துளிகள் 153 – தில்லையாடி ராஜா எழுதிய கடிதம்

 15.11.2020

அழகியசிங்கர்

தில்லையாடி ராஜா என்பவர் கடலூரிலிருந்து ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  எனக்கு ஆச்சரியம்.  என் புத்தகம் பற்றி எழுதியிருந்தார்.  அந்தக் கடிதத்தை ஜனவரி 5ல் எழுதியிருந்தார்.  என் புத்தகம் பற்றித்தான் அந்தக் கடிதம்.  எனக்கு ஆச்சரியம்.  
பொதுவாக இன்றைய சூழ்நிலை எல்லோருக்கும் தெரிந்த ஒரு சில எழுத்தாளர்களைப் பற்றித்தான் எல்லோரும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.  விதிவிலக்காக தில்லையாடி ராஜா என் புத்தகத்தைப் படித்துவிட்டு எழுதியிருக்கிறார்..
வாசிப்போம் வாசிப்போம் தொகுதி 1 என்ற புத்தகம்தான் அது.  அந்தப் புத்தகத்தில் 27 புத்தகங்களை நான் படித்த அனுபவத்தைப் பற்றி எழுதியிருப்பேன்.  தில்லையாடி ராஜா அந்தப் புத்தகத்தைக் குறித்துத்தான் எழுதியிருக்கிறார்.
பச்சை இங்கில் அவர் கையெழுத்து புரியும்படி அற்புதமாக எழுதப் பட்டிருக்கிறது.
அவருடைய கடிதத்தை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

வணக்கம்.
அழகியசிங்கர் எழுதிய ‘வாசிப்போம் வாசிப்போம் தொகுப்பு 1’  வாசித்தேன். 
இருபத்தேழு நாட்கள் வாசிப்பனுபவம், பல்வேறு நூல்களைப் பற்றிய கட்டுரைகள். 
நகுலன், கு.ப.ரா, பாரதி, நவகாளி – சாவி எழுதிய நூல் இன்னும் பலபல…

இவற்றில் சில நூல்கள் வாசித்திருக்கிறேன்.  பல நூல்கள் வாசிக்க வேண்டியவை என அழகியசிங்கர் கோடிட்டுக் காட்டுகிறார். இந்த நூலின் பணியே இதுதான்.   
இன்ன நூல்கள் வாசித்தேன்,  இத்தனை  பக்கங்கள் வாசித்தேன், ஞாயிறு நாட்களில் வாசிக்க நேரம் கிடைப்பதில்லை, வீட்டின் தேவைக்கு காபி பொடி வாங்கிக் கொடுத்துவிட்டு வாசிக்க வேண்டும்…வாசித்தவற்றை இது புரிகிறது, இது புரியவில்லை, முழுமையாக வாசித்து விட்டு பிறகு எழுதுகிறேன்…
நூலாசிரியர் வாசகனுடன் நேருக்கு நேர் பேசுவதாக அமைகிறது…எந்தப் போலித்தனமோ, பம்மாத்தோ இல்லை..
நல்ல நூலை வாசித்த நிறைவு.  என்ன..? எல்லா நூல்களையும் போல எழுத்துப் பிழை பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில் காணப்படத்தான் செய்கிறது.   அத்துடன் முடிகிறது கடிதம்.  எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒருவர் புத்தகம் படிப்பதோடல்லாமல் அதைப்பற்றி எழுதவும் (பச்சை இங்கில் கையெழுத்து நேரத்தியாக)  எழுதியிருக்கிறாரே என்றுதோன்றியது.  அதோடு அல்லாமல் கவர் எடுத்து ஸ்டாம்பு ஒட்டி அனுப்பவும் செய்திருக்கிறாரே என்று தோன்றியது. இதெல்லாம் ஒருவர் செய்கிறார் என்றால் பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது.  

இந்தக் கடிதத்தை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்.



சூம் மூலமாக 25வது கவியரங்கக் கூட்டம்

அழகியசிங்கர்

வணக்கம்.

வழக்கம்போல் கவியரங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு எல்லோரும் கவிதை வாசித்தார்கள்.  நானும் வாசித்தேன்.  நெறியாளராக பானுமதி அவர்கள் செயல் பட்டார். அந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை இஙகே அளிப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். 


நவீன கவிதையில் அறிவியல் ஓர்மை

அழகியசிங்கர்

‘நவீன கவிதையில் அறிவியல் ஓர்மை’ என்ற தலைப்பில் திரு பிரவீண் பஃறுளி  13.11.2020 (வெள்ஙளிக்கிழமை) அன்றுஆற்றிய உரையை  ஒளிப்பதிவு செய்கிறேன்.  கேட்டு மகிழுங்கள்.


