47வது கவிதை நேசிக்கும் கூட்டம்

துளி – 186

அழகியசிங்கர்

கவிதை நேசிக்கும் கூட்டத்தை நேற்று நடத்தினேன். இது 47வது கூட்டம்.  நண்பர்களின் துணையின்றி நடத்தியதில்லை.  மற்றவர்களுடைய கவிதைகளை வாசித்தோம்.


பலருடைய கவிதைகளை வாசித்தோம்.  நான் ரெங்கநாயகி கவிதையையும், ஆத்மாநாம் கவிதையையும் வாசித்தேன்.

மனுஷ்யபுத்ரன் கவிதைகளை தமிழ்ச்செல்வி என்ற கவிஞர் வாசித்தார்.  திருலோகசீத்தாராம் கவிதையை வ.வே.சு வாசித்தார்.  இப்படிப் பலர் வாசித்த கவி அரங்கம் சிறப்பாக முடிந்தது.


கூட்ட ஆரம்பத்தில் நான் விருட்சம் இதழிலிருந்து ஒரு கவிதை வாசித்தேன்.  காசியபன் கவிதையை வாசித்தேன்.  பின் ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகம் செய்தேன்.


நான் அறிமுகம் செய்த கவிதைப் புத்தகம் பெயர்.  ஜிதேந்திரனின் புத்தகம்.  ‘கல் சூடாக இருக்கிறது.’ 


108 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின்  விலை ரூ.100. சந்தியா பதிப்பக வெளியீடாக  வந்துள்ளது.

இதிலிருந்து நான் படித்த கவிதையை இங்கு வெளியிடுகிறேன்.

எத்தனை கவனமிருந்தும்

நிகழ்ந்துவிடுகிறது விபத்து.

மோதிக் கொன்றோம்

நானும் ரயில் பூச்சியும்!


என் சக்கரத்தில்

நசுங்கியது ரயில்.

ரயிலோட்டத்திற்கு நிற்கும் நான்

ரயில்பூச்சிக்கு நின்றிருக்கலாம்!


இப்பொழுதெல்லாம் 

என்னை முந்திச் செல்கின்றன

ரயில் பூச்சிகள்.

பிறகொரு பொழுதில்

ஒன்றின்மீது ஒன்றாக

ரயில்பூச்சிகள் நகர்கையில்

உதட்டில் சிறு புன்னகையோடு நானும்

ஊர்ந்து சென்றேன்!


46வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

17.04.2021

46வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 10.04.2021 அன்று சனிக்விழûமை 6.30 மணிக்கு நடந்தது.

அழகியசிங்கர்

அதில் கலந்து கொண்டவர்கள் வாசித்தவர்களின் கவிதை ஒளிப்பதிவு. கேட்டு மகிழுங்கள். 

47வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 17.04.2021 அன்று சனிக்கிழமைûமை 6.30 மணிக்கு.

அழகியசிங்கர் 

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 47வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 17.04.2021 நடைபெற உள்ளது. 


இந்தக் கவி அரங்கத்தில் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்க வேண்டும்.  உங்கள் கவிதைகளை வாசிக்கக் கூடாது. 

நீங்கள் நேசிக்கும் கவிஞர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.  அவர்களை ஞாபகப்படுத்துகிற  கவிதைகள் வாசிக்க வேண்டும்.

நிகழ்ச்சியைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.  

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் ஒன்பதாவது கதை வாசிக்கும் கூட்டம் 09.04.2021 அன்று நடந்தது.


அழகியசிங்கர் 

சதுர்புஜன், இராயசெல்ப்பா என்ற இரு கதைஞர்களின் கதைகளை தேர்ந்தெடுத்து 12 நண்பர்கள் கதைகளின் சிறப்புகளைச் சொன்னார்கள்.   அதை சூம் மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளோம்.  அதைக் கண்டு ரசியுங்கள்.

என் நூல் நிலையத்தில் அட்சரம் இதழ் கிடைத்தது

அழகியசிங்கர்

இன்று கடைகளுக்குச் சென்று அவசியமான பொருட்களை வாங்கிக்கொண்டேன்.  கொரோனா உலவும் தெருக்கள் வழியாகத்தான் போக வேண்டியிருந்தது. போஸ்டல் காலனி முதல் தெருவில் நுழைந்து என் நூல்நிலையம் இருக்கும் வீட்டிற்குள் நுழைந்து மொட்டை மாடியில் மாவிலைகள் பறித்துக் கொண்டு வந்தேன்.  


