தினமணியைப் படித்துக்கொண்டு வரும்போது üதினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியைýப் பற்றிய விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். எப்போதும் நான் கதைகள் எழுதுவது என்பது குறைவாகத்தான் இருக்கும். கதை எழுது என்று எந்தப் பத்திரிகைக்காரரும் என்னைக் கேட்பதில்லை. ஏன் யாரையும் கேட்பதில்லை? என் பத்திரிகையில் நான் எழுதுவது தவிர. எந்தப் பத்திரிகையிலும் நான் கதை அனுப்பினால் கிணற்றில் கல்லைப் போட்டதுபோல் இருக்கும். பத்திரிகைகாரர்களைக் குறை சொல்ல முடியாது. ஏகப்பட்ட கதைகள் அவர்களுக்கு வரும். அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவர்களிடையே குழப்பமாக இருக்கும். ஏன் போட்டியாகக் கூட இருக்கும்.
ஒருமுறை அசோகமித்திரனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் அடிக்கடி என்னிடம், üமற்றப் பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதி அனுப்புங்கள்,ý என்று கூறிக்கொண்டிருப்பார். üயாரும் கண்டுக்க மாட்டாங்க, சார்,ý என்பேன் நான். ஏனென்றால் எல்லாப் பத்திரிகைகளிலும் எனக்குத் தெரிந்தவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு என் கதைகளை அனுப்பி தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைப்பவன் நான். எனக்கும் சங்கடம். அவர்களுக்கும் சங்கடம் என்பதுதான் உண்மையான காரணம்.
இந்தத் தருணத்தில்தான் üதினமணி சிவசங்கரி சிறுகதைýப் பற்றிய அறிவிப்பைப் படித்தேன். இதைச் சாக்காக வைத்து ஒரு கதையை 2 அல்லது 3 நாட்களுக்குள் எழுத முடியுமா என்று முயற்சி செய்தேன். என் முயற்சி வெற்றி பெற்றது. முதலில் போட்டிக்கு அனுப்புவோம். போட்டியில் இக் கதை தேர்ந்தெடுக்கப் படவில்லை என்றால் என் பங்குக்கு ஒரு கதை எழுதி விட்டேன் என்று இருப்போம் என்றுதான் நினைத்தேன். போட்டிக்கும் அனுப்பினேன். பின் மறந்துவிட்டேன்.
அதேபோல் முடிவுகள் அறிவித்தவுடன் என் கதையைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை என்று தெரிந்ததும் பேசாமல் இருந்து விட்டேன். வழக்கமாக நேற்று விருட்சம் சார்பில் கு அழகிரிசாமியும் நானும் என்ற கூட்டத்தை நடத்துவதற்கான முனைப்பில் இருந்தேன். அந்தத் தருணத்தில் தினமணியிலிருந்து எனக்குத் தொலைப்பேசி வந்தது. என் கதையை ஆறுதல் பரிசுப் பெற்ற கதையாகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்கள். என்னால் நம்ப முடியவில்லை. ஏன் நம்ப முடியவில்லை என்றால் இதுமாதிரி போட்டிக்கு வரும் கதைகள். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான கதைகள் வரும். அதில் எல்லாவற்றையும் படித்துத் தேர்ந்தெடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதில் என் கதையும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது. ஆறுதல் பரிசாக இருந்தாலும் என் கதை தினமணிக்கதிரில் பிரசுரமாகும், அதைப் பலர் படிப்பார்கள் என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சி. சிவசங்கரி என்ற எழுத்தாளர் தினமணியுடன் சேர்ந்து ஒரு லட்சம் பணம் சிறுகதைகளுக்காக ஆண்டுதோறும் செலவழிக்கப் போகிறார். இந்த ஆண்டு பல புதியவர்கள் விதம் விதமாகக் கதைகள் எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்கள். வரும் ஆண்டுகளிலும் இன்னும் அதிகம் பேர்கள் வெற்றி பெறுவார்கள். இப்படி சிறுகதைகளை ஊக்கப்படுத்தும் சிவசங்கரிக்கும் அதைப் பலப்படுத்தும் தினமணிக்கும் திரும்பவும் என் நன்றி. இதற்கு ஒரு விழா ஏற்பாடு செய்து கௌரவம் செய்ததற்கும் இன்னும் நன்றி.
Category: கட்டுரை
குவிகம் இருப்பிடத்தில் நடந்த கூட்டம்
குவிகம் இருப்பிடத்தில் நேற்று நண்பர்களைச் சந்தித்தேன். இதுமாதிரியான கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்பது தெரியும். அதுமாதிரியே வந்திருந்தார்கள்.
கலந்து கொண்டவர்களில் ஒருவர், ‘உங்களுக்கு கவிதையா கதையா எதில் விருப்பம்?’ என்ற கேள்வி கேட்டார். ‘முதலில் எல்லோரும் கவிதைதான் எழுதுவார்கள். அதன்பின்தான் கதை எழுத ஆரம்பிப்பார்கள். பின் கட்டுரைகள் எழுதுவார்கள்..நாவலும் எழுதுவார்கள்,’ என்றேன். ‘ஆனால் சில எழுத்தாளர்கள்தான் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவார்கள்?’ என்றேன்.
இது எல்லோரும் சேர்ந்து பேசுகிற கூட்டம். ‘ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் செய்யும்போது, எல்லோர் முன்னும் அதை மோசமாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்கள் கருத்து உங்களுக்கு மட்டும்தான் உண்மை. அதைத் தெரிவிக்கும்போது மற்றவர்களிடம் வைரஸ் மாதிரி பரவி புத்தகம் வாங்குபவர்கள் வாங்காமல் இருந்து விடுவார்கள்,’ என்றேன். நான் சொன்னதை அங்குக் கூடியிருந்த நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
தயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்
தயாரிப்புக் கவிஞர் ஒருவர் தயாரிப்பு இல்லாத கவிஞரை அசோக்நகரில் உள்ள சரவணா ஹோட்டலில் சந்தித்துவிட்டார். தயாரிப்பு இல்லாத கவிஞர் எப்படி இவரிடமிருந்து தப்பிப்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார். ஏனென்றால் அவரைக் கண்டாலே த இ கவிஞருக்குப் பிடிக்கவில்லை. கவிதையே எழுதத் தெரியாது ஆனால் கவிதை எழுதுவதாக பாவலா பண்ணுகிறார் என்ற நினைப்பு த. இ. கவிஞருக்கு. தயாரிப்புக் கவிஞருக்கோ யார்யாரெல்லாசூமோ கவிதைப் புத்தகம் கொண்டு வருகிறார்கள். இவர் அப்பாவியாக இருக்கிறாரே என்ற நினைப்பு.
