நன்றி : தபுதாராவின் புன்னகை – தாமரைபாரதி – கடற்காகம் வெளியீடு, 10-3-53 கணபதி நகர் முதல் தெரு, எஸ்ஆலங்குளம், மதுரை 625 017 – பக்கங்கள் 112 – விலை : ரூ.199 – கைபேசி : 78716 78748
காலையில் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளும்போது எதிர்பாராதவிதமாய் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வந்தது. உடனே என் கவிதைப் புத்தகத்தை எடுத்து அந்தக் கவிதையைப் புரட்டினேன். அந்தக் கவிதையை 1992ஆம் ஆண்டு எழுதியது. தீர்க்கதரிசனமாக அந்தக் கவிதையை எழுதியிருக்கிறேனோ என்று இப்போது தோன்றுகிறது. கொரோனாவல் எற்ப்பட்ட இக்கட்டைக் கவிதை அன்றே வெளிப்படுத்தி விட்டது. ஒரு கவிதை எப்படித் தோன்றுகிறது, எந்தச் சூழ்நிலையில் ஏன் அப்படியெல்லாம் எழுதினோம் என்பதெல்லாம் புரியவில்லை. அந்தக் கவிதையை வாசிக்க இங்குத் தருகிறேன்.
யாருடனும் இல்லை
எதைப் பேசுவது எப்படிப் பேசுவது ஏன் பேசுவது எதற்காகப் பேசுவது பேசினால் அடிப்பார்களா கேட்டால் உதைப்பார்களா பார்த்தால் சிரிப்பார்களா ஏன் பேசுவது எதைப் பேசுவது எப்படிப் பேசுவது எதற்காகப் பேசுவது பார்க்கப் போகலாமா பேசுவதைக் கேட்பார்களா கேட்டதை மனதில் வாங்கி பதில் அளிப்பார்களா? எதைப் பேசுவது எப்படிப் பேசுவது ஏன் பேசுவது எதற்காகப் பேசுவது பேசாமல் ஓடிப் போகலாம்அதுதான் நியாயம் எதையாவது பேசுயாருடனும் இல்லை உன்னிடம் எப்படியாவது பேசு யாருடனும் இல்லை உன்னிடம் எதற்காகவாவது பேசு யாருடனும் இல்லை உன்னிடம் ஏன் என்று கேட்காமல் பேசு யாருடனும் இல்லைஉன்னிடம்
இது என் ஆறாவது கதை. இந்தக் கதையைப் படித்தபோது ஒரு நிமிடம்தான் ஆயிற்று. முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.
போஸ்டல் காலனி இரண்டாவது தெரு
எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தோம். நானும் மனைவியும்தான். மனைவி டிவியில். நான் கணினியில் மூழ்கியிருப்போம். தினமும் கொரோனா செய்தி எங்களைப் பாடாய்ப் படுத்தும். உண்மையில் டிவியில் வரும் செய்தியைக் கேட்கும்போது திகில் கதையைப் படிப்பது போலிருக்கும். போஸ்டல் காலனி 1வது தெருவிலிருக்கிறோம். இரண்டாவது தெருவில் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு இளைஞனுக்குத் தொற்றாம்.
யார் அது? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் நண்பன் வெங்கடேஷ் பையனாக இருக்குமாவென்று யோஜனைப் போயிற்று. அவன் பையனாக இருக்கக் கூடாதென்று வேண்டிக்கொண்டேன். போன வருடம்தான் வெங்கடேஷ் இல்லாமல் போய்விட்டான். போய்ப் பார்க்கலாமென்றால், கட்டையைப் போட்டு தடுத்திருக்கிறார்கள். எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென்று அவர்கள் வீட்டுத் தொலைப்பேசியைத் தட்டினேன். யாரும் தொலைப்பேசியை எடுக்கவில்லை. பக்கத்துத் தெருதானே விஜாரிக்கலாமென்று கிளம்பினேன். தெருவில் ஆட்கள் நடமாட்டமில்லை. போக முடியாதபடி தடுப்பு.
ஓரிடத்தில் கூட்டமாய் காக்கைகள் கரைந்து கொண்டிருந்தன. என்னமோ காக்கைகள் கொரோனா கொரோனா என்று சொல்வதுபோல் தோன்றியது.
‘அந்தோன் சேகவ்’வின் அருமையான சிறுகதையான ‘வான்கா’ படித்தேன். ஒன்பது வயது சிறுவனைப் பற்றிய கதை இது. ‘ வான்கா மூக்கவ்’ வேலை பயிலுவதற்காக 3 வாரங்களுக்கு முன்பு புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் விடப்பட்டவன்.
பரபரப்பாக இருக்கிறான் வான்கா. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்திய இரவு அவன் தூங்கவில்லை. எசமானனும் எசமானியும் முதுநிலை வேலை பயிற்சியாளர்களும் கோவிலுக்குப் புறப்பட்டுச் செல்லும் வரை காத்திருந்தான்.
பிறகு அலமாரியிலிருந்து மசிப்புட்டியையும் துருப்பிடித்த முனை கொண்ட பேனாக்கட்டையையும் எடுத்து வந்து, கசங்கிப் போன காகிதத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு எழுதத் தயாராகி விட்டான்.
யாருக்கு இந்தக் கடிதத்தை எழுதத் துடிக்கிறான். அவனுடைய தாத்தாவிற்குத்தான். அன்புக்குரிய தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச் என்று எழுத ஆரம்பித்தான். அந்தக் கடிதத்தில் தாத்தாவிற்குக் கிறிஸ்மஸ் வாழ்த்தைத் தெரிவிக்கிறான். வான்காவிற்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை. எல்லாம் தாத்தாதான்.
அவனுடைய தாத்தா கன்ஸ்தன்தீன் ழிவரியோவ் என்றொரு நிலப்பிரபுவின் பண்ணையில் இரவு நேரக் காவற்காரராய் வேலை பார்த்து வந்தார் 65 வயதானவர். பகல் பொழுதில் பின்கட்டு சமையலறையினுள் தூங்குவார். அல்லது சமையல்காரிகளோடு வேடிக்கையாகப் பேசிக்கொண்டு பொழுதைப் போக்குவார்.
இரவில் பெரிய ஆட்டுத்தோல் கோட்டு அணிந்து பண்ணையைச் சுற்றி நடப்பார். அவருடன் விலாங்கு என்ற நாய் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு உடன் வரும். இந்த விலாங்கு பணிவு மிக்கதாய் வாலைக் குழைத்துக் கொண்டு வரும். ஆனால் அதை யாராலும் நம்ப முடியாது. திருட்டுத்தனமாய் வந்து காலைக் கடிப்பதிலும், யார் கண்ணிலும் படாமல் குளிர்க் கிடங்கினுள் நுழைவதிலும், விவசாயிகளுடைய கோழிக் குஞ்சுகளைக் கவர்ந்துகொண்டு ஓடுவதிலும் அது தேர்ந்த திறமைசாலி. அதன் பின்னங்காலில் எத்தனையோ தரம் வெட்டுக் காயம் பட்டிருக்கும் இருமுறை அதைக் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டார்கள்.உயிர் போகிற நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.
தாத்தாவை நினைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டவாறு கடிதம் எழுதுகிறான்.
‘நேற்று என்னை அடித்து நொறுக்கி விட்டார்கள். முடியைப் பிடித்து எசமான் என்னை வெளி முற்றத்துக்கு இழுத்துச் சென்று கடிவாள் வாரால் நையப் புடைத்தார். காரணம் என்னவென்றால் அவர்களுடைய குழந்தையை ஆட்டிக் கொண்டிருக்கையில் தவறிப் போய் நான் தூங்கி விட்டேன்.’
இப்படி அற்ப காரணத்திற்காக அடி வாஙகுகிறான். ஒன்பது வயதான அவனால் இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மேலும் அவனுடைய எஜமானி வேறு அவனைக் கொடுமைப் படுத்துகிறாள். மீனை சுத்தம் செய்ய கொடுக்கிறாள். வான்கா வால் பக்கத்திலிருந்து ஆரம்பித்தான். உடனே எஜமானி அந்த மீனைப் பிடுங்கி அதன் தலையை அவன் முகத்திலே வைத்துத் தேய்த்தாள். மற்ற வேலைக்காரர்களும் அவனை கேலி செய்கிறார்கள். மது விடுதிக்குப் போய் வோத்கா வாங்கி வரச் சொல்கிறார்கள். எசமானுடைய தோட்டத்தில் போல் வெள்ளரிக் காய்களைத் திருடி வரும்படிக் கூறுகிறார்கள்.
பெரும்பாலும் அவமானத்துடனும் பட்டினியுடன்தான் அவன் இருக்கிறான். காலையில் ரொட்டி தருகிறார்கள். மத்தியானத்துக்குக் கஞ்சியும், இரவில் மீண்டும் ரொட்டி கொடுக்கிறார்கள். தேநீரோ, முட்டைக் கோஸ் சூப் எதுவும் கிடைப்பதில்லை.
வான்கா இதையெல்லாம் எழுதிவிட்டு தாத்தாவிடம் கெஞ்சிக் கேட்கிறான். ‘என்னை அழைத்துக் கொண்டு போய் விடு,’ என்று.
‘உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், எந்நாளும் மறக்காமல் உனக்காகப் பிரார்த்தனை செய்வேன். என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடு, இல்லையேல் நான் செத்துத்தான் போவேன்,’
என்று அந்தோன் செகாவ் அவன் நிலைமையை விளக்குகிறார்.
கண்ணீர் மல்க வான்கா இன்னும் எழுதுகிறான்.
