துளி : 1

என் லைப்ரரியில் சில நேரம் புத்தகம் படித்துவிட்டு ஆர்யாகவுடர் ரோடில் உள்ள மாம்பலம்ஸ் வெங்கடேஸ்வரா போளி நிலையத்திற்கு வருவேன். ஒரு நாள் போன்டா, ஒருநாள் மசால் வடை, ஒருநாள் உருளைக் கிழங்கு போன்டா, ஒரு நாள் மெதுவடை என்றெல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வருவேன். அங்கு என் மனைவி தயாராக வைத்திருக்கும் கேழ்வரகுக் கஞ்சியுடன் சேர்த்து உண்பேன். போளி ஸ்டாலில் வாங்கிச் சாப்பிடுவது நல்லதா கெட்டதா தெரியாது. என் நண்பர் டாக்டர் பாஸ்கரன்தான் சொல்ல வேண்டும். அந்தப் போளி நிலையத்தின் வாசலில் ஒரு மரம். அதை கோயிலாக யாரோ மாற்றி உள்ளார்கள். விளக்கு வைக்கிறமாதிரி ஒரு* மரப்பொந்தை உருவாக்கி உள்ளார்கள். மரத்தைச் சுற்றி புடவைக் கட்டி மஞ்சள் குங்குமம் பூசி உருவாக்கி உள்ளார்கள். போளி நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு இந்த மரத்தின் மகத்துவம் தெரியவில்லை. அப்படியா என்று கேட்கிறார்கள்.

பிள்ளையார் படம் போட்ட விருட்சம்

நவீன விருட்சம் 54வது இதழில் (அதாவது பிப்பரவரி 2002ல்) பிள்ளையார் படத்தை நவீன ஓவியமாக சிவபாலன் என்பவர் வரைந்து கொடுத்திருந்தார். இந்தப் படம் ஓவியர் விஸ்வம் மூலம் எனக்குக் கிடைத்தது. நவீன விருட்சத்தின் அட்டைப் படமாக அதை பயன்படுத்தினேன்.

60 பக்கங்கள். அந்த இதழ் விருட்சம் விலை ரூ.10. அதில் முக்கியமான கவிதையாக ரா ஸ்ரீனிவாஸன் கவிதையை நான் கருதுகிறேன். அந்த அட்டை ஓவியத்துடன் அவர் கவிதையையும் இங்கு அளிக்கிறேன்.

ரா ஸ்ரீனிவாஸன்

தற்பொழுது

1)

வேறெப்பொழுதுமில்லாத
தற்பொழுதின் வாசல்
திக்கெல்லாம் திறந்தே இருக்கிறது –
உட்புகுக,

இப்பொழுது திறந்தது
உள்ளேயிருந்தா வெளியேயிருந்தா –
காண்க,

எல்லாம் உருமாறிக் கொண்டிருக்கும் தற்பொழுது –
அறிக.

தற்பொழுதை விட்டு விலகிச் செல்கின்றன
எல்லாப் பயணங்களும் –
பிரிகின்ற பாதைகளெல்லாம் தற்பொழுதிலிருந்து
அப்பால் இட்டுச் செல்கின்றன –
உணர்க.

எப்பொழுதுமான தற்பொழுதிற்குத்
தலை வணங்குகிறேன்,
தாள் பணிகிறேன்,

வித்தியாசமான காலண்டர்

என் நெடுநாளைய நண்பர் டாக்டர் பாஸ்கரன் அவர்கள். சமீபத்தில் அவர் எழுதிய அது ஒரு கனாக் காலம் என்ற புத்தகத்திற்கு ஒரு ஸ்டார் ஓட்டலில் விருந்து அளித்து புத்தக வெளியீட்டு விழா நடத்தினார். 100 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள். என்னை மேடையில் உட்கார வைத்து அவர் புத்தகத்தைப் பற்றி பேச சந்தர்ப்பம் கொடுத்தார். நானும் அப் புத்தகத்தைப் படித்து கட்டுரை வாசித்தேன்.

இதுவரை ஒரு சிறுகதைத் தொகுப்பும், இரண்டு கட்டுரைத் தொகுப்பும், மருத்துவம் சார்ந்த புத்தகங்களையும் கொண்டு வந்திருக்கிறார். ஒவ்வொரு புத்தகம் வரும்போது அதை வெளியிடும்போது உற்சாகமாகக் கொண்டாடுவார். விருந்தினர்களை உபசரிப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை.

இன்றைய காலக்கட்டம் மெச்சும்படி இல்லை. இதுமாதிரியான சந்தர்ப்பத்தில் விழா கொண்டாடி கொண்டாடும் டாக்டர் பாஸ்கரனை யாரும் வாழ்த்தாமல் இருக்க மாட்டார்கள்.

