துளி – 85- வீட்டில் காலியாக இருக்கின்றன நாற்காலிகள்

அழகியசிங்கர்

புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வரும் என்னுடைய 3வது புத்தகம். கடந்த ஓராண்டுக்கும் மேலாக குமுதம் தீராநதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.

ஐந்தாண்டுகளுக்கு முன் அம்ருதா  பத்திரிகையில் எதையாவது சொல்லட்டுமா என்ற தலைப்பில் கடைசிப் பக்கக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.  அக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகப் போன ஆண்டு எதையாவது சொல்லட்டுமா என்ற பெயரில் புத்தகம் கொண்டு வந்துள்ளேன்.

இத் தொகுப்பு தீராநதியில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.  தொடர்ந்து ஒரு பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் கட்டுரை எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  புதுசு புதுசாக கட்டுரைகள் எழுதப்பட வேண்டும்.  சொன்னதையே சொல்லக் கூடாது. இந்த ஆபத்து நம்மை அறியாமல் ஏற்பட்டு விடும்.

நான் சமாளித்துக்கொண்டு 15 மாதங்கள் கட்டுரைகள் எழுதினேன்.  ரா.கி டைம்ஸ் என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். ரா.கி ரங்கராஜன் அண்ணாநகர் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வாரம் வாரம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சமீபத்தில்தான் அதைப் படிக்க முடிந்ததால் அவர் எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிந்தது.  

இதில் பெரும்பாலான கட்டுரைகள் எல்லாம் படித்த புத்தகங்களைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் எழுதப்பட்டவை.  ஒருவர் இதை வாசிக்க ஆரம்பித்தால் விறு விறு என்று வாசித்து விடலாம்.

முடியாத யாத்திரையா முடிந்த யாத்திரையா என்ற கட்டுரை எழுதி அனுப்பியபோது ரொம்ப நாட்கள் அது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன்.  இது மாதிரி எழுதியது சரியா என்றுதான்.  அப்படி சில சந்தேகங்களும் வந்து விடும்.  எழுத்தாளர் நண்பர் காசியபனின் கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்திருந்தேன்.  அந்தப் புத்தகம் பெயர் முடியாத யாத்திரை.   அவர கவிதைத் தொகுப்பு இன்னும் விற்றுத் தீரவில்லை.  ஆனால் அவர் யாத்திரை என்னமோ முடிந்து விட்டது என்று எழுதியிருந்தேன். 

இன்னும் சில விஷயங்களையும் வேடிக்கையாக அந்தக் கட்டுரையில் சேர்த்திருந்தேன்.

திருவனந்தபுரத்தில் காசியபன், நகுலன், ஷண்முக சுப்பையா மூவரும் பலமுறை சந்தித்து கவிதைகள் குறித்துப் பேசியிருக்கிறார்கள்.

நகுலனுக்கு பதில் கூறவதாக கவிதையைக் குறித்து கவிதை எழுதி உள்ளார்.

சொல்நயமும் பொருள்நயமும்

நன்றாக வந்துவிட்டால்

சித்திரப் படிமங்கள்

சீராக வீழ்ந்துவிட்டால்

மெத்த நல்ல கவிதையென்று

முரசு அடிக்கின்றீர்…

முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதியை நான் டிசம்பர் 2012ல் கொண்டு வந்துள்ளேன்.  மொத்தம் 300 பிரதிகள்தான் அடித்தேன்.  இதே 2017 என்று இருந்தால் 32 பிரதிகள்தான் அடித்திருப்பேன்.  இந்த 300 பிரதிகள் கொஞ்சங்கூட என்னால் விற்க முடியவில்லை. இன்னும் இந்தப் பிரதிகள் என்னிடம் உள்ளன.  

என் வீட்டில் இப் புத்தகப் பிரதிகள் வீட்டின் ஒரு பகுதியை அடைத்துக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.  அதனால் கீழ்க்கண்டவாறு இப்புத்தகத்தை அப்புறப்படுத்துவது என்று முடிவு செய்துள்ளேன். 

1. பேப்பர் கடையில் எடைக்குப் போடுவது

2. விருட்சம் என்ற பத்திரிகை சந்தாதாரர்களுக்கு இலவசமாக பத்திரிகையுடன் அனுப்பி விடுவது

3. என் வீட்டுப் பக்கத்தில் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது.  அங்கு ஒரு முறை சுந்தர காண்டம் என்ற ராமாயணப் புத்தகத்தை வைத்திருந்தார்கள்.  கோயிலுக்கு வரும் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் அப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய் விடலாம். அதுமாதிரி காசியபனின் üமுடியாத யாத்திரைý புத்தகத்தையும் வைத்து விடலாம் என்று நினைக்கிறேன்

4. ஒவ்வொரு முறை வரும் புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்க வருபவரிடம் இலவசமாகக் கொடுத்து விடலாம்

5. புத்தகம் விலை ரூ.60.  புத்தகத்திற்காக ரூ. 10 அனுப்புங்கள் புத்தகம் அனுப்புகிறேன் என்று அனுப்பி விடலாம்.