‘எனது அன்புக்குரிய தாத்தாவே, என்னால் சகிக்க முடியவில்லை, எனக்கு உயிர் போகிறது இங்கிருந்து ஓடி விடலாம். நடந்தே கிராமத்துக்கு வந்து விடலாம். ஆனால் என்னிடம் புதை மிதியடிகள் இல்லை. கடுங்குளிர் தாங்க முடியாதே என்று பயந்துகொண்டு சும்மாயிருந்தேன். கருத்துடன் உன்னைக் கவனித்துக் கொள்கிறேன். யாரும் உன்னைத் துன்புறுத்த விட மாட்டேன். நீ இறந்தபின் உன்னுடைய ஆத்மாவுக்காகப் பிரார்த்தனை செய்வேன். என் அம்மாவுக்காக பிரார்த்தனை செய்கிறேனே அதே போல செய்வேன் என்கிறான் வான்கா.
வான்காவின் கடிதம் தொடருகிறது. ‘ அருமைத் தாத்தா, பண்ணை வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைக்கையில் எனக்கு ஒரு தங்கக் காய் எடுத்துப் பச்சைப்பெட்டியில் பத்திரமாய் வை. திருமதி ஓல்கா இக்னாத்யென்னாவிடம் கேட்டு வாங்கு..வான்காவுக்கு என்று சொல்லு.’
அன்புக்கு ஏங்கும் ஒன்பது வயது சிறுவனான பழைய கனவில் மூழ்கி விடுகிறான். அவனை அவன் தாத்தா பண்ணைவீட்டுக் கனவான்களுக்குக் கிறிஸ்மஸ் மரம் கொண்டு வருவதற்காக அழைத்துச் சென்றது நினைவுக்கு வந்தது. அப்போதெல்லாம் காலம் எவ்வளவு இன்பகரமாக இருந்தது என்று யோஜனை செய்கிறான்.
திருமதி ஓல்கா இக்னாத்யெவ்னாதான் – வான்காவுக்கு மிகப் பிடித்தவர் – யாரையும் விட முன்னிலையில் நின்று வேலை செய்வார். வான்காவின் தாயாகிய பெலகேயா உயிரோடு இருந்த காலத்தில், பண்ணை வீட்டில் அவள் வேலை புரிந்து வந்தபோது ஓல்கா இக்னாத்யெவ்னா வான்காவுக்கு மிட்டாய்த் தருவது வழக்கம். அவனுக்கு அவர் எழுதவும், படிக்கவும் நூறு வரை எண்ணவும் சொல்ஙூக் கொடுத்து மகிழ்வார், நடனமாடுவதற்குக் கூடக் கற்றுத் தந்தார். ஆனால் அவன் தாயார் பெலகேயா இறந்தபிறகு, அனாதையாகிவிட்ட வான்கா பின்கட்டுச் சமையலறைக்கு, அவனுடைய தாத்தாவிடம் அனுப்பப்பட்டு விட்டான். அங்கிருந்து மாஸ்கோவுக்குப் புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் கொண்டு வந்து விடப்பட்டான்.
தன் துயரங்களை வான்கா கடிதம் மூலம் எழுதிக்கொண்டிருக்கும்போது பழைய நினைவுகளுக்குப் போய் விடுகிறான். கதையின் உத்தி சிறப்பாகவே பயன்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் வாசிக்கத் தூண்டும் விதமாக.
வான்கா தாத்தாவை கெஞ்சி எழுதுகிறான்.
‘தாத்தா, உடனே புறப்பட்டு வா, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு என்று மேலும் எழுதுகிறான்.
இப்படிக் கெஞ்சும்போது எதைஎதையோ சொல்லி கெஞ்சுவார்கள். வான்கா அந்த நிலைக்குப் போய்விட்டான். அவன் கடிதம் உருக்கமாக இருக்கிறது.
‘ஏசுநாதர் அருள் புரிவார், என்னை அழைத்துச் சென்று விடு. உன்னை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.. அனாதைச் சிறுவனான நான் துன்புறுகிறேன். எனக்கு நீ கருணை காட்ட வேண்டும். எந்நேரமும் என்னை அடிக்கிறார்கள். எந்நேரமும் நான் பசியாய் இருக்கிறேன். துன்பம் தாங்கமாட்டாமல் எப்போதும் அழுது கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் மிக வருத்தத்துடன் கண்கலங்கியபடி கடிதம் எழுதுகிறான்.
இப்படி எழுதிக்கொண்டிருக்கும்போது அல்யோனாவுக்கும், ஒற்றைக் கண் எகோருக்கும், கோச் வண்டிக்காரருக்கும் அன்பைத் தெரிவிக்கிறான். கன்சர்ட்டினா இசைத் துருத்தியை யாரிடமும் கொடுத்து விடாதே என்கிறான்.
பின் காகிதத்தை நான்காய் மடித்தான். ஒரு கப்பேக் கொடுத்து இதற்கு முந்திய தினம் அவன் வாங்கி வைத்திருந்த உறையினுள் அதைப் போட்டு மூடினான். பிறகுச் சற்று சிந்தனை செய்துவிட்டு, பேனாவால் மசியைத் தொட்டு எழுதினான் :
தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச், கிராமம்
என்று முடிக்கிறான். யாரும் தலையிட்டு தான் எழுதுவதைத் தடுக்கவில்லை என்று மகிழ்ச்சி அடைகிறான். கடிதத்தை தபாலில் சேர்க்க கோட்டு எதுவும் போட்டுக்கொள்ளாமல் வெறுஞ்சட்டையோடு தெருவுக்கு ஓடினான்.
அருகாமையிலிருந்த தபாற்பெட்டியிடம் ஓடி மதிப்பிற்குரிய தனது கடிதத்தை அதன் இடுக்கினுள் போட்டான்.
ஒன்பது வயது சிறுவன் தன் தாத்தாவை அழைக்க உருக்கத்துடன் கடிதம் எழுதி அனுப்புகிறான்.
இந்தக் கடிதத்தை தபாலில் சேர்த்த பிறகு ஒரு மணி நேரத்தில் அவனுக்குத் தூக்கம் வந்து விடுகிறது. அவனுக்கு ஒரு கனவு வருகிறது. ஒரு கணப்படுப்பு தோன்றியது. கணப்படுப்புப் பரணில் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்த அவனுடைய தாத்தா அந்தக் கடிதத்தைச் சமையல்காரிகளுக்குப் படித்துக் காட்டினார் என்று முடிகிறது கதை. இந்தக் கதையை ரா கிருஷ்ணையா மொழி பெயர்த்துள்ளார்.
ஒன்பது வயது சிறுவனுடைய பார்வையில் கதையை அந்தோன் சேகவ் அற்புதமாக எடுத்துக்கொண்டு போகிறார். இக் கதையை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. ஒவ்வொருவரும் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடிய கதை.
அந்தோன் சேகவ்
வான்கா
ஒன்பது வயதுச் சிறுவன் வான்கா மூக்கவ் வேலை பயிலு வதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பு புதைமிதி தயாரிப் பாளர் அல்யாஹினிடம் விடப்பட்டவன். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்திய இரவு அவன் தூங்கவில்லை. எச மானும் எசமானியும் முதுநிலை வேலைப் பயிற்சியாளர்களும் கோயிலுக்குப் புறப்பட்டுச் செல்லும் வரை காத்திருந் தான்; பிறகு அலமாரியிலிருந்து மசிப் புட்டியையும் துரு பிடித்த முனை கொண்ட பேனாக்கட்டையையும் எடுத்து வந்து, கசங்கிப் போன காகிதத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு எழுதத் தயாராகி விட்டான். முத லாவது எழுத்தை வரையுமுன் நெஞ்சு படபடக்க இரண் டொரு தரம் வாயிற் கதவையும் சன்னலையும் பார்த்துக் கொண்டான். புதைமிதி அச்சுக் கட்டை அடுக்குத் தட்டு களுக்கு நடுவிலிருந்த சாமிப் படத்தை உற்று நோக்கிய வாறு விக்கிச் செறுமிப் பெருமூச்சு விட்டுக் கொண்டான். காகிதம் பெஞ்சின் மேல் இருந்தது, வான்கா பெஞ்சின் பக்கத்தில் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான்.
”அன்புக்குரிய தாத்தா கன்ஸ் தன் தீன் மக்காரிச்! என்று எழுதினான்.
”உனக்கு நான் கடிதம் எழுதுகிறேன். கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் அனுப்புகிறேன், ஆண்டவன் உனக்கு அருள் புரிய வேண்டுகிறேன். எனக்கு அப்பாவும் இல்லை, அம்மாவும் இல்லை; உன்னைத் தவிர யாரும் இல்லை எனக்கு.”
