விருட்சம்  இலக்கியச் சந்திப்பின் 26வது கூட்டம்

நாளை நடைபெற உள்ள விருட்சம் இலக்கியச் சந்திப்பின் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்யும் முன், நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் ஒவ்வொருவராக பேச அழைக்கலாமென்று நினைத்தேன்.  திரூப்பூர் கிருஷ்ணன் அவர்களைப் பேச அழைக்குமுன் அப்படித்தான் நினைத்தேன்.  ஆனால் அவர் நானும் என் எழுத்தும் வேண்டாம்.  நானும் எழுத்தும் என்ற தலைப்பில் பேசலாம் என்று குறிப்பிட்டார்.  திரும்பவும் யோசிக்கும்போது நானும் ஜானகிராமனும் என்ற தலைப்பில் பேசுகிறேன் என்றார்.  நான் சொன்னேன்.  நானும் தி ஜானகிராமனும் என்று போடலாமென்று சொன்னேன்.  பின் திருப்பூர் கிருஷ்ணன் அதையும் மாற்றி தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் பேசுகிறேன் என்ற குறிப்பிட்டடுள்ளார்.

அதே சமயத்தில் எனக்குள் இன்னொரு எண்ணம் தோன்றியயது.  இதே மாதிரி தலைப்பை வைத்துக்கொண்டு அதாவது ஜெயகாந்தனும் நானும், கு அழகிரிசாமியும் நானும், அசோகமித்திரனும் நானும், ஞானக்கூத்தனும் நானும் என்று பொதுவான தலைப்பில் என் எழுத்தாள நண்பர்களைக் கூப்பிட்டுப் பேசச் சொல்வதோடல்லாம் இதைப் பதிவு செய்து அப்படியே புத்தகமாகக் கொண்டு வர இயலுமா என்றும் யோசிக்கிறேன். கூட்டம் எப்படி நடக்க உள்ளது என்பது தெரியாது.  நீங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

டெம்ப்ட் ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே.

..

எப்போதும் போல இல்லை இந்தச் சனிக்கிழமை.  தேனாம்பேட்டையிலிருந்து மதியம் ஒரு மணிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.  ஒரே கூட்டம்.  வண்டியை ஓட்டிக்கொண்டே வர முடியவில்லை.  ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.  பின் தூங்க ஆரம்பித்து 4 மணி சுமாருக்கு எழுந்து, காப்பியைக் குடித்து விட்டு, தி நகரில் உள்ள ந்யூ புக் லேண்ட்ஸ் சென்றேன்.  அங்கே என் புத்தகங்களைக் கொடுக்க எடுத்துச் சென்றேன்.

அங்கிருந்து திரும்பி வரும்போது ஒரே கூட்டம்.  எப்போதும் நான் விருட்சம் இலக்கியக் கூட்டம் நடத்தும்போது மேற்கு மாம்பலத்திலிருந்து தி நகருக்குப் போவதற்குள் கூட்டம் மிகுதியாக இருக்கும்.  முன்னதாகவே சத்திரம் வாசலில் நின்றிருக்கும் கோவிந்தராஜனுக்கு என் மீது கோபம் கோபமாக வரும்.  உரிய நேரத்தில் நான் வரவில்லை என்று.  ஆனால் உண்மையில் இன்று முன்பு நான் போவதை விட கூட்டம் தாங்க முடியவில்லை.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தால் போதும் போதுமென்று ஆகிவிட்டது.  வீட்டில் மனைவி கதை கேட்க அயோத்தியா மண்டபம் சென்று விட்டதால் நான் திரும்பவும் ஒரு இரவு 8 மணி சுமாருக்கு அயோத்தியா மண்டபம் சென்றேன்.  ஒரே கூட்டம்.  ஒரே இரைச்சல்.  கதை சொல்ல வருபவர் என்ன சொல்ல வருகிறார் என்பது கேட்கவில்லை.  சில மாதங்களுக்கு முன் நான் நடேசன் பூங்காவில் கதை கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்தினேன். சுற்றிலும் ஒரே சத்தமாக இருக்கும்.  கதையை வாசித்தால் வாசிப்பவருக்கே கேட்குமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்படும்.  என் பக்கத்தில் கதைக் கேட்க வந்த நண்பர் வேறு வழியில்லாமல் கொட்டாவி விட்டதால் கூட்டம் நடத்துவதை விட்டுவிட்டேன்.

அப்படித்தான் அயோத்தியா மண்டபத்தில் என்னால் இருக்க முடியவில்லை.  பிறகு நடந்து சென்று முருகன் இட்லிக் கடையில் இட்லி சாப்பிடலாôமென்று நினைத்தேன்.  ஒரே கூட்டம்.  வாசலில் பலர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.  வந்துவிட்டேன்.  பின் நேராக என் வண்டியை எடுத்துக்கொண்டு மங்களாம்பிகா ஓட்டலுக்குச் செல்லலாமென்று நினைத்து அங்கு சென்றேன்.  உட்கார இடம் கிடைக்கவில்லை.  எனக்கு ஒன்று தோன்றியது.  எல்லோருக்கும் என்ன ஆயிற்று என்றுதான்.

ஏன் எல்லோருக்கும் என்னைப் போல் ஓட்டலில் சாப்பிட வேண்டுமென்கிற டெம்டேஷன் இருக்கிறது என்று யோசித்தேன்.  இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று யோசித்தேன்.  பொதுவாக என்னுடைய கெட்டப் பழக்கம் நண்பர்களென்று யாரையாவது சந்தித்தால் ஓட்டலில் போய் காப்பி அல்லது டீ குடிப்பது வழக்கம். அல்லது யாரையும் சந்திக்கா விட்டாலும் நானே எதாவது ஒரு ஓட்டலில் நுழைந்து ஒரு குட்டி டிபன் சாப்பிடுவேன்.

ஒருநாள் அப்படித்தான் சங்கீதா ஓட்டலுக்குச் சென்றேன்.  ஒரே கூட்டம்.  ஒரு இடம் காலியாக இருந்தது.  சர்வர் யாரும் வரவில்லை. என்ன வேண்டுமென்று கேட்கவில்லை.  கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தேன்.  பின் எழுந்து வந்துவிட்டு வேற ஓட்டலுக்குப் போய்விட்டேன். ஆனால் ஓட்டலுக்குப் போகக்கூடாது என்ற முடிவு மட்டும் எடுக்கவில்லை.

இதையெல்லாம் சாப்பிடாதே…நிறுத்துடா என்று மனதிற்குள் கத்தினாலும், ஹோட்டலுக்குப் போகும் லாகிரி என்னை விடுவதில்லை. அதாவது பிளாட்பாரத்தில் காணும் பழையப் புத்தகங்களை வாங்கிச் சேர்ப்பதுபோல..

