ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கும் போது, அதில் எந்த அளவிற்கு உண்மையும் பொய்யும் கலந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம். உண்மையைப் போல பொய்யும் பொய்யைப் போல உண்மையும் தென்படும். உண்மை 10% விதத்திற்கு மேல் இருந்தால் பெரிய விஷயம். வரலாற்றை எடுக்கும்போது சில கற்பனை காட்சிகளையும் கலக்க வேண்டும். முழுமையான உண்மை வரலாறு பார்ப்பவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும். சாவித்திரி குறித்து கட்டுரை எழுதும் பத்திரிகையாளராக வரும் மதுர வாணியாகசமந்தாவின் பாத்திரம் படத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.
இந்தப் படத்தில் ஜெமினிகணேசனை வில்லனாகச் சித்தரித்திருக்கிறார்கள். வில்லன் என்று எதாவது உண்டா என்பது தெரியவில்லை. அதேபோல் ஹ÷ரோ என்று சொல்லப்படுவதை ஹ÷ரோவாகக் காட்ட முடியுமா? வாழ்க்கைப் பாதையில் யாருமே ஹ÷ரோ கிடையாது அதேபோல் யாருமே வில்லனும் கிடையாது. புகழ் உச்சிக்குச் சென்ற நடிகை சாவித்திரியின் மோசமான நிலை பார்ப்பவரை சலனப்படுத்தும் விதமாகப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
நடிகர் நடிகை வாழ்க்கையில் குடிப்பது சாதாரண நிகழ்ச்சி. ஆனால் அதுவே உயிரைப் பறிக்கும் நிகழ்ச்சியாக மாற்றப்படுகிறது.
பொதுவாக இதுமாதிரியான சுய வரலாறு படங்களைப் பார்க்கும்போது நமக்குள் பச்சாதாபம் கொள்கிற நிகழ்ச்சிகளைக் கோர்த்துக் கொடுப்பார்கள். அந்தவிதத்தில் அலுப்பில்லாமல் படத்தை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் என்ற நடிகை தன் நடிப்பாற்றலால் பல இடங்களில் சாவித்திரியாக மாறி விட்டதுபோல ஒரு பிரமை ஏற்படுகிறது. தெலுங்கு பட உலகை முக்கியமாக எடுத்துக் காட்டப்படுகிற படம் இது. இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் பாராட்டுக்குரியவர்.
இதேபோல் இன்னும் சில வாழ்க்கை வரலாறு படங்களை எடுத்தால் நன்றாக இருக்கும். உதாரணமாக எம் கே தியாகராஜ பாகவதர், நடிகர் சந்திரபாபு போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் படமாக எடுக்கலாம்.
நேற்று குடும்பத்தோடு இந்தப் படத்தை பி வி ஆர் சினிமா அரங்கில் வேளச்சேரியில் பார்த்தேன். தியேட்டர் முழுவதும் கூட்டம் கூடியிருந்தது. கடைசிவரை உச்சுக்கொட்டாமல் எல்லோரும் இருக்கையில் அமர்ந்தபடி படத்தை ரசித்தார்கள்.
Category: கட்டுரை
தினமணி கதிரில் என் கதையைப் படிக்கவும்
தினமணி கதிரில் என் கதையைப் படிக்கவும்
இன்று தினமணி கதிரில் என் கதை ‘ஆண்களைப் பார்த்தாள் நம்ப மாட்டாள்,’ என்ற கதை பிரசுரமாகி உள்ளது. தினமணி-எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசுப் பெற்ற கதை. இது ஒரு வித்தியாசமான கதை. இதைப் படித்து உங்கள் கருத்துக்களை கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். கருத்தைப் பகிர்ந்தால் எனக்கு ஒரு துளி சந்தோஷம் கிடைக்கும்.
ஒரு விதத்தில் இந்த தினமணி கதிரை நான் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். ஏன்னென்றால் அட்டையில் பாலகுமாரன் படத்துடன் இதழ் வந்துள்ளது.
முன்பு ஒரு முறை தினமணி கதிரில் என் கதை வந்திருந்தது. அந்தத் தினமணி கதிரில் அட்டையில் எம்.ஜி.ஆர் படம். அது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு.
பாலகுமாரனின் ‘இது போதும்’
100வது இதழ் நவீன விருட்சம் தயாரித்து பலருக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். அந்த இதழ் அதிகப் பக்கங்களுடன் தயாரிக்கப்பட்டதால் செலவு அதிகமாகிவிட்டது.
ரகு மூலம் அந்த இதழ் பாலகுமாரன் கண்ணிலும் பட்டது. உடனே அவரிடமிருந்து எனக்கு ஒரு போன். அப்போது நான் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அவசரம் அவசரமாகப் போய்க்கொண்டிருந்தேன். üநாளைக்கு வீட்டிற்கு வர முடியுமா,ý என்று கூப்பிட்டார்.
அவர் வீட்டிற்குச் சென்றேன். அவர் வீட்டின் பெரும்பகுதி ஒரு கோயில் மாதிரி இருந்தது. யோகி ராம்சுரத்குமாரின் பெரிய புகைப்படங்கள். பூஜை அறையில் யோகி ராம்சுரத்குமார்.
அவருடைய வெண்ணிற தாடி அவர் மீது எனக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியது. முன்பு பிரமிளுடன் நான் யோகி ராம்சுரத்குமாரை சந்தித்த விபரத்தைத் தெரிவித்தேன். அங்கு நடந்த சில சங்கடமான விஷயங்களை அவரிடம் தெரிவித்தேன். உருக்கமாக. அவர் சாதாரணமாக அதைக் கேட்டு விளக்கிக்கொண்டிருந்தார். யோகி ராம்சுரத்குமாருக்கு உங்கள் மீது எந்தக் கவனமும் இல்லை என்றார்.
நன்கொடையாக விருட்சம் இதழுக்கு பணம் அளித்தார். அவர் இன்னொன்றும் சொன்னார். ‘யோகி ராம்சுரத்குமார் கட்டளையால் நான்கொடை கொடுக்கிறேன்,’ என்றார். அவர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை.