காசியபனின் கவிதைத் தொகுதியான முடியாத யாத்திரை என்ற கவிதைத் தொகுதி தன் யாத்திரையைத் தொடங்காமல் இருக்கிறது.  ஆனால் காசியபன் என்ற மகத்தான எழுத்தாளரின் யாத்திரை இந்தப் பூமியில் முடிந்து விட்டது. 

                                                                                               20.08.2017

துளி – 84- மேற்கு மாம்பலத்தில் வீட்டில் சமையல் செய்ய வேண்டாம்.



அழகியசிங்கர்

நேற்று என் பேரன் பிறந்தநாள்.  மாம்பலத்தில் உள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்று அன்னதானம் செய்தேன்.  சரியாக 10.30 க்கு அன்னதானம் ஆரம்பமாகிவிடும்.  200 பேர்களுக்கு மேல் அன்னதானத்தைப் பெற்றுச் செல்வார்கள்.  ஒரு பொட்டலமதான்.  நேற்று வெத்தக் குழம்பு சாதம்.

அன்னதானம் செய்பவர்களுக்கு 2 பொட்டலங்கள் கிடைக்கும். நானும் மனைவியும் ஒரு பொட்டலத்தை எடுத்துச் சாப்பிட்டோம். சாப்பிட்ட பிறகும் இன்னும் ஒருவர் சாப்பிடும்படி மீந்தது.

அதனால்தான் சொல்கிறேன் மேற்கு மாம்பலத்தில் வசிப்பவர்கள் வீட்டில் சமையலே செய்யாமல் பொழுதைப் போக்கலாம். சாப்பாட்டிற்காக ஹோட்டலுக்குப் போய் செலவு செய்ய வேண்டாம். 

ஒரு நாளைக்குக்குறைவாக ரூ.30 மட்டும் செலவு செய்தால் போதும்.  காலையில் எழுந்தவுடன் வெங்கடேஸ்பரா போளி ஸ்டாலுக்குப் போய் ரூ.15க்கு காப்பி சாப்பிடலாம். பின் அனுமார் கோயிலுக்குப் போனால் பொங்கல் தானமாகக் கிடைக்கும்.  தானமாகக் கிடைக்கும் பொங்கல் ஒட்டலில் காசு கொடுத்து வாங்கும் பொங்கல் அளவை விட அதிகமாக இருக்கும்.

பத்துமணி சுமாருக்கு சாய்பாபா கோயிலுக்குப் போனால் ஒரு பொட்டலம் சாதம் தானமாகக் கிடைக்கும்.  தக்காளி சாதம், புளியஞ்சாதம், சாம்பார் சாதம் என்றெல்லாம் கிடைக்கும். ஒருவருக்கு அதிகம். இரவு நேரத்தில் கூட வைத்திருந்து சாப்பிடலாம்.

மாலை நேரத்தில் திரும்பவும் அனுமார் (மாம்பலத்தை ஒட்டி

அசோக்நகரில் உள்ளது) கோயிலுக்குச் சென்று தயிர் சாதம் வாங்கிக் கொள்ளலாம்.  திரும்பவும் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் ஒரு காப்பி ரூ.15 க்கு வாங்கிக் குடிக்கலாம்.  இரவு நேரத்தில் அனுமார் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும்.  இரவு நேரத்தில் நடை சாத்தும் சமயத்தில் பருப்பு சாதமும் கொடுப்பார்கள்.  எல்லாம் கடவுள் பிரசாதம். இலவசம்.

இப்படி பெரிய செலவு செய்யாமல் (ரூபாய் 30வரைதான் செலவு) வீட்டில் யாரும் சமைக்க இல்லாவிட்டால் ஒருநாள் பொழுதை நீங்கள் கழித்து விடலாம்.  அதனால்தான் மாம்பலத்தில் வீட்டில் யாரும் சமையல் செய்ய வேண்டாமென்கிறேன்.

துளி – 83- புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வந்த வாசிப்போம் வாசிப்போம்

அழகியசிங்கர்

மயிலாடுதுறையில் ஒரு நண்பர் புத்தகங்களைத் தொடர்ந்து வாசிக்கும் வழக்கத்தை திடீரென்று மேற் சொண்டிருந்தார்.  என்னிடமும் சொன்னார்.  முதலில் 50 நாட்களுக்குத் தொடர்ந்து புத்தகம் வாசியுங்கள்.  அவர் தூண்டுதல் பேரில் நானும் வாசிக்கத் தொடங்கினேன். 

அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது.  புத்தகங்கள் நம் கண் முன்னே இருக்கின்றன.  வாங்கி வைத்து விடுகிறோம்.  ஆனால் வாசிக்க முடியவில்லை.  ஏன்?  புத்தகம் வாங்கும் வழக்கம் மட்டும் குறையவே இல்லை.  உடனே ஒரு புத்தகத்தை எடுத்து வாசிப்பது என்று முடிவு செய்தேன்.  முதலில் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பது என்று திட்டம் போட்டேன்.

