நான் நடத்தும் கூட்டமும் அது நடத்தும் பதைபதைப்பும்

இன்று வழக்கமாக நடத்தும் சனிக்கிழமைக்குப் பதிலாக விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடத்தினேன். த நா குமாரசாமியும் நானும் என்ற தலைப்பில் வ வே சுப்பிரமணியன் அவர்கள் பேசினார். ஆனால் கூட்டம் 6 மணிக்கு ஆரம்பித்து ஏழரை மணிக்கு முடிக்க வேண்டும். கிட்டத்தட்ட 7 மணிக்குத்தான் கூட்டம் ஆரம்பிக்கும்படி ஆயிற்று.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு நானோ டுவீஸ்ட் காரை ஓட்டிக் கொண்டு போனதால் இந்த விளைவு. சமீபத்தில் காரை சர்வீஸ் கொடுத்திருந்தேன். சர்வீஸ் போய் வந்தபிறகும் நான் காரை எடுத்துக்கொண்டு போக முடியவில்லை. சர்வீஸ் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும் இல்லை. இது என் தப்பு. வண்டியை எடுத்துக்கொண்டு போனபிறகுதான் பெற்றோல் ஒரு சொட்டு கூட இல்லை என்று. கூடவே நண்பர்களான வைதீஸ்வரனையும், ராஜாமணியையும் அழைத்துக்கொண்டு வந்தேன்.
வண்டியை ஓட்டிக்கொண்டு போகும்போது முதல் கியரிலிருந்து இரண்டாவது கியருக்கு மாற்றினேன். ரொம்ப கடுமையாக இருந்தது. எளிதாக மாறக்கூடிய கியர் மாறத் தயாராயில்லை. இந்தச் சிரமத்துடன் வண்டியை சாமர்த்தியமாக ஓட்டிக்கொண்டுபோனேன்.
போய்ச் சேருவதற்குள் 6.45 ஆகிவிட்டது. என்னுடன் கூட்டம் நடத்துவதற்கு உற்றத் துணையாக நண்பர் ராஜேஸ் முன்னதாகவே சென்று கூட்ட ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டார்.
வ வே சு என்னைப் பார்த்து திட்டியிருக்க வேண்டும். ஏன் என் கூட்டத்திற்கு வந்திருந்த நண்பர்கள் அனைவரும் என்னைத் திட்டியிருக்க வேண்டும். அவர்கள் யாரும் என்னைத் திட்டவில்லை. இது எனக்கு ஆறுதல். இந்தக் கூட்டத்தின் சிறப்பு த நா குமாரசாமியின் புதல்வர் அஸ்வீன்குமார் வந்திருந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் பொழுது போனதே தெரியாமல் வ வே சு அவர்கள் பேசினார்கள். த நா குமாரசுôமியை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.
கூட்டம் ஆரம்பிக்கும் முன் என் சோனி காமெரா தகராறு பண்ண ஆரம்பித்துவிட்டது. அதில் ஏற்கனவே பதிவாகியிருந்ததை அழிக்க மறந்து விட்டேன். நான் அங்கு அவசரம் அவசரமாக அழித்தேன். கொஞ்ச நேரத்தில் காமெரா பயன்பாட்டுக்கு வந்து விட்டது. ராஜேஸ்தான் கை வலிக்க வலிக்க காமெராவை கையில் வைத்துக்கொண்டு வ சே சு பேசியதைப் படம் பிடித்தார்.
நான் ஒவ்வொரு கூட்டத்தையும் நடத்தும்போதும் கேட்கும்போதும் அந்த எழுத்தாளர்களுடைய புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டுவிடுவேன். பின் வாங்கிய புத்தகங்களைப் புரட்டி புரட்டிப் பார்ப்பேன். ஏதோ படிப்பேன். என் குடும்பத்திற்கு எதோ சொத்து சேர்ப்பதாக நினைத்துதான் இந்தப் புத்தகங்களை வாங்கி சேர்த்துள்ளேன்.
திருப்பூர் கிருஷ்ணன் 2017ஆம் ஆண்டு ஜøன் மாதம் இக் கூட்டத்தை தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் ஆரம்பித்து வைத்தார். அந்த மாதத்திலிருந்து தொடர்ந்து இக் கூட்டம் நடந்து வருகிறது. இன்னும் பல எழுத்தாள நண்பர்களை அழைத்து இக் கூட்டத்தை நடத்துவதற்கு ஆவலாக உள்ளேன். இங்குப் பேசியதை எல்லாம் நான் ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்துள்ளேன். ஆனால் இதையெல்லாம் எழுத்து வடிவமாகக் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும். இயலுமா என்பது பெரிய கேள்விக்குறி.

நகுலன் மதியம் டீ குடிக்க வந்தார்….

நானும் நண்பரும் மதியம் அசோக்நகர் சரவணபவன் ஓட்டலில் காப்பி குடிக்கச் சென்றோம். அப்போது ஒரு வயதானவரைப் பார்த்து அசந்து விட்டேன். எனக்கு உடனே ஒருவர்தான் ஞாபகத்திற்கு வந்தார். நகுலன். அவர் எப்படி இங்கே வந்தார். அவர்தான் எப்போதோ போய்விட்டாரே என்று தோன்றியது. என்னால் நம்ப முடியவில்லை. நகுலன் மாதிரி அந்த வயதானவர் தோற்றம் அளித்தார்.
பக்கத்தில் என்னுடன் இருந்த நண்பரைப் பார்த்துக் கேட்டேன். ‘இவரைப் பார்த்தால் நகுலன் மாதிரி தெரியவில்லையா?’ என்று.
நண்பர் ஒன்றும் சொல்லவில்லை. நகுலன், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், பிரமிள், ஐராவதம், வெங்கட் சாமிநாதன், ஸ்டெல்லாபுரூஸ் என்று பலர் இறந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் என் நினைவில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் பெரியவரைப் பார்த்தவுடன் நகுலன் மாதிரி இருந்தார்.
அவரைப் பார்த்து கேட்டேன் : “உங்கள் பெயர் டி கே துரைசாமியா?ýý
“இல்லை. மோகன்.”
என்னால் நம்ப முடியவில்லை. எப்படி இவர் நகுலன் மாதிரி தோற்றம் அளிக்கிறார் என்று.
“ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளட்டுமா?” என்று கேட்டேன்.
“சரி,” என்றார்.
“என் நண்பர் மாதிரி நீங்கள் இருக்கிறீர்கள்,” என்றேன்.
“உலகத்தில் ஏழு பேர்கள் அப்படி இருப்பார்கள்,” என்றார் அவர்.
“ஏழு பேர்கள் இல்லை. இரண்டு பேர்கள்,” என்றேன் நான்.
போட்டோ எடுத்தேன். சிறிது நேரம் கழித்து, அந்தப் பெரியவர் என்னிடம் கேட்டார். “ஒரு டீ வாங்கித் தர முடியுமா?” என்று.
ஒரு டீ வாங்கிக் கொடுத்தேன். அவர் குடித்துக்கொண்டிருந்தார் நான் போய் வருகிறேன் என்று விடை பெற்றுக்கொண்டேன்.
நகுலனுடன்தான் நான் பேசினேனா என்ற சந்தேகம் வந்தது. என்னுடன் வந்த நண்பர் இது குறித்து ஒன்றும் சொல்லவில்லை.