உள்ளே நூல் நிலையத்திற்குள் சென்று புத்தகங்கள் பத்திரமாக உள்ளதா என்று பார்த்துக்கொண்டேன். ஒரு கையடக்கப் பதிப்பாகத் திருவாசகத் தெளிவுரை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தேன்.  கழக வெளியீடு. சித்தாந்த பண்டிதர் ப இராமநாதப்பிள்ளை உரை ஆற்றியது. 


‘அவனரு ளாளே அவன்தாள் வணங்கி’  என்ற வரி உடனே படித்த ஒரு பக்கத்தில் என்னைப் பிடித்துக்கொண்டது. அப்புறம் ஒரு பழைய இதழ் ‘அட்சரம்’ கண்ணில் பட்டது.  படிக்கலாமென்று எடுத்து வைத்துக்கொண்டேன்.  ஐந்தாவது இதழ் 2003 செப்டம்பர் மாதம் அச்சடிக்கப்பட்ட இதழ்.எஸ்.ராமகிருஷ்ணன் ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்த இதழ். சிறப்பாக உள்ளது.


இரண்டு புத்தகங்களையும் பையில் போட்டுக்கொண்டேன்.
வீட்டிற்கு வந்து விட்டேன்.  முகநூலைப் படிக்கும்போது எஸ்.ராமகிருஷ்ணன் பிறந்த நாள் இன்று என்று தெரிந்தது.என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  அவர் அட்சரம் பத்திரிகை எடுத்துக்கொண்டு வந்தது தற்செயலான விஷயம். ஆயிரத்தோரு இரவுகளின் சிறப்பிதழ்.   

கவிதையும் ரசனையும் – 14- ஆத்மாநாம்

இந்தப் பகுதியில் இதுவரையில் ஆத்மாநாம் பற்றி எதுவும் எழுதியதில்லை.  ஏன்?  உண்மையில் நான் ஆத்மாநாம் கவிதைகளைப் பற்றி இரண்டு மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தத் தொடரில் அவருடைய சில கவிதைகளை எடுத்து எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.

            ஆத்மாநாம் உயிரோடு  இருந்தபோது நான் இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன்.  ஒரு முறை கவிஞர் வைத்தியநாதனுடன் ஆத்மாநாமைச் சந்தித்திருக்கிறேன். வேறு ஒரு நண்பர் வீட்டிற்குப் மூவரும் போனோம்.  அப்போதுதான் 

           நான் ஆத்மாநாமிடம் அந்தக் கவிதையைப் பற்றி அர்த்தம் கேட்டேன்.

நிஜம்

நிஜம் நிஜத்தை நிஜமாக 

நிஜமாக நிஜம் நிஜத்தை 

நிஜத்தை நிஜமாக நிஜம் 

நிஜமே நிஜமோ நிஜம் 

நிஜமும் நிஜமும் நிஜமாக 

நிஜமோ நிஜமே நிஜம் 

நிஜம் நிஜம் நிஜம்

என்ன அர்த்தம் என்று சொல்லவில்லை.  ஆத்மாநாம் சிரித்துக்

கொண்டார். ஞானக்கூத்தன் இந்தக் கவிதையைக் குறித்துச் சொன்ன விஷயம் இன்னும் விசேஷ கவனம் பெற்றது.  

            முதலில் ஆத்மாநாம் இந்தக் கவிதையை எழுதிக்கொண்டு ஞானக்கூத்தனிடம்தான் படிக்கக் கொடுத்தார்.  ஞானக்கூத்தன் அதைப் படித்துவிட்டு சிரியோ சிரி என்று சிரித்தாராம்.

          இப்படி விதம்விதமாய் எழுதி சோதனை செய்து பார்ப்பதில் ஆத்மாநாமிற்கு விருப்பம்.  இதில் நிஜம் எது?  நிஜம் என்று நம்பிக்கொண்டிருக்கும்போது நிஜம் மாறிவிடுகிறது.  நேற்றைய நிஜம் இன்றைய நிஜம் இல்லை.  இன்று நிஜம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது நாளை மாறிவிடும்.

          உண்மையில் நவீன கவிதை என்பது ஆத்மாநாமிடம்தான் ஆரம்பிக்கிறது. 

          அவர் பெரும்பாலும் தன்னைப் பற்றிய கவிதைகளையே எழுதியிருக்கிறார்.  தன் சிந்தனையில் தோன்றுகிற தாறுமாறான எண்ணத்தையும் கவிதை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

          அவருடைய கவிதைகளில் பொது உடைமை தத்துவமும் உண்டு. 