ஒரு மணி நேரம் படிக்க ஆரம்பித்தபோது மிகக் குறைவான பக்கங்களைத்தான் வாசிக்க முடிகிறது என்று கண்டு பிடித்தேன்.  முதலில் வாசிக்கும் நேரத்தை விட்டுவிட வேண்டும்.  புத்தகம் முடிக்க வேண்டுமென்பதுதான் முக்கியம் என்று பட்டது.

இரண்டாம் தேதி செப்டம்பர் மாதம் முதல் வாசிக்க ஆரம்பித்தேன்.  தினம் தினம் படிக்கிற புத்தகங்களைப் பற்றி எழுதுவது என்று தீர்மானித்தேன். கிட்டத்தட்ட 27 நாட்கள் தொடர்ச்சியாக வாசித்தேன்.  உடனே வாசித்த புத்தகங்களைப் பற்றியும் எழுத ஆரம்பித்தேன்.  100 பக்கங்கள் வந்து விட்டது.  

ஒரு புத்தகமாகக் கொண்டு வர வேண்டுமென்று தோன்றியது. அதுதான் üவாசிப்போம் வாசிப்போம்ý தொகுதி 1 என்ற புத்தகம். இது இன்னும் தொடருகிறது.  தொடரும்.

சமீபத்தில் பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் பேட்டி எடுத்தார்கள்.  5 புத்தகங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்று சொன்னார்.  புத்தகங்களை அதிகமாக வாசித்துக் கொண்டிருப்பதால் மிகச் சுலபமாக 5 புத்தகங்களைப் பற்றி சொல்ல முடிந்தது.  இது ஒரு நல்ல அனுபவம்.  

எனக்கு அபூர்வ திறமையை ஆண்டவன் அளித்திருக்கிறான். நான் படித்த புத்தகங்கள் எல்லாம் சில தினங்களில் என் ஞாபகத்தில் இருக்காது.  அதனால்தான் அவசரம் அவசரமாக நான் படித்த புத்தகங்களைப் பற்றி எழுதி விடுவேன்.  ஏற்கனவே நீங்களும் படிக்கலாம் என்ற தலைப்பில் இரண்டு பகுதிகள் கொண்டு வந்தேன். எல்லாம் புத்தகங்களைப் பற்றி.  அதேபோல் வாசிப்போம் வாசிப்போம்.  இது கொஞ்சம் தீவிரம்.  இதில் பெரிய புத்தகங்களை அதிகப் பக்கங்கள் கொண்ட புத்தகங்களை என்னால் உடனே வாசிக்க முடியவில்லை.  ஆனால் அதையும் முயற்சி செய்வது என்று முடிவு எடுத்துள்ளேன்.  அதனால் பா.ராகவனின் üயதிý என்ற நாவலை எடுத்து 806 பக்கங்கள் படித்து விட்டேன்.  இது பல நாட்கள் முயற்சி.  இது குறித்து கூடிய விரைவில் எழுதுவேன் என்று நினைக்கிறேன்.

இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சிறிய பகுதி. நகுலன் நாவல் இவர்கள் என்ற புத்தகத்தைப் படித்து நான் எழுதிய வரிகள்.

“இவர் நாவலில் அங்கங்கே பளிச் பளிச்சென்று வரிகள். ‘நான் யார்?’ என்றுகூட அனுமானிக்க முடியவில்லை.

நான், ராமநாதன், நல்லசிவன் பிள்ளை இவர்களைச் சந்தித்துப் பிரிகையில் ‘நேற்றிருந்த மனிதன் நான் இன்றில்லை’ என்ற உணர்வோடு திரும்பினேன் என்று எழுதுகிறார்.”   

வாசிப்போம் வாசிப்போம் என்ற புத்தகம் விலை ரூ.90.

துளி – 82- மருத்துவர் பாஸ்கரின் ‘கடைசி பக்கம்’ என்ற புத்தகம்

அழகியசிங்கர்

நேற்று மருத்துவர் பாஸ்கரனின் ‘கடைசி பக்கம்’ என்ற புத்தக வெளியீட்டு விழா.  எனக்குத் தெரிந்து நான் பல கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். புத்தக வெளியீட்டுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். இது மாதிரி கூட்டத்தை நான் பார்த்ததில்லை. எழுத்தாளரை மட்டுமல்ல பார்வையாளர்களையும் பரவசமடையச் செய்யும் நிகழ்ச்சி.  இந்தக் கூட்டத்தில் மாலன், கல்கி ஆசிரியர் ரமணன். சுந்தர்ராஜன், ரகுராமன் என்று எல்லோரும் கலந்து கொண்ட கூட்டம். 

