புத்தகக் காட்சியை ஒட்டி நான் ஸ்டீல் ராக்கில் உள்ள புத்தகங்களைச் சாக்கு மூட்டைகளில் கட்டிவிடுவேன். இது மாதிரி 20 சாக்கு மூட்டைகள் இருக்கும். புத்தகக் காட்சிக்கு ஸ்டீல் ராக்குகளை எடுத்துக்கொண்டு போவேன்.
திரும்பவும் புத்தகக் காட்சி முடிந்தவுடன் ஸ்டீல் ராக்குகளை கொண்டு வந்து எல்லாப் புத்தகங்களையும் சாக்கு மூட்டைகளிலிருந்து எடுத்து அடுக்குவேன். அப்போது எல்லாம் புத்தகங்களும் இடம் மாறிவிடும். முன்பு கவிதைகள் இருந்த ஸ்டீல் ராக்கில் ஆங்கிலப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பேன்.
தினமும் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரங்களைத்தான் ஒதுக்குவேன். அதற்குமேல் அதில் ஈடுபட முடியாது. எனக்கு உதவி செய்ய ஒரு இலக்கிய நண்பரும் வருகிறார்.
இன்று மாலை கவிதைப் புத்தகங்களாக மூட்டையிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு புத்தகத்திலிருந்து ஒரு புகைப்படம் கிடைத்தது. யாரோ எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். யார் கொடுத்தார்கள்? எப்போது கொடுத்தார்கள் என்றெல்லாம் நினைவில்லை. ஆனால் நண்பர்களுடன் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துகொள்ளலாமென்று தோன்றியது. இதோ:
காக்கைச் சிறகினிலே நூறாவது இதழ் வெளிவந்துள்ளது. 144 பக்கங்கள். ரூ.25 தான். ஒருவர் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய இதழ். ஒரு விளம்பரமில்லாமல் அதிகப் பக்கங்களுடன் எப்படி இதழைக் கொண்டு வந்துள்ளார்கள் என்ற ஆச்சரியம் இல்லாமலில்லை. பழைய காக்கைச் சிறகினிலே இதழ் பிரதிகள் என் நூலகத்தில் உண்டு.
வி முத்தையா ஆசிரியர் பொறுப்பில் உள்ளார். ஆசிரியர் குழுவில் இரா.எட்வின், முகிலன், அமரந்த்தா, கசன் உள்ளார்கள். இது ஒரு இலக்கிய மாத இதழ். புத்தகக் காட்சி முடிந்தவுடன் நிதானமாக வாசிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
சிறுபத்திரிகை
இந்தப் பெயரில் இது இரண்டாவது இதழ் பயணி கொண்டு வந்துள்ளார். இந்த இதழ் எனக்கு வந்தபோது நான் அசந்து போய்விட்டேன். இதிலும் விளம்பரமில்லை. பத்திரிகை நடுவில் வண்ண ஓவியங்கள். இதன் விலை ரூ.150. இப்படி சாத்தியமில்லாததைச் சாதிப்பதுதான் சிறுபத்திரைகயில் பங்கெடுப்பவர்கள் வழக்கம்.
இதில் பயணி ஒரு நீண்ட தலையங்க உரை எழுதியிருக்கிறார். நிதானமாக வாசிக்க வேண்டிய பத்திரிகை. ஒவ்வொருவரும் பாதுகாக்க வேண்டிய இதழ்.
2019 ஆம் ஆண்டு இறுதியிலும், 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் நாவல்களை வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே கொடுத்த லிஸ்டில் இன்னும் சில நாவல்களையும் ரேச்க்கிறேன். இதுவரை 9 நாவல்களை நான் சேர்த்துள்ளேன்.
நான் இப்போது கொடுக்கும் லிஸ்ட் தீர்ந்து விடும் என்று சொல்ல வரவில்லை. என் கணக்கில் இதுவரை 9 நாவல்களை வாங்கிவிட்டேன். இன்னும் என்னன்ன நாவல்களை வாங்குவேன் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. வாங்கும் எல்லா நாவல்களையும் படித்து அலசி ஒரு புத்தகம் எழுதுவதாக உள்ளேன். இதற்கு அசிக்காடு மதுர காளி எனக்குத் தைரியம் கொடுக்கட்டும்.
