திருக்குறள் சிந்தனை 7

காலையில் எழுந்தவுடன் ஒரு குறளைப் படிக்கலாம் என்று எண்ணிப் படித்துக்கொண்டு வருகிறேன். இப்படிப் படிப்பது நல்ல அனுபவமாக இருக்கிறது. சில குறள்கள் படிக்கும்போதே நேரிடையாகவே நமக்குப் புரியும். சில குறள்களைப் படிக்கும்போது உரையின் தயவு நமக்குத் தேவைப்படும். பரிமேலழகர் உரையைப் படித்துப் புரிந்துகொள்வதுதான் சிரமம் என்று என் நண்பர்கள் பலர் கூறி உள்ளார்கள். என்னிடம் பரிமேலழகர் உரை இல்லாததால் நான் முயற்சி செய்யவில்லை. இப்போது இந்தக் குறளைப் பார்க்கலாம்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

தனக்குவமை இல்லாதான் யார்? கடவுள் என்கிறார் நாமக்கல் கவிஞர். அந்தப் பகவானைப் பணிந்தால்தான் நாம் ஓரளவு ஆசைகள் குறைந்து மனக்கவலை இல்லாமல் வாழலாம் என்கிறார் . நாவலரோ அறிவாற்றலில் சிறந்த சான்றோர் என்கிறார். அந்தச் சிறந்த சான்றோர் யார் என்று கண்டுபிடித்து ஆசைகளைக் குறைத்துக்கொண்டு அவர்கள் வழியில் சென்று மனக்கவலையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார். இதில் கடவுளையோ சான்றோரையோ நான் சொல்ல விரும்பவில்லை. மனக்கவலை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் ஆசைகளைக் குறைத்துக்ùôள் என்று பூடகமாக திருவள்ளுவர் சொல்கிறார் என்று நினைத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அதனால் திருவள்ளுவர்தான் சான்றோர். திருவள்ளுவர்தான் கடவுள். இக்குறளில் எனக்குப் பிடித்த வரி : மனக்கவலை மாற்றல் அரிது.

திருக்குறள் சிந்தனை 6

கடவுள் வாழ்த்து என்ற பெயரில் 10 குறள்கள் எழுதி உள்ளார். ஒவ்வொரு குறளையும் ஒவ்வொரு விதமாக கட்டமைத்துள்ளார். இதோ இந்தக் குறளைப் பார்ப்போம்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

ஐம்பொறிகள் வாயிலாகச் செயல்படும் ஐம்புலன்களையும் நம் கட்டுக்குள் கொண்டு வந்தால் மெய்யான ஒழுக்க நெறியில் நாம் வாழலாம் என்கிறார் திருவள்ளுவர். இந்த ஐம்பொறிகளையும் கட்டுக்குள் கொண்டு வருபவர் கடவுள்தான். நாம் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த நெறி அவசியம் என்கிறார்.

நெறிநின்றார் நீடுவாழ் வார் என்ற வரி பிடித்திருக்கிறது. ஐம்புவன்களான மெய், வாய், கண், மூக்கு, செவியைக் கட்டுக்குள் கொண்டு வருதல் என்றால் என்ன? நம் கட்டுக்குள் இவை அடங்கி வருமா என்பது புரியவில்லை. இந்தக் குறள் நம்மை யோசிக்க வைக்கிறது. ஒருவிதத்தில் இக்குறள் மருத்துவக் கருத்தாகவும் இருக்கும்போல் தோன்றுகிறது.

திருக்குறள் சிந்தனை 5

நான் சீர்காழி என்ற இடத்தில் பொது வங்கியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுதான், திருக்குறள் வெறியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் நூற்றுக்கணக்கில் திருக்குறள் புத்தகங்கள் வாங்கி எல்லோருக்கும் இலவசமாக வழங்கிக் கொண்டிருப்பார். அவரும் என்னைப் போல என் அலுவலகத்தில் ஒரு அலுவலர். அவர் ஏற்பாடில் எங்கள் வங்கியில் ஒரு போர்டு வாங்கி ஒவ்வொருநாளும் திருக்குறளும் அதன் கருத்துரையும் எழுதி வாடிக்கையாளர் பார்வையில் படும்படி வைப்பேன். ஏதோ ஒரு திருக்குறள் புத்தகத்தில் உள்ள ஏதோ ஒரு குறளை எடுத்து மூலத்தையும் கருத்தையும் எழுதி வைப்பேன். உண்மையில் யாரும் படிக்க மாட்டார்கள். ஏன் என்பதற்கு ஒரு காரணம் கண்டுபிடித்தேன். உண்மையில் போர்டில் திருக்குறள் எழுதினாலும் எந்த உணர்வுநிலையும் இல்லாமல் மரக்கட்டைபோல் ஏதோ இதெல்லாம் செய்ய வேண்டுமென்று செய்து வந்தேன். இதைத்தான் வாடிக்காளர்களும் பிரதிபலித்ததாக நினைக்கிறேன்.
இதோ இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு குறள் விதம் எடுத்து எழுதிக்கொண்டிருக்கிறேன். உலகத்தில் உள்ள எல்லா தத்துவங்களும் திருக்குறளின் ஒன்றரை அடியில் வந்து விடும்போல் தோன்றுகிறது.
இன்றைய திருக்குறளை இங்கே குறிப்பிடுகிறேன்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இந்தக் குறளுக்கு இரா கோ அண்ணாமலை இப்படி அர்த்தம் சொல்கிறார். நல்வினை தீவினை, பாவம் புண்ணியம், புகழ்ச்சி, இகழ்ச்சி என்ற இவ்வுலகின் செயல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் இறைவன் என்கிறார் அவனை நாடிச் செல்லும்போது எல்லாம் ஒன்றே என்று தோன்றும் என்கிறார். இதை இளங்குமரனார் வேறு விதமாகக் கூறுகிறார். நன்மைக்கு உறைவிடமானவனின் மெய்வழியில் நடப்பவர்க்கு மயக்கும் இன்ப துன்பமில்லை என்கிறார்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் என்ற வரி மனதை விட்டு அகலவில்லை.

