அந்த வீடு திருவல்லிக்கேணியில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஒரு அற்புதமான கதையாக மாற்றி உள்ளார். இது சாதாரண நிகழ்ச்சி.  இந்த நிகழ்ச்சியை ஹாஸ்ய உணர்வுடன் எழுதி உள்ளார்.  இந்தக் கதையைப் படிப்பவர்கள் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்து விடுவார்.
அவர் குடிபோகும் வீட்டைப் பற்றி இப்படி வர்ணிக்கிறார்.  நவாப் காலத்தில் நிர்மாணமான ஒரு பழைய கட்டிடத்தின் கொல்லை கட்டு என்கிறார்.
திருவல்லிக்கேணிக்குக் குடி வருகிறார்.  திருவல்லிக்கேணியை வர்ணிக்கிறார்.
‘கொசு உபத்திரவமும், நடுத்தர வகுப்பாரின்; ஜம்பமும் நிறைந்தது திருவல்லிக்கேணி; என்றாலும் அதனிடத்திலே எனக்கோர் அலாதி அபிமானம்.  ஏனென்றால் ஐம்பது வருஷங்களுக்கு முன், என் தகப்பனார் வழியைச் சேர்ந்த உறவினர் ஒருவர், கிராமத்தை விட்டு, திருவல்லிக்கேணியில் தான் வந்து குடியேறினார்.  பின்னால் வேறு சிலரும் அவரைப் பின்பற்றி வந்து, அங்கங்கே இடம் பிடித்துக் கொண்டார்கள்.  என்றாலும், அவர்கள் சம்பாதித்த பூஸ்திதிகளையும் பணங் காசுகளையும் சேமித்து, ஸ்தாபிதம் செய்து கொள்ளவில்லை.  செய்திருந்தார்களானால், பல்லவ ராஜ பரம்பரையைவிட, அவர்கள் வம்சம் நீடித்திருந்திருக்கும்.  பணங்காசு சேர்ப்பதிலேதான் மட்டம்.  பூர்ணாயுளாவது உண்டா? முப்பது வயதுக்குள்ளே, அத்தனை பேரும் மாண்டு விட்டார்கள்.  நான் மட்டும் அந்தக் குடும்ப கண்டத்திலிருந்து சொற்பக் காய்ச்சலோடு தப்பித்துக் கொண்டேன்…
மனைவியைப் பற்றி வர்ணிக்கிறார் :
என் மனைவி அவ்வளவு கெட்டிக்காரியல்ல.  கெட்டிக்காரத்தனம் அதிகமாய் இருப்பவளிடம், பெண்மையின் கவர்ச்சி போய் விடுகிறது.  கெட்டிக்காரப் பெண், தான் செய்வதே சரியென்று எப்போதும் சாதிப்பாள்.  பெண் இல்லாவிட்டால் புருஷன் வாழவே முடியாது என்பதுபோல் நடப்பாள்.  இந்தத் துர்க்குணத்தை நம்மால் சகிக்க முடியாது.
குடிபோகிற இடத்திற்குப் போவதற்கு கை வண்டியை ஏற்பாடு செய்கிறார்.  இரண்டு முறை கை வண்டி வரவேண்டுமென்று ஏற்பாடு செய்கிறார்.  முதல் முறை அவர் மனைவியும் குழந்தையும் போகிறார்கள். அப்போது வண்டியில் எடுத்துக்கொண்டு போகிற சாமான்களையும் இட்டு நிரப்பி அனுப்பி விடுகிறார்.
இரண்டாவது நடையில் எடுத்துக்கொண்டு போகும்போது இப்படி எழுதுகிறார் :
அவ்விதமே, இரண்டாவது நடையில் கைவண்டியுடன் நான் கடைசியாக வந்து கொண்டிருக்கிறேன்.  வீடு மாற்றும் பரபரப்பிலும் அவசரத்திலும், வண்டியில் எந்தச் சாமானை எப்படிப் போட்டு நிரப்பினேன் என்றே எனக்கு ஞாபகமில்லை.  ஆனால் நடு வழியிலே அதைத் தெரிந்து கொள்ள நேரிட்டது…
தெருவில் சாமான்கள் எடுத்துக்கொண்டு போகும் கை வண்டியைப் பார்த்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சிரித்துக் கொண்டிருப்பார்கள். ஏன் அப்படிச் சிரிக்கிறார்கள் என்று கதைசொல்லி அந்த வண்டியைப் பார்ப்பான்.  
குவிந்திருந்த  சாமான்களுக்கிடையே புகைபிடித்த மண் அடுப்பு இருக்கும்.  அது சாக்கடையாய் வாய் பிளந்து கொண்டிருக்கும்.  அதைப் பார்த்துத்தான் அவர்கள் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.
வண்டிக்கு முன்னே போய் மனைவியிடம் கோபித்துக் கொள்கிறான் கதைசொல்லி.  காரணமில்லாத கோபம். வெறிபிடித்தவன் மாதிரி நடந்து கொள்கிறான்.  பின் அவளைப் பார்த்தவுடன் சல்லாபமடைந்து கட்டி அணைத்துக் கொள்கிறான்..
அடுப்பில் வைத்த பால் தீய்ந்துபோன வாசனை.  அதை மோப்பம் பிடித்த பூனை ஒன்று வருகிறது.  அப்போதுதான் அதை அவள் கவனித்தாள்.  அவன் பிடியிலிருந்து விலக நினைக்கிறாள்.  அவன் இறுகப் பிடித்திருக்கிறான்.  பால் பொங்கினால் பொங்கட்டும்  என்கிறான். 
கைவண்டி சரசரவென்று சத்தமிட்டுக்கொண்டு வாசலிலே வந்து நின்றது.  வண்டிக்காரன் கூப்பிட்டவுடன்தான் சுய நினைவு வந்து பிரிந்து விலகி நிற்கிறார்கள்.
ஆனால் வீடு மாற்றின தினத்தன்று அவன் ஏன் அப்படி வெறிபிடித்தவன் போல் சீறினேன் என்று பின்னால் மைதிலி கண்டுகொள்ளவே இல்லை.  இப்படி முடிக்கிறார் கதாசிரியர்.  நல்ல வேளையாக அவள் கெட்டிக்காரியல்ல.  அவளுடைய உள்ளன்பே எனக்கு அளவில்லாச் செல்வமாகும். 
இந்தக் கதை ஒரு நிகழ்ச்சிதான்.  அந்த நிகழ்ச்சியை விவரிப்பதன் மூலம் சிறப்பாக எழுதிச்செல்கிறார்.  பல விஷயங்களைக் கொண்டு வருகிறார்.  ஒரு இடத்தில் வண்டி வரும்போது தெருவெல்லாம் தேனீக்களைப் போல் ஜனங்களின் நடமாட்டம் என்கிறார். எப்படி ஒரு சாதாரண நிகழ்ச்சி கதையாக மாற்ற முடிகிறது என்பதற்கு இந்தக் கதை ஓர் உதாரணம்.