மயிலாடுதுறைக்குச் சென்று வந்தேன்….பகுதி 2

என் அறையில் என் கண் முன்னால் பல புத்தகங்கள் இருக்கின்றன. எந்தப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படித்தாலும் படித்துக்கொண்டே போகலாம். ஆனால் எதாவது ஒன்றை எடுத்து கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலும் பின் அதை வைத்துவிட்டு வேறு எதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தோன்றும். மெதுவாகப் படிக்கலாமென்று விட்டுவிடத் தோன்றும்.
ஆனால் ஒரு வண்டியில் வெகு தூரம் செல்லும்போது எதாவது புத்தகங்களை பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று தோன்றுகிறது. மேலும் இரவு நேரங்களில் இதுமாதிரியான வண்டிகளில் பயணம் செய்யும்போது தூக்கம் சிறிது கூட வருவதில்லை. நம் பக்கத்தில் உள்ள பயணிகள் இதுமாதிரியான யாத்திரிகளில் பழக்கமானவர்கள் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அது போராகத் தோன்றுகிறது. அதனால் இந்த முறை இரவு பயணத்தை தவிர்த்துவிட்டு பகல் பயணத்தை ஏற்படுத்திக்கொண்டேன்.
இந்தப் பயணத்தில் போகும்போதும் வரும்போதும் நான் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் படித்துக்கொண்டே போனேன். நான் எடுத்துக்கொண்ட புத்தகங்களைப் படித்துவிட வேண்டுமென்ற துடிப்பும் என்னிடம் இருந்தது.
‘அது ஒரு நோன்புக்காலம்,’ என்ற கதை. சித்திக் அவர்கள் எழுதியது. தினமணி-எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை. 4.3.2018 தினமணிகதிரில் வெளிவந்துள்ளது. வஹிதா மாமிக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு பெண் பிள்ளைகள். ஒரு ஆண் பிள்ளை. மூவரும் வயதான அம்மா வைத்துக்கொள்ள விரும்பவில்லை. விரட்டி விடுகிறார்கள். அக் குடும்பத்தின் நண்பர் ஒருவர் வஹிதா மாமியை அவருடைய பிள்ளைகள் வீட்டில் கொண்டு சேர்க்கப் போராடி தோல்வி அடைகிறார். இதைச் சிக்கலில்லாமல் எழுதியிருக்கிறார் சித்திக். குரான், நபிகள் நாயகம் சொல்வதையெல்லாம் எடுத்துக் கூறியும் அவர்கள் மனம் மாறுவதில்லை. இந்தக் கதையைப் படிக்கும்போது ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு முஸ்லீம் பெரியவரை அவர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஜி எஸ் டி தெருவில் அனாதையாக விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அவர் திரும்பவும் அவருடைய பையன் வீட்டிற்குப் போக விரும்பவில்லை. இது உண்மை சம்பவம்.
இப்படி புத்தகங்கள் பத்திரிகைகள் புரட்டியபடி நானும் மனைவியும் மயிலாடுதுறைக்கு மதியம் போய்ச் சேர்ந்தோம். அடுத்தநாள் அசிக்காடு என்ற கிராமத்தில் உள்ள எங்கள் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றோம். அங்குள்ள வீரன்தான் எங்கள் குல தெய்வம். அப்பா இறந்துபோய் ஒரு வருடம் கழித்து குலதெய்வம் கோயிலுக்குப் போக வேண்டுமென்று போனோம்.
வீரன் பாதத்தில் என் முழுச் சிறுகதைத் தொகுப்பை வைத்து வணங்கினேன். எல்லார் மனதிலும் புகுந்து என் கதைகளைப் படிக்க அருள் புரிவாய் ஆக என்று மனதில் நினைத்து நமஸ்கரித்தேன். வேடிக்கையாகத்தான் வேண்டிக்கொண்டேன். வீரனைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டும். முதலில் வீரன் ஒரு பனை மரத்தின் கீழே கிராமத்தின் எல்லையில் 6 செங்கற்களில் குடியிருந்தார். அதன்பின அவர் அருளால் கோயிலில் குடியிருக்கிறார்.
மயிலாடுதுறையில் இருக்கும்போதுதான் காமதேனு என்ற பத்திரிகையைப் பற்றி கேள்விப்பட்டேன். ஹிந்து பத்திரிகையிலிருந்து வருகிறது. முதலில் முகநூல் வாயிலாக பத்திரிகையைப் பற்றி அறிந்து கொண்டேன். அங்குள்ள கடைகளில் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. கிடைத்தது. உடனே வாங்கியும் விட்டேன். எனக்கு எப்போதும் எதாவது பத்திரிகை புதிதாக வந்தால் அதன் முதல் பத்திரிகையை வாங்கிவிட வேண்டும் என்று தோன்றும். அப்படி வாங்கிய பத்திரிகைகளை நான் தொலைத்தும் விட்டிருக்கிறேன். இந்த முதல் பத்திரிகையை ‘விருட்சம் நூல் நிலையத்தில்’ பத்திரப் படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.
அடுத்தநாள் நான் வைதீஸ்வரன் கோயிலுக்குச் சென்றோம். புதன் கிழமை என்பதால் கோயிலில் கூட்டமே இல்லை. உற்சாகமாக இருந்தது. நான் இருந்த இரண்டு நாட்களில் என் நண்பர் குடும்பமும், உறவினர் குடும்பமும் எங்களை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு என் நன்றியைக் குறிப்பிடுவது அவசியம். வழக்கம்போல் ஒரு நாள் காலை நேரத்தில் ராஜன் தோட்டத்திற்குச் சென்றேன். பெரிய இடமாக இருந்தது. ஒரு முறை சுற்றி வர 20 நிமிடங்கள் பிடித்தது. வழக்கம்போல் சந்திக்கும் இன்ஜினியர் நண்பரைச் சந்தித்தேன். உற்சாகமான மனிதர். தினமும் கிட்டத்தட்ட 2 மணி நேரம்வரை நடப்பது, ஓடுவது என்று பலவிதமான உடற் பயிற்சிகளை செய்துகொண்டிருப்பார்.
மதியம் டே எக்ஸ்பிரஸ் சோழனைப் பிடித்து வந்து கொண்டிருந்தேன். அன்று வியாழக்கிழமை. ஆனந்தவிகடன் பத்திரிகையும் வாங்கிக்கொண்டேன். திரும்பவும் டிரெயினில் வந்து கொண்டிருக்கும்போது கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். நான் விருட்சம் 105வது கொண்டு வரப்போகிறேன். இந்த மாதத்திற்குள் எப்படியாவது முடித்துவிட நினைத்திருக்கிறேன். இந்த முறை விருட்சம் இதழிற்கு ஏகப்பட்ட கதைகள் கவிதைகள் குவிந்திருக்கின்றன. 80 பக்கங்களுக்குள் எல்லாவற்றையும் அடக்க வேண்டும். இது ஒரு சவால். என் பத்திரிகைக்கு பிரபலமான எழுத்தாளர் பிரபலமில்லாத எழுத்தாளர் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. ஆனால் பிரபலமான எழுத்தாளர்கள் என் பத்திரிகையில் எழுதுவதில்லை. சுஜாதா என் பத்திரிகையைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். அவரைப் பார்த்து ஒரு முறை, ‘என் பத்திரிகைக்கு ஒரு கதை எழுதித் தாருங்களேன்,’ என்று கேட்டிருக்கிறேன். அவர் அதைக் காதில் வாங்கிக் கொண்ட மாதிரியே தெரியாது. அவர் எழுதியும் தந்ததில்லை. ஆனால் என் பத்திரிகையைப் பற்றி உயர்வாகவே பேசுவார். அசோகமித்திரன் அப்படி இல்லை. ‘சார் எதாவது எழுதி அனுப்புங்கள்,’ என்பேன். ‘என்ன வேணும்?’ என்று கேட்பார். கதை கேட்டால் கதை. கட்டுரை கேட்டால் கட்டுரை. ஆனால் அவரிடம் நான் கட்டுரைதான் கேட்பேன். அவர் உடனே 2 நாட்களில் எழுதி அனுப்பி விடுவார். பின் அனுப்பி விட்டேன் என்றும் கூறுவார்.
இதை டைப் அடிக்கும்போது என் டேபிளில் ‘எது இலக்கியம்?’ என்று அசோகமித்திரன் 14.12.2008 அன்று எழுதிய கட்டுரை இருக்கிறது. 4 பக்கங்களில் எழுதி அனுப்பியிருக்கிறார். இந்த முறை விருட்சம் சந்தாவைப் புதுப்பிப்பவர்களுக்கும், புதிதாகச் சந்தா அனுப்புவர்களுக்கும் இந்தக் கட்டுரையின் ஜெராக்ûஸ அனுப்ப யோசித்துக்கொண்டிருக்கிறேன். இதை எல்லோரும் வரவேற்பார்களா அதனால் சந்தா அதிகமாகச் சேர்ந்து விடுமா அதெல்லாம் தெரியாது. ஏன் இதுமாதிரியான செய்கை கூட. முட்டாள்தனமாக இருக்கும்.
பா ராகவன், ‘ஆதி வராகம்’ என்ற கதையை எழுதி அனுப்பியிருக்கிறார். விருட்சத்திற்குத்தான் இந்தக் கதை என்று கூறிவிட்டார். அந்தக் கதையை அவ்வளவு சிறப்பாக எழுதி இருக்கிறார். ‘இந்தக் கதையை நீங்கள் வேற பத்திரிகைக்கு அனுப்பினால் அவர்கள் நிச்சயம் பிரசுரம் செய்வார்கள்,’ என்றேன். ‘இல்லை. விருட்சத்திற்குத்தான்,’ என்று கூறிவிட்டார்.
(இன்னும் வரும்)