சமீபத்தில் 11 புத்தகங்கள் விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்தேன் புத்தகக் கண்காட்சியை ஒட்டி. அதில் 5 புத்தகங்கள் நான் எழுதிய புத்தகங்கள். நான்கு புத்தகங்களை 20 சதவீதம் தள்ளுபடி செய்து விற்க விரும்புகிறேன். விருட்சம் ஸ்டால் 430க்கு வந்திருந்து வாங்கவும்.
நாம் எல்லோரும் பல அவதாரங்கள் எடுத்துக்கொள்கிறோம். சிலர் அதில் வெற்றியும் பெறுகிறார்கள். சிலர் தோல்வியும் அடைகிறார்கள். புத்தக விற்பனையாளனாக இருந்தால் புத்தக விற்பனையாளனாக மட்டும் இருக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தையும் எப்படி விற்க வேண்டுமென்றுதான் யோசிக்க வேண்டும்.
விற்பனையாளனாக மட்டும் இல்லாமல் பதிப்பாளராகவும் இருந்தால் எப்படிப் புத்தகத்தைப் படித்து விற்க முடியும் என்று யோசிக்க வேண்டும். விற்பனை சந்தையில் எதுமாதிரிôன புத்தகங்கள் போகின்றன. எப்படித் தயாரித்து விற்க வேண்டுமென்று யோசிக்க வேண்டும்.
ஒருவன் புத்தக விற்பனையாளனாகவும் பதிப்பாளனாகவும் இருக்கலாம். மோசமில்லை. இன்னொரு அவதாரம் எடுப்பது மோசமானது. அதாவது எழுதுபவனாக இருப்பது. எல்லாம் ஒரே அவதாரமாக இருப்பது.
நண்பருடன் பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருப்பேன். எதாவது பேசிக்கொண்டிருக்கும் போது நானும்தான் எழுதியிருக்கிறேன் என்று கூறிவிடுவேன். என்னது நான் என்று சொல்கிறீர்கள் அந்த நானை விட முடியாதா என்பார். சரி அழகியசிங்கர் எழுதியிருக்கிறான் என்று மாற்றிக் கூறுவேன். சிரிப்பார் அவர்.
நான் புத்தக விற்பனையாளனாக மட்டும் இருந்தால் புத்தகக் காட்சி சாலையில் விற்பனை ஆகும் புத்தகங்களை மட்டும் வைத்துக்கொண்டு விற்று விடுவேன். விற்கவில்லை என்று சில புத்தகங்கள் இருந்தால் விற்க முயற்சி செய்வான்.
பதிப்பாளனாகவும் விற்பனையாளனாகவும் இருந்தால் ஒரு ஆபத்து இருக்கிறது. தெரியாமல் கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வந்து விற்க முடியாமல் அவதிப் படுவான். அதனால்தான் சில பதிப்பகங்கள் கவிதைப் புத்தகங்களை அச்சிடுவதில்லை.
விற்பவன், பதிப்பாளன், எழுதுபவன் எல்லோரும் ஒரே நபராக இருந்தால் ஆபத்து. அதுவும் எழுதுபவன் கவிதை எழுதுபவனாக் இருந்தால், கூடுதல் ஆபத்து.
என் புத்தகக் கடையில் நான் அமரந்திருந்தேன். என் நண்பரும் கவிஞரும் கடைக்கு வந்திருந்தார். எதிரில் என் கவிதைப் புத்தகம் தெரிந்தது. அட்டைப் படம் நன்றாக வந்திருக்கிறது என்றார் என் கவிதைப் புத்தகத்தைப் பார்த்து. அந்தப் புத்தகத்தில் என் புகைப்படத்தை ஓவியமாக மாற்றி அச்சடித்திருந்தேன். அழகியசிங்கர் கவிதைகள் என்று தலைப்பில் ஆரம்பத்தில் எழுதிய கவிதைகள் (1977ரலிருந்து) 2017வரை அச்சிட்டிருந்தேன். அவரிடம், என்ன செய்வது? அந்தப் புத்தகம் பார்வைக்கு அங்கயே இருக்கிறது என்றேன்.
