செப்டம்பர் 11ஆம் தேதி 2021ல் 68வது விருட்சம் நேசிப்புக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது

அழகியசிங்கர்


இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லோரும் பாரதியார் கவிதைகளை வாசித்ததோடு பாடவும் செய்தார்கள். இனிமையாக இக்கூட்டம் நடந்து முடிந்தது. இதன் காணொளியை இங்கே அளிக்கிறேன். எல்லோரும் கேட்டு ரசியுங்கள்

தொலைந்துபோன பாரதியார்

அழகியசிங்கர்

நண்பரொருவர் பேச்சைக் கேட்டு எழுதிப்பார்த்தேன் பாரதியாரை துடிக்கும் மீசையுடன் என் முன்னால் நின்றார் பாரதியார் எங்கே ஒளிந்திருக்கிறீர் என் வரிகளில் என்று அவரைக் கேட்டேன் சிரித்தபடி மறைந்து விட்டார்


போனில் படித்தபோது நண்பர் தலை ஆட்டி நன்றி நன்று என்றார் கொண்டு வருவார் துடிப்புடன் பாரதியார் பற்றி எழுதிய பலர் கவிதைகளையெல்லாம் சேர்த்தென்றால் திட்டத்திலிருந்து விலகி விட்டார்

அப்போது எழுதிய அந்தக் கவிதையை எங்கே வைத்தேன் ஃபைல்களைப் புரட்டி பார்த்தாலும் கிட்டவில்லை பாரதி என் பாரதி நீண்ட நோட்டில் எழுதிப் பார்க்கும் கவிதைகள் பலவற்றை சேர்த்து வைக்கும் பழக்கமெனக்குண்டு இருந்தாலும் பாரதியாரைப் பற்றி நானெழுதிய கவிதையை காணவில்லை ஏனோ.. எங்கே ஒளிந்துகொண்டார்? தெரியவில்லை வாவென்றால் வருவாரா? தெரியவில்லை


அவர் வரிகளிலிருந்து கயிறு பிடித்து இறங்கியிருக்கிறோம் வழிதெரியாமல் திகைத்த எங்களுக்கு வரம்கொடுத்து வரி தந்த மேதையாவர்

அவரை வைத்துப் படம் எடுக்கிறார் பலர் பாட்டுப்பாடப் பிய்த்துக் கொண்டனர் அவர் பாடல்களை நானோ கவிதை எழுத முயற்சிக்கிறேன்
(பாரதியார் நினைவு நாள் : செப்டம்பர் 11)

68வது விருட்சம் நேசிப்புக் கூட்டம் நடத்தும் பாரதி பாடல்களை நினைவு கூர்வோம்


அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 68வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி  மாலை 6.30மணிக்கு (11.09.2021) சிறப்பாக  நடைபெற உள்ளது.   கலந்துகொள்பவர்கள் எல்லோரும் பாரதி பாடல்களைப் பாடவும், வாசிக்கவும் அழைக்கிறேன்.
Topic: 68வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Zoom MeetingTime: Sep 11, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/82016227694…Meeting ID: 820 1622 7694Passcode: 363688

கவிதையும் ரசனையும் – 21


அழகியசிங்கர்

தமிழில் புதிய கவிதையை வகைமையைச் சமீபத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். அந்தக் கவிதை வகைமையின் பெயர் என்பா.

இது வெண்பாவிலிருந்து உருவான கவிதை வகைமை. என்பாவிற்கு முக்கிய இலக்கிய விதிகளை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். முதலில் 4 வரிகளில் வெண்பாவைப் போல் கவிதை இயற்றப் பட வேண்டும். ஒவ்வொரு வரியிலும் நான்கு சொற்கள் வெண்பாவைப் போல. கடைசி வரி நாலாவது வரி மூன்று சொற்கள். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது ஒவ்வொரு வரியும் சுதந்திரமானது.

ஒன்றை ஒன்று தொடர்பில்லாதது. வரியில் வெண்பா மாதிர் எதுகை மோனை என்று எதுவும் இருக்கக் கூடாது. இந்தக் கவிதையை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது.

