துளி : 27 – இன்றைய இந்து தமிழ் திசையில்

அழகியசிங்கர்

44 ஆண்டுகள் 306 கவிதைகள் என்ற தலைப்பில் இன்றைய இந்து தமிழ் கிசையில் என் கவிதைத் தொகுதியைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.  இந்தக் குறிப்பை வெளியிட்ட இந்துவிற்கு என் நன்றி உரித்தாகும். 

இந்துவில் பிரசுரிக்கப்பட்ட குறிப்புகளை இங்கு தருகிறேன். 

‘தமிழின் மூத்த எழுத்தாளர்கள், நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்கள் என இரண்டு தலைமுறைகளுக்கும் இலக்கியப் பாலமாக ‘நவீன விருட்சம்’ ‘இதழை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருகிறார் அழகியசிங்கர். 

 சமீபத்தில், தனது சிறுகதைகளின் முழுத் தொகுப்பை வெளியிட்ட அழகியசிங்கர், அடுத்து தனது கவிதைகளின் முழுத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.  எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை 306 கவிதைகளை எழுதியிருக்கிறார்.  எடுத்துக்கொண்ட ஆண்டுகள் 44. சொந்தமாக இலக்கிய இதழ் நடத்தியும் இவ்வளவு கவிதைகள்தான் எழுதியிருக்கிறார் என்பதே இந்தக் காலத்தில் ஆச்சர்ய்மான செய்திதான்.’ – தொகுப்பு : மானா பாஸ்கரன், மு.முருகேஷ். 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …38


அழகியசிங்கர்  

காலச்சுவடிலிருந்து ஞானக்கூத்தன் கவிதைகள் முழுத் தொகுதி வாங்கியபின் இன்னும் சில புத்தகங்களையும் காலச்சுவடில் வாங்கினேன்.  சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற அம்பையின் சிறுகதைத் தொகுப்பு.  இன்னொரு புத்தகம் செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993.  மூன்றாவதாக நான் வாங்கியப் புத்தகம் பா வெங்கடேசனின் வாராணசி (மயக்க நிலைத் தோற்றங்கள்) என்ற புத்தகம்.

இங்கு ஒரு புத்தகத்தைப் பற்றி குறிப்பிடுவது மேம்போக்கான நிலையில்தான்.  ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துவிட்டு தோன்றுவதை எழுதுகிறேன். ஆனால் ஒரு புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு என்ன தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும்.  புத்தகம் போதனையைப் புகட்டுகிறதா? இல்லை எழுதுபவரின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது.  

கதைகளும் நானும் என்ற தலைப்பில் அம்பை இப்படி எழுதி உள்ளார்: üமேகங்கள் பொங்கி எழுந்து எழுதச் சொன்னதாயும் காலையில் சன்னலைத் திறந்ததும் பறவைகளாய்க் கதைகள் வந்ததாயும் சில எழுத்தாளர்கள் கூறியிருக்கிறார்கள்.  அவர்கள் ஆண் எழுத்தாளர்கள் என்பது வேறு விஷயம். இப்படிப்பட்ட அற்புதங்கள் எதுவும் எனக்கு நேராவிட்டாலும் உள்ளிருந்து புற உலகைப் பார்ப்பதற்கான சன்னல் எனும் திறப்பு தொடர்ந்து என் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது,ý  என்று கூறுகிறார்.  இத் தொகுப்பில் தொண்டை புடைத்த காகம் ஒன்று என்ற முதல் கதையைப் படித்து முடித்துவிட்டேன்.  எந்தவித சலனத்தையும் பிரதிபலிக்காமல் எழுதுகிற நடை அம்பைக்கு.  முழுத் தொகுப்பு படிக்க வேண்டும்.  168 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.195.

