ஒவ்வொருவருக்கும் கவிதை எழுத உந்துதல் வேண்டும். எனக்கு வள்ளலார்தான் கவிதை எழுத உந்துதல். எளிமையான வரிகளைக் கொண்ட அவர் பாடல்கள் என்னைக் கவர்ந்தன. பின் கணையாழி, தீபம் பத்திரிகைகளைப் படிக்கும்போது அவற்றில் பிரசுரமாகும் கவிதைகளையும் படிப்பேன்.
என்ஒன்றுவிட்ட சகோதரர் ஆரம்பித்த மலர்த்தும்பி என்ற சிற்றேடில்தான் என் கவிதைகள் முதலில் அரங்கேறின. அதற்கு முன்பே நான் கவிதைகள் எழுத ஆரம்பித்தாலும் எந்தக் கவிதையும் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரம் ஆகவில்லை. என் நண்பர் கவிஞர் எஸ்.வைத்தியநாதன் மூலம் ஞானக்கூத்தன், ஆர்.ராஜகோபாலன். ரா.ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன், ஆனந்த், காளி-தாஸ், ஆத்மாநாம் போன்ற நண்பர்கள் நட்பு கிடைத்த பிறகு, நான் எழுதிக் கொண்டிருந்த கவிதைத் தன்மை மாறி விட்டது.
ஆத்மாநாம் மறைவுக்குப் பின் ழ இதழைத் திரும்பவும் கொண்டு வர முயற்சி நடந்தது. அதில் நானும் பங்கெடுத்துக்கொண்டேன். ஆனால் ழ பத்திரிகையைத் தொடர்ந்து கொண்டு வர முடியவில்லை. எனக்குக் கவிதை போதை ஏறியதால் நான் விருட்சம் பத்திரிகையை ஆரம்பித்தேன். கடந்த 35 ஆண்டுகளாகக் கொண்டு வரும் இந்தப் பத்திரிகை கவிதை எதுவுமில்லாமல் பிரசுரம் ஆகாது.
நான் இதுவரை 400 கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு பெரிய புத்தகம் கொண்டு வரத் தீர்மானித்திருக்கிறேன். 1976ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறேன். இன்னும் எழுதி வருகிறேன்.
இன்றைய கவிஞர்கள் தாங்கள் கவிதை எழுத வேண்டுமென்று நினைக்கிறார்களே தவிர, இன்னொருவர் கவிதையை வாங்கிப் படிக்க வேண்டுமென்று நினைப்பதில்லை,இது பெரிய சோகம்.
நான் ஆரம்பத்தில் வள்ளலார் பாடல்களைப் படித்துக்கொண்டிருக்கும்போது எழுதிய கவிதை ஒன்றை இங்குத் தருகிறேன். அதன் பின் என் கவிதை எழுதும் முறை மாறிவிட்டது. இந்த மாற்றத்திற்குக் காரணம் நான் படித்த க.நா.சு, நகுலன், ஞானக்கூத்தன், பிரமிள், போன்ற இன்னும் பலருடைய கவிதைகள் காரணம்.
சமீபத்தில் நகுலனைப் பற்றி பேச்சு வந்தது. நகுலன் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை என்று எழுதியிருக்கிறார். மிகக் குறைவான வாசகர்களுக்காகவே அவர் எழுதியிருக்கிறார்.
1987ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுருதி’ என்ற புத்தகத்தின் பிரதி ஒன்று கிடைத்தது. இத் தொகுதியில் கடைசியில் இக் கவிதைத் தொகுதி பற்றி நகுலன் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
‘சமீபத்தில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் காரணமாகக் கவிதை, கதை, நாவல் இவைகளை எழுதுவது முக்கியமன்றி, அவைகளைப் பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவுக்கு வந்தேன்’ என்று எழுதியிருக்கிறார்.
அவருக்கு என்ன அனுபவம் கிடைத்தது அவர் அப்படி நினைத்தார் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை.
36 கவிதைகள் கொண்ட தொகுப்பை தாரணி பதிப்பகத்தின் ஸ்தாபகர் நகுலன் கவிதைகளைப் பிரசுர்த்துள்ளார்.
