போன வாரம் மொழிபெயர்ப்புக் கவி அரங்கம் ஒன்றை நடத்தினேன். வாராவாரம் நான் கவி அரங்கம் நடத்துவது வழக்கம். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று மொழிபெயர்ப்புக் கவிதை அரங்கத்தை நடத்தினேன். நானும் படிப்பதற்காக மொழிபெயர்ப்புக் கவிதைகளை எடுத்து வைத்துக்கொண்டேன். அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது. இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் எல்லாம் நமக்கு எப்போது தெரிய வந்தது. எல்லாம் சிறுபத்திரிகைகள் மூலம்தான் தெரிய வந்தது என்று எனக்குத் தோன்றியது. முதலில் ‘எழுத்து’ என்ற பத்திரிகையை எடுத்து வைத்துக்கொள்வோம். மொழிபெயர்ப்புக் கவிதைகளை சி சு செல்லப்பா அவர் எழுத்து பத்திரிகையில் அறிமுகப் படுத்தியிருக்கிறார். அவர் மூலம்தான் இது தொடங்கியிருக்க வேண்டுமென்று தோன்றியது. புதுக்கவிதை என்ற இலக்கிய வடிவம் எழுத்து பத்திரிகையில் ஆரம்பித்தபோது (மணிக்கொடியில் ஆரம்பித்த அந்த முயற்சி தோல்வி அடைந்து விட்டது) சுஜாதா மூலம் வணிகப் பத்திரிகைகளில் பரவத் தொடங்கின. ஆனால் ஏனோ மொழிபெயர்ப்புக் கவிதைகள் வணிகப் பத்திரிகைகளைச் சீண்டவில்லை. ‘மாற்று இதயம்’ என்ற பெயரில் சி.சு செல்லப்பா ஒரு கவிதைத் தொகுதியை மே 1974ல் கொண்டு வந்தார். அதில் ‘வெளிக்குரல்கள்’ என்ற பெயரில் மொழிபெயர்ப்புக் கவிதைகளை அவர் வெளியிட்டுள்ளார். மொழிபெயர்ப்பு கவிதைகளை வெளியிடுவதற்குக் காரணத்தை சி.சு. செல்லப்பா கூறும் காரணத்தை நாம் தெரிந்து கொள்வது அவசியம். ‘தமிழ் புதுக்கவிதை முயற்சிக்கு வெளிநாட்டு இலக்கியப் பாதிப்பு உண்டு. பாரதிக்கும் பிச்சமூர்த்திக்கும் சி மணிக்கும் பிரிட்டீஷ், அமெரிக்க, பிரஞ்சு கவிகளின் செல்வாக்கு இருப்பதைப் பார்க்கலாம். அந்த மொழி கவிதைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். உருவ, உள்ளடக்க, உத்தி அம்சங்களில் அவை எவ்வளவு சாதனை காட்டி இருக்கின்றன என்பதை அறிந்துகொண்டால் தமிழ் புதுக்கவிதை படைப்பாளர்கள் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் காரியம் செய்யாமல், புதுக்கவிதை அடுத்தடுத்து உயர்ந்த கட்டங்களுக்குப் போக வழிவகை கையாள சாத்தியமாகும். சி சு செல்லப்பாவைப் புதுக்கவிதை எழுதுவதற்கும் நிறையா கவிதைகளை மொழிபெயர்த்து கைபழகிக் கொண்டதாகக் கூறுகிறார்.அவர் மொழிபெயர்ப்பு கவிதைகளில் ஒன்றிரண்டு பார்க்கலாம். வில்லியம் காரலஸ் வில்லியம் கவிதையான ‘சக்தி’ என்ற கவிதையைப் பார்ப்போம்.
ஆள் நீள
பருமன் மடிப்பு
பழுப்புத்தாள் ஒன்று
தெருவில்
காற்றில்
சுருண்டு சுருண்டு
மெதுவாக
உருள
கார் ஒன்று
அதன் மீதேறி
தரையோடு அரைத்தும்
மனிதன் போல்
இல்லாமல்
எழுந்து
மீண்டும்
காற்றில்
சுருண்டு சுருண்டு
முன்போல்உருண்டது (இன்னும் வரும்)
(08.12.2020 தேதியிட்ட திண்ணை இணைய வார பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)
அழகியசிங்கர்
02.12.2020 அன்று வெள்ளிக்கிழமை நடந்த 28ஆம் சூம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு கவிதை வாசித்தவர்களின் ஒளிப்பதிவை இங்கு அளிக்கிறேன்.
