நேற்று (17.04.2020) நிஸகர்தத்தா பிறந்தநாளை  முன்னிட்டு இந்தப் பதிவை இன்று வெளியிடுகிறேன்.

ஆங்கிலத்திலிருந்து தமிழில் : அழகியசிங்கர்)

( Sri Nisargadatta Maharaj எழுதிய 1 am that’  என்ற புத்தகமும், அவரைப்பற்றியும் என் நண்பரும், கவிஞருமான எஸ்.வைத்தியநாதன் மூலம் தெரியவந்தது.  என் நண்பர் நேரில் அவரை தரிசித்திருக்கிறார். இப்புத்தக படிக்க வேண்டுமென்று நினைத்தபோதெல்லாம், தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்றும் நினைத்துக் கொள்வேன். என் விருப்பப்படியே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.)

  ஸ்ரீ நிஸர்கதத்தா மஹாராஜின் வாழ்க்கைக் குறிப்புகள் :

பிறந்ததேதியைக் குறித்து கேட்கும்போது, நான் பிறக்கவே இல்லை என்று பதில் அளித்தார் மஹாராஜ். அவரைப்பற்றி எழுதுவது அவ்வளவு எளிதான விஷயமாகத் தெரியவில்லை . அவருடைய சில மூத்த உறவினர்களும், நண்பர்களும் அவர் மார்ச் மாதம் 1897-ல் பிறந்திருப்பதாகச் சொன்னார்கள். அவருடைய இயற்பெயர் மாருதி. அவருடைய தந்தை, ஷிவ்ராம்பன்ட் ஏழை. அவர் பம்பாயில் ஒரு வீட்டில் பணியாளாகப் பணிபுரிந்தவர். அதன்பின் கான்டல்கானில் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயியாகப் பணிபுரிந்தவர். – மாருதி 18வது வயதை அடைந்தபோது, அவருடைய தந்தை மனைவி, நான்கு புதல்வர்கள், இரண்டு பெண்கள் விட்டுவிட்டு மரணமடைந்துவிட்டார். மாருதியுடைய மூத்த சகோதரர் பம்பாயிற்குன்.  வேலை தேடிச் சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து மாருதியும் சென்றார். மாருதி ஒரு அலுவலகத்தில், மிகக் குறைவான ஊதியத்தில், ஒரு குமாஸ்தாவாகப் பணிபுரிந்தார். ஆனால் வெறுத்துப்போய் அந்த வேலையை விட்டுவிட்டு சிறுவர்களின் துணிமணிகள், கையால் தயாரிக்கப்படும் சிகரெட்டுகள் விற்கும் சிறிய வியாபாரத்தைத் துவங்கினார். இந்த வியாபாரம் செழுமையாக வளரத் தொடங்கியது. இந்தச் சமயத்தில், அவருக்குத் திருமணமாகி ஒரு புதல்வனும், மூன்று பெண்களும் பிறந்தார்கள்.

மாருதி எல்லோர் போல சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். நடுத்தர வயது வரை அவருடைய வாழ்க்கையில் எந்த முக்கியத்துவமும் நடைபெறவில்லை. அவருடைய நண்பர்களில் ஒருவரான யாஷ்வந்ராவ் பாக்கர், நவ்நத் சம்பரதயா என்ற ஹிந்து மதத்தின் பிரிவின் குருவான ஸ்ரீ சித்தர்ராமேஷ்வரிடம் அவரை அழைத்துப் போனது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகப் படுகிறது. அந்தக் குரு, மந்திரத்தையும், தியானம் செய்யும் சில வழிமுறைகளையும் உபதேசித்தார். ஆரம்பநிலையில் அவருக்கு சில காட்சிகள் தென்பட்டன. அவரை அறியாமல் சமாதிநிலையை அடைவார். அவருக்குள்ளே ஏதோ பிரளயம் நிகழ்ந்து, அவர் பிரபஞ்ச உணர்வை எய்தினார். மிகச் சாதாரண கடை வியாபாரியான மாருதி பிராகசமுள்ள ஸ்ரீ நஸகர்தத்தா மஹாராஜாவாக மாறினார்.

எல்லா மனிதர்களும் இந்த உலகத்தில் சுய உணர்வோடு இந்த உலகத்தைவிட்டுப் பிரிய விருப்பமில்லாமலிருப்பார்கள். அவர்கள் தங்களுக்காகவே வாழ்வார்கள். தன்னுடைய சுயலாபத்தையும், புகழையும் தேடும் விதமாகவே அவர்கள் வாழ்க்கை இருக்கும். ஆனால் அவதார புருஷர்கள் மற்றவர்களைப்போல் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், அவர்கள் பிரபஞ்ச உணர்வை உடையவர்களாக இருப்பார்கள். ஸ்ரீ நஸகர்தத்தா மஹாராஜ் இருவித வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். கடை வியாபாரத்தை நடத்தினார், ஆனால் லாபம் சம்பாத்திக்கும் வியாபாரியாகச் செயல்படாமலிருந்தார். பின், குடும்பம், வியாபாரம் என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு காலணி கூட அணியாமல் இந்தியாவின் பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றார். இமையமலைச் சாரலில் தன் வாழ்நாள் முழுவதும் கழித்துவிட நினைத்தார். ஆனால் அவ்வாறு இருப்பது சரியில்லை என்று திரும்பவும் பழைய இடத்திற்கு வந்தார். அவர் பிரமாதமான ஆனந்தநிலையில் அமைதியாக வாழ்ந்துவந்தார். அவர் தன்னை உணரும் நிலையை அடைந்துவிட்டார்.

        படிப்பறிவில்லாதவராக இருந்தாலும், அவருடைய உரையாடல் உயர்ந்தத் தரத்தில் உள்ளது. ஏழ்மையில் பிறந்தாலும், செல்வந்தர்களைவிட செல்வந்தர் அவர். மி கிவி ஜிபிகிஜி என்ற இப்புத்தகத்தில் 101 உரையாடல்கள் உள்ளன.

      (ஆங்கிலத்திலிருந்து தமிழில் : அழகியசிங்கர்)

                                                    நான் எனும் உணர்வு

கேள்வி கேட்பவர் : இது தினமும் ஏற்படக்கூடிய அனுபவம். நாம் விழிக்கும்போது இந்த உலகம் திடீரென்று தோன்றுகிறது. எங்கிருந்து இது வருகிறது? |

மஹாராஜ் : எது வருவதற்கு முன்பும் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். எந்த மாற்றமும் இல்லாத பின்னணியில்தான், எல்லாத் தோற்றமும், தோற்றமின்மையும் ஒரு மாற்றத்தை உருவாக்க முன்வரும்.

கே.கே : விழிப்பதற்குமுன், நான் தன் நிலையற்ற நிலையில் உள்ளேன்.

மஹாராஜ் : எந்த அர்த்தத்தில்? எல்லாவற்றையும் மறந்த நிலையிலா? அல்லது எந்த அனுபவத்தையும் உணராத நிலையிலா? உங்களைப்பற்றி உணராத நிலையில் நீங்கள் இருக்க முடியுமா? நினைவாற்றலின் ஒரு குறைபாடு, இல்லாத நிலைக்கு ஒரு சாட்சியா? உங்கள் இல்லாத நிலையை ஒரு உண்மையான அனுபவமாக உங்களால் தெளிவாகப் பேச இயலுமா? உங்கள் மனம் இல்லை என்று கூட உங்களால் சொல்ல இயலாது. உங்களைக் கூப்பிட்டவுடன் நீங்கள் விழித்துக் கொள்ளவில்லையா? விழித்துக் கொண்டிருக்கும்போது, ‘நான்’ என்ற உணர்வு முதலில் வருவது தெரிகிறதா? தூங்கிக் கொண்டிருக்கும்போதோ மயக்கத்திலிருக்கும்போதோ, விதைபோல் தன்னுணர்வு இருந்துகொண்டுதான் இருக்கும். விழித்துக் கொண்டிருக்கும்போது, அனுபவம் இப்படி ஓடும்: “நான்தான் – உடல் – இந்த உலகத்தில்.” ஒரு உலகத்தில் ஒரு உடல் என்ற சிந்தனை கருத்தாக்கம் தொடர்ச்சியாகவும், ஒரே சமயத்திலும் ஏற்படக்கூடியது. மற்றவர்கள் யாரும் இல்லாத தருணத்தில், ‘நான்தான் என்கிற உணர்வு ஏற்படுமா? –

கே.கே : ஞாபகங்கள் மூலமாகவும், பழக்க வழக்கங்கள் மூலமாகவும் நான் எப்போதும் மற்றவராகத்தான் உணருகிறேன். எனக்குத் தெரிந்தது இந்த நான் மட்டும்தான்.

மஹாராஜ் : ஏதோ ஒன்று அறிந்துகொள்ளவிடாமல் தடுக்கிறது, உங்களை. மற்றவருக்குத் தெரிந்த ஒன்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால் என்ன செய்வீர்கள், நீங்கள்?

கே.கே: அவர்களின் உத்தரவு படி நான் அவர்களிடமிருந்து அறிந்துகொள்ள முயற்சிப்பேன்.

