திருக்குறள் சிந்தனை 17

மழை பெய்யாவிட்டால் என்னன்ன ஆபத்துக்கள் காத்திருக்கும் என்று பத்து குறள்களில் திருவள்ளுவர் சொல்லிக்கொண்டே போகிறார். எப்படி மழையைப் பற்றி திருவள்ளுவர் அந்தக் காலத்தில் யோசித்தார் என்பது எனக்கு ஆச்சரியம். மழை இல்லாமல் வாரம் ஒருமுறை தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் எங்கள் வீடுகளில். இன்றைய காலத்தில் திருவள்ளுவர் அவதரித்தால் இதையும் தன் குறளில் பாடிவிடுவார். நான் குறளில் வான்சிறப்பு படித்துவிட்டு எழுதிக்கொண்டிருப்பதால், திருவள்ளுவர் கருணையால் நேற்று இரவு நல்ல மழை.
இன்றைய குறளைப் பார்ப்போம்.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்.

மழைபெய்யாவிட்டால் கடல்நீரின் அளவுகூட குன்றிவிடும் என்கிறார். உண்மையில் கடல்நீரிலிருந்து உருவாகும் மேகம்தான் மழையாக உருமாறுகிறது. மழையாக வராவிட்டால் கடல் கூட தன் வளத்தில் குறையும்.
இந்தக் குறளில் தடிந்துஎழிலி என்ற வார்த்தைப் பிரயோகம் பிடித்திருக்கிறது.
நவீன கவிஞர்கள் யாரும் மழையைப் பற்றி எழுதுவதில் சளைத்தவர்கள் இல்லை. நான் 400 கவிதைப் புத்தகங்கள் வைத்திருக்கிறேன். எந்தக் கவிதைத் தொகுதியை எடுத்தாலும் அதில் மழையைப் பற்றி எழுதாமல் ஒரு கவிதை கூட தப்பாது. மழையோடு நெருக்கமானவர்கள் நவீன கவிஞர்கள் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. இதோ தேவதச்சன் அவர்களின் கவிதையான üமழையைப் பற்றியý என்ற கவிதையை இங்குக் கொடுக்க விரும்புகிறேன்.

மழையைப் பற்றிய எல்லாக் கவிதைகளையும் நீங்கள்
படித்திருக்க மாட்டீர்கள்
மழைக்கவிதைகளைப் படிக்கையில் நீங்கள் எழுதியவனைப்
பற்றியும்
உங்களைப் பற்றியும் தெரிந்துகொள்வதோடு
மழையைப் பற்றியும்
ஒன்றும் தெரிந்துகொள்ளாமல் போகிறீர்கள்.
தாள்களை நனைக்காமல் பெய்கிறது மழை.
எனினும் தாள்களில் தேங்கி நிற்கும் மழை நீரில்
உங்கள் கணுக்கால்வரை மறைந்திருக்கிறீர்கள்.
கவிதைக்கு வெளியேயும்,
மழையைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்
மழை எப்படியெல்லாம் பெய்யாமல் போகிறது என்று.
மழையை வழியனுப்பிய அந்தக்கால சடங்குகள் பற்றி
அதற்குரிய தெய்வங்கள் பற்றி
மழை மட்டுமா போச்சு என்று
சிறகி நாரை கொக்கு முக்குளிப்பான்
உள்ளான் நீர்க்கோழி பனங்காடை எல்லாம்
எங்கே போச்சு.
அவை மீனைத் தின்கின்றன.
மீன்கள் இல்லை
“காடுகளில்
மரபுத் தான்யங்கள் போய்
ஒட்டுத் தான்யங்கள் வந்துவிட்டன
பறவைகள் எல்லாம் எங்கே போச்சு
வடக்கேயா மேற்கேயா”
அவர்களுக்குத் தெரியவில்லை
கவிதைக்கு வெளியே
மாடுகளை விற்க
ஓட்டிக்கொண்டு போகிறார்கள்
கவிதைக்கு உள்ளே,
காலித் தொழுவங்கள்.
இன்னும் கொஞ்ச நாளில்
அவர்களும் காணாமல் போய்விடுவார்கள்
வடக்கேயோ மேற்கேயோ சூன்யத்திலோ
பெய்யாத மழைக்கவிதையின் நிர்வாணத்தில் நீங்கள்
கணுக்கால்வரை கூட மறையாமல்
தெரிகிறீர்கள்