இந்த கவிதை ஒளிப்பதிவில் காணப்படும் குறைகளை யாராவது சுட்டிக் காட்டினால் அடுத்த முறை வராமல் பார்த்துக்கொள்ளப்படும்.
04.12.2020 (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 28வது கவிதை வாசிப்புக் கூட்டத்திற்கு எல்லோரையும் அழைக்கிறேன்.
கவிதைகள் வாசித்துச் சிறப்புச் செய்யும்படி. எது மாதிரியான வகைகளிலும் கவிதைகள் வாசிக்கலாம். 2 முதல் 3 நிமிடங்களுக்குள் கவிதை வாசிக்கலாம். இக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளர் யாருமில்லை.
மாலை 6.30 லிருந்து 7.45 வரை கவிதை வாசிப்பு தொடரும். முனைவர் வ.வே.சு கவிதை அரங்கின் முடிவில் தன் கருத்துக்களை வெளிப்படுத்துவார். ஒவ்வொரு வாரமும் கடவுள் வாழ்த்து குறிப்பிடுவதுபோல் விருட்சம் இதழில் வெளிவந்த கவிதை வாசிக்கப்படும்.
ஒரே ஒரு கவிதை வாசித்தபிறகு கவி அரங்கம் தொடங்கும். கலந்து கொள்பவர்கள் எல்லோரும் அவர்களுடைய பெயர்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.
வழக்கம்போல் நம் விதிகளை மீறக் கூடாது. தற்போதைய அரசியல், ஆத்திகம்-நாத்திகம், ஆபாசம், கொரானா, ஒருவரை ஒருவர் பழித்துச் சொல்லுதல் கூடவே கூடாது.
கவிதை மீது ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது. யார் வேண்டுமானாலும் எந்தக் கவிதையும் வாசிக்கலாம். உங்கள் கவிதை மட்டுமல்ல. மொழிபெயர்ப்பு கவிதைகளும் வாசிக்கலாம். கூட்டத்தில்
கலந்து கொள்பவர்கள் கூட்டம் முடியும் வரை இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
என் பிறந்தநாள் போதுதான் யோகி ராம்சுரத்குமார் பிறந்த நாளும். அல்லது அவர் பிறந்தநாள் போது என் பிறந்தநாளும் வருகிறது.
ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் போது அவரையும் நினைத்துக் கொள்கிறேன். என் வாழ்நாளில் ஒரு முறை அவரைச் சந்தித்ததைப் பேசியதைப் பெருமிதமாகக் கருதுகிறேன். 2015 ஆம் ஆண்டு என் பிறந்த தினம் போதுதான் வெள்ளம் புயல் அடித்து புத்தகங்களை எல்லாம் நாசமாகிவிட்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாய் என் கார் தப்பி விட்டது. புயல் வருவதற்கு இரண்டு நாட்கள் முன் அஜித் படம் பார்க்க காரில் போயிருந்தேன். பார்கிங் பண்ணும்போது என் கார் இன்னொரு கார் மீது மோதி என் காருக்கும் சேதம் அன்று என் காரை நான் பார்க் பண்ணவிலலை. தியேட்டரில் உள்ள ஒருவரைத்தான் பார்க் பண்ணக் கொடுத்திருந்தேன். நல்லகாலம் அவர் காரை இடித்ததால் அண்ணாசாலையில் உள்ள மெக்கானிக் கடைக்குப் போகும்படி ஆயிற்று. வீட்டில் வைத்திருந்தால் கார் வெள்ளத்தில் மூழ்கி இன்னும் மோசமாக உருமாறி இருக்கும். ஏன் காரே போயிருக்கும். எல்லாம் நம்மை அறியாமலேயே யாருடைய சித்தம் இருக்கிறது. அந்த ஆண்டு அப்போதுதான் புதிதாக அடித்து அடுக்கி வைத்திருந்த கவிதைத் தொகுதி போய்விட்டது. கூழ் கூழாகி விட்டது. வேற சில புத்தகங்களும் போய்விட்டன. ஒவ்வொரு முறையும் பெரிய முயற்சி செய்து புத்தகங்கள் கொண்டு வருகிறேன். பதிப்பாளரும் நானே. எழுத்தாளரும் நானே. எதுவும் செய்ய முடியாவிட்டால் பேசாமல் புத்தகங்களைப் படித்துக்கொண்டு