இன்றுதான் ஏனோ ஓட்டலுக்குப் போவதில் விருப்பம் இல்லாமல் வீட்டிற்கு வந்து, மனைவி வைத்திருந்த ஜீரக ரசத்தை சாதத்தில் கலந்து உண்டேன்.  உடன் தேங்காய் சட்னி.  மேலும் சாதம் தட்டில் இட்டு தயிர் கலந்து சாப்பிட்டேன்.  திருப்தியாக இருந்தது. இனிமேல் ஹோட்டலுக்குப் போகும் பழக்கத்தை விட வேண்டும். விட வேண்டும்.  விட வேண்டும்.

தமிழ் இனி மெல்ல ஓடிப் போய்விடுமா?

சில தினங்களுக்கு முன் உறவினர் வீட்டிற்குப் போயிருந்தேன்.  உறவினர் வீட்டில் இரண்டு செய்தித்தாள்கள் வாங்குகிறார்கள். இரண்டும் ஆங்கிலம்.  ஒன்று டைம்ஸ் ஆப் இந்தியா, இன்னொன்று ஆங்கில இந்துப் பத்திரிகை.  தமிழில் ஒரு பத்திரிகை வாங்கக் கூடாதா என்று கேட்டேன்.  அதில் ஒன்றும் இல்லை.  விபரமாய் எதாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆங்கிலத்தில்தான் முடியும் என்றார்.  அந்தப் பதில் சற்று ஏமாற்றமாக இருந்தது. உறவினர் வீட்டு ஏழாம் வகுப்புப் படிக்கும் பெண் குழந்தையும் ஆங்கிலத்தில்தான் புத்தகம் படிக்கிறது.  தமிழ் வேப்பங்காய் மாதிரி கசக்கிறது.  எல்லோரும் தமிழில் தினசரியோ புத்தகமோ படிக்காவிட்டால் எதிர்காலத்தில் தமிழ் என்ற ஒன்றே படிக்கத் தெரியாமல் போய்விடுமோ? இன்றைய பிள்ளைகள் தமிழில் புத்தகங்களோ தினசரி செய்திகளோ படிப்பதில்லை.  இதன் பாதிப்பு போகப் போக மோசமாக இருக்கும்.

இன்னொரு நண்பர் வீட்டிற்குச் சென்றேன்.  அவருடைய நடவடிக்கை எனக்கு சோர்வை ஏற்படுத்தியது.  அவர் டிவியை ஆன் செய்துவிட்டு வெறுமனே அமர்ந்திருக்கிறார்.  ஏகப்பட்ட புத்தகங்கள் உள்ளனவாம்.  எதுவும் படிக்கப் பிடிக்கவில்லையாம். அவரிடம் சொன்னேன்.  உங்களை விட வயதில் பெரியவராய் இருந்த அசோகமித்திரன் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தார் 86வயதில் என்றேன்.  தமிழில் படியுங்கள் எதையாவது படியுங்கள் என்று அவரை நோக்கி கத்த வேண்டுமென்று தோன்றியது.

மூன்றாவது நபர் அயோத்தியா மண்டபம் எதிரில் நின்றிருந்த ஓய்வுப் பெற்ற வங்கி அதிகாரி.  என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், என்று கேட்டேன்.  சும்மா இருக்கிறேன் என்றார்.  உங்களை முதன் முதலாக எங்கே சந்தித்தேன்.  இலக்கியக்கூட்டத்தில்தான் என்றார்.  இப்போதெல்லாம் படிப்பதுண்டா? என்று கேட்டுத் தொலைத்தேன். அதெல்லாம் இல்லை.  முன்னே படிப்பதுண்டு.  அதுசரி, அமுதசுரபி, கல்கி, மஞ்சரி பத்திரிகையெல்லாம் வருகிறதா என்று திருப்பிக் கேட்டார்.

எல்லாம் வருகின்றன.  நீங்கள் பார்ப்பதில்லையா என்றேன்.  இன்றைய இளைஞர்கள் படிப்பது மாதிரி தெரியவில்லையே என்ற அடுத்தக் கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டார். ஆமாம் இன்றைய இளைஞர்களில் புத்தகம் படிக்கும் எண்ணம் எத்தனைப் பேருக்கு இருக்கிறது.  அதுவும் தமிழில் வெளிவரும் புத்தகத்தை யாராவது படிக்கிறார்களா?

சமீபத்தில் ஒரு நாளேடில் ஒரு கவிஞர் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிப் பெயர்த்தக் கவிதைகள் சரியாக இல்லை என்று அரைப்பக்கம் டேமேஜ் பண்ணி எழுதியிருந்தார்கள்.  ஏன் இப்படிச் செய்தார்கள் என்பது புரியவில்லை. மோசமாக அப் புத்தகம்  இருந்தால் அதைக்குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது சாலச் சிறந்தது.  ஏற்கனவே எத்தனையோ சிபாரிசு செய்தாலும் தமிழில் புத்தகம் படிக்க வர மாட்டேன் என்கிறார்கள்.  இதில் இப்படி எழுதினால் இன்னும் மோசமாகப் போய்விடும்.  விமர்சனம் செய்பவருக்கு இது ஏன் புரியவில்லை?

ஒருமுறை விருட்சம் கூட்டத்தில் சாருநிவேதிதா,  தமிழ் என்கிற மொழியே சில ஆண்டுகளில் மறைந்து விடும் போல் தோன்றுகிறது என்று பேசினார்.  அன்று அதைக் கேட்கும்போது திகைப்பாக இருந்தது. அவர் சொன்னது உண்மை.  ஆனால் அப்படி நினைக்கும் மனநிலையில் நான் இல்லை.   என் குடும்பத்தில் உள்ளவர்களில் என்னைத் தவிர தமிழில் யாரும் படிப்பதில்லை. ஆனால் என்னிடமோ ஏகப்பட்ட தமிழ்ப் புத்தகங்கள்.

ஒரு நண்பர் என் வீட்டிற்கு வந்திருந்து நான் வைத்திருக்கும் தமிழ்ப் புத்தகங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.  சரி, நீங்கள் எப்போது இதையெல்லாம் படித்து முடிப்பீர்கள் என்பதுதான் அவர் கேள்வி.