இருண்ட சன்னல் கண்ணாடியை நோக்கி வான்கா கண் களை உயர்த்தினான். மெழுகு வத்தியின் பிம்பம் சன்னல் கண்ணாடியில் ஆடித் துடித்தது. அவனுடைய மனக் கண்முன் தாத்தா கன்ஸ் தன் தீன் மக்காரிச் தெளிவாய்த் தோற்ற மளித்தார். இவரியோவ் என்றொரு நிலப்பிரபுவின் பண்ணையில் அவர் இரவு நேரக் காவற்காரராய் வேலை பார்த்து வந்தார். மெலிந்து உருவில் சிறியவரான கிழவர் அவர், வயது சுமார் அறுபத்தைந்து இருக்கும். ஆனால் குறிப்பிடத் தக்க துடிப்பும் விறுவிறுப்பும் வாய்ந்தவர், சிரித்த முகமும் குடி போதை கொண்டு மங்கிய கண்களுமுடையவர். பகற் பொழுதில் அவர் பின் கட்டுச் சமையலறையினுள் தூங்கு வார், அல்லது சமையற்காரிகளோடு வேடிக்கையாய்ப் பேசிக் கொண்டு உட்கார்ந்திருப்பார். இரவில் பெரிய ஆட்டுத்தோல் கோட்டு அணிந்து சடசடப்பியை ஆட்டி ஒலித்தவாறு பண்ணையைச் சுற்றி நடப்பார். அவருக்குப் பின்னால் கிழட்டுக் கஷ் தான்காவும் விலாங்கு என்ற இன் னொரு நாயும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு செல்லும். அதன் கரிய நிறத்துக்காகவும் நீளமான நீர் நாயை ஒத்த உடலுக்காகவும் அதற்கு விலாங்கு என்று பெயர். இந்த விலாங்கு பணிவு மிக்கதாய் அருமையாய் வாலைக் குழைத்துக் கொண்டு வரும்; தெரிந்தவர்களா யினும் தெரியாதவர்களாயினும் எல்லோரையும் அன்பு ஒழுகும் அதே பார்வை கொண்டு தான் உற்று நோக்கும். ஆயினும் யாராலும் அதை நம்ப முடியாது. அதன் அடக்க மும் பணிவும் வெளிவேஷமே தவிர மெய்யானவையல்ல ; அதன் கள்ளத்தனத்தையும் குரோதத்தையும் மூடிமறைக் கவே பயன்பட்டன இவை. திருட்டுத்தனமாய் அணுகி வந்து காலைக் கடிப்பதிலும், யார் கண்ணிலும் படாமல் குளிர்க் கிடங்கினுள் நுழைவதிலும், விவசாயிகளுடைய கோழிக் குஞ்சுகளைக் கவர்ந்து கொண்டு ஓடுவதிலும் அது தேர்ந்த திறமைசாலி. அதன் பின்னங் கால்களில் எத் தனையோ தரம் வெட்டுக் காயம் பட்டிருக்கும், இரு முறை அதைக் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டார்கள், வாரம் தவறாமல் நையப் புடைத்து உயிர் போகும் நிலையில் விட்டுச் சென்றார்கள். ஆனால் அது யாவற்றையும் சாமாளித்துக் கொண்டு உயிர் வாழ்ந்து வந்தது.
தாத்தா இந்நேரத்தில் அனேகமாய் வெளி வாயில் அருகே நின்று கண்களைச் சுளித்துக் கொண்டு, கோயில் சன்னல்களிலிருந்து சென்னிறத்தில் பளிச்சிடும் ஒளியைப் பார்ப்பார்; ஒட்டுக்கம்பளப் பொதி மிதிகளைக் கால்களில் மாட்டிக் கொண்டு தத்துப்புத்தென நடந்து வேலையாட்களோடு கும்மாள மடிப்பார். அவருடைய சடசடப்பி இடுப்பு வாரில் தொங்கும். குளிராயிருக்கிறது என்று சொல்லிக் கைகளை விரித்துத் தன்னைத் தானே கட்டிப் பிடித்துக் கொள்வார். அல்லது யாராவது சமையற் காரியையோ பணிப்பெண்ணையோ கிள்ளிவிட்டுக் கிளு கிளுத்துக் கிழட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்.
”ஒரு சிமிட்டா எடுத்துக் கொள்” என்று அந்தப் பெண்களிடம் தனது பொடி டப்பாவைக் காட்டுவார்.
ஒரு சிமிட்டா எடுத்து மூக்கினுள் இழுத்து உடனே தும்முவார்கள் அந்தப் பெண்கள். தாத்தாவுக்கு ஆனந் தம் தாங்க முடியாது, வயிறு குலுங்கச் சிரிப்பார். – ”உறைந்து போன மூக்குக்கு நல்லது!” என்று கூவு வார்.
நாய்களுக்குங்கூட மூக்குப்பொடி கொடுப்பார். கஷ் தான்கா தும்மிவிட்டுத் தலையை ஆட்டி ஆட்சேபித்தவாறு விலகிச் செல்லும். ஆனால் பணி வடக்கம் மிகுந்த விலாங்கு தும்முவது சரியல்ல என்று வாலைக் குழைத்துக் கொண்டு நிற்கும். வானிலை அற்புதமாயிருந்தது. காற்று அசங்காது அமைதியாய், பளிங்கு போல் தெளிவாய், மாசு று வற்றிருந்தது. கரிய இரவென்றாலும் கிராமத்தின் வெண் ணிறக் கூரைகளும், புகைபோக்கிகளிலிருந்து எழும் புகை யும், உறைபனிக் கவசமிட்டு வெள்ளி போல் பளபளத்த மரங்களும், வெண்பனிப் பெருக்குகளும் தெட்டத் தெளி வாய்க் கண்ணுக்குத் தெரிந்தன. ஒய்யாரமாய்க் கண்சி மிட்டும் விண்மீன்கள் வானத்தில் வாரியிறைக்கப்பட்டிருந் தன. பால்வெளி மண்டலம் விழா நாளுக்காகக் கழுவிச் சுத்தம் செய்யப்பட்டு வெண்பனியால் தேய்த்து மெரு கிடப்பட்டது போல் கண்ணைப் பறிக்கும்படி எடுப்பாய்த் தெரிந்தது…. * வான்கா பெருமூச்சு விட்டவாறு பேனாவால் மசியைத் தொட்டு, மேலும் எழுதிச் சென்றான்:
”நேற்று என்னை அடித்து நொறுக்கி விட்டார்கள் . முடியைப் பிடித்து எசமான் என்னை வெளி முற்றத்துக்கு இழுத்துச் சென்று கடிவாள வாரால் நையப் புடைத்தார். காரணம் என்னவென்றால் அவர்களுடைய குழந்தையை ஆட்டிக் கொண்டிருக்கையில் தவறிப் போய் நான் தூங்கிவிட்டேன். சென்ற வாரத்தில் ஒரு நாள் எசமானி என்னைக் கெண்டை மீனைச் சுத்தம் செய்யச் சொன்னாள். நான் வால் பக்கத்திலிருந்து ஆரம்பித்தேன், உடனே எசமானி அந்த மீனைப்பிடுங்கி அதன் தலையை என் முகத்திலே வைத்துத் தேய்த்தாள். ஏனைய வேலைப் பயிற்சியாளர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள், மது விடுதிக்குப் போய் வோத்கா வாங்கி வரச் சொல்கிறார்கள், எசமானுடைய வெள்ளரிக் காய்களைத் திருடி வரும்படிக் கூறுகிறார்கள், எசமான் கைக்குக் கிடைப்பதை எடுத்து என்னை அடித்துக் கொல்லுகிறார். சாப்பிட இங்கே எனக்கு ஒன்றும் கிடைப் பதில்லை. காலையில் ரொட்டி தருகிறார்கள், மத்தியானத் துக்குக் கஞ்சியும், இரவில் மீண்டும் ரொட்டியும் கொடுக் கிறார்கள். தேநீரோ, முட்டைக் கோ ஸ் சூப்போ எதுவும் எனக்குக் கிடைப்பதில்லை, யாவற்றையும் அவர்களே தீர்த்துக் கட்டி விடுகிறார்கள். என்னை நடையிலே படுக்கச் சொல்கிறார்கள், அவர்களுடைய குழந்தை கத்தும் போது நான் தூங்கக் கூடாது, அதை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டும். எனது அருமைத் தாத்தா, உனக்குப் புண்ணி யம் உண்டு, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு, கிராமத்துக்குக் கூட்டிச் சென்றுவிடு, என்னால் இனி பொறுக்க முடியாது. தாத்தா, உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், எந்நாளும் மறக்காமல் உனக்காகப் பிரார்த் தனை செய்வேன், என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடு, இல்லையேல் நான் செத்துத்தான் போவேன்….”
வான்காவின் உதடுகள் துடித்தன, கரிபிடித்த முட்டிக் கையால் கண்களைத் துடைத்துக் கொண்டு செறுமினான் .
”உனக்கு மூக்குப்பொடி இடித்துத் தருவேன்” என்று தொடர்ந்து எழுதினான்.’ ‘உனக்காக ஆண்டவனை வேண்டிக் கொள்வேன். நான் எதாவது குறும்பு செய்தால் நீ எவ்வளவு வேண்டு மானாலும் என்னை உதைக்கலாம். எனக்கு அங்கே வேலை இருக்காதென நீ நினைத்தால், நான் காரியக் காரரிடம் போய் என் மீது இரக்கங் கொள்ளும்படிக் கேட் பேன், புதைமிதிகளுக்குப் பாலிஷ் போடும் வேலையை எனக்குத் தரும்படி வேண்டுவேன், அல்லது ஃபெத்காவுக்குப் பதில் நான் ஆடு மேய்க்கப் போவேன். எனது அன்புக் குரிய தாத்தாவே, என்னால் சகிக்க முடியவில்லை, எனக்கு உயிர் போகிறது. இங்கிருந்து ஓடி விடலாம், நடந்தே கிராமத்துக்கு வந்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் எனக்குப் புதைமிதியடிகள் இல்லை, கொடுங் குளிர் தாங்க முடியாதே என்று பயந்து கொண்டு சும்மாயிருந் தேன். நான் பெரியவனானதும் உன்னைக் கருத்துடன் கவ னித்துக் கொள்வேன். யாரும் உன்னைத் துன்புறுத்த விட மாட்டேன். நீ இறந்த பின் உன்னுடைய ஆத்மாவுக்காகப் பிரார்த்தனை செய்வேன், என் அம்மாவுக்காகப் பிரார்த் திக்கிறேனே அதே போல செய்வேன் உனக்காகவும்.