மயிலாடுதுறைக்குச் சென்று வந்தேன்….பகுதி 1

இந்த முறை நானும் மனைவியும் மயிலாடுதுறைக்கு சோழன் எக்ஸ்பிரஸ் பிடித்துப் போனோம். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் பகல் நேரத்தில் வண்டியில் போவதில் சில சௌகரியங்கள் உண்டு. வெளியே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு போகலாம். பல காட்சிகள் மனதில் நிழலாடும். நமக்குத் தெரியாத வித்தியாசமான மனிதர்களைச் சந்திக்கலாம். பலர் பேச மாட்டார்கள். சிலர் புன்னகை புரிவார்கள்.
நான் ஒவ்வொரு முறையும் பகல் நேரத்தில் போகும்போது புத்தகங்கள், பத்திரிகைகள் எடுத்துக்கொண்டு போய் படிப்பேன். இந்த முறையும் அப்படித்தான்.
முன்பெல்லாம் அதிகமாகக் கையில் எடுத்துக்கொண்டு போய் படிக்காமல் சிலவற்றை எடுத்துக்கொண்டு வந்து விடுவேன். அப்படியெல்லாம் ஆகக் கூடாது என்று எப்படியும் படிக்கத் தீர்மானித்தேன்.
விருட்சம் 105வது இதழுக்கு அனுப்பிய கதைகளையும் பிரிண்ட் செய்து எடுத்துக்கொண்டு போனேன் படிக்க.
முதலில் அந்திமழை மார்ச்சு மாதம் இதழை எடுத்துக்கொண்டு போனேன் (உண்மையில் நான் கிளம்பிய அவசரத்தில் இன்னும் சில பத்திரிகைகளையும் எடுத்துக்கொண்டு போயிருக்கலாம்).
இப் பத்திரிகையில் üவாசனைý என்கிற ஆத்மார்த்தி கதையைப் படித்தேன். ஒரு ஆணை காதல் என்கிற போர்வையில் ஒரு பெண் எப்படி கிறுக்குத்தனமா மயக்கிறாள் என்பதுதான் கதை. அதை ரொம்ப திறமையாக எழுதிக்கொண்டு போகிறார் ஆத்மார்த்தி. இந்தக் காதலால் அவனுக்கு ஏற்படுகிற விபத்து. ஒரு இடத்தில் ஆத்மார்த்தி இப்படி எழுதியிருப்பார் :
‘எனக்கு பானு மேலே கோபம் வர்லை. கோவமே வர்லை. பானுன்னு நினைச்சாலே எனக்குள்ள எழுந்த மஞ்சக்கெழங்கு வாசனையும் அவ உடம்புலேருந்து பவுடரும் வியர்வெயும் கலந்து எழுந்த வாசனையும் என்னால் மறக்கவே முடியலை.’ என்று எழுதியிருப்பார். திறமையாக எழுதப்பட்ட கதை. எல்லோரும் படிக்க வேண்டிய கதை. ஆத்மார்த்தியிடம் ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது. காதலினால் அவதிப்படுவது ஆண்களா பெண்களா என்று. அந்திமழை பத்திரிகையில் காமிரா கண்கள் என்ற தலைப்பில் ஆம்ரே கார்த்திக்கின் புகைப்படம். நிச்சயம் பார்ப்பவர்களுக்குப் பரவசத்தை ஏற்படுத்தும்.
மாரி செல்வராஜ் என்ற இயக்குநரின் பேட்டி என்று இன்னும் பல தகவல்கள் கொண்ட பத்திரிகை. முக்கியமாக திமுகவின் அரசியல் வியூகம் பற்றி பலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பத்திரிகையின் தாளின் தரம் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. எப்படி ரூ.20 க்கு இப் பத்திரிகையைக் கொண்டு வர முடிகிறது என்ற கேள்வியையும் கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது.
இரண்டாவதாக நான் படித்தப் புத்தகம் ‘யானை பார்த்த சிறுவன்\ என்கிற சுந்தரபுத்தன் எழுதிய புத்தகம். முக நூலில் எழுதிய தகவல்களை எல்லாம் திரட்டிப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். புத்தகத்தைப் பிரமாதமான முறையில் அச்சடித்துள்ளார். சின்ன சின்ன தலைப்புகளில் பல தகவல்களைக் குறிப்பிடுகிறார். எதாவது ஒரு பக்கத்தைத் திருப்பி எதாவது ஒரு பகுதியைப் படித்துவிட்டு இந்தப் புத்தகத்தை மூடி விடலாம். பின் இன்னொரு முறை படிக்கலாம். 65ஆம் பக்கத்தில் அப்பர் கரையேறிய குளம் என்ற தலைப்பில் கடலூரில் உள்ள வண்டிப்பாளையம் என்ற ஊரைப் பற்றி எழுதியிருக்கிறார். பெரும்பாலும் பயணங்களைப் பற்றி இப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். நான் முழுவதுமாக இப் புத்தகத்தைப் படிக்கவில்லை. கொஞ்சம் பக்கங்கள் மட்டும்தான் படித்தேன். ஆனால் பத்திரமாக வைத்திருந்து படிக்க வேண்டிய புத்தகம். சங்கமி பதிப்பகம் வெளியிட்ட இப் புத்தகம் விலை ரூ.115தான்.
சமீபத்தில் யாவரும் பப்ளிஷர்ஸ் சில புதியவர்களின் புத்தகங்களைக் கொண்டு வந்திருப்பதாக நண்பர்கள் கூறக் கேள்விப்பட்டேன். பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் போர்ஹேயின கதைகளை முன்னதாகவே வாங்கியிருந்தேன். அப் புத்தகத்தில் ஒரு கதையை மட்டும் படித்திருந்தேன். அதேபோல் யாவரும் பப்ளிஷர்ஸ் புத்தகங்களில் சிலவற்றை டிஸ்கவரி புத்தகச் சாலையில் போய் வாங்கிக்கொண்டு வந்தேன். அதில் சுனில் கிருஷ்ணன் என்பவரின் அம்புப் படுக்கை என்ற புத்தகம். இதில் முதல் கதையை மட்டும்தான் படித்தேன். வாசுதேவன் என்ற பெயரில் எழுதப்பட்ட கதை. இந்த ஒரு கதையே போதும் சுனில் கிருஷ்ணன் எப்படி திறமையாக கதை எழுதத் தெரிந்தவர் என்பதை அறிந்துகொள்ள. இந்த வாசுதேவன் என்ற கதையை ஒருவர் இரண்டு முறையாவது வாசிக்க வேண்டும். ஒரு இடத்தில் இப்படி எழுதியிருக்கிறார் சுனில் : ‘சுவரில் ரமணரும், அரவிந்தரும், இன்னும் இன்ன பிற நவீன குருமார்களும் புகைப்படங்களாக வாசுதேவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.’ கதையின் முழு நாடியை இந்த வரிகள் மூலம் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் சுனில். ரூ.150 விலையுள்ள இப் புத்தகத்தை நீங்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும்.
(இன்னும் வரும்)