திருக்குறள் சிந்தனை 4

ஒரு குறளை எடுத்துப் படிப்பதற்கு முன், என்னிடம் உள்ள பல உரைகளை எடுத்துப் படித்துப் பார்க்கிறேன். பிறகுதான் புரிந்தது பலரும் பலவிதமாக குறள்களை எடுத்து அதன் கருத்துக்களைப் பலவிதமாக சொல்கிறார்கள் என்று. கருத்தைப் படிப்பவர்க்கு தெளிவாகக் கூறிவிடுதற்கு குறளே உதாரணமாகத் திகழ்கிறது. அது மட்டுமே படித்தால் போதும் என்றும் எனக்குப் படுகிறது.
உதாரணமாக இந்தக் குறள் :

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

இந்தக் குறளே நமக்கு எல்லா அர்த்தங்களையும் வெளிப்படுத்தி விடுகிறது.
இதோ திருக்குறளுகஙகு நாவலர் உரை தந்திருக்கிறார். அதைத் தருகிறேன்.
விருப்பும் வெறுப்பும் அற்ற நடுநிலையில் நின்று, அறிவாற்றலில் சிறந்து வாழும் சான்றோர் காட்டிய வழியில், அவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எந்த ஒரு காலத்திலும் துன்பம் ஏற்படுவது இல்லை.
இந்த இடத்தில் சான்றோர் என்பவர்கள் எங்கே இருக்கிறார்கள். யாரைச் சான்றோர் என்று குறிப்பிட முடியும்?
நாமக்கல் கவிஞர் இப்படிக் கூறுகிறார். இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்பதை உணர்ந்து நாமும் விருப்பு வெறுப்பின்றி அவனை வணங்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்போதும் துன்பப்படாது இருக்கலாம்
இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள விருப்பு வெறுப்பில்லாத நிலையில் இருக்க வேண்டும் என்று கூறலாமா? இந்தக் குறளில் யாண்டும் இடும்பை இல என்ற வரி பிடித்திருக்கிறது.

திருக்குறள் சிந்தனை 3

ஒவ்வொரு குறளையும் திருவள்ளுவர் எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படி எழுதி உள்ளார். கடவுள் வாழ்த்து என்று துவங்கும் இந்த அதிகாரத்தில் கடவுளைப் பற்றியே எழுதி உள்ளார். திருவள்ளுவர் கூறும் கடவுள் யார்?

இந்த மூன்றாவது குறள்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

இதற்கு கருத்துரை வழங்கிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள், அறிவுக்கெல்லாம் எட்டாப் பொருளான இறைவன் எங்கே இருக்கிறான் என்றால், நம்முடைய மனத்தாமரையில். அதை உணர்ந்து வணங்கினால் உலகில் கவலையின்றி வாழலாம் என்கிறார்.

இந்தக் குறளில் மலர்மிசை நிலமிசை வார்த்தைப் பிரயோகங்கள் என்னை வசப்படுத்துகின்றன. எட்டாப் பொருளான இறைவன் என்பதை கடவுள் தன்மையை என்று கூறலாமா? கடவுள் தன்மை என்றால் என்ன? இன்று யாரிடமும் அது இருப்பதாக தெரியவில்லை.

நேஷனல் புக் டிரஸ்ட்டும், சாகத்திய அகாதெமியும்…..