என் நினைவெல்லாம் புத்தகம் படிப்பதில்தான் இருக்கிறது.  அதுவும் தமிழில் எது எழுதியிருந்தாலும் நான் படிக்கத் தயாராக இருக்கிறேன்..ஆனால் நீங்கள் சொல்வதுபோல் எல்லாவற்றையும் படிக்க முடியுமா என்பது தெரியவில்லை என்றேன்.  திடீரென்று ஒருநாள் தோன்றியது.  தமிழில் படியுங்கள் என்று ஒரு பிட் நோட்டீஸ் அடித்து எல்லோருக்கும் கொடுக்கலாமா என்று.  இதை ஒரு நண்பரிடம் சொன்னபோது அவர் வாய்விட்டுச் சிரித்தார். இப்போது  தமிழில் எது எழுதியிருந்தாலும் படியுங்கள் என்பதுதான் என் முழக்கம்.

 

ழ பத்திரிகையும் விருட்சம் பத்திரிகையும்

 

ஆத்மாநாமை நான் மூன்று முறைதான் சந்தித்திருக்கிறேன். முதன் முறையாக அவரைச் சந்தித்தபோது அவரை எல்லோரும் மதுசூதனன் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தர்கள்.  யாருக்கும் ஆத்மாநாம் என்று தெரியவில்லை.  உண்மையில் அப்போது ஞானக்கூத்தன் என்ற பெயர்தான் பிரபலம்.  என்னைப் போன்ற புதியதாக இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு ஆத்மாநாம் பெயர் புரிபடவில்லை.

அது இலக்கு இலக்கியக் கூட்டம்.  ராயப்பேட்டையில் பீட்டர்ஸ் காலனியில் நடந்தது. (என் ஞாபகத்திலிருந்து இதையெல்லாம் எழுதுகிறேன்).  கூட்டம் முடிந்து வந்தபோது ஆத்மாநாம் கையில் ழ பத்திரிகையின் பிரதிகள் இருந்தன.  அதை அவருக்குத் தெரிந்தவர்களுக்கு தயக்கத்துடன் கொடுத்துக்கொண்டிருந்தார்.  எனக்கு அவ்வளவாய் அறிமுகம் ஆகவில்லை என்பதால், என்னிடம் கொடுக்கவில்லை.  நானும் வாங்கவில்லை.  யாரும் அவரிடம் இதழ் பெற்றுக்கொண்டதற்கு பைசா கொடுக்கவில்லை. இதழைக் கொடுக்கும்போது அவர் முகம் மலர்ச்சியாக இருந்ததுபோல் தோன்றவில்லை.  சிலர் அலட்சியத்துடன் அந்தப் பத்திரிகையை வாங்கிக்கொண்டார்கள்.

சிறு பத்திரிகையைப் பொறுத்தவரை யாரும் அதை விலை கொடுத்து அவ்வளவு சுலபமாய் வாங்க மாட்டார்கள்.  பின் படித்து அபிப்பிராயம் சொல்ல மாட்டார்கள்.  கொடுத்தவர்களை மறுபடியும் பார்த்தால் பத்திரிகையை வாசித்ததுபோல் காட்டிக்கொள்ள மாட்டார்கள். சிறு பத்திரிகை விற்பவர்கள் கூட அலட்சியப் படுத்துவார்கள்.  பணம் தர மாட்டார்கள். கட்டுக்கட்டாய் வீட்டில் பத்திரிகையை அடுக்கி வைத்துக்கொண்டிருக்க வேண்டும்.

ழ பத்திரிகை ஒவ்வொரு இதழிலும் திறமையாக கவிதைகள் பிரசுரமாகியிருக்கும்.  ஆத்மாநாமும் எழுதியிருப்பார்.  ரத்தினச் சுருக்கமாக தலையங்கம் எழுதப்பட்டிருக்கும். சில இதழ்களில் தலையங்கம் இல்லாமல் கூட இருக்கும்.

ஆத்மாநாமைப் பார்த்த அன்றிலிருந்து அவர் மீது எனக்கு தனிப்பட்ட இரக்க உணர்வு சூழ்ந்துகொண்டிருந்தது.  ஒரு பரிதாபமான மனிதரைப் பார்ப்பதுபோல் தோன்றியது.  இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது.  அடுத்த முறை அவரைச் சந்தித்தபோது எனக்குத் தெரிந்தவர் ஆகிவிட்டார்.  அவர் நிஜம் கவிதையைப் படித்துவிட்டு  என்ன சொல்ல வருகிறீர்கள் இந்தக் கவிதை மூலம் என்று அவரிடமே கேட்டேன்.  தெருவில் அவருடன் போய்க் கொண்டிருந்தபோதுதான் கேட்டேன். அவரும் பதிலும் சொன்னார்.  ஆனால் நான் கேள்வி கேட்டதுதான் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது.  அவர் என்ன பதில் சொன்னார் என்பது ஞாபகத்தில் இல்லை. என்ன கொடுமை இது.

ஆத்மாநாமின் எதிர்பாராத முடிவிற்குப் பிறகு ழ என்ற பத்திரிகை தொடர்ந்து வரவில்லை.  எப்போதும் கவிதை எழுதுவதும், கவிதையை மொழிபெயர்ப்பதும், பச்சை இங்கில் நோட்புக் முழுவதும் எழுதுவதுமாகவே அவர் இருந்திருக்கிறார்.

அவர் முடிவு எதிர்பாராமல் நடந்திருக்காவிட்டால் இன்னும் கூட அவருடைய கற்பனையான ழ என்ற இதழ் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். ஏகப்பட்ட கவிதைகள் எழுதியிருப்பார்.  பலருடைய கவிதைகள் பிரசுரமாகியிருக்கும்.  ஆனால் அவர் இருக்கும்போதே அவரால் தொடர்ந்து ழ பத்திரிகையில் செயல்பட முடியவில்லை.  அவருடைய நெருங்கிய நண்பர்கள்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஆத்மாநாம் எதிர்பாராத முடிவிற்குப் பிறகுதான் அவர் கவிதைகள் எல்லாவற்றையும் தொகுத்து புத்தகமாக பிரம்மராஜன்தான் கொண்டு வந்தார். சுதர்ஸன் கிராபிக்ஸில் ஆத்மாநாம் கவிதைப் புத்தகம் கட்டுக்கட்டாய் இருக்கும்.  அவரால் அந்தச் சமயத்தில் முழுப்பணமும் கொடுக்க முடிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அந்த முயற்சியை அவர் செய்யாவிட்டால் ஆத்மாநாம் கவிதைகள் காணாமல் போயிருக்கும்.  பரிசல் புத்தகக் கடையில் காலச்சுவடு வெளியீடாக ஆத்மாநாம் கவிதைகள் புத்தகத்தைப் பார்த்தவுடன் பிரம்மராஜனைப் பாராட்டத் தோன்றுகிறது.

