நவீன விருட்சம் 100வது இதழ் குறித்து இன்னும் சில தகவல்கள்

 
 
நவீன விருட்சம் 100வது இதழுக்கான கூட்டம் ஒன்றை மேற்கு மாம்பலத்தில் உள்ள மகாதேவன் தெருவில் உள்ள காமாட்சி ஹாலில் ஏற்பாடு செய்து உள்ளேன்.  வரும் ஞாயிற்றுக்கிழமை 23.10.2016 அன்று மாலை 6 மணிக்கு.  இது குறித்து விபரங்கள் இன்னும் சில தினங்களில் அளிக்கிறேன்.
நவீன விருட்சம் 100ல் பங்குகொண்ட படைப்பாளிகளைப் பற்றியும் படைப்புகளைப் பற்றியும் கூடிய விபரத்ததை இங்கு தருகிறேன்.
1. பெருந்தேவி கவிதைகள்
2. கா ந கல்யாணசுந்தரம் – என் கிராமத்து சுமைதாங்கி கல்
3. வேல் கண்ணன் கவிதைகள்
4. மறதியின் பயன்கள் – ஞானக்கூத்தன்
5. தூரம் – சிறுகதை – ஜெயந்தி சங்கர்
6. பொன் தனசேகரன் கவிதைகள்
7. நடப்பியல் – நீல பத்மநாபன்
8. அம்ஷன் குமார் கட்டுரை
9. அகலிகைப் படலம் – போயோன்
10. தமிழவன் சிறுகதைத் தொகுதியைப் பற்றி விமர்சனம்
11. லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்
12. ரோஸ் ஆன்றா கவிதைகள்
13. தமிழவன் சிறுகதை – காந்தி லிபி
14. ராமலக்ஷ்மி கவிதைகள்
15. எஸ் சுதந்திரவல்லி கவிதைகள்
16. தொடாத பூ – ந பெரியசாமி
17. சௌந்திரத்தின் ரோஜாப் பூ – ஸிந்துஜா
18. பிரபு மயிலாடுதுறை கவிதைகள்
19. காந்தி வாழ்க்கை – கட்டுரை – பிரபு மயிலாடுதுறை
20. அழகியசிங்கர் கவிதைகள்
21. ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு – கவிதை
22. சாந்தி மாரியப்பன் கவிதை
23. வைதீஸ்வரனும் நானும் – அசோகமித்திரன்
24. வைக்கோல் கிராமம் – இலா முருகன்
25. தற்காலிகம் – கவிதை – சத்யானந்தன்
26. டபுள் டக்கர் – அழகியசிங்கர்
27. வரைதலும் பேசுதலும் – அ மலைச்சாமி
28. ரசிகன் – ந கிருஷ்ணமூர்த்தி
29. பிரதாப ருத்ரன் கவிதைகள்
29. பேயோன் கவிதைகள்
30. எஸ் வி வேணுகோபாலன் கட்டுரை
31. எனக்கு படம் வரைய வராது – புலியூர் அனந்து
32. வே நி சூர்யா – கடிகாரம் சொன்ன கதை
33. எங்கே அவன் ? – வைதீஸ்வரன் கவிதை
34. காத்திருக்கும் சூரியன் – தெலுங்கு கதை தமிழில்
35. கடற்கரைக் காற்று பலமாக வீசுகிறது – ஷாஅ
36. சிறகா கவிதைகள்
37. புதிய கானம் – ஆனந்த்
38. முதுவேனில் – எஸ் சங்கரநாராயணன்
39. ஒரு தவறு செய்தால் – சுந்தரராஜன்
40. இயங்கியல் – ச.விஷ்ணுதாசன்
41. ஐ சி யூ – அதுல் பிஸ்வாஸ்
42. ஸ்ரீதர் – சாமா கட்டுரை
43. நெருப்புப் பூச்சி – பானுமதி ந
44. நெனப்பு – கலைச்செல்வி
45. பிலிம் நியூஸ் ஆனந்தன் – அம்ஷன் குமார்
46. புகை – பானுமதி ந
47. அந்த போட்டோவில் – ஜெ ரகுநாதன்
48. ஜெமினி அருகில் இழந்த சொர்க்கம் – மாதவபூவராக
மூர்த்தி
49.நந்தாகுமாரன் கவிதைகள்
50. லாவண்யா சுந்தராஜன் கவிதைகள் குறித்து ஆனந்த் கட்டுரை
51. மரணத்தின் கண்ணாடி – 3 – க்ருஷாங்கினி
52. ஆர் ராஜகோபாலன் கவிதைகள்
53. அபராஜிதா கவிதைகள்
54. லாவண்யா கவிதைகள்
55. அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள்
56. புதுமைப்பித்தனின் காஞ்சனை – பெருந்தேவி
57.இலவசம்தானே – ஜெ பாஸ்கரன்
58. ஜான்னவி கவிதைகள்
இதில் கலந்து கொண்ட படைப்பாளிகள் 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு வர முயற்சி செய்யவும்.  படைப்பாளிகள் தங்கள் முகவரிகளை  navina.virutcham@gmail.com     அனுப்பவும். உடனே பத்திரிகையை அனுப்புகிறேன்.
ஒத்துழைப்பு அளித்த எழுத்தாளர்களுக்கு நன்றி.  என்னைப் பொறுத்தவரை ரொம்பவும் திருப்தியான இதழ் இது.  இதை விட பிரமாதமாக நான் ஒரு விருட்சத்தைக் கொண்டு வர முடியாது.  பல புதியவர்கள் இதில் எழுதி உள்ளார்கள்.  அவர்களுக்கு என் நன்றி. 260 பக்கங்கள் கொண்ட இந்த இதழின் விலை ரூ.100 தான்.
இந்த இதழில் நடேஷ் அவர்களின் ஓவியங்களையும், கசடதபற இதழ்களில் வெளிவந்த ஓவியங்களையும் பயன்படுத்தி உள்ளேன்.  ஓவியர்களுக்கு என் நன்றி.