இந்த இரண்டு அமைப்புகளும் இந்தியாவில் உள்ள பல மொழிகளிலிருந்தும் தமிழில் புத்தகங்களைக் கொண்டு வருகின்றன. பல தமிழ் அறிஞர்கள் தங்களுடைய உழைப்பால் இவற்றைச் சாத்தியமாக்கி உள்ளார்கள். இவர்கள் கொண்டு வருகிற புத்தகங்களும் மிகக் குறைவான விலையில் உள்ளன.
நான் ஒரு புத்தகம் வைத்திருக்கிறேன். முதல் பதிப்பு 1975ஆம் ஆண்டு. புத்தகம் பெயர்.கறையான். வங்காளத்தில் குண்பேகா. எழுதியபர் சீர்ஷேந்து முகோபாத்யாய. இது இவருடைய முதல் நாவல். 1971ஆம் ஆண்டு எழுதிய இவருடைய இன்னொரு நாவலான பாரா பாரும் என்ற வங்காளி நாவலையும் படிக்க விரும்புகிறேன். ஆனால் மொழி பெயர்க்கப்பட்டதா என்பத தெரியவில்லை. கறையான் என்ற நாவலை வங்காளி மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் சு கிருஷ்ணமூர்த்தி. இந்தப் புத்தகத்தை இரண்டாவது முறையாகப் படிக்கிறேன். நேரிடையான மொழிபெயர்ப்பு.
பல ஆண்டுகளுக்கு முன்னால் இப்புத்தகத்தை ரசித்துப் படித்தவன். திரும்பவும் எடுத்துப் படிக்கும்போது நான் ரசித்த நாவல்களில் இது ஒன்று என்ற எண்ணம் இருந்தது தவிர என்ன மாதிரியான நாவல் என்பது ஞாபகத்தில் இல்லை.
திரும்பவும் இந்த நாவலை எப்படியாவது படித்து முடிக்க வேண்டுமென்று எடுத்துப் படிக்கும்போது ஒவ்வொரு பகுதியாக இப் புத்தகம் பொடிப் பொடியாக கிழிந்து விடுகிறது. இப்போது எடுத்துப் படிக்கும்போது இப் புத்தகத்தின் அட்டைப் படம் போய்விட்டது. உடைந்து உடைந்து போயிற்று, இப்போதோ பக்கங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால் எப்படியாவது படித்துத் தீர வேண்டுமென்று தீர்மானித்துள்ளேன். ஜாக்கிரதையாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு பக்கமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். மடிக்கக் கூட இல்லை. படிக்கப் படிக்க சீக்கிரம் முடிந்து விடக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால் 100 பக்கங்கள் வரை முடித்துவிட்டேன். இன்னும் 46 பக்கங்கள்தான் படிக்க வேண்டும். படித்துவிட்டு ஜாகக்ரதையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இன்று சென்னையில் உள்ள நேஷனல் புக் டிரஸ்ட் அலுவலகம் சென்று இந்தப் புத்தகம் கிடைக்குமா என்று கேட்டேன். திரும்பவும் அச்சிடப் போவதாக சொன்னார்களே தவிர எப்போது என்று சொல்லவில்லை.
இந்த நாவலில் வரும் ஷ்யாம் வித்தியாசமானவன். அவன் அலுவலகத்தில் நல்ல வசதியாக வாழ்ந்து வந்தவன். அவன் அப்படியே தொடர்ந்து பணியில் இருந்தால், ஒரு வீடு வாங்கிவிடுவான். இன்னும் வசதிகளைப் பெருக்கிக் கொள்வான். அப்படித்தான் இருந்தாக வேண்டும். ஆனால் அவனைவிட அதிகாரி ஒருவன், ஒருநாள் கோபத்தில் ஷ்யாமை வேசி மகனே என்று திட்டி விடுகிறான்.
இதை ஏதோ ஆத்திரத்தில் சொல்லிவிட்டான் என்று விட்டுவிடலாம். ஆனால் ஷ்யாமால் அதைத் தாங்க முடியவில்லை. அவன் யோசித்து வேலையை ராஜிநாமா செய்து விடுகிறான். இப்படிப் போகிறது இந்தக் கதை.
வேற்று மொழியிலிருந்து குறிப்பாக இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளிலிருந்து நமக்கு இதுமாதிரியான மொழிபெயர்ப்பு நூல்கள் படிக்கக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் நம் அறிவு விலாசமடையும். ஆனால் நம் படைப்புகள் மற்ற மொழிகளுக்கு மாற்றப்படுகிறதா என்பது நமக்குத் தெரியாது.
பரிசுப் பெற்றவர்களின் படைப்புகளைத்தான் இந்த நிறுவனங்கள் மொழிபெயர்க்கும். ஆனால் பரிசு எதுவும் கிடைக்காத எத்தனையோ திறமையான படைப்பாளிகளின் படைப்புகள் நமக்குத் தெரியாமல் போகத்தான் போகும். இது ஒரு குறைதான் என்றாலும், இந்த அளவிற்காகவாவது இந்தத் தேசிய நிறுவனங்கள் பெரிய முயற்சியைச் செய்கின்றன என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டும்.
அதேபோல் üமன்னும் மனிதரும்ý என்ற சிவராம காரந்த நாவலை வைத்திருக்கிறேன். சாகித்திய அகாதெமி கொண்டு வந்துள்ள புத்தகம். முதல் பதிப்பு 1967ல் வந்துள்ளது. இப்போது இரண்டாவது பதிப்பு வந்துள்ளது. படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

