மறக்க முடியாத சுஜாதா

அழகியசிங்கர்
நேற்றுதான் சுஜாதாவின் மறைந்த நாள் என்பது தெரியாமல் போய்விட்டது. இன்றுதான் என்று தவறாக நினைத்துவிட்டேன். சுஜாதா மாதிரி ஒரு எழுத்தாளர் இனி தமிழில் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை. தமிழுக்கு அவர் எழுத்து புதிது. ஆனால் பலர் இதை மறுப்பார்கள். இன்று எல்லோரும் படிக்கக் கூடிய நடையை தடங்கல் இல்லாமல் அளித்தவர். சமீபத்தில் லைப்ரரி போய் அவருடைய தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தை எடுத்து வந்தேன். படிக்க படிக்க விட முடியவில்லை. அப்படியொரு எழுத்து.
 
சி சு செல்ப்பாவின் எழுத்து காலத்தில்தான் வணிகப் பத்திரிகை எழுத்து சிறுபத்திரிகை எழுத்து என்று பெரிய பள்ளம் விழுந்து விட்டது. ஆனால் இப்போது அதுமாதிரியான பள்ளம் இல்லை. பெரிய பத்திரிகைகளை தன் வழிக்குக் கொண்டு வந்த பெருமை சுஜாதாவிற்கு உண்டு. அவர் எவ்வளவு வேகமாகப் படிக்கிறாரோ அதே வேகத்தில் எழுதக் கூடியவர். அறிவியல் புனை கதைகளை தமிழுக்கு முயற்சி செய்த பெருமை அவருக்கு உண்டு. அறிவியல் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
 
மே 1968ல் நகுலன் குருúக்ஷத்ரம் என்ற தொகுப்பை கொண்டு வந்துள்ளார். அதில் எஸ் ரங்கராஜன் என்ற பெயரில் தனிமைகொண்டு என்ற கதை எழுதி உள்ளார். அந்த ரங்கராஜன் வேறு யாருமில்லை நம்ம சுஜாதாதான். அக் கதையை எப்படி ஆரம்பிக்கிறார் என்பதைப் பாருங்கள் :
 
“இந்தக் கதை ஆர அமரத்தான் செல்லும். ரயில் தப்புகிற அவசரத்திலோ அல்லது ஒரு பிரயாணப் பொழுதுபோக்குக்காவோ இதைப் படிக்க வேண்டாம். தனிமையில் படித்தால் நல்லது. ரேடியோவை அணைத்துவிடுங்கள். குழந்தைகள் எல்லாம் தூங்கட்டும். இரவி இறங்கி இரவு வந்ததும், மௌனம் வந்ததும், தின வாழ்க்கையின் அவசரங்கள் செத்ததும், சமாதானமான நிலையில் உங்கள் மனதில் இரக்கம், பச்சாதாபம், வெறுப்பு, அதி தீவிரமான அன்பு இந்த உணர்ச்சிகளுக்கு எல்லாம் வரவேற்பு இருக்கும்போது படியுங்கள். சாப்பிட்டுவிட்டுப் படியுங்கள். நிதானமாகப் படியுங்கள். தயவுசெய்து வரிகளைத் தப்ப விடாதீர்கள்…”
 
அத் தொகுப்பிலே சுஜாதாவின் இந்தக் கதை குறிப்பிடும்படியான கதையாக உள்ளது. வித்தியாசமாக எழுதி உள்ளார். டைரியில் பேசுவதுபோல் கதையை எழுதி உள்ளார்.
 
ஒரு சமயத்தில் குமுதம் பத்திரிகைக்கு பொறுப்பாசிரியராக அவர் இருந்தபோது, சிறு பத்திரிகைகளில் உலாவி வந்த புதுக்கவிதைகளை ஏராளமாக உள்ளே நுழைந்து விட்டார். இதை அப்போது உள்ள யாரும் செய்திருக்க மாட்டார்கள். அன்றிலிருந்து புதுக்கவிதைகளை பெரும் பத்திரிகைகள் எடுத்துக்கொண்டு விட்டன. அவர் கதைகள் ஒவ்வொன்றும் எப்போதும் படித்துக்கொண்டே இருக்கலாம்.
 
ஆனால் யாரும் சுஜாதாவை பாராட்டி சொல்ல மாட்டார்கள். அதுமாதிரி எழுத இப்போது யாரும் இருப்பதாக தெரியவில்லை. பொதுவாக ஜனரஞ்சக எழுத்தாளர்கள் யார் கண்ணிலும் படாமல் ஜனரஞ்சகமாகவே இருப்பார்கள். ஆனால் சுஜாதா விதிவிலக்கு. தீவிர எழுத்துக்கும் ஜனரஞ்சக எழுத்துக்கும் பாலமாக இருந்து செயல் பட்டிருக்கிறார். நிறையா எழுதி விட்டார். இலக்கியக் கூட்டங்களிலும் அவர் பேசியிருக்கிறார். எழுதி தயாரித்து வந்து கட்டுரையாக வாசித்து விடுவார். அவர் மனதுக்குப் பிடித்த படைப்புகளைப் பாராட்டாமல் இருக்க மாட்டார். அவர் தொடர்கதைகளில் கணேஷ் வசந்த் பேசுகிற உரையாடலில் எல்லாம் இருக்கும். திடீரென்று விருட்சம் பத்திரிகையைப் பற்றிய பேச்சும் இருக்கும். அவர் புத்தகம் எப்போதும் விற்றுக்கொண்டே இருக்கும். ஒரு சமயம் சுந்தர ராமசாமி கொண்டு வந்த காலச்சுவடு இலக்கிய மலரை முழுவதும் படித்துவிட்டு விடு விடுவென்று விமர்சனம் எழுதி விட்டார். என் சகோதரன் அடிக்கடி சுஜாதா புத்தகத்திலிருந்து ஒரு வரி சொல்வான். ‘அவள் உட்கார்ந்த இடத்தைத் தட்டினான்,’ என்று. எந்தப் புத்ததத்தில் இதைப் படித்தான் என்பது தெரியவில்லை. ஆபாசத்தைக் கூட நகைச்சுவை உணர்வோட சொல்லக் கூடியவர்.
 
கணையாழியில் தீவிரமாக கடைசிப் பக்கத்திலிருந்து எல்லாவற்றையும் எழுதி தள்ளி விடுவார். எனக்கு இன்னும்கூட குருபிராசாத்தின் கடைசி தினங்கள் என்ற குறுநாவல் ஞாபகத்திற்கு வருகிறது. திரைக்கதைகளையும் அவர் அலட்சியமாக எழுதி உள்ளார். சுஜாதாவின் கதையைத்தான் எந்திரன் என்ற படமாக எடுத்து உள்ளார்கள். திரைக் கதை எழுதுவது எப்படி என்ற சுஜாதாவின் புத்தகம் பிரபலமான புத்தகம். நாடகம் எழுதுவதிலும் அவர் முயற்சி செய்யாமல் இல்லை.
 
இந்தத் தூண்டில் கதைகள் என்ற புத்தகத்தில் ‘மற்றொரு பாலு’ என்று அறிவியல் கதையும், ‘குந்தவியின் காதல்’ என்கிற பெயரில் சரித்திர கதையும் எழுதியிருக்கிறார். உடனே படித்து முடித்து விடலாம். நான் புத்தகத்தை மூடி வைக்காமல் படித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சுஜாதா மாதிரி ஒரு எழுத்தாளர் இப்போது உண்டா என்பது தெரியவில்லை.