(மர்ம நபர் – தேவதச்சன் கவிதைகள்)

திருக்குறள் சிந்தனை 16

வள்ளுவர் சிலை அருகில்தான் சந்திப்போம் ஞானக்கூத்தன் முன்னால் வந்து உட்கார்ந்து விடுவார். பின் நான், காளி-தாஸ், ஆனந்த், ராஜகோபாலன், ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன் போன்ற நண்பர்கள். எல்லோரும் தமிழில் அப்போது எழுதுகிறவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். அதெல்லாம் இனிமையான பொழுதுகளாக இப்போது நினைத்துப் பார்க்கிறேன். ஆத்மாநாமும் அடிக்கடி அங்கு வந்து சந்திப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் இவர்களைச் சந்தித்தபோது ஆத்மாநாம் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் வள்ளுவர் சிலை அருகில் நாங்கள் சந்தித்தாலும் வள்ளுவர் குறித்துப் பேசியதில்லை. ஒருமுறை கூட திருக்குறளைப் பற்றிப் பேசியதில்லை. ஏன்? இப்போது யோசித்துப் பார்க்கிறேன். காரணம் புரியவில்லை.

இன்றைய திருக்குறளைப் பார்ப்போம்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

வானிலிருந்து மழையின் துளிகள் விழாவிட்டால் பூமியில் முளைக்கும் புல் பூண்டு கூட காண்பது அரிது என்கிறார் திருவள்ளுவர். இக்குறள் கிட்டத்தட்ட ஏரின் உழாஅர் உழவர் குறளில் சொல்வதையே சொல்வதுபோல் தோன்றுகிறது. திருவள்ளுவரிடம் காண்பது எதுகையைக் குறளில் பொருத்தமாகப் பயன்படுத்துவது. உதாரணமாக விசும்பின் என்றும் பசும்புல் என்றும் குறிப்பிடுகிறார்.

இதோ இதற்கு ஏற்றாற் போல் பிரதீபன் என்ற நவீன கவிஞரின் கவிதையைப் குறிப்பிட விரும்புகிறேன்.

தீப்பெட்டியில் அடைத்துச்
சிறைசெய்த
சின்னஞ்சிறு இந்திரகோபப் பூச்சிகள்

அடாது சேட்டைகள்கண்டு
அகங்குன்றிய ஆசிரியர்

ஆரவாரமான
அறிவுஜீவித்தனப் பேச்சுக்களைக் கேட்டு
நசுங்கி உணர்ந்த நண்பன்

அதிகம சீண்டியதால்
அழுதுவிட்ட புதுமனைவி

மறந்தனம் அவையெலாம்
வருந்தற்க என்பதுபோல்
சிரித்துத் தோன்றித் தெரிந்தனர்
மழைபெய்து
மண்நெகிழ்ந்திருக்கும்
இந்த
மாலைப் பொழுதில்

நான் வைத்திருக்கும் எல்லாக் கவிதைத் தொüகுதிகளிலும் மழையைப் பற்றி கவிதைகள் இல்லாமல் இல்லை. நான் வைத்திருக்கும் ஆர் பாலகிருஷ்ணனின் கவிதைத் தொகுதியின் பெயர் மழை.