“உங்களுடைய புத்தகம் எதாவது தரமுடியுமா?” என்று கேட்டேன். ‘இது போதும்,’ என்ற புத்தகம் ஒன்றை கொடுத்தார். உள்ளே கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
என்னுடைய சந்திப்பு 26.10.2016ல் நடந்தது. அவருடைய ‘இது போதும்’ என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு நான் ஒரு கட்டுரை எழுதி முகநூலில் பதிவு செய்தேன். என் கட்டுரையின் தலைப்பு ‘அந்தப் புத்தகம் யார் எழுதியது என்று சொல்லப் போவதில்லை,’ என்று. என்னைப் பொறுத்தவரை பாலகுமாரனின் இந்தப் புத்தகம் முக்கியமானதாகக் கருதுகிறேன்.
அவருடைய குரு யோகி ராம்சுரத்குமாரிடம் இப் புத்தகத்தில் உள்ள பல விஷயங்களைப் பேசி விவாதித்து எழுதி உள்ளார். இது ஒரு பயனுள்ள புத்தகம். இப் புத்தகத்தைப் படித்து நான் எழுதிய கட்டுரையிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன்.
‘இதை எழுதிய ஆசிரியர் கிண்டல் அடிக்கிற மாதிரி இன்னொரு விஷயம் சொல்கிறார் : üருசி என்ற ஒரு சுகத்தையும் அறுத்துவிட்டால் வாழ்க்கையில் அனுபவிக்க வேறு என்னதான் இருக்கிறது என்ற கோபம் ஏற்பட்டிருக்கும்,ý இன்னொன்று சொல்கிறார். நான் உணவிற்கு எதிராக பேசவில்லை. ருசிக்கு எதிராகப் பேசுகிறேன் என்கிறார்.
உணவு விஷயத்தில்தான் இப்படியெல்லாம் சொல்லி நம்மை தர்மசங்கடப் படுத்திவிட்டார் என்று நினைத்தால், இன்னொரு விஷயத்தையும் சொல்லி நம்மை யோசிக்க வைக்கிறார். அவர் இப்படி எழுதுகிறார் : உங்களை முற்றிலும் புரிந்துகொண்ட, முழுவதுமாய் அன்பு செலுத்துகின்ற, உங்களை எந்த எதிர்பார்ப்பும் இன்றி நேசிக்கின்ற மனிதர் என்று உலகில் எவரும் இல்லை. எந்த உயிரினமும் இல்லை. ஒரு வேளை சோற்றுக்குத்தான் நாய் வாலாட்டுகிறது. கிட்டத்தட்ட அந்த மாதிரி விஷயங்களுக்குத்தான் மற்ற மனிதர்களும் உங்களை நெருங்கியிருக்கிறார்கள்…ஹைட்ரஜன் குண்டை வீசி எறிந்தால் எப்படி இருக்கும் அப்படி வீசி எறிகிறார் இந்தப் புத்தக ஆசிரியர். இதை மனதின் பெரும் பசி என்கிறார். அதை அடக்கச் சொல்கிறார். யாருடைய பாராட்டுப் பத்திரத்திற்கும் காத்துக்கொண்டிருக்காதீர்கள் என்கிறார்
இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதியில் நாடிசுத்தம் பற்றி சொல்கிறார். ஒருவர் நாடிசுத்தம் தினமும் செய்துகொண்டு ஆன்ம பலத்தைப் பெருக்கச் சொல்கிறார். இன்னும் புரியாத விஷயத்தையும் அவர் சொல்கிறார். அதுதான் குண்டலினி சக்தி.’
பாலகுமாரன் இன்று இல்லை. ஆனால் இந்தப் புத்தகத்தின் மூலம் சிலவற்றைப் பேசிவிட்டுச் சென்றதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. நான் யாரோ அவர் யாரோ. ஆனால் என் பத்திரிகையைப் பார்த்துவிட்டு அதற்கு எதாவது நன்கொடை அளிக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் யோகி ராம்சுரத்குமார் அவர் மூலம் கட்டளை இட்டிருக்கலாம்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு எனக்கும் அவருக்கும் எந்தச் சந்திப்பும் நிகழவில்லை. போனில் பேச நினைத்தாலும் பேச அவர் விழையவில்லை. அதன்பின் நான் அனுப்பிய விருட்சம் இதழ்களை அவர் பார்த்தாரா என்பது கூடத் தெரியாது. பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் அவரை வைத்து படம் எடுக்க வேண்டுமென்று நினைத்தேன். அதற்கு அவர் சம்மதமும் தெரிவிக்கவில்லை.
இன்று காலை அவர் பூத உடலைப் பார்க்க வேண்டுமென்று போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். அந்தத் தெரு முழுவதும் கட்டவுட்டும் கூட்டமுமாக இருந்தது. பாலகுமாரன் கண்ணாடிப் பேழையில் படுத்தபடி இருந்தார்.
ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 7
12.05.2018
1. 105வது இதழ் வரை விருட்சம் கொண்டு வந்து விட்டீர்கள்?
ஆமாம். 84 பக்கங்கள் வரை கொண்டு வந்துள்ளேன். விலை அதிகம்.
2. நீங்கள் 30 ஆண்டுகளாகக் கொண்டு வந்துள்ளீர்கள்..அவ்வளவு நீண்ட காலம் ஒரு சிறு பத்திரிகையைக் கொண்டு வரக்கூடாது என்று சிலர் கூறுகிறார்களே?
அப்படி சொல்பவர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள். முதல் இதழுக்கும் கடைசி இதழுக்கும் என்ன வித்தியாசம் என்றெல்லாம் கூறுவார்கள்.
3. வித்தியாசம் இல்லையா?
இல்லை. முதல் இதழும் கடைசி இதழும் எல்லாம் ஒன்றுதான். கவிதைகள், கதைகள், கட்டுரைகளைப் பதிவு செய்யும் ஒரு இயந்திரமாகத்தான் சிறுபத்திரிகையைக் கருதுகிறேன்.
4. உங்கள் பத்திரிகையைப் படிப்பவர்கள் இருக்கிறார்களா?
இருக்கிறார்கள். யார் என்று தெரியாது. கருத்தை வெளிப்படையாகப் பதிவு செய்ய மாட்டார்கள்.
