நான் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால் இனிமேல் முடியாது. அதாவது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது கலவரமாக இருந்தது. முன்பெல்லாம் ஒன்பதாம் வகுப்பிலிருந்துதான் இந்திப் பாடம் நடத்துவார்கள். அப்போது தீவிரமாக இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்ததால் இந்தியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
குடுமி வைத்துக்கொண்டிருப்பார் இந்தி கற்றுத் தரும் ஆசிரியர். கூட்டமாக மாணவர்கள் எல்லாம் கெரோ செய்தார்கள். நான் படித்தப் பள்ளிக்கூடத்தில் அந்த ஆசிரியரை அதன் பின் பார்க்கவில்லை. பள்ளிக்கூடத்திலிருந்து துரத்தி விட்டார்களா? என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பாவம். பள்ளிக்கூடத்திலிருந்து வரும் மாதச் சம்பளம் அவருக்குப் போயிருக்கும்.
அதன் பின் இந்தி கற்றுக்கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. எனக்கும் இந்தி ஞாபகமில்லை. பின் வேலையெல்லாம் கிடைத்து சிறிது மூச்சு வாங்க நேரம் இருந்தபோது இந்தி கற்றுக்கொள்ளலாம் என்று யோசித்தேன். மாம்பலத்தில் எங்கே இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என்று பார்த்தேன். கோதண்ட ராமர் கோயில் பக்கம் வகுப்பு நடத்துவதாக சொன்னார்கள். நானும் சேர்ந்து கொண்டேன்.
பாடம் நடத்த நடத்த எனக்கு ஒன்றும் புரியவில்லை. கா வில் எத்தனை விதமான கா சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று நினைத்தேன். பிராத்மிக் என்ற அடிப்படை தேர்வில் 13 மதிப்பெண்கள் வாங்கி தோல்வி அடைந்தேன். உண்மையில் காப்பி அடித்து எழுதச் சொன்னார்கள். முடியவில்லை. என்னைவிட பொடியன்கள் எல்லாம் என் பக்கத்தில் அமர்ந்து பாஸ் செய்து விட்டார்கள்.
எனக்குச் சொல்லிக்கொடுத்த டீச்சரைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும். அவ்வளவு ஒல்லியாய் இருப்பார். இனிமேல் முடியாது என்று தோன்றியது.
வங்கியில் இலவசமாக இந்தி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். என்னால் அதிலும் வெற்றிகரமாக வர முடியவில்லை. ஆரம்பத்தில் இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ளலாமென்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை.
சமீபத்தில் பீனிக்ஸ் போயிருந்தேன். அங்கு ஒரு கூட்டம். ஒவ்வொரு குடும்பத்திலும் பெரியவர்கள் கலந்து கொண்டார்கள். எல்லாரும் இந்தி பேசிக்கொண்டிருந்தார்கள். நான் முழித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் தெரிந்தது எனக்குச் சரியாக ஆங்கிலமும் பேச வரவில்லை என்று.
என்னிடம் பழையப் புத்தகங்கள் கைவசம் இருக்கின்றன. ஓரளவு இப் புத்தகங்கள் மோசமான நிலையில்தான் இருக்கின்றன. சில புத்தகங்களுக்கு அட்டை கிழிந்திருக்கும். நான் அதுமாதிரியான சில புத்தகங்களை பைன்ட் செய்திருப்பேன். அட்டை இல்லாமல். அப்படி ஒரு புத்தகம் ஆல்பெர் காம்யு வின் மொழிபெயர்ப்புப் புத்தகம். பிரஞ்சிலிருந்து தமிழுக்குப் மொழி பெயர்த்தவர் வெ ஸ்ரீராம்.
1980ஆம் ஆண்டு இந்தப் புத்தகம் க்ரியா மூலம் அச்சாகி உள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் என்னுடன் இப் புத்தகம் உள்ளது. அப்போது இதன் விலை ரூ.15. இப்போது எடுத்துப் படித்தாலும் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டும் புத்தகம்.
இப் புத்தகத்தை தமிழில் வெளியிட அனுமதி அளித்த காலிமார் பதிப்பகத்திற்கும் திருமதி காம்யு அவர்களுக்கும் நன்றி என்று எழுதி உள்ளார்கள்.
அந்நியன் என்ற இந் நாவல் 1942 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சினைகளைத் தெளிவான நேர்மையுடன் விளக்கியிருக்கும் இவரது இலக்கியப் படைப்புகளுக்காக இவருக்கு 1957-ம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. 1960-ம்ஆண்டு ஜனவரி 4-ம்தேதி, ஒரு கார் விபத்தில் ஆல்பெர் காம்யு இறந்துவிட்டார்.
இந் நாவலின் தனித்தன்மையாக நான் கருதுவது அப்படியே விவரிப்பது. சலாமானோ என்ற முதியவர் ஒரு நாயை வளர்த்து வருகிறார். அல்பெர் காம்யு இதை விவிரித்துக்கொண்டு போவதை இங்கு தர விரும்புகிறேன்.