https://www.blogger.com/blog/post/edit/8104708723803571741/3038798442288938095

ஜானகிராமனை கொண்டாடுவோம்….

அழகியசிங்கர்

இந்த ஆண்டு ஜானகிராமனின் நூற்றாண்டு.  அவரை  கதைகள்  சில படித்து விட்டு எழுதியிருக்கிறேன்.  சமீபத்தில் ‘ மரப்பசு நாவலைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
நான் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த ‘அம்மா வந்தாள்’ நாவலைப் பற்றியும் ‘மோக முள்’ நாவலைப் பற்றியும் ஒரு வாசகனாகப் படித்திருக்கிறேன் என்பதால் எதுவும் எழுதவில்லை.  அவருடைய நூற்றாண்டு முடிவதற்குள் அவருடைய நாவல்கள் எல்லாவற்றையும் படித்து விட்டு எழுத எண்ணம்.
நூறு பக்கங்கள் வரை ஒரு புத்தகம் கொண்டு வர எண்ணம்.  இப்போது  ‘கங்கா ஸ்நானம்’ என்ற கதையைப் பற்றி எழுதியதை இங்குத் தருகிறேன். 

1956ல் எழுதிய ‘கங்கா ஸ்நானம்’ என்ற கதையிலிருந்து 70 கதைகள் கொண்ட தொகுப்பைப் படிக்கும்போது, எனக்கு மலைப்பே ஏற்பட்டது.  முழு தொகுப்பை என்னால் படித்து முடிக்க முடியவில்லை.  ஆனால் 1000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் 200 பக்கங்களைத்தான் படிக்க முடிந்தது.
அத்தனைக் கதைகளிலும் அடிநாதமாக ஒரே ஒரு விஷயத்தைத் திரும்ப, ஜானகிராமன் சொல்லிக்கொண்டே போகிறார்.  மனித உறவுகளிடையில் உண்டாகும் üதுரோகம்ýதான் அவர் சிந்தனையில் பெரும் பங்கு வகித்துள்ளது.  அத் துரோகத்தை விதம்விதமாக விவரிப்பதில், பெரிய சாதனையாளராக உள்ளார்.  துரோகத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் கதைகள் எழுதினாலும், ஏமாற்றுபவர் ஏமாற்றப்பட்டவர் என்ற இரண்டு முனைகளில் ஏமாற்றப்பட்டவர் சாத்விகமான முறையில், துரோகத்தை ஏமாற்றத்தை எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாமல் ஏற்றுக்கொள்வது இவர் கதையின் உத்தி.   ஆனால் விதிவிலக்காக சில கதைகளில், ஏமாந்தவர், வேறுவிதமாகவும், ஆனால் பழி தீர்க்கப்பட்டது என்ற உணர்வு வெளியே தெரியவராமல், செயல்படவும் செய்கிறார்.
உதாரணமாக, 1956 ஆம் ஆண்டு எழுதிய  ‘கங்கா ஸ்நானம்” என்ற கதையில், துரைய்யாவை சின்னசாமி கங்கையில் சந்திக்கிறார்.  இதில் சின்னசாமி துரைய்யாவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்.  உண்மையில் சந்திப்பு நடக்கவில்லை.  துரைய்யா தங்கியிருக்கும் இடம் தெரிந்து, சந்திப்பு நிகழ்ந்துவிடக் கூடாதென்ற பதைப்பு சின்னசாமியிடம் ஏற்படுகிறது.  சின்னசாமி திருப்பித்தர வேண்டிய பணத்தைக் கொடுத்தும், கொடுக்கவில்லை என்று சாதித்தவர் துரையப்பா.  மேலும், பணத்தைப் பெற சின்னசாமி மீது கோர்ட்டில் வழக்குத் தொடுத்து பணத்தை வலுக்கட்டாயமாகப் பெற்று விடுகிறார்.  இது சின்னசாமி மனதில் ஏற்பட்டுள்ள மாறாத வடு.  அவமானம்.  இந்த üதுரைய்யப்பாýவை சந்திக்காமல், அவர்கள் இருந்த இடத்தை காலி செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது.  இக் கதையில் வெளிப்படுகிற துரோகத்திற்குத் தீர்வாக, சின்னசாமி மனைவி அளிக்கிறாள் தீர்ப்பு.
“அவன் பாவத்துக்கும் சேர்த்து முழுக்குப் போடுங்கோ,” என்பதுதான் தீர்ப்பு.
