ஒரு கதை ஒரு கருத்து – 7

.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்

அழகியசிங்கர்

அழகிரிசாமியின் நகைச்சுவை கதை. ஒரு நகைச்சுவை கதையை எழுதும்போது படிப்பவருக்கு அது நகைச்சுவை கதை என்ற உணர்வே ஏற்படக்கூடாது. பலர் நகைச்சுவை கதையைச் சொல்லும்போது தேவையில்லாததை நகைச்சுவை என்ற பெயரில் சேர்த்து துணுக்குத் தோரணமாக மாற்றி கதையைப் பலர் வீணாக்கி விடுவார்கள்.
கு.அழகிரிசாமி இயல்பாகக் கதையைச் சொல்லிக்கொண்டு போகிறார்.தானே கதையைச் சொல்கிறார். உண்மையில் தானே சொல்வதால் கு.அழகிரிசாமி இல்லை. ‘நான்’ என்பது ஒரு கதைசொல்லிஅந்தக் கதைசொல்லிக்குப் பெயர் கிடையாது. பெரும்பாலான கதைகளில் கு.அழகிரிசாமி இந்த உத்தியைப் பயன்படுத்துகிறார்.
“ கதைசொல்லி அவன் இருந்த மாம்பலத்திலேயே அவன் கண்ணில் படாமல் ஆர்.எஸ்.ஆர.கல்யாண கிருஷ்ணன் என்பவன் மூன்று வருஷமும் ஏழு மாதமும் உலவியிருக்கிறானாம். கு.அழகிரிசாமி இனிஷியலோடு அடிக்கடி அவன் பெயரைக் குறிப்பிடுகிறார். கதைசொல்லியின் கண்ணில் படாமல் எப்படி அவனால் உலாவ முடிந்தது?
எழுதிக்கொண்டு போகிற அழகிரிசாமி கதைசொல்லி வாயிலாக இப்படி எழுதுகிறார் : ‘என் கண்ணில் கோளாறா? இல்லை, திடீரென்று மறையும் அபூர்வ சக்தி எதாவது கல்யாண கிருஷ்ணனிடம் இருந்ததா?’
ஏன் கல்யாண கிருஷ்ணனைத் தேடுகிறான் கதைசொல்லி. ஒரு காலத்தில் கதைசொல்லியும், கல்யாண கிருஷ்ணனும் எதிர் எதிர் வீட்டில் குடியிருந்தார்கள். கல்யாண கிருஷ்ணன் ஒரு நா காலை 7 மணிக்கு அவசரமாக வந்து கதைசொல்லியிடம் 37 ரூபாய் கேட்கிறான். மறுநாள் பிற்பகல் மூன்று மணிக்கே திருப்பித் தந்து விடுவதாகவும் சொல்கிறான்.இங்கே வேடிக்கையாக ஒரு உரையாடல் நடைபெறுகிறது.
“நான் மூன்று மணிக்கு வீட்டில் இருக்க மாட்டேனே?” என்கிறான் கதைசொல்லி.
“அப்படியானால் அபீசுக்கு வந்து பணத்தைக் கொடுத்து விடுகிறேன்” என்கிறான்.
“ஆபிசுக்கு வருவானேன்? ராத்திரி வீட்டிலேயே கொடுத்தால் போச்சு” என்கிறான் கதைசொல்லி.
கல்யாண கிருஷ்ணன் சொல்கிறான். “கையில் பணம் கிடைத்தால் உடனே கொடுத்து விடவேண்டும். ஆபிசுக்கு வந்து கொடுத்து விடுகிறேன்” என்கிறான்.
இப்படிப் பேசும்போதே தெரிகிறது. கல்யாண கிருஷ்ணன் பணம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை என்று.
கல்யாண கிருஷ்ணன் கடனாகப் பணத்தை வாங்கிக்கொண்டு போனான்.. அவ்வளவுதான்.உடனே வீட்டையே காலி செய்து கொண்டு போய்விட்டான். அவன் தங்கியிருந்த வீட்டுக்காரன் சொல்கிறான். தங்கச்சாலைத் தெருவில் புது வீடு பிடித்திருக்கிறான் என்று.
கதைசொல்லிக்குப் பெரிய அதிர்ச்சி. கல்யாண கிருஷ்ணனைப் பற்றி விசாரிக்க அலுவலத்திலிருக்கும் இரண்டு பேர்களை (அவர்கள் தங்கசாலையில் இருப்பவர்கள்) ஏற்பாடு செய்கிறான்..
அவர்கள் தங்கசாலையில் கல்யாண கிருஷ்ணனை விசாரிக்கப் போனபோது அவர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை நகைச்சுவை உணர்வோடு கு.அழகிரிசாமி விவரிக்கிறார்.
ஒவ்வொரு வீடாக விசாரிக்கும்போது எத்தனையோ கூத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. நாலு வீடுகள் காலியான விபரம் தெரிய வருகிறது. அந்த வீடுகளில் அவர்களுக்கு வேண்டியவர்களைக் குடியேற்றியிருக்கிறார்கள்.