திருக்குறள் சிந்தனை 15

காலையில் எழுந்தவுடன் திருக்குறள் படிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை எனக்கு வந்து விட்டதுபோல் தோன்றுகிறது. ஒரு நாளைக்கு ஒரு குறள் விதம்தான் படிக்கிறேன். அப்படிப் படிக்கும்போது நேற்று அதன் முதல் தினம் படித்தக் குறள்களையும் திரும்பவும் எடுத்துப் படிக்கிறேன்.
திருக்குறள் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது. வான்சிறப்பு என்ற பெயரில் ஒவ்வொரு குறளாக எடுத்துப் படித்துக்கொண்டிருக்கிறேன். மழை என்ற ஒன்று இல்லாவிட்டால், நம்மால் வாழவே முடியாது என்பதைக் குறள் அழுத்தமாக வலியுறுத்துகிறது.
என் பள்ளி பருவத்தில் திருக்குறளைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. ஏன்னென்றால் நான் மனப்பாடம் செய்து தேர்வில் கேள்வி கேட்டால் எழுத வேண்டும். இப்படி மனப்பாடம் செய்து ஒப்பிப்பதை நான் விரும்பி ஏற்றுக்கொண்டதில்லை.
ஒன்றரை அடியில் அழுத்தம் திருத்தமாக தன் கருத்துக்களைச் சொல்வதோடல்லாமல் போதிக்கும் தன்மையாகவும் திருக்குறள் தென்படுகிறது. ஒருவர் ஒரு திருக்குறளைப் படித்துவிட்டு அதை விட்டு வெளியே வரும்போது எந்த மன நிலையில் இருப்போம் என்பதையும் யோசிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
இதோ 15வது குறளை உங்கள் முன் அளிக்கிறேன்.

கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

இன்று நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது தாங்க முடியாத வெயில். அப்போதுதான் மேலே குறிப்பிட்ட குறள் ஞாபகத்திற்கு வந்தது. உலக மக்களை தவிக்கச் செய்வதும் அப்படித் தவிக்கின்றவர்களின் துன்பங்களை நீக்குவதும் மழை ஒன்றுதான். இந்த மழை இல்லாவிட்டால் தவித்தபடியே இருக்க வேண்டியதுதான். மழையே கடவுள் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. கெடுப்பதையும் எடுப்பதையும் மழைதான் செய்து கொண்டிருக்கிறது. இந்தக் குறளில் கெடுப்பதூஉங் எடுப்பதூஉம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் அற்புதமாக அமைந்துள்ளன.
வனம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை வந்தது யாருக்காவது தெரியுமா? ஸ்ரீ நேகனும், ஜீ முருகனும்தான் அதன் ஆசிரியர்கள். அக்டோபர் – நவம்பர் 2005 இதழ் என்னிடம் உள்ளது. வனம் ஐந்தாவது இதழ். அந்த இதழைப் புரட்டிக்கொண்டு வந்தபோது என் கண்ணில் பழனிவேள் கவிதை ஒன்று பட்டது. திடீர் மழை என்ற தலைப்பு அக் கவிதையை இங்கு தருகிறேன்.

திகைத்த நடவுப்பெண்கள் கரையேறாமல்
வயலில் விளையாட்டாக பெய்யும்
மழையை முக்காடிட்டு நின்றனர்
கூடுதலானதோடு மழை
உருமாறத்துவங்கியது
அப்பெண்களின் மேல் அலங்காரமாக

விலகியமுடிகளில் திரளும் முத்துகள்
நெற்றியில் மூக்கின்நுனியில்
உதட்டு விளிம்புவரை அரும்பி
தோடுடைய செவிகள் உருகுகின்றன
கழுத்தில் புதிய மணிச்சரம்
விரல்களி கைகளில் தின்மையாக
கலகலக்கிறது
காலில் நிலையற்று நழுவும் கொலுசுகள்

மழை தீவிர மடைந்துவிட்டது
அவர்கள் முன்னிலும் தெப்பலாகி
பார்க்க மழை நடுங்குகிறது

ஒருத்தில அண்ணாந்து மழையை
விலக்கமுயல
ஒரு துளி நழுவி
நழுவி
அல்குலில்பட்டது
இன்னதென புரியாமல் பரவசப்படுகிறாள்
பிறகு அவள் புதைந்து நிற்கும் சேற்றில்
விசையற்று துளிர்விடத்துவங்கினாள்.