இன்னொன்றையும் குறிப்பிடுகிறார் நகுலன். ‘ எனக்கு வரும் கடிதங்களிலிருந்து என் கவிதைகளுக்குத் தரமான வாசகர்கள் இருக்கிறார்கள் என்பது மாத்திரமில்லை (இவர்களை எனக்கு முன்பின் தெரியாது), இவர்களில் சிலர் நல்ல கவிஞர்கள் என்பதையும் – பரவலாக அவர்கள் தெரியப்படவில்லை என்பது வேறு விஷயம் – நான் உணர்ந்தேன்.’
இரண்டாவது இந்தத் தொகுதியில் அட்டையில் நகுலன் கவிதைகளைப் பற்றி இப்படிக் குறிப்பிடப்படுகிறது. ‘நவீன கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் நகுலன்; எழுத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரையிலும் ஒரு சீரான தரத்துடன் எழுதி வருகிறவர். வார்த்தைகளுக்குள் சுலபமாக அடைபடாத விஷயங்களையும் தனது கவிதையில் கொண்டுவந்து விடுவது நகுலனின் தனித்துவம். இது உள்ளபடியே இவருடைய மகத்தான படைப்பாளுமையைக் காட்டுகிறது.’
இனிமேல் நகுலன் கவிதைகளுக்குள் போகலாம்.
முதலில் நகுலன் கவிதைகளைப் படிக்கும்போது இன்னும் எழுதியிருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.
உன் உலகத்தில் இருப்பது
தான் குதூகலமாக இருக்கிறது
சுசீலாவின்
கடிதத்திலிருந்து என்று எழுதியிருக்கிறார். மிகச் சாதாரண வார்த்தைகளில் ஆழமான கருத்தை முன் வைக்கிறார். இதுதான் நகுலன். இந்த வரிகள் கவிதையைப் படித்தபின் நம் மனத்திற்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்.
பெரும்பாலான நகுலன் கவிதைகள் தன் வயமான கவிதைகள். தன்னை உதாரணமாக எடுத்துக்கொண்டு கவிதை இயற்றுகிறார். உதாரணமாக ‘நான்‘ என்ற கவிதையைப் பார்ப்போம்.
வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
“யார்?”
என்று கேட்டேன்
“நான்தான்
சுசீலா
கதவைத் திற”
என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்
இதுவும் ஒரு அந்தரங்கமான கவிதை. கவிகுரலோன் சுசீலா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அவர் எதிர்பார்த்த தருணத்தில் யாரும் கதவைத் தட்டவில்லை. எதிர்பாராதத் தருணத்தில் கதவைத் தட்டுகிறாள். எப்போது கதவு திறக்குமென்று யார்தான் சொல்ல முடியும். கதவைத் திறக்க எப்போதும் காத்திருக்க வேண்டும். கதவைத் தட்டாமலே போய்விடலாம்.
நகுலனின் கவிதையைப் படிப்பவர்க்கு நகுலன் போல் குழப்புவார்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைப்பார்கள்.
ஆனால் உண்மையில் நகுலன் கவிதை மூலம் வேறு தரிசனத்தை வெளிப்படுத்துகிறார். தனிமை என்ற இந்தக் கவிதையைப் பார்ப்போம்.
தனிமை
நண்பர்கள்
வருகிறார்கள்
வந்த பின்
போகிறார்கள்
தனிமையில்
தள்ளப்பட்ட நான்
அவர்கள்
வந்ததா”
அல்லது
சென்றதா
உண்மையில் உண்மை
என்ற உள் போதத்தில்
என்னிடமிருந்தே
நான்
வந்துகொண்டும்
போய்க்கொண்டிருக்கிறேன்
நகுலனின் இந்தச் சிறப்பான கவிதையில் ஒரு உள் சுழற்சியை உருவாக்குகிறார். மனித மனம் ஒரு நிகழ்ச்சி முடிந்தாலும் அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக எதையோ நினைத்துக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் வந்தபோது நேரம் தெரியவில்லை. அவர்கள் போனபின்தான் அதுவும் தனிமையில் விடப்பட்டபோதுதான் தெரிகிறது.
அவர்கள் போனபின்னும் நண்பர்கள் இருப்பதாகவே தோன்றுகிறது.
இன்னொரு கவிதை.