இக் கதையில் முரண்பாடாகத் தெரிவது துரைய்யாவின் பாத்திர அமைப்பு.  கதையில் முன் பகுதியில் துரையப்பாவைப் பற்றிப் பேசும்போது, இப்படி எழுதப்படுகிறது.  ‘துரையப்பா பெரிய மனுஷன்.  பெரிய மனுஷ்யன்தான் எவ்வளவு மரியாதை….விட்டுக் கொடுக்கிற தன்மை.  சாயங்காலம் சின்னசாமி பஸ்ஸிலிருந்து விளாஞ்சேரி முக்கில் இறங்கி வந்தபோது துரைய்யாவின் அன்னதானத்தைப் பற்றித்தான் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள்.  யார் எப்போதும் போனாலும் துரைய்யா வீட்டில் சாப்பாடு கிடைக்கும்.  ‘அன்னதாதா, அன்னதாதா’ என்று அவர் பெயர் ஜில்லா முழுவதும் சுற்றம் முழுவதும் முழங்கிக் கொண்டிருக்கும்.  எப்போது ரயிலில் போனாலும் அதைப்  பற்றிப் பேசுகிற ஒரு பிரயாணியாவது பார்க்க முடியும் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற துரைய்யா, இறுதியில் சின்னசாமியை ஏமாற்றுகிறார்.  இது மாதிரி பல கதாபாத்திர முரணைý கதைகளில் வெளிப்படுத்துகிறார் தி ஜானகிராமன்.  ‘வீடு’என்ற ஒரு கதை.  
இது சற்று நீளமான கதை.  குறுநாவல் என்று சொல்லலாம்.  ஜானகிராமன் நாவல்களைப் படித்த அனுபவத்தில், இக் கதை எப்படி ஆரம்பித்து எப்படி முடிக்கப் போகிறாரென்பது தெரிந்து விடுகிறது.  வாசகனை முதலில் அவர் வீடு விற்கத் தயாராக இருப்பதுபோல் காட்டுகிறார்.  ஆனால் கதை வீடு விற்பது பற்றையல்ல.  மகாதேவன் என்பவன் நயமாகப் பேசி டாக்டரின் கம்பவுண்டராகச் சேர்கிறான்.  காம்பவுண்டராக மட்டுமல்லாமல், அவர் வீட்டிற்கு எல்லா உதவிகளையும் செய்கிறான்.  அவன் உதவிகளைக் கொண்டு புளாங்கிதம் அடைகிறார் டாக்டர்.  ஆனால் அவர் மனைவியிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்கிறான்.  இதை அறிந்த டாக்டர், அவனை நையப் புடைத்து, உதைத்து அனுப்புவதற்குப் பதிலாகப் பூடகமாகத் துரத்தி விடுகிறார்.  அவர்களுடைய கள்ள உறவு வெளிப்படையாகத் தெரியும்படி வருகிறது.  டாக்டரின் மனைவி அவரை விட்டுப் போக விரும்புகிறாள்.  டாக்டரிடம், வீட்டையும், சாப்பிட எதாவது ஏற்பாடு செய்யும்படி கேட்கிறாள்.  டாக்டர் மறுத்து விடுகிறார்.  அவர் இருக்கும்வரை இந்த வீட்டில் இருக்க வேண்டுமென்று சொல்கிறார்.  வீட்டை விற்றுவிடுவதாகச் சொல்பவர், கடைசி வரை வீட்டை விற்காமலிருக்கிறார்.  இறுதியில் மகாதேவனுடைய சாவுடன் கதை முடிவடைகிறது.  இக் கதையில் மூவரும் ஒவ்வொரு விதத்தில் பழிவாங்கப் படுவதாகப் படுகிறது.  துரோகத்திற்கு எதிராகத் துரோகம் செயல்படுகிறது.  சங்கிலித் தொடர் மாதிரி துரோகம் எல்லோரையும் பிணைத்து விடுகிறது.  வெளிப்படையாக இல்லாமல், பூடகத்தன்மையுடன் கதையை எடுத்துச் செல்வதில் ஜானகிராமன் வெற்றி பெறுகிறார்.
ஜானகிராமன் எழுத்து நடை கு ப ராஜகோபாலனிடமிருந்து ஸ்வீகரித்த நடை.  கதை பாணியும் கு ப ராவைப் போல் பூடகத்தன்மை வாய்ந்தது.  ஜானகிராமன் குபாராவிற்குப் பிறகு வளர்ந்த ஒரு பெரிய எழுத்தாளர்.  பலவிதங்களில் சாதனைப் புரிந்தவர்.  இன்றைய படைப்பாளிகளுக்கு அவர் எழுத்து நடையின் மிடுக்கு இப்போது படிக்கும்போது கூட ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.  அவர் கதைகளில் எல்லாவற்றையும் வெளிப்படையாக எடுத்துப் போடுவதல்ல.  மனித உள்ளம் எப்படிச் செயல்படுகிறது என்பதுதான் அவருடைய ஆராய்ச்சி.  அதாவது, மனிதனின் ‘உள்முரணை’ வெளிப்படுத்துவதுதான் கதையின் வெற்றியாகக் கொண்டு வருகிறார்.
இன்று ஜானகிராமனின் வாசகராக இன்றும் பல எழுத்தாளர்கள் தோன்றி உள்ளார்கள்.  உதாரணமாகப் பாலகுமாரனைச் சொல்லலாம்.  ஜானகிராமனைப் படிக்கும்போது, ஒருவித உற்சாகம் ஏற்படுகிறது.  üஇவ்வளவு எழுதி இருக்கிறாரேý என்ற உற்சாகம்தான் அது.

