2015 வெள்ளம் வந்தபோது எங்கள் தெருவெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. என்னால் நம்ப முடியாத வெள்ளம். எங்கள் தெருவிற்கு அப்படியொரு வெள்ளம் என்று கனவிலும் எதிர் பார்க்கவில்லை . இப்போது அடிக்கப் போகும் புயல் அந்த அளவிற்குப் பாதிப்பை நிச்சயமாகக் கொடுக்காது என்றுதான் நினைக்கிறேன். அந்த வெள்ளத்தைக் கொஞ்சம் திரும்பவும் பார்க்கலாம் என்றுதான் இந்த ஒளிப்பதிவைப் பதிவிடுகிறேன்.
2015ல் எங்கள் தெருவில் வெள்ளம் வந்தபோது எங்கள் வீட்டிற்கு எதிரில் எல்லோரும் நீந்திச் செல்கிறார்கள். நான் என் வீட்டிலிருந்து காமெரா மூலமாகப்படம் பிடித்தேன்.
ஜெயராமன் பாகவதர் என் வீட்டில்தான் குடியிருந்தார். என் புதல்வனின் திருமணத்தின்போது ஜெயராமன் பாகவதரின் ராதா கல்யாணம் நடந்தது. சிறப்பாக இருந்தது. அதற்கு முன் வரை எனக்கு ராதா கல்யாணம் என்றால் எப்படி நடத்துவார் என்பது தெரியாது. அன்று பார்க்கும்போது என்னால் மிகவும் ரசிக்க முடிந்தது. ஜெயராமன் பாகவதர் மறக்க முடியாத ஒருவராக மாறிவிட்டார். அவரை நான் எப்போதும் கோவை ஜெயராமன் என்றுதான் குறிப்பிடுவேன். அவர் விருட்சம் வாசகர். ஆன்மிகத்தில் அவர் அதிகமாக ஈடுபட்டதால் அவர் இலக்கியம் பக்கம் திரும்ப முடியவில்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு போஸ்டல் காலனியில் என் இல்லத்திற்கு அவரே குடி வருவாரென்று எதிர்பார்க்கவில்லை. அவர் வசித்த இடத்தில் உள்ளே நுழையும்போது ஞானானந்த சுவாமிகள் படம் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும். 3 ஆண்டுகள் தங்கியிருந்தார். ஒருநாள் திடீரென்று அவர் போன் செய்து வீட்டை காலி செய்வதாகக் கூறினார். எனக்குத் திகைப்பாக இருந்தது. என் பெண் பிரசவம்போது இந்த இடம் போதாது என்றார். மேலும் வீட்டிலுள்ள தண்ணீர் மஞ்சள் நிறமாக இருக்கிறது என்றார். ஆனால் அவர் குடிபோன இன்னொரு இடம் இதை விட மோசம். 2வது மாடி. அவர்காலி செய்து போனவுடன் என் வீட்டை நூல்நிலையமாக மாற்றி விட்டேன். ஆனால் சில மாதங்களுக்கு முன் போன் செய்து, ‘உங்கள் வீட்டிற்கே மறுபடியும் வந்து விடுகிறேன்,’ என்றார. என்னால் அது முடியாது என்றும் தெரியும். ஏற்கனவே புத்தகங்களைக் குடி வைத்திருக்கும் நான் அவற்றை அப்புறப்படுத்த முடியாது என்று தெரியும். நானும் அதை விரும்பவில்லை. ஒவ்வொரு முறை என்னுடன் போனில் பேசும்போது நட்புடன் விசாரிப்பார். நேற்று காலை அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிந்தபோது வருத்தமாக இருந்தது. போஸ்டல் காலனியில் உள்ள அடுக்ககத்தின் உள்ள ஒரு வீட்டு உரிமையாளர்தான் இந்தச் செய்தியை முதலில் சொன்னார். உடனே என் நண்பர் வைத்தியநாதன் வாட்ஸ்அப்பில் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தார். அவர் வீட்டிற்குப் போன் செய்தேன். யாரும் போனை எடுத்துப் பேசவில்லை. ஜெயராமன் பாகவதர் இனி இல்லை என்பதை நம்புவது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.
12 பேர்கள் சேர்ந்துகொண்டு புதுமைப்பித்தன் கதைகளை ஒரு அலசு அலசினோம். அதுவும் முக்கியமாகப் பிரபலமாகாத கதைகள். எல்லோரும் பேசப்பட்ட கதைகளை எடுத்து வைத்துவிட்டு யாரும் அவ்வளவாகப் பேசாத கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசினோம். அப்படிப் பேசிய ஒளிப்பதிவை இங்கு அளிக்க விரும்புகிறோம்.
ஸ்டெல்லா புரூஸ் என்ற பிரபல எழுத்தாளர் நாவல்கள், சிறுகதைகள் என்று வெகு ஜன பத்திரிகைகளில் தொடர்கள் எழுதியவர். ஆனால் அவர் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார் என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்.
