துளி : 39 – வாரிசுகள் வேண்டுமா?

அழகியசிங்கர்

இன்றைய அரசியல் கட்சிகளை ஒருவர் கூர்ந்து பார்த்தால் வாரிசு இல்லாத கட்சி எதாவது இருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.  

அந்தக் காலத்தில் அரசர்கள் ஆட்சியைப் பார்க்கும்போது ஒருவர் ஆட்சி முடியும்போது அந்த அரசரின் வாரிசுதான் ஆட்சி செய்வார்.  வாரிசு இல்லையென்றால் யானையிடம் ஒரு மாலையைக் கொடுத்து அரசரைத் தேர்ந்தெடுப்பார்கள்.  முகலாயர்கள் ஆட்சி செய்யும்போது இது இன்னும் தெளிவாகவே தெரிகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சியில் இது வாரிசு ஆட்சி இல்லை என்று மறுத்தாலும் வாரிசு ஆட்சிதான் மறைமுகமாகவோ நேரிடையாகவே நடைபெறாமலில்லை.

நேருக்குப் பிறகு இந்திரா காந்தி, இந்திரா காந்திக்குப் பிறகு ராஜீவ்காந்தி, சோனியா காந்தி, இவர்களுக்குப் பிறகு ராகூல் காந்தி என்று இது தொடரத்தான் செய்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் தலைவர் பதவியை வகுத்துள்ளார்.  இதற்குத் தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.  இன்னும் தேர்தலில் கலந்துகொள்ளும் பல அரசியல்வாதிகளின் வாரிசுகளின் புதல்வர்கள் அல்லது புதல்விகள் தேர்தலில் போட்டி இடுகிறார்கள்.

இது தவறு என்று யாராவது வாதிட்டால் தவறு இல்லை என்பதைத்தான் சொல்வேன்.  ஏன் அரசியலை மட்டும் இந்த வாரிசு குறித்து குறை சொல்கிறோம்.  எல்லா இடங்களிலும் இந்த வாரிசு இல்லாமல் இல்லை.  

எனக்குத் தெரிந்து ஒரு மருத்துவர் புதல்வன் மருத்துவராகவும், ஒரு வழக்குரைஞரின் புதல்வன் வழக்குரையராகவும் காலம் காலமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.   இன்று சினிமாவில் கூட வாரிசுகள் உருவாகாமல் இல்லை.  மூத்த நடிகர் நடிகைகளின் வாரிசுகளின் புதல்வரோ புதல்வியோ சினிமாவில் நடிக்காமல் இல்லை.  அல்லது சினிமாப்படங்கள் தயாரிப்பாளர்களோ இயக்குநர்களாகவோ இல்லாமல் இல்லை.  இதையெல்லாம் நாம் மறுப்பதில்லை.  ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறோம்.

இசையை எடுத்துக்கொள்வோம்.  இசையில் பிரபலமானவர்களின் சில வாரிசுகள் அதே இசையில ஈடுபாடு கொண்டு புகழ் அடைகிறார்கள்.

இதில் ஒன்றே ஒன்று கவனிக்க வேண்டும். யார் இதில் உறுதியாக கடைசி வரை நிற்க முடியும்.  இன்று வாரிசு அரசியல்வாதி ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் மக்களின் தயவு வேண்டும்.  மக்கள் மனதில் இடம்பெறாதவரை வாரிசுகள் ஆட்சியில் இடம் பெறுவது கடினம்.  

இந்த வாரிசுகள் ஏன் இதிலெல்லாம் ஈடுபடுகிறார்கள்.  காரணம் ஒன்றுமில்லை பணமும், புகழும்தான்.

ஆனால் ஒரு வாக்கியம் மட்டும் என்னைச் சிந்திக்க வைக்காமல் இருக்காது.  உதாரணமாக வாத்தியார் பையன் மக்கு என்று சொல்வார்கள்.  ஏன் அப்படிச் சொல்கிறார் என்பதைப் பற்றி யோசிப்பேன்.  

அதேபோல் எழுத்தாளர்களின் வாரிசுகள் யாரும் எழுத்தாளர்களாக வர மாட்டார்கள்.  ஏன்என்றால் அதன் மூலம்

எதுவும் கிடைக்காது.  

