நாளை வெள்ளிக்கிழமை அதாவது 25.09.2020 அன்று கூடுகிற கவிதைக்
கூட்டத்தில், கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் இணைந்து கவிதை வாசிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் அதிகமாகச் சேர்ந்துவிட்டால் ஒரே ஒரு கவிதை வாசிக்கும்படி நேரிடும்.
அரசியல் கவிதை, மதச்சார்பான கவிதை, நாத்திக கவிதை, ஆபாசமாக எழுதப்படுகிற கவிதை, கொரானா கவிதை, பற்றி கவிதையெல்லாம் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டம் நடக்கும் அன்று உங்கள் பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம்.
பாரதியைக் குறித்து சிறப்புரை ஆற்ற வருபவர் பதமா மோகன் அவர்கள். அவர் பேசப் போகிற தலைப்பு : மண் பயனுறு வேண்டும்.
எல்லோரும் வாருங்கள் கவிதை வாசிப்போம் இந்த முறை 6.30 மணிக்குக் கூட்டம்.
கொரானா நேரத்தில் நான் 112வது இதழ் நவீன விருட்சம் அச்சிட்டு
எல்லோருக்கும் அனுப்பியிருந்தேன். அதன்பின் 113வது இதழைத் தயாரித்தேன்.
முதலில் வோர்டில் தயாரித்ததால் சில சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. சரிசெய்து 113வது இதழை அச்சடிக்க வேண்டும்.
ஆனால் இப்போது 114வது இதழை எப்போதும் போல் பேஜ்மேக்கரில் தயாரித்து அச்சடித்து விட்டேன். பிஒடியாக அச்சடித்துள்ளேன். ஒரு இதழ் தாயாரிச்சும் செலவு ரூ.33. ஆனால் பத்திரிகையின் விலையோ ரூ.20 தான்.
இந்த இதழை முதலில் சந்தாதாரர்களுக்கு மட்டும் அனுப்புவதாக உள்ளேன். இன்னும் தேவையான பிரதிகளை அச்சடித்து விடுவேன்.
செலவு அதிகமாக இருந்தாலும் தேவையான பிரதிகளை அச்சடித்து நிறுத்தி விடலாம். சாதாரண ஆப்செட்டில் அடிக்க வேண்டுமானால் குறைந்தபட்ச 300 எண்ணிக்கையில் அடிக்க வேண்டும். இதழ் பிரதிகள் மீந்து போய்விடும்.
வழக்கம்போல இந்த இதழிலும் 5 கதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
பொதுவாக என்பெண், மனைவியெல்லாம் நவீன விருட்சம் இதழைப் பார்த்தால் படிக்க
மாட்டார்கள். படி, படி என்று கெஞ்ச வேண்டும். ஆனால் இந்த முறை
விதிவிலக்காக அவர்கள் படித்து விட்டார்கள்.
எல்லாக் கதைகளையும் என் பெண் படித்துவிட்டுப் பாராட்டினாள். இது என்னமோ பெரிய அதிசய நிகழ்ச்சி நடந்ததுபோல் தோன்றியது. வழக்கம்போல் சிறுபத்திரிகை என்றால் சில கதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள்.
ஆனால் கட்டுரைகள் பெரிதும் வருவதில்லை. ஒரு சிறுபத்திரிகையில்
எழுத்துதான் இருக்கும். ஒரு கதைக்குப் படம் வரைவதெல்லாம் கிடையாது.
அப்படித்தான் தயாரித்திருக்கிறேன் இந்த இதழை. 113வது இதழில் படங்கள்
சேர்த்ததால் சில டெக்னிக்கல் பிரச்சினை. கூடிய விரைவில் சரிசெய்து அதையும் சந்தாதாரர்களுக்கு அனுப்பி விடவேண்டுமென்று தோன்றுகிறது.