.

இது 25வது கவிதைக் கூட்டம்

அழகியசிங்கர் 

வழக்கம்போல் இன்று எல்லோரும் திறமையாக கவிதை வாசித்தார்கள்.  இது 25வது கவிதைக் கூட்டம்.  திரு பிரவீண் பஃறுளி அவர்கள்  ‘நவீன கவிதையில் அறிவியல் ஓர்மை’  என்ற தலைப்பில் சிறப்பாகப் பேசினோர். அவர் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசினார்.  அதன் பிறகு கவிதை வாசிப்பு நடந்தது.  நான் ‘தீபாவளி’ என்ற தலைப்பில் பேசினேன்.  அதை இங்கு அளிக்க விரும்புகிறேன்.


தீபாவளி —

அந்த வருடம்

தீபாவளி போது ஒரே மழை

வெள்ளம். தண்ணீர் வீட்டிற்குள்

நுழைந்து எல்லாவற்றையும் 

எடுத்துக்கொண்டு போயிற்று 

பாத்திரங்கள் தெருவில்

மிதக்கத் தொடங்கின

ஓடிப்போய் எடுத்தோம்.


செத்துப்போன அம்மாவின்

ஞாபகமாய்

தவசம்.  தீபாவளிக்கு அடுத்தாள்.

வாத்தியார்கள் நனைந்தபடி வந்து

சேர்ந்தார்கள்

சேர்ந்தார்கள்

நாங்கள்
ஈர வேஷ்டிகளைக் கட்டிக்கொண்டு

தவசம் செய்தோம்.


அம்மா புகைப்படத்தைப் 

பார்த்தேன். புன்னகைத்தபடி

இருந்தாள்

என்றுமில்லாத அன்று அலாதியாய்

தெரிந்தாள்

மாடியில் பிண்டத்தை

எடுத்துக்கொண்டு

காக்கையைக் கூப்பிட்டோம்..
காக்காய் வரவில்லை

ஆனால் மழை ரூபமாய் அம்மா

வந்தாள்
மறக்க முடியாத தீபாவளி

13.11.2020  (வெள்ளி)

துளிகள் 152 – அமுதசுரபி தீபாவளி மலரில் இடம் பெற்றுவிட்டார் ஐராவதம்



அழகியசிங்கர்


எனக்குத் தோன்றும் ஒரு தீபாவளி மலர் தயாரிப்பது என்பது எவ்வளவு சிரமமான விஷயம் என்று. தமிழைத் தவிர வேற எந்த மாநிலமோ தீபாவளி மலரைப் போன்ற ஒரு மலரைத் தயாரிக்கிறார்களா என்பது தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லவும்.


இந்தக் கொரானா காலத்தில் கூட தீபாவளி மலர்கள் வருவது ஆச்சரியமாக இருக்கிறது. அதைக் கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். அமுதசுரபி மலரைப் பார்க்கும்போது அப்படிப்பட்ட எண்ணம்தான் தோன்றியது.


ஒரு தீபாவளி மலரின் விலை ரூ.150 லிருந்து ஆரம்பமாகும் என்று நினைக்கிறேன். ஆனால் அதன் உண்மையான செலவு அதிகமாகத்தான் இருக்கும்.


ஆனால் தீபாவளி மலர்களைக் காப்பாற்றுவது விளம்பரங்கள். ஒவ்வொரு தீபாவளி மலர்களைப் புரட்டும்போது அதன் வழவழப்பான் தாள்களில் அச்சில் பார்ப்பது மகிழ்ச்சியான ஒன்று.
இந்த முறை அமுதசுரபி தீபாவளி மலரில் என் நண்பர் ஐராவதம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைப் பிரசுரித்த அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனுக்கு என் நன்றி.


ஐராவதம் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். அவருக்குத் தீபாவளி மலர் என்றால் உயிர். ஆனால் புதியதாகத் தீபாவளி மலரைக் கடையில் வாங்கிப் படிக்க மாட்டார். ஆனால் விலை குறைவான தீபாவளி மலர்களை வாங்குவார். அதைவிட லென்டிங் லைப்ரரியில் வாங்கி வாசிப்பார்.