5. எல்லா சிறு பத்திரிகைக்கும் இந்தக் கதிதானா?
இப்போது வருகிற எல்லாச் சிறுபத்திரிகைக்கும் இந்தக் கதிதான்.
6. ஆத்மாநாம் இப்போது இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பார்?
ழ பத்திரிகையின் 200வது இதழ் கொண்டு வந்திருப்பார். 16 பக்கங்களில் தொடர்ந்து கவிதைகாளக வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்.
7. ஞாநியின் தீம்தரிகிட பார்த்தீர்களா?
ஞாநி தீம்தரிகிட ஆரம்பிக்கும்போதே நான் ஒரு சந்தாதாரர். ஆனால் தொடர்ச்சியான சந்தாதாரர் இல்லை. விளம்பரம் இல்லாமல் பத்திரிகையை நடத்தியவர். அவருடைய தீம்தரிகிட பத்திரிகை ஏழு தொகுப்புகளாக வந்துள்ளன. ஒவ்வொருவரும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய பொக்கிஷம்.
8.இந்த மாதம் 26ஆம் தேதி அன்று ஒரு முக்கியமான கூட்டம் நடைபெறுகிறது அல்லவா?
ஆமாம். பாவண்ணனைப் பாராட்டுவோம் என்ற கூட்டம். ஒருநாள் முழுவதும் நடைபெறுகிற கூட்டம். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என்று பவற்றை எழுதி சாதித்திருக்கிறார் பாவண்ணன். அவருக்கான வாசகர் வட்டமும் இருக்கிறது.
9. உங்கள் வாழ்க்கையின் லட்சியம் எது?
புத்தகம் வாசிப்பது.
10. அலட்சியம்?
புத்தகத்தை வைத்துக்கொண்டே தூங்குவது.
11. உங்கள் முழுச் சிறுகதைத் தொகுப்புப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
12. சமீபத்தில் வெளிவந்த மணல்வீடு தொகுப்பைப் பார்த்தீர்களா?
இன்றுதான் வந்தது. இதழ் எண் : 32-33 என்று அச்சாகியிருந்தது. 192 பக்கங்கள் கொண்ட வித்தியாசமான தொகுப்பு. இதழ் விலை : ரூ.150 என்றிருந்தது. நம்ப முடியவில்லை.
13. உங்களால் இப்படியொரு இதழைக் கொண்டு வர முடியாதா?
கற்பனையே செய்ய முடியாது. ஆத்மாநாமின் ழ தான் என்னுடைய பத்திரிகை. இன்னும் பக்கங்களைக் குறைக்க வேண்டும்.
14. வெயிலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை. வெயில் கொளுத்துகிறது. புத்தகங்கள்தான் எனக்குத் துணை.
15. நீங்கள் நடத்தும் கூட்டங்கள் பற்றி
மாதம் ஒரு முறை கூட்டம் நடத்துகிறேன். 3வது சனிக்கிழமை. நானும் கோவிந்தராஜன் என்ற நண்பரும் சேர்ந்து 27 கூட்டங்கள் நடத்தியிருப்போம். இப்போது தனியாக 10 கூட்டங்கள் நடத்திக்கொண்டு வருகிறேன்.
16. கூட்டம் நடத்துவது பொழுதுபோக்கா இலக்கிய சேவையா
இரண்டும் இல்லை.
17. இந்த மாதம் யார் பேசுகிறார்கள்
சுனில் கில்நானியின் இந்தியா என்கிற கருத்தாக்கம் பற்றி சா கந்தசாமி பேசுகிறார். கூட்டம் இந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
18. நீங்கள் பிரமிள் புத்தகமான வெயிலும் நிழலும் பாதிதான் படித்தீர்கள் போலிருக்கிறது.
ஆமாம். நான் படித்த பாதிக்குப் பிறகு அவர் தீவிரமாக எல்லோரையும் விமர்சிக்கிறார்.
19. கடற்கரையின் பாரதி விஜயம் புத்தகம் பற்றி..
பாரதியைப் பற்றி பலர் எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம். படிக்க படிக்க சோகமயமான புத்தகமாக இருக்கும்போல் தோன்றுகிறது.
20. ம்.
ம்.
திருச்சி பயணத்தில் இன்னொரு புத்தகம்
என் பயணத்தின்போது புத்தகங்களைப் படிப்பது என் வழக்கம். எல்லோரும் என்னைக் கவனிக்கும்படி புத்தகத்தைப் பிரித்துப் படித்துக்கொண்டிருப்பேன். அப்படிப் படித்துக்கொண்டிருக்கும்போது என்னைச் சுற்றிலும் என்ன நிகழ்கிறது என்பதையும் கவனித்துக்கொண்டிருப்பேன். ரயில் பயணித்தின்போது ஜன்னல் வழியாகப் பல காட்சிகளையும் பார்த்துக்கொண்டிருப்பேன்.
நான் இப்படிப் புத்தகம் படிப்பதே என்னை யாராவது பார்த்து, அவர்களுக்கும் புத்தகம் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட வேண்டும் என்பதுதான்.
இந்தப் பயணத்தின் போது பாரதி விஜயம் புத்தகத்தோடு இன்னொரு புத்தகமும் எடுத்துக்கொண்டு போனேன். அந்தப் புத்தகத்தின் பெயர் üவெயிலும் நிழலும்,ý என்கிற பிரமிள் புத்தகம். 51 கட்டுரைகள் கொண்ட இப் புத்தகத்தில் 25 கட்டுரைகள் வரை படித்துவிட்டேன். இப் புத்தகத்தை வெளியிட்டவர் வம்சி புக்ஸ்.
இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. பிரமிள் 1939ல் பிறந்து 1997ல் இறந்து விட்டார். அவருடைய முதல் கட்டுரை எழுத்துவில் 1960ல் பிரசுரமாகி உள்ளது. அப்போது அவருக்கு வயது 21 இருக்கும்.