மொழி பெயர்ப்பாளருக்குக் கிடைத்த விளக்கு விருது

அழகியசிங்கர்

                                                                                                                  

இந்த முறை விளக்குப் பரிசு மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.  இது ஒரு மொழிபெயர்ப்பாளருக்குக் கிடைத்த கௌரவம். தமிழில் மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு முக்கியமானதாக கருதுகிறேன்.  பல அரிய படைப்புகள் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம்தான் நமக்குக் கிடைத்துள்ளன.  அதேபோல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், மற்ற மொழிகளுக்கும் செல்லாமல் இல்லை. ஆனால் மிகக் குறைவான படைப்புகளே அவ்வாறு மற்ற மொழிகளுக்குச் சென்றுள்ளன.  ஒரு மொழி பெயர்ப்பாளரின் விருப்பத்திற்குத்தான் ஒரு படைப்பு தேர்ந்தெடுக்கப்படுகிறது.  அந்த மொழிபெயர்ப்பாளர் விரும்பவில்லை என்றால் மொழிபெயர்ப்பு நிகழ வாய்ப்பு இல்லை.

ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளரை எல்லோரும் விரும்புவார்கள்.  கல்யாணராமன் அப்படிப்பட்ட ஒருவர்.   எனக்குத் தெரிந்து கே எஸ் சுப்பிரமணியன் என்ற மொழிபெயர்ப்பாளர் உள்ளார்.  இவர் ஜெயகாந்தன் நாவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் பல படைப்புகளைக் கொண்டு வந்துள்ளார்.  ஆனால் இவரும் அவருக்குப் பிடித்த படைப்பாளிகளைத்தான் மொழிபெயர்ப்பார்.

ஆனால் தமிழில் பல படைப்பாளிகளின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு எல்லோருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.  ஆனால் மொழிபெயர்ப்பாளரின் கருணை இருந்தால்தான் இதெல்லாம் நடக்கும்.

கல்யாணராமன் மொழிபெயர்த்த ஒரு எழுத்தாளரின் புத்தகங்களை நான் தமிழிலேயே படிக்கவில்லை.  ஒரு எழுத்தாளருக்கு ஒரு நல்ல மொழிபெயர்ப்பளர் கிடைத்துவிட்டால், அது எழுத்தாளருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த இடத்தில் வே ஸ்ரீராம் அவர்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.  பிரான்சு மொழியிலிருந்து அல்பெர் கம்யூவின் அந்நியன் என்ற நாவலை அவர் மொழி பெயர்த்துள்ளார்.  அவர் இன்னும் கூட பல புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளார்.  அனால் அவர் தமிழ் மொழியிலிருந்து எந்தப் படைப்பையாவது பிரான்சு மொழிக்கு மொழி பெயர்த்துள்ளாரா என்பது அடியேனுக்குத் தெரியாது.

இந்த மொழிபெயர்ப்பாளர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.  யாரும் இவர்களை படைப்பாளிகளாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.  அதேசமயம் படைப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகளை வெளிக்கொண்டு போக நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பார்களா என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும்.  அந்தோன் சேகவ்வின் சிறுகதைகளும் குறுநாவல்களும் முன்னேற்றப் பதிப்பகம் மூலம் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மொழி பெயர்ப்பாளர் : ரா கிருஷ்ணையா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1975ஆம் ஆண்டு வந்துள்ளது இந்தப் புத்தகம்.   அவர் இப்போது எங்கு உள்ளார் என்பது கூட தெரியாது.

கல்யாணராமனுக்கு பரிசு கிடைத்ததுபோல் இன்னும் பலருக்கும் விளக்கு பரிசு கிடைக்க வேண்டும்.  இந்த விழாவில் மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் கையால் விளக்கு விருதை கல்யாணராமன் பெற்றுக்கொண்டார்.  இந்திரா பார்த்தசராதி கூட இந்த விழாவில் கலந்துகொண்டார்.  என்ன வேடிக்கை என்றால், இவர்கள் யாரும் விளக்கு விருது இன்னும் பெறாத மூத்த எழுத்தாளர்கள்.

 

முதியோர் இல்லத்தை விட்டு பறந்த பறவைகள்

 

அழகியசிங்கர்

லட்சியப் பறவைகள் என்றபெயரில் உஷாதீபன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.  இது எத்தனைப் பேருக்குத் தெரியும்.  உண்மையில் பல புத்தகங்கள் பலருக்குத் தெரிவதில்லை.  இந்தப் புத்தகத்தை உஷாதீபன் படிப்பதற்கு எனக்கு அளித்தபோது உடனடியாகப் படிக்க நினைத்தேன். நினைத்தேன் என்பதே படிக்க முடியாமல் போகும் தடைக்கல்லாக நினைதக்கிறேன்.  இதோ இப்போது படித்து முடித்துவிட்டேன்.

ஒரு நாவலில் கதைக்களத்தை எப்படி உருவாக்குகிறார் என்பதை முதலில் கவனிக்கத் தோன்றியது.   முதியோர் இல்லத்திலிருந்து துவங்கும் இந்த நாவல் அதைப் பின்னணியாகக் கொண்டு கதையைப் பிணைத்துக்கொண்டு போகும் என்று நினைத்தேன்.  ஆனால் வேறு பாதையில் இந்த நாவல் பயணிக்கத் தொடங்கியதை அறிந்தேன்.  முதியோர் இல்லத்தைத் திறன்பட நடத்தி வரும் தேவகி, ஒரு நல்ல தரமான படத்தை எடுத்துவிட வேண்டும் என்று துடிப்பாக செயல்படும் பிரபு.  அலுவலக வாழ்க்கையில் நேர்மையாக பணிபுரிய நினைக்கிற பாலன். இவர்களைப் பின்னிப் பிணைந்த இந்த நாவல், முக்கியமாகக் கொண்டு செல்ல வேண்டிய முதியோரின் அவதி என்ற காட்சி பின்புலத்தை வெட்டி விட்டதாகவே எனக்குத் தோன்றியது.

ஆரம்பிக்கும் போது நாவல் இப்படி ஆரம்பமாகிறது : üகம்ப்யூட்டரின் முன் அமர்ந்திருந்த தேவகியின் பார்வை கலங்கியிருந்தது. கடந்த அரை மணி நேரமாகத் திரையையே பார்த்துக்கொண்டிரப்பதால் ஏற்பட்டதுவோ என்று நினைத்தபோது, அது மெயிலில் படித்த செய்தியினால் விளைந்தது என்பது புரிந்தது.ý

நேரிடையாகவே ஒரு கதாபாத்திரம் தன்னையே அறிமுகப்படுத்திக்கொண்டு கதையை அமைக்கலாம்.  ஆனால் இங்கு ஆசிரியர் கூற்றாக இது அமைந்துள்ளது.  மேலும் அந்தக் கதாபாத்திரத்தின் மனநிலை ஓட்டத்தை ஆசிரியர் கூற்று உறுதி செய்ய முடியாமல் இருக்கிறது.  ஒரு பெரியவரின் மரணத்தைத்தான் அந்தச் செய்தி சொல்கிறது.  அந்தப் பெரியவர் அந்த முதியோர் இல்லத்தில் தன்னை மனப்பூர்வமாய் பிணைத்துக் கொண்டவர்.  அவருடைய மரணம் அங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சியைத் தருகிறது.  ஆனால் அவருடைய பையனோ அவர் மரணத்தை அறிந்து இறுதி சடங்கு நடத்தக்கூட அங்கு வரத் தயாராய் இல்லை. அந்த முதியோர் இல்லத்திலேயே இறுதி சடங்கை முடித்துவிட கூறுகிறான்.  அதற்கான செலவை அனுப்பி விடுகிறான்.

இந்த நாவலின் ஆரம்பத்தில் இது ஒரு உருக்கமான கட்டம்.  அல்பெர் கம்யூ என்ற எழுத்தாளர் அந்நியன் என்ற நாவல் எழுதி உள்ளார்.  விடுதியில் தங்கியிருக்கும் அம்மா இறந்து விடுகிறாள்.  இறுதி யாத்திரியில் கலந்துகொள்ள செல்லும் தமையன், அம்மாவின் முகத்தைக் கூடப் பார்க்க விரும்பவில்லை. அவனாவது பரவாயில்லை இறுதி யாத்திரையில் கலந்து கொள்கிறான்.  ஆனால் உஷாதீபனின் நாவலிலோ தனயன் வரவே இல்லை. எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று பணத்தை அனுப்பி விடுகிறான். இதன் தொடர்பாக இன்னும் இரண்டு நாவல்களைப் படிக்க விரும்புகிறேன்.  ஒரு நாவல் நீல பத்மநாபனின் üஇலை உதிர் காலம்ý.  இன்னொரு நாவல் நகுலனின் üவாக்கு மூலம்ý.