திருவள்ளுவரோ மழை இல்லாவிட்டால் அவ்வளவுதான் ஜாக்கிரதை என்று மிரட்டுகிறார். பழனிவேளோ அவருகடைய கவிதையில் மழையை வைத்து விளையாடுகிறார்

திருக்குறள் சிந்தனை 14

ஒரு குறளை எடுத்து வாசிக்கும்போது அதற்கிணையாக நவீன கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்துள்ளேன். ஒன்றரை அடியில் திருவள்ளுவர் சில உண்மைகளைக் கூறுகிறார். சில குறள்கள் மூலம் போதிக்கவும் செய்கிறார்.
வான் சிறப்பு என்ற இரண்டாவது அதிகாரத்தின் மூலம், வானின் சிறப்பாக மழையைப் பற்றியும் அந்த மழை மாத்திரம் இல்லாவிட்டால் நாமெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் பத்து குறள்கள் மூலம் சொல்லிக்கொண்டு போகிறார்.
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால்.

இது மிக எளிமையான குறள் இது. புயல்என்னும் என்கிறார். ஏன் இப்படிச் சொல்கிறார் என்று யோசித்தேன். வானத்திலிருந்து பெய்யும் மழை புயல்போல் வரவேண்டும் என்கிறார். அப்படி வராவிட்டால் உழவர்கள் ஏர் ஓட்டி நிலத்தை உழமாட்டார்கள் என்கிறார்.
இதில் அதிகாரத்தில் கூறப்பட்ட கவிதைகள் எல்லாம் மழையின் பெருமையைக் கூறும் குறள்கள். மழையின் பெருமையைப் பற்றி திருவள்ளுவர் தவிர வேற யாராவது கூறியிருப்பார்களா என்பது சந்தேகம். மேலே குறிப்பிட்ட குறளில் எனக்குப் பிடித்த வார்த்தை புயல்என்னும்.
வைதீஸ்வரன் என்ற தற்கால கவிஞர் மழையைப் பற்றி இரண்டு கவிதைகள் எழுதி உள்ளார். இன்னும் யார் யாரோ எழுதியிருப்பார்கள். ஒரு கவிதையின் பெயர் மழை என்ற கனவு.
திருவள்ளுவர் சொல்கிறார் மழை இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்று. மழை கனவில் வருவதாக வைதீஸ்வரன் கூறுகிறார். அவர் கடைசி வரை மழை பெய்ததை நம்ப மறுக்கிறார். இந்தக் கவிதையையும் பார்ப்போம்.
விடிய விடியப் பெய்ததாம்.
எல்லோரும் சொன்னார்கள்.
எனக்கு
நம்பிக்கை வரவில்லை.

மழை ஊரறிந்த ரகஸியம்
இது
யார் சொல்லித் தெரிய
வேண்டும்.
விடிந்தவுடன்
மண்ணே காட்டிக் கொடுத்துவிடும்

மழை வெறும்
கனவில்தான் பெய்திருக்கிறது
அத்தனை பேர் கனவிலும்.
தவறி மண்ணில் விழுந்திருந்தால்,
கருமி கண்ட காசு போல்
பூமி பதுங்கியிருக்கும்
அதன் மனம்
நெருப்பென்று எனக்குத் தெரியும்.

மழை
பேப்பரிலும்
விடிய விடியப் பெய்ததாம்.
வந்தது செய்தியாக.
மழைக்கு நல்ல
மார்க்கட்டு இருப்பதால்
மிகைப்படுத்துவது வழக்கமான
மனித பலவீனம்தான்.

ஜன்னலிடம் என்
சின்னக் குழந்தை
கைநீட்டிச் சிரிக்கிறது, இரண்டு இலைகளைப்
பார்த்து
இலைகளின் மேல் இன்னும்
திருட்டுப் போகாமல் இருக்கும்
இரண்டொரு முத்துக்களைப் பார்த்து.

இவைகள் முடிந்தவரை
தலையாட்டியது
மழையை எனக்கு நம்பவைப்பதற்காக.
(மனக்குருவி என்ற புத்தகம்)

திருக்குறள் சிந்தனை 13

திருவள்ளுவர் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் மழையைப் பற்றி பலவிதமாக பாடல்களைப் புனைந்துள்ளார். உயிர் வாழ்வதற்கு முக்கியமான காரணியாக இருப்பது மழை. மழை அதிகமாகப் பெய்தாலும், மழையே பெய்யாமல் இருந்தாலும் அதிக ஆபத்தில் மக்கள் அவதிப்படுவார்கள்.