1988ஆம் ஆண்டு நான் விருட்சம் பத்திரிகையை ஆரம்பித்தேன்.  அதே ழ இதழ் போல.  ஆனால் ஆத்மாநாமிற்கு அவருடைய நெருங்கிய நண்பர்கள்தான் இதழ் கொண்டுவர உதவி செய்தார்கள்.   எனக்கோ அப்படி இல்லை.  நான் தனியாகத்தான் விருட்சம் இதழை நடத்தினேன்.  மற்ற நண்பர்களுடன் நானும் விருட்சத்தில் கவிதைகள் எழுதுவேன். ஆனால் விருட்சம் இதழில் கவிதைகள் அதிகமாக வந்தாலும், சிறுகதைகளும் வரும், புத்தக விமர்சனமும் வரும். ஆத்மாநாம் போல நானும் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது விருட்சம் இதழை பார்க்கிறவர்களிடம் கொடுத்துக்கொண்டிருப்பேன்.  பலர் என்னிடமிருந்து வாங்கிக்கொள்வார்கள்.  அப்பத்திரிகைக்கான பணத்தைத் தர மாட்டார்கள்.  சிலர் அலட்சியமாக அதை பேப்பர் ரோஸ்ட் மாதிரி மடித்து வைத்துக்கொள்வார்கள்.  யாரும் எடுத்துக்கொண்டு போய் படித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.  கடிதம் எழுதமாட்டார்கள்.   விருட்சத்தில் தொடர்ந்து எழுதும் நண்பர்கள் பார்த்தாலும் விருட்சம் குறித்து ஜாக்கிரதையாகப் பேசுவதைத் தவிர்ப்பார்கள்.  யார் கவிதைக் குறித்தும் முணுமுணுக்கக் கூட மாட்டார்கள்.  அந்தக் காலத்தில் ஆத்மாநாமின் நெருங்கிய நண்பர்கள் சிலர், என்னை அழகியசிங்கர் என்று கூப்பிடுவதற்குப் பதில் ஆத்மாநாம் என்று தவறுதலாகக் குறிப்பிட்டுப் பேசிவிடுவார்கள்.  எனக்கோ கேட்கும்போது திகைப்பாக இருக்கும். அதேபோல் பத்திரிகை கொண்டு வந்த என்னை ஆத்மாநாமாகத்தான் தவறிப்போய் அவர்களால் சொல்ல முடிந்தது.

இதோ நான் 102வது இதழ் வரை விருட்சம் கொண்டு வந்துவிட்டேன்.  நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.  ஆத்மாநாமின் நிறைவுபெற முடியாத ஆசையை நான் நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக.  அவருடைய  மறைமுகமான வாழ்த்துக்களால்தான் என்னால் 100 இதழ்களுக்கு மேல் விருட்சம் கொண்டு வர முடிந்திருக்கிறது என்று.

சனிக்கிழமை நடந்த கூட்டம்…

 

 

போனவாரம் சனிக்கிழமை மூன்றாம் தேதி நவீன விருட்சம் 102 வது இதழ் வெளியிட ஒரு சிறிய மிகச் சிறிய கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தேன்.  இடம் போஸ்டல் காலனி முதல் தெரு.  வந்திருந்தவர்களை போனில் கூப்பிட்டேன்.  பெரும்பாலோர் 102வது இதழில் எழுதியவர்கள்.  அவர்களை நான் அறிமுகப்படுத்தினேன்.  வ வே சு நவீன விருட்சம் இதழை எல்லோருக்கும் வழங்கினார்.

ஒவ்வொருவராகப் பேசப் பேச கூட்டம் வேற திசையில் போய்விட்டது.  ஆனால் கேட்பதற்கு நன்றாக இருந்தது.  பாரதியார் கவிதைக்கு உரை அவசியம் என்ற வ வே சு கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.   வந்திருந்த இன்னும் பலர் மௌனமாகவே இருந்தார்கள்.

என்னுடைய அடுத்த வேலை நவீன விருட்சம் இதழை எல்லோருக்கும் அனுப்புவது.  உண்மையில் கடினமான வேலை அதுதான்.  அங்கு எடுத்தப் புகைப்படத்தை இங்கே தருகிறேன்.

ஒரு முறை சந்தித்தேன்….

 

 

சாகித்திய அக்காதெமி ந பிச்சமூர்த்தியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரண்டு புத்தகங்கள் தயாரித்தன.  ஒன்று பிச்சமூர்த்தியின் கவிதைகள்.  இரண்டு பிச்சமூர்த்தியின் கதைகள்.  கவிதைகளைத் தொகுத்தவர் ஞானக்கூத்தன்.  கதைகளைத் தொகுத்தவர் வெங்கட் சாமிநாதன்.  சாகித்திய அக்காதெமி அன்று நடத்தியக் கூட்டத்தில் கவிக்கோ அப்துல் ரஹ்மானிடமிருந்து பிச்சமூர்த்தியின் கவிதைப் புத்தகத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.  ஒரு நிமிடம் நானும் அவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்துகொண்டோம்.

காலையில் அப்துல் ரஹ்மான் மரணம் அடைந்த செய்தியை அறிந்தேன்.  அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 

வேடிக்கைப் பார்ப்பவர்களாக இருக்கிறோம்

நம் வாழ்க்கையில் நாம் வேடிக்கைப் பார்ப்பவர்களாக இருக்கிறோம். நம்மிடம் மிகக் குறைவான அதிகாரமே உள்ளது. நேற்று அப்பாவிற்கு மாதம் ஒரு முறை நடக்கும் சடங்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது ஏதோ ஒயர் பொசுங்கும் நாற்றம் வீசியது. கொஞ்சம் பயம் பற்றிக்கொண்டது. மின்சாரத்தில் எதாவது மின் கசிவு ஏற்பட்டிருக்குமா என்ற பயம்தான். அப்படிப் பற்றிக்கொண்டால் இடமே நாசமாகிவிடும். ஆனால் அப்படியெல்லாம் இல்லை.

மதியம் நானும் நண்பர் கிருபானந்தனும் திருவல்லிக்கேணி சென்று விருட்சம் 102வது இதழ் எடுத்துக்கொண்டு வந்தோம். தி நகர் வழியாக வரும்போதுதான் தெரிந்தது, ஒரு பிரபல துணிக்கடை பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஒரே புகை. நாங்கள் காரில் வந்து விட்டோம். சென்னை சில்க்ஸ் என்கிற அந்த 7 மாடிக் கட்டிடம் எரிந்து கொண்டிருக்கிறது. நானோ ஒன்றும் சொல்லத் தெரியாத வேடிக்கைப் பார்க்கும் மனிதன்.