வழக்கம்போல் 5 சிறுகதைகள். இந்தக் கதைகளைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். இந்த இதழில் உறைபனி என்கிற வசந்த தீபன்
கதை சிறப்பாக உள்ளது. ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். மாறும் கணக்குகள்
என்கிற ஜெயஸ்ரீ கதை முதன் முறையாக விருட்சத்தில் கதை எழுதி உள்ளார்.
இன்னும் பலருடைய கதைகளை உரிய நேரத்தில் பிரசுரிக்க முடியவில்லை.
எல்லோரும் கதைகளை பத்து பக்கங்களுக்குக் குறைவில்லாமல் எழுதி
அனுப்புகிறார்கள். நான்குப் பக்கங்களுக்குள் கதையோ கட்டுரையோ வரவேண்டும்.
பலர் கவிதைகள் அனுப்புகிறவர்கள் ஒரே ஒரு கவிதைதான் ஒவ்வொருவரும் அனுப்ப
வேண்டும். அப்படி அனுப்பினால் அதிகமாகப் படைப்புகளைச் சேர்க்க முடியும்.
படைப்பை அனுப்புவர்கள் அந்தப் படைப்புகள் விருட்சத்தில் பிரசுரமாகும் வரை வேறு எங்கும் அனுப்பப் போவதில்லை என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பா.ராகவன், ஸிந்துஜா, தொடர்ந்து தஞ்சாவூர் கவிராயர் பேட்டிகளை வெளியிட்டிருக்கிறேன். மிலான் குந்தரா வின் ஒரு பேட்டியை வெளியிட்டிருக்கிறேன். அய்யப்பப் பணிக்கரின் மலையாளக் கவிதைகளை மொழிபெயர்த்திருப்பவர் தி.இரா மீனா அவர்கள்.
இதோ பத்திரிகையில் வெளிவந்த படைப்பாளிகளின் பட்டியல்.
1. பத்து கேள்விகள் – பத்து பதில்கள் – தஞ்சாவூர் கவிராயர் 2. செல்லத்தாயிக்குப் பேய் பிடித்துவிட்டது – சிறுகதை – சோ.சுப்புராஜ் 3. கறுப்பு அஞ்சல் அட்டைகள் (ஸ்வீடன் நாட்டுக் கவிஞர் டோமஸ் ட்ரான்ஸ்ட்ரோமெர்) 4. நேயம் – சிறுகதை – ஸிந்துஜா 5. கொரோனா கேட் – கவிதை – அழகியசிங்கர் 6. கதைக் கொலைகள் – கட்டுரை – கிருபானந்தன் 7. ஒரு கவிதை – அழகியசிங்கர் 8. மாறும் கணக்குகள் – சிறுகதை – ஜெயஸ்ரீ 9. 4 கவிதைகள் – பானுமதி ந 10. மலையாளக் கவிதைகள் – அய்யப்பப் பணிக்கர் 11. மிலான் குந்தரே – நேர்காணல் – ராம் முரளி 12. ஸ்..ஸ் சுரங்கம் 2 – சிறுகதை – சிறகு இரவிச்சந்திரன் 13. தீக்குளி – கவிதை – ந. பிச்சமூர்த்தி 14. உறைபனி – சிறுகதை – வசந்த தீபம் 15. நானும் பராசக்தியும் நலம் – சுப்பு 16. கவிதை வாசிக்கும் கூட்டங்கள் – கவிதை – அழகியசிங்கர் என்பது
பேரறிஞர் அண்ணா மரணம் அடைந்தபோது நான் பள்ளியில் படிக்கும் சிறுவன்.
அப்போது அண்ணா சமாதியைப் பார்க்கப் போவது மாணவர்களிடம் பெரிய ஆர்வம்
இருந்தது. நானும் என் கூட பள்ளிக்கூட நண்பர்களும் சேர்ந்து அண்ணா
சமாதியைப் பார்க்கச் சென்றோம்.