ஒரு வீட்டில் மாறு வேடம் போட்ட திருடர்கள் என்று விசாரிக்க வந்தவர்களைச் சந்தேகிக்கிறார்கள். தங்கச்சாலைத் தெருவில் கல்யாணராமன், கல்யாண சுந்தரம், கல்யாணம், மோஹனகிருஷ்ணன் ராமகிருஷ்ணன், ராதா கிருஷ்ணன், கிருஷ்ணன் என்ற பெயர்களையெல்லாம் தெரிந்து கொண்டார்கள். கல்யாண கிருஷ்ணனைத் தேடும் சந்தர்ப்பத்தில்.இப்படி கல்யாண கிருஷ்ணனைத் தேடும் சந்தர்ப்பத்தில் இரண்டு அழகான பெண்களை அவர்கள் பார்க்கிறார்கள். அவர்களில் ஒரு நண்பர் பிரம்மச்சாரி. இரண்டு பெண்களில் யாரையாவது மணம் புரிந்துகொள்ளலாமென்று நினைக்கிறார். அதற்குள் அவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகிவிடுகிறது. ஆனால் கல்யாண கிருஷ்ணன்தான் கிடைக்கவில்லை.
நிச்சயமாகக் கல்யாண கிருஷ்ணன் தங்கசாலையில் இல்லை என்பது தெரிந்து விடுகிறது.கல்யாண கிருஷ்ணனைத் தேடும்போது அவனிடம் பணம் கொடுத்து ஏமாந்த மளிகைக்கடைகக்காரன், வெற்றிலை பாக்குக்காரன், ஜவுளிக் கடைக்காரன், காய்கறிக் கூடைக்காரிகள், நெய் வியாபாரி, செண்ட் வியாபாரி காவல்காரனைப்லிக்காரன் என்று பலவகையான பேர்வழிகளை ஞாயிற்றுக்கிழமை கதைசொல்லியின் வீட்டில் ஒரு கூட்டமாக ஏற்பாடு செய்கிறார்கள். அவர்களிடம் பொதுவாக ஒரு விண்ணப்பத்தை முன் வைக்கிறான் கதைசொல்லி.. யார் கண்டுபிடித்தாலும் பணம் வசூல் செய்து அவனுடைய முப்பத்தேழு ரூபாயை வசூல் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறான். அப்படி வசூல் செய்த தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இனம் கொடுப்பதாக சொல்கிறான்.
நகைச்சுவை உணர்வுடன் இந்தக் கதையை எடுத்துக்கொண்டு போகிறார் அழகிரிசாமி என்பதற்கு இன்னொரு உதாரணம். கதைசொல்லியும் அவன் மனைவியும் எவ்வளவு சதவீதம் இனாம் தருவது என்பதைப்பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் பேசுவதைக் கேட்டால் இனாம் வாங்க வருபவன் வேண்டாமென்று சொல்லிவிட்டுத் தப்பி ஓடியிருப்பார்கள் என்பது நிச்சயம் என்று கிண்டலாகச் சொல்கிறார் அழகிரிசாமி.
3 வருஷமாகக் கல்யாண கிருஷ்ணன் என்ற ஆசாமி தட்டுப்படவே இல்லை. காஞ்சிபுரம் கருட சேவைக்குப் போனபோது ஓய்வு நேரத்தில் கல்யாண கிருஷ்ணனைத் தேடிக்கொண்டிருக்கிறான். அகப்படவே இல்லை. ஏன் காஞ்சிபுரத்தில் தேடுகிறான்? எப்போதும் காஞ்சிபுரம் கருட சேவைக்குப் போவதாகக் கல்யாண கிருஷ்ணன் சொல்லிக்கொண்டிருப்பான்.
காபூல்காரனைப் பார்த்தவுடன் கல்யாண கிருஷ்ணன் சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று கதைசொல்லி உள்ளம் துடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் விசாரிக்கத் தயக்கம். கதைசொல்லியைப் பார்த்து காபூல் காரனே மேலும் பல தகவல்களைத் தெரிவிக்கிறான்.
கதைசொல்லியின் கோஷ்டியைப்போல் இன்னும் ஏழு கோஷ்டிகள் சென்னை மாநகரத்தில் இருப்பதாகவும். ஒவ்வொருவரும் கல்யாண கிருஷ்ணனைத் தேடுவதில் பத்து பன்னிரண்டு வருஷங்களாக ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறான்.
காபூல்காரன் சொன்னதில் இன்னொரு விஷயம் கதைசொல்லிக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஏனென்றால் இதே மாம்பலம் ஏரியாவில் கல்யாண கிருஷ்ணன் இன்னொரு குடும்பத்தை கதைசொல்லியை ஏமாற்றியதுபோல் ஏமாற்றி இருக்கிறான். காஞ்சிபுரம் கருட சேவைக்குப் போகப்போவதாகவும் அவசரமாகப் பணம் தேவைப் படுவதாகவும் கூறி மறுநாள் 3 மணிக்குப் பணம் தருவதாகவும் சொல்லி ஏமாற்றியதை காபூல்காரன் குறிப்பிடுகிறான். இதைக் கேட்டவுடன் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது கதைசொல்லிக்கு..
கல்யாண கிருஷ்ணனுக்கு எதாவது ஒரு தெய்வத்தின் சகாயமோ அல்லது பூதத்தின் சகாயமோ நிச்சயம் இருக்க வேண்டுமென்று நினைக்கிறான் கதைசொல்லி..இது நடந்து 7 வருடங்கள் ஓடிவிட்டன.