ஆனால் இக் கவிதை உருவாக்கத்திலுள்ள சுதந்திரம் உற்சாகமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இதில் முக்கியமாகக் கவிதை எழுதுபவர்கள் வெகு சுலபமாகக் கவிதை எழுதி விடுவார்கள். அத்துடன் இல்லாமல் கவிதையை எழுதத் தெரியாதவர்கள் கூட இங்குக் கவிதை எழுதி விட முடியும். இதோ நான் சில உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
நான் எழுதிய கவிதைகள் :

1) வந்தனா வேறு வழியில்லாமல் காதலித்தாள்

வானத்தில் சில பறவைகள் ஏனோ

தூக்கத்தில் கனவு கண்டேன் நான்

என்னவென்று சொல்வது இப்போது

2) வானத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்

தெருவில் மனிதர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்

மஞ்சள் நிறப்பூக்கள் கண் சிமிட்டின

எல்லோரும் நலமுடன் வாழ்க”””

3) கடைக்குஅவசரமாய் போனான் கோபால்”

பஸ் ஸ்டாப்பில் நின்றாள் சீதா

பாயசம் அமைதியாய்ச் சாப்பிட்டான் கண்ணன்

நிற்காமல் ஓடுகிறது ரயில்.

இதைத் தொடர்ந்து என்பாவை இன்னும் சிலரும் எழுதத் துவங்கி உள்ளார்கள். என் கவிதையைப் படித்துவிட்டு, வசந்ததீபன் எழுதிய என்பா கவிதையை இங்குத் தருகிறேன்.


என்பு போர்த்திய தோல் உடம்பு

பிச்சைக்காரன் கலயம் ஏந்தி செல்கிறான்

கண்ணீர் மழையில் அவள் நனைந்தாள்

நதி போகிறது நிதானமாக

– வசந்ததீபன்

கவிஞர் கு.மா.பா திருநாவுக்கரசு எழுதிய என்பா கவிதை


கண்ணைக் கட்டி காட்டில் விட்டார்

பொய்யைச் சொல்லி பிழைக்க முடியுமா

நடனம் ஆட மோகினி வந்தாள்

முகிலில் மறைந்த நிலா.

– கவிஞர் கு.மா.பா திருநாவுக்கரசு


மதுவந்தி என்பவர் எழுதிய என்பா கவிதை


வளரும் பாதை நடக்க நடக்க

உன்னுள் அமிழ்ந்து, என்னை இறை

செவி ததும்பிக் கசியும் இசை

பிம்பம் விழும் ஓசை

  • மதுவந்தி


சிறகு ரவி என்பவர் எழுதிய என்பா கவிதை


நெய் தீபம் ஏந்தி வந்தாள்

சுடர் மிகு அறிவால் அற்பாயுசு

ஆனையின் அம்பாரியில் அம்பானி பாகன்

சிதிலே உறவு வலை –

சிறகு ரவி

உமா பாலு என்பவர் எழுதிய என்பா கவிதை


நெருப்பு விழிகள் பாதம் நோக்க

செருப்பு அதுவாய் பற்றி எரிய

வேகுமுன் கால்கள் விருட்டென விலக

காலம் சகலத்துக்கும் சாட்சி

– உமா பாலு


பூ.சுப்ரமணியன் எழுதிய என்பா கவிதை


அவன் அதிகாலை எழுந்து சென்றான்

அவள் வேலைக்கு அவசரமாகச் சென்றாள்

பிள்ளைகள் பள்ளிக்கு நடந்து சென்றார்கள்

அந்த வீடு அமைதியானது

– பூ.சுப்ரமணியன்


செ.புனித ஜோதி எழுதிய என்பா கவிதை


மேகம் முத்தமிடச் சத்தம்போடும் மழை

கண்களுக்குள் ஒளிந்து கொள்ளும் மின்னல்

ஒற்றைக் கவிவரிகளுக்குள் சிரிக்கும் வானவில்

சன்னலில் எட்டிப்பார்க்கும் நிலா

– செ.புனித ஜோதி

வே.கல்யாணகுமார் என்பவர் எழுதிய என்பா கவிதை.