                               பிச்சை

                     நீ ஒரு பிச்சைக்காரனாய் போ

                     பிச்சை பிச்சை என்று கத்து

                     உன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை.

                     எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும்

                     உன் பசிக்காக உணவு

                     சில அரிசி மணிகளில் இல்லை 

                     உன்னிடம் ஒன்றுமே இல்லை

                     சில சதுரச் செங்கற்கள் தவிர”

                     உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை

                     உன்னைத் தவிர

“                   இதனைச் சொல்வது

“                   நான் இல்லை நீதான்

          ஆத்மாநாமின் இந்தக் கவிதை ஒரு முக்கியமான கவிதை.  உண்மையில் பிச்சையைப் பற்றி ஒரு தத்துவத்தையே கொண்டு வருகிறார்.  இதேபோல் சமூக சிந்தனை அதிகமாக உள்ளது இவர் கவிதைகளில்.   கடைசி வரியில்  ‘இதனைச் சொல்வது நான் இல்லை நீதான்,’ என்கிறார்.

          இந்தக் கவிதை மூலம் ஒரு தீர்ப்பும் கூறுகிறார்.  பிச்சையை நீக்க முடியாது என்கிறார். உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை.  அப்படியென்றால் யாரிடம் இருக்கிறது.  இன்றைய அரசியல்வாதியிடம்.  அவர்கள் நினைத்தால் யாரும் பிச்சை எடுக்காமல் ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியுமா?  ‘சில அரிசி மணிகளில் இல்லை’ என்கிறார் ஆத்மாநாம்.

          ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தைக் கூறுவதுபோல் தோன்றுகிறது. அடிக்கடி ஆத்மாநாம் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கூட்டங்களுக்குச் செல்வார்.

          முன் யோசனை எதுவுமின்றி கவிதை எழுத வேண்டுமென்று நினைக்கிறார் ஆத்மாநாம்.  அவருடைய கவிதை தலைப்பிடப்படாதது என்ற கவிதையைப் பார்க்கலாம். இது ஆத்மாநாமின் அற்புதமான கவிதை. 

          எடுத்த உடனே, 

          இந்தக் கவிதை

          எப்படி முடியும் 

          எங்கு முடியும் 

          என்று தெரியாது

          திட்டமிட்டு முடியாது

          என்றெனக்குத் தெரியும்

          இது முடியும்போது

          இருக்கும் (இருந்தால்) நான்

          ஆரம்பத்தில் இருந்தவன்தானா

          ஏன் இந்தக் கேள்வி

          யாரை நோக்கி

          இன்றிரவு உணவருந்தும் 

          நம்பிக்கையில் இங்கிருப்பேன்

          இப்படியும் ஓர் நம்பிக்கை

          இருந்த நேற்று

          எனக்கிருண்ட கணங்கள்

          அவற்றின் தவளைக் குரல்கள்””

          கேட்கும் அடிக்கடி

          அதனை ஒதுக்கத் தெரியாமல்”

          தவிக்கையில்

          நிகழ்ச்சியின் சப்தங்கள்

          செவிப்பறை கிழிக்கும்

          நாளை ஓர் ஒளிக்கடலாய் 

          கண்ணைப் பறிக்கும்

          இருதயம் 

          இதோ இதோ என்று துடிக்கும்

          ஆத்மாநாமின் தன்னைப் பற்றிய கவிதை.  இம்மாதிரியான ஒரு கவிதையை ஆத்மாநாமை தவிர வேற யாரும் எழுதியிருக்க முடியாது.  தன்னைப் பற்றி வெளிப்படுத்தும்போது தன்னையே உரித்து கவிதை மூலம் காட்டுகிறார்.  

          இதில் ஒரு வரி வருகிறது.

          இருண்ட நேற்று 

          எனக்கிருண்ட கணங்கள்

அவர் ஏன் அப்படி எழுதியிருக்கிறார்.  அவருடைய மனக் கிலேசத்தைத்தான் அவர் அப்படி எழுதியிருக்கிறார்.