கதைசொல்லிக்குத் கல்கத்தாவிற்கு மாற்றல் ஏற்பட்டு மாம்பலத்தை விட்டுப் போய் விடுகிறான். கல்கத்தாவில் உத்தியோகம் காரணமாக அந்தமான் தீவிற்குப் போகும்படி நேர்கிறது. அங்கே ஒரு சில தமிழ் குடும்பங்கள் இருப்பதாகத் தெரிந்து போர்ட்பிளேர் நகரில் தென்கோடியில் செல்கிறான். ஒரு தமிழர் குடும்பத்தை மாலையில் சந்திக்கிறான்.
அவரிடம் தமிழில், உங்கள் சொந்த ஊர் என்று கேட்கிறார். அந்த மனிதன் திண்டுக்கல் என்கிறார்.அவர் தான் ஒரு குமாஸ்தா என்றும், தான் வேலை பார்க்கும் மர வியாபாரக் கம்பெனி பத்து வீடு தள்ளியிருப்பதாகக் கூறுகிறார்.
“எல்லோரும் தமிழர்கள்தானே?” என்று கேட்கிறான் கதைசொல்லி.
“தமிழர்கள் எட்டு பேர்தான். நான்கு பேர் கூலிகள். மூன்று பேர் கிளார்க்குகள்.”
“மொத்தம் ஏழுதானே.“
“இல்லை எட்டுபேர்கள். மானேஜர் கல்யாண கிருஷ்ணனைச் சேர்க்க மறந்துவிட்டேன்,” என்கிறான் குமாஸ்தா.
இந்தக் கதையின் பெரிய டுவிஸ்ட் இந்த இடத்தில் ஏற்படுகிறது. ஒருவழியாக கதைசொல்லி கல்யாண கிருஷ்ணனைக் கண்டுபிடித்து விட்டதாக நினைக்கிறான்.
திகைப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல், “ஆர்.எஸ்.ஆர் கல்யாண கிருஷ்ணனா” என்று கேட்கிறான் கதைசொல்லி.”ஆர் எஸ் ஆர் கல்யாண கிருஷ்ணன்தான்” என்கிறான் குமாஸ்தா.
திகைப்படைகிறான் கதைசொல்லி. அவன் தேடிவந்த கல்யாண கிருஷ்ணன் மாட்டிக்கொண்டு விட்டான்.”அவரைப் பார்க்க வேண்டும்” என்கிறான்
கதைசொல்லி. இந்த இடத்தில் அழகிரிசாமி உள்ளே புகுந்து இப்படிச் சொல்கிறார்.
‘கல்யாண கிருஷ்ணா. ஆர்.எஸ்.ஆர்
கல்யாணசிருஷ்ணா. அந்தமான் தீவில் வந்துதான் என்னிடம் அகப்பட வேண்டுமென்று இருந்தாயோ? எப்பொழுதும் தர்மத்துக்குத்தாண்டா வெற்றி. நீ தப்பிக்க முடியாது. நீ கெஞ்சினாலும் விட மாட்டேன். என்றெல்லாம் எழுதிக்கொண்டு போகிறார்.பின் அந்தக் கல்யாண கிருஷ்ணனைச் சந்திக்க அனுமதி பெற்று சந்திக்கிறான். சந்தித்த பிறகு பெரிய ஏமாற்றம்.
இந்தக் கல்யாண கிருஷ்ணன் வேறு..அந்தக் கல்யாண கிருஷ்ணன் வேறு.
கல்யாண கிருஷ்ணன் அகப்படுவதற்குப் பதில் கதைசொல்லி அகப்பட்டுக்கொண்டான் கல்யாண கிருஷ்ணன் என்ற பெயரில் இருக்கும் மானேஜரிடம்..
“மன்னிக்க வேண்டும். ஹி…ஹி..என் நண்பன் கல்யாண கிருஷ்ணன் என்று நினைத்தேன்” என்கிறான் கதைசொல்லி அவரைப் பார்த்து.
“உங்கள் நண்பர் ஆர்.எஸ்.ஆர். கல்யாண கிருஷ்ணனா” என்று கேட்கிறார் அவர்.
“ஆமாம்.” என்கிறான் கதைசொல்லி.
“எதற்கு நீங்கள் பார்க்க வேண்டும்.?”
“எனக்கு அவர் பணம் தர வேண்டும் என்கிறான் கதைசொல்லி.
துள்ளி எழுந்தார் மானேஜர்.
“அடப்பாவி எனக்கும் அவன் பணம் தரவேண்டும்.”
“எனனே?” என்கிறான் கதைசொல்லி ஆச்சரியத்துடன்.
“ஆமாம். 120- தரவேண்டும். மறுநாள் பிற்பகல் மூன்று மணிக்குக் கொண்டு வந்து கொடுத்து விடுவதாகச் சொன்னான். அந்தமான் தீவில் நம்ம ஆண் ஒருவன் கஷ்டப்படுகிறான் என்று உதவினேன். ஆசாமி பணத்தை வாங்கிக்கொண்டு கப்பலேறி விட்டான். வருஷம் இரண்டாகிறது. என்று மானேஜர்சொல்லி முடிக்கிறார்.
இது ஒரு நகைச்சுவை கதை. அழகிரிசாமி ஜாக்கிரதையாக எழுதிக்கொண்டு போகிறார்.கல்யாண கிருஷ்ணன் எல்லோரையும் ஏமாற்றிவிட்டு கடைசி வரை சிக்காமலிருக்கிறான். அதுமாதிரி சிலர் இருந்துகொண்டுதான் இருப்பார்கள் என்கிறது கதை. கதையை எழுதிக்கொண்டு போன விதம் சிறப்பாக உள்ளது.
(27.12.2020 அன்று திண்ணை முதல் இணைய பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)