இமைகள் கண்கள் இனிதாகக் காக்கிறது

தாய்தன் மகளுக்கு மடிதந்து தாலாட்டுகிறாள்

தவறாமலே இரவுபகல் சுற்றிவரும் பூமிப்பந்து

நிற்காமல் ஓடலாம் வா

– வே.கல்யாணகுமார்


என்பாவைப் புரிந்து கொண்டு ஆறிமுகப் படுத்திய இரண்டு மூன்று நாட்களுக்குள் பலர் கவிதைகள் எழுத ஆரம்பித்து விட்டார்கள். தற்செயலாக நான் கண்டுபிடித்தது ஒரு வெற்றியான முயற்சி என்று தோன்றுகிறது.

வெற்று அர்த்தத்தில் கோஷம்போடும் வெண்பாவின் காலம் இனி இல்லை என்று தோன்றுகிறது. என்பா என்ற வகைமை முற்றிலும் சுதந்திரமான முயற்சி என்று தோன்றுகிறது. இதை வாசகர்களும், தமிழ் அறிஞர்களும் ஏற்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த என்பா அமைப்பு வகைமையைத் தற்செயலாகக் கண்டுபிடித்ததை நினைத்து சந்தோஷம் அடைகிறேன்.


(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 5 செப்டம்பர் 2021 பிரசுரமானது)

67வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 67வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி  மாலை 6.30மணிக்கு (04.09.2021) சிறப்பாக  நடந்து முடிந்தது.  இக் கூட்டத்தில் என்பா என்ற புதிய பா வகையை அறிமுகப் படுத்தி உள்ளேன்.   சிறப்பாக நடந்து முடிந்த இக் கூட்டத்தின் காணொளியை இங்கு அளிக்கிறேன்.  

67வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்

02.09.2021

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 67வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (04.09.2021- Saturday ) சிறப்பாக நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் என்பா என்ற புதிய பா வகையை அறிமுகப் படுத்துகிறேன். 10 பேர்கள் கலந்துகொண்டு என்பா என்ற கவிதை வகைமையில் கவிதைகள் வாசிக்க உள்ளார்கள். இதைத் தவிர எப்போதும் போல் கவிதைகளை வாசிக்கவும் அழைக்கிறேன். எல்லோரையும் கவிதை வாசிக்க அழைக்கிறேன் அன்புடன்,Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 67வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

Time: Sep 4, 2021 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/82255951538…

Meeting ID: 822 5595 1538

Passcode: 865413

2You and Gs Dhayalan

ஒரு கதை ஒரு கருத்து

அழகியசிங்கர்


சிவசங்கரியின்
‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’

‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’. இது ஒரு சிறுகதையின் தலைப்பு.

இந்தக் கதையை யார் எழுதியிருப்பார் என்று உங்களுக்கு யூகிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. எல்லோரும் தமக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் கதைகளைத்தான் படிக்கிறார்கள்.

நான் இந்த முறை சிவசங்கரி என்ற எழுத்தாளரின் கதைகளைப் படித்துக்கொண்டு வருகிறேன். நான் மாதத்திற்கு இரண்டு கூட்டங்கள் நடத்துகிறேன். கதைஞர்கள் கூட்டம் என்ற பெயரில். ஒரு எழுத்தாளர் ஆண் எழுத்தாளர். இன்னொருவர் பெண் எழுத்தாளர்

எத்தனைப் பேர்கள் நம்மிடையே சிறுகதைகளைப் படிக்கிறோம். பின் அதைப் பற்றி எங்காவது பேசுகிறோமா அல்லது எழுதுகிறோமா? கட்டாயம் இல்லை. சிவசங்கரியின் ஒரு கதையான ‘வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப் போனாள்’ என்ற சிறுகதையைப் படித்து முடித்தேன். அக் கதை எழுப்பிய சோகம் அடங்கவில்லை. ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம் அந்தக் கதை முழுவதும் பரவி இருந்தது. ஆரம்பத்தில் ஒரு கதையை ஒரு எழுத்தாளர்

எப்படி ஆரம்பிக்கிறார் என்பதில் நான் ஆர்வமாக இருப்பேன்.


