காலையில் நா. கிருஷ்ணமூர்த்தி போன் செய்தார். ஒரு துக்கமான செய்தி. க்ரியா ராமகிருஷ்ணன் இன்று காலை ஐந்து மணிக்கு மரணம் அடைந்து விட்டார் என்று அவர் கூறினார். வருத்தமாக இருந்தது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் எனக்கு கரியா பற்றிப் பல ஞாபகங்கள் வந்தன. ஆரம்பத்தில் கணையாழி, தீபம் படிக்க ஆரம்பித்த என் இலக்கிய ஆர்வம், ராயப்பேட்டையில் இருக்கும் க்ரியாவில் போய் நின்றது. அங்குப் போய் க்ரியா புத்தகங்கள் மட்டுமல்லாமல் வேற புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வருவேன். சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ தொடங்கி பல்வேறு புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். மாதம் ஒரு முறையாவது அங்குப் போய் நிற்பேன்.
அங்குதான் சி சு செல்லப்பாவின் கதைகள் தொகுதி வாங்கியிருந்தேன். சி சு செல்லப்பாவை வெளியிட்ட கதைத் தொகுதிகள். அந்தத் தருணத்தில் க்ரியா புத்தகம் அற்புதமாக வித்தியாசமாக தயாரிக்கப்பட்டிருக்கும். ஆனால் விலை கூடுதலாக இருக்கும். முதன் முதலாக க்ரியாவின் தமிழ் அகராதி, டாக்டர் இல்லாத இடத்தில், ந.முத்துசாமி புத்தகங்கள், சி மணியின் வரும்போகும் கவிதைப் புத்தகம் எல்லாம் வாங்கிக் குவித்திருக்கிறேன். சுந்தர ராமசாமியின் ‘ ஜே ஜே சில குறிப்புகள்’, ஆல்பர் கம்யூவின் ‘அந்நியன்’. இன்னும் எத்தனையோ புத்தகங்கள். கடையில் ராமகிருஷ்ணனைப் பார்ப்பேன். ஆனால் கிட்டப் போய் பேசியதில்லை. ஒரு முறை அவர் வீட்டில், ‘ஜே.ஜே சில குறிப்புகள் புரியவில்லை. என்ன நாவல் இது என்று கேட்டிருக்கிறேன்.’ ‘ நீங்கள் அதைப் படிக்க இன்னும் பக்குவமடையவில்லை,’ என்றார். சமீபத்தில் சா.கந்தசாமியின் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். மிகச் சிறப்பாக இருந்தது. அக் கூட்டத்திற்கு அவரைப் பேச அழைத்தது நா. கிருஷ்ணமூர்த்தி. அவர் ஜாக்கிரதையாக இருப்பவர். எழுத்தாளர் சச்சிதானந்தம் இறந்த செய்தியைக் கூட அவரிடம் தெரிவித்தேன். அதைக் கேட்டு வருத்தப்பட்டார். அவரும் கொராணாவால் இறந்து போவார் என்று கற்பனை கூடச் செய்யவில்லை. அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.
ஒரு கதை ஒரு கருத்து’ என்ற தலைப்பில் நான் தொடர்ந்து என் கண்ணில் படும் சிறுகதைகளைப் பற்றிக் கட்டுரை எழுதுகிறேன். அந்தக் கதையைப் படித்து முடித்தபின் அதிகப்படியாக ஒரு வார்த்தை அந்தக் கதையைக் குறித்துச் சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்.இந்த வாரம் எழில் வரதனின் ‘ஹைப்ரீட் குழந்தை’ என்ற கதையை எடுத்து எழுதியிருக்கிறேன்.
‘செம்புலி வேட்டை’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எழில்வரதன் எழுதிய ‘ஹைப்ரீட் குழந்தை’ என்ற கதையைப் படித்தேன். இது ஒரு சிக்கலான கதை. அதை அனாயசமாக எழுதிச் செல்கிறார் எழில்வரதன்.இயல்பாகவே இவர் கதைகளில் நகைச்சுவை உணர்வு அடிக்கடி தட்டுப் படுகிறது. சுலபமாக ஒரு கதையை எடுத்துக்கொண்டு போகும் பாங்கும் இவர் கதையில் தட்டுப் படுகிறது.
10 கதைகள் அடங்கிய இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் அளவுக்கு மீறிய பக்கங்கள். கிட்டத்தட்டக் குறுநாவல்கள் என்று சொல்லத்தக்கக் கதைகளாக எழுதி உள்ளார்.இவர் கதை சொல்லல் முறையில் முக்கிய அம்சம் நகைச்சுவை உணர்வு. இது தானாகவே கதையின் போக்கில் வருகிறது. வலிந்து திணிக்கும் நகைச்சுவை உணர்வல்ல
.’ஹைப்ரீட் குழந்தை’ என்ற கதையில் குழந்தையைப் பற்றிச் சொல்லல் முறை சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.ஜோஸ்னா என்ற குழந்தை சற்று ஹைப்ரீட்டாக நடந்து கொள்கிறாள். அவள் அம்மா மாலினிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து அழைப்பு வருகிறது.
அதற்கு முன் மாலினியைப் பற்றி கதா ஆசிரியர் இப்படி விவரிக்கிறார்.”அம்மா பெயர் மாலினி. வயது சொன்னால் கோபித்துக் கொள்வாள். எம்சிஏ படிப்பு. இந்தியாவில் தொப்பை வளர்க்கிற அமெரிக்க நிறுவனம் ஒன்றில் அதிகாரம் மிக்க பதவி. நுனிநாக்கு ஆங்கிலம். ஜெர்மன் தெரியும். போன மாதம் கத்தார் டெலிகேட் ஒருத்தன் ‘ஐ லவ் யூ’ சொல்லி உதை பட்டிருக்கிறான்…அந்தளவுக்கு அழகு மற்றும் துணிச்சல். அதைவிடத் திறமையும் அதிகம்….
மாலினிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து குறிப்பாணை வருகிறது. அவளுடைய குழந்தையைப் பற்றிப் பேச வேண்டும். வரச் சொல்கிறார்கள். அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் மாலினி பள்ளிக்கூடத்திலிருந்து அழைப்பு வருகிறது என்றவுடன் சற்று பதட்டத்துடன் காணப்படுகிறாள்.
பெண் விஷயத்தில் கவலைப் படுகிறாள்.மாலினி பள்ளிக்கூடம் போனவுடன், மிஸஸ் மோத்வானி அவள் தான் பிரின்ஸிபல். ஜோஸ்னாவைப்பற்றி அவளிடம் புகார் கூறுகிறாள்.‘ஜோ அடிக்கடி சுண்டு விரலைக் காட்டுகிறாள்,’ என்கிறாள் மோத்வானி.மாலினிக்கு இதற்காகவா தன்னை கூப்பிட்டிருக்கிறார்கள் என்று தோன்றியது.
“‘சுண்டுவிரலா துப்பாக்கியா எதைக் காட்டினாள்,’ என்று கேலியாகக் கேட்கிறாள் மாலினி
.பிரின்ஸ்பால் கடுப்பாகிறாள். ‘சுண்டுவிரல் காட்டினால் ஒன் பாத்ரூம் போக விரும்புகிறாள் என்று அர்த்தம். அடிக்கடி ரெஸ்ட் ரூம் போக விரும்புகிறாள்,’ என்கிறாள் மோத்வானி.