25.12.2020 நடந்த கவிதையைக் குறித்து உரையாடல் – ஒளிப்பதிவு

25.12.2020 நடந்த கவிதையைக் குறித்து உரையாடல் – ஒளிப்பதிவு 

கலந்து கொண்டவர்கள் 


1.ப. சகதேவன் 2. வ.வே,சு  3. க.வை பழனிசாமி  4. முபீன் சாதிகா 
இவர்களுடன் கேள்வி கேட்பவர் : அழகியசிங்கர்

ஆச்சரியமாக இருந்தது..

 
துளிகள்  – 164

.

அழகியசிங்கர்

கல்கி நடத்தும் சிறுகதைப் போட்டியை நான் எப்போதும் மதிப்பேன்.  நான் மூன்று முறை அந்தப் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன்.  ஒரே ஒரு முறை ஆறுதல் பரிசு வாங்கியிருக்கிறேன். 

பல ஆண்டுகளுக்குமுன் நடந்த போட்டி அது.  என் பெயர் குழப்பத்தால் அந்தப் போட்டிக்கான பரிசுத் தொகையான ரூ.75 என் நண்பர் எஸ்.சந்திரமௌலி க்குப் போய்விட்டது.  அழகியசிங்கர் என்ற புனைபெயராக இருந்தாலும் என் இயற்பெயர் எஸ்.சந்திரமௌலி. .
ஏதோ பணம் அனுப்ப மறந்து விட்டார்கள் போலிருக்கிறது என்று நான் கூச்சப்பட்டு பரிசுத் தொகையைக் கேட்காமலிருந்தேன்.  பின் ஒரு நாள் தயக்கத்துடன் கேட்டேன்.  கல்கி அலுவலகத்தில் அதுதான் கொடுத்தாகி விட்டதே என்றார்கள்.
அப்போதுதான் தெரிந்தது நபார்டில் பணிபுரிந்து கொண்டிருந்த எஸ்.சந்திரமௌலிக்கு அந்தத் தொகைப் போயிற்று  என்று. 
        இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுப் பெறுவதென்பது நடக்காத காரியம்.  அதனால்தான் நான் எப்போதும் ஒன்று சொல்வேன்.
சமீபத்தில் கூட நான் வழக்கம் போல் மூன்றாவது முறையாக  ஒவ்வொரு ஆண்டும் போட்டி நடத்தும் ஒரு வாரப்பத்திரிகைக்கு சிறுகதையை அனுப்பியிருந்தேன்.வாரப்பத்திரிகை ஒரு பிரபல எழுத்தாளருடன் சேர்ந்து நடத்தும் போட்டி அது.  .    அதேபோல் பாரதிக்கு ஒருவாரம் விழா நடத்திய ஒரு அமைப்பு கூட சிறுகதைக்கான போட்டி நடத்தியது.  அதிலும் கலந்து கொண்டேன்.  என் வசம் இப்போது இரண்டு கதைகள் சேர்ந்து விட்டன.  முடிவைக் குறித்து எனக்கு அக்கறை இல்லை.
ஒரு காலத்தில் கணையாழி தி ஜானகிராமன் பெயரில் நடந்த குறுநாவல் போட்டியில் ஒவ்வொரு ஆண்டும் பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு என் குறுநாவல்  பிரசுரமாகும்.12 மாதங்களும் ஒவ்வொரு எழுத்தாளரின் குறுநாவல்களைப் பிரசுரம் செய்தார்கள். பரிசுத் தொகை கணையாழி பத்தாண்டு இலவசமாக அனுப்புவதாகக் கூறினார்கள்.  ஆனால் ஓராண்டுகூட முழுசாக கணையாழி கிடைக்கவில்லை. இது 1988ஆம் ஆண்டில் நடந்தது. இதுமாதிரி 6 ஆண்டுகள் என் குறுநாவல்கள் பிரசுரமாயிற்று.
சமீபத்தில் கல்கி ஆசிரியர் ரமணன் என்னை போனில் அழைத்து  இறுதிச் சுற்றில் உள்ள கல்கி நினைவுச்  சிறுகதைப் போட்டி – 2020 கதைகளைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.  என்னுடன் எழுத்தாளரும் மொழி  பெயர்ப்பாளருமான  பத்மஜா நாராயணனையும்  கேட்டுக்கொண்டார்.   