விருட்சம் 100வது இதழ் வந்து விட்டது

விருட்சம் இதழின் 100வது இதழ் வந்துவிட்டது.  நேற்று மதியம் வந்தது. கிட்டத்தட்ட 100வது இதழ் முடியும்போது 25 ஆண்டுகளில் முடிந்திருக்க வேண்டும்.  28 ஆண்டுகள் ஓடி விட்டன.  99வது இதழ் விருட்சம் பிப்ரவரி 2016ல் வந்தது.  அதன்பின் 8 மாதங்கள் தட்டுத் தடுமாறி 100வது இதழை இதோ அக்டோபர் மாதம் கொண்டு வந்து விட்டேன்.100வது இதழ் 100வது இதழ் என்றதால் பக்கங்களும் அதிகமாய் விட்டன. 260 பக்கங்கள்.  இதுவரை நான் விருட்சம் இவ்வளவு பக்கங்கள் கொண்டு வரவில்லை. இந்த இதழ் தயாரிக்க செலவும் அதிகம். ஆனால் நண்பர்கள் உதவியதால் கொண்டு வர முடிந்தது.  ஒரு இதழிலிருந்து இன்னொரு இதழ் கொண்டு வருவதற்குள் என் நிலையில் பெரிய மாறுதல் இருந்துகொண்டே இருக்கும்.   இந்த இதழில் பலர் எழுதியிருக்கிறார்கள்.  அத்தனை எழுத்தாள நண்பர்களைப் பற்றிய குறிப்புகளையும் நான் தயாரித்து இங்கு தெரியப்படுத்துகிறேன்.  எழுதிய அத்தனைப் படைப்பாளிகளுகளுக்கும் என் நன்றி உரித்தாகுக.  அதேபோல் இதழ் நான் கொண்டு வரும் வரைக்கும் என்னுடன் போராடி வெற்றிபெறச் செய்த நண்பர்கள் : கிருபானந்தன், டாக்டர் பாஸ்கரன், சுந்தர்ராஜன் முதலிய நண்பர்களுக்கும் என் நன்றி.  தக்க சமயத்தில் விளம்பரம், நன்கொடை அளித்த நண்பர்களுக்கும் நன்றி.
இந்த இதழைக் கொண்டு வர ஒரு சிறிய கூட்டம் நடத்த உள்ளேன். 23ஆம்தேதி வைத்திருக்கிறேன்.  பலரைக் கூப்பிட உள்ளேன்.  கூட்டம் நடத்தும் இடத்தை இன்னும் தீர்மானம் செய்யவில்லை.  தெரியப்படுத்துகிறேன். அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

