சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 50வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 08.05.2021 நடைபெற உள்ளது. எல்லோரும் கவிதை வாசிக்க வாருங்கள். எல்லோரும் 2 நிமிடம் வரை கவிதை வாசியுங்கள். முதலில் ஒரு கவிதை வாசியுங்கள். கூட்டத்திற்குத் தகுந்தாற்போல் இரண்டு, மூன்று என்று கவிதைகள் வாசிக்கலாம். Topic: Zoom Meeting Time: May 8, 2021 06:30 PM India 50வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 08.05.2021 அன்று சனிக்கிழமைûமை மாலை 6.30 மணிக்கு.
இரண்டாம் கதை சென்னையில் நடக்கும் கதை. ராதா கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு பெட்டியில் வந்து ஏறுகிறாள். அவளைத் துரத்திக்கொண்டு வரும் ராமசாமி அம்பு போல், மான் போல் ஓடிவந்து ஏறிக் கொள்கிறான்.
ராதாவைத் தவிர அவன் மட்டும்தான் டைம் புரட்டிக்கொண்டிருந்தாள்.
“ஹலோ ராதா” என்கிறான் ராமசாமி.
அவள் அவனைப் பார்த்தாள். “ஹலோ” என்றாள். உடனே பத்திரிகையில் ஆழ்ந்தாள்.
“ராதா என் கடிதம் கிடைத்ததா?” என்று பேச்சுக் கொடுத்தான்.
“கிடைத்தது. ஸ்டுபிட் லெட்டர்.”
“ஏன் ராதா?”
“அந்த மாதிரி கடிதம் எழுதுவதே அநாகரிகம். முட்டாள்தனம்.”
“நீ கூட எனக்குக் கடிதம் எழுதுகிறாயே ராதா?”
“அது ஒன்றரை வருடத்துக்கு முன். அப்பொழுது நான் முட்டாளாக இருந்திருக்கிறேன்.”
இப்படி அவர்களுக்குள் இந்தப் பேச்சுப் போய்க் கொண்டிருக்கிறது.
இந்தக் கதை இப்படி உரையாடல் மூலம் போய்க் கொண்டிருக்கிறது. ராதா அவனை வெறுத்து ஒதுக்குகிறாள்.
சுஜாதா இப்படி எழுதுவதில் தன் கை வண்ணத்தைக் காட்டுகிறார்.
ஒரு இடத்தில் ராதா இப்படிக் குறிப்பிடுகிறாள். “உங்கள் உலகம் வேறு உலகம். சோழ பரம்பரை. அவர்கள் பேரன்கள், பேத்திகள், சிற்பங்கள், திருப்பளாய்த்துறைச் செப்பேடுகள், நாணயங்கள், அரசர்கள், அவர்களுக்குப் பின் வந்த அரசர்.”
“அவர்கள் எல்லாம் மனிதத் தன்மை நிறைந்தவர்கள் ராதா.”
“அவர்கள் எல்லாம் இறந்து போனவர்கள்”
“இல்லை ராதா. அவர்கள் நம் சரித்திரத்தில் இன்னும் இருக்கிறார்கள்.”
“நீங்கள் இந்தக் காலத்து மனிதர் இல்லை. இது கம்ப்யூட்டர் யுகம். கல்வெட்டு யுகமல்ல. பழமை, பண்பாடு, ஆராய்ச்சி இதெல்லாம் உங்கள் பி.எச்.டிக்குத் தேவை. அவைகளைப் பிறர் மேல் ஏன் திணிக்கிறீர்கள்? என்னைத் தனியா விடுங்கள். இரண்டு பேரும் சந்தோஷமாக இருக்கலாம்.”
இந்த இடத்தில் திடீரென்று ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு வருகிறார். ரயில் நின்றது. ஓர் ஆசாமி ஏறினார். ராதாவை முறைத்துப் பார்த்துவிட்டு மாற்றோர் ஓரத்தில் உட்கார்ந்தார். மாலைப் பத்திரிகை ஒன்றைப் பிரித்தார். அதன் முன்பக்கத்தில் கொட்டை எழுத்தில் ராதாவுக்கு இன்று விடுதலை என்று அடித்திருந்தது.
ராதா அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார். ஏன் இதை இங்கு சுஜாதா கொண்டு வருகிறார். இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்.எதிரில் வந்த நபர் யார்? இதெல்லாம் கதையில் புரியவில்லை.
