கவிதையும் ரசனையும் – 7

 15.12.2020

அழகியசிங்கர்



            பாரதியாரின் வசன கவிதையை எடுத்துக்கொண்டு எழுதலாமென்று நினைக்கிறேன்.  பாரதியார் மரபுக் கவிதைகள் மட்டுமல்ல வசன கவிதைகளும் எழுதி உள்ளார்.  90 சதவீதம் மரபுக் கவிதைகளும் பத்து சதவீதம் வசன கவிதைகளும் அல்லது அதற்குக் குறைந்த சதவீதம் எழுதி உள்ளார்.

      பாரதி மறைந்தபோது கவிதை உலகில் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெறுமை ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.  இத்தனைக்கும் பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முதலிய கவிஞர்கள் இருந்தபோதும்.  

      பாரதி இறந்த 10 ஆண்டுகள் கழித்துத்தான் ந பிச்சமூர்த்தி , க.நா.சு மூலமாக புதுக் கவிதை என்ற இலக்கிய வடிவம்  பாரதியின் வசன கவிதையைப் பார்த்துத் தொடர்ந்தது.  அதன் உச்சம் ‘எழுத்து’ பத்திரிகை மூலமாகத்தான் வேகம் எடுத்தது.

      காட்சி என்ற தலைப்பில் பாரதியின் வசன கவிதையைப் பார்ப்போம்.

 காட்சி 

  முதற்கிளை : இன்பம் 

  இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;

 காற்றும் இனிது.

 தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது. 

 ஞாயிறு நன்று; திங்களும் நன்று. 

 வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன். 

 மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது. 

 கடல் இனிது, மலை இனிது, காடுநன்று. 

 ஆறுகள் இனியன. 

 உலோகமும், மரமும், செடியும், கொடியும், 

 மலரும், காயும், கனியும் இனியன. 

 பறவைகள் இனிய. 

 ஊர்வனவும் நல்லன. 

 விலங்குகளெல்லாம் இனியவை, 

 நீர் வாழ்வனவும் நல்லன. 

 மனிதர் மிகவும் இனியர். 

 ஆண் நன்று, பெண் இனிது 

 குழந்தை இன்பம். 

 இளமை இனிது, முதுமை நன்று. 

 உயிர் நன்று, சாதல் இனிது.   

         பாரதியின் இந்தக் கவிதை தமிழ்க் கவிதை உலகத்தை ஒரு புரட்டுப் புரட்டிப் போட்டு விட்டது.  இக் கவிதை வந்தபோது அப்படியெல்லாம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருமென்று யாரும் உணரவில்லை. 

      ஒவ்வொன்றாகக் கவிதையில் அடுக்கிக்கொண்டு போகிறார்.

      இவ்வுலகம் இனிது. இதிலுள்ள வான் இனிமையுடைத்து

     காற்றும் இனிது 

 என்றெல்லாம் அடுக்கிக்கொண்டு போகிறார். மழை சொல்கிறார் மின்னலை இடியைச் சொல்கிறார்.  இயற்கை சார்ந்த விஷயங்களையெல்லாம் சொல்லிக்கொண்டே போகிறார்.  இக் கவிதையின் முக்கிய விஷயம்.  இக் கவிதை உள்முகப் பார்வையைக் கொண்டது.

      எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் விளக்குகிற கவிதை.  ஆண் நன்று, பெண் இனிது என்கிறார்.

      இறுதியாக ஒன்று சொல்கிறார்.  இளமை இனிது, முதுமை இனிது, என்பதோடல்லாமல் உயிர் நன்று, சாதல் இனிது என்கிறார்.

      என்னுடைய கேள்வி.  சாதல் இனிது என்று ஏன் சொல்கிறார். இதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

      அடிப்படையில் பாரதிக்கு வேதாந்தத்தில் ஈடுபாடு உண்டு.  உபநிடதம் எல்லாம் கற்றுத் தெரிந்தவர்.  உள்ளோட்டமாக அவருக்குள் இக் கவிதையை இயற்றுவதற்கு இதெல்லாம் ஓடிக் கொண்டிருக்கும்.  ஆனால் சாதல் இனிது என்கிறாரே? அது சரியா? பாரதிக்கு அவருடைய மரணம் இனிமையாக இருந்ததா? உண்மையில் சாதல் என்பதைக் குறிப்பிடுவதன் மூலம் வேற எதாவது சொல்ல விரும்புகிறரா?  தெரியவில்லை.  

      ஏனென்றால் பாரதியின் மரணம் இனிமையாக இல்லை.  யானை தாக்கியபின் அவர் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்து விட்டார்.

      ஆனால் இங்கே சாதல் இனிது என்று குறிப்பிடுவது வேறு எதாவது அர்த்தமாகிறதா?  எதைச்செய்தாலும் மனிதன் தன்னை இழப்பதில்லை.  தான்தான் என்று எல்லாவற்றிலும் முன்னிலையில் நிற்கிறது.  பாரதியார் அந்தச் சுயத்தின் மரணத்தை அப்படிக் குறிப்பிடுகிறாரா? சாதல் இனிதென்று.

      முதுமை நன்று என்கிறார் உயிர் நன்று என்கிறார்.  அப்போது சாதலும் இனிது. தான் என்கிற நினைவில்லாமல் ஒவ்வொரு நொடியும் தான் இல்லை என்று நினைக்கிறபோது சாதல் இனிது என்று சொல்லலாம்.

      இதே காட்சி கவிதையில் ஐந்தாவதாக வரும் கவிதையில் எல்லா உயிரும் இன்பமெய்துக.  எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க.  தான் வாழ்க. 

      தான் வாழ்க என்று கூறுவது ஏன்?  தானை விலக்கிப் பார்ப்பதன் மூலம் தான் வாழ்வாக இருக்க முடியும்.

     சாதல் இனிது என்று சொல்வதற்கும் தான் வாழ்க என்று   கூறுவதற்கும்  எதோ தொடர்பு இருப்பதுபோல் படுகிறது.

      ஏழாவது பகுதியில் இப்படி எழுதுகிறார்.

           உணர்வே நீ வாழ்க

           நீ ஒன்று, நீ ஒளி

           நீ ஒன்று, நீ பல”

           நீ நட்பு, நீ பகை

           உள்ளதும் இல்லாததும் நீ.