‘இருட்டில் மாடிப்படிகள் ஏறியதும், குறட்டில் எனக்கு அடுத்த குடியிருப்பில் இருந்த சலாமானோ என்ற முதியவரின் மேல் முட்டிக் கொண்டேன். அவர் தம்முடைய நாயுடன் இறங்கி வந்து கொண்டிருந்தார். எட்டு வருடங்களாக நான் அவர்களை ஒன்றாகப் பார்க் கிறேன். அந்த ஸ்பானியல் நாய்க்கு ஒரு விதச் செந்நிறச் சரும நோய் என்று நினைக்கிறேன். அதனால் அது தன் ரோமங்களை இழந்து, உடல் முழுவதும் தழும்புகளும், பழுப்பு நிறத் தடிப்புகளுமாகக் காணப் பட்டது. தனியாக அந்தச் சிறிய அறையில் அதனுடன் வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் பழக்க தோஷத் தினாலோ என்னவோ அம் முதியவர் சலாமானோ அக் கிழட்டு நாயைப் போலவே தோற்றமளித்தார். அவர் முகத்திலும் சிவப்பு நிறத் தடிப்புகள், ஆங்காங்கே காணப்பட்ட செம்பட்டை ரோமங்கள். அந்த நாயோ தன் எஜமானரின் கூன் விழுந்த தோற்றத்தைப் பெற்றிருந்தது: தாழ்ந்து வளைந்த கழுத்து, முன் தள் ளிய நாசி. ஒரே இனத்தைச் சேர்ந்திருந்தாலும், ஒரு வரையருவர் வெறுப்பது போல் தோற்றமளித் தனர். காலை பதினோரு மணிக்கும் மாலை ஆறுமணி அளவிலும் தினசரி இரு முறை அம்முதியவர் அந் நாயை உலாவ இட்டுச் செல்வார். எட்டாண்டுகளாக அவர்களது அந்நிகழ்ச்சி நிரல் மாறவே இல்லை. லியோன் சாலை நெடுகிலும் அம்முதியவர் தடுமாறும் வகையில் அந்த நாய் அவரை இழுத்துச் செல்வதைப் பார்க்கலாம். அப்போதெல்லாம் அவர் அதை அடித் துத் திட்டுவார். அது பயந்து, போய், தரையோடு ஒட்டிக்கொள்ளும். இனி அவர் தான் அதை இழுத்துச் செல்ல வேண்டும். சற்று நேரத்தில் அந்த நாய் அச் சம்பவத்தை மறந்துவிட்டு மறுபடியும் அவரை இழுத் துச் செல்ல, அவர் மறுபடியும் அதை அடித்துத் திட்டுவார். இறுதியில் இருவரும் நடைபாதையில் அப்படியே நின்று ஒருவரையருவர் பார்த்த வண் ணம் இருப்பார்கள்-நாய் பயத்துடனும், அவர் வெறுப்புடனும். இது ஒரு அன்றாட நிகழ்ச்சி. அந்த நாய் சிறு நீர் கழிக்க விரும்பும்போது, அவர் பொறுத் திராமல் அதை இழுத்துச் செல்வார். அது சிறு சிறு சொட்டுகளாக ஒரு நீண்ட கோடு இழுத்தவாறே செல்லும். எப்போதாவது அது அறையிலேயே சிறு நீர் கழித்துவிட்டு அவரிடம் உதை வாங்கும்.’
நகுலனே தயாரித்தப் புத்தகம் நாய்கள் என்ற நாவல். அவருடைய பெயரிலியே வெளியிட்டுள்ளார். அதை புக் வென்சர் என்ற வாசகர் வட்ட அமைப்பில் விற்பனை உரிமை கொடுத்துள்ளார். 102 பக்கங்கள் கொண்ட நாவல் இது. அதில் அவர் எழுதியது சில வார்த்தைகள் என்ற பகுதி.
இகர் முதல்விக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். அதில் அவர் எழுதியதைப் படித்தப்போது எனக்கு தாங்க முடியாத சிரிப்பு வந்து விட்டது.
நீ யாரோ
நான் யாரோ
யார் யாரோ
யார் இவரோ
– ” நகுலன் ” –
இதோ அவர் எழுதிய சில வார்த்தைகள்.
சில வார்த்தைகள்
இது நான் எழுதிய நாவல்களில் ஆறாவது நாவல். இந்த ஆறு நாவல்களில் நிழல்கள்”, (நினைவுப் பாதை” இவ்விரண்டும் புஸ்தக — ஸ்தாபனங்கள் வெளி யிட்டவை. (ரோகிகள்” (குருஷேத்ரம்” என்ற தொகுப்பில் வந்தது. இரண்டு நாவல்கள் இன்னும் கையெழுத்துப் பிரதிகளாகவே இருக்கின்றன. இதைப் பற்றி நான் எவ்வித மனக்கிலேசமும் அடையவில்லை. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் எனது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று – ஒரு எழுத்தாளனுக்கு மூலதனம் அவன் எழுத்துத்தான். இது இப்பொழுது பிரசுரமாகிறது.