இவைகள்
ஒரு பறவையின் நீலச் சிறகு
உன் உள் நோக்கிய பார்வை
நான் வீட்டைப் பூட்டிச்
சென்று வீடு திரும்பியதும்
வீட்டின் கதவிற்கு
முன் தளத்தில்
தபால்காரன்
விட்டெறிந்த
சிதறிக்கிடக்கும் கடிதங்கள்
என் வருகைக்காகக்
காத்துப் பதுங்கி
முகம் பதித்து
கண்கள் நட்டுக்
காத்திருக்கும்
அந்த மஞ்சள் நிறப்
பூனை.
கவிதையின் ஆரம்பத்தில் ஒரு பறவையின் நீலச் சிறகு கண்ணில் படுகிறது. உடனே உன் உள் நோக்கிய பார்வை என்கிறார். அதாவது அந்த நீல நிறச் சிறகு எப்படி வந்தது என்று யோசித்திருப்பார்போலிருக்குது
ஆனால் வீட்டைப் பூட்டிக்கொண்டு போய் விடுகிறார். திரும்பவும் வருகிறார். முன் தளத்தில் தபால்காரன் விட்டெறிந்த சிதறிக்கிடக்கும் கடிதங்கள். இங்கே அவர் வருகைக்காகக் காத்துப் பதுங்கி முகம் பதித்து கண்கள் நட்டுக் காத்திருக்கும் அந்த மஞ்சள் நிறப் பூனை.
இப்போது இந்த மஞ்சள் நிறப்பூனையையும் ஒரு பறவையின் நீலச் சிறகுடன் ஒப்பிடலாம். பூனையின் வன்முறை நீலநிறச் சிறகாகப் பதிவாகிறது. உள் நோக்கிய பார்வையில் தென்படுகிறது. இந்தக் கவிதை வேற எதுவும் சொல்லாமல் விடப்பட்டு விடுகிறது.
நகுலன் இறக்கும் போது கொரோனா இல்லை. அற்புதமான நேரம். கொரனாவால் நாம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நகுலன் கவிதை என்னைச் சித்திக்க வைக்கிறது. கவிதையைப் படிக்கும்போது இப்படிச் சிந்திக்க வைக்கும்போது அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கிறது. உள் என்ற கவிதையைப் பார்ப்போம்.
உள்
வீட்டிற்குள்
இருந்தோம்
வெளியில்
நல்ல மழை
ஒரு சொரூப நிலை
என்கிறார். இந்தக் கொரானா காலத்தில் நாம் நம்மைப் பார்க்க வேண்டிய நிலை. எங்கும் போகாமல் நாம் நம்மை உற்றுப் பார்க்கவேண்டிய நிலை. ஒரு சொரூப நிலைதான்.
மிகச் சிறிய வரிகள் கொண்ட கவிதைகளை எழுதியிருக்கும் நகுலன் ஒவ்வொரு கவிதையையும் படித்த பின் நம்மை யோசிக்க வைக்கிறார். நம்மையே நம்மை உற்றுப் பார்க்க வைக்கிறார். வாசகர்கள் தங்களை தானே உற்றுப் பார்க்க வைக்கிறார் நகுலன்
.( திண்ணை மின் வார இதழில் 14.03.2021 ல் பிரசுரமான கட்டுரை).