ஸ்கூட்டருக்கு மாறிவிட்டேன்……

ஆரம்பத்தில் நான் ஒரு ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்கினேன். அதை வைத்துக்கொண்டு சென்னையில் எல்லா இடங்களுக்கும் சுற்றுவேன். அலட்சியமாக மாம்பலத்திலிருந்து மயிலாப்பூருக்குச் செல்வேன். மயிலாப்பூரில் உள்ள நண்பருக்கு என் மீது ஆச்சரியம். திருவல்லிக்கேணியில் உள்ள இலக்கிய நண்பர்களைப் பார்ப்பேன். உண்மையில் நான் சைக்கிளை ஓட்டிக்கொண்டு செல்வதில்தான் ஆர்வம். இதைச் சாக்காக வைத்துக்கொண்டு அவர்களைப் பார்ப்பேன். என்னால் முடிகிறது என்ற சந்தோஷம். ஒரு முறை என் மனைவியை பின்னால் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு போனேன். ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கிய போது மனைவி கீழே விழுந்து விட்டாள். எனக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது.
சைக்கிள் மோகம் கொஞ்சம் கொஞ்சமாகப் போய் ஒரு லாம்பி ஸ்கூட்டர் வாங்கினேன். உண்மையில் எனக்கு லாம்பி ஸ்கூட்டர் வாங்கப் பிடிக்கவில்லை. அப்போதெல்லாம் பஜாஜ் ஸ்கூட்டர்கள் அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது. வெஸ்பா கூட. அதனால் லாம்பி வாங்கினேன். பல ஆண்டுகள் லாம்பி வண்டியில் பறந்து கொண்டிருந்தேன். ஒரு முறை ஒரு சைக்கிள் எதிரில் வந்த லாம்பியை ஒரு தட்டுத் தட்டியது. அவ்வளவுதான் லாம்பி கோணிக்கொண்டது.
ரொம்ப வருடம் கழித்து ஸ்கூட்டரிலிருந்து விடுதலைப் பெறலாம் என்று தோன்றியது. ஒரு பைக் வாங்கினேன். கவாஸôகி பைக். அதிலிருந்து நான் பைக் வாசியாகிவிட்டேன். பைக் பல விதங்களில் சௌகரியம். உயரமாக இருப்பதால்என் உயரத்திற்கு ஏற்ற மாதிரி பைக் காட்சி அளித்தது. லாம்பியை ஒழித்துக் கட்டிவிட்டு பைக்கில் தாவிக்கொண்டிருந்தேன். பல ஆண்டுகள் ஏன் இப்போது கூட பைக்கில்தான் போய்க் செகாண்டிருக்கிறேன். ரிட்டையர்டு ஆன பிறகு கார் வாங்கி ஓட்டலாமென்று நானோ வண்டியை வாங்கி, அழகு பதுமையாக பத்திரமாக வைத்திருக்கிறேன்.
இப்போது என்னிடம் இரண்டு பைக்குகள் சேர்ந்து விட்டிருந்தன. ஒரு பைக் வாங்கி 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. அதை மாற்றலாம் என்று யோசித்தபோது திரும்பவும் ஸ்கூட்டர் வாங்கினால் என்ன என்று தோன்றியது. பிளஷர் என்ற ஹ÷ரோ ஸ்கூட்டர் வாங்கினேன். எனக்குப் பலமாகச் சந்தேகம். என்னால் ஸ்கூட்டர் ஓட்ட முடியுமா என்று. முதலில் நடு ஸ்டான்டை ஸ்கூட்டரில் போடுவதற்கு சிரமமாக இருக்கிறது. அதனால் சைட் ஸ்டேன்ட்டைத்தான் பயன் படுத்துகிறேன். எனக்கு வயது 64 என்பதால் இந்தச் சந்தேகம். நேற்றுதான் நான் ஸ்கூட்டரை வாங்கி வீட்டில் வைத்துள்ளேன். 20 கிலோ மீட்டர் வேகத்தில் ஸ்கூட்டரை ஓட்டுகிறேன்.
இப்போதெல்லாம் பல சொளகரியங்கள் ஸ்கூட்டர் ஓட்ட இருப்பதைப் பற்றி ஆச்சரியம். கையிலே பிரேக் போடலாம். நம் விருப்பப்படி ஸ்பீடாகவும் ஸ்பிட் குறைவாகம் ஓட்டலாம். ஆனால் இன்னும் தெருவில் வேகமாக ஓட்டப் பழக வேண்டும். பைக் மாதிரி வரவில்லை. மஞ்சள் நிறத்தில் ஸ்கூட்டர் வாஙகியிருக்கிறேன்.
ஆனால் என்னால் இனிமேல் சைக்கிள் வாங்கி ஓட்ட முடியாது. அது வருத்தம்தான்.