 எல்லோரும் அவர் புத்தகத்திலுள்ள கட்டுரைகளைப் பாராட்டிப் பேசினார்கள்.  கிரிஜா ராகவன் கூட்டத்தை நடத்திச் சென்ற விதம் நன்றாக இருந்தது. கடைசி பக்கத்திற்கு உதாரணமாக எழுத்தாளர் சுஜாதாவின் பெயரைக் குறிப்பிட்டாலும், மருத்துவர் புத்தகத்திற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. யார் கடைசி பக்க கட்டுரைகளை எழுதினாலும் சுஜாதாவிற்கும் அதற்கும் சம்பந்தமிருக்கப் போவதில்லை. 

தான் எழுதுகிற புத்தகத்தை வெளியீட்டு கொண்டாடுகிற வழக்கம் மருத்துவர் பாஸ்கரிடம்தான் உண்டு.   அவர் மகிழ்ச்சியை அவர்கள் நண்பர்களிடம் வெளிப்படுத்துகிற அழகே தனி.  ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாட வேண்டுமென்று குறிப்பிடுவார் ஓஷோ. அது மருத்துவர் பாஸ்கரன் விஷயத்தில் உண்மை. இது எனக்கு எதிரான நிலை.  புத்தகத்தை வெளியிட்டு விட்டு கவலைப் படுகிற மனிதன் நான்.  இந்த முறை என்னுடைய ஐந்து புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறேன்.  பாஸ்கரன் மாதிரி கூட்டம் நடத்திக் கொண்டாடுகிற இன்னொருவர் நல்லி செட்டியார்.  அவர் பிறந்த தினம் போது உட்லேன்ட்ஸ் ஓட்டலில் நடத்தி அசத்துவார்.

ஒவ்வொரு புத்தகம் கொண்டு வரும்போது மருத்துவர் பாஸ்கரன் அதை அவர் நண்பர்களுடன்  சேர்ந்து கொண்டாடுகிறார். வழக்கம்போல் இந்த முறையும்.  எல்லோரையும் விருந்து உண்ண உபசரிப்பிலும் அவருக்கு இணை யாரும் கிடையாது.   

குவிகம் என்ற மின்னிதழில் வெளிவந்த கடைசி பக்கக் கட்டுரைகளைத் தொகுத்து அளித்திருக்கிறார்.  கடைசி பக்கத்தில் எழுதுகிற கட்டுரைகளை முகநூலிலும் வெளியிடுவார்.  சில சமயம் படிக்கும்போது கதைகளாக மாற்ற வேண்டியதைக் கட்டுரைகள் வடிவத்தில் கொடுத்திருக்கிறாரே என்று தோன்றும்.

பெரும்பாலும் அவர் கட்டுரைகளைப் பரவச நிலையில் எழுதுவார்.  மிகை உணர்ச்சி சற்று தூக்கலாகப் படும்.  அவர் அறியாமலேயே இதெல்லாம் வெளிப்பட்டு விடும். அப்படி வெளிப்பட்டால் குற்றமல்ல.  எழுத்தாளருக்கே உள்ள குணம் அது. ஆனால் அபாரமான ஞாபக சக்தியுடன் விபரங்களைக் கொண்டு வருவார்.  

விடா முயற்சியுடன் அவர் தொடர்ந்து எழுதி நெகிழ்ச்சியுடன் புத்தகத்தை வெளியிடுவதைப் பாராட்ட வேண்டும். இன்னும் அடுத்த புத்தகத்தை எப்போது வெளியிடப் போகிறாரென்று ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். 

துளி – 81-புத்தகக் காட்சிக்காகக் கொண்டு வந்த புத்தகங்கள் – 2

அழகியசிங்கர்

விருட்சம் வெளியீடாக நான் கொண்டு வந்த புத்தகம் துளிகள் – தொகுதி 1. 

18.08.201 லிருந்து 02.06.2019 வரை உள்ள 54 கட்டுரைகள் கொண்ட நூல் இது.  கட்டுரைகள் அளவு ரொம்ப குறைவாக இருக்கும்.  அரை பக்கம், கால் பக்கம், முக்கால் பக்கம் ஒரு பக்கம் என்று மிகக் குறைந்த அளவிலான கட்டுரைகள். 

வாழ்க்கையில் நடந்த நடக்கின்ற அன்றாட நிகழ்ச்சிகளின் கதம்ப மாலைதான் இத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள்.  ஒருவர் இதை எடுத்து வாசித்தாரென்றால் கீழே வைக்க முடியாது.  அந்த அளவிற்குச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.  மேலும் இப் புத்தகத்தில் எந்தப் பக்கத்தையும் புரட்டி வைத்து விடலாம்.  பின் இன்னொரு பக்கத்தை இன்னொரு நாள் எடுத்துப் படிக்கலாம்  இது ஒரு வகையான டைரி என்று குறிப்பிடலாம். 

கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

üதுளி : 20 – மறக்க முடியாத பிரபஞ்சன்

பெரும்பாலும் நான் பிரபஞ்சனை ஓட்டல் வாசலில் அல்லது பேப்பர் கடை வாசலில், அல்லது இலக்கியக் கூட்டங்களில் சந்திப்பது வழக்கம்.  அந்தத் தருணங்களில் இலக்கிய நண்பர்களைப் பற்றியும் புத்தகங்களைப் பற்றியும்  இருவரும் பேசுவோம்.  பிரபஞ்சன் சிறுகதைகளின் மீது காதல் கொண்டவர்.  புதுமைப்பித்தன் கதைகளை எப்படி ரசிப்பது என்பதைப் பற்றி  ஒவ்வொரு வாரமும் அவர் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்.  தொடர்ந்து வாசிப்பது எழுதுவதுதான் என்று அவர் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்து இருந்திருக்கிறார். 

பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவணபவன் ஓட்டலில் சந்திக்கும் போது அவர் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டு காட்சி அளிப்பார்.  பின் இருவரும் சேர்ந்து காப்பி குடிப்போம்.  அவரைப் பார்த்து நான் விருட்சம் இதழ் பிரதியைக் கொடுப்பேன்.  உடனே அதற்கான தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்வார்.  இதையெல்லாம் அவரிடம் எதிர்பார்க்காமல் கொடுத்தாலும் அவருடைய நல்ல பழக்கம் சிறு பத்திரிகைகளை மதிப்பது…

 (21.12.2018 அன்று எழுதியது)

இதை வாங்கி வாசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  இதன் விலை ரூ.90 தான்.                                                                           

108 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ.90.  தள்ளுபடி சலுகையாக ரூ.70க்குக் கிடைக்கும்.

துளி – 80 – 111வது விருட்சம் இதழ் -1


அழகியசிங்கர்

111வது இதழ் விருட்சம் வந்து விட்டது.  நவம்பர் மாதம் வர வேண்டியது.  டிசம்பர் மாதம் வரை போய்விட்டது.  ஆனால் கொண்டு வந்துவிட்டேன்.  இந்த இதழிலும் வழக்கம்போல் 5 கதைகள்.  சில கவிதைகள்.  கட்டுரைகள். பொதுவாக இதுமாதிரிôன இலக்கியப் பத்திரிகைகளைப் படிக்கும்போது மருந்துக்குக் கூட வாசிக்கும்போது சிரிப்பு வருவதில்லை.  ஏதோ அவதி என்று சொல்லமுடியாத அவதியாக இருக்கும்.

நான் சிரிப்பு வரவேண்டுமென்று சில கட்டுரைகளைச் சேர்த்திருக்கிறேன்.  சிறுகதைகள் அதிகப் பக்கம் போகாமல் பார்த்திருக்கிறேன். 

கடந்த இரு இதழ்களாக மொழிபெயர்ப்பு கதைகளைப் பிரசுரம் செய்திருக்கிறேன்.  இந்த இதழிலும் ஒரு மொழிபெயரப்பு கதையை வெளிப்படுத்தியிருக்கிறேன்.  எழுத்தரின் மரணம் என்ற அந்தோன் சேகவ் கதை.  அக் கதையை எழுதிய ஆண்டு 1883.  இன்னும் படிக்க வித்தியாசமாகவும் சிரிப்பு வரும்படி இருக்கிறது.  கடைசியில் கதையின் முடிவுதான் கொஞ்சம் யோசனை பண்ண வைக்கிறது.

இப்போதெல்லாம் வருகிற சிறுபத்திரிகையில் கடிதங்கள் யாரும் எழுதுவதில்லை.  1988ல் கொண்டு வரும்போது ஏகப்பட்ட கடிதங்கள் வந்திருக்கின்றன.  ஆனால் இப்போதெல்லாம் ஒரு சிறுபத்திரிகை ஒருவருக்குப் போய்ச் சேருகிறதா படிக்கிறார்களா என்பதே தெரியவில்லை.  இதை மாற்ற வேண்டுமென்று தோன்றியது.

மாற்றி இந்த இதழில் செய்திருக்கிறேன்.  என்ன என்பதை பிறகு சொல்கிறேன்.

விருட்சம் இதழை நீங்கள் கட்டாயம் ரூ.20 கொடுத்து வாங்க வேண்டும்.  ஆண்டுச் சந்தாவாக ரூ.80 கட்டவேண்டும்.  இது ஒரு வேண்டுகோள்தான்.

துளி – 76 – நாளை பங்களூர் செல்கிறேன்

அழகியசிங்கர்

நாளை காலையில் டபுள் டக்கரில் பங்களூர் செல்கிறேன்.  மூன்றாம் தேதி திரும்பி வந்துவிடுவேன்.   ஒன்றாம் தேதி என் பிறந்தநாள்.  பங்களூரில் இருப்பேன்.  ஒரு பெரிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகிறேன். படித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.  உறவினர் வீட்டு கிரஹப்பிரவேசத்திற்குப் போகிறேன். அது ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.  