இருப்பேன். இந்தக் கொரானா காலத்தில் நண்பர்களை உறவினர்களை இழந்து விட்டேன். இதெல்லாம் மீறி இந்த ஆண்டு இரண்டு நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஜீரோ டிகிரி பதிப்பாளர் என் கதைகளின் 9 எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் புத்தகம் கொண்டு வந்துள்ளார்கள். அப் புத்தகத்தின் தயாரிப்பு ஆங்கிலப் புத்தகம் பார்ப்பதுபோல் இருக்கிறது. அஸ்வினி குமார் என் கதைகளையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் பார்க்கும்போது என் புத்தகம்தானா என்ற பிரமிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. Dad’s Favourite Newspapaer என்பதுதான் புத்தகத்தின் பெயர். இரண்டாவது புத்தகம் துளிகள் 2 என்ற புத்தகம். ஏற்கனவே துளிகள் 1 என்ற பெயரில் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளேன். நான் எப்போதும் 100 பக்கங்களுக்குள் என் புத்தகத்தைக் கொண்டு வருவதை விரும்புவேன். துளிகள் 1 என்ற புத்தகத்தைப் போல் துளிகள் 2. இந்தப் புத்தகங்களை ஒருவர் வாங்கிப் படிக்க ஆரம்பித்தால் கீழேயே வைக்க மாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்..
டாக்டர் சம்பத் என்ற புதுமைப்பித்தன் கதை ஒரு துப்பறியும் கதை. இதை அவர் எழுதியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. படிக்கும் போது நமக்கும் இப்படியெல்லாம் ஒரு கதை எழுதிப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.
ரெங்கசாமி என்பவர் உல்லாசனி சபையின் தமிழ் கண்டக்கடர் (போதகர்). அவர் வருஷாந்திர கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம் ராவ்சாகேப் சம்பந்த முதலியார் எழுதிய லீலாவதி – சுலோசனா நாடகம்.
ரெங்கசாமி கூற்றாக இந்தக் கதை சொல்லப்படுகிறது.
இந்த நாடகம் அரங்கேறிய அன்று சபேசய்யர் சுலோசனையாகவும், குற்றாலம் பிள்ளை லீலாவதியாகவும் வேஷம் தரித்திருந்தார்கள். நாடகம் மெதுவாக நகர்ந்தது. லீலாவதி தன் தங்கைக்குபாலில் விஷம் கொடுக்கும் கட்டம். சகோதரி கொடுத்த பாலை குடித்துவிட்டு, மரணத்தின் இன்பத்தைப் பற்றிப் பாடிக்கொண்டே, பக்கத்தில் அலங்கரித்திருந்த மஞ்சத்தில் போய் ஒய்யாரமாகப் படுத்தாள்.
அந்தக் காட்சியின் அகப் பதைப்பை எடுத்துக் காட்டுவதுபோல நாடக மேடையை இருள் நிறைந்ததாகச் செய்திருந்தார்கள். சுலோசனை படுக்கையில் சாய்ந்தவுடன் அந்தப் படுக்கையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்சார விளக்குகள் மின்னல் தோன்றி மறைவதுபோல இரண்டு வினாடிகள் எரிந்து அவிந்தன. திரையும் விடப்பட்டது.
முதல் வரிசையில் டாக்டர் சம்பத் பக்கத்தில் ரெங்கசாமியும் அமர்ந்திருக்கிறார். திரை திரும்பவும் தூக்குவதற்குத் தாமதம் ஆகிறது. அவ்வளவு தாமதத்திற்கு என்ன காரணம் என்று பார்த்து வர ரெங்கசாமி எழுந்து கொள்கிறார்.
அப்போது ஸ்டேஜ் மானேஜர் திரு ராமானுஜம் திரையிலிருந்து வெளிப்பட்டு அரங்கத்திலிருந்து இறங்கி இவர்கள் பக்கம் வருகிறார். அவர் முகம் வெளுத்து வியர்த்திருந்தது. டாக்டர் சம்பத்திடன் வந்து ரகசியமாக ஏதோ சொல்கிறார்.