அவர் கவிதைகள் பெரும்பாலும் ஆத்மாநாம் உருவாக்கிய ‘ழ’ என்ற சிற்றேட்டிலும், பின்னால் ‘நவீன விருட்சம்’ இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன.
‘நானும் நானும்’ என்ற தலைப்பில் அவர் கவிதைகள் தொகுக்கப்பட்டு மையம் வெளியீடாக ஜøலை 1996 வெளிவந்தது.
அவர் கவிதைகள் எளிமையாகவும் புரியும் படியாகவும் எழுதப்பட்டிருக்கும். அடிப்படையில் வாழ்க்கையில் நிதர்சன உண்மையைக் கிண்டலாகப் பார்க்கும் தன்மை இருக்கும்.மரணத்தைப் பற்றிய சிந்தனை ஆழமாக அவர் கவிதைகளில் ஓடிக்கொண்டிருக்கும்.
இப்போது அவர் கவிதை ஒன்றிரண்டு பார்க்கலாம்
.”பாடைக் காட்சி”
நான்கு பேர் சுமக்க
கடற்கரையிலிருந்து பாடை
கிளம்பியது
பேசியபடி நண்பர்கள் சிலர்
பாடையை தொடர்ந்தார்கள்
யாருடைய முகத்திலும்
வருத்தமில்லை\
ஒருவரோடு ஒருவர்
பேசிக்கொண்டு போனார்கள்
பாடையைத் தூக்கிச் சென்றவர்கள்
மிகவும் நிதானமாக நடந்தார்கள்
பாடை குலுங்காமலும்
அதிகம் அசையாமலும்
கவனித்துக் கொண்டார்கள்
நண்பர்கள் சிகரெட் பற்ற
வைத்தார்கள்
சினிமா பற்றியும் அரசியல்
பற்றியும்
விவாதித்தார்கள்.
பஸ்ஸிலும் தெருவிலும் பலர்
பாடைக் காட்சியை கண்டார்கள்
சடலத்தின் கழுத்தில் மாலை
இல்லை
பின் போனவர்கள் யாரிடமும்
மரண காரியம் செய்யும்
தோற்றமில்லை
பீடிக்கு தீ கேட்பது போல
ரிஷாகாரன் ஒருவன்
நெருங்கி வந்து கேட்டான்
செத்துப் போனது யார் ஸார்?
ஒருவரும் அவனுக்குப் பதில்
சொல்லவில்லை
வெகுநேரம் சென்றபின் பாடை
திண்ணையிட்ட ஒரு வீட்டெதிரில்
இறக்கப்பட்டது.
எல்லோரும் மௌனமாக
நின்றார்கள்
பாடையில் இருந்தவர் எழுந்து
வீட்டிற்குள் போனார்
தூக்கி வந்தவர்களுக்குப் பணம்
தந்துவிட்டு
நண்பர்கள் உள்ளே சென்றார்கள்
வீட்டுப் பெண்கள் கலவரமடைந்து
கேட்டார்கள் –
என்ன கர்மம் இது
ஏனிப்படி பாடையில் வரணும்?
ரொம்பத்தான் களைப்பாக
இருந்தது
பஸ் டாக்ஸி ரிஷா
எதிலும் ஏறப் பிடிக்கவில்லை
பாடையில் படுத்து நன்றாக
தூங்கிக் கொண்டு வந்தேன்
என்றார்
மரணம் நிகழ்ந்த துக்கம்
முகங்களில் படர
பெண்கள் நிசப்தமானார்கள்
களைப்புடன் நண்பர்களும்
நாற்காலிகளில் சாய்ந்து
கண்மூட
வெற்றுப்பாடை
வீதியில் போனது,
இந்தக் கவிதை எளிதில் படிப்பவருக்குப் புரிந்து விடும். அவ்வளவு எளிமையாக எழுதப்பட்டிருக்கிற கவிதை. ஒருவிதத்தில் அங்கத சுவை கொண்ட கவிதை. பாடைக்காட்சி என்று படிக்கும்போது ஒரு துனுக்குற மன நிலையைத் தானாகவே உண்டாக்கும். பாடை என்பது மரணத்தைக் குறிக்கும் சொல்லாகவே இருக்கிறது.ஆனால் மரணமடைந்தவர்களைப் பாடையில் தூக்கிக்கொண்டு போவதுதான் இயல்பாக நடக்கக் கூடியது. இங்கு வேறு மாதிரி நடக்கிறது.கடற்கரையிலிருந்து ஒருவன் அவன் வீட்டிற்குப் பாடையில் படுத்துக்கொண்டு வருகிறான். கூடவே அவன் நண்பர்கள். பாடையைத் தூக்கிக்கொண்டு போகச் சிலர்.பாடை நிதானமாகப் பயணம் ஆகிறது. எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை. பாடையைத் தூக்கிக்கொண்டு போகிறவர்களுக்கு எந்தத் துக்கமுமில்லை. அதேபோல் பாடையில் படுத்துக்கொண்டிருப்பவருக்கும் வருத்தமில்லை. சொகுசாகத் தூங்கிக்கொண்டு வருகிறார்.