படித்தால் மட்டும் போதுமா

அழகியசிங்கர் 

 

நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.  அதில் ஒரு வரியைப் படிக்கும்போது, அந்த வரி என்னை திகைக்க வைத்தது. அந்த வரி இதுதான் : üபடித்துப் படித்துப் பைத்தியமானான் கோசிபட்டன்,ý இது ஒரு பழமொழி.   உண்மையில் படித்துக்கொண்டிருந்தால் பைத்தியமாகி விடுவார்களா?  எனக்குத் தெரிந்து எப்போதும் படித்துக்கொண்டிருக்கும் பலரை பார்த்திருக்கிறேன்.  சாப்பிடும்போது கூட எதாவது ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருப்பார்கள்.  இன்னும் சிலர் பாத்ரூமில் படிப்ôர்கள்.  எனக்கு சாப்பிடும்போதும், பாத்ரூமிலும் இருக்கும்போதும் படிப்பதற்கு விருப்பம் இருக்காது.  படிக்கும் பழக்கம் நம் மனத்தையும், அறிவையும் ஆட்கொண்டு நம்மை அடிமைகளாக்கி விடலாமா?  இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதேபோல் சுலபமாக பொழுதைப் போக்க படிக்கும் பழக்கம் ஒரு சிறந்த வழி.  ஆனால் பெரும்பாலோர் படிக்காமலேயே பொழுதைக் கழிக்கிறார்கள்.  அவர்களை நாம் குறை சொல்ல முடியாது.  நேற்று பூங்காவில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, ஒருவரை விஜாரித்தேன்.  அவர் சில மாதங்களில் பதவி மூப்பு அடைய உள்ளார்.  ‘எப்படி பொழுதைப் போக்கப் போகிறீர்கள்?  எதாவது தினமும் புத்தகம் படிப்பீர்களா?’ ‘இல்லை,’ என்றார் அவர்.  ‘படித்ததெல்லாம் எப்போதோ முடிந்து போய்விட்டது.  இனிமேல் புத்தகத்தை எடுத்துப் படிக்க முடியாது,’ என்றார்.  ‘அப்படியென்றால் பொழுது எப்படிப் போகும்?’ என்று கேட்டேன்.  ‘பொழுது போவதற்கு நான் வழி சொல்கிறேன்.  ஆனால் புத்தகம் வேண்டாம்,’ என்றார் அவர்.

சரி கோசிபட்டனுக்கு என்ன ஆயிற்று? ஏன் படித்து படித்து பைத்தியம் ஆனான்.  புத்தகம் படித்து ஒருவர் தன் வாழ்க்கையில் எதிர்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்று நினைத்தால், அதேபோல் ஒரு முட்டாள்தனத்திற்கு நாம் ஒன்றும் சொல்வதிற்கில்லை.

என்னுடைய நண்பர்கள் பலவிதமாய்ப் புத்தகங்களைப் படிப்பார்கள். ஒருவர் சிறுகதைகளை மட்டும் படித்துக்கொண்டிருப்பார்.  நாவல்களைப் படிக்க பொறுமை இருப்பதில்லை என்பார்.  அதேபோல் கவிதையைப் படிப்பது என்றால் வேம்பங்காயாய் கசக்கும் அவருக்கு.  இன்னொருவர் இருக்கிறார் இவர் வெறும் நாவல்களாகப் படித்துத் தள்ளுவார்.  அதேபோல் வேறு ஒருவர் கவிதைகளை மட்டும் படிப்பார். இன்னும் ஒருவர் கட்டுரைகளை மட்டும் படிப்பார்.

கதை கவிதை எல்லாம் படிக்காமல் ஆன்மிகப் புத்தகங்களை மட்டும் வாசிப்பவர்கள் உண்டு.  இன்னும் சிலர் மருத்துவப் புத்தகங்களை மட்டும் படிப்பார்கள்.  இப்படி பலர் பலவிதமான புத்தகங்களைப் படித்தக்கொண்டுதான் இருப்பார்கள். நான் ஒரு காலத்தில் ஜே கிருஷ்ணமூர்ததி புத்தகங்களை மட்டும் படித்துக்கொண்டு திரிந்தேன்.  அப்போது எனக்கு கவிதை, நாவல், சிறுகதை எதுவும் படிக்க பிடிக்காது.  நானே ஜே கிருஷ்ணமூர்த்தியாக மாறிவிட்டேனா என்று தோன்றும். நானே கோசிபட்டனாக மாறிவிட்டேனா என்று தோன்றும்.  ஆனால் இதில் பைத்தியமாவதற்கு வாய்ப்பு ஏன் ஏற்படுகிறது.  படிக்கும் பழக்கம் அளவு மீறினால் பைத்தியம் ஆகும் நிலை ஏற்படுமா?  அதற்காகத்தான் இது சொல்லப் படுகிறதா?

ஒருவர் டிவியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். காலையிலிருந்து இரவு தூங்கும் வரை ஒருவர் டிவியைப் பார்த்துக்கொண்டிருந்தால் அவருக்கு பைத்தியம் பிடிக்க வழி இல்லையா?  அதேபோல் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர், 24 மணிநேரமும் அலுவலகம் ஒன்றையே நினைத்துக்கொண்டிருந்தால் பைத்தியம் பிடிக்க வழி ஏற்படாதா?  எப்போது அதுமாதிரி நிலை ஏற்படுமென்றால், ஒரு நாள் அவரைக் கூப்பிட்டு,ü நீங்கள் பணி புரிந்தது போதும்..வீட்டிற்குப் போங்கள்,ý என்று சொன்னால்போதும், அவருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பைத்தியம் பிடித்து விடும்.

தீவிரமாக நாம் எதில் ஈடுபட்டாலும் அந்தத் தீவிரத் தன்மை நம்மை ஒரு வழி செய்து விடும்.  சிலரிடம் கேட்டு அறிவோம்.  சில நூல்களைப் படித்துத் தெளிவோம்,ý என்பது புலிசெரெ சோமேசுவர கவியின் கூற்று.  அதேபோல் நாம் கேட்டு தெளிவடைவோம்.  அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால், புத்தகங்களைப் படித்து தெளிவடைவோம்.

என் கையில் கிடைத்தப் புத்தகம் கன்னடக் கட்டுரைத் திரட்டு. அதிலிருந்து படிக்கும் பழக்கம் என்ற கட்டுரைதான் என்னை பலவாறு சிந்திக்க வைத்தது.

நன்றாக மாட்டிக்கொண்டேன்

அழகியசிங்கர்

உங்களுக்கெல்லாம் தெரியும்.  நான் மாம்பலத்தில் இருக்கிறேன் என்று. பின் நானோ ட்விஸ்ட் என்ற கார் வைத்திருக்கிறேன்.  அதை அறுபது வயதிற்குப் பிறகு ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளேன் என்பதும் தெரியும். ஆனால் அந்த வண்டியை எடுத்துக்கொண்டு அசோக்நகரில் உள்ள கார்ப்பரேஷன் ஸ்கூல் வரைச் சென்று ஒரு வாக் செய்துவிட்டு பின் வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு  வந்துவிடுவேன்.  ஆனால் சமீபத்தில் அதை பலநாட்களாய் பயன்படுத்தவில்லை.  அதை சர்வீஸ் கொடுக்க நினைத்தேன்.  நானே நானோவை ஓட்டிக்கொண்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள டாவே ரீச் என்ற இடத்தில் கொடுக்க நினைத்தேன்.

நேற்றுதான் (23.01.2017) அதற்கான முயற்சியை மேற்கொண்டேன்.  காலையில் 10 மணி சுமாருக்குக் கிளம்பி அண்ணாசாலையை அடைந்தேன். வண்டிகள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தவுடன், எனக்கு திகைப்பு ஏற்பட ஆரம்பித்தது.  முக்கியமான காரணம் ஜெமினி அருகில் உள்ள மேம்பாலத்தில் வண்டியை எப்படி எடுத்துக்கொண்டு போகப் போகிறேன் என்ற பதைப்புதான் என்னிடம் இருந்தது.  சமதரையில் வண்டியை மெதுவாகக் கொண்டு செல்வதும் பின் நகர்த்துவதும் என்னால் முடிந்தது.  ஆனால் மேம்பாலத்தில் வண்டியைக் கொண்டு செல்லும்போது, பின்னால் நகர்ந்தால் எப்படி அதை நிறுத்துவது.?