வெள்ளிக்கிழமை அன்று (07.09.2018) டாக்டரைப் பார்த்தேன் கையில் ஒரு காலண்டர் கொடுத்தார். அந்த காலண்டர் செப்டம்பர் 2018லிருந்து அடுத்தவருடம் ஆகஸ்ட் 2019 வரை உள்ள காலண்டர். அந்தக் காலண்டரின் முக்கியத்துவம் என்னவென்றால், அவருடைய விழாவிற்குக் கலந்துகொண்ட அத்தனைப் பேர்களையும் புகைப்படம் எடுத்து ஒவ்வொரு மாதம் வெளியிட்டிருந்தார். என்னுடைய புகைப்படமும் அந்தக் காலண்டரில் இருந்தது. எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய காலண்டராக எனக்குத் தோன்றியது.

ஒரு மேதையின் ஆளுமை

புதிய நம்பிக்கை என்ற பத்திரிகையைப் பற்றி தெரியுமா? தெரிவதற்கு வாய்ப்பில்லை.

புதிய நம்பிக்கையின் ஆசிரியர் பொன் விஜயன். அவர் புதிய நம்பிக்கை என்ற பத்திரிகையுடன் ஒரு புத்தகம் கொண்டு வந்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் ‘ஒரு மேதையின் ஆளுமை.’

சத்யஜித்ராயைப் பற்றி கதைகள், கட்டுரைகள், பின் அபுர் சன்ஸôர் என்ற திரைக்கதையின் தமிழாக்கம் என்றெல்லாம் ராயல் அளவில் கொண்டு வந்தார்.

பொன் விஜயன் தன் வீட்டில் ஒரு பகுதியில் லெட்டர் பிரஸ் வைத்திருந்தார். அதுவும் வாடகை வீடு. அங்கயே புத்தகம் தயாராகும். அந்த பிரஸ்ஸில் பணிபுரிபவர்கள் பொன் விஜயனைவிட பண வசதிப் படைத்தவர்கள். பொன் விஜயன் வாரம் ஒரு முறை சனிக்கிழமை அவர்களுக்குக் கூலி கொடுப்பதற்குத் தடுமாறுவார். அவர் மனைவியின் நகைகள், அல்லது வெள்ளிப் பாத்திரங்களை அடகு வைப்பார்.

அவரே அச்சுக் கோர்த்த ஃபாரங்களை சைக்கிளில் கட்டி எடுத்துக்கொண்டு போய் அச்சடிப்பார். கடுமையான உழைப்பாளி. அவரிடம் என் விருட்சம் இதழ்களையும் அச்சடிக்கக் கொடுத்திருக்கிறேன். ஒரு முறை சைக்கிளில் பாரங்களை எடுத்துக் கொண்டு போகும்போது தவறி கீழே சைக்கிளைப் போட்டுவிட்டார். எல்லா ஃபாரங்களும் கீழே விழுந்து டைப்ஸ் உதிர்ந்துவிட்டன். அதை என்னிடம் அவர் சொன்னபோது கேட்பதற்கு வருத்தமாக இருந்தது.

பொன் விஜயன் ஒரு நாவலாசிரியர், கவிஞர். பிடிவாதமாக சில கருத்துக்களை வைத்தக்கொண்டு மாற்றிக்கொள்ள மாட்டார். அவர் கொண்டு வந்த புத்தகம்தான் ஒரு மேதையின் ஆளுமை.

சமீபத்தில் நான் எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது இந்தப் புத்தகம் கிடைத்தது. அதில் நான் மொழி பெயர்த்த அபுர சன்சார் என்கிற சத்யஜித்ராயின் திரைக் கதையைக் கண்டு பிடித்தேன். எனக்கு எல்லாம் மறந்தே விட்டது. அதை அப்படியே புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன். 80 பக்கங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன்.

சாமான்ய மனிதர்களில் வாழ்க்கை நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு சினிமா படங்கள் எடுத்தவர் சத்யஜித்ராய். (ரா வா ரேவா தெரியவில்லை). மரணம் அடிக்கடி அவர் படத்தில் குறுக்கிடும். பிரிவு தாங்க முடியாமல் இருக்கும்.

அபுர் சன்ஸôர் திரைக் கதையிலும் மரணம் குறுக்கிடுகிறது. அந்த மரணத்தால் ஏற்படும் விளைவுகளையும் நெகிழ்வுடன் கொண்டு வந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறேன். 80 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.50 தான்.