முதியோர் இல்லத்தை நடத்தி வரும் தேவகி இன்னும் சில நல்ல உள்ளங்களையும் சந்திக்கிறாள்.  எதாவது உதவி செய்ய வேண்டுமென்று நினைக்கிற சிலரும் அங்கு வருகிறார்கள்.  அவள் சேவை மனப்பான்மையை அறிந்து அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று எண்ணுகிற இளைஞன் பிரபு, அவளிடம் கடிதங்கள் மூலம் தன் விருப்பத்தைத் தெரியப்படுத்துகிறான்.

குறுக்கு வழியில் அதிகமாகப் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நினைக்கிற சதாசிவம், நேர் வழியில் செல்ல விரும்பும் அவர் புதல்வன் பாலா. இப்படி ஒரு முரண்பாடை நாவலில் கட்டமைக்கிறார்.  தேவகியின் அப்பா

பாலகிருஷ்ணன் நேர்மையான மனிதர்  ஜவுளி வியாபரத்தில் நேர்மையாக ஈடுபட்டு முன்னுக்கு வந்தவர். மனைவியை இழந்தவர். ஆனால் அவருடைய பையன் அவருக்கு முரணாக அப்பாவை மதிக்காமல் இருக்கிறான்.  அவருடைய நண்பரான சதாசிவம், அவருடைய பையன் பாலனை தேவகிக்கு திருமணம் செய்துகொள்ள முன் வருகிறார்.  பாலகிருஷ்ணன் கெட்டிக்காரத்தனமாய் நடத்தும் வியாபாரத்திலும் தன்னை இணைத்துக்கொள்ள நினைக்கிறார். ஆனால் பாலன் மனதோ நந்தினி என்ற பெண்ணிடம். அந்த நந்தினியை பாலா திருமணம் செய்துகொள்ளகூடாது என்று கடுமையாக பையனிடம் ஆரம்பத்தில் சொல்லிவிடுகிறார். ஒரு காலத்தில் நந்தினி அப்பாவுடன் நடந்த சாப்பாடு வியாபாரத்தில் அவள் அப்பா அவரை மோசம் செய்து விடுகிறார்.  அந்த வெறுப்பில் அவர் பெண்ணை பையன் திருமணம் செய்து கொள்ளகூடாது என்கிறார்.  பையன் ஒன்றும் சொல்லவில்லை.  தேவகிக்கும் பிரபுவை விட மனதில்லை.  இந் நாவலில் வெளிப்படையாக சொல்லப்படாத காதலை சாமார்த்தியமாக முடிக்கிறார் நாவலாசிரியர். பாலன் நந்தினி திருமணம் முடிந்த கையோடு அவர் பெண்ணின் திருமணத்தையும் முடித்துவிடுகிறார். எல்லாம் சுலபமாக முடிந்து விடுகிறது.

முதியோர் இல்லத்தில் ஆரம்பித்த இந்த நாவல் கிளைபிரிந்து பல விஷயங்களைத் தொட்டுக் காட்டியிருக்கின்றன. ஆனால் முதியோர் இல்லத்தில் அவதிப்படும் ஜன்மங்களைப் பற்றி லேசாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுவது சற்று ஏமாற்றமாக இருக்கிறது.

நாவலை சரளமான நடையில் விறுவிறுப்பாக எழுதிக்கொண்டு போகிறார்.

லட்சியப் பறவைகள் – நாவல் – உஷாதீபன் – பக்கங்கள் : 208 – வெளியீடு : கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123, 8 மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி நகர், சென்னை 17 – தொலைபேசி எண் : 24364243, 24322177 – விலை : ரூ.150

ஒரு பயணம்

 

அழகியசிங்கர்

 

திங்கட் கிழமை (20.02.2017) காலையில் நானும் மனைவியும் மயிலாடுதுறை சென்றோம்.  காலையில் திருச்சி எக்ஸ்பிரஸில்..ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு முடித்தேன். மதியம் இரண்டு மணிக்கு இறங்கியவுடன் மயிலாடுதுறை பஸ் ஸ்டான்ட் போக டாக்ஸிகாரர் 100 ரூபாய்க் கேட்டார்.  நாங்கள் பஸ்ஸில் பத்து ரூபாய்க்குச் சென்றோம்.  பஸ் ஸ்டான்டிலிருந்து மயூர விலாஸ் என்ற ஓட்டலுக்குச்  சென்று ரொம்ப லைட்டாக ஒரு சாப்பாடு சாப்பிட்டோம். சுவையாக இருந்தாலும் காரம் தாங்க முடியவில்லை.  தர்மபுரம் தெருவில் உள்ள வீட்டிற்கு வந்தவுடன், அப்பாடா என்று இருந்தது.  மயிலாடுதுறை இடம் பயங்கரமான அமைதியாக இருக்கும்போல் இருந்தது.  இந்த அமைதியை உணரத்தான் முடியும்.  விவரிக்க முடியாது. எதிரில் இருந்த நண்பர் குடும்பம் எங்களுக்கு எல்லாவித உதவிகளையும் செய்தது. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களா என்ற ஆச்சரியம் வந்து போனது.

அடுத்தநாளிலிருந்து நண்பரின் டூ வீலர் கிடைத்தது.  அந்த டூ வீலர் எப்படி என்று விவரிக்கப் போவதில்லை. ரொம்ப உபயோகமாக இருந்தது.  ஆட்டோவில் உட்கார்ந்த கொஞ்ச தூர இடத்திற்குப் போனால் கூட கொள்ளை அடித்துவிடுகிறார்கள்.

பிரம்மாண்டமான ராஜன் தோட்டத்தைச் சுற்றி சுற்றி நடந்து வந்தோம்.  ஒரு ரவுண்ட் சுற்ற 10 நிமிடம் ஆகிறது.  மூன்று முறை சுற்றினோம்.   அங்கு நான் முன்பு இருந்தபோது சந்தித்த பல நண்பர்களைச் சந்தித்தேன்.  என்னை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசினார்கள்.

திருஇந்தளூர் என்ற இடத்தைப் போயப் பார்த்தோம்.  அங்குதான் ஞானக்கூத்தன் பால்யக் காலத்தில் வளர்ந்த வீடு இருந்தது.  பாழ் அடைந்து யாரும் கவனிப்பாரற்று கிடந்தது.  அங்கிருந்தவர்களைப் பார்த்து  அந்த வீடைப் பற்றி கேட்டேன்.  üபரம்பரையாக வசித்து முடித்து விட்டார்கள்.  இப்போ யாருமில்லை,ý என்றார்கள். ஞானக்கூத்தன் அங்குள்ள மண்டபத்தை வைத்தும் குளத்தை வைத்தும் கவிதைகள் எழுதி உள்ளார். காவேரியில் தண்ணீரே இல்லை.  அதன் காய்ந்துபோன நிலத்தைப் பார்த்து கண்கலங்கினேன் என்று வசனம் எழுத விரும்பவில்லை.

திருஇந்தளூரில் உள்ள பெருமாள் சயனித்திருப்பார்.  ஒருமுறை நான் அங்கு வந்தபோது, எலிகள் பெருமாள் மேல் ஓடிக்கொண்டிருந்தன.