இப்படி யோசித்துக்கொண்டே இருக்கும் வண்டியில் உள்ள பெற்றோலின் அளவு மிகக்குறைவாக இருந்தது.  வண்டி எங்காவது நின்று விட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். ஒரு பாயின்ட் அளவிற்கு வந்து விட்டது பெற்றோளின் அளவு.  மெதுவாக நகர்ந்து நகர்ந்து வண்டியை ஓட்டிக்கொண்டு போனேன்.  ஒரு இடத்தில் பெற்றோல் நிரப்பும் இடத்தைக் கண்டு பிடித்தேன்.  அங்கு சென்று பெற்றோல் போட்டேன்.  ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், கூட்டத்தில் மெதுவாய் முன்னே செல்லும் வண்டியுடன் முட்டாமல் பெற்றோல் நிலையத்தில் மெதுவாக திருப்பி பெற்றோலும் போடுவது ஒரு அனுபவம்.  பின் நான் மெதுவாக க்ரீம்ஸ் ரோடு சென்று விடுவேன் என்று நினைத்தேன். பெரிய ஏமாற்றம்.  பஸ்கள் மற்றும் பல வண்டிகள் கலைஞர் டிவி என்ற இடத்தின் எதிரில் நின்று விட்டன.  என் வண்டியும். அசையவே இல்லை.  அப்போதுதான் என் முட்டாள்தனத்தை எண்ணி வருத்தப்பட்டேன்.  பாரத பெட்றோலியம் உள்ள அலுவலகத்தின் பக்கத்துத் தெருவில் சிறுவர்கள் சிறுமியர்கள் பெண்கள் என்று எல்லோரும் அமர்ந்திருந்து போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.  வண்டியின் உள்ளே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். பின் என் பால்யகால நண்பரும் கவிஞருமான வைத்தியநாதனைப் பார்த்தேன். அவர் பாரத பெற்றோலியம் அலுவலகத்தில் முக்கியமான பதவியில் இருப்பவர்.  சமீப காலமாக அவரை நான் சந்திக்கவே இல்லை.  அவரிடம் தயிர்சாதம் கிடைக்குமா என்று செய்தி அனுப்பினேன். அவர் சிறிது நேரத்தில் 8 கீரை வடைகளும் இரண்டு சிறிய தண்ணீர் பாட்டில்களும் கொண்டு வந்து கொடுத்தார்.  நான் இருந்த பகுதியில் பக்கத்தில் ஓட்டல்கள் இல்லை. மேலும் வண்டியைத் தனியாக எத்தனை நேரம் விட்டுவிட்டுச் செல்வது என்பதும் தெரியவில்லை.  என்ன அவஸ்தை இது என்று தோன்றியது.

நான் பொதுவாக மாம்பலத்திலேயே காரில் வலம் வருபவன்.  மிஞ்சி மிஞ்சிப் போனால் டி நகர் செல்வேன்.  மற்றபடி எங்குமில்லை. ஏன் நேற்று மட்டும் இதுமாதிரி மாட்டிக்கொண்டேன்.  இதுமாதிரி ஒன்று நடக்கப் போவதை ஏன் ஞானக்கண் மூலம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது.  வண்டியின் உள்ளேயே இருந்து எப்எம் எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்.  என் கையில் எந்தப் புத்தகமும் இல்லை படிக்க.  என்னை மாதிரி அவஸ்தைப் பட்ட பலரை சந்தித்தேன்.  பஸ்களில் பயணம் செய்த பலரும் பஸ்ûஸவிட்டுப் போய்விட்டார்கள். என் நண்பர் வைத்தியநாதனுடன் சிறிது நேரம் பேசினேன். அவர் நடந்தே மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்குச் சென்றுவிடுவேன் என்று சொன்னார்.

கூட்டத்தைக் களைக்க போலீசார்கள் லேசாக தடியடி அடிக்க ஆரம்பித்தவுடன், கூட்டம் கலைந்து விட்டது. பின் மாலை ஆறுமணி சுமாருக்க மெதுவாக வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து விட்டேன்.  வண்டியை விட்டுவிட்டு என் வீட்டிற்குச் சென்றபோது, நானோ என்னுடைய நண்பனாக மாறிவிட்டதாகத்தான் தோன்றியது.  இனிமேல் எளிதாக என் நானோ வசப்படும் என்றும் நினைத்தேன். ஆனால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் என் பங்காக நானும் மாட்டிக்கொண்டேன்.

40வது புத்தகக் காட்சியும், ஜல்லிக்கட்டும்…

அழகியசிங்கர்

 

ஒரு வழியாக 40வது சென்னைப் புத்தகக் காட்சி நிறைவு அடைந்து விட்டது.  ஆரம்பிக்கும்போது எதிர்பாராத அப்பாவின் மரணம் என்னை இதில் கலந்துகொள்ள முடியாமல் செய்து விட்டது.  கிருபானந்தன் என்ற நண்பர் மூலம் சிறப்பாகவே நடந்து முடிந்து விட்டது.  இன்னும் பல நண்பர்கள் உதவி செய்தார்கள். புத்தகக் காட்சி யில் கலந்துகொண்ட நண்பர்களுக்கு நான் மதிப்பெண்கள் வழங்குவது வழக்கம்.  அந்த வழியில் கீழ்க்கண்டவாறு மதிப்பெண்கள் வழங்குகிறேன் :

கிருபானந்தன்          101%

பிரபு மயிலாடுதுறை 55%

ஜீவா                 55%

கல்லூரி நண்பர்

சுரேஷ்                 90%

சுந்தர்ராஜன்        60%

வேம்பு                15%

பெருந்தேவி           2%

அழகியசிங்கர்         10%

பாயின்ட் ஆப் சேல்ஸ் மெஷின் ரொம்ப உபயோகமாக இருந்தது.  விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாகவும், சாதாரண நாட்களில் கூட்டம் குறைவாகவும் இருந்தது.  ஏர் இந்தியாவில் பணிபுரிந்து ஓய்வுப்பெற்றவர் எங்களிடம் புத்தகங்கள் வாங்கி எடுத்துக்கொண்டு போகாமல் விட்டுவிட்டுச் சென்று விட்டார்.  நாங்களும் அவருடைய தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோம்.

முதல் இரண்டு மூன்று நாட்கள் கூட்டங்கள் நடத்தினோம்.  பின் போரடித்து விட்டது.  இந்த முறை கிருபானந்தன் நீட்டாக இடத்தை பயன்படுத்தி உள்ளார்.  கசாமுசா இல்லை.  ஸ்டில் ராக்ஸ் எல்லாம் நன்றாகப் பயன்படுத்தி உள்ளார்.  இடம் விஸ்தாரமாக இருந்தது.  புத்தகங்கள் பார்வையில் படும்படி இருந்தது.  எப்போதும் புத்தகம் வைத்திருக்கும் இடம் குழப்பமாக இருக்கும்.  லாப்டாப் எடுத்துக்கொண்டு வந்து விற்பனையையும் குறித்துக்கொண்டு வந்துள்ளார்.

********

புத்தகம் வாங்க வந்த வழக்கறிஞர் ஒருவரிடம் ஜல்லிக்கட்டு பற்றி  பேசிக்கொண்டிருந்தேன்.  அவர் சொன்ன கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.  ‘முதலமைச்சரும், பிரதமரும் நினைத்தால் எந்தவித எதிர்ப்பின்றியும் இந்தப் பிரச்சினைய தீர்க்கலாம்’ என்று.  கேள்விப்படாத கூட்டமாக உள்ளது மெரினாவில் கூடிய கூட்டம்.  தலைவர் என்று இல்லாமல் கூட்டு முயற்சியில் இதை சாதிக்க முடியும் என்பதை இளைஞர்கள் நிரூபித்துள்ளார்கள்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்குவது என்பதை கற்பனைசெய்து பார்க்க முடியாத காட்சியாக இருக்கும்.  துள்ளும் காளைகள், ஓடிப்பிடித்து அடக்க முயற்சி செய்ய விழையும் இளைஞர்கள், அதை ரசிக்க கூட்டமாய் கூடும் கூட்டம்.

புத்தகக் காட்சியும் ஜல்லிக் கட்டு மாதிரிதான்.  கூட்டம் கூட்டமாக வரும் புத்தக விரும்பிகள் மனது வைத்தால் ஒரு பார்வை பார்த்தால் புத்தகமெல்லாம் விற்றுத் தீர்ந்து விடும்.

*********

நேற்று எழுத்தாளர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் படைப்பாளிகள் பலர் ஒன்று சேர்ந்து சிவன் பூங்காவில் ஜல்லிக் கட்டு நடைபெற போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தரக் கூடினோம்.  மாலை ஐந்து மணிக்கு. ராமகிருஷ்ணன் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால், முழுவதும் அது குறித்து பல விவரங்களைச் சேகரித்துப் பேசுவார்.  ஜல்லிக்கட்டு விஷயத்திலும் அப்படித்தான்.  பலர் கலந்துகொண்ட இக் கூட்டம் சிறப்பாக நடந்தது.  தினமும் யோக சொல்லிக்கொள்ளும் ஒரு கூடத்தில் அமர்ந்துகொண்டு விவாதித்தோம்.  எனக்கு ஜல்லிக்கட்டு பற்றி ஒன்றும் தெரியாது.  அது வீர விளையாட்டா விபரீத விளையாட்டா என்பது கூடத் தெரியாது.  சி சு செல்லப்பா வாடிவாசல் என்ற சிறிய நாவல் எழுதியிருக்கிறார் என்பதுதான் தெரியும். ஆங்கிலத்தில் ஹெமிங்வே எழுதிய புத்தகம் கூட சிறப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை இப்போது எடுத்துப் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. தொடர்ந்து அந்த இடத்தில்  கூட்டம் ஏற்பாடு செய்யலாம்.  வேடியப்பன்தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.

