மாமா எங்க?

சிறுகதை “மாப்ளை.. கதவத் தெறடி..யேய்..” வரும்போதே கடைக்குச் சென்று விட்டு வருகிறார் என்பது குரலிலிருந்தே தெரிந்தது. மாமாவுக்கு எப்போதும் இதே வேலையாகி விட்டது. கடைக்குப் போய் தண்ணியடித்து விட்டு நேராக எங்கள் வீட்டுக்குத் தான் வருவார். அவர் வீட்டுக்குப் போகவே மாட்டார். காலையில், சேவல் கூவி, நாங்கயெல்லாம் ஸ்கூலுக்குப் போன பின்னாடிதான் போவார்.
சொக்கலிங்கம் மாமா எங்களுக்கு கொஞ்சம் பக்கத்து மாமா. எங்க ஊருக்குப் பக்கத்து ஊருக்கு கிட்டக்க தான் அவருக்கு பொண்ணு எடுத்திருக்காப்ல. அதனால, ஆ.. ஊ..னா மாமியார் வீட்டுக்குப் போயாறேன்னு கெளம்பிடுவாக. ஆனா அங்க போகாம, எங்க வீட்டுக்கு தான் வருவாங்க. அப்பாகிட்ட பணம் வாங்கிட்டு போய் கடைக்குப் போய் தண்ணியடிச்சுட்டு எங்கயாவது போய்ட்டு, காலையில வீட்டுக்குப் போயிடுவாங்க. சிலசமயம் எங்க வீட்டுக்கும் வந்து படுத்துக்குவாங்க. அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காதுனாலும், ஒண்ணும் சொல்ல மாட்டார்.
வழக்கமா அமைதியா வருவாரு. மெதுவா கதவத் தட்டி, அம்மாவைக் கூப்பிடுவாரு. அம்மா வந்து அழும். ‘ஏண்ணே, இப்படியெல்லாம் குடிச்சு ஒடம்ப கெடுத்துக்கறேனு’ அழும். அங்க ஒரு பாசமலரே நடக்கும். அப்புறம் எங்ககூட வந்து படுத்துக்குவாரு.
சிலசமயம் ரொம்ப சத்தத்தோட வருவாரு. அப்படி வந்தாருனா, அவருக்கும் அத்தைக்கும் ஏதோ பெரிய பிரச்னைனு அர்த்தம். இன்னிக்கும் அப்படித் தான் வந்திருக்காரு. என்ன பிரச்னையோ?
அத்தை சிவகாமி ரொம்ப நல்லவங்க. நாங்க ஊருக்கு எப்பப் போனாலும் ரொம்ப நல்லா கவனிச்சுக்குவாங்க. அண்ணனுக்கு ஆத்துல நீச்சல் சொல்லிக் குடுத்தாங்க. எனக்கு அய்யனாரு தோட்டத்துல மாங்காப் பறிச்சுத் தந்தாங்க. ஏதாவது நோம்பினா அவ்ங்க வீட்டுக்குப் போனா, கெடா வெட்டிப் போடுவாங்க. அதுலயும் வரமொளகாயத் தூவி, எண்ணெயத் தடவி, வெயிலில் காய வெச்சு, நல்லெண்ணெயில வறுத்துக் குடுப்பாங்க பாருங்க, விரால் மீன் துண்டு.! சும்மா, ஜிவ்வுனு மணடையில காரம் ஏறும். கண்ணுல எல்லாம் தண்ணி வந்துடும். அப்புறம் ரெண்டு நாளு, எங்கெங்கெயோ எரியும்.
ஒருதபா நடந்தது நல்லா ஞாபகம் இருக்கு. அண்ணன் மட்டும் ஆத்துல எறங்குறான்னு நானும் தபார்னு ஆத்துல குதிச்சுட்டேன். கல்லு இருக்கும்னு நெனச்சு குதிச்ச எடத்துல ஒண்ணுமே இல்ல. கால ஊனிக்கலாம்னு கால கொண்டு போறேன். ஒண்ணுமே ஆம்படல. தண்ணி உள்ள இழுக்குது. சரேல்னு உள்ள போய்ட்டேன். ஆத்து மண்ணு காலுல் மட்டுப்படுது. சுத்தி சுத்திப் போடுது. ஒருசமயம் மேல வரேன். இன்னொரு சமயம் கீழ போறேன். சுத்திச் சுத்தி வரேன். கைய, கால ஒதறுறேன். நொர நொரயாத் தள்ளுது. வாயில, காதுல எல்லாம் தண்ணி பூந்திடுச்சு. ஒரே மண்ணு கெளறி, கண்ணுக்குள்ள எல்லாம், மண்ணு. கண்ணத் தெறக்கவே முடியல. சர்தான், சோலி முடிஞ்சுதுனு நெனச்சுட்டேன். பக்கத்துல ஏதோ இடிச்ச மாதிரி இருந்துச்சு. ஒரு பாற. அது முச்சூடும், பாசி. புடிக்கப் போனா, வழுக்கி, வழுக்கி வுடுது. போதாக்கொறைக்கு, ஆறு அது பக்கமா இழுக்க ஆரம்பிச்சுது. என்ன பண்றதுனே தெரியல.
யாரோ என் தலமயிரப் புடிச்சு இழுத்தாங்க. அவங்க கையைப் புடிக்க தண்ணிக்குள்ள தடவுறேன். படார்னு ஒரு அறை வுழுந்துச்சு. அவ்ளோதான் அப்படியே மயங்கிட்டேன். ஆனா அறையும் போது, கேட்ட வளையல் சத்தம், அந்த கை அத்தை கையினு சொல்லிடுச்சு.
நல்லவேளை அன்னிக்குப் பொழச்சதே, ஒம்பாடு, எம்பாடுனு ஆயிடுச்சு. தண்ணிய உறிஞ்சி, வைத்தியருகிட்ட கூட்டிட்டு போயி, பச்சில எல்லாம் கட்டி, ஒருவாரம் நல்லா கவனிச்சுகிட்டாங்க, அத்தை.
அப்படிப்பட்ட அத்த கூட ஏன் மாமா அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டு வர்றாருனு தெரியாம எனக்கு அடிக்கடி சந்தேகம் வரும். ஆருகிட்ட கேட்கறதுனு நானும் அமைதியா இருந்திடுவேன்.
மாமா வழக்கம் போல உள்ள வந்து எங்ககூட படுத்துக்கிட்டாங்க. எப்பவும் வந்ததும், ஒருபக்கமா திரும்பிப் படுப்பாங்க. கொஞ்ச நேரத்துல கொறட்ட விட்டு தூங்க ஆரம்பிச்சிடுவாங்க. இன்னிக்கு என்னவ்00 தெரியல, தூங்காம எங்களையே பாத்துக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் முழிச்சுக்கிட்டு தான் இருந்தோம்.
என்னை எடுத்து மடியில வெச்சுக்கிட்டாங்க.
“ஏண்டா சுந்தரம்..? ஒனக்கு கட்டிக்க எந்த மாதிரிடா பொண்ணு பாக்கறது..?” அண்ணனைக் கேட்டாரு.
மாமா தண்ணியடிக்காதப்போ, நல்ல மாதிரி எங்ககூட பேசுவாருங்கறதுனால, நாங்களும் அவருகிட்ட கொஞ்சம் நல்லாவே பேசுவோம். இந்த மாதிரி வெசனம் கெட்ட கேள்வியெல்லாம், எங்களுக்கு சகஜங்கறதுனால, எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்ல.
“மாமா..! நான் கட்டிகிட்டா நதியா மாதிரி இருக்கற பொண்ண தான் கட்டிக்குவேன்..”னான் அவன்.
கெக்கேபிக்கேனு மாமாவுக்கு ஒரே சிரிப்பு. ” ஏண்டா, மூளையத்தவனே! அதுக்கெல்லாம் செவத்த மூஞ்சி இருக்கணும்டா..! ஒன்ன மாதிரி கருவா மூஞ்சிக்கு நதியா கேக்குதாடா..?” அண்ணன் மூஞ்சில செல்லமா குத்தினாரு. அவன் மூஞ்சி வாடிப் போச்சு.
“ஏண்டா சின்னவனே! ஒனக்கு..?”னு கேட்டாரு.
“மாமா..! நான் கட்டுனா சிவகாமி அத்த மாதிரி இருக்கற பொண்ண தான் கட்டுவேன்..”னேன். இப்ப அவரு மொகம் சுருண்டு போச்சு. என்னை அவர் மடியில இருந்து எறக்கி வெச்சிட்டு, போய்ப் படுத்துக்கிட்டாரு.
எனக்கு எதுவும் வெளங்கல.
“மாமா..! என்ன மாமா அதுவும் சொல்லாம, படுத்துக்கிட்டீங்க..”னு கேட்டேன்.
“டேய்..! உங்க அத்த நல்லவ. ஆனா அவள எனக்குப் புடிக்கல. உங்கப்பனும் அம்மாவும் தான் கட்டாயப் படுத்தி, எனக்கு அவள கட்டி வெச்சிட்டாங்க. உனக்குத் தெரியுமா..? நான் சாமியாரா போயிடலாம்னு இருந்தேன். கல்யாணம் பண்ணி வெச்சா நான் மாறிடுவேன்னு பண்ணி வெச்சாங்க. எதுக்கு நான் மாறணும்? நான் இப்படியே தான் இருப்பேன். நாளக்கு காலையில காசிக்கு திருட்டு ரயில் ஏறப் போறேன். அதுக்கு முன்னாடி உங்கள எல்லாம் பாத்துட்டு போகலாம்னு வந்தேன். உங்கள எல்லாம் பாத்தா எனக்கும் குடும்பம், புள்ள, குட்டிகனு நெனப்பு வந்துடும்னு பயம் இருந்தாலும், உங்கள பாக்காம போக மனசு வரல். அதான் இன்னிக்கு வந்திருக்கேன்.”னு சொல்லிட்டு மாமா படுத்திட்டாரு.
எனக்கு பயமாகிடிச்சு. நானும் போய் அண்ணன் கூடயே படுத்துக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல தூக்கம் வந்திடுச்சு.
மறுநா காலயில முழிச்சுப் பாத்தா, மாமா இல்ல. அவரு நேரமா போயிட்டாருனு அம்மா சொன்னாங்க. எனக்கு ஒண்ணும் ஞாபகம் இல்ல.
அத்த அழுதிட்டே வந்தாங்க. அவங்க பீரோ துணிகளுக்கு நடுவுல மாமா எழுதி வெச்சிருந்த கடுதாசி இருந்துச்சாம். அதுல எங்கயோ போறேன், தேடாதீங்கனு எழுதி வெச்சிருந்தாராம்.
என்கிட்ட எங்கயோ போறேனு சொன்னாரு. எங்கனு தான் ஞாபகம் வர மாட்டேங்குது. உங்களுக்கு யாருக்காவது தெரிஞ்சா சொல்றீங்களா..?
தயவு செஞ்சு சொல்லுங்க. பாவம் எங்க அத்தை, இன்னும் அழுதுகிட்டே இருக்காங்க…