“வணக்கம். என் புதிய கவிதைப் புத்தகத்திற்கு உங்களிடம்தான் முன்னுரை வாங்க நினைத்தேன்..”
“ஐய்யய்யோ..எனக்கு அந்தத் தகுதியே கிடையாது,” என்றார் த. இ. கவிஞர்.
“ஏன் தகுதி இல்லை. நானும் நீங்களும்தான் முதன் முதலாக எழுத ஆரம்பித்தோம். இதோ நான் பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளேன். ஆனால் நீங்கள் ஒன்றுகூட கொண்டு வரவில்லை..”
“நான் வேலையில் மூழ்கிவிட்டேன். வீட்டுப் பிரச்சினை வேறு.. எங்கே கவிதை எழுதுவது..”
“நீங்கள் ஒன்றிரண்டு எழுதினாலும் நன்றாக எழுதுவீர்கள்….உங்கள் திறமையை வீணடித்து விட்டீர்கள்..”
“நான் அப்படி நினைக்கவில்லை. யார் கவிதைப் புத்தகங்கள் வாங்குவார்கள்…நாலு பேர்கள் படிப்பார்களா?”
“இதோ இந்தப் புத்தகக் காட்சிக்கு என் பத்தாவது கவிதைத் தொகுதியைக் கொண்டு வருகிறேன்…”
“அப்படியா?”
“ஆமாம். இரண்டே நாளில் தயாரித்துவிட்டேன்.. மடமடவென்று எழுதி..”
“உங்கள் திறமை யாருக்கு வரும்?”
“உங்களுக்கு முன் நான் தூசுதான்..”
“கவிதைகள் எப்போது எழுதினீர்கள்?”
“இப்போதுதான். இரண்டு நாட்களில்..மடமடவென்று..”
“ஆச்சரியமாக இருக்கிறது..இரண்டு நாட்களில் தயாரிக்க முடிகிறது உங்களால்…மடமடவென்று எழுதி..”
“இதுவரை எத்தனைக் கவிதைகள் எழுதியிருப்பீர்கள்..”
“எண்ணவே முடியாது.. கிட்டத்தட்ட ஆயிரம் இருக்கும்..”
“உங்கக் கிட்டயே நான் வர முடியாது…உங்களுடன் பேசுவதற்கே நான் பாக்கியம் செய்திருக்கணும்.”
“உங்கள் தொகுப்புகூட ஒன்று வருவதாக சொன்னார்களே?”
“ஆமாம். இந்த விருட்சம் ஆசிரியர்தான் அதைக் கொண்டு வருவதாகக் கூறி உள்ளார்..50 கவிதைகளை தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்.. இன்னும் எதாவது கவிதை எழுதியது கிடைக்குமா என்று கேட்டுள்ளார்..நான்தான் கொடுக்கவில்லை. என்ன அவசரம். பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்.”
“பொதுவா கவிதைத் தொகுதி விற்காவிட்டாலும் அவர் கவிதைப் புத்தகம் கொண்டு வருகிறாரே அவர் கிரேட்தான்..”
“உங்க கவிதைத் தொகுதி விற்றுவிடுமா?”
“எனக்கு 100 வாசகர்கள் இருக்கிறார்கள்…நான் ம் என்றால் எல்லாவற்றையும் வாங்கி விடுவார்கள்..”
“இப்போது கொண்டு வரும் கவிதைத் தொகுதி பெயர் என்ன?”
“தூறல் நின்னுப் போச்சு..”
“தூறலே இல்லை எப்படி நிற்கிறது. பாக்கியராஜ் பட டைட்டில் மாதிரி இருக்கிறது..”
“சினிமாக்காரங்கதான் அவங்கப் படத்துக்கு நம்ம டைட்டில காப்பி அடிக்கணுமா…ஒரு மாற்றத்திற்கு நாம் ஏன் அவங்கப் பட டைட்டிலைக் காப்பி அடிக்கக் கூடாது..”
“ஓ… கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது. நான் அவசரமாக வீட்டிற்குப் போக வேண்டும். பிறகு வருகிறேன்..” என்று அவர் பதிலுக்குக் காத்திராமல் ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து கிளம்பி விட்டார் தயாரிப்பு இல்லாத கவிஞர்.
(இந்த உரையாடல் முழுவதும் கற்பனை. யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை)
எதிர்பாராத சந்திப்பு
என்னுடைய முழு சிறுகதைத் தொகுதி வாங்குபவர்களுக்கு சென்னையில் இருந்தால் அவர்கள் வீட்டிற்குச் சென்று புத்தகம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அப்படி சிலருக்குக் கொடுத்துக்கொண்டும் இருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை அன்று மடிப்பாக்கத்தில் உள்ள பெண் வீட்டிற்குச் சென்றுவிட்டு வரும் வழியில் என் அலுவலக நண்பர் சுரேஷ் அவர்களிடம் என் புத்தகம் ஒன்றை கொடுக்கச் சென்றேன். அவர்கள் வீட்டு மாடிப்படிக்கட்டிற்குப் போகும்போது ஜாக்கிரதையாகப் போக வேண்டும். தடுமாறி விழ தரை ஒரு விதமாக ஏமாற்றும். அவரிடமும் புத்தகம் கொடுத்துவிட்டு ஷண்முக சுந்தரம் என்ற நண்பரை ஆதம்பாக்கத்தில் சந்தித்து கதைப் புத்தகம் கொடுக்கச் சென்றேன்.