ந பிச்சமூர்த்தி என்ற எழுத்தாளர் இருந்தார்.  அவர்தான் தமிழ் புதுக்கவிதைக்கு முன்னோடி.  அவருடைய வாரிசுகள் யாரும் எழுத்தாளர்களாக வரவில்லை.  உண்மையில் ந பிச்சமூர்த்தியின் பெருமையை அறியாதவர்கள்தான் அவர்கள்.  காரணம் பணம் சம்பாதிக்க முடியாது.  வறுமையில் வாட வேண்டும்.  யார் இருப்பார்கள் அப்படி இருக்க? 

பாரதியைப்போல ஒரு வாழ்க்கையை பாரதியைத் தவிர அவர் குடும்பத்தில் உள்ள வாரிசு இருக்க விரும்ப மாட்டார்கள்.  இது மாதிரியான அவதி அரசியல்வாதியின் வாரிசுக்கு வரப் போவதில்லை.  எல்லாம் பண மயம்.  புகழ் மயம்.  

அதனால் அரசியலில் வாரிசு இருக்கட்டும்.  மக்கள் மனதில் அவர்களால் இடம் பெற முடிகிறதா என்று பார்ப்போம். 

துளி : 38 – அசோகமித்திரனின் நினைவுகள்



அழகியசிங்கர்

2017ஆம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் தேதி அப்பா இறந்து விட்டார்.  அசோகமித்திரன் துக்கம் விஜாரிக்க ரவியுடன் வந்திருந்தார்.  எனக்கு ஆச்சரியம்.  அந்தத் தள்ளாத வயதில் துக்கம் விஜாரிக்க வந்திருக்கிறார் என்று தோன்றியது.  சில நிமிடங்கள் இருந்துவிட்டுக் கிளம்பி விட்டார்.  ஆனால் அசோகமித்திரனால் மாடி ஏறுவது சிரமம்.  அதனாலேயே அவர் டிஸ்கவரி புக் பேலஸில் கூட்டம் என்றால் மாடி ஏறி வர விரும்ப மாட்டார். என் வீட்டிற்கு மாடி ஏறி துக்கம் விஜாரித்ததை மறக்க முடியாத அனுபவமாக நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.   சிலசமயம் அசோகமித்திரன் போன் செய்யும்போது நான் வீட்டில் இல்லாதத் தருணத்தில் அப்பாதான் போனை எடுப்பார்.  ஹோமியோபதி மருந்துகளை அவருக்குச் சிபாரிசு செய்வார்.  கான்சரே ஹோமியோ மருந்துகளால் தீர்க்க முடியும் என்ற அளவிற்கு நம்பக் கூடியவர். 

  என் டேபிளில் அசோகமித்திரனின் மொத்தக்  கதைகளையும் உள்ள புத்தகத்தை (கவிதா பதிப்பகம்) வைத்திருந்தேன். அப்பா எடுத்துப் படித்துவிட்டார். 

கூட்டம் நடத்தும் நான் கூட வயதானவர்களின் அவதியை உணராமல் இருப்பேன்.  டிஸ்கவரியில் மாடிப்படிக்கட்டுளில் ஏறும்போது சுவரைப் பிடித்துத்தான் ஏற வேண்டும். அசோகமித்திரனை அழைத்துக்கொண்டு வருவது சிரமம் என்பதை நான் கூட யோசிக்காமலிருந்திருக்கிறேன்.

ஒவ்வொரு கூட்டத்தில் அசோகமித்திரன் பேசும்போது நான் இனிமேல் அதிக நாட்கள் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறிக்கொண்டிருப்பார்.  அவர் கடைசியாகக் கலந்துகொண்ட விருட்சம் 100வது இதழ் விழாவின்போது கூட இதைக் குறிப்பிடாமல் இல்லை. அப்படிப் பேசினாலும் அசோகமித்திரனுக்கு ஒன்றும் ஆகாது என்றுதான் நினைப்பேன். 

பெண் பாத்திரங்களை அடிப்படையாக வைத்து அசோகமித்திரன் பல கதைகள் எழுதியிருக்கிறார்.  புதுமைப்பித்தன் குறித்து ஒரு கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது, அசோகமித்திரன்தான் தன் கதைகள் மூலம் பெண் பாத்திரத்தை சிற்ப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.   அசோகமித்திரன் பெண் பாத்திரங்கள் மீது நமக்கு ஒருவித பச்சாதாப உணர்வு ஏற்பட்டுவிடும். மானசரோவர் என்ற அவர் நாவலில் வெளிப்படும் அவருடைய பெண் பாத்திரங்கள் மீது ஏதோவித பரிதாப உணர்வும் அந்தப் பெண் பாத்திரங்களுக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்ற கவலையும் ஏற்படாமல் இருக்காது.  இதேபோல் உணர்வை வேறு எழுத்தாளர்கள் எழுதி இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.  ஆனால் அசோகமித்திரன் புதுமைப்பித்தன் குறித்து அன்று பேசியதால் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.  