சி சு செல்லப்பாவின் இரண்டாவது நாவல்…..

இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் தோன்றும் எனக்குப் புத்தி எதாவது குழம்பிப் போயிருப்பதாக. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. சி சு செல்லப்பா ஒரே ஒரு நாவல்தான் எழுதியிருக்கிறார். எப்படி இரண்டாவது நாவல் எழுதியிருப்பதாகச் சொல்ல முடியும். அவர் எழுதிய ஒரே நாவல் சுதந்திர தாகம் என்றுதான் நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழாமல் இல்லை.
சுதந்திரதாகம் என்ற நாவலை எழுதிய சி சு செல்லப்பா அவர் முயற்சியில் புத்தகமாகவும் கொண்டு வந்து விட்டார். 80 வயதில் அவர் செய்த சாதனையாகத்தான் இதை நான் நினைக்கிறேன். தானே நாவல் எழுதி தானே புத்தகமாகப் பதிப்பித்த துணிச்சல் சி சு செல்லப்பாவைத் தவிர யாருக்கும் வராது. அதாவது அவருடைய 80வது வயதில். தமிழில் எந்த எழுத்தாளராவது இது மாதிரி துணிச்சலாக இருந்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஏன் இந்தியா அளவில் எந்த எழுத்தாளராவது உண்டா? உங்களுக்கு விபரம் தெரிந்தால் குறிப்பிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். சி சு செ முயற்சியில் எத்தனையோ இடர்பாடுகளுக்கிடையே சுதந்திர தாகம் வெளிவந்து விட்டது. அது கொடுத்த தெம்பு இன்னொரு புத்தகத்தையும் சி சு செ கொண்டு வந்து விட்டார். என்ன துணிச்சல் பாருங்கள் அவருக்கு.. 500 பிரதிகள் அடித்து விட்டார். அந்தப் புத்தகம் ஒரு நாவல் என்பதுதான் என் கணிப்பு. அதை நீங்கள் மறுப்பீர்கள். உண்மைதான் நீங்கள் மறுப்பதற்கு எல்லாக் காரணங்களும் உங்களுக்கு இருக்கின்றன.
ஆனால் அந்தப் புத்தகத்தை முதலில் நானும் ஒரு கட்டுரைத் தொகுப்பாகத்தான் பார்த்தேன். கட்டுரைத் தொகுப்பிற்கான எல்லாத் தகுதிகளும் அப் புத்தகத்தில் இருக்கிறது. ஆனால் அது கட்டுரைத் தொகுப்பு இல்லை. இதை ஒரு நாவலாகப் பாருங்கள. சரி என்ன புத்தகம் அது. புத்தகம் பெயரைக் குறிப்பிடாமல் நாவல் என்று குறிப்பிடுகிறீர்களே என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது.
ராமையாவின் சிறுகதை பாணிதான் அந்த நாவலின் பெயர். உங்களுக்கு என் மீது கோபம் வருவதற்கு எல்லாவிதமான காரணமும் இருக்கிறது. நானும் அப்படித்தான் நினைத்தேன். இது ஒரு கட்டுரைத் தொகுப்பு என்று. சி சு செ, ராமையாவின் சிறுகதைளை அலசி உள்ளார் என்றுதான் தோன்றியது. அப்படியும் இப்படியும் புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென்று எனக்குத் தோன்றியது. இது ஒரு நாவல் என்று. தமிழில் வித்தியாசமாக எழுதப்பட்ட நாவல். பல உண்மைச் சம்பவங்களைக் கொண்ட நாவல் என்று.
மேலும் இப் புத்தகத்தைக் கட்டுரைத் தொகுப்பாக அதுவும் ராமையாவின் சிறுகதைகளை அலசுகிற புத்தகமாக நீங்கள் நினைத்தால் அதுவும் உண்மைதான். ஆனால் சி சு செ ராமையாவின் சிறுகதைகளை அணுகியிருக்கிறார் என்றாலும் விமர்சனப் பூர்வமாக அணுகியிருக்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். முன் கதைச் சுருக்கமாக ராமையாவின் 287 கதைகளைக் கொடுத்திருக்கிறார். இந்தப் புத்தகத்தின் பின்னால் ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறார். அதில் ராமையா 304 கதைகள் எழுதியிருப்பதாகக் கூறி உள்ளார். அந்த லிஸ்டில் எந்தந்தக் கதைகள் எந்தந்தப் பத்திரிகைகளில் வெளிவந்தன என்பதும், எந்த ஆண்டு வெளிவந்தது என்ற விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமையாவின் சிறுகதைகளைப் பற்றி கூறும்போது கதையின் தலைப்பைக் கொடுத்து சுருங்கிய வடிவத்தில் கதைகளைக் கூறி உள்ளார். அந்தக் காலத்தில் ராமையாவுடன் கதை சம்பந்தமாக நடத்திய உரையாடலையும் குறிப்பிடுகிறார். ராமையாவின் மீது சி சு செல்லப்பாவிற்கு இருக்கும் அன்பு போல் வேற எந்த எழுத்தாளருக்கும் எந்த எழுத்தாளர் மீதும் அன்பு இருக்குமா என்பது தெரியவில்லை.
ராமையாவின் மீது அளாதியான மதிப்பு சி சு செவுக்கு. ஏன் பக்தி என்று கூட சொல்லலாம்?
ராமையாவின பேட்டியிலிருந்து ஆரம்பமாகிறது இந்தப் புத்தகம். ராமையாவின் சிறுகதைகளைப் பற்றி சொல்லிக்கொண்டு வரும்போது பல உபரி தகவல்களையும் சி சு செ கொடுக்கிறார். ராமையாவின் ஒரு கதையைப் படித்துவிட்டு இது தழுவல் கதை என்பதைக் கண்டு பிடித்து விடுகிறார். ராமையாவிடம் இது குறித்துத் தெரிவிக்கிறார். ராமையாவும் ஒப்புக்கொள்கிறார். புதுமைப்பித்தனும் இதுமாதிரி தழுவல் கதைகளை எழுதியிருப்பதாக் கூறுகிறார் சி சு செ. புதுமைப் பித்தனும் இதை மறுக்கவில்லை என்கிறார் சி சு செ.
இன்னொரு தகவல் க நா சு நடத்திய சந்திரோதயம் என்ற பத்திரிகை நடத்துவதற்கு சி சு செல்லப்பாவும் க நா சுவுக்கு உதவியதாகக் கூறுகிறார். அப் பத்திரிகையை இலக்கியத் தரமாக மாற்ற.
ராமையாவின் சில கதைகளை சாதாரண கதைகள் என்று குறிப்பிடும் சி சு செ இப் புத்தகம் இறுதியில் இப்படி கூறுகிறார் பாரதி மகாகவி என்றால் ராமையா மகா கதைஞன் என்று. 1933ஆம் ஆண்டிலிருந்து கதை எழுத ஆரம்பித்த ராமையா 1971ஆம் ஆண்டு வரை கதைகள் எழுதியிருக்கிறார். இப் புத்தகம் படித்தவுடன் ராமையாவின் எல்லாக் கதைகளையும் படிக்க வேண்டுமென்கிற ஆர்வம் ஏற்படுகிறது. அதற்கான வழி இருக்கிறதா என்பது தெரியவில்லை. சினிமாவிற்கு கதைகள் தேடுபவர்கள் இப் புத்தகத்தைப் படித்தால் ஏகப்பட்ட கதைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. சினிமா துணை இயக்குநர்கள் இப் புத்தகம் வாங்கத் தயரா?
மேலும் இப் புத்தகத்தை நாவலாகத்தான் நான் கருதுகிறேன். 368 பக்கங்கள் கொண்ட இந் நாவலை எந்தப் பக்கத்திலிருந்தும் படிக்கலாம். இப் புத்தகம் தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற வாசிப்பு அனுபவத்தைக் கட்டுடைக்கிறது. இன்று ராமையாவும் இல்லை சி சு செல்லப்பாவும் இல்லை. சி சு செ ராமையாவைப் பற்றி எழுதிய இப் புத்தகம்தான் உள்ளது. 1995ஆம் ஆண்டு வெளிவந்த இப் புத்தகத்தின் விலை ரூ. 125 தான். 500 பிரதிகள் என்பதால் ஏகப்பட்ட பிரதிகள் விற்காமல் இருக்கின்றன. சி சு செ புதல்வர் என்னிடம் விற்கக் கொடுத்திருக்கிறார். படு சுவாரசியமான இப் புத்தகத்தை ரூ.20க்குத் தரத்தயாராக உள்ளேன்.
அவசியம் இப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்.ரூ.20 ஐ என் கணக்கில் செலுத்தினால் இப் புத்தகத்தை உடனே அனுப்பி வைப்பேன்.