புக்கிஸ் என்ற பெயரில் ஒரு புத்தகக் கடை வைத்திருக்கிறார் ஷண்முக சுந்தரம். ஒரே ஆச்சரியம். ஏகப்பட்டப் புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கிறார். பளீரென்ற விளக்குகள் வெளிச்சத்தில். இரும்பு அலமாரிகளில் பெரும்பாலும் தமிழ் புத்தகங்கள்.. வாடகை நூல் நிலையம் வைத்து நடத்துகிறார். அலுவலகம் போய்விட்டு வந்து மீதி நேரத்தில் நடத்துகிறார். எல்லோரும் வந்திருந்து புத்தகங்களை எடுக்கிறார்களா என்று கேட்டேன். இல்லை என்கிறார். யாராவது வந்தால் இப்போது பாக்கெட் நாவல்கள் எழுதும் பெண் எழுத்தாளர்கள் புத்தகம்தான் வாங்குகிறார்கள் இல்லாவிட்டால் பாலகுமாரன் புத்தகங்கள் எடுக்கிறார்கள் என்றார். நான் நடத்திய விருட்சம் இலக்கியக் கூட்டத்திற்கெல்லாம் வந்திருப்பதாக சொன்னார். என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார். மேற்கு மாம்பலத்தில் வைத்திருக்கும் என் நூல் நிலையத்திற்கு வந்திருந்து அதைச் சரி செய்ய உதவும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். வருகிறேன் என்றார். ஆனால் ஒன்று மட்டும் சொல்லவில்லை. அந்த நூல்நிலையத்தில் ஒருவர் மட்டும்தான் மெம்பர் என்றும், அது நான் மட்டும்தான் என்றும் அவரிடம் சொல்லவில்லை.
ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 6
1. 41வது சென்னை புத்தகக் காட்சி எப்படிப் போயிற்று?
41வது சென்னை புத்தகக் காட்சியும், நானும், மூன்று இளைஞர்களும் என்று கட்டுரை எழுத உள்ளேன்.
2. யார் அந்த மூன்று இளைஞர்கள்?
எல்லாம் என் நண்பர்கள். கிருபானந்தன், சுந்தர்ராஜன், கல்லூரி நண்பர் சுரேஷ்.
3. எல்லோரும் இளைஞர்களா?
எனக்கு 64. என்னை விட சில மாதங்கள் பெரியவர் சுந்தர்ராஜன், என்னை விட சில மாதங்கள் சின்னவர் கிருபானந்தனும், சுரேஷ÷ம். அவர்கள் மூவரும் என்னை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு புத்தகக் காட்சியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள்.
4. 15 கோடிக்குப் புத்தகங்கள் விற்றதாக செய்தி வந்துள்ளதே?
உண்மைதான். ஆனால் எதுமாதிரியான புத்தகங்கள் விற்றன என்பது தெரியாது. அதை நம்பி புத்தகங்களை அதிகமாக அச்சடித்து விடாதீர்கள்.
5. புத்தகக் காட்சியில் நடந்த சோகமான நிகழ்ச்சி எது?
ஞாநியின் மரணம். முதன்முதலாக நானும் ஞாநியும்தான் புத்தக ஸ்டாலில் நுழைந்தோம். அது எந்த ஆண்டு என்ற ஞாபகம் இல்லை.
6. ஒருநாளில் அதிகமாக எழுதுவது ஜெயமோகனா பா ராகவனா?
இந்தக் கேள்வியை நான் ராகவனிடம் கேட்டேன். ஜெயமோகன்தான் என்கிறார் அவர்.
7. இந்தப் புத்தகக் காட்சியில் நீங்கள் செய்த புதுமை என்ன?
கிருபானந்தன் செய்த புதுமை என்று சொல்லுங்கள். ஒரு அட்டைப் பெட்டியில் படித்தப் புத்தகத்தைப் போட்டுவிட்டு படிக்காதப் புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாரகள்.
8. யாரையெல்லாம் புத்தகக் காட்சியில் சந்தித்தீர்கள்?
சந்திக்கவே முடியாது என்று எண்ணிய ஒரு நண்பரைச் சந்தித்தேன். என்னால் நம்ப முடியவில்லை. அவர் எப்படி இருக்கிறார் என்பதை அடிக்கடி யோசித்துக்கொண்டிருப்பேன். புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். முடியாது என்று மறுத்துவிட்டார். சில நிமிடங்கள் பேசிவிட்டு எப்போது நான் செய்த உதவிக்கு கைமாறாக என் பையில் பணத்தைத் திணித்துவிட்டுப் போய்விட்டார். திரும்பவும் வந்து பார்க்க வருகிறேன் என்று சொன்னவர் வரவில்லை.
9. இந்தப் புத்தகக் காட்சியில் உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி எது,
என் முழு சிறுகதைத் தொகுதியைக் கொண்டு வந்ததுதான் மறக்க முடியாத நிகழ்ச்சி.
10. அடுத்தது என்ன செய்வதாக உத்தேசம்.
சி சு செல்லப்பா தனி மனிதராக எழுத்து பத்திரிகையை 120 இதழ்கள் வரை கொண்டு வந்ததாக நினைக்கிறேன். நான் விருட்சம் இதழை 121 இதழ்கள் வரை கொண்டு வர எண்ணி உள்ளேன். சாத்தியமா என்பது தெரியவில்லை.
பரீக்ஷா ஞாநியும் நானும்
கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன். ஞாநியை முதன் முதலாக எங்கே சந்தித்தேன் என்று. கிருத்துவ கல்லூரியில் சங்கரன் என்ற மாணவர் யாருடனோ பேசுவதிலிருந்து தெரிந்துகொண்டேன். அவர்தான் பின்னாளில் பரீக்ஷா ஞாநியாக வரப் போகிறார். அப்போது எனக்கு அவருடன் அறிமுகம் கிடையாது. ஆனால் அவர் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தது மட்டும் காதில் விழுந்தது. ‘கசடதபற நின்று விட்டது. இனிமேல் வராது.’ üகசடதபறý ஒரு சிறு பத்திரிகை. அது நின்று விட்டதை அவர் விவரித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் üகசடதபறý என்ற சிற்றேட்டின் அறிமுகம் எனக்குக் கிடைத்திருந்தது. அது எங்கே விற்கும் என்ற விபரம் தெரியவில்லை.