***********

நான் எப்போதும் புத்தகக் காட்சி முடிந்த அடுத்தாநாள்தான் புத்தகங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வருவேன்.  20ஆம் தேதி கடைஅடைப்பு.  வேன்கள் ஓடாது என்ற நிலையில் திகைத்தேன்.  ஆனால் எனக்கு எப்போதும் உதவி செய்யும் வேன் டிரைவர் ஒருவரைக் கூப்பிட்டேன்.  புத்தகங்களையும் ராக்ûஸயும் எடுத்து வர உதவி செய்தார்.   சோனி காமெராவில் வழக்கம்போல் நண்பர்களைப் படம் பிடித்திருக்கிறேன்.  ஆனால் காமெராவிலிருந்து இந்த கம்ப்யூட்டருக்கும் மாற்றும் வித்தை தெரியவில்லை.

 

எப்போது புத்தகம் படிக்கப் போகிறீர்கள்….

எப்போது புத்தகம் படிக்கப் போகிறீர்கள்….

அழகியசிங்கர்

ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின்போது என் நண்பர்களைச் சந்திப்பது வழக்கம்.  அதன்பின் அடுத்த ஆண்டுதான் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.  என் புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களைப் பார்த்துக் கேட்பேன் :

‘எப்போது புத்தகம் படிக்கப் போகிறீர்கள்?’ என்று.

ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியில் பலரும் புத்தகங்களை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.  சிலர் 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி சேகரித்துக் கொள்வார்கள்.  நானும் ஒரு பைத்தியம்.  ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின்போது புத்தகங்கள் வாங்காமல் இருக்க மாட்டேன்.

சரி ஒரு புத்தகத்தை உடனடியாக படித்து விட முடிகிறதா? நிச்சயமாக இல்லை.  புத்தகம் வாங்கும் பலரை நான் ஒரு கேள்வி கேட்பது உண்டு.  போன ஆண்டு நீங்கள் வாங்கிய புத்தகங்களைப் படித்து விட்டீர்களா? என்று.  யாரும் படித்து விட்டேன் என்று சொல்ல மாட்டார்கள்.  கொஞ்சம் படித்து விட்டேன்.  இன்னும் படிக்க வேண்டும் என்பார்கள்.  இன்னும் சிலரோ இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டுமென்பார்கள்.  பெரும்பாலோர் நேரம் கிடைப்பதில்லை என்றுதான் சொல்வார்கள்.

பெரும்பாலோர் அவர்களுக்குப் பிடித்தப் புத்தகங்களைத்தான் வாங்குவார்கள்.  ஆனால் படிப்பதில் ஏனோ ஒருவிதத் தயக்கம் அல்லது வேகம் இல்லாமல் போவது ஏன்?

அதனால் கீழ்க்கண்ட அறிவுரைகளை புத்தகம் படிக்கும் அன்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் (எனக்கும் இந்த அறிவுரைகளைச் சொல்லிக்கொள்கிறேன்) :

1. நீங்கள் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை உங்கள் பார்வையில் எப்போதும் படும்படி வைத்திருங்கள்.  நீங்கள் எடுத்துப்

படிக்கிறீர்களோ இல்லையோ உங்கள் பார்வையில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

2. நீங்கள் கவிதைப் புத்தகங்களை விரும்புகிறவர்களாக இருந்தால், முதலில் கவிதைப் புத்தகங்களை எடுத்து வாசித்துவிடுங்கள்.  ஒரு மாதத்தில் நீங்கள் 4 அல்லது 5 கவிதைப் புத்தகங்களைப் படித்துவிடலாம்.

3. நீங்கள் அலுவலகம் போவராக இருந்தால், அலுவலகம் போகும்போது கிடைக்கும் நேரத்தில் படிக்கலாம்.  ஆனால் அலுவலகத்தில் மட்டும் புத்தகத்தை எடுத்தப் படித்து விடாதீர்கள்.  உங்களை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.

4. என்னைப் போல வீட்டில் சும்மா இருப்பவராக இருந்தால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புத்தகத்தைப் படிப்பது என்று தீர்மானமாக இருங்கள்.

5. தேர்வு எழுதும்போது எப்படி மாணவர்கள் முனைப்புடன் செயல்படுகிறார்களோ அதேபோல் புத்தகம் படிப்பதிலும் முனைப்புடன் செயல்படுங்கள்.

6.  உங்கள் எழுத்தாள நண்பர்கள் யாராவது உங்களுக்குப் புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்வார்கள்.  அவர்கள் நீங்கள் படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்வீர்கள் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள்.  அவர்கள் புத்தகங்களை உடனடியாகப் படித்து விடுங்கள். அபிப்பிராயமும் சொல்லிவிடுங்கள். ஒருவர் முயற்சியை நாம் ஆதரிக்க வேண்டுமென்று இதை சொல்கிறேன். நான் அதுமாதிரி என் கதைப் புத்தகங்களைக் கொடுத்து விட்டு, அதைப் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்கிறேன்.

7. வேலைக்குப் போகிறவர்கள் சனி, ஞாயிறுகளில் நிறையா நேரம் கிடைக்கும்.  அந்த நேரத்தில் புத்தகங்களைப் படித்து விடலாம்.

8. புத்தகம் படிக்க நீங்கள் ஒரு தீர்மானம் வைத்துக்கொள்ளுங்கள்.  மாதத்திற்கு ஒரு புத்தகம் எப்படியாவது படிக்க வேண்டுமென்ற தீர்மானம்தான் அது.  அந்தத் தீர்மானத்துடன் புத்தகத்தைப் படித்தீர்கள் என்றால், புத்தகத்திலேயே தேதியைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.

9. தயவுசெய்து நீங்கள் படித்தப் புத்தகங்களை யாருக்கும் இரவல் கொடுக்காதீர்கள்.  இரவல் கொடுத்தால் உங்களுக்குத் திரும்பவும் புத்தகம் கிடைக்காது.  மேலும் அப் புத்தகத்தை அவர்கள் வாங்கி வைத்துக்கொள்வார்களே தவிர, படிக்க மாட்டார்கள்.  தி ஜானகிராமனின் மரப்பசு என்ற நாவலை அப்படித்தான் இரவல் கொடுத்தேன்.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய முயற்சி செய்து அந்தப் புத்தகத்தை மீட்டேன்.  அப் புத்தகம் ரொம்பவும் மோசமான நிலையில் கிடைத்தது.

10. நீங்கள் வாங்கிப் படிக்கும் புத்தகத்தைப் படித்தவுடன் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால் அது குறித்து எந்த அபிப்பிராயத்தையும் வெளியே பிறர் காதுபடி சொல்லாதீர்கள்.  அப்படிச் சொல்வது எழுதுபவர்களுக்குத் துன்பத்தைத் தரும். அதேபோல் ஒரு புத்தகம் உங்களுக்குப் பிடித்திருந்தால், மனம் திறந்து பாராட்டுங்கள்.

11.  ஒரு புத்தகக் காட்சியில் நீங்கள் வாங்கிய புத்தகங்களைப் படிக்கமுடியாவிட்டால் கவலைப் படாதீர்கள்.  அடுத்தப் புத்தகக் காட்சியிலும் புத்தகம் வாங்குவதைத் தவிர்க்காதீர்கள்.  புத்தகத்தைச் சேகரிப்பது வேறு, புத்தகம் படிப்பது வேறு என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

இன்னும் எதாவது உங்களுக்குத் தோன்றினால் குறிப்பிட வேண்டுமென்று தெரிவித்துக்கொள்கிறேன்.

அப்பா இல்லாத புத்தகக் காட்சி

 

அழகியசிங்கர்

சரியாக அப்பா 40வது புத்தகக் காட்சி ஆரம்பிக்கும் தருணத்தில் இறந்து விட்டார்.  எப்படியோ 2016ஆம் ஆண்டைத் தாண்டிவிட்டாரே என்று நான் ஆச்சரியப்பட்டேன்.  ஒரே ஒரு முறைதான் அப்பாவை புத்தகக் காட்சிக்கு அழைத்து வந்து என் ஸ்டாலில் அமர வைத்திருக்கிறேன். எப்படி அவரை அழைத்து வந்தேன் என்பது ஞாபகத்தில் இல்லை.