அவருடைய படைப்புகள் எதாவது ஒன்று தீபாவளி மலர்களில் இடம் பெற வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தார். அது குறித்து வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அந்த ஆதங்கம் உள்ளுக்குள்ளேயே அவரிடமிருந்ததை அறிவேன். ஆனால் என்ன பண்ணுவது அவர் ஒரு எழுத்தாளர் என்பது பலருக்குத் தெரியாது.
அந்தக் காலத்தில் கசடதபற, கவனம் , பிரஞ்ஞை போன்ற சிறு பத்திரிகைகளில் எழுதி பிரபலமிழந்த எழுத்தாளர் அவர்.
அவருடைய ஏக்கத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரையில் அவருடைய கவிதையை (கசடதபறாவில் வெளிவந்தது) கொண்டு வந்தேன். அமுதசுரபி தீபாவளி மலரில் இதைப் பார்க்கலாம்.


கவிதையும் ரசனையும் – 4

 05.11.2020

அழகியசிங்கர்

இங்கு இப்போது விக்ரமாதித்யன் என்ற கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு பேசலாமென்று நினைக்கிறேன்.  ஒரு கவிஞருடைய ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு அதன் மேன்மையைப் பேசுவதுதான் இக் கட்டுரையின் நோக்கம்.

ஒரு காலத்தில் விக்ரமாதித்யனும் பிரம்மராஜனும் தமிழில் கவிதைகள் எழுதிக் குவித்தவர்கள்.  இதில் விக்ரமாதித்யன் கவிதைகள் எல்லோருக்கும் புரியும்.  இலக்கியத்தரமான ஜனரஞ்சகமான கவிதைகள்.  ஆனால் பிரம்மராஜன் கவிதைகளை யாரும் நெருங்க முடியாது.  புரியவும் புரியாது.  ஆனால் விக்ரமாதித்யன் அப்படி இல்லை. 

அவர் தன் வாழ்க்கை சம்பவங்களை தன் மனம் போனபடி எழுதிக்கொண்டு போவார்.  ஒளிவு மறைவு இருக்காது.  இன்னதுதான் சொல்ல வேண்டும், இதெல்லாம் சொல்லக் கூடாது என்பதெல்லாம் தெரியாது.  

எல்லாப் பத்திரிகைகளிலும் அவர் கவிதைகள் வந்திருக்கின்றன.  அதற்குக் காரணம் அவருடைய கவிதைகளில் காணப்படும் எளிமை.  யாரும் படித்தவுடன் புரிந்துகொள்ள முடியும்.

நான் இப்போது பேசப்போவது ஆழித்தேர் என்ற தொகுப்பில் உள்ள கவிதையை.  விக்ரமாதித்யன் கவிதைகள் வெவ்வேறு கட்டத்தில் பல கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. அவருடைய எழுதுகிற வேகத்திற்கு அவர் கவிதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன.

அவர் கவிதைகள் படிக்க எளிமையாக இருந்தாலும் இலக்கியத் தரமானவை.  

நக்கீரன் பதிப்பகம் மூலமாக ஆழித்தேர் என்ற கவிதைத் தொகுதி 2014ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  அத் தொகுப்பில் உள்ள எதுவானாலும் என்ற கவிதையைப்  பார்ப்போம்.

எதுவானாலும்

குழந்தைப் பருவம் 

கழிந்ததே தெரியாது 

சிறுவனாயிருந்த காலம் 

சீக்கிரமே கடந்துவிட்டது 

பதின்பருவம் வேகவேகமாகவே 

போயிற்று 

வாலிபகாலம் 

வந்துபோனதே தெரியவில்லை 

நடுத்தரவயசும் 

நிற்காமல்நிலைக்காமல் சென்றுவிட்டது 

இப்பொழுது 

முதுமையின் தலைவாசல் 

காலத்தின் அருமை 

தெரிகிறது 

எனில் உடம்பு 

ஓய்வுகொள்ளவே விழைகிறது

மனசின் வேகத்துக்கு 

ஈடுகொடுக்கமுடியாமல் தத்தளிக்கிறது 

ஆடிய ஆட்டத்துக்கு 

அதிகம்தான் வாழ்வதே 

ஆனாலும் எழுதவேண்டியவை 

இன்னமும் இருக்கின்றன 

குடும்பப்பொறுப்புகள்/கடமைகள் 

குறைந்தபாடில்லை 

இன்னும் செல்லவேண்டிய

பாடல்பெற்ற ஸ்தலங்கள் நிறையவே

சிறிது காலம் இருக்கமுடிந்தால் 

சந்தோஷம்

நிரம்ப காலம் இருந்தால் 

பேரும் புகழோடும் போய்ச் சேரலாம் 

எதுவானாலும் 

காலசம்ஹாரமூர்த்தி மனசுப்படியே 

இக்கவிதை புரிவதற்கு ஒன்றுமே இல்லை.  சற்று உற்றுப் பார்த்தால் கவிஞரின் வெகுளியான மனம் வெளிப்படுகிறது.  நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்ட கவிதை.  இவர் கவிதையின் முக்கியமான அம்சம் வெளிப்படையான மனம்.  இதை நகுலனிடமும் பார்க்க முடியும்.