மொத்தம் 26 கதைகள்.  கதைகள் எனக்குக் கிடைத்தவுடன் நான் படிக்கத் தொடங்கிவிட்டேன்.  நாலைந்து நாட்களில் எல்லாக் கதைகளையும் படித்துவிட்டேன்.  ஒவ்வொரு கதையாய் படித்து ஒரு மதிப்பெண் போட்டேன்.  
சுருக்கமாக ஒவ்வொரு கதையைப் பற்றிக் குறிப்புகள் எழுதிக்கொண்டேன்.  இது சி சு செல்லப்பா மெத்தட்.  அவர் பி எஸ் ராமையாவின் கதைகளை அப்படித்தான் அலசி இருப்பார்.

26 கதைகளில் 13 கதைகள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.  பெரும்பாலான கதைகள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தன. ஒரு சில கதைகள் தவிர எல்லாக் கதைகளையும் என்னால் விட முடியவில்லை.  அவ்வளவு தரமாக இருந்தன கதைகள் எல்லாம். தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தும் கல்கி பத்திரிகையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
எனக்கு வாய்ப்பளித்த கல்கி ஆசிரியருக்கு என் நன்றி.  கூடவே அமிர்தம் சூர்யாவிற்கும்.    

விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 31வது கவிதைக் கூட்டம்.

25.12.2020

அழகியசிங்கர்

கவிதையைக் குறித்து உரையாடல்

கலந்து கொள்பவர்கள் 

1.ப. சகதேவன் 2. தேவேந்திர பூபதி 3. க.வை பழனிசாமி  4. முபீன் சாதிகா 
இவர்களுடன் கேள்வி கேட்பவர் : அழகியசிங்கர்
ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிப்பவர்கள் இரண்டு நிமிடம் எடுத்துக்கொள்வார்கள். ஒரு மாறுதலுக்காக இப்படியொரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளேன். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Meeting ID:  885 1301 0741    Passcode: 613252: 

Topic: விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 31வது கவிதைக் கூட்டம்.Time: Dec 25, 2020 06:30 PM IndiaJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/88513010741…Meeting ID: 885 1301 0741Passcode: 613252

அப்பாவின் திதி நாள் இன்று

22.12.2020 

துளிகள்  – 162

அழகியசிங்கர்

2017ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி அப்பா இறந்து விட்டார். அவருடைய திதி இன்று.
சாதாரண மனிதர்.  சாதாரண ஆசைகள் கொண்டவர். 
ஒரு மரக் கட்டிலில்  மெல்லிசான போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்குவார்.,
பெரும்பாலும் தூங்கிக்கொண்டிருப்பார்.  அவர் பொழுதுபோக்கு டிவி பார்ப்பது.
எப்போதும் நான் அப்பாவுக்கு கிலி  ஏற்படுத்தி  விடுவேன்.  எல்லாம் புத்தகங்கள்தான்.