மஹாராஜ்: நீங்கள் வெறும் உடல்தானென்றோ அல்லது வேறு ஏதோ ஒன்றோ என்று தெரிந்து கொள்வது உங்களுக்கு முக்கியமாகத். தோன்றவில்லையா? அல்லது எல்லாமே ஒன்றுமில்லையா? நீங்கள் பார்ப்பதில்லையா? உங்கள் பிரச்சினைகள் முழுவதும் உடல் சம்பந்தப்பட்டதென்று – உணவு, உடை, இருப்பிடம், குடும்பம், நண்பர்கள், பெயர், புகழ், பாதுகாப்பு, வாழ்தல் பிரச்சினைகள் என்பதை? இவையெல்லாம் உடல் சம்பந்தப்பட்டவை என்பதை உணர்ந்தால், எல்லாம் அர்த்தமிழந்து போவதை உணர்வீர்கள். –

கே.கே : நான் உடல் மட்டுமல்ல என்று உணர்வதால் என்ன நன்மை இருக்கிறது?

ம : நான் உடல் மட்டுமல்ல என்று சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. ஒருவிதத்தில் நீங்கள்தான் எல்லா உடல் தொகுதிகளும், உணர்வுகளும், மனங்களும், அதற்கு மேலும். ‘நான்’ என்ற உணர்வை நோக்கி இன்னும் தீவிரமாகச் செல்லுங்கள், நீங்கள் புரிந்து கொள்வீர்கள். மறந்துபோன அல்லது தவறுதலாக வைத்துவிட்டப் பொருளை எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்? ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக உங்கள் மனதில் வைத்துக்கொள்வீர்கள். உடனடியாக ‘நான்’ என்ற உணர்வு முதலில் வெளிப்படும். எப்போது வருகிறது என்பதை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் அல்லது அமைதியாக அதைக்கூர்ந்து கவனியுங்கள். உங்கள் மனம், ‘நான் என்ற உணர்வில் அசையாமல் இருக்கும்போது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவத்தை உணர்ந்து கொண்டிருப்பீர்கள். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பதைத்தான் உங்களால் செய்யமுடியும். எல்லா உணர்வு நிலைகளிலும் நான் என்பது எப்போதும் உங்களுடன் இருக்கும்வரை, -உடல், உணர்வுகள், கற்பனைகள், எண்ணங்கள், உடமைகள் போன்ற பல உங்களுடன் பிணைத்துக் கொண்டிருக்கும். இந்த எல்லாச் சுய அடையாளங்களும் குழப்பத்தை உண்டாக்கும். இவற்றால் நீங்கள் உங்களை அறிந்துகொள்ள இயலாத நிலைக்குச் செல்கிறீர்கள்.

கே.கே : அப்படியென்றால் ‘நான்’ என்பது என்ன?

மஹா : நீங்கள் யார் என்பதை அறிந்துகொள்ளாமலிருப்பதுதான் சரியாக இருக்கிறது. நீங்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ளத் தேவையில்லை. அறிவு என்பது தெரிந்த எல்லாவற்றையும் பொதுவாகவோ, தனிப்பட்ட முறையிலோ விஜாரிப்பதுதான்! சுய அறிவு என்பது ஒன்றுமில்லை. ஏன்எனில், முழுவதும் உன்னை நிராகரிக்கும்வரை, உன்னால் அதை விவரிக்க முடியாது. பொதுவாக நீங்கள் சொல்லக்கூடியது, ‘நான் இது அல்ல, நான் அது அல்ல என்பதுதான். இதுதான் நான் என்ற அர்த்தத்துடன் நீங்கள் சொல்ல முடியாது. அது ஒரு அர்த்தமும் ஏற்படுத்தாது. நீங்கள் சொல்கிற, ‘நான் இது அல்ல’, ‘நான் அது அல்ல என்பதெல்லாம் நீங்களாக இருக்க முடியாது. நீங்கள் நிச்யமாக இன்னொன்றாக இருக்க முடியாது. உங்களை அவதானிக்கவும்முடியாது, கற்பனையும் செய்ய முடியாது. ஆனால், நீங்கள் இல்லாமல் அறிதலும் இல்லை, கற்பனையும் இல்லை . இதயம் உணர்வதை, மனம் நினைப்பதை, உடல் செயல்படுவதை உங்களால் கவனிக்க முடியும். அப்படி உங்களால் அவதானிக்கும் செயலால், நீங்கள் என்ன அவதானிக்கிறீர்களோ அது நீங்கள் இல்லை என்று தெரியவரும். நீங்கள் இல்லாமல் அவதானிக்க முடியுமா? உணரத்தான் முடியுமா? ஒரு அனுபவம் தொடர்பு உடையது. உணர்பவர் இல்லாமல் ஒரு அனுபவம் என்பது உண்மையாக இருக்க முடியாது. உணர்பவர்தான் அனுபவத்திற்கு உண்மையைச் சேர்க்க முடியும். ஒரு அனுபவம் உங்களுக்கு ஏற்படவில்லையென்றால் அதனால் உங்களுக்கு எந்த நன்மை கிடைக்கப் போகிறது?

கே.கே: ஓர் அனுபவத்தை உணர்பவரும், ‘நான்-தான்’ என்ற உணர்வும் கூட அனுபவமாக இருக்க முடியுமல்லவா?

மஹாராஜ் : நிச்சயமாக. உணரக்கூடிய ஒவ்வொன்றும் அனுபவம்தான். ஒவ்வொரு அனுபவத்திற்கும், ஒரு உணர்பவர் தானாக உருவாகி விடுவார். ஆனால் ஞாபகம் அதன் தொடர்ச்சியின் பிம்பத்தை உருவாக்கும். உண்மையில் ஒவ்வொரு அனுபவத்திற்கும் உணர்பவரும் உண்டு. உணர்பவர் – அனுபவம் உறவின் அடிப்படையில் தன்னை அறிதல் என்பது பொதுப்படையான ஒன்று. தன்னை அறிதலும், தொடர்ச்சியும் ஒன்றல்ல. ஒவ்வொரு பூவிற்கும் ஒவ்வொரு நிறமுண்டு ஆனால் எல்லா நிறமும் ஒரே வெளிச்சத்திலிருந்து வெளிப்படுகிறது. அதேபோல் எல்லா உணர்பவர்களும் பிரிக்கமுடியாத நுணுகமுடியாத அனுபவத்தில் தோன்றினாலும், ஒவ்வொருவர் நினைப்பும் வேறு வேறு. ஆனால், அடிப்படை சாரத்தில் சமம். காலத்திற்கும், வெளிக்கும் அப்பாற்பட்டு நிகழக்கூடிய எல்லா அனுபவத்திற்கும் இந்தச் சாரம்தான் அடிப்படியான ஊற்று.

கே.கே: எப்படி நான் அதை அடைய முடியும்?

மஹாராஜ் : நீங்கள் அதைப் பெறுவதற்கு போகத் தேவையில்லை. நீங்களேதான் அது. அது உங்களை அடையும், நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தால். உங்களுடைய பற்று உண்மையற்றதை நோக்கிப் போகட்டும். உண்மை தானாகவே மெதுவாக வந்து சேரும். நான்தான் இதை நடத்துகிறேன் அதை நடத்துகிறேன் என்ற கற்பனையை – விட்டுவிடுங்கள். அடிப்படையான உணர்வின் சாரத்தை உணருங்கள். அப்போது மகத்தான அன்பு வந்தடையும். அது உங்கள் விருப்பத்தைச் சார்ந்ததுமல்ல முன் தீர்மானித்ததுமில்லை. ஒரு சக்தி எல்லாவற்றையும் அன்பு மயமாக உருவாக்கும். அன்பைப் பொழியக்கூடியதாகவும் இருக்கும்.

65

நியூட்டன் என்ற இந்திப் படம்

அழகியசிங்கர்

2017 ஆம் ஆண்டு வெளிவந்த நியூட்டன் என்ற ஹிந்திப்படம் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்ததோடல்லாமல் உலகம் முழுவதும் பல விருதுகளைப் பெற்றது.  சமீபத்தில் ப்ரைம் வீடியோவில் இந்தப் படத்தைப் பார்த்தேன்.

இந்தப் படத்தின் இயக்குநர் அமித் வி மசுர்கர்.  இது இவரது இரண்டாவது படம். இந்தப் படத்தைத் தயாரித்தவர் மனிஷ் முன்டிரா.  இதில் முக்கியமான பாத்திரங்களில் நடித்தவர்கள் ராஜ்குமார் ராவ், பங்கஜ் திருப்பதி, அஞ்சலி பட்டேல்.  இந்தப் படத்திற்கான தயாரிப்பு செலவு 9 கோடி.  பணம் ஈட்டுக் கொடுத்தது 81கோடி.  

