மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 86

வீடும் நண்பனும்

அப்பாஸ்

காலை வந்தது
குளித்து, சாப்பிட்டு,
அலுவலகம் புறப்பட்டேன்.
என் கையெழுத்து பதிவுடன்
உனக்கான கோப்புகள் நகர்த்தப்பட்டன
மாலை வந்தது

தேநீரும், நண்பர்களும், சமூகமும்
இரவு வந்தது
புஸ்தகங்களும் குழந்தையும்
தூக்கமும்.
காலை வந்தது
மாலை வந்தது
இரவு வந்தது
கோப்புகள் நகர்த்தப்படுகிறது
தேநீரும் புஸ்தகங்களும்
பிரயாணமும்.
காலை வந்தது
மாலை வந்தது
இரவு வந்தது
ஒரே அலையில் யாவும் மூழ்கும்
அதிசயத்தில்
எனது அலுவலகம், புஸ்தகம்
வீடும், நண்பனும்,

நன்றி : வரை படம் மீறி – கவிதைகள் – அப்பாஸ் – சமி வெளியீடு
21/7 எ அசோக் நகர் 2வது தெரு, கதிரேசன் கோவில் ரோடு, கோவில்பட்டி 627702 – பக்கங்கள் : 64 – விலை : 6 – ஆண்டு : 1990

பிரமிளின் மீறல் பேட்டி…

20 ஆண்டுகளுக்கு முன்னால் பிரமிள் ஒரு ஜனவரி மாதம் ஆறாம் தேதி இறந்து விட்டார். அதை நினைவுப்படுத்தும் நிகழ்ச்சியாக இலக்கியவீதி இனியவன் üகருத்தில் வாழும் கவிஞர்கள்,ý என்ற தலைப்பில் பிரமிளை ஞாபகப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. பிரமிள் படைப்புகளைப் பற்றி பேச கால சுப்பிரமணியன். üஅன்னம் விருது பெற்றவர் கவிஞர் ஸ்ரீநேசன்.
நான் திரும்பவும் என் நூலகத்திலிருந்து பிரமிளை தோண்டி எடுக்க ஆரம்பித்தேன். பிரமிள் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் நான் தவித்த தவிப்பைப் பற்றி நினைத்துக்கொண்டேன். வேலூர் பக்கத்தில் உள்ள கரடிக்குடி என்ற கிராமத்தில் உள்ள மருத்துவ மனையில் அவருடைய பூத உடலைப் பார்க்கும் வரை என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது.
அவர் பூத உடலைப் பார்த்தவுடன் என் படபடப்பு அடங்கிப்போய் சாதாரண நிலைக்கு மாறிவிட்டேன். இந்த மாற்றம் எனக்கு இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.
மீறல் குழுவினர் பிரமிளுக்கு ஒரு சிறப்பு மலர் கொண்டு வந்தார்கள். அந்தக் குழுவினர் பலரை அணுகி பிரமிள் படைப்புகளைப் பற்றி எழுதி கட்டுரை கேட்டார்கள். பிரமிள் என்றால் எதற்கு வம்பு என்று நினைத்துக்கொள்வார்கள். பலர் எழுதித் தரவில்லை. அப்போது பிரமிளை அடிக்கடி பார்ப்பேன். என்னிடமும் போனபோகிறது என்று, பிரமிள், üஒரு கட்டுரை எழுதித் தாருங்கள்,ý என்று கேட்டார். என்னிடம் அவருக்கு அந்த சமயத்தில் நம்பிக்கை எழவில்லை. ஆனால் நான் அவர் கவிதைகளைக் குறித்து கட்டுரை எழுதிக்கொடுத்தேன். அக் கட்டுரையைப் படித்துவிட்டு எப்போதும் பாராட்டுவார். பிரமிளின் சில கருத்துகளுக்கு நான் உடன்படவில்லை.
திரும்பவும் அவர் கொடுத்த பேட்டி, விமர்சனக் கட்டுரைகள் படிக்கும்போது ஒரு துப்பறியும் நாவல் படிப்பதுபோல் சாகசம் நிரம்பியதாக இருந்தது. ரஜனி என்ற நடிகர் ஆன்மிக அரசியல் என்று சொல்வதுபோல் பிரமிள ஆன்மிக விமர்சனம் செய்து உள்ளார். அவருடைய கவிதைகளில் எனக்குப் பிடித்தப் பகுதி கடைசியாக எழுதிய அதிரடிக் கவிதைகள்தான். ஒரே நாளில் 30 கவிதைகள் எழுதினார் என்று கால சுப்பிரமணியன் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாக இருந்தது. அதிரடிக் கவிதைகள் என்ற பெயரை சுப்பிரமணியன்தான் குறிப்பிட்டிருக்கிறார்.
20 ஆண்டுகள் கழித்து திரும்பவும் பிரமிள ஞாபகப்படுத்தும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்த அமைப்பாளர்களுக்கு என் நன்றி உரித்தாகும்.