           அறிவதும் அறியாததும் நீ

           நன்றும், தீதும் நீ

           நீ அமுதம், நீ சுவை, நீ நன்று, நீ இன்பம்.

      இது பகவத்கீதை தத்துவம் போல் இருக்கிறது. கொல்பவன் நானே, கொல்லப்படுவதும் நானே என்று மகாபாரத போரில் அர்ச்சுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுரை கூறுவதுபோல் எழுதப்பட்டிருக்கும்.  பாரதியாரும் பகவத்கீதையை மொழி பெயர்த்திருக்கிறார்.  அவர் இதைக் கவிதையாகக் கொண்டு வருகிறாரா என்று தோன்றுகிறது.  எப்படியாக இருந்தாலும் பாரதியார் வேதத்தை நம்புகிறார்.  அதன் சாரம்சத்தைதான் கவிதையாக்கிக் கொடுத்திருக்கிறார்.

         ஆனால் பாரதியாரின் வசன கவிதை முக்கியமான பணியைச் செய்திருக்கிறது.  அதுதான் மூல காரணம் புதுக்கவிதை என்ற புதிய இலக்கிய வடிவை உருவாக்கியதற்கு. இந்த ஒரு விஷயத்தில் பாரதிதான் முன்னோடி என்பதை மறுப்பதற்கில்லை.      

           (20.12.2020 அன்று திண்ணை, முதல் இணைய வாரப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை)

சி சு செல்லப்பாவின் மறைந்த நாள் இன்று


அழகியசிங்கர்


திருவல்லிக்கேணியில் தள்ளாத வயதில் மனைவியுடன் ஒரு சின்ன குடியிருப்பில் குடியிருந்தார் சி சு செல்லப்பா.


முக்கிய நோக்கமாக அவர் சென்னையில் குடியிருந்தார். ‘சுதந்திர தாகம்’ என்ற அவருடைய நாவலை அவரை அச்சடித்து வெளியிடுவதென்று முடிவெடுத்து சென்னையில் குடியிருந்தார்.
அந்தத் தள்ளாத வயதில் அவருடைய உறுதி எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. சுதந்திர தாகம் 3 பாகங்களைக் கொண்டது. திருவல்லிக்கேணியில் உள்ள மணி ஆப்செட்காரரை சி.சு செல்லப்பாவிற்கு அறிமுகப்படுத்தினேன்..மணி ஆப்செட் (பெயர் மறந்து விட்டது)காரர் சிசு செல்லப்பா வீட்டிற்கே வந்து ப்ரூப் கொடுத்து அந்தப் புத்தகத்தை அச்சடித்துக் கொடுத்தார்.


மூன்று பாகங்களை அவர் வீட்டுப் பரணில் அடுக்கி வைத்து விட்டார். அவர் ஒருவரே எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்.


ஆயிரம் பிரதிகள் அச்சடித்திருந்தார். அதுதான் எனக்குத் திகைப்பு. அவ்வளவு மன உறுதி. அவர் புத்தகம் விற்றுவிடும் என்று.


அதற்குத் தகுந்தமாதிரி இந்தியா டுடே பத்திரிகையில் அந்தப் புத்தகத்திற்குப் பெரிய விளம்பரம் கிடைத்தது. கிட்டத்தட்ட 300 பிரதிகள் விற்றன.


சி சு செல்லப்பா முழுவதும் சுதந்திர தாகம் விற்பதற்குள் இன்னொரு புத்தகத்தையும் தயார் செய்து விட்டார். அது ‘ராமையாவின் சிறுகதை பாணி’ என்ற புத்தகம். அதையும் துணிச்சலாக 500 பிரதிகள் அச்சடித்து விட்டார். ராமையாவின் சிறுகதைகள் புத்தகமாக (இன்னும் கூட வரவில்லை) இல்லாதத் தருணத்தில் அவற்றைக் குறித்து விமர்சன நூல் உருவாக்கி விட்டார் செல்லப்பா.


இவர் செயலை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு இடத்திற்கும் நடக்க முடியாத இவர் எப்படி இந்தப் புத்தகங்களை விற்கப் போகிறார்?. சுதந்திர தாகமாவது பரவாயில்லை. ஆனால் ராமையாவின் சிறுகதைகளே முழுமையாக இல்லாதத் தருணத்தில் அவருடைய கதைகளை விமர்சனம் செய்த புத்தகம் எப்படி விற்கும்?. ஆசைக்குக் கொஞ்சம் பிரதிகளாவது போட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் என்ன துணிச்சல் இவருக்கு. 500 பிரதிகள் அச்சிட்டு விட்டாரே ?


ராமையா 304 கதைகள் எழுதியிருக்கிறார். சி சு செல்லப்பா ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறார். அத்தனை கதைகளும் எந்தந்தப் பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. ஆனால் 287 கதைகளை முன்கதை சுருக்கத்துடன் விமர்சனம் செய்திருந்தார்.சி சு செல்லப்பா மறைந்தபின்பு அவருடைய ‘சுதந்திர தாகம்’ நாவலுக்கு சாகித்திய அக்காதெமி விருது கிடைத்தது.


300 பிரதிகள் விற்ற பின் அவர் இறந்து விட அவருடைய உறவினர் வீட்டிற்கு எல்லாப் புத்தகங்களும் மாற்றப்பட்டு விட்டன.
கெஞ்சிக் கூத்தாட நூலகம் ஆணை இன்னும் சில நூறு பிரதிகளுக்குக் கிடைத்தன. அவருடைய தள்ளாத வயதில் நூலக ஆணையரைச் சந்தித்து புத்தகம் வாங்குவதற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.


அதன் பிறகு அவருடைய சுநத்திர (3 தொகுதிகள்) தாகம் என்ற நாவலைப் புத்தகக் கண்காட்சியின் போது 3 தொகுதிகளும் சேர்த்து ரூ.100 அல்லது ரூ.150 என்று விற்றேன்.


ஒரு தீவிர போஸ்ட் மாடர்னிஸ விமர்சகர் எல்லாப் புத்தகங்களும் திருவல்லிக்கேணி

பிளாட்பாரத்துக்கு வந்து விடும் என்று சாபமிட்டார். நல்ல காலம் நான் அதைத் தடுத்துவிட்டேன்.
‘ராமையாவின் சிறுகதை பாணி’யை இன்னும் அடிமாட்டு விலைக்கு விற்றேன்.