எனக்கு விமோசனம் என்ற அவருடைய கதை ஞாபகத்திற்கு வருகிறது.  சரஸ்வதி என்ற பெண் பாத்திரம் குறித்து.   படிக்கிறவர்களுக்கு அழுகை வராமல் இருக்காது.  அவ்வளவு உருக்கமாக யாராலும் எழுதியிருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.

மரணம் அடையும் வரை அசோகமித்திரன் எழுதிக்கொண்டிருந்தார்.  வயதாகிவிட்டால் பலர் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள்.  அப்படியே எழுத முயற்சி செய்தாலும் எழுத்து சரியாக எழுத வராது.  ஆனால் அசோகமித்திரன் விஷயத்தில் வேறு விதமாக இருந்தது.  இன்னொரு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர் வாழ்நாளில் ரொம்ப ஆண்டுகளுக்கு முன்பே எழுதுவதை நிறுத்திவிட்டார். 

அசோகமித்திரனின் இரண்டாவது நினைவு நாளில் இதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

துளி : 37 – கடையா விளையாட்டு மைதானமா?

அழகியசிங்கர்

இரண்டு நாட்களுக்கு முன் அமேசான் கின்டல் வாங்கவேண்டுமென்றேன் புதல்வனிடம்.  அமெரிக்காவில் இருந்துகொண்டு அதிகமாகப் பணம் செலவு வைக்கக் கூடாது என்ற எண்ணம் இருந்துகொண்டிருந்தது.  என்னமோ எனக்கு சில எலக்டிரானிக் பொருள்கள் குறைவான விலைக்கு இங்குக் கிடைப்பதாகத் தோன்றுகிறது.  அதனால்தான் கின்டல் வாங்க முயற்சி செய்தேன்.  போன முறை (2011) சோனி காமரா கூட அமெரிக்காவில்தான் வாங்கினேன்.  அதை விட இன்னும் சிறப்பாக உள்ள காமரா வாங்கலாம் என்று கூடத் தோன்றுகிறது.  புதல்வன் அதெல்லாம் வேண்டாம் ஸ்டாப் என்று சொன்னால் நிறுத்திவிடுவேன்.  

வ்ரைஸ் என்ற கடைக்கு புதல்வன் அழைத்துக்கொண்டு போனான். பிரமித்து விட்டேன்.  இப்படி ஒரு கடையைக் கற்பனை செய்ய முடியவிலலை. சென்னையில் ஒரு தெரு முழுவதையும் கடையாக மாற்றினால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது கடை.   கடை உள்ளே செயற்கையாக மரங்கள் நட்டு வைத்திருந்தார்கள்.  பின் கடைக்குள்ளேயே ஒரு ரெஸ்டாரன்ட் இருந்தது.  

என்னடா இது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.  ஆனால் கடையில் கூட்டமே இல்லை.  எப்படி லாபம் வரும்?   தெரியாமல் என் பேத்தியை அழைத்துக்கொண்டு வந்து விட்டோம்.  ஓட்டமாக ஓடி எங்களுக்குத் தண்ணிக் காட்டினாள்.

நான் திரும்பி வரும்போது கின்டல் வாங்கவில்லை.