பிரமிள் மீறல் பேட்டியில் எழுதியவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
‘ ‘உண்மையை அடைவதற்கு ஒரே வழி மௌனம்தான்.’
‘இனக்குழுவாதப் பார்வை உள்ள ஒருவர், எவ்வளவு பெரிய திறனாளியாக இருந்தாலும், போகப்போக அந்தத் திறனை இந்த இனக்குழுப் பார்வை அரித்து ஓட்டை போட்டுவிடும்.’
‘கவிதை இன்டலக்சுவலான அதிர்ச்சியை ஏற்படுத்துகிற ஒரு வெளியீடு. இன்டலக்சுவலாக மட்டுமல்ல, ஆழ்ந்த தேடல் சமாச்சாரங்களில் கூட ஒரு அதிர்ச்சியைக் கவிதையால் ஏற்படுத்த முடியும்.’
‘தமிழ் ‘இலக்கிய’ எழுத்தாளர்களிடையிலே ஆழமான வாசகர் ஒருவரை இனித்தான் நான் சந்திக்க வேண்டும்.’

நிழலும் காற்றும்….

புத்தகம் விற்கிறதோ இல்லையோ அற்புதமான காற்றும், மரங்களின் நிழலும் என்னைப் பரவசப்படுத்தாமல் இல்லை. எதிரில் ஒரு மரம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமாய் காட்சி அளித்தது. அந்த மரத்தை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்துவிடலாம். அவ்வளவு அற்புதம் அந்த மரம்.
நூல் நிலையம் இருந்தத் தெருவில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் ஒவ்வொருவர் புத்தகம் வாங்கியிருந்தால், நான் கொண்டு சென்ற புத்தகங்கள் எல்லாம் விற்றிருக்கும். ஆனால் யாரும் வீட்டை விட்டு வெளியில் வந்த மாதிரி தெரியவில்லை. அதுதான் உலகம்.