15Siragu Ravichandran, Suresh Subramani and 13 others3 Comments1 ShareLikeCommentShare
கடந்த 6 மாதங்களாக பெரும் முயற்சி செய்து விருட்சம் 115 & 116வது இதழ் கொண்டு வந்து விட்டேன். ஏன் ஒரு இதழ் இவ்வளவு தாமதமாகிறது? இது குறித்து இன்று இரவு பத்து மணிக்கு அழகியசிங்கருடன் உரையாற்ற உள்ளேன். இந்த இதழ் விருட்சம் 104 பக்கங்களுக்கு வந்திருக்கிறது. தனி இதழ் ரூ.50. இரண்டு இதழ்களின் சேர்க்கை. வழக்கம்போல நிறையா கதைகள், நிறையா கவிதைகள் என்றெல்லாம் இந்த இதழில் காணலாம். 1. கேள்விகள் – பதில்கள் உஷாதீபன் 2. கடற்கரை மத்த விலாச அங்கதம் கவிதைகள் 3. நீர் பள்ளம் – கவிதை – லாவண்யா சுந்தரராஜன் 4. க.சோமசுந்தரி கவிதை 5. கணேஷ்ராமன் கவிதைகள் 6. நாகேந்திர பாரதி கவிதை 7. இழப்பு – சிறுகதை – ஜெ.பாஸ்கரன் 8. ஒரு கவிதை – அழகியசிங்கர் 9. நட்பின் அலைகள் – கவிதை – ஜான்னவி 10.ஆயுள் – கவிதை – பி.ஜெகந்நாதன் 11.இன்னாருக்கு இன்னாரென்று-சிறுகதை-ஜெயராமன் ரகுநாதன் 12.லாங்ஸ்டன் கவிதை – மொ.பெ.சந்திரா மனோகரன் 14.தாயாதிக்காரன் – சிறுகதை – சத்யா ஜி.பி 15.நானும் எனது பேனாவும் – கவிதை – பொன் தனசேகரன் 16.திட்டம் – சிறுகதை – வளவ துரையின் 17. நிழல்களின் யுத்தம் – கவிதை – குமரி எஸ் நீலகண்டன் 18.இருண்மையும் கவிதையும் – பானுமதி.ந 20.தொலைநோக்கி – மொ.கவிதை-சுரேஷ் ராஜகோபாலன் 21..அதங்கோடு அனிஷ் குமார் கவிதைகள் 22..பானுமதி ந. கவிதைகள் 23.எல்லாம் சரி – குறுங்கதை – அழகியசிங்கர் 24.உருமாற்றம் – வ.வே.சு 25.அம்மு-சிறுகதை – ஸிந்துஜா 26.நானும் பராசக்தியும் நலம் – சுப்பு 27.எனது பிருஷ்டங்களுக்குச் சில வாழ்த்துகள் தமிழில் : ஞானக்கூத்தன் 28.மூன்று அடிகள் – வைதீஸ்வரன் 29.ஒரு கதையின் விமர்சனம் 30.பாரதி ஒரு சந்திரகாந்த் 31. விமர்சனங்கள் அன்றும் இன்றும் 32. நண்பனின் அலைப்பேசி எண் – கவி-நா.கிருஷ்ணமூர்த்தி 33. உரையாடல்
நவீன விருட்சம் இரட்டை இதழில் (115-116) பங்குகொண்டு பொறுமையாக விருட்சம் இதழ் வரும்வரை காத்திருந்த படைப்பாளிகளுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
எல்லோருக்கும் வணக்கம். இன்று தடுப்பு ஊசி போய்ப் போட்டுக்கொண்டு வந்துவிட்டேன்.
“இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஆனால் எனக்குச் சொல்வதற்கு இருக்கிறது.
கோவிந்தன் ரோடில் உள்ள ஒரு கார்ப்பரேஷன் மருத்துவமனைக்கு முதலில் போனேன். நானும் மனைவியும்.
பிபியும் சுகரையும் நான் எப்போதும் சுய பரிசோதனை செய்து கொண்டிருப்பேன். அவை இரண்டும் என் உடன் பிறப்புகள்.
இன்று காலையில் அப்படி சுயப் பரிசோதனை செய்தபோது சரியாக இருந்தது எல்லாம்.
நாங்கள் இருவரும் மருத்துவ மனைக்குச் சென்றோம். கூட்டம் சுமாராக இருந்தது.
எங்கள் இருவருக்கும் பிபியைப் பார்த்தார்கள். அதிகமாகக் காட்டியது. சிறிது நேரம் உட்காரச் சொன்னார்கள்.
உட்கார்ந்தோம். திரும்பவும் சோதித்தார்கள். முன்பு இருந்ததை விட ரீடிங் அதிகமாகக் காட்டியது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்காவது பரவாயில்லை. என் மனைவிக்கு ஏன் அப்படிக் காட்டியது என்று தெரியவில்லை.
மருத்துவ மனையில் இருப்பவர்கள் நீங்கள் பார்க்கும் மருத்துவரிடம் அனுமதிச் சீட்டு வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்.. அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது ஒரு ஆட்டோகாரர் எங்களை விசாரித்தார்.
“சுகரும், பிபியும் இருக்கிறது என்ன சார் பண்ணுவது?” என்று கேட்டார். பதில் சொல்லமுடியாமல் வந்து விட்டோம்.