சி சு செல்லப்பாவை நினைக்கும் போது எதையும் சாதிக்க முடியும் என்ற அவருடைய உறுதியை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.அவரை இந்த நாளில் நினைவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.


ஓய்வு ஊழியர்களின் நாள் இன்று

அழகியசிங்கர்

ஓய்வு ஊதியக்காரர்களில் நானும் ஒருவன்.   ஓய்வுபெறும்போது எப்படா ஓய்வு பெறப் போகிறோம் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு நாளையும்  குறைத்துக்கொண்டே வருவேன்.  வேண்டா வெறுப்பாக அலுவலகம் போகும்போது, வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போடும்போது சத்தமாக எல்லோர் காதுகளில் விழும்படி இன்னும் இவ்வளவு நாட்கள்தான் இருக்கின்றன என்று சொல்வேன்.  எல்லோரும் சிரிப்பார்கள்.


கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஓடிவிட்டன.  தேவையான அளவிற்கு ஓய்வூதியம் வருகிறது.  அது போதும்.  விருப்பமான பொழுதில் எழுந்துகொண்டு விருப்பமான புத்தகங்கள் படித்துக்கொண்டு எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.  யாரும் எந்தக் கட்டளையும் இடவில்லை.   


உண்மையில் யாராவது இன்று என்ன தேதி என்று கேட்டால், எனக்குத் தெரியாமல் போய்விடத் தோன்றுகிறது.  இன்று புதன் கிழமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் வியாழக்கிழமை.


நான் ஓய்வு பெற்ற பின்தான் என் புத்தகங்கள் எல்லாவற்றையும் கொண்டு வந்தேன்.  என் ஓய்வூதியம் பணத்திலிருந்துதான் விருட்சம் இதழும், புத்தகங்களும் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன்.  உண்மையில் ஓய்வு பெற்றபின்தான் நான் அதிகமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.  


ஓய்வு பெறுவது பற்றி இரண்டு மூன்று கவிதைகள் எழுதியிருக்கிறேன்.  ‘வரட்டும்’ என்கிற கவிதை ஒன்று அந்தக் கவிதையை இங்குத் தருகிறேன்.

வரட்டும்..


சந்திரமௌலி என்பவர்

அங்கிருந்து இங்கு வருகிறார்

இங்கிருந்து அங்குப் போகிறார்


பென்சன்காரர்கள்

எங்கே எங்கே எங்கே

என்று கேட்கிறார்கள்

இவரைத் தேடி அலுவலகத்தில்


அவர்

ஆமாம் ஆமாம் ஆமாம் என்கிறார்


யாருக்கும் எந்தத் தீர்வும் கிடைப்பதில்லை

குறையில்லாத மனிதர்களும் இல்லை

2014 பிப்ரவரி மாதத்திற்குப் பின்பு இவரும் பென்சன்காரர்


விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 30வது கவிதை வாசிப்பு கூட்டம்

30. 18.12.2020

அழகியசிங்கர்

நாளை (வெள்ளிக்கிழமை – 18.12.2020) மாலை 6.30 வழக்கமாக நடைபெறப்போகிற விருட்சம் சூம் மூலமாக நடைபெற உள்ள 30வது கவிதை வாசிப்பு கூட்டம்.


20 நிமிடங்கள் கவிஞர் அ.கார்த்திகேயன் அவர்கள் ஜென் கவிதைகள் குறித்து உரை நிகழ்த்துகிறார்.  அதன்பின் கவிதை வாசிப்பு கூட்டம் வழக்கம்போல் நடைபெற உள்ளது.


எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு வாரமும் கடவுள் வாழ்த்து குறிப்பிடுவதுபோல் விருட்சம் இதழில் வெளிவந்த கவிதை வாசிக்கப்படும்.  ஒரே ஒரு கவிதை வாசித்தபிறகு கவி அரங்கம் தொடங்கும். கலந்து கொள்பவர்கள் எல்லோரும் அவர்களுடைய பெயர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.
வழக்கம்போல் நம் விதிகளை மீறக் கூடாது.  
 தற்போதைய அரசியல், ஆத்திகம்-நாத்திகம், ஆபாசம், கொரானா, ஒருவரை ஒருவர் பழித்துச் சொல்லுதல் கூடவே கூடாது.
கவிதை மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது.  யார் வேண்டுமானாலும் எந்தக் கவிதையும் வாசிக்கலாம்.  உங்கள் கவிதை மட்டுமல்ல.  மொழிபெயர்ப்பு கவிதைகளும் வாசிக்கலாம்.  ஆனால் ஏற்கனவே வாசித்த கவிதைகளைத் திரும்பவும் வாசிக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் கூட்டம் முடியும் வரை இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.      

Meeting ID  :        884 5094 1418
             Passcode:                 167180

ஒரு கதை ஒரு கருத்துபாரதியாரின் ஸ்வர்ண குமாரி ……………..2

அழகியசிங்கர்

மாலை 6 மணி. ஸ்வர்ணகுமாரி தனியாக இருக்கிறாள். ஹேமசந்திரனைச் சந்திக்கத் தயாராக இருக்கிறாள். அவர்கள் இருவருக்கும் நடக்கும் உரையாடலைப் பாரதியார் எழுதியிருக்கிறார்.ஹேமசந்திரனைப் பார்த்து அவனை மணக்க தனக்குச் சம்மதமில்லை என்கிறாள். அப்பாவின் பலவந்தத்தின் பேரில் விவாகம் செய்து கொள்வதாகக் கூறுகிறாள்.அவளைத்தானே விவாகம் செய்து கொள்ளப் போகிறோமென்று தப்பாக நடந்துகொள்ளப் போகிறான்.

கொடி மாடத்திற்குப் பின்னே புதரில் பதுங்கி நின்ற மனோரஞ்சனன் கையும் தடியுமாக வந்து ஹேமசந்திரனை பிடித்து வெளியே தள்ளி நையப் புடைத்தான். இந்தக் கலவரத்திலே தந்தையாகிய ஸ÷ர்யபாபுவும் வந்து விட்டான்.

இந்தச் சம்பவத்தைப் படிக்கும்போது தமிழ் சினிமாவில் வில்லன் கதாநாயகியைக் கற்பழிக்கும்போது எங்கிருந்தோ கதாநாயகன் தோன்றி கதாநாயகியைக் காப்பாற்றி விடுவான். அது மாதிரி தோன்றுகிறது.