திரும்பவும் ஞாநியாக சங்கரன்தான் எனக்கு அறிமுகம் ஆனார். அப்போது சில சபா நாடகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கும் நாடகங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை. ஒரு நாடகக் குழுவுடன் இணைந்து கொண்டேன். அதில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். முதல் நாள் நாடக ஒத்திகையின்போது ஒரு வசனத்தைக் கொடுத்து பேசச் சொன்னார்கள். ஒரு பெண் நடிகையைப் பார்த்து காதல் வசனம் பேச வேண்டும். நாடக இயக்குநர் நான் நடிப்பதைப் பார்த்து üநீங்கள் சத்தமாக வசனம் பேச வேண்டும்,ý என்றார். திரும்பவும் நாடக ஒத்திகை நடந்தது. இந்த முறை சத்தமாக வசனம் பேசினேன்.
திரும்பவும் அந்த நாடக இயக்குநர் சொன்னார்: “நீங்கள் ஏன் இப்படி காதல் வசனம் பேசும்போது, மார்பில் கை வைத்துக்கொண்டு பேசுகிறீர்க,.” எனக்கு வாய்ப்பு போய்விட்டது. நாடகத்தில் கூட என்னால் காதல் வசனம் பேசி காதிலிக்க முடியாது என்று தோன்றியது.
அந்தத் தருணத்தில்தான் பரீக்ஷா என்ற நாடகக் குழு எனக்கு அறிமுகம் ஆனது. அவர்கள் நாடகங்களை சென்னை மியூசியம் தியேட்டரில் பார்த்து முதலில் ஆச்சரியப்பட்டேன். பின் ஏன் இப்படி என்று யோசிப்பேன். எனக்கும் நாடகத்தில் நடிக்க வேண்டுமென்ற ஆசை விடவில்லை. ஞாநியைப் போய்ப் பார்த்தேன். என்னை அவர்களில் ஒருவனாக சேர்த்துக்கொண்டார்.
எனக்கும் ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அறந்தை நாராயணனின் ‘மூர் மார்க்கெட்’ என்ற நாடகம். அப்பாவி இளைஞன் வேஷம். மேடையில் பாதி தூரம் வரை வந்திருந்து நடிக்க வேண்டும்.. ஞாநியின் எளிமையும், எல்லோரையும் நடிக்க வைக்கலாமென்ற தன்மையும் எனக்குப் பிடித்திருந்தது. பீட்டர்ஸ் காலனியில் உள்ள ஞாநியின் வீட்டிற்கு நான் மேட் இன் இங்கிலாந்து சைக்கிளில்தான் போவேன். நாடகம் அன்று அலுவலகம் போகாமல் சைக்கிளை அவர்கள் வீட்டின் வெளியே வைத்துவிட்டு அவர்களுடன் ஆர் ஆர் சபாவிற்குச் சென்றேன். அங்கு முன் மாதிரியாக நாடக ஒத்திகை நடந்தது. எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். எனக்கு படக் படக்கென் நெஞ்சு துடிப்பது போலிருந்தது.
அந்தத் தருணம் வந்தது. நாடக மேடையில் பாதி தூரம் வந்து நான் வசனம் பேச வேண்டும். நான் பேசுவதற்குள் என் கூட இருந்தவர்கள் அவர்களாகவே இட்டுக்கட்டி வசனம் பேசி என்னை டிஸ்டர்ப் செய்து விட்டார்கள். எனக்கு இப்போது கூட ஒரு வசனம் ஞாபகத்திற்கு வருகிறது. ‘என்னம்மா குறியில்லாமல் இருக்கியே,’ என்று. அந்த வசனம். நாடகத்தில் நடித்த அன்று இரவு தூக்கமே வரவில்லை. மேடையில் நடித்த அப்பாவி இளைஞன் பாதி தூரம் மேடையில் நடந்து நடந்து வசனம் பேசுவது போல் கனவு. எனக்கு இனிமேல் நாடகத்திலேயே நடிக்க வராது என்று தோன்றியது. அடுத்த நாள் காலையில் ஞாநி வீட்டு வாசலில் வைத்திருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு ஞாநியிடம் சொல்லாமல் ஓட்டமாய் ஓடி விட்டேன்.
ஞாநி என் தூர நண்பராகிவிட்டார். அவரைப் பற்றிய செய்திகள் எல்லாம் எனக்கு வந்துகொண்டிருக்கும். அவருடைய திருமணம் கூட சென்னை மியூசியம் தியேட்டரில்தான் ஒரு நாடகத்துடன் நடந்தது. அவர் திருமண வைபத்தில் கலந்து கொண்டேன். ‘நானும் பத்மாவும் சேர்ந்து வாழப்போகிறோம்,’ என்று அவர் சொன்னதாக ஞாபகம்.
நாடகத்தில் நடிக்கும் ஆசை போய்விட்டதால் என் நட்பு வட்டமும் மாறிவிட்டது. ஞானக்கூத்தன், ஆர் ராஜகோபாலன், ஆனந்த், ஸ்டெல்லா புரூஸ், வைத்தியநாதன், ஸ்ரீனிவாஸன், பிரமிள், அசோபமித்திரன், வெங்கட்சாமிநாதன் என்றெல்லாம் என் நட்பு வட்டம் பெரிதாகிவிட்டது. ஆரம்பத்தில் தொடர்ந்த எழுத்து முயற்சி விருட்சம் என்ற பத்திரிகை கொண்டு வரும் அளவிற்கு மாறியது. இந்தத் தருணத்தில் ஞாநியை சந்திக்காவிட்டாலும் ஞாநியைக் குறித்த செய்திகளை அறியாமல் இருக்க மாட்டேன். தன் கருத்துக்களைத் தெரிவிப்பதில் ஞாநி துணிச்சலானவர். சோ ராமசாமிக்கு அடுத்ததாக ஞாநி ஒருவர்தான் தன் மனதில் தோன்றுவதை தைரியமாக வெளிப்படுத்தக் கூடியவர். அதே சமயத்தில் அவர் சொல்வதில் சிலவற்றை ஏற்றுக்கொள்வேன். சிலவற்றை ஏற்க மாட்டேன். பாரதியார் மீது அவருக்குப் பற்று அதிகமாக இருக்கும். அவர் ஒரு ஓவியர். பாரதியார் படம் ஒன்றை மீசையுடன் அவர் வரைந்திருப்பார். அதைப் பார்க்கும்போது நாமும் அதை நம் வீட்டில் வைத்திருக்கலாமென்று தோன்றும். தீம்தரிகிட என்ற பத்திரிகை ஒன்றை அவர் ஆரம்பித்தார். அப் பத்திரிகை மூலம் தன் மனதில் தோன்றுவதெல்லாம் எழுதுவார். ஆனால் அவரால் அப் பத்திரிகையைத் தொடர்ந்து கொண்டு வர முடியவில்லை. பத்திரிகையைக் கொண்டு வருவதில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், நிறுத்தி விட்டார்.