இதுதான் பிரச்சினை ஒருவன் எழுதுபவனாகவும், (அதுவும் கவிதை எழுதுபவனாக) பதிப்பாளராகவும், விற்பனையாளனாகவும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் ஆபத்து. ஆனால் விதி விலக்காக, என் எழுத்தாள நண்பர் புத்தகக் காட்சியில் இரண்டு அரங்கு எடுத்திருக்கிறார். அவருடைய எழுத்துக்கள்தான் அவர் கடை முழுவதும். எதை எடுத்தாலும் அவர் புத்தகம்தான் வாங்க வேண்டும். அவருக்கு ரசிகர்களும் அதிகம். உண்மையில் சிறப்பாக எழுதக் கூடியவர். புத்தகக் காட்சியில் அவர் கடை முன் கூட்டம் அதிகமாக இருந்து கொண்டிருக்கும். அவர் கடைக்கு வருகிறாரென்றால் கூட்டம் அதிகமாகிவிடும. அவ்வளவு ரசிகர்கள். தாமதமாகத்தான் அவர் திறமையை உணர்ந்திருந்தார். உணர்ந்த பிறகு தனிப் பதிப்பகம் ஆரம்பித்து கடையும் போட்டிருந்தார்.
ஒரு போன் வந்தது. புத்தகக் காட்சி எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்டு. என் பதில். என் கடை முன்னால் இந்தப் பக்கமாகவும் அந்தப் பக்கமாகவும் எல்லோரும் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றேன். ஒரு விதத்தில் இது சரிதான். எல்லோரும் என் கடைக்குள் வந்தால் தடுமாறிப்போய்விடுவேன். அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது.
ஒரு புத்தகக் காட்சியை நடத்துவது சிரமம். அதை விடச் சிரமம் புத்தகக் கடையில் புத்தகங்களை விற்பது. கடைக்குள் வருபவர்களை இந்தப் புத்தகம் வாங்க வேண்டுமென்று கட்டளை இட முடியாது. கட்டாயப் படுத்தவும் முடியாது.
விருட்சம் அரங்கிற்கு ஒருமுறை உதவி செய்யப் புத்தகம் வெளியிடுபவரே வந்தார். அவர் இளைஞர். மிகக் குறைவாகவே புத்தகங்களைக் கொண்டு வந்திருந்தார். அவர் புத்தகங்கள் குறித்து அவருக்குப் பெருமை அதிகம். ஆனால் அவரால் தனியாக அரங்கம் எடுத்துப் புத்தகம் விற்க முடியாது. என் கடையைப் பார்த்துக்கொள்ளும் பணிக்காகத் தினமும் அவருக்கு ஒரு தொகையைக் கொடுப்பேன். அப்படிப் பார்த்துக்கொண்டிருந்தவர் திடீரென்று அவருடைய புத்தகங்களைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்.
என் கடையில் அவர் புத்தகங்களையும் வைத்துக்கொள்ள அனுமதி அளித்திருந்தேன். அதோடு நில்லாமல் அவர் வெளியிட்ட புத்தகங்களையும் கையில் வைத்துக்கொண்டு வருபவர்களைப் பார்த்து இந்தப் புத்தகம் வாங்குங்கள் என்று கூறி அவர் புத்தகங்களை வருபவர்களிடம் விற்றுக்கொண்டிருந்தார்.
இதுமாதிரி பிரச்சாரம் செய்யாதீர்கள். வருபவர்கள் அவர்களுக்கு வேண்டிய புத்தகங்களை எடுத்துக்கொள்ளட்டும் என்று அவரிடம் கடுமையாக சொல்லும்படி ஆகிவிட்டது. அடுத்த ஆண்டிலிருந்து அவர் வரவில்லை. நானும் கூப்பிடவில்லை.
இது ஒரு பாடம். கடையில் உதவி செய்ய வருபவர் அவரே புத்தகம் போடுபவர்களாக இருந்தால் இதுமாதிரியான ஆபத்து இருக்கத்தான் செய்கிறது.
என்னடா இது ஒருவன் ஆயிரக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து புத்தகங்களை விற்கத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறானே அவன் கடையிலேயே போய் நம்ம புத்தகங்களை மட்டும் வாங்க பிரச்சாரம் செய்கிறோமே என்று தோன்றவில்லை.