அடுத்தநாள் கும்பகோணம் என்ற வசீகரமான இடத்திற்குச் சென்று கோயில்களைச் சுற்றினோம்.  மகாமகம் குளத்தில் காலை நனைத்தோம். பிரான்சிலிருந்து ஒரு ஆங்கிலப் பேராசிரியர் வந்திருந்தார்.  அவருக்கு 38 வயதாம்..கல்யாணம் செய்து கொள்ளவில்லையாம்..திருவண்ணாமலை போய்விட்டு இங்கு வந்திருக்கிறாராம்.  உற்சாகமாக இருந்தார்.  கும்பகோணம் ஒரே களேபரமாக சப்தமாக இருந்தது.  மயிலாடுதுறையின் அமைதி இல்லை.

இதற்கு முன் மயிலாடுதுறையில் உள்ள எங்கள் வங்கிக்கிளையில் பணிபுரியும் நண்பரைப் பார்க்கச் சென்றேன்.  ஓடி வந்து விட்டேன்.ஒரே கூட்டம் அவரைச் சுற்றி.

எனக்கு உதவிய நண்பர் அவர் எழுதிய கவிதைகள் சிலவற்றை என்னிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டார்.  நான் அபிப்பிராயம் சொன்னதைக் கேட்டப் பிறகு, அடுத்த முறை ஞாபகமாய் என்னிடம் எந்த அபிப்பிராயத்தையும் கேட்க மாட்டார் என்று தோன்றியது.

ஒரு கவிதையில் ஆரம்பிப்பதும் முடிப்பதும் முக்கியம்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு கவிதை ஒரு பக்கத்தில் ஒரு சில வரிகளுடன் நின்று விட வேண்டும்.  இரண்டு மூன்று பக்கங்கள் என்றால் படிப்பவர்களுக்கு அலுப்பு வந்து விடும்.

கவிதையை எழுதுபவரும் சரி, படிப்பவரும் சரி, சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.  புரிந்து கொண்டவர்கள் யாரிடமும் அபிப்பிராயம் கேட்க மாட்டார்கள்.

நம்முடைய கவிதைகளுடன் மற்றவர்களின் கவிதைகளையும் வாசிக்க வேண்டும்.

 

நான் சென்னை கிளம்பி வரும்போது தினமும் ஒரு கவிதை எழுதுங்கள் என்று அறிவுரை கூறினேன்.  நான் வந்த இரண்டாவது நாள் நண்பரை காலையில் பார்த்தபோது, ஜெயமோகனின் வெண்முரசைப் படித்துவிட்டேன் என்று உற்சாகமாக சொன்னதைக் கேட்க  ஆச்சரியமாக இருந்தது.  நான் திரும்பவும் கவிதைகளைப் பற்றிப் பேசலாமென்றேன்.  ஓடியே போய்விட்டார். உழவன் எக்ஸ்பிரஸ் ஏறும்வரை கவிதையைப் பற்றி மூச்சை விடவில்லை.

நேற்று மாலை முனைவர் மு சிவச்சந்திரன் என்ற பேராசிரியர் தமிழ்ச் சுரங்கம் என்ற தலைப்பின் கீழ் செம்மொழித் தமிழ் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார்.  30 பேர்களுக்குமேல் வந்திருந்தார்கள். பொரும்பாலோர் கல்லூரி மாணவ, மாணவிகள்.  நான் வாங்கிய சில தலவரலாறு புத்தகங்கள் : 1. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் 2. ஸ்ரீசார்ங்கபாணிசுவாமி திருக்கோயில் தலவரலாறு 3. அருள்மிகு நாகேசுவரசுவாமி திருக்கோயில் வானமுட்டி பெருமாள் கோயில் போனோம்.  பெருமாள் நின்றுகொண்டே கண்களை அகலவிரித்துப் பார்த்துக் கொண்டிருப்பது வித்தியாசமாக இருந்தது.

இரண்டு மூன்று நாட்கள் முகநூல் பக்கமே போகவில்லை.

வியாழக்கிழமை ஆகிய இன்று காலை சென்னை வந்து சேர்ந்து விட்டேன்.

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்

 

அழகியசிங்கர்

1. யார் வருவார்கள் ஆட்சி அமைக்க?

தெரியாது

2. அரசியல் கட்டுரைகள் நீங்கள் எழுதுவதாக இருந்தால்..

சமஸ் அவர்களுக்குப் போட்டியாக எழுத விரும்பவில்லை.

3. ஊழல் இல்லாத அரசியல்வாதிகளைப் பார்க்க முடியுமா?

பார்க்க முடியாது.  ஆனால் யாருக்கும் தெரியாமல் எப்படி ஊழல் செய்வது என்பதை ஒரு சில அரசியல்வாதிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அது ஒரு கலை.

4. எந்த எழுத்தாளரை நீங்கள் போற்றுகிறீர்கள்?

அசோகமித்திரனை.  சமீபத்தில் அவருடைய பேட்டி விகடன் தடத்தில் வந்துள்ளது.  நான் பத்திரப்படுத்தி எப்போதும் படிக்க விரும்புகிறேன்.

5. எந்த எழுத்தாளரின் வேகம் உங்களை ஆச்சரியப்படுத்துகிறது?

எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா..

6. எந்தப் புத்தகம் இப்போது படிக்கிறீர்கள்?

சர்க்கரை நோயுடன் வாழ்வது எப்படி? என்ற புத்தகத்தைப் படிக்கிறேன். நேஷனல் புக் டிரஸ்ட் கொண்டு வந்த புத்தகம்.

7. சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பயம் எது?

அப்பா படுத்திருந்த அறை.  அங்கு போகவே என்னால் முடியவில்லை. தனியாக இரவு நேரத்தில் இருக்கும்போது எல்லா இடங்களிலும் விளக்குகளைப் போட்டுவிட்டுத்தான் தூங்குகிறேன்.

8. உங்கள் புத்தகங்களை விற்க முடியாவிட்டால் என்ன செய்வீர்கள்?

கவலைப்படமாட்டேன்.  நான் இருக்கும் மாம்பலம் பகுதியில் நிறைய பேப்பர் கடைகள் இருக்கின்றன.  திருவல்லிக்கேணி பிளாட்பாரத்திலும் சில கடைக்காரர்களைப் பார்த்து விற்க புத்தகங்களைக் கொடுக்கலாம் என்றும் யோசிக்கிறேன்.

9. உங்களுக்கு இலக்கிய விருது கிடைப்பதாக கனவு கண்டேன்.

விபரீத கனவு

10. புத்தகம் படிப்பது எளிதானதா? புத்தகம் எழுதுவது எளிதானதா?

இரண்டும் எளிதானதல்ல.

11. நொண்டி அடிப்பது உங்களுக்குப் பிடிக்குமே..

சின்ன வயதில் நொண்டி அடிக்கும்போது இரண்டு கைகளையும் அகல விரித்து எல்லோரையும் பிடித்து விடுவேன்.  இப்போது அதுமாதிரி நொண்டி அடிக்க முடியவில்லை.

12. ஒரு பஸ்ûஸப் பிடித்து எங்காவது போக வேண்டுமென்றால் எங்கே போவீர்கள்..

திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு எதிரில் உள்ள குளத்துப் படிக்கட்டுகளில் உட்காரப் போவேன்.

13. மின்சார வண்டியில் போவது என்றால்

திரிசூலம் ரயில் நிலையத்திற்குப் போய் நண்பர்கள் சிலரைக் கூப்பிட்டு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கவிதைகள் வாசிக்கச் சொல்வேன்.

14. சமீபத்தில் உங்கள் பதிப்பகம் மூலம் கொண்டு வந்த புத்தகத்தில் எது உங்களைக் கவர்ந்தது.

ஞானக்கூத்தனின் இம்பர் உலகம்.