இந்த நாவல் எழுதுவதற்கும் பிரசுரமாவதற்கும் காரணம் எனது சமீப காலத்தியச் சில அனுபவங்கள். இப்பொழுது சில காலமாகப் பசுவய்யா” எழுதிய கவிதைகள் என்னைக் கவர்ந்தன. அவர் எழுதிய “நான் கண்ட நாய்கள்” என்ற கவிதைதான் இதற்கு மூல வித்து. நாவலில் முதல் அதிகாரத்தில் இந்தக் கவிதையை நான் வேறு வகையில் அப்படியே எழுதியிருக்கிறேன். இதைத் தொடர்ந்து இதே கால கட்டத்தில் ந. முத்துசாமி ‘பசுவய்யா’ எழுதிய “ஆந்தைகள்” என்ற கவிதையில் “ஆந்தை” என்று” குறிப்பிடப்பட்டவன் நான்தான் என்றும் (ஞானரதம் – அக்டோபர்-73. ரசமட்டம் பக்கம் 15) இதைத் தொடர்ந்து சுந்தர ராமசாமி (பசுவய்யா) இது இப்படி யில்லை என்றும், எழுத்தாளர்களைக் கதாபாத்திரங் களாகத் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை வெளியிட “ பாத்திரப் படைப்பிற்கான நோக்கங்கள் என்ற பாதுகாப்பில் முதல் முதலாக நாவல் எழுதினவன் நான்தான் (ஞானரதம்-நவம்பர் 1973-ரசமட்டம்பக்கம் 21) என்றும் குறிப்பிட்டிருந்தார். ஏறக்குறைய இதே சமயத்தில் ஸிந்துஜா’ என் பெயரைக் குறிப்பிடாமல் என் கவிதை ஒன்றை வைத்துக்கொண்டு (தனக்கே” (?) தெரியாமல் கவிதை எழுதும் கவிஞர் களில் நான் ஒருவன் (சதங்கை -செப்டம்பர் (73’அலுப்புத் தரும் நிழல் யுத்தம்-பக்கம் 24) என்று குறிப்பிட்டிருந்தார். இதே ப த் தி ரி கை யி ல் திரு. வெங்கடசாமிநாதன் என்னுடைய எந்த எழுத்தும் அவருக்கு ஆண்டர்ஸனின் சக்கரவர்த்தியின் ஆடை யைத்தான் (சதங்கை -டிசம்பர் ’73. பக்கம் 3) நினைவுறுத்துகிறது என்று எழுதியிருந்தார்.
இதையெல்லாம் நான் இங்கு எழுதுவது ஒரு விவாதத்தைக் கிளப்புவதற்கு அன்று. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் நான் அனுபவத்தை எப்படிக் கையாள்கிறேன் என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கே.. (பசுவய்யா” எழுதிய “நான் கண்ட நாய்களில் வரும் நாய்களில் நிச்சயமாகப் பேசுவய்யா” என்னை ஒரு நாயாகக் குறிப்பிடவில்லை! ஆனால் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. ஒரு மனிதனை ஒரு நாய் என்று குறிப்பிட்டால் அதை நாம் ஏன் ஒரு சம்பிரதாய வசை மொழியாகக் கொள்ள வேண்டும் என்று எனக்குத்.தோன்றிற்று! நாய் என்பதை ஒரு தத்துவ-க்-குறி யீடாக அமைத்துக் கொண்டு அதைத் தொடர்ந்து விசாரணை செய்வதே இந்த நாவலின் ஒரு முக்கிய நோக்கம். இதைப் போலவே ஒரு கதை ஒரு விமர்சகரிடம் (சக்கரவர்த்தியின் ஆடை” என்ற பிரமையை எழுப்புமானால் எனக்கு அதுவும் ஒரு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகத் தோன்றியதால் அதையும் ஒரு சரடாக இதில் அமைத்தேன். பிறகு நண்பர் எஸிந்துஜா” குறிப்பிட்டதையும் ஏற்றுக் கொண்டு அதிலும் ஒரு இலக்கியக் கொள்கை அமைந் திருப்பதையும் சுட்டிக் காட்டுவதும் என் நோக்கம்! பிறகு இந் நாவலில் வரும் ஒரு பாத்திரத்திற்கு ஜான் துரைசாமி என்ற பெயரை வேண்டுமென்றே வைத்திருக் கிறேன். என்னைப் பற்றிய வரை என் பெயர் (எழுத்தாளன் அல்லாத சமயத்தில்) துரைசாமி என்றாலும் ஜான் துரைசாமி வேறு; டி. கே. துரைசாமி வேறு! இந்தப் புதுக் கவிதை சகாப்தத்தில் அதிக மாகச் சர்ச்சைக்குட்பட்டவர் அமரகவி. சி. சுப்ரமண்ய பாரதி. அவர் இந்த நாவலில் ஒரு பாத்திரமாக வந்து சேர்ந்தது அகஸ்மாத்தாக வந்த விளைவு என்று மாத்திரம்.