திருக்குறள் சிந்தனை 2

நான் இருக்கும் வீட்டில் 3 திருக்குறள் புத்தகங்களைக் கண்டுபிடித்தேன். நான் ஏகப்பட்ட திருக்குறள் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். ஆனால் ஒன்றும் கண்ணில் படவில்லை. யாரிடம் கொடுத்தேன்? யார் எடுத்துக்கொண்டு போனார்கள் என்பது தெரியவில்லை. நாமக்கல் கவிஞர் கருத்துரை எழுதிய திருக்குறள் புத்தகம் என்னிடமிருந்தது. அதேபோல் மு வ.
என் அலுவலக நண்பர் ஒருவர் பாக்கெட் சைஸில் திருக்குறள் புத்தகம் 50 அல்லது 100 என்று வாங்கி வங்கியில் வரும் வாடிக்கையாளருக்கு இலவசமாகக் கொடுப்பார். அவரை அடுத்த முறை பார்க்கும்போது ஒரு கேள்விக் கேட்க வேண்டும். திருக்குறளை நீங்கள் படித்தீர்களா என்று.
இன்று நான் படித்த இரண்டாவது குறள்.

கற்றதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

இந்தக் குறளில் வால்அறிவன் என்ற வார்த்தைப் பிரயோகம் என்னை யோசிக்க வைத்தது. இதற்கான அர்த்தத்தை கீழ்க்கண்டவாறு உரையாசிரியர் இரா கோ அண்ணாமலை அவர்கள் கூறி உள்ளார்கள்.
கல்விதான் ஒருவருக்கு அறிவு, அன்பு, இன்பம் இவற்றை எல்லாம் தருவரு. அறிவும், அன்பும் இல்லையெனில் பொருளில்லை, இன்பமும் இல்லையாகும். இவற்றையெல்லாம் தரக்கூடிய உண்மை அதாவது மூல பரம்பொருளை உணராதவன் பல நூல்களைக் கற்றும் பயனில்லை.
பரம்பொருள் என்பதை வால்அறிவன் என்கிறார் என்று நினைக்கிறேன்.

திருக்குறள் சிந்தனை 1

நேற்று (16.06.2018) – சனிக்கிழமை – திருக்குறளும் நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன் ஐஆர்எஸ் அவர்கள் பேசினார்கள். கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் பேசினார். இன்னும் சில தினங்களில் அவர் பேசியதை ஒளிப்பதிவில் அளிக்க உள்ளேன். இதில் முக்கியமான விஷயம் கலந்துகொண்ட அனைவரும் ஒவ்வொரு திருக்குறளைக் கூறி ஏன் அந்தக் குறள் பிடிக்கிறது என்பதைக் குறிப்பிட்டார்கள்.
நான் ஒரு முடிவுக்கு வந்தேன். தினமும் ஒரு குறளைப் படிப்பது என்று. பின் அது குறித்து கருத்து எதாவது தோன்றினால் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
இதோ நான் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முதற்றே உலகு.

இதற்கு கருத்துரை வழங்கியவர் இரா இளங்குமரனார். அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால் எழுத்துக்களுக்கு எல்லாம் அகரமே முதல். அதுபோல் பகுத்து வழங்கிய ஆற்றலே உலகுக்கு முதல் என்கிறார். இந்தக் கருத்துரை சரியா என்பது சந்தேகமாக உள்ளது. வள்ளுவர் ஆதி பகவான் என்று கூறி உள்ளார். இந்தக் கருத்துரையில் அது வரவில்லை என்று படுகிறது. ஆதிபகவான் முதன் முதலாக உலகத்தில் தோன்றியதுபோல் எழுத்துக்களுக்கெல்லாம் அகரமே முதல் என்று இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஓர் உரையாடலும் ஒரு கடிதமும்…..