நான் சந்தித்த ஆத்மாநாம்கள் :

ஆத்மாநாம் ஒன்று

ஞாநி வீட்டில் என்று நினைக்கிறேன்.  ‘இலக்கு’ என்ற கூட்டம் நடந்தது.  நான் எப்படி அங்குப் போனேன்? ஏன் கலந்து கொண்டேன் என்றெல்லாம் புரியவில்லை.  என் பக்கத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார்.  அவர்தான் ஆத்மாநாம் என்று எனக்குத் தெரியாது.  அவர் கையில் ‘ழ’ இதழ்.  அது எந்த இதழ் என்றெல்லாம் ஞாபகத்தில் இல்லை.  ஏனென்றால் ஆத்மாநாம் என்ற பெயர் அப்போது பிரபலமாகவில்லை.  ஆனால் எனக்கு அவரைப் பார்க்கும்போதும், அப்பத்திரிகையை அவர் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்போதும் ஏதோவிதமான பரிதாபமான உணர்வு ஏற்பட்டது.  ஏன் அந்த இளைஞரைக் குறித்து அது மாதிரியான உணர்வு ஏற்பட்டதென்று தெரியவில்லை.  எனக்கு இலக்கியக் கூட்டமும், கவிதையும் புரியாத தருணம் அது.  நான் முதன்முதலாகப் பேசாத ஆத்மாநாமை அப்படித்தான் சந்தித்தேன்.

ஆத்மாநாம் : இரண்டு

  ஒருமுறை எஸ்.வைத்தியநாதன் என்ற என் நண்பர், ஆத்மாநாமுடன், க்ரியாவுக்கு என்னை அழைத்துச் சென்றார்.  üழý வெளியீடு புத்தகங்களை வாங்கும்படி கோரினார்.  நானும் சரி என்றேன்.  க்ரியாவில் ‘ழ’ வெளியிட்ட எல்லாப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன்.  üழý புத்தகங்கள் எல்லாம் விலை குறைவாக இருந்தன. ஆத்மாநாமிடம் üகாகிதத்தில் ஒரு கோடுý என்ற அவர் புத்தகத்தை நீட்டி, கையெழுத்துப் போடும்படி கேட்டுக்கொண்டேன்.  அவர் என் பெயரை எழுதித் தேதியிட்டு கையெழுத்துப் போட்டார்.  பின், நான், அவர், வைத்தி மூவரும் சாந்தி தியேட்டர் பக்கத்திலுள்ள ஒரு ரெடிமேட் துணிக்கடைக்குச் சென்றோம்.  அங்கு சில துணிமணிகளைப் பார்த்தோம்.  பின் திரும்பி வந்துவிட்டோம்.  ஒன்றும் வாங்கவில்லை.  ஏன் அங்குச் சென்றோம்? ஏன் ஒன்றும் வாங்காமல் வந்தோமென்றெல்லாம் புரியவில்லை.  திரும்பவும் அங்கிருந்து கவிஞர் ஆனந்த் வீட்டிற்கு வந்தோம்.  ஆத்மாநாம் ஆனந்தை குடும்பத்தோடு தன் வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார்.  நாங்கள் அங்கிருந்து கிளம்பும்போது வழியில் ஆத்மாநாமின் நிஜமே நிஜமாகக் கவிதையைக் குறித்து விசாரித்தேன்.  இதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?  என்று ஆத்மாநாமைக் கேட்டேன்.  அவர் என்ன பதில் சொன்னார் என்பது ஞாபகத்தில் இல்லை.  இது நான் சந்தித்த இரண்டாவது ஆத்மாநாம். 