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

கடல்சூழ்ந்துள்ள இவ்வுலகத்தில் மழை உரிய காலத்தில் பெய்யாமல் போய்விட்டால், உயிரினங்கள் எல்லாம் பசியால் வாடுவார்கள் என்கிறார் திருவள்ளுவர்.

இதற்கு ஒப்பாக மழையைப் பற்றி நவீன கவிஞர்களும் கவிதைகள் எழுதி உள்ளார்கள்.

üமழைத்துளிகள்ý என்ற தலைப்பில் ஞானக்கூத்தன் ஒரு கவதை எழுதி உள்ளார்.

எல்லாப் பொருள்களைப் போலவே
இரவும் நேராகவும் வளைந்தும்
முறுக்கிக் கொண்டு இருந்தது
வளைந்த இரவுகள் பலவற்றை
என் புழைக்கடையில் நான் வைத்திருக்கிறேன்
கரும்பு போல நேரான
இரவுகள் சிலவற்றை வாசலில் வைத்திருக்கிறேன்
ஓய்வு கிடைக்கும் போதெல்லாம்
அதுவும் பௌர்ணமி நாளென்றால்
ஒரு வளைந்த இரவை
நேராக்க முடியுமா என்று முயல்கிறேன்
நேற்றைக் கொரு மேகம் நான்
இரவை ஆராய்ந்தபோது
என்னைத் துளிகளால் சுட்டுவிட்டுப் போயிற்று
(இம்பர் உலகம் கவிதைத் தொகுதி)

மழையின் பெருமையை திருவள்ளுவர் தன் குறள் மூலம் நேரிடையாகக் குறிப்பிடுகிறார். நவீன கவிஞர்களோ மறைமுகமாக மழையின் பெருமையைக் குறிப்பிடுகின்றனர்.

திருக்குறள் சிந்தனை 12

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நான் திருக்குறளை இவ்வளவு தீவிரமாகப் படித்துக்கொண்டு வருகிறேன். இப்படியெல்லாம் நான் படித்ததில்லை. மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி வரை பஸ்ஸில் அலுவல் விஷயமாகத் தினமும் போயக் கொண்டிருப்பேன். பஸ்ஸில் பதிந்திருக்கும் திருக்குறளைப் படிப்பேன். ஒரு குறளை அப்படிப் படிக்கும்போது வள்ளுவர் தவறாகச் சொல்கிறார் என்று கூடத் தோன்றியது. அது புகழ் பற்றிய குறள். அது குறித்து கூட விருட்சம் பத்திரிகையில் எழுதினேன். ஆனால் வள்ளுவர் சரியாக சொல்லியிருக்க மாட்டார் என்பதை இப்போது நம்பவில்லை. அக் குறளை நான் திரும்பவும் படிக்க நினைக்கிறேன். அப்படிப் படிக்கும்போது முன்பு என் மனதில் தோன்றிய எண்ணம் மாறிவிடும்.
இப்போது இன்னொரு குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

இந்தக் குறளில் மழை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். 11வது குறளில் மழை என்ற வார்த்தையைச் சொல்லாமல் மழையைப் பற்றி சொல்கிறார்.
தாகம் தீர்ப்பதற்கு மட்டுமல்லாமல் உணவு உற்பத்தி செய்வதற்கும் மழை தேவை. எப்படியென்றால் உணவு இல்லையென்றால் உயிர் வாழ முடியாது. உணவு உற்பத்தி செய்ய மழை கட்டாயம் வேண்டும். உணவை உண்ணும்போது தாகம் தீர்க்கவும் மழை வேண்டும். மழையே இல்லாவிட்டால் என்ன ஆகும். உலகமே அழிந்து விடும்.
இந்தக் குறளைப் படிக்கும்போது எனக்கு வேடிக்கையாக இருக்கும். என்னதான் முயன்றாலும் என்னால் இக் குறளை ஞாபகப்படுத்தி சரியாகச் சொல்ல முடியாது. இக்குறளில் துப்பார்க்கு என்ற வார்த்தை இரண்டு இடங்களிலும் அதேபோல் துப்பாய என்ற வார்த்தையும் இரண்டு இடங்களில் வருகிறது. இந்தக் குறளை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்று இப்போதுதான் கவனித்து வருகிறேன். எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ளலாம் போல் தோன்றுகிறது. துப்பார்க்கு, துப்பாய என்ற இரண்டு வார்த்தைகளை ஞாபகப்படுத்திக்கொண்டால் இந்தக் குறள் இனிமேல் எளிதாக ஞாபகத்திற்கு வந்து விடும். அந்தக் காலத்தில் வள்ளுவர் துப்பாக்கியைப் பற்றி எழுதியிருக்கிறாரே என்று கிண்டலாக அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன்.