கடைசியாக ஒரு வார்த்தை-நான் சந்தித்த மனிதர்கள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற அனுபவங்கள் இவைகள் தான் என் படைப்புக்கு உதவும் ஆதாரத் தகவல்கள்; ஆனால் எனது எந்த நாவலும் இந்தத் தகவல்களின் நகல்கள்” (கலையே நகல் என்பதையும் இங்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்!) அல்ல. அவைகளை அப்படிக் கருதினால் நான் அதற்கு ஜவாப்தாரியில்லை. இந்த நாவல் உருவாவதற்குரிய சூழ்நிலையைச் சிருஷ்டி செய்த மேற்கூறிய என் நண்பர்களுக்கு என் நன்றி. இந்த நாவலைப் படித்துவிட்டு அதைப் பிரசுரிப்பதற்கு என்னைத் தூண்டி உற்சாகமளித்த நண்பர்கள் சர்வ ஸ்ரீ ஷண்முக சுப்பையா, ஸ்ரீ நீல. பத்மனாபன் ஆகியவருக்கும், இதை அச்சுப்பிழையின்றி தங்களுக்கே உரிய முறையில் சிறப்பாக வெளியிட்டு இதை. விநியோகிக்க முன் வந்த வாசகர் வட்டத்திற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
2007-ஆம் ஆண்டு தீராநதியில் அசோகமித்திரன் பேட்டி வந்துள்ளது. அதேபோல் ஞானக்கூத்தன். இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் அவர்கள் இருவரும் இல்லை. இதை நினைக்கும்போது சங்கடமாக இருக்கிறது.
இந்தப் பேட்டியை எடுத்தவர் கடற்கரை. இதை இப்போதுதான் எடுத்துப் படிக்கிறேன். பொதுவாக நான் எல்லாப் பத்திரிகைகளையும் எடுத்துப் பவுண்டு செய்துவிடுவேன்.
பின் மெதுவாக எடுத்துப் படிப்பேன். எனக்கு அவ்வப்போது எடுத்துப் படிக்கும் கெட்ட பழக்கமில்லை. சிலசமயம் என் கண்ணில் படாமலயே பவுண்டு வால்யூம் போய்விடும். இப்படி ஒரு தவற்றைச் செய்கிறேன். உடனே உடனே எடுத்துப் படித்துவிடவேண்டும்.
நான் ஒன்றும் அப்படிக் குடி மூழ்கிப் போகிற காரியமெல்லாம் செய்யவில்லை. படித்திருக்கலாம். அப்போது வங்கியில் பணி புரிந்துகொண்டிருந்தேன். பந்த நல்லூரில். சனிக்கிழமைப் போய் ஞாயிற்றுக்கிழமை திரும்புவேன். கவனமெல்லாம் பயணத்திலேயே இருக்கும். ஆனால் படித்திருக்கலாம்.
இதில் இரண்டு மூன்று தீராநதி இதழ்களை பைன்ட் செய்யவில்லை. எப்படித் தொலைந்தது என்று தெரியவில்லை?
இந்தப் பேட்டி எடுக்கும்போது அசோகமித்திரன் தண்டீஸ்வர் நகரிலிருந்தார். அசோகமித்திரன் பேட்டி என்றால் நகைச்சுவை உணர்வோடு சொல்லிக்கொண்டு போவார். இந்த உரையாடலில் ஒரு இடத்தில் என்ன யோசிக்க வைத்தது.
அவர் சொன்னதைக் கேளுங்கள் :
‘அமுதசுரபியில் இப்ப ஒரு கதை வந்தது. அதுல கிழவர் ஒருத்தர் இலந்த பழம் விற்பார். இலந்த பழம் விற்குறவருன்னா நாம் வந்து அவரை பரம ஏழைன்னு நெனைப்போம். அதெல்லாம் இல்ல. பெரிய ஒரு பங்களாவுக்கே அவர்தான் ஓனர்னு கதைபோகும். நல்ல கதை. ஆனா யாருமே அதப்பத்தி சொல்லல. அந்தப் பத்திரிகை ஆசிரியரே கூட சொல்லல…’
அது என்ன கதை என்று தெரியவில்லை. இப்போது எடுத்துப் படிக்கலாமென்றால் கதைத் தெரியவில்லை. பெரும்பாலோர் பத்திரிகையில் வருகிற கதைகளைப் படிப்பதில்லை. இது என் குற்றச்சாட்டு. அசோகமித்திரன் அதை வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வளவுதான்.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட தயாரித்த 109-வது இதழை இங்கே முடித்துவிட்டேன். இன்னும் கொஞ்ச நாளைக்கு எல்லோருக்கும் பத்திரிகை அனுப்ப வேண்டும். இதோ ஆரம்பித்து விட்டேன். கிட்டத்தட்ட 10 நாட்களுக்குள் அனுப்பி விடுவேன் என்று நினைக்கிறேன்.