ஆனால் ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போது அப்பா அன்று எவ்வளவு விற்றது என்று கேட்டுக்கொள்வார்.  பின் நான் விற்றத் தொகையைச் சொன்னால் ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொள்வார். பின் ஒவ்வொரு நாளும் கூட்டுத் தொகையைச் சொல்லிக்கொண்டு வருவார்.  நான் இரவு பத்து மணிக்கு வந்தபோதும் எழுதி வைத்துக்கொண்டு இதுவரை எவ்வளவு என்று சொல்வார்.  இந்தப் புத்தகக் காட்சியின்போதுதான் அவர் இல்லை.  அவர் புத்தகக் காட்சி பொங்கல் எல்லாம் முடிந்து போயிருக்கலாம்.  ஏன் அவசரம் என்று தெரியவில்லை?  சீக்கிரம் தன்னை அழைத்துக்கொண்டு போனால் தேவலை என்பதுபோல் அவர் நம்புகிற கடவுளை வேண்டிக்கொள்வார் அடிக்கடி. என் பேர்த்தியின் முதல் பிறந்தநாள் முடிவதுவரை இருந்து விட்டு ஆசிர்வாதம் செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார். ஒரு மனிதர் படுத்தப்படுக்கையாக அசையாமல், கண் விழித்துக்கொண்டு எப்படி அப்படி இருந்தார் என்பது தெரியவில்லை.   அவருக்கு இரவும் தெரியவில்லை பகலும் தெரியவில்லை.  ஆயிரம் முறை எனக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்பார்.

                                                                                                                                             **********

நேற்று விருட்சம் 101வது இதழ் வெளியீட்டு விழா என்று அறிவித்திருந்தேன். ஒவ்வொரு நாளும் எதாவது ஒன்றை ஆரம்பித்து புத்தகக் காட்சி சாலையில் நடத்த வேண்டுமென்று என் திட்டத்திற்கு குவிகம் நண்பர்கள் வரவேற்றார்கள்.  அவர்கள்தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.  முதல்நாள் கூட்டத்தில் 101வது இதழ் வெளியீட்டு விழா.  எனக்கு பல எழுத்தாளர்கள் நண்பர்கள்.  அவர்களில் சங்கரநாராயணன் அவர்களைக் கூப்பிட்டு இதழை வெளியிட அழைத்தேன்.  முன்னதாகவே யாரையெல்லாம் கூப்பிட்டு பேச அழைப்பது பற்றி என்ற பிரச்சினை ஆரம்பித்தபோது, நாம் யாரையும் இதற்காகக் கூப்பிட முடியாது.  புத்தகக் காட்சிக்கு யார் வருகைத் தருகிறார்களோ அவர்களை வைத்துத்தான் கூட்டம் நடத்த முடியும் என்பதைத் தீர்மானித்தேன்.  101வது இதழ் வெளியிட்டு விழாவிற்கு எழுத்தாளர் சங்கரநாராயணனை கூப்பிட்டுப் பேச அழைத்தேன்.  இது ஒரு சந்திக்கிற நிகழ்ச்சி.  சக எழுத்தாளர்களை மதிப்பது.  வாசகர்களை மதிப்பது என்பதுதான் இதன் நோக்கம்.

சங்கரநாராயணன் இருவாட்சி ஸ்டாலிலிருந்து வருவதற்கு தாமதமாகி விட்டது.  மணி 7க்கு மேல் போய்விட்டது.  என் இன்னொரு எழுத்தாள நண்பர் பா ராகவன்.  அவரைக் கூப்பிட்டு 101வது இதழை வெளியிட கேட்டுக்கொண்டேன்.  அவரும் ச சீ சிவக்குமாரும் வந்திருந்தார்கள்.  பா ராகவனை அவரிடம் விருட்சம் 101வது இதழைக் கொடுக்கச் சொல்லி பேசச் சொன்னேன்.  சில வார்த்தைகள் பா ராகவனும், ச சி சிவக்குமாரும் பேசினார்கள்.  இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், சங்கர நாராயணனும் வந்து விட்டார்.  அவரையும் 101வது இதழை வெளியிடச் சொன்úன்.  இதுபோல் இரண்டு முறை ஒரு பத்திரிகையை வெளியிட்டப் பெருமை விருட்சத்திற்குத்தான் உண்டு.

இந்தப் புத்தகக் காட்சியில் யார் எது பேசினாலும் அதன் தன்மை என்ன என்பதை ஆராய்வது என் வழக்கம்.  பா ராகவன் சொன்ன ஒரு கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  எந்தப் புத்தகமும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற கருத்தை.  இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  தமிழில் நாம் நினைப்பதை விட அதிகமாகவும் புதியதாகவும் பலர் எழுதிக்கொண்டு போகிறார்கள்.  எழுத்து என்பது ஒரு வெளிப்பாடு.  அந்த வெளிப்பாட்டை பலவித முறைகளில் பலரும் வெளிப்படுத்துகிறார்கள்.  அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்.

                                                                                         *********

இந்த முறை புத்தகக் காட்சியை ஒட்டி இன்னும் இரண்டு புத்தகங்களைக் கொண்டு வர முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.  ஆனால் அந்தப் புத்தகங்களும் வந்து விட்டன.   ஸ்ரீகுமாருக்கு என் நன்றி.  ஒரு புத்தகம் கநாசுவின் அவதூதர்.  இன்னொரு புத்தகம் நகுலன் அவர்களின் குருஷேத்ரம். நகுலனின் குருஷேத்ரம் ஒரு இலக்கியத் தொகுப்பு.  அவரால் மே 1968ல் கொண்டு வரப்பட்ட புத்தகம்.  அதை அப்படியே கொண்டு வர முயற்சி செய்து கொண்டு வந்துள்ளேன்.  423 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.300தான்.

கநாசுவின் நாவல்களை ஒவ்வொன்றாகக் கொண்டு வர வேண்டும் என்பது என் ஆசை.  அவருடைய ஆட்கொல்லி நாவலை கொண்டு வபந்தேன்.  அடுத்த நாவலாக அவதூதர் நாவலைக் கொண்டு வந்துள்ளேன்.   274 பக்கங்கள் கொண்ட அவதூதர் விலை ரூ.250தான்.

இன்று மாலை 5.30 மணிக்கு பெருமாள் முருகன் பெருந்தேவியின் வாயாடிக் கவிதைகள் என்ற புத்தகத்தை வெளியிட அதை ஸ்ரீகுமார் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.

கிருபானந்தனும் நண்பர்களும் விருட்சம் ஸ்டாலைப் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஞானக்கூத்தனின் இம்பர் உலகம்

 

அழகியசிங்கர்

 

இந்த முறை 40வது புத்தகக் காட்சியில் என்னுடைய ஸ்டால் எண் 600. முதன் முறையாக எளிதில் மறக்க முடியாத எண் கிடைத்துள்ளது. திடீரென்று யாராவது உங்கள் கடை எண் என்ன என்று கேட்டால் 600 என்று சொல்லிவிடுவேன். இது மாதிரியான எண் கிடைத்ததற்கு கடவுளின் கிருபை என்றுதான் நினைக்கிறேன். என் கடையில் புத்தகமே விற்கவில்லை. யாரும் எட்டிப் பார்க்கவில்லை என்று புலம்புவதை விட்டு, என் கடை எண்ணை எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் விருட்சம் கடை எண் என்ன என்று யாராவது கேட்டால் திருதிருவென்று விழிப்பேன். அல்லது தப்பாக எதாவது சொல்லி விடுவேன். ஆனாலும் அப்படி சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. கடை எண்ணை கேட்பவர்கள் எல்லோரும் என் கடைக்கு வந்தும் விட மாட்டார்கள்.
பல ஆண்டுகளாக இந்தப் புத்தகக் காட்சியுடன் தொடர்பு கொண்டுள்ளேன். அளவு குறைவாக புத்தகங்கள் போட்டு அளவு குறைவாகத்தான் விற்பனை செய்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் புத்தகக் காட்சி பல அனுபவங்களை எனக்குக் கற்றுத் தராமல் இல்லை.
ஆனால் அதற்கு நான் செய்யும் ஆர்ப்பாட்டம் இருக்கிறதே தாங்க முடியாது யாராலும். கடைக்கு யாராவது வந்தால் அவர்களை புகைப்படங்களாக எடுத்துத் தள்ளுவேன். சிலசமயம் புத்தக வெளியீட்டுக் கூட்டம் நடத்துவேன். சில சமயம் ஒன்றும் தோன்றாமல் பிரமைப் பிடித்தாற்போல் உட்கார்ந்திருப்பேன். புத்தகக் காட்சி முடிந்து வீட்டிற்கு வந்தால் போதும் அப்பாடா என்று இருக்கும். இப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் என்பதால், பலமுறை சுற்றி சுற்றி வர வேண்டும்.
எனக்கு கிருபானந்தம் என்ற நண்பர் ஒன்றை சொல்லிக்கொடுத்திருக்கிறார். அதாவது தோசை. ஒரு சாதா தேசையை மட்டும் சாப்பிட்டுவிட்டு மாலை நேரத்தை ஓட்டிவிடுவார்.
இந்த முறை கிருபானந்தனுடன், பிரபு மயிலாடுதுறை என்ற நண்பரும் வந்து உதவி செய்வதாக சொல்லி உள்ளார்கள். அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம்தான் நான் புத்தகக் காட்கியில் இருக்க வேண்டுமாம்.
இந்த முறை யாரிடமும் பணம் இருக்கப் போவதில்லை. கார்டை தீட்டப் போகிறார்கள். நான் கார்டைத் தீட்டுகிற மெஷினை வாங்குவதற்கு கடந்த 2 வாரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என் விடா முயற்சியில் வெற்றி அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை.
பணம் தீட்டற மெஷின் கிடைக்கவில்லை என்றால் புத்தகக் காட்சி ஒருவிதமாக மாறிவிடும். எல்லோரும் பார்த்துவிட்டு பார்த்துவிட்டுப் போவார்கள். யாரும் ஒன்றும் வாங்க மாட்டார்கள்.