அவருடைய அந்த முதல் கட்டுரையை இப்போது கூட சுலபமாக படித்துப் புரிந்து கொள்ள முடியாது. அந்தக் கட்டுரையில் காணப்பட்ட சிலவற்றை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். அதற்கு முன்னால் 20 வயதில் இவ்வளவு திறமையாக எழுதிய பிரமிள் ஒரு சாதாரணமான அதிக எதிர்பார்ப்பு இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ முடியாமல் ஏன் அவதிப்பட்டார்? ஒரு ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெறுகிறவர் கூட பிரமிள் எழுதிய இக் கட்டுரை மாதிரி எழுதி இருக்க முடியாது. ஆனால் பிரமிளால் ஒரு சாதாரண யாரையும் சார்ந்து இருக்காத ஒரு வாழ்க்கையை வாழ முடியவில்லை. ஏன்? ஆனால் அவருடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையிலும் அவர் இறந்து போய் 21 ஆகி விட்டதால் இப்போது இதை யோசித்துப் பார்க்கிறேன்.
üசொல்லும் நடையும்ý என்ற முதல் கட்டுரையில், இதுதான் அவருடைய முதல் கட்டுரையா என்று எனக்குத் தெரியாது.
தனித்தமிழ்க் குழுவைத் தாக்குகிறார். üஎப்படி ஹைட்ரஜன் என்று எல்லாரும் புரிந்து வைத்திருக்கிற இரவல் சொல்லை, ஒரு தனித்தமிழ்க் குழு üஐதரன்ý ஆக்க, இன்னொன்று üநீரகம்ý ஆக்க, இந்த இரண்டும் வேண்டாம், ஹைட்ரஜன் போதும் என்று ஏற்றுக்கொள்கிறோமோ, அப்போதே நமக்கு, சப்த வரம்பில் விஸ்தீரணம் உண்டாகிறது.ý
பெரும்பாலும் பிரமிள் கட்டுரைகள் ஆரம்பத்தில் எழுத்து வில் வந்துள்ளதால், சி சு செல்லப்பாவின் நாவல்களை விமர்சனம் செய்துள்ளார். செல்லப்பாவின் ஜீவனாம்சம் நாவலைப் பற்றிப் பேசும்போது, ஒருசில இடங்களில் நனவோடைப் போக்கிலும் நாவல் முழுக்க நினைப்பாதையிலும் போவது மட்டுமல்ல, ஒரே பாத்திரம் மட்டும் தன் அவசங்களோடு விசார ரீதியில் நாவலைத் தூக்கிச் செல்வதும், உண்மையில் தமிழுக்கு ரொம்ப ரொம்பப் புதிது என்கிறார்.
மொழிபெயர்ப்பு என்ற கட்டுரையில் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு, கருத்து நடை மொழிபெயர்ப்பு என்ற இரண்டு ரகங்களை தனித்தனியாகக் குறிப்பிடுகிறார்.
அக உலகக் கலைஞர்கள் என்ற கட்டுரையில் தூல உலகக் கலைஞர்கள், சூட்சும உலகக் கலைஞர்கள் என்ற இரண்டு பிரிவுகளைக் கொண்டு வருகிறார்.
மௌனி பிரமிளிடம் சொன்ன கருத்தை இங்குத் தெரிவிக்கிறார். ‘அகநானூறின் மன உலகம் இந்தப் பண்டிதர்களுக்குத் தெரிந்திருந்தால், இன்று உன் கதைகளையும், என் கதைகளையும் ‘புரியவில்லை,’ ‘தெளிவில்லை,’ என்று இவர்கள் சொல்ல மாட்டார்கள்,” என்று குறிப்பிடுகிறார்.
லா ச ராவின் ‘பச்சைக் கனவு,’ ஆர் சூடாமணியின் ‘மனத்துக்கு இனியவள்’ என்ற புத்தகங்களின் மதிப்புரைகளை எழுதி உள்ளார்.
தேசிய இலக்கியம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை. அதில் பிரமிள் குறிப்பிடுகிற ஒரு விஷயம் : இலக்கியத்தைப் பொறுத்தவரை தேசவாழ்க்கையும், சமூக வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும், வேறு வேறான வாழ்க்கைகள் அல்ல. ஏனென்றால், அவையாவுமே மனித இதயத்தில் நிகழ்கிறவைதான் என்கிறார்.
பிரமிள் பல கட்டுரைகளில் தன்னுடைய தெளிவான பார்வையை உண்டாக்குகிறார். தமிழில் அவரைப் பொறுத்தவரை, மௌனியும், புதுமைப்பித்தனும் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கியவர்கள்.
நான் இப் புத்தகத்தில் 237 பக்கங்கள்தான் படித்திருக்கிறேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் புத்தகம் முழுவதும் படித்து முடித்து இன்னும் எனக்குத் தோன்றுவதை சொல்ல இருக்கிறேன்.
திருச்சி பயணமும் என் புத்தகப் பயணமும்
தினங்களுக்கு முன் நான் திருச்சி சென்றேன். என் பெண்ணை அழைத்துக்கொண்டு. பல்லவன் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் வண்டியில் ஏகப்பட்டக் கூட்டம். ஒரு சீட்டில் நான் உட்கார்ந்து இருந்தாலும் நின்றுகொண்டு பல பயணிகள் இருந்தார்கள். வெயில் புழுக்கம். அது மோசமான ரயில் பயணம் என்று எனக்குத் தோன்றியது.
நான் எப்போதும் பயணம் மேற்கொண்டால் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போவேன். இப்படி பயணத்தின்போதுதான் விழுந்து விழுந்து புத்தகங்களைப் படித்துக்கொண்டு போவேன். பொதுவாக புத்தகங்களைக் குறித்து எனக்கு ஒரு குற்ற உணர்ச்சி உண்டு. புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் படிப்பதில்லை என்று. அந்தக் குற்ற உணர்ச்சியைப் போக்கவே பயணத்தின்போது புத்தகங்களை ஒரு ஜோல்னாப் பையில் சுமந்து செல்வேன்.
என்ன புத்தகங்களைப் படிக்க எடுத்துக்கொண்டு போவது என்ற குழப்பம் எனக்கு ஏற்படாமல் இருக்காது. கடைசி நிமிடம் வரை யோசித்துக்கொண்டிருந்தேன். என் புத்தக வரிசையில் üசிதைந்த கூடுý என்ற தாகூரின் புத்தகம் ஒன்று இருந்தது. அதன்பின் üநிலவு தேயாத தேசம்ý என்ற சாரு நிவேதிதா புத்தகம் ஒன்றும் இருந்தது.