உங்களுக்குப் பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளவும்

என்னுடைய கதைகள் எல்லாம் சேர்த்து 664 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அழகியசிங்கர் சிறுகதைகள் முழுத்தொகுப்பு ஒன்று கொண்டு வந்துள்ளேன்.
இப் புத்தகம் வெளிவந்தபிறகு இதன் விலையை பாதியாகக் குறைத்து ரூ.300க்குக் கொடுத்தேன்.
பொதுவாக நான் வங்கிக் பணியில் சேர்வதற்கு முன்பிலிருந்து வங்கிப் பணியை முடித்து ஓய்வுப்பெற்றபின்பும் நான் எழுதிய கதைகளை (64 கதைகள், 7 குறுநாவல்கள், ஒரு நாடகம், சில சின்னஞ்சிறு கதைகள்) தொகுத்துள்ளேன்.
ராயப்பேட்டாவில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிலும் இப் புத்தகத்தின் விலை ரூ.300தான். முன்பு பணம் கட்டிய இருவருக்கு நான் புத்தகம் அனுப்ப வேண்டும். ஆனால் அவர்களுடைய தொலைப்பேசி எண் என்னிடம் இல்லை. எப்படித் தொடர்பு கொள்வது என்பது தெரியவில்லை.
புக்கிஸ் என்ற பெயரில் ஒரு பரங்கிமலையில் அற்புதமான புத்தகக் கடை வைத்திருக்கிறார். அவருடைய தொலைப்பேசி எண் வேண்டும்.
அரங்கு எண் 11 வருபவர்கள் என் கதைப் புத்தகத்திலிருந்து என் கதைப் புத்தகத்தை எடுத்து ஒரு கதையைப் படிக்கவும். உங்களுக்குப் பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளவும். வேண்டாம் என்று தோன்றினால் என்னைப் பார்த்து முடிந்தால் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டுப் போய்விடவும்.
ஒருவர் மாத்திரம் திரும்பத் திரும்ப அவர் கதைகளைப் படித்துக்கொண்டிருப்ôர். அவர் வேற யாருமில்லை நான்தான். நான் பலவிதமாக கதைகள் எழுதியிருக்கிறேன். கதையே இல்லை என்பதுபோல் கதை எழுதியிருக்கிறேன்.
என் கதைகளைப் பற்றி ரைட்டர்ஸ் கேப்பில் சாருநிவேதிதா 50 நிமிடங்களுக்கு மேல் பேசி உள்ளார். அது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக நான் நினைக்கிறேன். இன்னும் பல நண்பர்களும் பேசினார்கள். பழுப்பு நிறப்பக்கங்கள் என்ற பெயரில் சாருநிவேதிதா பல தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி எழுதி உள்ளார். ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்கவும்.

திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வாங்கிய புத்தகங்கள்

நான் ஒவ்வொரு முறை திருவல்லிக்கேணி செல்லும்போது அங்கே உள்ள பிளாட்பார கடைகளுக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் திருவல்லிக்கேணி பிளாட்பார கடைகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

முன்பு அடிக்கடி போவேன். இப்போதெல்லாம் அந்தப் பக்கம் போக நேர்ந்தால் மட்டும் போகிறேன். இங்கே உள்ள பெரும்பாலான பிளாட்பார கடைகளில் கல்லூரி புத்தகங்கள்தான் இருக்கும்.

ஆனால் ஒருசில கடைகளில் தமிழ் புத்தகங்களும் ஆங்கிலப் புத்தகங்களும் கிடைக்கும். குறிப்பாக ஒரு கடையில் பாதி பகுதி ஆங்கிலப் புத்தகங்களும் மற்றொரு பாதிப்பகுதி தமிழ்ப் புத்தகங்களும் கிடைக்கும். சில புத்தகக் கடைகளில் புத்தகங்களின் விலையை புதுப் புத்தகம் வாங்கும் விலைக்கு விற்பார்கள்.

நான் செல்லும் இரண்டு கடைகளில் தமிழ் புத்தகங்கள் ரூ.5க்கும் ஆங்கிலப் புத்தகங்கள் ரூ.10க்கும் முன்பு கிடைத்துக்கொண்டிருந்தது. இப்போது ஆங்கிலப் புத்தகம் ரூ.20க்கும் தமிழ் புத்தகம் ரூ.10க்கும் விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கே கொட்டிக்கிடக்கும் புத்தகங்களைப் பார்க்கும்போது நமக்கே மலைப்பாக இருக்கும். இத்தனைப் பேர்கள் எழுதுகிறார்களா என்று இருக்கும்.

நான் இந்த முறை ஐந்து புத்தகங்கள் வாங்கினேன். மொத்தம் ரூ.120க்கு. 3 ஆங்கிலப் புத்தகங்கள், 2 தமிழ்ப் புத்தகங்கள்.

முக்கியமாக ஏ கே செட்டியார் பதிப்பாசிரியராக இருந்த குமரி மலர் என்ற பத்திரிகையை வாங்கினேன். இது அபூர்வமான பத்திரிகை. நான் சிறுபத்திரிகைகளைச் சேகரிப்பவன், அதில் இந்தப் பத்திரிகையை முக்கியமாகக் கருதுகிறேன். ஆனால் இந்தப் பத்திரிகையில் எந்த ஆண்டில் வெளிவந்தது என்று குறிப்பிடப்படவில்லை. புத்தகக் குவியலில் பார்த்தவுடன் கையில் எடுத்து ைத்துக்கொண்டேன். இந்தப் பத்திரிகை நிச்சயமாகக் கிடைக்காது. ஆனால் எந்த ஆண்டில் எந்த மாதத்தில் வந்த பத்திரிகை என்ற விபரம் ஏன் இல்லை என்பது புரியவில்லை. ரொம்ப அபூர்வமான பத்திரிகை. என்னிடம் சில கசடதபற என்ற பத்திரிகையின் இதழ்கள் உண்டு. ஆனால் அப் பத்திரிகையை நடத்திய கசடதபற ஆசிரியருக்கே அந்த இதழின் பிரதி ஒன்று கூட கிடையாது. அவர் இதைச் சிரித்துக்கொண்டே என்னிடம் கூறியிருக்கிறார்.