தீயை அணைக்க பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. நல்லகாலம். எந்தவித உயிர் சேதமும் இல்லை. ஆனால் 200 கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாகி விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள.
ஒவ்வொரு முறையும் போதீஸ் வாசலில் நிற்கும்போது ஏசியின் காற்று ஜில்லென்று அடிக்கும். என்னடா இது தெருவில் நிற்கும் நமக்கே இப்படி காற்று வீசுகிறதே என்று நினைத்துக் கொள்வேன்.

மாசம் இவர்கள் எத்தனை ரூபாய் மின்சாரத்திற்காக பணம் செலவு செய்கிறார்கள் என்று யோசிப்பேன். வேடிக்கைப் பார்க்கிற ஒரு சாதாரண மனிதனான எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அந்தத் துணிக்கடையில் போய் என் விருப்பத்திற்கு ஏற்ப துணியை வாங்கும் அதிகாரம்தான் இருக்கிறது. பிடிக்கவில்லை என்றால் அந்தத் துணிக்கடையிலிருந்து திரும்பவும் வந்துவிடலாம்.

இவ்வளவு பெரிய இடம் கட்ட எந்த அரசாங்கம் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள். நிச்சயமாக விதி முறைகளை மீறித்தான் கட்டிடம் கட்டியிருப்பார்கள். அரசாங்கத்திற்கும் இது தெரியும். ஆனால் நாம் வேடிக்கைப் பார்ப்பவர்கள். இதையெல்லாம் வேடிக்கைத்தான் பார்க்க முடியும்.

ஆனால் இது மாதிரி இடங்களில் பணிபுரியும் யாரும் வேடிக்கைப் பார்ப்பவர்களாக இருக்க முடியாது. அவர்களுடைய வாழ்க்கை முறை பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கும். சென்னை சில்க்ஸ் உரிமையாளர் நிச்சயமாக வேடிக்கைப் பார்ப்பவராக இருக்க முடியாது. இந்தத் தீ விபத்து அவர்களை உண்டு இல்லை என்று செய்திருக்கும்.

சில வருடங்களுக்கு முன்னால் என் உறவினர் ஒருவர் வட்டிக்கு ஆசைப்பட்டு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யாமல் தனியார்களிடம் பணத்தை டெபாசிட் செய்தார். நான் சொல்லியும் கேட்கவில்லை. அவருடைய பணம் எல்லாம் ஓய்வுப் பெற்றப்பின் கிடைத்தத் தொகை. எல்லாம் போய்விட்டது. அவருக்கு அந்த அதிர்ச்சி பெரிய பிரச்சினையாகி இருக்கும் என்று நினைத்தேன். நல்லகாலம் அவர் தப்பித்தார். ஏன் என்றால் நாம் வேடிக்கைப் பார்ப்பவராக மட்டும் இருந்தால் நமக்கு ஒன்றும் ஆகாது. ஆனால் நாமும் இதுமாதிரியான சம்பவத்தின் போது பங்கு பெறுபவர்களாக இருக்கும்போது, என்ன ஆகுமென்று சொல்ல முடியாது. 2015ல் அரசாங்கத்தின் அலட்சியத்தால் வெள்ளம் எங்கள் தெருவிற்கே வந்து விட்டது. முதல் மாடியில் குடியிருந்த நாங்கள் பயந்து அலறி அடித்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றோம். வேடிக்கைப் பார்ப்பவர்கள் நாங்கள் பயந்துடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. யாரிடம் என்ன சொல்ல?

சென்னை சில்க்ஸ் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் பதைப்பதைப்பு இருக்கும். அவர்கள் வேடிக்கைப் பார்ப்பவராக இருக்க முடியாது. அந்தப் பகுதியில் வாழ்வர்களுக்கு பெரிய அவதியாக இருக்கும். அவர்கள் வேடிக்கைப் பார்ப்பவராக மட்டும் இருந்து இதை ரசிக்க முடியாது. எங்கே நம் உடமைக்கு, உடலுக்கு தீங்கு வருமோ என்று பயந்து கொண்டிருப்பார்கள்.

இதோ அந்த இடத்திலிருந்து வரும் என்னைப் போன்றவர்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள். ஒரு சினிமா காட்சியைப் போல் இது இருக்கும். இதோ வீட்டிற்கு வந்து டிவியைப் பார்க்கிறோம். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேள்வி கேட்க முடியாது. அமைச்சர்கள் தரும் அறிக்கைகளையும் நாங்கள் வேடிக்கைப் பார்க்கிறோம். இந்தக் காட்சி அரங்கேறி முடிந்த பிறகு இன்னொரு காட்சி அரங்கேறும் அதையும் வேடிக்கைப் பார்ப்போம். அதிகாரமற்றவர்கள் நாங்கள். வேடிக்கைதான் பார்க்க முடியும்.

இரங்கல் கூட்டங்கள் நடத்துவது வருத்தமான ஒன்று…

பல ஆண்டுகளாக நான் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் நடத்தி வருகிறேன். அப்படித் தொடர்ந்து நடத்திக்கொண்டு வரும்போது, சில மாதங்கள் தொடராமல் நிறுத்தி விடுவேன். சில சமயம் இலக்கியச் சந்திப்பு கூட்டங்கள் ஆண்டுக் கணக்கில் நின்று விடும். சமீபத்தில் 24 கூட்டங்கள் நடத்திய நானும் என் நண்பரும் அதைத் தொடராமல் நிறுத்தி விட்டோம். ஆனால் ஜøன் மாதம் திரும்பவும் நடத்த நினைக்கிறேன். இப்போது ஒரு கலகலப்பான சூழ்நிலை இலக்கிய உலகில் நடந்து கொண்டிருக்கிறது. பலர் இலக்கியக் கூட்டங்களை நடத்துகிறார்கள். பெரும்பாலும் சனி ஞாயிறுகளில் இலக்கியக் கூட்டம் இல்லாமல் இருப்பதில்லை. அக் கூட்டங்களில் விடாமல் ஒவ்வொருவரும் கலந்துகொண்டாலே போதும்.இந்த முயற்சியை வெற்றிகரமாக மாற்ற முடியும். நான் சென்னையை வைத்து இதைக் குறிப்பிடுகிறேன். தமிழ் நாடு முழுவதும் எதுமாதிரியான இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. இது ஒரு ஆரோக்கியமான போக்காக நான் கருதுகிறேன்.