நியூட்டன் குமார் (ராஜ்குமார் ராவ்) என்பவர் அரசாங்கத்தில் புதியதாக குமாஸ்தாவாக வேலைக்குச் சேர்ந்திருப்பவர்.   அவரை தேர்தலை நடத்த நக்ஸலைட்டுகள் பிடித்து வைத்துள்ள சத்தீஸ்கரின் காட்டுப் பகுதியில் உள்ள ஊருக்கு அனுப்புகிறார்கள்.  அது நக்ஸலைட்டுகள் நிறைத்த பகுதி.   ஏற்கனவே இங்கு தேர்தலை நடத்த வரவேண்டியவர் இதய நோயால் பாதிக்கப்பட்டதால் நியூட்டன் குமாரை அனுப்புகிறார்கள்.  கூடவே அவர்களைப் பாதுகாக்க மத்ய காவல் படையும் செல்கிறது.  மத்ய காவல் படைக்குத் தலைமை வகுத்து நடத்துபவர் ஆத்ம சிங் (பங்கஜ் திருப்பதி) 

நக்ஸலைட்டுகள் எந்தத் தருணத்திலும் தாக்குதல் நடத்துவார்கள் என்ற பயத்துடன் எல்லோரும் கிளம்புகிறார்கள்.  காடுகள் வழியாக அவர்கள் போகும்போது படம் பார்க்கும் நமக்கும் எந்த நேரத்தில் அட்டாக் நடக்குமென்று பயம் ஏற்படுகிறது.  தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.  நடுவழியில் அந்தப் பகுதியில் வசிக்கும் மால்கோ (அஞ்சலி பட்டேல்) என்கிற லோகல் தேர்தல் அதிகாரியும் நியுட்டன் குமாருடன் சேர்ந்து கொள்கிறாள்.  அடர்த்தியான காட்டில் பாதுகாப்பு படையினரும் (பத்து பதினைந்து பேர்கள் இருப்பார்கள்). நியூட்டன் குமார் குழுவும் செல்லும் காட்சி அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.  போகும் கரடுமுரடான பாதையும், நெருக்கமாக இருக்கும் மரங்களும், நேரத்திற்கு நேரம் மாறும் வெளிச்சத்தையும் படம் பிடித்திருப்பது சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. ஆத்ம சிங், நியூட்டன் குமாருடன் பேசும்போது,  நியூட்டன் குமார் ஏன் இங்குத் தேர்தல் நடத்த வேண்டுமென்று பிடிவாதமாக இருக்கிறான் என்று ஆத்மசிங் நினைக்கிறான்.   அடிக்கடி நான் ஒரு தேர்தல் அதிகாரி, நான் சொல்வதைப் போல்தான் கேட்க வேண்டுமென்று ஆத்ம சிங்கை மிரட்டுகிறான் நியூட்டன் குமார். 

ஊருக்குள் நுழைகிறார்கள்.  அங்கு யாரும் கண்ணில் தென்படவில்லை.  திகைப்பாக இருக்கிறது நியூட்டன் குமாருடன் வந்திருந்த எல்லோருக்கும்.  ஆள் அரவமற்ற ஒரு கட்டடத்தைக் காட்டி இங்கேதான் தேர்தல் நடத்த வேண்டுமென்று ஆத்ம சிங் சொல்கிறான்.  அதிருப்தியுடன் அந்த இடத்தைப் பார்க்கிறான் நியூட்டன் குமார்.  ஒரே தூசியாக இருக்கிறது.  ஒரே ஒரு அறைதான்.  அந்தத் தூசிகளைத் தட்டி அவர்கள் எடுத்து வந்த மடக்கு நாற்காலிகளையும், மேசைகளையும் விரித்துப் போடுகிறார்கள்.

ஒரு வழியாக எல்லாவற்றையும் சரி செய்து நியூட்டன் குமாரும், தேர்தல் அதிகாரி மல்கோவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள்.  நியூட்டன் குமாருக்குக் கீழே அவனுக்கு உதவி செய்ய உதவியாளர்களும் ஒன்றும் புரியாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். 

சிறிது நேரத்தில் உதவியாளர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  நியூட்டன் குமார் வெறுத்து விடுகிறான்.  அங்குத் தேர்தல் நடத்துவதை வெளிநாட்டு நிருபர் பார்க்க வர உள்ளார் என்பதை அறிந்த பிறகு, அவர்கள் எல்லோரும் மக்கள் வசிக்குமிடத்திற்குப் போகிறார்கள்.  கூட்டமாக அவர்களை எதிர் கொள்கிறார்கள்.  

ஊரார்களைப் பார்த்துத் தேர்தலைப் பற்றி விவரிக்கிறான் நியூட்டன் குமார்.   ஹிந்தியில் அவன் சொல்வது எதுவும் அவர்களுக்கு விளங்கவில்லை.  கூடவே இருக்கும் மால்கோதான் அவர்கள் பேசும் மொழியில் மொழி பெயர்த்துக் கூறுகிறாள்.  ஒவ்வொரு கட்சியிலிருந்தும் யார் யார் நிற்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்கிறாள்.  அக்கூட்டத்தில் அவர்களின் தலைவன் போலெருவன் கேட்கிறான்.  நாங்கள் டெல்லிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோமா என்று. நியூட்டன் குமாருக்கு சங்கடமாகிவிடுகிறது. அவ்வளவு அப்பாவிகளாக இருக்கிறார்களே என்று நினைக்கிறான்.    ‘நாங்கள் ஓட்டுப் போட்டால் நக்ஸலைட்டுகள் எங்களைத் தாக்குவார்கள்.  ஓட்டுப் போடாவிட்டால் பாதுகாப்புப் படையினர் எங்களை மிரட்டுவார்கள்,’ என்கிறான். 

இந்த இடத்தில் ஆத்ம சிங் அங்கு வந்து அவர்களிடம் பேசுகிறான்.  அத்ம சிங் சொல்கிறான்.  ஓட்டு போடும் இயந்திரம் ஒரு விளையாட்டுப் பொருள்.   அதில் யானைப்படம், சைக்கிள் படம் எல்லாம் இருக்கும்.  இவர்கள் எல்லோரும்  ஆபத்தை விலைக்கு வாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறான்.  அதைக் கேட்டு நியூட்டன் அவனுடன் சண்டை போடுகிறான்.  ‘இவர்கள் யாரும் படிப்பறிவில்லாதவர்கள்.  அவர்களுக்கு இப்படிச் சொன்னால்தான் புரியும்,’ என்கிறான்.

அவர்கள் எல்லோரும் ஓட்டுப் போடும் இடத்திற்கு வருகிறார்கள்.  எல்லாரும் அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் போடுவதை விட அவர்களுக்குப் பிடித்த  சின்னங்களைப் பார்த்துப் போடுகிறார்கள்.  மேல்நாட்டுச் செய்தி நிரூபர் இதைப் பார்த்து இந்தியாவில் ஜனநாயகம் இப்படித்தான் நடக்கிறது என்று குறித்துக் கொள்கிறார்.

தேர்தல் நேரம் முடியும்வரை நியூட்டன் அங்கிருக்க விரும்புகிறான். பொய்யாக நக்ஸலைட்டுகள் அதிரடி என்று  அவனைச் சேர்ந்தவர்களை அந்த இடத்தை விட்டு விரட்டுகிறான் ஆத்ம சிங்.    இது ஒரு நாடகம் என்பதை உணர்ந்தவுடன் நியுட்டன் காட்டில் வந்து கொண்டிருக்கும்போது திரும்பவும் ஓட்டுப்போடும் இடத்திற்கு ஓடிப் போகிறான்.  ஆனால் போகவிடாமல் மத்ய காவல் படையினர் தடுத்து விடுகிறார்கள்.  தான் ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வு நியூட்டனுக்கு.

காட்டு வழியில் போய்க் கொண்டிருக்கும்போது அந்தப் பகுதியில் வசிக்கும் பெண் தேர்தல் அதிகாரி மால்கோ எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு விடைபெறுகிறாள்.  இன்னும் கொஞ்ச தூரம் போகும்போது 4 கிராமத்துக்காரர்கள்  ஓட்டுப் போடுவதற்காக வழியில் தென்படுகிறார்கள். மத்ய காவல் படைத்தலைவன் ஆத்ம சிங் இதற்கு உடன் படவில்லை.

நியூட்டனும் ஆத்ம சிங்கும்  தாங்கள் சொல்வதிலேயே உறுதியாக இருக்கிறார்கள்.  அந்தக் காட்டு வழியிலேயே ஓட்டுப் போடலாமென்று தீர்மானிக்கிறான் நியூட்டன்.  அதை எதிர்க்கிறான் ஆத்ம சிங்.  திடீரென்று நியூட்டன் ஆத்ம சிங்கின் ரைபிளைப் பிடுங்கிக் கொண்டு அவனை மிரட்டுகிறான்.  ஆத்ம சிங், ‘தன்னுடைய மத்ய காவல் படை வீரர்கள் ஒருவரைக் கூட இழக்க விரும்பவில்லை,’ என்கிறான். 

அதன் பின் மத்ய காவல் படையினரின் துப்பாக்கிகளைக் கீழே போட வைக்கிறான்.  வேறு வழியில்லாமல் எல்லோரும் துப்பாக்கிகளைக் கீழே போடுகிறார்கள்.

ஓட்டுப்போடும் நேரம் முடியவில்லை.  அவசரம் அவசரமாக நியூட்டனுக்கு உதவிக்கு வந்திருந்தவர்களை வைத்து ஓட்டுப் போட வைக்கிறான்.  கொஞ்சங்கூட கையில் வைத்திருக்கும் ரைபிளை நழுவ விடாமல் பார்த்துக் கொள்கிறான்.  அவர்கள் ஓட்டுப் போட்டு முடித்து விடுகிறார்கள்.

நியூட்டன் தன் கையில் வைத்திருந்த ரைபிளை கீழே வைத்துவிடுகிறான்.  அவ்வளவுதான். அவன்மீது உள்ள வெறுப்பால் எல்லோரும் அவன் மீது பாய்ந்து விடுகிறார்கள்.  

ஆறுமாதம் கழித்து ஆத்ம சிங் தன் மனைவி பெண்ணுடன் ஒரு டிபார்ட் மெண்ட் ஸ்டோரில் பொருள்கள் வாங்குகிறான்.  எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் இயல்பாக இருக்கிறான்.