அப்பா கட்டிலுக்கு எதிரில் நான் வைத்திருக்கும் புத்தகங்களைப் பார்க்கும்போது அவருக்குக் கோபம் வந்துவிடும்.  கோபத்தில் ஒன்றும் பேச மாட்டார்.  
புத்தகம் வாங்கி இப்படிச் சேர்ப்பது பிடிக்காது.
   இப்போது உயிரோடு இருந்தால் அவருக்கு ரத்தக் கொதிப்பு வந்து விடும். நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைப் பார்த்தால்
ஏனென்றால் வழக்கமாக அவர் படுக்கும் கட்டில் முழுவதும் புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன். புத்தகங்கள் சேர்ந்து சேர்ந்து மலை மாதிரி குவிந்து கிடக்கிறது.
அப்பா ஒரு ஹோமியோபதி மருத்துவர். எல்லோருக்கும் மருந்து இலவசமாகக் கொடுத்து விடுவார்.  
அசோகமித்திரன் போன் செய்யும்போது அப்பா போனை எடுத்து ஹோமியோபதி மருந்துகளைப் பற்றி ஒரு குட்டிப் பிரசங்கம் செய்வார்.
என் நண்பர்கள் வந்தால் அவரும் பேச உட்கார்ந்து விடுவார்.  எனக்குச் சங்கடமாக இருக்கும்.  நடுவில் நான் நடத்திக்கொண்டிருக்கும் விருட்சம் பத்திரிகையைப் பற்றியும் வெளியிடும் புத்தகங்கள் பற்றியும் ஒரு குட்டு குட்டாமல் இருக்க மாட்டார்.  நண்பர்கள் சிரிப்பார்கள்.  
நண்பர்களுக்கு டீ போட்டுக் கொண்டு வருவார்.அவருக்கு  டிபன் பண்ணுவது, டீ போட்டுக் கொடுப்பதென்றால் ரொம்பவும் பிடிக்கும்.” என் அலுவலக மாற்றலுக்காகத் தமிழில் என் வங்கியின் எம்டிக்கே கடிதம் எழுதிப் போட்டு விட்டார்..  இதை என்னிடம் கூடச் சொல்லவில்லை..
  ஒருநாள் நோட்புக்கில் எம்டிக்கு எழுதி  இருந்ததைப் பார்த்து விட்டேன். படித்தவுடன் எனக்கு வெட்கமாக இருந்தது.
அப்பாவை சோனி கேமரா மூலம் காணொளி எடுத்திருந்தேன்.  அதை இப்போது பார்த்தேன்.  அப்பா திரும்பவும் வந்து விட்டாரென்று தோன்றியது.  நான் எப்போதும் என் உறவினர்களிடம் சொல்வேன்.  குடும்பம் ஆல்பம் ஒன்றை நாம் தயாரித்து வைத்திருக்க வேண்டுமென்று. அது காணொளியா ஆடியோவா இருந்தால் சரி என்று.    
அப்பா ஜனவரி மாதம் 5ஆம் தேதி 2017ல் இறந்து போனார். ஆறாம் தேதி புத்தகக் கண்காட்சி ஆரம்பம். என் நண்பர்கள் புத்தகக் காட்சியைப் பார்த்துக் கொண்டார்கள்.
         என் கதைகளில் முக்கியமான கதாபாத்திரம் என் அப்பாதான்.   இப்போது வந்துள்ள  DAD’S FAVOURITE NEWSPAPER     என்ற புத்தகத்தைப் பார்க்க அப்பா இல்லை.  


கவிதையும் ரசனையும் – 7

 15.12.2020

அழகியசிங்கர்



            பாரதியாரின் வசன கவிதையை எடுத்துக்கொண்டு எழுதலாமென்று நினைக்கிறேன்.  பாரதியார் மரபுக் கவிதைகள் மட்டுமல்ல வசன கவிதைகளும் எழுதி உள்ளார்.  90 சதவீதம் மரபுக் கவிதைகளும் பத்து சதவீதம் வசன கவிதைகளும் அல்லது அதற்குக் குறைந்த சதவீதம் எழுதி உள்ளார்.

      பாரதி மறைந்தபோது கவிதை உலகில் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெறுமை ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.  இத்தனைக்கும் பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முதலிய கவிஞர்கள் இருந்தபோதும்.  