31.05.2018

அழகியசிங்கர் மதியம் 4 மணிக்குமேல் பூங்காவில் மர நிழலில் காத்துக்கொண்டிருக்கிறார். அவரை நோக்கி ஜெகனும், மோகினியும் வருகிறார்கள்.
மூவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒருவரும் சில மணித்துளிகள் பேசவில்லை.
அழகியசிங்கர் : நடந்திருக்கக் கூடாது.
மோகினி : நம் கையில் எதுவுமில்லை
ஜெகன் : துப்பாக்கிச் சூடு நடந்ததைக் கேள்விப்பட்டவுடன் அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கமே இல்லை.
அழகியசிங்கர் : இப்படி ஒரு துயரமான நிகழ்ச்சி நடந்திருக்கக் கூடாது.
மோகினி : நம்மால் என்ன செய்ய முடியும். நாமும் சாமானியர்கள்.
ஜெகன் : சாமானியர்களுக்கு உள்ள தைரியம் கூட நமக்குக் கிடையாது.
அழகியசிங்கர் : துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்தனை செய்கிறேன்.
ஜெகனும், மோகினியும் : நாங்களும்.
***********
ஜெகன் : பாலகுமாரன் என்ற எழுத்தாளர் இறந்து விட்டாரே?
மோகினி : ஆமாம்.
அழகியசிங்கர் : 200க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதி உள்ளார். சிறுகதைகள் எழுதி உள்ளார். முதலில் சிற்றேடுகளில் எழுத ஆரம்பித்தவர். பின் பிரபல பத்திரிகைகளுக்கு எழுதி பலதரப்பட்ட வாசகர்களைக் கவர்ந்தவர்.
ஜெகன் : நீங்கள் அவர் பூத உடலைப் போய்ப் பார்த்தீரா?
அழகியசிங்கர் : பார்த்தேன். ஒரே கூட்டம். தாங்க முடியாத கூட்டம். ü100வது இதழ் விருட்சத்திற்கு யோகி சுரத் குமாரின் ஆஞ்ஞைப்படி உங்களுக்கு நன்கொடை தருகிறேன் என்று அழைத்துக் கொடுத்தார்.ý மறக்க முடியாத சம்பவம் அது.
ஜெகன் : நீங்கள் யோகி ராம் சுரத்குமாரை நம்புகிறீர்களா?
அழகியசிங்கர் : நம்புவதும் நம்பாமல் இருப்பதெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் ஏன் மக்கள் அவரைப் பார்க்கப் போகிறார்கள். நம்முடைய துயரங்களில் எதாவது ஒரு பகுதியை யோகியார் தீர்க்க முடியுமா என்று பார்க்கிறார்கள். இன்னும் சிலர் ஆன்மிகத் தேடலுக்காகப் போகிறார்கள். பிரமிள் மூலமாகத்தான் யோகியாரை பாலகுமாரனுக்கும் தெரியும். பின் பாலகுமாரன் மூலம் யோகியார் ரொம்பவும் பிரபலமாகிவிட்டார். ஆனால் யோகி ராம்சுரத் குமார் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்.
மோகினி : பாவண்ணன் கூட்டத்திற்குப் போயிருந்தேன்.
அழகியசிங்கர் : 4 மணிக்குமேல்தான் போக முடிந்தது. வெயில். வீட்டிலிருந்து கிளம்புவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.
ஜெகன் : இந்தக் கூட்டத்தைப் பற்றி உங்கள் அபிப்பிராயம்.
அழகியசிங்கர் : கூட்டத்தை சிறப்பாக அமெரிக்க தமிழர் குழுவும், இங்குள்ள பாவண்ணனின் சில நண்பர்களும் நடத்தினார்கள்.
எனக்கு ஆச்சரியம். காலையிலிருந்து இக் கூட்டம் முடியும்வரை கவிக்கோ அரங்கத்தில் பலர் கூடி கலந்துகொண்டதுதான்.
மோகினி : முக்கியமாகத் தமிழ் நாட்டிலிருந்து பல இடங்களிலிருந்து இக் கூட்டத்திற்கு வந்திருந்ததுதான்.
அழகியசிங்கர் : பாவண்ணனின் உறவினர்கள், நண்பர்கள், வாசகர்கள் என்று பலரும் கலந்துகொண்ட கூட்டம் இது.
ஜெகன் : பாவண்ணன் இறுதியில் பேசும்போது நெகிழ்ச்சி அடைந்துவிட்டார்.
அழகியசிங்கர் யாராயிருந்தாலும் நெகிழ்ச்சி அடையத்தான் அடைவார்கள். காலையிலிருந்து மாலை வரை எல்லோரும் ஒருவரைப் புகழ்ந்து கொண்டே இருந்தால் நெகிழ்ச்சி அடையாமல் தப்பிக்க முடியாது. சிலர் அழக்கூட அழுதுவிடுவார்கள். ஆனால் அது ஆனந்தக் கண்ணீராக இருக்கும்.
ஜெகன் : பாவண்ணின் உழைப்பைப் பற்றிதான் நான் ஆச்சரியப்படுகிறேன். அலுவலகப் பணியில் கூட அவர் திறமையான ஊழியர் என்று குறிப்பிடுவார்களாம்.
அழகியசிங்கர் : ஊழியத்தில் இருந்துகொண்டு ஒருவர் எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் தொடர்ந்து இயங்கி வருவது. சாதாரண விஷயமாக எனக்குப் படவில்ûடில. இதை பாவண்ணன் ஒதுங்கி நின்று நடத்தியிருக்கிறார். பாவண்ணனின் அடுக்கு மாளிகை என்ற கதைத் தொகுதியை வாசித்தேன். üபருவம்ý என்ற மொழிபெயர்ப்பு நாவலை எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன் பாவண்ணன் மொழி பெயர்த்தது. வாசித்தல் என்பது ஒரு தவம். படிக்கப் படிக்க நமக்கு எதாவது தோன்றினால் சொல்லலாம். சொல்ல முடியாமல் போனால் விட்டுவிடலாம்.
(பேசி முடித்தபின் மூவரும் கலைந்து போகிறார்கள்)
*********
29.05.2018
அன்புள்ள ஜெகனுக்கு,