அவசரம் அவசரமாக டாக்டர் சம்பத்தும் ரெங்கசாமியும் நாடகம் நடந்த இடத்திற்குச் சென்றார்கள். அன்று நாடகத்திற்காக விசேஷமாக வந்திருந்த டிப்டி கமிஷனரும் கூடவே வந்தார்.
அங்கே ஒரு புறத்தில் எவெக்டிரிக் வெளிச்சத்தில் கோரமான தேற்றத்துடன் முகத்தை வலித்துக்கொண்டு, சுலோசனா வேஷத்தில் சபேசய்யர் இறந்து கிடந்தார்.
டாக்டர் இங்கே பாருங்களேன். மாரடைப்பால் இறந்து விட்டார் சபேசய்யர் என்று சத்தம் போட்டார் ராமானுஜம்.
டாக்டர் அவரைச் சோதித்துவிட்டு, மாரடைப்புமில்லை ஒன்றுமில்லை ஏதோ விஷத்தினால் இறந்து விட்டார், என்றார்.
டிப்டி கமிஷனர் நாடகம் பார்க்க வந்திருந்த கும்பலை நாடகம் இனிமேலில்லை அமைதியாக போகும்படியும், சுலோசனா வேஷம்போட்ட சபேசய்யருக்கு உடல் நலம் சரி இல்லை என்றும் கூறி துரத்தி விட்டார்.
இப்போது இது கொலையாக இருக்கலாமென்று அந்தக் கொலை எப்படி நடந்திருக்குமென்றும் ஆராய்ச்சியில் இந்தக் கதை போய்க் கொண்டிருக்கிறது.
அதுவரை அந்தக் கோரச் சம்பவத்தினால் திடுக்கிட்டு மூலைக்கொருவராக ஒடுங்கி நின்றுகொண்டிருந்த நடிகர்கள் யாவரும் அங்கு வந்து சூழ்ந்துகொண்டனர். டாக்டர் சம்பத், அவருக்குப் பால் கொடுக்கப்பட்ட டம்ளர் எங்கே என்று கேட்கிறார்.
பதட்டத்துடன் இருந்த குற்றாலம் பிள்ளை, “அதை இப்போதுதான் அலம்பி கொட்டிவிடடுத் தண்ணீர் குடித்தேன்,” என்கிறார்.
“எங்கே கொட்டினீர்கள்?” என்று டாக்டர் கேட்க, ஒரு மூலையைக்
காட்டினார் குற்றாலம் பிள்ளை. டாக்டர் அந்த இடத்திற்குப் போய் அந்த இடத்தை ஆராய்கிறார்.
“அந்தக் கூஜாப் பாலில் சர்க்கரை போட்டிருக்கிறதா?” என்று ராமானுஜத்திடம் கேட்கிறார் டாக்டர்.
“ஆமாம். போட்டிருந்தது,” என்று பதில் வருகிறது.
நடேசன் என்பவன் காலானாவிற்கு கடையிலிருந்து சர்க்கரை வாங்கிக் கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டான்.
“சர்க்கரை மடித்து வந்த காகிதம் இங்கே எங்காவது இருக்குமா?” என்று கேட்கிறார் டாக்டர்.
நடிகர்களிடையே ஒருவர், “இதோ இருக்கிறது,” என்று சர்க்கரை வாங்கிவந்த காகிதத் துண்டை கொடுத்தார்.
“என் வேலை முடிந்து விட்டது. நாளை ஆஸ்பத்திரியில் பிரேதப் பரிசோதனையின்போது பார்த்துக்கொள்கிறேன்,” என்கிறார் டாக்டர். சபேசய்யர்
“விஷத்தினால் இறந்திருக்கிறார் செம்பிலுள்ள பாலில் விஷம் இல்லை. அவர் குடித்த பாலில்தான் இருக்திருக்க வேண்டும்.,” என்கிறார் .
இது விஷயமாக இருவர் கைதி செய்யப்படுகிறார்கள். ஒருவர் குற்றாலம் பிள்ளை, இரண்டாவது வேலையாள் நடேசன். உண்மையிலே குற்றாலத்திற்கும் சபேசய்யருக்கும் தொழில் முறையில் போட்டியுண்டு. இருவரும் போலீசு கோர்ட்டில் பிரபல வக்கீல்கள் போன வருடம் குற்றாலப்பிள்ளைக்குக் கிடைக்க வேண்டிய பப்ளிக் பிராசிகூட்டர் வேலை சபேசய்யர்ரால் கிடைக்காமல் போய்விட்டது.