நாங்கள் அங்கிருந்து மருத்துவர் ஜெ.பாஸ்கரனைப் பார்க்க மாம்பலத்தில் உள்ள பப்ளிக் ஹெல்த் சென்டருக்கு வந்தோம்.
அங்குள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இடத்திற்குச் சென்றோம். தடுப்பூசியைப் போடுவதற்கு முன் பிபி செக் பண்ணுவதில்லை என்று குறிப்பிட்டார்கள். அங்கிருந்து போனில் டாக்டர் ஜெ.பாஸ்கரனைத் தொடர்பு கொண்டேன். அவர் ஒரு ஏழுபேர்களுக்கு ஊசி போடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். நாங்களும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டோம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. அவர்கள் எல்லோரும் முகத்தில் கவலையை வைத்துக்கொண்டு இருப்பதாகப் பட்டது. பப்ளிக் ஹெல்த் சென்டரில் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டோம். தடுப்பூசிப் போடுவதற்கு முன் எந்த பிபியும் செக் பண்ணவில்லை. அது தேவையுமில்லை. என் பதட்டம்தான் பல மடங்கு பிபி உயர்வதற்குக் காரணமாக இருக்கிறது.
இந்தப் பதட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறேன்.\ தடுப்பூசிப் போட்டு வீட்டிற்கு வந்தபிறகு நன்றாகத் தூங்கினேன். எழுந்தவுடன் நான் வைத்திருக்கும் பிபி கருவியை எடுத்து செக் பண்ணினேன். எப்போதும் போல் சரியாகக் காட்டியது?
மார்ச் ஒன்றாம் தேதி ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்துகொண்ட தேதி.
18.05.1995ஆம் ஆண்டு ஸ்டெல்லா புரூஸ் ஒரு புத்தகம் கொடுத்தார். அது ஒரு சிறுகதைத் தொகுப்பு. அப்புத்தகத்தின் தலைப்பின் பெயர் கற்பனைச் சங்கிலிகள். 10 கதைகள் கொண்ட தொகுப்பு நூல். நான் உண்மையிலேயே இந்தப் புத்தகத்தை மறந்து விட்டேன்.
இது ரொம்ப மோசமான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. 95ல் கொடுத்த புத்தகத்தை ஏன் படிக்காமல் விட்டேன்? இது மாதிரி பல புத்தகங்களை நான் படிக்காமல் வைத்திருக்கிறேன். யாராவது கொடுக்கிற புத்தகம் மட்டுமல்ல, நான் வாங்குகிற புத்தகங்களையும் நான் மறந்து விடுகிறேன்.
இந்தப் புத்தகத்தின் முதுகில் எலி கடித்து சற்று வீனாகிவிட்டது. சரி, இந்தக் கதையைப் பார்ப்போம். இந்தக் கதை எப்போது வந்தது என்று தெரியாது. இதுதான் ஞானரதத்தில் வந்த ஸ்டெல்லா புரூஸின் முதல் கதை என்று நினைக்கிறேன். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஸ்டெல்லா புரூஸ் ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர். என்ன அவருக்கு அந்தத் தத்துவம் பயன்படவில்லை. ‘அப்பாவிற்கு மட்டும்’ என்று கடிதத்தை எழுதிவிட்டு ஓடிப்போனான் என்று ஆரம்பிக்கிறது கதை.
‘வாழ்க்கையில் எனக்குச் சந்தோஷமில்லை என்னைத் தேட வேண்டாம்’ என்று எழுதிவிட்டு ஓடிவிடுகிறான்.அவன் மனைவி சந்திரவதனின் முகத்தில் எப்போதும் பிரபை கொண்டிருக்கும் பிரகாசம். அண்ணன் ஓடிப்போனதால் எதுவும் அணைந்துவிடவில்லை. அவள் எப்போதும்போல் இருக்கிறாள். இந்தக் கதை கல்யாணமாகாத தம்பி மூலம் சொல்லப்படுகிறது.
அப்பாவிற்கு அண்ணியைப் பற்றித் தெரியாது என்கிறார் கதைசொல்லி . தம்பி ராஜாப்பா அண்ணியிடம் பேசுகிறான். அண்ணி சந்திரவதனி ரொம்ப சாதாரண நிகழ்ச்சி மாதிரி அதைக் குறிப்பிடுகிறாள்.