ராதா ராமசாமியைத் திட்டி தீர்த்துவிடுகிறாள். “நீ ஒரு போர்” என்கிறாள். வண்டி நின்றது. ராமசாமிக்குக் காதுவரை, மூளை வரை ஓர் உஷ்ணம் ஏறியது. சரேல் என்று விலகி இறங்கிவிட்டான்.
அது என்ன ஸ்டேஷன்? எதுவாக இருந்தால் என்ன? ரயில் வேகம் பிடித்து அடுத்தடுத்த ஜன்னல் சதுரங்கள் ஒன்றி மறைந்தன.
இந்த இடத்தில் ராமசாமி மூலம் முதல் கதையை இணைக்கிறார் சுஜாதா. ஒரே இருட்டாக இருக்கிறது. ராமசாமி மூலை திரும்பினான்.
எதிரே தீப்பந்தமா தெரிகிறது… தீப்பந்தங்களா? அவை அவனை அணுகின. ஒரு பல்லக்குத் தெரிந்தது. ஆடி ஆடி அசைந்து அசைந்து அவனை நோக்கி வந்தது. இதோ, மிக அருகில் வந்து விட்டது.
“இளவரசி” என்றான்.
மறுபடி வந்து விட்…திரைச்சீலை விலகியது. மேகலா அவனைப் பார்த்தாள். அதே முகம். அதே ஆசை முகம்.
“நீங்கள் யார்?”
“இளவரசி..என் பெயர் இராமசாமி. இரண்டாவது கதையில் நிராகரிக்கப்பட்டவன்”. இளவரசி அவனைப் பார்த்து முறுவலித்தாள். “நீங்கள் கலைப்பாக இருக்கிறீர்கள். என்னுடன் வாருங்கள். ஏறுங்கள்..பல்லக்கில்.”
அவனைப் பிடித்துத் தூக்கி அவர்கள் ஏற்ற, பல்லக்கில் அவள் எதிரே உட்கார்ந்து அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க, பல்லக்கு ஆடி ஆடிச் சென்றது. அசைந்து அசைந்து… ஹைஹோ…ஹைஹோ…ஹைஹோ… என்று கிண்டலாக முடிக்கிறார். அட்டகாசமாக முடித்துவிட்டார் கதையை. நான் இப்போதெல்லாம் புத்தகம் படிக்கும்போது, முழுப் புத்தகம் படிக்க முடிவதில்லை. பாதிப் புத்தகம்தான் படிக்க முடிகிறது. அல்லது கால் புத்தகம்தான் படிக்க முடிகிறது. ஆனால் சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகளை முழுவதும் படிக்கும்படி தூண்டுகிறார். நான் அவருடைய எல்லாக் கதைகளும் படிக்காலமலி ருக்கப் போவதில்லை.
‘புதுக்கவிதைகளில் சிலவற்றில் சைஃபி கூறுகளையும் பார்க்கிறேன். குறிப்பாக மீராவின் ‘எனக்கும் உனக்கும் ஒரே ஊர் வாசுதேவநல்லுர்’ என்பது தமிழில் முதல் சைன்ஸ்ஃபிக்ஷன் கவிதை. ஞானக்கூத்தனின் மோசிகீரன் கவிதையும் அஃதே. விருட்சம், ழ கவிதைத் தொகுப்புகளில் ஒரு சில சைன்ஸ்பிக்ஷன் கவிதைகளைச் சிங்கப்பூர் தொலைகாட்சியில் படித்துக் காட்டியிருக்கிறேன். என்கிறார் சுஜாதா ‘
ஏன் சுஜாதா எழுதிய இந்தக் கட்டுரையை இவ்வளவு நாட்களாகப் படிக்கவில்லை என்று வருந்துகிறேன்.
அவர் விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற குறிப்பிட்டதை இப்போது படிக்கும்போது என் கண்ணைத் திறந்து விட்டது போல் தோன்றுகிறது. இந்த வருடம் அவர் பிறந்தநாள் போதுதான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன்.
அவர் விஞ்ஞானச் சிறுகதைகள் என்றால் என்ன என்று எனக்குப் பாடம் நடத்தி விட்டார். நன்றி சுஜாதா அவர்களே!