மறுநாள் ரெங்கசாமி ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போய் டாக்டர் சம்பத்தையும், ஜெனரல் டாக்டர் ஒருவரையும் பார்க்கிறார்.
ரங்கசாமியைப் பார்த்து டாக்டர் சம்பத் சொல்கிறார், அவர்களுக்கே தெரியவில்லையாம் அவர் எப்படி இறந்தாரென்று. அவருடைய முகத்து நரம்புகளும், கழுத்து நரம்புகளும் ஏதோ கொடிய வலிப்பு நோயால் இறந்திருப்பதாகக் காட்டுகின்றன என்றார் டாக்டர் சம்பத்.
அங்கிருந்து டாக்டரும், ரெங்கசாமியும் நாடகக் கொட்டைக்குப் போனார்கள்.
அவர்கள் கொட்டகை வாசலையடையும் சமயம், அருகில் வலது கைப்புறத்திலிருந்த டிக்கட் அறையில் யாரோ ஒருவர் எரிந்து கொண்டிருந்த எலெக்ட்ரிக் விளக்கை அவசரமாக அணைத்தார். அதைக் கண்ட டாக்டர் சட்டென்று அப்படியே நின்றுவிட்டார்.
மூன்றாவது நாள் காலையில் டாக்டர் ரெங்கசாமியை எம்.யு.ஸிக்கு (மதராஸ் யுனைடெட் கிளப்) வந்து பார்க்கச் சொல்கிறார்.
ரங்கசாமி அங்கு வந்தபோது, டாக்டர் ஒரு பிரம்பு நாற்காலியில் சாய்ந்துகொண்டு கையில் சுருட்டுடன் சிந்தனையில் மூழ்கியிருந்தார்.
ரெங்கசாமியைப் பார்த்தவுடன், ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு பக்கத்தில் அமரச் சொல்கிறார்.
ரெங்கசாமி உடனே பதட்டத்துடன், “கொலையா தற்கொலையா?” என்று கேட்கிறார்.
டாக்டர் நிதானமாக சபேசய்யர் விஷத்தால் இறக்கவில்லை மின்சாரத் தாக்குதலால் இறந்துவிட்டார் என்கிறார்.
குற்றாலம் பிள்ளை, வேலைக்காரன் நடேசன் ஸ்டேஜ மானேஜர் ராமாநுஜம் இவர்கள் யார்மீதும் சந்தேகம் இல்லை என்கிறார் டாக்டர்.
பின் யாரய்யா என்று பொறுமை இழந்து கேட்கிறார் ரங்கசாமி.
“நீர்தான் என்கிறார் டாக்டர் நிதானமாக. அதைக் கேட்டவுடன் ரெங்கசாமி திகைத்து விட்டார்.
இந்த இடத்தில் புதுமைப்பித்தன் இப்படி வர்ணிக்கிறார்.டாக்டர் சம்பத் என்னையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். என் உடல் நிலைகொள்ளாமல் தத்தளித்தது. முகத்தில் வியர்வை அரும்பியதை என் உணர்ச்சிகளுக்கு மேல் உணர்ந்தேன்.
திரும்பவும் டாக்டர் எல்லா சம்பவங்களையும் நிதானமாக வர்ணிக்கிறார்.
நாடகத்தில் சுலோசனா பாலருந்தும் காட்சி ஏறக்குறைய இருளிலேயே நடந்தது. ஆனால் அவள் மஞ்சத்தில் படுத்தவுடன் அந்த மஞ்சத்தைச் சுற்றியமைக்கப்பட்டிருந்த விளக்குகள் பளிச்சென்று எரிந்து அணைந்தன. அதில் ஒரு இடத்தில் மின்சாரக் கம்பி மேல் ரப்பர் உறை பிரிந்து இருந்தது. அதுவும் மஞ்சத்தில் படுத்தவர் கழுத்துக்குச் சரியாக. அதை நான் பார்த்தபோது நீர் என்ன சொன்னீர் என்று கேட்கிறார் டாக்டர். முட்டாள் பயல்கள். அன்றைக்கே இதைச் சரிப்படுத்தச் சொன்னேன் இன்னும் அப்படியே இருக்கிறது என்று சொல்லவில்லையா என்று ரங்கசாமி சொன்னதை ஞாபகப்படுத்துகிறார் டாக்டர்.