இன்னொரு புத்தகம் பா வெங்கடேசனின் வாராணசி.  இதற்கு மயக்க நிலைத் தோற்றங்கள் என்றும் எழுதியிருக்கிறார்.  192 பக்கங்கள் கொண்ட இப் புதினத்தையும் வாங்கினேன்.  பொதுவாக பா வெங்கடேசன் நூல்களை வாங்கி வைத்துவிடுவேன்.  ஆனால் போருக்குத் தயாராவதுபோல் தயாராக வேண்டும், அவர் புத்தகங்களைப் படிக்க.  இந்த அனுபவத்தை கோணங்கியும் ஏற்படுத்துகிறார்.  

இந்த நாவலில் எந்த இடத்திலும் பாராவாகப் பிரிக்கப்படவில்லை.  அப்படியே ஓட்டமாக ஓடுகிறது நாவல்.  எங்காவது முற்றுப்புள்ளி இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் தெரியவில்லை. கமா மட்டும் அங்கங்கே தென்படுகிறது.   

பக்கம் 21ல் இப்படி எழுதியிருக்கிறார் :

‘…அவள் இல்லாத வாராணசி அல்லது வாராணசி இல்லாத அவள் அல்லது ஒரு புள்ளியில் அவளும் வாராணசியுமேயில்லாத ஒரு வெற்றுத்தாளாக லோத்தர் உத்தேசிக்கும் பயிற்சியின் கீழ் அவரால் அந்தப் புகைப்படத்தை ஒரு போதும் பார்க்கவே முடியாது,..’ இப்படியே போய்க்கொண்டிருக்கிறது.  192 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.195.

மூன்றாவது புத்தகம் செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993.  இது ஒரு வாழ்க்கை வரலாறு புத்தகம்.  செல்லம்மாள் என்பவர் எழுதியிருக்கிறார்.  இதற்கு முன்னுரை அம்பை எழுதியிருக்கிறார்.  

இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது. ‘செல்லம்மாவின் வாழ்க்கைக் குறிப்புகள் ஒரு பண்ணின் குடும்பம் குறித்த தொடர்ந்த மனத்தாங்கலனின் ஆவணம் மட்டுமல்லாமல் சிறு பெண்களாகவும் மனைவிகளாகவும் விதவைகளாகவுமுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், அவமதிப்புகள், பேசமுடியாமல் ஊமையாக்கப்படும் அவலங்கள் இவற்றின் ஒலியில்லாக் கூக்குரலாகவும் இருக்கின்றன.’ என்று எழுதப்பட்டிருக்கிறது.  ஒரு சாதாரண பெண்மணியின் வாழ்க்கை வரலாறைப் படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.  160 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.180.

எறும்பும் புறாவும்…



.

அழகியசிங்கர்

என் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு பழைய பேப்பர் கடை இருக்கிறது. அங்கு சில வினோதமான புத்தகங்கள் கிடைக்கும்.  அப்படி ஒரு புத்தகம்தான் லேவ் தல்ஸ்தோய்யின் எறும்பும் புறாவும் என்ற புத்தகம்.  இது ஒரு சிறார் புத்தகம். 

இக் கதைகளில் நீதி நேரிடையாக போதிக்கப்படவில்லை.   நீதி மறைமுகமாகப் புகட்டப் படுகிறது.  ஒவ்வொருவரும் இக் கதையை வாசிக்கும்போது அது தெரியப்படுத்தும் வாழ்க்கை உண்மையை உணர்ந்து கொள்ள இயலும்.  இதில் இருந்து ஒரு கதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

ஆண் குதிரையும் பெண் குதிரையும்

பகலும் இரவும் புல்வெளியில் மேய்ந்த பெண் குதி ரை உழவில்லை. ஆனால் ஆண் குதிரை இரவில் மட்டும் மேய்ந்து பகலில் உழுதது. ஆகவே பெண் குதிரை அதனிடம் சொன்னது:

”என் நீ உழுகிறாய்? உன்னிடத்தில் நானாக (இருந்தால் போகவே மாட்டேன். அவன் என்னைச் சாட்டையால் அடிப்பான் என்றால் நானோ அவனைத் திரும்ப உதைப்பேன்.”