இந்த இரண்டு புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு போகவில்லை. அதற்குப் பதில் ஜனவரி மாதம் வாங்கிய பாரதி விஜயம் என்ற புத்தகத்தை எடுத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட 1000 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தை நான் நிச்சயம் படித்து முடிக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் கட்டிலில் இருக்கும் இப் புத்தகத்தை கொஞ்சமாவது தொட்டாவது பார்க்கலாம் என்று எடுத்துக்கொண்டேன்.
அடுத்தப் புத்தகம் பிரமிளின் üவெயிலும் நிழலும்ý என்ற புத்தகம். பிரமிள் இறந்து 21 ஆண்டுகள் போய்விட்டன. சமீபத்தில் பிரமிளைப் பற்றி பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவருடைய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்ற இப் புத்தகத்தைப் படிக்கலாமென்று எடுத்துக்கொண்டு போனேன்.
இரண்டு தமிழ் புத்தகங்களை எடுத்துக்கொண்டாயிற்று, ஒரு ஆங்கிலப் புத்தகம் எடுத்துக்கொள்ளலாமென்று, மலிவு விலையில் நான் வாங்கிக் குவித்திருக்கும் புத்தகத்தின் ஒன்றான சிட்னி ஷெல்டனின் மிஸ்டரஸ் ஆப் த கேம் என்ற புத்தகம் எடுத்துக்கொண்டேன். இப் புத்தகத்தை எழுதியவர் தில்லி பேக்ஷ்வா.
ரயிலில் கூட்டமான கூட்டம். நான் பெரிய புத்தகமான பாரதி விஜயத்தை எடுத்துக்கொண்டேன்.
ஸி சுப்பிரமணிய பாரதி சில சின்னஞ்சிறு கதைகள் என்ற தலைப்பில் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் (இது மாதிரியான நீளமான பெயரை ஒருவர் உச்சரிக்க ஆரம்பித்தால் மூச்சிறைக்க ஆரம்பித்துவிடும்) எழுதிய 14 ஆம் பக்கங்களிலிருந்து 87ஆம் பக்கம் வரை படித்துக்கொண்டே போனேன். இந்த ஒரு நீளமான கட்டுரையை ஒருவர் எழுதுவதற்கே அசாத்தியமான திறமை வேண்டும். இதில் கடற்கரை எழுதிய எழுத்தை மாதிரிக்கு நாம் படிக்க வேண்டும்.
‘காந்தியைச் சந்தித்து திருவல்லிக்கேணி கூட்டத்திற்குப் பாரதி அழைப்புக்கொடுத்த ருசிகர சம்பவம் எந்த நாள் நடந்தது? நீர்குமிழி போல் வரலாற்றில் நுரைக்கும் இக்கேள்வியை யாரும் ஊன்றிப் போகவில்லை.’
‘சீனி விஸ்வநாதன் பதிப்பித்த கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் தொகுதி ஒன்றில் ஜி சுப்பிரமணிய அய்யர் தரப்பு விளக்கம் மட்டுமே இடம் பெற்றுள்ளது..’
கிட்டத்தட்ட 43 ஆண்டுகளுக்கு முன்னால் நான் தாம்பரத்தில் உள்ள கிருத்துவக் கல்லூரியிலிருந்து மின்சார வண்டியில் வந்துகொண்டிருக்கிறேன். என் கையில் பாரதியார் கட்டுரைகள். தொகுத்தவர் பெ தூரன். ஆவேசமாகப் படித்துக்கொண்டு வருகிறேன். கடற்கரை புத்தகம் எடுத்துப் படிக்கும் இத் தருணத்தில் 40 வருடக் கதை ஞாபகத்திற்கு வருகிறது.
நான் அதிகமாக சேர்த்து வைத்திருப்பது பாரதியார் சம்பந்தமான புத்தகங்கள். பல கட்டுரைத் தொகுதிகள். பல விதமான அளவில் அவருடைய கவிதைத் தொகுதிகள்.
தனித்தனியாக பல கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இது. ஒவ்வொன்றாகப் படிக்கும்போது பாரதியார் என் கண் முன்னால் நடமாடுவதுபோல் தோன்றுகிறது.
பாரதியைப் பற்றி ஒவ்வொருவரும் எழுதி இருக்கிற கட்டுரைகளைப் படிக்க படிக்க ஏதோ ஒருவித சோக உணர்வு உருவாகிறது. ஏன் என்ற காரணம் புரியாத சோக உணர்வு.
பாரதியார் வந்தார் என்ற தலைப்பில் என் நாகஸôமி எழுதியிருக்கிறார். மடுவில் விபத்து என்ற தலைப்பில் இக் கட்டுரை போய்க்கொண்டிருக்கிறது. பாரதியாரும் நாகஸôமியும் எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க மடுவிற்குச் செல்கிறார்கள். அங்கு அல்லிக்கொடி இருக்கும் இடத்திற்குப் போய் பாரதியார் தண்ணீரில் மாட்டிக்கொள்கிறார். நாகஸôமி அவரைக் காப்பாற்றி விடுகிறார். அதற்கு பாரதி இப்படி கூறுகிறார். தண்ணீருக்குள்ளே வளர்ந்து வந்த அல்லிக்கொடிகள் என்னைச் சாப்பிடப் பார்த்தனவே நானும் இரையாகி விடப் பார்த்தேனே என்கிறார். கூடவே,üஇந்தப் புண்ணிய பூமிக்குச் செய்ய வேண்டிய சேவை செய்யமுடியாமல் போகப்பார்த்ததே, நீ அல்லவா என்னைக் காப்பாற்றினாய் என்கிறார் நாகஸôமியைப் பார்த்து பாரதி. புத்தகத்தில் இந்தப் பகுதியைப் படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
கட்டுரை வெளியான குறிப்புகள் என்ற பெயரில் 61 குறிப்புகளைக் கொடுத்துள்ளார். இவை எல்லாவற்றையும் எடுத்துப் படித்து தேர்ந்தெடுத்து புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். 1000 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் 179 பக்கங்களே படித்துள்ளேன். இன்னும் படிக்க வேண்டிய பக்கங்கள் அதிகமாக உள்ளன. இன்னும் படித்து முடித்தபின் என் கருத்துக்களை ஆழப்படுத்துவேன்.