நான் சென்னை தங்கச்சாலையிலிருந்து நடந்தே அங்குச் சென்றேன். மாணவர்களுடன் சேர்ந்துகொண்டு. அண்ணா சமாதியைப் பார்த்தபிறகு, அங்குள்ள கடற்கரையில் விளையாடப் போனோம். மாணவர்கள் ஒருவருக்கொருவர் நீரை ஒருவர் மீது ஒருவர் வாரி அடித்தபடி விளையாடினோம்.
என் சட்டை முழுவதும் நனைந்து விட்டது. நான் சட்டையைக் கழட்டிப் பிழிய நினைத்தேன். ஒரு குறும்புக்கார
மாணவன் என் சட்டையைப் பிடுங்கி பந்து விளையாடுவதுபோல் மற்ற மாணவர்களுடன்
சேர்ந்து விளையாடினான். கடைசியில் என் சட்டை கடலில் போய் விட்டது.
நான் திரும்பும்போது சட்டை இல்லாமல் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். குறிப்பாகச் சட்டை இல்லாமல் இருப்பதைப் பார்த்து என்அம்மா என்னை திட்டுவாளோ என்று திகைத்தபடியே வந்து கொண்டிருந்தேன்.
நடந்து வரும் வழியில் ஒரு போலீஸ்காரரைப் பார்த்தேன். அவர் என்னைப் பக்கத்தில் வரும்படி கூப்பிட்டார். நான் நடுங்கி விட்டேன். போலீஸ்காரர் ஏன் கூப்பிடுகிறாரென்று.;
கிட்டே சென்றபிறகு, “ஏன் இவ்வளவு ஒல்லியா இருக்கே?”என்று கேட்டார்.
நான் அதற்கு என்ன பதில் சொல்வது. மௌனமாக இருந்தேன்.
“முட்டையெல்லாம் சாப்பிடு,” என்று அறிவுரை கூறி அனுப்பினார்.
அன்று வழக்கம்போல் வீட்டில் திட்டு விழுந்தது. அதன் பிறகு நான் இன்னொரு முறை அண்ணா சமாதியைப் பார்க்கப் போகவில்லை.
உலக தற்கொலை தினமாம் இன்று தற்கொலையைப் பற்றிப் பேசும்போது இரண்டு தற்கொலைகளை என்னால் மறக்க முடியாதது. ஒன்று ஆத்மாநாம். இரண்டு ஸ்டெல்லா புரூலு;. ஆத்மாநாம் தற்கொலை குறித்து நான் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.
ஆத்மாநாமிற்கு இரங்கல் கூட்டம் நடந்தபோது ஸ்டெல்லா புரூஸ் கலந்துகொள்ளவில்லை.
முதன்முறை ஆத்மாநாம் தற்கொலைக்கு முயற்சி செய்தபோது, ரொம்பவும் பாதிப்பு அடைந்தவர் ஸ்டெல்லா புரூஸ். அந்த நிகழச்சிக்குப் பிறகு அவர் தனியாக இருக்கப் பிடிக்காமல் அவருடைய சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளப் பல நாட்கள் ஆயின.
தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆத்மா சுற்றிக்கொண்டே இருக்குமென்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.
இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் ஆத்மாநாம் தற்கொலையைக் கண்டித்த ஸ்டெல்லா புரூúஸ தற்கொலை செய்து கொண்டு விட்டார். தற்கொலை எண்ணிக்கையைப் பார்க்கும்போது சென்னைதான் முதலிடம் வகுக்கிறது தற்கொலைக்கு.
இரங்கல் கூட்டத்தில் ஆத்மாநாம் தற்கொலையைப் பற்றிப் பேசிய ஒரு கவிஞர், தற்கொலைக்கு முன் அந்தக் கடைசி தருணத்தில் வேறு விதமாக அதிலிருந்து மீண்டு வந்து விடலாமென்று சொன்னார்.
மனைவியின் மரணம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் ஸ்டெல்லா புரூஸ். மனைவி இறந்து 6 மாதம் கழித்துதான்
தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் பிரிவுத் துயரை 6 மாதம் வரை
தாங்கியவர் இன்னும் சில மாதங்கள் கழித்திருந்தால் அவர் தற்கொலை
செய்துகொள்வதைத் தவிர்த்திருப்பார்.