வணக்கம்.
நான் அவசரமாக காரில் குடும்பத்துடன், மனைவி, பெண், என் பேரன், பேத்தியுடன் பங்களூர் கிளம்பிப் போகிறேன்.
என் மனைவியின் மூத்த சகோதரியின் கணவர் இறந்து விட்டார். பல மாதங்களாக அவர் உடல் நலமில்லாமல் இருந்தார். என் மனைவியின் முத்த சகோதரி கணவரைப்பார்த்துக்கொள்ளக் கூட முடியாமல் அவதிப்பட்டார். அவருடைய கணவர் சாப்பிடும்போது சாப்பாடு வாயிற்குள் போகாமல் ஒழுகி விடும். சாதத்தை முழுங்கக் கூட முடியாது.
ஒரு முறை நான் அவரைச் சந்திக்க வரும்போது எத்தனை நாட்கள் இவர் உயிருடன் இருப்பார் என்ற சந்தேகம் வலுத்துக்கொண்டிருக்கும். ஆனால் அவருக்கு யார் நம்மைப் பார்க்க வருகிறார்கள் என்ற ஞாபகம் இரந்துகொண்டிருக்கும். சரியாகப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். ஆனால் ஒரு நோயாளியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது விலகிப் போகும் நம் மனநிலையை என்னவென்று விவரிப்பது.
அவர் நல்ல நிலையில் இருந்தபோது எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்வார். அவர் வாழ்நாள் முழுவதும் சைக்கிள், டூவீலர், கார் என்று எதையும் பயன்படுத்தியதில்லை. நேற்று முழுவதும் அவர் நினைவாகவே இருந்தேன். அவர் உடலை தகனம் செய்யுமிடத்திற்குச் சென்றபோது அவர் நினைவின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவர் 82 வயதில்தான் இறந்து போனார். ஆனால் இந்த வயதுவரை ஒருவர் உயிருடன் இருப்பது அதிகம் என்று ஏனோ என் மனம் சொல்லிக்கொண்டிருந்தது. அவர் முழுமையான வாழ்க்கை வாழ்ந்துவிட்டார் என்று கூட சொல்லிவிடலாம்.
சரி, நாம் திரும்பவும் சந்தித்துப் புத்தகங்களைப் பற்றிப் பேசுவோம்.
அன்புடன்
அழகியசிங்கர்