ஐராவதமும் புத்தக விமர்சனமும்…

என் வீட்டிற்குப் பக்கத்தில் ஐராவதம் இருந்தார்.  ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.  நான் டூ வீலரில் இப்படி வலம் வந்தால் அவர் வீடு வந்து விடும்.  அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்வோம்.  ஒவ்வொரு விருட்சம் இதழிலிலும் எதாவது ஐராவதம் எழுதிக் கொடுப்பார்.  ஒரு முறை சிறுகதை எழுதித் தருவார்.  ஒருமுறை கவிதை எழுதித் தருவார்.  ஒருமுறை கட்டுரை எழுதித் தருவார்.  விருட்சத்திற்கு புத்தகங்கள் எல்லாம் விமர்சனத்திற்கு வரும். அந்தப் புத்தகங்களை உடனே படித்து விட்டு எழுத வேண்டும்.  என்னால் அப்படி படிக்க முடியாது.  ஒருமுறை ஐராவதத்தைப் பார்த்து, üüபுத்தகங்கள் வந்திருக்கின்றன.  விமர்சனம் செய்ய வேண்டும்,ýý என்றேன்.  üüஎன்னிடம் கொடுங்கள்.  விமர்சனம் செய்து தருகிறேன், என்றார்.   நாங்கள் இருவரும் ஒன்றாக அலுவலகம் செல்வோம்.   மாம்பலம் ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொள்வோம்.  விமர்சனத்திற்கு வந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் ஐராவதத்திடம் கொடுத்து விடுவேன்.
ஐராவதத்திடம் புத்தகங்கள் கொடுப்பதில் எனக்கு ஒரு நன்மை உண்டு. அவர் விமர்சனம் செய்து முடித்தப் பிறகு எல்லாப் புத்தகங்களையும் என்னிடமே திருப்பிக் கொடுத்து விடுவார்.  நான் என்ன வேகத்தில் புத்தகங்களைக் கொடுக்கிறேனோ அதே வேகத்தில் படித்துவிட்டு எழுதிக் கொடுத்து விடுவார்.  மேலும் புத்தக மதிப்புரைக்காக ஒரே ஒரு புத்தக் பிரதியைத்தான் விருட்சத்திற்கு அனுப்புவார்கள்.  நான் சொல்வேன் :  “புத்தக மதிப்புரை விருட்சத்தில் ஒன்றரைப் பக்கம் அல்லது இரண்டு பக்கங்களுக்கு மேல் வரக்கூடாது,” என்று.  அதே பக்க அளவில் எழுதித் தருவார்.  அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகமாக இருந்தால் இரண்டு பக்கங்களுக்கு எழுதித் தருவார்.
படித்துவிட்டு  அவர் மனசில் என்னன்ன தோன்றுகிறதோ அது மாதிரி எழுதித் தருவார்.  விமர்சனம் எழுதும்போது வேண்டுமென்றே பல வெளிநாட்டு எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பிடுவார்.  நான் கேள்வியே பட்டிருக்க மாட்டேன்.  எனக்கு அதெல்லாம் அவர் படித்திருக்கிறாரா என்ற சந்தேகம் கூட வரும்.  ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டிருப்பதுதான் அவருடைய வேலை.  ஒரு புத்தகத்தைப் படிப்பது என்றால் விடாமல் படிப்பார்.  வீட்டைவிட்டு எங்கும் போக மாட்டார். நடைபயிற்சி என்பதே கிடையாது.    ஒருமுறை இலக்கியச் சந்திப்பு கூட்டத்திற்கு அவரை விடாப்பிடியாக இழுத்துக்கொண்டு போனேன்.  அவரைப் பார்த்த ந முத்துசாமி ஆச்சரியப்பட்டார்.  “என்னய்யா இங்கே வந்திருக்கே?” என்று  அவரைப் பார்த்துக் கேட்க, அதற்கு “இவர்தான் என்னை தூசித் தட்டிக் கொண்டு வந்திருக்கிறார்,” என்று ஐராவதம் சொன்ன பதிலைக் கேட்டு எனக்கு தாங்க முடியாத சிரிப்பு வரும்.
ஒரு முறை சுந்தர ராமசாமி கொண்டு வந்த காலச்சுவடு இலக்கிய மலர் குறித்து ஒரு விமர்சனத்தை ஐராவதம் எழுதினார்.   நான்தான் üஒரு புத்தக விமர்சனத்தை இருவர் பேசுவதுபோல் எழுதுங்கள்ý என்றேன்.  அவ்வாறே எழுதினார்.  ஆனால் அதில் பிரச்சினை ஏற்பட்டு விட்டது.  சுந்தர ராமசாமியை üதமிழ் இலக்கிய உலகின் ஞானத் தந்தையாக தன்னை அறிவிக்கும் முயற்சிý என்று அந்த இலக்கிய மலரைப் பற்றி எழுதி விட்டார். ஐராவதம் எதை எழுதிக் கொடுத்தாலும் நான் பிரசுரம் செய்து விட வேண்டும்.  இல்லாவிட்டால் அடுத்த முறை எழுதித் தர மாட்டார்.  ஏன் என்னை விரோதியாக பார்க்கக் கூட ஆரம்பித்து விடுவார்.  நான் அப்போது உணர்ந்த ஒன்று நான் ஒருவனே விருட்சம் பத்திரிகை முழுவதும் எழுத முடியாது என்பது.  இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் அவரிடம் புத்தகங்கள் கொடுப்பதை குறைத்து விட்டேன்.  முக்கியமான எழுத்தாளர்கள் புத்தகங்களைக் கொடுப்பதைத் தவிர்த்தேன்.
நானே எதாவது எழுத முயற்சி செய்வேன்.  இல்லாவிட்டால் வரப்பெற்றோம் என்று பிரசுரம் செய்து முடித்து விடுவேன்.  ஐராவதம் பெரும்பாலும் சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதுவதை விட்டுவிட்டார்.  நான் புத்தகம் கொடுக்காவிட்டாலும் அவர் கைக்குக் கிடைக்கும் புத்தகங்களை எடுத்து எதாவது எழுதாமல் இருக்க மாட்டார். அவர் தெரு முனையில் இருக்கும் யுவராஜ் லென்டிங் லைப்ரரியிலிருந்து புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டு அப் புத்தகம் பற்றி எழுதுவார்.  பழைய தீபாவளி மலர்களைப் படித்துவிட்டு அம் மலர் எப்படி வந்திருக்கிறது என்று எழுதுவார்.
அவருக்கு யாரையாவது பிடித்து இருந்தால், புகழ்ந்து  தள்ளுவார்.   பிடிக்காவிட்டால் மோசமாக எழுதி விடுவார்.  ஒரு புத்தகத்தில் அவருக்குப் பிடித்தப் பக்கத்தை எடுத்துக்கொண்டு அதில் புத்தக ஆசிரியர் என்ன சொல்கிறாரோ அப்படியே எழுதுவார். சில பக்கங்களிலிருந்து பாரா பாராவாக எடுத்துப் போட்டு  ஆசிரியர் கருத்து பிரமாதம் என்று முடிப்பார்.    இதை புத்தக மதிப்புரையாக  எடுத்துக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை.  அவரிடம் கேட்டால் மழுப்பலாக சிரித்துவிட்டு பேசாமல் இருந்து விடுவார்.
ஆனால் எந்தப் புத்தகம் கொடுத்தாலும் எழுதக் கூடியவர்.  ஒருமுறை சதாரா மாலதி கவிதைப் புத்தகத்தைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து எழுதிவிட்டார்.  சதாரா மாலதிக்கே தன் புத்தகத்திற்கான விமர்சனத்தைப் படித்து விட்டு நம்ப முடியாமல் இருந்தது.  அது ஒரு உயர்வு நவிற்சியாக இருந்தது.  புத்தகம் கொண்டு வருவது என்பது சிரமமானது. ஒரு புத்தகம் நமக்கு படிக்க சரியாக இல்லை என்றால் அப்புத்தகம் பற்றி ஒன்றும் சொல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது.  அதைப் பற்றி எழுதி அடிப்பது அல்ல.
அப்படியென்றால் புத்தக விமர்சனம் என்றால் என்ன?  ஒரு நாவலை விமர்சனம் செய்வதென்றால் நாவலின் முன் கதை சுருக்கத்தைச் சொல்வதா? அல்லது நாவலின் சில பகுதிகளை பத்தி பத்தியாக எழுதுவதா? இதெல்லாம் கூட புத்தக விமர்சனத்தின் ஒரு கூறுதான் என்பார் ஐராவதம்.  இது தவறு என்று சொல்வதை நானும் ஏற்றுக்கொள்ளவில்லை.  ஐராவதம் சொல்வார் : சுஜாதாவின்  சலவைக்குப்போடும் கணக்கைக் கூட விமர்சனம் செய்யலாம் என்று. கோட்பாடு ரீதியாக புத்தகத்தை விமர்சிப்பதை அவர் ஏற்றுக்கொள்வதில்லை.  அது உடலை கூறுபோடும் விஷயம் என்பார். அவர் விமர்சன முறை க நா சு வின் ரசனை முறைதான்.
ஆனால் தமிழ்நாட்டில் புத்தகம் வருமளவுக்கு புத்தக விமர்சனம் வருவதில்லை. மேலும் புத்தக விமர்சனத்தைப் பார்த்து யாரும் புத்தகம் வாங்குவதில்லை.  வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை யாரும் படிப்பதும் இல்லை.  பெரும்பாலான புத்கங்கள் கண்டு கொள்ளாமல் போய் விடுகின்றன.

தேடல் என்கிற கதை..