இரண்டாவது இன்னொரு தமிழ்ப் புத்தகம். ‘நேற்றிருந்தோம்’ என்ற கிருத்திகாவின் புத்தகம். வாசகர் வட்டத்தின் இந்தப் புத்தகமும் கிடைக்காத புத்தகம். வாசகர் வட்டம் என்ற இலக்கிய அமைப்பு எப்படியெல்லாம் புத்தகங்களை அச்சடித்திருக்கிறார்கள் என்பதை ஒருவர் பார்த்து வியக்க வேண்டும். இந்த வியாபாரிகள் என்ன செய்வார்கள் என்றால், விலை என்று எழுதியிருக்கும் பக்கத்தைக் கிழித்து விடுவார்கள். 1975ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம்.

நான் வாங்கிய 3 ஆங்கிலப் புத்தகங்களில் ஒரு புத்தகம் பிரஞ்ச் நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பில் வந்த புத்தகம். அந்தப் புத்தகத்தின் பெயர் யாஸ்மினா கத்ராவின் அட்டாக். அதேபோல் இத்தாலி மொழியிலிருந்து மொழிப் பெயர்க்கப்பட்ட இன்னொரு புத்தகம் பெயர் THE TIME OF INDIFFERENCE என்ற புத்தகம். இதை எழுதியவர் எனக்குப் பிடித்த எழுத்தாளரான ஆல்பெர்டோ மெரோவியா. மூன்றாவது புத்தகம் சிட்னி ஷெல்டனின் எ ஸ்டேரன்ஜர் இன் தி மிர்ரர்.

இன்னும் தேடினால் பல புத்தகங்களைக் கண்டு பிடிக்கலாம். நான் பலமுறை சென்று பல புத்தகங்களை இப்படி சேகரித்திருக்கிறேன்.

என்ற புத்தகம். இதை எழுதியவர் எனக்குப் பிடித்த எழுத்தாளரான ஆல்பெர்டோ மெரோவியா. மூன்றாவது புத்தகம் சிட்னி ஷெல்டனின் எ ஸ்டேரன்ஜர் இன் தி மிர்ரர்.

இன்னும் தேடினால் பல புத்தகங்களைக் கண்டு பிடிக்கலாம். நான் பலமுறை சென்று பல புத்தகங்களை இப்படி சேகரித்திருக்கிறேன்.

தமிழ் சினிமாவை விட தமிழ்ச் சிறுகதை சிறந்தது

நேற்று இரவு நானும் என் நெருங்கிய உறவினரும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 ஐப் பார்த்தோம். என் நெருங்கிய உறவினர் என்னை விட இளைஞர். அவருக்கு கமல், ரஜினி, அஜித் போன்ற நடிகர்களிடம் அலாதியான அபிமானம் உண்டு.
நான் தியேட்டரில் போய் சினிமாப் பார்ப்பதைப் பெரிய விஷயமாக நினைத்துக்கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக நான் தியேட்டரில் சினிமா பார்ப்பதில்லை. வெறுப்பு என்பதை விட என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நான் இருப்பதாக நான் தோன்றும்.
எனக்கும் கமலுக்கும் ஒரே வயது. என் உறவினர் இதைச் சுட்டிக்காட்டும்போது, உண்மை என்று ஆமோதித்தேன். ஆனால் கமலின் உருவம் திரையில் வேறு விதமாகத் தோன்றியது.
இந்தப் படம் ஆரம்பத்திலிருந்து எனக்குச் சற்றும் புரியவில்லை. அவர்கள் பேசும் வசனங்கள் செயற்கையாக இருப்பதாகப் பட்டது. ஒரு தமிழ் படத்தை முதன் முறையாகப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தது இதுவாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் நான் விஸ்வரூபம் 1 ஐப் பார்த்துவிட்டுத்தான் இதைப் பார்த்தேன்.
எப்படி இந்தப் படம் சற்றும் புரியாமல் ஆனால் வன்முறையின் லட்சணமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி யோசித்தேன். கதாபாத்திரங்களுக்குள் ஏதோ குறை இருப்பதுபோல் பட்டது. ஏதோ ஒன்ற முடியாதத் தன்மை சுழன்று கொண்டிருப்பதுபோல் பட்டது.
இரவு தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு பார்த்தது வேற கடுப்பாக இருந்தது.
இந்தச் சமயத்தில்தான் எனக்குத் தோன்றியது. இதுமாதிரி தமிழ் சினிமாக்களை தியேட்டரில் பார்ப்பதை விட ஒரு தமிழ் சிறுகதையைப் படித்தால் என்ன என்று.
இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை இங்கே பட்டியல் இட விரும்புகிறேன்.