ஒவ்வொரு பருவத்தையும் இக்கவிதையில் விளக்குகிறார்  யாருக்குமே குழந்தைப் பருவம் எப்படிப் போனது என்பது தெரியாது.  ஆனால் சிறுவனாயிருந்த காலம் பிடித்து வைத்துக்கொள்ளாமல் சீக்கிரமாகவே கழிந்து விடுகிறது.

வாலிப காலமோ வந்ததும் போனதும் தெரியவில்லை என்கிறார்.  அடுத்தது நடுத்தர வயதும் நிற்காமல் நிலைக்காமல் சென்று விட்டது.  முதுமையின் தலைவாசலில் காலத்தின் அருமை புரிகிறது.  மனசின் வேகத்திற்கு ஈடு கொடுக்காமல் உடம்பு தத்தளிக்கிறது. 

விக்கிரமாதித்யன் தன்னை முன்னிலைப் படுத்தி கவிதை எழுதுவார்.  கவிதை முழுவதும் அவர் தான்.  தன்னையே தன் நிலையையே ஒரு பாடுபொருளாக எடுத்துக் கொண்டு விடுவார்.

ஆடிய ஆட்டத்துக்கு அதிகம்தான் வாழ்வதே என்கிறபோது அவர் சொல்கிற நிலையை எண்ணி சிரிக்காமலிருக்க முடியவில்லை. 

அவருக்கு இதுவரை அவர் எழுதியது திருப்தியைத் தரவில்லை.  இன்னும் அதிகமாக எழுத வேண்டி உள்ளதாகக் கூறுகிறார். ஆனால் சிறிது காலமாவது உயிரோடு இருக்க வேண்டுமே.

நிரம்பக் காலம் உயிரோடு இருந்தால் பேரும்புகழோடும் போய்ச் சேரலாம் என்கிறார்.  இதுவரை கிடைக்காத பேரும் புகழும் இன்னும் சில காலம் இருந்தால் கிடைத்து விடுமா என்பது கேள்விக்குறி. 

இப்படி தன்னைப் பற்றிப் பறை சாற்றுகிற தன் விளக்கக் கவிதையாக எழுதி உள்ளார் விக்கிரமாதித்யன்.  

கடைசியில் முடிக்கும்போது எதுவானாலும் காலசம்ஹாரமூர்த்தியின் மனசுப்படியே என்கிறார்.

தான் அதிக காலம் வாழ வேண்டுமென்றும் அதற்கு காலசம்ஹாரமூர்த்தியின் கருணை வேண்டுமென்றும் அதிக காலம் வாழ்ந்தால் பேரும் புகழும் கிடைக்குமென்று நினைத்துக் கொள்வது ஒரு  வேடிக்கையான மனநிலை.

இப்படித்தான் இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளை எழுதியிருக்கிறார். விக்ரமாதித்யன் கவிதைகளைப் படிக்கும்போது கவிதையையும் அவரையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை என்றே தோன்றுகிறது.  

 இந்த இட்லிகள்

இந்த இட்லிகளை இரவு முடிவதற்குள்

இவன் சாப்பிட்டுவிடலாம் 

சாப்பிடாமலும் 

இருக்கலாம் 

தேடி வரும் சிநேகிதனையே 

சாப்பிடச் சொல்லிவிடலாம் 

சாப்பிடாமல்போனாலோ யாருமே வரவில்லையென்றாலோ காலையில் 

கழிவிரக்கத்துடன் 

காகங்களுக்கோ நாய்களுக்கோ போடலாம் குப்பைத்தொட்டியில் 

வீசியெறிய நேரலாம் 

என்ன செய்தாலும் 

இட்லிகளுக்கு ஒன்றுமில்லை 

இட்லிகளைப்பற்றி யோசித்தபடியே 

எப்படியோ உறங்கிப்போனவன் 

சிறுநீர் முட்ட எழுந்த சமயம் 

வயிறு பசிக்கிறமாதிரி இருக்கவே 

பொட்டலத்தைப் பிரிக்கையில் 

இட்லிகள் சிரிப்பதாகவே பட்டன ஏனோ

எந்தச் சிறிய அனுபவத்தையும் கவிதையாக்காமல் இருக்க மாட்டார் விக்ரமாதித்யன்.  எளிமையான வரிகள் கொண்ட இக் கவிதைக்கு தனி விளக்கம் தேவையில்லை.  இட்லிகளை இரவுக்குள் சாப்பிட வேண்டுமென்று நினைக்கிறார்.   ஆனால் அந்தத் தருணத்தில் சாப்பிடப் பிடிக்கவில்லை.  