நீங்களும் படிக்கலாம்… 27

நீங்களும் படிக்கலாம்… 27
 
 
நிறைவு செய்ய முடியாத கற்பனை
 
 
அழகிய்சிங்கர்
 
 
 
 
ரொம்பநாள் கழித்து லாசராவின் புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்துள்ளேன். நான் முன்பு அவர் எழுத்தைப் பற்றி மற்றவர்கள் சிலாகித்துக் கூறியதைக் கேட்டிருக்கிறேன். நானும் அவருடைய கட்டுரைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். அவருடைய சிறுகதைகளோ நாவல்களோ அவ்வளவாய்ப் படித்ததில்லை. அதற்குக் காரணம் அலட்சியம் என்பதல்ல. இன்னும் கேட்டால் அவருடைய புத்தகங்கள் என் அலமாரியில் இருந்தாலும், எடுத்துப் படிப்பதற்கான சந்தர்ப்பத்தை நான் உருவாக்கிக் கொள்ள வில்லை என்றுதான் தோன்றுகிறது.
 
அபிதா என்ற இந்த நாவல் 1970ல் வாசகர் வட்டம் மூலம் வெளிவந்தது. இந்த நாவலை லாசரா மூன்று பெண்களை மையமாக வைத்து எழுதி உள்ளார். சாவித்திரி, சகுந்தலா, அபிதா என்ற மூன்று பெண்கள்தான் அவர்கள்.
இந்த நாவலை லாசரா கொண்டுபோகிற விதம் அபாரம். எல்லா இடங்களிலும் வார்த்தை ஜாலம். வார்த்தை ஜாலம் இல்லாவிட்டால் இந்த நாவலே எழுத முடியாதுபோல் தோன்றுகிறது.
 
நாவல் எழுதிக்கொண்டு வருபவர் திடீர் திடீரென்று கவிதை வரிகள் எழுதி விடுகிறார். ஆனால் ஒரு நேர்பேச்சில் லாசராவிற்கு கவிதைகள் மீது ஆர்வம் இல்லை என்று நினைக்கிறேன்.
இதோ புத்தகத்தின் ஒரு பகுதியில் எழுதியிருப்பதை உங்களுக்கு அளிக்கிறேன்.
 
பித்தத்தின் உச்சம்
தேன் குடித்த நரி
புன்னகையாலேயே ஆக்கி
புன்னகையாலேயே ஆகி
புன்னகை மன்னன்.
ஆண்டவனும் ஒரு ஆணி மாண்டவ்யனே
 
லாசரா வெகு சுலபமாய் வார்த்தைகளை வைத்து விளையாடிக்கொண்டே பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகிறார். சாவித்திரி என்ற பெண் வசதி படைத்தவள். அவள் ஒரு ஏழையை அல்லது கிட்டத்தட்ட ஒரு அனாதையை திருமணம் செய்துகொள்கிறாள். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது ஒரு சிலருக்குத்தான் கிட்டும். அந்த அதிர்ஷ்டம் இந்த நாவலின் வரும் கதாநாயகனுக்குக் கிடைக்கிறது. பட்டினியில் சத்திரத்துத் திண்ணையில் படுத்துக் கிடந்தவனுக்கு அடிக்கும் அதிர்ஷ்டத்தில் ஒரு பெண்ணும் கிடைக்கிறாள். அவளை ஏற்றுக்கொண்டவனுக்கு ஒருவித சந்தேகப் புத்தி. அவன் இப்படி சொல்கிறான்.
 
ராஜா மணந்த பிச்சைக்காரி ராணியாகிவிடலாம்
ஆனால் ராணி மணந்த ஏழை, ராஜா இல்லை, என்றும் அவன் பிரஜைதான். அவனுக்கும் அவன் மனைவி சாவித்திரிக்கும் இருக்கும் முரண்பாடை எளிதில் கொண்டு வருகிறார் லாசரா. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அவன் இணக்கமாக வாழ வேண்டுமென்று நினைத்த கரடிமலையில் இருந்த சகுந்தலை அவன் நினைவுக்கு வருகிறாள்.
அடிக்கடி வியாபார நிமித்தமாக அவன் வெளியூர் செல்பவன், அவன் மனைவி சாவித்திரியை அவன் எங்கும் அழைத்துப் போவதில்லை. முரண்பாடுடன் அவர்கள் வாழ்க்கை தொடராமல் இல்லை. அதன் தொடர்ச்சியாக அவர்கள் இருவர்கள்தான் இருக்கிறார்கள். அவர்கள் வாரிசாக யாரும் உருவாக இல்லை. இந்த அலுப்பான வாழ்க்கையில் அவன் அவளை தன் இருந்த கரடிமலை என்ற ஊருக்கு அழைத்துக்கொண்டு போகிறான்.
 
சாவித்திரியுடன் அவன் அந்த ஊருக்குப் போனாலும், அவனுக்கு சகுந்தலையின் ஞாபகமே வருகிறது. இதோ ஒரு இடத்தில் இப்படி எழுதுகிறார் :
 
….குன்றையே அணைப்பதுபோல், அந்த இடத்தில் ரயில் லாடமாய் ஒடிந்தது. எத்தனை நாள் இந்த வளைவை நானும் சகுந்தலையும் நின்று வேடிக்கை பார்த்திருப்போம். ரயில் கடந்த சூட்டில் துண்டித்து விழுந்து கிடக்கும் பாம்பின் துடிப்புப் போல், தண்டவாளத்துக்கு மூச்சு இறைப்பதுபோல் எங்களுக்கு ஒரு ப்ரமை….
 
என்ன அந்நியாயம் பக்கத்தில் மனைவி இருக்கும்போது பால்ய காலத்தில் பழகிய சகுந்தலையை ஞாபகம் வைத்துக்கொண்டு வருகிறார். அவர் கரடிமலையை விட்டுப் பிரியும்போது, வயது முதிராத ஒரு ஆணும் பெண்ணும் பேசுகிற பேச் இருந்தாலும், வெளிப்படுத்த முடியாத காதல் அதில் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
சகுந்தலையைப் பார்த்து கோயில் மலை அடிவாரத்தில் நின்றிருக்கும்போது, அவன் ஒரு கேள்வியைக் கேட்கிறான் :
 
“சக்கு, நீ என்னோடு வந்துடறையா?”
 
இந்தக் கேள்வியில் எல்லாமே முடிந்து விடுகிறது. அந்த இடத்தைவிட்டுப் போகிற நிர்ப்பந்தம், பின் ஒரு சத்திரத்தில் அனாதையாகக் கிடந்தவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம், அதன் மூலம் அவனுக்குக் கிடைத்த சாவித்திரி. லாசரா இந்தக் கதையை விவரித்துக்கொண்டு போனாலும் சாவித்திரியிடம் காணததை சகுந்தலையிடம் என்ன கண்டார் என்ற கேள்வி மனதில் ஓடாமல் இல்லை.
 
ஆனால் இந்தக் கதையை அவர் எடுத்துக்கொண்டு போகும் விதம். அபிதாவைப் பார்க்கும்போது சகுந்தலையைப் பார்க்கிறமாதிரி இக் கதையின் நாயகனுக்குத் தெரிகிறது. சக்குவா அபிதாவா என்ற குழப்பம் ஏற்படுகிறது. சகுந்தலை யாரை நினைத்துக்கொண்டு அழுதகொண்டு இருக்கிறாள். அவள் மரணம் ஏன் இப்படி கோயிலில் உள்ள சிவலிங்கத்தை அணைத்தபடி நடக்கிறது. இப்படிப் பல புதிர்கள் இந்த நாவலில்.
 
அபிதாவைப் பார்க்கும்போது சகுந்தலாவைப் பார்க்கும் உணர்வு ஏற்பட்டு, அவர் உடலெல்லாம் துடியாய் துடிக்கிறது. ஆனால் இது தகாத உறவாகும் என்றும் தோன்றுகிறது. இந்த நாவலைப் படிக்கும்போது எனக்கு நபக்கோவின் லோலிதா என்ற நாவல் ஞாபகம் வருகிறது.
 