நியூட்டன் குமாரை அவன் அலுவலகத்தில் லோக்கல் தேர்தல் அதிகாரி மால்கோ பார்க்க வருகிறாள்.  நியூட்டன் குமார் கழுத்தில் கட்டுடன் காட்சி அளிக்கிறான். அதே உற்சாகத்துடன்.  மால்கோ டீ குடிக்க கான்டீன் வரும்படி கூப்பிடுகிறாள்.   இன்னும் ஐந்து நிமிடங்கள் கழித்து வருகிறேன் அப்போதுதான் லஞ்ச் என்கிறான் நியூட்டன் பழைய உற்சாகத்துடன்.

இந்தப் படத்தைத் திறமையுடன் எடுத்துள்ள இயக்குநர் பாராட்டுக்குரியவர்.  

கௌதம புத்தர் – 6

அழகியசிங்கர்

புத்தர் ஒருநாள் சிராவஸ்தி போகும் வழியில் கிசா கௌதமி என்ற பெண்மணி ஒரு குழந்தையின் சடலத்தை எடுத்துக்கொண்டு அவரிடம் வந்தாள்.  புத்தர் தமது தெய்விக சக்தியால் இறந்த குழந்தையைப் பிழைக்க வைத்துவிடுவார் என்று யாரோ அவளிடம் கூறியிருந்தார்கள்.

அவள் சிராவஸ்தியில் ஒரு பணக்கார வணிகரை மணந்த ஏழை.  தன் ஒரே மகனை உயிரைப்போல் நேசித்தவள் அவள்.  தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது கொடிய பாம்பு கடித்து அங்கேயே அப்போதே இறந்து விட்டான் பையன்.  அன்னையைத் தேற்றுவாரில்லை.  குளிர்ந்துபோன சடலத்தைத் தோளில் போட்டுக்கொண்டு எதிரில் வந்தவர்களிடம் எல்லாம், பிள்ளையைப் பிழைக்க வைக்க மருந்து ஏதும் உண்டா என்று தெருவெல்லாம் அலைந்தாள்.  பாவம்.  கௌதமி பைத்தியமாகிவிட்டாள் என்று மக்கள் நினைத்தனர்.

எல்லாரும் அனுதாபப்பட முடிந்ததே தவிர ஏதும் செய்ய முடியவில்லை.  கடைசியாக ஒரு புதிய யாத்ரீகர்தான்,  ‘புத்தரிடம் போ! அவர் புனிதர்.  எல்லா துன்ப துயரங்களையும் துடைப்பவர்,’ என்று சொல்லியிருந்தார். கௌதமி புத்தரைக் காண ஓடோடிச் சென்றாள்.  இன்னமும் குழந்தை அவள் அணைப்பில்தான் இருந்தது.  அவர் திருவடிகளைப் பணிந்து, ‘சுவாமி, தயவு செய்யுங்கள் என் மகன் பிழைக்க மருந்து தாருங்கள்,’ என்று அழுதாள்.

அவள் துயரைக் கண்ட புத்த பிரான், ‘இருந்தால் ஒரு கை கடுகு கொண்டு வாயேன்,’ என்றார்.  ‘இதோ வருகிறேன்’ என்று அவள் கிளம்பியபோது, ‘குழந்தையோ கணவனோ, பெற்றோரோ, நண்பரோ யாருமே இறந்திராத வீட்டிலிருந்து கொண்டு வர வேண்டும்மா,’ என்றார் ஞானி.

ஒரு கை கடுகுக்காக கௌதமி வீடு வீடாக, சென்றாள்.  இங்கே யாராவது மகனோ மகளோ தாயோ தந்ததையோ நண்பரோ உறவினரோ இறந்திருக்கிறார்களா என்று அவளது கேள்விக்கு எல்லா வீட்டிலும் எந்தக் குடும்பத்திலும் பதில் ஆம் என்பதாக இருந்தது.  

ஊரெங்கும் தேடியும் சாவு நேராத ஒரு வீடும் அகப்படாதபோது கடைசியாக அவளுக்கு அந்த உண்மை உறைத்தது.  புத்தர் கூற முயன்றதும் அதுதான்.  சாவு எல்லாருக்கும் உள்ளதுதான் என்றாள் அவள்.  

குழந்தையை அடக்கம் செய்தாள்.  சாந்தமூர்த்தி புத்தரிடம் போனாள். ‘வருந்தாதே எதுவும் நிலையானது அல்ல,’ என்றார் மகான் புத்தர்.  

கௌதம புத்தர் – 5

அழகியசிங்கர்

கபிலவஸ்துவையும் விட்டுத் தான் கண்டறிந்த உண்மைகளை எங்கும் பிரசாரம் செய்ய புத்தர் புறப்பட்டார்.  சென்றவிடமெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய தரிசனத்துக்காகவும், அவருடைய பேச்சைக் கேட்கவும் வந்து கூடினர்.  பலர் அவருடைய கருத்துக்களால் கவரப்பட்டு புத்த மதத்தில் சேர்ந்தனர்.

புத்தரின் பிரிய மாணவர் ஆனந்தனுடன் புத்தர் அங்குத் தங்கியிருக்கும்போது வழக்கம் போல் ஆனந்தன் ஒரு நாள் காலை எழுந்து பிச்சை எடுக்க நகரத்தினுள் திருவோடு ஏந்தியபடி புகுந்தார்.

திரும்பும்போது அவருக்குத் தாகமெடுத்தது.   அருகிலிருந்து கிணற்றுக்குப் போனார்.  தாழ்த்தப்பட்ட சண்டாள ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண் நீரெடுத்துக் கொண்டிருந்தாள்.

“தங்கையே, தாகமாயிருக்கிறேன்.  தண்ணீர் தருவாயா?”  இதைக் கேட்ட அவள் வியப்போடு “நான் சண்டாளப் பெண்.  தெரியாதா?” என்றாள்.

“அம்மா, உன் குடி என்ன, கோத்திரமென்ன என்றா நான் கேட்டேன்.  உன்னிடம் தண்ணீர் தாராளமாக இருந்தால் எனக்கும் கொஞ்சம் கொடு.  தாகமாயிருக்கிறேன்,” என்றார்.

சாதி அடிப்படையிலான சமூகப் பிரிவுகளை புத்தர் ஏற்கவில்லை.  குறிப்பாகத் தீண்டாமைப் பழக்கத்தை மனித இனத்துக்கே அவமானமென அவர் கருதினார்.  தீண்டத்தகாதவர் என்று கருதப்பட்ட சண்டாள இனத்தில் பிறந்த அந்தப் பெண்ணிடம் ஆனந்தனைத் தண்ணீர் கேட்க வைத்தது அந்தக் கொள்கைதான்.

தன் கருத்தைத் தெளிவுபடுத்த சில சமயங்களில் அவர் கதைகளையும் உவமைகளையும் பயன்படுத்தினார்.  தினமும் போல் ஒருநாள் புத்தர் காலையில் பிச்சைக்குப் புறப்பட்டார்.  ஒரு அறிவில்லாத இளைஞன் அவரை காரணமே இல்லாமல் திட்டினான்.  புத்தர் அமைதியாக, மகனே! ஒருவன் தனக்குத் தரப்பட்ட அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது யாருக்குச் சொந்தம்? என்று கேட்டார்.  

அப்போது அது கொடுத்தவனையே மீண்டும் சேரும் என்று சொன்னான் அந்த இளைஞன்.  

நீ என்னை திட்டினாய், நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.  எதிரொலி ஒலிக்குச் சொந்தம், நிழல் அந்தந்தப் பொருளுக்குச் சொந்தம்.  இல்லையா?  அதேபோல் தீய செயல்கள் அவற்றைச் செய்தவனையே சென்றடையும் என்றார் புத்தர்.

இன்னொரு கதை.  வாரணாசி மன்னன் கதை.  வாரணாசி மன்னன் மிகவும் பலம் வாய்ந்தவன்.  கோசலநாட்டின் பலவீனத்தைக் கண்டு அவன் அதைத் தாக்கினான்.  ராஜாவும் ராணியும் அஞ்சி ஓடி வாரணாசியில் ஒரு மண்பாண்டத் தொழிலாளி வீட்டில் வாழ்ந்து வருகையில் அங்கு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.  திகவு என்று பெயர் வைத்தனர்.  திகவு சிறுவனாக இருக்கும் பொழுதே அவர்கள் சரணாகதியாக இருந்ததை காசிராஜன் கண்டுபிடித்து அவனது தாய்தந்தையருக்கு மரண தண்டனை விதித்தனர்.  தப்பித்துக் கொண்ட திகவு கொலைக்களம் சென்றான்.  அவனது தந்தையின் இறுதி வார்த்தைகள். ‘வெறுப்பு வெறுப்பை அகற்றாது.  வெறுப்பைத் தவிர்ப்பதன் மூலமே வெறுப்பை நீக்கலாம்’ என்பதே.

திகவு வளர்ந்து பல கலைகளும் கற்று காசிராஜன் அரண்மனையிலேயே வேலையில் சேர்ந்தான்.  விறுவிறுவென்று நம்பிக்குரிய ஒரு பதிவியிலமர்ந்த அவனை மன்னனே மிகவும் நேசித்தான்.  ஒரு நாள் வேட்டைக்குச் சென்ற மன்னன் தன் குழுவினரைப் பிரிந்து விட்டான்.  அவனும் திகவும் மட்டும் தனித்து விடப்பட்டனர். களைப்பினால் மன்னன் இவனது மடிமீது தலை வைத்து உறங்கிப்போனான்.