பல கடைகளில் எளிய மனிதார்கள் புத்தக ஆசையில் புத்தகங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பெரும்பாலும் குடும்பமே புத்தகம் விற்க வந்து விடும். எத்தனையோ கடைகளில் மனûவியும் கணவனும் புத்தகங்களை விற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் பதிப்பாளராகவும் புத்தக விற்பனையாளராகவும் இருப்பார்கள்.
ஒரு சிலர்தான் கடைகளில் ஆட்களை நியமித்துப் பெரிய அளவில் புத்தகங்களை விற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம் பெரிய பதிப்பாளர்கள். ஆனால் ஒரு புத்தகத்தை விற்பது அவ்வளவு சுலபமாக எனக்குத் தோன்றவில்லை.
க.நா.சுவின் படைப்புகள் என்ற பெயரில் போன ஆண்டு 4 புத்தகங்களையும் இந்த ஆண்டு 2 புத்தகங்களையும் கொண்டு வந்துள்ளேன். படைப்புகள் பகுதியில் 7, 8 சிறுகதைகள். இந்த இரு தொகுதிகளில் 28 கதைகள் கொண்டு வந்துள்ளேன். இப் புத்தகத் தயாரிப்பில் எனக்கு உறுதுணையாக இருப்பவர் கிருபானந்தன். அவர் முயற்சி இல்லாவிட்டால் இந்தத் தொகுப்புகள் சாத்தியமாக இருக்காது.
ஆனால் இன்னும் கூட க.நா.சு கதைகள் இருக்குமென்று தோன்றுகிறது. மூன்றாவதாக ஒரு தொகுப்பில் அதில் விட்டுப்போன கதைகளையும் சேர்க்க உள்ளேன்.
க.நா.சு சகல கலா வல்லவர். கிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், மொழி பெயர்ப்பு படைப்புகள் என்று அசுரத்தனமாக எழுதிக் குவித்தவர்.
புதுக்கவிதைக்கு புது வடிவம் அளித்தவர். சோதனை ரீதியாகப் பல முயற்சிகளைச் செய்துள்ளார். க.நா.சு படைப்புகள் என்ற பெயரில் நாங்கள் 6 புத்தங்களைக் கொண்டு வந்துள்ளோம்.
இதற்கு முன்னால் என் முயற்சியில் அவதூதர் என்ற நாவலையும் ஆட்கொல்லி என்ற நாவலையும் கொண்டு வந்துள்ளேன். மிகக் குறைவான விலையில் இப் புத்தகங்களைத் தயாரித்துள்ளேன். மேலும் குறைவான பிரதிகளை அச்சடித்துள்ளேன்.
அதேபோல் க.நா.சு வின் அத்தனைப் புத்தகங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வரத் திட்டம் தீட்டி உள்ளேன். எனக்கு இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது. üநீங்கள் ஏன் இலக்கியக் கூட்டங்கள் நடத்தக் கூடாது,ý என்று என்னைப் பார்த்து க.நா.சு சொன்னது.
ஒருமுறை க.நா.சு மயிலாப்பூரில் குடியிருந்தார். ஞானக்கூத்தன், நகுலன், காசியபன், வைத்தியநாதன், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த் என்று பெரிய கூட்டமே அவரைப் போய்ப் பார்த்தோம். மயிலாப்பூரில் உள்ள ராயர் ஓட்டலில் போய் டிபன் சாப்பிட்டோம்
க.நா.சுவிடம் அன்று என்ன பேசினோம் என்று சிறிது கூட என் ஞாபகத்தில் இல்லை.
விருட்சம் 3வது இதழ் தயாரித்துக்கொண்டிருந்தேன். க.நா.சுவிடம் ஒரு கட்டுரை கேட்டேன். உடனே கொடுத்தார். புதுக்கவிதையின் எல்லை என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை இருந்தது. அந்தத் தருணத்தில் அந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்ய வில்லை. சமீபத்தில்தான் பிரசுரம் செய்தேன். கவிதையின் எளிய வடிவத்தை கநாசுவிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
போன ஆண்டு என் கவிதைகள் முழுவதும் சேர்த்து முழுத் தொகுதி கொண்டு வந்தேன். மொத்தம் 306 கவிதைகள். 504 பக்கங்களில் இதைக் கொண்டு வந்தேன்.