‘அழகியசிங்கர் கதைகள்’ என்ற பெயரில் 664 பக்கங்களுக்கு நான் என் மொத்த கதைகளையும் கொண்டு வந்தேன். அதில் 100 கதைகள் இருக்கும். சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற புத்தகம் படித்தபோது நானே 3 கதைகள் விஞ்ஞானச் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்.
சுஜாதான் கண்டுபிடிக்க வைத்தார். எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. என் கதைகளுக்கு இது கூடுதல் பலம் கொடுக்கிறது நான் விஞ்ஞானச் சிறுகதைகள் என்று என்னமோ நினைத்து யோசனை செய்ததை ஒன்றுமில்லாமல் உடைத்துப் போட்டுவிட்டார் சுஜாதா.
100 கதைகளில் நான் எழுதிய 3 கதைகள் விஞ்ஞானச் சிறுகதைகள். அவற்றை இங்குக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். 1. வால் 2. நான்தான் 3. முடிவல்ல. இந்த மூன்று கதைகளும் விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற பிரிவில் இப்போது எடுத்துப் போக விரும்புகிறேன்.
சுஜாதாவைப் படித்தபிறகு எதையோ கண்டுபிடித்து விட்ட உற்சாகம் எனக்கு. விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற புத்தகத்திலிருந்து ‘ஒரு கதையில் இரண்டு கதைகள்’ என்ற தலைப்பில் எழுதிய முதல் கதையை எடுத்துக் கொண்டு வாசித்தேன். அபாரம். 1965ல் இந்தக் கதையை சுஜாதா எழுதி உள்ளார்.
சோழர்கள் சாம்ராஜ்யம் சின்னாபின்னமாகிப் போய் சில நூறு வருடங்களுக்குப் பின்னர் எஞ்சியிருந்த ஒரே பகுதியை ஆண்ட – மிச்சமிருந்த ஒரு சோழனின் ஒரே மகள். எப்போதுமே சுஜாதாவிற்கு எழுதிக்கொண்டே வரும்போது நகைச்சுவை உணர்வு தானாகவே வெளிப்பட்டு விடுமென்று தோன்றுகிறது.” (சோழனுக்கு மற்றொரு மகளும் உண்டு என்று பேச்சு. இதை அந்தச் சோழன் ஒப்புக்கொண்டதில்லை. ஊர்வாய்!)
இளவரசி மேகலா பல்லக்கில் வந்து கொண்டிருக்கிறாள். சோலையிளந் தென்றல் போல, சோமரசக் கவிதை போல இளவரசி மேகலா. இளவரசியின் கையில் ஓலை இருந்தது. ஒரு மடல். அதை மடல் என்று சொல்வதா, காதல் கடல் என்று சொல்வதா? எழுத்தாணியை இதயத்தில் தோய்த்து, தேவநாதன் எழுதியிருந்தான்.
எழுத்துப்பிழைகளும், இலக்கணப் பிழைகளும் மலிந்திருந்த அந்த லிகிதம் அவளுக்கு ஓர் அலட்சிய முறுவலைத்தான் தந்தது. அவளுடைய உதவியாளைக் கூப்பிட்டாள் மேகலா. உதவியாளன் செங்கல்வராயன் பணிவுடன் அவள் முன் வந்து நின்றான். அவன் கையிலிருந்த பந்தத்தில் அந்த ஓலையைக் கொளுத்தினாள் இளவரசி.
‘பித்துப் பிடித்தவன்’ என்றாள்.
தூரத்தில் குளம்பொலி கேட்கிறது. நான்கு கொள்ளைக்காரர்கள். ஒரு கொள்ளைக்காரன் பரியைவிட்டு இறங்கினான். பல்லக்கின் அருகில் இளவரசியை மிரட்டுகிறான். இளவரசியோ யாருக்கும் பயப்படவில்லை. தன் உதவியாளனைக் கூப்பிட்டு சண்டைப் போடச் சொல்கிறாள். உதவியாளன் செங்கல்வராயன் கடைசியாக வாளை உருவியது சென்ற ஆயுத பூஜையின்போது. இப்போது உருவினால் கைப்பிடி மட்டும் வந்தது.
கழுத்தில் மாட்டியிருக்கும் வைர மாலையை மட்டும் கழட்டச் சொல்கிறான். ‘முடியாது’ என்கிறாள் இளவரசி. அப்பொழுது மற்றொரு குளம்புச் சப்தம் கேட்டது.