மறுநாள் ஆண் குதிரை பெண் குதிரை சொன்னது போலச் செய்தது. அது கீழ்ப்படியாமல் போய்விட்டதைக் கண்ட அதனது எசமானன் அதற்குப் பதிலாக உழுவ அதற்குப் பெண் குதிரைக்குக் கடிவாளம் மாட்டினான்.

இந்த மாத தீராநதியில் என் கதை…

..

அழகியசிங்கர்

கடந்த ஒரு வருடமாக தீராநதியில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். வழக்கத்துக்கு மாறாக கட்டுரைக்குப் பதில் ‘திரும்பவும்’ என்ற சிறுகதை அனுப்பியிருந்தேன். இந்த மாத தீராநதி இதழில் வெளிவந்திருக்கிறது. அவசியம் வாசிக்கவும். சிறுகதைகள் சிறப்பிதழ் மாதிரி அதிக எண்ணிக்கையில் சிறுகதைகள் தீராநதியில் வெளிவந்துள்ளன. நன்றி தீராநதிக்கு.

துளி : 25 – கோமலின் தண்ணீர் தண்ணீர…..

நேற்று ஆர் ஆர்  சபாவில் மாலை 7 மணி அளவில் கோமலின்  தண்ணீர், தண்ணீர் நாடகத்தை மனைவியுடன் பார்த்தேன்.   அழுத்தமான கருத்துக்கள் நிறைந்த நாடகம்.  முதலில் இதில் நடித்தவர்கள் மனம் ஒன்றிச் சிறப்பாக நடித்தார்கள்.  தாரணி கோமல் இயக்கத்தில் இந்த நாடகம் தயாரித்துள்ளார்கள். ஏற்கனவே புகழ்பெற்ற நாடகம்.  சினிமாப்படமாகக் கூட வந்துள்ளது. திரும்பவும் இந்த நாடகத்தைப் பார்ப்பதற்கு அரங்கம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

அழகியசிங்கர்

கொஞ்சம் அதிகப்படியான வசனங்கள் இந்த நாடகத்தில் இருப்பதாக தோன்றியது.  நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கத்தி சொன்னால்தான் நமக்குப் புரியும்போல் தோன்றுகிறது.  இது ஒரு கிராமத்தில் மக்கள் அவதிப்படும் பகுதியை மட்டும் காட்சிப் படுத்தப்படுகிறது.   ஏன் அங்குத் தண்ணீர் கொண்டு வர முடியவில்லை என்ற இன்னொரு பகுதியையும் காட்டினால் இந்த நாடகத்தின் இன்னொரு தன்மை வெளிப்படும்.   அரசாகத்தையும் அதிகாரிகளையும் வில்லனாகக் காட்டுவதை ஓரளவுதான் ஏற்றுக்கொள்ள முடியும்.

கோமலின் üபறந்து போன பக்கங்கள்ý புத்தகம் விற்பனைக்கு ஆர் ஆர் சபா வாசலில் வைக்கப்பட்டிருந்தது.  அந்தப் புத்தகம் குறித்து மேடையில் தாரணி சொல்லியிருந்தால் இன்னும் அதிகப் பிரதிகள் அந்தப் புத்தகம் விற்பதற்கு வாய்ப்பு இருந்திருக்கும்.  ஏனோ தாரணி தவற விட்டுவிட்டார்.  

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …35



அழகியசிங்கர் 

நான் வாங்கிக்கொண்டு வந்த புத்தகங்களை ஒரு மர ஷெல்பில் அடுக்கி வைத்துவிட்டேன்.  அது போதவில்லை.  இன்னும் சில புத்தகங்களையும் அடுக்கி வைக்கவேண்டும்.  புத்தகங்களை முறைத்துப் பார்த்தேன்.  பதிலுக்குப் புத்தகங்கள் என்னை முறைந்தன. யோசித்துப் பார்த்தேன்.  ஏன் இவ்வளவு புத்தகங்கள் வாங்கினோம் என்று.  இது ஒரு விதத்தில் சரி, ஆனால் இன்னொரு விதத்தில் சரி இல்லை என்று தோன்றியது.

காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்த ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தை வாங்கினேன்.  போன ஆண்டு புத்தகக் காட்சியின் போது கல்யாண்ஜியின் முழுத் தொகுதி வாங்கினேன்.   அதே போல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட தேவதச்சனின் ஒரு மர்ம நபர், வைதீஸ்வரின் மனக்குருவி, பிரமிள் கவிதைகள், சுகந்தி சுப்ரமணியனின் படைப்புகள் என்று முழுத் தொகுதிகளாக சேகரித்து வைத்துள்ளேன்.  படிக்கும்போது கவிதைகள் அலாதியாகத் தென்படுகின்றன.  அதனால்தான் 300 கவிதைகள் கொண்ட என் கவிதைகளையும் அழகியசிங்கர் கவிதைகள்  என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டு வந்து விட்டேன். நிம்மதி.

ஞானக்கூத்தன் கவிதைகள் தொகுப்பில், கவிதை எழுத என்ற பெயரில் ஒரு கவிதை எழுதி உள்ளார்.  அதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கவிதை எழுத

மேஜைமேல் தாள்களை வைத்து

பேனாவை ஓட்டினேன்

ஒரு கல் விழுந்தது

எழுதத் தொடர்ந்தேன்

ஒரு கல் விழுந்தது

விடாமல் எழுதினேன்

விடாமல் கற்கள் விழுந்தன. பின்பு

கற்களை எண்ணினேன்.  எல்லாம்

வாசம் குறையா மல்லிகை ஆயின. தோழா.

வழவழப்பான தாளில் உயர்ந்த அட்டையில் ஞானக்கூத்தன் கவிதைகள் தொகுதி மின்னுகின்றன.

இங்கே குறிப்பிடும் புத்தகங்களை முழுவதும் படித்துவிட்டுத்தான் சொல்கிறேன் என்று யாரும் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.  இப்போது புத்தகங்களைப் பற்றி கூறுகிறேன்.  பின்னால் புத்தகங்களைப் படித்து முடித்தவுடன் இன்னும் கூறுவேன். 824 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை : ரூ.895.

உ வே சாமிநாதையர் கடிதக் கருவூலம் என்ற புத்தகம்.  தொகுத்தவர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள்.  ஒரு கூட்டத்தில் சலபதி இந்தத் தொகுதியைப் பற்றி குறிப்பிட்டபோது உடனே வாங்க வேண்டுமென்று நினைத்தேன்.  இந்தப் புத்தகக் காட்சியின் போது அதை வாங்க முடிந்தது.  தொகுதி 1 என்ற பெயரில் இந்தப் புத்தகம் வெளி வந்துள்ளது.  1877ஆம் ஆண்டிலிருந்து 1900 வரை உள்ள கடிதங்களின் தொகுதி இது.  இந்தப் புத்தகத்தின் பின் பகுதியில் கடிதம் எழுதியவர்களில் கையெழுத்துப் பிரதிகளையும் காணலாம்.   உ வே சாவிற்கு மற்றவர்கள் எழுதிய கடிதங்கள்தான் தொகுக்கப்பட்டுள்ளனவே தவிர உ வே சா என்ன எழுதியிருப்பார் என்பது தெரியவில்லை.  இந்தப் புத்தகம் ஒரு முக்கியமான புத்தகமாக எனக்குத் தோன்றுகிறது. கெட்டி அட்டைப் போட்ட 600 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை  ரூ.600தான்.  