மாலினிக்கு உடனே ஞாபகம் வருகிறது. போனவாரம்தான் உலக சர்க்கரை நோயாளிகள் குறித்த கட்டுரையை படித்திருந்தாள். தன் பெண்ணிற்கு அதுமாதிரி எதாவது நோய் இருக்குமோ என்று சந்தேகப் படுகிறாள்.
‘அதுமாதிரி எதுவுமில்லை வெறுமனே போய்விட்டு வருகிறாள். வருவதுபோல் இருந்தது. ஆனால் வரவில்லை, என்கிறாள்,
‘“அவளுக்குப் படுக்கையில் ஈரம் செய்கிற வழக்கம் இருக்கிறதா?”
“ஜோஸ்னா ஒன்றிரண்டு முறை அப்படிச் செய்திருக்கிறாள். காரணம் ஏன் என்று புரியவில்லை.”
பிரின்ஸி இப்போது விளக்குகிறாள். ஏன் ஜோஸ்னா அப்படிச் செய்கிறாள் என்பதை விளக்குகிறாள்.
“அச்சம், பாதுகாப்பின்மை, பய உணர்வு போன்றவை குறைபாட்டுக்குக் காரணமாய் இருக்கலாம்.. நீங்களும் உங்கள் கணவரும் குழந்தைக்கு முன்னால் சண்டையிட்டுக் கொள்கிறீரா? ஏன் கேட்டால் அப்பா பெயரை எடுத்தால் குழந்தை டென்சன் ஆகிவிடுகிறாள்.”
“அது மாதிரி நீங்கள் நினைக்கிறதே அபத்தம். நானும் இவளோடு அப்பாவும் டைவர்ஸ் பண்ணி பன்னிரண்டு வருஷம் ஆச்சு.”
எளிமையானவன் நேர்மையானவன் என்று நம்பி, காதலித்து கல்யாணம் செய்து, ஏமாற்றம் அடைந்து விடுதலை கேட்டு நீதிமன்றத்தை அணுகி விவாகரத்தும் கிடைத்து விட்டது மாலினிக்கு. .
இப்போது மாலினி மகளோடு இருக்கிறாள். தனியாக.. மாலினிக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி. தன் மகள் படிப்பில் மோசமாக மார்க் வாங்கியிருக்கிறாள் என்ற செய்தியை கேட்டவுடன். அவள் கணக்கில் வாங்கிய மார்க்கைக் கேட்டு இன்னும் அதிர்ச்சி ஆகிவிட்டாள்.
வெறும் 3 மார்க்குதான் வாங்கியிருக்கிறாள். மாலினியால் இதை நம்பமுடியவில்லை.நிஜத்தில் ஜோஸ்னா துருதுருப்பும், சாமர்த்தியமும் கொண்டவள். படிப்பில் புகார் வராத அளவுக்குப் பார்த்துக்கொள்வாள். சன்னமாக பாடுவாள்;. டிவி பார்த்தபடி ஆடுவாள். ஓவியம் தீட்டுவாள். அபாரமான ஞாபகசக்தி. ஆனால் கணக்கில் மூன்று. ஜோஸ்னாவிடம் ஏதோ தப்பியிருக்கிறது. அவளுக்கு என்னவோ ஆகிவிட்டது.. மாலினி பதறுகிறாள்.அம்மாவுக்கும் பெண்ணிற்கும் இது விஷயமாகப் பேச்சு நடக்கிறது.
ஜோஸ்னா கணக்கில் மூன்று மார்க் வாங்குவதற்குக் காரணம் தெரிகிறது. ஜோஸ்னாவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஜீ.பிரீத்தாதான். அவள் கணக்கில் மக்கு. மூன்று எடுத்தால் உலக சாதனை . அவளைவிட ஜோஸ்னா அதிகமாக எடுத்தால், பீரித்தி அழுவாளாம். அவள் அப்பா ராஜகுருவின் உபதேசம். மத்துவங்களை விட அதிகமா மார்க் எடுத்து அவங்களை நோகடிச்சா அது அல்ப புத்தி. சாட்டிஷம். அதனால் பிரித்தாவைவிட அதிக மார்க் வாங்கக்கூடாது என்று ஜோஸ்னாவும் எழுதலை.
இதைக் கேட்டவுடன் கோபத்தில் ஒரு அறை அறைந்து வெளியே துரத்துகிறாள் ஜோஸ்னாவை.மகளின் எதிர்காலத்தை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ராஜகுரு.
போட்டியற்ற உலகமாம். பொறாமையற்ற சமூகமாம். அவன் ஒரு பைத்தியக்காரன்
ஜோஸ்னா ஒரு அப்பாவி குழந்தை. அவளுக்கு அப்பா கொடுக்கும் சுதந்திரமும் பிடித்திருக்கிறது. அம்மா ஓட்டும் காரும் பிடித்திருக்கிறது. . ஒரு குழந்தைக்கு இரண்டு மேய்ப்பார்கள்.
ஜோஸ்னாவிற்கான நிஜமான கோளாறே இங்கிருந்துதான் தொடங்குகிறது. அதனால் ஜோஸ்னா வேற மாதிரி ஆகிவிட்டாள்.
இரண்டு மேதாவிகள் கூட்டு ஒப்பந்தம் போட்டு ஒரு பிள்ளையைத் தாறுமாறாக வளர்த்திருக்கிறார்கள். அதன் நேரடி விளைவு என்ன?ஜோஸ்னா எப்படி மாறி விடுகிறாள் என்பதை மூன்று சம்பவங்கள் மூலம் கதாசிரியர் விவரிக்கிறார்.
முதல் சம்பவம்.
ஜோஸ்னா மும்முரமாக பரிட்சைக்குப் படிக்கிறாள். ராத்திரியெல்லாம் கண் விழித்துப் படிக்கிறாள். அவள் முன்னால் ஒரு தலையணை இருக்கிறது. அதன் மீது அமர்ந்து அதை ஒரு குழந்தையாகப் பாவித்து அதன் கழுத்தைப் பிடித்துத் திருகி வெறியோடு கத்துகிறாள்.“பிசாசே கொன்னுடுவேன் கொன்னு.. நீ வேற ஸ்கூலுக்குப் போயேன்டி”..
இரண்டாவது சம்பவம்.
ஜோஸ்னா பள்ளி விட்டுத் திரும்புகிறாள். பிச்சைக்கார சிறுமியைப் பார்க்கிறாள். அவளிடமிருந்த நொறுக்குத்தீனி, பாடப்புத்தகம், வாட்டர் பாட்டில், என்றெல்லாம் கொடுத்து விடுகிறாள். மேலும் அவள் அழுக்குத் துணி கட்டியிருக்கிறாள். அது கிழிந்திருக்கிறது. இரக்கப்பட்டுப் போட்டிருந்த உடை எல்லாவற்றையும் கழட்டிக் கொடுத்துவிட்டு அவள் ஜட்டியோடு வீடு திரும்புகிறாள்.இல்லாதவங்களுக்கு உதவி பண்ணு. அன்பு காட்டு என்ற அப்பாவின் தாக்கத்தால் அவள் அதுமாதிரி நடந்து கொள்கிறாள்.
மூன்றாம் சம்பவம்.
மாலினியும் ஜோவும் காரில் போகிறார்கள். ஒரு பைக் அவர்களை முந்துகிறது. ஜோவுக்கு வெறி ஏறுகிறது. அந்த பைக் காரை முந்துகிறது. . அவள் அம்மாவை அந்த பைக் முந்தச் சொல்லி கத்துகிறாள். இறுதியில் கார் ஒரு காம்பவுண்ட் சுவரில் மோதி ஹெட்லைட் உடைகிறது.இதற்குக் காரணம். அம்மாவின் கொள்கை. அடிப்படையில் வெற்றிதான் முக்கியம். முந்திச் செல். போராடு என்பதுதான்.