(இன்னும் வரும்)
(07.05.2018)
ü
ü
105வது இதழ் நவீன விருட்சம் வந்து விட்டது….
நவீன விருட்சம் 105வது இதழ் வந்துவிட்டது. உண்மையில் மார்ச்சு மாதம் வந்திருக்க வேண்டும். கொண்டு வர முடியவில்லை.
ஏப்ரல் முதல் வார்த்திலாவது எப்படியாவது முடித்திருக்க வேண்டும். முடியவில்லை. மே மாதம்தான் முடிந்திருக்கிறது. என் மேலேயே எனக்குக் கோபம். ஏன் முடிக்கமுடியவில்லை என்று. பத்திரிகையை ஆரம்பித்து முடிக்கும்போது ஒருவித ரிதம் உருவாகிறது. அப்படியே அதைக் கொண்டு போனால் எளிதாக பத்திரிகையை முடித்துவிடலாம். பத்திரிகையை முடித்தவுடன் என் கவனம் சிதறி விடுகிறது. பத்திரிகையை அனுப்புவதில் பல நாட்கள் எடுத்துக்கொள்கிறேன். பத்திரிகையை உருவாக்கும் ரிதம் சிதறி விடுகிறது.
************
இதோ பத்த்திரிகையை எடுத்துக் கொண்டு வருகிறேன். யார் கண்ணிலும் படாமல் ஜாக்கிரதையாகத்தான் எடுத்துக்கொண்டு வருகிறேன். இந்த முறை 7 பன்டில். என் வீட்டில் உள்ளவருக்கு இந்தப் பன்டில் கண்ணில் படாது. படக்கூடாது. நான் விருட்சம் 105 வந்து விட்டது என்று உற்சாகமாகக் கத்துகிறேன். என்னை அறியாமல். இன்னொரு குரல் பலமாக ஒலிக்கிறது. üஎப்போது நிறுத்தப் போகிறீர்கள்?ý இதோ என் வீட்டிலேயே எதிர்ப்புக் குரல். 30 ஆண்டுகளாக இந்த எதிர்ப்புடன்தான் பத்திரிகையை நடத்திக்கொண்டு வருகிறேன்.
***************
இந்த முறைதான் இந்தக் கேள்வி என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. எல்லோரும் அவரவவர் விருப்படி இருக்கிறார்கள். ஒரு இதழ் நவீன விருட்சம் விலை : ரூ.20 தான். 80 பக்கங்கள் அடிக்கிறேன். எனக்கு 500 பேர்கள் தேவை. ஒவ்வொருவரும் ரூ.20 கொடுத்து என் பத்திரிகையை வாங்க விரும்ப மாட்டார்களா? ஏன் 20 ரூபாய் கொடுக்க விரும்பவில்லை. நான் தினமும் ரூ.20க்கு காப்பிக் குடித்துக்கொண்டிருக்கிறேன். யாராவது நவீன விருட்சம் மாதிரியான ஒரு பத்திரிகையை என்னிடம் கொடுத்தால் ரூ.20ஐக் கொடுத்து வாங்கி கண்ணில் ஒற்றிக்கொள்வேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் இந்தப் பத்திரிகை வருகிறது. ரூ.20 ஒன்று மில்லை. எனக்குத் தேவை 500 பேர்கள்.
**********
இந்த இதழில் 6 சிறுகதைகள், 10 கவிதைகள், ஒரு அஞ்சலி கட்டுரை, நிகனோர் பார்ரா வின் மொழிப்பெயப்புக் கட்டுரை, ஒரு புத்தக விமர்சனம். இதோ கீழே விபரம் அளிக்கிறேன்.
1. கடிதம் – வளவ துரையன்
2. விவேகம் – கவிதை – வைதீஸ்வரன்
3. பிணை – சிறு கதை – சிந்துஜா
4. பரீக்ஷா ஞாநியும் நானும் – அஞ்சலி – அழகியசிங்கர்
5. அன்ன பூரணேஸ்வரி – கவிதை – லாவண்யா சுந்தர்ராஜன்
6. லூனா பூக்களின் பருவம் – ஸ்ரீசங்கர்
7. ஜன்னலிலிருந்து புறாக்கள் பறப்பதைப் பார்த்தல்
மொழிபெயர்ப்பு கவிதை – க்ருஷாங்கினி
8. வாக் – சிறுகதை – அழகியசிங்கர்
9. ஆதி வராகம் – சிறுகதை – பா ராகவன்
10. ஜிட்டு கிருஷ்ணமணி – சிறுகதை – சிறகு இரவி 045
11. வெளியே செல்லத் தயாராகிறது – கவிதை – ஜான்னவி
12. ஜான்ஸி கவிதை
13. கண்மறை துணி-புத்தகவிமர்சனம்-கலாப்ரியா
14. பிரதீபன் கவிதை
15. கடித இலக்கியம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்
16. நீதி – சிறுகதை – பானுமதி ந
17. சர்மாவைப் பின்பற்றுதல் – கவிதை – பயணி
18. சற்றுமுன் தூறலாய்ப் பெய்த மழை – கவிதை – சிபி
19. முடிவு – சிறுகதை – டாக்டர் ஜெ பாஸ்கரன்
20. எதிர்க் கவிதையின் பிதா மகன்-நிகனோர்-
பார்ரா
(1914-2018)-ராஜேஸ் சுப்பிரமணியன்
21. சுந்திரமித்திரன் கவிதை
21. உரையாடல்
இன்னும் பல படைப்பாளிகளின் படைப்புகள் தேர்ந்தெடுத்துள்ளேன். அடுத்த 106வது இதழ் ஜøலை மாதம் வரும்.