நடிகை ஸ்ரீ தேவியின் மரணம்

நடிகை ஸ்ரீ தேவியின் மரணத்தை அறிந்தவுடன் என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. ஸ்ரீதேவி என்ற நடிகை நடித்தப் பல படங்களைப் பார்த்து ரசித்தவன். அவருக்குக் குழந்தைத் தனமான ஒரு முகம். அட்டகாசமான நடிப்புத் திறன் கொண்டவர். படம் பார்த்துவிட்டு வந்தபின்னும் சில தினங்கள் அவர் ஞாபகம் இருந்துகொண்டு இருக்கும். நம்ம் வீட்டில் உள்ள ஒரு பெண்மணி என்று தோன்றும். ரஜனியுடனும் கமல்ஹாசனுடன் அவர் நடித்த 16 வயதினிலே என்ற படத்தை என்னால் மறக்க முடியாது. இப்படி கவர்ச்சிகரமான ஒரு தமிழ் நடிகை மும்பையில் ஹிந்திப் படங்களில் நடிக்கப் போய்விட்டாரே என்று தோன்றும். பின்பு அவர் மும்பையிலேயே திருமணம் செய்துகொண்டு இருந்துவிட்டார் என்ற செய்தி எட்டியபோது, அந்த நடிகையைப் பற்றிய கவனம் சற்று கலைந்து போயிற்று. நேற்று இரவு அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிந்தபோது வருத்தமாக இருந்தது. 54 வயதுதான்.

மாரடைப்பால் ஏற்படும் மரணம் குறித்து என் சிந்தனை குதித்து ஓடிற்று. நான் பந்தநல்லுரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது என் அலுவலகத்தில் பணிபுரியும் காஷ÷யர் ஒருநாள் காலையில் ஒரு மாதிரியாக இருந்தார். கிராமத்தில் மருத்துவரைப் பிடிப்பது என்பது கஷ்டம். ஒரு மருத்துவரைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்தோம். அவர் உடனே காஷ÷யரை கும்பகோணம் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போகும்படி அறிவுரை கூறினார். உடனே கும்பகோணம் கிளம்பினோம். நான்தான் முன்னின்று அவரை அழைத்துக்கொண்டு போனேன். நான் என்ன நினைத்தேன் என்றால் காலையில் அவர் தக்காளி சாதம் சாப்பிட்டதாகச் சொன்னார் என்பதால் அது அவருடைய வயிற்றை ஒரு கலக்கு கலக்குகிறது என்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை. அவருக்கு தீவிர மாரடைப்பு. மருத்துவமனையில் அவரைக் காப்பாற்றி விட்டார்கள்.

அப்போது நான் தனியாக மயிலாடுதுறையில் ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தேன். இதுமாதிரியான சம்பவம் இயற்கையானது. ஆனால் நம் மனம் சஞ்சலம் அடையாமல் இருப்பதில்லை. அதுவும் தனியாக இருக்கும்போது அதி தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்போம். நானும் அப்படித்தான். அப்போதுதான் யோசித்தேன். ஏன் இப்படி குடும்பத்தை விட்டு பதவி உயர்வு என்ற போர்வையில் இப்படி மாட்டிக்கொண்டோம் என்று. கார்லஸ் காஸ்டினேடா ஒரு புத்தகத்தில் கூறுகிறபடி மரணம்தான் ஒருவனுக்கு எதிரி என்ற எண்ணம் எனக்குத் தோன்றிக்கொண்டிருக்கும். அதைத் தயார் நிலையில் எதிர்கொண்டு போராடுவதுதான் முக்கியம் என்று தோன்றும்.

என் நண்பர் சந்தியா நடராஜன் ‘இனி இல்லை மரணபயம்’…என்ற புத்தகத்தை தொகுத்து உள்ளார். அதில் அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைக் குறிப்பிட்டுள்ளார். பலர் கூறிய மரண அனுபவங்களை புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். 120 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை . ரூ.110. அப் புத்தகத்தில் வெளியான ‘கால வரிசையில்’ என்ற தலைப்பில் வெளிவந்த கதையுடன் இதை முடிக்கிறேன்.

‘கால வரிசையில்’

ஜென் துறவி சென்காயைப் பார்க்க ஒரு பணக்காரன் வந்தான். தனக்கு ஒரு அழகிய வாசகமொன்றை அலங்காரமாய் எழுதித் தரவேண்டுமென்று சென்காயிடம் கேட்டான்.

அப்பா மரணம், மகனின் மரணம், பேரனின் மரணம் என்று ஒரு தாளில் எழுதிக் கொடுத்தார் துறவி.

பணக்காரனுக்குக் கோபம் வந்தது. ‘இப்படி ஒரு அமங்கள் மான வாசகத்தையா எழுதித் தருவது. நீர் என்ன துறவி?” என்று சத்தம் போட்டான்.

துறவி சொன்னார்: உனக்கு முன் உனது பிள்ளைகள் இறந்தால் அது எத்தகைய புத்திர சோகம். உனது மகனுக்கு முன் உனது பேரன்கள் இறந்தால் நீ எத்தகைய கொடிய சோகத்திற்கு ஆட்படுவாய். உனது குடும்பத்தினர் ஒரு தலைமுறைக்குப் பின் அடுத்த தலைமுறையினர் என்று காலக் கிரமப்படி இறந்தனர் என்றால் அது நற்பேறு அல்லவா?

‘ஆமாம். அர்த்தம் புரிகிறது’ என்றான் பணக்காரன்.

ஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே.

விருட்சம் கவிதைகள் தொகுதி 1

1988 ஆம் ஆண்டிலிருந்து 1992ஆம் ஆண்டு வரை நவீன விருட்சம் இதழில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு நூல் விருட்சம் கவிதைகள் தொகுதி 1 என்ற பெயரில் வெளியிட்டுள்ளேன். 94 படைப்பாளிகளின தொகுப்பு நூல் இது. புதிதாக கவிதை எழுத விருமபுகிறாவர்கள் அவசியம் இத் தொகுப்பு நூலை வாங்கி வாசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கறேன். 230 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பு நூலின் விலை ரூ.120. ஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே. வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் : 9444113205

எஸ் வைத்தியநாதன் என்பவர் எழுதிய நாற்காலி என்ற கவிதையை வாசிக்கவும்.

வேண்டும் சமயம் சென்றமர்வேன்
புத்தகங்களை வைப்பேன்
உடைகளை வைத்ததுண்டு
உயரமெட்ட உபயோகித்ததுண்டு
காணாதது போல்
இருந்ததும் உண்டு
கிடந்து கட்டிலில் கால் வைத்துக்கொள்வேன்
சமீபத்தில்
நாற்காலியாகிப் போனேன்

ஓர் உரையாடல்

மாதம் ஒருமுறை ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறார் அழகியசிங்கர். உண்மையில் இந்தக் கூட்டத்தின் நோக்கம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் பொதுவாக புத்தகங்களைப் பற்றித்தான் பேச வேண்டும். அவர் வீட்டில் பால்கனியில் காத்துக்கொண்டிருக்கிறார். வழக்கம்போல் அவரைப் பார்க்க ஜெகனும், மோகினியும் வருகிறார்கள்.
காலிங் பெல்லை அடித்துவிட்டு வாசலில் நிற்கிறார்கள். “வாருங்கள் வாருங்கள்..” என்று வரவேற்கிறார் அழகியசிங்கர்.

மூவரும் ஒரு அறையில் உட்கார்ந்து பேச ஆரம்பிக்கிறார்கள்.

மோகினி : உங்கள் மனைவி எங்கே?

அழகியசிங்கர் : பெண் வீட்டிற்குப் போயிருக்கிறாள்.

ஜெகன் : கமல்ஹாசன் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கிறாரே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்?

அழகியசிங்கர் : இந்த அரசியலே எனக்குப் புரியவில்லை. மதுரையில் நடந்த கூட்டத்தைப் பார்த்தால், இந்தக் கூட்டத்திற்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும்? இதெல்லாம் யார் கொடுத்திருப்பார்கள் என்றெல்லாம் தெரியவில்லை.

மோகினி : நீங்கள் நடத்திற இலக்கியக் கூட்டம் என்று நினைத்தீரா?

அழகியசிங்கர் : நான் நடத்தும் இலக்கியக் கூட்டத்திற்கு 20 பேர்கள் கூட வருவதில்லை. ஆனால் என் கூட்டம் ஏற்படுத்தும் அமைதியை கமல்ஹாசன் கூட்டத்தில் காண முடியுமா என்பது தெரியவில்லை.

ஜெகன் : அரசியல் வேண்டுமா வேண்டாமா? நீங்கள் சொல்லுங்கள்.

அழகியசிங்கர் : மக்களுடைய பிரச்சினையை யார் தீர்ப்பார்கள்? அல்லது தீர்க்கத்தான் முடியுமா? இதற்கெல்லாம் விடை தெரியவில்லை.

மோகினி : எந்தத் துயரம் ஏற்பட்டாலும் தமிழ் மக்களைப் போன்ற பொறுமைசாலிகளை எங்கும் காண முடியாது.

ஜெகன் : என்ன புத்தகம் கையில் வைத்திருக்கிறீர்கள்?

அழகியசிங்கர் : MARGINAL MAN என்கிற சாருநிவேதிதாவின் ஆங்கிலப் புத்தகத்தை வைத்திருக்கிறேன்.

ஜெகன் : ஒரு வினாடி கொடுங்கள். பார்த்துவிட்டுத் தருகிறேன்.
(அழகியசிங்கரிடமிருந்து புத்தகத்தை வாங்கிக் கொண்டு பார்க்கிறார்)

ஜெகன் : என்னால் நம்ப முடியவில்லை.

அழகியசிங்கர் : என்ன நம்ப முடியவில்லை

ஜெகன் : இந்தப் புத்தகம்.

மோகினி : ஆமாம். ஒரு ஆங்கில புத்தகம் போலவே இருக்கிறது.

அழகியசிங்கர் : ஆமாம். புத்தகக் கண்காட்சியின் போது என் இலக்கிய நண்பர் ஒருவர், இந்தப் புத்தகத்தைப் பார்த்துவிட்டு சிலாகித்துப் பேசிக்கொண்டே இருந்தார்.

ஜெகன் : Zero Degree Publishing தான் இந்தப் புத்தகத்தைத் தயாரித்துள்ளார்கள்.

மோகினி : தமிழிலிருந்து வெளிவரும் எத்தனையோ ஆங்கிலப் புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றைப் பார்த்தால் ஒரு ஆங்கிலப் புத்தகம் பார்க்கிற உணர்வே ஏற்படாது.

ஜெகன் : உண்மைதான். நான் ஒரு சமயம் திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வாட்டர் என்ற அசோகமித்திரன் புத்தகத்தைப் பார்த்துவிட்டு பதறி விட்டேன். இரண்டு மூன்று வாங்கி வைத்துக்கொண்டேன்.