நம் குடும்பத்திற்குப் பெரிய பாதகம் இழக்க இருந்த பாதகனுக்கா நாம் பெண்ணை கொடுக்க இருந்தேன் என்று சூரியகாந்த பாபு நினைத்தார்.அவள் அப்பா மனோரஞ்சனனிடம் ஒன்றே ஒன்று சொல்கிறார்.

அவன் ஹிந்து மார்க்கத்தினின்றும் நீங்கிப் பிரமஸமாஜத்தில் சேர்ந்து கொள்ளும் பட்சத்தில், அவனுக்கு தன் பெண்ணைக் கொடுப்பதாகச் சொல்கிறார்.அவனுக்கோ தாயினிடத்து அன்பு ஒரு புறமும், அவனது ஸ்வர்ண குமாரியின் மீது மையல் மற்றொரு புறமாக இருக்கிறது. ஸவர்ணகுமாரியம் பிடிவாதமாக அவனைத் தவிர வேற யாரையும் விவாகம் செய்யாமலிருக்கத் தீர்மானித்தாய்.இப்படியே ஒன்றரை வருடம் ஆகிவிட்டது.

இப்படியிருக்க 1906ஆம் வருஷம் கல்கத்தாவிலே காளி பூஜை திருவிழா நடந்து கொண்டிருந்த (நவராத்திரி) காலத்திலே, ஸ்வர்ண குமாரி தனது வீட்டு மாடியிலே ஒரு பஞ்சணை மீது சாய்ந்து கொண்டு ஸந்தியா என்னும் தினசரி பத்திரிகை படித்துக் கொண்டிருந்தாள். அதில் திடீரென அவளது கண்களுக்குப் ஒரு குறிப்பு பட்டது.மனோரஞ்சித பானர்ஜி பிரம ஸமாஜத்தில் சேர்ந்து விட்டாரென்று.

அவள் ஆனந்த பரவசத்திலே ஆழ்ந்து விட்டாள். பத்திரிகையிலே வேறு ஒரு இடத்தில் அவன் பெயர் தட்டுப்பட்டது. அதில் லோகமான்ய பால கங்காதர திலகருக்கு விரோதமாக சில வாலிபர்கள் மனோரஞ்சன் பானர்ஜியின் கீழ் கூட்டம் கூடியது என்று.இதைக் கண்டவுடனேயே ஸ்வர்ணகுமாரிக்கு மனம் பதைத்து விட்டது.

குழந்தை முதல் பால கங்காதர திலகரைத் தெய்வம் போலக் கருதி வந்தாள். மனோரஞசனனிடமிருந்த அன்பைக் காட்டிலும் சுதேசத்தின் மீதுள்ள் அன்பு பதினாயிர மடங்கு வன்மையுடையது. பாலகங்கதர திலகருக்கு விரோதமாக இருப்பவர்களைப் பக்கத்தில் சேர்க்க மாட்டார்.

பொதுவாக நான் படித்த இரண்டாவது பாரதி கதைகளில் அவர் தேசத்தை ஒரு பகுதியாகக் கதையில் கொண்டு வருகிறார். தேச அபிமானம்தான் கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று கதை எழுதுபவர்கள் இதுமாதிரியான தேசத்தில் நடக்கிற விஷயங்களை இணைப்பார்களா என்று தெரியவில்லை.

அப்படியே இணைத்தாலும் அவற்றைப் படிப்பதற்கு ஏதுவாக இருக்குமா என்பது தெரியவில்லை.தன் கண்போன்று இருந்த ஆசை மகன் ஹிந்து மதத்தை விட்டு விலகிப் போய் விட்டான் என்பதை அறிந்தவுடன் மனோரஞ்சனனுடைய அம்மா இறந்து விட்டாள். அந்த அளவிற்குத் தீவிர ஹிந்து வெறியாளராக அம்மா பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் பாரதி.

அம்மா இறந்து போன செய்தியைக் கேட்டு அலறிக்கொண்டு சாந்த்பூருக்கு வருகிறான் மனோரஞ்சனன். தாயின் கிரியைகளையெல்லாம் ஹிந்து ஆசாரங்களின்படி ஒரு பந்துவின் மூலம் நிறைவேற்றுகிறான். ஸ்வர்ண குமாரியைப் பார்க்கச் செல்கிறான்.

அவள் அவனுக்கு ஒருகடிதத்தை எழுதிவிட்டு காசிக்கு அவள் அத்தை வீட்டிற்குப் போய்விட்டாள். ஒரு வருடம் என்னைப் பார்க்க வராதே என்று எழுதியிருக்கிறாள்.ஸ்வஜனத் துரோகிகளின் கூட்டத்தில் சேர்ந்து விட்டதால் அவன் சவகாசமே வேண்டாமென்று ஒதுக்கி விடுகிறாள். அவன் திருந்தியபிறகுதான் பார்க்க விரும்புவதாகக் கடிதத்தில் குறிப்பிடுகிறாள். அதுவரை அங்கே அவன் வந்து பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்து கொள்கிறாள்.கடைசியில் பாரதியார் இப்படி முடிக்கிறார்.

இப்போது மனோரஞ்சனன் பூனாவிலே திலகரிடம் தேச பக்திப் பாடங்கள் படித்து வருகிறான் என்று.இந்தக் கதையைப் பற்றிப் பின்வருமாறு முடிவுக்கு வருகிறேன்.-

இந்தக் கதை 1906 ஆம் ஆண்டில் எழுதியிருக்கலாமென்று தோன்றுகிறது.-

கதை வெகு சுலபமாகப் புரியும்படி எழுதப்பட்டிருக்கிறது.- அந்தக் காலத்தில் ஜாதி அபிமானம் மரணம் வரை சென்று விடுகிறது.-

கதாலுடன் தேசப்பக்தியை இணைக்கிறார் கதாசிரியர்.- பெரும்பாலும் பிராமண குடும்பச் சூழ்நிலையை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது.-

கதையில் சமஸ்கிருதச் சொற்கள் அதிகமாகக் காணப்படுகிறது.இன்னும் அதிகமாகப் பாரதியார் கதைகளைப் படிக்கலாமென்று நினைக்கிறேன்.

நேற்றும் இன்றும் இரு பகுதிகளாக வெளிவந்த கட்டுரை.