பிப்பரவரி மாதம் நான் அமெரிக்கா போய்விட்டேன். அங்குப் போய் 26 கவிதைகள் எழுதினேன். திரும்பவும் சென்னை வந்தவுடன் எந்தக் கவிதையும் இன்று வரை எழுதவில்லை.
என் நண்பர் ராஜேஷ் சுப்பிரமணியத்தைப் பார்த்து, என் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்கக முடியுமா என்று கேட்டேன். உரிய நேரத்தில் 92 கவிதைகளை மொழி பெயர்த்துள்ளார். என்னால் நம்ப முடியவில்லை. அவர் சிறப்பாகவே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அவருக்கு என் நன்றி. தொகுப்பின் பெயர் Shifting shadows 130 பக்கங்கள் விலை ரூ.150.
70கள் ஆரம்பத்தில் அல்லது 80களில் என்று நினைக்கிறேன். தீபத்திலும கணையாழியிலும் அதிககமாகக் கவிதைகள் வெளிவந்தன. அவையெல்லாம் வேறுவிதமான கவிதைகள். புதிய வகை கவிதைகள். தீபத்தில் வானம்பாடி கவிதைகளின் போக்கை அதிகம் பார்க்கலாம். கணையாழியிலோ எழுத்து காலத்துக் கவிதைகள். அதாவது சிறுபத்திரிகைகளின் கவிதைகள்.
பலர் இரண்டு பத்திரிகைகளிலும் அறிமுகமானார்கள். அப்போது வந்து கொண்டிருந்த சிறுபத்திரிகைகள் கவிதைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தன (நடை, கசடதபற, பிரஞ்ஞை, அஃ போன்ற உதாரணங்கள்). ஆனால் தொடர்ச்சியாக சிறுபத்திரிகைகள் வரவில்லை. ஒரே காலத்திலும் வரவில்லை. ஆனால் கணையாழியும், தீபமும் வந்து கொண்டிருந்தன. மாதம் ஒரு முறை. அதனால் சிறுபத்திரிகையின் பங்கை இரண்டு பத்திரிகைகளும் ஏற்றுக் கொண்டன.
80களின்தான் கவிதைகள் முழு உருப்பெற்றன. பெரும்பாலான சிறுபத்திரிகைகளில் எழுதுபவர்கள் கணையாழியில் தொடர்ந்தார்கள்.
தீபத்தில் வானம்பாடி என்ற குழுவைச் சார்ந்தவர்கள். இரண்டு பத்திரிகைகளிலிருந்தும் இரண்டு விதமான கவிதைகளைக் காட்ட முடியும்.
முதலில் கணையாழியை எடுத்துக்கொள்வோம்.
ஆகஸ்ட் 65ல் எழுதிய கி.கஸ்தூரிரங்கன் இறைவணக்கம் என்ற பெயரில் எழுதிய கவிதையைப் பார்ப்போம்.
இறை வணக்கம்
“கடவுளும் கவர்மென்டும் ஒன்று
அதைத் தூற்றாதே; பழிசேரும்
உனக்கு. அதற்கு
ஆயிரம் கண்கள்; காதுகள்.
ஆனால் குறையென்றால்
பார்க்காது கேட்காது
கை நீளம்; பதினாயிரம்
கேட்கும், பிடுங்கும்.
தவமிருந்தால்
கொடுக்கும்.
கவர்மென்ட் பெரும் கடவுள்
அதைப் பழிக்காதே
பழித்தால்
வருவது
இன்னும்
அதிகம்
கவர்மென்ட்தான்!”
– கி. கஸ்தூரிரங்கன்
ஆகஸ்ட் 1965
தீபத்திலிருந்து ஒரு கவிதை.
சமயோஜிதம் என்ற கவிதை.
இன்று பிற்பகல்
கட்சி மாறிய
அந்த அரசியல்வாதியின்ü
பெயர்
üபலவேசம்ý
இவரைவிடப் புத்திசாலிகள்
இந்தப் பெயரை வைத்த
அவரின்
அப்பா…அம்மாக்கள்தான்.