சி சு செல்லப்பாவும், ராமையாவின் சிறுகதைப்பாணியும்

சில குறிப்புகள் 7
க.நா.சு இரங்கல் கூட்டமொன்றை கணையாழி என்ற பத்திரிகை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் நடத்தியது. அதற்கு சி சு செல்லப்பா வந்திருந்தார். அப்போதுதான் அவரை முதன் முதலாக சந்தித்தேன். தூரத்தில். அவர் க நா சுவைப் பற்றி பேசும்போது அவேசமாகப் பேசியதுபோல் தோன்றியது. கதர் சட்டையும், வேஷ்டியும் கட்டிக்கொண்டு வந்திருந்தார். அழுக்காக இருந்தது. ஏன் இவ்வளவு அழுக்காக வேஷ்டியைக் கட்டிக்கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது.
சி சு செல்லப்பாவை அதன்பின் விளக்குக் கூட்டத்தில் சந்தித்தேன். அவருக்கு விளக்குப் பரிசு கொடுத்து கவுரம் செய்திருந்தது. அந்தப் பரிசுத் தொகையை அவர் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். அவர்கள் அந்தப் பரிசுத் தொகையில் சி சு செல்லப்பாவின் சிறுகதைப்பாணி என்ற புத்தகத்தைக் கொண்டு வந்தார்கள். அக் கூட்டத்திற்கு எல்லோரும் வந்திருந்தோம். அவர் தன்னுடைய அனுபவத்தை அங்கு குறிப்பிட்டுப் பேசினார்.
அக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் அக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வெளியே பிரமிள் நடந்து சென்றதாக யாரோ குறிப்பிட்டார்கள்.
சி சு செல்லப்பா அதன்பின் சென்னைக்கு பிள்ளையார் கோயில் தெரு, திருவல்லிக்கேணியில் குடி வந்துவிட்டார். பங்களூரில் உள்ள அவருடைய ஒரே புதல்வனுக்கும் அவருக்கும் மனஸ்தாபம். உண்மையில் அது ஒரு காரணமா என்பது தெரியவில்லை. அவருடைய 3 பாகங்கள் கொண்ட சுதந்திர தாகம் என்ற நாவலை புத்தகமாகக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தாரா என்பது தெரியவில்லை.
சி சு செவின் கவனமெல்லாம் சுதந்திர தாகத்தைப் புத்தகமாகக் கொண்டு வரவேண்டுமென்ற எண்ணத்திலேயே இருந்தார். ஒரு முறை இலக்கியச் சிந்தனை ஆண்டு விழா மயிலாப்பூரில் உள்ள ஏவிஎம் கல்யாண மண்டபத்தில் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடம் துவங்கும்போது அங்குதான் நடக்கும். அக் கூட்டத்திற்கு வந்திருந்த சி சு செ. அங்குள்ள பல பதிப்பாளர்களிடம் தன்னுடைய சுதந்திர தாகம் புத்தகத்தை பிரசுரம் செய்யும்படி கேட்டுக்கொண்டிருந்தார். அவர் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருந்தது. ஆனால் அதைப் புத்தகமாகக் கொண்டு வருவதாக இருந்தால் லட்சக் கணக்கில் பணம் செலவாகும். மேலும் அப் புத்தகத்திற்கு என்ன விலை கொடுத்து விற்பது பிரச்சினையாக இருக்கும்.
ஒரு வழியாக பலரிடம் நன்கொடைப் பெற்றுக்கொண்டு தானே அப்புத்தகத்தை அச்சிடுவது என்ற முடிவுக்கு சி சு செ வந்தார். அந்தச் சமயத்தில் லலிதா ஜூவல்லரி சுகுமாரன் அவருக்கு உதவ முன் வந்தார். அவருக்கு எழுத்தாளர்கள் மீது தனி மரியாதை உண்டு. யாருக்கும் தெரியாமல் பல நன்கொடைகளை அவர் புத்தகம் பத்திரிகைக் கொண்டு வருவதற்கு உதவி செய்துள்ளார். சுதந்திர தாகம் முதல் பாகம் அப்படி அச்சிடப்பட்டது. மேலும் சி சு செவிற்கு 80 வயதிற்கு மேல் இருக்கும். திருவல்லிக்கேணியில் உள்ள மணி ஆப்செட்டில் அவருடைய புத்தகம் அச்சடிக்க நான் ஏற்பாடு செய்தேன். அந்தப் பிரஸிலிருந்து வந்து புரூப்பெல்லாம் சி சு செ வீட்டிற்கு வந்து வாங்கி அச்சடித்துக் கொடுத்தார்கள். முதல் பாகத்திற்குப் பிறகு இரண்டாவது பாகத்தை அவருக்கு என் சிறுகதைப் பாணி புத்தகம் விற்ற பணம் மூலம் கொண்டு வந்தார். மூன்றாவது பாகத்தை நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் கொடுத்த நன்கொடை மூலம் கொண்டு வந்தார்.
அப் புத்தகத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. சி சு செ பத்தரிகையில் விளம்பரம் கொடுத்தார். வாசந்தி ஆசிரியராக இருந்த இந்தியா டுடே பத்திரிகையில் அப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்துப் பிரசுரம் செய்து நல்ல விளம்பரம் கொடுத்தார்கள். அப்படியெல்லாம் கொடுத்தும்கூட அப் புத்தகம் 200 பிரதிகளுக்குமேல் விற்றிருக்குமாவென்பது சந்தேகம்.
சி சு செல்லப்பா சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக இயங்கியதுதான் என்னுடைய ஆச்சரியம். அந்த வயதிலும் அவர் அவேசமாகச் செயல்பட்டதை என்னால் மறக்க முடியாது. பின் நூல்நிலையத்தில் அப் புத்தகத்தை வாங்குவதற்கு அப் புத்தகத்தை டிடியுடன் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தார். ஆட்டோ வில் அதைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு அவர் அவஸ்தைப் பட்டது என் ஞாபகத்தில் இருக்கிறது.
80வயதுக்குமேல் என்பதால் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அடிக்கடி ஏற்படும். அவரும் அவருடைய மனைவியும்தான் அதிகம் வசதி இல்லாத திருவல்லிக்கேணி பிள்ளையார்கோயில் தெருவில் குடியிருந்தார்கள். சி சு செல்லப்பா பேன் போட விடமாட்டார். அவருடைய மனைவிக்கோ பேன் வேண்டும். மேலும் அவர் வீடு முழுவதும் புத்தகக் கட்டுக்கள் அடுக்கியிருக்கும். தானே புத்தகக் கட்டுப்போட்டு வைத்திருப்பார். ஒவ்வொரு முறையும் அவர் வீட்டிற்குப் போனால் எதாவது சாப்பிடக் கொடுப்பார். பேசிக்கொண்டே இருப்பார். போக விட மாட்டார். பல இலக்கிய நண்பர்கள் அவரை அடிக்கடி போய்ப் பார்த்துக்கொண்டிருப்போம்.
ஒரு முறை மருத்துவமனையிலிருந்து சி சு செ மனைவி யார் மூலமாகவோ எனக்கு போனில் செய்தியைத் தெரியப்படுத்தினார் (சி சு செ மனைவிற்கு காது சற்று கேட்காது. அதனால் நேரிடையாகப் போனில் பேச முடியாது). நான் மருத்துவமனைக்குச் சென்று சி சு செ போய்ப் பார்த்தேன். “மாமிக்கு குட்பை சொல்லிட்டேன். அடுத்த ஜன்மத்தில சந்திக்கலாமென்று,” என்று சிரித்தபடி என்னைப் பார்த்துக் குறிப்பிட்டார்.
அந்த ஆண்டு சி சு செ வின் சுதந்திர தாகம் புத்தகத்தை லைப்பரரி எடுத்துக்கொள்ளவில்லை. சி சு செ அது பெரிய வருத்தம். காரணம் 1000 பிரதிகள் சுதந்திர தாகத்தை அவர் அச்சிட்டிருந்தார். 3 பாகங்கள் சேர்ந்து ரூபாய் 450 விலை. எப்படி விற்க முடியும்? விளம்பரம் மூலம் மிகக் குறைவான பிரதிகள் சுதந்திர தாகம் விற்ற பணத்தை சற்றும் யோசிக்காமல் இன்னொரு புத்தகமும் கொண்டு வந்து விட்டார் சி சு செல்லப்பா. அந்தப் புத்தகத்தின் பெயர்தான் ‘ராமையாவின் சிறுகதைப் பாணி’. சி சு செல்லப்பாவிற்கு ராமையா குருநாதர் மாதிரி. அவர் மீது அவ்வளவு அபிமானம். இருவரும் வத்தலக்குண்டு என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். ராமையா 300 சிறுகதைகளுக்கு மேல் எழுதியவர். மணிக்கொடி எழுத்தாளர். அவருடைய சிறுகதைகள் புத்தகமாக வராத தருணத்தில், சி சு செ அவருடைய கதைகளுக்கான விமர்சன நூலைத் தயாரித்து ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற புத்தகத்தைக் கொண்டு வந்து விட்டார். அதுவும் 500 பிரதிகள் வேறு அச்சிட்டு விட்டார்.
எனக்கோ அவர் செய்த இந்தச் செயலைப் பார்த்து பெரிய திகைப்பு. ராமையாவின் சிறுகதைகளே படிக்க யாருக்கும் கிடைக்காதபோது ராமையாவின் சிறுகதைப் பாணி புத்தகத்தை யார் படிப்பார்கள்? லைப்ரரி ஆர்டர் வேறு சுதந்திர தாகம் புத்தகத்திற்குக் கிடைக்காததால் செல்லப்பா சோர்ந்து போயிருந்தார். அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லும்படியாக இருந்தது. ஒருமுறை தீவரமாக சிகிச்சைப் பெற மருத்துவமனையில் இருந்தபோதுதான், கேரளாவில் தகழி சிவசங்கரன் என்ற எழுத்தாளர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுக்கொண்டு இருந்தார். கேரளாவில் முதலமைச்சர் முதல் கொண்டு தகழியைப் பார்த்ததோடல்லாமல், டிவியில் அவரைப் பற்றி மருத்துவ அறிக்கையை அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், ‘எழுத்து’ என்ற இலக்கிய ஏட்டின் மூலம் தமிழ் இலக்கியத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர காரணமான சி சு செல்லப்பாவை இங்குள்ள டிவியோ, செய்தித்தாள்களோ கண்டுகொள்ளவில்லை. தற்போதுள்ள கலைஞர்தான் அப்போதும் முதல்வராக இருந்தார். ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. சி சு செ மரணம் அடைந்த பிறகு, அவருடைய விற்காத சுதந்திர தாகம் பிரதிகள் எல்லாம் சங்கர ராம சுப்பிரமணியம் என்ற அவருடைய உறவினர் வீட்டிற்குப் போய் சேர்ந்தன. அவருடைய உறவினருக்கும் அப் புத்தகத்தை எப்படி விற்பது என்று தெரியவில்லை.
நான் திரும்பவும் அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் இறையன்பு அவர்களைப் பார்த்தேன். சி சு செ புத்தகம் பற்றி அவரிடம் தெரிவித்தேன். அவர் மூலம் திரும்பவும் அப் புத்தகத்தை லைப்ரரி சில நூறு பிரதிகள் வாங்கிக் கொண்டது. சி சு செல்லப்பாவிற்கு அந்த நூலிற்காக அவர் இறந்தபிறகு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்தது. சி சு செ மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அந்தப் பரிசை வாங்கியே இருக்கமாட்டார். அந்தப் பரிசு அறிவிப்பைத் தொடர்ந்து இன்னு சில பிரதிகள் சுதந்திர தாகம் புத்தகம் விற்றது. ஆனாலும் பன்டில் பன்டிலாக சங்கர ராம சுப்பிரமணியின் வீட்டில் சு தா 3 பாகங்கள் வீற்றிருந்தன. கூடவே யாரும் தொடாத ராமையாவின் சிறுகதைப் பாணி புத்கமும்.
புத்தகக் காட்சியின் போது நான் அவருடைய சு தாகம் புத்தகத்தை எடுத்துக்கொண்டு விற்பனைக்கு வைத்தேன். விலை 450 ரூபாய் என்றவுடன், யாரும் தொடக்கூட விரும்பவில்லை. அதனால் சங்கர ராம சுப்பிரமணியத்திடம் சொல்லி புத்தக விலையைக் குறைக்கச் சொன்னேன். ”என்ன விலைக்கு விற்கலாம்?” என்று கேட்டார். ”ரூபாய் 100 போதும்,” என்றேன். சரி என்றார்.
‘சாகித்திய அக்காதெமி பரிசுப் பெற்ற 3 பாகங்கள் கொண்ட சுதந்திர தாகம் என்ற புத்கம் விலை ரூ100 மட்டுமே’ என்று புத்தகக் காட்சியில் விளம்பரம் செய்தேன். மடமடவென்று எல்லாப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. பொதுவாக என் புத்தகங்களுடன் மற்ற பதிப்பாளர்களிடம் சென்று புத்தகம் வாங்கி விற்றுதான் புத்தக்க காட்சியில் ஆகும் செலவைக் குறைப்பது வழக்கம் அந்த முறை மற்ற பதிப்பாளர் என்னிடமிருந்து சுதந்திர தாகம் புத்தகத்தை வாங்கி விற்றார்கள். இனிமேல் அந்தக் கனமான சுதந்திர தாகம் புத்தகத்தைப் பிரசுரம் செய்வது என்பது அதிகம் செலவாகும். விற்பதும் சாத்தியமில்லை. சுதந்திர தாகத்திற்கு நல்ல கதி ஏற்பட்டுவிட்டது. அடுத்தப் புத்தகமான சி சு செல்லப்பாவின் ‘ராமையாவின் சிறுகதைப் பாணி’ புத்தகத்தை நினைத்தால் கதி கலங்குகிறது. சங்கர ராம சுப்பிரமணியன் இறந்தபிறகு ராமையாவின் சிறுகதைப் பாணி புத்தகத்தை சி சு செல்லப்பாவின் புதல்வர் விற்பதற்காக என்னிடம் அனுப்பி விட்டார்.
அப் புத்தகக் கட்டுகள் என் பாதுகாப்பில் உள்ளது. ஒரு புத்தகம் விலை 10 ரூபாய்தான் என்று விளம்பரப் படுத்தினாலும் யாரும் வாங்கி அதைத் தீர்க்க மாட்டேன்கிறார்கள்.