இருந்தாலும் அவர் பல பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தார். முரசொலி, ஆனந்தவிகடன், தினமணி, தினமலர் என்று பல பத்திரிகைளில் பல பொறுப்புகளில் பணி புரிந்தவர். டிவிகளிலும் அவர் பங்குபெற்று தொடர்கள் இயக்கிக்கொண்டிருந்தார். பெரியார் பற்றி அவர் எடுத்தது குறிப்பிடத்தகுந்தது. அதிகம் செலவாகாமல் ஒரு ஆவணப்படத்தை எடுக்க முடியும் என்று நிரூபித்தவர். ‘எப்படி விருட்சத்தை இவ்வளவு தூரம் நடத்துகிறீர்கள்?’ என்று ஒரு முறை ஞாநி என்னிடம் கேட்டார்.
விருட்சம் போன்ற பத்திரிகை நடத்துவதற்கான வழிமுறையைக் அவரிடம் தெரிவித்தேன். எங்கே அச்சடிக்கிறேனோ அந்த இடத்தைக் குறிப்பிட்டேன். அவர் திரும்பவும் தீம்தரிகிட பத்திரிகையைக் கொண்டு வந்தார். ஆனால் தொடர முடியவில்லை. தீம்தரிகிட திரும்பவும் நின்று விட்டது. அந்த அச்சகத்தில் புத்தகங்களை கொண்டு வந்தார். அவர் வட்டம் பெரிதாகி விட்டது. பல அரசியல் நண்பர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். இவ்வளவு இருந்தும் ஞாநியை எல்லோரும் பார்க்க முடியும். பேச முடியும். நான் பத்து கேள்வி பத்து பதில்கள் என்ற தலைப்பில் பல எழுத்தாளர்களைப் பேட்டி எடுத்தேன். ஞாநியையும் எடுத்தேன். அவர் வீட்டுப் பின்பக்கத்தில்.
(15.01.2018 அன்று மறைந்த ஞாநியின் நினைவாக..)
வெளியில் இருந்து வந்தவன்
ஒருமுறைதான் சந்தித்தேன். 1991ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை அன்று சென்னைக்கு என்னைப் பார்க்க வந்தார். வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டேன். மனமுவந்து சாப்பிட்டார். பின் அவர் கவிதைத் தொகுதி எப்படி கொண்டு வரவேண்டுமென்று அறிவுரை கூறிவிட்டு கவிதைத் தொகுதி கொண்டுவர பணமும் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார். அவர் வேற யாருமில்லை உமாபதி என்கிற கவிஞர். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. கோவில்பட்டியா சென்னையா தெரியவில்லை.
என்னுடைய இந்த முகநூலை பார்ப்பாரா? தெரியவில்லை. அப்படி என்ன விசேஷம் அவரிடம். அவருடைய கவிதைத் தொகுப்புதான். ழ பத்திரிகையில் அவருடைய கவிதை ஒன்று பிரசுரம் ஆனது. அசந்து விட்டேன். மரணம் என்ற கவிதை அது.
தன் கவிதைத் தொகுதி புத்தகமாக வருவதில் ரொம்பவும் கூச்சப்படுவார் என்பதை அவருடைய நண்பார்களான சுந்தர ராமசாமியும், ராஜ மாத்தாண்டனும் தெரிவித்துள்ளார்கள். அவர்களுடைய தூண்டுதல் பேரில்தான் அவருடைய கவிதைத் தொகுதி வெளிவந்தது. அதுவும் விருட்சம் வெளியீடாக. 1991ஆம் ஆண்டு.
‘வெளியிலிருந்து வந்தவன்’ என்ற உமாபதி புத்தகத்துடன், ‘இரு நீண்ட கவிதைகள்’ என்ற நகுலன் புத்தகமும் கொண்டு வந்தேன். ஒரே ஆண்டில்.
பின் பீக்காக் பதிப்பக உரிமையாளர் சசச்சிதானந்தத்துடன் சேர்ந்து 3 புத்தகங்களுக்கும் ஒரு அறிமுகக் கூட்டம் ஏற்பாடு செய்தேன். பீக்காக் பதிப்பகம் மௌனி கதைகள் புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தது. நான் உமாபதி, நகுலனின் கவிதைத் தொகுதிகள்.
கூட்டத்தில் எல்லோரும் பேசி முடித்தவுடன், யாரும் ஒரு புத்தகம் கூட நகுலனின் இரு நீண்ட கவிதைப் புத்தகத்தையும், வெளியிலிருந்து வந்தவன் புத்தகத்தையும் வாங்கவில்லை. சச்சிதானந்தன் கொண்டு வந்த மௌனி கதைகள் சில பிரதிகள் விற்றன. எனக்குப் பெரிய ஏமாற்றம்.
நான் கொண்டு வந்த இந்த இரண்டு புத்தகங்களைப் பற்றியும் எப்படி விவரிக்கிறது என்று தெரியவில்லை. உமாபதியின் கவிதைத் தொகுதியின் விலை ரூ.15தான் 80 பக்கங்கள் கொண்ட புத்தகம். அதேபோல் நகுலனின் இருநீண்ட கவிதைகள் புத்தகத்தின் விலை ரூ.12தான். ஆனால் யாரும் வாங்கத் தயாராய் இல்லை.
உமாபதி புத்தகம் லைப்ரரி ஆர்டர் வந்து எல்லாம் தீர்ந்து விட்டது. ஆனால் நகுலன் புத்தகத்தை வைத்துக்கொண்டு பல ஆண்டுகளாகத் தவித்துக்கொண்டிருந்தேன்.