          நிகழ்ச்சியின் சப்தங்கள்

          செவிப்பறை கிழிக்கும்

ஏன் இப்படி எழுதியிருக்கிறார்?  மென்மையான மனம்  கொண்ட ஆத்மாநாமிற்கு நிகழ்ச்சியின் சப்தங்கள் அலற வைக்கின்றன.  இப்படிப்பட்ட சூழலில் இந்தக் கவிதை எப்படி முடியும் என்று தெரியாதுதான்.  முடியும் போது ஆரம்பத்தில் இருப்பவன்தானா என்ற கேள்வியைக் கேட்கிறார். மனநிலை என்பது எப்படி ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறுகிறது.  அப்படி மாறும்போது எதுவும் நிரந்தரமில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். 

          2083 ஆகஸ்ட் 11 என்ற கவிதையை ஒரு இன்லென்ட் லட்டரில் பதிவு எடுத்து அவர் நண்பர்கள் எல்லோருக்கும் அனுப்பினார் ஆத்மாநாம்.

          அது ஒரு வினோதமான கவிதை.  ‘என் கவிதை ஒன்று இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில் கிடைத்தது  என்று ஆரம்பிக்கும்.  இறுதி வரிகளில் ஒரு திகைப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

          அப்பொழுதுதான்

          ஒரு அணுகுண்டு வெடித்த

          சப்தம் கேட்டது

          இருவரும் 

          அகதிகள் முகாமிற்குத் திரும்பினோம் என்று முடித்திருப்பார்.   இந்த விபரீதமான வரிகள்தான் கவிதை.

          இன்று புதிதாக எழுத வருகிற கவிஞர்களுக்கு ஆத்மாநாம் ஒரு முன்னோடி.  கொண்டாடப்பட வேண்டியவர்.  

46வது கவிதை வாசிப்பு கூட்டம்…

அழகியசிங்கர்

கவிதை வாசிக்கும் கூட்டம் ஆரம்பித்து நேற்றுடன் 46வது கூட்டம் முடிந்து விட்டது.

சமீப காலங்களில் ஒவ்வொரு கூட்டம் போது ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறேன். இது ஒரு வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறேன்.

நேற்று நடந்த கூட்டத்தில் லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைப் புத்தகமான கேட்பவரே என்ற கவிதைத் தொகுதியை அறிமுகப்படுத்தினேன்.

இந்தப் புத்தகம் 2016ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  320 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. விலையும் ரூ.320.

எப்போதும் கவிதைப் புத்தகம் அறிமுகப்படுத்தும்போது அந்தப் புத்தகத்திஙூருந்து ஒரு கவிதையை வாசிப்பது வழக்கம்.

நான் வாசித்த கவிதையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
        தோற்றங்கள்


குழந்தைகளின் கண்களில் தோன்றுவது
அவனது கண்களில் தோன்றுவதில்லை

மனைவியின் கண்களில் தோன்றுவது
குழந்தைகள் கண்களிலும் அவனது கண்களிலும்

தோன்ற மறுக்கின்றன
வீடு ஒரே சமயத்தில் குழந்தைகளின், மனைவியின்
அவனின் மற்றும் என தோற்றங்களைப்
பெருமூச்சுடன் பார்க்கத் தொடங்கும்போது
சுவர்களை சிறகென அசைத்தபடி
அறைகளின் வெற்றிடங்களில்
நிரம்பியிருக்கும் தோற்றங்களின் அசைவுகளையும்
சுமந்தபடி வீடு
மெல்ல மேலெழும்புகிறது.
அவன் கண்களில் தோன்றியவற்றையெல்லாம்
கதை கதையாய் சொல்ஙூ கட்டி எழுப்பிய
கணிதச் சுவர்கள் அவை
மேலெழும்புவதைத் தோன்றத் தெரியாமல்
தனது கண்களில் வலுவாக உட்கார்ந்திருக்கிறான்
அவன்.

இந்தக் கவிதையை வாசிக்கும்போது யாருக்காவது இந்தப் புத்தகத்தை வாங்கி வாசிக்க வேண்டுமென்று தோன்றும்.

இதோ புத்தக விபரம்.

கேட்பவரே - கவிதைகள் - லக்ஷ்மி மணிவண்ணன் - வெளியீடு : படிகம், 4-184 தெற்குத் தெரு, மாடத்தட்டுவிளை, வில்லுக்குறி - 629 180, கன்னியாகுமரி - பக்கம் : 320 - விலை ரூ.320

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 46வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

 அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 46வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 10.04.2021 அன்று  நடைபெற உள்ளது.  


இந்த முறை எல்லோரும் கவிதை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  
யார் யார் கலந்துகொள்கிறார்களோ அவர்களுடைய கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  எந்த வகையான கவிதைகளையும் வாசிக்கலாம்.