‘புறாப்பித்து’ என்கிற எஸ் ராமகிருஷ்ணன் கதை

என் கையில் 18.04.2018 ஆம் தேதியிட்ட ஆனந்தவிகடன் கிடைத்தது. உடனே அதில் வெளிவந்த கதையைப் பார்த்தேன். எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய ‘புறாப்பித்து’ என்ற கதை. உடனே படிக்க ஆரம்பித்தேன். எனக்கு என்ன தோன்றியது என்றால் ராமகிருஷ்ணனின் இந்தக் கதையை எப்படி ஆனந்தவிகடனில் பிரசுரம் செய்தார்கள் என்றுதான். இது ஒரு சிறுபத்திரிகையில் வர வேண்டிய கதை. இக் கதையை ஆனந்தவிகடன் பிரசுரம் செய்ததன் மூலம் ஆனந்தவிகடன் தன் தரத்தை உயர்த்திக்கொண்டதாகத்தான் நான் சொல்ல விரும்புகிறேன்.
ராமகிருஷ்ணன் கதைகளை வாசிக்கும் வாசகர்கள் இக் கதையை எளிதாகப் புரிந்துகொள்வார்கள். ஆனால் சாதாரண ஆனந்தவிகடன் வாசகனுக்கு இக் கதை புரியுமா என்ற கேள்வி என்னுள் எழாமல் இல்லை. ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் இதுமாதிரியான கதைகளைப் பிரசுரம் செய்து சிறுபத்திரிகை (ஒன்றிரண்டு) என்று வரும் பத்திரிகைகளின் இடத்தை வெற்றிடமாக மாற்றி விடுகிறார்கள் என்றும் தோன்றுகிறது.
அதனால் இனிமேல் சிறுபத்திரிகைகள், முன்பு பெரும் பத்திரிகைகளில் வெளிவந்த சாதாரண கதைகளைப் பிரசுரம் செய்து தங்கள் வெற்றிடத்தை நிரப்ப வேண்டுமென்று தோன்றுகிறது. சிறு பத்திரிகை பெரும் பத்திரிகைக்கு நடுவில் இருக்கும் கோடு அழிக்கப்பட்டு விட்டதாக நினைக்கிறேன். இந்த இடத்தில் சிறுபத்திரிகை எதற்கு என்ற கேள்விக்குப் போகவில்லை. எழுதுபவர்கள் அதிகமாக இருக்க இருக்க சிறுபத்திரிகைகளும் அவசியம்.
இனி ராமகிருஷ்ணன் கதைக்கு வருகிறேன். கிட்டத்தட்ட இக் கதையில் வரும் கோவர்த்தன் நிலைக்குத்தான் பதவி மூப்பு அடையும் தறுவாயில் இருக்கும் வயதானவர்கள் பலரும் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர்களுக்கு என்ன செய்வது என்பது தெரியவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருந்து இருந்து அவர்களுக்கு வேற எதையும் செய்ய முடியவில்லை.
அவர் அலுவலகக் கட்டடத்திற்கு எதிரில் இருக்கும் மத்திய உணவு சேமிப்பு கிடங்கு சுவர் மீது வீற்றிருக்கும் புறாக்கள் மீது கவனம் போகிறது. வரிசையாக புறாக்கள் அமர்ந்து இருக்கின்றன. அதில் ஒரு புறா மட்டும் வித்தியாசமாக இருக்கிறது. அது சாம்பல் நிறத்தில் இருக்கிறது. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள்.
திடீரென்று வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்ததுபோல் இந்தப் புறாக்கள் மீது கவனம் கொள்கிறார் கோவர்த்தன். புறாக்களை எண்ணத் தொடங்குகிறார். அவர் கண் பார்வையில் தென்படும் புறாக்கள் 16 எண்ணிக்கைக் கொண்டதாக உள்ளன.
தாம்பரத்தில் குடியிருக்கும் அவர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மேற்கு மாம்பலம் என்று பல இடங்களில் கூடும் பல புறாக்களை எண்ண ஆரம்பிக்கிறார். ஒரு சிறிய நோட்டில் குறிப்பு எடுத்துக்கொள்கிறார். எந்தந்த இடத்தில் எத்தனைப் புறாக்கள் என்று. கிட்டத்தட்ட கோவர்த்தன் புறா மாதிரியாக மாறி விடுகிறார். புறா மாதிரி சன்னமாகப் பேசுகிறார். அவர் குடும்பத்தாருக்கே அவர் மாற்றம் ஆச்சரியமாக இருக்கிறது. புறாக்கள் வானுலகின் தூதுவர்கள், புறாக்களின் சத்தம் காசநோயின் இழுப்புச் சத்தம்போல் இருக்கிறது என்றெல்லாம் எழுதியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.
கோவர்த்தன் அலுவலகத்தில் பணிபுரியும் ஹெட்கிளார்க் சுந்தரம் புறாவைப் பற்றிய தகவலை அவருடன் பகிர்ந்துகொள்கிறார். இந்த அலுவலகத்தில் புறாவைத் தவிர வேற எதுவும் இல்லை என்பதுபோல் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
கோவர்த்தன் பர்தா அணிந்த இளம்பெண் ஒருவளைச் சந்திக்கிறார். அவளும் புறாவைத் தேடுபவளாக இருக்கிறாள். புறாவைப் பார்த்து பரவசம் அடைகிறாள். அவளுக்கு கோவர்த்தனைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. கோவர்த்தன் புறாவின் எண்ணிக்கையை ஒரு நோட்புக்கில் குறித்து வைத்திருப்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. அதை அவரிடமிருந்து வாங்கி வைத்துக்கொள்கிறாள். கோவர்த்தனிடமிருந்து அந்த நோட்புக்கை வாங்கிக்கொள்ள ஒரு டீ வாங்கிக்கொடுக்கிறாள். கோவர்த்தன் அந்தப் பெண் பெயரைக் கேட்கும்போது அவள் சொல்லாமல் போய்விடுகிறாள். புறாவைச் சுற்றிக்கொண்டிருந்தால் புறா ஒருவர் கனவிலும் வரும் என்கிறாள் அந்தப் பெண்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கோவர்த்தன் அலுவலகத்தில் உரையாடும்போது அவர் இயல்புக்கு மாறாக சத்தமாகப் பேசுவதுபோல் கதையை முடிக்கிறார் ராமகிருஷ்ணன். வயது மூப்பு, வாழ்க்கையின் அலுப்பு என்று எல்லாவற்றையும் கதையில் கொண்டு வருகிறார் ராமகிருஷ்ணன்.
1. இந்தக் கதை புறாக்களைப் பற்றி பேசுகிறதா? புறாக்களைச் சுற்றிக்கொண்டிருக்கும் மனிதர்களின் இயல்பைப் பற்றிப் பேசுகிறதா?
2. வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் அற்ற கோவர்த்தனுக்கு புறாக்களைப் பார்ப்பது ஒரு பிடிப்பாக மாறி விடுகிறதா?