‘மாஸ்கோ மிகப் பெரிய ஊர், கனவான்களது வீடு களுக்குக் கணக்கே இல்லை, குதிரைகளும் ஏராளம். ஆனால் ஆடுகள் இல்லை, நாய்கள் கொஞ்சங்கூட மூர்க்கமின்றிச் சாதுவாய் இருக்கின்றன. கிறிஸ்மஸ் பண்டிகையின் போது பையன்கள் நட்சத்திரம் எடுத்துச் செல்வதில்லை. கோயி லில் நம்மைப் பாட விடமாட்டேன் என்கிறார்கள். தூண் டில் முட்கள் அப்படியே தூண்டில் நூல்களும் கோல்களும் அடங்கலாய்க் கடையில் விற்கப்படுவதை முன்பு ஒரு தரம் பார்த்தேன் நான். எந்த மீன் வேண்டுமானாலும் பிடிப் பதற்கு ஏற்றவையாய் விதம் விதமாய் நன்றாய் இருந்தன, ஒரு பூடு எடையுள்ள பெரிய தோப்பா மீனைத் தாங்கக் கூடிய ஒன்றுங்கூட இருந்தது. பண்ணை வீட்டில் எசமான் வைத்திருக்கிறாரே அந்த மாதிரி துப்பாக்கியும் இன்னும் பல விதமான துப்பாக்கிகளும் கடைகளில் விற்கிறார்கள், நான் பார்த்தேன். ஒவ்வொன்றும் நூறு ரூபிளுக்குக் குறை யாது. கசாப்புக் கடைகளில் காட்டுக் கோழிகளும், உள் ளான்களும் முயல்களும் இருக்கின்றன. ஆனால், கடையில் இருப்பவர்கள் இவை எங்கே சுடப்பட்டவை என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.
”அருமைத் தாத்தா, பண்ணை வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைக்கையில் எனக்கு ஒரு தங்கக் காய் எடுத்துப் பச்சைப் பெட்டியில் பத்திரமாய் வை. திருமதி ஓல்கா ? இக்னாத்யெவ்னாவிடம் கேட்டு வாங்கு, வான்காவுக்கு என்று சொல்லு.”
நெடுமூச்சு விட்டு மீண்டும் சன்னல் கண்ணாடியை உற்றுப் பார்த்தான் வான்கா. பண்ணை வீட்டுக் கனவான் களுக்குக் கிறிஸ்மஸ் மரம் கொண்டு வருவதற்காகப் பேரனையும் அழைத்துக் கொண்டு தாத்தா புறப்பட்டுச் சென்றது அவனுக்கு நினைவு வந்தது. ஆகா, அப்போதெல் லாம் காலம் எவ்வளவு இன்பகரமாய் இருந்தது! தாத்தா கெக்கலித்துக் கொள்வார், உறைபனி மூடிய தோப்பும் கெக்கலிக்கும், இதைப் பார்த்து வான்காவும் கெக்கலித்துக் கொள்வான். பிர் மரத்தை வெட்டத் தொடங்குமுன் தாத்தா புகைக் குழாயைப் பற்ற வைத்துப் புகை பிடிப் பார், ஒரு சிமிட்டா பொடி எடுத்து மூக்கில் வைத்து நெடு நேரம் உறிஞ்சுவார், குளிரில் நடுங்கும் வான்காவைப் பார்த்து வாய்விட்டுச் சிரிப்பார்…. உறைபனிக் கவசம் பூண்ட பிர் மரங்கள் தம்மில் சாவுக்காகக் குறிக்கப்பட்டி ருப்பது யாராய் இருக்குமோ என்று ஆடாமல் அசையாமல் காத்திருந்தன. அப்பொழுது திடுமென ஒரு முயல் வெண் பனிப் பெருக்கைத் தாவி அம்பு போல் பாய்ந்து ஓடிற்று… தாத்தா இருப்பு கொள்ளாமல் துடிதுடித்துக் கத்துவார் :
”நிறுத்து அதை! நிறுத்து அதை!… நிறுத்து! ஓ! குட்டை வால் சைத்தான்!”
மரத்தைத் தாத்தா பண்ணை வீட்டுக்கு இழுத்து வருவார், அவர்கள் அதைச் சிங்காரிக்கத் தொடங்குவார் கள்…. திருமதி ஓல்கா இக்னாத்யெவ்னாதான்–வான்கா வுக்கு மிக்கப் பிடித்தவர்- யாவரையும்விட முன்னிலை யில் நின்று ஓடியாடி வேலை செய்வார். வான்காவின் தாயா கிய பெலகேயா உயிரோடு இருந்த காலத்தில், பண்ணை வீட்டில் அவள் வேலை புரிந்து வந்த போது ஓல்கா இக்னாத் யெவ்னா வான்காவுக்கு மிட்டாய்த் தருவது வழக்கம். அவ னுக்கு அவர் எழுதவும் படிக்கவும் நூறு வரை எண்ண வும் சொல்லிக் கொடுத்து மகிழ்வார், நடனமாடுவதற்குக் கூடக் கற்றுத் தந்தார். ஆனால் பெலகேயா இறந்த பிறகு, அனாதையாகிவிட்ட வான்கா பின்கட்டுச் சமையலறைக்கு, அவனுடைய தாத்தாவிடம் அனுப்பப்பட்டு விட்டான். அங்கிருந்து மா ஸ்கோவுக்குப் புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் கொண்டுவந்து விடப்பட்டான்……
”தாத்தா, உடனே புறப்பட்டு வா, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு” என்று மேலும் எழுதினான் வான் கா.’ ‘ஏசுநாதர் அருள் புரிவார், என்னை அழைத்துச் சென்று விடு, உன்னை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
அனாதைச் சிறுவன் நான், துன்புறுகிறேன், எனக்கு நீ கருணை காட்ட வேண்டும். எந்நேரமும் என்னை அடிக்கிறார்கள், எந்நேரமும் நான் பசியாய் இருக்கிறேன். துன்பம் தாங்க மாட்டாமல் எந்நேரமும் இங்கு நான் அழுது கொண் டிருக்கிறேன். புதைமிதி அச்சுக் கட்டையால் எசமான் ஒரு நாள் என் மண்டையில் அடித்தார். அப்படியே கீழே விழுந்த நான் மீண்டும் எழுத்திருக்கப் போவதில்லை என்றே நினைத்தேன். இங்கு எனது நிலை நாயினும் கேடான தாய் இருக்கிறது…. அல்யோனாவுக்கும் ஒற்றைக் கண் எகோ ருக்கும் கோச் வண்டிக்காரருக்கும் என் அன்பைத் தெரிவிக்கிறேன். என்னுடைய கன்சர்ட்டினா இசைத் துருத்தியை யாரிடமும் கொடுத்து விடாதே. உன் னுடைய பேரன் இவான் மூக்கவ். அருமைத் தாத்தா , வா என்னிடம்.”
காகிதத்தை நான்காய் மடித்தான், ஒரு கப்பேக் கொடுத்து அதற்கு முந்திய தினம் அவன் வாங்கி வைத் திருந்த உறையினுள் அதைப் போட்டு மூடினான்….. பிறகு சற்று சிந்தனை செய்துவிட்டு, பேனாவால் மசியைத் தொட்டு எழுதினான்: ‘தாத்தா”-தலையைச் சொறிந் கொண்டு மீண்டும் சிந்தித்துவிட்டு எழுதினான் :
“கன்ஸ்தன்தீன் மக்காரிச், கிராமம்.”
யாரும் குறுக்கிட்டுத் தன்னை எழுத விடாமல் தடுக்க வில்லையென மனம் மகிழ்ந்தவனாய்க் குல்லாவை எடுத்துத் தலையில் போட்டுக் கொண்டான். கோட்டு போட்டுக் கொள்ளாமலே வெறுஞ் சட்டையோடு தெருவுக்கு ஓடினான்.
முந்திய நாளன்று அவன் விசாரித்த போது, கசாப்புக் கடையில் இருந்தவர்கள் கடிதங்களைத் தபாற் பெட்டி களில் போட வேண்டும், இந்தப் பெட்டிகளிலிருந்து அவை மூன்று குதிரைகளையும் குடிமயக்கம் கொண்ட வண்டிக் காரர்களையும் கண கணத்து ஒலிக்கும் மணிகளையுமுடைய கோச் வண்டிகள் மூலம் உலகெங்கும் அனுப்பப்படுகின்றன என்பதாய்ச் சொல்லியிருந்தார்கள். யாவற்றிலும் அரு காமையிலிருந்த தபாற் பெட்டியிடம் ஓடி மதிப்பிடற் கரிய தனது கடிதத்தை அதன் இடுக்கினுள் போட்டான்..
இதன் பின் ஒரு மணி நேரத்துக்கெல்லாம் இனிய நம் பிக்கைகள் இதமாய்த் தட்டிக் கொடுத்து அவனைத் தூங்க வைத்தன…. அவனுடைய கனவில் ஒரு கணப்படுப்பு தோன் றியது. கணப்படுப்புப் பரணில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த அவனுடைய தாத்தா அந்தக் கடிதத்தைச் சமையற்காரிகளுக்குப் படித்துக் காட்டி னார்…… கணப்படுப்புக்கு முன்னால் விலாங்கு தனது வாலைக் குழைத்துக் கொண்டு மேலும் கீழுமாய் நடை போட் டது…..
நான் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தினமணி பத்திரிகை வாங்குவது வழக்கம். அதில் குறைந்தபட்சம் இரண்டு கதைகள் தென்படும்.
பத்திரிகை வாங்கினாலும் உடனே படிக்க மாட்டேன். பிறகு படிக்கலாமென்று வைத்துவிடுவேன். அப்படியே படிக்காமல் மறந்தும் போய்விடுவதுண்டு. குறிப்பாகக் கதைகள்தான் படிக்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வேன். இதுமாதிரி தினமணி கதிர் பத்திரிகைகளை அடுக்கடுக்காக வீட்டில் வைத்திருக்கிறேன்.
என்னிடம் இப்படியே பல கதைகள் சேர்ந்து விட்டன. ஒரு கதையைப் படிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு மேல் போகாது. ஆனாலும் படிப்பதில்லை. என்ன காரணம்? பிறகு படிக்கலாம் பிறகு படிக்கலாமென்று தள்ளிப் போடுவதுதான் காரணம்.