இன்னும் கொஞ்சப் புத்தகங்களைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …34

ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சியின் போது ராமகிருஷ்ணனைச் சந்திக்காமல் இருக்க மாட்டேன்.  உண்மையில் அங்குதான் அவரைச் சந்திக்கும் வழக்கம் உள்ளவன்.   அப்படிச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் என்னன்ன புத்தகங்கள் வாங்கலாம் என்று சொல்லிக்கொண்டிருப்பார்.
ஒருமுறை பெரிய விக்கிரமாதித்தியன் கதையை வாங்கும்படி சொன்னார்.  இன்னொரு முறை பம்மல் சம்பந்த முதலியாரின் படைப்புகளின் முழு செட்டு கிடைக்கிறது வாங்குங்கள் என்றார்.  இப்படி எத்தனையோ புத்தகங்களை வாங்கும்படி கூறிக்கொண்டிருப்பார்.  
எனக்குத் தெரிந்து வேறு சில எழுத்தாளர்கள் என்ன புத்தகங்கள் படிக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.
அமெரிக்கன் லைப்ரரிக்கு பிரமிளுடன் போகும்போது அவர் என்னன்ன புத்தகங்கள் படிக்க வேண்டுமென்று எடுத்துக்கொடுப்பார்.  ஒரு முறை ஒரு புத்தகத்தை எடுத்து, üஇது நம்ம ஊர் ஜெயகாந்தன் மாதிரி எழுதுவார்.  படிக்க வேண்டாம்,ý என்று சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
இன்னொரு இலக்கிய நண்பர், üஎம் வி வெங்கட்ராமின்  காதுகள் என்ற நாவலையும், கோபிகிருஷ்ணனின் உள்ளேயிருந்து ஒரு குரல் என்ற நாவலையும் படிக்காதீர்கள்ý என்று அறிவுரை கூறினார்.  ஏன் என்று கேட்டேன்.  üஅது தீவிரவாதப் புத்தகம், தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்,ý என்றார். 
அதை எடுத்துப் படிக்கும்போது அவர் சொன்னது உண்மையாக இருக்குமென்று தோன்றியது.  ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால், புத்தகம் படிப்பது எந்தவிதத்திலும் யார் மனதையும் கெடுக்காது.  ஆனால் வாசிப்பவனுக்கு நம்ப முடியாத பலத்தைக் கொடுக்கும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  
நான் ஒவ்வொரு முறையும் புத்தகக் காட்சியில் புத்தகங்கள் வாங்காமல் இருக்க மாட்டேன்.   சிலசமயம் புத்தகங்களை வாங்கியபின் அதிகமாக வாங்கிவிட்டோமோ என்று கலக்கத்துடன் இருப்பேன். 
இந்த முறை ஆசையுடன் முதலில் நான் வாங்கிய புத்தகம் üகறையான்ý என்ற நாவல்.  சீர்ஷேந்து முகோபாத்யாய எழுதியது  நேஷனல் புக் டிரஸ்ட் கொண்டு வந்த புத்தகம்.  1978ல் இப் புத்தகம் வந்தபோது நான் வாஙகியிருக்கிறேன். நான் வாங்கியப் புத்தகம் ரொம்பவும் மோசமாகி வீணாகிப் போய்விட்டது.   ஒவ்வொரு முறையும் நேஷனல் புக் டிரஸ்ட் அலுவலகத்திற்குப் போகும்போது இந்தப் புத்தகம் இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டிருப்பேன்.  இதோ இந்த முறை நேஷனல் புக் டிரஸ்ட் என் ஆசையை நிறைவேற்றி விட்டது.  இந்த முறை புத்தகக் காட்சியில் நான் வாங்கிய முதல் புத்தகம் இது.  