ரங்கசாமி கொலை செய்வதற்கு எதாவது காரணம் வேண்டுமே என்று மேலே விசாரிக்கிறார் டாக்டர்.
சபேசய்யர் நிஜமாகவே ஒரு புழு. என் விசாரணையின் போது அவனைக் கொல்வது மூலம் உலகத்திற்கு உபகாரம் செய்துள்ளீர்கள். என்கிறார் டாக்டர் ரெங்கசாமியைப் பார்த்து.
ரெங்கசாமி இந்தக் கொலையிலிருந்து தப்பிக்க தற்செயலாக சபேசய்யர் மின்சாரம் தாக்கி இறந்ததாக விவரமாக எழுதப்பட்டிருந்த காகிதத்தில் அவரும் ஆஸ்பத்திரி டாக்டரும் கையெழுத்திட்டிருந்தார்கள்.
டாக்டர் சம்பத் ரெங்கசாமிக்கு உயிர்ப் பிச்சை அளித்துவிட்டார். ஆனால் ரங்கசாமியின் மனைவியின் கற்புக்கு ஏற்பட்ட களங்கத்தையும் ரங்கசாமி கையில் உள்ள ரத்தக் கறையையும் யாரால் துடைக்க முடியும்? என்று புதுமைப்பித்தன் இறுதி வரிகளில் முடித்திருக்கிறார்..
கதையின் ஓரிடத்தில் இப்படி எழுதியிருக்கிறார் கதாசிரியர். வேலைக்கார நடேசன் முதலில் சபேசய்யரிடம் வேலை செய்து கொண்டிருந்தான். சபேசய்யர் ஒரு பெரிய ஸ்திரீ லோலன். நடேசன் அவருடைய கையாள். சபேசய்யரைப்பற்றி ஊரில் கொஞ்சம் வதந்தியும் உண்டு. அவர் சிபாரிசின் மேல்தான் நடேசனுக்குச் சபாவில் வேலை கிடைத்தது.
உண்மையில் ரங்கசாமிக்கு டாக்டர் சம்பத்தும், இன்னொரு டாக்டரும் துணை நிற்கிறார்கள். ஒரு சமூக விரோதியாக சபேசய்யர் கட்டம் கட்டப் படுகிறார்.
மின்சாரத்தால் தற்செயலாக சபேசய்யர் மரணம் அடைந்து விடுவதுபோல் காட்டப்படுகிறது. ஆனால் கொலையைச் செய்த ரங்கசாமி தன் நடவடிக்கை மூலம் தன்னை வெளிப்படுத்துகிறார். முக்கியமாகக் கண்களைப் பார்த்து டாக்டர் சம்பத் எடை போடுகிறார்
இறுதி இரண்டு வரிகளில்தான் இந்தக் கதைக்கு அர்த்தம் புரிகிறது.ரெங்கசாமி ஏன் கொலை செய்யவேண்டுமென்று. இந்தக் கதையைப் படித்துக்கொண்டு வரும் வாசகருக்கு ரெங்கசாமி ஏன் கொலையாளி என்கிறபோது ஆச்சரியம் ஏற்படாமலிருக்காது. இறுதி வரிகளில்தான் அது வெளிப்படுகிறது.
இந்தக் கதை மணிக்கொடி இதழில் 14.04.1935 வெளிவந்த கதை. ஒரு கொலை கதையை வெகு சுலபமாக விவரித்த விதம் நன்றாக உள்ளது.
(தமிழில் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 20.11.2020 அன்று பிரசுரமான கட்டுரை)
27.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.30 மணிக்கு நடந்த விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் எது கவிதை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய தமிழறிஞர் இலந்தை கந்தசாமியின் உரையின் ஒளிப்பதிவை கேட்டு மகிழுங்கள்.
27.11.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.30 மணிக்கு சூம் மூலமாக 27ஆவது மொழிபெயர்ப்புக் கவிதை வாசிப்பு அரங்கத்திற்கு வருகை புரிந்து கவிதைகளைக் கேட்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் கவிதை வாசிக்கும் கூட்டம் வித்தியாசமானது. வழக்கம்போல் சிறப்புரை வழங்க வருபவர் தமிழறிஞர் இலந்தை இராமசாமி.
தலைப்பு : எது கவிதை?
இந்த வாரம் மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிக்க இசைந்தவர்களை இங்கே குறிப்பிடுகிறேன்.