பிரமிளின் மீறல் பேட்டி…
20 ஆண்டுகளுக்கு முன்னால் பிரமிள் ஒரு ஜனவரி மாதம் ஆறாம் தேதி இறந்து விட்டார். அதை நினைவுப்படுத்தும் நிகழ்ச்சியாக இலக்கியவீதி இனியவன் üகருத்தில் வாழும் கவிஞர்கள்,ý என்ற தலைப்பில் பிரமிளை ஞாபகப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. பிரமிள் படைப்புகளைப் பற்றி பேச கால சுப்பிரமணியன். üஅன்னம் விருது பெற்றவர் கவிஞர் ஸ்ரீநேசன்.
நான் திரும்பவும் என் நூலகத்திலிருந்து பிரமிளை தோண்டி எடுக்க ஆரம்பித்தேன். பிரமிள் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் நான் தவித்த தவிப்பைப் பற்றி நினைத்துக்கொண்டேன். வேலூர் பக்கத்தில் உள்ள கரடிக்குடி என்ற கிராமத்தில் உள்ள மருத்துவ மனையில் அவருடைய பூத உடலைப் பார்க்கும் வரை என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது.
அவர் பூத உடலைப் பார்த்தவுடன் என் படபடப்பு அடங்கிப்போய் சாதாரண நிலைக்கு மாறிவிட்டேன். இந்த மாற்றம் எனக்கு இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.
மீறல் குழுவினர் பிரமிளுக்கு ஒரு சிறப்பு மலர் கொண்டு வந்தார்கள். அந்தக் குழுவினர் பலரை அணுகி பிரமிள் படைப்புகளைப் பற்றி எழுதி கட்டுரை கேட்டார்கள். பிரமிள் என்றால் எதற்கு வம்பு என்று நினைத்துக்கொள்வார்கள். பலர் எழுதித் தரவில்லை. அப்போது பிரமிளை அடிக்கடி பார்ப்பேன். என்னிடமும் போனபோகிறது என்று, பிரமிள், üஒரு கட்டுரை எழுதித் தாருங்கள்,ý என்று கேட்டார். என்னிடம் அவருக்கு அந்த சமயத்தில் நம்பிக்கை எழவில்லை. ஆனால் நான் அவர் கவிதைகளைக் குறித்து கட்டுரை எழுதிக்கொடுத்தேன். அக் கட்டுரையைப் படித்துவிட்டு எப்போதும் பாராட்டுவார். பிரமிளின் சில கருத்துகளுக்கு நான் உடன்படவில்லை.
திரும்பவும் அவர் கொடுத்த பேட்டி, விமர்சனக் கட்டுரைகள் படிக்கும்போது ஒரு துப்பறியும் நாவல் படிப்பதுபோல் சாகசம் நிரம்பியதாக இருந்தது. ரஜனி என்ற நடிகர் ஆன்மிக அரசியல் என்று சொல்வதுபோல் பிரமிள ஆன்மிக விமர்சனம் செய்து உள்ளார். அவருடைய கவிதைகளில் எனக்குப் பிடித்தப் பகுதி கடைசியாக எழுதிய அதிரடிக் கவிதைகள்தான். ஒரே நாளில் 30 கவிதைகள் எழுதினார் என்று கால சுப்பிரமணியன் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாக இருந்தது. அதிரடிக் கவிதைகள் என்ற பெயரை சுப்பிரமணியன்தான் குறிப்பிட்டிருக்கிறார்.
20 ஆண்டுகள் கழித்து திரும்பவும் பிரமிள ஞாபகப்படுத்தும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்த அமைப்பாளர்களுக்கு என் நன்றி உரித்தாகும்.
பிரமிள் மீறல் பேட்டியில் எழுதியவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
‘ ‘உண்மையை அடைவதற்கு ஒரே வழி மௌனம்தான்.’
‘இனக்குழுவாதப் பார்வை உள்ள ஒருவர், எவ்வளவு பெரிய திறனாளியாக இருந்தாலும், போகப்போக அந்தத் திறனை இந்த இனக்குழுப் பார்வை அரித்து ஓட்டை போட்டுவிடும்.’
‘கவிதை இன்டலக்சுவலான அதிர்ச்சியை ஏற்படுத்துகிற ஒரு வெளியீடு. இன்டலக்சுவலாக மட்டுமல்ல, ஆழ்ந்த தேடல் சமாச்சாரங்களில் கூட ஒரு அதிர்ச்சியைக் கவிதையால் ஏற்படுத்த முடியும்.’
‘தமிழ் ‘இலக்கிய’ எழுத்தாளர்களிடையிலே ஆழமான வாசகர் ஒருவரை இனித்தான் நான் சந்திக்க வேண்டும்.’
நிழலும் காற்றும்….
புத்தகம் விற்கிறதோ இல்லையோ அற்புதமான காற்றும், மரங்களின் நிழலும் என்னைப் பரவசப்படுத்தாமல் இல்லை. எதிரில் ஒரு மரம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமாய் காட்சி அளித்தது. அந்த மரத்தை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்துவிடலாம். அவ்வளவு அற்புதம் அந்த மரம்.
நூல் நிலையம் இருந்தத் தெருவில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் ஒவ்வொருவர் புத்தகம் வாங்கியிருந்தால், நான் கொண்டு சென்ற புத்தகங்கள் எல்லாம் விற்றிருக்கும். ஆனால் யாரும் வீட்டை விட்டு வெளியில் வந்த மாதிரி தெரியவில்லை. அதுதான் உலகம்.
‘புறாப்பித்து’ என்கிற எஸ் ராமகிருஷ்ணன் கதை
என் கையில் 18.04.2018 ஆம் தேதியிட்ட ஆனந்தவிகடன் கிடைத்தது. உடனே அதில் வெளிவந்த கதையைப் பார்த்தேன். எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய ‘புறாப்பித்து’ என்ற கதை. உடனே படிக்க ஆரம்பித்தேன். எனக்கு என்ன தோன்றியது என்றால் ராமகிருஷ்ணனின் இந்தக் கதையை எப்படி ஆனந்தவிகடனில் பிரசுரம் செய்தார்கள் என்றுதான். இது ஒரு சிறுபத்திரிகையில் வர வேண்டிய கதை. இக் கதையை ஆனந்தவிகடன் பிரசுரம் செய்ததன் மூலம் ஆனந்தவிகடன் தன் தரத்தை உயர்த்திக்கொண்டதாகத்தான் நான் சொல்ல விரும்புகிறேன்.