இப்போது கொரோனா நேரமாக இருப்பதால் நிறைய நேரம் கிடைக்கிறது. ஒரு தினமணி கதிர் இதழை முழுவதும் படித்து விடலாம். அல்லது குறைந்த பட்சம் கதைகளாவது படிக்கலாம்.
வழக்கம்போல் 19.04.2020 அன்று வந்த தினமணி கதிர் இதழ் மிகக் குறைவான பக்கங்களுடன் அச்சிடப்பட்டிருந்தது. 16 பக்கங்கள்தான் பத்திரிகையே.
அதில் ‘உஷா தீபன்’ எழுதிய ‘பால் தாத்தா’ என்ற கதை வந்திருந்தது. எடுத்து வைத்துக்கொண்டேன். படித்து விடுவதென்று. சில நிமிடங்களில் படித்து முடித்து விட்டேன். இன்றைய சூழ்நிலையில் சிறுகதைகள் எழுதுவதில் பலர் வல்லவர்களாக இருக்கிறார்கள். யாரும் இதையெல்லாம் கவனிப்பதில்லையே என்று எனக்குத் தோன்றும்.
பலர் சின்ன சம்பவத்தை வைத்துக்கொண்டு எளிதாகக் கதை எழுதி விடுகிறார்கள். ஒரு கதையைப் பற்றிப் பேசும் போது கதையின் தன்மையைப் பற்றித்தான் பேசவேண்டும். இந்தக் கதை இலக்கியத் தரமானதா இல்லையா என்ற ஆராய்ச்சி தேவையில்லை என்று தோன்றுகிறது.
‘உஷாதீபன்’ எழுதிய பால் தாத்தா என்ற கதை ஒரு நேர் வர்ணனை. நேர் வர்ணனை செய்பவன் ரமணன். அவன் மூலமாக மொத்தக் கதையையும் நம் முன்னால் உஷாதீபன் சொல்கிறார்.
தினமும் காலையில் முனைக் கடைக்குப் போய் பால் வாங்கிக்கொண்டு வருகிறான். கடையில் வாங்கிக்கொண்டு வரும் பால் நாலைந்து முறை திரிந்து விடுகிறது. இது உறுத்தலாகப் படுகிறது ரமணனுக்கு. ஏனென்றால் அவன் மனைவி உமா கரித்துக் கொட்டுவாள். ஏன் பால் திரிந்து விடுகிறது என்று ரமணனுக்குத் தெரியவில்லை.
எப்போதும் பாலில் கொஞ்சம் தண்ணீரைக் கலந்துதான் காய்ச்சுவான். வீதி கார்ப்பரேஷன் தொட்டியிலிருந்து குடத்தில் பிடித்து வரும் தண்ணீரைத்தான் கலப்பான். 25 ரூபாய்க்கு மினரல் வாட்டர் வாங்கிக்கொண்டு வரும் தண்ணீரைக் கலக்கமாட்டான். ஏனென்றால் மினரல் தண்ணீரைக் கலந்ததால் ஒரிரு முறை பால் கெட்டுவிட்டது. அது சரிப்பட்டு வராது என்று ரமணன் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்துவதில்லை. பாலை காய்ச்சப் பயன்படுத்தும் பாத்திரம் மீது அவனுக்குச் சந்தேகம் வரும். அலம்பிய பாத்திரத்தில் க்ளீனிங் பவுடர் படிந்திருக்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறான். அதனால் பால் திரிய வாய்ப்புண்டு என்றும் முடிவு செய்கிறான். ஏன் திரிந்து போகிறது என்று எதையுமே அவனால் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. இந்தச் சம்பவமெல்லாம் காலை 4 மணிக்கு நடக்கிறது. இங்கே காலை நேரத்தைப் பற்றி உஷாதீபன் இப்படி வர்ணிக்கிறார்.
……..’ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பொழுதில் இப்படி ஹாரணை அலற விடத்தான் வேண்டுமா? ஒரு காலத்தில் நகர்ப் பகுதிக்குள், ஏர் ஹாரன் உபயோகிக்கக் கூடாது என்றிருந்தது. இப்போது அந்தக் கண்டிஷனெல்லாம் காற்றில் பறக்க விட்டாச்சு போலும். தண்ணி லாரி வருவதற்கு அடையாளமாய் ஓரிரு முறை அடித்தால் போதாதா? அந்த ஓரிருமுறை கூட சகிக்க முடியாதுதான். மென்னியைப் பிடிப்பது போல அலறல்’…..
உண்மையில் பால் திரிந்து போவதைப் பற்றி ரமணன் பயப்பட வில்லை. உமாவின் ஏச்சுக்குத்தான் பயப்படுகிறான்.
உமா சண்டை போடும்போது பால் வாங்குகிற கடையை மாற்றச் சொல்கிறாள். மாற்றுவதால் கொஞ்ச தூரம் நடந்து போக வேண்டும்.
..’.ஆனா நீங்க போக மாட்டீங்க..சோம்பேறித்தனம். காலை வீசி நடந்து போயிட்டு வந்தா நல்லதுதான? தெனமும் வாக்கிங் போகிற மாதிரியும் ஆச்சு’…என்கிறாள்.
ஒவ்வொரு முறையும் இதே ஆலாபனை இதுமாதிரி அவர்களுக்குள் சண்டை வரும்போது அந்தக் கிழவர் ஞாபகம் ரமணனுக்கு வந்து கொண்டிருக்கிறது. வீடுகளுக்குப் பால் விநியோகிக்கும் கிழவன். 87 வயதாகும் கிழவரைப் பார்க்கும் ரமணனுக்கு தந்தை ஞாபகம் வருகிறது.
..’.அவரைப் பார்க்கும்போதெல்லாம் ஏன்…பார்த்த நாளிலிருந்தே இவனுக்குத் தன் தந்தையின் நினைவு வந்து கொண்டே யிருக்கிறது. அவரும் இப்படித்தானே? ஐம்பாதாண்டுகளுக்கும் குறையாமல் இந்த விடிகாலை நாலு மணிக்கு எழுந்தவர்தானே..அவரும்? எழுபத்தைந்து வயதுக்கும் மேலே உழைத்து ஓடாய்ப் போனவர்தானே? பக்கவாதம் வந்ததால்தானே படுத்தார்…இல்லையெனில் ஆளை இருத்த முடியுமா?…’ என்று உஷாதீபன் விவரிக்கிறார்..
அதோ பால் தாத்தா போய்க் கொண்டிருக்கிறார். இந்த உலகம் இன்னும் இம்மாதிரித் தியாக சீலர்களால்தான் ஜீவித்துக் கொண்டிருக்கிறது.
தாத்தாவிடம் பால் கொண்டு வந்து போடச் சொல்கிறான் ரமணன். ரூ.40க்கு இரண்டு பால் பாக்கெட்டுகளை. தாத்தா முகத்தில் மகிழ்ச்சி. அந்தப் பொக்கைவாய்ச் சிரிப்பு இவனை ஆட்கொள்கிறது.
மறுநாள் காலை நாலரை மணிக்கு ரமணன் தாத்தா வருகிறாரென்று பார்த்து பால் வாங்க கீழே போகிறான்.
தாத்தா தினமும் பால் கொண்டு வந்து போடுவதற்கு மனைவியும் அங்கீகாரம் கொடுக்கிறாள். மனைவி சொல்கிறாள்…’சொல்லப்போனா இந்த ஏரியா ஜனங்கள் பூராவும் அவரை ஆதரிக்கணும். அதுதான் அவர் உழைப்பை மதிக்கிறதன்மை. அப்பத்தான் நல்ல ஜனங்கள்னு அர்த்தம்..பத்து ரூபாய் சேர்த்து ஐம்பதாகக் கொடுங்கள்,’ என்கிறாள் மனைவி
‘அவளுடைய விடிகாலைப் பேச்சு என்னைக் குளிர்விததது,’ என்கிறான் ரமணன். இந்த ஏற்பாட்டுக்குப் பிறகு ரமணனுக்கும், மனைவிக்கும் சண்டை வருவதில்லை.
பக்க்த்து வீட்டு மாமி உமாவிடம், கரண்டால் பால் திரிஞ்சு போயிடறது என்கிறாள். இதைக் கிண்டல் செய்கிறான் ரமணன். ‘மூணாமத்த ஆள் சொன்னாத்தான் நம்ப அருமை தெரியும் போஙூருக்கு..கிரகம்டா சாமி’ என்று.
கற்புர புத்தி..பக்கத்தாத்து மாமி சொன்னதும் கப்பென்று பிடித்துக் கொண்டு விட்டாளே…திரியாத தெளிந்த மனசு என் அன்பு மனைவி உமாவுக்கு..அதற்குப் பின் வாயே திறக்கவேயிலலையே..சார்? என்கிறான் ரமணன்
கதை இங்கே முடிந்து விடுகிறது. ரன்னிங் கமெண்டரி மாதிரி உஷா தீபன் இந்தக் கதையை எழுதியிருப்பது சிறப்பாகப் படுகிறது. ஒரு சாதாரண விஷயம்தான். எழுதியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது.
அழகியசிங்கர்
விருட்சம் 113வது இதழிற்குப் படைப்புகளை அனுப்பியவர்களுக்கு நன்றி பல. நான் எதிர்பார்த்தபடியே கவிதைகள்தான் அதிகம். சிறுகதைகள் குறைவு. கட்டுரைகள் இல்லவே இல்லை.
கூடிய சீக்கிரம் கொண்டு வர உள்ளேன்.
நேற்று (17.04.2020) நிஸகர்தத்தா பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பதிவை இன்று வெளியிடுகிறேன்.