தமிழ்ச் சிறுகதை : எந்தக் கதையை வேண்டுமானாலும் படிக்கலாம். குறிப்பிட்ட நேரம் என்பது கிடையாது. பாதி படித்துவிட்டு திரும்பவும் இன்னொரு பாதியை மெதுவாகப் படிக்கலாம்.

தமிழ் சினிமா : தியேட்டரில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க வேண்டும். பாதியில் போக முடியாது. முழுவதும் பார்த்தே தீர வேண்டும.

தமிழ்ச் சிறுகதை: எந்தக் கதையை வேண்டுமானாலும் படிக்கலாம். தரம் மோசமாக இருக்காது. படிக்கிறோம் என்ற உணர்வுதான் இருக்கும். ஆனால் வேற வழியில்லாமல் படிக்கிறோமே என்ற எண்ணம் தோன்றாது.

தமிழ் சினிமா : எப்படி எடுத்திருக்கிறானோ அப்படித்தான் தமிழ்ப்படம். நெருக்கமாக அருகில் பலர் புடைசுழ படம் பார்க்க வேண்டும. பெரும்பாலும் தமிழ் சினிமாக்கள் சிறப்பாக இருப்பதில்லை. வேற வழியில்லாமல் இருக்க வேண்டும்.

தமிழ்ச் சிறுகதை : சினிமாவைப் போல் நம்மைப் பாடாய் படுத்தாது. படிக்கிறவர் கற்பனையில் கதை நகர்ந்து கொண்டிருக்கும்.

தமிழ் சினிமா : எல்லாம் செயற்கையான வசனங்கள். செயற்கையான ஜோடனைகள்.

தமிழ்ச் சிறுகதை : கதை நம்முள் நடக்கிறது. நமக்குப் பிடிக்கவில்லை என்றால் கதை உடனே நகர்ந்து விடும்.

தமிழ் சினிமா : தியேட்டரில் பார்த்தால் வெட்டி செலவு.

தமிழ்ச் சிறுகதை : ஒரு செலவும் இல்லை. நூல் நிலையத்திற்குப் போனால் ஏகப்பட்ட சிறுகதைகளைப் படிக்கலாம். அல்லது விருட்சம் போன்ற பத்திரிகையை வாங்கினால் ரூ.20தான் ஆகும்.

தமிழ் சினிமா : சினிமா பார்ப்பதால் நம்மால் கற்பனை செய்ய முடியாது.

தமிழ்ச் சிறுகதை : படிப்பவரின் கற்பனை வளத்தைத் தூண்டும்.

தமிழ் சினிமா : மொத்தத்தில் வீண்.

தமிழ்ச் சிறுகதை : வீணல்ல. எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் படித்து ரசிக்கலாம். அல்லது மூடி வைத்துவிடலாம்.

திருக்குறள் சிந்தனை 27

திருக்குறளை ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்க வேண்டுமென்ற என் எண்ணம் என்னை அறியாமலேயே தவடுபொடியாகிவிட்டது. கவனம் வேறு எங்கோ போக ஆரம்பத்துவிட்டது.

ஆனாலும் திருக்குறள் ஞாபகம் வந்து விடுகிறது. இதோ ஒரு குறள்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

இந்த இடத்தில் வகைதெரிவான் என்ற வார்த்தை சிறப்பாக இருப்பதாகப் படுகிறது. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து உணர்ச்சிகளையும் புரிந்துகொண்டு, அறிந்து அவற்றை வெல்லத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் அறிவுடையோர் போற்றுவார்கள்.

இதில் ஓசை என்ற ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் இதைப் பூரணமாக உணருபவர்கள் பக்கத்தில் வண்டி வருவதைக் கூட சத்தத்தால் உணர்ந்து அது வருகிற பாதையியிருந்து விலகிப் போவார்கள்.

இந்த ஓசையைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் : கவிதையின் பெயர், üஒலிபெருக்கியின் அவலம்.ý ஒருமுறை பிள்ளையார் சதூர்த்தி அன்று, ஏகப்பட்ட சத்தம். ஒலிபெருக்கியின் அலறல். ஒரு நிமிடம் கூட வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
அது குறித்துதான் ஒரு கவிதை எழுதி உள்ளேன்.