சுந்தர ராமசாமி உமாபதியின் புத்தக முன்னுரையில் இப்படி எழுதியிருக்கிறார் : ‘நமது கலைஞர்கள் ஒதுங்கி ஒளியக் கூடியவர்கள். நமது ஜோடனையாளர்கள் அசுர உழைப்பாளிகள். தமிழின் துரதிருஷ்டம் .இது,’ என்கிறார்.
உமாபதியைப் பற்றி ராஜ மார்த்ôண்டன் இப்படி எழுதுகிறார் :
‘உமாபதியின் கவிதைகள், சுய அனுபவத்தின் மனச் சாய்வற்ற வெளிப்பாடுகள். இன்று கவிதை எழுதுகின்ற பெரும்பாலோருக்கு அரிதேயான கவிதை மொழி இவருக்கு இயல்பாகக் கைகூடி வருவதும், தன்கேயான ஒரு கவிதை மொழியைத் தெரிந்து கொண்டதும், பிற கவிஞர்களிடமிருந்து இவரை தனித்து இனங்காட்டும் முக்கிய அம்சம். அவ்வகையில் குறிப்பிடத் தகுந்த தமிழ்க் கவிஞர் சிலரில் உமாபதியும் ஒருவர்,’ என்கிறார்.
நான் கொண்டு வந்த இரண்டு புத்தகங்களையும் புத்தகக் கண்காட்சியில் அந்த ஆண்டில் பல கடைகளில் கொடுத்து விற்க வைத்தேன். அன்றைய புத்தகக் காட்சி ஒரு மோசமான புத்தகக் காட்சி. எல்லா ஸ்டால்களும் பற்றி எரிய ஆரம்பித்தது. நான் விற்பதற்குக் கொடுத்த கவிதை நூல்களும் நெருப்பில் எரிந்துவிட்டன.
நிச்சயமாக ‘வெளியிலீருந்து வந்தவன்’ என்னிடம் கிடைக்காது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். இதோ ஒரே ஒரு புத்தகம் கிடைத்துவிட்டது. உடனே அப் புத்தகத்தை ஸ்கேன் பிரிண்ட் செய்துவிட்டேன். மிகமிகக் குறைவான பிரதிகள்தான் அச்சடித்துள்ளேன். 80 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.50தான் புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை இங்கு தர விரும்புகிறேன்.
என் கவிதை
மூட்டுகளில் பரவலாக வலி
உணவு நேரத்தில் பசி கரைகிறது
பச்சை பிடிக்கும். வானம்
நீலமாய் இருக்கிறது. மனைவி
தினம் சினிமா கேட்கிறாள். வீட்டில்
தொலைக்காட்சி பார்க்கிறாள்.
பிள்ளைகளின் புத்தகங்கள்
அருவருப்பாய் இருக்கிறது.
கடையில் üசானிடரி நாப்கின்ý
கேட்க கூச்சமாய் இருக்கிறது.
பாதசாரிகசள் காரணத்தோடு
இடித்துப் போகிறார்க. தினசரிகள்
சுட்டுப் பொசுக்குகின்றன.
செருப்பு அறுந்த அடுத்த அடி
எச்சில் மிதக்கிறது.
படிக்க ஆசையாய் இருக்கிறது.
கவிதைகள் இல்லாத
கவிதைப் புத்தகங்கள்
காட்சி சாலைக்குள் மனிதன்
வெளியே
அலகு உதிர்ந்த கிளி
தோலுரித்த ஆடு.
எனது கவிதைகள்.
திரும்பவும் உமாபதியை சந்தித்தால் அவருடைய கவிதைப் புத்தகத்தைக் கொடுக்கலாமென்று நினைக்கிறேன்.
650 பக்கங்களுக்கு மேல்
62 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம் கொண்ட üஅழகியசிங்கர் கதைகள்ý என்ற மொத்தப் படைப்புகளுக்கான புத்தகம் கொண்டு வருகிறேன். புத்தகக் காட்சிக்குள் வந்துவிடும். 650 பக்கங்களுக்கு மேல் உள்ள இப்புத்தகம் கெட்டி அட்டைப்ப்போட்டு தயாரிக்கப்பட உள்ளது. இதன் விலையை ரூ.600 ஆக வைப்பதாக உள்ளேன். நான் இதுவரை 12 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். இத் தொகுப்பு என் 13வது தொகுப்பு.
என் முதல் கதையின் பெயர் üசெருப்பு.ý 1978ஆம் ஆண்டு எழுதியது. ஒரு சிறுபத்திரிகையில்தான் பிரசுரம் ஆனது.
அந்தக் கதையைப் படித்துவிட்டு என் அலுவலகத்தில் உள்ள ஒரு பெண்மணி, ‘உங்கள் செருப்பு நன்றாக இருக்கிறது,’ என்றாள். உடனே நான் என் காலில் மாட்டியிருந்த செருப்பைப் பார்த்தேன்.
‘உங்கக் கால் செருப்பைச் சொல்லலை, சார்.. உங்கக் கதையைச் சொல்றேன்,’ என்றாள். அவள் சொன்னதைக் கேட்டு என் கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். அந்த நேரத்தில அந்தப் பெண்மணி சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அதேபோல் முதன் முதலாக போராட்டம் என்ற என் குறுநாவல் ஒன்று கணையாழியில் அக்டோபர் 1986ல் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தது. தேர்ந்தெடுத்தவர் அசோகமித்திரன். என்னால் நம்ப முடியவில்லை. இப்படியும் நடக்குமா என்ற ஆச்சரியம்தான் அப்போது. ஆனால் அந்தத் தருணத்தில் வங்கியில் எழுதிய சிஎஐஐபி தேர்வில் தோல்வி அடைந்துவிட்டேன். அப்போது கணையாழியில் குறுநாவல் வருவதுதான் வெற்றி என்று நினைத்துக்கொண்டேன்.
அப்போது கணையாழி ஸ்தாபகர் கஸ்தூரி ரங்கன் ஒன்று சொன்னார். ”கதைக்காக பணம் அனுப்ப மாட்டோம். ஆனால் கணையாழி பத்து வருடங்கள் வரும்,” என்று. ஆனால் சில மாதங்களிலேயே அனுப்புவதை நிறுத்தி விட்டார். ஏன் என்று நானும் கேட்கவில்லை. போராட்டம் என்ற கதையைத் தொடர்ந்து 6 குறுநாவல்கள் கணையாழில் ஒவ்வொரு வருஷமும் தி ஜானகிராமன் போட்டியில் வெளிவந்து கொண்டிருந்தது.