இந்த வார கல்கி இதழில் (18.10.2016) என் கதை தேடல் பிரசுரமாகி உள்ளது.  இக் கதையைப் பிரசுரித்த கல்கி ஆசிரியருக்கு என் நன்றி.  கதைக்கான ஓவியத்துடன் ஒரு கதையைப்  பார்க்கும்போது வித்தியாசமாக இருக்கிறது.  இக் கதையை நீங்கள் படிக்க வேண்டும்.  இக் கதை எப்படி வந்திருக்கும் என்பதைப் பற்றி சொல்கிறேன்.
முடிச்சூர் ரோடில் உள்ள எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் ஒன்று உள்ளது.  அங்கு ஒரு முறை போனபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.  அவர் எதிர்பாராதவிதமாய் அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை வெளிப்படுத்தினார்.  அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அவருடைய கணவர்  திடீரென்று புத்தி பிசகிப் போய்விட்டார்.   வேலையைத் துறந்து பென்சன் வாங்கிக் கொண்டிருந்தார்.  வீட்டிலேயே அடைந்து கிடப்பார்.  ஒரு முறை பென்சன் அலுவலகத்திற்கு கையெழுத்துப் போட அவரை அந்தப் பெண்மணி அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்.  அவரை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு உள்ளே அலுவலரைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.  அவர் திரும்பி வரும்போது உட்கார்ந்த இடத்தில் கணவரைக் காணோம்.  எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் கணவரை கண்டு பிடிக்க முடியவில்லை.  அதன்பின் அவர் கணவரையே காணோம்.  கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்கள் ஆனபிறகும் அவர் கணவரை காணவில்லை.   இதை இப்போதும் அந்தப் பெண்மனி உருக்கத்துடன் கூறிக்கொண்டிருப்பார்.
நான் அவரைப் பார்த்துச் சொல்வேன் : “அவர் போனவர் போனவர்தான்..இனிமேல் வர மாட்டார்..நீங்கள் உங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்ய முயற்சி செய்யுங்கள்.”
இச் சம்பவத்தை என் மனம் பதிவு செய்து கொண்டது.  சமீபத்தில் என் இலக்கிய நண்பர் ஒருவருக்கு, அவர் யார் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் போய்விட்டது.  அவர் உடனே அப்பாலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டார்.  உண்மையில் அதன்பின் அவருக்கு சரியாகிவிட்டது.  ஆனால் அப்படி ஒன்று ஏன் நடந்தது என்று தெரியவில்லை.
என் மனதில் இதையெல்லாம் ஓட்டி ஒரு கதை எழுத நினைத்தேன்.  அந்தக் கதைதான் ‘தேடல்.’  நான் இதுவரை 80 கதைகள் எழுதி இருப்பேன் (குறுநாவல்களையும் சேர்த்து).  அவற்றையெல்லாம் மொத்தமாக ஒரு தொகுப்பாகக் கொண்டு வர எண்ணம்.

இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்…..

 
 
முன்பெல்லாம் கடற்கரையில் உள்ள வள்ளூவர் சிலை அருகில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பர்கள் சந்திப்போம்.  ஞானக்கூத்தன் முன்னதாகவே வந்து அமர்ந்திருப்பார்.  நான் வைத்தியநாதன் என்ற என் நண்பரை அழைத்துக்கொண்டு வருவேன்.  ஆனந்த், ஆர்.ராஜகோபாலன், ராம்மோஹன், ஸ்ரீனிவாஸன் என்று நிறையா நணள்பர்கள் சந்தித்துக் கொள்வோம்.  இந்த முகநூல் அப்போது இல்லை.  இருந்திருந்தால் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு என்ன பேசினோம் என்பதை முகநூலில் பகிர்ந்து கொண்டிருப்போம்.
எங்கள் எல்லோரையும் விட மூத்தக் கவிஞர் ஞானக்கூத்தன்.  தலைமை என்றெல்லாம் இல்லாவிட்டாலும் கூட அவர் தலைமை தாங்கி நடத்துவதுபோல்தான் அந்தக் கூட்டம் நடைபெறும்.  இப்படி எத்தனையோ ஞாயிற்றுக்கிழமைகளை நான் இனிதாக கழித்திருக்கிறேன்.
ஆனால் இப்போது ஒரு கூட்டம் கூட அதுமாதிரி முடியாது.  அவ்வளவுதூரம் இறுகி விட்டது பொழுது எல்லோருக்கும்.
ஒருமுறை ஞானக்கூத்தன் எங்களைப் பார்த்துச் சொன்னார். ‘இன்று எனக்குப் பிறந்தநாள்’ என்று.  நாங்கள் அவரை வாழ்த்தினோம்.
‘இந்தப் பிறந்தநாளில் என்ன பெரிதாக நடந்தது.  ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும்.   இத்தனை நாட்கள் உயிரோடு இருந்திருக்கிறேனே அதுவே பெரிய விஷயம், என்று சொன்னேன், கேட்டு வீட்டில் உள்ளவர்கள் கண்கலங்கினார்கள்,’  என்றார் ஞானக்கூத்தன்.
அன்று அவர் சொன்னதை இன்றும் கூட என்னால் மறக்க முடியாது.
இன்று அவர் பிறந்தநாள்.   அவர் நினைவாக ‘உபதேசம்’ என்ற அவர் கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.
அன்பைத் தவிர வேறொரு செய்தி
விளம்பத் தகுந்ததாய் உலகிலே இல்லை
நீண்டதாய் எங்கும் செல்வதாய்
இருக்க வேண்டும் என் அன்பு
சக்கரம் பொருந்தி சுமையை
எல்லாப் பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டு.
 

யார் தமிழ் புத்தகங்கள் படிக்கிறார்கள்?

