09.09.2019
அழகியசிங்கர்
நான் கடந்த சில தினங்களாகப் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். முழுதாக ஒரு நாவலோ அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகமோ என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் படிக்க முடிவதில்லை. நானே எனக்குள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு படிப்பதால் பல புத்தகங்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது.
தேவதச்சனின் மர்ம நபர் என்ற புத்தகத்தை இவ்வளவுநாளும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். நேற்று எடுத்துப் படித்துவிட்டேன். முழுவதும் இல்லாவிட்டாலும் ஓரளவாவது.
அதேபோல் புதுமைப்பித்தன் கதைகள் சிலவற்றைப் படித்தேன். அதில் ஒருநாள் கழிந்தது இன்னும் ஒரு முறை படிக்க வேண்டும். அதேபோல் தேவதச்சனின் மர்ம நபர் என்ற கவிதையைப் படிக்க வேண்டும்.
நான் இன்னொரு புத்தகத்தை எடுத்துப்படிக்கும்போது ஏற்கனவே படித்த புத்தகங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுகிறேன்.
இப்படி திட்டம்போட்டு படித்தால்தான் உண்டு. மேலும் ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனின் புத்தகத்தைப் படிக்கும்போது அவனே ஒரு வாசகனாக மாறி விடுகிறான். கநாசு ஒருபக்கம் புத்தகங்களைப் படித்துக்கொண்டும் இன்னொரு பக்கம் எழுதிக்கொண்டும் இருப்பார். புதுமைப்பித்தன் பற்றியும் மௌனியைப் பற்றியும் கநாசுதான் எழுதியிருப்பார். ஆனால் அவர்கள் இருவரும் கநாசுவைப் பற்றி எழுதவில்லை.
நான் எடுத்துக்கொண்டு படித்த புத்தகங்கள் இரண்டு. அதைப்பற்றி இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு புத்தகம் பறந்து திரியும் ஆடு என்ற சிறார் நாவல். எழுதியவர் எஸ் ராமகிருஷ்ணன். ராமகிருஷ்ணனைப் பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். அவர் மற்ற படைப்பாளிகளின் புத்தகங்கள் பற்றியும் அவருடைய வாசகர்களுக்குச் சொல்லி புத்தகங்களை வாங்க வைத்திருக்கிறார்.
சிறார்களுக்கு நாவல் எழுதுவது அவ்வளவு சுலபமில்லை. அவர்களுக்கு அறிவுரை கூறுவதுபோல கதை சொல்லவேண்டும். கதையும் படிக்கச் சுவாரசியமாக இருக்க வேண்டும்.
யக்கர் என்ற வயதானவர் பற்றி இந் நாவல். நாற்பது ஆடுகள் வைத்துக்கொண்டு மேய்த்துக் கொண்டிருப்பவர். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆடுகளும் அவரும்தான். யக்கர் ஆடுகளை மேய்க்கும் இடம் பூமியில் இல்லை. வானவெளியில். ஒவ்வொரு ஆட்டிற்கும் அவர் பெயர் வைத்திருக்கிறார். அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் ஆடுகள் திரும்பிப் பார்க்கும்.
இந்த நாவலை ஒரே மூச்சில் படித்து விடலாம். 40 ஆடுகளில் ஒரு ஆடு குருட்டு ஆடு. குட்டி ஆடு. எப்போதும் மேய்ந்து விட்டு பூமிக்குத் திரும்பி வரும்போது, டுவிங் என்ற குட்டி ஆடு மாத்திரம் திரும்பவில்லை. காணாமல் போய் விடுகிறது.
லிமா என்ற ஆட்டின் குட்டிதான் டுவிங். அது காணாமல் போய்விடுவதை யக்கரிடம் சொல்கிறது. அன்று இருட்டானதால் வானவெளிக்குச் செல்ல முடியாது. அடுத்த நாள்தான் போக முடியும்
டுவிங்கின் பயணம்தான் இந் நாவல். மேகம், வண்ணத்துப்பூச்சி, பாறை, சூரியகாந்திப் பூ என்று ஒவ்வொருவரைச் சந்திக்கிறது. அப்படி சந்தித்துப் பேசும்போது யக்கர் சொன்னார் என்று சந்திக்கின்றவர்களிடம் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறது. இறுதியில் யக்கர் ஆட்டுக்குட்டியைக் கண்டு பிடித்துவிடுகிறது.
அனுபவம் தானே ஒருவரை வளரவைக்கிறது. நீ இனிமேலும் நீ ஆட்டுக்குட்டி இல்லை. வளர்ந்த ஆடு என்கிறான் யக்கர். சிறார் நாவல்தான் இது. ஆனால் ஒவ்வொரு முறையும் அலுக்காமல் வாசிக்க முடியும் என்று தோன்றுகிறது. இந்த சிறார் நாவலைப் பொறுத்தவரை இராமகிருஷ்ணனின் கற்பனை வளம் அபாரமாக இருக்கிறது.
நான் படித்த இன்னொரு புத்தகம் துக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியுமா என்ற ஜே கிருஷ்ணமூர்த்தியின் புத்தகம். நான் ஒரு கிருஷ்ணமூர்த்தி பைத்தியம். என் லைப்பரரியில் டஜன் கணக்கில் கிருஷ்ணமூர்த்தி புத்தகங்கள் இருக்கின்றன. கீரீன்வேஸ் ரேடிற்கு செல்லும்போது வஸந்த விஹாரில் நுழைந்து கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து விடுவேன். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப் புத்தகம் ரூ.10தான்.
துக்கத்தை நான் ஏன் ஏற்றுக்கொள்ளúவ்டும்? என்று கேட்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இது மனதின் இன்னொரு விதமான மேலோட்டமான செயல்பாடே என்கிறார. இறுதியில் இப்படிக் குறிப்பிடுகிறார் நான் துக்கத்தைப் புரிந்து கொள்ளவிரும்புகிறேன் அது எதைக் குறிக்கிறது என்று காண விரும்புகிறேன். அதன் அழகை, அருவருப்பை அதன் அளவுகடந்த ஆற்றலை அறிந்துகொள்ள விரும்புகிறேன். அதை மாற்ற முடியாது என்கிறார். அதைப் புரிந்துகொள்ளவதன் மூலம்தான் முற்றாக அதிலிருந்து விலக முடியும். முற்றாக விடும்படும்போதுதான் பேரறிவு உருவாகும்.