இட்லிகளை என்ன செய்வது என்று யோசிப்பதுதான் இந்தக் கவிதை.

இட்லியை குறித்து யோசித்தபடியே தூங்கியும் விடுகிறார்.  தன் சிறிய அனுபவத்தைக் கூட விடாமல் கவிதை ஆக்கிவிடுகிற மந்திரக்காரர்தான் விக்ரமாதித்யன்.

இப்படியாகத் தன்னைப் பற்றியே தன்னைச் சுற்றும் உலகம் பற்றியே சுலபமாகக் கவிதை எழுதும் விக்ரமாதித்யன், பல ஆண்டுகளாக இதைச் செய்து கொண்டு வருகிறார். 

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 08.11.2020ல் பிரசுரமானது)

புத்தகத்துடன் பேசுகிறேன்

அழகியசிங்கர் 

என் அறையில்

புத்தகங்களின் வரிசை

ஒரு புத்தகம் இன்னொரு

புத்தகத்தோடு

பேசுவதில்லை

புத்தகத்துடன்தான் எனக்கு

நட்பு


நான் மனிதர்களை

நம்புவதில்லை

எதையாவது பேசி

என் மனதைக் 

குழப்பிவிடுவார்கள்


அவர்கள் புகழ்ந்தால்

எனக்கு ஆபத்து 

என்று எண்ணிக்கொள்வேன்

புகழாவிட்டாலும் 

ஏதோ திட்டமிடுகிறார்கள்

என்று தோன்றும்

அல்லது அவர்களை

பற்றி

நினைத்துக்கொண்டு

சதா உழன்று

கொண்டிருக்கிறார்களென்று 

நினைத்துக்கொள்வேன்


என்னுடன் பேசாத 

புத்தகம்தான் என் நண்பன்
(07.11.2020)

6.11.2020 அன்று மழை குறித்து வாசித்த கவிதைகளை இங்கு தொகுத்து அளிக்கிறேன்..

  அழகியசிங்கர்

கிட்டத்தட்ட 20கவிஞர்களுக்கு மேல் மழை என்ற தலைப்பில் கவிதை வாசித்து அசத்தினார்கள்.  அந்தத் தொகுப்பை ஒளிப்பதிவு செய்து இங்கே அளிக்கிறேன்.  பார்த்து ரசிக்கவும்.


தேவதச்சன் நின்று பார்க்கும் இடம்

அழகியசிங்கர்

கவிஞர் க.வை பழனிசாமி, தேவதச்சன் நின்று பார்க்கும் இடம் என்ற  தலைப்பில் 06.11.2020 அன்று சிறப்பான உரை நிகழ்த்தினார்.  அந்த உரை தேவதச்சன் கவிதைகளை எப்படிப் படித்து உணர்வது என்று இருந்தது.  சிறப்பான உரையை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.   

24வது கவியரங்கத்தில் வாசித்த கவிதைகள்

அழகியசிங்கர்

வணக்கம்.


இன்றைய விருட்சம் கவிதை வாசிப்பு அரங்கத்தில் கவிஞர் க.வை பழனிசாமி, தேவதச்சன் நின்று பார்க்கும் இடம் என்ற தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.  எப்படி தேவதச்சன் கவிதைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று உதாரணங்களோடு விளக்கினார்.
பிறகு, மழையைக் குறித்து எல்லோரும் கவிதைகள் வாசித்தோம்.   இதோ நான் வாசித்த கவிதைகளை இங்கு அளிக்கிறேன்.


 மழை 1
மழை ஒரு நாள் வந்தது

பூமி குளிர்ந்தது

தெருவெல்லாம் சுத்தமாச்சு

வீடுகளைக் குளிப்பாட்டியது

உயர்ந்த கட்டிடங்களைக் கழுவி

பளிச்சென்றாக்கியது

வண்டிகளை நனைத்துப் புனிதமாக்கியது

தெருவில் நடக்கும்போது

உன்னையும் என்னையும் நனைத்தது

ஆடு மாடுகளெல்லாம் நனைத்தது

ஆனால் ஒருநாள் மட்டும்தான்

பின் 

எங்கோ காணாமல் போய்விட்டது
(06.11.2020)


மழை 2


மழை ஒரு விசித்திரம்

அது பெய்தாலும் சரி, 

பெய்யாவிட்டாலும் சரி,

அது குறித்துப் பேசினாலும் சரி

பேசாவிட்டாலும் சரி
(06.11.2020)