இந்தப் புத்தகக் காட்சியில் நான் அதிகமாக கவிதை நூல்களாகக் கொண்டு வந்துள்ளேன். நான் ஒவ்வொரு புத்தகமாக அறிமுகப் படுத்த விரும்புகிறேன். ஞானக்கூத்தனின் இம்பர் உலகம் என்ற புத்தகத்தை முதலில் அறிமுகப்படுத்துகிறேன்.
ஞானக்கூத்தன் போன ஆண்டு ஜனவரி மாதம் என்னிடம் அவருடைய டைரியில் எழுதிய கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டு வர கொடுத்தார். அப்போது என்னால் முடியவில்லை. டிடிபி பண்ணுகிறவரிடம் கொடுத்தேன். அவரால் ஞானக்கூத்தன் கையெழுத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கும் அந்தப் பிரச்சினை இருந்தது.
அப்போது ஜøன் மாதம் நடந்த புத்தகக் காட்சியின் (39வது) போது அவருடைய கவிதைத் தொகுதியைக் கொண்டு வர முடியவில்லை. அவருக்கு வருத்தம். அப்போது நான், üகொஞ்சம் அவசரப் படாதீர்கள். வரும் ஜனவரி 2017ல் கொண்டு வந்து விடுகிறேன்,ý என்றேன். அவருக்கு மனம் சமாதானம் ஆகவில்லை. ஆனால் அவர் இறந்து விடுவார் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இத் தொகுதியில் மொத்தம் 130 கவிதைகள் எழுதி உள்ளார். 182 பக்கங்களில் இத் தொகுப்பு வந்துள்ளது. இதன் விலை ரூ.170.
இத் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை இங்கு தரலாமென்று நினைக்கிறேன்.
யார் கை?

நான்கா? எட்டா? பன்னிரண்டா?
கடவுளுக்குக் கைகள் எத்தனை உண்டு.
எத்தனைக் கைகள்
கடவுளுக்கு இருந்தாலும்
அவற்றில் இரண்டு
மனிதா
உன்னுடையவைதாம்.

ü

சுசீலாவும் பிறரும்

மௌனியும் சுசீலாவும்
தெருவில் நடந்தால்
மக்கள் எல்லோரும்
சுசிலாவைப் பார்ப்பார்கள்.
நகுலனும் சுசீலாவும்
தெருவில் நடந்தால்
மக்கள் எல்லோரும்
சுசீலாவைப் பார்ப்பார்கள்
மௌனியும் நகுலனும்
தெருவில் நடந்தால்
சுசீலா ஏன் வரவில்லை எ;னறு
மக்கள் தெருவில் தேடுவார்கள்
சுசீலாவும் தோழியும்
தெருவில் நடந்தால்
மௌனியும் நகுலனும்
வரவில்லை என்று
மக்கள் மகிழ்வார்கள்
நானும் சுசீலாவும்
தெருவில் நடந்தால் மக்கள்
என்னையே பார்ப்பார்கள்
எப்படி இவளை இவன்
பிடித்தான் என்று.

எனக்குத் தெரியும் இந்தக் கவிதைகளைப் படித்தப்பின் இந்தப் புத்தகம் வாங்கவேண்டுமென்று உங்களுக்குத் தோன்றியிருக்கும். என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டால், புத்தகம் கிடைக்க வழி சொல்வேன். என் தொலைபேசி எண்கள் : 9444113205, 9176613205.

 

புத்தாண்டு கவிதைகளும் புனிதமில்லா கவிதைகளும்…..

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்து ஒரு கவிதை அனுப்பினார். போனில் புத்தாண்டு வாழ்த்துக் கவிதை அனுப்பி உள்ளேன் என்றார். நான் படிக்கவே இல்லை. சிறிது நேரம் கழித்து, ‘நீங்கள் படிக்கவில்லையா?’ என்று கேட்டார். ‘இல்லை,’ என்றேன். ‘ஏன்?’ என்று கேட்டார். ‘அதெல்லாம் சரியா வராது,’ என்றேன். நண்பருக்கு என் மேல் வருத்தம் ஏற்பட்டிருக்கும். இருந்தாலும் அவர் மனம் நோகக்கூடாது என்று அந்தக் கவிதையை எடுத்துப் படித்துப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த மாதிரியே அந்தக் கவிதை இருந்தது.
அதேபோல் கல்யாணத்திற்கு, கவிதை எழுதுபவர் போனார் என்றால் ஒரு கவிதை எழுதி கண்ணாடிச் சட்டம் போட்டு கவிதையை அன்பளிப்பாகக் கொடுத்துவிடுவார். அதைப் போல் அபத்தம் எதுவுமில்லை என்று கவிதை எழுதுபவருக்கு ஏனோ தெரிவதில்லை. மேலும் கவிதை யார் மீது எழுதப்பட்டிருக்கிறதோ அவர் சிறிதும் ரசனை இல்லாதவராக இருந்தால் பெரிய ஆபத்து. இன்னும் சிலர் யாராவது மரணம் அடைந்துவிட்டால் உடனே ஒரு துக்கக் கவிதை எழுதி விடுவார். பண்டிகைகளை முன்னிட்டு எத்தனைபேர்கள் எத்தனை விதமாய் கவிதைகள் எழுதி உள்ளார்கள். கவிதையைக் கிண்டல் செய்வதோடல்லாமல் பண்டிகைகளையும் கிண்டலடிக்கிறார் என்பது ஏனோ தெரிவதில்லை.
அப்படியென்றால் கவிதை என்றால் எதை வைத்துக்கொண்டுதான் எழுதுவது என்ற கேள்வி எழத்தான் செய்யும். உங்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். தானாகவே கவிதை வரும். முன்பெல்லாம் பட்டிமன்றத்தில் ஒரு தலைப்பு கொடுத்து கவிதை வாசிக்கச் சொல்வார்கள். பெரும்பாலும் கல்லூரிகளில் இந்த அபத்தம் நடைபெறும். அப்படி பட்டிமன்ற கவிதை வாசிப்பு இப்போது போன இடம் தெரியவில்லை. சரி நான் புத்தாண்டை ஒட்டி சில கவிதைகளை எழுத முயற்சி செய்கிறேன். சரியாக வருகிறதா என்று பார்க்கலாம்.

 

கவிதை 1

புத்தாண்டு தினமே
வருக வருக
நீவிர் வந்த வேளை
எங்கள் வீட்டில் கேஸ் சிலிண்டரில்
கேஸ் இல்லை
ஞாயிற்றுக்கிழமை வேறு
தஞ்சாவூர் மெஸ்ஸிற்குப் போகவேண்டும்
அத்தனைப் பேருக்கும் சாப்பாடு வாங்க..

 

கவிதை 2

எங்கள் தெருவில்
இரவு பன்னிரண்டு வரைக்கும் காத்திருந்தார்கள்
ஹோ என்று சத்தம் போட்டபடியே பேசிக்கொண்டிருந்தார்கள்
சிலர் கோலம் போட்டுக்கொண்டிருந்தாரகள்
முள் பன்னிரண்டைத் தொட்டவுடன்
படபடவென்று பட்டாசு வெடித்துத் தள்ளினார்கள்
புத்தாண்டு வந்து விட்டதாக கூக்குரலிட்டார்கள்
என் தூக்கம் கெட்டது

 

கவிதை 3

புத்தாண்டில் நான் மாற விரும்புகிறேன்
தினமும் டைரி எழுத விரும்புகிறேன்
காலையில் வாக் செய்து என் டயப்படிக்கை
குறைக்க விரும்புகிறேன்
குறைவாக சாப்பிட விரும்புகிறேன்.
யாருடனும் அளவாய் பேச விரும்புகிறேன்
சரி சரி அளக்காதே

என் நண்பர் ஒருவருக்கு திருமணம். அவருக்கு நான் கவிதை எழுதினால் எப்படி இருக்கும்.