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 13 டிசம்பர் 2020 அன்று வெளியான கட்டுரை)

29வது சூம் மூலம் கவிதை வாசிப்பு கூட்டம்.

. அழகியசிங்கர்

வரும் வெள்ளிக்கிழமை (11.12.2020) பாரதியார் பிறந்தநாள் முன்னிட்டு கவிதை வாசிப்பு கூட்டம்.  நான் ஒவ்வொரு முறையும் எதாவது புதுமை செய்ய வேண்டுமென்று நினைப்பேன்.  இக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் அதைப் புரிந்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இந்த முறை பாரதியார் கவிதைகளை அவருடைய பாடல்களை வாசிப்பதும் இசைப்பதுமாய் கூட்டம் நடத்தலாமென்று நினைக்கிறேன். எல்லோரும் இதில் கலந்து கொண்டு பாரதியார் பாடல்களை/கவிதைகளைப் பாட வேண்டும் அல்லது வாசிக்க வேண்டும்.


எல்லோரும் எந்தந்தப் பாடல்களை வாசிக்க அல்லது இசைக்கப் போகிறீர்கள் என்று முன்னதாகவே கூறி விடுங்கள்.  இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.


இக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் வாட்ஸ்அப்பில் எனக்கு எந்தப் பாடலை பாட விருப்பமென்று கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். 

என் வாட்ஸ் அப் எண் 9444113205.  அப்படி முன்னதாக சொன்னால் நான் வாசிப்பவர் பெயர் பற்றியும் அவர் இந்தப் பாடலை படிக்க/பாட குறித்துக்கொள்வேன்.                  

Meeting ID: 880 2637 8918 

Passcode: 655148

கவிதையும் ரசனையும் – 6பகுதி 1

 

அழகியசிங்கர்

போன வாரம் மொழிபெயர்ப்புக் கவி அரங்கம் ஒன்றை நடத்தினேன். வாராவாரம் நான் கவி அரங்கம் நடத்துவது வழக்கம். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று மொழிபெயர்ப்புக் கவிதை அரங்கத்தை நடத்தினேன்.
நானும் படிப்பதற்காக மொழிபெயர்ப்புக் கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டேன். அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது. இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் எல்லாம் நமக்கு எப்போது தெரிய வந்தது. எல்லாம் சிறுபத்திரிகைகள் மூலம்தான் தெரிய வந்தது என்று எனக்குத் தோன்றியது.
முதலில் ‘எழுத்து’ என்ற பத்திரிகையை எடுத்து வைத்துக்கொள்வோம். மொழிபெயர்ப்புக் கவிதைகளை சி சு செல்லப்பா அவர் எழுத்து பத்திரிகையில் அறிமுகப் படுத்தியிருக்கிறார். அவர் மூலம்தான் இது தொடங்கியிருக்க வேண்டுமென்று தோன்றியது.
புதுக்கவிதை என்ற இலக்கிய வடிவம் எழுத்து பத்திரிகையில் ஆரம்பித்தபோது (மணிக்கொடியில் ஆரம்பித்த அந்த முயற்சி தோல்வி அடைந்து விட்டது) சுஜாதா மூலம் வணிகப் பத்திரிகைகளில் பரவத் தொடங்கின.
ஆனால் ஏனோ மொழிபெயர்ப்புக் கவிதைகள் வணிகப் பத்திரிகைகளைச் சீண்டவில்லை.
‘மாற்று இதயம்’ என்ற பெயரில் சி.சு செல்லப்பா ஒரு கவிதைத் தொகுதியை மே 1974ல் கொண்டு வந்தார். அதில் ‘வெளிக்குரல்கள்’ என்ற பெயரில் மொழிபெயர்ப்புக் கவிதைகளை அவர் வெளியிட்டுள்ளார்.
மொழிபெயர்ப்பு கவிதைகளை வெளியிடுவதற்குக் காரணத்தை சி.சு. செல்லப்பா கூறும் காரணத்தை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
‘தமிழ் புதுக்கவிதை முயற்சிக்கு வெளிநாட்டு இலக்கியப் பாதிப்பு உண்டு. பாரதிக்கும் பிச்சமூர்த்திக்கும் சி மணிக்கும் பிரிட்டீஷ், அமெரிக்க, பிரஞ்சு கவிகளின் செல்வாக்கு இருப்பதைப் பார்க்கலாம். அந்த மொழி கவிதைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். உருவ, உள்ளடக்க, உத்தி அம்சங்களில் அவை எவ்வளவு சாதனை காட்டி இருக்கின்றன என்பதை அறிந்துகொண்டால் தமிழ் புதுக்கவிதை படைப்பாளர்கள் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் காரியம் செய்யாமல், புதுக்கவிதை அடுத்தடுத்து உயர்ந்த கட்டங்களுக்குப் போக வழிவகை கையாள சாத்தியமாகும்.
சி சு செல்லப்பாவைப் புதுக்கவிதை எழுதுவதற்கும் நிறையா கவிதைகளை மொழிபெயர்த்து கைபழகிக் கொண்டதாகக் கூறுகிறார்.அவர் மொழிபெயர்ப்பு கவிதைகளில் ஒன்றிரண்டு பார்க்கலாம்.
வில்லியம் காரலஸ் வில்லியம் கவிதையான ‘சக்தி’ என்ற கவிதையைப் பார்ப்போம்.


ஆள் நீள

பருமன் மடிப்பு

பழுப்புத்தாள் ஒன்று

தெருவில்

காற்றில்

சுருண்டு சுருண்டு

மெதுவாக

உருள

கார் ஒன்று

அதன் மீதேறி

தரையோடு அரைத்தும்

மனிதன் போல்

இல்லாமல்

எழுந்து

மீண்டும்

காற்றில்

சுருண்டு சுருண்டு

முன்போல்உருண்டது
(இன்னும் வரும்)


(08.12.2020 தேதியிட்ட திண்ணை இணைய வார பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)

28வது கவிதை வாசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்

 04.12.2020 (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 28வது கவிதை வாசிப்புக் கூட்டத்திற்கு எல்லோரையும் அழைக்கிறேன்.

கவிதைகள் வாசித்துச் சிறப்புச் செய்யும்படி.  
எது மாதிரியான வகைகளிலும் கவிதைகள் வாசிக்கலாம்.  2 முதல் 3 நிமிடங்களுக்குள் கவிதை வாசிக்கலாம்.  இக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளர் யாருமில்லை.  