இதோ :


‘குனிந்து கொதித்துக் கொண்டிருந்த நொய்க் கஞ்சியைக் கிளறக்கூட முடியாதபடி ஈர விறகின் புகை அவள் முகத்தைத் தாக்கியது. நன்றாய் எரியாத அடுப்பை மூச்சைப் பிடித்துக்கொண்டு ஊதி நிமிர்ந்தபோது புகையின் காரணமாய் அவள் கண்கள் எரிந்தன.

ஒரு ஏழ்மையின் நிலைமையை இதைவிடச் சிறப்பாக விவரிக்க முடியாது. சின்ன வயதிலேயே தாய் தந்தையை இழந்தவள் ராஜம். பந்துக்களின் அன்பை அவளுக்குக் கொடுக்காத அம்பாள், தங்கமானகுணத்தையும், பளிச்சென்று கண்ணில் நிற்கும் உருவத்தையும் கொடுத்திருந்தாள். பத்து வயது வளர்த்த ஒரு உறவுக்கார மாமி, சித்து வேலைக்கு ஒரு டாக்டர் வீட்டில் விட்டாள் 19வயதில் எல்லாம் தெரிந்து விடுகிறது ராஜத்திற்கு.

அவள் தேர்ந்த சமையல்காரியாக மாறி விடுகிறாள். டாக்டர் தம்பதிக்கு இந்தப் பெண் ராஜத்திற்கு ஒரு பையனைப் பார்த்துத் திருமணம் செய்து விடவேண்டுமென்று தோன்றியது. அவர்கள் கண்ணிற்கு ‘பிராமணாள் காபி ஓட்டல்’ சொந்தக்காரர் வேதாசலம் விழுந்தார்.

வேதாசலத்திற்கு விஸ்வம் ஒரே பையன். – எஸ்எல்.சி படித்துவிட்டு அப்பாவின் கடையிலேயே அவருக்கு உதவியாக இருந்தான். வயது இருப்பத்திரெண்டு. விஷ்வத்துக்கும் ராஜத்துக்கும் சுபயோக சுபதினத்தில் கல்யாணம் நடந்தது.

கல்யாண ஆன சில நாட்களில் மாமனாரைப் புரிந்து கொண்டுவிட்டாள் ராஜம். மனைவியைப் பறிகொடுத்தவர் வேதாசலம். வயது வந்த பையன் இருந்ததால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளத் தயங்கியவர்.

கதாசிரியர் இங்கு ராஜம் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறாள் வேதாசலத்தை என்பதை, பெண்டாட்டி ஆசை இன்னும் மனசில் பூதமாய் உட்கார்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அப்பாவின் ஆசை அறியாத ராஜம் இதை முதலில் புரிந்துகொள்ளவில்லை.

பின்னால் இது தகப்பன் ஆசை அல்ல, பெண்டாட்டிக்கு அலையும் ஆசை என்று புரிந்து விடுகிறது. வெளிப்படையாகச் சொல்ல முடியாத மாமனாரின் தாபத்திலிருந்து எப்படித் தப்பிப்பது? ஒருநாள் ஓட்டலுக்கு விஸ்வம் புறப்பட்டுப் போய் விட்டான் –

“சித்த மயக்கமா இருக்கு நா அப்புறமா வரேன் ” என்று வேதாசலம் வீட்டில் தங்கிவிட்டார்.

கல்லா சாவியை மறந்துவிட்டதால் பத்து நிமிஷத்தில் அதை எடுத்துச் செல்ல வீட்டுக்குத் திரும்பியிருக்கிறான் விஸ்வம். குளித்துவிட்டு வந்த ராஜம் சமையலறையில் கதவைச் சார்த்திக்கொண்டு புடவை மாற்றுவதை வேதாசலம் கதவு இடுக்கு வழியாகப் பார்த்துக் கொண்டிருந்ததை விஸ்வம் பார்த்துவிட்டான்.