– இளசை அருணா
இரண்டு பத்திரிகைகளில் பிரசுரமான கவிதைகளின் மாதிரிதான் கொடுத்துள்ளேன்.
நன்றாகப் படித்துப் பார்த்தால் இரண்டு பத்திரிகைகளிலும் இரண்டு விதமான கவிதைப்போக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும். கணையாழி கவிதைகள் போல் தீபத்தில் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கவில்லை. இந்தப் போக்கு இப்போது வரைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
80களில் கணையாழியில், தீபத்தில், தினமணிகதிரில் வெளிவந்த எல். ரகோத்தமனின் கவிதைகளை ‘நிழல் விரட்டும் பறவைகள்’ என்ற பெயரில் கவிதைத் தொகுப்பாக விருட்சம் வெளியீடாக கொண்டு வந்துள்ளேன். உதாரணத்திற்கு ஒரு கவிதையை இங்கு தருகிறேன்.
முதலில்…..
ரோஜா அழகாக இருக்கும்!
பக்கத்தில் போய் முகரலாம்!
இதழ்களைக் கிள்ளி
சுவைக்கலாம்!
கையில் முள் கிழிக்காமல்
கொய்து சூடலாம்!
நாரில் அடைத்து காசு
பண்ண லாம்! |
நீரூற்றலாம்!
தெம்பிருந்தால் உரமிடலாம்!
சொந்தம் கொண்டாட வேலி போடலாம்!
நமதென்று உரிமை கோரலாம்!
இன்னும் என்னெனன்ன பயனென்று
யோசிக்கலாம்!
அது பூப்பது முதலில் செடிக்காக
என்பதை மறந்துவிட்டு!
விருட்சம் வெளியீடாக வந்த இக்கவிதைத் தொகுப்பின் விலை ரூ.70.
சென்னை புத்தகக் காட்சியின்போது எனக்கு எப்போதும் ஞாபகம் வருவது அப்பா. அவர் இறந்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றுதான் அவர் தவசம்.
2017ஆம் ஆண்டு சென்னை புத்தகக் காட்சி துவங்குகிற நாள் ஐந்தாம் தேதி. அன்றுதான் அப்பா இறந்து விட்டார். அதனால் என்னால் ஒவ்வொரு முறை புத்தகக் காட்சி வரும்போதும் மறக்க முடியாத நாளாக இருக்கும்.
அவர் இறந்து போகிற அன்று நான் பதட்டமாக இருந்தேன். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி வியாழக்கிழமை அப்பா இறந்தார். அன்றைய தினம் நாட்குறிப்பில் எழுதியிருந்ததை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.
“இன்று முழுவதும் அப்பா சாப்பிடக் கூடப் படுத்தினார். கண்களை விழிக்கவில்லை. வாயைச் சரியாய் திறக்கவில்லை. எப்போதும்போல் அப்பாவிற்குக் கஞ்சி கொடுக்கச் சென்றேன். வாயைத் திறக்க முடியவில்லை. அப்பா வேறு மாதிரி இருந்தார். எந்தவிதமான ரெஸ்பான்ஸ÷ம் இல்லை. அப்பா கொஞ்சம் கொஞ்சம் மரணத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். நான் பதட்டமானேன். மைதிலியைக் கூப்பிட்டேன். பின் பக்கத்தில் உள்ள சுரேஷ்ஷைக் கூப்பிட்டோம். ஆம். அப்பா 9.05க்கு இறந்து விட்டார். எனக்கு அதிர்ச்சி. நண்பர் மருத்துவர் பாஸ்கரன் வந்திருந்து கையெழுத்துப் போட்டார். அப்பா மரணமடைந்ததை உறுதிப் படுத்தினார். அவருக்கும் அப்பா நண்பர்.
ரமணனிடம் (என் சகோதரன்) சொன்னேன். அவன் வருவதற்குள் அப்பா இறந்து விட்டார். பவானியும் ரமணனும் இங்கே தங்கினார்கள். எல்லோருக்கும் போன் செய்து சொன்னேன். வித்யா அப்பா ஸ்ரீனிவாசனும், அவர் மனைவியும் பலவிதங்களில் உதவி செய்தார்கள். ராத்திரி முழுவதும் நான் தூங்கவில்லை.”