மகிழ்ச்சியுடன் கவிதைகளை வாசியுங்கள்.  மற்றவர்கள் கவிதைகளையும் கேட்டு மகிழுங்கள். உங்கள் கவிதைகளைத் தவிர வேற யார் கவிதையும் நீங்கள் வாசிக்கக் கூடாது.  


உங்கள் கவிதைகளை வாசிப்பதில் நீங்கள் பெருமைப் படுங்கள்.


Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 46வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி


Time: Apr 10, 2021 06:30 PM India


Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/83074429919…Meeting ID: 830 7442 9919Passcode: 597037

05.04.2021
துளி – 183
அந்தத் தெருவிற்குப் போயிருக்கவே கூடாது

அழகியசிங்கர்

ஆமாம். அந்தத் தெருவிற்கு நான் நுழைந்திருக்கவே கூடாது.
தெரியாமல் நுழைந்து விட்டேன்.  தவிர்த்திருக்கலாம். மேலும் அந்தப் பழைய பேப்பர் போடும் கடையைப் பார்த்திருக்க வேண்டாம்.  பார்த்தும் விட்டேன்.
மாத நாவல்கள் வரிசையாக ஒரு டேபிள் முழுவதும் நிரம்பி  வழிந்தன.  அதை எதையும் தொடவில்லை.


புத்தகங்கள் குவித்து வைத்திருக்கும் இடத்தில் என் பார்வை போயிற்று.
  எல்லாம் ஆங்கில நாவல்கள். எப்படி ஒரே நாளில் பணக்காரனாவது என்ற ரீதியில் புத்தகங்கள்.  வாழ்க்கையில் இன்னும்  சிலரிடம் எப்படிப் பழகுவது என்பதுபோல் புத்தகங்கள்.  பைபிள்,அகராதி   பயன்படுத்தாத பழைய டைரி. சிட்னி ஷெல்டன் கட்டாயம் இருக்கும்.  இங்கே புத்தகம் வாங்கும்போது எனக்கு மட்டும் கிலோ ரூ.80 கொடுப்பார்கள்.  எனக்கு மட்டும்தான் இந்தச் சலுகை.  மற்றவர்களுக்கு ரூ.100.
ஆனால் அவர்களிடம் உங்கள் புத்தகங்களைப் போடக் கொடுத்தால் கிலோ ரூ.7 என்று வாங்கிக்கொள்வார்கள்.
தேடும்போது ஒரு தமிழ் நாவல் கிடைத்தது.  இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள்.
எடுத்து வைத்துக்கொண்டேன்.  உள்ளே புரட்டிப் பார்த்தேன். திகைத்து விட்டேன். வட்டார நூலகம், அசோக் நகருக்குச் சொந்தமான புத்தகம்.
20.08.2019 இந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.  இந்தப் புத்தகத்தைப் பேப்பர் கடையில் போட்டால் என்ன கிடைத்துவிடும்?
பேப்பர் காரனிடம் பேரம் பேசினேன்.   “இது என்ன விலை?”
“ஐம்பது ரூபாய்.”
“இது திருட்டுப் புத்தகம்.  நூலகத்திலிருந்து திருடி வந்தது.  விற்பதே குற்றம் என்றேன்.எத்தனைப் பேர்கள் இந்தப் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்துப் படிப்பார்கள் தெரியுமா?”
“எனக்கு என்ன சார் தெரியும்”
“பார்த்து வாங்க வேண்டாமா?”
“புத்தகங்களோடு புத்தகமாக எடைக்குப் போடுகிறார்கள்.  எல்லாவற்றையும் பார்க்க முடியுமா?”


“சரி, நான் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொள்கிறேன்.  ஆனால் நான் படித்துவிட்டு நூலகத்திற்குத் திருப்பிக் கொடுத்து விடுவேன்.   அப்பக் குறைவா விலைக்குக் கொடுங்கள்.”


“முப்பது ரூபாய், சார்.”


நான் முப்பது ரூபாய் கொடுத்தேன்.  

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு நூலகத்திற்குத் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்றேன்.
அவன் தலை ஆட்டினான்.      

45வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

  03.04.2021 அன்று சனிக்விழûமை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது.  

அழகியசிங்கர்

இந்த முறை கவிதையைக் குறித்து உரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி.   சில கேள்விகள் மட்டும் உரையாட முடிந்தது.