உடனே விஸ்வம் ஒரு இடம் பார்த்து மனைவியை அழைத்துக் கொண்டு போய்விட்டான். மூவருக்குமே காரணம் தெரிந்ததுதான். விஸ்வம் ஒரு டின் பட்டாணி, சுண்டல், மசால் வடை, முறுக்கு செய்து பீச்சில் விற்க ஆரம்பித்தான். பண்டம் தரமாக இருந்ததால் குடும்பத்தை ஓட்டும் அளவுக்கு வருமானம் வந்தது. பணத்தில் பெண்டாட்டியை விஸ்வம் புரள விடாவிட்டாலும், தன் அன்பால் அவளைத் தாங்கத்தான் செய்தான்.

கதையின் அடுத்த கட்டத்தில், கடன் இல்லாமல், யார் தயவையும் எதிர்பார்க்காமல் ஏதோ திருப்தியாய் வாழ்ந்து வந்தவர்களின் நிம்மதி, சென்ற வருஷம் ஓர் அடைமழை பெய்த நாளில் பறிக்கப்பட்டது. பிசாசாய் வந்த கார் விஸ்வம் மீது மோதி விடுகிறது. விற்பதற்குக் கொண்டு வந்த பதார்த்தங்கள் மழையால் பீச்சில் விற்க முடியவில்லை. ஆறு மாசங்கள் ஜெனரல் ஆஸ்பத்திரியில் கிடந்தான்.

அப்பா வேதாசலம் பதறி அடித்துக் கொண்டு வந்தார். அழுதார், புலம்பினார் பண உதவி செய்ய முன் வந்தார். அவரிடம் உதவியை எதிர்பார்க்காமல்தான் இருந்தான். ஆனால் எத்தனை நாள் அதுமாதிரி இருக்க முடியும். ஆஸ்பத்ரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததும் ஒன்றுக்கும் உபயோகமில்லாத விஸ்வத்தையும் ஐந்து, இரண்டு வயசு லக்ஷ்மி, வைதேகியையும் காப்பாற்றி குடும்பத்தை நடத்துவதற்குள் ராஜத்தின் முழி பிதுங்கித்தான் போயிற்று.

வேதாசலம் விஷ்வத்தின் கையாலாகாத நிலையைப் பார்க்கிறார். தன்னோடு வந்து இருக்கும்படி குறிப்பிடுகிறார். ரொம்பவும் யோசித்து விஸ்வம் சரி என்று சொல்லி விடுகிறான். மறுநாள் பழையபடி மாமனார் வீட்டோடு குடி போயாகி விட்டது. உண்மையில் வேதாசலம் முதலில் சில நாட்களுக்கு அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று தன் வழிக்கு வராமல் இருந்தபோது, ராஜம் மகிழ்ந்துதான் போனாள். வேதாசலம் திரும்பவும் பழையபடி தொடுவது, தடவுவது, கள்ளத்தனமாய்ப் பார்ப்பது எல்லாம் தலை எடுக்கவும் தவித்துப் போய்விட்டாள் ராஜம்.

“பழையபடியே நாம் தனியாப் போயிடலாம்” என்று பதறிக் கேட்கிறாள் கணவனிடம். இந்த இடத்தில் ஆசிரியை இப்படி எழுதுகிறார். ‘பதறும் மனைவியைக் கண்களை இறக்கிப் பார்த்தான் விஸ்வம். தலைமுடியைக் கோதவில்லை. கண்களைத் துடைக்கவில்லை. இதமாய் இரண்டு வார்த்தைகள் சொல்லவில்லை

.’ ஒன்றுமே சொல்லாமல் மௌனமாய் பல நிமிஷங்களுக்கு இருந்துவிட்டுப் பின் பேசினான். அதைக் கேட்டு ராஜம் பதட்டமடைகிறாள். ‘அப்பாவுக்கு இணக்கமாக இரு’ என்கிறான் கணவன். தணலை வாரி கொட்டின தினுசில் கணவன் பேசி உடனே தடக்கென தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள் ராஜம். ராஜம் வாய்வார்த்தையாய் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அந்த வெள்ளிக்கிழமை தான் கட்டிய புடவைத் தலைப்பால் கழுத்தைச் சுருக்கிக்கொண்டு ராஜம் செத்துப் போனாள்.