      பாரதி இறந்த 10 ஆண்டுகள் கழித்துத்தான் ந பிச்சமூர்த்தி , க.நா.சு மூலமாக புதுக் கவிதை என்ற இலக்கிய வடிவம்  பாரதியின் வசன கவிதையைப் பார்த்துத் தொடர்ந்தது.  அதன் உச்சம் ‘எழுத்து’ பத்திரிகை மூலமாகத்தான் வேகம் எடுத்தது.

      காட்சி என்ற தலைப்பில் பாரதியின் வசன கவிதையைப் பார்ப்போம்.

 காட்சி 

  முதற்கிளை : இன்பம் 

  இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;

 காற்றும் இனிது.

 தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது. 

 ஞாயிறு நன்று; திங்களும் நன்று. 

 வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன். 

 மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது. 

 கடல் இனிது, மலை இனிது, காடுநன்று. 

 ஆறுகள் இனியன. 

 உலோகமும், மரமும், செடியும், கொடியும், 

 மலரும், காயும், கனியும் இனியன. 

 பறவைகள் இனிய. 

 ஊர்வனவும் நல்லன. 

 விலங்குகளெல்லாம் இனியவை, 

 நீர் வாழ்வனவும் நல்லன. 

 மனிதர் மிகவும் இனியர். 

 ஆண் நன்று, பெண் இனிது 

 குழந்தை இன்பம். 

 இளமை இனிது, முதுமை நன்று. 

 உயிர் நன்று, சாதல் இனிது.   

         பாரதியின் இந்தக் கவிதை தமிழ்க் கவிதை உலகத்தை ஒரு புரட்டுப் புரட்டிப் போட்டு விட்டது.  இக் கவிதை வந்தபோது அப்படியெல்லாம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருமென்று யாரும் உணரவில்லை. 

      ஒவ்வொன்றாகக் கவிதையில் அடுக்கிக்கொண்டு போகிறார்.

      இவ்வுலகம் இனிது. இதிலுள்ள வான் இனிமையுடைத்து

     காற்றும் இனிது 

 என்றெல்லாம் அடுக்கிக்கொண்டு போகிறார். மழை சொல்கிறார் மின்னலை இடியைச் சொல்கிறார்.  இயற்கை சார்ந்த விஷயங்களையெல்லாம் சொல்லிக்கொண்டே போகிறார்.  இக் கவிதையின் முக்கிய விஷயம்.  இக் கவிதை உள்முகப் பார்வையைக் கொண்டது.

      எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் விளக்குகிற கவிதை.  ஆண் நன்று, பெண் இனிது என்கிறார்.

      இறுதியாக ஒன்று சொல்கிறார்.  இளமை இனிது, முதுமை இனிது, என்பதோடல்லாமல் உயிர் நன்று, சாதல் இனிது என்கிறார்.

      என்னுடைய கேள்வி.  சாதல் இனிது என்று ஏன் சொல்கிறார். இதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

      அடிப்படையில் பாரதிக்கு வேதாந்தத்தில் ஈடுபாடு உண்டு.  உபநிடதம் எல்லாம் கற்றுத் தெரிந்தவர்.  உள்ளோட்டமாக அவருக்குள் இக் கவிதையை இயற்றுவதற்கு இதெல்லாம் ஓடிக் கொண்டிருக்கும்.  ஆனால் சாதல் இனிது என்கிறாரே? அது சரியா? பாரதிக்கு அவருடைய மரணம் இனிமையாக இருந்ததா? உண்மையில் சாதல் என்பதைக் குறிப்பிடுவதன் மூலம் வேற எதாவது சொல்ல விரும்புகிறரா?  தெரியவில்லை.  

      ஏனென்றால் பாரதியின் மரணம் இனிமையாக இல்லை.  யானை தாக்கியபின் அவர் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்து விட்டார்.

      ஆனால் இங்கே சாதல் இனிது என்று குறிப்பிடுவது வேறு எதாவது அர்த்தமாகிறதா?  எதைச்செய்தாலும் மனிதன் தன்னை இழப்பதில்லை.  தான்தான் என்று எல்லாவற்றிலும் முன்னிலையில் நிற்கிறது.  பாரதியார் அந்தச் சுயத்தின் மரணத்தை அப்படிக் குறிப்பிடுகிறாரா? சாதல் இனிதென்று.

      முதுமை நன்று என்கிறார் உயிர் நன்று என்கிறார்.  அப்போது சாதலும் இனிது. தான் என்கிற நினைவில்லாமல் ஒவ்வொரு நொடியும் தான் இல்லை என்று நினைக்கிறபோது சாதல் இனிது என்று சொல்லலாம்.

      இதே காட்சி கவிதையில் ஐந்தாவதாக வரும் கவிதையில் எல்லா உயிரும் இன்பமெய்துக.  எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க.  தான் வாழ்க. 