சில குறிப்புகள் – 6

நான் சில குறிப்புகள் என்ற தலைப்பில் எனக்குத் தோன்றுவதை எழுதிக்கொண்டே போகிறேன். பெரும்பாலும் கவிதைக் குறித்து என் கருத்துக்களைப் பதிவுப் செய்கிறேன். நம்மால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் கவிதை. ஒரு கவிதையைச் சிறந்த கவிதை என்று சொல்வது நம்மில் உள்ள பலருக்கு மனது வராது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கவிதையை அணுகிறார்கள். கவிதைப் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து ஒருநண்பர் அவருடைய கவிதைத் தொகுதியை பணம் செலவழித்துக் கொண்டு வந்தார். அந்தத் தொகுதியை இன்னொரு நண்பருக்கு கொடுத்துவிட்டு அவருடைய அபிப்பிராயத்தை எதிர்பார்த்தார். புத்தகத்தை வாங்கிய நண்பரோ கவிதை எழுதிய நண்பருக்கு ஏற்ற மாதிரி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த கவிதை நண்பர் புத்தகம் கொடுத்த நண்பரைத் திட்ட ஆரம்பித்துவிட்டார். கவிதைத் தொகுதி மட்டும் வெளியிடாமல் இருந்திருந்தால், இதுமாதிரியான வசுவுகளுக்கு ஆளாகமலிருந்திருக்கலாம்.
சரி எப்படி ஒரு நல்ல கவிதையை அடையாளம் காண்பது. கவிதையைப் படித்த மாத்திரத்திலேயே பல சிந்தனைகளை மனதில் ஏற்படுத்தும். அதாவது கிணற்றில் கூழாங் கற்கள் ஒவ்வொன்றாய் விழ ஏற்படும் அதிர்ச்சி தண்ணீரில் தெரிவதுபோல். நம் ஞாபகத்தில் ஒரு சிறந்த கவிதை பலநாட்கள் தங்கிவிட வேண்டும். ஏன் வருடக் கணக்கில். அப்படித் தங்கி விடுகிற கவிதையை நாம் எப்போது வேண்டுமானாலும் எடுத்து எடுத்துப் படித்துக்கொண்டிருப்போம். எனக்கு இப்படித்தான் க.நா.சு வின் கவிதை ஒன்று மனதில் நிழலாடிக் கொண்டிருக்கும். ‘நல்லவர்களும் வீரர்களும்’ என்ற கவிதையைப் பார்ப்போம்.
கடவுளுக்குக் கண் உண்டு; அவனுக்குவீரர்களையும் நல்லவர்களையும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். சண்டையில் வீரர்களையும் சமாதானத்தில் நல்லவர்களையும் அதிகநாள் உழலவிடாமல் சீக்கிரமேஅழைத்துக் கொண்டுவிடுவான் கடவுளுக்கு உண்மையிலேயே கண் உண்டு நிச்சயமாக நம்பலாம்.
இந்தக் கவிதையைப் படிக்க படிக்க எனக்கு க.நா.சுவின் பெயர் எப்போதும் ஞாபகத்தில் இருந்துகொண்டேயிருக்கும். இக் கவிதையை மறக்க முடியாது என்ற எண்ணத்தில் யாருக்கும் கருத்துவேறுபாடு ஏற்படாது.