ஜோவை ஒரு லேடி டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போகிறாள் அவள் அம்மா.இந்த இடத்தில் கதையில் கதாசிரியர் மேலே குறிப்பிட்ட மூன்று சம்பவங்கள் மூலம் நாம் என்ன தெரிந்து கொண்டோம் என்று கேட்கிறார்.இந்தக் கதையை வாசகருடன் பேசுகிற பேச்சாக மாற்றுகிறார்.
லேடி டாக்டர் அவளுக்கு ஒன்றுமில்லை சாதராணமாகத்தான் இருக்கிறாள் என்று சில வைட்டமின் மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி விடுகிறாள்.மாலினி அப்படி நினைக்கவில்லை. இப்படியே விட்டால், ஜோஸ்னா எப்படியோ மாறி விடுவாள். இந்தத் தருணத்தில் வேறு வழியில்லாமல் ராஜகுருவைக் கூப்பிடுகிறாள்.
இரண்டு பேர்களும் சந்திக்கும்போது ஒருவரை ஒருவர் குற்றம் சாடடுகிறாரகள். அவர்கள் இருவரும் மாறப்போவதில்லை.
ஜோ எப்போதும் போல் இருக்கிறாள். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து மாலினிக்கு அழைப்பு. பள்ளிக்கூடத்தில் கரோலின் அவளுக்காகக் காத்திருக்கிறாள். மாலினி வந்தவுடன் அவள் ஜோ இருந்த அறைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு ஜோ பொம்மைகளுடன் பேசுகிறாள். அந்தப் பொம்மைகளைத் திட்டுகிறாள். உடைக்கிறாள். தூக்கிப் போடுகிறாள்.மாலினி கரோலினைப் பார்த்து, ஜோவுக்கு என்ன ஆச்சுங்க என்று கேட்கிறாள்.
கரோலின் சொல்கிறாள் : ஜோ மொத்தமா மாறிட்டாள். அவள் இனிமேல் குழந்தை இல்லை. அவள்கிட்டே கடவுள் சாத்தான் இரண்டுமே இல்லை. எதிர்காலத்தில் என்ன பண்ணுவாள் என்று தெரியவில்லை.
கடைசியில் கதையை முடிக்கும்போது ஜோ புது அவதாரம் எடுத்திருக்கிறாள். ஹைப்ரீட் குழந்தையாக. இந்த இடத்தில் கதையை முடிக்கும் ஆசிரியர் ஜோஸ்னா எதிர்காலத்தில் என்னதாங்க ஆவா? அது நீங்கதான் சொல்லணும் என்று நம்மிடம் கதையை முடித்துவிடுகிறார்.
நீண்ட கதையாக எழுதியிருக்கும் கதாசிரியர் ஹைப்ரீட் குழந்தை என்று குழந்தையின் வன்முறையை வெளிப்படுத்துகிறார். இந்தக் குழந்தையின் வளர்ப்பு முறை சரியில்லை என்று சொல்கிறார். அம்மாவும் அப்பாவும் பிடித்து தங்கள் பக்கம் இழுக்கக் குழந்தை தறிகெட்டுப் போகிறது. குழந்தையிடம் அப்பாவும் அம்மாவும் எல்லாவற்றையும் திணிக்கக் கூடாது என்று ஒரு கருத்தைச் சொல்கிறாரா கதையாசிரியர்? எல்லா இடங்களிலும் இயல்பான நகைச்சுவையுடன் இந்தக் கதை முடிகிறது
.(இந்தக் கட்டுரை தமிழின் முதல் இணைய இதழ் வாரப்பத்திரிகை திண்ணையில் 15.11.2020ல் வெளிவந்துள்ளது)
தில்லையாடி ராஜா என்பவர் கடலூரிலிருந்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். எனக்கு ஆச்சரியம். என் புத்தகம் பற்றி எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை ஜனவரி 5ல் எழுதியிருந்தார். என் புத்தகம் பற்றித்தான் அந்தக் கடிதம். எனக்கு ஆச்சரியம். பொதுவாக இன்றைய சூழ்நிலை எல்லோருக்கும் தெரிந்த ஒரு சில எழுத்தாளர்களைப் பற்றித்தான் எல்லோரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். விதிவிலக்காக தில்லையாடி ராஜா என் புத்தகத்தைப் படித்துவிட்டு எழுதியிருக்கிறார்.. வாசிப்போம் வாசிப்போம் தொகுதி 1 என்ற புத்தகம்தான் அது. அந்தப் புத்தகத்தில் 27 புத்தகங்களை நான் படித்த அனுபவத்தைப் பற்றி எழுதியிருப்பேன். தில்லையாடி ராஜா அந்தப் புத்தகத்தைக் குறித்துத்தான் எழுதியிருக்கிறார். பச்சை இங்கில் அவர் கையெழுத்து புரியும்படி அற்புதமாக எழுதப் பட்டிருக்கிறது. அவருடைய கடிதத்தை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
வணக்கம். அழகியசிங்கர் எழுதிய ‘வாசிப்போம் வாசிப்போம் தொகுப்பு 1’ வாசித்தேன். இருபத்தேழு நாட்கள் வாசிப்பனுபவம், பல்வேறு நூல்களைப் பற்றிய கட்டுரைகள். நகுலன், கு.ப.ரா, பாரதி, நவகாளி – சாவி எழுதிய நூல் இன்னும் பலபல…
இவற்றில் சில நூல்கள் வாசித்திருக்கிறேன். பல நூல்கள் வாசிக்க வேண்டியவை என அழகியசிங்கர் கோடிட்டுக் காட்டுகிறார். இந்த நூலின் பணியே இதுதான். இன்ன நூல்கள் வாசித்தேன், இத்தனை பக்கங்கள் வாசித்தேன், ஞாயிறு நாட்களில் வாசிக்க நேரம் கிடைப்பதில்லை, வீட்டின் தேவைக்கு காபி பொடி வாங்கிக் கொடுத்துவிட்டு வாசிக்க வேண்டும்…வாசித்தவற்றை இது புரிகிறது, இது புரியவில்லை, முழுமையாக வாசித்து விட்டு பிறகு எழுதுகிறேன்… நூலாசிரியர் வாசகனுடன் நேருக்கு நேர் பேசுவதாக அமைகிறது…எந்தப் போலித்தனமோ, பம்மாத்தோ இல்லை.. நல்ல நூலை வாசித்த நிறைவு. என்ன..? எல்லா நூல்களையும் போல எழுத்துப் பிழை பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில் காணப்படத்தான் செய்கிறது. அத்துடன் முடிகிறது கடிதம். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒருவர் புத்தகம் படிப்பதோடல்லாமல் அதைப்பற்றி எழுதவும் (பச்சை இங்கில் கையெழுத்து நேரத்தியாக) எழுதியிருக்கிறாரே என்றுதோன்றியது. அதோடு அல்லாமல் கவர் எடுத்து ஸ்டாம்பு ஒட்டி அனுப்பவும் செய்திருக்கிறாரே என்று தோன்றியது. இதெல்லாம் ஒருவர் செய்கிறார் என்றால் பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது.
எனக்குத் தோன்றும் ஒரு தீபாவளி மலர் தயாரிப்பது என்பது எவ்வளவு சிரமமான விஷயம் என்று. தமிழைத் தவிர வேற எந்த மாநிலமோ தீபாவளி மலரைப் போன்ற ஒரு மலரைத் தயாரிக்கிறார்களா என்பது தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லவும்.