‘எது எப்படி நடந்தாலும் அதை அதை அப்படி அப்படியே ஒத்துக் கொள்கிறவதானே’ என்கிறாள். இன்னொன்றும் சொல்கிறாள் இப்பத்தான அவர் ஓடியிருக்கார்னு நெனைச்சுடாதே. மனசுக்குள் அவர் ஓட ஆரம்பிச்சு ரொம்ப நாளாயிடுத்து என்கிறாள். இந்தக் கதையே தம்பி ராஜாப்பாவிற்கும் அண்ணிக்கும் நடக்கிற உரையாடல்தான்.
அப்படி உரையாடலில்தான கிருஷ்ணமூர்த்தியின்உரையாடல் வெளிப்படுகிறது. உண்மையில் ராஜாப்பா அண்ணியை வழிபடுகிறான். கதையில் சந்திரவதனிக்கும் அவள் கணவனுக்கும் விவாதம் ஏற்படுகிறது. ‘இன் ட்ரூ ùஸன்ஸ் – ஆல் மீனிங்ஸ் – ஆல் மீனிங்ஸ் ஆர் மீனிங்லெஸ் – அதான் நான் சொல்றது. உங்களோட ‘ஸன்ஸ்படி எல்லாத்துக்குமே அர்த்தம் இருக்கு..அது ஒரு பெரிய விஷயமில்லை. அருமையான அர்த்தமோ, ஆபாசமான அர்த்தமோ எல்லாம் ஒண்ணுதான்..இந்த அர்த்தமெல்லாம் என்னாச்சு..ஒரு ஐடியாவிற்கு அனதர் ஒன் ஐடியா..அவ்வளவுதானே? ஒரு ஐடியா என்கிறது ஒரு கற்பனை . ஒரு வார்த்தைங்கறது – வெறும் ஸிம்பல். அப்புறம் என்னத்துக்கு. ஒவ்வொண்ணுக்கும் ஒரு அர்த்தம் சொல்லிண்டு வாழ்க்கையே அர்த்தமில்லாமே ஆக்கிண்டு…?
அவள் பேசப் பேச அவள் கணவன் அதை ஏத்துக்கலை. அவள் மீது அவனுக்கு வெறுப்புதான் வருகிறது. சந்திரவதனி கல்யாணம் ஆகி அவர்கள் வீட்டுக்கு வந்த மறுநாள் – சரியாக விடியக் கூட இல்லை. சூரிய உதயம் பார்க்க அவள் கணவனைக் கடற்கரைக்கு அழைத்தாள். அவன் அதை மறுத்து விடுகிறான். அவன் தம்பி ராஜாப்பாவைக் கூப்பிடுகிறாள்.
அவன் தயங்குகிறான். உடனே அவள், ‘எனக்காக வரவேண்டாம். உனக்கே தோணினா வா.’.என்கிறாள். இதுதான் அவள். தாட்சண்ணியமே இல்லாமல் அவள் இப்படிப் பேசுவது பலரின் மனநிலையைக் காயப்படுத்தி விடுகிறது. அன்றுதான் ராஜாப்பாவிற்கு புதிய ஊற்றுக் கண் திறந்தது. கல்யாணம் ஆகாத ராஜாப்பா ஒரு பெண் எதுமாதிரி தன் மனைவியாக வர வேண்டுமென்று நினைக்கிறான். அண்ணியைப் போல் ஒருத்திதான் தனக்கு மனைவியாக வரவேண்டுமென்று உறுதியாக நம்புகிறான். அண்ணா ஓடிப்போய் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.
ராஜாப்பாவின் அப்பா அண்ணிக்காவது ஒரு பேச்சுத் துணைக்காக நீ கல்யாணம் செய்துகொள் என்கிறார்.
ராஜாப்பா இதைப் பற்றி அண்ணியிடம் பேசுகிறான். உடனே அண்ணி, ஆண் – பெண் அப்படிங்கற பேதமே எனக்குக் கிடையாது…என்கிறாள். ராஜாப்பா நினைக்கிறாப்போல ‘என் மன வெளியில் ஒரு வீர்யமான காற்று வீசியது’ என்கிறார் கதாசிரியர்.