விருட்சம் தனி இதழ் ரூ. 20 தான். ஆண்டுச் சந்தா ரூ.80 தான். ஒரு இதழின் விலை ஓட்டல் சரவணபவனில் காப்பி குடிக்கிற விலைதான்.
வழக்கம்போல் இந்த இதழில் பங்குக்கொண்ட படைப்பாளிகளின் லிஸ்ட் தர விரும்புகிறேன். ஒரு அரிசோனன் என்பவர் அமெரிக்கா வாழும் தமிழர். குடியுரிமைப் பெற்றவர்.
அவர் ஒரு கதை எழுதியிருக்கிறார்.
1. ஜெயராமம் – சிறுகதை – ஸிந்துஜா
2. தகுதி யாருக்கு? – சிறுகதை – ஒரு அரிசோன்
3. துளிம நிழல் – சிறுகதை – பானுமதி ந
4. சொல்மோகச் சம்போகம் – கவிதை – நந்தாகுமாரன்
5. பிரபு மயிலாடுதுறை கவிதைகள்
6. எது பிரதானம் – சிறுகதை – ம மீனாட்சி சுந்தரம்
7. டிசோசாவின் காதலி – சிறுகதை – பிரேமா பிரபா
8. பிரதீபன் கவிதை – கவிதை
9. மேதகு அதிகாரி – கவிதை . வீட்டு விருந்தாளி – மொழிபெயர்ப்பு கதை
11. தருணங்களைத் தவற விட்டவர்கள் – சோ சுப்புராஜ்
12. குங்குமம் – சிறுகதை – ஜெ பாஸ்கரன்
13. வெயிலாய் அலைகிறேன் – கவிதை – வஸந்த தீபன்
14. அழகியசிங்கர் கவிதைகள்
15. காளியாகுடி காப்பியும் பன்னீர் புகையிலையும்
16. Colorless Tsukuru Tszaki and his years of Pilgrimage –
சம்மதம் என்ற என் சிறுகதையை தெகில் பிரசுரமாகி உள்ளது. மொழி புரியாவிட்டாலும் தெலுங்கில் என் கதை வருகிறதென்பது மகிழ்ச்சியான விஷயம். ஒரு சமயம பஞ்சாப் மொழியில் என் கவிதைகள் சில மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஹிந்தியில் கதையும் கவிதையும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
தெலுங்கு மொழியில் வருவதற்குக் காரணமான கௌரி கிருபானந்தனுக்கு நன்றி பல.
நான் அவசரமாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் மூன்று புத்தகங்களை. கிடைத்துவிடும் என்று நம்புகிறேன். ஆனால் இது குறித்து எழுதாமல் இருக்க முடியாது.
இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் இந்தப் புத்தகத்தை சந்தியா பதிப்பகத்தின் உரிமையாளர் கொடுத்தார். அன்றிலிருந்து இதை எடுத்துப் படித்துக்கொண்டு வருகிறேன். நான் விட்டு விட்டுத்தான் படித்து வருகிறேன். முழுவதும் படிக்க வேண்டுமென்பதில்லை.
பொதுவாகக் கடிதங்கள் என்றாலே அலட்சியப்படுத்துவார்கள். பெரும்பாலோர் கடிதங்களைச் சேகரித்து வைப்பது கிடையாது. அலட்சியம் என்றால் அவ்வளவு அலட்சியம் செய்வார்கள்.
வண்ணதாசன் கடிதங்கள் எல்லாம் சேகரித்து வைத்துள்ளார்கள். அதிலும் அவருடைய நண்பர்கள் எல்லாவற்றையும். முக்கியமான கடிதங்கள் ஒன்றிரண்டு போனாலும் கடிதங்களைச் சேகரித்து வைத்துள்ளார்கள். எனக்கு ஆச்சரியம் இந்தத் தொகுப்பு.
கடிதங்களாகவே 200 பக்கங்களுக்கு மேல். ஆச்சரியமாக இருக்கிறது. நவீன விருட்சத்திற்குக் கூட கடிதம் எழுதியிருக்கிறார். தேடிப் பார்க்கவேண்டும். இப்படி விட்டுப்போன கடிதங்களும் இருக்கும்.
நானும் கடிதங்கள் மீது மையல் கொண்டிருக்கிறேன். கடிதம் புத்தகம் போட உள்ளேன். இதோ நான் எழுதிய கடிதங்கள் யாரிடமும் கிடைக்கப் போவதில்லை. ஏனென்றால் யாரும் நண்பர்கள் எக் கடிதங்களைப் பத்திரப்படுத்தப் போவதில்லை. அதனால் ஒன்று செய்தேன். கடிதங்களைப் பதிவு செய்து அனுப்புவேன். யாருக்கு அனுப்புகிறேன் என்று எனக்குத் தெரியும். இப்படியே 60 பக்கங்களுக்கு மேல் சேகரித்து வைத்திருக்கிறேன்.