இந்தக் கொரானா காலத்தில் கூட தீபாவளி மலர்கள் வருவது ஆச்சரியமாக இருக்கிறது. அதைக் கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். அமுதசுரபி மலரைப் பார்க்கும்போது அப்படிப்பட்ட எண்ணம்தான் தோன்றியது.
ஒரு தீபாவளி மலரின் விலை ரூ.150 லிருந்து ஆரம்பமாகும் என்று நினைக்கிறேன். ஆனால் அதன் உண்மையான செலவு அதிகமாகத்தான் இருக்கும்.
ஆனால் தீபாவளி மலர்களைக் காப்பாற்றுவது விளம்பரங்கள். ஒவ்வொரு தீபாவளி மலர்களைப் புரட்டும்போது அதன் வழவழப்பான் தாள்களில் அச்சில் பார்ப்பது மகிழ்ச்சியான ஒன்று. இந்த முறை அமுதசுரபி தீபாவளி மலரில் என் நண்பர் ஐராவதம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைப் பிரசுரித்த அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனுக்கு என் நன்றி.
ஐராவதம் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். அவருக்குத் தீபாவளி மலர் என்றால் உயிர். ஆனால் புதியதாகத் தீபாவளி மலரைக் கடையில் வாங்கிப் படிக்க மாட்டார். ஆனால் விலை குறைவான தீபாவளி மலர்களை வாங்குவார். அதைவிட லென்டிங் லைப்ரரியில் வாங்கி வாசிப்பார்.
அவருடைய படைப்புகள் எதாவது ஒன்று தீபாவளி மலர்களில் இடம் பெற வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தார். அது குறித்து வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அந்த ஆதங்கம் உள்ளுக்குள்ளேயே அவரிடமிருந்ததை அறிவேன். ஆனால் என்ன பண்ணுவது அவர் ஒரு எழுத்தாளர் என்பது பலருக்குத் தெரியாது. அந்தக் காலத்தில் கசடதபற, கவனம் , பிரஞ்ஞை போன்ற சிறு பத்திரிகைகளில் எழுதி பிரபலமிழந்த எழுத்தாளர் அவர். அவருடைய ஏக்கத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரையில் அவருடைய கவிதையை (கசடதபறாவில் வெளிவந்தது) கொண்டு வந்தேன். அமுதசுரபி தீபாவளி மலரில் இதைப் பார்க்கலாம்.
இங்கு இப்போது விக்ரமாதித்யன் என்ற கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு பேசலாமென்று நினைக்கிறேன். ஒரு கவிஞருடைய ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு அதன் மேன்மையைப் பேசுவதுதான் இக் கட்டுரையின் நோக்கம்.
ஒரு காலத்தில் விக்ரமாதித்யனும் பிரம்மராஜனும் தமிழில் கவிதைகள் எழுதிக் குவித்தவர்கள். இதில் விக்ரமாதித்யன் கவிதைகள் எல்லோருக்கும் புரியும். இலக்கியத்தரமான ஜனரஞ்சகமான கவிதைகள். ஆனால் பிரம்மராஜன் கவிதைகளை யாரும் நெருங்க முடியாது. புரியவும் புரியாது. ஆனால் விக்ரமாதித்யன் அப்படி இல்லை.
அவர் தன் வாழ்க்கை சம்பவங்களை தன் மனம் போனபடி எழுதிக்கொண்டு போவார். ஒளிவு மறைவு இருக்காது. இன்னதுதான் சொல்ல வேண்டும், இதெல்லாம் சொல்லக் கூடாது என்பதெல்லாம் தெரியாது.
எல்லாப் பத்திரிகைகளிலும் அவர் கவிதைகள் வந்திருக்கின்றன. அதற்குக் காரணம் அவருடைய கவிதைகளில் காணப்படும் எளிமை. யாரும் படித்தவுடன் புரிந்துகொள்ள முடியும்.
நான் இப்போது பேசப்போவது ஆழித்தேர் என்ற தொகுப்பில் உள்ள கவிதையை. விக்ரமாதித்யன் கவிதைகள் வெவ்வேறு கட்டத்தில் பல கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. அவருடைய எழுதுகிற வேகத்திற்கு அவர் கவிதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன.
அவர் கவிதைகள் படிக்க எளிமையாக இருந்தாலும் இலக்கியத் தரமானவை.
நக்கீரன் பதிப்பகம் மூலமாக ஆழித்தேர் என்ற கவிதைத் தொகுதி 2014ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. அத் தொகுப்பில் உள்ள எதுவானாலும் என்ற கவிதையைப் பார்ப்போம்.
எதுவானாலும்
குழந்தைப் பருவம்
கழிந்ததே தெரியாது
சிறுவனாயிருந்த காலம்
சீக்கிரமே கடந்துவிட்டது
பதின்பருவம் வேகவேகமாகவே
போயிற்று
வாலிபகாலம்
வந்துபோனதே தெரியவில்லை
நடுத்தரவயசும்
நிற்காமல்நிலைக்காமல் சென்றுவிட்டது
இப்பொழுது
முதுமையின் தலைவாசல்
காலத்தின் அருமை
தெரிகிறது
எனில் உடம்பு
ஓய்வுகொள்ளவே விழைகிறது
மனசின் வேகத்துக்கு
ஈடுகொடுக்கமுடியாமல் தத்தளிக்கிறது
ஆடிய ஆட்டத்துக்கு
அதிகம்தான் வாழ்வதே
ஆனாலும் எழுதவேண்டியவை
இன்னமும் இருக்கின்றன
குடும்பப்பொறுப்புகள்/கடமைகள்
குறைந்தபாடில்லை
இன்னும் செல்லவேண்டிய
பாடல்பெற்ற ஸ்தலங்கள் நிறையவே
சிறிது காலம் இருக்கமுடிந்தால்
சந்தோஷம்
நிரம்ப காலம் இருந்தால்
பேரும் புகழோடும் போய்ச் சேரலாம்
எதுவானாலும்
காலசம்ஹாரமூர்த்தி மனசுப்படியே
இக்கவிதை புரிவதற்கு ஒன்றுமே இல்லை. சற்று உற்றுப் பார்த்தால் கவிஞரின் வெகுளியான மனம் வெளிப்படுகிறது. நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்ட கவிதை. இவர் கவிதையின் முக்கியமான அம்சம் வெளிப்படையான மனம். இதை நகுலனிடமும் பார்க்க முடியும்.
ஒவ்வொரு பருவத்தையும் இக்கவிதையில் விளக்குகிறார் யாருக்குமே குழந்தைப் பருவம் எப்படிப் போனது என்பது தெரியாது. ஆனால் சிறுவனாயிருந்த காலம் பிடித்து வைத்துக்கொள்ளாமல் சீக்கிரமாகவே கழிந்து விடுகிறது.
வாலிப காலமோ வந்ததும் போனதும் தெரியவில்லை என்கிறார். அடுத்தது நடுத்தர வயதும் நிற்காமல் நிலைக்காமல் சென்று விட்டது. முதுமையின் தலைவாசலில் காலத்தின் அருமை புரிகிறது. மனசின் வேகத்திற்கு ஈடு கொடுக்காமல் உடம்பு தத்தளிக்கிறது.
விக்கிரமாதித்யன் தன்னை முன்னிலைப் படுத்தி கவிதை எழுதுவார். கவிதை முழுவதும் அவர் தான். தன்னையே தன் நிலையையே ஒரு பாடுபொருளாக எடுத்துக் கொண்டு விடுவார்.