ராமகிருஷ்ணன் கதைகளை வாசிக்கும் வாசகர்கள் இக் கதையை எளிதாகப் புரிந்துகொள்வார்கள். ஆனால் சாதாரண ஆனந்தவிகடன் வாசகனுக்கு இக் கதை புரியுமா என்ற கேள்வி என்னுள் எழாமல் இல்லை. ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் இதுமாதிரியான கதைகளைப் பிரசுரம் செய்து சிறுபத்திரிகை (ஒன்றிரண்டு) என்று வரும் பத்திரிகைகளின் இடத்தை வெற்றிடமாக மாற்றி விடுகிறார்கள் என்றும் தோன்றுகிறது.
அதனால் இனிமேல் சிறுபத்திரிகைகள், முன்பு பெரும் பத்திரிகைகளில் வெளிவந்த சாதாரண கதைகளைப் பிரசுரம் செய்து தங்கள் வெற்றிடத்தை நிரப்ப வேண்டுமென்று தோன்றுகிறது. சிறு பத்திரிகை பெரும் பத்திரிகைக்கு நடுவில் இருக்கும் கோடு அழிக்கப்பட்டு விட்டதாக நினைக்கிறேன். இந்த இடத்தில் சிறுபத்திரிகை எதற்கு என்ற கேள்விக்குப் போகவில்லை. எழுதுபவர்கள் அதிகமாக இருக்க இருக்க சிறுபத்திரிகைகளும் அவசியம்.
இனி ராமகிருஷ்ணன் கதைக்கு வருகிறேன். கிட்டத்தட்ட இக் கதையில் வரும் கோவர்த்தன் நிலைக்குத்தான் பதவி மூப்பு அடையும் தறுவாயில் இருக்கும் வயதானவர்கள் பலரும் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்களுக்கு என்ன செய்வது என்பது தெரியவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருந்து இருந்து அவர்களுக்கு வேற எதையும் செய்ய முடியவில்லை.
அவர் அலுவலகக் கட்டடத்திற்கு எதிரில் இருக்கும் மத்திய உணவு சேமிப்பு கிடங்கு சுவர் மீது வீற்றிருக்கும் புறாக்கள் மீது கவனம் போகிறது. வரிசையாக புறாக்கள் அமர்ந்து இருக்கின்றன. அதில் ஒரு புறா மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. அது சாம்பல் நிறத்தில் இருக்கிறது. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள்.
திடீரென்று வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்ததுபோல் இந்தப் புறாக்கள் மீது கவனம் கொள்கிறார் கோவர்த்தன். புறாக்களை எண்ணத் தொடங்குகிறார். அவர் கண் பார்வையில் தென்படும் புறாக்கள் 16 எண்ணிக்கைக் கொண்டதாக உள்ளன.
தாம்பரத்தில் குடியிருக்கும் அவர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மேற்கு மாம்பலம் என்று பல இடங்களில் கூடும் பல புறாக்களை எண்ண ஆரம்பிக்கிறார். ஒரு சிறிய நோட்டில் குறிப்பு எடுத்துக்கொள்கிறார். எந்தந்த இடத்தில் எத்தனைப் புறாக்கள் என்று. கிட்டத்தட்ட கோவர்த்தன் புறா மாதிரியாக மாறி விடுகிறார். புறா மாதிரி சன்னமாகப் பேசுகிறார். அவர் குடும்பத்தாருக்கே அவர் மாற்றம் ஆச்சரியமாக இருக்கிறது. புறாக்கள் வானுலகின் தூதுவர்கள், புறாக்களின் சத்தம் காசநோயின் இழுப்புச் சத்தம்போல் இருக்கிறது என்றெல்லாம் எழுதியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.
கோவர்த்தன் அலுவலகத்தில் பணிபுரியும் ஹெட்கிளார்க் சுந்தரம் புறாவைப் பற்றிய தகவலை அவருடன் பகிர்ந்துகொள்கிறார். இந்த அலுவலகத்தில் புறாவைத் தவிர வேற எதுவும் இல்லை என்பதுபோல் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
கோவர்த்தன் பர்தா அணிந்த இளம்பெண் ஒருவளைச் சந்திக்கிறார். அவளும் புறாவைத் தேடுபவளாக இருக்கிறாள். புறாவைப் பார்த்து பரவசம் அடைகிறாள். அவளுக்கு கோவர்த்தனைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. கோவர்த்தன் புறாவின் எண்ணிக்கையை ஒரு நோட்புக்கில் குறித்து வைத்திருப்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. அதை அவரிடமிருந்து வாங்கி வைத்துக்கொள்கிறாள். கோவர்த்தனிடமிருந்து அந்த நோட்புக்கை வாங்கிக்கொள்ள ஒரு டீ வாங்கிக்கொடுக்கிறாள். கோவர்த்தன் அந்தப் பெண் பெயரைக் கேட்கும்போது அவள் சொல்லாமல் போய்விடுகிறாள். புறாவைச் சுற்றிக்கொண்டிருந்தால் புறா ஒருவர் கனவிலும் வரும் என்கிறாள் அந்தப் பெண்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கோவர்த்தன் அலுவலகத்தில் உரையாடும்போது அவர் இயல்புக்கு மாறாக சத்தமாகப் பேசுவதுபோல் கதையை முடிக்கிறார் ராமகிருஷ்ணன். வயது மூப்பு, வாழ்க்கையின் அலுப்பு என்று எல்லாவற்றையும் கதையில் கொண்டு வருகிறார் ராமகிருஷ்ணன்.
1. இந்தக் கதை புறாக்களைப் பற்றி பேசுகிறதா? புறாக்களைச் சுற்றிக்கொண்டிருக்கும் மனிதர்களின் இயல்பைப் பற்றிப் பேசுகிறதா?
2. வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் அற்ற கோவர்த்தனுக்கு புறாக்களைப் பார்ப்பது ஒரு பிடிப்பாக மாறி விடுகிறதா?
வாசிப்பனுபவத்தை நீடித்துக்கொண்டு போகும் கதைகளில் இதுவும் ஒன்று என்று சொல்லத்தோன்றுகிறது.