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …31

அழகியசிங்கர்

நேற்று புத்தகக் காட்சி முடிந்து வீட்டிற்குக் கிளம்பும்போது மணி 12 ஆகிவிட்டது.  பைக் வைத்திருந்த இடத்திற்குப் போகும் போது ஒரே இருட்டு.  நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன.  நாயைக் கண்டால் எனக்குச் சற்று பயம்.  எங்கே கடித்து விடுமோ என்ற பயம்தான்.  அதனால் வண்டியை அப்படியே வைத்துவிட்டு ஆட்டோவில் போய்விடலாமென்று நினைத்தேன்.  ஆனால் சிலர் பின்னால் வண்டிகளை எடுக்க வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்த்து,üநாய்,ý என்றேன்.  üஅதெல்லாம் ஒன்றும் பண்ணாது வாருங்கள்,ý என்றார்கள்.  
üநான் வண்டியை எடுக்கும்வரை நீங்கள் இருக்கணும்,ý என்றேன்.  அவர்கள் சரி என்றார்கள்.  இருட்டில் அவர்கள் முகங்கள் கூடத் தெரியவில்லை.  என் முகம் கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது.  குரல்தான் எங்களை இணைத்தது.
எனக்குத்தெரியும் புத்தகக் காட்சியின் கடைசி நாள் டென்ஷனாக இருக்கும்.  வீட்டிற்கு சீக்கிரம்போக முடியாது என்று.  கொஞ்சம் பணம், செக் புக் என்று எல்லாம் எடுத்துக்கொண்டு போனேன்.  என் ஜோல்னாப் பையை மாட்டிக்கொண்டே திரிந்தேன்.
பெண் வீட்டிலிருந்து வந்ததால் சாப்பிடத் தயிர் சாதம் வைத்திருந்தேன்.  இரவு ஏழு மணிக்குச் சாப்பிட்டேன்.  என் கடையில் புத்தகம் விற்கக் கொடுத்த எல்லாப் பதிப்பாளர்களுக்கும் பணத்தைக் கொடுத்துவிட வேண்டுமென்ற துடிப்புடன் இருந்தேன்.  அதனால்தான் இரவு 12 ஆகிவிட்டது.
 ஒவ்வொரு முறை புத்தகக் காட்சி முடிந்தவுடன் ஒரு பெரிய கடலைத் தாண்டி வருவதுபோல் உணர்வேன்.  ஒவ்வொரு முறை புத்தகக் காட்சியின்போது எதாவது சம்பவம் நடக்காமல் இருக்காது.  இந்த முறை காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து ஒருவருக்கு வாங்கிக்கொண்ட வந்த புத்தகம் காணாமல் போய்விட்டது. 
இன்னொரு உண்மையைக் கண்டுகொண்டேன்.  கூட்டமாக இருக்கும்போது மற்ற ஸ்டால்களுக்குச் சென்று புத்தகங்கள் வாங்கக் கூடாது என்று.  அந்தத் தவற்றைச் செய்ததால் அவதிப்பட்டேன்..
ஸ்டாலில் எப்போதும் கூட்டம் வராது.  அப்படி கூட்டம் வராதத் தருணத்தில் நாம் சும்மா உட்கார்ந்திருக்கக் கூடாது.  மற்ற பதிப்பாளர்களின் முக்கியப் புத்தகங்களை எடுத்து வாசித்துக்கொண்டிருக்க வேண்டும்.  
ஸ்டாலில் இருக்கும்போது பெரும்பாலும் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விட்டேன்.  காப்பி இரண்டு முறையாவது சாப்பிடுவேன்.  முழு நாளில் மதியம் அளிக்கும் சாப்பாட்டை ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவேன்.  
என் கூட இருந்த நண்பர் (அவர் பெயரைக் குறிப்பிட வேண்டாமென்று சொன்னதால் சொல்லவில்லை) இன்னும் உறுதியானவர். 
இந்த முறை மாலை நேரங்களை நன்றாகப் பயன்படுத்தினேன்.   நண்பர்களைக் கூப்பிட்டு கூட்டங்கள் நடத்தினேன்.  விருட்சம் வெளியீடாக வந்த எல்லாப் புத்தகங்களைப் பற்றியும் பேச வைத்தேன்.  அதே நானே சோனி டிஜிட்டல் காமெராவில் பதிவு செய்து முகநூலில் பதிவு செய்தேன்.  அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.
எல்லாப் புத்தகக் காட்சிகளும் எனக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும்.  இந்தப் புத்தகக் காட்சியும் எனக்குப் பாடம் கற்றுக்கொடுக்காமலில்லை.  புத்கதக் காட்சி முன் நான் ஒரு மாணவன். 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …26

அழகியசிங்கர்

நான் இங்குக் குறிப்பிடும் புத்தகங்கள் விரும்பிப் படிக்க வேண்டுமென்று நினைக்கிற புத்தகங்கள். அப் புத்தகங்களை இப்போது படிக்காவிட்டாலும் கூட அவற்றைக் குறித்து எதாவது சொல்ல இயலுமா என்று பார்க்க முயற்சிக்கிறேன்.
இப் புத்தகங்களெல்லாம் 403ஆம் அரங்கில் விற்பனைக்கு உள்ளது. பெரும்பாலும் இப் புத்தகங்களின் ஒரு பிரதியை வாங்கிவிடுவேன். 
ஏற்கனவே கோணல் பக்கங்கள் என்ற தலைப்பில் சாரு நிவேதிதாவின் இரண்டு பாகங்களை வாங்கி வைத்திருக்கிறேன். இது மூன்றாவது பாகம். கிழக்கு பதிப்பகத்திலிருந்து வந்திருக்கிறது. சாருநிவேதிதாவின் எழுத்துக்களில் ஒரு வெளிப்படைத் தன்மை என்னை பிரமிக்க வைக்கிறது.

இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன் புத்தகத்தின் அட்டையில் உள்ள வாசகங்களை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

– நீங்கள் சினிமா நடிகனை – நடிகையைப் பிரபலம் என்றும் ஒரு எழுத்தாளனைச் சாமான்யன் என்றும் மதிப்பீடு செய்கிறீர்கள்.

– தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அஃதாவது இங்கேதான் சிட்னி ஷெல்டன் மாதிரி எழுதுகிற ஒருவர் தன்னை இலக்கிய உலகம் இலக்கியவாதியாக அங்கீகரிக்கவில்லையே என்று அங்கலாய்ப்பதைப் பார்க்க முடியும்.

– வெளிநாட்டில் உள்ள தமிழ்ச் சங்கங்களால் தமிழுக்கு இதுவரை சிறு துரும்புகூடப் பயன் இருந்ததில்லை.

– நம்மூர் எழுத்தாளர்களுக்கு ஹீஸ்டரி மட்டுமே தெரியும். சபால்டர்ன் ஹிஸ்டரி தெரியாது. எனவே சமூகம் என்ன சொல்கிறதோஅதையே அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொல்வார்கள்.

மனம் திறந்து துணிச்சலாக எழுதப்பட்ட புத்தகம் இது. எந்த எழுத்தாளரும் தமிழில் இது மாதிரி எழுதத் துணிய மாட்டார்கள். வாசிக்க வேண்டிய வித்தியாசமான புத்தகம். விலை : ரூ.225. கோணல் பக்கங்கள் 1, 2 கூட விற்பனைக்கு உள்ளது. கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மதுரம் என்ற தலைப்பில் வண்ணதாசனின் சிறுகதைகளின் தொகுப்பு வந்துள்ளது. 11 கதைகள் அடங்கிய 132 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. 
üவாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து தஙகள் தங்கள் தோழமையாலும், சூழலாலும், விரோதத்தாலும் எனக்கு இன்று நான் அறிந்திருக்கிற கொஞ்சத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் அவர்களே. என் கடைசி நிமிடம் வரை கற்றுக் கொள்கிற, விட்டுக் கொடுக்கிற எளிய திறந்த மனத்தை காப்பாற்றிச் செல்ல முடியுமெனில் அதுவே நானடைய விரும்பும் சம்பத்தாக இருக்கும்ý என்கிறார் வண்ணதாசன். வண்ணதாசன் கவிதைகளும் எழுதுபவர். கதைகளில் கவிதையின் சாயல் தெரியாது. அதேபோல் கவிதைகளில் கதையின் சாயல் தெரியாது.