இதற்குத்தான் திகவு இத்தனை நாள் காத்திருந்தான்!  உறையிலிருந்து உருவிய வாளுடன், ‘என் பெற்றோரை நீ கொன்றாய்.  இப்போது என்னுடைய நேரம் வந்து விட்டது,’ என்று முழங்கினான்.

ஆனால் மின்னலைப்போல் தந்தையின் இறுதி மொழிகள் நினைவு வந்தன.  வாளைத் திரும்பவும் உறைக்குள் போட்டுவிட்டு, நடுங்கிய மன்னனை திகவு அரண்மனைக்கே அழைத்து வந்தான். 

இந்தப் பெருந்தன்மையான மன்னிப்பு மன்னனை உலுக்கி விட்டது.  மனம் வருந்தி, கோசல மன்னனிடம் கைப்பற்றிய அனைத்தையும் திருப்பிக்கொடுத்து திகவுக்கு தன் மகளையும் திருமணம் செய்து கொடுத்தான்.  திகவு போல மன்னிக்கும் குணம் வேண்டுமென்று புத்தர் மக்களுக்கு உபதேசித்தார்.  

கௌதம புத்தர் – 4

அழகியசிங்கர்

தான் கண்டுணர்ந்த உண்மையை உலகுக்கு உணர்த்த வேண்டி புத்தராகி விட்ட கதையை இன்னும் தொடர்கிறேன்   அவர் கொள்கைகளை மக்களிடையே பரப்ப அவருக்கு ஒரு தொண்டர் படை தேவைப்பட்டது.  காசிக்கருகே சாரநாத் நகரில் தங்கள் தவ முயற்சியைத் தொடர்ந்து வந்த தன் ஐந்து பழைய சீடர்கள் பற்றியே முதலில்  அவர் நினைத்தார்.  புனிதர் புத்தர் அவ்வூரை நோக்கிப் போனார்.

ஒரு மகான் முன் தாங்கள் நிற்பதை உணர்ந்தனர்  அவர் சொல்வதைக் கேட்க அமர்ந்தனர்.  புத்தரின் முதல் போதனை இந்த ஐந்து மாணவர்களிடம் தொடங்கியது.

தீவிர நிலைகளைத் தவிர்க்க வேண்டுமென்ற அறிவுறுத்தலுடன் அவர்களுக்கான புத்தரின் போதனை துவங்கியது.  விளையாட்டும் போக அனுபவமும் நிறைந்த வாழ்வைப் போலவே கடுந்தவமும் தியாக அனுபவமும் மட்டுமே நிறைந்த வாழ்க்கைக் கூட நல்லதல்ல என்றார் புத்தர்.  நடுநிலைப் பாதையே பொன்னான வழி.  இந்த வழி மூலமாகத்தான் ஒருவன் வாழ்வைச் சரியாகப் பார்க்கலாம்.  உண்மையையும் உணரலாம்.

இவ்வுலகம் துன்பங்கள் நிறைந்தது.  ஆசை.  அதாவது புலன்களில் மூலம் இன்பங்களை அனுபவிக்கும் வேட்கையே இத்துன்பங்களில் மூல காரணம்.  புனிதமான எட்டு வழிப்பாதையில் செல்வதன் மூலமாக துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம்.  நிர்வாணம் எனக் கூறப்படும் முக்தி நிலையை எய்தலாம்.  

புத்தர் கூறும் எட்டுவழிப் பாதை என்பது

1. நற்கொள்கை 2. நல்லார்வம் 3. நன்மொழி 4. நன்னடத்தை 5. நல்வாழ்வு 6. நல்முயற்சி 7. நல்லெண்ணம் 8. நற்சிந்தனை 

சாரநாத்தில் போதனை செய்தது ஒரு துவக்கமே.  தன் வாழ்ந்ளில் மீதி நாள் அனைத்தையும் புத்தர் தமது நல்லொழுக்க மார்க்கத்தை அனைத்து மக்களிடம் பரப்பும் பயணங்களிலேயே செலவிட்டார்.  அந்தக் காலத்தில் படித்தவர்களிடமும் செல்வர்களிடையேயும் சமஸ்கிருத மொழியே புழக்கத்தில் இருந்து வந்தது.  சாமானியர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக புத்தர் மக்கள் பேசிய மொழியான பாலியிலேயே தமது உரைகளை நிகழ்த்தினார்.

புத்தரின் போதனைகள் எளிமையானவை. புரிந்து கொள்ளக் கூடியவை.  புத்தர் வினைப்பயன் (கர்மா) என்ற தத்துவத்தை ஏற்றார்.

சாரநாத் போதனையின் விலைவாக புத்தரின் ஐந்து பழைய மாணவர்களும் அவரது முதல் ஐந்து சீடர்களாயினர்.   சங்கம் எனப்படும் பௌத்தத் துறவியர் அமைப்பின் முதல் துறவியராக, முதல் பிட்சுக்களாக, இவர்கள் அமைந்தனர்.  காலப்போக்கில் புத்தரின் கொள்கை பரவப் பரவ மேலும் மேலும் மக்கள் சங்கத்தில் சேர்ந்தனர்.

புத்தர் ஞானியான சில ஆண்டுகளுக்குள்ளேயே அவர் புகழ் வயதான அவரது தந்தையையும் எட்டியது.  மகனின் துறவுபற்றி சுத்தோதனர் எப்போதும் திருப்தி அற்றவராகவே இருந்தார்.  குறுகிய காலத்துக்கேனும் மகன் கபிலவஸ்துவுக்கு வரவேண்டுமென அவர் ஆசைப்பட்டார்.  மகன் மீண்டும் அரண்மனைக்கு வந்துவிட்டால் தனது பிட்சு உடைகளைக் களைந்து அரச மகுடம் தரிக்க ஒப்புக் கொளவாரென்று சுத்தோதனர் இன்னும் கூட நம்பினார்.

புத்தர் ராஜகிருகத்தில் போதனைகள் செய்து வருவதாகக் கேள்விப்பட்டதும் சித்தார்த்தரின் இளமைக்கால விளையாட்டுத் தோழர் காலூதயினை அனுப்பினார்.  புத்தரின் சொற்பொழிவு கேட்டு இவரும் துறவியாகிவிட்டாலும், மன்னருக்குத் தந்த சொல்லை மறக்கவில்லை.  மென்குரலில் தலைவா, தங்கள் தந்தையார், சித்தி பிரஜாபதி, மனைவி யசோதரா எல்லாரும் உம்மைக் காண ஆவலாயிருக்கின்றனர் உம்மை அழைத்துவரவே மன்னர் என்னை இங்கு அனுப்பினார் என்றார். புத்தரும் மன்னரைக் காண அரண்மனைக்குச் சென்றார். மன்னர் புத்தரின் கம்பீரத்தையும் ஞான ஒளியையும் கண்டு வியந்து போனார்.  எனக்கினி சோகமில்லை மனித இனமனைத்தையும் காக்கும் மார்க்கத்தை நீ கண்டு கொண்டாய் என்று சொல்லி புத்தரை அணைத்துக் கொண்டார்.

புத்தர் அரண்மனையில் தங்கவில்லை.  அரசர் தலைநகருக்கு அருகில் உள்ள ஒரு பூங்காவில் புத்தரையும் அவரை சார்ந்த சீடர்களையும் தங்க ஏற்பாடுகள் செய்தான்.  

துறவிகளின் வழக்கப்படி மறுநாள் காலை புத்தர் திருவோடு  ஏந்தி கிளம்பினார் புத்தர்.  செய்தியறிந்த சுத்தோதனர் என்னை ஏன் இப்படி அவமதிக்சிறாய் என்று கேட்டார். 

இதுதான் எங்கள் மரபு என்கிறார் புத்தர்.

மறு சொல்லின்றி மன்னர் மகானையும் மற்றவர்களையும் தமது மனையுள்  இட்டுச் சென்றார்.  அரச குடும்பம் வாழ்த்த வந்தது.  சித்தி பிரஜாபதியும் பிற மாதர்களும் வந்தனர்.

நீ இல்லாத ஏழாண்டுகளில் கடுந்துறவு பூண்டு யகோதரா வாழ்ந்தாள்.  மொட்டையடித்து மஞ்சள் ஆடை புனைந்து, அது ஒரு தவ வாழ்வு.  யசோதரா புத்தரைக் கண்டாள்.  அவர் திருவடிகளில் வீழ்ந்து அழுதாள்.  அவள் பக்திக்கு மெச்சி அவர் அவளையும் வாழ்த்தினார். 

புத்தரின் புத்திரன் ராகுலுக்கு வயது ஏழு.  தந்தையை அறியாத தனயன்.  தாத்தாவைத்தான் தந்தையென எண்ணியிருந்தான்.  புத்தர் கபிலவஸ்து வந்த ஏழாம் நாள் மகன் ராகுலனை இளவரசன் போல் அலங்கரித யசோதரா தந்தையிடம் சென்று தன் வாரிசு உரிமையை கேட்கச் சொல்ஙூ அனுப்பினாள்.  உரிமை கேட்ட சிறுவனைக் கண்டார் புத்தர். புத்தர் தன் சீடர் சாரிபுத்ரரைப் பார்த்து சங்கத்தில் இவனை சேர்த்துக் கொள் அதுவே இவனுடைய வாரிசு உரிமை என்றார்.