ரங்கநாதன் தெரு கூட்ட நெரிசலும் தீ விபத்தும்

சில குறிப்புகள் / 5
வ்வொரு முறை ரங்கநாதன் தெருவைப் பார்க்கும்போதெல்லாம் அங்கே வழிந்தோடும் கூட்ட நெரிசல் எனக்குத் திகைப்பை ஏற்படுத்தும். அந்தத் தெருவில் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குச் செல்ல பாடாதபாடு பட வேண்டியிருக்கும். தெரு முனையிலிருந்து வியாபாரக் கூச்சல் காதைப் பிளக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கும். திருவிழாக்கள் போது அந்தத் தெருவே வேண்டாமென்று தோன்றும். எனக்கு கூட்டமென்றால் ஒருவித அருவெறுப்பு, பயம். 1970 ஆண்டிலிருந்து ரங்கநாதன் தெருவைப் பார்த்துக்கொண்டு வருபவன். 70-க்களில் இருந்த ரங்கநாதன் தெருவும் 2000 ல் தென்படும் ரங்கநாதன் தெருவைப் பார்க்கும்போதும் அதன் உருவம் எப்படி மாறிப்போய்விட்டதென்ற அச்சம் இருந்துகொண்டிருக்கும்.
சரவணா, ஜெயசந்திரன், ரத்னா என்ற பெயர்களில் வியாபாரத் தளங்கள் விண்ணை முட்டும்படி கட்டப்பட்டு அங்கே கட்டுப்படுத்த முடியாத கூட்ட நெரிசலைப் பார்த்து நடுங்கியிருக்கிறேன். உள்ளே போய் ஒரு பொருளை வாங்கிக்கொண்டு வெளியே வருவதற்குள் படாதபாடு பட வேண்டியிருக்கும். தெருவில் டிவிக்களில் கடைகளில் வாசல்களில் கடையின் விளம்பரங்களை சத்தம்போட்டபடியே விளம்பரப் படுத்தியபடி இருக்கும். என் நண்பர் பதி அவர்கள் என்னிடம் லிப்கோ கடைக்குச் சென்று ரகுவம்சம் என்ற புத்தகத்தை வாங்கி அவருக்கு அனுப்பச் சொல்லி போனில் தினமும் வற்புறுத்திக்கொண்டிருப்பார். அலுவலகம் முடிந்து வீடு வரும்போது மணி ஏழுமணி மேல் ஆகிவிடும் என்பதாலும், ரங்கநாதன் தெருவிற்குள் நுழைய வேண்டுமே என்ற அலுப்பு காரணத்தாலும் என்னால் அங்கு போகவே முடிவதில்லை. ஏன்என்றால் ரங்கநாதன் தெருவில் தென்படும் சகிக்க முடியாத கூட்டம்தான் காரணம்.
சில ஆண்டுகளுக்கு முன் இங்கேதான் ஒரு கட்டிடத்தின் இடுக்கில் முன்றில் என்ற பெயரில் இலக்கிய விற்பனைக் கடை ஒன்று இருந்தது. வாசலில் நடந்து செல்லும் கூட்டத்தின் ஒரு சிறு துளி வந்திருந்தாலும், இலக்கியம் வளர்ந்திருக்கும். இலக்கியம் என்பதால், யாரும் உள்ளே கூட எட்டிப் பார்க்க மாட்டார்கள். மகாதேவன் என்ற நண்பர் அந்தக் கடையை நடத்தி படாதபாடு பட்டார்.
வாசலில் கூக்குரலிட்டபடி நடமாடிக்கொண்டிருக்கும் நடைபாதை வியாபாரிகளின் கூட்டமும் அங்கு அதிகம். ரங்கநாதன் தெருவில் நுழைந்தால் இடது பக்கத்தில் உள்ள இன்னொரு தெருவான ராமநாதன் தெரு வழியாக வெளியேறிவிடுவேன். கூட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக.
வாகனங்கள் எடுத்துக்கொண்டு நுழைய முடியாத இடம் ரங்கநாதன் தெரு. அப்படிப்பட்ட இடத்தில்தான் தீ விபத்து. எப்படி ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை இல்லை. ரங்கநாதன் தெருவில் நுழையும்போதே நீண்ட உயரமான கட்டிடங்களைப் பார்க்கும்போது தீ விபத்தில் சிக்கிக் கொண்டால் எப்படி எல்லோரும் தப்பிப்பார்கள் என்ற அச்சம் இருந்துகொண்டிருக்கும்.
சரவணா ஸ்டோர்ஸில் நடந்த தீ விபத்து எல்லோரையும் சில மணிநேரங்களாவது அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கும். இந்தத் தீ விபத்தால் ஆறுமுகநேரியைச் சேர்ந்த 24 வயது நிரம்பிய ராமஜெயம் என்பவரும், திருநெல்வேலி ஆலங்குளம் கீழ்பாவூரைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய கோட்டைச்சாமி என்பவரும் புகை மண்டலத்தில் மயங்கி தீயில் கருகி எலும்புக் கூடாகினர். இதை ஒரு செய்தியாகப் படிக்கிறோம். ஆனால் அவர்களுடைய உறவினர்கள் எந்தப் பாடுபட்டிருப்பார்கள். மரணம் பற்றிய செய்திகளை பலவிதமாகக் கேட்டு கேட்டு மனிதர்கள் மரத்துப் போய்விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஆவி ரூபத்தில் ராமஜெயமும், கோட்டைச்சாமியும் உலாவிக்கொண்டிருப்பதாக வதந்தி பின்னாளில் வந்தாலும் வரலாம்.
இந்தச் செய்தியால், தொடர்ந்து தீ விபத்தால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றிய செய்தியெல்லாம் என் மனதில் தோன்றாமலில்லை. பெரும்பாலும் தீ விபத்தால் குடிசைப்பகுதி எரிந்து சாம்பலாகிவிடும். உயிர் சேதம் இல்லாமலும் இது மாதிரி விபத்தெல்லாம் நடக்கும். இதெல்லாம் தயாரிக்கப்பட்ட தீ விபத்தாக எனக்குத் தோன்றும். தி நகர் உஸ்மான் சாலையில் அப்படி ஒரு விபத்து ஏற்பட்டு, அங்கு அரசாங்கக் கட்டிடம் ஒன்று உருவானது. ஏன் மூர்மார்க்கெட் அதுமாதிரிதான் தீ விபத்தால் எரிந்து புதிய கட்டிடம் உருவாகக் காரணமாகியது? ஆனால் எல்லா தீ விபத்துக்களும் தயாரிக்கப்பட்ட தீ விபத்தாகக் கருத முடியாது. ஏன் திருச்சியில் ஒரு கல்யாண மண்டபத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டு, பலர் கருகிப் போய்விட்டார்கள். என் அலுவலக நண்பரின் உறவினர்களும் அதில் அடக்கம். அவன் பதவி உயர்வு பெற்ற சமயத்தில் இது மாதிரியான சம்பவம் நடந்தது. எனக்கு அது நல்ல சகுனமாகத் தோன்றவில்லை. நண்பனுக்கு அதன் பின் பலவிதமான சோதனைகள். வேலையை விட்டுவிடலாம் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. மேலும் ஒரு தருணத்தில் அவனுக்கு விபத்து ஏற்பட்டு காலை ஒடித்துக்கொண்டு பல மாதங்கள் அலுவலகம் போகாமலிருந்தான்.அது தயாரிக்கப்பட்ட தீ விபத்தாக எனக்குத் தோன்றவில்லை.
எனக்குத் தெரிந்து கும்பகோணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல குழந்தைகள் கருகி விட்டார்கள். அந்தத் தீ விபத்து கொடூரமானது. அந்தச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் என் அலுவலகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்ணீர் விட்டு அழுதார். அந்தச் சமயத்தில் குடியரசு தலைவராக இருந்த டாக்டர் அப்தூல்கலாம் ஒரு கண்ணீர் கவிதையை தினமணியில் எழுதியிருந்தார். அதைப் படித்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவான விஷயத்தைக் கவிதையாக மாற்றுவது சிரமமானது. அதைத் திறன்பட அவர் எழுதியிருந்தார். அதை நவீன விருட்சத்தில் மீள் பிரசுரம் செய்தேன். ஒரு செய்தியைப் படிக்கிறோம் அல்லது கேள்விபடுகிறோம். அந்தச் செய்தி எந்த அளவிற்கு கலை ரூபம் பெறுகிறது என்பது சவாலான விஷயம். ரங்கநாதன் தெருவும் தீ விபத்தும் என்ற தலைப்பில் உடனடியாக கவிதை எழுத முடியுமா? அது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி கலை ரூபமாக மாறுமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்று.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் எழுதிய கவிதையை இங்கு தருகிறேன்.
அன்று ஏன் கதிரவன் கடும்கரும் மேகங்களை ஊடுருவவில்லை அன்று ஏன் குடந்தைத் தென்றல் கனலாக மாறியது அன்று ஏன் தாயுள்ளங்கள் பதறித் துடித்தன இளஞ்சிறார்கள் அக்னித் தேவனின் சினத்தில் தத்தளித்தனர் அன்று ஏன் அச்சிறார்களை இறைவன் அக்னிக் குஞ்சுகளாகப் பரணமித்தான்? இறைவா இதுவோ கொடுமையிலும் கொடுமை வளர்ந்து கல்விகற்று பணிசெய்யும் பருவத்தில் பழுத்த வயதில் மறைந்த தாய்தந்தையரை பூமிக்குக் கொடுப்பர் இன்றோ காண்பது கொடுமையிலும் கொடுமை பாலர்களை ஒவ்வொன்றாய் தந்தையர் பூமியில் புதைக்கும் காட்சி தா ய்கண்ட கனவு, தந்தை கண்ட கனவு, சிறார்கள் கண்ட கனவு எல்லாமே அக்னியின் வேகத்தில் கரிக்குஞ்சாய் பரிணமித்தன இறைவா குழந்தைகள் உன் படைப்பு – அவர்கள் உன்னிடமே அடைக்கலத்தில் அடைந்தார்கள் உன் அருளால் அக் குழந்தைகள் எங்கிருப்பினும் நன்றிருக்க கையேந்தி பிரார்த்திக்கிறோம் கையேந்தி பிரார்த்திக்கிறோம் இறைவா உன் அருளால் – தம் குழந்தைகளை இழந்துதவிக்கின்ற பெற்றோருக்கு மன அமைதி பாக்கியத்தை மறுபடியும் வாழவிலருள் – அவர்கள் எப்பொழுதும் உனை நம்பி அமைதி வாழ்வு வாழ பிரார்திக்கிறேன்.
துயரத்தின் குரல் என்ற தலைப்பில் நானும் கும்பகோணத்து விபத்தையும், சுனாமியை வைத்தும் ஒரு கவிதை எழுதினேன். துயரத்தின் குரலை நீங்கள் அறிந்ததுண்டோ தீயின் நாக்குகளின் பிடியில் கோரவிபத்தில் பலியானகும்பகோணத்துச் சிறார்களின் துயரத்தின் குரல்களைப் பலவிதமாய் உணர்ந்துகொண்டேன். 2004 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் பத்திரிகைகள் விதவிதமாய்ச் செய்திகளைப் படங்களுடன் வெளியிட்டு அள்ளிக் குவித்தன கோரக் காட்சிகளை டிவியோ சோக இசையின் சேர்க்கையுடன் பதறித் துடிக்கும் காட்சிகளை ஒளிபரப்பியது ஆண்டு முடியும் தறுவாயில் இன்னொன்றும் கண்டேன் விசாலமான கடற்கரைத் தெருவில் இருசக்கர வாகன ஓட்டியா யிருந்தபோது கடலே கடலே என்ற பரவசப்பட்டதுண்டு துளியாய் நானிருக்கிறேன், பல துளிகளாய் நீயிருக்கிறாய்…என்றெல்லாம் பாடிக்கொண்டுபோன காலமுமுண்டு ஆண்டின் இறுதிக்குள் பொங்கி எழுந்த கடலன்னை சுனாமியின் வலைவீச்சில் வீழ்ந்து கடலரக்கியாய் உருமாறி தன் கோர நாக்குகளை நீட்டி அள்ளி அழைத்துக்கொண்டாள் ஆயிரக்கணக்கான உயிர்களை திரும்பவும் பத்திரிகைகள் விதவிதமாய்ச் செய்திகளைப் படங்களுடன் வெளியிட்டு அள்ளிக் குவித்தன கோரக் காட்சிகளை டிவியோ சோக இசையின் சேர்க்கையுடன் பதறித் துடிக்கும் காட்சிகளை ஒளிபரப்பிய வண்ணம் உள்ளது பார்க்குமிடமெல்லாம் தெருவில் கருப்புநிற போஸ்டர்கள் துக்கத்தைப் பறை சாற்றின மரணமும் சொற்களில் தங்கிவிட்டதோ?
பொதுவாக நிகழும் நிகழ்ச்சியை எந்த அளவிற்கு செயற்கைத் தன்மை கூடாமல் கவிதையாக மாற்றுவது என்பது ஒரு சவாலான விஷயம்.