என் கூட்டங்களில் இரங்கல் கூட்டங்களை நடத்துவதை நான் பெரும்பாலும் விரும்புவதில்லை. நமக்கு நெருங்கிய எழுத்தாள நண்பர்களை நாம் பிரிந்து விடும்போது வேற வழியில்லாமல் இரங்கல் கூட்டம் நடத்த வேண்டி உள்ளது. நாம் ஆசைப்பட்டு நடத்தும் கூட்டம் இரங்கல் கூட்டம் இல்லை.
முதன்முதலாக நான் எப்போது இரங்கல் கூட்டம் நடத்தினேன் என்பது என் ஞாபகத்தில் இல்லை. ஆனால் சமீபத்தில் எண்ணிக்கை அளவில் அதிகமாகவே இரங்கல் கூட்டங்களை நடத்தி விட்டேன்.
கரிச்சான் குஞ்சு என்ற எழுத்தாளருக்கு நான் ஒரு இரங்கல் கூட்டம் நடத்தினேன். இந்த இரங்கல் கூட்டங்களில் கலந்துகொள்ள வரும் எழுத்தாளர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கலந்து கொள்வார்கள். அத்தோடல்லாமல் மனம் உருகிப் பேசுவார்கள். சிலர் பாதகமாகவும் பேசி விடுவார்கள். நாம் ஒரு இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் மறந்து போயிருப்பார்கள். நாம் நடத்தும் இரங்கல் கூட்டங்கள் அதுமாதிரி திசை மாறிப் போயிருந்தால் சங்கடமாக இருக்கும் ஆனால் ஒவ்வொரு முறையும் அதுமாதிரியான கூட்டங்களை நடத்தும்போது மனம் அமைதியாக இல்லாமல் இருப்பதை உணர்வேன். இரங்கல் கூட்டம் நடத்தும்போது உணர்ச்சிப் பிழம்பாய் நான் உருமாறி விடுவதால் பேசுவதை தவிர்த்து விடுவேன்.

என்னை இரங்கல் கூட்டங்கள் நடத்துவதில் அதிக நம்பிக்கை தருபவர் என்று சிலர் கருதியிருக்கலாம். உண்மையில் நானும் சில இரங்கல் கூட்டங்களை நடத்துவதை நடத்தாமல் விட்டுவிட்டேன். நகுலன், காசியபன், ஸ்டெல்லா புரூஸ், ஐராவதம், டாக்டர் பஞ்சாட்சரம் செல்வராஜன் போன்றோர்கள். அவர்களெல்லாம் என் நெருங்கிய நண்பர்கள். வேற யாரும் இவர்களுக்கெல்லாம் கூட்டங்கள் போடவில்லை. ஏன் நானும் கூட்டம் நடத்தவில்லை. ஏன் என்றால் எனக்குள் ஏகப்பட்ட தயக்கம்..ஏகப்பட்ட குழப்பம்..யார் வருவார்கள் பேச என்றெல்லாம் யோசனைகள்..
102வது இதழ் நவீன விருட்சத்தை அசோகமித்திரன் நினைவாகக் கொண்டு வருவதாகத் தீர்மானித்தேன். எழுத்தாள நண்பர்கள் சிலரை கட்டுரைகள் அனுப்பும்படி கேட்டுக்கொண்டேன். பலர் அவரைப் பற்றி பல பத்திரிகைகளில் எழுதி விட்டார்கள். நானே மூன்று பத்திரிகைகளில் எழுதி விட்டேன்.

அரைப் பக்கம் போதும், முழுப் பக்கம் போதும் தோன்றுவதை எழுதி அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டேன். என் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்த எழுத்தாள நண்பர்கள் எழுதியும் அனுப்பினார்கள்.

இதோ 102வது இதழ் வந்துவிட்டது. யார் யார் எழுதி உள்ளார்கள் என்பதை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். எழுதியவர்களுக்கெல்லாம் என் நன்றி..அசோகமித்திரன் குறித்து எழுதி அனுப்புகிறேன் என்று கூறி எழுதி அனுப்பாதவர்களுக்கும் என் நன்றி.

1. அசோகமித்திரன் 2. ஸிந்துஜா 3. பானுமதி ந 4. சிருஷ்ணமூர்த்தி 5. அழகியசிங்கர் 6. கிருபானந்தன் 7. வைதீஸ்வரன் 8. குமரி எஸ் நீலகண்டன் 9. ஏகாந்தன் 10. ஸ்ரீதர்-சாமா 11. தேவகோட்டை வா மூர்த்தி 12. பாவண்ணன் 13. எஸ் எம் ஏ ராம் 14. ப்ரியா ராஜ் என்கிற ராஜாமணி 15. டாக்டர் ஜெ பாஸ்கரன் 16. க்ருஷாங்கினி 17. பிரபு மயிலாடுதுறை 18. சுரேஷ்

இந்த இதழை மே மாதமே கொண்டு வர நினைத்தேன். 31ஆம் தேதியாகிய இன்று கொண்டு வந்து விட்டேன். 116 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.20 தான்.

நவீன விருட்சம் 102வது இதழ் தேவைப்படுபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தொலைப்பேசி எண்கள் : 9444113205, 9176613205 மற்றும் 9176653205.

நீங்களும் படிக்கலாம் – 30

 

நேற்று குங்குமத்தில் என் பேட்டி வெளியாகி உள்ளது.  பேட்டி   எடுத்த குங்குமம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.  பேட்டியை எடுப்பதை விட  பேட்டியைச் சரியாகக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை.  அதைத் திறமையாக குங்குமம் பொறுப்பாசிரியர் கதிர் திறன்பட செய்து முடித்துள்ளார். புகைப்படங்கள் எடுத்த வின்சன்ட் பால் அவர்களுக்கும் என் நன்றி.  இப் பேட்டியைப் பற்றி கே என் சிவராமன்  எழுதி உள்ளார்.  அவருக்கும் என் நன்றி.

சில தினங்களாக நான் ஒரு நேர்காணல் புத்தகத்தை எடுத்துப் படித்து முடித்தும் விட்டேன்.  260 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது.  மறுதுறை மூட்டம் என்பது புத்தகத்தின் பெயர்.  நாகார்ஜ÷னனைப் பேட்டி எடுத்தவர் எஸ். சண்முகம். செம்மையாக்கம் செய்தவர் முபீன் சாதிகா.

இந்தப் புத்தகத்தைத் தயாரிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகியிருக்கும்.  அந்த அளவிற்குக் கடினமான ஒன்றாக இருந்திருக்கும். இந்தத் தருணத்தில் பிரேமிளைப் பேட்டி எடுத்த மீறல் 4 சிறப்பிதழைப் பற்றியும் குறிப்பிட வேண்டும்.  100 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. பேட்டி எடுத்தவர் காலப்ரதீப் சுப்ரமணியன்.