கௌதம புத்தர் – 3

அழகியசிங்கர்

துறவி ஆனப் பின் நிலையான உண்மையைத் தேடி புத்தர் ஒவ்வொரு ஊராகச் செல்கிறார்.  முதலில் சாக்கிய குடியில் ஒரு துறவியாகச் சாக்கிய முனியாக மாறுகிறார்.  அலைந்து அலைந்து வைசாலி நகரை அடைந்தார்.  அங்கு ஞானி அர்த்தகலாமரின் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கினார்.  வாழ்க்கை பற்றிய உண்மையை ஆராய்ந்தார்.  அவர் படித்த பலவித தத்துவங்களில் எதுவும் அவர் தேடிய உண்மைகளைக் காட்டவில்லை.

இரண்டாவதாக அவர் செல்கிற இடம்.  மகத நாட்டுத் தலைநகரான ராஜகிருகம்.  அங்கு ருத்ரகர் என்ற ஞானி நடத்தி வந்த புகழ் வாய்ந்த கல்வி நிலையத்தில் சேர்ந்தார்.  அந்த ஞானியின் கல்விப் புலமையில் சித்தார்த்தர் மதிப்பு வைத்திருந்தார்.  ஆனால் புலமை மட்டுமே நிலையான உண்மையைக் கண்டறியப் போதுமானதல்ல என்பதையும் விரைவிலேயே உணர்ந்தார். 

கடுந்தவ வாழ்க்கை ஒருவனுக்கு சத்தியத்தைக் காட்டுமோ? முனிவர்களின் தொன்மையான இவ்வழியை முயன்று பார்த்துவிட கௌதமர் முடிவு கட்டினார்.  அவரது சீடர்களாக விரும்பிய ஐந்து துறவியரும் அவருடன் சேர்ந்தனர்.  ஐவருடனும் அவர் ஒரு காட்டில் புகுந்தார்.  தவம் செய்யத் தொடங்கினார்.  உடலை வருத்திக்கொண்டு உணவு இன்றி கிட்டத்தட்டச் சாகும் நிலையை அடைந்து விட்டார்.  தான் தேடும் உண்மையை அடையும் வழி தெரியவில்லை.  கடுந்தவம் செய்வதில் அர்த்தமில்லை என்று எண்ணி அதைக் கைவிட்டார்.  திரும்பவும் உலக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டாரென்று எண்ணி அவர் சீடர்கள் அவரை விட்டு விலகினர்.

நிரஞ்சனா என்ற நதியில் மூழ்கினார்.  ஆறு அவரை அடித்துச் சென்றுவிடுமோ என்னும் அளவு அவர் பலவீனப்பட்டிருந்தார்.  பெரு முயற்சியுடன் கரை சேர்ந்தார்.  அந்தப் பகுதியில் சுஜாதா என்ற இளம் பெண் வாழ்ந்துவந்தாள்.  அவள் கொண்டுவந்த பால் பொங்கலைத் தின்று, களைப்புத் தீர்ந்தார்.

ஆழ்ந்த தியானமே, நிலையான உண்மையைத் தேடி அடையும் வழி என்று அவர் இறுதியாக முடிவு செய்தார்.  கயா நகரின் புற நகர்ப்பகுதியில் ஓர் அழகிய இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.  போதி மரத்தின் அடியில் சம்மணம் போட்டு அமர்ந்தார்.  உண்மையைக் கண்டறியாது இங்கிருந்து எழுவதில்லை என்று உறுதி கொண்டார்.

அந்த நிலையில் அவர் பல சோதனைகட்கு ஆளாக நேரிட்டதென்று சொல்கிறார்கள்.

நாற்பத்தொன்பதாவது நாள் அவர் வாழ்வு பற்றிய முழு உண்மையை உணர்ந்து கொண்டார்.  அவர் புத்தராக ஆனார்.  புத்தர் என்றால் ஞானம் பெற்றவர் என்று பொருள்.  எந்த மரத்தடியில் அவர் ஞானம் பெற்றாரோ, அந்த மரமும் அது முதல் போதிமரம் என்று பெயர் பெற்றது. 

கௌதம புத்தர் – இரண்டு

கௌதம புத்தர் – இரண்டு 

அழகியசிங்கர்

குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் யசோதரா என்ற உறவுக்காரப் பெண்ணைக் கண்டு அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளச் சித்தார்த்தன் விரும்பினான்.  யசோதராவுக்கும் சித்தார்த்தனைப் பிடித்துப் போயிற்று.  யசோதரைப் போன்ற அழகான மனைவியைப் பெற்ற பின்னர், தன் மகன் உலகைத் துறந்து துறவியாகி விடமாட்டான் என்று நினைத்தார் சுத்தோதனர்.

உலகில் துன்பமும் துயரமும் இருக்கிறது என்று கூட அறியாமல் சித்தார்த்தன வளர்ந்து வந்தான். ஆனாலும் சித்தார்த்தன் அரண்மனைக்கு வெளியிலும் ஒரு உலகம் இருப்பதை ஊகித்தே இருந்தான்.  வெளியுலகைக் காண வேண்டுமென்ற தன் அவாவை சுத்தோதனரிடம் வெளிப்படுத்தினான்.  அவர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.  தனக்குப்பின்னால் ஆளப்போகிறவன் நாட்டையும் மக்களையும் அறிந்து கொள்ள வேண்டுமென்று சுத்தோதனர் நினைத்தார்.

சித்தார்த்தன் கிளம்பும்போது, எந்தவிதமான துன்பத்தையும் அவன் காண நேர்ந்து விடக்கூடாது என்று எச்சரிகையுடன் இருந்தார் மன்னன்.  நான்கு அழகிய வெண் குதிரைகள் தேரை இழுத்துச் சென்றன.  சித்தார்த்தன் இருக்கையில் அமர்ந்திருக்க, ரதத்தை மெதுவாக ஓட்டிச் சென்றான் சன்னா என்ற தேர்ப்பாகன்.  தெருவின் இருபுறமும் மக்கள்கூடி வரிசையாய் நிள்று வாழ்த்த இளவரசன் வீதிவலம் வந்தான்.  

மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.  உலகம் மகிழ்வான இடம்தான் என்று நினைத்தான்.  ஆனாலும் மேலே போகவேண்டுமென்று  தோன்றவே பாகனிடம்,  இந்தப் பக்கம் போகலாமே என்று ஒரு சிறு சந்துப் பக்கத்தைக் காட்டிச் சொன்னான்.  தேர் திரும்பியது.  அங்கே இருந்தவர்கள் சித்தார்த்தனை எதிர்பார்க்கவில்லை.  அங்கே வரவேற்பு வளைவுகளில்லை அழுக்கான அவ்வீதியில் கூட்டமாகப் பரபரப்போடு மனிதர்கள் காணப்பட்டனர். கோலூன்றி ஒரு கூனக்கிழவன் தட்டித்தடுமாறி நடந்து வந்தான்.  வியப்புடன் சித்தார்த்தன், யாரது என்று கேட்டான்.  யாரோ கிழவன் என்றான் சன்னா.  அரண்மனை திரும்பிய சித்தார்த்தன் சிந்தனையில் ஆழ்ந்து போனான்.

எனது அழகிய யசோதராவும் முதுமையடைந்து இப்படி ஆகி விடுவாளா?  எனக்கும் முதுமை வ்நதுவிடுமோ?  என்றெல்லாம் யோசிக்கிறான்.

மீண்டும் ஒருநாள் நகர்வலம் கிளம்பினான்.  அன்று நடக்கவே சிரமப்பட்ட ஒரு நோயாளியைக் கண்டான்.  நோயும் பிணியும் வருவது இயல்பென்று விளக்கினான் தேரோட்டி.  

மற்றும் ஒருநாள் இறந்தவன் ஒருவனை சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்வதைக் கண்டான்.

‘இவர்கள் அந்த மனிதனை எங்கே கொண்டு போகிறார்கள்?’ என்று சன்னாவைக் கேட்டான்.  சன்னா அந்த மனிதன் இறந்து விட்டதையும் உடலை எரிப்பதற்காகக் கொண்டு செல்வதையும் கூறி பிறந்தவர் எல்லோரும் ஒருநாள் இறப்பது உறுதி என்பதை சித்தார்த்தனுக்குச் சொன்னான்.

முதுமை, நோய், சாவு மூன்றும் சித்தார்த்தனை ஆட்டிப் படைத்தன.  உலகம் உண்மையில் ஒரு துன்பம் நிறைந்த இடம் என்று இரக்கம் மிகுந்த இளவரசனுக்குத் தோன்றியது.  உலகில் ஏன் இத்தனை துன்பமும் துயரமும் என்று அறிய விரும்பினான். 

அடுத்த முறை தேரில் வரும்போது மஞ்சள் உடையணிந்த ஒரு சாதுவை சித்தார்த்தன் கண்டான்.  சாது அமைதியும் நிம்மதியும் கொண்டவராக இருந்தார்.

ஆர்வமாக, ‘அவர் யார்?’ என்று கேட்டான்.  சன்னா சொன்னான் : ‘அவர் ஒரு சாது.  துறவி.  துன்ப துயரங்களைக் கடந்தவர்.   இயற்கையுடன் ஒன்றி, நிரந்தரமான உண்மையை அமைதியாய் தேடுபவர்,’  என்றான்.  சித்ததார்த்தனுக்கு யோசிக்கத் தொடங்கினான்.  உண்மையில் இந்த நான்கு பேர்களைச் சந்தித்தது அவன் உள்ளத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.

அவன் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.  ராகுல் என்று பெயரிட்டார்கள்.  தான் எல்லாப் பற்றையும் விட்டுவிட்டுப் போய்விடவேண்டுமென்ற அவன் முடிவு ஓங்கியே இருந்தது.  மகன் பிறந்தது மகிழ்ச்சியாக இருந்தாலும் அவன் முடிவிலிருந்து சற்றும் மாறக் கூடாதென்று தீர்மானித்தான்.  மேலும் தாமதிக்காமல் உலகைத் துறப்பது என்று உறுதி கொண்டான்.