பிடிச்சவா பிடிக்காதவான்னு எனக்குள்ளே பிரிவே கெடையது.. என்று அவள் சொன்னதும், அவனுக்குள் சில புதிய ஜன்னல்கள் திறந்து கொண்டன என்கிறார் கதாசிரியர். அண்ணியை ஆராதிக்க ஆரம்பித்து விட்டான் ராஜாப்பா அண்ணி மீது அவனுக்குக் காதல் மலர்ந்து விட்டது. அவளைப் போன்ற பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டுமென்று நினைக்கிறான்.
பீச்சில் இருக்கும்போது அண்ணியின் கையைப் பிடித்துக்கொண்டு, ஸôரி, அண்ணி, இன்னும் என்னாலே என்னையே ஏமாத்த முடியலை. வெளியில சொல்லாமே இருக்க முடியலை. என்னை மன்னிச்சிடு..இந்த உலகத்ல் நான் காதலிக்கிற ஒரே பெண் நீதான் அண்ணி..ஐ லவ் யூ என்கிறான்.
இதைச் சொன்னபிறகு அண்ணியின் முகத்தைப் பார்க்கிறான். எந்தச் சலனமுமின்றி இயல்பான பிரகாசத்தின் மந்தகாசம் கொண்டிருந்தது.. ‘பெண் பத்தின ஐடியல்லோட மொத்த உருவமா நான் இருக்கிறதாலேதான் என்னை மட்டும் நீ லவ் பண்றே’ என்கிறாள் சந்திரவதனி. இன்னும் சொல்கிறாள். ‘ லவ் பண்றது என்பது உன்னையே லவ் பண்றதுங்கறது. உன்னையே லவ் பண்றதுதானே தவிர வேற ஒண்ணுமில்லை.
இந்தக் கதை முழுவதும் ஆங்கிலமும் தமிழிலும் கலந்து எழுதியிருக்கிறார் கதாசிரியர். கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தையும் விடவில்லை. லவ்பற்றி சொல்லும்போது இன்னும் சொல்கிறார். ‘உன்னை மட்டும் லவ் பண்ணவில்லை. இந்தக் கடலை லவ் பண்றேன். அந்தச் சூரியனை லவ் பண்றேன். மிதந்து போகிற மேகத்தை. பறந்து திரியற பறவையை ஆடி அசையற பூவை இப்படிப் பேதமே இல்லாமே எல்லாரையும் எல்லாத்தையும் நான் லவ் பண்றேன்..ராஜப்பா…ஐ லவ் எவ்ரிதிங் அண்டர்த ஸன்’ என்கிறாள். சந்திரவதனி;.
அன்று கடற்கரையில் பேசிவிட்டு வீடு திரும்பும்போது வீடு முழுவதும் விளக்கு வெளிச்சத்தில் மிதந்து கொண்டிருந்தது. அவனுடைய அண்ணா வீட்டிற்கு வந்திருக்கிறான். ராஜாப்பாவும் அண்ணியும் வருகிறோமா என்பதைப் பார்ப்பதற்காக அண்ணா திண்ணையில் வந்து அப்பாவுடன் நின்று கொண்டிருந்தான் என்று கதை முடிகிறது.
இந்த இடத்தில் பெரிய சந்தேகமே வருகிறது. ராஜாப்பாவும் அண்ணியும் வருவதை அண்ணன் எப்படி ஏற்றுக்கொள்வான்? அண்ணியுடன் பழகும்போது அவள் ஒரு பெண் என்று தோன்றுகிறது. அவள் கையைப் பிடிக்கும்போது அவளிடம் தனக்கு செக்ஸ் உணர்வு இருப்பதுபோல்தான் ராஜாப்பாவிற்குத் வெளிப்படுகிறது. என்னதான் ஜே.கிருஷ்ணமூர்த்தி தத்துவம் பேசினாலும் செக்ஸ் என்கிற அடிப்படை உணர்வு போகாது என்று நிச்சயமாக நம்பலாம்.( தமிழின் முதல் இணைய பத்திரிகை திண்ணையில் 07.03.21ல் வெளிவந்தது)
20You, Sundar Gopalakrishnan, Suresh Subramani and 17 others6 CommentsLikeCommentShare