100 பக்கங்கள் கொண்ட பிரேமிள் பேட்டியையும், 260 பக்கங்கள் கொண்ட மறுதுறை மூட்டம் புத்தகத்தைப் படிக்கும்போது, இரண்டு புத்தகங்களிலும் உள்ள சில தொடர்பான விஷயங்களை இங்கு விவரிக்க முயற்சி செய்துள்ளேன். இந்த இரண்டு பேட்டிகளிலும் ஒரு முக்கியமான அம்சம், இரு பேட்டிகளிலும் பேட்டி தருபவரின் சுய சரிதம் வெளிப்படுகிறது.  முதல் கேள்வியே அப்படித்தான் ஆரம்பிக்கிறது.

பிரேமிளைப் பேட்டி எடுத்தவர் இப்படி ஒரு முதல் கேள்வியைத் தொடுக்கிறார்.

சம்பிரதாயமான ஒரு கேள்வியுடன் ஆரம்பிக்கலாமா?  உங்கள் எழுத்தியக்கத்தின் ‘ரிஷிமூலகங்கள்’ எவை?

இந்தக் கேள்விக்குப் பதிலாக பிரேமிள் தன் சுயசரிதத்தைக் கொஞ்சம் வெளிப்படுத்துகிறார்.  அவர் இப்படி சொல்கிறார் : என் தாயாரின் மூதாதைகளிடையே ஆசுகவிகள் இருந்திருக்கின்றனர்.  தாயார் கூட, எழுதப் படிக்கத் தெரிந்திருக்காவிட்டாலும் நுட்பமான ரசனையும் கவியுணர்வும் கொண்டவர்.  அவர் பேசும்போதும் சரி சண்டையிடும்போதும் சரி, சில வேளைகளில் அவர் சொல்கிறவை அசாதாரணமாக இருக்கும்.’

நாகார்ஜ÷னனைப் பேட்டி எடுக்கும் சண்முகம் úக்ளவி :

நீங்கள் பிறந்த இடம், உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்..

என்ற கேள்விக்கு, நாகார்ஜ÷னன் கிட்டத்தட்ட 50 பக்கங்கள் வரை அவருடைய குடும்பச் சூழலை விவரிக்கிறார்.  அம்மாவைப் பற்றி பல இடங்களில் குறிப்பிடுகிறார்.

ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் : üஅம்மாவை எடுத்துக்கொண்டால் தி ஜானகிராமன், ஜெயகாந்தன் படைப்புக்களை வாசிக்கும் வழக்கம் கொண்டவர்.  ஜெயகாந்தன்  முன்னிலையில் நடந்த சென்னை சாஹித்திய அகாதமிக் கூட்டத்தில் குப்புசாமியின் சிறுகதை ஒன்று மௌனியின் ஆழியாச்சுடர் கதையை ஒத்திருப்பதை வைத்து அமைப்பியல் ஆய்வு செய்து நான் பேசியபோது அதைக் கேட்க அங்கே அம்மாவும் அமர்ந்திருந்தார்.’

இதுமாதிரியான நேர்காணல் புத்தகங்களில் நேர்காணலில் பங்கேற்பவர் என்ன சொல்கிறார் என்பதே முக்கியம்.  பிரேமிளும், நாகார்ஜ÷னனும் இந்த விதத்தில் பல தகவல்களை அளிக்கிறார்கள்.  அது குறித்து மாறுப்பட்ட கருத்துக்களைச் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தோன்றுகிறது.

நான் இங்கே கூற விரும்புவது. பிரேமிள் தன் பேட்டியில்சொன்ன ஒரு விஷயத்தையும் நாகார்ஜ÷னன் சொன்னதையும் தொடர்புப் படுத்த முடியுமா என்று பார்க்கிறேன்

பிரேமிள் சொல்கிறார் : கிருஷ்ணமூர்த்தியிடம் “உங்கள் உடல் மறைந்தபிறகு உங்கள் பிரக்ஞை என்னவாகும் என்று கேட்டபோது, “அது அப்படியே போய்விடும்.  ஆனால் நீங்கள் நான் சொன்னவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தால் ஒரு வேளை நீங்கள் அந்தப் பிரக்ஞையுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்,” என்று சொன்னதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகார்ஜ÷னன் ஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி ஒரு இடத்தில் இப்படிப் பதிவு செய்திருக்கிறார் :

ஜே கிருஷ்ணமூர்த்தியின் விரிவுரைகளைச் சென்று கேட்கும் வழக்கம் கொண்டிருந்தேன்.  அந்த விரிவுரைகள் அந்த வயதில் அலாதியான கவர்ச்சி கொண்டவையாக இருந்தன.  நாம் வழக்கமாக அடையும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் எடுத்து, அவை எப்படி நேரெதிராக மாறிவிடுகின்றன என்பதைத் தர்க்க ரீதியாக விளக்கும் உரைகள் அவை.  அந்த விவரிப்பு முறையில் எனக்குச் சுவாரசியம் ஏற்பட்டு அதற்கும் இருத்தலியலுக்குமான ஒப்புமையைக் கண்டு, அந்த வழிமுறைதான் நிகழ்வியல் எனும்

Phenomenology   என உணரப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன,’ என்கிறார்.

உண்மையில் நாகார்ஜ÷னன் ஜே கிருஷ்ணமூர்த்தி, ரமணரிடமிருந்து விலகிப் போய்விடுகிறார்.  பிரேமிளோ தன் வாழ்நாள் முழுவதும் ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் ஒன்றிப் போகிறார்.

இன்னொரு இடத்தில் நாகார்ஜ÷னன் சொல்கிறார் : ‘அழுக்கடைந்த பூணூலை விடுதி அறை ஆணியில் மாட்டிய ஓரிரவில் குளித்து, அறைக்குச் செல்லாமல், யாரும் பார்க்க நேரிடலாம் என்ற கவலையின்றி நிர்வாணமாக மொட்டை மாடிக்குச் சென்று கட்டாந்தரையில் கிடந்தேன்.  அப்போது பெரிதும் விடுதலை அடைந்த உணர்வு ஏற்பட்டது.  அந்த நொடிக்குப் பிறகு பூணூலை இதுவரை அணிவதே இல்லை.  குடும்பத்தாருக்கும் எனக்கும் உள்ளார்ந்த அளவில் தீராத பிரச்னையை உருவாக்கிவிட்டது இதுவே எனலாம்.  இது பற்றி இருதரப்பிலும் பேசுவதில்லை.

அதேபோல் என்னைப் பிராமணன், அந்தணன், பார்ப்பான், ஐயர் என்றெல்லாம் விமர்சிப்போரும் கிண்டல் செய்வோரும் என் நிலையின் தர்க்கத்தைப் புரிந்துகொண்ள முடியாதவர்களே மறுப்பவர்களே என்கிறார்.