ஆடிய ஆட்டத்துக்கு அதிகம்தான் வாழ்வதே என்கிறபோது அவர் சொல்கிற நிலையை எண்ணி சிரிக்காமலிருக்க முடியவில்லை.
அவருக்கு இதுவரை அவர் எழுதியது திருப்தியைத் தரவில்லை. இன்னும் அதிகமாக எழுத வேண்டி உள்ளதாகக் கூறுகிறார். ஆனால் சிறிது காலமாவது உயிரோடு இருக்க வேண்டுமே.
நிரம்பக் காலம் உயிரோடு இருந்தால் பேரும்புகழோடும் போய்ச் சேரலாம் என்கிறார். இதுவரை கிடைக்காத பேரும் புகழும் இன்னும் சில காலம் இருந்தால் கிடைத்து விடுமா என்பது கேள்விக்குறி.
இப்படி தன்னைப் பற்றிப் பறை சாற்றுகிற தன் விளக்கக் கவிதையாக எழுதி உள்ளார் விக்கிரமாதித்யன்.
கடைசியில் முடிக்கும்போது எதுவானாலும் காலசம்ஹாரமூர்த்தியின் மனசுப்படியே என்கிறார்.
தான் அதிக காலம் வாழ வேண்டுமென்றும் அதற்கு காலசம்ஹாரமூர்த்தியின் கருணை வேண்டுமென்றும் அதிக காலம் வாழ்ந்தால் பேரும் புகழும் கிடைக்குமென்று நினைத்துக் கொள்வது ஒரு வேடிக்கையான மனநிலை.
இப்படித்தான் இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளை எழுதியிருக்கிறார். விக்ரமாதித்யன் கவிதைகளைப் படிக்கும்போது கவிதையையும் அவரையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை என்றே தோன்றுகிறது.
இந்த இட்லிகள்
இந்த இட்லிகளை இரவு முடிவதற்குள்
இவன் சாப்பிட்டுவிடலாம்
சாப்பிடாமலும்
இருக்கலாம்
தேடி வரும் சிநேகிதனையே
சாப்பிடச் சொல்லிவிடலாம்
சாப்பிடாமல்போனாலோ யாருமே வரவில்லையென்றாலோ காலையில்
எந்தச் சிறிய அனுபவத்தையும் கவிதையாக்காமல் இருக்க மாட்டார் விக்ரமாதித்யன். எளிமையான வரிகள் கொண்ட இக் கவிதைக்கு தனி விளக்கம் தேவையில்லை. இட்லிகளை இரவுக்குள் சாப்பிட வேண்டுமென்று நினைக்கிறார். ஆனால் அந்தத் தருணத்தில் சாப்பிடப் பிடிக்கவில்லை.
இட்லிகளை என்ன செய்வது என்று யோசிப்பதுதான் இந்தக் கவிதை.
இட்லியை குறித்து யோசித்தபடியே தூங்கியும் விடுகிறார். தன் சிறிய அனுபவத்தைக் கூட விடாமல் கவிதை ஆக்கிவிடுகிற மந்திரக்காரர்தான் விக்ரமாதித்யன்.
இப்படியாகத் தன்னைப் பற்றியே தன்னைச் சுற்றும் உலகம் பற்றியே சுலபமாகக் கவிதை எழுதும் விக்ரமாதித்யன், பல ஆண்டுகளாக இதைச் செய்து கொண்டு வருகிறார்.
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 08.11.2020ல் பிரசுரமானது)
இன்றைய விருட்சம் கவிதை வாசிப்பு அரங்கத்தில் கவிஞர் க.வை பழனிசாமி, தேவதச்சன் நின்று பார்க்கும் இடம் என்ற தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார். எப்படி தேவதச்சன் கவிதைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று உதாரணங்களோடு விளக்கினார். பிறகு, மழையைக் குறித்து எல்லோரும் கவிதைகள் வாசித்தோம். இதோ நான் வாசித்த கவிதைகளை இங்கு அளிக்கிறேன்.
வரும் வெள்ளி (06.11.2020) அன்று நடைபெற இருக்கும் சூம் மூலமாகக் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் மழை என்ற தலைப்பில் கவிதை வாசிக்க எல்லோரையும் அழைக்கிறேன்.. நீங்கள் எழுதிய தலைப்பாகவோ அல்லது வேறு கவிஞர்கள் எழுதிய கவிதைகளையோ நீங்கள் வாசிக்கலாம்.
வழக்கம்போல் கவிதை வாசிப்பவர்கள் சிலவற்றைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்புரை வழங்குபவர் : கவிஞர் க.வை.பழனிசாமி அவர்கள். ‘தேவதச்சன் நின்று பார்க்கும் இடம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்.
கூட்டம் மாலை 6.30 மணிக்குத் தொடங்குகிறது.
24வது நிகழ்வாக விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம் – மழை என்ற தலைப்பில் Time: Nov 6, 2020 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88290587812?pwd=NFZNbTRWbmlIMU1KdjVxTXVwbnh1Zz09
2017ஆம் ஆண்டு மா அரங்கநாதன் என்ற படைப்பாளி இறந்து விட்டார் . சிலரைப் பார்க்கும்போது நோயின் உபாதையில் நெளிந்துகொண்டிருப்பவராகத் தோற்றம் தருவார்கள். பேசும்போது உடல் உபாதையைப் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் மா அரங்கநாதன் வித்தியாசமானவர். பலமுறை அவர் என்னுடன் தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருப்பார். ஒருமுறை கூட உடல்நிலை சரியில்லை என்று சொன்னதில்லை. முதுமையில் அவர் கம்பீரமாக நடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறி நான் பீச் ரயில்வே ஸ்டேஷனலில் இறங்கி எதிரில் உள்ள தேசிய வங்கிக்குச் செல்வேன். மின்சார வண்டியில் பயணம் செய்யும்போது மா அரங்கநாதனும் மின்சார வண்டியில் பயணம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அதுமாதிரியான தருணங்களில் நானும் அவரும் உரையாடிக்கொண்டிருப்போம். அவர் முன்றில் என்ற பத்திரிகைக் கொண்டு வந்துகொண்டிருந்தார். நான் விருட்சம் என்ற பத்திரிகைக் கொண்டு வந்துகொண்டிருந்தேன். கிட்டத்தட்ட முன்றிலும் விருட்சமும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒரே அச்சு. ஆதிமூலம் லட்டரிங். முன்றில் வந்தவுடன் விருட்சம் வந்துவிடும். ஒரே அச்சகத்தில் இரண்டும் அச்சிடப்படும். பத்திரிகைகளின் உள்ளே வித்தியாசமான பக்கங்கள்.
மா அரங்கநாதன் அரசின் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் தி நகரில் ஒரு இடத்தில் முன்றில் என்ற பெயரில் புத்தகம்/பத்திரிகை விற்கும் கடை ஒன்றை ஆரம்பித்தார். அந்த இடத்தில் எல்லோரும் சந்திப்போம். தூய வெண்ணிற ஆடைகளுடன் மா அரங்கநாதன் காட்சி அளிப்பார். நான் பல எழுத்தாளர்களைக் கோபப்பட்டுப் பார்த்திருக்கிறேன். ஆனால் மா அரங்கநாதனை நான் அப்படிப் பார்த்ததில்லை. அந்தக் கடை வைத்திருந்ததால் பெரிய லாபமே வராது. ஆனால் புத்தகங்கள் பத்திரிகைகள் விற்று ஒழுங்காகப் பணம் கிடைத்துவிடும். இப்படி பலமுறை பல சந்தர்ப்பங்களில் பார்த்துப் பேசியிருக்கிறேன்.