துளி : 35 – கணபதி கோவிலும், மலையும்

அழகியசிங்கர்

நேற்று வேகமாகக் காற்று அடித்ததால் வெளியே தலை காட்ட முடியவில்லை.  என்னடா இது என்று தோன்றியது.  ஆனால் இன்று பொழுது ஆதரவு தரும்படி இருந்தது.  மேரி கோப்பா கௌன்டி என்ற இடத்தில் உள்ள மகா கணபதி கோவிலுக்குச் சென்றோம்.  பொதுவாக இங்கே உள்ள கோயில் எல்லாம் சதுர வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 குருக்களிலிருந்து எல்லோரும் தமிழில் உரையாடினார்கள்.  அன்னலட்சுமி உணவு கூடத்தில் வந்திருந்தவர்கள் எல்லோருக்கும்  இலவசமாக உணவு வழங்கினார்கள்.  தயிர்ச்சாதம் சிறப்பாக இருந்தது.  உணவு கூடத்தில் தென்றல் பத்திரிகை இருந்தது.  இலவசமாக வினியோகம் செய்ய மேஜையில் வைத்திருந்தார்கள். ஒரு பத்திரிகையை எடுத்துவைத்துக் கொண்டேன்.  அங்கிருந்து சௌத் மௌன்டன் என்ற இடத்திற்குச் சென்றோம்.

திருப்பதி, ஊட்டி மலைகளுக்குச் சென்ற ஞாபகம் வந்தது. அங்கிருந்து பீனிக்ஸ் என்ற இடத்தைப் பார்த்தது நல்ல அனுபவம். பலர் வந்திருந்தார்கள். குறிப்பாக வயதானவர்கள் வந்திருந்தார்கள்.  குழந்தைகள் எல்லாம் கும்மாளமிட்டிருந்தன.  அங்கேயும் பாசி மணி விற்க சில வெள்ளக்கார மாதுகள் இருந்தார்கள். பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் அழகாகக் காட்சி அளித்தார்கள்.  மலையிலிருந்து ஊரைப் பார்க்கும்போது கொஞ்சம் நடுக்கமாக இருந்தது.  புதல்வன் காரை ஓட்டிக்கொண்டு வரும்போது பாதையில் சரியானபடி திரும்பவேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.  நல்ல விதமாக ஓட்டிக்கொண்டு வீட்டில் சேர்த்தான்.  

துளி : 34 – பீனிக்ஸில் பார்த்த தமிழ் படம்

அழகியசிங்கர்

நேற்று மதியம் 3.30 மணிக்கு பீனிக்ஸில் ஹார்க்கின்ஸ் தியேட்டரில் தடம் என்ற தமிழ் படம் பார்த்தேன்.  ஹார்கின்ஸ்  என்ற பெயர் உள்ள கட்டடத்தில் 16 திரையரங்குகள் உள்ளன. ஹார்க்கின்ஸ் என்ற பெயரில் 30 இடங்களில் பீனிக்ஸ் முழுவதும் கட்டடங்கள் உள்ளன.  ஒவ்வொரு கட்டடத்திலும் 16 க்கும் மேலே திரை அரங்குகள் உள்ளன.  

நேற்று நாங்கள் 3.30 மணிக்கு தியேட்டரில் நுழைந்தபோது படம் ஆரம்பித்து விட்டது.  படம் பார்க்க மொத்தமே 9 பேர்கள்தான்.  இத்தனைப் பேர்கள் உதயம் தியோட்டரில் பார்க்க வந்தால் படமே ஓட்ட மாட்டார்கள்.  வெளியே தாங்கமுடியாத குளிர்.  தியேட்டரில் வெதுவெதுப்பாக இருந்தது.  இந்தப் படம் எப்படி என்பதைப் பற்றி எழுதுகிறேன். 

துளி : 31 – சில தினங்களுக்கு முன்னால்..

அழகியசிங்கர்

சில தினங்களுக்கு முன்னால், நான் குறும்படம் எடுத்தேன். அதற்காக நான் ஒரு பைசாவும் செலவு செய்யவில்லை. அப்படத்தில் நடித்தவர் என் நண்பர். சத்யஜித்ரேயின் டூ என்ற படத்தைப் பார்த்தவுடன் எனக்கும் ஒரு குறும்படம் எடுக்க வேண்டுமென்று தோன்றியது.
என்னுடைய சோனி டிஜிட்டல் காமெராவை எடுத்துக்கொண்டு படம் எடுத்தேன். அந்தப் படம் 11 நிமிடங்களில் முடிந்து விட்டது. அதில் வசனம் எதுவுமில்லை. படத்தின் பெயர் சைலன்ஸ். ஆர்.கே. சிறப்பாக நடித்தார். ஆனால் இந்தக் குறும்படத்தை இப்போது வெளியிட முடியாது. எடிட் செய்யவேண்டும். டைட்டில் கொண்டு வர வேண்டும். படத்தில் மியூசிக்கைச் சேர்க்க வேண்டும். அதனால் இதை எப்படி சரிசெய்வது என்று யோசனை செய்து கொண்டிருக்கிறேன். அந்தப் படத்தின் ஒரு காட்சியை இங்கே தருகிறேன்.