ஆனால் வீட்டில் வந்து இறங்கும்போதுதான் வீட்டில் உள்ளவர்கள் பதட்டமடைகிறார்கள்.பாடையில் படுத்து நன்றாகதூங்கிக் கொண்டு வந்தேன் என்றார்மரணம் நிகழ்ந்த துக்கம்முகங்களில் படரபெண்கள் நிசப்தமானார்கள்என்று எழுதியிருக்கிறார். இன்னொரு இடத்தில் ஒரு ரிக்ஷாக்காரன் நெருங்கி வந்து கேட்கிறான் செத்துப் போனது யார் சார் என்று. அதுவும் எப்படிக் கேட்கிறான் என்றால், பீடிக்கு தீ கேட்பது போல. செம்ம நகைச்சுவை உணர்வு பொங்க எழுதியிருக்கிறார்.பாடையில் சவாரி செய்வதைக் கிண்டலாகக் கொண்டுவந்தாலும் அது தொடர்பாக ஏற்படும் மரண பயத்தையும் குறிப்பிடுகிறார்.இறுதியில் வெற்றுப் பாடை வீதியில் போனது என்று முடிக்கிறார். மரணம் என்றாலே ஒரு வித பய உணர்ச்சி ஏற்பாட்டாலும் பயத்தையும் வேடிக்கை உணர்வாகவும் மாற்றி விடுகிறார் கவிதையில்.இதை ஒரு சர்ரியலிச கவிதையாகக் கருதலாம்.அடுத்தது இன்னொரு கவிதையை எடுத்துக் கொள்வோம். மிக எளிமையாக எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதைக்குத் தலைப்பொன்றுமில்லை.
பொழுது விடிந்து
தினமும் நான்”
வருவேனென்று
கடற்கரை மண்ணெல்லாம்
குஞ்சு நண்டுகள்
கோலம் வரைந்திருந்தன
இங்குக் குஞ்சு நண்டுகள் முன்னமே கோலம் வரைந்து விடுகின்றன. இது இயல்பாக நடக்கக் கூடிய நிகழ்ச்சி.இந்த இயல்பான நிகழ்ச்சியை கவிகுரலோன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். சாதாரண விவரணையில் அழுத்தம் கொடுப்பது குஞ்சு நண்டுகள்தான்.தினமும் நடைப்பயிற்சிக்காக வருகிற கவிகுரலோன் குஞ்சு நண்டுகளின் அட்டகாசத்தைக் கவனித்துப் பூரித்துப் போகிறான்.தனக்குத் தென்படுகிற சின்ன சின்ன சம்பவங்களை அழகாகக் கவிதை ஆக்குகிறார். பாடைக் காட்சி மாதிரி சில கவிதைகள் அவரை வேறு விதமாக யோசிக்க வைக்கிறது.எல்லாவற்றிலும் இவர்தான் பாடுபொருளாகத் தென்படுகிறார்.
(இந்த வார (22.11.2020) திண்ணையில் ‘கவிதையும் ரசனையும்’என்ற பெயரில் வெளிவந்த கட்டுரை. ),
20.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 26ஆவது கவிதை அரங்கத்தில வாசித்த கவிதைகளை ஒளிப்பதிவாக தருகிறேன். முக்கியமாக இதில் கலந்துகொண்டு கவிதை வாசிப்பவர்கள், அவர்களுடைய கவிதைகளை வாசிக்கப் போவதில்லை. அவர்கள் விருமபுகிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள். யார் யாரு எந்தக் கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1. வ வே சு - சுந்தரராமசாமி கவிதைகள்
2. ஷாஅ - ஆனந்த் கவிதைகள்
3. ரவீந்திரன் - தேவதச்சன் கவிதைகள்
4. கணேஷ்ராம் - கல்யாண்ஜி கவிதைகள்
5. ஸ்ரீதர் - ஞானக்கூத்தன் கவிதைகள்
6. சிறகா - அனார் கவிதைகள்
7. பானுமதி - குட்டி ரேவதி கவிதைகள்
போன ஆண்டு ஜøன் மாதத்தில் ஏடிஎம் விஷயமாக நான் ஏமாந்து போனதை முகநூலில் குறிப்பிட்டிருந்தேன். நேற்று திரும்பவும் மேற்கு மாம்பலம் கிளை அலுவலகத்திற்குப் போக நேரிட்டது.
ஒரு செக் கிளியரிங்கில் தாமதமாகிவிட்டது. அதுவும் நவீன விருட்சம் இதழிற்காகச் சந்தாவாக ரூ150 ஐ ஒரு சந்தாதாரர் செக்.