திருக்குறள் சிந்தனை 11

திருக்குறள் பற்றி ஏகப்பட்ட உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. கையடக்க அளவில் எல்லோரிடமும் திருக்குறள் எளிதாகக் கிடைத்துவிடுகிறது. எல்லார் வீட்டிலும் திருக்குறள் புத்தகம் இல்லாமல் இருக்காது. பலரும் அவரவர்களுக்குப் பிடித்த மாதிரியான குறள்கள் அவரவர் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ள பயன்படுத்துகிறார்கள். திருக்குறளை உதாரணம் காட்டிப் பேசும் அரசியல்வாதிகளும் உண்டு. நான் எங்காவது பேசினால் திருக்குறளை உதாரணம் காட்டிப் பேச மாட்டேன். ஆனால் ஒரு குறளை மாத்திரம் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். உண்மையில் நான் இங்கு தினமும் ஒரு குரலை எடுத்துப் படிப்பதென்பது, திருக்குறள் மூலம் பயணம் செய்ய விரும்புகிறேன். அதை முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்.

வான் சிறப்பு என்ற பெயரில் பத்து குறள்களை எழுதியிருக்கிறார். 10 குறள்கள் மூலம் திருவள்ளுவர் எப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

‘வான்நின்று உலகம் வழங்கி வருதலால்’ என்கிறார் திருவள்ளுவர். எது வான்நின்று உலகம் வழங்கி வருகிறது? மழை. அமிழ்தம்போல் இந்த உலகத்தில் உள்ளவர்கள் உயிர்வாழ மழை அவசியம். மழை என்ற வார்த்தையை நேரிடையாகப் பயன்படுத்தாமல் வள்ளுவர் சிறப்பாக இதைச் சொல்கிறார்.

திருக்குறள் சிந்தனை 10

இன்று நான் படித்தது பத்தாவது குறள். கடவுள் வாழ்த்து என்ற தலைப்பில் திருவள்ளுவர் பத்து குறள்களை அருளி உள்ளார். இந்தப் பத்து குறள்களிலும் ஒரு பொதுத் தன்மை உள்ளது. அறத்துப் பால் என்ற தலைப்பின் கீழ் இதெல்லாம் வருகிறது. அதாவது கடவுளை அடைவதுதான் அந்தப் பொதுத் தன்மை. அப்படி கடவுளை அடைவதற்கு என்னன்ன வழி முறைகள் என்பதையும் சொல்லியிருக்கிறார். அவர் கடவுள் என்பதை பொதுவாக சொல்லுகிறார். முதல் குறளில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் தோன்றும்போது தோன்றியது என்கிறார். இன்னொரு குறளில் விருப்பு வெறுப்பு இல்லாதவன் கடவுள் என்கிறார். ஒருவர் அப்படி விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் இருக்க வேண்டும் என்கிறார். கடவுள் என்பதை விட ஒருவர் கடவுள் தன்மையை அடைய உள்ள வழி முறைகள் என்று இக்குறள்களைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் திருக்குறள் மாதிரி ஒரு படைப்பு வந்திருக்கிறதா என்ற கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். அப்படி ஒன்று உருவாகவில்லை என்றுதான் எனக்குப் படுகிறது. எதாவது இருந்தால் அதை அறிந்துகொள்ளவும் ஆவலாக உள்ளேன்.