நேற்றுப் பண்டிகை தினம்
காலையில் தெருவில்
ஒலிபெருக்கியின் அவலம்
அறைக் கதவைச் சாத்தினேன்
சன்னல்களை மூடினேன்
இடுக்குகளில் நுழைந்தது
ஒலிபெருக்கியின் அவலம்
யாருடனும் பேசப் பிடிக்கவில்லை
குழந்தைகள் கட்டுக்கடங்காமல்
மனைவி ஏதோ காரியத்தில்
மதியம் ஒலிபெருக்கியின் அவலம்
சற்று ஓய
சிறகடித்துப் பறந்தது
மாலையில் வெளியே சுற்ற ஆரம்பித்தோம்
கோயில்களில் வண்ண ஒளி விளக்குகள்
திரும்பவும் ஒலிபெருக்கியின் அவலம்
எல்லோருக்கும் ஏதோ நடந்துகொண்டிருக்கிறது
ஒவ்வொரு கோயிலிலும் கூட்டம்
எங்கும் தலை
காலெல்லாம் தேங்காய்ச் சில்லு
அவர்கள் கோயிலுக்குள்
காத்திருந்தேன்
ஒலிபெருக்கியின் அவலத்துடன்
வீடு திரும்புகையில்
சோர்வின் தீவிரம்
இன்று காலை
வேறுவிதமாய்ப் பொழுது.

அன்று இந்த ஒலிபெருக்கியின் அலறலைக் கேட்டு எங்கு ஓடுவது என்று புரியாமல் இருந்தேன். திருவள்ளுவர் அதை அடக்கி ஆள சொல்கிறார். நாம் எத்தனைபேர்கள் நம்மைச் சுற்றிலும் உள்ள ஓசைகளை உணர்கிறோம். இந்த ஓசையை வைத்து நாம் அதிகமாக எழுதலாம். அப்படியென்றால் திருவள்ளுர் சொல்கிற சுவை, ஒளி, ஊறு, நாற்றம் பற்றி இன்னும் அதிகமாக யோசிகலாம்.

திருக்குறள் சிந்தனை 26

சில தினங்களாக திரும்பவும் திருக்குறளைப் படிக்க மறந்து விட்டேன். இன்று ஞாபகம் வந்தது. விருட்சம் நூலகத்தில் இருந்தபோது (நான் மட்டும்தான் நூலகத்தைப் பயன்படுத்துகிறேன்) என் கண்ணில் ஒரு புத்தகம் தட்டுப்பட்டது. ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகள் என்ற புத்தகம். முனைவர் யு ஜெயபாரதி, முனைவர் ந தேவி, திருமதி சுபாஷிணி தயாரித்தப் புத்தகம்.

என்னடா இது என்று தோன்றியது. ஏற்கனவே எளிய வடிவில் திருக்குறள் இருக்கிறது. அதையும் தாண்டி இன்னும் எளிய வடிவில் ஒரு புத்தகமா?

சரி நான் பேசப்போகிற குறளுக்கு ஐக்கூ வடிவில் திருக்குறள் எப்படி இருக்கிறது என்று புரட்டிப் பார்த்தேன்.

அரிய செயல்
செய்பவர் –
பெரியோர்!

அவ்வளவுதான். ரொம்ப சுலபமாக ஐக்கூ எழுதி விட்டார்கள். ஆனால் குறள் இப்படி இருக்கிறது.

செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

பலராலும் செய்வதற்கு அரியனவாகும் செயல்களைச் செய்பவர் பெரியார் என்றும் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் சிறியோர் என்றும் இக் குறள் கூறுகிறது. இதை இன்னும் குறுகலாக ஐக்கூ வடிவில் கவிதை அமைக்கப் பட்டுள்ளது. முதலில் அரிய செயல் என்றால் என்ன? எந்த ஒரு செயலும் ஒருவரால் செய்யக் கூடியதாக இல்லை. பலர் முயற்சி செய்தால்தான் ஒரு செயல் உருவாகும். நான் தினமும் நடைப்பயிற்சி செய்யும் பூங்காவில் சிலர் சேர்ந்து ஒரு செயலை செய்கிறார்கள். பூங்காவில் போடப்பட்டுள்ள குப்பைகளை எல்லாம் திரட்டுகிறார்கள். அஙகுள்ள செடிகளுக்கும் மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றுகிறார்கள். இதைச் செயல்படுத்துகிறவர்களை அரியச் செயலை செய்பவர்களாக நான் கருதுகிறேன்.
சரி நவீன கவிதை எதாவது தட்டுப்படுகிறதா என்று பார்ப்போம் என்று யோசித்தபோது நான் எழுதிய கவிதை ஒன்று எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.
செயல் என்பதை காரியம் என்று நான் எழுதியிருக்கிறேன். 1992ல் எழுதிய கவிதை இது. கவிதையின் தலைப்பு ‘பெரிய காரியங்களும் சிறிய காரியங்களும்.’