வாசிப்பனுபவத்தை நீடித்துக்கொண்டு போகும் கதைகளில் இதுவும் ஒன்று என்று சொல்லத்தோன்றுகிறது.

உலகப் புத்தகத் தினத்தை ஒட்டி கவிதைகள்

ஒன்று

கட்டிலில் கிடந்த புத்தகங்கள்
என்னையே பார்த்துக்கொண்டிருந்தன
‘எப்போது எங்களைத் தொடப் போகிறாய்\
என்றன ஒவ்வொன்றும் முறைப்பாக.
நாற்காலியில் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்த
நான், ‘இருங்கள் சற்று நேரம் சும்மா, யோசிக்கிறேன்,’
என்றேன். ‘போதும் நீ யோசித்தது…அல்லயன்ஸ்
போட்ட குபரா புத்தகத்தையே இப்போதுதான் தொடுகிறாய்.’
‘உனக்குத் தெரியுமா? சிறிது வெளிச்சம் என்ற வாசகர்
வட்டம் நூலை எப்போதோ படித்துவிட்டேன்,’
‘இருக்கட்டும்..இன்று உலகப் புத்தகத் தினம்..
உன்னைச் சுற்றிலும் அமைதி இழந்த உலகம்..
எங்களிடம் வந்தால் நாங்கள் அளிப்போம்
ஆறுதல் உனக்கு..’

இரண்டு

பக்கத்து வீட்டு மல்லிகாவிடம்
காட்டினேன் என் முழுச் சிறுகதைத் தொகுதியை
ஒன்றும் சொல்லாமல் முகத்தைச் சுழித்தாள்
எதிர் வீட்டு ராமனிடம் நீட்டினேன்
‘நான் இந்தத் தெருவில் நடக்க வேண்டாமா?’
என்றார் எக்காளமாய்
கோடி வீட்டு கோவிந்தனிடம் சொன்னேன்
‘இன்னும் கதை எழுதுவதை நிறுத்தவில்லையாய்,’
என்றான் படுபாவி

மூன்று

அந்தத் தெருவில் உள்ள
லைப்ரரி முன்னால்
புத்தகங்களை வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்
சிலுசிலுவென்று காற்று வந்தது.
வெயில் சுளீரென்று அடித்தது
கோடான கோடி ஜனங்கள் போய்க்கொண்டிருந்தார்கள்
புத்தகங்கள் என்னைப் பார்த்தன
நான் புத்தகங்களைப் பார்த்தேன்
ஏனோ தெரியவில்லை கொட்டாவி விட்டேன்

நான்கு

ஐயா, வணக்கம்.
எதிர்வீட்டில் குடியிருந்த அலுவலக நண்பரை அழைத்தேன்
என்ன?
உலகப் புத்தகக் காட்சி. உங்கள் வீட்டு எதிரில்
சரி சரி
வரவேண்டும் ஒரு முறை
சரி சரி
வாங்க வேண்டாம் புத்தகம். என்னைப் பார்த்தால் போதும்
சரி சரி