ஆத்மாநாம் மூன்று

இந்த முறை ஞாநியின் திருமண அறிவிப்பு.  அது ஒரு நாடகத்துடன் தொடங்கியது.  மியூசியம் தியேட்டரில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.  நான் ஆத்மாநாம் பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.  நகுலனைப் பற்றி ஆத்மாநாமிடம் விசாரித்தேன்.  அவர் என்ன பதில் சொன்னார் என்பது ஞாபகத்தில் இல்லை.  ஆனால் அவர்  விமலாதித்த மாமல்லன் என்ற எழுத்தாளரைப் பார்க்க எழுந்து போய்விட்டார்.  மரியாதைக்கு என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. 
  இந்தச் சந்தர்ப்பத்திற்குப் பிறகு நான் ஆத்மாநாமைச் சந்திக்கவில்லை.

பாலகுமாரன் பிறந்த நாள் இன்று…

அழகியசிங்கர்

1946 ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர்.  முதலில் சிறுபத்திரிகை உலகத்தில் தன் காலடியைப் பதித்த பாலகுமாரன்.  வெற்றிகரமாகப் பிரபல எழுத்தாளராக மாறியதோடல்லாமல் 200க்கும் மேற்பட்ட நாவல்களும் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதி சாதித்தவர்.
ஆரம்ப ‘கசடதபற’ இதழ்களில் அவர் கவிதைகள்தான் எழுதி உள்ளார். 
அக்டோபர் 1970 ஆண்டு வெளிவந்த ‘கசடதபற’ இதழில்  ‘மனித பாவங்கள்’ என்ற பெயரில் கவிதை எழுதியிருக்கிறார்.
அவர் பிறந்தநாள் போது அவர் கவிதையை வாசிக்க அளிக்கிறேன்.


மனித பாவங்கள்


இரட்டைத் தடங்களில்”

எதிர்ப் பட்ட ரயில்கள்

ஒன்றை ஒன்று கண்டதும்

கண் சிமிட்டிக் கொண்டன

பொறி பறந்தது

நெருங்கி வந்ததும்

வந்தனம் கூறின

குழ லொலித்தது

பிரிந்து போகையில்

இகழ்ச்சி  நிரைத்து

எச்சில் துப்பின

என் முகத்தில் கரி அடித்தது-

தடங்களைக் கடக்கையில் தெரிந்தது

ரயில்களின் சினேகிதம் கண்டு

கட்டைகள் குலுங்கிச் சிரிப்பது.


நான் ஒவ்வொரு மாதமும் இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் சுப்ரமணிய ராஜ÷வையும், பால குமாரனையும் பார்ப்பேன்.  அக் கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர்களும் எதாவது ரகளை செய்ய வருவதுபோல் இருக்கும்.
ஞானக்கூத்தனை குருவாக மதித்தவர்.  பாலகுமாரனுடைய சில கவிதைகள் ஞானக்கூத்தன் சாயல் இருப்பதாகத் தோன்றும்.
ஞானக்கூத்தன் கவிதைகள் குறித்து ஒரு கூட்டம் நடந்தது.  அதில் பாலகுமாரன், சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்புச் செய்தார்கள்.
அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நாள் முழுக்க கை வலிக்க வலிக்க எழுதிக்கொண்டே இருக்க வேண்டுமென்று பால குமாரன் சொன்னதாக நினைப்பு எனக்கு.
அதன்பின் ஞானக்கூத்தன் மறைந்தபோது இரங்கல் கூட்டத்தில் உடல் சௌகரியமாக இல்லாவிட்டாலும் கலந்து கொண்டு பேசினார்.  இதெல்லாம் மறக்க முடியாத தருணங்கள்.
பாலகுமாரன் எழுத்தில் இரண்டு விதமான போக்கைக் கண்டு பிடிக்க முடியும்.  யோகி ராம் சூரத் குமாரைச் சந்திக்குமுன் உள்ள எழுத்து, சந்தித்தபின் ஏற்பட்ட எழுத்து மாற்றம்.
நல்ல பெயரை திரைத்துறை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.   அதை ஒரு தருணத்தில் விட்டு விலகியும் விட்டார். 
ஒரு முறை நான் வண்டியில் போய்க் கொண்டிருந்தேன்.  பாலகுமாரனிடமிருந்து ஒரு போன் வந்தது.  
‘என்ன?’ என்று கேட்டேன்
‘என் வீட்டிற்கு வர முடியுமா?  உங்கள் நவீன விருட்சத்திற்கு நன்கொடை தர வேண்டும்’, என்றார்.
நான் எதிர்பார்க்காத ஆச்சரியம்.  அவர் வீட்டிற்குச் சென்றேன்.  அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.  அவருடைய அறையைக் கோயில் மாதிரி மாற்றி இருந்தார்.  ஒரு தொகையை நன்கொடையாகக் கொடுத்தார்.  நான் சற்றும் எதிர்பார்க்காத தொகை அது. 
‘யோகி ராம் சூரத் குமார்தான் கொடுக்கச் சொன்னார்..கொடுக்கிறேன்,’  என்றார்.   