மாலை 6.30  லிருந்து 7.45 வரை கவிதை வாசிப்பு தொடரும். முனைவர் வ.வே.சு கவிதை அரங்கின் முடிவில் தன் கருத்துக்களை வெளிப்படுத்துவார்.
ஒவ்வொரு வாரமும் கடவுள் வாழ்த்து குறிப்பிடுவதுபோல் விருட்சம் இதழில் வெளிவந்த கவிதை வாசிக்கப்படும். 

ஒரே ஒரு கவிதை வாசித்தபிறகு கவி அரங்கம் தொடங்கும். கலந்து கொள்பவர்கள் எல்லோரும் அவர்களுடைய பெயர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.


வழக்கம்போல் நம் விதிகளை மீறக் கூடாது.  
 தற்போதைய அரசியல், ஆத்திகம்-நாத்திகம், ஆபாசம், கொரானா, ஒருவரை ஒருவர் பழித்துச் சொல்லுதல் கூடவே கூடாது.


கவிதை மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது.  யார் வேண்டுமானாலும் எந்தக் கவிதையும் வாசிக்கலாம்.  உங்கள் கவிதை மட்டுமல்ல.  மொழிபெயர்ப்பு கவிதைகளும் வாசிக்கலாம்.  கூட்டத்தில்

கலந்து கொள்பவர்கள் கூட்டம் முடியும் வரை இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


 Meeting ID:   837 9597 6618                                  

 Passcode:     413683

ஒரு கதை ஒரு கருத்து


பு துமைப்பித்தனின் டாக்டர் சம்பத் 

அழகியசிங்கர்

            டாக்டர் சம்பத் என்ற புதுமைப்பித்தன் கதை ஒரு துப்பறியும் கதை.  இதை அவர் எழுதியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. படிக்கும் போது நமக்கும் இப்படியெல்லாம் ஒரு கதை எழுதிப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.

            ரெங்கசாமி என்பவர் உல்லாசனி சபையின் தமிழ் கண்டக்கடர் (போதகர்). அவர் வருஷாந்திர கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம் ராவ்சாகேப் சம்பந்த முதலியார் எழுதிய லீலாவதி – சுலோசனா நாடகம். 

            ரெங்கசாமி கூற்றாக இந்தக் கதை சொல்லப்படுகிறது.  

            இந்த நாடகம் அரங்கேறிய அன்று சபேசய்யர் சுலோசனையாகவும், குற்றாலம் பிள்ளை லீலாவதியாகவும் வேஷம் தரித்திருந்தார்கள்.  நாடகம் மெதுவாக நகர்ந்தது.  லீலாவதி தன் தங்கைக்குபாலில்   விஷம் கொடுக்கும் கட்டம்.  சகோதரி கொடுத்த பாலை குடித்துவிட்டு, மரணத்தின் இன்பத்தைப் பற்றிப் பாடிக்கொண்டே, பக்கத்தில் அலங்கரித்திருந்த மஞ்சத்தில் போய் ஒய்யாரமாகப் படுத்தாள்.

            அந்தக் காட்சியின் அகப் பதைப்பை எடுத்துக் காட்டுவதுபோல நாடக மேடையை இருள் நிறைந்ததாகச் செய்திருந்தார்கள்.  சுலோசனை படுக்கையில் சாய்ந்தவுடன் அந்தப் படுக்கையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்சார விளக்குகள் மின்னல் தோன்றி மறைவதுபோல இரண்டு வினாடிகள் எரிந்து அவிந்தன.  திரையும் விடப்பட்டது.

            முதல் வரிசையில் டாக்டர் சம்பத் பக்கத்தில் ரெங்கசாமியும் அமர்ந்திருக்கிறார்.  திரை திரும்பவும் தூக்குவதற்குத் தாமதம் ஆகிறது.  அவ்வளவு தாமதத்திற்கு என்ன காரணம் என்று பார்த்து வர ரெங்கசாமி எழுந்து கொள்கிறார்.

           அப்போது ஸ்டேஜ் மானேஜர் திரு ராமானுஜம் திரையிலிருந்து வெளிப்பட்டு அரங்கத்திலிருந்து இறங்கி இவர்கள் பக்கம் வருகிறார்.  அவர் முகம் வெளுத்து வியர்த்திருந்தது.  டாக்டர் சம்பத்திடன் வந்து ரகசியமாக ஏதோ சொல்கிறார்.

            அவசரம் அவசரமாக டாக்டர் சம்பத்தும் ரெங்கசாமியும் நாடகம் நடந்த இடத்திற்குச் சென்றார்கள்.  அன்று நாடகத்திற்காக விசேஷமாக வந்திருந்த டிப்டி கமிஷனரும் கூடவே வந்தார்.  

            அங்கே ஒரு புறத்தில் எவெக்டிரிக் வெளிச்சத்தில் கோரமான  தேற்றத்துடன் முகத்தை வலித்துக்கொண்டு, சுலோசனா வேஷத்தில் சபேசய்யர் இறந்து கிடந்தார்.

            டாக்டர் இங்கே பாருங்களேன்.  மாரடைப்பால் இறந்து விட்டார் சபேசய்யர் என்று சத்தம் போட்டார் ராமானுஜம். 

            டாக்டர் அவரைச் சோதித்துவிட்டு, மாரடைப்புமில்லை ஒன்றுமில்லை ஏதோ விஷத்தினால் இறந்து விட்டார், என்றார். 

            டிப்டி கமிஷனர் நாடகம் பார்க்க வந்திருந்த கும்பலை நாடகம் இனிமேலில்லை அமைதியாக  போகும்படியும், சுலோசனா வேஷம்போட்ட சபேசய்யருக்கு உடல் நலம் சரி இல்லை என்றும் கூறி துரத்தி விட்டார்.

            இப்போது இது கொலையாக இருக்கலாமென்று அந்தக் கொலை எப்படி நடந்திருக்குமென்றும் ஆராய்ச்சியில் இந்தக் கதை போய்க் கொண்டிருக்கிறது.