பாவண்ணனைப் பாராட்டுவோம்

வரும் சனிக்கிழமை (26.05.2018) பாவண்ணனைக் குறித்து ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. காலை பத்து மணியிலிருந்து இரவு 8 மணிரை. இடம் கவிக்கோ அரங்கத்தில். பாவண்ணன் சிறுகதைகள், நாவல்கள், அவருடைய மொழிபெயர்ப்புகள் என்று பல்வேறு தலைப்புகளில் பலர் பேச உள்ளார்கள்.
நான் பாவண்ணன் என்ற உடன் அவருடைய புத்தகங்களைத் தேடத் தொடங்கினேன். என்னிடம் 3 புத்தகங்கள் இருக்க வேண்டும். இரண்டு புத்தகங்கள்தான் இருந்தன. பாய்மரக்கப்பல் என்ற நாவல் எங்கே என்று தெரியவில்லை. ‘அடுக்கு மாளிகை’ என்ற சிறுகதைத் தொகுதியும், ஒரு கவிதைத் தொகுதியும் தான் இருந்தன.
டிஸ்கவரி புத்தக பேலஸ் இடத்திற்குச் சென்றபோது பாவண்ணனின் இரண்டு நாவல்கள் கண்ணில் தென்பட்டன. வாங்கி வைத்துக்கொண்டேன்.
அப்போதுதான் தெரிந்தது பாவண்ணன் நாவல்கள் மூன்று எழுதியிருக்கிறாரென்றும், சிறுகதைத் தொகுப்பு பத்து பதினைந்து கொண்டு வந்திருக்கிறாரென்றும், இதைத் தவிர கட்டுரைத் தொகுதிகளும் கவிதைத் தொகுதியும் வந்திருக்கின்றன.
புத்தகங்கள் வைத்திருந்தாலும் நான் பாவண்ணனை பத்திரிகைகளில் வரும் கதைகள் மூலமாகத்தான் படித்திருக்கிறேன். அதேபோல் அவர் எழுதுகிற புத்தக விமர்சனங்களையும், கட்டுரைகளையும்.
தன்னைப்பற்றி சுய விளம்பரம் செய்துகொள்ளாதவர். எழுதுவது படிப்பது என்று போய்க்கொண்டிருப்பவர். அவர் எழுத்துக்களை வாசிக்கிற வாசகர்களும் அவருக்கு உண்டு.
நான் பங்களுர் சென்றால் பாவண்ணனைப் பற்றி விஜாரிக்காமல் இருக்க மாட்டேன். அவரைச் சந்திக்கவும் முயற்சி செய்வேன். இதெல்லாம் பாவண்ணனைப் பற்றி, இனி அவர் எழுதிய கதைகளைப் பற்றி எதாவது எழுத முடியுமா என்று பார்க்கிறேன்.
üஅடுக்கு மாளிகைý என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பு 1998ல் வெளிவந்தது. மொத்தம் 12 கதைகள் கொண்ட தொகுப்பு இது.
கதைகள் மூலம் பாவண்ணன் காட்டுகிற உலகம் என்ன? ஒரு எளிமையான நடைமுறை சிக்கலை விரும்பாத மனிதனின் உலகம்தான் அது.
முதலில் பாவண்ணனின் இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது ஒன்று தெரிந்துகொண்டேன். அவர் கதைகளை எல்லாம் நிதானமாகத்தான் வாசிக்க வேண்டும்.
இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளை அவர் 1995 அல்லது 1996 ஆம் ஆண்டுகளில் எழுதியிருக்கிறார். சரி கதைகள் மூலம் அவரிடம் தென்படுவது என்ன? விபரங்கள். அவரைப் போல் விபரமாகக் கதையைக் கொண்டு போகிறவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற சந்தேகம் கூட எனக்கு ஏற்படுகிறது.
‘அடுக்கு மாளிகை’ என்ற முதல் கதையை எடுத்துக்கொள்வோம். குப்புசாமி என்ற பையனின் மனோநிலையில் கதையை எடுத்துக்கொண்டு போகிறார். இறுதியில் அம்மாவை நினைத்துக்கொண்டே அந்தப் பையன் ஒரு விபரீத முடிவுக்குப் போகிறான். இக் கதையின் முடிவு முன்னதாகவே ஊகிக்க முடிகிறது. பம்பரம் தேடும் பையன் அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியில் மாடிப் படிக்கட்டுகள் வழியாக ஏறிப்போகிறான். அங்கே அவன் காண்கிற காட்சிகளையும் பாவண்ணன் பதிவு செய்கிறார்.
‘வேகமெடுத்து விளிம்பின் பக்கம் ஓடி அம்மா என்று கூவியபடி வானத்தை நோக்கி எகிறினான்,’ என்று முடிக்கிறார். ஒரு சிறுவன் இப்படியெல்லாம் ஒரு விபரீதமான முடிவு எடுப்பானா என்ற சந்தேகம் நமக்கு ஏற்படாமல் இல்லை.
‘ராஜண்ணா’ என்ற இரண்டாவது கதை சடுகுடு விளையாட்டில் ஆரம்பிக்கிறது. ராஜண்ணா என்பவன் எப்படி தன் வசத்தில் ஒரு குழுவைக் கட்டுப்படுத்துகிறான் என்பதுதான் கதை. அவர்களுடைய குழுவிற்கு தலைவனாகவே மாறி விடுகிறான். ராஜண்ணா இருக்கும்வரை கபடி ஆட்டத்தில் அந்தக் குழு வெற்றி அடைந்துகொண்டிருக்கிறது. கபடியில் வெற்றி அடைவது மட்டுமல்ல அவனிடம் படிந்துள்ள கெட்ட சகவாசமும் குழுவிற்குள் உள்ள ஒவ்வொரிடமும் பழக்கமாகிறது. இறுதியில் ராஜண்ணா ஒரு பெண்ணின் கொலையில் மாட்டிக்கொண்டு விடுகிறான். ராஜண்ணாவை விட்டு அந்தக் குழு வெளியே வரமுடியவில்லை. எல்லோரும் ராஜண்ணாவாக மாறி விடுவதாக பாவண்ணன் கதையை முடிக்கிறார். இப்படியெல்லாம் நடக்கும் என்று பாவண்ணன் கதை உணர்த்துகிறது.