 
எனக்கு எப்போதும் இந்தச் சந்தேகம் வருவதுண்டு.  முன்பை விட இப்போது தமிழ்ப் புத்தகங்களை யாராவது விரும்பிப் படிக்கிறார்களா என்ற சந்தேகம்தான்.  இது குறித்த நான் பலரிடம் விஜாரிக்க விரும்பவில்லை.  சமீபத்தில் பெஸன்ட் நகர் பீச்சில் காலை 6 மணிக்கு சில இளைஞர்கள் கிட்டத்தட்ட 30 வயதுக்குள் இருப்பவர்கள் பெரும்பாலோர் ஐடியில் பணிபுரிபவர்கள் ஆங்கிலத்தில் கதைகளை வாசித்தார்கள்.  அவர்கள் வாசித்தக் கதைகளின் தரம் அவ்வளவாய் சிறப்பாய் இல்லை.  ஆனால் தமிழில் இதுமாதிரியான கூட்டத்தை நடத்தத்தான் முடியுமா?  யார் தமிழில் எழுதுகிறாரகள்? யார் தமிழ் கதைகளைப் படிக்கிறார்கள்? நானும் சிறி;து முயற்சி செய்து பூங்காவில் கதை கவிதை வாசிப்புக் கூட்டம் ஏற்பாடு செய்து நடத்தினேன்.  அக் கூட்டத்திற்கு யாரும் வரவில்லை.  அது நடத்துவது கேலிக் கூத்தாகி விடுமா என்று கூட எனக்குத் தோன்றியது.
இப்போது உள்ள இளைஞர்களில் தமிழ் படிப்பவர்கள் மிக மிக குறைவு.  பொதுவாக பெரும்பாலோர் புத்தகங்களே படிப்பதில்லை. மீறிப் படிப்பவரகள் என்ன புத்தகங்களைப் படிக்கிறார்கள்.  பெரும்பாலோர் கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை வாசிக்கிறார்கள். அல்லது தமிழ் நாவல்களை வாசிக்கிறார்கள்.  ஆனால் சிறுகதைப் புத்தகமோ கவிதைப் புத்தகமோ யாரும் பொருட்படுத்துவதில்லை.  அதனால் தமிழில் கவிதைப் புத்தகம் சரியாக விற்க முடியவில்லை.  சிறுகதைக்கும் அந்த நிலைதான்.
கட்டுரைகள் கூட பல்கலைக் கழக மாணவர்கள் இயற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை யாரும் படிப்பதில்லை.  தமிழின் இந்த நிலைக்கு யார் காரணம்?  இன்னும் போக போக நிலைமை மோசமாகி விடும்.  முன்பை விட தமிழில் இப்போது எதிர்கொள்கிற பிரச்சினைகளை சாதாரணமாக விளக்கி விட முடியாது.
நான் இப்போது கூட தமிழில் எழுதிக்கொண்டிருக்கிற எழுதப் போகிற எழுத்தாளர்களை நினைத்து கவலைப்பட்டுத்தான்  இதைக் குறிப்பிடுகிறேன்.  அடிப்படையில் தமிழில் படிப்பது என்பது சரியாக வரவில்லை.  இன்றைய தமிழ் மாணவர்கள் மூலம் தமிழ் படைப்புலகம் சிறக்கப் போவதில்லை.  தமிழை மட்டும் நம்பாமல் இருக்கும் இளைஞர்களிடம்தான் அதாவது தமிழை ஆங்கிலத்திற்கு அடுத்ததாகப் பயன்படுத்தும் இளைஞர்களிடம்தான்  தமிழில் இனி படிக்கவும் தமிழ் மொழியில் படைப்புகளை உருவாக்கவும் வழி இருப்பதாகப் படுகிறது.
நான் பள்ளிக்கூடத்தில் எட்டாவது வகுப்பு படிக்கும்போதே பள்ளி நூல்நிலையத்திலிருந்து புத்தகங்களை எடுத்துப் படித்துக் கொண்டிருப்பேன்.  தென்னாட்டுப் பழங்கதைகள் என்ற புத்தகம், இராமசாமிப் புலவர் தொகுத்தது எட்டுப் பாகங்கள் கொண்ட புத்தகம்.  ஒவ்வொரு பாகமும் 300 பக்கங்கள் இருக்கும்.  அப் புத்தகங்களை எடுத்து எடுத்துப் படிப்பேன்.  அப்படி தமிழில் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வமாக இருப்பேன்.  இப்போதோ அத் தென்னாட்டு கதைகள் தொகுதி எங்கும் கிடைப்பதில்லை.  அவற்றை புத்தகங்களாகக் கொண்டு வந்த சைவ சித்தாந்த கழகம் அப் புத்தகத்தை திரும்பவும் பிரசுரிக்க விரும்பவில்லை.  காரணம் அப் புத்தகத்தைப் படிக்க சிறுவர்கள் யாரும் தயாராய் இல்லை.
இப்போது கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன்.  அப்படி ஆர்வமாக இருந்த நான், இப்போது அந்த அளவிற்கு ஆர்வம் ஏற்படாமல் போனதற்குக் காரணம் என்ன?  யோசித்துப் பார்க்கிறேன்.  இன்னும் நான் தினமும் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் முன்புபோல் படிக்க முடியவில்லை.  ஏன்?  என்னுடைய பள்ளிக்கூட காலத்தில் நான் தங்கசாலையில் இருந்தேன்.  அங்குள்ள ஒரு தியேட்டர் பக்கத்தில் கீழே பிளாட்பாரத்தில் மர்ம நாவல்களை விற்றுக்கொண்டிருப்பார்கள்.  பி டி சாமி, மாயாவி, அரூர் ராமநாதன் என்றெல்லாம்.  அப் புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படித்துபின் மற்றவர்களுக்கும் படிக்கக் கொடுப்பேன்.  அதன் பின் என் வாசக எல்லை சற்று விரிவடைந்து, கல்கி, சாண்டில்யன், தமிழ்வாணன் என்றெல்லாம் போயிற்று.  மு வ வின் கரித்துண்டு, அகல் விளக்கு என்றெல்லாம் படித்திருக்கிறேன்.  என் கல்லூரி ஆண்டுகளில் நான் பாரதியாரின் கட்டுரைகளை எல்லாம் படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் எங்கு சென்றாலும்  புத்தகம் படித்துக்கொண்டே இருப்பேன்.