வண்ணதாசனுக்கு நண்பர்கள் சேகரித்து வைத்திருக்கிறார்கள். ஒரு புதுமைப்பித்தனுக்கு குடும்பத்தார் சேகரித்து வைத்திருக்கிறாரகள். (இந்தப் புத்தகத்தைத்தான் தேடிக் கெண்டிருக்கிறேன்.) ரசிகமணி கடிதங்களை மகஜன் அவர்கள் தொகுத்து வைத்து புத்தகமாக வைத்துள்ளார்கள். கடித இலக்கியம் என்ற பெயரில் சாகித்தியா அக்காதெமி ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளது.
ஏன் பிரமிளுக்குக் கூட இராஜமார்த்தாண்டன் தொகுத்துவைத்திருக்கிறார். கல்கிக்குக் கூட ஆனந்தி என்கிற அவர் பெண் சேகரித்து வைத்திருக்கிறார்.
உவே சாமிநாதையர் அவர்களின் கடித் கருவூலம் என்ற தொகுதி 1 வாங்கினேன். (1877 – 1900) வரை அவருக்கு வந்த கடிதங்கள்தான். அவர் என்ன எழுதினார் என்பது தெரியவில்லை. ஆ இரா வெங்கடாசலபதி தொகுத்துள்ளார்.
அதேபோல் லட்டர்ஸ் என்ற புத்தகம். ரமண மகரிஷியைப் பற்றி புத்தகம். ஆசிரமத்தில் தங்கியிருந்த சூரி நாகம்மாள் தெலுங்கில் எழுதிய கடிதங்கள். அவர் சகோதரர் சாஸ்திரிக்கு எழுதியது. ஆசிரமத்தைப் பற்றி.
காப்காவிற்கு லட்டர்ஸ் டு த வெலிஸி என்ற கடிதங்கள் பிரபலமானவை.
நான் ஒவ்வொன்றிலும் ஒரு சாம்பிள் கடிதம் கொடுக்க விரும்புகிறேன்.
26.04.1985 ல் பிரமிள் இராஜமார்த்தாண்டனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அன்புள்ள ராஜமார்த்தாண்டன்,
இரண்டு கடிதங்கள் எழுதினேன். பதில் எழுதவும். சுவை இரண்டாவது இதழில் சி சு செ என்மேல் கை வைத்திருக்கிறார்.
அவருக்கு எனது கவிதைகள் குறித்து சாதாரண விபரங்கள் கூடப் புரியவில்லை.
– பிரமிள்ஜ் ஜீவராமுவ்
டி.கே.சிதம்பரநாத முதலியார்
தென்காசி
27.04.1979
அருமைப் புதல்வி வேலம்மாளுக்கு,
இன்று காலையில் எழுதி அனுப்பிய கடிதம் கிடைத்திருக்கும்.
உலகம் மண்ணாய் மக்காய் இருக்கிறது. பூகம்பம் சிலவேளை வந்து அதைக் கொஞ்சம் ஆட்டி விட்டுப் போகிறது. ஆனாரல் மனப்பாலே குடித்துக்கொண்டிருக்கும் üüகல்வி கற்றவர்களைýý கொஞ்சம் ஆட்டிவிட்டால் நன்றாய் இருக்கும்.
டி கே சிதம்பரநாதன்
கிழ்ப்பாக்கம் 18.05.1949
அநேக நமஸ்காரம்,
கலியாண வைபம் எல்லாம் கனவு மாதிரி தோன்றுகிறது. தாங்கள் ஊருக்குப் போனபிறகு வீடு வாகல் எல்லாம் வெறிக்சோடி இருக்கிறது.
இங்ஙனம்
ரா கிருஷ்ணமூர்த்தி
அநேக ஆசிர்வாதம்,
நீ அனுப்பிய கார்டு வரப்பெற்று எல்லாந் தெரிந்துகொண்டேன். வடிவேலுக்குப் பணங்கொடுத்தாகி விட்டது. வைத்தியர் தஞ்சாவூருக்குப் போயிருக்கிறார். மருந்து வர நான்கு தினம் செல்லும். சிதம்பரத்திற்குப் பத்துப்பாட்டு புத்தகம் அனுப்பிக் கடிதம் எழுதியிருக்கிறான்.
வேங்கட சுப்பன்
(உ வே சாமிநாதய்யரின் தந்தை எழுதிய கடிதம்)
அன்புமிக்க வல்லிக்கண்ணன், 15,12.1990
வணக்கம்
தங்கள் 71ம் பிறந்த நாள் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிற üமுகம்ý கிடைத்தது. உங்களை, உங்களின் ஒளிக்கீற்றை இப்படி எங்கேனும் எவரேனும் உணர்ந்து போற்றுகிறார்கள் என்பது மகிழ்வு தருவது மலைச் சுனை போலவும் வனச்சிற்றோடை போலவும் எங்கோ, யாருக்காகவோ என்ற நிச்சிந்தையில் அழுக்கற்றுக் காலம் கழிந்து விடுமாகில் எனக்கும் கூட அது உவப்பானது தான்.