இன்னும் கேட்டால் அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து வேற இடம் மாறிப் போயிருந்தால், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திலிருந்து விடுபட்டிருப்பார்.
ஆத்மாநாம் தற்கொலையாக இருந்தாலும் சரி, ஸ்டெல்லா புரூஸ் தற்கொலையாக இருந்தாலும் சரி தவிர்க்க வேண்டிய தற்கொலைகள். இதோ இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போதே எத்தனைப் பேர்கள் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டிருப்பார்களோ தெரியாது
வருகிற 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விருட்சம் சார்பில் சூம் மூலம் 16வது கவிதை வாசிக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. கவிதை வாசிக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், பாரதியை ஞாபகப்படுத்தும் விதமாக இந்த மாதம் முழுவதும் வெள்ளிக்கிழமை அன்று பாரதி அன்பர்கள் பாரதியைக் குறித்து உரை நிகழ்த்த உள்ளா கள் .
இந்த வாரம் உரை நிகழ்த்த இசைவு தந்துள்ளவர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் . ‘பாரதியைத் தூக்கிச் சுமந்த கல்கி’ என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்துகிறார்.
வழக்கம்போல் இந்த முறையும் கவிதை வாசிப்புக் கூட்டம் நடைபெறுகிறது.
இக் கூட்டத்திற்கு எல்லாக் கவிஞர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
ஒவ்வொருவரும் 2 நிமிடத்திற்குள் கவிதை வாசிக்க வேண்டும். நீளமான கவிதைகளைத் தவிர்க்க வேண்டும்.
எந்தத் தலைப்பிலும் கவிதை வாசிக்கலாம். சூம் கூட்டத்தில் நேரிடையாக உங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு கவிதையை வாசிக்கத் தொடங்கலாம்.
இதுவரை பங்கு பெற்றவர்கள் கலந்து கொள்ளும்போது வாசிக்காத கவிதையை வாசிக்கவும்.
கவிதையை வாசிக்கும்போது உச்சரிப்பைச் சரியாகக் கவனித்து உச்சரிக்கவும். அரசியல், மத சம்பந்தமான கவிதைகளை வாசிப்பதைத் தவிர்க்கவும். கவிதையில் ஆபாசத்தைத் தவிர்க்கவும்.
இது என் 19வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது இரண்டு நிமிடங்களுக்கு குறைவாக முடிந
இலக்கியக் கூட்டம்..
அழகியசிங்கருக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன். இன்னும் வரவில்லை அவர். ஆறு மணி கூட்டத்திற்கு நாலரை மணிக்குக் கிளம்பினால்தான் சரியாக இருக்கும்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமைதான் கூட்டம் நடைபெறுகிறது. சரியாக ஆறுமணிக்குக் கூட்டம் தொடங்கிவிட வேண்டும். நான் கார் எடுத்துக்கொண்டு அழகியசிங்கரை அழைத்துக்கொண்டு போவதாக சொல்லியிருந்தேன்.
அவர் போஸ்டல் காலனியிலிருந்து வர வேண்டும். ஐந்தே கால் மணிக்குத்தான் வந்தார். வந்தவுடனே அவசரம்.
அவசரம் அவசரமாகக் கிளம்பினோம். எல்லாம் எடுத்துக்கொண்டாயிற்றா என்று கேட்டேன் அழகியசிங்கரைப் பார்த்து. எடுத்துக் கொண்டாயிற்று என்றார் அழகியசிங்கர்.
கார் கதவைத் திறந்தவுடன் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
“என் பக்கத்தில் காரில் உட்கார உங்களுக்குப் பயமில்லையா?” என்று கேட்டேன்.
” இல்லை ” என்று பதில் அளித்தார்.
” என் மனைவி நம்ப மாட்டாள்.”
” நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் நன்றாகத்தான் ஓட்டுகிறீர்கள்.”
கார் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. அடையார் கேட் ஓட்டல் அருகில் வந்தபோது காரை நகர்த்தவே முடியவில்லை. கார் முன்னால் தொழிற்சங்க ஊர்வலம்.
“தெரியாமல் இந்தப் பக்க வழியில் ஓட்டிக்கொண்டு வந்து விட்டேன்.”
அழகியசிங்கரோ பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டார்.
“7 மணி ஆகிவிடும் போலிருக்கிறதே,” என்றார் பதட்டத்துடன்.
” எப்படியாவது போய் விடுகிறேன்,” என்றேன்.
ஒவ்வொரு நிமிடமும் பதட்டம் கூடிக்கொண்டே போயிற்று.
நாங்கள் ஒரு வழியாக மூகாம்பிகை காம்பளெக்ûஸ அடைந்து விட்டோம். நானோ அழகியசிங்கரோ
உரிய நேரத்தில் வரவில்லை என்றால் இன்னொரு இலக்கிய நண்பர் கூட்டத்தை நடத்தி
விடுவார். அவர் எப்போதும் சரியா நேரத்திற்கு வந்து விடுவார்.
கூட்டம் நடக்குமிடத்திற்கு ஙூப்டில் ஏறக் காத்துக்கொண்டிருந்தோம். ஆறாவது மாடி. லிப்ட்
கீழே இறங்கி வந்தது. அதில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லோரும்
இறங்கிக் கொண்டிருந்தார்கள். கூட்டம் முடிந்து விட்டது. நான் அழகியசிங்கரைப் பார்த்தேன். அவர் முகத்தில் அசடு வழிந்தது.
நவம்பர் மாதம் 2017ஆம் ஆண்டு நான் திடீரென்று அஞ்சல் அட்டைகளைத் தபால் நிலையத்தில் வாங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் கடிதங்கள் எழுத ஆரம்பித்தேன். எழுதிய கடிதங்களை என்ன எழுதினேன் என்பதைக் கணினியில் அடித்து வைத்திருந்தேன். பலருக்கு எழுதியதால் அவர்களும் பதில் எழுதினார்கள். அதற்கெல்லாம் நான் பதில் கடிதங்கள் எழுதி அதைத் திரும்பவும் கணினியில் பதிவு செய்து, ஒருநாள் முழுவதும் இப்படிப் பொழுது போயிற்று. என்னால் சமாளிக்க முடியவில்லை. பேசாமல் கடிதம் அனுப்புவதை நிறுத்தி விட்டேன். சிலர் என் அஞ்ச லட்டைக் கடிதங்களைப் பார்க்கிறார்களா என்பதே தெரியவில்லை. அவர்கள் யாரிடமிருந்தும் எந்தவிதப் பதிலும் வரவில்லை. சிலர் தபால் அலுவலகத்தில் போய் அஞ்சலட்டை வாங்க முடியவில்லை என்பார்கள். அவர்களுக்கு நான் அஞ்சலட்டைகளைக் கொடுப்பேன். உடனே பதில் எழுதட்டுமென்று. ஆனால் அப்படியும் அவர்களிடமிருந்து பதில் வராது. நான் எழுதும் இந்தக் கடிதங்களைத் தொகுத்துப் புத்தகமாகப் போடுமளவிற்குச் சேர்ந்து விட்டன. சில கடிதங்களை இங்கே குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். 8.11.2017 கடிதம் 1 வியாழன் சி லிங்குசாமி, வணக்கம். 