சிறு வயதிலிருந்து பெரிய காரியங்கள்
செய்யவேண்டுமென்று நினைப்பதுண்டு
பெரிய காரியங்கள் எதுவென்று தீர்மானிப்பதற்குள்
ஆண்டுகள் ஓடின பல
தீர்மானித்த காரியங்கள் பெரிய காரியங்களாக
இருந்ததால்
நிறைவேற்றுவது எப்படியென்று யோசித்தேன்
இன்னும் சில ஆண்டுகள் ஓடின
காரியத்தை நினைத்துக்கொண்டு
காரியம் சித்தியாவதற்குள் வயதும் ஓடின
இனி ஓடி ஆடி எதுவும் செய்யமுடியாது என்றும் பட்டது
பெரிய காரியங்களைச் செய்த துணிந்ததால்
தடைகளும் கூடி வருகின்றன
பெரிய காரியம் ஒன்றும் வேண்டாமென்ற நிலைக்குத்
தள்ளப்பட்டேன்
இப்போதோ சிறிய காரியங்களே போதும்
அதுவே பெரிய காரியங்களாகப் பயமுறுத்துகின்றன

நீங்களும் படிக்கலாம் – 44

முகநூல் மூலம் வெளிவந்த புத்தகங்கள்…

டாக்டர் ஜெ பாஸ்கரின் ‘அது ஒரு கனாக் காலம்,’ என்ற புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டேன். படித்துக் கொண்டிருக்கும்போது இது சம்பந்தமான வேறு சில புத்தகங்களையும் படிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. கடந்த சில ஆண்டுகளாக எனக்கு எழுத்தாள நண்பர்களின் பல புத்தகங்கள் படிக்கக் கிடைக்கின்றன. ஆனால் என்னுடைய நல்ல பழக்கம் அந்தப் புத்தகங்களை உடனே படிப்பதில்லை. அது தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. ஏன்? உண்மையில் இந்தக் கேள்வியை பாஸ்கரன் புத்தகம்தான் என்னைக் கேட்டது.

இந்தப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டதும் சில மாதங்களுக்குமுன் ‘யானை பார்த்த சிறுவன்,’ என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்த சுந்தரபுத்தன் புத்தகம் ஞாபகத்திற்கு வந்தது. மேலும் மாதவ பூவராக மூர்த்தியின், ‘இடம், பொருள், மனிதர்கள்,’ என்ற புத்தகம் ஒன்றையும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ஏன் என்னுடைய புத்தகமான ‘திறந்த புத்தகத்தை’ப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்.

டாக்டரின் புத்தகத்துடன் ஏன் இந்த மூன்று புத்தகங்களையும் தொடர்புகொள்ள விரும்புகிறேன் என்பதற்குக் காரணம் இருக்கிறது. மூன்று புத்தகங்களும் முகநூலிற்குக் கடமைப்பட்டிருக்கின்றன. டாக்டர் புத்தகமான அது ஒரு கனாக் காலம் தொடராக லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகையில் வெளிவந்திருந்தாலும், அவற்றில் வெளியான சில கட்டுரைகள் முகநூலில் வராமல் இல்லை. முகநூலில் ஆர்வமுள்ளவர் டாக்டர், சுந்தரபுத்தன், மாதவ பூவராக மூர்த்தி, ஏன் நான் கூட.
சரி இந்த நான்குப் புத்தகங்களுக்கும் உள்ள பொதுவான தன்மை என்ன? எல்லாம் தன்னைப் பற்றிய வரலாறு. இந்த வரலாறு தினம் தினம் முகநூலில் வெளியிடப்படுகிற வரலாறு. டாக்டர் இதுவரை இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் கொண்டு வந்திருக்கிறார். ஒன்று அப்பாவின் டைப்ரைட்டர். இன்னொன்று ‘அது ஒரு கனாக் காலம் ‘.
இந்த நான்குப் புத்தகங்களும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக வெளிப்படுகின்றன.
இந்த நான்குப் புத்தகங்களிலும் ஒரு ஒற்றுமை. தன்னைச் சொல்வதுதான் அது. தன் மூலம் பிறரைப் பற்றி சொல்வது குறைவாக இருக்கிறது.
‘அது ஒரு கனாக்காலம்’ புத்தகத்தில் அவர் வாழ்ந்த கடந்த கால வாழ்க்கை இப்போது காணாமல் போய்விட்டதை எண்ணி துக்கப் படுவதுபோல் இருக்கிறது.
கடந்தகால வாழ்க்கையைப் பற்றி சொல்வதைத் துல்லியமாக விவரிக்கிறார். இந்த விவரணை எனக்கு சந்று ஆச்சரியமாக இருக்கிறது. அவர் இப்போது பார்க்கும் அகஸ்தியர் கோயிலையும் முன்பு பார்த்த அகஸ்தியர் கோயிலையும் நேரில் பார்க்கிற உணர்வோடு விவரிக்கிறார். அம்மாவைப் பற்றி, தாத்தாவைப் பற்றி எல்லாம் ஒரு புகைப்படக் கலைஞர் போல் விவரிக்கிறார்.