கல்யாணி சி
தூத்துக்குடி
24.05.2018 (வியாழன்)
அன்புள்ள வண்ணதாசனுக்கு,
வணக்கம்.
தங்கள் கடிதம் கண்டேன். பதில் எழுத இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டேன். மன்னிக்கவும். என்னை சந்திரமௌலி என்று குறிப்பிடுவதை விட மௌலி என்று அழைப்பது இன்னும் பிடிக்கும். நான் நவீன விருட்சம் 105வது இதழை எல்லோருக்கும் அனுப்ப ஒரு பத்து நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டேன். அதுதான் தாமதம் உங்களுக்குப் பதில் எழுத.
ரொம்ப ஆண்டுகளுக்கு முன்னால் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களை விஜயா பதிப்பகத்தில் சந்தித்தேன். வேலாயுதம் அவர்கள்தான் முஹம்மது மீரானை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
மீரான் வியாபாரம் செய்பவர். அவருடைய புத்தகத்தை அவரே ஜலீலா பப்ளிஷிங் ஹவுஸ் என்ற பெயரில் பதிப்பகம் ஆரம்பித்து புத்தகத்தை விற்றுக்கொண்டிருந்தார். அவர் புத்தகங்களை வெற்றிகரமாக விற்றவர். இது புதிய தொழில். அவர் ஏற்கனவே மேற்கொண்ட வியாபாரம் இல்லை இது.
அன்று அவருடைய புத்தகங்களை வெற்றிகரமாக விற்றதைப் பற்றி சொன்னதை இன்னும் கூட என்னால் மறக்க முடியாது. நான் ஒரு கடலோர கிராமத்தின் கதை என்ற நாவலைத்தான் படித்திருக்கிறேன். கூனன் தோபபு, துறைமுகம் நூலகள் என்னிடம் உள்ளன. இனிமேல்தான் எடுத்துப் படிக்க வேண்டும்.
ஒரு எழுத்தாளரைப்பற்றிய ஞாபகம் அவர் மறைந்த பிறகுதான் நமக்கு ஏற்படுகிறது. மீரானுக்கு அளிக்கும் அஞ்சலி அவர் புத்தகங்களை எடுத்து வாசிக்கும்போதுதான் நிறைவேறும் என்று தோன்றுகிறது. இதோ வாசிக்கிறேன்..
நேற்று காலை பத்து மணி சுமாருக்கு ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தி என்னை திடுக்கிட வைத்தது. என் தூரத்து உறவினரின் மனைவி இறந்த செய்திதான் அது. வயது அதிகமாகவில்லை. ஆனால் அந்த பெண்மணி இறந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது. பத்தாவது நாளுக்கு வரும்படி அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சின்ன வயதில் ஒரு பெண் மரணம் அடைவதா?
இந்தச் செய்தியை அனுப்பியவருக்கு உடனே போன் செய்தேன். அப்போது அவர் சொன்ன தகவல் என்னைத் திடுக்கிட வைத்தது.
அந்தச் செய்தியை அனுப்பியவரின் சகோதரர் ராஜ கீழ்பாக்கத்தில் குடியிருக்கிறவர். அவர் விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
அவர், அவர் மனைவி, அவர்களுடைய பேரன் மூவரும் ஒரு டூ வீலரில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இடத்திற்கு திரும்பும்போது எதிரில் வேகமாக வந்த ஒரு ஸ்போர்ட்ஸ் டூ வீலர் இவர்கள் மீது மோதியது. இதில் அந்த இடத்திலேயே அவர் மனைவி இறந்து விட்டார். இவருக்கு தலையில் பலத்த காயம். அவர்களுடைய பேரனுக்கு காலில் எலும்பு முறிவு. ஸ்போர்ட்ஸ் டூ வீலரில் வந்தவனுக்கு முதுகில் எலும்பு முறிவு. இந்தச் செய்தியைக் கேட்டவுடன் என்னடா இது இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியைத் தருகிறாரே என்ற வருத்தம் அதிகமாக ஏற்பட்டு விட்டது.
அடிக்கடி டூவீலரில் பயணம் செய்பவன் நான். இந்தச் செய்தியைக் கேட்டவுடன், டூ வீலரை ஓட்டுவதைக் குறித்து பல சந்தேகங்கள் வர ஆரம்பித்து விட்டன. ஒரு டூ வீலர் இன்னொரு டூ வீலர் மீது மோதி உயிரையே பறிக்குமா என்பதில் ஏகப்பட்ட சந்தேகங்கள் ஏற்பட ஆரம்பித்து விட்டன.