துளி : 30 – 108வது இதழ் விருட்சம் வந்துவிட்டது

அழகியசிங்கர்

ஜனவரி மாதம் புத்தகக் காட்சி முடிந்தவுடன், விருட்சம் 108வது இதழ் கொண்டு வர வேண்டியதாக இருந்தது.  டிசம்பர்- ஜனவரி-பிப்ரவரி வர வேண்டிய இதழ்.  ஆனால் ஜனவரி புத்தகக் காட்சி படுத்தியப் பாட்டில் எந்தப் பத்திரிசையும் புத்தகமும் கொண்டு வர வேண்டாமென்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  உண்மையில் பிப்பரவரியில் வராமல் மார்ச்சு அல்லது ஏப்ரல் கூடப் போயிருக்கும்.  ஆனால் என் புதல்வனின் வற்புறுத்தலுக்கு இணங்க நானும் மனைவியும் அமெரிக்கா செல்ல வேண்டும்.  அதுவும் பிப்பரவரி மாதம் 27ஆம் தேதி கிளம்புகிறோம்.  பிப்பரவரி மாதம் விருட்சம் முடிக்காவிட்டால் இன்னும் ஆறுமாதம் தள்ளிப் போய்விடும்.  ஒரு தம் பிடித்து விருட்சம் 108வது இதழை பிப்பரவரி மாதமே கொண்டு வந்துவிட்டேன்.   இதோ எல்லோருக்கும் அனுப்பவும் தயாராகிவிட்டேன்.  108வது இதழில் இன்னொரு விசேஷம்.  மொத்தப் பக்கங்களும் 108.  பொதுவாக நான் 80 பக்கங்களுக்கு  மேல் பத்திரிகையைக் கொண்டு வர மாட்டேன்.  இந்த இதழை 108 பக்கங்கள் கொண்ட இதழாகக் கொண்டு வந்துவிட்டேன்.  வழக்கம்போல் யார்யார் எழுதியிருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை இங்கே கொடுக்க விரும்புகிறேன்.

1. இளமையில் கல் – சிறுகதை- ஏ.ஏ.ஹெச்.கே. கோரி

2. ஞானக்கூத்தன் எழுதிய முன்னுரை       

3. கடிதங்கள் 

4. சரஸ்வதம் – சிறுகதை – ஸிந்துஜா                            .   

5. புத்தக விமர்சனம் – டாக்டர் ஜெ பாஸ்கரன் 

6. புத்தக விமர்சனம் – உஷாதீபன்      

7. பூனைப் பார்வை – கவிதை – ஜான்னவி

8. காதலர் தினம் என்றால் என்ன? – கவிதை-அழகியசிங்கர்

9. விடுதலை – சிறுகதை – ஐ கிருத்திகா

10. இரண்டு கவிதைகள் – ஷாஅ

11. புத்தக விமர்சனம் – சந்தியா நடராஜன் 

12. புத்தக விமர்சனம்  – அழகியசிங்கர்

13. மலை பூமியும் மனைச்சியும் – கட்டுரை – பெஷரா 

14. இந்தச்சாலையில் இந்தத்தெருவில்- கவிதை-ராணிதிலக்   

15. பிரபு மயிலாடுதுறை கவிதைகள் 

16. சித்திரம் பேசேல் அல்லது  ஏதோ ஒரு தேசம் – சிறுகதை

–  (எ) சாய்நாத்           

17. பானுமதி கவிதைகள்    

18. மரம் – சிறுகதை – அழகியசிங்கர்         

19. உபா சுட் – சிறுகதை -சோ சுப்புராஜ் 

20. துணை – சிறுகதை – டாக்டர் ஜெ.பாஸ்கரன் 

21. பிரபஞ்சன் நினைவுகள் – தேவகோட்டை வா மூர்த்தி     

22. சாருகேசி – அஞ்சலி – டாக்டர் ஜெ பாஸ்கரன் 

23. யோகாவைப் பற்றி சாருகேசி எழுதியது

24. உரையாடல்

நவீன விருட்சம் இதழைப் பெருமைப்படுத்திய படைப்பாளிகளுக்கு என் நன்றி உரித்தாகும்.  இந்த இதழின் அட்டைப் படம் கவிஞர் வைதீஸ்வரனின் கைவண்ணம்.  