இப்படிக் கதையை முடிக்கிறார் சிவசங்கரி. இது ஒரு லீனியர் கதை. லீனியர் கதையில் கதை ஆரம்பம் முடிவு என்றெல்லாம் இருக்கும். கதையின் முடிவு கச்சிதமாக இருக்கும்.

சிவசங்கரியின் கதைகள் என்று இரண்டு பாகங்களாகத் தொகுக்கப்பட்ட கதைகளில் 60 கதைகள் உள்ளன. அவருடைய 60வது வயதில் தொகுக்கப்பட்ட கதைகள். இதைத்தவிர 150க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஏறத்தாழ 50 குறுநாவல்கள், 10 பயணக்கட்டுரைத் தொடர்கள், 36 நாவல்கள் எழுதி உள்ளார். சிறப்பு வாய்ந்த 16 ஆண்டுகளாகத் தன்னை முழுமையாக ஈடுபாடு கொண்டு இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற நினைத்துப் பார்க்க முடியாத சாதனையை நான்கு தொகுப்புகள் மூலம் கொண்டு வந்துள்ளார்.

இவ்வளவு சாதனைப் புரிந்த எழுத்தாளர் சிவசங்கரிக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.


(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் ஆகஸ்ட் 29_2021ல் வெளிவந்தது)

 

கதைஞர்களைக் கொண்டாடுவோம்.

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 18வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. சிவசங்கரி 2.வண்ணதாசன்
வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றி உரையாடினார்கள்.


சிறப்பாக நடந்தது கூட்டம்.  அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

தூங்காமல் தூங்கி…

 

அழகியசிங்கர்


தூக்கத்தைப் பற்றித்தான் எழுதப் போகிறேன். தினமும் சாப்பிட்ட உடன் எனக்குத் தூக்கம் வந்து விடுகிறது. பகல் நேரத்தில்.காலை 11 மணியிலிருந்து மூன்று மணி வரை. இதை என்னால் தவிர்க்க முடியவில்லை. தினமும் இந்தப் பகல் தூக்கம் நான் எதிர்பார்த்தபடியே நிகழ்ந்து விடுகிறது.


நான் சிறுவனாக இருந்தபோது நாடோடி மன்னன் என்ற படத்தைத் திருச்சி பத்மாவதி திரையரங்கில் (இப்போது பேர் மாறி விட்டது) வீட்டிற்குத் தெரியாமல் போய்ப் பார்த்தேன். மதியம் ஒன்றரை மணிக்கே படம் ஆரம்பித்து விடும். பெரிய படம் என்பதால். அதில் ஒரு பாட்டு எம்.ஜி.ஆர் பாடுவதுபோல் வரும். தூங்காதே தம்பி தூங்காதே என்று.


இப்போது யோசித்துப் பார்க்கிறேன். தூங்காதே தம்பி தூங்காதே என்று பாடுகிறார். ஆனால் எம்ஜிஆர் தப்பாகப் பாடிவிட்டாரென்று தோன்றுகிறது. எப்போது தூக்கம் வந்தாலும் தூங்க வேண்டும். தூக்கம் வருவதில்லை என்பதுதான் கவலையாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் மாற்றிப் பாடியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது தூங்கு தம்பி தூங்கு என்று.


கவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு கொடுத்த நிகழ்வில் நான் கலந்து கொண்டேன். முடியும் தறுவாயில் உட்கார்ந்த நாற்காலியிலே தூங்கிக்கொண்டிருந்தேன். அதைப் புகைப்படம் எடுத்து எல்லா இடங்களிலும் பரப்பி விட்டார்கள். இதெல்லாம் தூக்கம் சரியில்லாத காரணத்தால்தான்.


சமீபத்தில் நிதியமைச்சர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அதிகாரி ஒருவர் தூக்கத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. தொலைக்காட்சியிலேயே இதை ஒளிபரப்பினார்கள்.