கவிதை 1

நீ கையைப் பிடிக்கும் பெண்ணின் பொருட்டு
சொல்கிறேன்
திருமணத்திற்குப் பிறகாவது
நீ திருந்தி வாழ முயற்சி செய்
உன்னைப் பற்றி ஜம்பம்
அடித்துக்கொள்ளாதே
குடிக்காதே
சிகரெட் பிடிக்காதே
அவ்வாறெல்லாம் செய்யாமல் இருந்தால்
உன்னை விட்டு அந்தப் பெண் போய்விடுவாள்
உனக்கு என் கல்யாண வாழ்த்துகள்

மணமகள் எனக்குத் தெரிந்தவர். அவருக்கு என் வாழ்த்துகள்.

கவிதை 2

நான் எழுதும் கவிதை இது
சீர்காழியில் உன்னைப் பார்த்தபோது
எளிமையின் வடிவமாய் இருந்தாய்
ஆலப்புழை மாற்றல் பெற்று
நீ சென்றபின்
என்னை அழைப்பாய் என்று நினைத்தபோது
உன் கல்யாணப் பத்திரிகை வந்து சேர்ந்தது
எங்கிருந்தாலும் நீ வாழ்க
உண்மை கவிதைகள் மேலே குறிபப்பிட்டபடி இருக்கலாம். ஆனால் பொய்யாக கண்ணாடியில் சட்டமிட்ட கவிதைகளை மணமகனுக்கோ மணமகளுக்கோ ஆஹா ஓஹோவென்று எழுதப்பட்டிருக்கலாம்.
ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், காரணத்தை வைத்து கவிதைகள் எழுதுவதை விட்டுவிடுங்கள் என்பதற்காகத்தான்.

 

இன்று பாரதியார் பிறந்த தினம்

நான் கிருத்துவக் கல்லூரியில் படித்தக் காலத்தில், கல்லூரி நூல் நிலையத்திலிருந்து பாரதியாரின் கட்டரைத் தொகுப்புகளைப் படிப்பேன்.  பெரும்பாலும் மின்சார வண்டியில் வந்துகொண்டிருக்கும்போது படிப்பது வழக்கம்.  நான் கெமிஸ்டிரி படிக்கும் மாணவனாக இருந்தாலும், தமிழில் உள்ள ஆர்வத்தால் தமிழ்ப்புத்தகங்களை அதிகமாகப் படிப்பேன்.  பாரதியாரின் கவிதைகளை விட நான் விரும்பிப் படித்தது அவருடைய உரைநடை நூல்கள்தான்.

பெ தூரன் அவர்கள் தொகுத்தக் கட்டுரை நூல்களை நான் விரும்பிப் படித்திருக்கிறேன்.  இன்று அவருடைய பிறந்தநாள்.  பாரதியார் எப்போதும் எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எழுதுபவர்.
பொதுவாக பத்திரிகையில் பணிபுரிபவர்கள்தான் தொடர்ந்து எதாவது எழுதும்படி நேர்கிறது.  பத்திரிகை தொடர்பு இல்லாதவர்களுக்கு அதுமாதிரியான நிர்ப்பந்தம் எதுவும் இல்லை.  பாரதியாருக்குப் பத்திரிகை தொடர்பு இருந்ததால் எல்லாவற்றையும் அவர் எழுதி இருக்கிறார்.  அவர் எழுதியதை இப்போது படிக்கும்போது அவர் எழுதிய காலத்திலும் சரி, இப்போதும் சரி, அது எந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது என்பதை அறிய முடிகிறது.
பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோதுதான் பலவற்றை எழுதி உள்ளார்.  பல மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார், கவிதைகள் எழுதியிருக்கிறார், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  அவர் கூட்டத்தில் பேசிய பேச்சுக்கள்  சுதேசமித்திரன் பத்திரிகையில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.
எல்லாவற்றையும் தொகுத்து சீனி. விசுவநாதன் பாரதியின் படைப்புகள் என்று 11 தொகுதிகள் மேல் கொண்டு வந்துள்ளார். எல்லாவற்றையும் தொகுத்த விஸ்வநாதன், தொகுத்தக் கட்டுரைகளுக்கு அடிக்குறிப்புகளும் கொடுத்திருக்கிறார்.  பத்தாம் தொகுதியிலிருந்து ஒரு சிறிய பகுதியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
வயி. சு ஷண்முகம் செட்டியாருக்கு எழுதிய கடிதம்.
ஸ்ரீமான் வயிசு.ஷண்முக செட்டியாருக்கு ஆசிர்வாதம்
1…..
2. பகவத் கீதையை அச்சுக்கு விரைவில் கொடுங்கள்.  தங்களுக்கு இஷ்டமானால் அதற்கு நீண்ட விளக்கம் எழுதியனுப்புகிறேன்.  நீண்ட முகவுரையும் எழுதுகிறேன்.
(கீதைக்கு) புஸ்தக விலை ரூ.1க்குக் குறைந்து வைக்க வேண்டாம்.  தடித்த காயிதம்; நேர்த்தியான அச்சு; பெரிய எழுத்து; இட விஸ்தாரம் – இவை கீதைக்கு மட்டுமேயன்றி நாம் அச்சிடப்போகும் புஸ்தகங்கள் எல்லாவற்றுக்கும் அவசியம்.
3. ஆங்கிலக் கவிகள், ஆசிரியரின் காவியங்களும், கதைகளும் இங்கிலாந்தில் எப்படி அச்சிடப் படுகின்றனவோ, அப்படியே நம் நூல்களை இங்கு அச்சிட முயல வேண்டும்.  அங்ஙனம் அச்சிட ஒரு ரூபாய் விலை போதாதென்று அச்சுக்கூடத்தார் அபிப்பிராயங் கொடுக்கும் பக்ஷத்தில் புஸ்தக விலையை உயர்த்துவதில் எனக்கு யாதோர் ஆúக்ஷபமுமில்லை.
4. பஞ்சாலி சபதத்திற்கு முகவுரை (இரண்டாம் பதிப்புக்கு) இன்னும் சில நாட்களில் அனுப்புகிறேன்.
தம்பி, இந்தப் பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகம் கையெழுத்துப் பிரதி அனுப்பி யிருப்பதைச் சோமபலின்றி தயவுசெய்து ஒருமுறை முற்றிலும் படித்துப் பாருங்கள்.  பிறகு அதை மிகவும் ஆச்சரியமாகவும் அழகாகவும் அச்சிடுதல் அவசியமென்பது தங்களுக்கே விசதமாகும்.
5…..
புதுச்சேரியில் (பாடிய) பாட்டுக்கள் அனைத்தையும் இங்கு குழந்தை தங்கம்மா தன்னுடைய நோட் புக்குகளில் எழுதி வைத்திருக்கக் கண்டு, அதைப் புதையல்போல் எடுத்து வைத்திருக்கிறேன்.
தங்களுக்கு மஹா சக்தி அமரத்தன்மை தருக.
தங்களன்புள்ள
சி சுப்பிரமணிய பாரதி
 
இதற்கு பதிப்பாசிரியர் குறிப்பு என்ற பெயரில் சீனி விசுவநாதன் இப்படி குறிப்பிடுகிறார் :
இக் கடிதம், மேலோட்டமாகப் பார்க்கும்போது, நம் நூல்கள் பிரசுரமாக வேண்டும் என்பதில் பாரதி கொண்டிருந்த அக்கறையைப் புலப்படுத்துவதாக உள்ளது என்பதாகத் தோன்றும்.
ஆனால், வெளிப்படும் தம்முடைய நூல்கள் எந்தமாதிரியான வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பதிலும் பாரதி மிகுந்த கவனம் செலுத்திய பதிப்புச் சிந்தனையைப் புலப்படுத்திக் காட்டுவதாகவும் இக் கடிதம் அமைந்துள்ளது.
அச்சும் அமைப்பும் ஆங்கில நூல்களுக்கு இணை சொல்லும்படியாகவும், விலையும் தரத்திற்கு ஏற்றப்படியாயும் இருக்க வேண்டும் என்பதே பாரதியின் ஆசையாகவும் இருந்துள்ளது.
இன்றைய கவிதைக்கு ஆரம்பமாக பாரதியின் வசன கவிதைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது.  பாரதியின் புதுக்கவிதைகள் என்ற பெயரில் நான் தற்போது ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.  இது ஏற்கனவே 1982 ஆம் அண்டு ழ வெளியிடாக வந்துள்ளது. ஞானக்கூத்தனின் முன்னுரையுடன் இப் புத்தகத்தைத் திரும்பவும் கொண்டு வந்துள்ளேன்.  ஞானக்கூத்தன் இப் புத்தகத்தைக் கொண்டுவரும்படி என்னிடம் கேட்டிருந்தார்.  அப் புத்தகத்திலிருந்து ஒரு சிறிய பகுதி.
சிற்றெறும்பைப் பார். 
எத்தனை சிறியது!
அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா அவய
வங்களும் கணக்காக வைத்திருக்கிறது
யார் வைத்தனர்? மஹா சக்தி.
அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன.
எறும்பு உண்ணுகின்றது, உறங்குகின்றது. மணம் செய்து
கொள்கின்றது. குழந்தை பெறுகிறது, ஓடுகிறது,
தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது.
இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்.
மஹா சக்தி காற்றைக் கொண்டு தான் உயிர் விளையாட்டு விளையாடுகின்றாள்.
காற்றைப் பாடுகிறோம்
அஃது அறிவிலே துணிவாக நிற்பது;
உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்களாவது.
உயிரிலே உயிர் தானாக நிற்பது.
வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம்.
நாம் அழிவதில்லை.
காற்றுத் தேவன் வாழ்க.
 