ஒரு இடத்தில்
 
‘நீ என்னைக் கைவிட்ட கதையை, நானே உன்னிடம் சொல்லத்தான், அபிதாவாய்த் திரும்பி வந்திருக்கிறேன். என்னைக் கொன்னாச்சு. அவளை என்ன செய்யப் போகிறாய்? என்னைப் பழி வாங்கிக்கத்தான் நான் அபிதா.ýý என்று வருகிறது. இது விபரீத உணர்வு நிலையும் நம்ப முடியாத கற்பனையாகத் தோன்றுகிறது. ஆனால் எப்போதும் அபிதாவைப் பார்க்கும்போது காம உணர்வோடுதான் இந்தப் பாத்திரத்தை உருவாக்கி உள்ளார்.
இந்நாவலின் முடிவுதான் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. மரணம் ஒரு தீர்வாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. நிறைவு செய்ய முடியாத கற்பனை என்று சொல்லலாமா?
 
 
அபிதா – லாசரா – நாவல் – பக்கங்கள் : 104 – வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ், கே கே நகர் மேற்கு, சென்னை 78 – விலை: 80 – தொலைபேசி எண் : 044 65157525
 

தவிர்க்க வேண்டியவை

 
அழகியசிங்கர்
 
 
சிலசமயம் நம்மை அறியாமல் சில காகிதங்கள் கிடைக்கும். அந்தக் காகிதங்களில் எதாவது அச்சடித்திருக்கம். அது நமக்கு உபயோகமாக இருக்கும். அப்படி ஒரு அச்சடித்தக் காகிதம் கிடைத்தது. சரவணா காபி அச்சடித்த 2016 காலண்டரின் பின் பக்கம் உள்ள வாசகம்தான் அது.
 
சில தவறான செயல்கள், தவிர்க்க வேண்டியவை என்று எழுதியிருந்தது. அதைப் படித்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது எல்லோரும் தெரிந்துகொண்டால் நல்லது என்று நினைத்தேன். இதோ உங்களுக்கும் படிக்க அளிக்கிறேன். இதில் காணப்பட்ட வாசகங்களைக் குறித்து நீங்கள் கூற விரும்புவது என்ன என்பதையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.
 
 
1. இரவில் துணி துவைக்கக் கூடாது
2. இரவில் குப்பை வெளியில் கொட்டக்கூடாது
3. இரவில் மரத்தின் கீழ் தூங்கக்கூடாது
4. விரதம் இருக்கும் தினத்தில் அடிக்கடி நீர் அருந்தக்கூடாது. பகலில்
தூங்கக் கூடாது. வெற்றிலை பாக்குப் போடக் கூடாது. உணவில் கத்திரிக்காய் சேர்க்கக் கூடாது.
5. முகத்தை இடது கையால் தொடக்கூடாது
6. ஓரடி நடவேன், ஈரடி கடவேன்,
இருந்தும் உண்ணேன். படுத்து உறங்கேன்
இது பழம் பாடல். இதன் பொருள்.
 
தனது உடலின் நிழல் கால் அளவில் ஒரு அடியாக இருக்கும் நேரமாகிய உச்சிப் பொழுதில் வெளியே திரிய மாட்டேன். ஈரமான இடங்களில் நடக்க மாட்டேன். ஏற்கனவே சாப்பிட்டது வயிற்றில் இருக்க மேலும் உண்ண மாட்டேன். தூக்க வராமல் படுக்கைக்குச் செல்ல மாட்டேன்.
 
7. பயணம் செய்யும்போது அதிர்ச்சி இருந்தால் படிக்கக்கூடாது.
8. சளி பிடிக்கும்போது மூக்கை பலமாகச் சீந்தக் கூடாது.
9. தலைக்கு வைக்கும் தலையணை மீது உட்காரக்கூடாதுü
10. ஒரே ஆடையுடன் உணவு உட்கொள்ளக்கூடாது.
11. பிறர் பயன்படுத்திய ஆடை, செருப்பு முதலியவற்றை அணியக்கூடாது.
12. காலில் ஈரம் இருக்கும்பொழுது படுக்கக்கூடாது. ஈரம் காய்ந்த பின் படுக்க வேண்டும்.
13. வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு ஆகிய திசைளில் தலை வைத்துப் படுக்கக்கூடாது.
 
மேலே குறிப்பிட்ட கட்டளைகளில் சிலவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன். சிலவற்றை ஏற்க முடியாது. உதாரணமாக பகலில் தூங்கக் கூடாது என்று ஒரு கட்டளை. உண்மையில் பகலில்தான் எனக்கு தூக்கம் வரும். சரியாக சாப்பிட்ட 12 அல்லது ஒரு மணி சுமாருக்கு கண் தானகவே தூக்கத்தைத் தந்து விடும். நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து என்னை அறியாமல் தூங்கி விடுவேன். அப்போது வருகிற அந்தத் தூக்கத்திற்கு இணை எதுவும் கிடையாது. அதேபோல் ஓரே ஆடையுடன் உணவு உட்கொள்ளக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. உணவில் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது என்று சொல்வது ஏன் என்று தெரியவில்லை. கத்திரிக்காய் போல ருசியான காய்கறி யாராலும் தவிர்க்க முடியாது. வெற்றிலைப் பாக்கும் போடக்கூடாது என்பதையும் நம்ப முடியவில்லை. வெற்றிலை சீரணமாக உதவும். அதை ஏன் போடக்கூடாது.
 
நாமே முகத்தைத் தொடும் வழக்கம் அற்றவர்கள். முகத்தை அலம்பும்போதுதான் முகத்தைத் துடைப்போம். அப்போது வலது கை இடது
கை என்பதை அறிய மாட்டோம்.

நீங்களும் படிக்கலாம்… 26

கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நாவல் எழுதுவது எளிதானதா?

 

அழகியசிங்கர் 

 

இப்போதெல்லாம் நான் புத்தகம் படிக்க ஆரம்பித்தால் ஒரு புத்தகத்தின் கால் பகுதியைப் படித்தவுடன், அப் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்க எனக்கு எண்ணம் தோன்றாது.  மேலும் அப் புத்தகம் என் அருகில் இல்லாமல் எங்காவது போய்விடும்.  எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாததால் புத்தகம் மறந்து போய்விடும்.  இன்னும் சில புத்தகங்களை அரைப் பகுதியாவது படித்திருப்பேன்.  அதுவும் முழுவதும் முடிப்பதற்குள் என்னை விட்டு எங்காவது போய்விடும்.  இதையும் மீறி வேறு சில புத்தகங்களை நான் முக்கால்வாசிப் படித்து நிறுத்தியிருப்பேன்.  முழுதாக ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது என்னால் இயலாத காரியமாகவே இருக்கும்.

ஆனால் ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தால் அல்லது ஒரு கட்டுரைத் தயாரித்து எழுத வேண்டுமென்றால் ஒரு புத்தகத்தை முழுவதுமாக நான் படித்துவிடுவேன்.  2015ஆம் ஆண்டு நான் இப்படித்தான் ஒரு இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்து அது குறித்து எழுத வேண்டுமென்ற முனைப்பில் இருந்து செயல்பட்டேன்.

எம் ஜி சுரேஷ் அவர்களின் தந்திர வாக்கியம் என்ற நாவலைப் படிப்பதற்கு எனக்கு எந்தவித தடங்களும் இல்லை. 230 பக்கங்கள் கொண்ட நாவல் இது என்பதால் இந்தத் தடை இல்லை.  கடந்த சில தினங்களாக நான் விடாமல் தந்திர வாக்கியம் என்ற நாவலை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன்.  சமீபத்தில் என் சூழ்நிலை வாசிப்பதற்கு ஏற்றதாக அமையவில்லை என்றாலும் இந்த நாவலைப் படித்து முடித்துவிடவேண்டும் என்ற முனைப்பில்  படித்து முடித்தேன்.

தமிழில் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் எம் ஜி சுரேஷ்.  அவர் கிட்டத்தட்ட 6 நாவல்கள் எழுதி இருக்கிறார்.  பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.  பல கட்டுரைத் தொகுப்புகளைக் கொண்டு வந்திருக்கிறார்.