இதோ பத்தாவது குறள் :

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

பிறவியாகிய கடலை ஒருவர் நீந்த வேண்டுமென்றால் இறைவனின் பாதங்களைச் சேர வேண்டுமென்கிறார். நாவலர் இதற்கு உரை எழுதும்போது அறிவாற்றலில் சிறந்த சான்றோர் ஆகிய ஒரு பெருந்தலைவரைப் பின்பற்ற வேண்டுமென்கிறார். யார் அப்படிப்பட்ட பெருந்தலைவர் இந்தக் காலத்தில் இருக்கிறார்கள். நம் கண்ணுக்குப் புலப்படாத ஒருவரே ஒருவர் இருக்கிறார். அவர் கடவுள். அந்தக் கடவுள் வேறு எங்குமில்லை நம் மனதிலேயே வீற்றிருக்கிறார். நாம் அதை உணர வேண்டும். நீந்துவர் நீந்தார் என்ற வரி பிடித்திருக்கிறது.

திருக்குறள் சிந்தனை 9

நான் சிலருடைய புத்தகங்களை வாங்கி வைத்துக்கொள்வேன். படிக்கிறேனோ இல்லையோ புத்தகங்களை வைத்துக்கொண்டிருப்பேன். யார்யார் புத்தகங்களை அப்படி வாங்கி வைத்துக்கொள்வேன் என்பதை பட்டியிலிட விரும்புகிறேன். 1. காந்தியைப் பற்றிய புத்தகங்கள் 2. பாரதியார் குறித்து எழுதப்படுகிற புத்தகங்கள் அல்லது பாரதியார் புத்தகங்கள் 3. ஜே கிருஷ்ணமூர்த்தி புத்தகங்கள் 4. பெரியார் புத்தகங்கள் 5. ரமணர் புத்தகங்கள் 6. திருக்குறள் புத்தகங்கள். திருக்குறள் புத்தகங்களைக் கண்ணால் கண்டால் வாங்கி வைத்துக்கொள்வேன். ஆனால் புரட்டிக்கூடப் பார்க்க மாட்டேன். ஆனால் இன்று வரை என் வாழ்க்கையில் ஒரு குறளை நான் விடாமல் பின்பற்றிக்கொண்டு வருகிறேன். சமீபத்தில் திருக்குறளைப் பற்றி ஒரு கூட்டம் நடத்தினேன். என் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது. தினமும் ஒரு குறளை எப்படியாவது படித்துப் பார்ப்பது என்று.

இதோ இன்றைய குறள்.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

எல்லா நல்ல குணங்களும் வல்லமைகளும் உள்ளவனாகிய இறைவனை உணர்ந்து அவனை வணங்காத மனிதனுடைய மூளை எந்த சிந்தனைச் சக்தியும் இல்லாமல் போய்விடும்.
திருக்குறளில் கடைசி வரியை எப்போதும் மறக்க முடியாது. தாளை வணங்காத் தலையையும் மறக்க முடியாது.+

திருக்குறள் சிந்தனை 8

நேற்று அந்திப் பொழுதில் கலைந்த புத்தகங்களை என் போஸ்டல் காலனி நூலகத்தில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்த போது என் கண்ணில் பட்டது இன்னொரு திருக்குறள் புத்தகம். கோ பெரியண்ணனின் உரையில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது. 1,33,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையில் சாதனை புரிந்ததாகப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் சதாசிவன் திருமதி புஷ்பா சதாசிவம் அவர்களின் எண்பதாம் ஆண்டு விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு இந்தத் திருக்குறள் புத்தகத்தை இலவசமாகப் பரிசளித்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சி 10.10.2011ல் நடந்துள்ளது. இப்படி ஒளிந்துகொண்டிருக்கும் திருக்குறள் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
இன்றைய திருக்குறள் :

அறவாழி அந்தணன் தான்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அறக்கடவுளாக விளங்கும் கடவுளின் திருவடிகளை நினைப்பவர்களைத் தவிர மற்றவர்கள் பொருள், இன்பம் ஆகிய வேறு கடல்களைக் கடக்க மாட்டார்கள் என்கிறார் பெரியண்ணன். இந்தக் குறளில் அந்தணன் என்று ஏன் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அந்தணன் என்றால் கடவுளா?
பிறவாழி நீந்தல் அரிது பிடித்த வரி.