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : அழகியசிங்கர்)
( Sri Nisargadatta Maharaj எழுதிய 1 am that’ என்ற புத்தகமும், அவரைப்பற்றியும் என் நண்பரும், கவிஞருமான எஸ்.வைத்தியநாதன் மூலம் தெரியவந்தது. என் நண்பர் நேரில் அவரை தரிசித்திருக்கிறார். இப்புத்தக படிக்க வேண்டுமென்று நினைத்தபோதெல்லாம், தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்றும் நினைத்துக் கொள்வேன். என் விருப்பப்படியே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.)
ஸ்ரீ நிஸர்கதத்தா மஹாராஜின் வாழ்க்கைக் குறிப்புகள் :
பிறந்ததேதியைக் குறித்து கேட்கும்போது, நான் பிறக்கவே இல்லை என்று பதில் அளித்தார் மஹாராஜ். அவரைப்பற்றி எழுதுவது அவ்வளவு எளிதான விஷயமாகத் தெரியவில்லை . அவருடைய சில மூத்த உறவினர்களும், நண்பர்களும் அவர் மார்ச் மாதம் 1897-ல் பிறந்திருப்பதாகச் சொன்னார்கள். அவருடைய இயற்பெயர் மாருதி. அவருடைய தந்தை, ஷிவ்ராம்பன்ட் ஏழை. அவர் பம்பாயில் ஒரு வீட்டில் பணியாளாகப் பணிபுரிந்தவர். அதன்பின் கான்டல்கானில் ஒரு சிறிய கிராமத்தில் விவசாயியாகப் பணிபுரிந்தவர். – மாருதி 18வது வயதை அடைந்தபோது, அவருடைய தந்தை மனைவி, நான்கு புதல்வர்கள், இரண்டு பெண்கள் விட்டுவிட்டு மரணமடைந்துவிட்டார். மாருதியுடைய மூத்த சகோதரர் பம்பாயிற்குன். வேலை தேடிச் சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து மாருதியும் சென்றார். மாருதி ஒரு அலுவலகத்தில், மிகக் குறைவான ஊதியத்தில், ஒரு குமாஸ்தாவாகப் பணிபுரிந்தார். ஆனால் வெறுத்துப்போய் அந்த வேலையை விட்டுவிட்டு சிறுவர்களின் துணிமணிகள், கையால் தயாரிக்கப்படும் சிகரெட்டுகள் விற்கும் சிறிய வியாபாரத்தைத் துவங்கினார். இந்த வியாபாரம் செழுமையாக வளரத் தொடங்கியது. இந்தச் சமயத்தில், அவருக்குத் திருமணமாகி ஒரு புதல்வனும், மூன்று பெண்களும் பிறந்தார்கள்.
மாருதி எல்லோர் போல சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். நடுத்தர வயது வரை அவருடைய வாழ்க்கையில் எந்த முக்கியத்துவமும் நடைபெறவில்லை. அவருடைய நண்பர்களில் ஒருவரான யாஷ்வந்ராவ் பாக்கர், நவ்நத் சம்பரதயா என்ற ஹிந்து மதத்தின் பிரிவின் குருவான ஸ்ரீ சித்தர்ராமேஷ்வரிடம் அவரை அழைத்துப் போனது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகப் படுகிறது. அந்தக் குரு, மந்திரத்தையும், தியானம் செய்யும் சில வழிமுறைகளையும் உபதேசித்தார். ஆரம்பநிலையில் அவருக்கு சில காட்சிகள் தென்பட்டன. அவரை அறியாமல் சமாதிநிலையை அடைவார். அவருக்குள்ளே ஏதோ பிரளயம் நிகழ்ந்து, அவர் பிரபஞ்ச உணர்வை எய்தினார். மிகச் சாதாரண கடை வியாபாரியான மாருதி பிராகசமுள்ள ஸ்ரீ நஸகர்தத்தா மஹாராஜாவாக மாறினார்.
எல்லா மனிதர்களும் இந்த உலகத்தில் சுய உணர்வோடு இந்த உலகத்தைவிட்டுப் பிரிய விருப்பமில்லாமலிருப்பார்கள். அவர்கள் தங்களுக்காகவே வாழ்வார்கள். தன்னுடைய சுயலாபத்தையும், புகழையும் தேடும் விதமாகவே அவர்கள் வாழ்க்கை இருக்கும். ஆனால் அவதார புருஷர்கள் மற்றவர்களைப்போல் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும், அவர்கள் பிரபஞ்ச உணர்வை உடையவர்களாக இருப்பார்கள். ஸ்ரீ நஸகர்தத்தா மஹாராஜ் இருவித வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். கடை வியாபாரத்தை நடத்தினார், ஆனால் லாபம் சம்பாத்திக்கும் வியாபாரியாகச் செயல்படாமலிருந்தார். பின், குடும்பம், வியாபாரம் என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு காலணி கூட அணியாமல் இந்தியாவின் பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றார். இமையமலைச் சாரலில் தன் வாழ்நாள் முழுவதும் கழித்துவிட நினைத்தார். ஆனால் அவ்வாறு இருப்பது சரியில்லை என்று திரும்பவும் பழைய இடத்திற்கு வந்தார். அவர் பிரமாதமான ஆனந்தநிலையில் அமைதியாக வாழ்ந்துவந்தார். அவர் தன்னை உணரும் நிலையை அடைந்துவிட்டார்.
படிப்பறிவில்லாதவராக இருந்தாலும், அவருடைய உரையாடல் உயர்ந்தத் தரத்தில் உள்ளது. ஏழ்மையில் பிறந்தாலும், செல்வந்தர்களைவிட செல்வந்தர் அவர். மி கிவி ஜிபிகிஜி என்ற இப்புத்தகத்தில் 101 உரையாடல்கள் உள்ளன.
(ஆங்கிலத்திலிருந்து தமிழில் : அழகியசிங்கர்)
நான் எனும் உணர்வு
கேள்வி கேட்பவர் : இது தினமும் ஏற்படக்கூடிய அனுபவம். நாம் விழிக்கும்போது இந்த உலகம் திடீரென்று தோன்றுகிறது. எங்கிருந்து இது வருகிறது? |
மஹாராஜ் : எது வருவதற்கு முன்பும் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். எந்த மாற்றமும் இல்லாத பின்னணியில்தான், எல்லாத் தோற்றமும், தோற்றமின்மையும் ஒரு மாற்றத்தை உருவாக்க முன்வரும்.
கே.கே : விழிப்பதற்குமுன், நான் தன் நிலையற்ற நிலையில் உள்ளேன்.
மஹாராஜ் : எந்த அர்த்தத்தில்? எல்லாவற்றையும் மறந்த நிலையிலா? அல்லது எந்த அனுபவத்தையும் உணராத நிலையிலா? உங்களைப்பற்றி உணராத நிலையில் நீங்கள் இருக்க முடியுமா? நினைவாற்றலின் ஒரு குறைபாடு, இல்லாத நிலைக்கு ஒரு சாட்சியா? உங்கள் இல்லாத நிலையை ஒரு உண்மையான அனுபவமாக உங்களால் தெளிவாகப் பேச இயலுமா? உங்கள் மனம் இல்லை என்று கூட உங்களால் சொல்ல இயலாது. உங்களைக் கூப்பிட்டவுடன் நீங்கள் விழித்துக் கொள்ளவில்லையா? விழித்துக் கொண்டிருக்கும்போது, ‘நான்’ என்ற உணர்வு முதலில் வருவது தெரிகிறதா? தூங்கிக் கொண்டிருக்கும்போதோ மயக்கத்திலிருக்கும்போதோ, விதைபோல் தன்னுணர்வு இருந்துகொண்டுதான் இருக்கும். விழித்துக் கொண்டிருக்கும்போது, அனுபவம் இப்படி ஓடும்: “நான்தான் – உடல் – இந்த உலகத்தில்.” ஒரு உலகத்தில் ஒரு உடல் என்ற சிந்தனை கருத்தாக்கம் தொடர்ச்சியாகவும், ஒரே சமயத்திலும் ஏற்படக்கூடியது. மற்றவர்கள் யாரும் இல்லாத தருணத்தில், ‘நான்தான் என்கிற உணர்வு ஏற்படுமா? –
கே.கே : ஞாபகங்கள் மூலமாகவும், பழக்க வழக்கங்கள் மூலமாகவும் நான் எப்போதும் மற்றவராகத்தான் உணருகிறேன். எனக்குத் தெரிந்தது இந்த நான் மட்டும்தான்.
மஹாராஜ் : ஏதோ ஒன்று அறிந்துகொள்ளவிடாமல் தடுக்கிறது, உங்களை. மற்றவருக்குத் தெரிந்த ஒன்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால் என்ன செய்வீர்கள், நீங்கள்?
கே.கே: அவர்களின் உத்தரவு படி நான் அவர்களிடமிருந்து அறிந்துகொள்ள முயற்சிப்பேன்.
மஹாராஜ்: நீங்கள் வெறும் உடல்தானென்றோ அல்லது வேறு ஏதோ ஒன்றோ என்று தெரிந்து கொள்வது உங்களுக்கு முக்கியமாகத். தோன்றவில்லையா? அல்லது எல்லாமே ஒன்றுமில்லையா? நீங்கள் பார்ப்பதில்லையா? உங்கள் பிரச்சினைகள் முழுவதும் உடல் சம்பந்தப்பட்டதென்று – உணவு, உடை, இருப்பிடம், குடும்பம், நண்பர்கள், பெயர், புகழ், பாதுகாப்பு, வாழ்தல் பிரச்சினைகள் என்பதை? இவையெல்லாம் உடல் சம்பந்தப்பட்டவை என்பதை உணர்ந்தால், எல்லாம் அர்த்தமிழந்து போவதை உணர்வீர்கள். –
கே.கே : நான் உடல் மட்டுமல்ல என்று உணர்வதால் என்ன நன்மை இருக்கிறது?