சித்தார்த்தனுக்கு அப்போது வயது 29.  ராகுல் மீது ஒரு அணைத்திருக்க, யசோதா தூங்கிக் கொண்டிருந்தாள்.  அந்த நள்ளிரவில் சித்தார்த்தன் எழுந்தான்.  இறுதியாக ஒரு முறை குழந்தையைத் தூக்க விரும்பினான்.  ஆனால் மனைவி விழித்துக்கொள்ளக்கூடும் என்ற அச்சம் எழவே திரும்பிப் பார்க்காமல் அரண்மனையை விட்டு விரைவாக வெளியேறினான்.  

நன்றியுள்ள தேரோட்டி சன்னா உடன் வர காட்டினுள் புகுந்தான்.  தன் தûலு முடியை நறுக்கி சன்னா மூலம் அரண்மனைக்குத் திருப்பிவிட்டான்.  தான் ஒரு சந்நியாசி ஆவதற்கு அடையாளமாக அவ்வாறு செய்துவிட்டு அரச உடைகளைக் களைந்து துறவி ஆடை அணிந்து சத்தியத்தைத் தேடும் முயற்சியில் மேலே போகலானான்.

ஆனந்தமும் மகிழ்ச்சியுமாக இருந்த சித்தார்த்தன் வாழ்க்கையில் முக்கியமான நான்கு நிகழ்ச்சிகள் நடந்தன.  ஒரு முதியவன், ஒரு நோயாளி, ஒரு பிணம், பிறகு முற்றிலும் துறந்த துறவி. எல்லா சுகபோகங்களும் கிடைத்த சித்தார்த்தன் போன்ற இளவரசன் எல்லாவற்றையும் துச்சமாக நினைத்து விடுவதை நம்மால் கற்பனை செய்ய முடியாது.  புத்தரின் வரலாற்றில் இந்த நான்கு நிகழ்ச்சிகளும் முக்கியமான பங்கு வகுக்கின்றன.

                                                                     (இன்னும் வரும்) 

கௌதம புத்தர்

அழகியசிங்கர்

‘வீலா ஜார்ஜ்’ எழுதிய ‘கௌதம புத்தர்’ என்ற புத்தகத்தைப் படித்தேன். ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ மூலம் வந்துள்ள புத்தகம் இது. இந்தப் புத்தகத்தைப் படித்தால் புத்தர் வாழ்க்கை சரிதம் முழுவதையும் தெரிந்து கொண்டு விடலாம். 

நான் இதுவரை புத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர முழுவதுமாக புத்தரைப் பற்றி படித்ததில்லை.  அதேபோல் பல கதைகள் நாம் கேள்விப்பட்டிருக்கிறோமே தவிர முழுவதும் புத்தகங்களாகப் படித்ததில்லை.  உதாரணமாக ராமாயணம், மகாபாரதம், காந்தியைப் பற்றி இப்படியெல்லாம். முன்னதாக வாய்ப்பேச்சில் நமக்குக் கதைகள் தெரிந்து விடும்.  முழுதாகப் படிக்க வேண்டுமென்பதில்லை.  

உதாரணமாக சிலப்பதிகாரம் கதை.   ராமலிங்க அடிகளார், பட்டினத்தார், அருணகிரிநாதர். 

 324 பக்கங்கள் கொண்ட ‘தர்மானந்த கோஸம்பி’ எழுதிய ‘பகவான் புத்தர்’ என்ற புத்தகத்தை கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழிபெயர்த்துள்ளார்.  சாகித்திய அகாதெமி புத்தகம் இது. அதை எப்போது எடுத்து வாசிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை.  சுருக்கமாக புத்தரைப் பற்றி வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட இப் புத்தகத்தை எடுத்து வாசித்தேன்.

இதில் உள்ள தகவல்களை இங்கு அளிக்க விரும்புகிறேன்:

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் சாக்கியர்கள் என்ற ஓர் இனத்தவர் வாழ்ந்து வந்தார்கள்.  அவர்களுடைய அரசர் சுத்தோதனர்.  அரசி மகாமாயா.  கபிலவஸ்து என்ற அழகிய நகரமே அவர்களது தலைநகரம்.

மகாமாயா கருத்தரித்தாள்.  உரியக் காலம் நெருங்கியதும் ராணி தாய் வீட்டுக்குக் கிளம்பினாள்.  ஆனால் வழியிலேயே, லும்பினி நகரில் சால மரங்கள் அடர்ந்த ஒரு தோப்பில் ஒரு  குழந்தையைப் பெற்றெடுத்தாள்.  அசித முனிவர் ஒரு நாள் குழந்தையைக் கையில் எடுத்தபடி தாங்கொணாத மகிழ்வுடன் “ நிச்சயமாக இவன் ஒரு மகான் ஆவான் என்று வியந்தார்.  அசிதரின் பேச்சைக் கேட்டு அரசரும் அரசியும் மகிழ்ந்தனர்.  குழந்தைக்கு சித்தார்த்தன் என்று பெயரிட்டனர்.   குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் ராணி இறந்து விட்டாள்.  மன்னரின் இரண்டாவது மனைவியும் மகாமாயாவின் தங்கையுமான பிரஜாபதி சித்தார்த்தனைத் தன் மகனைப் போலவே வளர்த்து வந்தாள்.

எல்லா பண்டிதர்களும் மகன் குருவாகப் புகழ் பெறப் போகிறான் என்று கூறுகிறார்கள்.  மன்னர்களுக்குரிய வீரத்தைக் கடைப்பிடித்து உலகை வெல்ல வேண்டுமென்று சுத்தோதனர் விரும்புகிறார். மகன் துறவியாகாமல் இருக்க வேண்டுமென்றால் துயரங்கள் எதுவும் தெரியாதபடி வளர்க்கவேண்டும் என்று நினைக்கிறார்.  மகனுக்காக மூன்று அரண்மனைகள் கட்டுகிறார். நிழல்தரும் நெடிய மரங்கள் சூழ்ந்தது ஒன்று, பெரிய அரங்கங்கள் கொண்ட அரண்மனை   இரண்டாவது, உள்ளேயே பலவித விளையாட்டுகளுக்கு வசதியான மழைக்காலத்துக்கு உகந்தது மூன்றாவது.

இளவரசன் ஆடம்பரத்துடன் வசதியாக வாழ்ந்து வருகிறான்.  சூடு குளிர் ஏதுமறியாத வாழ்க்கை.  அவனது தேவைகளைக் கவனிக்க நூற்றுக்கணக்கான சேவகர்கள்.  தேவதத்தன் என்ற உறவினனும் அமைச்சர் மகனான காலூதயினும் அவன் தோழர்கள். 

ஒருநாள் சித்தார்த்தன் அரண்மனை நந்தவனத்தில் நடை பயின்று கொண்டிருக்கும்போது, தலைக்கு மேலே அன்னப் பறவைகளின் கூட்டமொன்று பறந்து சென்றது.  எங்கிருந்தோ ஒரு அம்பு விர்ரென்று காற்றைக் கிழித்துக்கொண்டு வந்தது.  ஒரு பறவை துடிதுடித்தவாறு கீழே விழுந்தது.

சித்தார்த்தன் பறவையிடம் விரைந்து சென்று மெல்ல அந்த அம்பை உருவி எடுத்தான்.  காயத்தைக் கழுவி, கட்டுப் போட்டான்.  அப்போது தேவதத்தன் அங்கு வந்து பறவையைத் தன்னிடம் தரச் சொன்னான்.  சித்தார்த்தன் தர மறுத்து விட்டான். 

தேவதத்தன் மன்னரிடம் சென்று, ‘நான் வீழ்த்திய பறவையை சித்தார்த்தன் தர மறுக்கிறான்’ என்று முறையிட்டான்..சுத்தோதனர் மகனை அழைத்துக் கேட்டார்.  ‘தேவதத்தன் இந்த அன்னத்தைக் கொல்ல முயன்றான்.  நான் அதைப் பிழைக்க வைத்தேன்.  ஒரு உயிர் அதை அழிக்க முயல்கிறவனிடம் சேர வேண்டுமா அல்லது அதைக்  காப்பாற்ற முயல்கிறவனிடமா?’  சித்தார்த்தன் இந்தக் கேள்வி முக்கியமானது.  மன்னன் அவன் பக்கம்தான் தீர்ப்புக் கூறினான்.  பின்னால் புத்தனாக மாறுவதற்கு முன்னாலேயே சித்தார்த்தனுக்கு உயிர்வதைக் கூடாது என்பது தெரிந்திருக்கிறது.  இந்த நிகழ்ச்சியே அதற்கு ஒரு உதாரணம்.”

                                                                      (இன்னும் வரும்)

நினைத்துப் பார்க்கிறேன்….

அழகியசிங்கர்

இன்று எப்போதும்போல் தூங்கிவிட்டு எழுந்தேன்.   வழக்கம் போல் முகநூல் பக்கம் திறந்தேன்.  கண்ணில் பட்டது அம்ஷன்குமார் முகநூலில் எழுதியது.  சுதிப்தா பாமிக் எழுதிய  PONDS OF JALDANGA என்ற நாவலைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.  70வயதில் அவர் எழுதிய முதல் நாலல் என்று எழுதியிருந்தார்.   இந்தப் புத்தகத்தைப் பற்றிய கூட்டமொன்று மார்ச்சு மாதம் ஏழாம் தேதி  சென்னையில் நடந்தது.