ஒருவர் பிராமணரா இல்லையா என்பதற்கு ஒரு அடையாளம் பூணூல் என்றாலும் இது குறித்து இவ்வளவு தூரம் யோசிக்க வேண்டுமா என்று தோன்றுகிறது.

பிரேமிளோ அவருடைய பேட்டியில் ஒரு விஷயத்தைச் சொல்கிறார் :

கிருஷ்ணமூர்த்தி பவுன்டேசன் உள்ள வசந்த விஹாரில் சனிக்கிழமை மாலைகளில் வீடியோ காண்பிக்கிறார்கள்.  அங்கே ஒரு இளைஞர் நண்பரானார்.  அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பழகியபோது, ஒரு சமயத்தில் தான் ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் ஆனால் பூணூல் போடுவதில்லை என்றும் சொன்னார்.  ஏன் என்று கேட்டேன்.  அது அபத்தமான விஷயம் என்றார்.  ஆனால் இதனால் தன்னுடைய வீட்டில் தகப்பனார், அவரைவிட முக்கியமாகத் தாய், பாட்டி, தாத்தா இவர்களுக்கெல்லாம் மிக வருத்தம் என்பதையும் சொன்னார்.  நான் அவரிடம் கேட்ட அடுத்த கேள்வி, üஉங்களுடைய வீட்டுப் பெரியவர்கள் ஏதேனும் ஜாதீய முரட்டுப் பார்வை உடையவர்களா? மற்ற ஜாதியினரை மிக இழிவாக நடத்துபவர்களா?  என்பதுதான்.  அவர்கள் ஜாதி வெறி பிடித்தவர்களா என்பதை  அறிந்துகொள்ள முயற்சித்தேன்.  ‘இல்லை.  அவர்கள் ரொம்பவும் சாதாரணமானவர்கள். அனுஷ்டானங்களைப் பின்பற்றுகிறார்களே தவிர, என்னளவில் பார்த்தால் மிகவும் மனிதத் தன்மை உள்ளவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அதுமாதிரியான குறைபாடு அவர்களிடம் இல்லை,” என்றார்.  “அப்படியானால் நீங்கள் பூணூல் போடாமல் இருப்பது அவர்களுக்கு எதிரான ஒரு செயல் ஆகிவிடுகிறதே. இது காரணமற்ற எதிர்ப்பு ஆகிவிடுகிறது அல்லவா?” என்றேன்.  “இல்லையில்லை. நான் அவர்களுக்கு எதிராக இதைச் செய்யவில்லை.  மடத்தனமாகப்பட்டது.  அவ்வளவுதான்,” என்றார்.

பிறகு பிரேமிள் அவரைத் திரும்பவும் பூணூலைப் போடும்படி செய்கிறார்.

இப்படி இரண்டு வித மனோ நிலைகளை விவரிப்பதற்காக இதைக் கூறுகிறேன்.  நாகார்ஜ÷னன் நேர்காணல் பற்றி இன்னும் சொல்ல வேண்டியது உள்ளது.  அதை அடுத்தப் பகுதியில் சொல்கிறேன்.

ஏன் இந்தக் குழப்பம்?

 

நேற்று மாலை 7 மணிக்கு என் சம்மந்தி அவர்களின் அம்மா உடல்நலம் குன்றி இறந்து விட்டார்.  கடந்த பல மாதங்களாக அவர் படுக்கையிலேயே இருந்தார்.  மாலை 4 மணிக்கு காப்பி குடித்தப் பிறகு அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டிருக்கிறார்.  என் உறவினர் டிபன் எடுத்துக்கொண்டு போய்க் கொடுக்கும்போது அவர் அசைவற்று இருப்பதைப் பார்த்து பக்கத்தில் யாராவது மருத்துவர் இருந்தால் அழைத்து வரலாமென்று எண்ணித் தவித்திருக்கிறார்.  எந்த மருத்துவரும் வரவில்லை என்பது பெரிய சோகம்.  அதை விட அவரை அழைத்துக்கொண்டு போய் பக்கத்தில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கலாமென்று நினைத்து ஒரு ஆம்புலன்ஸிற்கு போன் செய்தார்கள்.  அந்த ஆம்புலன்ஸிலிருந்து வந்த ஒரு நர்ஸ் நோயாளியைப் பார்த்துவிட்டு, üபல்ஸ் நின்று போய்விட்டது.  அழைத்துக்கொண்டு போக முடியாது.  லோக்கல் டாக்டரைப் பாருங்கள்ý என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.  நான் அப்போது உறவினர் வீட்டில்தான் இருந்தான்.  என்னடா இப்படி ஒரு சங்கடம் என்று தோன்றியது.

மருத்துவர் வர விரும்பவில்லை. மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லலாமென்றால் ஆம்புலன்ஸ் அழைத்துக்கொண்டு போக முடியாது என்கிறார்கள்.

எப்படியோ சமாளித்து வேற ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து மேற்கு மாம்பலத்தில் உள்ள ஹெல்த் சென்டருக்கு அழைத்துச் சென்றோம்.  அங்கே அந்த உறவினர் அம்மா இறந்து போனதை உறுதி செய்தார்கள்.  ஆனால் சான்றிதழ் தர மறுத்துவிட்டார்கள்.  அதாவது நோயாளியை இறந்தே கொண்டு வந்துள்ளார்கள் என்று பேப்பரில் எழுதிக் கொடுத்தார்கள்.  மயானத்தில் மருத்துவரின் சான்றிதழ் இல்லாமல் பிணத்தை எரிக்க விட மாட்டார்கள்.  இந்தத் தருணத்தில்தான் டாக்டர் பாஸ்கரன் எனக்கு உதவி செய்தார்.  அவர் ஒரு சிறுகதை எழுத்தாளர், கட்டுரை ஆசிரியர்.  முதல் சான்றிதழ் என்று ஒரு கதையை விருட்சத்தில் எழுதியிருக்கிறார்.  முதன்முதலாக ஒரு மரணச் சான்றிதழைத் தரும்போது ஏற்படும் மன உளைச்சல்தான் அந்தக் கதை.  உண்மையில் ஒரு மரணச் சான்றிதழ் என்பது எவ்வளவு முக்கியமானது.  அதை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் கொடுத்துள்ளார்.  அவருக்கு என் நன்றி.

மரணம் அடைந்துவிட்ட ஒரு நோயாளியை எந்த மருத்துவரும் பார்க்க விரும்புவதில்லை.  அதற்கான மரணச் சான்றிதழையும் தர அவர்கள் விரும்புவதில்லை.  இதற்கு சில சமூக நிகழ்வுகளைத்தான் குறை சொல்ல முடியும்.  இதற்குப் பயந்தே மருத்துவர்களும் செயல் படுகிறார்கள்.   இது எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை.