இரு நிகழ்வுகள்

சமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகளைக் குறித்து சொல்வதுதான் என் நோக்கம். படிப்பவருக்கு இரு நிகழ்வுகளும் சாதாரணமாகத் தோன்றக் கூடும்.
ஒவ்வொரு மாதம் மூன்றாவது சனிக்கிழமை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்துகிறேன். ஒரு படைப்பாளியின் மேன்மையைப் பற்றி இன்னொரு படைப்பாளி அல்லது வாசகர் பேசுவதுபோல்.
இந்த முறை கு ப ராஜகோபலன் என்ற படைப்பாளியைப் பற்றி சாருநிவேதிதா உரை நிகழ்த்தியதை நீங்கள் அறிவீர்கள். தி ஜானகிராமனை வைத்து ஆரம்பித்த இந்தக்கூட்டங்களில் எல்லோரும் சிறப்பாகவே உரை நிகழ்த்துகிறார்கள்.
இன்னொரு கண்ணோட்த்துடனும் இக் கூட்டங்களை அணுக வேண்டும். நாம் இந்தக் கூட்டங்களில் பேசுவதைக் கேட்டபிறகு அந்தப் படைப்பாளிகளின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. இது முக்கியம் என்று எனக்குப் படுகிறது.
சாருநிவேதிதா கு ப ரா என்ற எழுத்தாளர் பற்றி பேசியதைக் கேட்டபோது, கு ப ரா என்ற படைப்பாளியின் படைப்புகளை உடனே எடுத்துப் படிக்க வேண்டுமென்ற ஆவேசம் என்னுள் உண்டாகியது. இது பேசுபவரின் வெற்றியாக நான் கருதுகிறேன். இக் கூட்டத்தில் சிறப்பாக உரை நிகழ்த்திய சாரு நிவேதிதாவிற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாசகர் வட்டம் தயாரித்த சிறிது வெளிச்சம் என்ற புத்தகம் நான் பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிப் படித்திருக்கிறேன். ஒரு வாசகனாகப் படிக்கும்போது நம் மனதில் புத்தகத்தின் அருமை பெருமைகள் எல்லாம் தெரியாமல் போய்விடும். எந்தப் புத்தகமாக இருந்தாலும் ஒரு புத்தகத்தை மனமுவந்து படிக்க வேண்டும். நாம் படிக்கும்போது அவசரம் காட்டக் கூடாது. சிறிது வெளிச்சம் புத்தகத்தைப் படிக்கும்போது அதுமாதிரி அப்போது அணுகவில்லை என்று நினைக்கிறேன்.
சாரு உரை நிகழ்த்துகிறார் என்ற போது நான் அந்தப் புத்தகத்தைத் திரும்பவும் எடுத்து வைத்துக்கொண்டேன். அதேபோல் இன்னொரு புத்தகம் அல்லயன்ஸ் கு ப ராவின் நூற்றாண்டு விழாவை ஒட்டிக் கொண்டு வந்தது. இதை வாங்கி வைத்ததோடு சரி. தொடக்கூட இல்லை. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் வைத்திருந்த புத்தகத்தை சாரு நிவேதிதா பேசியதைக் கேட்டவுடன், தூசி தட்டி எடுத்துப் படிக்க ஆரம்பித்துள்ளேன். குறிப்பாக இரண்டு கிழவர்கள் என்ற கதையைத்தான் படித்து முடித்தேன். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இப்படி யாராவது தூண்டினால்தான் நாம் புத்தகத்தை எடுத்துப் படிப்போம் என்று தோன்றுகிறது. ஆனால் இது சரியான நிலை இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. நம்மைச் சுற்றி உள்ள எழுத்தாளர்களின் கதைகளை மனமுவந்து நாம் படிப்பதோடு அல்லாமல் நாம் மற்றவர்கள் அறிய அந்த எழுத்தாளர்களைப் பற்றி புகழ்ந்து சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.
ஆனால் இது இயல்பாக அமைய வேண்டும். இல்லாவிட்டால் கேட்பவர்களுக்கு அபத்தமாகக் கூடப் போய்விடும்.
*************
இன்று உலகப் புத்தகத் தினம். நேற்று என் நண்பர் ஒருவர் பேசும்போது, ஷேக்ஸ்பியரின் பிறந்த தினத்தைத்தான் உலகப் புத்தகத் தினமாகக் கொண்டாடுகிறோம் என்று சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக ஏன் உலகப் புத்தகத் தினம் வந்தது என்று ஆராய்ச்சிச் செய்கிற குணம் என்னிடம் ரொம்பவும் குறைவு.
ராகவன் காலனி மூன்றாவது தெருவில் உள்ள கிளை நூலகத்தின் வாசலில் நான் விருட்சம் புத்தகங்களைக் கெசாண்டு வந்து வைத்த0ருக்கிறேன். 40 சதவீதம் தள்ளுபடியில் விற்கத் தயாராகிவிட்டேன். நேற்று இரண்டு டேபிள்களை நூல்நிலையத்திலிருந்து எடுத்துக்கொண்டு வந்து வாசலில் வைத்துக்கொண்டு புத்தகங்களை முழுவதும் பரப்பிக்கொண்டேன். எப்போதும் என் மீது அன்புகொண்டு உதவி செய்கிற நண்பர்கள் உதவி செய்தார்கள்.
வெளியே இப்படி உட்கார்ந்து புத்தகம் விற்பது புதிய அனுபவமாக எனக்குப் பட்டது. முக்கியமாகக்ட காற்று. அப்படியொரு காற்றை என் வாழ்க்கையில் ரொம்ப நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் அனுபவிப்பதாகத் தோன்றுகிறது. நாம் எல்லோரும் செயற்கைக் காற்றில்தான் நம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அதன்பின் மரங்களின் நிழல். நிசப்பதமான தெரு.
இந்தக் கிளை நூலகத்தில் பலர் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நூலகத்திற்கு எதிரில் அடுக்கத்தில் குடியிருப்பவர்கள், படிக்கிறப் பாதகமான செயலை செய்ய வேண்டாமென்று இந்த நூல் நிலையத்திற்கு வருவதே இல்லை என்று தோன்றுகிறது. என் அலுவலகத்தில் பல ஆண்டுகளாகப் பணி புரிந்த நண்பரின் வீடு ஒன்று எதிரில்தான் இருக்கிறது. அவரைப் போனில் கூப்பிட்டேன். ஏதோ ஒரு தருணத்தில் வருவார் என்று எதிர்பார்த்தேன். வரவே இல்லை. நான் என் புத்தகங்களை அவர் தலையில் கட்டிவிடுவேன் என்று யோசிக்கிறாரா என்று என் எண்ணத்தைத் தாறுமாறாக ஓட விட்டேன்.
ஆனால் எனக்குத் தனிப்பட்ட முறையில் இது பயனுள்ள ஒன்றாகத் தோன்றியது. கு ப ராவின் இரண்டு கிழவர்கள் கதையை நிதானமாகப் படித்து முடித்தேன். காற்று வீச வீச கொஞ்சம் தூங்கினேன். முக நூல் படித்து சில நண்பர்கள் புத்தகங்கள் வாங்கினார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி. ஒரு வேன் ஓட்டுபவர் ஆர்வத்துடன் புத்தகம் வாங்கிக்கொண்டு சென்றது நெகிழ்ச்சியாக இருந்தது. மரத்திலிருந்த இறங்கிய கறுப்பு எறும்புகள் என் உடலில் ஊறி முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தன. நல்ல அனுபவம்.

அடடா என்று சொல்லிக்கொண்டேன்….

ஓராண்டுக்கு முன்னால் மா அரங்கநாதன் என்ற படைப்பாளி இறந்து விட்டார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. சிலரைப் பார்க்கும்போது நோயின் உபாதையில் நெளிந்துகொண்டிருப்பவராகத் தோற்றம் தருவார்கள். பேசும்போது உடல் உபாதையைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் மா அரங்கநாதன் வித்தியாசமானவர். பலமுறை அவர் என்னுடன் தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருப்பார். ஒருமுறை கூட உடல்நிலை சரியில்லை என்று சொன்னதில்லை. முதுமையில் அவர் கம்பீரமாக நடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன்.
மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறி நான் பீச் ரயில்வே ஸ்டேஷனலில் இறங்கி எதிரில் உள்ள தேசிய வங்கிக்குச் செல்வேன். மின்சார வண்டியில் பயணம் செய்யும்போது மா அரங்கநாதனும் மின்சார வண்டியில் பயணம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அதுமாதிரியான தருணங்களில் நானும் அவரும் உரையாடிக்கொண்டிருப்போம். அவர் முன்றில் என்ற பத்திரிகைக் கொண்டு வந்துகொண்டிருந்தார். நான் விருட்சம் என்ற பத்திரிகைக் கொண்டு வந்துகொண்டிருந்தேன். கிட்டத்தட்ட முன்றிலும் விருட்சமும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒரே அச்சு. ஆதிமூலம் லட்டரிங். முன்றில் வந்தவுடன் விருட்சம் வந்துவிடும். ஒரே அச்சகத்தில் இரண்டும் அச்சிடப்படும். பத்திரிகைகளின் உள்ளே வித்தியாசமான பக்கங்கள்.
மா அரங்கநாதன் அரசின் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் தி நகரில் ஒரு இடத்தில் முன்றில் என்ற பெயரில் புத்தகம்/பத்திரிகை விற்கும் கடை ஒன்றை ஆரம்பித்தார். அந்த இடத்தில் எல்லோரும் சந்திப்போம். தூய வெண்ணிற ஆடைகளுடன் மா அரங்கநாதன் காட்சி அளிப்பார். நான் பல எழுத்தாளர்களை கோபப்பட்டுப் பார்த்திருக்கிறேன். ஆனால் மா அரங்கநாதனை நான் அப்படிப் பார்த்ததில்லை. அந்தக் கடை வைத்திருந்ததால் பெரிய லாபமே வராது. ஆனால் புத்தகங்கள் பத்திரிகைகள் விற்று ஒழுங்காகப் பணம் கிடைத்துவிடும். இப்படி பலமுறை பல சந்தர்ப்பங்களில் பார்த்துப் பேசியிருக்கிறேன். கடைசியாக அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தடம் பத்திரிகையில் அவரைப் பற்றி பேட்டி ஒன்று வந்திருந்தது. அது குறித்து நான் சொன்னபோது அவருக்கு அது தெரியவில்லை. அந்தப் பத்திரிகை பாண்டிச்சேரி போய்ச் சேர்வதற்கு முன்னரே நான் குறிப்பிட்டிருந்தேன். ஒரு சிறுவனின் குதூகலத்துடன் அவர் அந்தப் பேட்டியைப் பற்றி என்னிடம் விஜாரித்துக்கொண்டிருந்தார்.
இன்று திரிசடை என்ற கவிஞரின் கவிதைப் புத்தகத்தைத் தேடிக்கொண்டு விருட்சம் நூலகத்திற்கு வந்தேன். நான் கிட்டத்தட்ட 400 கவிதைப் புத்தகங்களை என் நூலகத்தில் சேகரித்து வைத்திருக்கிறேன். ஏன் 500 கூட இருக்கும்.
நான் புத்தகம் வைத்திருக்கும் ஸ்டீல் அலமாரியின் அடித்தட்டில் ஒரு புத்தகம் எதிர்பாராத விதமாக என் கண்ணில் பட்டது. ‘மா அரங்கநாதன் படைப்புகள்’ என்ற புத்தகம்தான் அது. அதைப் பார்த்தவுடன் அடடா என்று தோன்றியது. என்னமோ அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சிறுகதையை மா அரங்கநாதன் ஞாபகமாய்ப் படிக்க வேண்டுமென்று தோன்றியது. வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்தேன். 1021 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது.
அந்தக் காலத்தில் சிறு பத்திரிகையில் ஒரு கதை வந்தால் பெரும்பாலும் யாருக்கும் தெரியாமல் இருக்கும். அப்படியே வந்தாலும் படிப்பவர்கள் யார் என்றும் தெரியாது. அப்படியே படிப்பவர்கள் இருந்தாலும், வாய்திறந்து எழுதுபவரைப் பாராட்டவும் மாட்டார்கள். இப்படித்தான் மா அரங்கநாதன் கதைகள் பல வந்திருக்கின்றன. ஆனாலும் அவர் ஓரளவு எல்லோருக்கும் தெரிந்த எழுத்தாளர்தான்.
அவர் மொத்தப் படைப்புகள் அடங்கிய இத் தொகுதியில் அவருடைய ‘எறும்பு’ என்ற சிறுகதையைப் படித்தேன். படிக்க ஆரம்பிக்கும்போது எறும்பு பற்றி என்ன கதை எழுதியிருக்க முடியும் என்று யோசித்துத்தான் படித்தேன். ஒரு எறும்பு எளிதாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்வதைப் பற்றிய கதையா? அதாவது எறும்பு இன்னொரு இடத்திற்குப் போனாலும் அங்குள்ள எறும்பு கூட்டத்துடன் எளிதாகக் கலந்துகொண்டு விடுவதாக எழுதி உள்ளார். காலம் காலமாக பயன்படுத்தப்படும் பழமொழிகளின் அபத்தங்களைப் பற்றியும் கதை சொல்கிறது. பின் இக் கதை சொல்லி நெல்லையிலிருந்து ரயில் பயணம் தொடங்கி பட்டிணம் போகிற அவதியை வெளிப்படுத்துகிறான். அங்கு சில நாட்கள் தங்கி விட்டுத் திரும்பவும் ஊருக்குக் கிளம்புகிறான். அங்குள்ள எறும்பு ஒன்று அவன் வேட்டியில் ஏறி இருந்தது என்று முடிக்கிறார்.
இந்தக் கதையில் ஒரு வரி வருகிறது.
‘குறிஞ்சி நிலம் ஏற்பட்டு விவசாயம் மலராத காலத்திலேயே தோன்றிய அந்த மொழியில் அவன் பேசி பதிலையும் பெற்றாலும் புரியாத நிலை. அப்போதே தோன்றி மறைந்தது அந்த வெறுப்பு.’ என்று முடிக்கிறார். இந்தக் கதையை முடிக்கும்போது, இது எறும்பைப் பற்றிய கதையா அல்லது எறும்பை முன்னிறுத்திக் கதை சொல்லியின் கதையா என்பது யோசிக்க வேண்டி உள்ளது. வழக்கம்போல மா அரங்கநாதனின் நுணுக்கம் மிகுந்த கதை.
இன்னொரு இடத்தில் ஆசிரியர் கூற்று வெளிப்படுகிறது. ‘பிறபொக்கும் எல்லாம் உயிர்க்கும் சொன்னவரா மனுதர்ம சாத்திரப்படி நிற்க என்று சொல்லுவார். வேடிக்கைதான். இது பரிமேலழகர் அருளிச் செய்த உரை. அவர் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர். நிற்க.’
மா அரங்கநாதன் நினைவாக அவர் பெயரில் ஒவ்வொரு வருடமும் பரிசு வழங்க உள்ளனர் அவர் குடும்பத்தினர். இந்த ஆண்டு பரிசு பெறும் எஸ். சண்முகத்திற்கும், கவிஞர் ரவி சுப்பிரமணியத்திற்கும் என் வாழ்த்துகள்.
எப்படி எறும்பு வேட்டியில் ஒட்டிக்கொண்டதோ அதேபோல் என் நினைவில் மா அரங்கநாதனின் கதையும் ஒட்டிக்கொண்டு என்னைத் திரும்பத் திரும்ப படிக்க வைத்துவிட்டது. அடடா என்று சொல்லாமல் என்ன சொல்வது.

உளம் எனும் குமிழி என்ற கவிதைத் தொகுதியைப் பற்றி

üநீங்களும் படிக்கலாம்,ý என்ற தலைப்பில் நான் ஒரு புத்தகம் கொண்டு வந்தேன். 21 புத்தகங்களைப் படித்து என் மனதில் என்ன தோன்றியதோ அதை எழுதியிருந்தேன். கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் படித்திருந்தேன். இந்தப் புத்தகத்தை அசோகமித்திரனிடம் கொடுத்தேன். இதைப் படித்து அவர் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ‘ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு என்ன எழுதுவது என்பது சாதாரண விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. சிலசமயம் என்ன எழுதுவது என்றுகூடத் தோன்றாது. நீங்கள் சுலபமாக எழுதி விடுகிறீர்கள்,’ என்று அவர் குறிப்பிட்டார். உண்மையில் என்னாலும் சுலபமாக எழுத முடிவதில்லை. ஒருசில புத்தகங்களைப் பலமுறை படித்தப்பிறகுதான் எழுதுவது குறித்து தெளிவு ஏற்படுகிறது.

அதுமாதிரி சவாலான புத்தகம் முபீன் சாதிகாவின் üஉளம் எனும் குமிழிý என்ற தொகுப்பு. தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. இப் புத்தகம் படித்தபிறகும் என்ன எழுதுவது என்ற குழப்பம் எனக்கு இருக்கத்தான் செய்தது. புத்தக அறிமுக நிகழ்வில், அமிர்தம் சூர்யாவும், சண்முக விமல்குமாரும் என்ன சொல்ல போகிறார்கள் என்று யோசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அமிர்தம் சூர்யா ஒரு நண்டை ரசித்துச் சாப்பிடுவதுபோல் முபீன் கவிதைகளைப் படித்து உணரலாம் என்று குறிப்பிட்டது எனக்கு வேடிக்கையாகப் பட்டது. விமல்குமார் கட்டுரையாக வாசித்ததால் சரியாக கவனிக்க முடியவில்லை.

முபீன் அவருடைய கவிதைகளைப் பற்றிப் பேசும்போது மனதிலிருந்து ஒரு குறிப்பிட்ட நோக்கமின்றி தன்னிச்சையாக எழுதப்பட்ட கவிதைகள் என்கிறார். பொதுவாகக் கவிதைகள் எந்த நோக்கமுமின்றிதான் எழுதப்படுகின்றன. ஆனால் ஒருசிலர் மனதிலேயே ஒரு கவிதையை உருவாக்கி அதைக் கவிதையாக மாற்றுகிறார்கள். ஒரு சிலரிடம் கவிதை எழுதிக்கொண்டிருக்கும்போது எதாவது நோக்கம் ஏற்பட்டு விடும். நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கின பிறகு எப்படி கவிதை ஒவ்வொருவருக்கும் உருவாகிறது என்பது குறித்து யோசித்துக்கொண்டே இருந்தேன். எனக்கும் கவிதை ஒரு புரிபடாத ஒன்றாகத் தோன்றுகிறது.

பொருளும் பொருளற்ற நிலையும் கவிதைக்குரிய அம்சங்களாகத் தோன்றுகிறது என்கிறார் முபீன். யாராவது இவரது கவிதைகளை அர்த்தப்படுத்திச் சொன்னால், அதை நிராகரித்தும் விடுகிறார். ‘நீங்கள் சொல்கிற அர்த்தம் எனக்குச் சம்பந்தமில்லை,’ என்கிறார்.

இவருடைய கவிதைத் தொகுப்பில் ஒவ்வொரு கவிதைக்கும் தலைப்பு இருக்கிறது. மொத்தம் 105 கவிதைகளைப் பதிவு செய்திருக்கிறார்.
நான் கல்லூரி படிக்கும்போது நண்பன் ஒருவனின் வீட்டிற்குச் செல்வேன். நண்பனின் தாயார் முருகனைப் பற்றி எழுதிய பாடல்களை என்னிடம் காட்டுவார். அவர் முறையாகத் தமிழ் படித்தவர் இல்லை. “எப்படி இது மாதிரியான பாடல்கள் சாத்தியம்?” என்று அப்போது கேட்டிருக்கிறேன். “மனதில் முருகன் அருளால் உருவாகிறது,” என்று சொன்னதாக ஞாபகம். உண்மையில் தமிழ்நாட்டில் ஒரு ஊரில் இருக்கும் முருகன் கோயிலைப் பற்றியும், முருகனைப் பற்றியும் பாடல்கள் எழுதியிருந்தார். அவர் அந்தக் கோயிலிக்கே போகாமல் இதையெல்லாம் மனதிலிருந்து எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டார். என்னால் உண்மையில் நம்ப முடியாமல் இருந்தது. முபீனும் அப்படித்தான் நம்ப முடியாமல் கவிதை எழுதுகிறாரோ என்று தோன்றுகிறது.

பக்கம் 45ல் உள்ள ‘வேள்விக்களம்’ என்ற கவிதையைப் பார்ப்போம். அதில் கடைசிப் பாராவை பார்ப்போம்.

பிண்டமாய் பொதியும் சக்கை
அண்டத்தில் வதியும் சங்கை
கண்டத்தில் பதியும் திக்கை
தண்டத்தில் சதையும் ஆக்கை.

இக் கவிதை வரிகளைப் படிக்கும்போது கவிதைக்கும் இறை உணர்வுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. கவிதை எழுதுபவருக்கே புரிந்துகொள்ள முடியாத ஆச்சரிய உணர்வை கவிதை உண்டாக்கியிருக்கும். முபீன் கவிதைகளைப் படிக்கும்போது திருமூலர், குன்னக்குடி மஸ்தான் சாகீப் அவர் உருவில் வந்து கவிதை எழுதுகிறாரோ என்று தோன்றுகிறது.

உளம் எனும் குமிழி – கவிதைகள் – முபீன் சாதிகா – அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41 கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை 600 011 – அலைபேசி : 9444640986 – மொத்தப் பக்கங்கள் : 176 – விலை : ரூ.150

இரண்டு வித்தியாசமான கவிதைத் தொகுப்புகள் – 1

நேற்று (07.04.2018) எழும்பூரில் உள்ள இக்சா அரங்கத்தில் இரண்டு கவிதைத் தொகுதிகளின் அறிமுக நிகழ்வு. ஒன்று எஸ் சண்முகம் அவர்களின் ‘ஈர்ப்பின் பெருமலர்’ என்ற கவிதைத் தொகுப்பு. இன்னொன்று கவிஞர் முபின் சாதிகா எழுதிய ‘உளம் எனும் குமிழி’ என்ற தொகுப்பு.

இந்த இரண்டு தொகுதிகளையும் வாசிக்கிறவர்களுக்கு ஒரு ஒற்றுமை இந்தத் தொகுதிகள் மூலம் தெரியவரும். அதாவது கவிதைத் தொகுதியைப் படிக்கும் வாசகர்கள் கவிதைத் தொகுதியைப் புரியவில்லை என்று சொல்லலாமா கூடாதா என்ற கேள்விதான்.

அப்படி ஒரு வாதத்தின் அடிப்படையில் இத் தொகுதிகளை அணுகக் கூடாது என்ற நிபந்தனை முன்வைத்துத்தான் இத தொகுதிகளைப் படிக்க வேண்டும். சண்முகம் கவிதைகளை நான் ‘பொம்மை அறை’ என்ற தொகுப்பின் மூலம் அறிவேன். அப்போது அத் தொகுதியைப் படித்தபோது அது குறித்து எதாவது விமர்சனம் எழுத வேண்டுமென்று எழுதினேன். ஆனால் அவர் கவிதைகளை முழுவதும் புரிந்துகொண்டுதான் எழுதினேனா என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் எழுதியதாக ஞாபகத்திற்கு வருகிறது அத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஒரு கவிதையில் தென்படும் வரி இன்னொரு வரியுடன் தொடர்பை ஏற்படுத்தவில்லை என்று எழுதினேன் என்று நினைக்கிறேன். ஒருவிதத்தில் கவிதை புரியவில்லை என்று சொல்வது, கவிஞனைப் பலமானவனாகவும், வாசிப்பவனை பலவீனமாகக் காட்டக்கூடியதா என்று தோன்றும். பிரம்மராஜன் கவிதைகளைப் பற்றி அந்தக் காலத்தில் என் நண்பர்கள், அவர் கவிதைகள் புரியவில்லை என்று சொல்லிவிடாதீர்கள் என்று கூறுவார்கள்.

சண்முகம் கவிதைகள் அப்படி இல்லை. ஒரு கணக்கு மாதிரி ஒரு வாய்ப்பாடு மாதிரி ஒருவிதப் புதிர்தன்மை கொண்டகவிதைகளாக அவர் எழுதியிருப்பாரோ என்று எனக்குத் தோன்றுகிறது அதனால் ஒரு முறைக்கு இரு முறைகள் படிக்க வேண்டுமென்றும் தோன்றுகிறது. கவிதையின் முடிச்சு தானாகவே அவிழ்ந்து விடுவது மாதிரியாகவும் தென்படுகிறது.

இத் தொகுப்பில் உள்ள கவிதைகள் தனித்தனியாக இருக்கின்றன. எந்தக் கவிதைக்கும் தலைப்பு இல்லை. ஒரு கவிதைக்கும் இன்னொரு கவிதைக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா அல்லது தொடர்பு இல்லாத நிலையில் இருக்கிறதா என்பதை அறிய முடியவில்லை. மேலும் ஒரு கவிதையை வாசிக்கும்போது கவிதையில் ஒரு ஓட்டம் இருக்கிறது. தொடர்பற்ற வரிகள் இல்லை. முன்பு அவர் எழுதிய ‘பொம்மை அறை’ கவிதைகளில் தொடர்பற்ற வரிகள் இருப்பதுபோல் தோன்றும். இப் புத்தகத்தில் உள்ள பல கவிதைகளைப் படிக்கும்போது அது மாதிரியான சங்கடம் ஏற்படவில்லை. உதாரணமாக பக்கம் 58ல் ஒரு கவிதை.

மாடிச்சுவர் மீது ஒற்றைக் கால் ஊன்றி நிற்கும்
முகிலின் கருநிறத்து அண்டங் காக்கை
சிரம்சிலுப்பி மழைத்துளிகளை
உகுத்தபடியே திசைகளை வெறிக்கிறது.

தரிசனமிழந்த முகமொன்றைக் காண
நான் வானில் குவிய
மழையொலி

என் மனதின் சகுனமாய்
அந்த அண்டங் காக்கை.

மிகச் சிறிய கவிதையைத் தந்துள்ளேன். இங்கு üதரிசனமிழந்த முகமொன்றைக் காணý என்று ஏன் குறிப்பிடுகிறார். இவருடைய பெரும்பான்மையான கவிதைகளில் எதிரில் ஒருவர் இருப்பதுபோலவும் அல்லது இல்லாததுபோலவும் ஒரு தோற்றப் பொலிவை வெளிப்படுத்துகிறார். நாம் யாருடனோ பேசத் தயாராகிறோம். கவிஞருடனா அல்லது கவிஞர் காட்டும் வேற ஒருவருடனா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 108 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பில் எத்தனை எண்ணிக்கைக் கொண்ட கவிதைகள் என்ற பட்டியல் இல்லை. எழுதப்பட்ட காலம் குறிப்பிடப்படவில்லை. மன லயம் கொண்ட இக் கவிதைகளை நாம் மெதுவாகத்தான் படிக்க முடியும். இங்கு க நா சுவைப் பற்றியும் பிச்சமூர்த்தி பற்றியும் குறிப்பிட வேண்டி உள்ளது. க நா சு உரைநடையிலிருந்து கவிதைகள் எழுதியவர். இன்று பலர் க நா சுவின் பாணியைப் பின்பற்றுகிறார்கள். உரைநடையில்தான் கவிதைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் பிச்சமூர்த்தியோ செய்யுள் வடிவத்தைக் கவிதையில் கொண்டு வருகிறார்.

அதேபோல் சண்முகம் செய்யுள் வடிவத்தில் கவிதைகள் எழுதி உள்ளார். உரைநடையின் தெற்ப்புகள் கவிதைகளில் தென்படவே இல்லை. உதாரணமாக ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து ஒரு கவிதையின் வரியை நான் படிக்கிறேன். அதாவது 90 பக்கத்திலிருந்து ஒரு கவிதை. அதில் ஒரு வரி ‘நான் நடையிடும் வழியெங்கும்’ என்கிறார். இப்படி ஒரு வரியை க நா சுவோ கநாசுவைப் பின்பற்றுபவர்களோ எழுதவே மாட்டார்கள்.

சண்முகம் கவிதையைக் குறித்து ஜமாலன், முபீன், எம் டி முத்துக்குமாரசுவாமி, வெளி ரங்கராஜன், பரúமெஸ்வரி முதலிய பலர் பேசினார்கள். முபீன் பல பக்கங்கள் கொண்ட கட்டுரையாகப் படித்தார். பேச்சின் முடிவில் எம்டிஎம் பேசியதை ஒருவர் இன்னொருமுறை கேட்க வேண்டுமென்று தோன்றுகிறது.

(ஈர்ப்பின் பெருமலர் – கவிதைகள் – எஸ் சண்முகம் – பக்கங்கள் : 107 – விலை : ரூ. 120 – வெளியீடு : போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 12/293 இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 – தொலைபேசி : 9841450437)

மறக்க முடியாத மதுரை

நான் சென்னைவாசி. பெரும்பாலும் சென்னையை விட்டு எங்கும் போவதில்லை. ஏன் இந்த மாம்பலத்தை விட்டுக்கூட எங்கும் போக முயற்சி செய்வதில்லை. ஆனால் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றுவிடுவேன். உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என்றெல்லாம் போவேன். எதாவது காரணம் இருக்க வேண்டும். அப்படி ஒரு காரணத்தை வைத்துக்கொண்டுதான் மதுரை சென்றோம். (மனைவியையும் சேர்த்து).
பாண்டியன் எக்ஸ்பிரஸ் வண்டியில் கிளம்பினோம். மறுநாள் காலையில் மதுரையை அடையும்போது ரொம்ப தாமதமாகப் போய்ச் சேர்ந்தது. ரயில்வே நிலையத்திற்குப் பக்கத்தில் உள்ள காலேஜ் ஹவுஸ் என்ற ஓட்டலில் போய்த் தங்கினோம். பின் அவசரம் அவசரமாக கல்யாணத்திற்குப் போனோம். நேற்று பந்த். ஒரு கடையும் திறக்கவில்லை. மதுரை வெறிச்சென்றிருந்தது. வெயில் பயங்கரமாக இருந்தது. இந்த வெயில் என் வயசை ஞாபகப்படுத்துவதுபோல் தோன்றியது. பின் அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து, தெப்பக்குள மாரியம்மன் கோயிலுக்குச் சென்றோம். கோயில் எதிரில் இருந்த தெப்பக்குளத்தில் தண்ணீரே இல்லை. சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். மதுரையில் ஒவ்வொரு கோயிலும் வசீகரமாக இருப்பதுபோல் பட்டது. உண்மையா இது. அல்லது என் பார்வையில் கோளாறா என்பது புரியவில்லை. அங்கிருந்து திரும்பவும் ஆட்டோ பிடித்துக்கொண்டு பக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்குப் போனோம். ஒரே கூட்டம். வியாழக்கிழமை என்பதால் நந்திக்குப் பூஜை செய்து கொண்டிருந்தார்கள். சிவனை வணங்கிவிட்டு, நந்தி முன் வந்து நின்றேன். அபிஷேகம் செய்த நீரை மூஞ்சியில் அடித்தார்கள்.
திரும்பவும் கல்யாணமண்டபத்திற்கு வந்து அங்குக் கல்யாணச் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு காலேஜ் ஹவுஸ் சென்றோம். மதியம் 3 மணிக்கு ஒரு காரை வைத்துக்கொண்டு மதுரையில் உள்ள முக்கியமான கோயில்களைச் சுற்றினோம். இதன் நடுவே கசடதபற ஆசிரியார் கிருஷ்ணமூர்திக்குப் போன் செய்தேன். அவர் மதுரையில் வசிப்பவர். போனை எடுத்த அவர், சிரித்துக்கொண்டே, நாங்கள் சென்னைக்கு வந்துவிட்டோம். இனிமேல் சென்னையில்தான் இருப்போம் என்றார்.
முதலில் காரில் திருமலை நாயக்கர் அரண்மனைக்குச் சென்றோம். பார்த்து திகைத்துவிட்டேன். அவ்வளவு பெரிய இடத்தில் ஒரு சின்ன இடமாகக் கொடுத்தால் நான் பத்துபேர்களைக் கூப்பிட்டு இலக்கியக் கூட்டம் நடத்துவேன். அல்லது கவிதைகளை வாசிக்க வைப்பேன். ஆனால் அந்த அரண்மனைக் குறித்து விபரம் தெரியுமா என்று அங்குள்ளவர்களைக் கேட்டேன். யாருக்கும் தெரியவில்லை. சரி நெட்டில் தேடுவோம் என்று விட்டுவிட்டேன். பின் அங்கிருந்து அழகர் கோயில், பழமுதிர் சோலை, திருப்பரங்குன்றம், கடைசியாக மீனாட்சி கோயில் என்றெல்லாம் ஒரு சுற்று சுற்றி வந்தேன். அழகர் கோயிலிலும், திருப்பரங்குன்றத்திலும் குரங்குகள். ஆனால் சாதுவான குரங்குகள். எங்கே புகைப்படம் எடுத்தால் கையிலிருந்து காமெராவைப் பிடுங்கி விடுமோ என்று பயந்து எடுக்கவில்லை. இந்தக் கோயில்கள் எல்லாம் நேற்று மட்டும் விசேஷமாகத் தெரிந்தன.
இறுதியாக நாங்கள் மீனாட்சி கோயிலுக்குச் சென்றோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மீனாட்சி அம்மனைத் தரிசித்தோம்.
நாங்கள் திரும்பவும் நடந்து வந்து அந்தக் கோயில் இருக்கும் வடக்கு வாசல் தெருவில் உள்ள பாபா இட்லிக் கடையில் இட்லிகளும் ஒரே ஒரு தோசையும் பாலும் வாங்கிச் சாப்பிட்டோம். நம்ப மாட்டீர்கள். ஒரு இட்லி விலை ரூ.6. தோசை விலை ரூ.25. பால் விலை ரூ.10. ஜே ஜே என்று மதுரை இரவு நேரத்தில் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டது.
இன்று காலை 7 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னை வந்துவிட்டோம். வண்டி கிளம்பிய பின் பாதி நேரம் தூங்கி தூங்கி வந்தேன். பின் மாதவன் ஸ்ரீரங்கம் எழுதிய üகனவு ராட்டினம்ý என்ற நாவலை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். உண்மையில் அந்த நாவலை படிக்கும்போது ‘கனவு’ ராட்டினம் போல் சுற்றுவதாகத்தான் தோன்றியது. கனவு பற்றி இப்படி ஒரு நாவல் எழுத முடியுமா என்று யோஜனையாக இருந்தது. 74பக்கங்கள்தான் படித்தேன். பின் சென்னை வந்துவிட்டது. வண்டியை விட்டு இறங்கினோம்.

நட நட நட நடநடநட நட நடநடநட நட ……

என் லைப்ரரி வைத்திருக்கும் போஸ்டல் காலனி வீட்டின் அருகில் இதய இயல் பேராசிரியர் மருத்துவர் வைத்தியநாதன் அவர்கள் எழுதிய புத்தகங்கள் சில கிடைத்தன. இதய படபடப்பு பற்றி ஒரு புத்தகம். இதய நோய் இல்லாத இதய நோயாளிகள் என்ற இன்னொரு புத்தகம். மூன்றாவது புத்தகம் நடை….நோய்க்குத் தடை என்ற புத்தகம். சொ செல்வராசன் என்பவர் எழுதிய புத்தகம்.
இதைப்போல முக்கியமான புத்தகத்தை கிட்டத்தட்ட 60 வயதைத் தாண்டியவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். நடை எவ்வளவு முக்கியமானது என்று இந்த நூல் புட்டு புட்டு வைக்கிறது. நடைப்பயிற்சி முடிந்தவுடன் தண்ணீர் அருந்தலாமா என்ற ஒரு கேள்வி. உடனே அருந்த கூடாது. பதினைந்து நிமிடங்கள் பிறகு அருந்தலாம் என்கிறது இந்தப் புத்தகம். அதே சமயத்தில் நடைபயிற்சிக்கு முன்னால் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் அருந்தலாம் என்கிறது புத்தகம்.
இதில் இன்னொரு பக்கத்தில் இதுமாதிரி எழுதியிருக்கிறது. 1. நடக்கும்போது பேச்சைத் தவிர்த்து விடுங்கள் என்கிறது இப் புத்தகத்தில் ஒரு வாசகம். நானும் ஒரு இலக்கிய நண்பரும் காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபடும்போது பேசாமல் இருக்க மாட்டோம். சில சமயம் பேசுவதற்காகவே நடப்பதாகத் தோன்றும்.
நாங்கள் பேசிக்கொண்டே வந்தாலும், நடப்பதை விட்டுவிட மாட்டோம். நான் ஒன்று இரண்டு மூன்று என்று சுற்றை எண்ணிக்கொண்டே வருவேன்.
தியான நடை என்பது ஓர் அனுபவம் என்று ஒரு பக்கத்தில் கூறுகிறது. விருப்பத்துடன் நடக்கும்போது நம் மனதில் ஓர் உறுதி தோன்றுகிறது.
என் தந்தை 96 வயது வரை உயிரோடு இருந்தார். அதற்கு முக்கிய காரணம் நடை. அளவான சாப்பாடு. எதைப் பற்றியும் கவலைப் படாத வாழ்க்கை.
இந்தப் புத்தகத்தின் அணிந்துரையில் ஒரு எச்சரிக்கை : சந்தேகம் இல்லாமல் ஒரு 15 வருடத்திற்கு முன்பு இருந்ததை விட நம்மிடம் பணப்புழக்கம் கணிசமாக கூடியுள்ளது. ஆனால் ஓடி உழைத்து சம்பாதித்த பணத்தினை அனுபவிக்க முடியாத அளவிற்கு நோய். அதிலும் உடற்பயிற்சியின்மையால் 25 வயதில் எலும்பு தேய்வது, 35 வயதில் இருதய நோயால் பாதிக்கபடுவது. 40 வயதில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் போன்ற அச்சம் விளைவிக்கும் உண்மைகளை பற்றி நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்று எச்சிரிக்கை விடுக்கிறது.
சரி நீங்கள் இதுவரை நடக்காதவர்களாக இருந்தால், நாளையிலிருந்து நடக்கத் தொடங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
நட நடநடநட் நட…..

நானும் என் கவிதைகளும்…

நவம்பர் 2013ல் நான் கொண்டு வந்த கவிதைப் புத்தகத்தின் பெயர் ‘வினோதமான பறவை.’ அந்தப் புத்தகத்திற்கான விமர்சனம் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. யாரும் அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அதற்கு உண்மையான காரணம் கவிதைத் தொகுதிகள் ஏராளமாக ஒவ்வொரு ஆண்டும் புத்தகமாக வந்து கொண்டிருப்பதுதான். என் வீட்டின் கீழ்ப் பகுதியில் பத்திரப் படுத்திய ‘வினோதமான பறவை’ என்ற என் கவிதைத் தொகுதியை வெள்ளம் வந்து நாசப்படுத்தி விட்டது. விற்காமலேயே புத்தகப் பிரதிகள் தண்ணீரில் போய்விட்டது.

நான் திரும்பவும் இந்தப் புத்தகத்தை நவம்பர் 2016ல் கொண்டு வந்தேன். இந்த முறை இன்னும் சில கவிதைகளையும் சேர்த்தேன். வெள்ளம் பற்றிய கவிதைகளையும் சேர்த்தேன். முன்பு நான் கொண்டு வந்த üஅழகியசிங்கர் கவிதைகள்ý தொகுதியுடன் இந்தத் தொகுதியையும் சேர்த்தால் 300க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருப்பேன். எப்படி என் கதைகள் எல்லாவற்றையும் சேர்த்து 664 பக்கங்களுக்குப் புத்தகமாகக் கொண்டு வந்தேனோ அதேபோல் கவிதைகளையும் தொகுக்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன்.

இத் தருணத்தில் ஏப்ரல் மாதம் வெளிவந்துள்ள ‘பேசும் புதிய சக்தி’ என்ற பத்திரிகையில், வினோதமான பறவை புத்தகத்தில் வெளிவந்த கவிதைகளைக் குறித்து கவிஞர் விக்ரமாதித்யன் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். என் கவிதைகளை சரியானபடி புரிந்துகொண்டு எழுதி உள்ளார். அவருக்கு என் நன்றி.

கதைகளைப் படித்தபடியே வந்தேன்…

மயிலாடுதுறையிலிருந்து நான் திரும்பி வரும்போது இரண்டு பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு வந்தேன். ஒன்று காமதேனு என்ற பத்திரிகை. முதல் இதழ். இரண்டாவது ஆனந்தவிகடன். இது தவிர விருட்சம் இதழுக்கு அனுப்பிய கதைகள். இவையெல்லாவற்றையும் பகல் வண்டியில் படித்துக்கொண்டு வருவது என்று தீர்மானித்தேன்.
ஆனந்தவிகடனுக்கும் காமதேனுவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எல்லாம் சினிமாவில் நடிப்பவர்கள் புகைப்படங்கள்தான். உள்ளே வேறு விதமாகக் காட்சி அளிக்கிறது காமதேனு. படிக்கும்போது எனக்கு வீக் என்ற ஆங்கிலப் பத்திரிகை ஞாபகம் வந்தது. உள்ளே பெட்டி செய்திகளைப் போல் ஒரு முகம், சர்வதேசம், தேசம் என்று பல செய்திகளைக் கொட்டிக் கொடுக்கிறது காமதேனு. நான் இதை எழுதும் இந்தத் தருணத்தில் 4 இதழ்கள் வந்துவிட்டன. முதலில் நான் கதைகளைத் தேடித்தான் இந்தப் பத்திரிகைக்குள் நுழைந்தேன். என் கண்ணிற்கு எந்தக் கதையும் தென்படவில்லை. ஆனால் புனை என்ற தலைப்பின் கீழ் நர்சிம் அவர்கள் நதி என்ற கதை எழுதியிருக்கிறார். நான் இப்போதுதான் பார்த்தேன். அப்போது கவனிக்கவில்லை. கிட்டத்தட்ட 106 பக்கங்கள் கொண்ட பத்திரிகையில் ஒரே ஒரு கதைதான். அதுவும் இரண்டரைப் பக்கக் கதை.
அடுத்தது ஆனந்தவிகடன் 14.03.2018 இதழ் தனுஷ் படம் போட்டப் பத்திரிகை. அன்பும் அறனும் என்ற தலைப்பில் சரவணன் சந்திரன் தொடர். அதிஷா எழுதும் டெக்னோ தொடர். மெனு கார்டு என்ற தலைப்பில் வெ நீலகண்டன் தொடர். தெய்வந்தான் ஆகாதெனினும் என்ற தலைப்பில் தமிழ்ப்பிரபாவின் தொடர். பின் சொக்கலிங்கம் பழனியப்பன் தொடர். ஓனர் என்ற தலைப்பில் கு ஜெயச்சந்திர ஹாஷ்மியின் சிறுகதை. இதைத்தான் நான் முதலில் முழுக்கப் படித்தேன். வித்தியாசமான கதையாக இருந்தது. ஓனர் என்ற தலைப்பில் ஆனந்தவிகடனுக்குக் கதை எழுத விரும்புகிறவன் பார்வையில் அவன் வாழ்க்கையைப் பற்றிய கதையை எழுதுவதாக எழுதிக்கொண்டு போகிற கதை. இந்த வித்தியாசமான கதையைப் படித்தத் திருப்தி எனக்கு இருந்தது. பின் இந்தப் பத்திரிகைகளை மூடி வைத்துவிட்டு விருட்சம் 105வது இதழுக்கு வந்த கதைகளைப் படிக்கத் தொடங்கினேன். விருட்சம் பத்திரிகை பெரும்பாலும் கதைகளும் கவிதைகளும் நிரம்பிய பத்திரிகை. மற்ற அரட்டைகளுக்கு இடமில்லாத பத்திரிகை. சினிமா அரசியல் பற்றிய செய்திகள் இல்லாத பத்திரிகை. எனக்கு வந்த கதைகளைக் கொண்டு வருவதும், கவிதைகளைக் கொண்டுவருவதுமான பத்திரிகை. நல்ல தாளில் அச்சடிக்கப்படாத நியூஸ் பிரிண்ட்டுக்கு மேலான ஒரு தாளில் அச்சடிக்கிற பத்திரிகை. 80 பக்கங்களுடன் முடித்துவிடுவேன். அதை முடிக்க நான் படுகிறபாடுதான் இந்தப் பத்திரிகை.
முதலில் பிரேம பிரபா என்பவர் எழுதிய புறவழிச் சாலையும் மாயக்கண்ணாடியும் என்ற கதை. ரொம்ப வித்தியாசமாக எழுதப்பட்ட கதை. கடவுளைப் பார்க்க விழைகிற ஒருவனின் கதை. இந்தக் கதையை எடுத்துக்கொண்டு போகும் கற்பனை அபாரமாக இருக்கிறது. இக் கதையை நிச்சயமாக விருட்சம் இதழில் பிரசுரம் செய்யத் தீர்மானித்துள்ளேன். இன்னும் இதை எழுதிய பிரேம் குமாருக்கு தகவல் அனுப்பவில்லை. ஒருவன் கடவுளைத் தேடிக்கொண்டே போகிறான். ஆனால் இறுதியில் கடவுளை அவன் சந்தித்து விடுகிறான். இதுதான் இக் கதை. மூன்று பக்கங்களில் எழுதப்பட்ட கதை.
சீர்காழியில் வசிக்கும் என் நண்பர் தாஜ் எழுதிய கதை üபெண்கள்.ý உரையாடல் மூலம் கதையை ஆரம்பிக்கிறார். ஒரு எழுத்தாளனைப் பேட்டி எடுக்க ஒரு பெண் வருகிறாள். அவளுக்கும் என் வி சார் என்பவருக்கு நடக்கும் உரையாடலை மையமாக வைத்து தாஜ் திறமையாக ஒரு சிறுகதையை எழுதி அனுப்பி உள்ளார். விருட்சத்தில் இந்தக் கதையையும் தேர்ந்தெடுக்க உள்ளேன். இன்னும் இந்த விஷயமாக தாஜ் அவர்களிடம் செய்தியைத் தெரிவிக்கவில்லை.
ரயில் பயணத்தில் நான் படித்தத் திருப்தியான கதையில் இதுவும் ஒன்று.
உஷாதீபன் எழுதிய ஆற்றாமை என்ற கதை. பையனுக்குப் பெண் பார்ப்பதைப் பற்றிய கதை. கணவன் மனைவிக்குள் ஏற்படும் போராட்டம். அப்பாவிற்கும் பையனுக்கும் ஏற்படுகிற முரண்பாடு. இந்தக் கதையை எளிதாகவும் வித்தியாசமாகவும் கொண்டு சென்று முடித்திருக்கிறார். பையனுக்குக் கஷ்டப்பட்ட ஏழைக் குடும்பத்துப் பெண்ணா பார்ப்போம் என்பதில் கதையை முடிக்கிறார். இந்தக் கதையையும் நான் விருட்சத்திற்காகத் தேர்ந்தெடுத்துள்ளேன். டோரியன் சீமாட்டி என்ற கதை. இதையும் பிரேம பிரபா என்கிற பிரேம் குமார்தான் எழுதியிருக்கிறார். வித்தியாசமான கதை. ரிஷி என்பவர் மாத்யு என்கிற மனநல மருத்துவரைப் பார்க்கச் செல்கிறான். அவன் விவரிக்கும் கனவுதான் கதை. கனவில் தென்பட்ட கதை மாந்தார்கள் நிஜத்திலும் இருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை உருக்குகிற கதைதான் இது. இந்தக் கதையும் விருட்சத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளேன். இவருடைய இரண்டு கதைகளில் எதாவது ஒரு கதையை இந்த இதழிலிலும் இன்னொரு கதையை அடுத்த இதழிலும் பிரசுரிக்க தீர்மானித்திருக்கிறேன்.
ஏற்கனவே சில கதைகளைத் தேர்ந்தெடுத்து இதழ் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் சில கதைகளையும் கவிதைகளையும் சேர்த்தால் 80 பக்க அளவுள்ள 105வது இதழ் முடிந்துவிடும். ஏற்கனவே நான் தேர்ந்தெடுத்த கதைகளில், பா ராகவனின் ஆதிவராகம், ஸிந்துஜாவின் பிணை, சிறகு இரவியின் ஜிட்டு கிருஷ்ணமணி, பானுமதி எழுதிய நீதி என்ற கதை. இவை எல7;லாவற்றையும் இதழில் சேர்த்துவிட்டேன். இதைத் தவிர கவிதைகள், புத்தக விமர்சனங்கள் என்றெல்லாம் இந்த இதழ் 80 பக்கத்திற்கு மேல் போய்விடும்போல் தோன்றுகிறது. 80 பக்கம் மேல்போனால் ஆபத்து.
விருட்சம் சந்தா அனுப்பவருக்கு அசோகமித்திரன் கையெழுத்தில் எழுதிய கட்டுரையைத் ஜெராக்ஸ் செய்து அனுப்ப உள்ளேன்.

இன்று அசோகமித்திரனின் நினைவு நாள்

‘எழுத்தாளர்கள் நூல்கள் நிகழ்ச்சிகள்’ என்ற அசோகமித்திரன் புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.
‘உதிர்ந்த மணி’ என்ற கட்டுரையில் எம் வி வெங்கட்ராமன் பற்றி இப்படி எழுதியிருக்கிறார் : அவருடைய நெருக்கடி மிகுந்த நாட்களில் நாங்கள் இருவரும் ஒரு திருவல்லிக்கேணி காபிக்கடையில் காபி அருந்தினோம். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே காபிக்கடையில் காபி அருந்தினோம். இம்முறை அவரே üüஇப்போது சிரமம் இல்லை, கவலைப்படாதே,ýý என்றார். ஆனால் எனக்கு அவரை எப்போது நினைக்கும்போது இருட்டில் புத்தக அடுக்குகள் மத்தியில் குகைவாசியாக அவர் எழுதிக்கொண்டிருந்த காட்சிதான் திரும்பத் திரும்ப வருகிறது.
********
தி நகர் செல்லும்போது கண்ணதாசன் சிலை அருகில் சிக்னலுக்காக வண்டியை நிறுத்துவேன். அப்போது ஒரு நிமிடம் இடது பக்கம் பார்ப்பேன். பலமுறை அசோகமித்திரனைப் பார்க்க இப்படித்தான் செல்வேன்.
********
புதுமைப்பித்தன் இருந்த நாளிலும் அவர் மறைந்த பின்னரும் அவரைப் பற்றி அலுப்பு சோர்வு இல்லாமல் வெளிமாநிலத்தவருக்கு எடுத்துச் சொன்னவர் க நா சு அவர்கள். க நா சு எழுதத் தொடங்கிய 1930களிலிருந்து தமிழ் எழுத்தின் தரம் உலகின் இலக்கிய சிகரங்களுக்கு இணையானதாக இருக்கவேண்டுமென்பதை அவர் வலியுறுத்த வண்ணம் இருந்தார்.
********
அசோகமித்திரனை நான் பார்க்கச் சென்றாலும் சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருப்பேன். ஒரு முறை ஒரு தாளில் நாடகம் எழுதிக்கொண்டிருந்தார். அதை முடிக்கவில்லை. அவரே சொன்னார் நாடகம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று. எனக்கு ஆச்சரியம். 86 வயதில் அவருக்கு எழுத வேண்டுமென்ற எண்ணம் இருந்துகொண்டிருக்கிறது என்றுதான். அந்த நாடகத்தை எழுதி விருட்சம் பத்திரிகைக்குக் கொடுத்தார்.
************
அந்த நாளில் இத்தாலிய எழுத்தாளர் ஆல்பெர்ட்டோ மொராவியா பிரபலமாக இருந்தார். அவருடைய நாவல்களுக்கு மிகச் சிறப்பான ஆங்கில மொழி பெயர்ப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன. அவருடைய பெயர் திரும்பத் திரும்ப நோபல் பரிசுப் பரிசீலனையில் இருந்தது. ஆனால் அந்தக் குழுவில் இருந்த ஒருவர் மொராவியா மனித ஒழுக்கத்தைக் குலைக்கும் எழுத்தாளர் என்று சொல்லிக் கடுமையாக எதிர்த்து வந்தார். இலக்கியவாதிகள் மத்தியில் பிரபலமாக இருந்த மொராவியாவை இன்று படிப்பவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம். ஆனால் ஜானகிராமனுக்கு மொராவியாவைப் பிடிக்கவில்லை.
************
ஆர்கே சென்டரில் இரண்டு நாட்கள் முன் பேசிய சாருநிவேதிதா அசோகமித்திரன் எழுத்துக்களை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லவேண்டுமென்று குறிப்பிட்டார். இதைத் தீவிரமாக ஒருவர் எடுத்துச் செய்ய வேண்டும். சாரு நிவேதிதா நாவலை ஆங்கிலப் படுத்தி மார்ஜினல் மேன் என்ற புத்தகத்தை ஜøரோ பதிப்பகம் கொண்டு வந்துள்ளனர். புத்தகத்தை ஆங்கிலப் படுத்துவதில் ஒரு குழுவாக இருந்து செயல்படுகிறார்கள். அவர்கள்தான் அசோகமித்திரன் புத்தகங்களையும் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். செய்வார்கள் என்று நம்புகிறேன்.
************
பிச்சமூர்த்தி சிஷ்யர்களை உருவாக்குவதில் அக்கறை காட்டவில்லை. அவருடைய அந்தரங்கம் அவருக்கு மிகவும் முக்கியம்.அவரைப் பற்றி என்ன எழுதினாலும் எல்லாம் புறவாழ்க்கைத் தகவûல்களைத்தான் பதிவு செய்ய முடிகிறது.
*****************
நவீன விருட்சம் என்ற பத்திரிகையால் நான் பல எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். வெங்கட் சாமிநாதனுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு முறை, ‘உன் குருநாதர்கள் ஞானக்கூத்தன், அசோகமித்திரன் எல்லாம் என்ன சொல்கிறார்கள்’ என்று கேட்டார். எனக்கு அவர் கேட்ட விதம் பிடிக்கவில்லை. ‘அவர்கள் இருவரும் எனக்கு குருநாதர்கள் இல்லை. என்னையும் அவர்கள் சிஷ்யராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,’ என்றேன். வெங்கட்சாமிநாதன் கடைசிவரை இதை நம்பவில்லை. என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார்.
*************
சிறந்த இந்தியக் கவிஞர்களில் ஒருவரான டாம் மொரேஸ், இன்றும் அவருடைய எல்லாப் படைப்புகளையும் கையாலேயே இங்க் பேனாவால் எழுதுவதாகக் கூறுகிறார். இது போன்ற ஒரு சிறு கூட்டம் இன்றும் இருக்கிறது.
************
அசோகமித்திரன் மறைந்து ஓராண்டு ஆனாலும் அவர் இன்னும் இருந்து கொண்டு இருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. கண்ணதாசன் சிலை முன்னால் நான் திரும்பி இடதுபக்கம் பார்க்காமல் போக மாட்டேன். அது அசோகமித்திரனுக்கு நான் செலுத்தும் மரியாதை.
(Photo taken by Click Ravi)

சனிக்கிழமை நடந்த இன்னொரு கூட்டம்

இந்த மாதம் நான் வழக்கம்போல சனிக்கிழமை கூட்டம் நடத்தாமல் வெள்ளிக்கிழமை பொதுவான கூட்டம் ஒன்றை நடத்தினேன். த நா குமாரசாமியும் நானும் என்ற பெயரில் வ வே சு அவர்கள் பேசினார்கள். அதற்குக் காரணம் ஒன்று உள்ளது. என்னவென்றால் சனிக்கிழமை என் கதைகளுக்கான கூட்டம் ஒன்றை நடத்தியதால், வெள்ளிக்கிழமை எப்போதும் நடத்தும் கூட்டத்தை நடத்தினேன். சில பேர்களை மட்டும் கூப்பிட்டு என் சிறுகதைக்கான கூட்டத்தை சனிக்கிழமை நடத்தினேன். பெரும்பாலும் பேசியவர்கள் அனைவரும் என் நண்பர்கள். இக் கூட்டத்திற்கு என் மனைவியும் பேத்தியும் கலந்து கொண்டார்கள். என் பழைய நண்பர்கள் வந்திருந்தார்கள். பேத்தி தமிழ் வாழ்த்துப் பாட கூட்டம் சிறப்பாக ஆரம்பமானது.
முதன் முதலாக என் கதையைப் பிரசுரம் செய்த என் சகோதரரிடம் என் புத்தகத்தை அளித்தேன். அக் கதை எழுதி பிரசுரமான ஆண்டு 1979ஆம் ஆண்டு. அதிலிருந்து நான் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறேன். 2017ஆம் ஆண்டு வரை மொத்தம் 64 சிறுகதைகளும், 7 குறுநாவல்களும், சின்னஞ்சிறு கதைகளும், ஒரு நாடகமும் என் புத்தகத்தில் கொண்டு வந்துள்ளேன். 664 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. ரைட்டர்ஸ் கேப் என்ற இடத்தில் என் சிறுகதைகளுக்கான கூட்டத்தை ஏற்பாடு செய்தேன்.
முதன்மை பேச்சாளராக சாருநிவேதிதாவைப் பேச அழைத்தேன். அதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. முதலில் ஆரம்பிக்கிற கூட்டம் கடைசியில் போகப் போக தொய்வு விழ வாய்ப்புண்டு. சாரு நிவேதிதா முதலில் பேசுவது நல்லது என்று தோன்றியது. என் கூட்டம் 3 மணி நேரத்திற்கு மேல் நடந்தது.
என் கதைகளைப் பற்றி சாரு பேசியதைக் கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காப்கா தன்மையை என் கதைகள் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். தினசரி வாழ்க்கையில் தென்படும் பல அபத்தங்களையும் என் கதைகள் வெளிப்படுத்துவதாக குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். இந்த அளவிற்கு யாரும் என் கதைகளைப் பற்றி பேசியது இல்லை. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆரம்பமே ஒரு நிறைவான கூட்டமாக மாறியதாக நினைத்தேன். எழுதுபவனே இப்படி ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி எல்லோரும் பேசும்படி செய்ய வேண்டி உள்ளது என்றும் சொன்னார். உண்மைதான் தமிழ் சூழல் இப்படித்தான் நடந்துகொண்டு இருக்கிறது.
பல ஆண்டுகளாக (கிட்டத்தட்ட 40 ஆண்டுகள்) நான் கதைகள் எழுதினாலும் அவை குறித்த அபிப்பிராயத்தை யாரும் எப்போதும் வெளிப்படுத்தியதில்லை. ஏன் என் கதைகளைப் படித்திருப்பார்களா என்ற சந்தேகம்கூட எனக்கு எப்போதும் ஏற்படுவதுண்டு. அடிக்கடி என் கதைகள் பத்திரிகைகளிலும் வெளிவந்ததில்லை. நிச்சயமாக என் கதைகளுக்கு என் பத்திரிகையில் மட்டும்தான் இடம் உண்டு;. அப் பத்திரிகையும் வருடம் ஒன்றிக்கு மூன்றோ நான்கோ வரும்.
என் கதைகளைப் பற்றி சாரு சொன்னதைக் கேட்டபிறகு என் கதைகளை நான் திரும்பவும் படிக்க வேண்டும் என்றும் என் கதைகளின் பொதுவான தன்மையைக் குறித்து கருத்தை என்னுள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது. அவர் குறிப்பிட்டபடி ஒரு நாவலை நான் எழுதத் தொடங்க வேண்டுமென்றும் நினைத்துக்கொண்டேன். இன்னும் பலரும் சிறப்பாகப் பேசி கூட்டத்தை அசத்தி விட்டார்கள். கூட்டம் நடந்த இடமும் புத்தகம் சூழும் இடமாக இருந்தது.