இரு நிகழ்வுகள்

சமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகளைக் குறித்து சொல்வதுதான் என் நோக்கம். படிப்பவருக்கு இரு நிகழ்வுகளும் சாதாரணமாகத் தோன்றக் கூடும்.
ஒவ்வொரு மாதம் மூன்றாவது சனிக்கிழமை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்துகிறேன். ஒரு படைப்பாளியின் மேன்மையைப் பற்றி இன்னொரு படைப்பாளி அல்லது வாசகர் பேசுவதுபோல்.
இந்த முறை கு ப ராஜகோபலன் என்ற படைப்பாளியைப் பற்றி சாருநிவேதிதா உரை நிகழ்த்தியதை நீங்கள் அறிவீர்கள். தி ஜானகிராமனை வைத்து ஆரம்பித்த இந்தக்கூட்டங்களில் எல்லோரும் சிறப்பாகவே உரை நிகழ்த்துகிறார்கள்.
இன்னொரு கண்ணோட்த்துடனும் இக் கூட்டங்களை அணுக வேண்டும். நாம் இந்தக் கூட்டங்களில் பேசுவதைக் கேட்டபிறகு அந்தப் படைப்பாளிகளின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. இது முக்கியம் என்று எனக்குப் படுகிறது.
சாருநிவேதிதா கு ப ரா என்ற எழுத்தாளர் பற்றி பேசியதைக் கேட்டபோது, கு ப ரா என்ற படைப்பாளியின் படைப்புகளை உடனே எடுத்துப் படிக்க வேண்டுமென்ற ஆவேசம் என்னுள் உண்டாகியது. இது பேசுபவரின் வெற்றியாக நான் கருதுகிறேன். இக் கூட்டத்தில் சிறப்பாக உரை நிகழ்த்திய சாரு நிவேதிதாவிற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாசகர் வட்டம் தயாரித்த சிறிது வெளிச்சம் என்ற புத்தகம் நான் பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிப் படித்திருக்கிறேன். ஒரு வாசகனாகப் படிக்கும்போது நம் மனதில் புத்தகத்தின் அருமை பெருமைகள் எல்லாம் தெரியாமல் போய்விடும். எந்தப் புத்தகமாக இருந்தாலும் ஒரு புத்தகத்தை மனமுவந்து படிக்க வேண்டும். நாம் படிக்கும்போது அவசரம் காட்டக் கூடாது. சிறிது வெளிச்சம் புத்தகத்தைப் படிக்கும்போது அதுமாதிரி அப்போது அணுகவில்லை என்று நினைக்கிறேன்.
சாரு உரை நிகழ்த்துகிறார் என்ற போது நான் அந்தப் புத்தகத்தைத் திரும்பவும் எடுத்து வைத்துக்கொண்டேன். அதேபோல் இன்னொரு புத்தகம் அல்லயன்ஸ் கு ப ராவின் நூற்றாண்டு விழாவை ஒட்டிக் கொண்டு வந்தது. இதை வாங்கி வைத்ததோடு சரி. தொடக்கூட இல்லை. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் வைத்திருந்த புத்தகத்தை சாரு நிவேதிதா பேசியதைக் கேட்டவுடன், தூசி தட்டி எடுத்துப் படிக்க ஆரம்பித்துள்ளேன். குறிப்பாக இரண்டு கிழவர்கள் என்ற கதையைத்தான் படித்து முடித்தேன். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இப்படி யாராவது தூண்டினால்தான் நாம் புத்தகத்தை எடுத்துப் படிப்போம் என்று தோன்றுகிறது. ஆனால் இது சரியான நிலை இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. நம்மைச் சுற்றி உள்ள எழுத்தாளர்களின் கதைகளை மனமுவந்து நாம் படிப்பதோடு அல்லாமல் நாம் மற்றவர்கள் அறிய அந்த எழுத்தாளர்களைப் பற்றி புகழ்ந்து சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.
ஆனால் இது இயல்பாக அமைய வேண்டும். இல்லாவிட்டால் கேட்பவர்களுக்கு அபத்தமாகக் கூடப் போய்விடும்.
*************
இன்று உலகப் புத்தகத் தினம். நேற்று என் நண்பர் ஒருவர் பேசும்போது, ஷேக்ஸ்பியரின் பிறந்த தினத்தைத்தான் உலகப் புத்தகத் தினமாகக் கொண்டாடுகிறோம் என்று சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக ஏன் உலகப் புத்தகத் தினம் வந்தது என்று ஆராய்ச்சிச் செய்கிற குணம் என்னிடம் ரொம்பவும் குறைவு.
ராகவன் காலனி மூன்றாவது தெருவில் உள்ள கிளை நூலகத்தின் வாசலில் நான் விருட்சம் புத்தகங்களைக் கெசாண்டு வந்து வைத்த0ருக்கிறேன். 40 சதவீதம் தள்ளுபடியில் விற்கத் தயாராகிவிட்டேன். நேற்று இரண்டு டேபிள்களை நூல்நிலையத்திலிருந்து எடுத்துக்கொண்டு வந்து வாசலில் வைத்துக்கொண்டு புத்தகங்களை முழுவதும் பரப்பிக்கொண்டேன். எப்போதும் என் மீது அன்புகொண்டு உதவி செய்கிற நண்பர்கள் உதவி செய்தார்கள்.
வெளியே இப்படி உட்கார்ந்து புத்தகம் விற்பது புதிய அனுபவமாக எனக்குப் பட்டது. முக்கியமாகக்ட காற்று. அப்படியொரு காற்றை என் வாழ்க்கையில் ரொம்ப நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் அனுபவிப்பதாகத் தோன்றுகிறது. நாம் எல்லோரும் செயற்கைக் காற்றில்தான் நம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அதன்பின் மரங்களின் நிழல். நிசப்பதமான தெரு.
இந்தக் கிளை நூலகத்தில் பலர் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நூலகத்திற்கு எதிரில் அடுக்கத்தில் குடியிருப்பவர்கள், படிக்கிறப் பாதகமான செயலை செய்ய வேண்டாமென்று இந்த நூல் நிலையத்திற்கு வருவதே இல்லை என்று தோன்றுகிறது. என் அலுவலகத்தில் பல ஆண்டுகளாகப் பணி புரிந்த நண்பரின் வீடு ஒன்று எதிரில்தான் இருக்கிறது. அவரைப் போனில் கூப்பிட்டேன். ஏதோ ஒரு தருணத்தில் வருவார் என்று எதிர்பார்த்தேன். வரவே இல்லை. நான் என் புத்தகங்களை அவர் தலையில் கட்டிவிடுவேன் என்று யோசிக்கிறாரா என்று என் எண்ணத்தைத் தாறுமாறாக ஓட விட்டேன்.
ஆனால் எனக்குத் தனிப்பட்ட முறையில் இது பயனுள்ள ஒன்றாகத் தோன்றியது. கு ப ராவின் இரண்டு கிழவர்கள் கதையை நிதானமாகப் படித்து முடித்தேன். காற்று வீச வீச கொஞ்சம் தூங்கினேன். முக நூல் படித்து சில நண்பர்கள் புத்தகங்கள் வாங்கினார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி. ஒரு வேன் ஓட்டுபவர் ஆர்வத்துடன் புத்தகம் வாங்கிக்கொண்டு சென்றது நெகிழ்ச்சியாக இருந்தது. மரத்திலிருந்த இறங்கிய கறுப்பு எறும்புகள் என் உடலில் ஊறி முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தன. நல்ல அனுபவம்.

உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு

ஞாயிறு, திங்கள் (22, 23) இரண்டு நாட்களிலும் உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு விருட்சம் புத்தகங்களை 40% தள்ளுபடியில் ராகவன் காலனி அரசாங்க கிளை நூலகத்தில், ஜாபர்கான்பேட்டையில் புத்தகங்களை விற்க உள்ளேன். புத்தகங்களை வாங்க வரவும்.

விருட்சம் சந்திப்பு கூட்டம் 35

வரும் சனிக்கிழமை நடைபெற இருக்கும் கு ப ராஜகோபாலனும் நானும் என்ற தலைப்பில் சாரு நிவேதிதா பேச உள்ளார். அதற்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன்.

அழகியசிங்கர்
9444113205

அடடா என்று சொல்லிக்கொண்டேன்….

ஓராண்டுக்கு முன்னால் மா அரங்கநாதன் என்ற படைப்பாளி இறந்து விட்டார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. சிலரைப் பார்க்கும்போது நோயின் உபாதையில் நெளிந்துகொண்டிருப்பவராகத் தோற்றம் தருவார்கள். பேசும்போது உடல் உபாதையைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் மா அரங்கநாதன் வித்தியாசமானவர். பலமுறை அவர் என்னுடன் தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருப்பார். ஒருமுறை கூட உடல்நிலை சரியில்லை என்று சொன்னதில்லை. முதுமையில் அவர் கம்பீரமாக நடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன்.
மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறி நான் பீச் ரயில்வே ஸ்டேஷனலில் இறங்கி எதிரில் உள்ள தேசிய வங்கிக்குச் செல்வேன். மின்சார வண்டியில் பயணம் செய்யும்போது மா அரங்கநாதனும் மின்சார வண்டியில் பயணம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அதுமாதிரியான தருணங்களில் நானும் அவரும் உரையாடிக்கொண்டிருப்போம். அவர் முன்றில் என்ற பத்திரிகைக் கொண்டு வந்துகொண்டிருந்தார். நான் விருட்சம் என்ற பத்திரிகைக் கொண்டு வந்துகொண்டிருந்தேன். கிட்டத்தட்ட முன்றிலும் விருட்சமும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒரே அச்சு. ஆதிமூலம் லட்டரிங். முன்றில் வந்தவுடன் விருட்சம் வந்துவிடும். ஒரே அச்சகத்தில் இரண்டும் அச்சிடப்படும். பத்திரிகைகளின் உள்ளே வித்தியாசமான பக்கங்கள்.
மா அரங்கநாதன் அரசின் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் தி நகரில் ஒரு இடத்தில் முன்றில் என்ற பெயரில் புத்தகம்/பத்திரிகை விற்கும் கடை ஒன்றை ஆரம்பித்தார். அந்த இடத்தில் எல்லோரும் சந்திப்போம். தூய வெண்ணிற ஆடைகளுடன் மா அரங்கநாதன் காட்சி அளிப்பார். நான் பல எழுத்தாளர்களை கோபப்பட்டுப் பார்த்திருக்கிறேன். ஆனால் மா அரங்கநாதனை நான் அப்படிப் பார்த்ததில்லை. அந்தக் கடை வைத்திருந்ததால் பெரிய லாபமே வராது. ஆனால் புத்தகங்கள் பத்திரிகைகள் விற்று ஒழுங்காகப் பணம் கிடைத்துவிடும். இப்படி பலமுறை பல சந்தர்ப்பங்களில் பார்த்துப் பேசியிருக்கிறேன். கடைசியாக அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தடம் பத்திரிகையில் அவரைப் பற்றி பேட்டி ஒன்று வந்திருந்தது. அது குறித்து நான் சொன்னபோது அவருக்கு அது தெரியவில்லை. அந்தப் பத்திரிகை பாண்டிச்சேரி போய்ச் சேர்வதற்கு முன்னரே நான் குறிப்பிட்டிருந்தேன். ஒரு சிறுவனின் குதூகலத்துடன் அவர் அந்தப் பேட்டியைப் பற்றி என்னிடம் விஜாரித்துக்கொண்டிருந்தார்.