சோ ராமசாமியும் ஜெயகாந்தனும்

அழகியசிங்கர்
நான் எப்போதும் இரண்டு பேர்கள் மேடையில் பேசுவதை ரசிப்பேன்.  ஒருவர் சோ ராமசாமி.  இன்னொருவர் ஜெயகாந்தன்.  ஜெயகாந்தன் ஆரம்ப காலத்தில் மேடையில் இருந்துகொண்டு குஸ்திப்போடுவதைப் போல் பேசுவார்.  அவருடைய சத்தம் ஒருவிதமாக கலகலக்கும்.  அவர் கத்திப் பேசுவதைக் கேட்டால் அவருக்கு ரத்தக் கொதிப்பு நோய் இருந்திருக்கும் என்று நினைக்கத்தோன்றும்.  பேச்சு ஒருவித கலை.  பலருக்கு அது சுட்டுப் போட்டாலும் வராது.  நானும் ஒரு கூட்டத்தில் ஜெயகாந்தன் மாதிரி பேச நினைத்தேன்.  முதலில் சாதாரணமாகப் பேச ஆரம்பித்து, பின் உச்சக் குரலில் கத்திப் பேச ஆரம்பித்தேன்.  அப்புறம்தான் ஒரு கேள்வி கேட்டுக்கொண்டேன்.  என்ன பேசினோம், ஏன் இப்படி கத்திப் பேச வேண்டுமென்று. எனக்கு என் நிலையை நினைத்து வெட்கமாகப் போய்விட்டது.
இன்னொருவர் சோ ராமசாமி.  நான் அவர் கூட்டங்களில் கலந்துகொள்வேன்.  முன்பெல்லாம் எதாவது ஒரு கட்சியை ஆதரித்து அரசியல் மேடையில் பேசுவார்.  அவர் பேசுவதைக் கேட்க அதிகமாக கூட்டம் வரும்.  இயல்பாக நகைச்சுவை உணர்வுடன் அவருக்குப் பேச வரும். கூட்டத்தில் உள்ள அனைவரும் ரசிப்பார்கள்.  தி நகரில் அப்படி ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு கேட்டிருக்கிறேன்.  அவர் பேசுவதைக் கேட்கப் பிடிக்காமல், கூட்டத்தைக் கலைக்க எதாவது எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் செய்வார்கள்.
ஒவ்வொரு முறையும் அவருடைய துக்ளக் கூட்டத்திற்குப் போவேன்.  கூட்டத்தை நடத்தும் விதமே சிறப்பாக இருக்கும். தாங்க முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும்.  சமீபத்தில் நடந்த கூட்டத்திற்குப் போயிருந்தேன்.  மியூசிக் அக்காதெமி கட்டத்தின் வெளியே நிற்க வேண்டியிருந்தது.  உள்ளே ஒரே கூட்டம்.  சோ உடல்நிலை சரியில்லாமல் அந்தக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார்.  எதிரியின் மனநிலையைப் புண்படுத்தாமல் நகைச்சுவை உணர்வுடன் பேசக் கூடியவர் சோ ஒருவர்தான்.  அதனால் எனக்கு ஜெயகாந்தின் பேச்சுப் பாணியைவிட சோ ராமசாமி பேசுவதுதான் பிடிக்கும்.
துக்ளக் பத்திரிகை வாங்கினால், சோ எழுதும் கேள்வி பதில் பகுதியைத்தான் படிப்பேன். அதற்காகவே வாங்குவேன். மற்றப் பகுதிகள் படிக்க எனக்குப் பிடிக்காது.  அந்த  அளவிற்கு தன் கருத்தில் உறுதியாக நகைச்சுவை ததும்ப எழுதியிருப்பார்.  அவர் துக்ளக் பத்திரிகை ஆரம்பித்த விதமே நன்றாக இருந்தது.  இரண்டு கழுதைகள் பேசுவதுபோல் பத்திரிகை இருக்கும். நாம் எப்போதும் நகைச்சுவை உணர்வோடு பேசுபவர்களைப் பெரிதும் மதிப்பதில்லை.  எல்லோரும் சிரித்துவிட்டு வந்துவிடுவோம். ஆனால் எவ்வளவு பெரிய விஷயங்களை அவர் எப்படியெல்லாம் யோசிக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஜெயகாந்தான் பாணியில் கேட்பவர்கள் எல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று திட்டுகிற மாதிரி பேசுவார்.  சோ வேற மாதிரியாக கேட்பவர்கள் புரிந்துகொள்ள நகைச்சுவை உணர்வோடு பேசுவார். சோ தன் கருத்தில் உறுதியானவர்.  தைரியமாக அபத்து ஏற்பட்டாலும் பேசுவார். எழுதுவார்.  அவரை யாராவது வந்து அடிக்கப் போகிறார்களே என்று நான் யோசிப்பேன்.  ஆனால் அதற்கெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார்.  எளிதான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்.
எனக்கு என்ன ஆச்சரியமென்றால் சோ ராமசாமியைப் பற்றியும், பெரியார் ஈவேராமசாமியைப் பற்றியும் பிரமிள் ஒரு கவிதை எழுதியிருந்தார். இருவருமே முக்கியமானவர்கள் என்பது பிரமிள் கருத்து.  எப்படி ஈவேராவுடன் சோ ராமசாமியைச் சேர்க்க முடியும் என்று யோசிப்பேன். இருவரையும் மேடைப் பேச்சு, பத்திரிகையுடன் தொடர்பு என்று சேர்க்கிறார் என்று யோசிப்பேன்.  எழுதிக்கொடுத்த அந்தக் கவிதையை எங்கோ தொலைத்துவிட்டேன்.
இன்று காலை சோ ராமசாமி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து வருந்துகிறேன்.  அவரை இழந்து நிற்கும் அவர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மரணம் தரும் பாடம்