ம : நான் உடல் மட்டுமல்ல என்று சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. ஒருவிதத்தில் நீங்கள்தான் எல்லா உடல் தொகுதிகளும், உணர்வுகளும், மனங்களும், அதற்கு மேலும். ‘நான்’ என்ற உணர்வை நோக்கி இன்னும் தீவிரமாகச் செல்லுங்கள், நீங்கள் புரிந்து கொள்வீர்கள். மறந்துபோன அல்லது தவறுதலாக வைத்துவிட்டப் பொருளை எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்? ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக உங்கள் மனதில் வைத்துக்கொள்வீர்கள். உடனடியாக ‘நான்’ என்ற உணர்வு முதலில் வெளிப்படும். எப்போது வருகிறது என்பதை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் அல்லது அமைதியாக அதைக்கூர்ந்து கவனியுங்கள். உங்கள் மனம், ‘நான் என்ற உணர்வில் அசையாமல் இருக்கும்போது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவத்தை உணர்ந்து கொண்டிருப்பீர்கள். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பதைத்தான் உங்களால் செய்யமுடியும். எல்லா உணர்வு நிலைகளிலும் நான் என்பது எப்போதும் உங்களுடன் இருக்கும்வரை, -உடல், உணர்வுகள், கற்பனைகள், எண்ணங்கள், உடமைகள் போன்ற பல உங்களுடன் பிணைத்துக் கொண்டிருக்கும். இந்த எல்லாச் சுய அடையாளங்களும் குழப்பத்தை உண்டாக்கும். இவற்றால் நீங்கள் உங்களை அறிந்துகொள்ள இயலாத நிலைக்குச் செல்கிறீர்கள்.
கே.கே : அப்படியென்றால் ‘நான்’ என்பது என்ன?
மஹா : நீங்கள் யார் என்பதை அறிந்துகொள்ளாமலிருப்பதுதான் சரியாக இருக்கிறது. நீங்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ளத் தேவையில்லை. அறிவு என்பது தெரிந்த எல்லாவற்றையும் பொதுவாகவோ, தனிப்பட்ட முறையிலோ விஜாரிப்பதுதான்! சுய அறிவு என்பது ஒன்றுமில்லை. ஏன்எனில், முழுவதும் உன்னை நிராகரிக்கும்வரை, உன்னால் அதை விவரிக்க முடியாது. பொதுவாக நீங்கள் சொல்லக்கூடியது, ‘நான் இது அல்ல, நான் அது அல்ல என்பதுதான். இதுதான் நான் என்ற அர்த்தத்துடன் நீங்கள் சொல்ல முடியாது. அது ஒரு அர்த்தமும் ஏற்படுத்தாது. நீங்கள் சொல்கிற, ‘நான் இது அல்ல’, ‘நான் அது அல்ல என்பதெல்லாம் நீங்களாக இருக்க முடியாது. நீங்கள் நிச்யமாக இன்னொன்றாக இருக்க முடியாது. உங்களை அவதானிக்கவும்முடியாது, கற்பனையும் செய்ய முடியாது. ஆனால், நீங்கள் இல்லாமல் அறிதலும் இல்லை, கற்பனையும் இல்லை . இதயம் உணர்வதை, மனம் நினைப்பதை, உடல் செயல்படுவதை உங்களால் கவனிக்க முடியும். அப்படி உங்களால் அவதானிக்கும் செயலால், நீங்கள் என்ன அவதானிக்கிறீர்களோ அது நீங்கள் இல்லை என்று தெரியவரும். நீங்கள் இல்லாமல் அவதானிக்க முடியுமா? உணரத்தான் முடியுமா? ஒரு அனுபவம் தொடர்பு உடையது. உணர்பவர் இல்லாமல் ஒரு அனுபவம் என்பது உண்மையாக இருக்க முடியாது. உணர்பவர்தான் அனுபவத்திற்கு உண்மையைச் சேர்க்க முடியும். ஒரு அனுபவம் உங்களுக்கு ஏற்படவில்லையென்றால் அதனால் உங்களுக்கு எந்த நன்மை கிடைக்கப் போகிறது?
கே.கே: ஓர் அனுபவத்தை உணர்பவரும், ‘நான்-தான்’ என்ற உணர்வும் கூட அனுபவமாக இருக்க முடியுமல்லவா?
மஹாராஜ் : நிச்சயமாக. உணரக்கூடிய ஒவ்வொன்றும் அனுபவம்தான். ஒவ்வொரு அனுபவத்திற்கும், ஒரு உணர்பவர் தானாக உருவாகி விடுவார். ஆனால் ஞாபகம் அதன் தொடர்ச்சியின் பிம்பத்தை உருவாக்கும். உண்மையில் ஒவ்வொரு அனுபவத்திற்கும் உணர்பவரும் உண்டு. உணர்பவர் – அனுபவம் உறவின் அடிப்படையில் தன்னை அறிதல் என்பது பொதுப்படையான ஒன்று. தன்னை அறிதலும், தொடர்ச்சியும் ஒன்றல்ல. ஒவ்வொரு பூவிற்கும் ஒவ்வொரு நிறமுண்டு ஆனால் எல்லா நிறமும் ஒரே வெளிச்சத்திலிருந்து வெளிப்படுகிறது. அதேபோல் எல்லா உணர்பவர்களும் பிரிக்கமுடியாத நுணுகமுடியாத அனுபவத்தில் தோன்றினாலும், ஒவ்வொருவர் நினைப்பும் வேறு வேறு. ஆனால், அடிப்படை சாரத்தில் சமம். காலத்திற்கும், வெளிக்கும் அப்பாற்பட்டு நிகழக்கூடிய எல்லா அனுபவத்திற்கும் இந்தச் சாரம்தான் அடிப்படியான ஊற்று.
கே.கே: எப்படி நான் அதை அடைய முடியும்?
மஹாராஜ் : நீங்கள் அதைப் பெறுவதற்கு போகத் தேவையில்லை. நீங்களேதான் அது. அது உங்களை அடையும், நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தால். உங்களுடைய பற்று உண்மையற்றதை நோக்கிப் போகட்டும். உண்மை தானாகவே மெதுவாக வந்து சேரும். நான்தான் இதை நடத்துகிறேன் அதை நடத்துகிறேன் என்ற கற்பனையை – விட்டுவிடுங்கள். அடிப்படையான உணர்வின் சாரத்தை உணருங்கள். அப்போது மகத்தான அன்பு வந்தடையும். அது உங்கள் விருப்பத்தைச் சார்ந்ததுமல்ல முன் தீர்மானித்ததுமில்லை. ஒரு சக்தி எல்லாவற்றையும் அன்பு மயமாக உருவாக்கும். அன்பைப் பொழியக்கூடியதாகவும் இருக்கும்.
‘தாயாரின் திருப்தி’ என்ற இந்தக் கதை கு பா.ராஜகோபாலன் எழுதியது. மொத்தமே 3 பக்கங்களில் முடிந்து விடுகிறது. 1930களில் மணிக்கொடியில் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அதைப் பற்றி விபரம் புத்தகத்தில் இல்லை.
ஒரு பிராமண சமுதாயத்தில் நடக்கும் கதை. பங்குனி மாசத்து வெயில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சிகால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கைகள் கூட வாயைத் திறந்துகொண்டு மௌனமாக மரங்களில் உட்கார்ந்திருந்தன. நாய்கள் மட்டும் எச்சில் இலைகளுக்காகப் பிரமாதமாக ரகளை செய்து கொண்டிருந்தன.பிராமணர்கள் துடித்துக்கொண்டு நடந்து வந்து சேர்ந்தார்கள்.
சுந்தரேசய்யர் என்ற பிராமணர் வீட்டில் அவர் தாயாருக்கு சிரார்தம். பிராமணர்கள் கடுமையான வெய்யிலில் சுந்தரேசய்யர் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். சுந்தரேசன் நாஸ்திகருமல்ல, ஆஸ்திகருமல்ல. தென்னிந்திய ஆங்கிலம் படித்த பிராமணர்களின் திரிசங்கு கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று சுந்தரேசய்யரை கு.ப.ராஜகோபாலன் வர்ணிக்கிறார்.
ஒரு இடத்தில் பிரோஹிதர் கண்ணை மூடிக்கொண்டு மந்திரங்களை அர்த்தமில்லாமல் ஓட்டினார் என்கிறார். அர்த்தமில்லாமல் என்கிறார் கு.ப.ரா. சொல்பவருக்கும் அர்த்தம் தெரியவில்லை மந்திரங்களைக் கேட்பவருக்கும் அர்த்தம் தெரியவில்லை.
எப்போதும் ஸ்நான ஸந்தியா வந்திருதிகள் விதிப்படி நடக்காது. ஆனால் தர்ப்பணமும் சிரார்த்தமும் மட்டும் தவறாமல் நடைபெறும். “
அந்தத் தினங்களில் மட்டும் விபூதி, பஞ்சகச்சம், இவை பவித்திரத்தை சந்திக்கும் என்கிறார் கு.ப.ரா. இதில் வேடிக்கை என்னவென்றால் சுந்தரேசனுக்கு பஜனை பிடிக்கும். ராமஸங்கீர்த்தனத்தில் உருகிக் கண்ணீர் விடுவார். அதற்காக ஊரில் அவரை கேலி செய்வதுண்டு. இந்தக் கதையில் அவர் எந்த ஊர் என்று கு.ப.ரா சொல்லவில்லை. ஏதோ ஊர்? படிப்பவர் கற்பனை செய்துகொள்ள வேண்டும். வெகு சாதுவான பிரகிருதி. பிச்சைக்காரனென்றால் எதாவது கொடுக்காமல் அனுப்பமாட்டார். அதிலும் கூன், குருடென்றால் அரை, கால் என்று கொடுத்துவிடுவார். இப்படி அவர் தாராளமாக இருப்பதால், ஊர்க்காரர்கள் உலகம் தெரியாதவர் என்றும், கொஞ்சம் கிறுக்கு என்று பேசிக் கொள்வதுண்டு.