கடைசியாக அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது தடம் பத்திரிகையில் அவரைப் பற்றி பேட்டி ஒன்று வந்திருந்தது. அது குறித்து நான் சொன்னபோது அவருக்கு அது தெரியவில்லை. அந்தப் பத்திரிகை பாண்டிச்சேரி போய்ச் சேர்வதற்கு முன்னரே நான் குறிப்பிட்டிருந்தேன். ஒரு சிறுவனின் குதூகலத்துடன் அவர் அந்தப் பேட்டியைப் பற்றி என்னிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்.
‘திரிசடை’ என்ற கவிஞரின் கவிதைப் புத்தகத்தைத் தேடிக்கொண்டு விருட்சம் நூலகத்திற்கு வந்தேன். நான் கிட்டத்தட்ட 400 கவிதைப் புத்தகங்களை நூலகத்தில் சேகரித்து வைத்திருக்கிறேன். ஏன் 500 கூட இருக்கும். புத்தகம் வைத்திருக்கும் ஸ்டீல் அலமாரியின் அடித்தட்டில் ஒரு புத்தகம் எதிர்பாராத விதமாக என் கண்ணில் பட்டது. ‘மா அரங்கநாதன் படைப்புகள்’ என்ற புத்தகம்தான் அது. அதைப் பார்த்தவுடன் அடடா என்று தோன்றியது.
என்னமோ அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சிறுகதையை மா அரங்கநாதன் ஞாபகமாய்ப் படிக்க வேண்டுமென்று தோன்றியது. வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்தேன். 1021 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. அந்தக் காலத்தில் சிறு பத்திரிகையில் ஒரு கதை வந்தால் பெரும்பாலும் யாருக்கும் தெரியாமல் இருக்கும். அப்படியே வந்தாலும் படிப்பவர்கள் யார் என்றும் தெரியாது. அப்படியே படிப்பவர்கள் இருந்தாலும், வாய்திறந்து எழுதுபவரைப் பாராட்டவும் மாட்டார்கள். இப்படித்தான் மா அரங்கநாதன் கதைகள் பல வந்திருக்கின்றன. ஆனாலும் அவர் ஓரளவு எல்லோருக்கும் தெரிந்த எழுத்தாளர்தான்.
அவர் மொத்தப் படைப்புகள் அடங்கிய இத் தொகுதியில் அவருடைய ‘எறும்பு’ என்ற சிறுகதையைப் படித்தேன். படிக்க ஆரம்பிக்கும்போது எறும்பு பற்றி என்ன கதை எழுதியிருக்க முடியும் என்று யோசித்துத்தான் படித்தேன். ஒரு எறும்பு எளிதாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்வதைப் பற்றிய கதையா? அதாவது எறும்பு இன்னொரு இடத்திற்குப் போனாலும் அங்குள்ள எறும்பு கூட்டத்துடன் எளிதாகக் கலந்துகொண்டு விடுவதாக எழுதி உள்ளார். காலம் காலமாகப் பயன்படுத்தப்படும் பழமொழிகளின் அபத்தங்களைப் பற்றியும் கதை சொல்கிறது.
பின் இக் கதை சொல்லி நெல்லையிலிருந்து ரயில் பயணம் தொடங்கி பட்டிணம் போகிற அவதியை வெளிப்படுத்துகிறான். அங்கு சில நாட்கள் தங்கி விட்டுத் திரும்பவும் ஊருக்குக் கிளம்புகிறான். அங்குள்ள எறும்பு ஒன்று அவன் வேட்டியில் ஏறி இருந்தது என்று முடிக்கிறார். இந்தக் கதையில் ஒரு வரி வருகிறது. குறிஞ்சி நிலம் ஏற்பட்டு விவசாயம் மலராத காலத்திலேயே தோன்றிய அந்த மொழியில் அவன் பேசி பதிலையும் பெற்றாலும் புரியாத நிலை. அப்போதே தோன்றி மறைந்தது அந்த வெறுப்பு என்று முடிக்கிறார்.
இந்தக் கதையை முடிக்கும்போது, இது எறும்பைப் பற்றிய கதையா அல்லது எறும்பை முன்னிறுத்திக் கதைசொல்லியின் கதையா என்பது யோசிக்க வேண்டி உள்ளது. வழக்கம்போல மா அரங்கநாதனின் நுணுக்கம் மிகுந்த கதை. இன்னொரு இடத்தில் ஆசிரியர் கூற்று வெளிப்படுகிறது. ‘பிறபொக்கும் எல்லாம் உயிர்க்கும் சொன்னவரா மனுதர்ம சாஸ்திரப்படி நிற்க என்று சொல்லுவார். வேடிக்கைதான். இது பரிமேலழகர் அருளிச் செய்த உரை. அவர் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர். நிற்க. .’ எப்படி எறும்பு வேட்டியில் ஒட்டிக்கொண்டதோ அதேபோல் என் நினைவில் மா அரங்கநாதனின் கதையும் ஒட்டிக்கொண்டு என்னைத் திரும்பத் திரும்பப் படிக்க வைத்துவிட்டது. அடடா என்று சொல்லாமல் என்ன சொல்வது. (இன்று மா.அரங்கநாதன் பிறந்தாள். அவர் ஞாபகமாய் நான் 15.4.20018 அன்று எழுதிய கட்டுரை)
தி.ஜானகிராமனின் தொகுக்கப்படாத சிறுகதைகளில் எதையாவது எடுத்துப் படித்துப் பார்க்கலாமென்று அகப்பட்ட கதை ஆறுதலகாதல் என்ற பத்திரிகையின் ஆண்டு மலரில் 1953ல் எழுதப்பட்ட கதை இது. இந்தக் கதை ஆரம்பத்திலேயே மனைவியை விட்டுப் பிரிந்த கணவனைப் பற்றிச் சொல்கிறது. தனிக்குடித்தனம் போக வேண்டுமென்று நினைக்கிறான் சங்கர். ஆனால் அது முடியவில்லை. 6 மாதமாக மனைவியைப் பிரிந்து இருக்கிறான்.ஒரு வீட்டில் ஒரு அறையில் அவனும் நண்பன் கோபாலுடன் குடியிருக்கிறான். அவன் மனைவி பிரசிவித்த முதல் குழந்தையுடன் சென்னையில் தனிக் குடித்தனம் நடத்தத் திட்டமிடுகிறான். ஆனால் அவ்வளவு சுலபமாக அது நடக்கவில்லை. அவளையும் குழந்தையையும் ஊரில் விட்டு வைத்திருக்கிறான்.ஒவ்வொரு முறையும் அவளிடமிருந்து கடிதத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறான். குடித்தனம் செய்யும் பெண்ணுக்குக் கடிதம் எழுதுவதென்றால் கல்யாணம் செய்கிறதுபோல. கை ஒழிந்து, குழந்தையைத் தூங்கச் செய்து….