பின் நவீனத்துவம் என்றால் என்ன என்ற அறிமுக நூலை எழுதி உள்ளார்.  திரைப்படத்துறையிலும் அவர் தன் பங்கை செலுத்தி உள்ளார்.

ஒரு கோட்பாடை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாவலை எழுதுவது என்பது சற்று சிரமமான ஒன்று.  எனக்குத் தெரிந்து ஒரு பின் நவீனத்துவ கோட்பாடு பேசும் ஒரு நாவலாசிரியர் எழுதிய பல நாவல்களை அவர் அப்படியே மேலநாட்டு நாவல்களின் மாதிரிகளை எடுத்து அப்படி எழுதியிருக்கிறார்.  அந் நாவல்களை எல்லாம் படிக்கும்போது உள் வாங்கிக்கொள்ள முடியவில்லை.  ஆனால் எம் ஜி சுரேஷ் அப்படி இல்லை. அந்த மாதிரிகளை உதாரணமாக வைத்துக்கொண்டு தன் இயல்பாய் புதிய வகை நாவல்களை எழுதி உள்ளார்.

தந்திர வாக்கியம் என்ற நாவலும் துண்டாடப்பட்ட விவரணைகளைக் கொண்ட நாவல்தான்.

இந் நாவலில் இரண்டு விதமான வாழ்க்கை முறையைக் கொண்டு வருகிறார்.  ஒன்று தற்கால வாழ்க்கை முறை.  இன்னொன்று புத்தர் வாழ்ந்த கால வாழ்க்கை முறை.  ஐடி துறையில்  படுகிறபாட்டை ரொம்ப சுலபமாக சுரேஷ் விவரித்துக்கொண்டு போகிறார்.  நிகண்டன் என்பதுதான் நிக்கியின் நிஜமான பெயர்.  அப்பா ஜெயராமனுக்கும், இருளாயிக்கும் பிறந்த பையன்.

நிக்கிக்கு அம்மாவின் கறுப்பும், அப்பாவின் மாநிறமும் கலந்த அரைக் கறுப்பு நிறம் என்று விவரிக்கிறார். பார்க்க தெற்கு சூடானில் இருக்கும் நூபியனின் தோற்றம் என்று விவரிக்கிறார்.  பின் நிக்கி பள்ளிக்கூடங்களில் படுகிற பிரச்சனைகளை விவரிக்கிறார்.  மேல் நாட்டு வர்க்கத்தினர் படிக்கும் விலையுயர்ந்த பள்ளிக்கூடத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியைக்கொண்ட நிக்கி படும் அவஸ்தைகளை விவரிக்கிறார்.

ஐடி கம்பெனியில் ஒவ்வொரு கம்பெனியாக மாறிக்கொண்டிருக்கிறான் நிக்கி.  தனுஜா கங்குலி என்பவளைச் சந்திக்கிறாள்.  அவள் அவனை மாற்றுகிறாள்.  நவநாகரீக யுவனாக மாறுகிறான்.  கங்குலி என்ற பிராமண வகுப்பைச் சேரந்த வங்காளி தனுஜா.  அவள் அவனைத் திருமணம் செய்துகொள்ள உடனடியாக சம்மதிக்க மாட்டேன் என்கிறாள்.  சினை முட்டைகளை சேமிப்பு வங்கியில் உறைநிலையில் சேமித்து வைக்கும் நவநாகரீக மங்கை.  தற்போது எதிர்கொள்ளும் ஐடி பிரச்சினையை தீவிரமாக இந்த நாவல் ஆராய்கிறது. ஐடி பிரச்சினையை முன் வைத்து நகர்ந்துகொண்டிருக்கிறது. 26ஆம் அத்தியாயத்திலிருந்து சீனாவின் மூன்று பேரரசுகளின் காலம் பற்றி விவரிக்கிறது.  ஹøவாகுவாங் ஜாங் என்ற புத்தத் துறவி எழுதிய கடிதங்களின் தொகுப்பை கொஞ்சம் கொஞ்சமாக இந் நாவலில் எம் ஜி சுரேஷ் விவரிக்கிறார்.  இந்தியாவிற்கு பயணியாகப் புறப்பட்ட ஜாங்கின் பயணத்தைக் கடிதம் மூலம் இந்த நாவல் தொடருகிறது.  இந்தப் பயணத்தை மொழிபெயர்த்து தன் அப்பாவிற்கு அனுப்புகிறான் நிக்கி.

திரமிள் நாட்டின் தலைநகரமான மதுரையின் பிரதான சாலையில் ஜாங்கும் லுவோஜியாவும் நடந்து கொண்டிருப்பதெல்லாம் கடிதம் வழியாக நாவல் விவரிக்கிறது.

ஐடி கம்பெனியில் பணிபுரிவது என்பது ஆபத்தானது.  குடைராட்டினத்தில் மேலும் கீழும் செல்வதுபோல், நிக்கிக்கு திடீரென்று வேலை போய்விடுகிறது.  அந்தத் துக்கத்தைத் தாங்காமல் தனுஜா அவனை விட்டு அவனிடம் சொல்லாமல் போய்விடுகிறாள்.  ஐடி கம்பெனியில் நேரம் தெரியாமல் பணிபுரியும் ஆபத்து.  அதனால் பலருக்கு மனக் குழப்பம் ஏற்படுவதும், பைத்தியம் பிடித்துவிடுவதும், தற்கொலை செய்துகொள்வதும் சகஜமாக வருகிறது.

இந்த நாவல் மாற்றி மாற்றி நிகழ்கால ஐடி துறையில் உண்டாகும் அவலநிலை, பின் புத்தர்கால அனுபவ நிலையை விவரித்துக் கொண்டே போகிறது.  புத்தரின் தர்க்கம் என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் வருகிறது.  பாரத்வாஜர் புத்தருடன் பேசுவதுபோல் ஒரு காட்சி வருகிறது.

புத்தர் எப்படி பாரத்வாஜருடன் வேறுபடுகிறார் என்ற கேள்வி எழும்புகிறது.  அதற்கு புத்தர் இவ்வாறு சொல்கிறார் :

‘அவர் மந்திரங்களை நம்புபவர்.  பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற எல்லாவற்றுக்கும் மந்திரங்களை உச்சாடனம் செய்பவர் அவர்.  எனக்கு மந்திரங்களில் நம்பிக்கை இல்லை .  நான் தந்திரத்தை நம்புவன்.  தந்திரம் என்றால் உபாயம்.  இவர் மந்திரவாதி.  நானோ தந்திரவாதி.’  இந்த நாவலின் முழு தாத்பரியம் இந்த 93வது அதி;தியாயத்தில் அடங்கி விடுவதாகத் தோன்றுகிறது.  இந்த வாழ்க்கையின் சாரம்சத்தைத் தருணங்களால் ஆனது என்கிறார் இந் நாவலாசிரியர்.

இருட்டு ஒரு தருணம். வெளிச்சமும் ஒரு தருணம்.  இது ஒரு நிகழ்ச்சி.   மாறி மாறி நடக்கிறது என்கிறார் எம்.ஜி சுரேஷ்.  இந் நாவலைப் படிப்பது கூட ஒரு நல்ல தருணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

தந்திர வாக்கியம் – எம். ஜி சுரேஷ் – நாவல் – பக்கங்கள் : 232 – விலை : ரூ.200 – முதல் பதிப்பு : 2016 – வெளியீடு ; சொல்லங்காடி, புதிய எண் : 10, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 600 011

 

ஒரே மேடையில் இரண்டு இலக்கியக் கூட்டங்கள்

அழகியசிங்கர்
 
 
இந்த மாதம் நாலாவது சனிக்கிழமை இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பும், குவிகம் இலக்கிய வாசல் என்ற அமைப்பும் இரு இலக்கியக் கூட்டங்களை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் ஏற்பாடு செய்தன. இரண்டு அமைப்புகளும் சேர்ந்து கடந்த இரண்டு கூட்டங்கள் நடத்துகின்றன. இலக்கியச் சிதனை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தியிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இலக்கியச் சிந்தனை மாதாந்திர கூட்டத்தை சரிவர செய்ய இயலவில்லை. பொதுவாக இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களுக்கு யாரும் வருவதில்லை. சிலசமயம் கூட்டத்தில் பேச வருபவரும் அதை ஏற்பாடு செய்தவர் மட்டும் இருப்பார்கள். அதனால் குவிகம் வாசக சாலை மூலம் ஏற்பாடு செய்வதால் இன்னும் சிலர் கூடுதலாக கூட்டத்திற்கு வரலாம்.
 