இதோ ‘மாற்றம்’ என்ற பெயரில் 67வது சிறுகதையும் டிஸம்பர் 2017ஆம் ஆண்டு வெளிவந்து விட்டது. இன்னும்கூட என் கற்பனையில் கதை இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் முன்பு இருந்த முனைப்பு கொஞ்சம் குறைந்துவிட்டது.
இதோ கதைகள் எல்லாவற்றையும் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டுமென்ற என் ஆர்வம் சற்றும் குறையவில்லை. 650 பக்கங்கள் தயார் செய்துவிட்டேன். இப்புத்தகத்தின் விலை ரூ.600. ஆனால் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.300க்குக் கொடுக்க விருப்பம். புத்தகக் காட்சி வரைதான் இந்தச் சலுகை.
இதைப் படிப்பவர்களுக்கு இப் புத்தகம் வேண்டுமென்றால் ரூ.300 கொடுத்தால் போதும். நவீன விருட்சம் கணக்கில் பணம் அனுப்பி பதிவு செய்துகொள்ள வேண்டுகிறேன். கணக்கைப் பற்றிய விபரம் இதோ:
Name of the Account : NAVINA VIRUTCHAM,
BANK : INDIAN BANK, ASHOKNAGAR BRANCH.
ACCOUNT NUMBER No. 462584636
`IFSC CODE : IDIB 000A031
பணத்தைக் கட்டிவிட்டு எனக்குத் தகவல் அனுப்பவும். என்னுடைய தொலைபேசி எண்: 9444113205 9176613205.
நானும் புத்தகம் வருவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
சமீபத்தில் பங்களூர் சென்றேன்
இந்த மாத முதல் வாரத்தில் நான் பங்களூர் சென்றேன். நெருங்கிய உறவினரின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக. அங்கு மூன்று நாட்கள் இருந்தேன். ஒரு கல்யாணம் மூன்று நாட்கள் நடப்பதை அறிந்து ரொம்பவும் யோசனை செய்துகொண்டிருந்தேன். மூன்று நாட்களாக நடக்கும் திருமணத்தில் ஏற்படும் செலவுகளைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் இது குறித்து யாரிடமும் எதுவும் பேசவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு திருமணம் ஒரு நாளிலேயே முடிந்துவிட வேண்டுமென்று நினைக்கிறேன்.
மூன்று நாட்கள் அங்கே இருக்கும்படி இருந்ததால் நான் லேப்டாப் எடுத்துக்கொண்டு போயிருந்தேன். அங்கே போய் விருட்சம் 104வது இதழைக்கொண்டு வந்தேன். லாப்டாப் மூலம் அச்சடிக்க அனுப்பி அச்சடித்தேன்.
மீதி நாட்களில் புத்தகக் கடைகளுக்குச் செல்ல தீர்மானித்திருந்தேன். முன்பு நான் பார்த்த பங்களூர் மாதிரி இல்லை. முன்பு என்றால் நான் மெஜஸ்டிக் போய் அங்கிருந்து பஸ் பிடித்து எல்லா இடங்களுக்கும் செல்வேன். எங்கே போகவேண்டுமென்று ஒரு இலக்கிய நண்பரைக் கேட்டேன். அவரும் எனக்குத் துணையாக வந்தார். அவர் பெயரைக் குறிப்பிட வேண்டாமென்று கேட்டுக்கொண்டதால் குறிப்பிட வில்லை. மகாத்மா காந்தி ரோடில் உள்ள பிளாஸம்ஸ் என்ற இடத்திற்கு ராஜாஜி நகரில் உள்ள சத்திரத்திலிருந்து கிளம்பிப் போய் சில புத்தகங்கள் வாங்கினேன். புத்தகக் கடை பெரிய இடமாக இருந்தது. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மேலும் பழையப் புத்தகங்களையும் விற்கிறார்கள். புத்தகம் பின்னால் அட்டையில் விலையைத் தீர்மானித்து விடுகிறார்கள். அதிலிருந்து குறைப்பது இல்லை. நாலைந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு சத்திரத்திற்கு வந்து விட்டேன்.
அடுத்தநாள் எழுத்தாளர் ஸிந்துஜாவைச் சந்தித்து அவரைப் பேட்டி எடுத்தேன். பின் அவருடன் இன்னும் சில புத்தகக் கடைகளுக்குப் போனேன்.
சுதா புக் ஹவுஸ் என்ற இடத்திற்குச் சென்றேன். ரொம்ப சின்ன இடம். அந்த சின்ன இடத்தில் ஏகப்பட்ட புத்தகங்கள். அங்கே பல ஆண்டுகளுக்கு முன்பே போகவேண்டுமென்று நினைத்தேன். அந்தக் கடை சத்திரம் இருக்கும் இடத்திலேயே பக்கத்தில் இருந்தது.
எல்லாம் பழைய புத்கங்கள். விலை பின் அட்டையில் அவர்கள் எழுதியிருப்பதுதான். அதற்குக் குறைந்து அவர்கள் புத்தகங்களை விற்கத் தயாராய் இல்லை. அங்கிருந்து இன்னும் ஆக்குருதி என்ற பழைய புத்தகக் கடைக்குப் போனேன். அங்கு சில புத்தகங்களை வாங்கினேன். எல்லாம் பழையப் புத்தகங்கள். திருப்பிக்கொடுத்தால் பாதி விலைக்கு இன்னொரு புத்தகம் எடுத்துக்கொள்ளலாமாம்.
நான், ‘தி புக் தீவ்’ என்ற புத்தகத்தை வாங்கினேன். ரொம்ப பழைய புத்தகம். விலை ரூ.250. அப் புத்தகத்தில் இப்படி எழுதியிருந்தது.
Dear Viji and Sunil,
Hope you Enjoy This Book As much As I did.Don’t know if there is a book in all of us, but thereis definitely ‘Book Thief” in some of us.