கால் விந்திக்கொண்டே வந்தது ஒரு குதிரை. தேவநாதனைக் கிண்டலாக வர்ணிக்கிறார் சுஜாதா. கொள்ளைக்காரனை வீழ்த்துகிறான் தேவநாதன். இது ஒரு நாடகம்.
“ஆண்டவனே என்னை விட்டுவிடுங்கள். உங்கள் வாள் வலிமைக்கும் தோள் வலிமைக்கும் என்னால் ஈடு செய்ய முடியாது. எனக்கு உயிர் கொடுங்கள் தேவனே. இந்த தொழிலை விட்டுவிட்டு இந்த நாட்டைவிட்டு ஓடிவிடுகிறேன,” என்கிறான் கொள்ளைக்காரன்.
“ஓடு என்கிறான்,” தேவநாதன்.
“நில்,” என்கிறாள் இளவரசி
“நிற்கிறேன்,” என்கிறான் கள்வன்.
தேவநாதனை சண்டைக்குக் கூப்பிடுகிறாள் இளவரசி. அவள் முன்னால் தேவநாதனால் சண்டையில் நிற்க முடியவில்லை. தேவநாதன் உடுக்கை நழுவ ஓடினான் என்று எழுதியிருக்கிறார் சுஜாதா.
முடிக்கும்போதுஇளவரசியின் நினைவில் அந்த ஆசை முகம் என்று முடிக்கிறார். இப்போது இரண்டாம் கதை தொடங்குகிறது.
இவ்வகையில் முதல் சைன்ஸ்ஃபிக்ஷன் கதை தமிழில் பாரதியின் காக்காய் பார்லி மெண்ட் என்று சொல்லத் தோன்றுகிறது. அதன் ஒரு பகுதி இது:
‘கா என்றால் சோறு வேண்டும் என்று அர்த்தம். கக்கா என்றால் என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே என்று அர்த்தம். காக்கா என்றால் எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே என்று அர்த்தம்….காஹகா என்றால் சண்டை போடுவேன் என்று அர்த்தம்..ஹாகா என்றால் உதைப்பேன் என்று அர்த்தம்..
சயின்ஸ் பிக்ஷன் ‘ஆர்வெலின் 1984இல் உள்ள ‘ந்யூஸ்பீக்’கை இது நினைவுபடுத்துகிறது. சயின்ஸ்ஃபிக்ஷனுக்கு முக்கியத் தேவை ஒரு புதிய உலகத்தை புதிய சூழலை அமைத்து அதன் விதிகளையும் தெளிவாக்குவதுதான்.
‘புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ கதையை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள் சைன்ஸ்ஃபிக்ஷனுக்கு உள்ள எல்லாத் தகுதிகளும் பெற்ற கதை இது. அதுபோல் பிரம்மராக்ஷஸ்’ ‘கயிற்றரவு’ போன்றவற்றையும் ஃபேண்டஸி என்னும் ஜானரில் வரும். கல்கியின் குறுநாவல்களான மோகினித்தீவு, ‘சோலைமலை இளவரசி’ இரண்டையும் சைன்ஸ்பிக்ஷனில் சேர்க்கலாம்.
‘அதேபோல க.நா.சுவும் ‘பொய்த்தேவு’ போன்ற புதினங்களில் பரிசோதனைகள் செய்திருக்கிறார். புதுமைப்பித்தன், கல்கி தவிர இவர்கள் காலகட்டத்தில் வாழ்ந்த மற்ற சிறந்த எழுத்தாளர்கள் யாரும் இதை முயற்சிக்கவில்லை.
கலைமகளில் ‘ஆனை சு.குஞ்சிதபாதம்’ எழுதிய ‘நல்ல பிசாசு’ என்கிற கதை ஓர் அரிய விதிவிலக்கு. விந்தன் ஒரு கதையில் தீபாவளியில் பணமில்லாமல் தவிக்கும் ஏழைக் குடும்பத்தின் அவல நிலையை வருணித்துவிட்டு கடைசியில் இவர்கள் கஷ்டம் தீருவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே கடவுள் அவன் முன் தோன்றினார். ‘பக்தா உனக்கு என்ன வேண்டும் என்றார். அவன் தன் தீபாவளிக் கஷ்டங்களைச் சொல்ல எல்லாவற்றையும் தீர்த்து வைத்தார் என்று முடித்திருக்கிறார்.