கடந்தகாலத்தை மனதில் பதிய வைத்துக்கொள்வதை நான் முக்கியமான ஒன்றாக நினைக்கிறேன். பலருக்குக் கடந்தகாலம் மறந்து விடும். ஏன் நானே ஒரு உதாரணம். எனக்குக் கடந்தகாலம் மறந்து போய்க்கொண்டே இருக்கும். ஒரு புத்தகம் பத்தாண்டுகளுக்கு முன் படித்திருந்தால் அது மறந்து போயிருக்கும். அதே போல் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களும். மானசரோவர் என்ற அசோகமித்திரன் நாவலை மூன்றாவது முறையாக இப்போது படித்து மனதில் ஆழமாகப் பதித்து வைத்திருக்கிறேன். இதோ கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பிக்கும்.

üகார்லஸ் காஸ்டினேடாýவின் ‘ஆக்டிவ் சைட் ஆப் இன்பினிடி’ என்ற புத்தகம். அந்தப் புத்தகத்தில் காஸ்டினேடாவைப் பார்த்து டான் ஜ÷வான் என்பவர் நடத்தும் உரையாடலில், பழைய முக்கியமான நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தி நம் மூளையில் சட்டம் போட்டுப் பாதுகாத்து வைக்கச் சொல்கிறார். நாம் வாழ்க்கையில் நாம் எத்தனையோவற்றை கடந்து வந்திருப்போம். அவற்றையெல்லாம் ஞாபக அடுக்குகளாக சட்டம் போட்டு பாதுகாத்து வைக்க வேண்டும். வேண்டும்போது எடுத்துப் பார்க்க வேண்டும். அதில் தென்படும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவேண்டும். இதைத்தான் பாஸ்கரன் புத்தகத்தில் நான் பார்ப்பதாகத் தோன்றுகிறது.

முகநூலில் எழுதும் யாவருமே கடந்த கால நிகழ்ச்சிகளைத்தான் எழுதுகிறோம் ஆனால் எப்போதோ எந்தக் காலத்திலோ நடந்த நிகழ்ச்சிகளை எழுதுவதில்லை.
என்னுடைய திறந்த புத்தகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியை அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு வருடம் முன் நடந்த நிகழ்ச்சியைத்தான் எழுதகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன் நான் பழகிய எழுத்தாளரைப் பற்றி எழுதுவதாக இருந்தால், என்ன அவரிடம் முக்கியமாகப் பேசினேன் என்பது ஞாபகத்தில் எனக்கு இருக்காது. அவரைப் பற்றிய நிகழ்ச்சியை மட்டும் எழுதி இருப்பேன். ஆனால் டாக்டர் அவருடைய புத்தகத்தில் எல்லா நினைவுகளையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, அசாத்தியமாக எழுதி இருக்கிறார்.
முகநூலில் எழுதுவது என்பது நாமே நமக்கு ஆசிரியராக இருந்து செயல்பட வேண்டிய ஒன்று. சாதாரண நிகழ்ச்சியிலிருந்து அசாதாரண நிகழ்ச்சி வரை எதை வேண்டுமானாலும் முகநூலில் எழுதலாம். முக்கியமில்லாத சாதாரண நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு அதிகம் கிடைக்கிறது என்பதற்காக முகநூலில் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது அவசியமில்லை. முகநூலில் எழுதும் யாராக இருந்தாலும் இதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
டாக்டரின் இந்தப் புத்தகத்தில் ஒளிவு மறைவு இல்லாத தன்மை வெளிப்படுகிறது. ‘சரணம் ஐயப்பா’ என்ற தலைப்பில் எப்படி ஐயப்பன் மீது பக்தி ஏற்பட்டது என்று எழுதி இருக்கிறார். என்னுடைய திறந்த புத்தகத்தில் நான் எந்த சாமியை வணங்குவேன் என்று வெளிப்படையாக எழுதவில்லை. ஆனால் பாஸ்கரனுக்கு அந்தத் துணிச்சல் இருக்கிறது.

சிவாஜியை சந்தித்த நிகழ்ச்சியைப் பற்றி எழுதியிருக்கிறார். லண்டன் அனுபவத்தைப் பற்றியும். சிதம்பரம், சென்னை என்று அந்தந்த ஊர்களை விவரிக்கிறார். எல்லா எழுத்துக்களிலும் ஒருவித நெகிழ்ச்சித் தன்மை. இது இயல்பாகவே அவரிடமிருந்து வெளிப்படுகிறது.
அவர் அம்மாவை மனதில் ஆழமாகப் பதித்திருக்கிறார். இப்படி மனதில் பட்டதை எழுதுவதற்கு இந்த முகநூல் ஒரு வரப்பிரசாதம்.

அது ஒரு கனாக் காலம் – கட்டுரைகள் – டாக்டர் ஜெ பாஸ்கரன் – மொத்தப் பக்கங்கள் : 130 – விலை : ரூ. 100 – மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் : 1447, 7 தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை 600 017