இந்தப் புத்தகம் விலை ரூ.130தான். ஒருவர் கட்டாயம் வாஙகி வாசிக்க வேண்டிய புத்தகம்.

மூன்றாவதாக நான் சொல்ல விரும்புவது.

இரா முருகனின் 1975 என்ற நாவல். 392 பக்கங்கள் கொண்ட இந் நாவலின் விலை ரூ.450. (இந்த விலை சற்று அதிகமாக எனக்குப் படுகிறது).
இரா முருகன் தொடர்ந்து நாவல்கள் எழுதி வருபவர். அவருடைய அரசூர் வம்சம் நாவலிலிருந்து அவருடைய நாவல்கள் எல்லாவற்றையும் வாசிக்க நினைக்கிறேன்.

இந்த நாவலைக் குறித்து பின் அட்டையில் வெளிப்படுத்தியிருக்கும் விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

‘இந்தப் புதினம் எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி. இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட.. என்கிறார் இரா முருகன்.

விறு விறுப்பான நடையில் எழுதிக்கொண்டே போகிறார் இரா முருகன்.

இரா முருகன் இதுவரை 32 புத்தகங்கள் எழுதி உள்ளார். அதில் ப்ராஜெகட் மேனேஜ்மென்ட் என்பது ஒரு புத்தகம்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …17

அழகியசிங்கர்

ஒரு புத்தகக் காட்சியின் போதுதான் இதுமாதிரி செய்தேன். இரண்டு பக்கங்களிலும் கயிறுகளைத் தொங்கவிட்டு துணி காயப்போடுவதுபோல் சிறுபத்திரிகைகளைத் தொங்க விட்டேன்.   அப்போது என் கடையில் சிறுபத்திரிகைகளை அதிகமாக விற்பதற்குத் தருவார்கள்.  ஆனால் இப்போதோ சிறுபத்திரிகைகளே இல்லையோ என்று சொல்லும்படி இருக்கிறது.
இந்த முறை என் ஸ்டாலில் விற்பதற்கு வந்த இரண்டு சிறுபத்திரிகைகளைப் பற்றி சிறிய குறிப்பாவது கொடுக்க முயற்சி செய்கிறேன்.  
ஒரு புத்தகம் üசிற்றேடு.ý  இதன் ஆசிரியர் தமிழவன்.  ஜனவரி மார்ச்சு மாத இதழ் விற்பனைக்கு வந்துள்ளது.   இப் பத்திரிகையை சாதாரணமாகக் கையில் வைத்துக்கொண்டு படித்து விட முடியாது.  கொஞ்சம் முயற்சி செய்தால் முழுவதும் படிக்க முடியும்.  அப்படியே படித்தாலும் நாம் படித்ததில் என்ன புரிந்துகொண்டு விட முடியும் என்று தோன்றும்.
உதாரணமாக இதில் உள்ள கட்டுரைகளை வரிசைப்படுத்தி கூற விரும்புகிறேன்.
1. தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள் 2. காந்தியும், மார்க்ஸ÷ம், அயன்மையுறாத வாழ்வும், 3. நடுப்பத்திரிகை மனோபாவமும் சிறுபத்திரிகை மனோபாவமும் 4. ஒலித் தததுவம், நாக்கு, சிறுகதை 5. திணை விரிவாக்கம். 
இப்படியெல்லாம் பல தலைப்புகளில் இப் பத்திரிகை விரிந்து செல்கிறது.  பத்திரிகையின் விலை ரூ.100.72 பக்கங்கள் கொண்ட இப் பத்திரிகையை விருட்சம் அரங்கில் ஒருவர் வாங்கி வாசிப்பது அவசியம்.

ஸ்டால் எண் 403க்கிற்கு வரவும்.