இது துல்லியமான சைன்ஸ் ஃபிக்ஷன். சைன்ஸ்ஃபிக்ஷன் எழுதுவதற்கு சைன்ஸ், ராக்கெட் விண்வெளிப் பயணம் தேவையில்லை. எதிர்காலத்தைத்தான் எழுத வேண்டும் எனும் கட்டாயமில்லை. ‘ஜெயமோகனின் ‘பேய்ச்சிப் பாறை, விஷ்ணுபுரம்’ போன்ற படைப்புகளில் விஞ்ஞானக்கதைக் கூறுகள் இருப்பதைப் பார்க்கிறேன். விஷ்ணுபுரம் என்பது ஒரு காத்திக் வகை நாவல்தான். கோணங்கியின் சில கதைகளை மாஜிக் ரியலிசக்காரர்கள் விட்டு வைத்தால் சைன்ஸ்ஃபிக்ஷனில் சேர்க்கலாம். உதாரணம் ‘ஆதிவிருட்சம்.’ கிருஷ்ணன் நம்பி ஒரு ஷøவுக்குள் ஒரு குடும்பமே வாழ்வதைப் பற்றி எழுதி உள்ளார். ‘மாலன் எழுதிய ‘வித்வான் என்கிற கதை விஞ்ஞானப் புனைகதை. லா.சா.ரா சில கதைகளில் அருகில் வருகிறார். (ஜனனி, யோகம்). ‘புதுக்கவிதைகளில் சிலவற்றில் சைஃபி கூறுகளையும் பார்க்கிறேன். குறிப்பாக மீராவின் எனக்கும் உனக்கும் ஒரே ஊர் வாசுதேவநல்லுர் என்பது தமிழில் முதல் சைன்ஸ்ஃபிக்ஷன் கவிதை. ஞானக்கூத்தனின் மோசி கீரன் கவிதையும் அஃதே. விருட்சம், ழ கவிதைத் தொகுப்புகளில் ஒரு சில சைன்ஸ்பிக்ஷன் கவிதைகளைச் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் படித்துக் காட்டியிருக்கிறேன்.’
இதுவரை அறிவியல் புனைகதைகளின் கூறுகள் என்ற கட்டுரையில் சுஜாதா எழுதியதை சுருக்கமாகக் கூறி உள்ளேன்.
சுஜாதா எழுதியதைப் படிக்கும்போது எனக்குள்ளிருந்த சைன்ஸ்ஃபிக்ஷன் என்ற மாயை உடைந்து விட்டது. சைன்ஸ்ஃபிக்ஷன் கதை எழுத ஒரு விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி நினைத்ததால் அதைத் தொடக்கூட இல்லை. என் சந்தேகத்தைத் தீர்த்துவிட்டார் சுஜாதா. இனி அவர் கதையான ஒரு கதையில் இரண்டு கதைகளுக்குப் போகலாம். (இன்னும் வரும்)
விஞ்ஞானச் சிறுகதைகள் என்றால் எனக்கு சுஜாதா என்ற எழுத்தாளரைத்தான் ஞாபகத்திற்கு வரும். அவர்தான் தமிழில் அறிவியல் கதைக்கு ஆரம்பம்.
உயிர்மை வெளியிட்டுள்ள விஞ்ஞானச் சிறுகதைகள் என்ற புத்தகத்தில் அவர் எழுதிய முன்னுரையைப் படிக்கும்போது பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. ‘எழுத ஆரம்பித்து நாற்பதாண்டுகளாகின்றன. அப்போதிலிருந்தே விஞ்ஞானச் சிறுகதைகள் என்று பத்திரிகையாசியர்களிடம் குறிப்பிடாமலேயே வாசகர்களிடம் கடத்தியிருக்கிறேன்’ என்று எழுதியிருக்கிறார் முன்னுரையில்.
‘விஞ்ஞானக் கதைகள் அப்படி ஒன்றும் செப்பிடுவித்தையல்ல, கற்பனை வெள்ளத்திற்கு மற்றொரு வடிகால் என்று தமிழர்களுக்குக் காட்ட முயன்றிருக்கிறேன் ‘தொடர்ந்து பிடிவாதமாக இவ்வகைக் கதைகளை மற்ற பேர் எழுதுகிறார்களோ இல்லையோ நான் எழுதுவதாக உத்தேசித்திருக்கிறேன். இந்தக் கதைகள் வெளிவந்த சமயத்தில் வாசகர்களுக்கு உவகை அளித்தன. இவற்றை மறுபடி படிப்பவர்களுக்கும் புதிய தலைமுறையினருக்கும் அதே போன்ற உவகை ஏற்படும் என நம்புகிறேன்.’ இதெல்லாம் உயிர்மை வெளியிட்டுள்ள ‘சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் முன்னுரையில் எழுதியது;.