கேளுங்கள் கேளுங்கள் கவிதை வாசிப்பதை

அழகியசிங்கர்

கடந்த ஒரு மாதமாகக் கவிதை வாசிக்கும் கூட்டத்தை நடத்தி வருகிறேன்.  இந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது என்று யோசிக்கிறேன்.  நான் கல்லூரியில்  படிக்கும்போதுதான் கவிதை எழுத ஆரம்பித்தது அப்போதுதான். மக்கள் தலைவர் ஜீவா அவர்களின் புதல்வர் என்னுடன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்.  அவர் பெயர் இப்போது ஞாபகம் வரவில்லை.  
அவர் ஒரு முறை கடற்கரையில் நடக்கும் ஒரு கவிதைக் கூட்டத்திற்கு என்னை அழைத்துப் போனார்.   கடற்கரையில் அப்போது பொன்னடியான் நடத்தும் கவிதை வாசிக்கும் கூட்டம்.  மாதம் ஒருமுறை அக்கூட்டம் கூடும். 


கவிதை வாசிக்க வருபவர்கள் வட்டமாக அமர்ந்து கொண்டு கவிதை வாசிப்பார்கள். 

ஒவ்வொருவரும் எப்போது  தம் கவிதையை வாசிப்பது என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.
ஆரம்பத்தில் கலந்து கொண்ட நான், பின் நாட்களில் போவதை நிறுத்திக்கொண்டேன்.  டிவியில் அவர்கள் வாசிப்பதைப் படம் பிடிக்கிறார்கள் என்றால் அன்று கூட்டம் அதிகமாக இருக்கும். 


             அதன்பின் சில இலக்கிய நண்பர்களுடன் ஏற்பட்ட நட்பால் கவிதை வாசிப்பது மௌனமாகத்தான் வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் உடையவனாக இருந்தேன்.
ஆனால் உண்மையில் யாருமே கவிதைகளை வாசிப்பதில்லை.  மௌனமாகக் கூட.  நாம் எழுதும் கவிதைகளையே சத்தம் போட்டு வாசித்துப் பழக  வேண்டும்.   அப்போதுதான் நம் கவிதையில் எதாவது தப்பு செய்கிறோமா என்று தெரியும்.  


இப்போது கவிதை எழுதும் இளைஞர்களின் கவிதைகளை நாம் பார்ப்பது கூட கிடையாது.  ரசிப்பதும் கிடையாது.  நயமாக எழுதியிருக்கிறார்களா என்பதும் தெரிவதும் கிடையாது.


சமீபத்தில் நடந்த புத்தகக் காட்சியில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பல கவிஞர்கள் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார்கள். ஆரம்பத்தில்  கூட்டம் அதிகமாக இருந்தது.  ஆனால் ஒவ்வொருவரும் கவிதை வாசிக்க வாசிக்கக் கூட்டம் குறைந்துகொண்டே வந்தது.  கடைசியில் ஏற்பாடு செய்த ஒருவரும் கவிதை வாசிக்கக் காத்திருந்தவர் ஒருத்தர்தான் இருந்தார்கள்.  


யாரும் மற்ற கவிஞர்கள் வாசிக்கும் கவிதைகளைக் கேட்கப் பொறுமையுமில்லை.  அக்கறையுமில்லை. 


சூம் கூட்டம் ஆரம்பித்தபோது எனக்குக் கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்த வேண்டுமென்று தோன்றியது.  அந்த முயற்சியில்தான் கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்துகிறேன்.  கிட்டத்தட்ட 34 கவிஞர்கள் 100க்கும் மேற்பட்ட கவிதைகளைக் கடந்த ஒரு மாதமாகக் கேட்டிருக்கிறோம்.  


இப்போது எழுதும் இளைஞர்கள் தாமாகவே முன்வந்து அவர்களுடைய கவிதைகளை வாசிக்க வர வேண்டும்.


கவிதை வாசிப்பதில் நாம் எப்படி ஆர்வமாக இருக்கிறோமோ அதேபோல் கவிதையைக் காது கொடுத்துக் கேட்கவும் தயாராக இருக்க வேண்டும்.  இன்னும் கேட்டால் கவிதையை வாசிப்பதைவிடக் கேட்பதில் முக்கியத்துவம் தரவேண்டும்.  பலதரப்பட்ட கவிஞர்களின் கவிதைகளைக் கேட்கும்போது பலவிதமான குரல்களைக் கேட்கிறேன்.  எதை வேண்டுமானாலும் கவிதைப் பொருளாக எடுத்துக்கொண்டு கவிதை வாசிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.