அழகியசிங்கர்



நம் வாழ்க்கையில் மரணம் என்பதை யாராலும் தவிர்க்க முடியாதது.  ஆனால் நமக்கு இந்த எண்ணம் எப்போதும் ஏற்படுவதில்லை.  அதனால்தான் நாம் மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப் படுகிறோம்.  நமக்குப் புகழ் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறோம். பயப்படுகிறோம். அவஸ்தைப் படுகிறோம். சந்தோஷமாக இருக்கத் தெரியாமல் இருக்கிறோம். மரணத்தை நேரிடையாக உணரும்போது நமக்கு திகைப்பும் பய உணர்ச்சியும் உண்டாகுகிறது.  நம்முடன் பழகிக்கொண்டிருந்த நண்பர்கள், உறவினர்களின் மரணங்கள் நம்மை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்துகிறது.  சிறிது நேரம் வரை நம் மனது அமைதி அடையாமல் தவிக்கிறது.  பின் சாதாரண நிலைக்கு நாம் வந்து விடுகிறோம்.
திமுக தலைவர், முதலமைச்சர் அண்ணாதுரை இறந்தபோது அவரைக் குறித்து ரேடியோவில் கலைஞர் இரங்கல் கவிதை வாசித்தார்.  உருக்கமாக இருக்கும்.  அதைக் கேட்டு நானும் உருக்கமாக இருந்தேன்.  அப்போது நான் பள்ளியில் படிக்கும் சிறுவன்.  என் பள்ளியில் உள்ள பல மாணவர்கள் சேர்ந்து அண்ணா சமாதியைப் பார்க்கச் சென்றோம். நான் தங்கச்சாலையில் இருந்தேன்.  நடந்தே அங்கு சென்றதாக தோன்றுகிறது.  என் பள்ளி மாணவர்களுடன் அண்ணா சமாதியைப் பார்த்துவிட்டு, சிறுவர்களின் குறும்புடன் கடற்கரையில் உள்ள அலையில் நனைந்தோம்.  அப்போது என் சட்டையில் மண் ஒட்டிக்கொண்டிருந்தது என்று கழட்டினேன்.  நீரில் அலசலாம் என்ற எண்ணத்தில்.  அந்தச் சட்டை ஒரு குறும்புக்கார மாணவன் கையில் கிடைத்து, அதை பந்துபோல் தூக்கிப் போட்டு விளையாடினார்கள்.  சட்டை கடலில் போய்விட்டது.  அண்ணா சமாதியைப் பார்த்தத் துக்கத்தோடு என் சட்டைப் போன துக்கமும் சேர்ந்து கொண்டது.  வீட்டிற்குப் போனால் அம்மா கண்டு பிடித்துத் திட்டுவாள் என்ற பயம்.  ஏன்எனில் வீட்டிற்குத் தெரியாமல்தான் அண்ணா சமாதியைப் பார்க்க வந்திருந்தேன். 
ஒரு பிரபலமான அரசியல்வாதி இறந்து போனால், அவருடன் தொண்டர்கள் சிலரும் இறந்து விடுவார்கள்.  பலர் அதிர்ச்சியில் இறந்து விடுவார்கள்.  இப்போதெல்லாம் டிவியில் ஒளி பரப்புகிறார்கள்.  நேரிடையான காட்சியாக நாம் தொலைகாட்சியில் பார்க்கிறோம்.  நாம் பார்க்க பார்க்க துக்கம் நம்மிடம் பொங்கி வழியும். பின் அமைதி ஆகிவிடுவோம்.  மேலும் நமக்கு அந்தக் காட்சியைப் பார்க்கும்போது, சில தொண்டர்கள் தலையில் அடித்துக்கொண்டு அழுவதைப் பார்க்கும் போது, கண்கலங்கும் காட்சியாக நமக்குத் தோன்றும்.
சமீபத்தில் நான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு மரணம், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மரணம்.  அரசியல் தலைவர்களை நாம் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம்  அமையாவிட்டாலும், அவர்களைப் பற்றி தெரிந்து கொள்கிற சந்தர்ப்பங்கள் நமக்கு அதிகம் உண்டு.  அவர் இனி இல்லை, இனிமேல் எப்படி இருக்கும் என்ற அச்சம் நம்மில் இருக்கும்.  
முதல்வர் ஜெயலலிதாவின் மரணமும் அப்படித்தான்.  அவர் அப்பாலோ மருத்துவமனையில் சேர்ந்து பட்ட அவஸ்தைகளை எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும்.  ஒரு நாடே துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிற துக்கம்தான் இது.  ஒரு குடும்பத்தில் ஒரு மரணம் நடந்தால், குடும்பத்தில் உள்ள நபர்களுடன்தான் அதைப் பகிர்ந்துகொள்ள முடியும்.  சமீபத்தில் என் நண்பர் ஒருவர் வரிசையாக அவருடைய உறவினர்கள் ஒவ்வொருவராக இறந்ததை பட்டியல் இட்டுக்கொண்டிருந்தார்.  இறந்தவர்கள் பெரும்பாலோர் வயதானவர்கள்.  அவர்கள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு போனதுபோல் தோன்றியது அவர் விவரித்த விதம்.
மரணம் நம்மை சஞ்சலப்படுத்தத் தவறுவதில்லை.  சில மரணங்கள் நமக்கு முன்னால் மரணம் நிகழப் போவதைத் தெரியப்படுத்துகின்றன.  இதை ரொம்பவும் கூர்ந்து கவனித்தால் மட்டும் தெரியும் என்று தோன்றுகிறது.  என் பெரியப்பா ஒருவர் ஒரு வலது பக்கம் பக்கவாதநோய் வந்து பல மாதங்களாய் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.   அவர் மரணம் அடைந்த சமயம் ஒரு நாள் காலையில் அவர் வாய்க்கு வாய்கரிசி போடுவதுபோல் ஒரு கனவு.  திகைத்து நான் கண் விழிக்கிறேன்.  அன்று அவர் இறந்து விட்டதாக பெரியப்பா வீட்டிலிருந்து செய்தி. 
இன்னொரு மரணம் ஜே கிருஷ்ணமூர்த்தியின் மரணம்.    மரணம் அடைவதற்கு முன்பு கடைசியாக சென்னையில் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.  அந்த முறை வழக்கத்திற்கு மாறாக அவர் குறைவான கூட்டங்களில் பேசினார்.  அந்தக் கூட்டதிற்கு வந்தவர்களுக்கு அவர் மரணம் அடையப் போகிறார் என்பது தெரிந்திருந்தது.  கூட்டத்திற்கு வந்தவர்களில் அழகான வயதான பெண்கள் பலர் ஒரு பக்கம் கண்கலங்கி அழுது கொண்டிருந்ததைப் பார்த்தேன். கிருஷ்ணமூர்த்தியால் அன்று சரியாகப் பேச முடியவில்லை. கூட்டத்தில் ஒருவர் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.  கிருஷ்ணமூர்த்தி உடனே ஏன் என்னை உற்றுப் பார்க்கிறீர் என்று கோபமாக சொன்னதுபோல் தோன்றியது. 
ஜே கிருஷ்ணமூர்த்தி மரணம் அடையும் முன் அவர் ஒரு காரிலிருந்து இறங்கி வருவதைப் போலவும், அவரைப் பார்த்து யாரோ சுடுவதுபோல் கனவு கண்டேன்.  இது என்ன பேத்தலாக இருக்கிறது என்று யோசித்தேன்.  ஆனால் நான் கனவு கண்ட சில தினங்களில்  அவர் மரணம் அடைந்ததை கேள்விப்பட்டேன்.  மரணம் என்பதைப் பகிர்ந்து கொள்வதாக நினைக்கிறேன்.  ஜே கிருஷ்ணமூர்த்தியின் மரணத்தை அவருடைய கூட்டத்தைக் கேட்க வருகிற நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தது. ஒரு அரசியல்தலைவரின் மரணத்தை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள முடிகிறது.  அலுவலகத்தில் யாராவது இறந்தால், அலுவலக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது.  அதேபோல் உறவினர் யாராவது இறந்தால் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது.  சமீபத்தில் என் நண்பர் ஒருவர் அவருக்கு நெருக்கமான நண்பர் ஒரு அயல் நாட்டில் காரல் பயணம் செய்துகொண்டிருந்தபோது விபத்தில் இறந்து போய்விட்டார்.  அதை நண்பரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  ஒரு துக்க நிகழ்ச்சிக்கு பேச அவர் வந்தபோது, எல்லோர் முன்னும் கண்கலங்க வெளிப்படுத்தி விட்டார். அன்று அவர் பேசியது கண்கலங்கும்படி இருந்தது.  
பகிர்ந்துகொள்ள முடியாத மரணங்கள் நமக்கு படப்படப்பை ஏற்படுத்துவதாக தோன்றுகிறது.  பிரமிள் மரணம் அடைந்ததை என்னால் மறக்க முடியாது.  என் விட்டில் உள்ளவர்களிடம் அதைத் தெரியப்படுத்தினால், அது பகிர்ந்துகொள்ளும் துக்கமாக தெரியவில்லை. வேலூர் அருகில் உள்ள  கரடிக்குடியில் பிரமிளின் பூத உடலைப் பார்க்கச் செல்லவேண்டும். அப்போது நான் அடைந்த படப்படப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.  ஆனால் என்னுடன் வெளி ரங்கராஜனனும் வந்திருந்ததால் என் படபடப்பை கொஞ்சம் சரி செய்ய முடிந்தது.  தனியாக நான் போயிருக்க மாட்டேன். அதனால்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் இறந்தவர்கள் வீட்டிற்கு துக்கம் விஜாரிக்கப் போக மாட்டார் என்பதை அறிந்திருக்கிறேன். 
மரணம் அடைந்தபிறகு கூட கனவில் சிலசமயம் மரணம் அடைந்தவர்கள் வருவார்கள்.  என் உறவினரன் புதல்வர் ஒருவர் நீச்சல் குளத்தில் எதிர்பாராதவிதமாய் மரணம் அடைந்து விட்டார்.  அது எனக்குத் தந்த திகைப்பை என்னால் சாதாரணமாக விளக்க முடியாது.  உறவினரைப் பார்க்கச் சென்றபோது அவர் துக்கத்தோடு இருந்தார்.  ஆனால் அழவில்லை.  அப்போது அவர் சொன்னது இப்போதும் ஞாபகம் வருகிறது. üüநீ வருத்தப்படாதே,ýý என்றுதான் அவர் சொன்னார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பின் அவருடைய பையன் என் கனவில் வந்தான்.  ஆனால் ஒன்றும் பேசவில்லை.  ஒரு சமயம் ஸ்டெல்லா புரூஸ் என் கனவில் அவர் மனைவியுடன் வந்தார்.