நான் அடிக்கடி செல்லும் ஆர்யாகவுடர் தெருவில் டூவீலரை ஓட்டிக்கொண்டு போகும்போது இது மாதிரியான விபத்துக்கள் நடப்பதற்கு எல்லாவித நியாயமும் இருக்குமென்று தோன்றும். அவ்வளவு மோசமான தெரு. தினமும் 10 முறையாவது அந்தத் தெருவில் டூ வீலரில் சென்று கொண்டிருப்பேன். பின்னால் மனைவியையும் உட்கார வைத்துக்கொண்டு.
இறந்து போனவருக்கு ஐம்பது வயதுதான் இருக்கும். அவர் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார் இதுமாதிரியான மரணம் ஏற்படக்கூடுமென்று.
நான் பொதுவாக செய்தித் தாள்களை வாங்குவதில்லை. என்ன காரணம் என்றால் செய்தித்தாள்கள் முழுவதும் மரணம் பற்றிய தகவல்கள்தான் அதிகம். சிலர் கொலை செய்யப்பட்டு விடுவார்கள், சிலர் தற்கொலை செய்து கொண்டு விடுவார்கள், சிலர் விபத்தில் சிக்கி இறந்து விடுவார்கள். இதைத்தான் செய்தித்தாள்கள் தெரிவித்துக்கொண்டிருக்கும்.
என்னுடன் நடைபயிலும் நண்பர் ஒருவர் இப்போதெல்லாம் கொலை செய்யப்படுவது அதிகப்படுகிறது என்று தெரிவித்தார். அதைக் கேட்டவுடன் மூட் ஒரு மாதிரியாகப் போய்விட்டது.
இந்தத் தருணத்தில் நகுலன் கவிதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
இருப்பதற்கென்றுதான் வருகிறோம்
இல்லாமல் போய்விடுகிறோம்.
இறந்து போனவரின் ஆத்மா சாந்தியடைய இதயப் பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
100 கவிஞர்களின் 100 கவிதைகள் கொண்ட தொகுப்பு மனதுக்குப் பிடித்தக கவிதைகள் தொகுதி 1. இதே இரண்டாவது தொகுதியையும் ஆரம்பித்தாகிவிட்டது.
முதல் தொகுதியில் திசிசடை கவிதையைத் தேர்ந்தெடுக்கும்போது ஒரு சிறிய தவறு நடந்துவிட்டது. திரிசடை என்ற எழுத்தாளர் நகுலனின் சகோதரி. அவருடைய கவிதைகள் முழுவதையும் கோபால்சாமி என்பவர் வெண்ணிலா என்ற புனைபெயரில் தேர்ந்தெடுத்துள்ளார். அப்படி தேர்ந்தெடுக்கம்போது தவறுதலாக விருட்சம் இதழில் வெளிவ்ந்த பசுவய்யாவின் நேற்றைய கனவு என்ற கவிதையை திரிசடை கவிதைகளுடன் சேர்த்து விட்டார். இந்தத் தொகுதி தொகுக்கும்போது திரிசடை உயிரோடு இருநதிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காது. திரிசடையின் கணவர் சுவாமிநாதன் மனைவியின் நினைவாக இந்தத் தொகுப்பை கொண்டு வந்துள்ளார்.
மனதுக்கு பிடித்த கவிதைத் தொகுதி 1 என்ற கவிதைத் தொகுதி மிகக் குறைவான பிரதிகளே அச்சிடப்படுகின்றன. அதனால் இந்தத் தவறு நீக்கப்பட்டுள்ளது. இனிவரும் தொகுதியில் திரசடையின் உண்மையான கவிதை மட்டும் நீடிக்கும். இதோ நான் தேர்ந்தெடுத்த திரிசிடை கவிதை.
சிலந்தி
சிலந்தி ஒன்றைக் கண்டேன் மேலே சுவரிலும் இல்லை கிழே தரையிலும் இல்லை சுவாமி அறையில் வெள்ளித் தாம்பாளத்தில் வண்ணமிக்க இழைக் கோலமாம் இருதயக் கமலத்தில் வைத்திருக்கும் எரியும் வெள்ளி குத்துவிளக்கின் அருகில் கருகருவென்று வெள்ளைக் கோலத்தின் மேலே எட்டுக்கால்களோடு சுற்றிச்சுற்றி வரும் சிலந்தி.. காலை மாலை விளக்கு ஏற்றும் நேரமெல்லாம்.. அடியில் பிரதட்சிணம் செய்யும் இச் சிலந்தி உன் மாயையையும் காளஹஸ்திக் கோவிலையும் நினைத்துக்கொள்வேன்
இன்று விளக்கு வைக்கும் நேரம்
என் சிலந்தி
அசைவற்றுக் கிடந்ததைக் கண்டேன்.
உன் காலடிகளை நம்பி ஒரு சில நாட்கள்
வாழ்ந்த சிலந்திக்கு
நீ முக்தி யளித்ததாகவும் நினைத்தேன்
ஆனால் எனது உள்ளம்
அதன் ஓடி ஆடிய கால்களைத் திரும்பத்
திரும்ப நினைப்பதும் ஏனோ?