Love
Wheny
12.09
அப்புத்தகத்தில் எழுதியிருந்த வாசகங்கள் என்னைக் கவர்ந்தன. நான் மொத்தம் 14 புத்தகங்கள் வாங்கினேன். மொத்தம் ரூ.3500 வரை ஆயிற்று. ரூ.25
என்னன்ன புத்தகங்கள் வாங்கினேன் என்பதை இங்கே கொடுக்க விரும்புகிறேன். எல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள்.
1. No More Questions – The Final Travels of U G Krishnamurti – Louis Brawley 2. Though is your enemy – Coversations with U G Krishnamurti 3. Osho Fragrance – Swami Chaitanya Keerti 4. Intuition – Knowing Beyond Logic – Insighrts for a mew way of living – OSHO 4. Murakami – Wind PinBall 5. Kazuo Ishiguro – When We Were Orphans 6. Umberto Eco – Travels in Hyper Reality 7. Kundera – Immortality 8. J M Coetz – The Master of Petersburg 9. Dylan Thomas – Collecrted Poems 1934-1952 10. The Periodic Table – Primo Levi 11. Other People’s Trades – Primo Levi 12. the famished road – BenOkri 13. the Book Thief – Markus Zusak
சத்திரத்திற்கு நான் திரும்பியபோது யார் கண்ணிலும் படாமல் புத்தகங்கள் நான் தங்கியிருந்த அறையில் பதுக்கினேன். வழக்கம்போல் புத்தகங்களை அடுக்கி வைத்துவிட்டுப் பார்க்கிறேன். இனிமேல்தான் ஒவ்வொன்றாகப் படித்துவிட்டு என்ன எழுத முடியுமென்று பார்க்க விரும்புகிறேன். .
மரபு கவிதைகளை ஒழித்தவர் பாரதியார்
பாரதியின் பிறந்த தினம் இன்று. எல்லாவிதங்களிலும் இன்று எழுதிக்கொண்டிருக்கிற கவிஞர்கள் பாரதியாருக்குக் கடமைப் பட்டவர்கள். மரபு கவிதைகளை எழுதிக் குவித்த பாரதியார் ஒரு மாற்றாக வசன கவிதைகளை எழுதினார். அதவாது சுதந்திரமான கவிதைகள். அக் கவிதைகள்தான் பெரிய மாற்றத்தை தமிழில் இன்று ஏற்படுத்தி உள்ளது.
பாரதியாரின் வசன கவிதைகளைத் தொடர்ந்து ந பிச்சமூர்த்தி கொஞ்சம் மரபு கொஞ்சம் புதுவிதமான கவிதை என்று எழுதினார். க நா சு முழுவதும் மரபைத் தவிர்த்துவிட்டார். கவிதையில் புதிய உத்தியை கநாசுவும் நகுலனும் ஆரம்பதில் ஏற்படுத்தியவர்கள். இன்றும் சிலர் மரபு கவிதைகளை எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. ஏன்னெனில் புதுவிதமான கவிதைகள் எழுதுவதில் உள்ள சுதந்திரம் மரபு கவிதைகளில் இல்லை. இன்று அதன் எல்லை தாண்டி எங்கோ போய்க்கொண்டிருக்றது.
என்னிடம் 400க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் உள்ளன. எல்லாக் கவிதைப் புத்தகங்களும் மரபு கவிதையை உதறிவிட்டு எழுதப்பட்ட புதுவிதமான கவிதைகள்.
பாரதியாருக்குப் பின் பாரதிதாசன், சுரதா, நாமக்கல் கவிஞர் என்று பலர் மரபு கவிதைகள் எழுதி இருக்கிறார்கள். ஏன் இன்னும் கூட மரபு கவிதைகள் எழுதும் கூட்டம் இல்லாமல் இல்லை. மரபு கவிதையில் வார்த்தையின் ஒழுங்கை ஏற்படுத்த முன்பு கற்பனையை கருத்தை விட்டுவிடுவோம். சொன்னதையே சொல்லும்படி இருக்கும். இதையெல்லாம் கருதிதான் பாரதியார் மரபு கவிதையிலிருந்து கவிதையை வசன கவிதைக்கு மாற்றிக்கொண்டு போயிருக்கிறார்.
பாரதிக்குப் பின் விருத்தத்தில் எழுதிய கண்ணதாசன் கவிதைகள் மீது எனக்கு ஒருவித லயிப்பு உண்டு. ஆனால் அவரும் கூட தேரோட்டம் என்று எழுதினால் காரோட்டம் என்று எதுகைக்கு தடுமாறியதாகத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் நானும் வெண்பாக்கள் சிலவற்றை எழுதிப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதைத் தொடர முடியாது என்று தோன்றிவிட்டது. ஏன்எனில் மரபு கவிதைகளில் சுதந்திரம் இல்லை. நம் எண்ணங்களை எல்லோருக்கும் ùதியப்படுத்த மரபு ஒரு கடிவாளமாக நம்மைச் சிறைப்பிடித்து விடுகிறது. ஆனால் இன்னும் பலர் மரபு கவிதைகளை எழுதிக்கொண்டு வருகிறார்கள். புத்தகமாகப் போடுகிறார்கள். அதை ரசிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அங்கு போய் அதில் கலந்துகொள்ள என்னால் முடியவில்லை. ஒரு பத்திரிகை வெண்பா போட்டி வைத்து அதை ஒவ்வொருமாதமும் பிரசுரம் செய்கிறது.
பாரதியாரின் பிறந்த நாள் ஆன இன்று அவர் வசன கவிதை ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
சிற்றெறும்பைப் பார்.
எத்தனை சிறியது!
அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா
அவய ங்களும் கணக்காக வைத்திருக்கிறது
யார் வைத்தனர்? மஹா சக்தி.
அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன.
எறும்பு உண்ணுகின்றது, உறங்குகின்றது. மணம் செய்து
கொள்கின்றது. குழந்தை பெறுகிறது, ஓடுகிறது,
தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது.
இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்.
மஹாசக்தி காற்றைக்கொண்டுதான் உயிர்
விளையாட்டுவிளையாடுகின்றாள்.
காற்றைப் பாடுகிறோம்
அஃது அறிவிலே துணிவாக நிற்பது;
உள்ளத்திலே விருப்பு வெறுப்புக்களாவது.
உயிரிலே உயிர் தானாக நிற்பது.
வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம்.
நாம் அழிவதில்லை.
காற்றுத் தேவன் வாழ்க.