            அதுவரை அந்தக் கோரச் சம்பவத்தினால் திடுக்கிட்டு மூலைக்கொருவராக ஒடுங்கி நின்றுகொண்டிருந்த நடிகர்கள் யாவரும் அங்கு வந்து சூழ்ந்துகொண்டனர்.  டாக்டர் சம்பத், அவருக்குப் பால் கொடுக்கப்பட்ட டம்ளர் எங்கே என்று கேட்கிறார்.

            பதட்டத்துடன் இருந்த குற்றாலம் பிள்ளை, “அதை இப்போதுதான் அலம்பி கொட்டிவிடடுத் தண்ணீர் குடித்தேன்,” என்கிறார்.

            “எங்கே கொட்டினீர்கள்?” என்று டாக்டர் கேட்க, ஒரு மூலையைக் 

காட்டினார் குற்றாலம் பிள்ளை.  டாக்டர் அந்த இடத்திற்குப் போய் அந்த இடத்தை ஆராய்கிறார்.  

            “அந்தக் கூஜாப் பாலில்  சர்க்கரை போட்டிருக்கிறதா?” என்று ராமானுஜத்திடம் கேட்கிறார் டாக்டர்.

            “ஆமாம்.  போட்டிருந்தது,” என்று பதில் வருகிறது.

            நடேசன் என்பவன் காலானாவிற்கு கடையிலிருந்து சர்க்கரை வாங்கிக் கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டான். 

            “சர்க்கரை மடித்து வந்த காகிதம் இங்கே எங்காவது இருக்குமா?” என்று கேட்கிறார் டாக்டர்.

            நடிகர்களிடையே ஒருவர், “இதோ இருக்கிறது,” என்று சர்க்கரை வாங்கிவந்த காகிதத் துண்டை கொடுத்தார்.

            “என் வேலை முடிந்து விட்டது.  நாளை ஆஸ்பத்திரியில் பிரேதப் பரிசோதனையின்போது பார்த்துக்கொள்கிறேன்,” என்கிறார் டாக்டர். சபேசய்யர் 

       “விஷத்தினால் இறந்திருக்கிறார் செம்பிலுள்ள பாலில் விஷம் இல்லை.  அவர் குடித்த பாலில்தான் இருக்திருக்க வேண்டும்.,” என்கிறார் .

            இது விஷயமாக இருவர் கைதி செய்யப்படுகிறார்கள். ஒருவர் குற்றாலம் பிள்ளை, இரண்டாவது வேலையாள் நடேசன்.  உண்மையிலே குற்றாலத்திற்கும் சபேசய்யருக்கும் தொழில் முறையில் போட்டியுண்டு.  இருவரும் போலீசு கோர்ட்டில் பிரபல வக்கீல்கள் போன வருடம் குற்றாலப்பிள்ளைக்குக் கிடைக்க வேண்டிய பப்ளிக் பிராசிகூட்டர் வேலை சபேசய்யர்ரால் கிடைக்காமல் போய்விட்டது.

            மறுநாள் ரெங்கசாமி ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போய் டாக்டர் சம்பத்தையும், ஜெனரல் டாக்டர் ஒருவரையும் பார்க்கிறார்.

ரங்கசாமியைப் பார்த்து டாக்டர் சம்பத் சொல்கிறார், அவர்களுக்கே தெரியவில்லையாம் அவர் எப்படி இறந்தாரென்று.  அவருடைய முகத்து நரம்புகளும், கழுத்து நரம்புகளும் ஏதோ கொடிய வலிப்பு நோயால் இறந்திருப்பதாகக் காட்டுகின்றன என்றார் டாக்டர் சம்பத்.

            அங்கிருந்து டாக்டரும், ரெங்கசாமியும் நாடகக் கொட்டைக்குப் போனார்கள்.

            அவர்கள் கொட்டகை வாசலையடையும் சமயம், அருகில் வலது கைப்புறத்திலிருந்த டிக்கட் அறையில் யாரோ ஒருவர் எரிந்து கொண்டிருந்த எலெக்ட்ரிக் விளக்கை அவசரமாக அணைத்தார்.  அதைக் கண்ட டாக்டர் சட்டென்று அப்படியே நின்றுவிட்டார்.  

            மூன்றாவது நாள் காலையில் டாக்டர் ரெங்கசாமியை எம்.யு.ஸிக்கு (மதராஸ் யுனைடெட் கிளப்) வந்து பார்க்கச் சொல்கிறார். 

            ரங்கசாமி அங்கு வந்தபோது, டாக்டர் ஒரு பிரம்பு நாற்காலியில் சாய்ந்துகொண்டு கையில் சுருட்டுடன் சிந்தனையில் மூழ்கியிருந்தார்.

            ரெங்கசாமியைப் பார்த்தவுடன், ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு பக்கத்தில் அமரச் சொல்கிறார்.

            ரெங்கசாமி உடனே பதட்டத்துடன், “கொலையா தற்கொலையா?” என்று கேட்கிறார்.

            டாக்டர் நிதானமாக சபேசய்யர் விஷத்தால் இறக்கவில்லை மின்சாரத் தாக்குதலால் இறந்துவிட்டார் என்கிறார்.

            குற்றாலம் பிள்ளை, வேலைக்காரன் நடேசன் ஸ்டேஜ மானேஜர் ராமாநுஜம் இவர்கள் யார்மீதும் சந்தேகம் இல்லை என்கிறார் டாக்டர்.

            பின் யாரய்யா என்று பொறுமை இழந்து கேட்கிறார் ரங்கசாமி. 

            “நீர்தான் என்கிறார் டாக்டர் நிதானமாக. அதைக் கேட்டவுடன் ரெங்கசாமி திகைத்து விட்டார். 

            இந்த இடத்தில் புதுமைப்பித்தன் இப்படி வர்ணிக்கிறார்.டாக்டர் சம்பத் என்னையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்.  என் உடல் நிலைகொள்ளாமல் தத்தளித்தது. முகத்தில் வியர்வை அரும்பியதை என் உணர்ச்சிகளுக்கு மேல் உணர்ந்தேன். 

            திரும்பவும் டாக்டர் எல்லா சம்பவங்களையும் நிதானமாக வர்ணிக்கிறார்.