இன்று திரிசடை என்ற கவிஞரின் கவிதைப் புத்தகத்தைத் தேடிக்கொண்டு விருட்சம் நூலகத்திற்கு வந்தேன். நான் கிட்டத்தட்ட 400 கவிதைப் புத்தகங்களை என் நூலகத்தில் சேகரித்து வைத்திருக்கிறேன். ஏன் 500 கூட இருக்கும்.
நான் புத்தகம் வைத்திருக்கும் ஸ்டீல் அலமாரியின் அடித்தட்டில் ஒரு புத்தகம் எதிர்பாராத விதமாக என் கண்ணில் பட்டது. ‘மா அரங்கநாதன் படைப்புகள்’ என்ற புத்தகம்தான் அது. அதைப் பார்த்தவுடன் அடடா என்று தோன்றியது. என்னமோ அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு சிறுகதையை மா அரங்கநாதன் ஞாபகமாய்ப் படிக்க வேண்டுமென்று தோன்றியது. வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்தேன். 1021 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது.
அந்தக் காலத்தில் சிறு பத்திரிகையில் ஒரு கதை வந்தால் பெரும்பாலும் யாருக்கும் தெரியாமல் இருக்கும். அப்படியே வந்தாலும் படிப்பவர்கள் யார் என்றும் தெரியாது. அப்படியே படிப்பவர்கள் இருந்தாலும், வாய்திறந்து எழுதுபவரைப் பாராட்டவும் மாட்டார்கள். இப்படித்தான் மா அரங்கநாதன் கதைகள் பல வந்திருக்கின்றன. ஆனாலும் அவர் ஓரளவு எல்லோருக்கும் தெரிந்த எழுத்தாளர்தான்.
அவர் மொத்தப் படைப்புகள் அடங்கிய இத் தொகுதியில் அவருடைய ‘எறும்பு’ என்ற சிறுகதையைப் படித்தேன். படிக்க ஆரம்பிக்கும்போது எறும்பு பற்றி என்ன கதை எழுதியிருக்க முடியும் என்று யோசித்துத்தான் படித்தேன். ஒரு எறும்பு எளிதாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்வதைப் பற்றிய கதையா? அதாவது எறும்பு இன்னொரு இடத்திற்குப் போனாலும் அங்குள்ள எறும்பு கூட்டத்துடன் எளிதாகக் கலந்துகொண்டு விடுவதாக எழுதி உள்ளார். காலம் காலமாக பயன்படுத்தப்படும் பழமொழிகளின் அபத்தங்களைப் பற்றியும் கதை சொல்கிறது. பின் இக் கதை சொல்லி நெல்லையிலிருந்து ரயில் பயணம் தொடங்கி பட்டிணம் போகிற அவதியை வெளிப்படுத்துகிறான். அங்கு சில நாட்கள் தங்கி விட்டுத் திரும்பவும் ஊருக்குக் கிளம்புகிறான். அங்குள்ள எறும்பு ஒன்று அவன் வேட்டியில் ஏறி இருந்தது என்று முடிக்கிறார்.
இந்தக் கதையில் ஒரு வரி வருகிறது.
‘குறிஞ்சி நிலம் ஏற்பட்டு விவசாயம் மலராத காலத்திலேயே தோன்றிய அந்த மொழியில் அவன் பேசி பதிலையும் பெற்றாலும் புரியாத நிலை. அப்போதே தோன்றி மறைந்தது அந்த வெறுப்பு.’ என்று முடிக்கிறார். இந்தக் கதையை முடிக்கும்போது, இது எறும்பைப் பற்றிய கதையா அல்லது எறும்பை முன்னிறுத்திக் கதை சொல்லியின் கதையா என்பது யோசிக்க வேண்டி உள்ளது. வழக்கம்போல மா அரங்கநாதனின் நுணுக்கம் மிகுந்த கதை.
இன்னொரு இடத்தில் ஆசிரியர் கூற்று வெளிப்படுகிறது. ‘பிறபொக்கும் எல்லாம் உயிர்க்கும் சொன்னவரா மனுதர்ம சாத்திரப்படி நிற்க என்று சொல்லுவார். வேடிக்கைதான். இது பரிமேலழகர் அருளிச் செய்த உரை. அவர் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர். நிற்க.’
மா அரங்கநாதன் நினைவாக அவர் பெயரில் ஒவ்வொரு வருடமும் பரிசு வழங்க உள்ளனர் அவர் குடும்பத்தினர். இந்த ஆண்டு பரிசு பெறும் எஸ். சண்முகத்திற்கும், கவிஞர் ரவி சுப்பிரமணியத்திற்கும் என் வாழ்த்துகள்.
எப்படி எறும்பு வேட்டியில் ஒட்டிக்கொண்டதோ அதேபோல் என் நினைவில் மா அரங்கநாதனின் கதையும் ஒட்டிக்கொண்டு என்னைத் திரும்பத் திரும்ப படிக்க வைத்துவிட்டது. அடடா என்று சொல்லாமல் என்ன சொல்வது.