‘இதயம்’ என்ற கதையில் இதய நோயால் அவதிப்படும் இருவர் நிலையைக் குறித்து கதை விரிகிறது. பெரியவர் ராமசாமி தான் சேமித்ததை எல்லாம் செலவு செய்து தன் இதயத்தில் உள்ள ஓட்டையைச் சரி செய்துகொள்கிறார். ஆள் அரவமற்ற மலைக்கோயில் உள்ள ஒரு இடத்திற்கு தினமும் நடைபயிற்சி செய்கிறார். அங்குதான் அவர் இன்னொரு முதியவரையும் அவருடன் ஒட்டிக்கொண்டிருக்கிற சிறுவனையும் சந்திக்கிறார். அந்தச் சிறுவனும் அவரைப் போல இருதய ஓட்டையைச் சரிசெய்து கொண்டவன் என்பதும், அவனுடைய அப்பா அம்மாவை விபத்தில் இழந்து விடுவதையும் அறிந்தபோது அந்த சிறுவனின் மீது அளவுகடந்த பாசம் ஏற்படுகிறது ராமசாமிக்கு. தினமும் அவனை சந்தித்துக்கொண்டு வரும் ராமசாமிக்கு சில தினங்களாக அவனைப் பார்க்க முடியவில்லை. சிறுவனுக்கு உடல்நிலை மோசமாகி அப்போலோவிற்குக் கொண்டு போகிறார் கிழவர். இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டு துவண்டு விடுகிறார் ராமசாமி. இக் கதையில் பரமபத ஆட்டம் சிறுவனோடு விளையாடுவதுபோல் ஒரு நிகழ்ச்சி வரும். திரும்பவும் இந்தக் கதை இப்படித்தான் முடியும் என்று யூகிக்க முடிகிறது, ஆனால் நேர்த்தியான முறையில் கதையை நகரத்த்திக்கொண்டு போகிறார்.
‘பழி’ என்ற கதையில் ஒரு பொம்மைக்காரரை வைத்து வித்தியாசமாக எழுதியிருக்கிறார். பொம்மைக்காரனின் மனைவி அவனை விட்டு வேற ஒரு இளைஞனுடன் ஓடிப் போய்விடுகிறாள். சாமி சிலைகளை செய்யும் பொம்மைக்காரருக்கு வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படுகிறது. கவுண்டர் ஒருவரின் தொந்தரவு தாங்காமல் சாமி சிலைகளை உருவாக்குகிறார். அவர் உருவாக்குகிற சிலைகளுக்கு கண்கள் மட்டும் உருவாக்காமல் அப்படியே விட்டுவிட்டு எங்கோ போய்விடுகிறார். அவரைக் கண்டு பிடிக்கவும் முடியவில்லை. அந்தச் சிலைகளுக்கு வேற யாரும் தெய்வக்குத்தம் என்று கண் வைக்க வரவில்லை. பாழாகி இருக்கும் சிலைகளுடன் அந்தக் கோயில் இருக்கிறது.
‘ஆறு’, ‘மூர்க்கம்’ என்ற கதைகள் மொழியால் ஏற்படும் கலவரத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டவை. கதைகளைப் படிக்கும்போது படிப்பவருக்கும் பதட்ட உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
üவாகனம்ý என்ற கதை ஆட்டோவின் உறுமல் தாங்க முடியாமல் அவதிப்படுகிறது ஒரு சக குடுத்தனம். எப்படி அதை வேற வழியில்லாமல் ஏற்றுக்கொள்கிறது அந்தச் சகக் குடுத்தனக்காரர்கள் என்பதுதான் கதை.
அதேபோல் üவக்கிரம்ý என்ற அலிகளைப் பற்றியும் ஒரு கதை எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சாதாரண சம்பவம், அல்லது கேள்விப்பட்ட நிகழ்ச்சி எல்லாம் பாவண்ணன் கதைகளாக மாற்றிக்கொண்டு போகிறார்.
பொதுவாக பாவண்ணன் ஒவ்வொரு கதையையும் விவரித்துக்கொண்டே போகிறார். இதுதான் அவர் கதைகளில் நான் கண்ட ஆச்சரியம். மேலும் அவர் சிறிய சிறிய பாராக்களாக கதைகளை அமைப்பதில்லை.
எல்லாக் கதைகளையும் பாவண்ணனே முன்னின்று சொல்கிறாரா? பெரும்பாலும் சிறுவர்கள் இல்லாத கதைகளை அவர் எழுதுவதில்லையோ? பெண்களை மையமாக வைத்து ஒரு பெண்ணே கதையைச் சொல்வதுபோல் அவர் கதைகள் எழுதியிருக்கிறாரா என்ற கேள்விகள் எல்லாம் இந்தப் புத்தகம் மட்டும் படித்துவிட்டு எனக்குத் தோன்றுகிறது.. இதைப் படித்துவிட்டு அதுமாதிரியான முடிவுக்கு வருவதும் தவறு என்றும் நினைக்கத் தோன்றுகிறது. 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை பாவண்ணன் எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது. எஸ் எஸ் பைரப்பாவின் ‘பருவம்’ என்ற மெகா நாவலை பாவண்ணன் கன்னடத்திலிருந்து தமிழுக்குத் தந்துள்ளார்.
மேலும் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், நிதானமான வாசிப்பு மூலம்தான் அவருடைய கதைகளைப் புரிந்துகொள்ள முடியும்.