அழகியசிங்கர் : அசோகமித்திரனிடம் சொன்னீர்களா?

ஜெகன் : சொன்னேன். அவர் ‘எனக்கு ஒரு பிரதி வாங்கிக்கொண்டு வாருங்கள்,’ என்றார். வாங்கிக்கொண்டு போய்க் கொடுத்தேன்.

அழகியசிங்கர் : ஏன் அங்கு வந்தது என்று தெரியுமா?

ஜெகன் : தெரியாது.

மோகினி : சரி நீங்கள் சாருவின் ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தீர்களா?

அழகியசிங்கர் : இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் கொஞ்சம் கொஞ்சம் புரட்டிப் பார்த்தேன். தமிழில் அவர் புத்தகம் படிப்பதற்கு எப்படி இருந்ததோ அப்படியே ஆங்கிலத்திலும் இருந்தது.

ஜெகன் : தமிழில் என்ன புத்தகம் இது.

அழகியசிங்கர் : புதிய எக்ûஸல் என்ற நாவல்தான் என்று சாரு என்னிடம் கூறினார்.

மோகினி : அவர் எழுத்தில் ஒரு வசீகரம் இருக்கிறது. படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியாது.

அழகியசிங்கர் : நான் கூட ராச லீலா என்ற அவருடைய நாவலைப் படிப்பதற்குப் பதில் புதிய எக்ûஸல் என்ற நாவலைப் முதலில் படித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

ஜெகன் : இப்போது படித்துக் கொண்டு இருக்கிறீர்களா?

அழகியசிங்கர்: ஆமாம். இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். முன்பு இப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். பின் எங்கோ வைத்துவிட்டேன். அப்போது ஒரே சமயத்தில் பல புத்தகங்களைப் படிக்க வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தேன். ஆனால் ஒன்றையும் உருப்படியாகப் படிக்க முடியவில்லை.

மோகினி : நாம் பேசும்போது ஒரு புத்தகத்தைப் படித்தாலும் படிக்காவிட்டாலும் பேசிக்கொண்டிருப்போமா?

அழகியசிங்கர் : ஆமாம். நாம் ஒரு புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டுத்தான் பேச வேண்டுமென்பதில்லை. ஒரு புத்தகத்தின் சில பகுதிகளைப் பற்றிப் பேசுவோம். திரும்பவும் பின்னால் இன்னும் கொஞ்சம் படித்து முடித்த விட்டப் பிறகு அந்தப் புத்தகத்தைப் பற்றி திரும்பவும் பேசுவோம்.

ஜெகன் : புத்தகங்களில் காணப்படும் சுவாரசியங்கள்தான் நம் பேச்சில் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

மோகினி : இன்றைய சூழ்நிலையில் நாம் ஒரே புத்தகத்தை முழுவதும் படித்து முடித்துவிட முடியும் என்று தோன்றவில்லை.

அழகியசிங்கர் : அன்று சந்தியா பதிப்பகம் போய் பாரதி விஜயம் என்ற புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்தேன். அப் புத்தகத்தை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். படிக்கவில்லை. பின் ஒருநாள் அந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டி ஒரு இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். அது ஒரு நல்ல அனுபவமாக எனக்குப் பட்டது.

மோகினி : என்ன படித்தீர்கள்?

அழகியசிங்கர் : ரிக்ஷாகாரனின் துன்பத்தைப் பார்த்து தான் வாங்கிவந்த ஐம்பது ரூபாய் சம்பளத்தை பாரதியார் கொடுத்து விடுகிறார். அந்தப் பணத்தை நம்பியிருந்த பாரதி மனைவிக்கு வருத்தம். அந்த வருத்தத்தை பாரதியின் நண்பரிடம் தெரிவிக்கிறார். அந்த நண்பர் ரிக்ஷாகாரனைப் பார்த்துப் பேசி ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு மீதிப் பணத்தை வாங்கிக்கொண்டு பாரதியின் மனைவியிடம் கொடுக்கிறார்.

ஜெகன் : நாம் இப்படிப் பேசிக்கொண்டே போனால் பொழுது போவதே தெரிவதில்லை. நான் காப்பிப் பொடி வாங்கிக்கொண்டு வீட்டிற்குப் போக வேண்டும்.

மோகினி : நானும்தான்.

அழகியசிங்கர் : நானும் தபால் அலுவலகம் போக வேண்டும்.
(ஜெகனும், மோகினியும் அழகியசிங்கர் வீட்டை விட்டுப் போகிறார்கள்)

மூன்றாவது சனிக்கிழமை நடந்த கு அழகிரிசாமியும் நானும் என்ற கூட்டம்

இது வரை 8 கூட்டங்கள் நடத்தி உள்ளேன். முதலில் தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் திரூப்பூர் கிருஷ்ணன் தலமையில் ஜøன் மாதம் 2017 ஆண்டு இக் கூட்டத்தைத் துவக்கினேன். திருப்பூர் கிருஷ்ணன்தான் இதுமாதிரியான தலைப்பைத் தேர்ந்தெடுத்தார். அதிலிருந்து ஒவ்வொரு எழுத்தாளரைக் குறித்தும் கூட்டங்களை நடத்தி வருகிறேன். இதுவரை நடந்த கூட்டங்கள் ஒவ்வொன்றும் எனக்குத் திருப்தியை அளித்து உள்ளன. எல்லாவற்றையும் ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்துகொண்டு வருகிறேன்.

போன மாதம் தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ராகஷ் பற்றி பேசினார். இதோ இந்த மாதம் 17ஆம் தேதி கல்யாணராமன் (பேராசிரியர்) கு அழகிரிசாமியைப் பற்றி..

இக் கூட்டங்களில் இரண்டு விதமான போக்குகளை நான் காண்கிறேன். ஒன்று : ஒரு எழுத்தாளரை நன்கு அறிந்துகொண்டு அவருடன் பழகிய நட்புடன் அவர் படைப்புகளைக் குறித்தும், அவரைக் குறித்தும் பேசுவது. இன்னொரு போக்கு அந்த எழுத்தாளரையே தெரியாமல் அவர் படைப்புகளை மட்டும் படித்துவிட்டுப் பேசுவது. கல்யாரணராமன் அழகிரிசாமியின் கதைகளை மட்டும் படித்துவிட்டுப் பேசினார். அந்தக் கதைகளை முழுக்க முழுக்கப் படித்துவிட்டு ஞாபகத்திலிருந்து அக் கதைகளின் பெருமைகளைப் பற்றி பேசினார்.

நான் கொடுத்த ஒரு மணி நேரம் அவர் பேசுவதற்குப் போதாது என்று எனக்குத் தோன்றியது. மேலும் அவர் ஒரு கதையை எடுத்தே ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசுவார் என்று தோன்றியது. இக் கூட்டத்தில் பேசியதை கூடிய விரைவில் வீடியோவில் பதிவு செய்ததை வெளியிடுகிறேன்.