அதேபோல் ‘அறிவியல் புனைகதைகளின் கூறுகள்’ என்று தமிழ் இனி 2000 என்ற மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையும் இத் தொகுப்பில் உள்ளது.
கட்டாயம் ஒருவர் அதையும் படிக்க வேண்டும். இந்த நெடுங் கட்டுரையில் ஒரு சில பகுதிகளைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.
விக்கிரமாதித்தன் கதைகள் பல சைஃபி தகுதி பெறுகின்றன. இரு நண்பர்களிடையே தலையும் உடலும் மாறிப்போய் யார் உண்மையான கணவன் என்று மனைவி தடுமாறும் விக்கிரமாதித்தன் கதை உண்மையான சைன் ஸ்பிக்ஷன் (இதை கிரீஷ் கர்னாட் ஹயவதானா என்ற அற்புதமான நாடகமாக மாற்றினார்)உர்சூலா லா குவைன் எழுதிய ஐலண்ட் ஆஃப் இம்மார்டல்ஸ் என்னும் கதை விக்கிரமாதித்தன் கதை போலத்தான் இருக்கிறது. ஒரு வகை கொசு கடிப்பதால் ஒரு தீவில் உள்ளோர் சாகாவரம் பெறுகிறார்கள் என்பது கதையின் கரு – அதைச் சொல்லும் முறை நவீனச் சிறுகதை பாணியில் யதார்த்தத்துக்கு அருகில் இருக்கும். கதை என்னவோ அரே மந்திர தந்திரக் கதைதான். இவ்வகைக் கதைகள் நிறைய உள்ளன. இவ்வகையில் முதல் சைன்ஸ்ஃபிக்ஷன் கதை தமிழில் ‘பாரதியின் காக்காய்பாராளுமென்ட் என்று சொல்லத் தோன்றுகிறது. (இன்னும் வரும்)
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 49வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு 01.05.2021 இனிதே நடந்தது. கவிதையைக் குறித்து உரையாடல் நடந்து முடிந்தது. அதன் ஒளிப்பதிவு.
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 49வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு ( 01.05.2021) நடைபெற உள்ளது.
இந்த வாரம் கவிதையைக் குறித்து உரையாடல் நிகழ்த்த உள்ளேன். கவிதையைக் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படும். அக் கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டும். 2 நிமிடங்களுக்குள் பதில்கள் கூற வேண்டும்.
எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
Topic: சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 49வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
நாங்களிருந்த எதிர் தெருவில்தான் பெ.சு.மணியின் வீடு. பெரும்பாலும் தெருவில்தான் அவரைச் சந்திப்பேன்.
இன்று மாலை 4 மணிக்கு அவர் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. முகநூலில் அவர் மனைவி உயிரோடு இருந்தபோது அவருடைய சென்னை வாழ்க்கை சிறப்பாகப் போய்க் கொண்டிருந்தது. அவர் மனைவி இறந்தவுடன் அவர் பாடு திண்டாட்டமாகப் போய் விட்டது. அவருடைய மூத்தப் பெண் தில்லியிலும், இரண்டாவது பெண் பெங்களூரில் வசிக்கிறார்கள் .
இவர் தனியாக இருக்கிறேன் என்று சென்னையில் இருந்தார். அவர்களுக்கு இவரைத் தனியாக இங்கு விட விருப்பமில்லை.
பல மாதங்கள் இவர் சென்னையிலும், மற்ற இடங்களிலும் வசித்து வந்தார். சென்னையில் இருக்கும்போது அவருக்கு மனைவியின் நினைவுதான். அவருடைய ஆசை எப்படியாவது 100 புத்தகங்கள் எழுத வேண்டும் என்பது.
நான் அவருக்காக அவருடைய மூதாதையர் கொண்டு வந்த சம்ஸ்கிரதப் புத்தகம் கொண்டு வந்தேன். அது சாத்தியமே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தார். அந்தப் புத்தகம் அச்சானதும் அவருக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவில்லை. நானும் பெ.சு மணியும் லா.சு.ரங்கராஜனைப் பார்க்கப் போயிருந்தோம். இது மறக்க முடியாத நிகழ்ச்சி.
பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பின் கீழ் பலரை நான் பேட்டி எடுத்தேன். பெ.சு மணியையும் பேட்டி எடுத்தேன்.
அவர் மறைந்த இந்த நாளில் திரும்பவும் இங்கு வெளியிடுகிறேன்.
ஒரு காலத்தில் எனக்கு நண்பர்களாக இருந்தவர்கள்தான் இப்போது விரோதிகளாக மாறி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது. இது இயல்பு.
நேற்று (25.04.2021) குவிகம் இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். திருப்பூர் கிருஷ்ணன் உரை. தி. ஜானகிராமன் பற்றி அவர் பேசினார்.
ஜானகிராமனை நேரிடையாகவும், படைப்புகள் மூலமாகவும் அறிந்தவர். அக் கூட்டத்திற்கு ஜானகிராமன் பெண் உமா சங்கரி வந்திருந்தார்.
வழக்கம்போல் திருப்பூர் கிருஷ்ணன் சிறப்பாகவே பேசினார். ஆனால் ஒரு நல்ல கூட்டம் நடைபெறும்போது திருஷ்டியாக எதாவது நடந்து விடும்.
கல்யாணராமன் என்கிற கல்லூரி முதல்வருக்குக் கருத்துச் சொல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மூன்று கருத்துக்களைக் கூறினார். ஒரு பொதுவான இடத்தில் பேராசிரியருக்கு எப்படிப் பேச வேண்டுமென்று தெரியவில்லை.
மாணவராக இருந்தபோது தன் கவிதை, கதைகயை விருட்சம் இதழில் பிரசுரம் செய்வதற்கு இவரும் இவர் நண்பர்களும் என் இருப்பிடத்திற்கு வருவார்கள். விருட்சத்தில் அவர் கவிதைகள், கதைகள் வந்திருக்கின்றன.
இப்போது காட்சி மாறி விட்டது. அவரும் மாறி விட்டார்.
அவர் உதிர்த்த தப்பான மூன்று முத்தான கருத்துக்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். திருப்பூர் கிருஷ்ணன் தி.ஜானகிராமனைப் பற்றிப் பேசும்போது ஜானகிராமனுக்கு ஆன்மிகத்தில் நாட்டமுண்டு என்று குறிப்பிட்டார்.
“ பேராசிரியர் கல்யாணராமன் பேசும்போது ஜானகிராமன் எழுத்தில் ஆன்மிகம் இல்லை என்று பேசினார். திருப்பூர் கிருஷ்ணன் நாட்டமுண்டு என்றுதான் குறிப்பிட்டார். ஏன் என்றால் அவர் நேரிடையாகவே ஜானகிராமனை அறிவார். தப்பாகப் பேசும் பேராசிரியர் குறித்து என்ன சொல்வது? ஜானகிராமன் புகழைப்பாடும்போது தன்னிலை மயக்கம் இருக்கக் கூடாது. ஜானகிராமனின் புகழ் கடைசிவரை ஓங்கும் என்றும், ஜெயகாந்தன், சுந்தர ராமசுவாமி, கந்தசாமி புகழ் காலத்தால் மங்கும் என்று குறிப்பிட்டார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கந்தசாமி பெயர்களை இழுப்பது தேவையில்லாத விஷயம். பேராசிரியருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. அவர் இனி நாகர்கோவிலுக்கு டிக்கட் எடுத்துக்கொண்டு போக முடியாது. மூன்றாவதாகச் சொன்னதுதான் மோசமான விஷயம். தேவையில்லாமல் என்னைப் பற்றிப் பேசியதுதான். நானும் அவரைப் போலக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருப்பவன். கூட்டத்தில் ஒரு பொருட்டே இல்லை.