இப்போது வாழ்வது

கேள்வி கேட்பவர் : நான் பார்க்கிறவரையில் என் உடலில் எந்தத் தவறும் இல்லை அதேபோல் என் உண்மை சொரூபத்திலும். இரண்டுமே என்னுடைய தயாரிப்பு இல்லை. அதை மேன்மைப் படுத்தத் தேவையுமில்லை. எது தவறாக உள்ளதென்றால் ‘உள் உடல்’. அதை ‘மனம்’ என்றோ, உள்ளுணர்வு என்றோ எப்படியெல்லாமோ குறிப்பிடலாம்.
மஹாராஜ் : உன் மனத்தைப் பொறுத்தவரை எது தவறு என்று கருதுகிறாய்?
கே.கே : அது நிம்மதியில்லாமல் இருக்கிறது. மகிழ்ச்சியை அடைய பேராசை உடையதாக உள்ளது. அதேபோல் மகிழ்ச்சியற்ற நிலையை எண்ணி பயப்படுகிறது.
மஹாராஜ் : மகிழ்ச்சியை நாடுவதிலும், மகிழ்சியற்ற நிலையை உதறுவதிலும் என்ன தவறு இருக்கிறது? துன்பம், மகிழ்ச்சி என்ற இரு கரைகளில்தான் வாழ்க்கை என்ற ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போதும் மனம் வாழ்க்கையுடன் பயணிக்கத் தடுமாறும்போதுதான் அது கரைகளில் மாட்டிக்கொள்கிறது. அது ஒரு பிரச்சினையாக உருவெடுக்கிறது. வாழ்க்கையுடன் ஒன்றிப்போவதில் நான் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்வது என்ன வருகிறதோ அது வரட்டும், என்ன போகிறதோ அது போகட்டும் என்று. எதைப் பற்றியும் ஆசைப் படாதே, எதைப் பற்றியும் பயப்படாதே, எது எப்போது நடந்தாலும் உண்மையை அவதானித்துக்கொள். ஏற்படுவது நீ அல்ல. உனக்குத்தான் ஏற்படுகிறது. கடைசியாக நீ அவதானிப்பவனாகவும் இல்லை. நீதான் முழுக்க ஏற்றுக் கொள்கிற சக்தி உள்ளவனாக இருக்கிறாய். அதனால் உன்னை அரவணைத்துக் கொள்ளும் உள்ளுணர்வுதான், உருவாக்கக் கூடியதாகவும், வெளிப்படுத்தக் கூடியதாகவும், திறன் படைத்ததாகவும் உன்னை ஆக்குகிறது.
கே.கே : இன்னும் உடலுக்கும், ஆத்மாவிற்கும் இடையில் மேகம் சூழ்வதுபோல் எண்ணங்களும், உணர்வுகளும் உள்ளன. அவை உடலுக்கும் ஆத்மாவிற்கும் எந்த உதவியையும் செய்வதில்லை. இந்த எண்ணங்களும், உணர்வுகளும் மேலோட்டமானவை, வெளிப்படையானவை, அர்த்தமற்றவை. மூளையில் பதிந்துள்ள தூசுகள் போல் குருடாக்குபவை, உறையவைப்பவை. இருந்தும், நம்மைத் தடுமாற வைக்கவும், அழிக்கவும், .அவை இருக்கத்தான் செய்கின்றன.
மஹாராஜ் : நிச்சயமாக. ஒரு அனுபவத்தின் நினைவு அனுபவமாக இருக்காது. எதிர்பார்க்கக் கூடிய ஒன்றாகக் கூட இருக்காது. நிச்சயமாக இந்தத் தருணத்தின் அனுபவத்தை அறிய வித்தியாசமான தனிப்பட்ட ஏதோ ஒன்று உள்ளது. ஏற்கனவே முடிந்த, வரப்போகிற ஒன்றில் இல்லை. உண்மைநிலையுடன் கூடிய இந்தத் தருணத்தின் வாழ்வின் தன்மையில் உள்ளது. வெளிச்சம் காட்டக்கூடிய ஒன்றாக அது உள்ளது. உண்மையான நடப்பியியலின் முத்திரை அதில் உள்ளது. இதை இறந்தகாலமும், எதிர்காலமும் தர இயலாது.
கே.கே :: எது தர உள்ளது ‘உண்மையான நடப்பியியலின் முத்திரையை?’
மஹாராஜ் : எதிர்காலத்தையும், இறந்தகாலத்தையும் வேறுபடுத்த, உண்மையில் வித்தியாசமான எதுவும் இப்போதைய சம்பவத்தில் இல்லை. ஒரு சில கணத்தில் இறந்த காலம் உண்மையாக இருக்கக் கூடும். அதே போல் எதிர்காலமும் மாறலாம். ஆனால் ‘இப்போதை’ வித்தியாசப்படுத்த என்ன இருக்கிறது? பொதுவாக என் இருப்பு. நான் இப்போது இருந்துகொண்டு இருப்பதால் நான் உண்மையாக இருக்கிறேன். இப்போது என்னிடம் என்ன உள்ளதோ அது என் சொரூபநிலையுடன் பகிர்ந்து கொள்கிறது. கடந்த காலம் நினைவில் மட்டும் உள்ளது. எதிர்காலம் கற்பனையில் உள்ளது. தற்போதைய நிகழ்ச்சி என்பதில் ஒன்றுமில்லை. அது மிகச் சாதாரணமாக கடிகாரத்தின் ஒலி அடிப்பதுபோல் இருக்கலாம். கடிகாரத்தின் ஒவ்வொரு ஒலிக்கும் வித்தியாசமில்லை என்றாலும், இப்போதைய மணி ஒலிக்கும், முன்பு அடித்த ஒலிக்கும் வித்தியாசம் உண்டு. அதேபோல் அடுத்தது அடிக்கப்போகும் மணி ஒலிக்கும் வித்தியாசமுண்டு. நீ எதிர்பார்த்ததுபோல அல்லது ஞாபகப்படுத்தியதுபோல. எது என் கவனத்தில் இப்போது இருக்கிறதோ அது என்னுடன் எப்போதும் உள்ளது. என்னுடைய செரூபநிலையிலிருந்து நான் இப்போதைய நிகழ்வை வெளிப்படுத்துகிறேன்.
கே.கே :: ஆனால் நாம் ஞாபகத்தில் உள்ள விஷயங்களுடன் ‘அது இப்போதைய உண்மை’ என்று நாம் ஈடுபடுவோம்.
மஹாராஜ்: நாம் ஞாபகங்களை மதிப்பது அவை இப்போதில் வரும்போதுதான். மறந்து போனதை நாம் எடுத்துக்கொள்வதே கிடையாது. அதை ஞாபகப்படுத்திக்கொள்ளும்போது அதாவது இப்போதைக்குக் கொண்டுவரும்போதுதான்.
கே.கே : ஆமாம் நான் பார்த்திருக்கிறேன். ‘இப்போதில்’ சிவ தெரியாத விஷயம் தொடர்ந்து நடந்துகொண்டே வரும் ‘இப்போதில்’ தற்காலிக உண்மைபோல் தோற்றம் தரும்.
மஹாராஜ் : தெரியாத விஷயம் என்று சொல்லக் கூடாது. அது தொடர்ந்து செயல்படுவதைப் பார். நீ பிறந்ததிலிருந்து அது மாறி உள்ளதா? நம்மைச் சுற்றிலும் உள்ள விஷயங்களும், ஞாபகங்களும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இப்போது என்ன என்பதில் உள்ள உண்மைநிலை எப்போதும் மாறாது, ஏன் கனவிலும் கூட..
கே.கே : ஆழ் தூக்கத்தில் தற்போதைய உண்மைநிலை பற்றிய அனுபவம் இல்லை
மஹாராஜ் : ஆழ் தூக்கத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஞாபகங்கள் இல்லாமலிருக்கலாம். ஆனால் பொதுவான ஞாபகமான அரோக்கியநிலை தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும். ‘ஆழ் தூக்கத்தில் இருக்கிறேன்’ என்று சொல்வது ‘நான் இல்லை’ என்று சொல்கிற தன்மையிலிருந்து மாறுபடுகிறது.
கே.கே : முதலில் இருந்து நாம் கேள்வியைச் சொல்லிப் பார்ப்போம். அடிப்படையான வாழ்க்கைக்கும், வாழ்க்கையின் உணர்வுக்கும் மனமும் அதனுடைய மாறும் தன்மைகளும் இருக்கின்றன. தொடர்ந்து வெளிப்படும் முடிவில்லாத நினைவோட்டம் அர்த்தமற்றவை, துன்பத்தைத் தரக்கூடியவை. துன்பம்தான் எப்போதும் உள்ள நிலை. மகிழ்ச்சியான நிலை என்று நாம் சொல்வது, இரு துன்பமான நிலைகளின் இடைவெளியில்தான். ஆசையும், பயமும் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தவை. அவை இரண்டும் துன்பத்தை உருவாக்கும். நம்முடைய கேள்வி, மகிழ்சிகரமான மனம் என்பது சாத்தியமா?
மஹாராஜ் :ஆசை என்பது மகிழ்ச்சியிலிருந்து உருவாகும் ஞாபகம் மட்டும். அதேபோல் பயம் துன்பத்திலிருந்து உருவாகக் கூடியது. இரண்டுமே மனதை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ஒரு துளி மகிழ்ச்சியின் கணம் என்பது தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் துன்பத்திலிருந்து வரக்கூடியது. எப்படி மனம் சந்தோஷமாக இருக்க முடியும்?
கே.கே : நாம் ஆசையை நாடும்போதும் துன்பத்தை எதிர்பார்க்கும்போதும் அது உண்மையாக இருக்கிறது. ஆனால் எதர்பாராத தருணங்கள் ஏற்படுவதுண்டு. எதிர்பாராத சந்தோஷம். வெறும் சந்தோஷம் மட்டும். அதாவது ஆசையால் பாதிக்காத சந்தோஷம். கடவுள் கொடுத்தது.
மஹாராஜ் : இருந்தாலும் மகிழ்ச்சி என்பது துன்பத்தை பின்னணியாகக் கொண்டு இயங்கும் மகிழ்ச்சிதான்.
கே.கே : துன்பம் என்பது பிரபஞ்சத்தின் உண்மையா அல்லது மூளை விஷயமா?
மஹாராஜ் :: இந்தப் பிரபஞ்சம் முழுமையாக உள்ளது. எங்கே முழுமை உள்ளதோ எங்கே எந்தக் குறையும் இல்லையோ அப்போது எது துன்பத்தைத் தர இயலும்?
கே.கே : இந்தப் பிரபஞ்சம் முழுமையாக இருக்கலாம் ஆனால் சில விபரங்களில் முழுமை இல்லாமல் உள்ளது.
மஹாராஜ் : முழுமையின் ஒரு பகுதியான முழுமை கூட பூரணத்துவமாக உள்ளது. தனியாக அதைப் பார்க்கும்போதுதான் அது கோளாறு உடையதாகத் தோன்றும். அதுதான் துன்பத்தின் ஆரம்பமாகவும் இருக்கும். எது தனிமைப்படுத்துகிறது?கே.கே : விஸ்தாரமில்லாத மனம் கூட காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட மனது முழுமையை பகுதியின் மூலம் உணரமுடியாது.மஹாராஜ் : நல்லது. மனது அதனுடைய இயல்புபடி பிரிந்து எதிர்ப்பையும் தெரியப்படுத்தும். வேறு எதாவது மனம் இருக்கிறதா? எல்லாவற்றையும் ஒழுங்கு செய்து பூரணத்துவத்தைத் தர. அது முழுமையை பகுதியின் மூலம் உணரும். அதேபோல் பகுதியை, முழுமையுடன் ஒருங்குப் படுத்தவும் செய்யும்.
கே.கே : இன்னொரு மனம் எங்கே போய் பார்ப்பது?
மஹாராஜ் : குறுகியத் தன்மை, பிரித்தாளும்தன்மை, எதிர்ப்பைத் தெரிவிக்கும் தன்மை என்று எல்லாவற்றையும் மீறிய மனத்தை நோக்கிச் செல்ல வேண்டும். நமக்குத் தெரிந்த மனக் கிலேசங்களை முடிவுக்குக் கொண்டு வருதல். எப்போது இது எல்லாம் முடிவுக்கு வருகிறதோ அப்போதுதான் இன்னொரு மனம் பிறக்கிறது.
கே.கே : அந்த இன்னொரு மனதில் சந்தோஷமும் துக்கமும் எப்போதும் இருப்பதில்லை.
மஹாராஜ் : நம்ம விருப்பப்படி தெரிந்தும் உதறியபடியும் அல்ல. உண்மையில் அன்பை வெளிப்படுத்த சொற்களைத் தேடும்போது பல தடைகளைச் சந்திக்கிறோம். நான் குறிப்பிடும் மனம் எப்போதும் அன்பு நிறைந்தது. சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடக்கூடியது. ஆரம்பத்தில் வெறுப்படையக் கூடியதாக இருந்தாலும், இறுதியில் வெற்றி அடையக் கூடியது.
கே.கே : பாலம் போல் அன்பானது நமது ஆன்மாவிற்கும் உடலுக்கும் இடையே செயல்படுவதாகத் தோன்றுகிறது.
மஹாராஜ் : வேறு என்ன? மனம் பெரிய பள்ளத்தை உருவாக்குகிறது. உணர்வுள்ள இருதயம் அதைத் தாண்டி விடுகிறது.