துளி : 29- விருட்சம் நடத்தும் கூட்டங்கள்

19.02.2019

அழகியசிங்கர்

கடந்த இரண்டாண்டுகளாக விருட்சம் இலச்கியச் சந்திப்புகளை மூகாம்பிகை காம்பளெக்ஸில் நடத்தி வருகிறேன்.  கூட்டம் ஆரம்பிக்கும்போது ஏதுமாதிரியான கூட்டம் என்ற எண்ணம் இல்லாமலிருந்தேன்.  முதல் கூட்டத்தில் ஜானகிராமனைக் குறித்து திரூப்பூர் கிருஷ்ணன் பேசியவுடன் கூட்டம் எப்படி நடத்த வேண்டும் என்பது புரிந்தது.

ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றி இன்னொரு எழுத்தாளர் சொல்வது அல்லது வாசகர் சொல்வது என்பதுதான் கூட்டத்தின் தன்மை என்பது புரிந்துவிட்டது.

இக் கூட்த்தில் பேசுவதை ஆடியோவோ வீடியோவோ எடுத்து அதை எல்லோருக்கும் தெரிவிக்கிறேன்.  இந்த மாதம் ஆர் வெங்கடேஷ் ஆதவன் குறித்துப் பேசியது முக்கியமானதாகக் கருதுகிறேன். 
பல எழுத்தாளர்களை நாம் மறந்துகொண்டே வருகிறோம்.  அதேபோல் ஆதவனையும் மறந்து விடுவோம்.  ஆதவன் பற்றி வெங்கடேஷ் பேச ஏற்பாடு செய்தபிறகு நானும் ஆதவன் சிறுகதைகள் தொகுதியை எடுத்து கதைகளைப் படிக்கத் தொடங்கினேன்.  அப்பர் பெர்த் என்ற ஆதவன் கதையை இன்றுதான் படித்து முடித்தேன்.  ஏற்கனவே படித்ததுதான்.  19.09.2011 இந்தக் கதையைப் படித்திருக்கிறேன்.  பின் சுத்தமாக இந்தக் கதை மறந்து விட்டது.  இந்தக் கதையில் வருகிற சிதம்பரத்திற்கு மூன்று பெண்களுடன் ஏற்படும் சல்லாபம்தான் இந்தக் கதை.  ரொம்ப ஜாக்கிரதையாக எழுதப்பட்ட கதை.  

நீங்களும் படிக்கலாம் – 46


சாமானிய மனிதனின் எதிர்க்குரல்

அழகியசிங்கர்

வழக்கமாக நான் புத்தகங்கள் அதிகமாகப் படிக்கத் தேர்ந்தெடுக்கும் இடம். ரயிலில் பயணம் செய்யும்போதுதான்.  அதனாலேயே பகலில் ஒரு இடத்திற்குப் பயணம் செய்வதையே விரும்புவேன்.  அப்படிப் பயணிக்கும்போது கையில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போவேன்.  

இந்த முறை மயிலாடுதுறைக்குப் போனபோது விஜய் மகேந்திரனின் üசாமானிய மனிதரின் எதிர்க்குரல்,ý என்ற புத்தகத்தை எடுத்துக்கொண்டு போனேன்.  முகநூலில் எழுதிய விபரங்களின் ஒரு பகுதி, பத்தரிகையில் எழுதிய புத்தக மதிப்புரை என்று எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வருவது அவ்வளவு எளிதானதல்ல.  உண்மையில் ஒவ்வொரு முகநூலிலிருந்து புத்தகமாக வரும்போது அந்தப் பகுதியை எழுதிய படைப்பாளியைத் தவிர்த்து தொகுப்பதற்கு யாரையாவது ஏற்பாடு செய்திருக்க வேண்டும். 

விஜய் மகேந்திரனே இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். எல்லாவற்றையும் சொலல வேண்டுமென்ற எண்ணம் இயல்பாகவே ஏற்பட்டிருக்கும்.  இதைத் தவறு என்று சொல்ல வரவில்லை.

முதலில் இந்தப் புத்தகத்தின் தலைப்பு சாமானிய மனிதனின் எதிர்க்குரல்.  உண்மையில் இந்தப் புத்தகத்தை ஒருவர் படித்தால் இது எதிர்க்குரல் என்று யாரும் சொல்லமாட்டார்கள்.  ஆதரவு குரல் என்றுதான் சொல்லியிருப்பார்.