பிளாசம்ஸ் என்ற புத்தகக் கடைக்குப் போகிறேன்.  புத்தகம் எதாவது வாங்குவேன். பங்களூரில் சில நண்பர்களைத்தான் சந்திக்க முடியுமென்று நினைக்கிறேன்.  அதுவும் திங்கட் கிழமை ஒருநாள்தான் பார்க்க முடியும்.  

போன முறை பங்களூர் போய் வாங்கிவந்த புத்தகங்களை இன்னும் படிக்கவில்லை.  இந்த முறை பங்களூரிலிருந்து திரும்பி வரும்போது வாங்கிக் கொண்டு வரும் புத்தகங்களை சிறிதளவாவது படிக்க வேண்டும்.  பராசக்தி அருள் புரியவேண்டும். 

அம்பையின் சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை



அழகியசிங்கர்

இன்றுதான் முடித்தேன். ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டேன்? இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் நானும் சில புத்தகங்களைக் கொண்டு வர வேண்டியிருந்தது.  நாவலை முடிக்க வேண்டியிருந்தது. படிப்பதில் கவனம் இல்லை.  ஆனால் ஒவ்வொரு சிறுகதையையும் ஒவ்வொரு நாளும் எடுத்து வாசித்துவிடுவேன்.  

நான் புத்தகக் காட்சி போது அம்பையின் எந்தப் புத்தகம் வந்தாலும் வாங்கி விடுவேன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் வாங்கியது ஒரு சிறுகதைத் தொகுப்பு  ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை.’

168 பக்கங்களில் 13கதைகள் கொண்ட தொகுப்பு.  உள்ளிருந்து புற உலகைப் பார்பதற்கான சன்னல் எனும் திறப்பு தொடர்ந்து தன் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகக் கருதுவதாக அம்பை குறிப்பிடுகிறார்.  அதேபோல் இவருக்குப் பயணம் செய்வதில் அலுப்பே ஏற்பட்டதில்லை போல் தோன்றுகிறது.  இத் தொகுப்பில் பயணம் 21, பயணம் 22, பயணம் 23 என்று பெயரிட்ட கதைகள் இருக்கின்றன.  

நான் முதலில் இத்தொகுப்பில்  ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை,’ என்ற சிறுகதையைத்தான் படித்தேன்.  அந்தக் கதையûப் படித்த தேதி 31.10.2019.  அதன் பின்  10.11.2019 முழுப் புத்தகத்தைûயும் படித்து முடித்தேன்.

33பக்கங்கள் கொண்ட இது சிறுகதை என்பதை விடக் குறுநாவல் என்று தோன்றுகிறது.  காது செவிடாக உள்ள ஒரு பெண்ணின் கதை.   எனக்கு என்னமோ உலகத் தரமான கதைகளில் இதைச் சேர்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.   இப் புத்தகத்தின் 62 பக்கத்தில் காது செவிடாக இருப்பவர்களின் அவதியைச் சொல்கிறார்: ‘செவிக்கருவி மூலம் ஒலிச்சொட்டுகள் விழும்.  அவை சூடானவை நெருப்பாய்ச் சுடுபவை.  ஒலி ஒரு சாட்டை.  வலியைத் தருவது.  அதுதான் ஒலியுடன் எங்கள் உறவு.  எங்கள் உலகில் வண்ணங்கள் உண்டு.  காட்சி உண்டு.  மண் சிவப்பு.  ரத்தச் சிவப்பு. அரக்குச் சிவப்பு.  குங்குமச் சிவப்பு.’

சிறு குறிப்பு ஒன்றை விட்டுச் சென்றிருந்தான் வசந்தன் என்று ஆரம்பமாகும் இந்தக் கதை.  மைதிலி – வசந்தன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள்.  அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. அப்போதுதான் ஆஸ்பத்திரியில் ஒரு அனாதை குழந்தை கிடைக்கிறது.

  அதற்கு தேன் மொழி என்ற பெயரை வைத்து குழந்தையை வீட்டிற்கு அழைத்துப் போகிறான்.  அந்தக் குழந்தைக்குக் காது கேட்காது.  காது கேட்காத ஒரு பெண் குழந்தையை வளர்க்கிற பாட்டை கதை விவரித்துக்கொண்டு போகிறது. 

காக்ளியர் அறுவைச் சிகிச்சையை ஏற்க மறுத்துவிடுகிறாள் தேன்மொழி.  வசந்தனுக்கு ஏமாற்றம்.  பிரிந்து விடுகிறான். கடைசிவரை அவனைத் தேடித் தேடிப் போகிறார்கள்.  வசந்தன் கிடைக்கவில்லை.  உண்மையில் காது கேட்காத பெண்ணை அவன் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. 

இறுதியில் கதை இப்படி முடிகிறது.  மொழி ஒரு தொடர்பு.  ஒலி இல்லாமலும் அது  நேரலாம்.  

தேன்மொழி, மைதிலி, வசந்தன்.   