கிருபானந்தனும், சுந்தர்ராஜனும் முழு மூச்சாக இலக்கியக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்று தீவிரமாக இயங்குபவர்கள். இதுவரை வெற்றிகரமாக 20க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியவர்கள். அவர்கள் முயற்சியில் இலக்கியச் சிந்தனை அமைப்பும். குவிகமும் சேர்ந்து கூட்டங்களை நடத்தத் துவங்கி உள்ளன. முதலில் அந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இப்படி இரண்டு கூட்டங்களை ஒரே சமயத்தில் நடத்துவதால் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் கூட்டங்களை முடிக்க முடியுமா என்பது தெரியவில்லை.
 
சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் இலக்கியச் சிந்தனை சார்பில் நாராயணியம் பற்றி சுந்தரராஜனும், குவிகம் சார்பில் லா ச ராமமிருதத்தின் அபிதா என்ற நாவலைப் பற்றி ஒரு கலந்துரையாடலும் நடந்தது. நேரம் போனதே தெரியவில்லை. நாராயணியம் பற்றி பேசிய சுந்தரராஜன் மனதைத் தொடும்படி பேசினார். 9 மணிக்குத்தான் கூட்டங்கள் முடிந்தன. லாசராவின் அபிதா என்ற நாவலைப் படிதத்தது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. தொடர்ந்து இரண்டு அமைப்புகளும் செயல்பட என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

101வது இதழ் நவீன விருட்சம் பற்றி கொஞ்சம் சொல்லட்டுமா

அழகியசிங்கர்

 

101வது இதழ் நவீன விருட்சம் வந்துவிட்டது.  அதை ஒவ்வொரு இடமாய் கொண்டு போய் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.  க்ரோம்பேட்டையில் காந்தி புத்தக ஸ்டால் என்கிற ரயில்வே பேப்பர் கடையில் கொடுத்திருக்கிறேன். ஸ்டேஷன் உள்ளே இந்தக் கடை இருக்கும்.  அதேபோல் டிஸ்கவரியில் கொடுத்திருக்கிறேன். இப்போதுதான் மெதுவாக ஒவ்வொருவருக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  புத்தகக் காட்சியின்போது சிலர் வாங்கிச் சென்றிருக்கலாம்.

விருட்சம் பத்திரிகை மூலம் என் நோக்கம் என்ன?  பத்திரிகையைப் புரட்டினால் ஒரு அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்தில் பத்திரிகையைப் படித்துவிட வேண்டும்.  எளிதாக அப்படி படித்துவிடக் கூடிய பத்திரிகைதான் இது.  எதாவது ஒரு கதையையோ கவிதையையோ படிக்கும்போது ஒருவித ருசி வேண்டும்.  அதை சிலர் கிண்டல் செய்கிறார்கள்.  ஒரு பத்திரிகை என்றால் அதை உடனே படித்துவிட வேண்டும்.  எளிமையாக இருப்பதால் அது ஆழமாக இருப்பதில்லை என்ற அர்த்தம் இல்லை.  எளிமையும் ஆழமும் சேர்ந்தால் அது பெரிய பலம்.

நவீன விருட்சம் 101வது இதழில் நான் குறிப்பிட விரும்புவது நகுலனின் சிறுகதை.  அந்தக் கதையின் பெயர் ஒருநாள்.  இது அவருடைய தொகுப்பில் இருக்காது. எழுத்தில் வந்திருந்த இந்தக் கதையை எனக்குக் கொடுத்தார். அதை பிரசுரம் செய்திருக்கிறேன்.  இந்தக் கதையை அசோகமித்திரன் எனக்குக் கொடுத்தார்.  நகுலன் எப்படி எழுதியிருக்கிறார் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.  எளிமையான ருசியான கதை ஆனால் ஆழமான கதை.

அசோகமித்திரன் ஒரு நாடகம் எழுதியிருக்கிறார்.  நாடகத்தின் பெயர் ஆகா கான் மாளிகை.  நான் விருட்சம் இதழில் வெளிவந்த சிறந்த நாடகமாக இதைக் கருதுகிறேன்.  பொங்கல் 1996 என்ற பெயரில் சோ சுப்புராஜ் ஒரு கதை எழுதி உள்ளார்.  வெளிநாட்டில் தமிழர்கள் படும்பாட்டை விவிரிக்கும் கதை.  எஸ் சங்கரநாலராயணன் மகிழ்ச்சியின் தூதுவன் என்ற கதையை எழுதி உள்ளார்.  அவர் கதைத் தலைப்பின் முன் விரித்து சுருண்டு என்ற வார்த்தைகள் எப்படி வந்தன என்ற அவருடைய கேள்விக்கு என்னால் பதில் சொல்லத் தெரியவில்லை.  கதை என்று சொல்லி முடிப்பதற்குள் கதையை எழுதி அனுப்பி விடுகிற வேகம் அவரிடம் உள்ளது.  குழல்காரனைப் பற்றிய உருக்கமான கதை.  சுப்ரஜா ருசி என்ற கதையை எழுதி உள்ளார்.  நமுத்துப் போன கடலையைக் கூட ருசிக்க முடியவில்லை. தாஜ் எழுதிய சைத்தான் கட்டுரை வடிவில் உள்ள கதைதான்.

இடைவெளி  என்ற பானுமதியின் கதையில் ஆண் பெண் உறவின் சிக்கலை துல்லியமாக படம் பிடித்துக் காட்டி உள்ளார்.  ஏன் எழுதினார் என்ற தலைப்பில் அழகியசிங்கராகிய நான் ஒரு கதை எழுதி உள்ளேன்.  ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.  என் நண்பர் ஒருவர் என் வீட்டிற்கு வந்திருந்தார்.  என் வீட்டுச் சூழலை வைத்து ஒரு கதை எழுதி அது தினமணிகதிரில் வெளிவந்துவிட்டது.  என்னையும் அப்பாவையும் தவறாக படம் பிடித்துக் காட்டியிருந்தார்.  ரொம்ப நாளாக அந்தக் கதைக்கு மாற்றாக ஒரு கதை எழுத நினைத்தேன்.  அந்தக் கதைதான் ஏன் எழுதினார் என்ற தலைப்பில் நான் எழுதிய கதை.  இதைத் தவிர பலர் கவிதைகள் எழுதி உள்ளார்கள்.  பெருந்தேவி 4 கவிதைகள் எழுதி உள்ளார்.  சிபிச்செல்வன் மூன்று கவிதைகள் எழுதி உள்ளார். நோயல் விமர்சனப் புத்தகத்தைப் பற்றி முத்துக்குமார் விமர்சனம் எழுதி உள்ளார்.  பிரபு அவர் பயணத்தைப் பற்றி கட்டுரை எழுதி உள்ளார்.  நானும் வேடிக்கையாக ஜெகன் மோகினி கட்டுரை எழுதி உள்ளேன்.

எல்லோரும் வாசிக்க வேண்டிய பத்திரிகை நவீன விருட்சம்.  நான் கொஞ்சம் கொஞ்சமாக பத்திரிகையை எல்லோருக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.  102 வது இதழ் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வந்துவிடும்.