            நாடகத்தில் சுலோசனா பாலருந்தும் காட்சி ஏறக்குறைய இருளிலேயே நடந்தது.  ஆனால் அவள் மஞ்சத்தில் படுத்தவுடன் அந்த மஞ்சத்தைச் சுற்றியமைக்கப்பட்டிருந்த விளக்குகள் பளிச்சென்று எரிந்து அணைந்தன.  அதில் ஒரு இடத்தில் மின்சாரக் கம்பி மேல் ரப்பர் உறை பிரிந்து இருந்தது. அதுவும் மஞ்சத்தில் படுத்தவர் கழுத்துக்குச் சரியாக.  அதை நான் பார்த்தபோது நீர் என்ன சொன்னீர் என்று கேட்கிறார் டாக்டர்.  முட்டாள் பயல்கள்.  அன்றைக்கே இதைச் சரிப்படுத்தச் சொன்னேன் இன்னும் அப்படியே இருக்கிறது என்று சொல்லவில்லையா என்று ரங்கசாமி சொன்னதை ஞாபகப்படுத்துகிறார் டாக்டர்.

            ரங்கசாமி கொலை செய்வதற்கு எதாவது காரணம் வேண்டுமே  என்று மேலே விசாரிக்கிறார் டாக்டர்.

            சபேசய்யர் நிஜமாகவே ஒரு புழு.  என் விசாரணையின் போது அவனைக் கொல்வது மூலம் உலகத்திற்கு உபகாரம் செய்துள்ளீர்கள். என்கிறார் டாக்டர் ரெங்கசாமியைப் பார்த்து.

            ரெங்கசாமி இந்தக் கொலையிலிருந்து தப்பிக்க தற்செயலாக சபேசய்யர் மின்சாரம் தாக்கி இறந்ததாக விவரமாக எழுதப்பட்டிருந்த காகிதத்தில் அவரும் ஆஸ்பத்திரி டாக்டரும் கையெழுத்திட்டிருந்தார்கள்.

            டாக்டர் சம்பத் ரெங்கசாமிக்கு உயிர்ப் பிச்சை அளித்துவிட்டார்.  ஆனால் ரங்கசாமியின் மனைவியின் கற்புக்கு ஏற்பட்ட களங்கத்தையும் ரங்கசாமி கையில் உள்ள ரத்தக் கறையையும் யாரால் துடைக்க முடியும்? என்று புதுமைப்பித்தன் இறுதி வரிகளில் முடித்திருக்கிறார்..

            கதையின் ஓரிடத்தில் இப்படி எழுதியிருக்கிறார் கதாசிரியர்.  வேலைக்கார நடேசன் முதலில் சபேசய்யரிடம் வேலை செய்து கொண்டிருந்தான்.  சபேசய்யர் ஒரு பெரிய ஸ்திரீ லோலன்.  நடேசன் அவருடைய கையாள்.  சபேசய்யரைப்பற்றி ஊரில் கொஞ்சம் வதந்தியும் உண்டு.  அவர் சிபாரிசின் மேல்தான் நடேசனுக்குச் சபாவில் வேலை கிடைத்தது.

            உண்மையில் ரங்கசாமிக்கு டாக்டர் சம்பத்தும், இன்னொரு டாக்டரும் துணை நிற்கிறார்கள்.  ஒரு சமூக விரோதியாக சபேசய்யர் கட்டம் கட்டப் படுகிறார்.

            மின்சாரத்தால் தற்செயலாக சபேசய்யர் மரணம் அடைந்து விடுவதுபோல் காட்டப்படுகிறது.  ஆனால் கொலையைச் செய்த ரங்கசாமி தன் நடவடிக்கை மூலம் தன்னை வெளிப்படுத்துகிறார்.  முக்கியமாகக் கண்களைப் பார்த்து டாக்டர் சம்பத் எடை போடுகிறார்

            இறுதி இரண்டு வரிகளில்தான் இந்தக் கதைக்கு அர்த்தம் புரிகிறது.ரெங்கசாமி ஏன் கொலை செய்யவேண்டுமென்று. இந்தக் கதையைப் படித்துக்கொண்டு வரும் வாசகருக்கு ரெங்கசாமி  ஏன் கொலையாளி என்கிறபோது ஆச்சரியம் ஏற்படாமலிருக்காது.  இறுதி வரிகளில்தான் அது வெளிப்படுகிறது.

            இந்தக் கதை மணிக்கொடி இதழில் 14.04.1935 வெளிவந்த கதை. ஒரு கொலை கதையை வெகு சுலபமாக விவரித்த விதம் நன்றாக உள்ளது.

  (தமிழில் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 20.11.2020 அன்று பிரசுரமான கட்டுரை)

சூம் மூலமாக 26ஆவது கவிதை அரங்கம்

அழகியசிங்கர்


20.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 26ஆவது கவிதை அரங்கத்திற்கு வருகைப் புரிந்து கவிதைகளை கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கவிதை வாசிக்கும் கூட்டம் வித்தியாசமானது. வழக்கம்போல் சிறப்புரை வழங்க வருபவர் திரு சீனிவாச நடராஜன். தலைப்பு : தற்கால கவிதைகளில் வடிவமும் உள்ளடக்கமும். முக்கியமாக இதில் கலந்துகொண்டு கவிதை வாசிப்பவர்கள், அவர்களுடைய கவிதைகளை வாசிக்கப் போவதில்லை. அவர்கள் விருமபுகிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள். யார் யாரு எந்தக் கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. வ வே சு – சுந்தரராமசாமி கவிதைகள்

2. ஷாஅ – ஆனந்த் கவிதைகள்

.3. ரவீந்திரன் – தேவதச்சன் கவிதைகள்

4. கணேஷ்ராம் – கல்யாண்ஜி கவிதைகள்

5. ஸ்ரீதர் – ஞானக்கூத்தன் கவிதைகள்

6. சிறகா – அனார் கவிதைகள்

7. பானுமதி – குட்டி ரேவதி கவிதைகள்

இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்த உதவ வேண்டும். எல்லோரும் முழுமையாகப் பங்கேற்று கவிதை வாசிப்பை உன்னிப்பாகக் கேட்க வேண்டும்.

மாலை 6.,30 மணிக்கு வெள்ளியன்று நடைபெற உள்ளது. Meeting ID: : 818 0247 4818 Passcode: : 827170 Topic: Virutcham Poetry 26th Zoom Meeting Time: Nov 20, 2020 06:30 PM Mumbai, Kolkata, New Delhi Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81802474818?pwd=cVJWbFJTeVFONzNGeFFoYzlFTzhRZz09 Meeting ID: 818 0247 4818 Passcode: 827170