பெரும்பாலும் நண்பர்களைப் பற்றியும் நண்பர்களின் படைப்புகளைப் பற்றியும் மனம் உருகி எழுதியிருக்கிறார்.  நான் இந்தப் புத்தகத்தை இரண்டு விதமாகப் பார்க்கிறேன்.  

ஒன்று சினிமாகலைஞர்களுடன் அவருக்கு ஏற்பட்ட ஈடுபாடு.  இரண்டாவது எழுத்தாளர்களுடன் அவருக்கு உண்டான நட்பு. 

இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது பல புதிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.  எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்துகொள்ள முடிவதில்லை என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டது.  உதாரணமாக ‘விழித்திரு’ என்ற படத்தை இயக்கித் தயாரித்த மீரா கதிரவனைப் பற்றி. அதேபோல் களஞ்சியம் என்ற இயக்கினரைப் பற்றி.  ஆனால் விஜய் மகேந்திரன் புத்தகத்தைப் படிக்கும்போது அவர்கள் எல்லோரும் எனக்கும் அறிமுகமாகிறார்கள். 

எனக்கும் அவர்கள் இயக்கியப் படங்களைப் பார்க்க ஆர்வம் ஏற்படுகிறது. உதாரணமாக மீரா கதிரவன் படமான விழித்திருவை யூ ட்யூப்பில் தேடிக் கண்டுபிடித்து பார்க்கத் துவங்கியிருக்கிறேன். 

இந்தத் தொகுதியில் முகநூல் குறிப்புகளில் விரியும் பன்முகப் பார்வை என்ற கட்டுரையைப் படித்தேன். ப்ரியாதம்பி என்ற பெயரில் முகநூலில் எழுதி வருபவரைப் பற்றி தெரிய வந்தது. புதிய செய்தியாக இருந்தது.  இந்த ப்ரியாதம்பி அவர்கள்தான் இப்போது ஆனந்தவிகடனில் எழுதி வருபவர் என்று நினைக்கிறேன்.   ஆனால் விஜய் மகேந்திரன் குறிப்பிடும் மற்றவர்களைப் பற்றி எனக்கும் ஒருவித அறிமுகம் உண்டு.

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது விஜய் மஹேந்திரனின் பரவசப்படும் தன்மை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  விஜய் மஹேந்திரன் ஒரு படைப்பாளி.  அப்படி ஒரு படைப்பாளியாக இருப்பவர் சகப் படைப்பாளியின் படைப்புகளைக் குறித்துப் பரவசமாக எழுத மாட்டார்கள்.  ஆனால் விஜய் மஹேந்திரன் வித்தியாசமானவர். அவர் எல்லோரைப்பற்றியும் பரவசத்தன்மையில் எழுதுகிறார்.

உதாரணமாக ஷோபாசக்தி என்ற எழுத்தாளரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  இது கட்டுரை என்பதை விட கதைபோல் எழுதியிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.  இந்தப் பரவசப்படும் தன்மைதான் விஜய் மஹேந்திரனின் பலம்.

இன்னொரு விஷயத்தையும் இந்தப் புத்தகத்தில் கண்டேன்.  புத்தக விமர்சனம்.  பெரும்பாலும் கவிதைகள் பற்றிய புத்தக விமர்சனம் எழுதி உள்ளார். துணிச்சலாக மனதில் படுகிற பல கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.

சென்னைக்குப் புதியதாக வரும்போது படுகிற அவஸ்தையைத் தெரிவிக்கிறார். சில கட்டுரைகளைப் படிக்கும்போது ஒரு சிறுகதையைப் படிக்கிற எண்ணம் எழாமல் இல்லை.  இதற்குக் காரணம் விஜய் மஹேந்திரன் ஆரம்பத்தில் ஒரு சிறுகதை எழுத்தாளர்.

ரஜினிகாந்த், ஏ ஆர் ரஹ்மான், ஸ்ரீதேவி போன்ற திரை உலகப் பிரமுகர்களை  அறிமுகப்படுத்துகிறார். 

