அழகியசிங்கர்
அவர் தி.நகரில் உள்ள முதல் பையன் வீட்டிலிருந்தபோதுதான் நான் அடிக்கடி சந்திப்பேன். ஒவ்வொரு முறை அவருக்கு உதவி செய்யும் நோக்கம் எனக்கு இருந்தது. எங்காவது போக வேண்டுமென்றால் என்னைத் துணைக்குக் கூப்பிடுவார். நானும் உடனே போய்விடுவேன். நான் மேற்கு மாம்பலத்தில் இருந்தேன். அவரைப் பார்க்க எனக்கு எளிதாக இருந்தது. மேலும் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தேன். எந்த நேரத்திலும் நான் அவரைப் பார்க்கப் போவேன்.
மேற்கு மாம்பலத்தில் அவருடைய நண்பரின் பெண் கல்யாணத்திற்குக் கூப்பிட்டார். எனக்குச் சற்று சங்கடம்தான். என்னை யாரென்று தெரியாத ஒரு கல்யாணத்திற்குப் போகிறோமே என்று. ஆனால் அசோகமித்திரனை அழைத்துக் கொண்டு போகிறோம் என்று மகிழ்ச்சியுடன் செல்வேன். அந்தக் கல்யாணத்திற்கு யாரும் என்னை அழைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அசோகமித்திரன் என்னை அழைக்கிறார் என்று நினைத்துக் கொள்வேன்.
ஆனால் திருமணம் போன்ற வைபவத்திற்கு அவரை அழைத்துக் கொண்டு போய்விட்டுத் திரும்பவும் அழைத்துக்கொண்டு வரும்போது அவர் தடுமாறிப் போய்விடுவார். ஏன் அவர் இப்படிக் கஷ்டப்படுத்திக் கொள்கிறார் என்று தோன்றும்.
இப்படிப் பல இடங்களுக்கு நான் அவருடன் போயிருக்கிறேன். இப்படிப் பயணம் செய்யும்போது எங்களிடையே நடக்கும் உரையாடல் முக்கியமாகத் தோன்றும். அவரைப் பார்க்க வருகிற நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்தத் தவற மாட்டார். என்னை அறிமுகப்படுத்தும்போது என்னைப் பற்றி உயர்வாகவே அறிமுகப்படுத்துவார். ஆட்டோவில் போய்க்கொண்டிருக்கும்போது முராகாமி என்று ஜப்பான் நாட்டு எழுத்தாளரைப் பற்றி ஒரு முறை கேட்டேன்.
“அவர் எழுத்தில் சுயமான அனுபவம் சற்று குறைவாக இருக்கிறது,” என்று கூறினார்.
என்னடா இது எல்லோரும் புகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளரைப் பற்றி இப்படி ஒரு அபிப்பிராயம் சொல்கிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது. ஆல் இந்தியா வானொலியில் கதை படிக்க ஒரு முறை சென்றார். கூடவே நானும். அவர் படித்த ஒரு அற்புதமான கதை. விருட்சத்தில் அக்கதையைப் பிரசுரம் செய்தேன். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவரிடம் என்னை அறிமுகப்படுத்தி இவரிடமும் கதை படிக்கக் கேளுங்கள் என்று குறிப்பிட்டார். பின்னால் எனக்கும் அவரால் கதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை ஏன் இங்கே சொல்கிறேனென்றால் பொதுவாக ஒரு மூத்த எழுத்தாளர் அவருடன் பயணிக்கும் இன்னொரு எழுத்தாளரைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். தன்னை மட்டும் முன்னிலைப் படுத்திக்கொள்ள முயற்சி செய்வார்கள். நான் பலருடன் பயணப்பட்டதால் இதைக் குறிப்பிடுகிறேன். ஆனால் அசோகமித்திரன் விதிவிலக்கு.
அவருடைய எந்தப் புத்தகத்தையும் எனக்குக் கையெழுத்து இட்டு எனக்கு அளிப்பார். அவருடைய தள்ளாத வயதில்தான் என்னால் அடிக்கடி அவரைச் சந்திக்க முடிந்தது. நான் அவரை சுலபமாகச் சந்தித்து விடுவேனே தவிர அவரை நான் இருக்குமிடத்திற்குக் கூப்பிட்டதே இல்லை. காரணம் அவருடைய முதுமை.
பொதுவாக என் வீட்டிற்குப் பல எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். அசோகமித்திரனும் இரண்டு முறை வந்திருக்கிறார். ஒரு முறை நான் மயிலாடுதுறையிலிருந்தபோது. அங்கு வள்ளலார் கோயில் தெருவில் குடியிருந்தேன். மயிலாடுதுறைக்கு வரும் எழுத்தாள நண்பர்களெல்லோரும் என் வீட்டிற்கு வராமலிருக்க மாட்டார்கள். அசோகமித்திரனும் அவர் மனைவியுடன் ஒருமுறை வந்திருந்தார். அவருடைய மூதாதையர் ஊர் மயிலாடுதுறை. அங்கு வசிக்கும் மருத்துவர் குரு அவருடைய உறவினர். வைதீஸ்வரன் கோயிலுக்குச் செல்வதற்குத்தான் அவர் வந்திருந்தார்.
இங்கேயெல்லாம் இனிமேல் எங்கே வரப் போகிறேனென்று அவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.
சென்னையில் நானிருக்கும் வீட்டிற்கு இரண்டாவது முறை வந்திருந்தார். அன்று மாடிப்படிகளில் ஏற சிரமப்பட்டார். உண்மையில் மாடிப்படிகளைச் சபித்தபடியே வந்தார். அவர் வருவாரென்று நான் எதிர்பார்க்கவில்லை.
என் தந்தை இறந்தபோதுதான் அவர் வந்திருந்தார்.
பி.கு : 1 அசோகமித்திரன் நினைவுகள் குறித்து நான் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். 100 பக்கங்களுக்கு மேல் எந்தக் கட்டுரைப் புத்தகத்தையும் எழுத மாட்டேன். அசோகமித்திரன் குறித்து இது வரை 77 பக்கங்கள் எழுதி விட்டேன்.
பி. கு 2 : ஒரு முறை புகைப்பட நெகடிவ் ஒன்றைக் கொடுத்து அவர் குடும்பப் புகைப்படத்தை எடுத்துத் தரும்படி கேட்டுக்கொண்டார். புகைப்படத்தை எடுத்த பிறகு எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை. இன்னொருமுறை எடுத்துக்கொடுத்துவிட்டேன். என் கண்ணில் அந்தப் புகைப்படம் தற்செயலாக இப்போது கிடைத்தது. அவர் திருமணத்தின்போது எடுத்த புகைப்படமாக இருக்குமென்று நினைக்கிறேன்.