28.02.2017 அன்று நீங்கள் அனுப்பியக் கடிதப்படி நாளை ‘சில கவிதைகள், சில கதைகள், சில கட்டுரைகள்’ புத்தகம் அனுப்பட்டுமா? நீங்கள் விபிபியில் வாங்கிக் கொள்வீர்களா? கடிதம் : 2 , அன்புள்ள சச்சிதானந்தம் அவர்களுக்கு, வணக்கம். தயவுசெய்து தேனுகா புத்தகத்தைத் திருப்பித் தரவும். நான் தெரியாமல் உங்களிடம் புத்தகம் கொடுத்துவிட்டேன். மன்னிக்கவும். இது விஷயமாக நானும் நடராஜனும் உங்கள் வீட்டிற்கு வருகிறோம். கடிதம் : 8 அன்புள்ள நட்ராஜிற்கு, (சந்தியா பதிப்பகம்) என்றும் 24 என் முப்பது ஆண்டு பதிப்பக அனுபவத்தில் நான் தெரிந்துகொண்டது, என்றும் 24. அதற்கும் கீழே அச்சடித்தால், அச்சு அடித்துக் கொடுப்பவருக்கு என்ன கிடைத்து விடப் போகிறது. அதனால் என்றும் 24. புத்தகங்களை அச்சடித்து வீட்டில் பத்திரமாக வைத்துக்கொள்ளத் தீர்மானித்துவிட்டேன். விற்பனையாளர்களுக்குப் புத்தகங்களை விற்கக் கொடுக்க விரும்பவில்லை. ஏற்கனவே கொடுத்த புத்தகங்களைத் திரும்பவும் பெற்றுக்கொள்ள யோசித்துக் கொண்டிருக்கிறேன். தினமும் கார்டில் கடிதம் எýழுதி என் கையெழுத்தைச் சரிசெய்ய விரும்புகிறேன். நீங்கள் எதுவும் எழுதவேண்டாம். ஆனால் கார்டு கிடைத்தது என்று தகவல் கொடுத்தால் போதும். கடற்கரையிடம் மட்டும் இதுமாதிரி நான் எழுதும் கார்டைக் காட்டாதீர்கள். யாராவது நான் எழுதும் இக் கடிதத்தைப் படித்துச் சிரித்தால் மொபெல் தொலைப்பேசியில் படம் பிடித்து அனுப்புங்கள். 29.01.2018 கடிதம் எண் : 32 அன்புள்ள டாக்டர் பாஸ்கரன் அவர்களுக்கு, வணக்கம். என் கதைகளைப் படித்துப் பாராட்டியதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதலில் ஒருவர் புத்தகம் வாங்குவதே கடினம். பின் அதை எடுத்துப் படிப்பது இன்னும் கடினம். படிப்பது மட்டுமல்லாமல் அப் புத்தகம் எழுதியவரை தொலைப்பேசியில் கூப்பிட்டுப் பாராட்டுவது இன்னும் இன்னும் கடினம். இதையெல்லாம் மீறிச் செயல்பட்ட உங்களுக்கு என் நன்றி. மேலும் என் புத்தகத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் தெரிவித்தால் அவர்கள் வேறு கதைகளைச் சொல்லி என் கதைகளைப் பற்றிய உங்கள் உயர்வான அபிப்பிராயத்தைக் கெடுத்து விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள். நான் கதைகளை எப்படி எழுதினேனோ நீங்கள் அதன் தன்மையைப் புரிந்துகொண்டு பாராட்டியது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நான் கூட்டம் நடத்துவதாக உள்ளேன். கட்டாயம் நீங்கள் கலந்துகொண்டு பேச வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இதுமாதிரி 112 பக்கங்கள் வரை கடிதங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன். அதெல்லாம் ஒரு புத்தகமாகக் கொண்டு வர யோசனை செய்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் கடிதங்கள் யாருக்கும் அனுப்புவதில்லை. ஏன் என்று தெரியவில்லை?
இது 14வது கவிதை வாசிக்கும் கூட்டம். வரும் வெள்ளியன்று – 28.08.2020 நடக்க உள்ளது.