வங்கிக் கிளைக்குப் போனவுடன் நான் ஏடிஎம்மில் ஏமாந்ததை ஞாபகம் வைத்திருந்த ஒரு பெண்மணி, சொன்ன செய்தியால் திகைத்துவிட்டேன். சார், இந்தக் கொரானா காலத்தில் பலர் லட்சக்கணக்கில் ஏமாந்து போகிறார்கள். இரண்டு நாட்களுக்குமுன் ஒரு வாடிக்கையாளர் 2 லட்சம் ஏமாந்து விட்டார். பாவமாக இருக்கிறது, என்றார்.
போனில் ஏமாற்றுபவர்கள் பேசும்போது ஹிந்தியும் தமிழும் கலந்து பேசுகிறார்களாம். மேலும் மானேஜர் பேசுகிறேன் என்கிறார்களாம். பெயர் கேட்டால் கேட்பவரைத் திட்டுகிறார்களாம். அங்கே இன்னும் சிலர் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்கிறார்கள்.
எனக்குத் திகைப்பாகப் போய்விட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் கொடுத்த புகாருக்கு எந்தப் பதிலும் வரவில்லை கமிஷனர் அலுவலகத்திலிருந்து. அவசரம் அவசரமாக ஒரு ஞாபகமூட்டல் கடிதம் தாயரித்தேன்.
எதற்கும் அந்த அலுவலகத்திற்குப் போன் செய்யலாமென்று போன் செய்தேன். பொதுவாக கமிஷனர் அலுவலகத்திற்குப் போன் செய்தால், யாரும் எடுத்துச் சரியாகப் பதில் சொல்ல மாட்டார்கள். இப்போதும் அப்படித்தான் நடந்தது. பாங்க் பிராடு பிரிவு 2வது தளத்தில் இருக்கிறது. அங்குத் தொடர்பு கொண்டு போனில் கேட்டேன். போனில் தொடர்பு கொண்டவர் வேறு ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு பேசச் சொன்னார். அங்குப் பேசினால் திரும்பவும் பழைய எண்ணிற்குப் பேசச் சொன்னார்கள்.
எனக்குத் தெரியும் இந்தப் பணம் கிடைக்கப் போவதில்லை என்று. அதனால் நான் மேலே தொடர்பு கொள்ளாமல் அலட்சியமாக ஒன்றரை வருடம் கழித்து விட்டேன்.
நேற்றைய சம்பவம் திரும்பவும் தொடர்பு கொள்ள வைத்தது. நான் திரும்பவும் அவர்களுக்கு இந்தச் சம்பவத்தை ஞாபகப்படுத்தி கடிதம் எழுதி விட்டேன். ஆனால் பலர் அந்நியாயமாக ஏமாந்து ஏமாந்து போகிறார்களே என்று தோன்றியது.இந்தக் கொரானா நேரத்தில் இப்படி ஏமாறுவது அதிகமாகி விட்டது.
இன்று மதியம் தூங்கி எழுந்தபோது ஒரு போன் வந்தது. பேசியவர் ஒரு பெண்மணி. கிரிடிட் கார்டு ஏடிஎம் கார்டைப் பற்றி விசாரித்தாள். அவள் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து குழந்தைகள் சத்தம். உடனே போனை கட் செய்து விட்டேன். திரும்பவும் போன் செய்தாள். அதெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் போனைத் துண்டித்தேன். ஆபத்து போனில் என்று தோன்றியது.
20.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 26ஆவது கவிதை அரங்கத்திற்கு வருகைப் புரிந்து கவிதைகளை கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கவிதை வாசிக்கும் கூட்டம் வித்தியாசமானது. வழக்கம்போல் சிறப்புரை வழங்க வருபவர் திரு சீனிவாச நடராஜன். தலைப்பு : தற்கால கவிதைகளில் வடிவமும் உள்ளடக்கமும். முக்கியமாக இதில் கலந்துகொண்டு கவிதை வாசிப்பவர்கள், அவர்களுடைய கவிதைகளை வாசிக்கப் போவதில்லை. அவர்கள் விருமபுகிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள். யார் யாரு எந்தக் கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க உள்ளார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
1. வ வே சு – சுந்தரராமசாமி கவிதைகள்
2. ஷாஅ – ஆனந்த் கவிதைகள்
.3. ரவீந்திரன் – தேவதச்சன் கவிதைகள்
4. கணேஷ்ராம் – கல்யாண்ஜி கவிதைகள்
5. ஸ்ரீதர் – ஞானக்கூத்தன் கவிதைகள்
6. சிறகா – அனார் கவிதைகள்
7. பானுமதி – குட்டி ரேவதி கவிதைகள்
இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்த உதவ வேண்டும். எல்லோரும் முழுமையாகப் பங்கேற்று கவிதை வாசிப்பை உன்னிப்பாகக் கேட்க வேண்டும்.