      தான் வாழ்க என்று கூறுவது ஏன்?  தானை விலக்கிப் பார்ப்பதன் மூலம் தான் வாழ்வாக இருக்க முடியும்.

     சாதல் இனிது என்று சொல்வதற்கும் தான் வாழ்க என்று   கூறுவதற்கும்  எதோ தொடர்பு இருப்பதுபோல் படுகிறது.

      ஏழாவது பகுதியில் இப்படி எழுதுகிறார்.

           உணர்வே நீ வாழ்க

           நீ ஒன்று, நீ ஒளி

           நீ ஒன்று, நீ பல”

           நீ நட்பு, நீ பகை

           உள்ளதும் இல்லாததும் நீ.

           அறிவதும் அறியாததும் நீ

           நன்றும், தீதும் நீ

           நீ அமுதம், நீ சுவை, நீ நன்று, நீ இன்பம்.

      இது பகவத்கீதை தத்துவம் போல் இருக்கிறது. கொல்பவன் நானே, கொல்லப்படுவதும் நானே என்று மகாபாரத போரில் அர்ச்சுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுரை கூறுவதுபோல் எழுதப்பட்டிருக்கும்.  பாரதியாரும் பகவத்கீதையை மொழி பெயர்த்திருக்கிறார்.  அவர் இதைக் கவிதையாகக் கொண்டு வருகிறாரா என்று தோன்றுகிறது.  எப்படியாக இருந்தாலும் பாரதியார் வேதத்தை நம்புகிறார்.  அதன் சாரம்சத்தைதான் கவிதையாக்கிக் கொடுத்திருக்கிறார்.

         ஆனால் பாரதியாரின் வசன கவிதை முக்கியமான பணியைச் செய்திருக்கிறது.  அதுதான் மூல காரணம் புதுக்கவிதை என்ற புதிய இலக்கிய வடிவை உருவாக்கியதற்கு. இந்த ஒரு விஷயத்தில் பாரதிதான் முன்னோடி என்பதை மறுப்பதற்கில்லை.      

           (20.12.2020 அன்று திண்ணை, முதல் இணைய வாரப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை)

டிசம்பர் 2020 மாதம் கதை வாசிப்பில் கு அழகிரிசாமி

அழகியசிங்கர்

” ஒவ்வொரு மாதமும் 3வது சனிக்கிழமை ஒரு சிறுகதை ஆசிரியரின் கதைகளைக் கொண்டாடுவது வழக்கம்.  முதலில் அசோகமித்திரன் இரண்டாவது தி.,ஜானகிராமன் மூன்றாவது புதுமைப் பித்தன்.  இதோ இப்போது கு.அழகிரிசாமி.  11 கதை அபிமானிகள் கதைகளைக் குறித்துப் பேசுவதைக் கேளுங்கள்.  

விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 30வது கவிதை வாசிப்பு கூட்டம்

அழகியசிங்கர்

18.12.2020 அன்று சூம் மூலமாகக் கவிதைகளை எல்லோரும் வாசித்தார்கள். எல்லோருக்கும் இரண்டு முறை கவிதை வாசிக்க நேரம் கிடைத்தது. அதைப் பெருமையுடன் இங்கே ஒளிபரப்புகிறேன்.(63) விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 30வது கவிதை வாசிப்பு கூட்டம் –

விருட்சம் சூம் மூலமாக நடத்தும் 30வது கவிதை வாசிப்பு கூட்டம்

அழகியசிங்கர்

கவிஞர் அ.கார்த்திகேயன் அவர்கள் ஜென் கவிதைகள் குறித்து உரை நிகழ்த்திய தொகுப்பு.
https://studio.youtube.com/video/CsDbnQ-iZ8A/edit

கு.அழகிரிசாமியைக் கொண்டாடலாம்



அழகியசிங்கர்

நாளை (சனிக்கிழமை) 6.30 மணிக்கு 12 எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமியின் 12 கதைகளை எடுத்து விமர்சிக்க உள்ளார்கள். 
ஒவ்வொருவரும் 6 நிமிடங்கள் உரையாற்ற உள்ளனர்.

ஒவ்வொருமாதமும் 3வது சனிக்கிழமை கதை வாசித்தல் நிகழ்ச்சியை கடந்த  3 மாதங்களாக நடத்தி  வருகிறேன். இது நாலாவது நிகழ்ச்சி.  இதுவரை அசோகமித்திரன், தி.ஜானகி ராமன், புதுமைப்பித்தன் கதைகளை வாசித்துள்ளோம்.
இந்த முறை கு.அழகிரிசாமி.  எல்லோரையும் கலந்துகொள்ள அழைக்கிறேன்.    Meeting ID: 882 3278 0093 Password: 142292