புதுமையாக இந்த முறை 10வரிகள் கொண்ட கவிதைகளாகக்
கவிதை வாசிப்பதை ஏற்பாடு செய்துள்ளேன். பெங்களூர் இலக்கிய நண்பர்
கிருஷ்ணசாமி நகுலன் குறித்து அறிமுகம் செய்தபின் நகுலனின் சில கவிதைகளையும்
வாசிப்பார்.
கிருஷ்ணசாமி அவர்கள் ஒரு கவிஞர். சிறுகதை ஆசிரியர். கல்லூரியில் தமிழ் பயில்வுக்கும் பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். இதில் பலரும் கலந்து கொண்டு கவிதை வாசிக்க வேண்டும்.
ஒருவருக்கு ஒரு கவிதைதான் வாசிக்க வேண்டும். நிதானமாக இரண்டு முறை கவிதையைத் தெளிவாக உச்சரிக்க வேண்டும். பத்து வரி கவிதைக்குத் தலைப்பு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.
எந்த விதத்தில் ஒரு கவிதையை பத்து வரிக்குள் கொண்டு வர முடியுமென்பதைப் பார்க்கலாம்.
இதில் யாரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்கலாம். எந்த நிபந்தனையும் இல்லை.
வாசிக்கப்படும் சிறந்த கவிதைகளை நவீன விருட்சம் இதழில் வெளியிட விருப்பம்.
14வது கூட்டமாக வர வெள்ளிக்கிழமை விருட்சம் கவியரங்கம் கூட்டம் நடத்தப் போகிறேன். இக்கூட்டத்தை எழுத்தாளர் நகுலனுக்குச் சமர்ப்பிக்கப் போகிறோம். பெங்களூர் கிருஷ்ணசாமி நகுலனை நினைவு கூர்ந்து நகுலனின் கவிதைகள் சிலவற்றைப் படிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
கவியரங்கக் கூட்டத்தை ஒவ்வொரு விதமாய் நடத்த விருப்பம். எப்போதுமே கவிதை
என்பது உயிருள்ளதாக இருக்க வேண்டும். வாசிப்பதும் உயிர்ப்புடன் இருக்க
வேண்டும்.
கிட்டத்தட்ட 66 கவிஞர்கள் கவிதைகள்
வாசித்துள்ளார்கள். ஒவ்வொரு முறையும் இதை மாற்றி மாற்றி எதாவது செய்ய
வேண்டுமென்று நினைக்கிறேன்.
நம்முடைய பெரும்பாலான கவி அரங்கத்தில் டாபிக் கொடுத்து கவிதை எழுதச் சொல்கிறார்கள். அல்லது ஒரு மணி நேரம் முன்னதாக கவிதைத் தயாரித்து வாசிக்கச் சொல்வார்கள்.
இதெல்லாம் கவிதைகளாக வருவதை விட வீர வசனமாகத்தான் எனக்குப் படுகிறது.
தலைப்பில்லாமல் கவிதை எழுதுவதில் ஒரு குழப்பம் ஏற்படாமலிருப்பதில்லை.
அந்தக் கவிதையைக் குறிப்பிட வேண்டுமென்றால் எப்படிக் குறிப்பிடுவது?
இந்த முறை கவிதையை வாசிக்க ஒரு அளவுகோல் வைத்திருக்கிறேன். அதாவது பத்து
வரிகளில் கவிதை எழுதிக் கொண்டு வரவேண்டும். 9 வரிகளோ 11 வரிகளோ இருக்கக்
கூடாது. முன்பே கவிதை எழுதியிருந்தாலும் அதையும் படிக்கலாம். புதிதாக
எழுதி வாசிக்கலாம்.
நேரிடையாக சூம் கூட்டத்தில் வந்திருந்து கவிதை வாசிக்கப் பெயர் கொடுக்கலாம். ஒருவர் ஒரு கவிதைதான் வாசிக்க வேண்டும்.
கூட்டம் ஒன்றரை மணி நேரத்தில் முடித்து விடலாமென்று நினைக்கிறேன். உதாரணமாக என்னுடைய பத்து வரி கவிதையை இங்கு தர நினைக்கிறேன்.