இன்னும் தோண்டத் தோண்ட பலரிடமிருந்து அற்புதமான கவிதைகள் வருமென்று தோன்றுகிறது.  ஏற்கனவே கவிதை வாசித்த சிலர் அடுத்த  கூட்டத்திற்கு வருவதில்லை.  கவிதை மீது அக்கறை இருந்தால் கேட்க வேண்டுமென்று நினைப்பார்கள்

தி.ஜானகிராமன். படைப்புகள்

அழகியசிங்கர்

 எப்போது ஜானகிராமனைப் படிக்க ஆரம்பித்தேன்?  இப்போது ஞாபகத்தில் வரவில்லை.  மற்ற நாவல்களைப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஜானகிராமன் பெயரையும் கேள்விப்பட்டுப் படிக்க ஆரம்பித்தேன்.  
                அவருடைய ‘அம்மா வந்தாள்’ நாவலைத்தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன்.  எந்த ஆண்டு? ஞாபகமில்லை.  ஆனால் ஜானகிராமனுடன் கூட இன்னும் சில நாவலாசிரியர்களின் நாவல்கள் ஏனோ என்னைக் கவரவில்லை.  தனிப்பட்ட முறையில் இலக்கிய ஆசிரியர்களின் நாவல்களைப் படிக்கத் தொடங்கியபோது, ஜானகிராமனும் அதிலிருந்தார்.  கிட்டத்தட்டத் தமிழில் இலக்கிய நாவல்கள் பல வெளிவந்துள்ளன.  அப்படி ஒவ்வொன்றாகத் தேடிப் படிக்கும்போது ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள’, ‘மரப்பசு’ நாவல்களையும் படித்தேன்.  
                பின்பு ‘மோகமுள்’ என்ற நாவலையும் படித்தேன்.  ஜானகிராமன் நாவல்களில் பெண் பாத்திரங்கள் படும்பாட்டை நினைத்துப் பார்த்ததுண்டு.  பொதுவாக அவருடைய நாவல்களில் ‘அடல்டிரி’ விஷயம் முக்கியமாகக் கையாளப்படுகிறது.  ‘அம்மா வந்தாள்’ நாவலில் பூடகமாகவும், ‘மரப்பசுவில்’ பகிரங்கமாகவும் வெளிப்படுகிறது.  
             பிறகு அவருக்கு எழுதுவது என்பது கைவந்தகலையாக இருக்கிறது.  ஆண் பெண் உறவுமுறையில் உள்ள ஒழுங்கின்மையையும், முரண்பாட்டையும் சுவாரசியமான முறையில் எழுதி உள்ளார்.  நாவல் மட்டுமல்லாமல், சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள் என்று இலக்கியத்தில், பல தளங்களில் செயல்பட்டவர் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது.
     ஜானகிராமனைப் படிக்கும்போது, இங்கு கு.ப.ராவையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.  ஆண் – பெண் உறவின் அதீதப் போக்கை முரண்பாட்டை கு.ப.ரா சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்திக் காட்டியவர். எளிமையான நடையில், பூடகமாக எழுதுவது அவருடைய கலை.  அதே பாணியை ஜானகிரமான் ஸ்வீகரித்துக் கொண்டவர்.  குறைந்த வயதிலேயே கு ப ரா மறைந்து விட்டார்.  அவர் இல்லாத குறையைப் போக்கியவர் ஜானகிராமன்.  
              ஜானகிராமனின் எல்லை நீண்டு, சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள், என்றெல்லாம் போய்விட்டது.  
அவர் நாவல்களை மட்டும் படித்துப் பழக்கப்பட்ட எனக்கு, அவர் சிறுகதைகளைப் படிக்க ஏனோ அப்போது தோன்றவில்லை.  அதனால் அவர் சிறுகதைகளை முதலில் படிக்க ஆரம்பிக்கவில்லை.  இப்போதுதான் அவர் சிறுகதைகளைப் படிக்க வேண்டுமென்று தோன்றியது.                                                                                                                                                                 (இன்னும் வரும்)

ஒரு கொலை அனுபவம் என்கிற புதுமைப்பித்தன் கதை

அழகியசிங்கர்

இன்று புதுமைப்பித்தனின் நினைவு நாள்.  எதாவது ஒரு கதையைப் படித்துவிட்டு எதாவது எழுத முயற்சி செய்ய வேண்டுமென்று தோன்றியது.
பக்கம் குறைவாக உள்ள கதையாக எடுத்துக்கொள்ளலாமென்று பட்டது. 


புதுமைப்பித்தன் 97 கதைகள் எழுதி உள்ளார்.  ஜøன் 30ல் மரணம் அடைந்தார்.  1948ஆம் ஆண்டு.  
இங்கு எடுத்துக் கொண்டிருக்கும் கதையின் பெயர் ‘ஒரு கொலை அனுபவம்.’   ஊழியன் என்ற பத்திரிகையில் 22.02.1935ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.


சாதாரண ஒன்றரைப் பக்கம் கொண்ட கதையில் புதுமைப் பித்தன் நகைச்சுவை உணர்வுடன் இந்தக் கதையை எடுத்துக்கொண்டு போகிறார்.
கதைசொல்லி சொல்வதுபோல் இந்தக் கதை ஆரம்பமாகிறது. இது ஒரு தானே சொல்கிற கதை.  
இருட்டிலே ஒரு மனிதன் தள்ளாடிக் கொண்டு வருகிறான்.  ரோட்டில் ஒற்றை விளக்கு வெளிச்சம் மட்டும்தான் இருக்கிறது.  வருகிற மனிதன் விளக்கு இருக்கும் இரும்பு கம்பத்தில் ஏறி குறுக்கில் அமர்ந்து கொண்டு விடுகிறான்.  உட்கார்ந்து கொண்டு ‘ராஜாதி ராஜன்’ என்று பாடுகிறான். 