சென்னையிலிருந்து மாற்றலாகி பந்தநல்லூரில் பணிபுரிந்தபோது. வாரத்திற்கு ஒரு முறை சென்னை வந்துவிடுவேன். சனிக்கிழமை கிளம்பி சென்னை வருவேன். பிறகு ஞாயிற்றுக்கிழமை கிளம்பி மயிலாடுதுறைக்குப் போவேன். திங்கள் கிழமை டூ வீலரில் அலுவலகம் போகும்போது தூங்கிக்கொண்டே போவேன். சிலசமயம் தூக்கம் கட்டுக்கடங்காமல் போனால் ஒரு இடத்தில் நின்று நிதானித்துப் போவேன். சென்னையிலிருந்து டிரெயினிலோ பஸ்ஸிலோ வரும்போது தூக்கம் துளிகூட இருக்காது. அன்று வீடு திரும்பும்போது தூக்கக் கலக்கத்துடன் இருப்பேன். அடித்துப் போட்டதுபோல் தூங்கிவிடுவேன். அற்புதமான தூக்கம் அது.


தூக்க மாத்திரிகளைச் சாப்பிடலாமா என்ற தலைப்பில் கு. கணேசன் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அதில் தூக்க மாத்திரியைச் சாப்பிடக் கூடாதென்று சொல்லியிருக்கிறார். நானும் அந்தக் கட்சிதான். என்னதான் தூக்கம் இரவு நேரத்தில் பாதிக்கப்பட்டாலும் தூக்க மாத்திரையை மட்டும் சாப்பிடக் கூடாது. இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணிவரை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தூங்கலாம் என்கிறார் மருத்துவர்.. ஆனால் இரவு நேரங்களில் எனக்குத் தூக்கம் அதிகம் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் தூங்காமல் வெறுமனே படுத்தபடியே இருப்பேன். இரவு இரண்டு மணியிலிருந்து தூக்கம் வராது. அந்தச் சமயத்தில் கணினியை இயக்க மாட்டேன். படுக்கையில் படுக்க முடியாவிட்டால். நாற்காலியில் போய் உட்கார்ந்து விடுவேன். மின் விசிறியை ஓடவிட்டு விளக்கை அணைத்துவிடுவேன். பிறகு சிறிது நேரம் கழித்துப் படுக்கையில் போய்ப் படுத்துக்கொண்டு தூங்குவேன்.


சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் என் சொந்தங்கள்.


இந்தத் தூக்கமின்மையைப் போக்கத்தான் பகலில் தூங்கி விடுகிறேன். காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணிவரை. நல்லகாலம் பதவி மூப்பு பெற்று விட்டேன். தினமும் இரவு உணவை 8 மணிக்குள் உட்கொண்டால் நல்லது என்கிறார் மருத்துவர். 9 மணிக்கு மேல்தான் சாப்பிட முடிகிறது. சாப்பிட்டவுடன் நிறையா தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார். சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்துத்தான் தூங்க வேண்டுமென்கிறார். அதெல்லாம் சரிதான் அப்படித்தான் தூங்குகிறேன். ஆனால் தூக்கம் வருவதில்லை. இது குறித்து கவலைப் படுவதில்லை.


என்னைப் போலத் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் என்னைத் தொடர்பு கொள்வது வழக்கம். அவர்களுக்கெல்லாம் நான் தரும் அறிவுரை. தூக்கம் வரவில்லை என்பதால் கவலைப் படாதீர்கள் என்பதுதான். அதைப் பற்றியே யோசனை செய்யாதீர்கள் என்பதாகும்.
‘தூங்காமல் தூங்கி’ என்ற ஒரு புத்தகம். எழுதியவர் மருத்துவர் மாணிக்கவாசகம். ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை. அறுவை சிகிச்சை நோயாளிக்கு அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து கொடுக்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார். அறுவை சிகிச்சை தொடங்குவதற்கு முன் மயக்க மருந்து கொடுப்பது மிக முக்கியமான பணி. அதிகமாகவோ குறைவாகவோ மயக்க மருந்தை அறுவை சிகிச்சை நோயாளிக்குச் செலுத்தக்கூடாது. மயக்க மருந்து கொடுப்பது தூங்காமல் தூங்கித்தான். அறுவை சிகிச்சை நோயாளி திரும்பவும் விழித்துச் சரியாகப் போகும் வரை மயக்க இயல் மருத்துவரின் நிலையும் தவிப்பு மிக்கதுதான். பல அனுபவங்களை இப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.