மாலை 6.,30 மணிக்கு வெள்ளியன்று நடைபெற உள்ளது. Meeting ID: : 818 0247 4818 Passcode: : 827170 Topic: Virutcham Poetry 26th Zoom Meeting Time: Nov 20, 2020 06:30 PM Mumbai, Kolkata, New Delhi Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81802474818?pwd=cVJWbFJTeVFONzNGeFFoYzlFTzhRZz09 Meeting ID: 818 0247 4818 Passcode: 827170
6.8.2020 அன்று சா.கந்தசாமிக்கு ஒரு இரங்கல் கூட்டம் நடந்தது. அன்று கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் க்ரியா ராமகிருஷ்ணன். ராமகிருஷ்ணனும் இவ்வளவு சீக்கிரமாக இறந்து விடுவார் என்று யாருமே நினைத்திருக்க முடியாது. இன்று (17.11.2020) இறந்து போன க்ரியா ராமகிருஷ்ணன் நினைவாக இந்த ஒளிப்பதிவு.
காலையில் நா. கிருஷ்ணமூர்த்தி போன் செய்தார். ஒரு துக்கமான செய்தி. க்ரியா ராமகிருஷ்ணன் இன்று காலை ஐந்து மணிக்கு மரணம் அடைந்து விட்டார் என்று அவர் கூறினார். வருத்தமாக இருந்தது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் எனக்கு கரியா பற்றிப் பல ஞாபகங்கள் வந்தன. ஆரம்பத்தில் கணையாழி, தீபம் படிக்க ஆரம்பித்த என் இலக்கிய ஆர்வம், ராயப்பேட்டையில் இருக்கும் க்ரியாவில் போய் நின்றது. அங்குப் போய் க்ரியா புத்தகங்கள் மட்டுமல்லாமல் வேற புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வருவேன். சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ தொடங்கி பல்வேறு புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். மாதம் ஒரு முறையாவது அங்குப் போய் நிற்பேன்.
அங்குதான் சி சு செல்லப்பாவின் கதைகள் தொகுதி வாங்கியிருந்தேன். சி சு செல்லப்பாவை வெளியிட்ட கதைத் தொகுதிகள். அந்தத் தருணத்தில் க்ரியா புத்தகம் அற்புதமாக வித்தியாசமாக தயாரிக்கப்பட்டிருக்கும். ஆனால் விலை கூடுதலாக இருக்கும். முதன் முதலாக க்ரியாவின் தமிழ் அகராதி, டாக்டர் இல்லாத இடத்தில், ந.முத்துசாமி புத்தகங்கள், சி மணியின் வரும்போகும் கவிதைப் புத்தகம் எல்லாம் வாங்கிக் குவித்திருக்கிறேன். சுந்தர ராமசாமியின் ‘ ஜே ஜே சில குறிப்புகள்’, ஆல்பர் கம்யூவின் ‘அந்நியன்’. இன்னும் எத்தனையோ புத்தகங்கள். கடையில் ராமகிருஷ்ணனைப் பார்ப்பேன். ஆனால் கிட்டப் போய் பேசியதில்லை. ஒரு முறை அவர் வீட்டில், ‘ஜே.ஜே சில குறிப்புகள் புரியவில்லை. என்ன நாவல் இது என்று கேட்டிருக்கிறேன்.’ ‘ நீங்கள் அதைப் படிக்க இன்னும் பக்குவமடையவில்லை,’ என்றார். சமீபத்தில் சா.கந்தசாமியின் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். மிகச் சிறப்பாக இருந்தது. அக் கூட்டத்திற்கு அவரைப் பேச அழைத்தது நா. கிருஷ்ணமூர்த்தி. அவர் ஜாக்கிரதையாக இருப்பவர். எழுத்தாளர் சச்சிதானந்தம் இறந்த செய்தியைக் கூட அவரிடம் தெரிவித்தேன். அதைக் கேட்டு வருத்தப்பட்டார். அவரும் கொராணாவால் இறந்து போவார் என்று கற்பனை கூடச் செய்யவில்லை. அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.
ஒரு கதை ஒரு கருத்து’ என்ற தலைப்பில் நான் தொடர்ந்து என் கண்ணில் படும் சிறுகதைகளைப் பற்றிக் கட்டுரை எழுதுகிறேன். அந்தக் கதையைப் படித்து முடித்தபின் அதிகப்படியாக ஒரு வார்த்தை அந்தக் கதையைக் குறித்துச் சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்.இந்த வாரம் எழில் வரதனின் ‘ஹைப்ரீட் குழந்தை’ என்ற கதையை எடுத்து எழுதியிருக்கிறேன்.
‘செம்புலி வேட்டை’ என்ற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எழில்வரதன் எழுதிய ‘ஹைப்ரீட் குழந்தை’ என்ற கதையைப் படித்தேன். இது ஒரு சிக்கலான கதை. அதை அனாயசமாக எழுதிச் செல்கிறார் எழில்வரதன்.இயல்பாகவே இவர் கதைகளில் நகைச்சுவை உணர்வு அடிக்கடி தட்டுப் படுகிறது. சுலபமாக ஒரு கதையை எடுத்துக்கொண்டு போகும் பாங்கும் இவர் கதையில் தட்டுப் படுகிறது.