பேராசிரியர், தி.ஜானகிராமன் குறித்து கட்டுரைகளை எல்லோரிடமிருந்து 1000 பக்கங்களுக்கு மேல் பெற்றுத் தொகுத்துள்ளார். ஆயிரம் ரூபாய் மேல் மதிப்புள்ள அந்தப் புத்தகத்தை விலைக்கு நானும் திருப்பூர் கிருஷ்ணனும் வாங்க வேண்டுமாம். காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்ததால் அதற்கு நஷ்டம் ஏற்படக்கூடாதாம். அதோடு இன்னொன்று சொல்கிறார் விருட்சம் இதழிற்கு மதிப்புரைக்காகப் புத்தகங்களைச் சேர்க்கிறேனாம். ஆனால் மதிப்புரை வருவதில்லையாம். அதனால் இந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்க வேண்டுமாம். ‘தமிழ் இந்து’ மாதிரி பத்திரிகையில் மதிப்புரை வரவேண்டுமென்றால் எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் அனுப்பத் தயாராக இருப்பார். அது போகட்டும். என்னைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் இவர் இப்படி உளறுவது சரியில்லை. மேலும் இதை இப்படி ஒரு பொது மேடையில் சொல்வதும் இன்னும் மோசம். விருட்சம் பத்திரிகை 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பத்திரிகை. அதற்கு இலவசமாக யாரும் இப்போதெல்லாம் மதிப்புரைக்குப் புத்தகங்கள் அனுப்புவதில்லை. அப்படியே அனுப்பப்படுகிற புத்தகங்களை நான் விளம்பரப் படுத்தாமல் இருப்பதில்லை.
நான் ஒவ்வொரு மாதமும் என் ஓய்வூதியம் பணத்தில் ரூ.1000க்கு புத்தகம் வாங்கும் பழக்கம் உள்ளவன். போஸ்டல் காலனி வீட்டில் நான் ஒரு நூல் நிலையம் வைத்திருக்கிறேன். அங்குதான் எல்லாப் புத்தகங்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறேன்.
வருடத்தில் எல்லா மாதங்களிலும் புத்தகங்கள் வாங்கி சேகரிக்கும் வழக்கம் உள்ளவன். ஏன் காலச்சுவடு பதிப்பகத்தில்கூட புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். எனக்கு விருப்பமான புத்தகங்களைத்தான் நான் வாங்க முடியும். ப்ளாட்பாரங்களிலும் புத்தகம் பார்த்தவுடன் வாங்கி சேகரிப்பேன். மேலும் நண்பர்கள் சிலர் நன்கொடையாகப் புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் பேராசிரியர் கல்யாணராமன் தொகுத்த புத்தகத்தை அவர் இதுமாதிரி தத்துப்பித்தென்று பேசியதால் வாங்கப் போவதில்லை. நானும் விருட்சம் வெளியீடாகப் புத்தகங்களைக் கொண்டு வருகிறேன். விருட்சம் பத்திரிகை தொடர்ந்து நடத்தி வருகிறேன். நான் எல்லோரிடமும் புத்தகங்கள் வாங்கும்படி வேண்டுகோள் விடுக்க முடியுமே தவிர வற்புறுத்த முடியாது.
மேலும் திருப்பூர் கிருஷ்ணனை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் இலக்கியத்திற்காகப் பல ஆண்டுகள் உழன்று கொண்டிருப்பவர், அவருக்கு என்ன கிடைத்தது இதன் மூலம். இலக்கியம் மீதுள்ள அக்கரையால் மிகக் குறைவான ஊதியத்தில் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருக்கிறார். தி.ஜானகிராமன் மீது அன்பு கொண்டவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவருக்கு ஜானகிராமன் கட்டுரை புத்தகம் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும். இதற்கெல்லாம் பரந்த மனம் கொண்டவருக்குத்தான் தோன்றும். மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் பேராசிரியர் கல்யாணராமன் ஆணவத்தால் பேசியதாக இதை எடுத்துக்கொள்ளலாமா?
பேராசிரியர் போன்ற பல பல்கலைப் பேராசிரியர் மனது வைத்தால் எத்தனையோ புத்தகங்களை வாங்கி நூல் நிலையங்களில் குவித்திருக்க முடியும்.எத்தனையோ பதிப்பகங்களின் நிலையை சரி செய்திருக்க முடியும், ஆனால் கல்யாணராமன் போன்ற பேராசிரியர்களுக்கு அது மாதிரி மனம் வருவதில்லை. காக்கைகள்தான் சென்ற இடமெல்லாம் வாய் வைக்கும். சில விளம்பர காக்கைகள் சென்ற இடமெல்லாம் அலப்பறை செய்து கொண்டே இருக்கின்றன. விளம்பர காக்கைகளுக்கு வாய்ப்பூட்டு போட முடியுமா? “