பிராமணர்கள் சாப்பாடு முடித்து பிண்டப் பிரதானமும் ஆகிவிட்டது. பிராமணர்கள் திருப்தி என்று சொல்ல வேண்டிய கட்டம். சுந்தரேசய்யர் மூன்று வயதுக் குழந்தை, வாசலில் விளையாடிக் கொண்டிருந்தவன் உள்ளே ஓடி வந்து,
“பாட்டி வந்திருக்காளா? அதார்ரா?” என்று கேட்டுக் கொண்டே சந்தரசேய்யர் வாசலில் போய்ப் பார்த்தார்.
வாசற்படியில் கையில் தடியும் தகரக்குவளையுமுள்ள ஒரு குறுக் கிழவி சாய்ந்து கொண்டிருந்தாள்.
“ஐயா கிருகிருன்னு வருது. இந்தப் பாவி ஊர்ல ஒரு பிடி சோறு போடறவங்க இல்லையா? ஐயோ?” என்று புலம்புகிறாள்.
ஒரு பிராமணர் வீட்டில் திவசம் நடக்கும்போது திவசம் முடிந்து சாஸ்திரிகள் வீட்டிற்குப் போகும்வரை வெளி மனிதர்களைப் பார்க்கவே மாட்டார்கள். மேலும் திவசம் நடந்த வீட்டில் அன்று மட்டும் வெளிமனிதர்களுக்கு அன்னதானம் செய்ய மாட்டார்கள்.
இதில் விதிவிலக்காக சுந்தரரேசய்யர் இருக்கிறார். அவருக்கு மனதில் திடீரென்று ஏதோ ஓர் எண்ணம் ஏற்பட்டது. ஜாதியாசாரம் என்ற சொல்லப்படும் மூடபக்தியை மனிதனின் சுபாவ குணமான இரக்கம் ஒரேயடியில் வென்று விட்டது என்று இங்கே கு.ப.ரா குறிப்பிடுகிறார். ஒரு நிமிஷத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதையும் தீர்மானித்து, அதற்கு மதநம்பிக்கைக்கேற்ற சமாதானத்தையும் மனதிற்கொண்டார்.
சட்டென்று உள்ளே சென்று ஒரு பிண்டத்தையும் தன் தீர்த்த கலசத்தையும் எடுத்துக்கொண்டு வாசஙூல் வந்து உருண்டையைக் கலசத்தில் கரைத்துக் கிழவியின் குவளையில் பிடி என்று ஊற்றினார். அதை மடமடவென்று குடித்துவிட்டு கிழவி அப்பாடா உசிர் வந்திச்சு. மகாராசா, நீ நல்லா இருக்கணும் உன்னைப் பெத்த வயிறு என் வயிற்றைப் போல குளிரணும் என்று சொல்லி சிரமம் மேலிட்டு படியில் சாய்ந்துவிட்டாள்.
இது மாதிரியான துணிச்சலான காரியத்தை சுந்தரேசய்யர் செய்து விடுகிறார். பசித்தவளுக்குச் சாதம் போடுவதில் தவறில்லை. ஆனால் திவசம் நடந்து முடிந்த வீட்டிலிருந்து அது மாதிரி செய்வது சரியில்லை. மேலும் சுந்தரேசய்யர் பிராமணர்கள் அவர் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்பே இதுமாதிரி செய்து விடுகிறார். அவர்கள் போனபிறகு இதைச் செய்திருந்தால் இந்தக் கதை எந்த சுவாரசியமும் இல்லாமல் போயிருக்கும்.
‘என்ன என்ன’ என்று ஓடிவந்து பிராமணர்கள் இதைப் பாரத்துத் திகைத்துப்போய், ‘அடாடாடா, என்ன அபசாரம்! சிரார்த்தம் நஷ்டமாய்விட்டதே! என்ன அக்கிரமம்! யார் இப்படி சிரார்த்தம் செய்யச் சொன்னார்கள்!’ என்று கேட்கிறார்கள்.
“ஏன்?” என்கிறார் சுந்தரேசய்யர்.
“வாயசத்துக்குக் கூட இன்னும் பிண்டம் வைக்கவில்லை. பித்ருக்கள் காக்கையாக வந்து காத்திருப்பார்களே?” என்கிறார்கள் பிராமணர்கள்.
இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும்போது புரட்சிகரமான கருத்தை சுந்தரேசய்யர் வெளிப்படுத்துகிறார். உண்மையில் சுந்தரேசய்யர் மூலம் கு.ப.ராஜகோபாலன்தான் இங்கே பேசுகிறார்.
“மனித ரூபத்துடன் வந்து என் தாயார் இதோ திருப்தியடைந்து விட்டாளே..காக்கையைக் காட்டிலும் மனித ஜன்மம் மேலல்லவா?” என்கிறார்.
உண்மையில் பிராமணர்கள் எல்லோரும் போனபிறகு இந்தக் காரியத்தைச் செய்திருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காது. சிரார்த்தம் நஷ்டமாயிருக்காது.
சுந்தரேசய்யரைப் பார்த்து பிராமணர்கள், “உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. இனிமேல் இங்கே ஜலபானம் செய்யக் கூடாது. தாம்பூலத்தை இங்கேயே எறிந்துவிடும்” என்று சொல்லி பிராமணர்கள் வஸ்திரம், கும்பம், தக்ஷிணைகளைக் கைப்படாமல் எடுத்துக்கொண்டு, கீழே கால்வைத்துக்கூட நடக்காமல் சென்றார்கள்.
போகும்போது பிராமணர்கள் வஸ்திரம், கும்பம், தக்ஷிணைகளை எடுத்துக்கொண்டுதான் போகிறார்கள் என்கிறார் கு.ப.ராஜகோபாலன். வேண்டாமென்று அவர்கள் விட்டுவிட்டுப் போகவில்லை. ஆனால் சிரார்த்தம் பண்ணியும் புண்ணியமில்லை என்று சபித்துவிட்டுத்தான் போகிறார்கள்.
“ஐயோ இதென்ன இப்படிச் செய்துவிட்டீர்களே?” என்று கவலையோடு மனைவி வெளியே வந்தாள்.
“என்னடி அசடு. வாசலில் பார். அம்மா உருவெடுத்து வந்திருப்பதை?” என்று கூறுகிறார்
சுந்தரேசய்யர். இப்படிக் கூறும் சுந்தரேசய்யரை பைத்தியம் என்று கூறாமலிருக்க முடியுமா?
இந்தக் கதை இங்கயே முடிந்து விடுகிறது. அதற்குமேல் எந்தத் தகவலும் சொல்லாமல் கதையை முடித்து விடுகிறார். மூன்று பக்கங்களில் அற்புதமான கதை. ஒவ்வொருவரும் இக் கதையை அவசியம் படிக்க வேண்டும்.
அஞ்சலட்டை எடுத்துக்கொண்டு கதை எழுத ஆரம்பித்தேன். கதை அஞ்சலட்டைக்குள்தான் முடிய வேண்டும். இதுவரை 4 கதைகள் எழுதி விட்டேன்.
இது நான்காவது கதை.
கொரானாவை ஒழிப்பது எப்படி?
வீட்டிலேயே இருந்ததால் என்ன செய்வதென்று தெரியவில்லை. வெளியே போனால்தான் சம்பாத்தியம். கிட்டத்தட்ட கொரானாவால் சில நாட்களாக வீட்டில் முடங்கிக் கிடக்கிறேன். அப்பா உர்ரென்று என்னை முறைத்துப் பார்ககிறார். அம்மா, 'என்னடா செய்யப் போகிறாய்?' என்று கவலையுடன் கேட்கிறாள்.
கம்ப்யூட்டர்களை அக்கக்கா பிரித்து ரிப்பேர் செய்கிற இடத்தில்தான் பணி புரிந்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மாதம் மேல் ஆகப்போகிறது. கடையைத் திறக்கவில்லை. அந்தக் கம்பெனியிலிருந்து கிடைக்கிற சம்பளம் குறைவாக இருந்தாலும், சமாளிக்கும்படி இருந்தது. ஓரளவு நிலைமையைச் சமாளிக்க போதுமானதாக இருந்தது. நெட்டியை வாங்கிடும் வேலை. எந்த நேரமானாலும் எங்க வேண்டுமானாலும் ஓட வேண்டும்.
ஓனர் முரளியைப் போனில் கூப்பிட்டேன். "சார்," என்று.
"உங்களைப் போல் பத்து ஊழியர்கள் இருக்கிறார்கள். கட்டிட வாடகை அது இதெல்லாம் கட்டாயம் தரவேண்டும்," என்று இரக்கமே இல்லாமல் சொல்லிவிட்டார்.
என்ன செய்யவேண்டுமென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும்போதுதான் மோகனிடமிருந்து போன் வந்தது. "என்ன பண்ணப் போறே? உன் கணக்கில் பணம் அனுப்பறேன். கணக்கு எண், வங்கிப் பெயர் குறிப்பிட்டு செய்தி அனுப்பு."
"சார்," என்று நாத் தழுதழுக்கக் கூப்பிட்டேன். அவர் ஒரு வாடிக்கையாளர். அடிக்கடி அவர் கம்ப்யூட்டரை ரிப்பேர் செய்யப் போவேன். அப்படித்தான் பழக்கம். ஒரு முறை அவர் கதை தினமணிக்கதிரில் வெளிவந்தது. அதைப் படித்து அதைச் சிலாகித்துப் பேசினேன்.