10 கதைகள் அடங்கிய இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் அளவுக்கு மீறிய பக்கங்கள். கிட்டத்தட்டக் குறுநாவல்கள் என்று சொல்லத்தக்கக் கதைகளாக எழுதி உள்ளார்.இவர் கதை சொல்லல் முறையில் முக்கிய அம்சம் நகைச்சுவை உணர்வு. இது தானாகவே கதையின் போக்கில் வருகிறது. வலிந்து திணிக்கும் நகைச்சுவை உணர்வல்ல
.’ஹைப்ரீட் குழந்தை’ என்ற கதையில் குழந்தையைப் பற்றிச் சொல்லல் முறை சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.ஜோஸ்னா என்ற குழந்தை சற்று ஹைப்ரீட்டாக நடந்து கொள்கிறாள். அவள் அம்மா மாலினிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து அழைப்பு வருகிறது.
அதற்கு முன் மாலினியைப் பற்றி கதா ஆசிரியர் இப்படி விவரிக்கிறார்.”அம்மா பெயர் மாலினி. வயது சொன்னால் கோபித்துக் கொள்வாள். எம்சிஏ படிப்பு. இந்தியாவில் தொப்பை வளர்க்கிற அமெரிக்க நிறுவனம் ஒன்றில் அதிகாரம் மிக்க பதவி. நுனிநாக்கு ஆங்கிலம். ஜெர்மன் தெரியும். போன மாதம் கத்தார் டெலிகேட் ஒருத்தன் ‘ஐ லவ் யூ’ சொல்லி உதை பட்டிருக்கிறான்…அந்தளவுக்கு அழகு மற்றும் துணிச்சல். அதைவிடத் திறமையும் அதிகம்….
மாலினிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து குறிப்பாணை வருகிறது. அவளுடைய குழந்தையைப் பற்றிப் பேச வேண்டும். வரச் சொல்கிறார்கள். அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் மாலினி பள்ளிக்கூடத்திலிருந்து அழைப்பு வருகிறது என்றவுடன் சற்று பதட்டத்துடன் காணப்படுகிறாள்.
பெண் விஷயத்தில் கவலைப் படுகிறாள்.மாலினி பள்ளிக்கூடம் போனவுடன், மிஸஸ் மோத்வானி அவள் தான் பிரின்ஸிபல். ஜோஸ்னாவைப்பற்றி அவளிடம் புகார் கூறுகிறாள்.‘ஜோ அடிக்கடி சுண்டு விரலைக் காட்டுகிறாள்,’ என்கிறாள் மோத்வானி.மாலினிக்கு இதற்காகவா தன்னை கூப்பிட்டிருக்கிறார்கள் என்று தோன்றியது.
“‘சுண்டுவிரலா துப்பாக்கியா எதைக் காட்டினாள்,’ என்று கேலியாகக் கேட்கிறாள் மாலினி
.பிரின்ஸ்பால் கடுப்பாகிறாள். ‘சுண்டுவிரல் காட்டினால் ஒன் பாத்ரூம் போக விரும்புகிறாள் என்று அர்த்தம். அடிக்கடி ரெஸ்ட் ரூம் போக விரும்புகிறாள்,’ என்கிறாள் மோத்வானி.
மாலினிக்கு உடனே ஞாபகம் வருகிறது. போனவாரம்தான் உலக சர்க்கரை நோயாளிகள் குறித்த கட்டுரையை படித்திருந்தாள். தன் பெண்ணிற்கு அதுமாதிரி எதாவது நோய் இருக்குமோ என்று சந்தேகப் படுகிறாள்.
‘அதுமாதிரி எதுவுமில்லை வெறுமனே போய்விட்டு வருகிறாள். வருவதுபோல் இருந்தது. ஆனால் வரவில்லை, என்கிறாள்,
‘“அவளுக்குப் படுக்கையில் ஈரம் செய்கிற வழக்கம் இருக்கிறதா?”
“ஜோஸ்னா ஒன்றிரண்டு முறை அப்படிச் செய்திருக்கிறாள். காரணம் ஏன் என்று புரியவில்லை.”
பிரின்ஸி இப்போது விளக்குகிறாள். ஏன் ஜோஸ்னா அப்படிச் செய்கிறாள் என்பதை விளக்குகிறாள்.
“அச்சம், பாதுகாப்பின்மை, பய உணர்வு போன்றவை குறைபாட்டுக்குக் காரணமாய் இருக்கலாம்.. நீங்களும் உங்கள் கணவரும் குழந்தைக்கு முன்னால் சண்டையிட்டுக் கொள்கிறீரா? ஏன் கேட்டால் அப்பா பெயரை எடுத்தால் குழந்தை டென்சன் ஆகிவிடுகிறாள்.”
“அது மாதிரி நீங்கள் நினைக்கிறதே அபத்தம். நானும் இவளோடு அப்பாவும் டைவர்ஸ் பண்ணி பன்னிரண்டு வருஷம் ஆச்சு.”