சில குறிப்புகள் 4

எஸ் வைத்தியநாதன் என்ற என் நண்பரைப் பற்றி சொல்ல விருப்பப்படுகிறேன். எனக்கு சில இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தியதற்கு வைத்தியநாதன் ஒரு முக்கிய காரணம். ஒரு இலக்கியச்சிந்தனைக் கூட்டத்தில்தான் வைத்தியநாதனை சந்தித்தேன். இந்தச் சந்திப்பை ஏற்படுத்தியவர் நடராஜ் என்ற நண்பர். வைத்தியநாதன் மூலம் என்ற பத்திரிகை பற்றியும், அதில் அப்போது எழுதிக் கொண்டிருக்கும் சில நண்பர்களையும் அறிமுகப்படுத்தினார். பெரும்பாலும் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் அந்த இலக்கிய நண்பர்கள் கவிஞர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.எல்லோரும் கவிதைகள் எழுதுபவர்கள். கவிதைகளைப் பற்றி பேசுபவர்கள். வைத்தியநாதன் ஒரு கவிஞர். பத்திரிகை நினைத்தபோது வரக்கூடிய பத்திரிகை. பத்திரிகை ஆசிரியர் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டபோது, பெரிய அதிர்ச்சி அதில் ஈடுபட்ட நண்பர்களுக்கு ஏற்பட்டது. ஆத்மாநாமிற்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் அவருடைய நண்பர்கள் பெரிய வருத்தத்துடன் இருந்தார்கள். எனக்கு ஆத்மாநாம் அவ்வளவு நெருக்கம் கிடையாதென்றாலும், ஒன்றிரண்டு முறை சந்தித்திருக்கிறேன். அவருடைய புத்தகமான காகிதத்தில் ஒரு கோடில் அவருடைய கையெழுத்தை வாங்கியிருக்கிறேன். எளிமையான வரிகள் கொண்ட ஆத்மாநாம் கவிதைகள் கவிதை உலகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கி உள்ளன. ஆத்மாநாம் போலவே ழ பத்திரிகையில் அறிமுகமானவர்கள் விதம் விதமாய் புதிய கவிதைகளை உருவாக்கியவர்கள். ஆத்மாநாம் குறித்து வைத்தியநாதன் எழுதிய கவிதையைத்தான் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விழைகிறேன். இக் கவிதை விருட்சம் தொகுதியில் வெளிவந்துள்ளது.
உறுதிமொழி 82இன்றோடு நழுவிய பதக்கங்கள் எவரையும் நினைவூட்டப் போவதில்லை – வளைந்த மீசை கொண்ட பயணியை மீண்டும் சந்திக்கப் போவதில்லை – நந்தவனமெனக் கண்டதில் பழுதில்லை உலாவ முயன்றதில்தான் தவறு – தொடைகள் நடுவில் புதைந்த தலையணை இன்று உலகோடு கொள்ளும் நட்பு.
உறுதிமொழி 84மெல்லதன்னையே எடுத்து நிறுத்திக் கண்டார் மெல்ல உள்ளதை எடுத்து நிறுத்திக் கண்டார் மெல்ல அற்றதை எடுத்துக் நிறுத்திக் கண்டார். உள்ளதும் அற்றதும் கண்டவர் மெல்லத் தன்னையே எடுத்து நிறுத்திக் கண்டார்உள்ளதும் அற்றதும் கண்டவர் மெல்லத் தன்னையே எடுத்து நிறுத்திக் கொண்டார்மெல்லத் தன்னையே எடுத்து நிறுத்திக் கொண்டார்
உறுதிமொழி 88
புதிய தேவதைகளை முத்தங்களிட வேண்டும். புதிய தேவதைகளை முத்தங்களிட வேண்டும்.
மேலே உள்ள உறுதி மொழி 82 கவிதை ஆத்மாநாம் நினைவாக எழுதப்பட்ட கவிதை. விருட்சம் கவிதைகள் தொகுதி 1 ல் வந்த கவிதையில் இதுவும் ஒன்று. இன்னும் சுவாரசியமான கவிதைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இக் கவிதைகள் குறித்து உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

சில குறிப்புகள் – 3

நவீன விருட்சம் என்ற இதழ் கடந்த 20 ஆண்டுகளாக வருவது இலகிய அபிமானிகளுக்குத் தெரியும் என்பது என் அபிப்பிராயம். பெரும்பாலும் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட இதழ் நவீன விருட்சம். அந்த இதழில் வெளிவந்த முதல் ஐந்தாண்டுகளில் உள்ள கவிதைகளை கவிஞர்களின் பெயர்களை விடாமல் அவர்கள் எழுதிய ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பாகக் கொண்டு வந்தேன். அத் தொகுதியை விருட்சம் கவிதைகள் ஒன்று என்று பெயரிட்டு பிரசுரம் செய்துள்ளேன். 1988 ஆம் ஆண்டிலிருந்து 1992 ஆம் வரை உள்ள 94 கவிஞர்களின் 163 கவிதைகள் கொண்ட தொகுப்பு. இன்று கவிதை எழுத வேண்டுமென்று ஆசை படுபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் வைக்க வேண்டிய புத்தகம். கவிதைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய இப் புத்தகத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் சிபாரிசு வேண்டி உள்ளது. அல்லது உரிய அதிகாரமுள்ளவர்கள் தகுதியான இடத்தில் சொன்னால் எல்லாம் நடக்கும். விருட்சம் கவிதைகள் தொகுதி 1 க்கு அதுமாதிரியான கொடுப்பினை இதுவரை கிடைக்கவில்லை.
இப்போது அடுத்த 5 ஆண்டுகளுக்கான (1993/1998) வரை உள்ள கவிதைகளைத் தொகுதி விருட்சம் கவிதைகள் 2 கொண்டு வந்துள்ளேன். 93 கவிஞர்கள்கொண்ட 152 கவிதைகள். பொதுவாக விருட்சம் தொகுதியில் கவிஞர் பெயர்களைக் கட்டாயம் சேர்த்துவிடுவோம். ஒரு கவிஞர் விருட்சம் இதழில் ஒரு கவிதை எழுதினாலும் அவருடைய பெயர் விருட்சத்தில் இடம் பெறாமல் இருக்காது.
உங்களுக்கு விருட்சம் முதல் தொகுதியில் வெளிவந்த கவிதைகளை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். முதல் இதழில் ரா ஸ்ரீனிவாஸனின் முதல் பக்கத்தில் வெளிவந்த கவிதையைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
சூரியனைத் தவிர
சூரியனே, நீ உதயமாகும் பொழுதுஉன்னைத் தவிர நான் வேண்டுவது வேறு எவருமில்லை.நான் உன்னுடன் உதிக்கிறேன் இரவு வந்து கவிழ்கிற வரை உன்னுடனே இருக்கின்றேன் வீழ்கின்றபோது நீ எழுதுகின்ற வண்ண வண்ண ஓவியத்தை நானும் எழுதியபடி
நீ மறைகின்றாய் மலைகளுக்கும் கட்டிடங்களுக்கும் ஒவ்வொன்றிற்கும் அப்பால்
நீ எழுதிய ஓவியமும் மெல்ல அழிகின்றது இருள் சூழ்ந்து பின்பு அதிகாலையினில் நீ உதிக்கின்றாய்உன்னுடன் நானும் மாலைக்கான ஓர் புதிய ஓவியமெழுத

அகிலாண்டேஸ்வரி

ஒருவரைப் பார்க்கப் புறப்படத் தெருவில் வந்தேன்
எதிரே தென்பட்ட அஞ்சல் ஊழியர்
அஞ்சல் அட்டை ஒன்றைத் தந்தார்.
அட்டையின் மூலையில் மஞ்சள் தடவி
இருந்ததால் நல்ல சகுனம் என்றதைப் பார்த்தேன்.