கொஞ்சங் கொஞ்சமாக ஆங்கிலப் புத்தகங்களையும் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் இப்போதோ அந்த அளவிற்கு வேகமாக என்னால் புத்தகங்களைப் படிக்க முடிவதில்லை.  நான் அலுவலகத்தில் சேர்ந்த புதியதில் ராயப்பேட்டாவிலிருந்த க்ரியாவில் வித்தியாசமான புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  கவிதைப் புத்தகங்களை வாங்கிப் படிப்பேன்.  பெரும்பாலும் சிறுகதைகளையும் கவிதைகளையும்தான் நான் படிப்பேன்.  எப்போதும் எனக்கு சில புத்தகங்கள் படித்தாலும் புரியாது.  அதுமாதிரி புரியாத புத்தகங்களையும், பத்திரிகைகளையும் நான் வைத்திருப்பேன்.
முன்னே மாதிரி என்னால் புத்தகங்கள் படிக்க முடியாவிட்டாலும், புத்தகங்களை வாங்கி குவிக்க வேண்டுமென்ற ஆர்வமும், எந்தச் சந்தர்ப்பத்திலாவது இப் புத்தகங்களைப் படித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.  என்னுடைய பலம் டிவியில் நான் முழுவதுமாக மாட்டிக்கொள்ளவில்லை.
ஆனால் என்னுடைய கவலை எல்லாம் இக் காலத்தில் இருக்கும் இளைஞர் மீதுதான். தெருவில் என் வீட்டு கீழே ஏகப்பட்ட இளைஞர்கள் கூடி வெறும் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்.  ஆனால் அவர்களில் யாருமே புத்தகம் படித்ததில்லை.  நான் இருக்கும் வளாகத்தில் 6 வீடுகள் உள்ளன.  அதில் ஒருவர் கூட புத்தகம் வாங்கவும் மாட்டார்கள்.  படிக்கவும் மாட்டார்கள்.  ஏன் என் வீட்டில் உள்ள என் மகனோ மகளோ தமிழ் புத்தகங்களைப் படிக்கவே மாட்டார்கள்.  என் அப்பா மனைவி எல்லாம் தமிழ் புத்தகங்களின் பக்கமே வர மாட்டார்கள். என் சகோதரன் வீட்டில் யாருமே தமிழ் புத்தகங்கள், பத்திரிகைகள் பக்கம் வரவே மாட்டார்கள். என் சகோதரன் நான்  தமிழ் புத்தகம் படிப்பதைப் பார்த்து கிண்டல் செய்வான். ஆனால் அவர்கள் முன் நான் குவித்து வைத்திருக்கும் தமிழ் புத்தகங்களைப் பார்த்து அவர்கள் சத்தம் போடுவார்கள்.
இப்படியே போனால் ஒரு கட்டத்தில் தமிழ் புத்தகம் படிப்பது குறைந்து பின் யாரும் படிக்கக் கிடைக்காமல் போய்விடலாம்.  அந்தத் தருணத்தில் தமிழை வளர்க்க அரசாங்கமே பதிப்பாளர்களைக் கூப்பிட்டு புத்தகம் கொண்டு வர நிதி உதவி செய்யலாம்  அல்லது எதாவது ஒரு இடத்தில் எல்லோரையும் கூட்டி தமிழ் புத்தகங்கள் படிப்பவருக்கு சலுகையாக சன்மானம் வழங்கப்படும் என்று அளிக்கலாம்.  ஆனால் யார் எத்தனை பக்கங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கிறார்கள் என்று கணக்குச் சொல்லும்படி இருக்கும்.  ஆனால் எனக்கோ புத்தகங்களைப் பார்த்தால் வாங்கி வைத்துவிட வேண்டுமென்ற வெறி இன்னும் துளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
நான் ஒரே சமயத்தில் பல புத்தகங்களைப் படித்துக்கொண்டு  போவேன். மறந்து விடாமல் போவதற்கு புத்தகம் படித்து முடித்தப்பிறகு இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டேன் என்று எழுதுவேன்.  ஆனால் இப்போதோ நான் படிக்கும் புத்தகத்தைக் குறித்து சில பக்கங்கள் எழுத வேண்டுமென்று எழுதுகிறேன்.
இந்த இடத்தில் வல்லிக்கண்ணன் அவர்களையும், எஸ் ராமகிருஷ்ணன் அவர்களையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.  ஒருமுறை வல்லிக்கண்ணன் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்தில் பேசக் கூப்பிட்டேன்.  வல்லிக்கண்ணன் மூச்சு விடாமல் அவர் படித்த அத்தனை நாவல்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போனார்.  மறக்க முடியாத நிகழ்ச்சி அது.
சமீபத்தில் குவிகம் இலக்கியம் சார்பாக எஸ் ராமகிருஷ்ணன் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று பத்து புத்தகங்களுக்கு மேல் புத்தகங்களைப் பற்றியும் புத்தக ஆசிரியரைப் பற்றியும் உற்சாகம் கரைபுரண்டோட சொல்லிக்கொண்டே போனார்.
ஆனால் நான் உடனே படித்துவிட்டு எழுதி விட வேண்டும்.  இல்லாவிட்டால் மறந்து விடும்.