ஒவ்வொரு கடிதத்திலும் அவள் குழந்தையைப் பற்றி எழுதி வருகிறாள். மூன்று வாரம் முன் அவன் ஊருக்குப் போனபோது குழந்தை தவழ்ந்துகொண்டிருந்தது. ஆனால் உட்காரத் தெரியவில்லை. அவள் கடிதம் வந்தபோது குழந்தைக்கு உட்கார தெரிந்து விட்டது. பிடித்துக்கொண்டு நிற்கிறது என்று எழுதியிருந்தாள். குழந்தைகள் எவ்வளவு விரைவாக வளர்கின்றன. புழுக்கமான புழுக்கம். கோட்டுக்குள் கசகசவென்று பனியனும் சட்டையும் முதுகோடு ஒட்டிக்கொண்டிருந்தது. ஆபீஸ÷ற்குப் போவதற்கும் வீட்டிற்கு வருவதற்கும் எவ்வளவு வித்தியாசம். கதாசிரியர் இதை விவரிக்கும்போது நமக்கும் அந்த உணர்வு ஏற்பட்டு விடும் போல் தோன்றுகிறது. இது வழக்கமாக ஆபீஸ் போகும் மனிதனின் கதை. தினமும் அவன் வரும்போது லெவல் கிராஸிங் மணி அடிக்கும். அப்புறம் இப்படியும் அப்படியுமாக தடதடவென்று இரண்டு ரயில்கள் ஓடிப்போகிற வரைக்கும் காத்திருக்க வேண்டும். இன்று வித்தியாசமாகக் கேட் திறந்திருந்தது. அவசரம் அவசரமாக சங்கர் கேட்டைக் கடந்து வந்து விடுகிறான். வீட்டு மாடி ஏறிப் போகும்போது, வீட்டுக்காரன் குழந்தை கூப்பிட்டு சாக்லெட் கேட்கிறது. “யே பேசாமல் இருடா,” என்று குழந்தையின் தாயார் கூறுகிறாள். ஒரு நாளும் அவள் இப்படிச் சொன்னதில்லை. கோட்டுப் பையிலிருந்து ஒரு சாக்லெட் எடுத்துக் கொடுக்கிறான் சங்கர். மெடிக்கல் காலேஜ்ஜில மாணவனாக இருந்த கோபால் அவனுக்காகக் காத்திருக்கிறான்.”கெட்ட செய்தி வந்திருக்கிறது” என்று ஒரு கடிதத்தை சங்கரிடம் கொடுக்கிறான். அது ஒரு கார்டு. . மேலே தஞ்சாவூர் என்று எழுதியிருந்தது. பஞ்சாபகேசன் என்ற நண்பன் எழுதியிருந்தான். போனவாரம் வந்து சங்கரின் சித்தப்பா வந்திருந்து அவனுடைய மனைவியையும் குழந்தையும் அழைத்துப் போயிருக்கிறார்கள். தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு அழைத்துப் போயிருக்கிறார். போன இடத்தில் குழந்தைக்கு உக்கிரமான அம்மை போட்டு குழந்தை இறந்து விட்டது. சங்கரின் அப்பாவிற்கு இந்தத் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. குழந்தை இறந்து 5 நாட்கள் ஆகிவிட்டது. இந்தத் துக்கத்தை அவர்கள் எழுதக்கூடாது என்று பஞ்சாபகேசன் என்ற நண்பன் எழுதியிருக்கிறான்.இந்தக் கடிதத்தைப் படித்தவுடன் பெரிய அதிர்ச்சியாக இருந்தது சங்கருக்கு. கதாசிரியர் இந்த இடத்தில் இப்படி வர்ணிக்கிறார். நாலைந்து தடவை வாசித்தான். பிறகுதான் புரிந்தது. செய்தி மனதில் பதிந்தது உதட்டைப் பல்லால் படித்தான். நெஞ்சை வலித்தது. அவன் நண்பன் கோபால் சொல்கிறான். “சங்கர் சட்டையெல்லாம் கழட்டிப் போட்டுட்டு வாங்க. தண்ணியிழுத்து விடறேன்.” அவன் குளிக்கும்போது சொட்டச் சொட்ட நனைந்து விடுகிற சட்டைத் துணிகளை அவிழ்த்து விடச் சொல்கிறது ஒரு குரல் ஜன்னலிருந்து . பிழிய வேண்டாமென்று கட்டளை இடுகிறது. வேறொரு சந்தர்ப்பமாக இருந்தால் அவனுக்கு இந்தக் குரல் திகைப்பைக் கொடுத்திருக்கும். அறைக் கதவைப் பூட்டிவிட்டு அவனை வெளியே அழைத்துப் போகிறான் கோபால். அவன் மனைவி கமலி சின்னஞ்சிறு பெண். எப்படி இந்தத் துக்கத்தைத் தாங்குவாள் என்று கவலைப் படுகிறான். கிரிபத் ரோடு முழுவதும் அழுதுகொண்டே வருகிறான் சங்கர். அவனை கோபால் சமாதானப் படுத்துகிறான். அவனை கோபால் உஸ்மான் ரோடில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துப் போகிறான். கோரமான பசி. எல்லாவற்றையும் வாங்கிச் சாப்பிடுகிறான் சங்கர். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவுடன் சங்கரிடம் ஒன்று சொல்கிறான் கோபால் அவனுடைய அம்மா கிணற்றடியில் சறுக்கி விழுந்துவிட்டதால் அவசரமாக ஊருக்குப் போக வேண்டுமென்கிறான் கோபால்.கோபால் எவ்வளவு நல்ல மனிதன் இதைச் சொல்ல எவ்வளவு தயங்குகிறான் என்று நினைக்கிறான்சங்கர். அவன் மீது அவனுக்கு அன்பு பெறுகிறது. அவனைத் தனியே சென்று விட்டு கோபால் சென்று விடுகிறான். சங்கர் உடனே அறைக்குச் செல்ல விரும்பவில்லை. அவன் குழம்பிப் போயிருக்கிறான்.ஒன்றும் புரியாமல் கோபதி நாராயணசாமி தெருவில் நடக்கிறான். அப்போது யாரோ கூப்பிடுவது கேட்கிறது. வீட்டுக்காரர். அவர் துக்கம் விசாரிக்கிறார். “என்ன சார் இது, வைசூரியில் யாராவது இறந்து போவார்களா? பதமா அப்படியே இடிஞ்சு போயிட்டா. எனக்கு ஒண்ணும் சொல்லத் தோன்றவில்லை,” என்றார். சங்கர் அவர் பேச்சைக் கேட்டதும் அழுகை பீரிட்டுக் கொண்டு வந்தது. வீட்டுக்காரர் சாப்பிடக் கூப்பிடுகிறார். சங்கர் முதலில் மறுத்து விடுகிறான். வீட்டுக்காரர் ரொம்பவும் தொந்தரவு செய்தவுடன் சரி என்கிறான். “சார் இப்ப எங்கே போறீங்க?” இப்படியே போயிட்டு வருகிறேன்” என்கிறான் சங்கர்.ஜாக்கிரதையாகப் போகும்படி எச்சரிக்கிறார் வீட்டுக்காரர். “பாண்டிபஜார் பக்கம் போக வேண்டாம். கூட்டம் அதிகம்,” என்று எச்சரிக்கிறார். இந்த இடத்தில் கதாசிரியர் ஒன்றை வெளிப்படுத்துகிறார். ‘மனிதருக்கு எவ்வளவு கவலை. சோகம் அபூர்வமான ஒரு அனுபவம். சோகப்படுகிறவன் மற்ற மனிதர்கள் அனைவரினும் உயர்ந்து விடுகிறான். அதன் காலடியில் மற்ற உணர்ச்சிகளும் ரணங்களும் விழுந்து அடிமைப்பட்டு விடுகின்றன.’ இந்த இடத்தில் ஒரு காட்சியை வெளிப்படுத்துகிறார். குழந்தை இருக்கும்போது அவன் ஊருக்குப் போகிறான். அவன் மனைவி தனியாக இருக்கிறாள். “நீ பூனைக்குட்டி மாதிரி இருக்கே. அதுக்குள்ளே ஒரு குழந்தை உனக்கு,” என்கிறான். உடனே அவள், ஏன் என்னைப் பார்த்தால் அம்மா மாதிரி இல்லையா? நீங்களும்தான் துளியூண்டு பள்ளிக்கூடத்துப் பையன் மாதிரி இருக்கேள் என்கிறாள். தேனாம்பேட்டை வரை வந்து விடுகிறான் சங்கர். அவனுடன் ஓட்டலில் சாப்பிடுகிறவர், “என்னசார் எண்ணெய் தேய்ச்சிக் குளிக்சிங்களா?” என்று விசாரிக்கிறார். தேனாம்பேட்டை வந்ததை உணர்ந்தவுடன் வீட்டிற்குத் திரும்புகிறான் சங்கர். அவன் அப்பா குழந்தை இறந்ததைக் குறித்து பெரிதும் கவலைப்படுவார் என்று நினைக்கிறான் சங்கர். சித்தப்பா பதறிப் போயிருப்பார். இருட்டி வெகு நேரமாகிவிட்டது. வாசல் கேட் உள்ளுக்குள் தாளிட்டிருந்தது. வீட்டுக்காரரின் மனைவி வந்து கதவைத் திறக்கிறாள். வீட்டுக்காரர் டூட்டிக்கு மீனம்பாக்கம் போயிருப்பதாகச் சொல்கிறாள். அவள் சாப்பிடக் கூப்பிடுகிறாள். அவன் இப்போது வேண்டாமென்று மறுத்து விடுகிறான். கோபால் கொடுத்த சாவியைக் கொடுக்கிறாள். ஊருக்குப் போக முடியாத நிலையை எண்ணி ஒரு கடிதம் எழுதுகிறான். கடவுளாகப் பார்த்துக் கொடுத்ததை அவரே எடுத்துக் கொண்டு விட்டார் என்று அவனுடைய சித்தப்பாவிற்குக் கடிதம் எழுதுகிறான்.கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கிறான். பிறகு லைட்டை அணைத்துவிட்டு மீண்டும் படுக்கை. “சாப்பிட வரவில்லையா?” என்று பத்மா வந்து கேட்கிறாள். அவன் திகைக்கிறான். “யாரு நீஙகளா?” என்று கேட்கிறான். “மணி பன்னிரண்டு ஆகப் போகிறது. சாப்பிட வரவில்லையா?” என்று கேட்கிறாள். பசியில்லை என்கிறான் சங்கர் “எனக்காகக் கொஞ்சம் சாப்பிடுங்களேன். எனக்கு மட்டும் வருத்தமில்லையா?” என்கிறாள் பத்மா.அவள் விசும்பி விசும்பி அழுகிறாள். அவனும் அழுகிறான். அப்படியே படுக்கையில் சாய்ந்து விடுகிறான். பத்மாவிற்கும் அப்படிப்பட்ட ஒரு அனுபவம் இருக்கிறது. அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்து வைசூரி கண்டு இறந்து விட்டதாகக் கூறுகிறாள். அதனாலதான் அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை என்றும். அவனைப் பார்த்து ஆறுதல் படுத்த வேண்டுமென்று நினைக்கிறாள். அவள் அருகே உட்கார்ந்தாள். அவள் புடவைத் தலைப்பால் அவன் கண்களைத் துடைத்தாள். தலையைக் கோதி விட்டாள். இந்தக் காட்சியின் இறுதியில் கதாசிரியர் இப்படி வர்ணிக்கிறார். அவன் கைகளுக்குள் அவள் உடல் துவண்டு விழுந்தது. பிரிக்க முடியாத அழைப்புப் போலிருந்தது மனத்தின் சூன்யம் சூடு நிரம்பி பால் பாத்திரம் போலப் பொங்கி வழிந்தது. இந்த இடத்தை விவரிக்கும்போது தி.ஜா விரசமில்லாமல் எழுதி இருக்கிறார. பொதுவாக தி ஜா அவருடைய எல்லாக் கதைகளிலும், நாவல்களிலும், பெண்ணிடமிருந்து ஆணிற்குத் தாபம் இருப்பதாக வெளிப்படுத்துகிறார். அவருடைய நாவல்களான ‘மோக முள்,’ ‘அம்மா வந்தாள்,’ ‘மரப்பசு’ என்று எல்லா நாவல்கள் மூலம் இதைக் குறிப்பிடலாம். இந்தக் கதையிலும் இதைத் தெரியப்படுத்துகிறார். ‘ஆறுதல்’ எப்படி ஒரு பெண்ணிற்கும் ஆணிற்கும் தாபமாக மாறுகிறது என்பதுதான் இந்தக் கதை திரும்பவும் பதமா சாப்பிட கூப்பிடுகிறாள். தனக்கும் பசிக்கிறது என்று சொல்கிறாள். “நீ சாப்பிடவில்லையா? என்று கேட்கிறான். இல்லை உங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன் என்கிறாள் பத்மா. அப்பவே சொல்லக் கூடாதா என்று அவன் எழுந்து கொள்கிறான். தலையை முடித்துக்கொண்டு எழுந்தாள் அவள். அவனுக்கும் வயிறு பசித்தது. துக்க உணர்வு இரண்டு பேர்களையும் நெருங்கிப் பழக வைக்கிறது. திருமணமான பெண் இன்னொரு திருமணஆன ஆணுடன் உடல் ரீதியாக தொடர்பு கொள்ளுவதை மிகைப்படுத்தாமல் எழுதப்பட்டிருக்கும் கதை இது. சாதாரண இயல்பான நிகழ்ச்சியாக இது ஏற்படுவது போல் தோன்றுகிறது. 1953 ஆம் ஆண்டு இந்தக் கதையை தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார். இது உண்மையாக அவர் நண்பருக்கு ஏற்பட்ட சம்பவம் என்று விவரிக்கிறார் ஆசிரியர் குறிப்பு என்ற பெயரில். ஆசிரியர் குறிப்பு கதை இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது அவசியமாக என்று கேட்கத் தோன்றுகிறது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஜானகிராமன் ஆண் பெண் உறவைக் கொஞ்சம் கூட ஆபாசமாக விவரிக்கவில்லை. காமம் இயல்பாக ஏற்படுவதுபோல் கதையைக் கொண்டு போகிறார். ‘தொகுக்கப்படாத கதைகள்’ என்ற பெயரில் தி.ஜானகிராமன் கதைகளைக் கண்டறிந்து ‘கச்சேரி’ என்ற பெயரில் காலச்சுவடு ஜனவரி 2020ல் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளது.’ (திண்ணை முதல் இணைய வார இதழில் நவம்பர் 1, 2020ல் பிரசுரமானது)
வழக்கம்போல் கவிதை வாசிப்பவர்கள் சிலவற்றைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஆத்திகம், நாத்திகம் கவிதைகள், அரசியல்வாதிகளைப் போற்றியும் தூற்றியும் கவிதைகள், ஆபாசமாக எழுதப்படும் கவிதைகள், கொரானோ தொற்றைக் குறித்து கவிதைகள். நாளை (30.10.2020) மாலை 6.30க்கு கவிதை வாசிப்புக் கூட்டம் கவிஞர் தேவேந்திர பூபதி ‘கவிதையெனும் நிலைக்கண்ணாடி’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். கவிதைகளை ரசித்துக் கேட்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.