‘தொண்டை புடைத்த காகம்’ ஒன்று என்ற கதையில்  சன்னல் வழியாக வரும் காக்கை வித்தியாசமான காக்கையாக இருக்கிறது.   மழைக் காலங்களில் சமையலறை சன்னல் மீதுதான் இருப்பு. உப்பு பிஸ்கோத்து போடாமல் க்ளூகோஸ் பிஸ்கோத்து போட்டால் நிமிர்ந்து பார்த்து தலையைத் திருப்பிக்கொள்ளுமாம்.  வறுவல் என்றால் உயிராம். இன்னும் கேட்கும். பதிலுக்குத் தன் வாயில் வைத்திருக்கும் எலும்பு எதையாவது சன்னல் படிக்கட்டில் வைத்துவிட்டுப் போய்விடும். 

ஒருநாள் காகம் கத்துவதைக் கேட்டபோது அது காகம்தானா என்ற சந்தேகம் வருகிறது.

அப்படியே இந்தக் கதை அப்பாவிடம் ஆரம்பிக்கிறது.  சாப்பாடு சாப்பாடு என்று அப்பா கத்துகிறார்.  அவருக்கு எதுவும் ஞாபகம் இருப்பதில்லை. அப்பாவின் ஞாபகமறதியிலிருந்து ஒரு பெரிய குடும்பக் கதையை விவரிக்கிறார்.  ஒரு மாலை பொழதில் அப்பா காணாமல் போய்விடுகிறார்.  பின் அவரைக் கண்டுபிடித்து ஒரு நர்ûஸ வைத்துப் பார்த்துக்கொள்கிறாள்.  

இரண்டு காதல்களின் தோல்வி, அம்மா விசாலம், அப்பா என்று பலத்த அலைகளாக நினைவுகள் மோதுகின்றன.  அந்தச் சமயத்தில் சன்னலோரம் வந்த காக்கையைக் கோபத்துடன் விரட்டி விடுகிறாள்.  அதன்பின் காக்கை வரவில்லை.  பேருந்தில் ஒரு முறை போய்க்கொண்டிருக்கும்போது ஒரு காக்கை பஸ்ஸில் அடிப்பட்டு உயிரை விடுகிறது. காக்கையை மட்டும் கூறுவதல்ல இந்தக் கதை.  காக்கை மூலம் எல்லாமும் வருகிறது.  

பயணம் 21, 22, 23 என்று மூன்று கதைகள்.  மூன்றும் மூன்று பயண அனுபவங்கள். கட்டுரைகளா? கதைகளா? நகுலன் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரும் நிகழ்ச்சியை கதையாக மாற்றி இருக்கிறார்.  அதே போல் முயற்சியா இது.  பயணம் 23 பற்றி சொல்ல வேண்டும்.  கதையில் ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.  üஎதை எடுத்தாலும் அதன் பொருள் அடுக்குகளின் கீழே எல்லாவற்றையும் அர்த்தப்படுத்தும் அடிப்படை உணர்வான பாலியல்தான் இருந்தது.

இன்னொரு இடத்தில் பாரதியின் அக்கினிக் குஞ்சு என்ற கவிதையை மோசமாகக் கிண்டல் அடிக்கிறார்.  வக்கிரமான உணர்வை வெளிப்படுத்துகிறார் என்று கூட கூறலாம். இதோ:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு – தழல்

வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

இதற்கு விளக்கம் தருகிறார்.  அக்னிக் குஞ்சு ஆண் குறியாம், காட்டிலோர் பொந்து பெண்ணுடைய யோனியாம், வெந்து தணிந்தது காடுý கலவி உச்சத்தைக் குறிக்கிறது.  தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் கலவி இயக்கத்துடைய தாள கதியாம்.. பாரதி பாடலை இவ்வளவு மோசமாக யாரும் கிண்டல் செய்திருக்க மாட்டார்கள்.  பாரதி படித்தால் தற்கொலை செய்துகொண்டு விடுவார்.

üசாம்பல் மேல் எழும் நகரம்ý என்ற கதையை இரண்டு முறைக்குமேல் படித்தேன்.  என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.  அம்பையின் கதை பெண்களைப் பற்றிச் சுழலுகிறது.  துயரம்தான் அதிகம்.  நகைச்சுவை உணர்வு மிகவும் குறைவு.  பயணத்தைப் பற்றியே பெரும்பாலும் கதைகள் இருக்கின்றன.   இப்புத்தகம் காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது.  விலை ரூ.195.

துளி – 75 – நாவல் எழுதியது எப்படி – 2



அழகியசிங்கர்

சரி, நாவல் அவ்வளவு சுலபமாய் எழுதி விட முடியுமா?  முடியும். ஆனால் கவிதை எழுதுவது ரொம்ப ரொம்ப எளிது.  அதன்பின் சிறுகதை கவிதை எழுதுவதை விடச் சற்று சிரமம்.  கட்டுரையும் அப்படித்தான்.  ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவதாக இருந்தால் பல புத்தகங்களைப் படிக்க வேண்டும். படித்துக் கோர்க்க வேண்டும்.