என்னையும் கவிதை வாசிக்க அழைத்தார்…

                                              

 

நான் கிட்டத்தட்ட 300 கவிதைகள் எழுதியிருக்கிறேன்.  185 கவிதைகள் கொண்ட அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 300 பக்கங்கள் வரை இருக்கும்.  ஆனால் விலை ரூ.150 தான்.  புத்தகக் கண்காட்சியின்போது ஒரு சிலர் வாங்குவார்கள்.  என்னிடம் உள்ள அத்தனைப் பிரதிகளும் விற்க இன்னும் 20 புத்தகக் கண்காட்சியாவது நடைபெற வேண்டும்.  அதன்பின் வினோதமான பறவை என்ற கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தேன்.  தெரியாமல் 300 பிரதிகள் அடித்து விட்டேன். பின் புத்தக வெளியீட்டு விழா என்றெல்லாம் நடத்தவில்லை. பத்திரிகைகளுக்கு அனுப்பினேன்.  பல பத்திரிகைகள் கண்டு கொள்ளவே இல்லை.  வரப்பெற்றோம் என்ற தலைப்பில் ஒரு சில பத்திரிகைகள் அக் கவிதைத் தொகுதியைப் பற்றி கண்டு கொண்டது.  என் கவிதைகளைப் பற்றி தமிழவன், நகுலன், வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன், ரிஷி போன்ற நான் மதிக்கும் படைப்பாளிகள் எழுதி உள்ளார்கள்.
என் கவிதைத் தொகுதிகளை நான் புரட்டிப் புரட்டிப் பார்ப்பேன். என் கவிதைகளை நானே படித்து ரசிப்பேன்.  சமீபத்தில் புத்தகக் கண்காட்சியின்போது ஞானக்கூத்தன் வந்திருந்தார்.  அவரிடம் கேட்டேன். ‘நானும் ‘வினோதமான பறவை’ என்ற கவிதைத் தொகுதி கொண்டு வந்துள்ளேன்.  யாரும் ஒன்றும் சொல்லவில்லை,’ என்றேன். ‘காலம் வரும். எல்லோரும் சொல்வார்கள்,’ என்றார் அவர்.  எனக்கு அவர் சொன்னதைக் கேட்டு உடனே ஆச்சரியம்.  அப்படியெல்லாம் அவர் பேசிவிட மாட்டார்.
இந்த வினோதமான பறவை கவிதைத் தொகுதியை வெள்ளம் வந்து பதம் பார்த்துவிட்டது.  அந்தப் புத்தகக் கட்டுகள் மட்டும் இருந்தால், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அந்தக் கவிதைத் தொகுதி விற்க.
நான் தொடர்ந்து கவிதைகளை ஒரு  நோட்டில் எழுதிக் கொண்டு வருகிறேன்.  ஆனால் முன்பு இருந்த வேகம் இப்போது இல்லை.  சில சமயம் பல தாள்களில் எழுதுகிற கவிதைகளை எங்கயோ வைத்துவிடுவேன்.  சில தொலைந்தும் போய்விடும்.
30ஆம் தேதி செப்டம்பர் மாதம் ஆறுமணிக்கு பரிசல் செந்தில் என்னை கவிதை வாசிக்க அழைத்தார்.  எனக்கு ஆச்சரியம்.  அவருக்கு எப்படி என்னை கவிதை வாசிக்கக் கூப்பிட வேண்டுமென்று தோன்றியது என்ற ஆச்சரியம். எப்படியும் கவிதை வாசிக்க வேண்டுமென்று நினைத்தேன்.  காரணம்.  பல கவிதை எழுதுபவர்கள் அங்கு வந்திருப்பார்கள்.  அவர்கள் முன் வாசிக்கலாம் என்ற எண்ணம்தான்.  ஆனால் நான் இப்போது இருக்கிற சூழ்நிலையில் என்னால் வர முடியாமல் போய்விட்டது.  எதிர்பாராத திருப்பமாக நான் கவிதை வாசிக்க முடியாமல் போய்விட்டது.
அங்கு நான் எழுதி கல்வெட்டில் வந்த ஒரு கவிதையை வாசிக்கத்தான் நினைத்தேன்.  அதை நான் இங்கே அப்படியே தருகிறேன்.  நீங்கள் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.
 ரிடையர்டு ஆனால்…
அப்பா கேட்டார்:
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்?
வீட்டில் உன்னை மாதிரி சும்மா உட்கார்ந்திருப்பேன்
 
மனைவி கேட்டாள் :
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்?
சினிமா கச்சேரி என்று சுத்துவேன்
 
பையன் கேட்டான் :
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்?
ஊரைச் சுற்றுவேன். இந்தியா முழுவதும்
பார்க்காத இடம் அதிகம்
 
பெண் கேட்டாள் :
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்
லைப்ரரி போய் புத்தகக் குவியலில் முகம் புதைப்பேன்
 
நண்பன் கேட்டான்:
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்
காலையில் எழுந்தவுடன், மூக்கைப் பிடித்து உட்கார்ந்து விடுவேன்
பின் ஒவ்வொரு கோயிலாக படி ஏறுவேன்.
 
இலக்கிய நண்பர் கேட்டார்
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறீர்
ஒவ்வொரு இலக்கியக் கூட்டமாகப் போவேன்
நானும் நடத்துவேன் கூட்டங்களை
 
அலுவலக நண்பர் ஒருவர் கேட்டார்
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்ய் போகிறீர்
ஒவ்வொரு பிராஞ்சாப் போவேன்
பார்ப்பேன் பணி புரிபவர்களை
எதாவது வித்தியாசம் தெரிகிறதா என்று..
 
நானே கேட்டேன் 
ரிட்டையர்டு ஆனால் என்ன செய்யப் போகிறாய்..
கடைக்குப் போவேன் காய்கறி வாங்க
பால் பாக்கெட்டுகளை எடுத்து பிரிட்ஜில் வைப்பேன்
குளிப்பேன் தோன்றியபோது
சாப்பிட செல்வேன் ஓட்டலுக்கு
வண்டியை ஓட்டுவேன் அங்கும் இங்கும்
வெறுமனே மதியம் படுத்துத் தூங்குவேன்
எழுந்து காப்பி போடுவேன்
கம்ப்யூட்டரில் பேஸ் புக் பார்ப்பேன்.
 
ஒருநாள் மகிழ்ச்சியாப் போயிற்று என்று சந்தோஷப்படுவேன்.
ஆனால் சம்பாதிக்க மாட்டேன்.  