ஏற்கனவே 2015ஆம் ஆண்டு சுகிப்தா எழுதிய பாலோக் என்ற வங்காள நாடகத்தைத் தமிழ் படுத்தி வேலி என்ற பெயரில் அம்ஷன்குமார் தயாரித்த நாடகம் 2015ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள  அலையன்ஸ் பிரான்சிஸில் நடந்தது.

அன்று நாடகத்தைப் பார்க்க அசோகமித்திரனை அழைத்துக்கொண்டு போனேன்.  நாடகத்தைப் பார்க்க பல படிக்கட்டுகளைத் தாண்டி வர வேண்டியிருந்தது.  

அசோகமித்திரன் நாடகத்தைப் பார்த்து எழுதிய கட்டுரையை இங்கே தருகிறேன். 

நாடகப் பிரதி

அசோகமித்திரன்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட =மிருச்சகடிகா+ இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடிக்கப்பட்டு ரசிக்கப்படுகிறது.  அதற்கும் முன்பும் எழுதப்பட்டிருக்கலாம் என்று  அறியப்படும் பல விசேஷமான கிரேக்க நாடகங்களுக்கு இன்றும் மேடையிலும் படப்பிலக்கியத்திலும் தேவை இருக்கிறது.  குப்தர்கள் காலத்து சாகுந்தலம் 19ம் நூற்றாண்டில் மஹா இலக்கிய மேதை என்று கொண்டாடப்படும் ஜெர்மானியர் கதேயால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.  காரணம்.  இவையெல்லாவற்றுக்கும் எழுத்துப் பிரதி இருக்கின்றன.  நல்ல நாடகப் பிரதி இருக்கும்வரை அந்த நாடகம் இருந்துகொண்டே இருக்கும்.

வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் தயாரிப்பதில் ஒரு நிபுணர் என்று இன்று கருதப்படும் அம்ஷன்குமார் ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.  சில நாட்கள் முன்பு நார்வே நாட்டில்  ஓர் இந்தியத் தாய் தன் இரண்டு வயதுக் குழந்தைக்குக் கையால் உணவு ஊட்டினாள் என்ற காரணத்திற்காகக் குழந்தை அவளிடமிருந்து பறிக்கப்பட்டு வேறு குழந்தைகள் இல்லாத வெள்ளைக்கார தம்பதியரிடம் ஒப்படைக்கப் பட்டது.  இது அமெரிக்க வாழ் இந்திய நாடகாசிரியர் ஒருவருக்கு 90 நிமிட நாடகம் எழுதத் தூண்டியிருக்கிறது.  முரட்டு குணம் படைத்த ஒருவன் அவனுடைய ஒன்றரை வயதுக் குழந்தையைக் கோபத்தால் தூக்கி குலுக்கியிருக்கிறான்.  அது பேச்சு மூச்சில்லாமல் போக மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கிறது.  அவர்கள் காவல் துறைக்குத் தகவல் தந்து விடுகிறார்கள்.  குழந்தை இனி மீண்டும் பெற்றோர்களிடம் தரப்படாது.  கணவன் மீது வழக்கும் தொடரப்படக் கூடும்.  அப்போது அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டால் தண்டனை அவ்வளவு கடுமையாக இருக்காது.

இந்த நாடகத்தில் கணவனாக அம்ஷன்குமாரின் மகன் ராஜீவ் ஆனந்த் சிறப்பாக நடித்தாலும், அவனுடைய அப்பாவி மனைவியாக நடித்த பரீன் அஸ்லம் முதல் பரிசைப் பெற்று விடுகிறார்.  நாடகத்துக்காக மேடை ஜோடனை ஏதும் இல்லாதபோதும் அயல் நாட்டு உணர்வு நாடகத்தின் வலுவால் ஏற்படுத்தப்படுகிறது.  நாடகத்திற்கு திடமான பிரதி இருக்கிறது.  ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டு நாடகத் தன்மையே இல்லாத மேடை நாடகங்கள் மத்தியில் பூத்திபூர்வமான இந்த நாடக அனுபவம் மிகுந்த    மகிழ்ச்சியைத் தந்தது.  நாடகத்தின் தலைப்பு =வேலி+.  மூலப் பிரதியை எழுதியவர் சுகித்தா பௌமிக்.  தமிழ்ப்பிரதியைத் தயாரித்தவர் அம்ஷன்குமார்.  இப்ஸன், டென்னிஸி வில்லியம்ஸ் போன்றோர் எழுதிய நாடகங்களோடு ஒப்பிடக்கூடிய இந்த நாடகம் எல்லா நாடகப் பார்வையாளர்களுக்கும் மனதில் பல கேள்விகளை எழுப்பும்.

உடனே எழக்கூடிய கேள்வி போலி நாடகங்களையும் அற்ப எதிர்மறைக் கருத்துகளையும் மாபெரும் தரிசனங்களாகக் காட்டுவதும், அவற்றைப் பற்றிப் பத்தி பத்தியாக உடனுக்குடனே செய்தியும் படங்களும் வெளியிடும் சென்னை ஆங்கில ஏடுகள் இந்த நாடகம் பற்றி இன்று வரை அபிப்பிராயம் சொல்லவில்லை.

                                                                                      (தேதி : 28.09.2015)

அமேசான் கிண்டலில் நவீன விருட்சம் 112வது இதழ்

அழகியசிங்கர்

விருட்சம் 111வது இதழ் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை.  ஆனால் முடிந்த மாதம்  டிசம்பர் 2019.  இதைத் தொடர்ந்து புத்தகச் சந்தை ஜனவரி மாதம் நடந்தது.  112வது இதழ் கொண்டு வர முடியவில்லை.  புத்தகக் காட்சி முடிந்தவுடன் பிப்ரவரி மாதம் முழுவதும் சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருந்த புத்தகங்களை அடுக்கி வைப்பதில் பெரும்பாலான நேரம் போய்விட்டது.  கூடவே நண்பர் ஒருவரும் உதவி செய்தார். 

மார்ச்சு மாதம் வந்தவுடன் கிட்டத்தட்ட 112வது இதழை முடித்து விட்டேன்.  ஒருவழியாக அச்சில் கொண்டு வரத் தயாராக இருந்தபோது கொரானா விருட்சத்தைத் துரத்தி விட்டது.  இதோ இதழை அச்சடிக்கத் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். 

ஆனால் நவீன விருட்சம் இதழை எப்படியாவது கொண்டு வர வேண்டுமென்று தோன்றியது.  ஏற்கனவே நவீன விருட்சம் இதழ் 105 ஐ நான் அமேசான் கிண்டலில் வெளிப்படுத்தியிருக்கிறேன்.   கிண்டலில் அந்த இதழை பலர் வாசித்திருக்கிறார்கள்.  அதேபோல் 112வது இதழையும் கொண்டு வர நினைத்து கொண்டு வந்து விட்டேன்.  கிண்டலில் நவீன விருட்சத்தை விலை கொடுத்து வாங்காமல் பக்கங்களை வாசிக்கலாம்.  80 பக்கங்கள் கொண்ட இந்த இதழை சில மணித்துளிகளில் வாசித்து விடலாம். நான் இதுவரை அமேசான் கிண்டலில் 9 புத்தகங்கள் கொண்டு வந்துள்ளேன். 

வழக்கம்போல் விருட்சம் 112வது இதழில் பங்குப் பெற்ற படைப்பாளிகள்.
  1. பதில்கள் – கேள்விகள் – பா. ராகவன்
  2. பிரதீபன் கவிதை
  3. நானும் – பராசக்தியும் நலம் – 1 – கடிதம் – சுப்பு
  4. அரசியல் + சினிமா + இலக்கியம் – பாதாளச்
    சாக்கடை – கட்டுரை – முத்துக்கிருஷ்ணன்
  5. வனம் தேடும் சிறகுகள் – கவிதை – பிறைநிலா
  6. கடிதம் – வளவ துரையன்
  7. லாரா – சிறுகதை – ரகுராமன் ஜெயராமன்
    8.. சிகப்பு முக்கோண காலம் – கட்டுரை –
    சந்தியா நடராஜன்
  8. அழகியசிங்கர் கவிதைகள்
  9. ஏழை நல்லவனாக இருப்பதில் உலக அதிசயங்களில்
    ஒன்றாகி விட்டது – சிறுகதை – ஸிந்துஜா
  10. மேழி கவிதைகள்
  11. பிரதீபன் கடிதம்
  12. ஸ்ஸ்சுரங்கம் – சிறுகதை – சிறகு இரவிச்சந்திரன்
  13. அதங்கோடு அனீஷ்குமார் கவிதைகள்
  14. சாயல் – சிறுகதை – சத்யா ஜீ பி
  15. ஜீவன் பென்னி கவிதைகள்
  16. எண்ணம் – கவிதை – ந பானுமதி
  17. மழையமைதி – கவிதை – நந்தாகுமாரன்
  18. நேர்த்தி – சிறுகதை – பிரபு மயிலாடுதுறை
  19. அஞ்சலட்டை கதைகள் – அழகியசிங்கர்
  20. மற்றுமொரு மூக்கு வதம் – சிறுகதை
    லதா ரகுநாதன்
  21. உரையாடல் இதோ கிண்டலில் போய் பார்க்க இந்தச் சுட்டியையும் இணைத்துள்ளேன்.