அஞ்சல் அட்டையைப் படித்துப் பார்தேன்.
கைகால் எல்லாம் உதறத் தொடங்கின.

‘அகிலாண்ட கோடி ஆனந்த மாரியின்
அடியவன் எழுதும் பக்தி லிகிதம்.
அகிலாண்ட கோடி ஆனந்த மாரியே நமக
என்று பத்துத் தடவை
இதுபோல் எழுதி இன்றே
5 பேருக்கு அனுப்பி வையுங்கள்
இந்தியன் போஸ்டல் செர்வீசைவிடக்
கூரியர் செர்வீஸ் நல்லது.
அனுப்பினால் உங்களுக்கு லாட்டரி சீட்டில்
5 லட்சம் பரிசு விழும். அல்லது
நீண்ட காலமாய் வசூலாகாத
பெரிய கடன் உடனே திரும்பும்
பதவி உயர்வு ட்ரான்ஸ்பரும் கிடைக்கும்.
சொன்னதுபோல செய்யத் தவறினால்
சொந்தக்காரர் செத்துப் போவார்.
பெண்டாட்டிக்கு மாதக் கடைசியில்
ஆஸ்த்துமா தொந்தரவு கூடும்.
தெருவிலே கல்யாணமாகாத ஒரு பெண்
கர்ப்பமானதற்கு நீதான் காரணம்
இப்படி வதந்திகள் கிளம்பும்.
தாமதம் செய்யாமல் எழுதுங்கள்
ஐந்தே ஐந்து பக்தி லிகிதங்கள்
அகிலாண்ட கோடி ஆனந்த மாரியே நமக.

சொந்தக்காரர் சாவைக் காட்டிலும்
தெருப்பெண் கர்ப்பம் பற்றிய செய்தியால்
எனக்குப் பயத்தில் வேர்த்துக் கொட்டியது.
ஐந்து அஞ்சல் அட்டைகளில் எழுதினேன்.
பக்கத்து வீட்டு எழுத்தாளரிடம் தந்தேன்
ஐந்து பேர்களின் முகவரி கேட்டேன்.
மளமள மளமளவென்று எழுதிக் கொடுத்தார்
முதலாவது மனிதர் :
சாகித்திய அகாடமி தலைவர், டெல்லி
இரண்டு :
தமிழக முன்னாள் முதல்வர்
மூன்று :
கோமதி பிரசுரம். திருக்கண்ணரசு
சென்னை 1
நான்கு :
இரா. கதைப்பித்தன், மதுரை
ஐந்தாம் அட்டையை பார்க்கவில்லை நான்.
ஆசிரியர், தினமணி என்றிருக்குமோ?
பெட்டியில் அட்டைகளைப் போட்டுவிட்டுத்
திரும்பி நடந்தேன்
எந்தப் பெண்ணையும் ஏறிட்டுப் பார்க்காமல்.

தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய படைப்பாளி ஞானக்கூத்தன் அவர்கள். அவருடைய இரு புத்தகங்களான ஞானக்கூத்தன் கவிதைகள், பென்சில் படங்கள் என்ற கவிதைத் தொகுதிகள் விருட்சம் வெளியீடாக வந்துள்ளன. மேலே குறிப்பிட்ட கவிதை பென்சில் படங்கள் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஞானக்கூத்தன் கவிதைகளில் பெரும்பாலும் அங்கத உணர்வுடன் கூடிய கவிதைகளைக் காணலாம். அங்கத உணர்வுடன் கூடிய ஆழமான உணர்வுகள்தான் அவர் கவிதைகள். தொடர்ந்து இக் கவிதைகளில் சிலவற்றை இங்கு பிரசுரம் செய்ய ஆர்வமாக உள்ளேன்.