பிட்டாக இருக்க செய்ய வேண்டியவை, முருங்கைக் கீரை படிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்.  குமரகுருபரன் என்னும் ஆளுமை என்ற கட்டுரை உருக்கமாக உள்ளது. நண்பர் நரனும் நானும்தான் தேநீர் சந்திப்புகளை அவர் நினைவுகளைப் பேசி வருகிறோம் என்று முடிக்கிறார்.

இத் தொகுதியில் கடைசியாக உள்ள கட்டுரையின் தலைப்பு நாய்கள் ஜாக்கிரதை.  தெரு நாயை எப்படி நடத்தவேண்டும் என்று எழுதியிருக்கிறார். ஆனால் நாய் குரைக்கும் போது தேவையில்லாத பயம் ஏற்படாமல் இல்லை. என் நண்பர் ஒருவர் வீட்டில் நாய் வைத்திருக்கிறார் என்பதால் அவர் வீட்டிற்கே போகவில்லை.

இத் தொகுப்பைக் குறித்து சில கருத்துக்களையும் சொல்ல விரும்புகிறேன்.  

இத் தொகுப்பில் என்னன்ன கட்டுரைகள் எந்தந்தப் பக்கங்களில் வெளிவந்திருக்கினறன என்ற அட்டவணை வேண்டும். 

விஜய் மகேந்திரனின் சுயவிபரக் குறிப்புகள் வேண்டும். மற்றபடி இது வாசிக்கப்பட வேண்டிய புத்தகம். 

நன்றி : சாமானிய மனிதனின் எதிர்க்குரல் – விஜய் மகேந்திரன் – வெளியீடு : புலம், 332/216 திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 600 005 – தொலைபேசி : 9840603499

துளி : 28 – குவிகம் இல்லத்தில் கூட்டம்

அழகியசிங்கர்

ஒவ்வொரு வாரமும் குவிகம் இல்லத்தில் அளவளாவல் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி வருபவர்கள் கிருபானந்தனும், சுந்தர்ராஜன் என்ற நண்பர்கள்.  இந்த மாதம் 3 ஆம் தேதி கிருபானந்தன் அமெரிக்கா சென்று விட்டார்.  போகும்போது வரும் பத்தாம் தேதி ஒரு கூட்டம் நடத்த என்னிடம் கேட்டுக்கொண்டார்.  ஏற்கனவே அமெரிக்கா சென்று திரும்பிய சுந்தர்ராஜன் சென்னையில் இந்த வாரம் இல்லை என்பதால் நான் பொறுப்பேற்றுக்கொண்டு கவிஞர்கள் கவிதைகள் வாசிக்கும் கூட்டமொன்றை நடத்திúன்ன. 

இக் கூட்டத்தில் எல்லாவித கவிஞர்களையும் கூப்பிட்டுப் பேச முயற்சி செய்தேன்.  அதில் ýஓரளவுதான் வெற்றி பெற முடிந்தது.  நான் மரபுக் கவிதைகளிலிருந்தும் ஹைக்கூ கவிதைகளிலிருந்தும் வெளியே வந்துவிட்டாலும், அப் பிரிவுகளில் என்ன மாதிரியான கவிதைகள் வாசிக்கப் படுகின்றன என்ற எண்ணமும் என்னிடம் தோன்றாமல் இல்லை.

நான் எதிர்பார்த்தபடியே நான்கந்து போர்கள்தான் கவிதைகள் வாசித்தார்கள்.  முதலில் ஒவ்வொருவரும் ஒரு கவிதை வாசித்தோம்.  முக்கியமாக ஒரு விஷயத்தைக் கவனித்தேன்.  கவிதை வாசிக்க வந்த பானுமதி அவரகள் கவிதையைப் பாடினார்கள்.  பொதுவாக தமிழ் கவிதையில் பாடும் வழக்கம் கிடையாது.  இது வித்தியாசமாக இருந்தது.  புதுக்கவிதை என்பது மதம் சார்பற்ற கவிதை. புராணம் எல்லாம் கவிதையாகக் கொண்டு வர மாட்டார்கள்.  ஆனால் ஒருவர் புராணக் கதையை எடுத்து கவிதையாக வாசித்தார்கள்.  எல்லாம் புது அனுபவமாகவும் சிறப்பாகவும் இருந்தது.  4 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் ஆறு மணிக்கு முடிந்தது.  ஆடியோவில் பதிவு செய்த நான் ஒரு புகைப்படம் எடுக்கும் எண்ணம் இல்லாமல் இருந்து விட்டேன்.