எளிமையானவன் நேர்மையானவன் என்று நம்பி, காதலித்து கல்யாணம் செய்து, ஏமாற்றம் அடைந்து விடுதலை கேட்டு நீதிமன்றத்தை அணுகி விவாகரத்தும் கிடைத்து விட்டது மாலினிக்கு. .
இப்போது மாலினி மகளோடு இருக்கிறாள். தனியாக.. மாலினிக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி. தன் மகள் படிப்பில் மோசமாக மார்க் வாங்கியிருக்கிறாள் என்ற செய்தியை கேட்டவுடன். அவள் கணக்கில் வாங்கிய மார்க்கைக் கேட்டு இன்னும் அதிர்ச்சி ஆகிவிட்டாள்.
வெறும் 3 மார்க்குதான் வாங்கியிருக்கிறாள். மாலினியால் இதை நம்பமுடியவில்லை.நிஜத்தில் ஜோஸ்னா துருதுருப்பும், சாமர்த்தியமும் கொண்டவள். படிப்பில் புகார் வராத அளவுக்குப் பார்த்துக்கொள்வாள். சன்னமாக பாடுவாள்;. டிவி பார்த்தபடி ஆடுவாள். ஓவியம் தீட்டுவாள். அபாரமான ஞாபகசக்தி. ஆனால் கணக்கில் மூன்று. ஜோஸ்னாவிடம் ஏதோ தப்பியிருக்கிறது. அவளுக்கு என்னவோ ஆகிவிட்டது.. மாலினி பதறுகிறாள்.அம்மாவுக்கும் பெண்ணிற்கும் இது விஷயமாகப் பேச்சு நடக்கிறது.
ஜோஸ்னா கணக்கில் மூன்று மார்க் வாங்குவதற்குக் காரணம் தெரிகிறது. ஜோஸ்னாவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஜீ.பிரீத்தாதான். அவள் கணக்கில் மக்கு. மூன்று எடுத்தால் உலக சாதனை . அவளைவிட ஜோஸ்னா அதிகமாக எடுத்தால், பீரித்தி அழுவாளாம். அவள் அப்பா ராஜகுருவின் உபதேசம். மத்துவங்களை விட அதிகமா மார்க் எடுத்து அவங்களை நோகடிச்சா அது அல்ப புத்தி. சாட்டிஷம். அதனால் பிரித்தாவைவிட அதிக மார்க் வாங்கக்கூடாது என்று ஜோஸ்னாவும் எழுதலை.
இதைக் கேட்டவுடன் கோபத்தில் ஒரு அறை அறைந்து வெளியே துரத்துகிறாள் ஜோஸ்னாவை.மகளின் எதிர்காலத்தை நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ராஜகுரு.
போட்டியற்ற உலகமாம். பொறாமையற்ற சமூகமாம். அவன் ஒரு பைத்தியக்காரன்
ஜோஸ்னா ஒரு அப்பாவி குழந்தை. அவளுக்கு அப்பா கொடுக்கும் சுதந்திரமும் பிடித்திருக்கிறது. அம்மா ஓட்டும் காரும் பிடித்திருக்கிறது. . ஒரு குழந்தைக்கு இரண்டு மேய்ப்பார்கள்.
ஜோஸ்னாவிற்கான நிஜமான கோளாறே இங்கிருந்துதான் தொடங்குகிறது. அதனால் ஜோஸ்னா வேற மாதிரி ஆகிவிட்டாள்.
இரண்டு மேதாவிகள் கூட்டு ஒப்பந்தம் போட்டு ஒரு பிள்ளையைத் தாறுமாறாக வளர்த்திருக்கிறார்கள். அதன் நேரடி விளைவு என்ன?ஜோஸ்னா எப்படி மாறி விடுகிறாள் என்பதை மூன்று சம்பவங்கள் மூலம் கதாசிரியர் விவரிக்கிறார்.
முதல் சம்பவம்.
ஜோஸ்னா மும்முரமாக பரிட்சைக்குப் படிக்கிறாள். ராத்திரியெல்லாம் கண் விழித்துப் படிக்கிறாள். அவள் முன்னால் ஒரு தலையணை இருக்கிறது. அதன் மீது அமர்ந்து அதை ஒரு குழந்தையாகப் பாவித்து அதன் கழுத்தைப் பிடித்துத் திருகி வெறியோடு கத்துகிறாள்.“பிசாசே கொன்னுடுவேன் கொன்னு.. நீ வேற ஸ்கூலுக்குப் போயேன்டி”..
இரண்டாவது சம்பவம்.