நான் இப்போது எழுதி உள்ள ‘தனி இதழ் நன்கொடை ரூ.20’. உண்மையில் என் முதல் நாவல்.  இரண்டாவதாக வந்து விட்டது. எப்போதோ ஆரம்பித்தேன்.   ‘ஞாயிற்றுக் கிழமை தோறும் தோன்றும் மனிதன்.’  என் முதல் நாவலாக மாறிவிட்டது. ஒரு நாள் பகல் நேரத்தில் வெகு நேரம் தூங்கி எழுந்தவுடன், யாரோ சொன்னதுபோல் (ஷ்ரடி சாய் என்று நினைக்கிறேன்) தோன்றியது ‘உன் நாவல் கணினியிலேயே இருக்கிறது’ என்று. 

உடனே கணினியைத் தட்டினேன்.  5 ஆண்டுகளுக்கு முன் நான் அம்ருதா பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் கிடைத்தன. அவற்றை எல்லாம் தொகுத்து ‘எதையாவது சொல்லட்டுமா’ என்ற கட்டுரைத் தொகுதி கொண்டு வந்தேன்.  பின் முதல் நாவலைத் தேதி வாரியாக நான் குறித்து வைத்திருந்தேன்.  அது புது விதமான நாவல். தன் புனைவு நாவல்.

பிரமிள் என்ன முயற்சி செய்தும் நாவல் எழுத முடியவில்லை.  ஞானக்கூத்தனும் கவிதைகள் தவிர நாவல் எழுதவில்லை.  ஏன் மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ரா சிறுகதைகளோடு நிறுத்திக்கொண்டு விட்டார்.  இலக்கியத் தரமான நாவல் எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது என் நண்பர் ஒருவரை ஒரு கிருத்துவப் பெண் காதலித்தார். பார்க்க லட்சணமாகவும் இருந்தார்.  நண்பர் வேண்டாமென்று மறுத்து விட்டார்.  அவர் மறுத்தது என் மூளையில் போய் உட்கார்ந்து விட்டது.  அந்தப் பெண் அவரை மணந்து கொண்டால் எப்படி இருக்கும்?  அதுதான் நாவலின் இன்னொரு இழையாகப் போய்க் கொண்டிருக்கிறது. 

அமேசானில் போய் எளிதாக நீங்கள் படித்து விடலாம்.  விலை ரூ.49 தான்.

துளி – 74 – நாவல் எழுதியது எப்படி – 1

அழகியசிங்கர்

பல ஆண்டுகளாக ஒரு கவிதை எழுதுபவர் என்னுடன் நண்பராக இருந்தார்.  அவருடன் பழகும்போது எனக்கு அவரைப் பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது.  அவர் ஒரு கவிஞர். கவிதை மட்டுமல்ல சிறுகதை ஆசிரியர் விமர்சகர்.  ஆனால் அவர் நாவல் எழுத வேண்டுமென்ற முயற்சியில் தோல்வி அடைந்து விட்டார்.  அவருடைய வாழ்க்கை முறை எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஒருவர் எப்படி அதுமாதிரி வாழ்க்கை நடத்த முடியுமென்று தோன்றியது. ஆனால் அவர் வாழ்ந்து காட்டினார்.  தனக்கு தோன்றியபடி வாழ்ந்தார். திறமை உள்ள ஒருவர். 
புத்தகம் படிப்பார். எழுதுவார் அவ்வளவுதான் அவர் வாழ்க்கை. வறுமையில் அவர் ரொம்பவும் சிரமப்பட்டார்.  மற்ற எழுத்தாளர்களை அவர் மதித்ததே இல்லை.  இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி  நாவல் எழுதினால் என்ன? இந்தக் கேள்விதான் இந்த நாவல்;.  என் நாவல் இப்படித்தான் ஆரம்பித்தது.  ஆனால் அதைத் தொடர்ந்து எழுதி முடிக்க முடியவில்லை.  கொஞ்சம் கொஞ்சமாக நினைத்தபோது எழுதிக் கொண்டிருப்பேன். முடிப்பேன் என்று கூட நினைத்துப் பார்க்கவில்லை. 
திடீரென்று இந்த ஆண்டு அந் நாவலை முடிக்க வேண்டுமென்று தோன்றியது.  அப்படி முடித்ததுதான் üதனி இதழ் நன்கொடை ரூ.20ý.   எந்தத் திட்டமிடாமல் எழுதப்பட்டதுதான் இந் நாவல்.  இதை ஒவ்வொருவரும் படிக்கவேண்டும்.  அமேசான் கிண்டலில் இந் நாவல் கிடைக்கும்.  

https://www.amazon.in/Thani-IthazhNunkodai-Rs-20-AZHAGIYASINGAR-Chandramouli-ebook/dp/B081LTS17Q/