 
இப்போதுதான் அவன் முகத்தைக் கவனிக்கிறான் கதைசொல்லி.  ‘நான் தான அவன் இதென்ன வேடிக்கை’ என்கிறார் கதைசொல்லி.  விளக்கு கம்பத்தில் ஏறி உட்கார்ந்திருப்பவனைப் பார்த்தால் கதைசொல்லி முகம் போல் இருக்கிறது.  உடனே கதைசொல்லிக்குச் சந்தேகம் வருகிறது.  இரட்டை சகோதரன் மாதிரி இருக்கிறானே என்று.  உடனே கவலையும் ஏற்படுகிறது.  ‘எங்கே வந்து சொத்தில் உரிமை கேட்கப் போகிறானோ’ என்ற கவலைதான்.


விளக்கெல்லாம் அணைந்து விடுகிறது.  அந்த இருட்டில் பாதையின் திருப்பத்திலிருந்து இன்னொரு உருவம் வருகிறது.  ஏன் இப்படி நடக்கவேண்டும்?  அசாமியைப் பார்த்தால் பொம்மை மாதிரி இருக்கிறான்.  இதென்ன அதிசயம் அவனும் கதைசொல்லி போல் இருக்கிறான்.   ஒரே குழப்பமாகி விடுகிறது கதைசொல்லிக்கு.  ‘கம்பத்தின் மீதி ஏறி இருக்கும் ஆசாமியும் நான்தான்.  இப்போது வருகிறானே அவனும் நான்தான்,’ என்ற குழப்பம் கதைசொல்லிக்கு.


இந்த இடத்தில் பிரம்மாவைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.  பிரம்மாவிற்கு நான் சொத்து சுகம் வைத்துக்கொண்டிருப்பதில் பொறாமையா என்கிறார்.

இரண்டாவது ஆசாமி நெருங்கி வருகிறான்.  அவனுக்குத் தாடியும் மீசையும் இருக்கிறது.  அவனை உற்றுப் பார்க்கிறான் கதைசொல்லி.  சந்தேகமே இல்லை அவனும் நான்தான் என்கிறான் கதைசொல்லி. மூன்று பேரும் நான்தானா என்ற குழப்பம்.  எல்லாம் நானே என்ற முக்தியை அடைந்து விட்டேனா? 
தாடியுடைய என் கையில்  என்ன மின்னுகிறது? என்ற கேள்வி கதைசொல்லிக்கு ஏற்படுகிறது. கத்தி.
‘முன் செல்லும் எனக்குப் பின் இந்த இரண்டாவது நான் ஏன் பதுங்கிப் பதுங்கிச் செல்ல வேண்டும்?

முதல் நான் எங்கே?’
முதல் நான் குஷியாகக் கம்பத்தின் மீது பாட்டுப் பாடுகிறான்.
நெருங்கி விட்டான் இரண்டாவது நான்.
அய்யோ கொல்கிறானே
மூன்றும் கதைசொல்லியின் குரல்.  எல்லாம் இருள்.  ஒன்றையும் காணோம். 
விழிக்கிறான்.  பகலில் என்ன தூக்கம் என்று முதுகைத் தட்டிக்கொண்டிருந்தான் நண்பன்.  கனவு.  ஏன் இதுமாதிரி கனவு வருகிறது.  துப்பறியும் நாவல் எழுத வேண்டுமென்று உள்ளத்தாசை. கதைசொல்லிக்கு.  இந்த இடத்தில் கதைசொல்லி புதுமைப் பித்தனாக மாறி விடுகிறானோ? தூக்குத் தண்டனை இல்லாமல் ஆட்களைக் கொல்ல வேண்டும். 

பிறகு துப்பறிவோனாகக் கண்டு பிடிக்க வேண்டும். அப்பப்பா? அந்தத் தொழில் நமக்கு வேண்டாம் என்கிறார் புதுமைப்பித்தன் என்கிற கதைசொல்லி
பொதுவாக கதைசொல்லி வேறு கதை எழுதுபவன் வேறு. பலருடைய கதைகளில் கதை சொல்லி ஒரு பெண்ணாகவோ ஆணாகவோ முதியவனாகவோ சிறுவனாகவோ இருக்கலாம்.  அவர்கள் எல்லாம் கதை எழுதுபவனோடு மாறுபட்டுத்தான் தெரிவார்கள்.    


 இந்தக் கதையில்

புதுமைப்பித்தனே கதைசொல்லியாக வந்து அவருடைய கனவைச் சொல்கிறார்.  துப்பறியும் கதை எழுதப் போவதில்லை என்று குறிப்பிடுகிறார்.  


எளிதான கதை.  ஒன்றரைப் பக்கக் கதை.  அதைச் சொல்லியிருக்கிற விதம் சிறப்பாக உள்ளது. இங்குதான் கதை எழுதும் விதத்தில் மேதாவித்தனம் தெரிகிறது.  புதுமைப்பித்தன் கதைகளில் எந்தக் கதையை எடுத்துப் படித்தாலும் நம்மால் ரசிக்க முடியும்.  அவருடைய தனித்திறமை எல்லாக் கதைகளிலும் வெளிப்படுகிறது.