சில துளிகள்…….2

 
ஒரு வழியாக 100வது இதழ் விருட்சம் அடுத்த வாரம் வந்துவிடும். அதன்பின் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள்.  எப்படி இந்தக் கூட்டத்தை நடத்தலாமென்று யோசனை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
                                                                                          *********
அக்டோபர் மாத ஆனந்தவிகடன் தடம் இதழில் நான் எழுதிய ‘நானும் அசோகமித்திரனும்’ என்ற கட்டுரை  வெளிவந்துள்ளது.  ரொம்பநாட்கள் கழித்து நான் எழுதிய திருப்திகரமான கட்டுரை இது.  தடம் வாங்கிப் படியுங்கள்.
                                                                                     *********
எனக்குப் பிடித்த கவிதைகள் என்ற பெயரில் 100 கவிதைகள் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன்.  இப்போது 28 கவிதைகள் கொண்டு வந்துள்ளேன்.  எல்லாக் கவிதைகளையும் புத்தகங்களிலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்படும்.
                                                                                       **********
இந்த ஆண்டு தீபாவளி மலர்கள் வாங்க வேண்டாமென்று நினைக்கிறேன். ஏன்எனில் போன ஆண்டு தீபாவளி மலர்களையே நான் இன்னும் படித்து முடிக்கவில்லை.  அவற்றை படித்து முடித்தப்பின் பழைய பேப்பர் கடைகளிலிருந்து இந்த ஆண்டு தீபாவளி மலர்கள் வாங்கிப் படிக்கலாம்.
                                                                                     ***********
இந்த மாதம் 25ஆம் தேதி டாக் சென்டரில் சாருநிவேதிதாவின் ராஸ லீலா என்ற நாவலைக் குறித்துப் பேசுகிறேன்.  20 நிமிடமாவது பேச வேண்டும்.  614 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் 148வது பக்கம் படித்துக்கொண்டு வருகிறேன்.
                                                                                       **********
பிரம்மராஜன் கவிதையைப் படித்தவுடன் இப்படியெல்லாம் எழுதிப் பார்க்கலாமா என்று தோன்றுகிறது.  அப்பாவைப் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று எழுதுகிறேன்.
                                                                                     ***********
கடந்த 7 வாரங்களாக அமெரிக்காவிலிருந்து வந்த  என் பையன், அவன் மனைவி, அவன் புதல்வி என்று வீட்டை கலகலப்பாக்கி விட்டார்கள். அவர்கள் திரும்பவும் அமெரிக்கா சென்று விட்டார்கள்.  இரண்டு நாட்கள் அவர்கள் இருந்த அறையைப் பார்க்கவே எனக்கு சங்கடமாக இருந்தது.
                                                                                     ***********
சமீபத்தில் எந்த தமிழ் சினிமாவையும் நான் பார்க்க விரும்பவில்லை.  இதுவும் ஏன் என்று தெரியவில்லை.
                                                                                     ***********
தானாகவே பதவி மூப்பு வாங்கிக்கொண்ட என் நண்பர் குறிப்பிட்ட விஷயம் சற்று யோசிக்க வைத்தது.  ‘அலுவலகத்தில் இருந்தபோது பல அலுவலக நண்பர்கள் அவரிடம் பேசுவார்களாம்.  இப்போது யாரும் பேசுவதில்லையாம்..’ ‘வருத்தப்படாதே நண்பா,’ என்று அவரிடம் சொன்னேன்.
                                                                                 *************
சமீபத்தில் நான் முழுவதும் படித்தப் புத்தகம் எம் டி முத்துக்குமாரசாமியின் நிலவொளி எனும் இரகசிய துணை.  நீங்களும் படிக்கலாம் என்ற தலைப்பில் இப் புத்தகம் பற்றி எழுதி உள்ளேன்.  அதிகப் பக்கங்கள் வருவதால் என்னுடைய நவீன விருடசம் பிளாகில் வெளியிட உள்ளேன்.
                                                                                          (பின்னால் இன்னும் தொடரும்)

நான், பிரமிள், விசிறிசாமியார்……13

எனக்குத் தெரிந்தவரை பிரமிளுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் அவருடன் பழகிய இளமை கால நண்பர்கள், அவர் கஞ்சா அடிப்பார் என்று என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்கள். என்னால் இதை நம்ப முடியாது. நான் பழகியவரை அவர் கஞ்சாவும் சரி, எந்த மதுபானங்களும் குடிப்பவரில்லை. அடிக்கடி டீ குடிப்பார். தானே சமையல் செய்து கொள்வார். இன்னொரு பழக்கம். அவர் எல்லாரிடமும் பணம் வாங்க மாட்டார். யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம்தான் கேட்பார். அதேபோல் என்ன தேவையோ அதை மட்டும் கேட்பார்.
ஆரம்ப காலத்தில் எனக்கு வங்கியில் அதிக சம்பளம் இல்லை. இருந்தாலும் என்னிடம் ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் கேட்க மாட்டார். சிலசமயம் கேட்காமல் என்னைப் பார்க்கக்கூட வருவார். அவரைப்போல் நடக்க யாராலும் முடியாது. பல இடங்களுக்கு பெரும்பாலும் அவர் நடந்தே செல்வார். அவர் வயதில் கையெழுத்து தெளிவாக இருக்கும். ”ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் கையெழுத்து பிரமாதமாக இருக்கிறதே,” என்பேன். ”நீர் கண்ணுப் போடாதீர்,” என்பார்.
இன்று பிரமிளைப் புகழ்பவர்கள் ஒரு காலத்தில் அவர் கிட்டவே நெருங்க முடியாது. யாரையாவது அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தொலைந்தார்கள். எழுதி எழுதியே அவர்களைத் தொலைத்துக் கட்டிவிடுவார். அவரை யாரும் திட்ட முடியாது. ஆரம்பத்தில் அவர் தங்குவதற்கு இடம், சாப்பிட தேவையான சாப்பாடு என்று ஏற்பாடு செய்தால், அவர் தொடர்ந்து எதாவது செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றியது. இதை ஆரம்ப காலத்தில் அவருக்கு உதவி செய்த டேவிட் சந்திரசேகரிடம் குறிப்பிட்டேன். ”நாலைந்து பேர்கள் சேர்ந்தால், அவர் தேவையை நாம் பூர்த்தி செய்யலாம்,” என்று சொன்னேன். ”நான் உதவி செய்கிறேன். நாலைந்து பேர்களைச் சேர்க்க முடியாது,” என்று டேவிட் கூறிவிட்டார்.
நான் நவீன விருட்சம் என்ற பத்திரிகை தொடங்கப் போகிறேன் என்பதை அறிந்து என் அப்பாவிடம், ”சும்மா இருக்கச் சொல்லுங்கள்,” என்றவர்தான் பிரமிள். அதே பிரமிள் பின்னால் ஒரு கட்டத்தில் விருட்சம் இதழை நிறுத்த வேண்டும் என்று நினைத்தபோது, என் எண்ணத்தை மாற்றியவர்.
ஆரம்பத்தில் விருட்சத்திற்கு பிரமிள் கொடுத்த படைப்புகள் எல்லாம் அரசியல். ஒருமுறை அவர் நீண்ட கவிதை ஒன்றை விருட்சத்திற்கு அனுப்பியிருந்தார். அது சுந்தர ராமசாமியின் கவிதையைக் கிண்டல் செய்து எழுதப்பட்ட ஒன்று. நான் பிரசுரம் செய்யவில்லை. சங்கடமாக இருந்தது. அவர் கொடுத்த இன்னொரு கவிதை வன்முறை. கவிதை வாசிப்பவரை நோக்கி கவிதை நகரும். ”இதைப் படிப்பவர்கள் டிஸ்டர்பு ஆகிவிடுவார்கள்,” என்றேன். ”மேலும் எனக்கே இக்கவிதையைப் படித்தால் ராத்திரி தூக்கம் வராமல் போய்விடும்,” என்றேன். பிடித்துக்கொண்டார் பிரமிள். அவர் கவிதையை வாசித்துவிட்டு நான் தூங்காமல் போனதைப் பற்றி எல்லோரிடமும் சொல்லியிருக்கிறார்.