மௌலானா அபுல்கலாம் அஜாத் காந்திஜியைச் சந்திக்க வருகிறார். காந்திஜி அவரிடம், ‘’மௌலானா, நான் களைப்பு அடைந்து விட்டேன். நீங்கள் சற்று சீக்கிரம் வந்து விட்டீர்கள். இன்னும் 45 நிமிடங்கள் உள்ளன. நீங்கள் அனுமதித்தால் நான் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்கிறார்.


தாராளமாக நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றார் மௌலானா அபுல்கலாம் ஆஜாத்.
காந்திஜி படுத்து ஒருகணத்தில் தூங்கி விட்டார். குறட்டைச் சத்தம் வர ஆரம்பித்து விட்டது. இதைக் கண்டு மௌலானாஜிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. நான்கு நிமிடத்தில் காந்தி விழித்து எழுந்து விட்டதைப் பார்த்து அதைவிட ஆச்சரியப்பட்டுப் போனார். எழுந்து உட்கார்ந்தவுடன், “மௌலானாஜி, இப்போது நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லலாம். நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன், என்கிறார்.


“பாபுஜி தூக்கத்தைக் கூட நீங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதைப் பார்த்து நான் திகைத்துப் போய்விட்டேன். ஒரு கணத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து விட்டீர்கள். சரியான நேரத்தில் தானே எழுந்தும் விட்டீர்களே” என்று ஆச்சரியப்படுகிறார் மௌலானா.


இதிலும் நான் இறைவனின் அருளைக் காண்கிறேன், என்கிறார். உண்மையில் இறைவனின் அருள் இருந்தால்தான் தூங்கி, நினைத்தபோது எழுந்து கொள்ள முடியும்.
மருத்துவர் கு.கணேசன் கூறுகிறார். முக்கியமாகக் கண்களை மூடும்போதே கவலைகளையும் மூடினால் சுகமான தூக்கம் உறுதி.


பகலில் தூங்குபவர்களுக்கு சில அறிவுரைகள்.


தூக்கம் வந்தால் முதலில் தூங்கி விடுங்கள்.தள்ளிப் போடாதீர்கள்.


இரவு நேரத்தில் தூங்காமல் இருக்கும்போது புத்தகம் படிப்பது, கணினியை நோண்டுவது போன்றவற்றில் ஈடுபடாதீர்கள்.


ஒரு நாற்காலியில் சில நேரம் உட்கார்ந்து விட்டுத் திரும்பவும் படுக்க முடியுமா என்று பாருங்கள்.இரவு நேரத்தில் கண்களை அகலமாக வைத்துக்கொண்டு விழித்திருந்து சுற்றிலும் கவனம் செலுத்துங்கள். மின்விசிறி ஓடும்போது ஏற்படுத்தும் சத்தத்தையும், பக்கத்தில் படுத்திருப்பவரின் கொறட்டை ஒலியையும் ரசிக்கலாம்.


இரவு நேரத்தில் தூக்கம் வராத சமயத்தில் கண்டபடி யோசனை செய்யாதீர்கள். கடவுள் நம்பிக்கை இருந்தால், ராமா ராமா என்று ஜபித்துக் கொண்டிருங்கள்.


இதோ எனக்கு இப்போது தூக்கம் வருகிறது. பிறகு சந்திப்போம்.


(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 22 ஆகஸ்ட் 2021-ல் வெளிவந்தது)

கதைஞர்களைக் கொண்டாடுவோம்

. அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 18வது கதை வாசிப்புக் கூட்டம். வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. சிவசங்கரி 2.வண்ணதாசன் வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள்.

இக் கூட்டம் 27.08.2021 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. எல்லோரும் அவசியம் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 18வது கதை வாசிப்புக் கூட்டம். Time: Aug 27, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84785750162?pwd=WWxpUFk1SzBZUFpUVXRMeGowdVZWUT09

Meeting ID: 847 8575 0162 Passcode: 005183