ஜானகிராமன் படைப்புகள் ஒரு பார்வை

எப்போது ஜானகிராமனைப் படிக்க ஆரம்பித்தேன்? இப்போது ஞாபகத்தில் வரவில்லை. மற்ற நாவல்களைப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஜானகிராமன் பெயரையும் கேள்விப்பட்டு படிக்க ஆரம்பித்தேன். அவருடைய ‘அம்மா வந்தாள்’ நாவலைத்தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். எந்த ஆண்டு? ஞாபகமில்லை. ஆனால் ஜானகிராமனுடன் கூட இன்னும் சில நாவலாசிரியர்களின் நாவல்கள் ஏனோ என்னைக் கவரவில்லை. தனிப்பட்ட முறையில் இலக்கிய ஆசிரியர்களின் நாவல்களைப் படிக்கத் தொடங்கியபோது, ஜானகிராமனும் அதில் இருந்தார். கிட்டத்தட்ட தமிழில் இலக்கிய நாவல்கள் பல வெளிவந்துள்ளன. அப்படி ஒவ்வொன்றாகத் தேடிப் படிக்கும்போது ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ நாவல்களையும் படித்தேன். பின்பு ‘மோகமுள்’ என்ற நாவலையும் படித்தேன். ஜானகிராமன் நாவல்களில் பெண் பாத்திரங்கள் படும்பாடை நினைத்துப் பார்த்ததுண்டு. பொதுவாக அவருடைய நாவல்களில் ‘அடல்டிரி’ விஷயம் முக்கியமாகக் கையாளப்படுகிறது. ‘அம்மா வந்தாள்’ நாவலில் பூடகமாகவும், ‘மரப்பசுவில்’ பகிங்கரமாகவும் வெளிப்படுகிறது. பிறகு அவருக்கு எழுதுவது என்பது கைவந்தகலையாக இருக்கிறது. ஆண் þ பெண் உறவுமுறையில் உள்ள ஒழுங்கின்மையையும், முரண்பாட்டையும் சுவாரசியமான முறையில் எழுதி உள்ளார். நாவல் மட்டுமல்லாமல், சிறுகதைகள், பயணக் கட்டுரைசள், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள் என்று இலக்கியத்தில், பல தளங்களில் செயல்பட்டவர் என்பதை நினைத்ப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது.ஜானகிராமனைப் படிக்கும்போது, இங்கு குபாராவையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. ஆண்þபெண் உறவின் அதீதப் போக்கைஙுமுரண்பாட்டை குபாரா சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்திக் காட்டியவர். எளிமையான நடையில், பூடகமாக எழுதுவது அவருடைய கலை. அதே பாணியை ஜானகிரமான் ஸ்வகரித்துக் கொண்டவர். குறைந்த வயதிலேயே கு ப ரா மறைந்து விட்டார். அவர் இல்லாத குறையைப் போக்கியவர் ஜானகிராமன். ஜானகிராமனின் எல்லை நீண்டு, சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள், என்றெல்லாம் போய்விட்டது.
அவர் நாவல்களை மட்டும் படித்து பழக்கப்பட்ட எனக்கு, அவர் சிறுகதைகளைப் படிக்க ஏனோ அப்போது தோன்றவில்லை. அதனால் அவர் சிறுகதைகளை முதலில் படிக்க ஆரம்பிக்கவில்லை. இப்போதுதான் அவர் சிறுகதைகளைப் படிக்க வேண்டுமென்று தோன்றியது.
1956ல் எழுதிய ‘கங்கா ஸ்நானம்’ என்ற கதையிலிருந்து 70 கதைகள் கொண்ட தொகுப்பைப் படிக்கும்போது, எனக்கு மலைப்பே ஏற்பட்டது. முழு தொகுப்பை என்னால் படித்து முடிக்க முடியவில்லை. ஆனால் 1000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் 200 பக்கங்களைத்தான் படிக்க முடிந்தது. அத்தனை கதைகளிலும் அடிநாதமாக ஒரே ஒரு விஷயத்தைத் திரும்ப, திரும்ப ஜானகிராமன் சொல்லிக்கொண்டே போகிறார். மனித உறவுகளிடையில் உண்டாகும் ‘துரோகம்’தான் அவர் சிந்தனையில் பெரும் பங்கு வகித்துள்ளது. அத் துரோகத்தை விதம்விதமாக விவரிப்பதில், பெரிய சாதனையாளராக உள்ளார்.
துரோகத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் கதைகள்எழுதினாலும், ஏமாற்றுபவர்/ஏமாற்றப்பட்டவர் என்ற இரண்டு முனைகளில் ஏமாற்றப்பட்டவர் சாத்விகமான முறையில், துரோகத்தை/ஏமாற்றத்தை எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாமல் ஏற்றுக்கொள்வது இவர் கதையின் உத்தி. ஆனால் விதிவிலக்காக சில கதைகளில், ஏமாந்தவர், வேறுவிதமாகவும், ஆனால் பழி தீர்க்கப்பட்டது என்ற உணர்வு வெளியே தெரியவராமல், செயல்படவும் செய்கிறார்.
உதாரணமாக, 1956 ஆம் ஆண்டு எழுதிய ‘கங்கா ஸ்நானம்’ என்ற கதையில், துரைய்யாவை சின்னசாமி கங்கையில் சந்திக்கிறார். இதில் சின்னசாமி துரைய்யாவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர். உண்மையில் சந்திப்பு நடக்கவில்லை. துரைய்யா தங்கியிருக்கும் இடம் தெரிந்து, சந்திப்பு நிகழ்ந்துவிடக் கூடாதென்ற பதைப்பு சின்னசாமியிடம் ஏற்படுகிறது. சின்னசாமி திருப்பித்தர வேண்டிய பணத்தைக் கொடுத்தும், கொடுக்கவில்லை என்று சாதித்தவர் துரையப்பா. மேலும், பணத்தைப் பெற சின்னசாமி மீது கோர்ட்டில் வழக்குத் தொடுத்து பணத்தை வலுகட்டாயமாக பெற்று விடுகிறார். இது சின்னசாமி மனதில் ஏற்பட்டுள்ள மாறாத வடு. அவமானம். இந்த ‘துரைய்யப்பா’வை சந்திக்காமல், அவர்கள் இருந்த இடத்தை காலி செய்ய வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது. இக் கதையில் வெளிப்படுகிற துரோகத்திற்கு தீர்வாக, சின்னசாமி மனைவி அளிக்கிறாள் தீர்ப்பு.
“அவன் பாவத்துக்கும் சேர்த்து முழுக்குப் போடுங்கோ,” என்பதுதான் தீர்ப்பு.இக் கதையில் முரண்பாடாகத் தெரிவது துரைய்யாவின் பாத்திர அமைப்பு. கதையில் முன் பகுதியில் துரையப்பாவைப் பற்றி பேசும்போது, இப்படி எழுதப்படுகிறது. ‘துரையப்பா பெரிய மனுஷன். பெரிய மனுஷ்யன்தான் எவ்வளவு மரியாதை….விட்டுக் கொடுக்கிற தன்மை. சாயங்காலம் சின்னசாமி பஸ்ஸிலிருந்து விளாஞ்சேரி முக்கில் இறங்கி வந்தபோது துரைய்யாவின் அன்னதானத்தைப் பற்றிதான் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். யார் எப்போதும் போனாலும் துரைய்யா வீட்டில் சாப்பாடு கிடைக்கும். ‘அன்னதாதா, அன்னதாதா’ என்று அவர் பெயர் ஜில்லா முழுவதும் சுற்றம் முழுவதும் முழங்கிக் கொண்டிருக்கும். எப்போது ரயிலில் போனாலும் அதைப் பற்றிப் பேசுகிற ஒரு பிரயாணியாவது பார்க்க முடியும் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற துரைய்யா, இறுதியில் சின்னசாமியை ஏமாற்றுகிறார். இது மாதிரி பல ‘கதா பாத்திர முரணை’ கதைகளில் வெளிப்படுத்துகிறார் தி ஜானகிராமன். ‘வீடு’ என்ற ஒரு கதை. இது சற்று நீளமான கதை. குறுநாவல் என்று சொல்லலாம். ஜானகிராமன் நாவல்களைப் படித்த அனுபவத்தில், இக் கதை எப்படி ஆரம்பித்து எப்படி முடிக்கப் போகிறாரென்பது தெரிந்து விடுகிறது. வாசகனை முதலில் அவர் வீடு விற்க தயாராக இருப்பதுபோல் காட்டுகிறார். ஆனால் கதை வீடு விற்பது பற்றியல்ல. மகாதேவன் என்பவன் நயமாகப் பேசி டாக்டரின் கம்பவுண்டராகச் சேர்கிறான். காம்பவுண்டராக மட்டுமல்லாமல், அவர் வீட்டிற்கு எல்லா உதவிகளையும் செய்கிறான். அவன் உதவிகளைக் கொண்டு புளாங்கிதம் அடைகிறார் டாக்டர். ஆனால் அவர் மனைவியிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்கிறான். இதை அறிந்த டாக்டர், அவனை நையப் புடைத்து, உதைத்து அனுப்புவதற்குப் பதிலாக பூடகமாக துரத்தி விடுகிறார். அவர்களுடைய கள்ள உறவு வெளிப்படையாகத் தெரியும்படி வருகிறது. டாக்டரின் மனைவி அவரை விட்டுப் போக விரும்புகிறாள். டாக்டரிடம், வீட்டையும், சாப்பிட எதாவது ஏற்பாடு செய்யும்படி கேட்கிறாள். டாக்டர் மறுத்து விடுகிறார். அவர் இருக்கும்வரை இந்த வீட்டில் இருக்க வேண்டுமென்று சொல்கிறார். வீடை விற்றுவிடுவதாக சொல்பவர், கடைசி வரை வீட்டை விற்காமலிருக்கிறார். இறுதியில் மகாதேவனுடைய சாவுடன் கதை முடிவடைகிறது. இக் கதையில் மூவரும் ஒவ்வொரு விதத்தில் பழிவாங்கப் படுவதாகப் படுகிறது. துரோகத்திற்கு எதிராக துரோகம் செயல்படுகிறது. சங்கிலி தொடர் மாதிரி துரோகம் எல்லோரையும் பிணைத்து விடுகிறது. வெளிப்படையாக இல்லாமல், பூடகத்தன்மையுடன் கதையை எடுத்துச் செல்வதில் ஜானகிராமன் வெற்றி பெறுகிறார்.
ஜானகிராமன் எழுத்து நடை கு ப ராஜகோபாலனிடமிருந்து ஸ்வகரித்த நடை. கதை பாணியும் கு ப ராவைப் போல் பூடகத்தன்மை வாய்ந்தது. ஜானகிராமன் குபாராவிற்குப் பிறகு வளர்ந்த ஒரு பெரிய எழுத்தாளர். பலவிதங்களில் சாதனைப் புரிந்தவர். இன்றைய படைப்பாளிகளுக்கு அவர் எழுத்து நடையின் மிடுக்கு 2001þல் படிக்கும்போது கூட ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. அவர் கதைகளில் எல்லாவற்றையும் வெளிப்படையாக எடுத்துப் போடுவதல்ல. மனித உள்ளம் எப்படிச் செயல்படுகிறது என்பதுதான் அவருடைய ஆராய்ச்சி. அதாவது, மனிதனின் ‘உள்முரணை’ வெளிப்படுத்துவதுதான் கதையின் வெற்றியாகக் கொண்டு வருகிறார்.
இன்று ஜானகிராமனின் வாசகராக இன்றும் பல எழுத்தாளர்கள் தோன்றி உள்ளார்கள். உதாரணமாக பாலகுமாரனைச் சொல்லலாம். ஜானகிராமனைப் படிக்கும்போது, ஒருவித உற்சாகம் ஏற்படுகிறது. ‘இவ்வளவு எழுதி இருக்கிறாரே’ என்ற உற்சாகம்தான் அது.

அப்பனாத்தா நீதான்

வெயிலடிச்சு ஊரு காஞ்சு கெடக்கும் நேரம்
கையை மழை நனைச்சுப் போனதுன்கண் ஈரம்
ஊரு பாக்க மீச முறுக்கி போன எ(ன்) ஐயா
உன் வீரமெல்லாம் போயி கண்ணீர் விட்டது ஏ(ன்)ய்யா
காரு புடிச்சு பத்திரமா ஏத்திவிட்டு
கதவு ஓசபடாம பக்குவமா சாத்திப்புட்டு
துண்டெடுத்து வேர்வையோட கண்ணீரும்
தொடச்சுபுட்டு மீசைய முறுக்கினதுன் வீரம்

அம்மா அம்மான்னு பலசொல்லு காதில்விழும்
ஐயா ஐயான்னு இந்தப்புள்ள மட்டும் அழும்
கண்ணு போன பெரியாத்தா
ரெண்டாம் கல்யாணத்துக்கு சொல்லிப் பாத்தா
பொஞ்சாதி பொண்ணு ஆத்தா எல்லாமே நாந்தான்னு
பெருமையா நீ சொன்னப்ப கலங்குனது என்கண்ணு

வயித்தப் புடிச்சுகிட்டு வழியேதும் தெரியாம
சமஞ்ச சேதி உன்கிட்ட சொன்னது இந்தமக
ஊருகூட்டிப் பந்தலிட்டுக் கெடா வெட்டுன
தங்க வளையலும் தோடுமா நக பூட்டுன
சந்தி முக்குல என்ன கேலி பேசுன பையல
நீ பந்தாடுனதப் பார்த்துபொறவு வார்த்தையேதும் வரல

மெத்தப் படிக்க டவுனுக்குப் போனே(ன்)
என்னத் தேடி நீயும் மெலிஞ்சுப் போன.
பொண்ணுங்ககூட பெருசா அரட்டையடிச்சேன்
பையகள கொஞ்சம் கேலிசெஞ்சு வச்சேன்
கூத்துக் கேலி கும்மாளத்தோட
காதலும் வந்து சேந்துக்கிட
வீட்ட விட்டு வருவியா என்கூடன்னு
கேட்டுப்புட்டான் கேள்விய பட்டுன்னு
வீட்டுச் சம்மதம் வாங்கியாரேன்
கெடைக்காட்டி உங்கூட ஓடிவாரேன்ன்னு
சொல்லிப்புட்டு அழுது வடிச்சேன்
கண்ணீரோடு ஐயா பாசம் கொஞ்சம் கரைச்சேன்
படிச்சு முடிச்சு ஊரு வந்தே(ன்)
பாசம் கொஞ்சம் மறந்து வந்தே(ன்)

எப்படித்தான் புரிஞ்சுதோ பாவிமக நெனப்பு
கல்யாணத்துக்குத் தேதி குறிச்ச எனக்கு
பொண்ணு பார்க்க வருவாகன்ன
சீக்கிரமே கல்யாணம்ன்ன
மொத மொதலா என் மனசு முழுசா
அம்மாவத் தேடி அழுதுச்சுப் புதுசா
சீவி முடிச்சு சேல உடுத்தி சிங்காரமா
வந்து நின்னேன் ஒரு பொணமா

காப்பி கொடுக்க குனிஞ்சு நின்னேன்
மாப்பிள்ள கைபடவும் துடிச்சுப் போனேன்
பதட்டத்துல மாப்பிள்ள மொகம் பார்த்தேன்
பாவிப்பய நான் காதலிச்ச பையதேன்
ஓடிவந்து உன்னைக் கட்டிப்புடிச்சு நானழ
ஆத்தா நீ அழாதடான்னு சொல்லி நீயழ
ஆத்தா நியாபகம் அழிஞ்சுடுச்சு எம்மனசுல
அப்பனாத்தா நீதான்னு கண்ணீர்விட்டேன் நிக்கல