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

எம். கோவிந்தன்

நானும் சைத்தானும்

தேவனுக்குரியதை தேவனுக்கும்
தேசத்திற்குரியதை அதற்கும்
தர நான் முன் வந்த போது
யாரோ என் முன் வந்து சொன்னான்
‘எனக்குரியதை கொடு’
‘யார் நீ’ என்றேன்
‘தெரியாதோ சைத்தானை’ என்றான்
‘கேட்டுக் கொள்
என்னுடையவை எல்லாமே எனக்குத்தான்
என்பதே இன்றுமுதல் என்வேதம்’ என்றேன்
சைத்தான் உரக்க சிரித்தான்
என்னை சிக்கென்று கட்டிப் பிடித்தான்
செவியில் மெல்ல சொன்னான்
‘எனக்கு வேண்டியதைத்தான்
தந்தாய் நன்றி’

(சமீபத்தில் காலமான மலையாள அறிஞர், கவிஞர் எம். என். ராயின் பிரதான மாணவராக அறிவுத்துறை யிலும் மலையாள மொழியின் திராவிட மயமாக்குதலை தொடங்கி வைத்தவர் என்ற நிலையில் இலக்கியத்திலும் முன்னோடியாக திகழ்ந்தவர்)

மொழிபெயர்ப்பு : ஜெயமோகன்
(நவீன விருட்சம் ஜøலை – செப்டம்பர் 1989)