ஜோஸ்னா பள்ளி விட்டுத் திரும்புகிறாள். பிச்சைக்கார சிறுமியைப் பார்க்கிறாள். அவளிடமிருந்த நொறுக்குத்தீனி, பாடப்புத்தகம், வாட்டர் பாட்டில், என்றெல்லாம் கொடுத்து விடுகிறாள். மேலும் அவள் அழுக்குத் துணி கட்டியிருக்கிறாள். அது கிழிந்திருக்கிறது. இரக்கப்பட்டுப் போட்டிருந்த உடை எல்லாவற்றையும் கழட்டிக் கொடுத்துவிட்டு அவள் ஜட்டியோடு வீடு திரும்புகிறாள்.இல்லாதவங்களுக்கு உதவி பண்ணு. அன்பு காட்டு என்ற அப்பாவின் தாக்கத்தால் அவள் அதுமாதிரி நடந்து கொள்கிறாள்.
மூன்றாம் சம்பவம்.
மாலினியும் ஜோவும் காரில் போகிறார்கள். ஒரு பைக் அவர்களை முந்துகிறது. ஜோவுக்கு வெறி ஏறுகிறது. அந்த பைக் காரை முந்துகிறது. . அவள் அம்மாவை அந்த பைக் முந்தச் சொல்லி கத்துகிறாள். இறுதியில் கார் ஒரு காம்பவுண்ட் சுவரில் மோதி ஹெட்லைட் உடைகிறது.இதற்குக் காரணம். அம்மாவின் கொள்கை. அடிப்படையில் வெற்றிதான் முக்கியம். முந்திச் செல். போராடு என்பதுதான்.
ஜோவை ஒரு லேடி டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போகிறாள் அவள் அம்மா.இந்த இடத்தில் கதையில் கதாசிரியர் மேலே குறிப்பிட்ட மூன்று சம்பவங்கள் மூலம் நாம் என்ன தெரிந்து கொண்டோம் என்று கேட்கிறார்.இந்தக் கதையை வாசகருடன் பேசுகிற பேச்சாக மாற்றுகிறார்.
லேடி டாக்டர் அவளுக்கு ஒன்றுமில்லை சாதராணமாகத்தான் இருக்கிறாள் என்று சில வைட்டமின் மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பி விடுகிறாள்.மாலினி அப்படி நினைக்கவில்லை. இப்படியே விட்டால், ஜோஸ்னா எப்படியோ மாறி விடுவாள். இந்தத் தருணத்தில் வேறு வழியில்லாமல் ராஜகுருவைக் கூப்பிடுகிறாள்.
இரண்டு பேர்களும் சந்திக்கும்போது ஒருவரை ஒருவர் குற்றம் சாடடுகிறாரகள். அவர்கள் இருவரும் மாறப்போவதில்லை.
ஜோ எப்போதும் போல் இருக்கிறாள். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து மாலினிக்கு அழைப்பு. பள்ளிக்கூடத்தில் கரோலின் அவளுக்காகக் காத்திருக்கிறாள். மாலினி வந்தவுடன் அவள் ஜோ இருந்த அறைக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு ஜோ பொம்மைகளுடன் பேசுகிறாள். அந்தப் பொம்மைகளைத் திட்டுகிறாள். உடைக்கிறாள். தூக்கிப் போடுகிறாள்.மாலினி கரோலினைப் பார்த்து, ஜோவுக்கு என்ன ஆச்சுங்க என்று கேட்கிறாள்.
கரோலின் சொல்கிறாள் : ஜோ மொத்தமா மாறிட்டாள். அவள் இனிமேல் குழந்தை இல்லை. அவள்கிட்டே கடவுள் சாத்தான் இரண்டுமே இல்லை. எதிர்காலத்தில் என்ன பண்ணுவாள் என்று தெரியவில்லை.
கடைசியில் கதையை முடிக்கும்போது ஜோ புது அவதாரம் எடுத்திருக்கிறாள். ஹைப்ரீட் குழந்தையாக. இந்த இடத்தில் கதையை முடிக்கும் ஆசிரியர் ஜோஸ்னா எதிர்காலத்தில் என்னதாங்க ஆவா? அது நீங்கதான் சொல்லணும் என்று நம்மிடம் கதையை முடித்துவிடுகிறார்.
நீண்ட கதையாக எழுதியிருக்கும் கதாசிரியர் ஹைப்ரீட் குழந்தை என்று குழந்தையின் வன்முறையை வெளிப்படுத்துகிறார். இந்தக் குழந்தையின் வளர்ப்பு முறை சரியில்லை என்று சொல்கிறார். அம்மாவும் அப்பாவும் பிடித்து தங்கள் பக்கம் இழுக்கக் குழந்தை தறிகெட்டுப் போகிறது. குழந்தையிடம் அப்பாவும் அம்மாவும் எல்லாவற்றையும் திணிக்கக் கூடாது என்று ஒரு கருத்தைச் சொல்கிறாரா கதையாசிரியர்? எல்லா இடங்களிலும் இயல்பான நகைச்சுவையுடன் இந்தக் கதை முடிகிறது
.(இந்தக் கட்டுரை தமிழின் முதல் இணைய இதழ் வாரப்பத்திரிகை திண்ணையில் 15.11.2020ல் வெளிவந்துள்ளது)